முக்கியமான யோக வாசிஷ்ட கருத்துக்கள்
பௌருஷம்: (Virtue)
பௌருஷம் என்ற சொல்லுக்கு அர்த்தம்
தமிழில் நல்லொக்கத்துடன் கூடிய மனித முயற்சி என்பதாகும். நல்லொழுக்கம் தார்மீக சிறப்பையும், நன்மை
பயக்கும் குணங்களையும் உள்ளடக்கியது. எது நல்லது, எது கெட்டது மற்றும் எது போற்றத்தக்கது
என்பதைப் பற்றிய நமது புரிதலை வடிவமைக்கிறது.
நல்லொழுக்கம் என்பது சமூகத்தால் ஒழுக்க
ரீதியாக நல்லதாகவும், விரும்பத்தக்கதாகவும் கருதப்படும் ஒரு
பண்பாகும். நேர்மை, இரக்கம்,
தைரியம், நிதானம், பணிவு இதுபோன்ற பல குணங்களை
உள்ளடக்கிய ஒருவனின் தார்மீக சிறப்பை இது குறிக்கிறது. நல்லொழுக்கம் என்பது
கடினமான வாழ்க்கை பாதைக்குள் நுழைந்து சிறந்த மனிதனாக
மறுபுறம் வெளிவருவதை உறுதி செய்கின்ற வழிகாட்டியாகும்,.
பிரபஞ்ச வாழ்க்கையிலே நாம் முக்கியமாக
கடைப்பிடிக்க வேண்டியது நல்லொழுக்கமாகும். தகுந்த முயற்சியால் உலகத்தில் அடைய
முடியாதது ஒன்றுமேயில்லை. பிரம்ம பதவியும் கூட நற்பண்புகளுடன் கூடிய ஒழுக்கத்தோடு
சேர்ந்த தீவிர முயற்சியால் அடையத்தக்கதேயாகும்.
ஆனால் எடுக்கும் முயற்சிகளைச் சரியான
வழியில் கடைப்பிடித்தும், இடைவிடாமல் செய்துகொண்டும் வர வேண்டும். பலன்
அடையாவிட்டால், அதற்குக் காரணம் எடுத்த முயற்சியில் உள்ள தவறே தவிர, வேறெந்த
காரணமும் இருக்காது. தகுந்தபடி முயற்சி இருந்தால் எடுத்த காரியம் கைகூடியே
தீரவேண்டும். இதுவே நியதி. இப்படிப் பலனை அடையும் வரையில் இடைவிடாமல் முயற்சி
செய்கிறவர்கள் உலகத்தில் எக்காலத்திலும் மிகவும் குறைவேயாகும். பெரும்பாலும்
மக்கள் காரியத்தில் இறங்கிய பிறகு அதில் ஊக்கம் குறைந்து, முயற்சியில்
தளர்ச்சி அடைவதாலேயே அதில் வெற்றி அடைவதில்லை. சோம்பலே எல்லா மக்களுடைய கஷ்ட
நஷ்டங்களுக்கும் முதல் காரணமாக இருக்கிறது. உலகமே கீழானநிலையை அடைவதற்கு காரணமும்
சோம்பலேயாகும்.
அனேகர் தங்களுக்கு வருகின்ற
வினைப்பயன்களை பூர்வ ஜன்மத்தின் பலனாகக் கருதி சோர்வடைகிறார்கள். இதுவும்
அக்ஞானமேயாகும். பூர்வ ஜன்மத்தில் எடுத்த முயற்சிகளின் பலன்களை இந்த ஜன்மத்தில்
நாம் அனுபவிப்பது உண்மையாகும். ஆனால் இனி நடக்க வேண்டிய காரியங்களில் அதனுடைய
சக்தி தற்சமயம் எடுக்கக்கூடிய முயற்சிகளின் சக்தியை விட குறைந்ததேயாகும். இவ்வித
வினைப் பயன்களைத் தற்சமயம் செய்யக்கூடிய பிரயத்தனங்களால் வெற்றி கொள்ளலாம். இது
நம் வசத்தில்தான் இருக்கிறது. இவ்வாறு எண்ணுவதை விட்டுவிட்டு நடப்பதெல்லாம்
வினைப்பயன் என்று கருதி, வாழ்க்கையில் சோகமடைந்து, செய்யவேண்டிய
முயற்சிகளைச் செய்யாமல் நிற்கும் மனிதர்கள் பரமமூடர்களேயாவார்கள்.
ஆலோசித்துப் பார்த்தால் நம்
செயல்களுக்குக் காரணம் வினைப்பயனும் இப்பொழுது எடுக்கின்ற முயற்சிமேயாகும்.
இவ்விரண்டைத் தவிர வேறெந்தக் காரணமும் எந்தக் காரியத்திற்கும் அனுகூலமாகவோ, பிரதிகூலமாகவே
இருப்பதில்லை. நடக்க வேண்டிய காரியங்கள் இவ்விரண்டின் பலத்தைத் தழுவியே நடந்து தீர
வேண்டும். எதற்குத் தீவிரம் அதிகமோ அது வெற்றி பெறுகிறது. வினைப்பயன் நம்
கட்டுபாட்டுக்கு அப்பாற்பட்டது. அதை நாம் எவ்விதத்திலும் மாற்ற முடியாது.
வினைப்பயன் வரையறைக்குட்பட்டது, அதன் சக்தி பெருகாது. முயற்சியோ நம்முடைய வசம்
உள்ளது. இந்த முயற்சியை யுக்தி, புத்தி,
விடாமுயற்சிகளோடு செய்துவந்தால்
வினைப்பயனை வென்று காரியங்களில் வெற்றியடையலாம். பெரும்பாலும் மக்கள் தங்களுக்கு
விளைவதெல்லாம் தெய்வச் செயலாகக் கருதி, செய்ய வேண்டியவைகளைச் செய்யாமல் மதியிழந்து
இருக்கிறார்கள். அதாவது வினைப்பயன்களே தெய்வச் செயலாக கூறப்படுகின்றன. ஆனால்
இவ்வினைப்பயன்களோ நம்முடைய பூர்வப்பிரயத்தனங்கள். ஆகையால் நமது தேகம் ஒரு பூர்வ
பிரத்யக்ஷ வினைகளின் போர்க்களமாயிருந்து அப்போரின் முடிவே நமது வாழ்வாக ஏற்படுகின்றது.
தெய்வம் - அதன் சொரூபம்
நமக்கு வேண்டியவைகளைத் தேடிக் கொள்ள
நம் பிரயத்தனத்தால்தான் முடியுமே தவிர வேறொன்றினாலும் முடியாது. தீவிர முயற்சியே
தெய்வம். இதையே ஒவ்வொருவரும் சார்ந்திருக்க வேண்டும். நமது முயற்சியில்லாமல் ஒரு
காரியமும் சித்தி பெறாது. நம் புத்திக்குப் புலப்படாமல் தெய்வம் எங்கிருந்தோ நம்
செயல்களுக்குப் பலனை அளிப்பதாக எண்ணுவது மூடத்தனம். இதைவிட அக்ஞானம் வேறில்லை.
நம்மால் செய்யப்படும் காரியங்களெல்லாம்
நம் இந்திரியங்களால் செய்யப்பட வேண்டும். இந்திரியங்கள் மனதால் ஏவப்படுகின்றன.
மனது புத்தியின் அசைவேயாகும். நாம் அனுபவிப்பதெல்லாம் செயல்களின் பலனேயாகும்.
ஆகையால் புத்தியின் அசைவுதான் பலன் ரூபமாக அனுபவிக்கப்படுகின்றது. நியதி
இப்படியிருக்க தெய்வத்தால் நடைபெற வேண்டியது ஒன்றுமில்லை.
மேலும்; நாம் பிரம்ம ஞானத்தை இங்கே
சொல்லப்படும் மூன்று மார்க்கத்தில் உள்ள
ஏதாவது ஒன்றைத் பின்பற்றி அடைய வேண்டும். அதாவது
· சாஸ்திரங்களை அறிந்து ஆராய்ச்சி செய்து
சித்தியடைவது
· குருமுகமாக உபதேசமடைந்து தெரிய வேண்டியவைகளை
தெரிந்து கொண்டு
சித்தியடைவது.
· தன் சொந்த ஞானத்தாலோ, பிரயத்தனத்தாலோ
சித்தியடைவது.
இந்த மூன்று மார்க்கங்களில் எதை கடைப்பிடித்தாலும்
நம் முயற்சிதான் தேவையாக இருக்கிறதே தவிர. தெய்வத்தால் கொடுக்கப்பட்டு நாம் அடைவது
ஒன்றுமில்லை.
மனிதப் பிரயத்தனம்
மனிதப் பிரயத்தனம் இல்லாமல் எந்த
செயலையும் வெற்றிகரமாக முடிக்க முடியாத பொழுது தெய்வாதீனம் என்னும் கொள்கையால்
என்ன பயன்? உதாரணமாக
ஒரு பிராணியை உடல் வேறு, கழுத்து வேறாக கொன்ற பிறகு அதற்கு உயிர்
கொடுப்பதாக இருந்தால் கடவுள் செயலென்று நம்பலாம். இப்படிப் பிரபஞ்சத்தில் நடப்பதாக
நாம் கண்டதில்லை.
தெய்வம் என்ன ரூபமாக இருக்க முடியும்? பதார்த்த ரூபமாகவாவது அல்லது புத்தியால் நினைக்கப்படும்படியாவது
இருக்கவேண்டும். இவ்விரண்டில் எந்தவிதமாகவும் இருப்பதாகச் சித்தாந்தம் செய்ய
முடிவதில்லை. ஒருவேளை தெய்வமென்பது மூன்று உலகங்களுக்கும் அதிபதியாயிருந்து
சகலத்தையும் ஆண்டு வருவதாக இருந்தால், நாம் ஒரு செயலிலும் ஈடுபடாமலும், எல்லாம்
தெய்வம் செய்துவிடுமென்றும் சும்மா இருந்துவிடலாம். நமது முயற்சிக்குத் தேவையே
இருக்காது.
ஆகையால் தெய்வம் என்னும் கற்பனை, மூடர்களுக்கு ஒரு ஆறுதலைக் கொடுக்கின்ற பலனைத் தவிர வேறெந்த பலனையும் கொடுப்பதில்லை. பலனைக்
கொடுக்கப் பிரயத்தனத்தால் மட்டும் முடியுமே தவிரத் தெய்வத்தால் முடியாது. பலன்
கிரியா ரூபமாக உள்ளது. இது ஆகாய ரூபமாக எண்ணப்படும்
தெய்வத்தால் நடைபெறாது. அதே இனமாக, அதாவது கிரியா ரூபமாக இருந்தால்தான் முடியும்.
ஆகவே பிரயத்தனமே பிரதானம். பிரயத்தனம் இல்லாமல் ஒரு மனிதன் பண்டிதனாக முடியுமா? அல்லது
ஒரு சூரன் தன் பராக்கிரமமில்லாமல் சண்டையில் வெற்றிப் பெறக்கூடுமா? நமது
அருகிலிருக்கும் விசுவாமித்திரரைப் பற்றிப் பேசுவோமாகில் அவர் சத்திரிய குலத்தில்
பிறந்தும் பிரம்மரிஷி என்ற நிலையை, தம்முடைய இடைவிடாத கடும் முயற்சியால்தான் அடைந்ததார். அவருடைய
பிரயத்தனத்தால் மட்டுமே இப்பதவி அடையப்பட்டதே தவிர, தெய்வ சகாயத்தால் அல்ல என்பதைப் புரிந்து
கொள்ள வேண்டும்.
அப்படியானால் மக்கள் எதைத் தெய்வமாகக்
கொண்டாடுகிறார்கள்? என்று ராமன் கேட்டான்.
விடாமுயற்சியும் தெய்வமும்
வசிஷ்டர் – பிரயத்தனத்தின் காரணமாகக் கிடைக்கின்ற
பலன்களைத்தான் ஜனங்கள் தெய்வ சங்கல்பமாக எண்ணுகிறார்கள். உண்மையில் பலன்கள் மேலே சொல்லியபடி, அவரவருடைய
பிரயத்தனமின்றிக் கிடைப்பதில்லை. இவ்விதப் பிரயத்தனங்கள் இப்பிறவியிலாவது அல்லது
முற்பிறவியிலாவது செய்யப்பட்டிருக்கலாம். மேலும் இப்பிரயத்தனங்களுக்கு காரணம்
மனதேயாகும். ஆகையால் தெய்வத்தால் நடக்க வேண்டியது ஒன்றுமில்லை. மனதின்
ஆறுதலுக்காகக் கற்பிக்கப்பட்டதே தெய்வமாகும்.
ஆகவே தற்சமயம் நமக்கு ஏற்படும்
அனுபவங்களுக்குக் காரணம் இப்பொழுது செய்யும் செயல்களோ அல்லது பூர்வ வாசனைகளோ
ஆகும். பூர்வ வாசனை எப்படி இருந்தபோதிலும்,
தங்கள் முன்னேற்றத்தின் பொருட்டு
மக்கள் இப்பொழுது நல்ல வழிகளில் பிரயத்தனம் செய்து வருவதுதான் சரியான முறையாகும்.
இவ்விதந்தான் பலனைச் சீக்கிரம் அடையலாம். பூர்வ வாசனை ஒரு சமயம் விரோதமாக
இருப்பினும், இன்னும் அதிகப் பிரயத்தனத்திற்கு அதுவே
காரணமாகின்றது. ஆகையால் பிரயத்தனமே பிரதானமென்று கருதி, நல்ல
சாஸ்திரங்களைப் படித்து ஆராய்ச்சி செய்தும்,
அல்லது தகுந்த பெரியோர்களின் சகவாசத்தை
அனுசரித்தும் ஞான மார்க்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இதற்கு மனமே பிரதானமாகும்;. இந்த
மனதைக் கொஞ்சம் கொஞ்சமாக, பலாத்காரமில்லாமல் வசப்படுத்துவதிலேயே
பௌருஷத்தைச் செலுத்த வேண்டும்.
இவ்விடாமுயற்சியைச் சிறு வயதிலிருந்தே
பயின்று வருவது நல்லது. மேலும் முயற்சியுடன் யுக்தியையும் உபயோகித்துச் செய்யும்
காரியங்களை, தகுந்த முறைகளோடு செய்வதால்தான், எல்லா
விஷயங்களிலும் சந்தேகமின்றி வெற்றி பெறலாம்.
யார் இந்த சம்சார பந்தத்தை ஒழித்து மன
அமைதியை அடைகிறானோ அவன் சம்சாரத்தை சுலபமாக நடத்திக் கொள்வான். அந்தச்
சம்சாரத்திலும் அவன் சந்தோஷத்தையே அடைகிறான்.
முக்தியை அடையும் உபாயங்கள்
இந்த நிலையை அடையப் பௌருஷத்தால்தான்
முடியும். வேறு யாதொரு உபாயத்தினாலும்
அடைய முடியாது. யாத்திரை, கர்மானுஷ்டங்கள், யோகாப்பியாசம் போன்றவற்றனாலும்
முக்திநிலையை அடைய முடியாது. சம்சாரத்தில் ஒருவித விரக்தியும், ஆத்ம
விசாரத்தில் ஆசையும், ஊக்கமும் இருந்தால் நாளடைவில் ஞானம்
சித்திக்கும் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் கிடையாது.
பிறகு உலக விஷயங்களை யுக்தியோடு
ஆராய்ச்சி செய்யவேண்டும். யுக்தியில்லாத ஆராய்ச்சியால் ஒன்றும் கைக்கூடாது.
இவ்விதச் சங்கல்பத்துடன் பிரயத்தனத்தை மேற்கொண்டு ஆத்ம விசாரத்தில் மனதை ஈடுபடச்
செய்ய வேண்டும். சொந்த முயற்சியுடன் சாஸ்திரங்களை ஆராய்ந்து வருவதும், குரு
உபதேசம் பெறுவதும் வெகு சீக்கிரம் பலனைக் கொடுக்கும். இந்த மூன்று உபாயங்களால்
நிர்ணயிக்கப்படுவது அனேகமாக முக்திநிலை என்கின்ற சாத்தியமாகவே இருக்கும். இந்த
உபாயங்களால் எல்லாப் பொருட்களையும் சமதிருஷ்டியோடு பார்க்கின்ற மனநிலையை அடைந்து
விடலாம். அதனால் ஏற்படுவது மனஅமைதியாகும். இதை அனுபவத்தில் பூர்ணமாகக் கொண்டுவந்து
விட்டால் பிறகு ஆத்ம சித்தியை அடைவது மிகவும் எளிது. சம நோக்கமும், மனசாந்தியும்
இருந்தால் அதற்கு ஈடாக இகத்திலாவது பரலோகத்திலாவது எந்தவொரு சந்தோஷமும், போகமும்
இல்லை. சாந்தகுணம் உடையவர்களை விஷ்ணுவுக்குச் சமானமாக சொல்லலாம். ஏனெனில்
அவர்களுக்கு இந்த மூன்று லோகத்திலும் தேவையென்பதே இல்லை.
சம்சாரத்தைக் கடக்க உதவும் உபாயங்கள்:
பிரயத்தனத்தாலும், விவேகத்தாலும்
மனதைச் சந்தோஷ நிலையில் வைத்துக் கொண்டு, ஞானிகளின் சங்கத்தையும் தேடிக் கொள்ள வேண்டும்.
சம்சாரத்தைக் கடப்பதற்கு இந்த உபாயம் மிகவும் எளிதானது. பெரியோர்கள் தங்கள்
அனுபவத்திலிருந்து எல்லாம் சொல்வதால் கேட்போருக்குச் சந்தேகங்கள் விரைவில் நீங்குகின்றன. அவர்களை அண்டியிருப்போர்களுக்கு
உலக வாழ்க்கையிலுள்ள அக்ஞானம், மதிமயக்கங்கள் நீங்கிப் புத்தி தெளிவடைகின்றது.
இந்த நான்குவித உபாயங்களின் பலன்களாவது:
· சந்தோஷம் பரமலாபத்தைத் தருகின்றது.
· பெரியோர்களின் சேர்க்கை சரியான மார்க்கத்தைக்
காட்டுகின்றது
· விசாரம் ஞானத்தை அளிக்கின்றது
· சமகுணமோ எல்லா செல்வங்களுக்கும் மேலான பரம
சுகத்தில் நிலைப் பெறச் செய்கிறது.
ஆகையால் நீ இந்த உபாயங்களைக்
கடைப்பிடித்தால் உறுதியாக முக்தியை அடைந்து விடுவாய்.
நமது இந்திரியங்களுக்குப் புலப்படுபவைகளே
பந்தத்திற்குக் காரணமாக இருக்கின்றது. இந்திரியங்களுக்குப் புலப்படாதவைகளால் பந்தமே
கிடையாது. உதாரணமாக ஒரு பதார்த்தத்தைப் பார்க்கும்போது கண் வழியே அடைகின்ற உணர்ச்சியால் அறிவு
ஏற்படுகிறது. அதாவது அறிவு பதார்த்தத்திற்கு சாட்சியாக நிற்கிறது. இதன் பிறகு
இந்தப் பதார்த்தத்தை மனதில் நினைத்து வந்தால் பந்தம் ஏற்படுகிறது. அந்தப்
பதார்த்தத்தை நினைக்காமலிருந்தால் பந்தம் ஏற்பட முடியாது.
ஆகவே பந்தமென்பது உணர்ச்சிகளால்
ஏற்படுவது. இந்த உணர்ச்சி என்பது எப்படி ஏற்படுகிறது? என்பது
அடுத்த கேள்வி. யார் உற்பத்தியாகிறானோ அவனுக்குத்தான் உணர்ச்சியும் உண்டு.
உணர்வோனில்லாமல் உணர்ச்சியும் இல்லை. இந்த உணர்வோன் சம்சாரத்திலேதான்
உற்பத்தியாகிறான்.
ராமன்: நீங்கள் சொல்லியதன் தாத்பர்யம், மனமே
பிரம்மமாகக் கருதப்பட வேண்டுமென்று தோன்றுகிறது. இந்த மனதின் சொரூபம்
என்னவென்பதைப் பற்றித் தெளிவாகச் சொல்லும்படி கேட்டுக்கொள்கிறேன்.
மனதின் சொரூபம்
வசிஷ்டர்: மனம் என்பது சூன்யமாகையால் அதற்கு
உருவமில்லை. ஆகாசம் எப்படியோ அப்படித்தான் மனமும் இருக்கிறது. ஆகாசத்தைப்போல் அது
சர்வ வியாபியாகவும் இருக்கிறது. அது தானாகவே உண்டானது. அதற்கு ஆதியுமில்லை, அந்தமுமில்லை.
நினைத்தவுடன் தோன்றுகிறது. வெளித்தோற்றம் ஏற்படும்போது மனம் இருப்பதாக நாம்
அறிகிறோம். ஆகவே அது தோற்றத்தைத் தவிர வேறில்லை. அதைத்தான் பிரம்மமென்று நாம்
சொல்லுகிறோம். அதற்கு சூட்சும தேகம் மட்டும்தான் உண்டு. சங்கல்பத்தால் கொஞ்சம்
கொஞ்சமாக பூத சம்பந்தமான தேகத்தை எடுத்துக் கொண்டு, அதிலேயே நிலைப்படுத்திக் கொள்கிறது.
அப்போது மனம் என்று சொல்லப்படும். இப்படி மனமாக இருக்கும் தன்மையில்தான் ஜகத்தாகிய
தோற்றமும் ஏற்படுகிறது. ஆகையால் இந்தப் பிரபஞ்சமும் எப்பொழுதும் எக்காலத்திலும்
அழியாத தோற்றமேயாகும். ஆதலால் அதற்கு உற்பத்தி,
நாசம் என்பதும் இல்லை. பிரம்மம் அல்லது
அறிவோன் என்ற சத்தியத்தின் சக்தியாகிய அறியும் தன்மை வெளிநோக்கம் கொண்டால்
பிரபஞ்சமாகிய தோற்றம் ஏற்படுகிறது. அப்படியின்றி அறிவு அறிவோனிடம் ஐக்கியமாகி
இருந்தால் அப்பொழுது இருப்பது ஒரு சத்தியம் மட்டுமே. அந்த நிலைதான்
கைவல்யமெனப்படுவது, அதாவது பிரம்ம பதவி என்ப்படுகின்றது. ஆகையால் ஜகத்தாகிய
அஸத்திலிருந்துதான் ஸத்தாகிய பிரம்மத்தை அறிகிறோம். பிரம்மத்தில் அடங்கிய ‘நான்’ என்னும்
பாவமும் அழிந்தால் பரமசாந்தமும் அமைதியுமாயுள்ள பிரம்மத்தில் லயம் ஏற்படுகிறது.
மனோநாசத்தை அடைய பின்பற்ற வேண்டிய
உபாயங்கள்
வசிஷ்டர்: இத்தோற்றமாகிய உணர்ச்சி ஜாலங்கள்
ஞானயோகத்தைக் கடைப்பிடித்தால்தான் நீங்கும். இந்த ஞானம் தேகத்தைக்கூடிய
நிலையிலிருந்து உதயமாக வேண்டும். தானம், தர்மம்,
கர்மானுஷ்டங்கள், பூஜை
மற்றும் யோகம் ஆகிய இவைகள் யாதொன்றினாலும் ஞானம் ஏற்பட முடியாது. ஞானம் என்பது “நான்” என்ற
அகங்கார பாவம் நீங்குதலேயாகும். அதாவது ஜீவன் எதிலும் ஈடுபடாமலிருப்பதும், எதனாலும்
இயங்காமலிருக்கும் தன்மையை அடைவதுமேயாகும். இத்தன்மையை அடைய கீழ்கண்ட உபாயங்களைக்
கடைப்பிடிக்க வேண்டும். அந்த உபாயங்களாவன:
- விடாமுயற்சியுடன் கூடிய விசாரணையாகும். இதுவே
மூலக்கருவி. இதில்லாமல் ஒரு பலனையும் அடைய முடியாது. விசாரணையாவது “நான்
யார்?” என்பதாகும். எந்தவித விசாரணையும் யுக்தியுடன்
செய்யப்படவேண்டும். இல்லாவிடின் பயனில்லை. எதனால் அறியத்தக்கது அறியப்படுமோ அதுவே
யுக்தியாகும்.
- ஞானிகளின் சேர்க்கையும் இந்தச் சாதனத்திற்குப் பயனளிக்கத்தக்கது.
ஞானிகளின் சேர்க்கையை வெகு கவனமாக பாதுகாத்து,
தெரிய வேண்டியவைகளைக் கேட்டும், பார்த்தும்
அறிந்து கொள்ள வேண்டும். இவ்விதச் சேர்க்கையாலே கூட முக்தியடையலாம்
- சாஸ்திரங்களை ஆராய்ச்சி செய்வதும் அவசியமே.
ஆத்ம விசாரணையைப் பற்றிய சாஸ்திரங்களை மட்டும் இங்கு குறிப்பிடப்படுகின்றது. ஆனால்
சாஸ்திரங்கள் வெறும் சித்தாந்தங்களையே எடுத்துரைத்தும், விசாரித்தும் வந்தால் அவைகள்
பயன்படாது. ஏனெனில் புத்திக்கு இவ்விதத்தில் தெளிவு ஏற்படாது. இக்காரணத்தைக்
கருதியே நாம் இங்கே சொல்லிவருகின்ற மகாராமாயணம் எல்லாச் சாஸ்திரங்களுக்கும்
மேலானதாகவே எண்ணப்படும். ஏனெனில் விஷயங்கள் அனேகமாக இதிகாச ரூபமாகப் புத்திக்குத்
தெளிவாகப் புரியும்படி சொல்லப்பட்டிருக்கின்றன. ஆகையால் கேட்பதற்கு இன்பமாயும், புரியும்படியும் இருக்கும். இந்த மகாராமாயணம் எல்லாவித
மக்களுக்கும் ஞானவழியைக் காட்டுகின்றது. ஆயினும் இதர சாஸ்திரங்களால் இந்த சித்தி
ஏற்படுவதாக இருந்தால் அவைகளையும் பின்பற்றி ஆராய்ச்சி செய்யலாம். நமது முக்கிய
குறிக்கோள் அறிய வேண்டியதை அறிவதுதான் பிரதானமாக இருக்க வேண்டும்.
ஒரு பொருளைப் பார்க்கும்பொழுது
பார்ப்பவனுக்கும் பொருளுக்கும் இடையில் என்ன இருக்கிறதோ அதுவே பிரம்மம். கண்ணுக்கு
எட்டாத தூரமிருக்கும் ஒரு பொருளை மனதில் நினைக்கும்போது இவ்விரண்டிற்கும் இடையில்
என்ன இருக்கிறதோ அதுவே பிரம்மம். அது ஆகாசத்தைக் காட்டிலும் பரம ஆகாசமாக
இருக்கிறது. அறிகிறவன், அறிவு, அறியப்படுவது ஆகிய இந்த மூன்று தோற்றமும் பிரம்மத்தைத்
தவிர வேறில்லை.
கால-தேச உணர்ச்சி
காலம், தேசம் இரண்டும் ஒவ்வொருவருடைய
மனநிலையைத் தழுவி இருக்கின்றன. ஒரே கால அளவு சில சமயங்களில் வெகு சீக்கிரம்
கடப்பதாகவும், வேறு சில சமயங்களில் மிக மெல்ல நடப்பதாகவும்
இருக்கிறது என்பது எல்லோருடைய அனுபவம். கனவிலும் மயக்கமான நிலையிலும் கால அளவு
உணரப்படுவதில்லை. ஆகவே காலமென்பது நம் மனதின் நிலையைத் தழுவி இருக்கிறதே தவிர, அது
ஒரு தனி சத்தியமாக இல்லை. இதேமாதிரிதான் தேசமும் இருக்கின்றது. இவ்விரண்டும்
சித்தில் பிரதிபலிக்கும் தோற்றமேயாகும். இந்த அகண்டப் பிரபஞ்சத்தை ஒரு கணநேரத்தில்
ஒரு தோற்றமாக நம் மனதில் காண்பதில்லையா? இதையே திருப்பிச் சொல்வோமாகில் மனதில் தோன்றிய
ஆகாசமான தோற்றம் வெளிப்படையாக உருவமும் கனமும் கூடிய பிரம்மாண்டமான காட்சியாகிறது.
ஆகையால் மனதில் தோன்றுவதும் வெளிப்படையாகக் காண்பதும் சித்தில் ஏற்படும்
தோற்றங்களேயாகும். இதேமாதிரிதான் காலப்பிரமாணமும் இருக்கிறது. பல வருடங்களாக உன்
மனதில் ஏற்பட்ட தோற்றம் வேறு சிலருக்குச் சொற்ப காலமாகத் தோன்றலாம்.
மரணத்திற்கு பிறகு ஜீவன் செயல்
பிறகு ஜீவிதம் எடுக்கும் கிரமத்தைப்
பார்ப்போமாகில், மரணத்திற்கு பிறகு இந்த ஜீவன் சூட்சும தேகத்துடன்
எல்லாவற்றையும் நினைவுக்கு கொண்டு வர முயற்சி வருகின்றது. ஆனால் சற்று முன்பு ஸ்தூல
சரீரத்துடன் நடத்திய வாழ்வு முற்றிலும் அதன் நினைவுக்கு வருவதில்லை. மேலும் இந்தச்
சூட்சும நிலையில் இதற்கு முன்னேயிருந்த பிறவியில் அனுபவித்தவைகள், அனுபவிக்கப்படாதவைகள்
எல்லாம் மறக்கப்பட்டிருக்கும். மனம் எல்லையில்லாக் கற்பனைகளைச் செய்து கொள்ளக்
கூடிய சக்தி வாய்ந்திருப்பதால் ஜகத், காலம், தேசம், சம்சாரம்,
உறவினர்கள் போன்றவற்றை கற்பித்துக்
கொள்கிறது. இதற்கெல்லாம் காரணம்
முற்பிறவிகளில் செய்த செயல்களேயாகும்.
ஆனால் இவைகள் ஜீவனுடைய நினைவுக்கு மாத்திரம் வருவதில்லை. ஏனெனில் அனுபவங்கள்
தேகத்துடன் கூடி உண்டாயின. ஆகையால் அத்துடன் ஒழிந்தும் விடுகின்றன. ஆயினும்
மறுபிறப்புக்கு வேண்டிய சங்கல்பங்களை அது செய்து கொள்கிறது. இந்த நிலையில்
அனுபவிக்காதது கூட அனுபவித்தது போல் தோன்றும். ஜீவனுக்குச் சங்கல்பமே முக்கியமான
செயலாகும். இதனாலேதான் திரும்பித்
திரும்பி தேகத்தை எடுத்துக் கொள்ள முடிகிறது.
மரணமடைந்தவர்களும் பிண்ட தானாதிகளும்
ராமன்: மரணமடைந்தவனுக்குப் பந்துக்களால் பிண்ட தானம்
அளிக்கப்படாமல் இருந்தால் அது ஜீவனை எப்படிப் பாதிக்கும்?
வசிஷ்: பிண்டம் அளிக்கப்பட்டாலும்
இல்லாவிட்டாலும் ஜீவனுக்கு இந்த வாசனை இருந்து வந்ததால், அது
அளிக்கப்பட்டதாகவே உணரும். சித்தில் சங்கல்பமாக பாவனை செய்யப்பட்டவைகளேதான்
சூட்சும ஸ்திதியிலும் ஸ்தூல ஸ்திதியிலும் சம்பவிக்கும். சங்கல்பம்
செய்யப்படாதவைகள் அனுபவத்திற்கு வராது. ஆகையால்தான் பிண்டம் கொடுத்த நினைவு கூடியே
இருக்கும். இதனால் தனக்கும் பிண்டம் அளிக்கப்பட்டதாகவே சூட்சும ஸ்திதியில் உணரும்.
ராமன்: ஒருவன் தனக்கு தர்மமென்பதே கிடையாதென்ற
எண்ணத்துடன் இறப்பானாகில் அவன் பொருட்டு அவன் பந்துக்களால் செய்யப்படும்
தர்மங்களின் பலன் இவனுக்குச் சேருமா சேராதா?
வசிஷ்: தர்மங்களைச் செய்கின்ற பந்துக்களினுடைய
சக்தியைப் பொருத்து இது அமைகிறது.
நியதியைப் பற்றி விளக்கம்:
நியதியின் விஸ்தாரம் சகலத்தையும்
வியாபித்த நிற்பதால், இதற்கும் சாட்சி பூதமாக இருக்கின்ற
பரமார்த்தத்தையே நாம் சந்தேகிக்கும்படி நேர்ந்து விட்டது. ஆனால் பரப்பிரம்மத்தின்
இருத்தலை நாம் எளிதில் மறந்துவிடுகிறோம். அப்படி இல்லாவிடின் நியதியும்
நிலைக்காது.
இந்த சம்சாரம், நியதியென்னும்
தத்துவங்கள் எல்லாம் பிரம்மா-விஷ்ணு-சிவன் இவர்களைப் போல ஞானிகளால் நமக்கு
அறிவிக்கப்பட்டன. மேற்சொல்லிய நியதிக்கு ஆதாரம் பௌருஷமே. இப்பௌருஷமில்லாவிட்டால்
நியதி நிலைக்காது. பௌருஷமும் சித்தின் தன்மையேயாகும். மானிடர்களுக்கும் பௌருஷமே
பிரதானம். பௌருஷமின்றி ஒரு செயலையும் சாதிக்க முடியாது. நியதியின் சுபாவமும்
இப்படியேயாகும். ஓவ்வொருவருடைய செயல்களுக்கும் நியதியே காரணமாகும். தற்சமயம் நீ என்
உபதேசத்தை அடைவதும் நியதியின் குணத்தாலேதான். அப்படி இருந்தபோதிலும் மனிதர்கள்
பௌருஷமில்லாமல் இருப்பின் அவர்களுடைய கதியும்,
மரம், மட்டைகளைப் போலவேதான் ஆகும். நியதியின்
சக்தியால் தேகம் ஏற்பட்டு இருப்பதால், அது நியதியாலேயே காப்பாற்றப்படுமென்று ஒருவன்
சும்மா இருப்பின், அவன் உயிரை இழப்பதில் சந்தேகமில்லை. நியதியானது
எப்படிப் பௌருஷத்தால் நிலைநிற்கிறதோ அவ்விதமே மனிதர்களும் பௌருஷத்தால்தான் நிலை நிற்க முடியும். ஆகையால் நியதியின் நடை
எவ்விதமிருப்பினும் மனிதர்கள் பௌருஷத்தைக் கைக்கொண்டுதான் ஞானத்தை அடைய வேண்டும்.
நாம் எதை விரும்பினாலும் அதைப்
பிரயத்தனத்தால் அடைவது நிச்சயமே, ஆனால் அது அதை அடைந்த பின்பு எந்தவிதமான
மகிழ்ச்சியை கொடுக்குமென்பது நிச்சயமில்லை. இப்படி விபரீதமாக விளைகின்ற
கிரமமென்னவென்றால், ஒரு விஷயத்தில் நாம் இச்சை வைக்கும்பொழுது
மனதெல்லாம் அதிலேயே லயப்பட்டு அதைத் தழுவி நிற்கும் இதர விஷயங்களை கவனிக்க
முடியாமலும், அந்த விஷயங்களுக்குத் தேவையான ஏற்பாடுகளை
செய்யாமலுமிருப்பதே சகஜம். இதனால் காரியம் கைகூடியும் அது நம்மைப் பிரதிகூலமாக
பாதிக்கின்றது. ஆகவே எதன் மீதும் ஆசை வைக்கக் கூடாது.
ஜீவஜந்துக்களுக்குச் சத்ருவாயிருப்பது
விஷக்கிருமிகளேயாகும். இவைகள் எங்கும் பரவியும் எல்லாவற்றிலும்
வியாபித்திருக்கின்றது. தேக ஆரோக்கியம் கொஞ்சம் குறைந்தால் கூட அவைகள் தேகத்தில்
வேரூன்றி தேக நாசத்திற்குக் காரணமாகின்றன. இந்த விஷக் கிருமிகள் இல்லாத இடங்கள்
சொற்பம். உதாரணமாக காற்றோட்டமில்லாத இடங்கள்,
கொசுக்கள் நிரம்பிய இடங்கள், சதா
ஈரமாக இருக்குமிடங்கள், பில்வ மரமில்லா இடம், அழுக்கு
உடைகள், எலும்பு மூட்டுக்கள், அதி
வேகமாக அடிக்கும் காற்றுகளில், மூடுபனிகளில், நகசந்துக்களில், மனிதன்
சஞ்சாரமுள்ள இடங்களில் இருக்கின்ற புதர்களில்,
எச்சில், பாலைவனம் ஆகிய இடங்களிலெல்லாம்
இக்கிருமிகள் எப்பொழுதும் சஞ்சரிக்கின்றன. மேலும் யாத்ரீகர்கள். வழிநடைகள், பேன் பிடித்தவர்களால் உபயோகிக்கப்படும் பாத்திரங்கள்
இவைகளால் இக்கிருமிகள் வேறிடங்களுக்கு பரவுகின்றன. ஆத்ம
ஞானமில்லாமலிருப்பவர்களிடமும் இந்தக் கிருமிகள் இருப்பது நிச்சயம். இக்கிருமிகள்
வியாதிகளுக்கு மாத்திரம் காரணமாக இல்லாமல் எல்லா ஜீவப்பிராணிகளிலும்
வியாபித்திருக்கின்றன. நம்முடைய தேகம் முழுவதும், அதாவது ரோமம், தோல், மாமிசம், ரத்தம், எலும்பு
எல்லாமுமே இவைகளாலே வியாபிக்கப்பட்டு வளர்ச்சியுமடைகின்றன. தேகநிலை சரியாகவும் ஒரு
நிதானத்திலும் இருக்கும் வரையில் இக்கிருமிகள் தங்கள் செயல்களை நேராகவே
செய்துகொண்டு வருகின்றன. தேக ஆரோக்கியம் நாம் உட்கொள்கின்ற உணவாலேயோ அல்லது வேறு
காரணத்தினாலோ குறைந்தால் அப்பொழுது இக்கிருமிகளே விஷமாகின்றன. ஆகவே அமிர்தமும்
விஷமும் ஒரே கிருமி இனத்தின் மாறுதலான செயல்களாகும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
பரமாத்ம தத்துவம்
பிரபஞ்சத்திற்கெல்லாம் காரணமாகயிருந்தும் எதிலும் ஒட்டாமல் நிற்கின்றது. எல்லாம்
அதில் அடங்கி இருப்பதென்றோ அல்லது அது எல்லாவற்றையும் ஊடுருவி நிற்பதாகவோ
கருதலாம். மேலும் அது பரமாணுவின் தன்மையை அடைந்தது போலிருக்கிறது. பிரபஞ்சமாகிய
காட்சி இப்பரமாணுவில் தோன்றுகின்றது. இதைச் சூன்யமாகவோ அல்லது பூர்ணமாகவோ
பாவிக்கலாம். மனதைச் சேர்த்து ஆறு இந்திரியங்களுக்கும் புலப்படாமலிருப்பதால்
சூன்யமாகத் தோன்றுகிறது. ஆனால் அது எக்காலத்திலும் எல்லாப் பொருட்களிலும் எங்கும்
நிறைந்திருப்பதால் பூர்ணமென்றும் தோன்றுகிறது. எவ்விதம் எண்ணப்பட்டாலும் இந்த
பாவனைகளெல்லாம் நம் மனதில் புலப்படுபவைகளாக இருக்கின்றன. ஆத்மாவுக்கு ஒருவித
பாவனையும் கிடையாது. அது ஒருமைத் தன்மையுடனும்,
பாவனையற்றும், நிர்மலமாயும், சாசுவதமாகவும், கேவலம் இருத்தல் என்ற தன்மையுடனும் இருக்கிறது.
மற்றவைகள் எல்லாம் அதனாலேயே பிரதிபலிக்கும் தோற்றங்கள், ஆகையால்
நாசத்திற்கு உட்பட்டவைகள். இத்தோற்றங்கள் அவரவர் மனோநிலையைத் தழுவி கால
வித்தியாசங்களைக் காண்பிக்கின்றன. ஆகையால் மனோநிலைதான் காலப்பிரமாணத்திற்கு ஆதாரமே
தவிர காலமென்ற ஒன்று தனியாக சத்தியமாக இல்லை,
இதுவும் ஒரு கற்பனையேயாகும். ஆயினும்
இந்தத் தோற்றங்கள் நமக்கு திடமானதாகவும், புஷ்டியுள்ளதுமான அனுபவங்களைக் கொடுத்து
வருகின்றன. ஏனெனில் அக்ஞானமாகிய மதிமயக்கமும்,
தோற்றமாகிய மதிமயக்கமும் ஒரே
சமுதாயத்தைச் சேர்ந்தவைகளாக இருக்கின்றன. ஆகையால் மோகம்தான் மோகத்தை உணருகிறது.
சத்யம் சத்யமாகவேதான் இருக்கும். நமது மோகம் நீங்கினால் வஸ்து ஜாலமாகிய மோகங்களும்
அத்துடன் நாசமடைகின்றன. இந்நிலையில் மிஞ்சி இருப்பது உள்ளும் புறமும் வியாபித்து
நிற்கும் ஆத்மா மட்டும்தான். இதற்குக் காலதேசக் கட்டுபாடுகள் கிடையாது. ஒரு
பானையில் மூடி வைத்த ஆகாசத்தை ஆயிரம் மைலுக்கப்பால் திறந்தால் அதன் உள்ளும்
வெளியேயும் உள்ள ஆகாசம் எப்படி வெவ்வேறாகாதோ அப்படியே எல்லாப் பொருட்களையும்
வியாபித்து நிற்கும் ஆத்மாவும் வெவ்வேறாக இருக்க முடியாது. இது போவதுமில்லை, வருவதுமில்லை, மாறுவதுமில்லை.
இந்த மாறுபாடுகள் எல்லாம் உற்பத்தியின் கிரமத்தைப் பற்றி அறியாதவர்களுக்கேயாகும். கானல்
நீரில், நீர்க்காட்சி எப்படி ஏற்படுகிறதோ அதேமாதிரி ஞானத்தின் இருத்தலில் அக்ஞானத்
தோற்றம் ஏற்படுகின்றது. இந்த அக்ஞானத்திற்குக் காரணம் “நான்”, “பொருட்கள்” என்ற
பேத பாவனையேயாகும். இரண்டிலும் பொதுவாக நிற்கும் ஆத்ம உணர்ச்சி ஏற்பட்டால் உடனே
மோட்சத்தை அடைவதற்கான உபாயம் உதயமாகிறது.
பிரம்மம் அல்லது ஆத்மாவென்பது ஜகத்தை
ஒட்டிய அபாவம். பாவமாகிய உணர்ச்சியே ஜகத், அபாவத்தன்மை ஆத்மாவாகும். அது எல்லாவற்றையும்
விட்டொழிப்பாதாகவும் ஒன்றுமில்லாததாகவும் இருப்பதேயாகும். இதில் ஏற்படும் விஸ்தரிப்பே ஜகத்தாகும்.
விஸ்தரிப்பு அடங்கும்பொழுது பிரளயம் ஏற்பட்டதாகச் சொல்லப்படும்.
பரமாணுவிலும் பரமாணுவாக இருப்பதால்
சூன்யமாக நிற்கின்ற பிரம்மத்தில் ஏற்படும் மதிமயக்கம் அறிகிறவன் - அறிவு என்ற
இரட்டை பாவனை ஆகின்றது. பிறகு இந்த அறிகிறவனுடைய பிரதிபிம்பமாகிய ஜகத் அறியும்
தன்மையால் அறியப்படுகிறது. ஆகவே நம்முடைய உணர்ச்சிகளைத்தான் வஸ்துக்களாக
அனுபவிக்கிறோம். ஜகத் அல்லது பொருட்கள் சப்தங்களால் குறிப்பிடப்படுகின்றன. இந்தச்
சப்தத்திற்கும் அதன் அர்த்தத்திற்கும் அப்பால் நிற்பது பிரம்மம் ஒன்றேயாகும். இது
எல்லாமுமாக இருந்த போதிலும் உண்மையில் ஒன்றுமில்லை. எல்லா சப்தங்களுக்கும் மூல
அர்த்தமாக நிற்பது இந்த பிரம்மம்தான். இப்படி இருப்பதற்குக் காரணமும் அதுவேதான்.
சித்தின் இயக்கமே சிருஷ்டியின்
ஆரம்பமாகும். இந்த சித்தானது எவ்விதமெல்லாம் சங்கல்பம் செய்ததோ அவ்வவ்விதமே
பொருட்களுக்கு ஆதாரமாயிற்று. நாளுக்குநாள் சங்கல்பம் முதிர்ந்ததும் சூட்சுமமான
நிலையிலிருந்தவைகள் ஸ்தூல கதியை அடைந்து பொருட்களென்று பாவிக்கப்படுகின்றன.
அதனால் இந்தப் பொருட்கள் நமக்கு சத்தியமாகத் தோன்றுகின்றன. ஆகவே சூட்சுமமாக
இருந்தவைகள் ஸ்தூலமாக இப்பொழுது உணரப்படுகின்றனவே தவிர, முன்பு
ஒன்றுமில்லாமல் இப்பொழுது உணர்ச்சி ஏற்படுவதில்லை. நம் கண்களை உபயோகிக்கும் பொழுது
அனுபவத்தில் வந்தவைகளைத்தான் உணருகிறோமே தவிர புதியதாய் ஒன்றையும் உணருவதில்லை.
குழந்தை புதிய வஸ்துவைக் காணும் பொழுது அப்பொழுது அந்த வஸ்து எவ்வாறு தோன்றுகிறதோ
அதைத்தான் உணருகிறதே தவிர வஸ்துவின் சுய சொரூபத்தை அது அறிவதில்லை. ஆகையால் நம்
மனதின் ஸ்திதியே வெளிப் பிரபஞ்சமாகிறது. ஒரு மலர்வனத்தில் வசந்த காலம் வந்தவுடன்
பலவித செடிகளில் வெவ்வேறு விதமாய் மலர்கள் மலர்கின்றன. ஆகையால் இவைகள்
வசந்தகாலத்தின் சாரமாகும். சாரம் ஒன்றாய் இருந்தும் மலர்கள் பலவிதமாகின்றன.
அதேமாதிரி சித் ஒன்றாக இருந்தும் உணர்ச்சிகளும் அனுபவங்களும் வெவ்வேறாகின்றன.
இப்படியாக பல உணர்ச்சிகளுக்குக் காரணம் மனதேயாகும்.
சித்தின் பிரகாசத்தினால்தான், அதைத்
தவிர்த்து வேறில்லாத, பிரபஞ்சமும் உணரப்படுகின்றது. சித்தின்
பிரவிருத்தியின்றி பிரபஞ்சம் உணரப்பட முடியாது. சூரிய சந்திர மண்டலங்களும்
பிரகாசிப்பது சித்தின் ஒளியாலேதான். சித்தானது பிரகாசிக்காவிட்டால் இவைகளின்
ஒளியைக் காண முடியாது. வெளிச்சத்திற்கு எதிரானது இருட்டு. வெளிச்சம் உண்டானால்
இருட்டு மறைந்து விடுகிறது. ஆயினும் இவ்விரண்டையும் ஒரே சமயத்தில் உணர
சித்தால்தான் முடியும். வெள்ளை மேகத்தில் இருக்கும் பனி வெளுப்பாகவும், மையின்மேல்
விழுந்த பனி கருப்பாகவும் இருப்பது போல, ஒளியில் சித்தானது பிரகாசமாகவும், ஒளி
மறைந்ததும் இருட்டாகவும் உணரப்படுகின்றது.
தூரதேசத்தை ஒருவன் மனதில் சங்கல்பம்
செய்துகொண்டு பிறகு அவ்விடம் சேர்ந்ததும் சங்கல்ப நகரத்தைப் பிரத்யக்ஷமாகக்
காண்கிறான். சங்கல்பம் செய்வது,
பிறகு இதைக் கண்டு ஆமோதிப்பது ஆகிய இவ்விரண்டையும் தாண்டி நிற்கும் ஏக வஸ்துவால்தான் இதை உணர முடியும். அதுதான் இங்கு சொல்லப்படும்
சித்தாகும்.
ஆகவே இந்த சித்துதான் தன் இஷ்டப்படி
பொருட்களாகிய தோற்றங்களைக் கற்பித்து அவைகளை வியாபித்தும் நிற்கின்றது. ஆகையால்
நம்மால் காணப்படும் ஜகத் சித்தைத் தவிர வேறில்லை. விளையும் மரம் சூட்சுமமாக
விதையிலிருப்பது போல இந்த ஜகத் முழவதும் சூட்சுமமாக சித் பரமாணுவில் அடங்கி
இருக்கிறது. இந்த விதையை ஒரு பானையில் மூடி வைத்தால் எப்படியோ அப்படித்தான்
தேகத்தில் மூடிவைக்கப்பட்ட ஜீவனும் இருக்கிறது. இப்படிப் பலவிதத் தோற்றங்களைக்
கொடுத்தும் சித்தானது ஒரு மாறுபாடுமில்லாமல் இருப்பதால், இரண்டு, ஒன்று
என்னும் தத்துவங்களுக்கும் அதனிடத்தில் இடமில்லை. ஒன்று என்பதை நினைத்தால்தான்
இரண்டு என்பதற்கு இடம். ஆகையால் எண்ணிக்கையை விட்டு ஒன்றுமில்லை என்கின்ற கொள்கையை
ஆசிரயிப்பதே சரியான மார்க்கமாகும். அதாவது பிரம்மத்திலிருந்தே எல்லாம் உற்பத்தி
என்பதை மனதில் நன்றாக பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.
“அதிலிருந்து இது” என்னும் வாக்கியத்திலேயே பேதம் இருக்கும்போது
த்வைதம் சத்யமல்ல என்று எப்படிச் சொல்லலாமென்ற சந்தேகம் வருகிறது.
பதம், வாக்கியம் ஆகியவையெல்லாம்
வியவகாரத்திற்கு வேண்டிய கருவிகளே தவிர, சுயமாகவே அவைகள் சத்யமாகாது. வியவகாரத்தில்
இரண்டு என்ற பாவமின்றி ஒரு செயலும் செய்ய முடியாது. எல்லாம் அறிந்த ஞானிக்கும்
வியவகாரத்தில் பேதத்தை அனுசரித்துத்தான் எதுவும் செய்ய இயலும். ஆனால் அவர்களிடம்
மூல தத்துவம் எப்பொழுதும் உணர்ச்சியில் இருந்துக் கொண்டிருக்கும். வியவகாரமின்றி
மூல தத்துவத்தைக் குறிப்பிடுவது சர்வ மௌனமேயாகும். ஆகையால்தான் சொல்லும்
கதைகளிலும் வசனங்களிலும் தாத்பர்யத்தை எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர கேவலம் பத
அர்த்தங்களைக் கவனிப்பதில் பிரயோஜனமில்லை. சொல்லப்படும் தத்துவங்கள் சுலபமாகவும், தெளிவாகவும்
புத்திக்கு புரியும் பொருட்டு கதாரூபமாகவும்,
அழகிய சொற்களாலும், பல
உதாரணங்களைச் சேர்த்தும் பிரம்ம தத்துவம் உபதேசிக்கப்படுகிறது. இவ்விதம்
சொல்லப்படாவிட்டால் இந்த உபதேசங்களை புரிந்துக் கொள்வது மிகவும் கடினமாகவிருக்கும்.
கர்மேந்திரியங்களால் செய்யப்படும்
செயல்கள் புறப்பொருட்களால் பாதிக்கப்படலாம். மனோ நிச்சயத்தால் செய்யப்பட்ட
கிரியையை வேறெருவராலும் தடுக்கமுடியாது. வெகுகாலம் எந்தவொன்று திடமாக மனதினால்
பாவிக்கப்பட்டு வருகிறதோ அதற்குச் சாபத்தினாலும் பாதகம் ஏற்படாது. சாபம்
சரீரத்தைத்தான் பாதிக்கும்.
இந்த பரந்த பிரம்மாண்டம் மனது
என்பதிலிருந்து உதித்ததே. ஆகையால் இந்த மனதுதான் பிரதான புருஷன். தேகத்தால்
செய்யப்படும் செயல்கள் எல்லாம் மனதால் செய்யப்படுவதுதான். அதாவது மனதின் ஏவலின்றி
செயல்கள் செய்யப்படவில்லை. இந்த ஸ்தூல தேகமானது மனதால் தேடிக்கொள்ளப்பட்டதேயாகும்.
ஆகையால் தேகம் யாதொரு செயலுக்கும் கர்த்தாவாக முடியாது. ஏனெனில் அது ஒரு
ஜடப்பொருள். மனதின் வேகத்தால் சங்கல்பிக்கப்பட்ட ஒரு விஷயத்தை இந்த தேகமாவது
அல்லது வேறொரு ஜடப் பொருளாவது தடை செய்ய முடியாது. மனது வேறொரு மனதால்தான்
அசைக்கப்படும்.
மனதால் நிச்சயிக்கப்படுவது
தீர்க்கமாகவும் தளர்ச்சியுமின்றி இருந்தால் அதை யாராலும் எவ்விதமும் அசைக்க
முடியாது. எவ்வித சாபமும் அதைப் பாதிக்காது.
இந்தப் பிரபஞ்சத்தில் ஊக்கத்தினாலும்
விடாமுயற்சியாலும் மனிதர்களால் அடையப்படாதது ஒன்றுமேயில்லை. பிறகு எல்லாப்
பொருட்களும் இரண்டு சரீரங்களை சார்ந்திருக்கின்றன. அதாவது எப்பொழுதும் சஞ்சலமென்பதையே
குணமாகக் கொண்ட மனம் என்பதையும், இரண்டாவதாக உருவம் கொண்ட ஜட சரீரத்தையும்
உடையதாக இருக்கிறது. இந்த ஜட சரீரந்தான் சாபம் போன்ற மந்திரங்களால் பாதிக்கப்பட்டு
நாசமடையலாம். ஆனால் மனதென்பதோ திடமாகத் தன் சக்தியை உணர்ந்து இருக்குமாயின்
யாதொன்றாலும் அசைக்கப்பட முடியாது. மனோதிடம்,
தைரியம் இல்லாதவர்கள்தான் மனதின்
மூலமாக சாபங்களுக்குப் பாத்திரமாவார்கள். இந்த தேகம் தானாகவே எதையும் செய்ய
முடியாது. மனதோ எதையெல்லாம் அடையவேண்டுமென்று ஆசைப்படுகின்றதோ அதையெல்லாம் அடைந்தே
தீரும். ஓன்றை இச்சிப்பதும், பிறகு அதை அடையும்பொருட்டு செயலில் ஈடுபடுவதும், கடைசியில்
பலனை அடைவதும் ஆகிய எல்லாம் மனதால் நடைபெற்று வருகிறதே தவிர தேகத்தால் இல்லை.
மனதின் கட்டளையை செய்ய வேண்டிய ஒரு கருவியாகத்தான் தேகமிருக்கிறது. ஆகையால் இந்த
மூன்று லோகங்களுக்கும் மூலமாயிருக்கும் மனதை சாபமும் மந்திரமும் பாதிக்காது.
குயவன் பானையை
செய்து முடித்ததும் மண்ணாகிய சொரூபம் பானையில் மறைவது போலும், தங்க ஆபரணங்களில்
தங்கத்தின் சொரூபம் மறைவது போலும், மனதானது தன் பௌருஷத்தால் இச்சை கொண்டதை அடைந்து அந்தப்
பலனில்தான் மறைகிறது. ஆகையால் பலன் என்பதும் மனதின் வேறுபாட்டைத் தவிர வேறில்லை
மனம் என்பது
பிரம்மத்திலிருந்து தானாகவே ஒரு இயக்கத்தினால் உண்டானதென்பது தெரிகிறது. இந்த
இயக்கமே மூல அவித்யா அல்லது மூல அக்ஞானமாகும். இதனால் பிறகு தன் கற்பனா சக்தியால் “நான்”, “நீ”, என்ற பேதங்களும், பிறகு
ஜகத்தாகிய பல பொருட்களும் கற்பிக்கப்பட்டன. ஆகவே சிருஷ்டி ஆரம்பத்தில் மனதாகிய ஒரே
சரீரம் மட்டும்தான் உருவானது. பிறகு இது தன் இச்சையால், பிரம்மாண்டத்தின்
உற்பத்திக்குக் காரணமாகிய பஞ்சபூதங்களையும் அவைகளின் வேறுபாடாகிய இதர சக்திகளையும்
பதினான்கு மூல வஸ்துக்களையும் கொண்டு, சூரிய கிரணங்களாலும் வெப்பத்தினாலும் சிருஷ்டிக்கப்பட்ட
உருவ அமைப்புக்களில் பிராணனென்று கூறப்படும் சக்தியாக உட்சென்று இரண்டாவது
சரீரத்தை அடைகின்றது. வாசனை என்பவைகள் இவ்விதம் ஏற்பட்டு, பிறகு சம்சாரமென்ற
பிரவாகம் உலகத்தை திரட்டி நிற்கின்றது. ஆகவே இச்சா சொரூபங்களே இந்தப்
பூதாதிகளெல்லாம் என்று தெரிகிறது.
பிரபஞ்ச
வாழ்க்கையையும், சம்சாரத்தையும்
கவனித்தால், மானிட
வர்க்கங்கள் மூன்று முக்கிய பிரிவுகளாகப் பிரிக்கப்படும். அவைகள் உத்தமம், மத்திமம், அதமம் என்பவைகளாகும்.
இந்த மூன்று பிரிவுகள் மறுபடியும் ஒவ்வொன்றும் சாத்வீக, ராஜஸ, தாமஸமென்ற மூன்று
கிளைகளாக பிரிக்கப்படுகிறது. இந்தப் பிரிவுகளில் அடங்கப்பட்ட ஒவ்வொரு
ஜனக்கூட்டங்களும் அவரவர்களின் குணம், செயல், சம்சார ஈடுபாடுகளையொத்து வெகு சீக்கிரமோ அல்லது கொஞ்சம்
தாமதித்தோ அல்லது வெகுகாலம் தாமதித்தோ சம்சாரத்திலிருந்து விடுபட்டு மோட்சத்தை
அடைகிறார்கள். ஆகவே ஒவ்வொரு மனிதனும் காலக் கிரமத்தில் மோட்சத்தை அடைவது நிச்சயம்.
ஒருவருக்கொருவரில் உள்ள வித்தியாசம் காலத்தில்தானே தவிர மோட்சத்தில் அல்ல.
அப்படியிருந்தும்
இந்தக் கதியை அடையும் வரையில் சம்சாரத்தில் சுழன்று திண்டாட வேண்டியிருப்பதால்
நம்முடைய முயற்சிகளெல்லாம் மோட்சத்தை கூடிய சீக்கிரம் அடையும் பொருட்டுச்
செய்யப்பட வேண்டும். இந்தச் சம்சாரமாவது ஏற்கனவே சொன்னபடி கர்மாவினால் ஏற்பட்டது.
கர்மாவோ கர்த்தாவைத் தவிர்த்து தன் சொரூபமாக இல்லை. பூவும் வாசனையும் போலவும், சமுத்திரமும் அலைகள்
போலவும் கர்த்தாவும் கர்மாவும் கூட ஏக காலம் தோன்றி, விரிவடைந்து, அழிந்து சம்சாரத்
தோற்றம் நடைபெற்று வருகிறது.
ஆகையால்
மனதின் இயக்கந்தான் கர்மாக்களுக்குக் காரணமாகின்றது. இந்தக் கர்மாக்களே
மறுபடியும் மனம் சஞ்சலத்துடன் இருப்பதற்குக்
காரணமாகின்றன. ஆகவே ஒன்றைத் தழுவி மற்றொன்று விஸ்தரிக்கின்றது. கர்மா நாசமடைந்தால்
மனம் நாசமடைகின்றது. மனம் நாசமடைந்தால் கர்மாவும் நாசமடைந்துவிடும். மனம் சங்கல்ப
சொரூபம். சங்கல்பமென்பது அசைவின் சொரூபம். இந்த அசைவினால் ஏற்படும்
கிரியைகளெல்லாம் பாவனையின் பலன்களேயாகும்.
ராமன்: முனி சிரேஷ்டரே!
சங்கல்ப சொரூபத்துடன் கூடிய மனம் ஜட சம்பந்தமான விஷயங்களில் எப்படி நிலைபெற்றது
என்பதை விளக்கிச் சொல்ல வேண்டும்.
வசிஷ்: மனம் சஞ்சல
சொரூபமென்று சொல்லப்பட்டது. இவ்வாறு சஞ்சலத்துடன் இருப்பதற்கான காரணம் தான்
யாரென்று அறியாத தன்மைதான். இந்தச் சந்தேகத்தினால் ஒவ்வொரு பொருட்களிலும்
தானிருப்பதாகப் பாவித்து அதில் தன்னைக் கண்டு அதிலேயே சிக்கிக் கொள்கிறது. இப்படி
எல்லாப் பொருட்களிலும் பற்றுதல் அடைந்து அவைகளாகவே மாறிவிடுகிறது. இதனால் ஜடத்
தன்மை வேரூன்றிவிட்டது. இப்படியின்றி தான் யாரென்ற உண்மையான ஞானம் ஏற்பட்டு, சந்தேகமின்றி அதிலேயே
நிலைத்து இருக்குமானால் மனதுக்கு சஞ்சலமேது? அந்த நிலையில் தன்
சுயநிலையாகிய சாந்தத்தில் அது நிலைத்து நிற்கும். ஆகையால் அக்ஞானமே
சஞ்சலத்திற்குக் காரணமாக இருக்கின்றது என்பது தெரிகிறது. இச்சஞ்சலங்களே கிரியை, கர்மா, வாசனை என்பவைகளாக
ஏற்படுகின்றன. எவ்விதக் கிரியைகளும் மனதின் ஏவலின்றி ஏற்படமுடியாது.
ஆகவே சுத்த
சம்வித்தே ஒரு களங்கத்தினால் மனதென்ற நிலைக்கு வந்திருக்கிறது. இந்த மனம் ஏதாவது
ஒரு விஷயத்தில் ஒருமுகமாகி ஒரு நிச்சயத்தை அடையும்போது புத்தியென்று
சொல்லப்படுகிறது. மனதுக்கு நானென்ற பாவம் ஏற்படும்பொழுது அகங்காரமென்று
சொல்லப்படும். ஒரு பாலகனைப் போல் பல விஷயங்களில் சஞ்சலப்பட்டால் அப்பொழுது
சித்தமென்று சொல்லப்படும். இவ்விதமே கர்மம், கற்பனை, ஸ்மிருதி, வாசனையென்று
சமயத்திற்கேற்றபடி பல்வேறு பெயர்களால் வழங்கி வருகிறது. உண்மையில் இருப்பது சுத்த
சம்வித் ஒன்றேயாகினும், இரண்டு என்ற பாவம்தான் பூரணமாக உணரப்படுகிறது.
ராமன்: உங்கள்
உபதேசத்திலிருந்து மனம் ஜடமா, அல்லது சேதனமா என்பது நிச்சயம் ஏற்படவில்லை. எனவே இதைத்
தெளிவுபடுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.
வசிஷ்: அது இரண்டுவிதமான
தோற்றத்தை உடையது. ஆகையால் இரண்டிற்கும் நடுவிலுள்ள தன்மையென்றே சொல்லவேண்டும்.
இதுவோ அதுவோவென்ற நிச்சயம் தனக்கு ஏற்படாமல், அங்கும் இங்கும்
ஊஞ்சலாடித் திகைத்து நிற்பதைத்தான் மனமென்று சொல்கிறோம்.
மற்ற நியாய, வைசேஷிக, சாங்கிய, ஜைமினி, புத்த சமயத்தவர்களால்
இந்த மனதின் சொரூபம் வெவ்வேறு விதமாகச் சொல்லப்படுகின்றது. ஆனால் இக்கொள்கைகள்
யாவும் புத்திக்கோ, யுக்திக்கோ
பொருந்தி வராது. ஆகையால் இங்கே ஒரே ரூபமாக விஸ்தரித்துச் சொல்லப்பட்டதை மனதில்
வாங்கிக் கொள்ளவும். சுருக்கிச் சொல்வோமாகில், மனம் ஜடமாக இருந்தால்
சம்சாரத்திற்குக் காரணமாக இருக்க முடியாது. அஜடமாக இருந்தாலும் அப்படியோயாகும்.
சேதனத் தன்மையுள்ள சிலந்திப் பூச்சி எப்படி ஜடமாகிய நூலை தன் தேகத்திலிருந்து
வெளிப்படுத்தியும், பிறகு
தன்ளுள்ளே இழுத்துக் கொள்கிறதோ, அதுபோலவே சுத்த சம்வித்தான இப்பிரபஞ்சத்தை தன்னிடம்
தோற்றிவைக்கவும், மறைத்துக்
கொள்ளவும் செய்கிறது. காண்கின்ற புருஷனும், மறைக்கின்ற புருஷனும்
இந்த மனமேயாகும்.
ஆகவே இந்த
மனம்தான் தேவர்கள், யட்சர்கள், அசுரர்கள், கின்னரர்கள், மனிதர்கள் என்றெல்லாம்
விஸ்தரித்து, தன்னையே
வெவ்வேறாகக் கருதி, அவ்விதமே
கண்டு அனுபவித்து, பிறகு
சஞ்சரித்து, துக்கித்து
கடைசியாக விவேகம் தோன்றி ஆத்மாவை அடைகிறது. ஆத்மாதான் சத்யம், சாசுவதம், பரமசுகம். இதிலிருந்து
தோன்றிய மனதோ சிருஷ்டிப்பதிலும், அழிவதிலும் சுழன்று கொண்டிருக்கின்றது. ஆகையால் மனம்
அழிந்தால் ஆத்ம லாபம். இந்த மனதைத்தான் சித்தாகாசம், சிதாகாசம், ஆகாசம் என்று
மூன்றுவிதமாக ஞானம் அடையாதவர்களால் சொல்லப்படும். ஆனால் உண்மையில் ஞானிகள்
அறிந்தபடி அது ஒரே சொரூபத்துடன் கூடியது. இடம், காலங்களைத் தழுவி
வெவ்வேறு பெயரால் அழைக்கப்படலாம்.
இந்தப்
பிரபஞ்சத்தின் விஸ்தரிப்புக்குக் காரணம் மனதேயாகும் என்று தெரிந்து கொள்வாயாக.
பிரபஞ்சம் நடைபெறுவதும் இந்த மனதாலேதான். இதுதான் ஜீவனென்றும் சொல்லப்படும்.
இன்ப
துன்பங்களை மனது தானாகவே தேடிக் கொள்கிறது. தான் சங்கல்பித்ததையே இன்னொரு
சொரூபத்தில் பலனாக அடைகிறது. ஆகையால் யாரொருவன் கர்மமும் பலனும் ஒரே மனதின்
வேறுபாடே என்று அறிந்து அதற்கு மூலமாகிய சங்கல்பத்தை ஒழித்து சாந்தத்தையும்
மௌனத்தையும் அடைகிறானோ அவன் ஆத்மாவை அறிவான். ஆகவே மனம் உற்பத்தியானதாகவும், அழிந்ததாகவும், இருப்பதாகவும், இல்லாததாகவும்
தோன்றுகிறது. சாசுவதமான தோற்றத்தை எப்பொழுது கொடுக்கவில்லையோ, அப்பொழுது அது
சத்யமல்ல. தவிர ஞானம், அக்ஞானம், சம்சாரம், விடுதலை என்பனவெல்லாம்
இந்த மனதைப் பற்றிச் சொல்வதேயன்றி ஆத்மாவைப் பற்றியல்ல. இந்த மனமோ அசத்யம், ஆகையால் அதைத்
தழுவியிருப்பது எல்லாமும் அசத்யமேயாகும். ஆத்மாவைப் பற்றி பேசும்பொழுது இவைகள்
ஒன்றுமே ஒட்டாது. ஆகையால் பந்தம், மோட்சம் என்பவைகள், அக்ஞானிகளைக் குறித்து
சொல்லும் வார்த்தைகளே ஒழிய வாஸ்தவமில்லை. எனவேதான் பிரபஞ்சம் முற்றிலும்
தோற்றமேயென்று சொல்லப்படுகிறது.
மனதும் அதனுடைய செயல்களும்
மனம் தன்னை
ஜகத்தாகிய தோற்றத்தில் விஸ்தரித்துக் கொள்வதால்தான், பிரம்மத்தின் சொரூபமாக
இருந்தும் அதற்கு இந்த சம்சாரமென்னும் பந்தம் ஏற்படுகிறது. அதாவது தன்னையே வேறாக பாவித்து
அதுவே தானாக மாறி நிற்கும் தன்மையுடையது. தனக்கு விருப்பமிருந்தால் வேண்டிய அளவு
தன்னை விஸ்தரித்துக் கொள்ளும், இல்லாவிட்டால் சுருக்கிக்கொள்ளும். மனது எந்த விஷயத்தில்
ஈடுபட்டுக் கொண்டிருக்கிறதோ அதைத் தொடர்ந்து இந்திரியங்கள் ஊழியர்களைப் போல் வேலை
செய்கின்றன. மனதின் ஊக்கத்தையொத்துதான் இந்திரியங்கள் பரபரப்பாகவோ, மெதுவாகவோ செயல்
செய்கின்றன. வெறும் இந்திரியங்களால் செய்யப்படும் செயல்கள் கர்மங்கள் ஆகமாட்டாது.
மனதால் ஏவப்பட்டனவே கர்மங்களாகும். அடையப்படும் பலன்களும் மனதின் ஊக்கத்தையும்
முயற்சியையும் அனுசரித்துத்தான் கிடைக்கின்றது. ஆகையால் சங்கல்பங்கள், கிரியைகள், கர்மாக்கள், பலன்கள் ஆகிய
அனைத்தும் மனதை அனுசரித்தே நடைபெறுகின்றன. ஆகையால் பிரபஞ்சத்தின் போக்கே மனதின்
போக்காகும்.
கால, தேச உணர்ச்சிகள்
மனோநிலையைத் தழுவித்தான் ஏற்படுகின்றன. இவ்வுணர்ச்சிகளை அனுபவிப்பதும், அங்கீகரிப்பதும்
மனதேயாகும். மனதால் ஒரு அகண்டப் பிரதேசத்தைக் கையளவாகவும் சங்கல்பித்துக் கொள்ள
முடியும். ஒரு நிமிடத்தை நீண்ட காலமாகவும் அல்லது
நீண்ட காலத்தை ஒரு நிமிடமாகவும் அனுபவிக்கும் சக்தியையுடையது. இந்திரியங்களோடு
கூடிப் பிரபஞ்ச விஷயங்களில் மனது ஈடுபட்டிருக்கும் போது காலப் பிரமாணம் ஒருவிதமாக
இருக்கும். இது இந்திரியங்களின் நுட்பத்தையும் சாமர்த்தியத்தையும் அவைகளுக்கு
இயற்கையில் ஏற்பட்ட கட்டுப்பாடுகளையும் தழுவி, சூரிய சந்திரர்கள்
பூமி இவைகளின் சம்பந்தத்தால் நிர்ணயிக்கப்பட்டதாக இருக்கிறது. இவ்வளவு கட்டுப்பாடுகளோடு
கூடிய காலப்பிரமாணத்தையும் மனது தன் விருப்பப்படிதான் உணருகிறது. எப்படியெனில் ஒரே
கால அளவை சந்தோஷ நிலையில் வெகு குறைவாகவும், துயரத்தின்போது
நீண்டதாகவும் உணருவது எல்லோருக்கும் தெரிந்ததே.
பிறகு இந்த
இந்திரியங்களின் சுமையை நீக்கிக் கொண்டபொழுது, அதாவது மயக்கத்திலோ, நித்திரையிலோ அல்லது மரணத்திலோ காலப்பிரமாணம் மனதின்
இஷ்டப்படிதான் நடக்கிறது. அப்பொழுது அளவென்பதே கிடையாது. அதன் போக்கே அதன் அளவு.
மனோவேகம் என்று வழங்குவதும் இந்த சந்தர்ப்பங்களையொத்து ஏற்பட்ட சொல்லாகும். ஒரு
கல்பகாலத்து அனுபவம் ஒரு நொடிப்பொழுதில் அனுபவிப்பது ஆச்சரியமில்லை. ஆகையால் காலம், தேசம் ஆகிய இரண்டும்
வியவகாரத்தின் பொருட்டு ஏற்பட்ட கற்பனைகளாகும். மனதால் இவைகள் நிர்ணயிக்கப்பட்டு
அதானாலேயே வேண்டிய பொழுது உதறித் தள்ளப்படுகிறது.
மனதே
பிரபஞ்சம்
ஆகவே
பிரபஞ்சத்தில் நடைபெறுவதெல்லாம் மனதை அனுசரித்தே நடக்கின்றது. மனதே பிரபஞ்சமாகவும்
அதில் நடைபெறுகின்ற விஷயங்களாகவும் இருக்கிறது.
கடைசியில் இவைகளையெல்லாம் துறந்து விடுதலையடைவதும் மனதுதான். ஜடமாகிய தேகம்
மனதின் கருவியாயிருந்து அதன் ஏவலைச் செய்வதைத் தவிர வேறு என்ன செய்யக்கூடும்? தானாக எதைச் செய்வதற்கும்
சக்தியற்றது. மனம் இதில் வாசம் செய்திருக்கும்வரையில் அது தேகமென்றும், அதைவிட்டு அகன்றதும்
சவமென்றும் கருதப்படுகிறது. மனதானது கவனமற்றிருப்பின் எவ்விஷயமோ, பதார்த்தமோ
உணரப்படுவதில்லை. ஆகையால் தேகத்தின் அசைவுகள் செயலாகமாட்டாது, மனதால் தூண்டப்பட்டு
அதன் ஏவலை நிறைவேற்றும்படியான கிரியைகளே செயல் எனப்படும். இவ்விதச்
செயல்களுக்குத்தான் பலன்களும் உண்டாகிறது. ஆகையால் உலகத்தில் நடைபெறும் செயல்கள்
யாவும் மனதின் விளையாட்டுகளேயாகும். மேலும் பிரபஞ்சத்தில்
வஸ்துக்களென்று கருதப்படுபவைகள் எல்லாம் சுதந்திரமாக யாதொரு உபயோகத்தையும்
அடைந்திருக்கவில்லை. மனதின் இச்சையைத் தழுவியே இவைகளின் உபயோகங்களும் இருக்கிறது.
ஆகையால் இந்தப் பதார்த்தங்கள் எல்லாம் மனதால் வியாபிக்கப்பட்டிருக்கின்றன. ஆகாயம், காற்று, நீர், நிலம் ஆகிய அனைத்துமே
மனதால் தோற்றுவிக்கப்பட்டவைகளாகும். இவைகளின் இருப்பை மனதின்றி யார் உணருவது? அல்லது யார் அறிவது? தவிர வாழ்க்கையில்
ஏற்படும் சுக துக்கங்களும் இவ்விதமேதான் இருக்கிறது.
இவைகளெல்லாம்
அனுபவிக்கப்படுவது மனதால்தான். ஆனால் இந்த சுக துக்கங்கள் பதார்த்தங்களில்லை.
ஏனெனில் இவைகளெல்லாம் ஜடப்பொருட்களாகும். ஆகையால் சுகம்-துக்கம் ஆகிய இரண்டும்
மனதால்தான் சங்கல்பித்துக் கொள்ளப்பட்டவைகள். சுகத்தை துக்கமாகவும், துக்கத்தை சுகமாகவும்
அனுபவிக்க மனதால் முடியும். ஆகையால் பிரபஞ்சமென்பதும் வாழ்க்கையென்பதும் மனதின்
சஞ்சலமாகிய சங்கல்பக் கூட்டங்களாகும். இந்தச் சங்கல்பங்களுக்குக் காரணமான பேதங்கள்
எல்லாம் மனம் ஒருமுகப்பட்டால் ஒரு நொடிப்பொழுதில் மாறி நிற்கலாம். ஆகையால் நம்
முயற்சிகள் அனைத்தும் மனதை வெளிநோக்கிச் செல்லாமலிருக்கும்படி செய்தலில் இருக்க
வேண்டும். இதை வெகு ஊக்கத்துடனும், இடைவிடாமலும் பயிற்சி
செய்து வந்தால் மனதிற்கு ஏற்பட்ட பற்றுதல், வாசனையெல்லாம்
அறுபட்டு,
சம்சாரத்திலிருந்து
விடுதலை அடைந்து விடலாம்.
மோட்சத்தை
அடைவதற்கான உபாயம்
ஆகவே இந்த
மோட்சோபாயமென்பது மனதை மனதாலேயே அடக்கிப் பிறகு அதை நாசமடையச் செய்வதாகும். இதை
அப்யசிப்பது வெகு எளிதாகும். ஆனால் அதற்கு ஒரு முறையுண்டு. அதாவது எது நமக்கு அதிக
சந்தோஷத்தை, விருப்பத்தை
கொடுக்கின்றதோ அதையே முதலில் தியாகம் செய்ய வேண்டும் அல்லது விருப்பு-வெறுப்பின்றி
செய்ய வேண்டும். இவ்விதம் ஒன்றொன்றாகப் பல விஷயங்களிலும், பதார்த்தங்களிலும் இச்சையோ அல்லது மனோ வேறுபாடுகளோ உண்டாகாமல் முயற்சி செய்து வந்தால், மனதில் ஏற்படுகின்ற
சஞ்சலங்கள் குறைந்துவிடும். மேலும் அது நம் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்.
அப்பொழுது நம் விருப்பம்போல் ஆசைகளையும், வாசனைகளையும் ஒழிப்பது சுலபமாக இருக்கும். இதற்குப்
பிறகும் கூட ஊக்கம் குறையாமல் இந்த மார்க்கத்தையே கடைப்பிடித்து வந்தால், மனது வெகு
சீக்கிரத்தில் நாசமடையும். மனம் நாசமானால் பிரபஞ்சத்தில் சம பார்வை ஏற்படும்.
அதனால் த்வைத பாவமும் நீங்கிவிடும். இதுவே ஜீவன்முக்தி நிலையாகும். இந்த
நிலையிலிருக்கும் பொழுதும் அதைவிட்டு நழுவாமலிருக்க முயற்சி செய்து கொண்டேயிருக்க வேண்டும்.
சற்று நித்ய
வியவகாரங்களைக் கவனித்துக் கொண்டிருக்கும்போதும், அதிக கஷ்டமோ, மனக் கவலையோ நேர்ந்த
காலத்திலும், அல்லது
உறவினர்களில் யாராவது இறந்தாலும் மக்கள் அதிகமாக துக்கித்து, மனத்தளர்ச்சி அடைவதை நாம்
அறிவோம். இதைச் சற்று விசாரித்துப் பார்த்தால், கவலையால் நிவர்த்தியாவது
ஒன்றுமில்லையென்று புலப்படும். இறந்தவர்கள் மீண்டும் மீண்டும் இப்பிரபஞ்ச வாழ்வில் ஈடுபட்டுத்தான் தீரவேண்டும்.
ஆகையால் இவர்களை நினைத்துப் புலம்புவது அக்ஞானம். இவ்விதம் ஒவ்வொரு விஷயத்தையும்
ஆராய்ச்சி செய்து மனோ வேறுபாடுகளைத் தள்ளிவைத்து மனச்சாந்தி அடைவதை அப்யசித்து
வந்தால் சம்சாரம் இன்பமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கும்.
இந்த சித்தே
ஜீவ ஜந்துக்களில் மனதாகத் தோன்றி மானிட வர்க்கத்தில் மிகப் பிரபலமாகி, அதுவே மானிட
வாழ்க்கையாகவும் நிற்கின்றது. இந்த மனதின் சொரூபம் சஞ்சலம், ஏனெனின் இது சித்தின்
வர்க்கத்தைச் சேர்ந்ததாக இருக்கிறது. ஆனால் இதற்கு ஒரு கணக்கோ, கிரமமோ, ஒழுக்கமோ கிடையாது.
இதுவே மனதுக்கும் சித்துக்குமுள்ள வித்தியாசமாகும். யார் மனம் அதிகச்
சஞ்சலமாயிருக்கின்றதோ, அவர்களே
வாழ்விலும் அதிக இன்ப-துன்பங்களை அனுபவிக்கிறார்கள். இதர ஜந்துக்களுக்கும் மானிட
வர்க்கத்திற்கும் உள்ள வித்தியாசமும் மனதால் ஏற்பட்டதேயாகும்.
ஆகையால் இதையறிந்து கொண்டு மனதை நெறிபடுத்த வேண்டும்.
எப்படியென்றால் யதேச்சையாக உதிக்கும் எண்ணங்களை ஒவ்வொன்றாகக் கவனித்து, ஆராய்ந்து இவைகள்
ஒரு முறையாக ஏற்படும்படி முயற்சித்து வரவேண்டும். இப்படிச் செய்து வருவதால் மனது
ஒரு கிரமமாக வேலை செய்யும். மேலும் விஷயங்களை ஆராய்ந்து அவைகளை ஒவ்வொன்றாக தியாகம்
செய்ய வேண்டும். செய்வது கடினமாயிருப்பினும் மனதை திடப்படுத்திக் கொண்டு முயற்சியை
இடைவிடாமல் செய்து கொண்டு வரவேண்டும். எல்லாவற்றிற்கும் காரணமாயிருக்கும் மனதையடக்க
மிக திடமான புத்தியை உபயோகிக்க வேண்டும். இப்படிச் செய்து வந்தால் மனமென்பது
கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து எந்த எண்ணங்களும் தோன்றாமல் இருக்கும். இச்சைகளின்றி எண்ணங்கள் ஏது? எண்ணங்கள்
உதிக்காத போது மனமென்பது ஏது? உண்மையில் அது எப்பொழுதும் இருக்கவில்லை, ஆகையால் இப்பொழுதும் இருக்காது.
ஆகவே முக்தியை
அடைய இந்த மார்க்கத்தைத் தவிர வேறு மார்க்கமே கிடையாது. மனதை மனதாலேதான்
வெல்லவேண்டும் என்ற உபாயமே சிறந்ததாகும். மனம் வெல்லப்பட்டால்
மூவுலகமும் வெல்லப்பட்டதாகும். மனம் வெல்லப்பட்டு அது நாசமடைந்தால் ஆத்மா
பிரத்யக்ஷமாகக் காணப்படும். அதாவது மனமென்று வழங்கி வந்த இல்லாமை, இருத்தலாகிய ஆத்மாவாக
நிற்கும். சாதாரணமாக இந்த மனம்தான் ஜடப்பொருளாகவும், ஆத்மாவாகவும் இரட்டை
சொரூபமாக காட்சியளித்து வருகின்றது. ஜட சம்பந்தமற்று தனியாக அது இருக்குமாயின், அப்பொழுது அது மனமன்று, அதுவே ஆத்மாவேயாகும்.
இந்த ஆத்மாவை
அடையத் தடையாயிருப்பது வாசனையென்ற அக்ஞானமேயாகும். இது ஒரு பொருளல்ல. இதற்கொரு
உருவமில்லை. அதை எவ்விதமும் உணர இயலாது. ஆயினும் பிரபஞ்சத்தின் போக்குக்கு இதுவே
மூல காரணமாகும். இதன் சொரூபத்தை மனிதர்களின் செயல்களினால்தான் அறிய வேண்டும். இதன்
தூண்டுதலின்றி பிரபஞ்சத்தில் ஒரு செயலும் நடைபெறுவதில்லை. இன்றைக்கு நடப்பது
நேற்றைய வாசனையால், நாளை நடக்கப்
போவது இன்றைய வாசனையால். இவ்விதம் இது உலகம் முழவதையும் பற்றி, அதில் ஊடுருவி
நிற்பதற்கு காரணம் அக்ஞானமேயாகும். ஞானத்தின் ஒளி வீசினால் சூரியனைக் கண்ட பனிபோல்
இது மறைந்துவிடும். இருளாகிய அக்ஞானத்திலேயே அது வளர்ந்தும், புஷ்டியாகிக் கொண்டும்
இருக்கும். ஞானம் உதிக்கும் வரையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றிதான்
நாம் யோசிக்க வேண்டும். ஆத்ம நோக்கமிருந்தால் வாசனையைப் பற்றி கவனிக்கத் தேவையில்லை.
ஏனெனில் நம் செயல்களெல்லாம் வாசனையால் ஏற்படுவதால், “நான் செய்கிறேன்” என்னும் எண்ணத்திற்கு
அப்பொழுது இடமில்லை. பிறகு வாசனையே செயல்களை நடத்துகிறது. இப்படி விஷயங்களில்
கர்த்தாவென்ற எண்ணம் அழிந்தால் வாசனைகளும் கூடவே அழிவடையும். அப்பொழுது பழைய
வாசனைகளும் சக்தி குறைந்து செயல்களில் நோக்கமற்றவனைப் பாதிக்க முடியாமல் அடங்கிப்
போகும். ஆகையால் வாசனையை ஒழித்துக்கொள்ளும் மார்க்கம் அகங்காரம் என்ற அக்ஞானத்தை
நீக்கிக்கொள்வதாகும்.
வாசனையென்னும்
அக்ஞானம் ஜடமாகிய தேகத்தை ஒட்டியோ அனுசரித்தோ இல்லை. அது மனதைத் தழுவி நிற்கிறது.
அதாவது அக்ஞானம் மனோமாத்திரமேயாகும். இந்த அக்ஞானம் பிரபஞ்சத்தின் உற்பத்தி
எல்லாம் கணநேரமாத்திரமான சங்கல்பத்தால் ஏற்பட்டவைகள். ஒரு தடவை ஏதாவது
சங்கல்பிக்கப்பட்டால் அதுவே பிறகு
திரும்பத்திரும்ப நினைவாக மனதில் குடிகொண்டு கனத்துவத்தை அடைகிறது. இதேமாதிரி ஒவ்வொரு
விஷயமும் பொருளும் மனதால் கற்பிக்கப்பட்டும், அதன் ஆதரவோடுதான்
இருக்கின்றது. இவைகளே மனதின் பந்தத்திற்கு காரணமாக இருக்கின்றது. ஆகவே அக்ஞானம்
சங்கல்பத்தால் ஏற்பட்டதால், சங்கல்பத்தாலேயேதான் அது அழிவையும் அடைய வேண்டும். “நான்”, “நீ”,
“பிரபஞ்சம்” என்பவைகள் நம்மால்
பாவனை செய்யப்பட்டதன் காரணமாக சத்யமாகவே உணரப்படுகின்றன. இப்படிச்
சாத்தியமல்லவென்ற பாவனையையே நாம் சங்கல்பித்து வந்தால் அதுவே சத்யமாக உணரப்படும்.
ஆத்ம உணர்ச்சி உண்டானவுடன் கணமாத்திரத்தில் உற்பத்தி ஏற்பட்டபடி கணமாத்திரத்திலேயே
நாசமும் ஏற்படும்.
பந்தம்
ஏற்படும் முறை
பந்தம் அதாவது
சம்சாரம் ஏற்பட்ட முறையாவது, முதலில் சங்கல்பமும் பிறகு இதுவே அடிக்கடி ஏற்படும்போது ஞாபகமாகி, அதனால் ஆசையுண்டாகி
சம்சாரம் ஏற்படுகிறது. இந்த முறைக்கு விரோதமான உபாயத்தைக் கைப்பற்றினால்
அதிலிருந்து விடுதலையடையலாம்;. எப்படியெனில், விஷயங்களில் ஆசை குறைந்தால் அதைப் பற்றிய எண்ணம்
அழிவடையும். இந்த எண்ணங்கள் குறைந்தால் சங்கல்பத்தின் தீவிரம் குறையும். சங்கல்பம்
ஒழிந்தால் அக்ஞானம் ஏது? நிழலானது சூரியப் பிரகாசத்தை விரும்பினால் தனது
நாசத்தினால்தான் அதை அடைய இயலும். அதேமாதிரி ஞானத்தில் நோக்கம் சென்றால்
அக்ஞானத்தின் நாசமேற்படும். அக்ஞானமென்ற ஒரு தத்துவமிருந்தால்தானே அதை ஒழிக்க
அதிகச் சிரமம் தேவை. நிர்மலமான ஆகாயத்தில் நாம் நீலத்தன்மையைக் காண்கிறோம். இது
கண்களின் சக்திக் குறைவால் ஏற்படுகின்ற தோற்றம். பிரகாசமேயற்று வெறும் இருளேதான்
நீலமான தோற்றத்தைக் கொடுக்கின்றது, அதேமாதிரி இந்த அக்ஞானமும் பந்தங்களால் ஏற்பட்ட சக்திக்
குறைவால் சூன்யத்தில் தோற்றத்தைக் கொடுக்கிறது. ஆகையால் அபாவமான சங்கல்பத்தால்தான்
ஞானம் ஏற்படும், அதாவது யாதொரு
எண்ணமும் மனதில் உதிக்காத நிலையில் ஞானம் ஏற்படும்.
ராமன்: யோக பூமியாவது எது? ஏழுவித நிலைகள் யாவை? இவைகளை எனக்கு
விளக்கும்படி வேண்டுகிறேன்.
ஏழுவித
மானிடப்பிறவி
வசிஷ்: இந்த தேகத்தைத்தான் யோக பூமியென்றும், ஞான பூமியென்றும்
சொல்லப்படுகிறது. ஏனெனில் இதை தழுவிக் கொண்டுதான் யோகம், ஞானம் என்பவைகளை அடைய
வேண்டும். அவரவர்களின் பாவ-புண்ணிய பலன்களுக்குத் தகுந்தவாறு ஏழுவிதப் பதவிகள்
மானிடர்கள் இருக்கும் நிலைமையையைக் குறித்துச் சொல்லப்படுகிறது. இவை வியவகாரத்தின்
பொருட்டு ஏற்படுத்தப்பட்ட பிரிவுகளாகும். இந்த ஏழுவிதப் பதவிகளை ஞானத்தை
ஒட்டியாவது அல்லது அக்ஞானத்தை தழுவியாவது பிரிக்கலாம். எப்படிப்
பிரிக்கப்பட்டாலும் எல்லா மனித வர்க்கங்களும் இவ்வேழில் ஒன்றாகிய நிலையில் அடங்கியே தீரவேண்டும். இந்த ஏழுவிதப் நிலைகளாவன:-
- ஜடப்பொருட்களை விட வேறில்லாதவாறு கருதும்படி, பிரபஞ்ச
வாழ்க்கையிலேயே முற்றிலும் ஈடுபட்டு பரம்பொருளின் உணர்ச்சி லவலேசமுமில்லாமலும், வாழ்க்கையெல்லாம் ஆசைகளாகவே
இருப்பதே கடைசியான ஏழாவது நிலையாகும். இந்த வாழ்வு ஜடவாழ்வைக் காட்டிலும்
உயர்ந்ததல்ல. ஏனெனில் இது தேகமே பிரதானமென்று தேகத்தைப் போஷித்து வருகின்ற வாழ்வாக
இருக்கிறது. இந்த நிலையிலிருந்து கரையேறுவதற்கு, நல்லாசைகளை வளர்த்தும், துராசைகளை ஒழித்தும், நல்லொழுக்கங்களை
கடைப்பிடித்தும் வந்தால், மனது கொஞ்சம் சுத்தப்பட்டு இதற்கு மேலான பதவியை
அடையலாம்.
- ஆறாவது நிலை சொப்பன
ஜாக்கிரதையென்று சொல்லப்படும். அதாவது நீண்ட சொப்பனமாகிய வாழ்வை சத்யமென்றே
பாவித்திருப்பது. இந்நிலையில் கடவுளென்ற ஒரு பரம்பொருளின் உணர்ச்சியிருந்து அதனால்
சில நல்லொழுக்கங்கள் ஏற்பட்டு வாழ்க்கை சற்று சீர்திருத்தப்பட்டிருக்கும்.
- ஐந்தாவது நிலை சொப்பன நிலை எனப்படுவது. அதாவது
வாழ்க்கையை அநித்யமாக உணர்ந்து சம்சாரத்தைப் பற்றுதலின்றி நடத்துவது. இந்த
நிலையில் மனதை ஒடுக்கிப் பழகிவந்தால் சங்கல்பங்கள் நீங்கிவிடும்.
- நான்காவது நிலை ஜாக்கிரத
சொப்பனமெனப்படும். விழிப்பு நிலையில் இருந்து கொண்டே சம்சாரத்தை சொப்பனம் போல்
உணர்ந்து முற்றிலும் பற்றுதல் இல்லாமல் இருப்பது. இந்த நிலையில் மனதை
ஒருமுகப்படுத்தி ஆத்மாவை தியானித்து வந்தால் அடுத்த நிலைக்கு சென்றுவிடலாம்.
- இந்த மூன்றாவது நிலை அதிஜாக்கிரத நிலையெனப்படும். ஆத்ம
தத்துவம் அறியப்பட்டும் “நான்”,”நீ” என்ற துவைத பாவம் நீங்காமல் சம்சாரத்தை நடத்தி
வருவதாகும். இந்நிலையில் பதார்த்த பாவனைகளை ஒழிப்பதை முயற்சித்து வந்தால் அடுத்த
பதவியை அடையலாம்.
- இரண்டாவது நிலை வெறும் ஜாக்கிரத நிலையெனப்படும். பதார்த்த
பாவனைகளற்று “நான்” என்னும் உணர்ச்சிதான்
மிஞ்சி நிற்கும். இந்த நானென்ற நினைவை ஆத்மாவாக இந்த நிலையில் பாவித்து வருதல் வேண்டும். இதுவே ஜீவன் முக்தி
நிலையாகும்.
- முதல் நிலையானது ஆத்ம உணர்ச்சி ஸ்திரபட்டு நானென்ற நினைவும் அழிந்தால்
அதுவே பீஜ ஜாக்கிரத நிலையென்றும், விதேகமுக்தி என்றும் சொல்லப்படுவதாகும். இப்படி
இருப்பவர்களுக்கு சம்சாரம் ஒரு தூசிமாத்திரம். அக்ஞானம், பயம், துன்பம் போன்ற எதுவும்
இவர்களை அண்டாது.
இதுவரை
சொல்லிவந்ததின் பொருளாவது: பிரபஞ்சம் பிரம்மத்தைத் தவிர வேறல்ல என்பதேயாகும். தங்க
வளையலில் தங்கத்தைத் தவிர்த்து வேறொன்றும் நாம் காண்பதில்லை. தங்கமின்றி வளையலேது? தங்கத்தினால்தான் வளையலோ
அல்லது வேறு ஆபரணங்களோ பொருளாலும் வார்த்தைகளாலும் விஸ்தரிக்கப்படுகின்றன.
இவ்விதம் எந்தப் பொருளை ஆராய்ந்து பார்த்தாலும் அதில் கடைசியில் பிரம்மத்தைத்தான்
உணரமுடியும். எப்படியென்றால் ஒரு வஸ்துவை அறிய, அறிகிறவன் வஸ்துவில்
ஐக்கியமானால்தான் முடியும். இப்படி ஒன்றோடொன்று லயமடைய, இரண்டும் ஒரே இனத்தைச்
சேர்ந்திருக்க வேண்டும் அல்லது அறிகிறவனையும் அறியப்படுவதையும் ஒன்றுபடுத்தி ஒரு
உணர்ச்சியை ஏற்படுத்துவதே அறிவாகிய பிரம்மம்.
ராமன்: சில முனி சிரேஷ்டர்கள்
ஜீவன் முக்தர்களாக இருந்தும் ஏன் தங்கள் உடலின்மேல் வாஞ்சை, தந்தை-மகன்
என்ற பாசம், இவைகளிலிருந்து
ஏன் விடுதலையடைவதில்லை?
வசிஷ்:
அவர்களிடத்தில் எல்லா இச்சை
மோகங்களும் மனதளவில் இல்லாமலிருந்தும் தேகத்தின் நியதியைக் கடக்க
முடியாமல் நீ எடுத்துக் காட்டிய உணர்ச்சிகளுக்குக் கட்டுப்பட்டவர்களாகத்
தோன்றினார்கள். தேகம்
இருக்கும் வரையில் அதன் நியதிக்கு உட்பட்டும் உலக வழக்கங்களாகிய கட்டுப்பாடுகளை
அனுசரித்தும் இருப்பதே ஞானிகளின் ஒழுக்கமாகும். ஆனால் அவர்கள் இவ்வித அனுசரணைகளால்
பந்தப்பட்டு இருப்பதில்லை. யாதொரு பலனையும் கருதாமல் அவர்கள் கர்மங்களை விருப்பு, வெறுப்பில்லாமல்
செய்து வருவார்கள்.
ராமன்: சொப்பனத்திற்கும்
ஜாக்கிரத நிலைக்கும் உள்ள பேதம் என்ன? விழிப்பு நிலையென்பது எவ்விதம் அவ்வாறு இருக்கிறது? பிறகு சொப்பனமாவது
எப்படி?
விழிப்பு நிலை
அனுபவங்கள் சொப்பனத்தில் தோன்றுவது எப்படி?
வசிஷ்: இரண்டு நிலைகளிலும், அனுபவிக்கும் புருஷன்
ஒருவனே. அதாவது மனம் அல்லது ஜீவன். இந்த மனமானது விழிப்புநிலையில் சங்கல்பித்துக்
கொண்டதை இந்திரியங்களின் உதவியால் ஜகத்தில் சங்கல்பித்தபடியே காண்கிறது. வேறாகக்
காண்பதில்லை. காணப்பட்டதை அனுபவிக்கின்றது. இப்படியான அனுபவங்களை உண்மையென்றும், நிலையானதென்றும் நாம்
சொல்லுகிறோம். ஆராய்ந்து பார்க்கையில் இதுவும் ஒரு மோகமென்றுதான் சொல்லப்படுகிறது.
ஏனெனில் மனம் தன்னை வேறாக உணருவதால் இவ்வாறு சொல்லப்படுகிறது. ஆனால் இவ்விதந்தான்
விழிப்புநிலையில் சதா நடைபெற்று வருகிறது. சொப்பனத்திலோ இந்திரியங்கள்
அடங்கியிருப்பதால் மனதிற்கும் வெளிபிரபஞ்சத்திற்கும் சம்பந்தம் இல்லாமல்
போகின்றது. ஆகையால் விழிப்புநிலையில் ஏற்பட்ட அனுபவங்களை மனமானது சூட்சும நிலையில்
அனுபவிக்கின்றது. இந்த அனுபவங்களை நாம் விழித்தபிறகு பொய்யாகப் பாவிக்கிறோம்.
உண்மையில் அந்தந்த நிலையில் அந்தந்த அனுபவங்கள் சத்தியமே. ஆனால் இரண்டுவித
அனுபவங்களும் மனதின் சுய சொரூபமின்றிக் கற்பனை செய்யப்பட்ட தோற்றங்களேயாதலால்
இரண்டும் மோகமேயாகும். விழிப்புநிலையானது ஒரு நீண்ட சொப்பனத்தைத் தவிர வேறில்லை.
மூன்றாவது
நிலையாகிய நித்திரையில், காற்றில்லாத இடத்து வைத்த தீபம்போல், மனம் யாதொரு
அனுபவமுமின்றிச் சலனமற்றிருக்கிறது. அறியும் தன்மையுமற்று இருப்பதால் இது ஒரு
ஜடநிலையென்றுதான் சொல்லத்தகும். இந்த மூன்று நிலைகளையும் விட்டு நான்காவதான
துரீய நிலையில், நித்திரையிலிருப்பது
போலவே ஜடமாகிய பிரபஞ்சம் உணர்ச்சியற்று இருக்கும். இந்த துரீயநிலையானது தானே பிரபஞ்சமாகவும், பிரபஞ்சமே
தானாகவுமிருக்கின்ற நிலையாகும். எல்லாம் அதுவாக இருப்பதால் அறிவதற்கு இப்பொழுது பொருள்
கிடையாது. கண்ணினால் இதர வஸ்துக்களை பார்க்க முடியும். தன்னையே எவ்விதம் பார்க்க
இயலும்?
ஆகையால்
தன்மயமாய் இருக்கும் ஜகத்தைப் பார்ப்பதென்பது இவ்விடத்தில் பொருந்தாது.
ஆகையால் நீ
சுக்கிரனைப்போல் உணர்ச்சிகளாகிய மனதை அடக்கி மோட்சத்தை அடைவாயாக. மனதை
வெளிநோக்கத்தில் சற்றுச் செலுத்திய காரணத்தால் சுக்கிரன்
சம்சார வலையில் சிக்கிக் கொண்டு அலைந்து திரிந்து வெகு காலங்களுக்குப் பிறகுதான்
மோட்சத்தை அடைய முடிந்தது.
இவ்விடத்தில்
நாம் மேலும் மனதைப்பற்றி ஆராய்ச்சி செய்வோம். மனதின் குணம் சஞ்சலம். இந்தத்
தன்மையானது இயங்குவதிலும், கிரியைகளாக முடிவு பெறுவதிலும் தோற்றுவிக்கப்படுகிறது.
ஆகவே கிரியை, கர்மா
என்பவைகள் மனதைத் தவிர்த்து வேறல்ல. மனம்தான் கர்மா, கர்மாதான் மனம்.
கர்மமின்றிக் மனமில்லை. ஆகையால் மோட்சத்தை அடைவதற்கு மனதை ஒழிப்பதினால்தான்
முடியுமென்பதில் சந்தேகமேயில்லை.
இந்த மனோ
தத்துவத்தையொத்துதான் இதர கொள்கைகளை அனுசரிப்போர் வேறான
மோட்ச உபாயங்களைத் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் இந்த மார்க்கங்கள் எல்லாம்
மனதின் கட்டுப்பாட்டை அனுசரிப்பதால் மோட்ச மார்க்கமென்று சொல்லத்தகாது. எல்லையைக்
கடந்து நிற்கும் பிரம்மத்தை இவ்விதம் எல்லைக்குள் அடைவது சாத்தியமா? ஆகையால் இந்த
மார்க்கங்களைக் கடைப்பிடிப்பதில் பிரயோஜனமே இல்லை. பிரபஞ்சம் சம்சாரம் என்பவை
பாவனையால்தான் ஏற்படுவதாலும், இவைகள் சங்கல்பத்தைத் தவிர்த்து வேறல்லாததாலும், அபாவம் செய்து
வருவதினால்தான் மோட்சம் சித்திக்குமே தவிர வேறெவ்விதத்தாலும் முடியவே முடியாது.
சிந்தனை,
எண்ணம்
என்பவைகளை அடியோடு ஒழிக்க வேண்டும். அப்பொழுதுதான் மனம் நித்திரையிலிருப்பதுபோல்
இருக்கும். அல்லது பிரபஞ்சமெல்லாம் பிரம்மமென்ற பாவனை ஏற்பட வேண்டும்.
அப்படியுமின்றி நானே பிரபஞ்சம், பிரபஞ்சமே நான் என்ற பாவனையாகிலும் ஏற்பட்டால் உணர்ச்சி
என்பது நசித்துப்போகும். இதுவும் சித்தியைக் கொடுக்கும்.
நம்
பிரயத்தனங்கள் யாவும் தேகத்தை அனுசரித்தும், அதன் உதவியாலும் செய்ய
வேண்டி இருப்பதால், அதை நம்
கைவசத்தில் வைத்துக்கொண்டுதான் மேற்படி முயற்சிகளைச் செய்ய வேண்டும்.
இவ்வித விடாமுயற்சியை
நீ அகங்காரத்தை ஒழிப்பதில் உபயோகிப்பாயாக. அகங்காரத்தால்தான் பிரபஞ்சம்
விஸ்தாரமடைகிறது. இந்த அகங்காரம் மூன்று வகைப்பட்டது. அவைகளாவது
- எல்லோராலும் அனுபவிக்கப்பட்டும் அதனால் பிரபஞ்ச
வியவகாரத்தில் மூழ்கிக் கிடப்பது. இதுவே வேரோடு அறுபட வேண்டிய அகங்காரம்
- பிரம்மத்தின் ஒரு அணுவாக எண்ணி வியவகாரத்தை முற்றிலும்
மனதில் ஒழித்து உத்தம பதவியிலிருக்கும் அகங்காரம்.
- இவ்விரண்டிற்கும் மேலாக, தானே பிரம்மமென்று
அறிந்து சம பார்வையுடன் இருப்பதாகிய அகங்காரம்.
இந்த நிலைகளை
படிப்படியாக முயற்சியால் நிச்சயம் அடையலாம். ஆகவே நீ இவ்விதமான முயற்சியைச்
செய்வாயாக.
பிரபஞ்சம், சம்சாரம் என்பவைகள்
மனம் என்னும் தோற்றத்தில்தான் பிரதிபலிக்கின்றன. மனம் அசைவற்று நின்றால் இவைகளும்
வேறுபாடில்லாமல் ஒரே காட்சியைத்தான் அளிக்கும். ஆனால் மனம் என்பதே ஒரு கற்பனையாக
இருப்பதால் அதில் பிரதிபலிக்கும் காட்சிகளும் பொய்யாகத்தான் இருக்க வேண்டும். மனம்
நாசமடைந்தால் பந்தம்-மோட்சம் என்பவைகளும் நாசமடைந்துவிடும். ஆத்மாவில் இவைகளுக்கு
இருப்பிடமில்லை. இவைகளொன்றும் அதில் ஒட்டாது. இவைகளை நீ அடிக்கடி ஆராய்ச்சி செய்து
பகுத்தறிந்து அனுபவத்திற்குக் கொண்டு வருவாயாக. அனுபவத்தில்தான் பலன் ஏற்படும்.
தத்துவங்களை அறிந்து கொள்வதில் மாத்திரம் யாதொரு பயனுமில்லை. அனுபவத்தில் கொண்டு
வந்தால்தான் இந்திரியங்களும் மனமும் அடங்கும். அதனால் சித்தியும் மனசாந்தியும்
உண்டாகும். சாந்தி உண்டானால் வாழ்க்கையை யாதொரு கவலையுமின்றி அனாயாசமாக நடத்தலாம்.
இதுதான் ஞானிகளுக்கேற்ற வழியாகும். கர்மங்களை யாதொரு பற்றுதலுமின்றிச் செய்து
வருவதே அறிவாளிகளின் நோக்கமாகும். இந்தத் தத்துவங்களெல்லாம்
வாழ்க்கையை சீர்திருத்தம் செய்யும் பொருட்டே சொல்லப்பட்டன.
மனிதர்கள்
படும் துன்பங்களெல்லாம் உண்மையில் இல்லாததானதும் ஆராய்ந்து பார்த்தால் உடனே
நாசமடையும் தன்மையை உடையதாகும். அக்ஞானத்தாலேதான் ஏற்பட்டதென்று ஏற்கனவே
சொல்லப்பட்டது. சமுத்திரத்தின் ஒரு பாகத்தில் அலைகள் கிளம்புவது போல, சர்வ அமைதியுடனிருக்கும் பிரம்மத்தில் அதனுள் அடங்கியே இருக்கும் அசைவு சக்தியினால் ஒரு அசைவு ஏற்பட்டு
பிரபஞ்சத்தின் உற்பத்திக்குக் காரணமாகிறது. சமுத்திரத்தின் உட்பாகம் அசைவற்றும்
கம்பீரமாகவும் இருப்பதுபோல பிரம்மமும் வெறும் சாட்சியாக நிற்கின்றது.
இயக்கத்திற்குக் காரணமாக இருப்பதைத்தான் சித் சக்தியென்று சொல்லப்படுகிறது.
ஒரு மனிதனின்
நடத்தையைப் பற்றி கவனித்தால், அவன் தன்னை நெருங்கி இருப்போர்களைக் குறித்தும், தனக்கு வாழ்க்கையில்
தேவையானவைகளைக் குறித்தும்தான் இன்ப-துன்பங்களை அடைகிறான். இவைகளைத் தவிர்த்து இதர
விஷயங்களைப் பற்றியோ அல்லது மக்களைப்பற்றியோ ஒரு கவலையுமின்றி இருக்கிறான். இவைகள்
விஷயமாக ஒருவித மனக்கலக்கமும் அடையாமல் அறிவாளிகளைப் போல விளங்குகிறான். இதேமாதிரி
தன்னுடைய சிறிய உலகத்திலும் நடந்துகொண்டால் மனோசாந்தி அடைவது எளிதாகும்.
யாருக்குமே வெளிவிஷயங்களில் ஈடுபடுவதாக இருந்தால் கவலைக்கு எல்லையே இருக்காது.
அப்படியின்றி வெளிவிஷயங்களில் ஈடுபடாமலிருப்பது போலவே தன் விஷயங்களிலும் இருந்தால்
தான் அடைகின்ற இன்பத்திற்கு அளவேயிருக்காது. ஆகவே அக்ஞானிகளின் நடத்தையில்
யாதொரு ஒழுக்கமும் நீதியும் கிடையாது. தானாகவே சில விஷயங்களைத் தியாகம் செய்தும்
சிலவற்றை மேற்கொண்டும் தானாகவே இன்ப-துன்பங்களுக்கு பாத்திரமாகிறார்கள். ஞானிகளோ
எல்லா விஷயங்களையும் ஒரே நோக்கத்துடன் பாவிக்கிறார்கள். ஆகையால் அவர்கள்
என்றென்றும் மன அமைதியுடன் இருக்கிறார்கள். ஆகவே நீயும் இவ்விதம் இருப்பாயாக.
ஜகத்தென்று
வழங்கப்பட்டு நம்மால் அனுபவிக்கப்படுவதாகத் தோன்றுவது எல்லாம் சங்கல்பத்தில்தானே
தவிர, வாஸ்தவமாக அவ்விதச்
சத்தியம் ஒன்றுமில்லை. சங்கல்பமாக மனதில் தோன்றுவதை வெளியில் ஜகத்தாக உணருகிறோம்.
சங்கல்பமின்றி இருக்கையில் வெளித் தோற்றங்களுக்கு யாதொரு உருவமுமில்லை, இருத்தலென்னும் தன்மையும் கிடையாது. அல்லது உருவம்
இருப்பதாகக் கொண்டாலும் அவ்வுருவத்தில் காணும் மாறுபாடுகள் சங்கல்பத்தில்
இருக்கின்றனவே தவிர வஸ்துக்களில் கிடையாது. ஏனெனில் இந்த வஸ்துக்கள்
அவைகளிலிருக்கும் நிலைமையிலேதான் இருக்க முடியும். ஆனால் அவைகள் அளிக்கும்
தோற்றங்களோ மாறுபாடுகளை அடைந்தவைகளாக இருப்பதால், இந்த மாறுபாடுகள் மனோ
விகாரங்களேயாகும். இவைகளே சங்கல்பம் எனப்படும். ஆகவே பிரபஞ்சத்தின்
விஸ்தரிப்புக்குக் காரணமாயுள்ள மனோபாவங்கள் மனதிலேயே உதித்து, வெளிப்பதார்த்தங்களைக்
கருவியாகக் கொண்டு, இவைகள் மனதால்
அனுபவிக்கப்பட்டு, இந்த
அனுபவங்களே பிரபஞ்சமெனத் தோற்றமாகின்றன. ஆகையால், சங்கல்பம் அல்லது
பாவனைதான் பிரபஞ்சம், அதுவே
சம்சாரமுமாகும்.
ஆகவே
முக்தியடைய சங்கல்பத்தை ஒழிக்க வேண்டும். இதை ஒழிக்க ஆராய்ச்சியும்
முயற்சியும்தான் முக்கியமானதாகும். முயற்சியாவது பிரபஞ்சம் சத்யமல்ல என்ற அறிவு
மனதில் வேரூன்றும்படி இடைவிடாமல் பயிற்சி செய்ய வேண்டும். இது அநித்யம், எக்காலத்திலும்
இல்லாதது,
அது
இருப்பதெல்லாம் நம் மனதில்தான் என்று உணர்ந்து கொள்ளவேண்டும். மனம் அடங்கினால்
பிரபஞ்சமும் மனதில் நாசமடைகின்றது. இவ்விதம் ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ச்சி
செய்து,
அதன்
இல்லாமையை உணர்ந்து வந்தால் பிரபஞ்சத்தின் சுய சொரூபம் காணப்படும்.
இப்படியின்றி, பிரபஞ்சம் சத்யமென்று
நினைத்தாலும் அது ஆத்மாவைத் தவிர்த்து வேறல்லவென்ற அறிவு ஏற்பட வேண்டும். சகலமும்
ஆத்மாவாக இருப்பின் இரண்டென்னும் தன்மைக்கு இடமேது? ஆதலால் இவ்விதமும்
மனதில் எந்தவிதமான சங்கல்ப விகல்பங்களும் ஏற்படாமலிருக்கும். பிறகு மனது ஆத்ம சொரூபத்தை
அடையும்.
இந்த
பாவனையையும் தள்ளி, பிரபஞ்சம்
ஸத்துமில்லை, அஸத்துமில்லை
என்பதை உபதேசிப்பது எல்லாவற்றிலும் மேலான தத்துவமாகும். இந்த மூன்றில் எந்த
மார்க்கத்தை கடைப்பிடித்தாலும் இறுதியில் சமப்பார்வை ஏற்படும். இந்த சம திருஷ்டியே
ஆத்ம உணர்ச்சியென்பதாகும். ஆகையால் ஞானத்திற்கு சாரமாய் நிற்பது, பிரபஞ்சம் ஒரு மனோமோகம் அல்லது பிரபஞ்சமே
பிரம்மம் என்ற பாவனை அல்லது பிரபஞ்சம் ஸத்துமல்ல அஸத்துமல்ல என்ற பாவனை
ஆகியவைகளாகும். இதையே வேறுவிதமாக சொல்வோமாகில், நான் எதற்கும்
கர்த்தாவில்லையென்றும், நானே சகலத்திற்கும் கர்த்தாவென்றும், நான் கர்த்தாவுமல்ல
அகர்த்தாவுமல்ல என்றும் மூன்றுவிதமாக பொருட்கொள்ளலாம்.
இந்த அறிவு படிப்படியாக
அடையப்படும். பிரபஞ்சம் முழுதும் வேண்டும், வேண்டாமென்ற இரு
பாவனைகளைக் கொண்டே சம்சாரச் சுழலில் சிக்கிக் கொண்டு தவிக்கின்றது. இவ்விரண்டைக்
கடந்தவர்கள் மிகவும் சொற்பமேயாகும். எவ்விதப் பதவியில் இருந்த போதிலும், மூன்று லோகங்களுக்கும்
அதிபதியாக இருந்தாலும், வேண்டும்-வேண்டாம் என்பவைகளைத் தியாகம் செய்யாமல்
இருக்கும் வரையில் யாவரும் சம்சாரத்திலிருந்து விடுதலை அடைய முடியாது. இவர்கள்
ஞானிக்கு ஒரு தூசிமாத்திரமேயாகும்.
ஜனகரால்
கேட்கப்பட்ட சித்தர்களின் உரையாடல்
- பார்க்கிறவன் - பார்வை
இரண்டின் சேர்க்கையால் ஏற்படும் ஆனந்த சொரூபமாயும் சலனமற்றதாயுமுள்ள அறிவையே
ஆத்மாவாக கருதி அதை நாம் உபாசிக்கிறோம்.
- பார்க்கிறவன் பொருளில்
பார்வை என்று வழங்கும் லயத்தை அடைவதற்கு முன்னுள்ள நிலையை ஆத்மாவாகக் கருதி அதை
நாம் உபாஸிக்கிறோம்.
- பார்ப்பவனுக்கும்
பொருளுக்கும் இடையே உள்ளதும், உண்டு-இல்லை இவ்விரண்டிற்கும் இடையில் உள்ளதும்,
அறியப்படுவதற்கெல்லாம் அறிவாகவும் இருக்கின்ற ஆத்மாவை நாம் உபாஸிக்கிறோம்.
- எந்தவொன்று
எல்லாவற்றையும் வியாபித்திருக்கின்றதோ, எல்லாமுமே எதனால் நிலைநிற்கின்றனவோ அதையே ஆத்மாவாக நாம்
உபாஸிக்கிறோம்.
- “நான்” என்னும் சொல்லில்
கடையெழுத்தின்றி ஏற்படும் உச்சரிப்பு, முடிவின்மையை விளக்குகிறது. மேலும் இது சதா தன்னையே
சுட்டிக் காட்டுகிறது. இச்சொரூபமே ஆத்மா என்று நாம் உபாஸிக்கிறோம்.
- தன்னுள்ளே பிரகாசிக்கும்
ஆத்மாவை விட்டுவிட்டு வெளியிலிருக்கும் தெய்வத்தை நாடுகிறவர்கள் கையிலிருக்கும்
கௌஸ்துப மணியை விட்டுவிட்டு வெளியிலிருக்கும் ரத்தினகல்லை நாடுபவர் போலாவார்கள்.
- எல்லா ஆசைகளையும்
விட்டதன் பலனாக ஆத்மஞானம் ஏற்படும். ஆத்மஞானம் ஏற்பட்டால் எல்லா ஆசைகளும் ஒருங்கே
விடப்படும்.
- எல்லாப்பொருட்களும்
உலக வியவகாரங்களும் கடைசியாகத் துன்பத்தில்தான் முடிவு பெறுகின்றன. இதை அறியாதவர்
மனிதர்களல்ல.
- எல்லாத்
துக்கங்களுக்கும் காரணம் இந்திரியங்களாக இருப்பதால், இந்தத் விஷப்பாம்புகள்
தலையெடுக்கும்பொழுதெல்லாம், இந்திரன் வஜ்ராயுதத்தால் பறந்து கொண்டிருந்த மலைகளை
அடித்து ஒரேயிடத்தில் நிலை நிறுத்தினதுபோல அடித்து அடக்க வேண்டும்.
- மனது சாந்தநிலையை
அடைந்து, தன் சுயநிலையில் இருந்துகொண்டு நிலையான அமைதியையும், சமநோக்கத்தையும்
அடைந்து நிற்கும் நிலையே உன்னதமான நிலையென்று சொல்லப்படும்.
முக்திக்கு
தேவை முயற்சியே
இதைக்
கவனிக்கும்பொழுது சொந்த முயற்சியாலும் விவேகத்தாலும் மட்டுமே ஜனகரால் ஜீவன்முக்தி
நிலையை அடையப்பட்டது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். முன் ஜன்மத்தில் செய்யப்பட்ட
பிரயத்தனங்களோடு, இந்த
ஜன்மத்தில் செய்யப்பட்ட முயற்சிகள் கூடி பலனைத் திடீரென, அதாவது
தெய்வாதீனமென்று சொல்லும்படி, கொடுக்கின்றன. வாஸ்தவத்தில் இங்கே தெய்வசகாயம்
ஒன்றுமில்லை. மேலும் இந்த முக்தியானது சாஸ்திரங்களாலோ, குருவினாலோ அல்லது
பூஜை, யாகம், யாகாதிகளால்கூட
அடையப்படாது. தன் சொந்த விசாரணையாலும் விவேகத்தாலும்தான் அடையப்படும்.
இப்படி
அடிக்கடி ஒவ்வொரு விஷயத்தையும் தீவிர விசாரணை செய்வதால் புத்தி வெகு நுட்பமாகிப்
பிறகு எக்காரியத்தையும் கவலையின்றி நடத்தும் திறமையை அடைகிறது. அதனாலேதான்
புத்திமான் எவ்வளவு கஷ்டநிலையையும் தூசியாகக் கருதுகிறான். புத்தியற்றவர்களோ அல்ப
விஷயங்களைக் கண்டும் மலைக்கிறார்கள். மதம் பிடித்த யானையைக் கூட வெல்லும் சிங்கம், தந்திரமுள்ள நரியால்
வெகுசுலபமாகவே நாசத்தை அடைந்துவிடும். ஆகையால் யுக்தியுடன் புத்தியை உபயோகித்தால்
பிரபஞ்சத்தில் எதுதான் அடையப்படமாட்டாது! சொர்க்கம், பாதாளம் கூட
இஷ்டப்பட்டால் அடையப்படும். பிறகு இந்த சம்சாரக் கடலை தாண்டுவதில் என்ன சிரமம்?
ஆகையால்
புத்தியைச் சீர்திருத்தி வெகுநுட்பமாயிருக்கச் செய்ய நாம் எடுக்கின்ற இடைவிடா
முயற்சியால்தான் முடியும். ஆகாயத்தில் எவ்வளவு தூசி பறந்தாலும், எப்படி ஆகாயம்
நிர்மலமாக இருக்கின்றதோ, அதுபோல் நம் புத்தியையும் எவ்வித நிலைமையிலும்
களங்கமற்று வைத்திருப்பது அவசியம். பூமியை எவ்வளவுக்கு எவ்வளவு உழுது சீர்திருத்தி
வைக்கிறோமோ அதற்குத் தகுந்தபடி பலனை நாம் அனுபவிக்கிறோம். அப்படியே புத்தியையும்
பக்குவம் செய்துவைத்தால் அதற்கேற்ற பலனைக் காண்போம். புத்தியின் தெளிவால் வஸ்துக்களிலும்
விஷயங்களிலும் “நான்” என்னும் நினைவும்
ஐக்கியமும் நீங்கும். அதாவது அகங்காரமும், பந்தமும் ஏற்படாமலிருக்கும். இப்படியே பழகி வந்தால்
தகுந்த காலத்தில் எல்லாம் தியாகம் செய்யப்பட்டு, மனமென்பது நிர்மலமான
ஆகாயத்தைப் போலுள்ள சித்தாக விளங்கும், இந்த நிலையில் எல்லாம் சமநோக்கத்துடன் பார்க்கப்படும்.
நான், பதார்த்தம் என்ற
தோற்றங்கள் நீங்கி, ஜீவன் சுத்த அறிவுமயமாக இருக்கும்.
பந்தத்திற்கு
காரணம் இச்சை
பந்தம், சம்சாரம் என்பவைகள்
மனது எதை நோக்கி செல்லுகிறதோ அவைகளால் ஏற்படுகின்றன. ஆகையால் வேண்டும், வேண்டாம் என்னும் நிலைதான்
பந்தங்களுக்குக் காரணமாக இருப்பதால் இவைகளை முதலில் தியாகம் செய்யப்பட வேண்டும்.
இவ்விரண்டும் இரண்டுவிதக் குரங்குகளாக இருந்து கொண்டு நம்மைச் சதா சஞ்சல நிலையில்
வைத்து,
அமைதியின்றி
இருக்கச் செய்கின்றன. இவைகளுக்கு இடங்கொடுக்காமலிருக்க சதா விசாரணை செய்வதால்தான்
முடியும். அப்படிச் செய்து வந்தால் சம்சாரமாகிய மரத்திற்கு வேர் அறுபட்டது
போலாகும். இதுவே மகா வைராக்கியம் எனப்படும்.
மனமே பிராணன், அதுவே ஆத்மா
இந்த
மனமென்பது வாஸ்தவத்தில் ஆத்மாவைத் தவிர்த்து வேறல்ல. அசைவு அல்லது பிராணன்
ஆத்மாவுடன் சேருகையில், அதாவது ஆத்மா அசைவதினால் மனதென்ற தோற்றம் ஏற்படுகிறது.
இப்பிராணன் அல்லது அசைவு சக்தி ஜட சொரூபம், ஆகையால் மனதும்
அவ்வண்ணமாகின்றது. இந்த அசைவுதான் சங்கல்பம் எனப்படும். சங்கல்பமே அசைவு, இவ்வசைவே பிராணன்
எனப்படுவதும். உதாரணமாக வெகுதூரத்திலிருக்கும் ஒரு பொருளை நாம் தியானிக்கும்பொழுது, அப்பொருள் தோற்றத்தில்
ஏற்படுவது பிராணனால்தான். இதைத்தான் மனமென்று சொல்லுகிறோம். ஆத்மா இங்கும் அங்கும்
சாட்சியாக இருப்பதால் இவ்விரண்டு இடத்திற்கும் நடுவில் பிராண அசைவு ஏற்பட்டு
தோற்றம் உண்டாகிறது.
பிராணாயாமம்
என்பது என்ன?
மேலே
சொல்லப்பட்ட பிராணனை அடக்கும் நிமித்தம், பிராணாயாமமென்ற நியமம் யோகமார்க்கத்தை அனுசரிப்பவர்களால்
ஏற்படுத்தப்பட்டது. இதனால் பிராணனை அடக்குவதாகப் பொருட்படுத்த வேண்டுமே தவிர
பிராணவாயுவை அடக்கவேண்டும் என்று பொருட்படுத்தக்கூடாது. அதாவது சஞ்சலத்தையே
தொழிலாகக் கொண்ட மனதை அசைவின்றிச் செய்வதே பிராணாயாமமாகும், மூச்சை அடக்கி வைப்பது
பிராணாயாமம் அல்ல. இந்தப் பிராணாயாமத்தை பயிற்சி செய்வதற்கு, முதலில் ஆசைகளை, பழக்க-வழக்கங்களை
ஒழிக்க வேண்டும், இதனோடு வைராக்கியமும்
அவசியம் தேவை. இவைகளை அனுசரித்து முயற்சித்து வந்தால் மனது அடங்குவதுடன் பிராணவாயுவின்
கதியும் ஒழுங்குபடும்.
மனம் ஜடமா? அஜடமா?
மனமானது தான்
சித்தினுடைய சொரூபமென்பதை மறந்து, சங்கல்ப வசத்தால் வெளிநோக்கம் அடைந்து, தன்னால்
கற்பிக்கப்பட்ட வஸ்துவைத் தானென்பதாக உணர்ந்து அதிலேயே ஐக்கியமாகின்றது. ஆதலால், இவ்வித ஜட
சம்பந்தத்தால் மனமும் ஜடமென்று கருதப்படலாம். இந்நிலையிலிருக்கும் வரையில், தன் சுய சொரூபத்தை
மறந்திருக்கையில் இது எப்படி சத்யமாக முடியும்? ஆகவே அது
மித்யாவாகும். ஆயினும் சித் சக்தியோடு கூடியிருப்பதால் தான் கருதுவதை எல்லாம்
அடையவும் செய்கிறது. ஆனால் ஒரு பொம்மை எவ்வளவு சாதுர்யமாகச் செய்யப்பட்டாலும், அது தானாக நடனம்
செய்யுமா?
அல்லது
சித்திரத்தில் வரையப்பட்ட நிழலில் நாம் களைப்பாற முடியுமா? அப்படி மனம் சுத்த
ஜடமாக இருப்பின், தான்
கோரியவைகளை எல்லாம் அடைய முடியுமா? ஆனால்அது எக்காலத்திலும் சித் சக்தியைக் கூடியே இருப்பதால்
அஜடமென்றும் சொல்லத்தகும். ஜடப்பொருட்களில் ஈடுபடாமல் சித்தையே ஸ்மரித்தால் சுத்த
சித்தாகிறது. இல்லையென்றால் ஜடமாக விஸ்தரிக்கிறது.
இந்த மனதைப்
பற்றி இன்னும் ஆராய்ச்சி செய்வோம். எதை நாம் மனமாகப் பாவிக்கிறோம்? அறிவு என்பது
ஆத்மாவிடத்தில் இருக்கிறது. பிராணன் ஆத்மாவில் ஸபந்திக்க அறிவு உண்டாகிறது. தேகம் தன்னுடைய
சுயதர்மத்தை செய்துவருகிறது. பிறகு மனதுக்கு இடமேது? ஆகவே மனம்
மித்யாவாகும். மேலும் பிராணன், தேகம் இரண்டும் ஆத்மாவின் அனுக்கிரகத்தால் தங்கள்
செயல்களைச் செய்து வருகின்றன. ஜகத் முழுதும் ஆத்மாவினால்தான் நிலைநிற்கின்றது.
ஆகையால் இதை அடைவதில்தான் நம் பிரயத்தனங்கள் இருக்கவேண்டும்.
உலகத்தின்
போக்கைப் பார்த்து அதை சீர்திருத்துவதிலோ, நல்வழிப்படுத்துவதிலோ
ஈடுபட்டால் அதிலிருந்து மீளுவது அசாத்தியமாகும். உலகத்தின் போக்கு தானாகவே
நடக்கும்.
ஆகையால் உன்
மனதை அடக்கிச் சாந்த நிலையை அடைய முயலுவாயாக. எவ்விதமென்றால் ருசிக்கப்படும்
பொருளுக்கும் ருசிப்பவனுக்கும் இடையேயுள்ள ருசியென்னும் சத்தியத்தில் மனதை
நிலைநிறுத்தி, அதாவது
அறிகிறவனுக்கும் அறியப்படும் பொருளுக்கும் இடையே நின்று இவ்விரண்டிற்குமுள்ள
சம்பந்தத்தை தெரியப்படுத்தும் அறிவில் நிலையாக மனதை நிறுத்தினால், சாந்த நிலை ஏற்படும்.
பிறகு
வசிஷ்டர் பேராசையால் ஏற்படும் துன்பங்களை ராமனுக்கு எடுத்துச்சொல்லி அதன்
சொரூபத்தையும் விரித்துரைத்தார். இந்த பேராசைக்குக் காரணம் அகங்காரம். எனவே இதை
அடியோடு ஒழிக்க வேண்டுமென்றார்.
ராமன்:
அகங்காரத்தால்தான்
இந்த தேகம் நிலைத்திருக்கும்பொழுது. அதை எவ்விதம் நாசம் செய்வது? அப்படி செய்வதால்
தேகம் நாசம் அடையாதா?
வசிஷ்: தேகத்தின்
நாசம் காலக்கிரமத்தில் ஏற்படுமே தவிர, அகங்காரம் ஒழிவதால் உண்டாவதில்லை. தேகமின்றி ஞானநிலையை
அடைய முடியாது. இவ்வித ஞான நிலையில் சாந்தமும் சமதிருஷ்டியுமே கூடிய ஜீவன்
தேகத்தில் பரிணமிக்கும். ஜனகரைப் போன்ற மகான்கள் இந்நிலையிலேதான் இருந்து
வருகிறார்கள். இந்நிலையிலிருக்கையில் வாசனை முற்றிலும் தீர்ந்தபிறகு விதேக
முக்திநிலை ஏற்படும்.
விதேகமுக்தி
ஸ்திதியையும், அதற்கும்
மேலான பிரம்ம பதவியையும் நாம் கவனிக்க வேண்டிய அவசியமில்லை. தேகத்தினால் ஏற்படும்
மேன்மையான ஜீவன்முக்தி நிலையே நம் குறிக்கோளாக இருக்க வேண்டும். இதையே நம்
விடாமுயற்சியால் அடையப்பட வேண்டியதாகும்.
இந்த முக்தியை
அடைய மேற்சொல்லப்பட்ட பல வழிகளில் ஏதாவதொன்றை பின்பற்றி அதையே விடாமுயற்சியுடன்
கடைப்பிடித்து வருதல் அவசியமாகும். “நான்”, “பிரபஞ்சம்” இவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்தால் நான்கு விதமான
அறிவில் ஏதாவதொன்று எல்லோருக்குமே சகஜமாக ஏற்படும். அவைகளாவன:-
- “நான்", "என்னுடைய
தாய்-தந்தையினுடைய மகன்” என்ற பாவனையே பந்தத்திற்கு மூலாதாரமாக இருக்கிறது.
மோட்சத்தை அடைவதற்கு இந்த நோக்கம் பயன்படாது.
- "நான் எல்லா
சூட்சுமத்திற்கும் அதிசூட்சுமமாகவுள்ள சொரூபி” என்கின்ற நோக்கம்
மோட்ச சாதனத்திற்கு தகுந்ததாகும்
- “நான் ஆத்மா, அனைத்துமே
ஆத்மா”
என்று
உணர்தலும் மோட்சத்திற்கு உபாயமாகும்
- “நான், ஜகத் எல்லாம்
சூன்யம்”
என்கின்ற
நோக்கமும் மோட்ச சாதனமாகும்.
முதலில்
சொல்லப்பட்ட ஒரு நோக்கந்தான் சம்சாரச் சுழலில் சிக்கிவைக்கும் மூடமான நோக்கமாகும்.
மோட்சத்திற்கு உபாயமான மற்ற மூன்றுவித நோக்கங்களில், நாம் உபாசித்து வருவது
சர்வமும் ஆத்மாவே என்பதாகும். இது ஒன்றே சத்யமானதும் நித்யமானதுமாகும். இரண்டு என்ற நோக்கத்தை மனதில் தியாகம் செய்து, ஆனால் கர்மங்களைச் செய்வதில் இந்த துவந்துவ பாவத்தைக்
கைவிடாமலிருப்பதுதான் ஞானிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இரண்டென்ற தன்மையின்றிக்
கர்மம் ஏற்பட முடியாது. ஆகையால் நீ இவ்விதம் ஜீவன்முக்தனாக இருந்து கொண்டு, உலக வியவகாரங்களையும்
ராஜ்ய பரிபாலனத்தையும் செய்து வருவாயாக. கர்மங்களைத் தியாகம் செய்வது உசிதமில்லை.
அப்படிச் செய்யவும் முடியாது. அதிலுள்ள வாசனைதான் தள்ளப்படவேண்டும். தாய், தகப்பன், பந்துக்கள், மித்திரர்கள் என்ற
பாவனைகளெல்லாம், உலக
வியவகாரத்தின் பொருட்டு நியமிக்கப்பட்ட விதிகளே, தவிர இவைகளில் உண்மை
ஏதுமில்லை.
இந்த ஆத்மாவை
அடைய மகா வைராக்கியமே தேவை. பதார்த்தங்களிலும் விஷயங்களிலும் இச்சை அடியோடு
ஒழிந்தால், மனம்
நாசமடைந்து ஆத்ம லாபம் சித்திக்கும். ஆகவே சொந்த முயற்சியால்தான் இது அடையப்படலாமே
தவிர, குருவினாலோ அல்லது
தெய்வ சகாயத்தாலோ அடையப்பட முடியாது. தெய்வத்தை நம்பி
முயற்சியை கைவிட்டால் எதுவும்
கிட்டாது. இந்த தெய்வமென்பது மனிதர்களால் கற்பிக்கப்பட்டதாகும். கிரியைகளின் பலன்
எதிர்பாராத காலத்தில் அடையப்படும்பொழுது தெய்வச்செயலென்று சொல்லப்படுகிறது.
ஆகையால் நீ ஆத்மாவில் உன் பூரண நோக்கத்தை செலுத்தி, தீவிர முயற்சியை மேற்கொண்டு
ஆராய்ச்சி செய்து வருவாயாக.
ராமன்: 'நான்", 'பிரபஞ்சம்", 'ஆத்மா" இவைகளைப்
பற்றித் தெளிவாகச் சொல்லுங்கள்.
வசிஷ்: நான், நீ, இந்த ஜகத் ஆகியவையெல்லாம் சுத்த
சித்தைத் தவிர்த்து வேறல்ல. சித் சேதனத்தில் ஈடுபடும்போது நீ, நான் என்ற தோற்றங்கள்
ஏற்படுகின்றன. இவைகளே பந்தத்திற்குக் காரணம். சித் அசேதனமாக இருந்தால், தோற்றங்கள்
அழிவடைகின்றன. இதுவே மோட்சமென்பதாகும். சேதனமாக நிற்கும் அகண்டப் பிரபஞ்சம்
முழுவதிலும் சித்தானது ஊடுருவி நிற்கின்றதென்பதுதான் சகல சாஸ்திரங்களின்
சித்தாந்தமாகும்.
நியதியின் போக்கை அனுசரித்து தேகம் தானாகவே
நாசமடையட்டும். உன் பிரயத்தனமெல்லாம் மனம் ஒருமுகப்பட்டிருப்பதில் இருக்க
வேண்டும். இச்சை, துவேஷம், வேண்டும், வேண்டாம் என்ற இரட்டை
பாவங்களை மாத்திரம் விட்டுவிட்டு, யதேச்சையாக வந்தவைகளை மன வேறுபாடில்லாமல் அனுபவித்தும், வராதவைகளைப் பற்றிக் கவலையின்றி
இருப்பதுமே உன்னைப்போன்ற ஞானிகளுக்குத் தகுந்த முறையாகும். கர்மத்தில் த்வைத பாவமும் மனதில் அபாவமும்தான் சமநிலையென்றும், புறநோக்கமற்ற நிலையே
ஜீவன்முக்த நிலையென்றும் கருதப்படும்.
தனக்கு
மோட்சத்தைப் பற்றிய ஆவல்தான் எதற்கு? ஏன் சம்சாரத்தின் மீது வெறுப்புக் கொள்ள
வேண்டும்?
எதுவும்
தனக்கு வேண்டுமென்பது இல்லை, வேண்டாம் என்பதும் இல்லை. யதேச்சையாக வந்ததை அனுபவிக்க
வேண்டியதே முறையானது என்று முடிவுக்கு ராமன் வந்தான். பிறகு தன்
பரிவாரங்களுடன் கலந்து ராஜ்ய விஷயங்களை முன்போலவே கவனிக்கத் தொடங்கினான். ஆனால்
அவைகளில் யாதொரு பலனையும் எதிர்பார்க்கவில்லை.
ராமன்: முக்தியை அடைய சொந்த
முயற்சியே தேவையென்று முன்னமே சொல்லப்பட்டது. ஆனால் பிரகலாதன் விஷ்ணுவின்
அனுக்கிரகத்தால் முக்தி அடைந்தது எவ்விதம்?
வசிஷ்: இங்கே விஷ்ணுவின்
அனுக்கிரகம் ஏது? தன் சொந்தப்
பிரயத்தனத்தாலும், ஆராய்ச்சி
செய்ததாலும்தான் ஆத்ம தத்துவத்தை அறிந்து கொண்டான். மேலும் விஷ்ணுவென்று
சொல்லப்பட்டது ஆத்மாவேயாகும். வியவகாரத்தின் பொருட்டு ஒரு நாமம் கொடுக்கப்பட்டது.
பிரயத்தனத்திற்கு பிறகு பலனாக சித்தி அடையப்பட்டதே தவிர, முயற்சிக்கு முன்
வரமாக கிடைக்கவில்லையே!
ஆத்மா
ஆத்மாவினால்தான் காணப்படும், வேறெவ்விதத்தாலும் காணப்படாது. இதற்குப் பௌருஷமும், விசாரமும்தான் உதவி
செய்யும். மக்களால் அழைக்கப்படுகின்ற தெய்வமென்ற சொரூபத்தால் முடியாது. குருவின்
மூலமும் அதையடைய முடியாது. அப்படி அடைவதாக இருந்தால், குருவினுடைய ஆடு, மாடெல்லாம் மோட்சத்தை
அடையலாமே! எனவே ஜீவன்முக்தி நிலை பிறரால் கொடுக்கப்படுவதல்ல.
இந்த
விஷயத்தில் இதர உபாயங்களாகிய பூஜை முதலியனவும் பயன்படாது. ஆராய்ச்சி செய்யத்
தகுதியற்றவர்களுக்கே பூஜை விதிக்கப்பட்டது. விவேகிகளுக்கு இது தகுந்த மார்க்கமல்ல.
பூஜை பக்தியடன் செய்யப்பட்டால் அதனால் மனம் தூய்மையாகலாம். ஆனால் ஆத்மலாபம்
அடைவதென்பதைக் கனவிலும் எண்ணவேண்டாம். எந்த மார்க்கத்தை அனுசரித்தாலும் கடைசியில்
இந்திரியங்களையும் மனதையும் அடக்கி ஆத்மாவைக் காணும் முயற்சியில் பௌருஷத்தை
உபயோகித்தால்தான் ஆத்ம தரிசனம் கிடைக்கும். வீணாகப் பூஜையில் காலங்கழிப்பதைவிட
நேராக மனதை வசம் செய்வதில் தீவிர முயற்சியை செய்வதே உசிதம். மூடர்களுக்கு விதித்த
மார்க்கமாகிய பூஜையை விவேகிகள் ஏன் மேற்கொள்ள வேண்டும்?
மனம் என்பது
எல்லாப் பிராணிகளையும் வியாபித்து நிற்கும் ஒரே சக்தியாகும். இது ஒவ்வொருவருக்கும்
வெவ்வேறு காட்சியைக் கொடுக்கவும், பலபேருக்கு ஒரே காட்சியைக் கொடுக்கவும் கூடிய சக்தியைக்
கொண்டது.
இன்னொரு
விஷயமும் கவனிக்கத்தக்கது. செடி, கொடிகளெல்லாம் கால வித்தியாசங்களை அனுசரித்து எப்படி
வளர்கின்றனவோ அதேமாதிரி மனிதர்களும் வியவகாரத்தின் பொருட்டு காலமென்பதை நிமித்தமாக
வைத்துக் கொண்டார்கள். இக்காலம் மனதால் சங்கல்பித்துக் கொள்ளப்பட்டது. பிறகு
மனத்தோற்றங்களை இக்காலத்துடன் சேர்த்துப் பார்க்கும்பொழுது காண்கின்ற காட்சிகளில்
கால வித்தியாசம் காணப்படுகிறது. ஆகவே, மனதில் காட்சியாகக் காணப்படுபவைகளும், வெளியில் பிரத்யக்ஷமாக
நடைபெறுபவைகளும், சர்வ
வியாபியான மனதில் எப்பொழுதும் இருந்தே வருகின்றன. அவரவர் மனதில் இக்காட்சிகள்
பிரதிபலிக்கும் பொழுது, கால வித்தியாசத்துடன் கூடிய அனுபவங்களாக அவர்கள்
உணருகிறார்கள்.
கடஞ்சனென்ற சக்கிலியன் இருந்தது வாஸ்தவம். அவன் கிராட தேசத்திற்கு
அரசனானதும் வாஸ்தவமே. இதை நீயும் அறிந்தவனாக இருந்தாய். இந்தத் தோற்றந்தான் பல
வருடங்களுக்கு பின் உன் மனதில் தோன்றிற்று. இப்படி வாஸ்தவமாக நடைபெற்ற
விஷயங்கள்தான் யதேச்சையாக சிலர் மனதில் தோற்றமாக பல வருடங்களுக்குப் பின்னும்
ஏற்படலாம். முற்றிலும் மறக்கப்பட்டவைகள் இவ்விதம் காணப்படலாம். இப்பொழுது உனக்கு
மோகம் நீங்கியிருக்கும். இனி மாயையின் விசாரணை நிறுத்திவிட்டு, ஆத்மாவைக் குறித்து
விசாரம் செய்து மோட்சத்தை அடைவாயாக.
மனிதர்கள்
படுகின்ற துயரங்களுக்குக் காரணம் எண்ணங்கள்தான். இந்த எண்ணங்கள் சங்கல்பத்தால்
விருத்தியாகின்றன. நான் எப்பொழுது இவைகளை அடியோடு ஒழித்து நிராசையுடனும், சித்த
விருத்தியின்றியும் இருப்பேன்? எப்பொழுது நான் பிரபஞ்சத்தை முற்றிலும் விட்டொழித்து
ஏகாங்கியாக ஆத்மாவில் சாந்தியடைவேன்? இவ்வித எண்ணங்களைத்
தொடர்ந்து மனதை அடக்குவதில் பிரயத்தனத்தைச் செய்ய வேண்டுமென்ற தீர்மானத்தை
அடைந்தான். உடனே பத்மாசனத்தில் அமர்ந்து ஆத்ம தியானம் செய்ய
ஆரம்பித்தான்.
கண்ணை மூடியதுதான்
தாமதம்,
மனம்
சஞ்சலமடைய ஆரம்பித்தது. பலவித விஷயங்கள் தொடர்ந்து மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
அடக்கப் பிரயத்தனம் செய்ததில் இன்னும் அதிக சஞ்சலமடைந்தது. இதன் காரணமென்ன என்று
யோசித்தான். மனதிற்கு இவ்விஷயங்களில் விருத்தி ஏற்படுவது இந்திரிய சுகங்கள்
மேலுள்ள ஆசையே. இவ்வாசைகளை ஒழித்தால்தான், மனது அமைதியாகும்.
இப்படித் தோன்றவே, மனதை நோக்கித்
தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். 'ஏன் உனக்கு இந்த விஷய சுகங்களில் ஆசை? இவைகளால் உண்டாகும்
தீங்கை நீ அறியவில்லை போலும். சத்தத்தைக் கேட்டு மான் தன் உயிரை இழக்கிறது.
ஆண்யானை ஸ்பரிசத்தால் தன் சுதந்திரத்தை இழக்கிறது. விட்டில் பூச்சி கண்ணாலும், மீன் ருசியினாலும், தேனீயானது வாசனையாலும்
உயிரை மாய்த்துக் கொள்ளுகின்றன.
இவைகளுக்கெல்லாம் ஒரு இந்திரியந்தான் நாசத்திற்கு காரணமாயிருக்கின்றது.
உன்னை ஐந்து இந்திரியங்கள் சேர்ந்து நாசம் செய்து வருகின்றன. இதை அறியாமல் நீ
திண்டாடுகிறாய். உனக்குக் கொஞ்சமும் விவேகமில்லை. இனி இதை அறிந்து இவ்வாசைகளை
அடியோடு ஒழித்து அமைதியடைவாயாக.
பிறகு தன்
தேகத்தைப்பற்றி யோசித்தான். எந்தப் பரமாணுவிலும் 'நான்" என்பது
இருப்பதாகத் தெரியவில்லை. எதுவும் தனிமையாக ஆத்மாவென்று உணரப்படவுமில்லை. இவ்வாறு
வெகுநேரம் ஆராய்ச்சி செய்தபின் ஆத்மா சர்வ வியாபி, சுயப்பிரகாசம், பகுக்கப்படாதது, சிரஞ்சீவி, சாந்தம் என்று
உணர்ந்தான். ”நான்" என்பதை அறியாதவர்களே சம்சாரத்தில் சிக்கிக்
கொண்டு திண்டாடுகிறார்கள். தேகத்தையும், மனதையும் நானென்று பாவிப்பதால் அக்ஞானம் ஏற்படுகிறது.
ரத்தம்,
மாமிசம், தோல், ரோமம், எலும்பு, நரம்புகளாகிய
ஜடப்பொருள்களுக்கு உணர்ச்சியென்பது கிடையாது. அப்படி இருந்தால் சவத்திற்கும்
உணர்ச்சி இருக்கவேண்டும். கண்ணினால் மூக்கிற்கு ஏதாவது சகாயமுண்டோ? அல்லது காது
மூக்கிற்கு சந்தோஷத்தைக் கொடுக்கும் சக்தியுண்டா? இவ்விந்திரியங்கள்
தவிர தோல், ரத்தம் ஆகிய
தேகபாகங்களும் மனதின் ஏவலைச் செய்து வஸ்துக்களிடமிருந்து இன்பத்தை அடையும்
பொருட்டே மனதால் தேடிக் கொள்ளப்பட்டன. தன் இச்சைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும்
வரையில் மனம் இவ்வுடலை ஆதரித்து வருகிறது. பலனின்றி போன பின் உடனே இக்கூட்டை
விட்டுப் புதிய கூட்டைத் தேடிக்கொள்ளுகிறது.
பிறகு
மனதைப்பற்றி ஆராய்வோமாகில், அது எந்த இந்திரியத்திற்கும் புலப்படாதது. அதன் இருத்தல்
இந்திரியங்களின் செயல்களால்தான் உணரப்படுகிறது. தேடினால் காணோம், தேடாமலிருக்கையில் அது
எல்லாவற்றையும் செய்து வருகிறது. ஆகவே அதுவொரு சொரூபத்தைக் கொண்ட வஸ்துவோ அல்லது
தத்துவமோ இல்லை. ஜடத்தன்மையால்தான் அது உணரப்படுகிறது. ஆகையால் அதுவும்
ஜடமென்றுதான் கருதப்படும். இதுவும் அழிவுக்குட்பட்டதே. இதிலிருந்து அறிந்து
கொள்ளவேண்டியது மனமும், தேகமும் 'நான்" என்று சொல்ல முடியாது. இவ்விரண்டும்
சேர்ந்துதான் இந்த சம்சார மோகத்தை விருத்தி செய்துகொண்டு இருக்கின்றன.
பிறப்பு-இறப்பு இவைகளின் முக்கிய அம்சமாகும். பிறப்பின் முடிவு இறப்பாகும்.
மரணத்தின் முடிவு பிறப்பாகும். ஒன்றில்லாமல் மற்றொன்றில்லை. தேகமும் மனமும் கூடு அவ்விதமாகத்தான்
இருக்கிறது.
ஆகையால் 'நான்" என்பது
எப்பொழுதும் எந்த நிலையிலும் எக்காலத்தும் ஒவ்வொரு உணர்ச்சியிலும் உணர்வோனாகவும்
சாட்சியாகவும் இருக்கும் அறிவாகும். இதுவே நித்ய சத்யம். இதுவே பிரம்மம். ஒவ்வொரு
பொருளும் பிரம்மமேயாகும். ஆகவே எல்லாம் நானாக இருக்கிறேன். இவ்வாறு தியானித்துக்
கொண்டேயிருக்க வேண்டும்.
'ஓம்" என்பதைத்
தியானிக்கும் முறை
இந்தத்
தீர்மானத்துடன் பத்மாசனத்தில் இருந்தபடி கண்களைப் பாதி மூடிக் கொண்டு தியானம்
செய்ய வேண்டும். பிறகு மூன்றரை மாத்திரையில் அடங்கிய பிரணவத்தை உரக்க உச்சரிக்க வேண்டும்.
முதல் இரண்டு மாத்திரையில் அடங்கிய அகார, உகாரங்களைச் சேர்ந்த “ஓ” என்னும் சப்தத்தை
உரக்க உச்சரிக்கும்போது உடல் முழுதும் அத்தொனியைப் பிரதிபலிக்கும்படி செய்து, உள்ளடங்கிய மனதில்
வெளியுலகத்தை கலக்கும்படி பாவனை செய்து கொள்ள வேண்டும். இதுவே பிராணாயாம முறையில்
ரேசகமென்பது. இதனால் மனம் உள்ளும், புறமும் ஒன்றாக நின்று சர்வவியாபியான உணர்ச்சியை
அடையும். இந்நிலையில் தேகத்திற்கு வாயுவுடன் கூடி நிற்பதைத் தவிர்த்து, வேறு உணர்ச்சி
கிடையாது. பிறகு தொடர்ந்து அடுத்த மாத்திரையில் அதே சப்தத்தின் முடிவை சமமாக
உச்சரித்து மனதை ஒரு நிலையில் நிற்கச் செய்ய வேண்டும். இதுவே கும்பகனெப்படுவது.
அப்பொழுது மனம் நிர்மலமாய் யாதொரு விஷய பாவமில்லாமல் இருக்கும். கடைசியில் பூரகம்
செய்ய வெளி ஆகாசமான மனதை உள்ளே இழுக்கும் பாவத்துடன் கூடி ”ம"காரத்தை
உச்சரிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது மனம் எந்தவித சஞ்சலமின்றி ஒருமுகப்பட்டு, அமைதி அடைந்துவிடும். மனம் கலைந்து விட்டாலும் திரும்பித்திரும்பி மேலே சொல்லியபடி பிராணாயாமத்தைச் செய்ய வேண்டும்.
ஹடயோக முறைப்படி பிரணாயாமத்தைச் செய்யக்கூடாது. ஏனெனில் அதனால் சிற்சில சித்திகள்
ஏற்படலாமே தவிர, சாந்தியுண்டாகாது.
இப்படிப்
பிராணாயாமம் அடிக்கடி செய்யும் போது, பூர்வ வாசனையின் காரணத்தால், மனம் சஞ்சலமடைந்து
பலவிஷயங்களைப் பின்தொடர்ந்த வண்ணம் இருக்கும். இப்படி நேரும்போதெல்லாம் எண்ணங்களை
உதறித் தள்ளிவிட வேண்டும். காலக்கிரமத்தில் மனதின் எண்ணங்களும் ஒருங்கெனவே ஒழிந்துவிடும்.
அப்பொழுதுதான் நிரந்தரமான மனம் அமைதியாக இருப்பதை உணர்ந்து கொள்வோம். அதன்பிறகு ஒரு பிரகாசத்தை
உணர்வோம். இதைத் தள்ளியதும் தூக்கம் வந்துவிடும். இதுவும் தள்ளப்பட்டபொழுது
அக்ஞானமான இருளால் சூழப்படுவோம். அதையும் நீக்கிவிட வேண்டும். இவ்விதமான தோற்றங்கள்
ஏற்பட்டதன் காரணம், இந்த
அபிப்பிராயங்கள் வெகுகாலம் நம் மனதில் ஊறி இருக்கிறது. இவைகளெல்லாம் தள்ளப்பட்ட பிறகு
நிலையானதும், களங்கமற்றதுமான
சாந்த நிலையை நாம் அடைந்துவிடுவோம். இப்படி ஏற்பட்ட ஸ்திதியை வெகுகாலம்
திரும்பத்திரும்ப அப்யசித்து வந்தபிறகு கவலையற்று இருக்கலாம். மறுபடியும்
அக்ஞானத்தில் சிக்கிக் கொள்வோமென்ற பயம் இருக்காது.
சுரகு அரசனின் உதாரணம்
அரசே! நீ
நிரந்தரமான மனசாந்தி அடைய உன் பிரயத்தனத்தால்தான் முடியும். அதை என்னாலாவது
வேறெவராலாவது நீ அடையும்படி செய்ய இயலாது. நீ தேடும் சாந்தம் உன்னிடத்திலேயே
உள்ளது. அது நீயாகவே இருக்கிறாய். ஆகையால் இதை அடைய உன் ஆராய்ச்சியே தேவை. 'நான் யார்", "இந்த ஜகத்
சம்பந்தம்" இவைளைப் பற்றித் தீர்க்கமாக ஆராய்ச்சி செய்து வருவாயானால், ஞானம் தானாகவே
சித்திக்கும். இடைவிடாத ஆராய்ச்சியாலே ஞானம் உண்டாவதென்பது அனுபவத்தில் தெரிந்த
விஷயம். இவ்விசாரணையால் ஜகத் முழுவதும் உணர்ச்சிகளைத் தவிர்த்து வேறல்ல என்ற
நிச்சயம் ஏற்படும். இந்த உணர்ச்சிகளால் ஏற்பட்ட ஜகத் விடப்பட்டால் மிஞ்சுவது
ஆத்மாவே. ஆகையால் திருஷ்ய விஷயங்கள் எல்லாம் உன்னால் விடப்பட்டால் நீயே ஞானமயமாக
இருப்பாய்.
இவ்வாறு
சொல்லிவிட்டு முனிவர் விடைபெற்றுச் சென்றார். சுரகு அரசன் ஒருகண நேரமும் தாமதிக்காமல் யோசிக்கத் தொடங்கினான். மேரு மலை நானல்ல, இது
பிரத்யக்ஷமாகவும் சந்தேகமில்லாமலும் தெரிந்த விஷயம். பிறகு நான் அரசாட்சி செய்து
வரும் இந்தப் பிரதேசம் நானல்ல. இது என்னுடைய ராஜ்யமாக எப்படி
நேர்ந்தது? கேவலம் ஒரு
கட்டுப்பாட்டால் நான் ராஜாவாக கொண்டாடப்படுகிறேன். இந்தப் பதவியை துறந்தேனாகில்
ஒருவனும் என்ன ராஜாவாக மதிக்கமாட்டான். ஆகவே பிரபஞ்சத்தில் அடங்கிய வஸ்துவோ விஷயமோ
நானில்லை. பிறகு இத்தேகம் கேவலம் ஜடப்பொருள். மனமும் அவ்வண்ணமே கருதப்பட
வேண்டியிருக்கிறது. ஏனெனில் இது ஜடமான பொருட்களிலேயே எப்பவும்
சிக்கிக் கொண்டிருக்கிறது. இவ்விதமே பரம திருஷ்டியில் இவைகளும் அறிவுக்குப்
பாத்திரமாகின்றன. ஆகையால் மிஞ்சினதாகிய நிர்மலமான பரிபூரண அறிவே என் ஸ்வரூபமாகும்.
பிரம்மா,
விஷ்ணு, ருத்ராதிகள், யமன், இந்த ஜகத் ஆகியவைகளெல்லாம் நூலில்
கோர்க்கப்பட்ட மணிகளைப் போல் இந்த ஆத்மாவை அனுசரித்தே நிலைநிற்கின்றன. இதுவே
எங்கும் வியாபித்து சூட்சுமமாயும், ஸ்தூலமாயும் தோற்றங்களைக் காட்டி, ஆனால் தான் ஒன்றிலும்
இயங்காமல் இருக்கின்றது. இதுவே ”நான்" ஆகும்.
இப்பொழுது என் மனம் தெளிவடைந்தது. இனி இந்த நிலையையே சார்ந்திருப்பேன். என்று தீர்மானித்துக்
கொண்டான்.
சுரகு: சமாதி என்பது என்ன? மனம் சமநிலையை அடைந்து
உள்ளம் சதா அமைதியுடன் இருப்பதுதானே, அதாவது மனம் என்னும் ஸ்திதி அழிந்து அது ஆத்மாவாக
நிற்பதுதானே. இந்நிலையில் எவ்விதமான வியவகாரங்களைச் செய்தாலென்ன? மனம், ஆத்மாவாகிப்
பிரபஞ்சமெல்லாம் ஆத்மாவாக உணரப்படும்போது அதைவிட்டு நழுவுவது எப்படி? இந்த ஆத்மாவை உணராத
வரையில்தான் பத்மாசனத்தில் அமர்ந்தோ, மூச்சையடக்கியோ அல்லது பிரம்மாஞ்சலி செய்தோ மனதை
அடக்கும் பிரயத்தனங்கள் பொருந்தும். இதைச் சமாதியென்று எப்படிச் சொல்லத்தகும்?
ஆத்மாவை
உணர்ந்தவன் ஒருகண நேரங்கூட அனாத்மாவாக இருக்க முடியாது. காலம் அதனுடைய ஒவ்வொரு
அம்சத்தோடு எப்பொழுதும் கூடியே இருப்பதுபோல, ஆத்ம உணர்ச்சியும்
இடைவிடாமல் இருந்தே தீர வேண்டும். வாயுவானது எப்படி எங்கும் வியாபித்திருக்கிறதோ
அதேமாதிரி ஞானவானுக்கு ஆத்ம உணர்ச்சிதான் ஒவ்வொரு விஷயத்திலும் இருக்கும்.
ஆத்மாவைத் தவிர வேறொன்றையும் அவன் உணர்வதில்லை. நற்குணம் உடையவனிடத்தில் அத்தகைய
குணம் எப்பொழுதும் வெளிப்படும். அதேமாதிரி பிரபஞ்சத்தில் இருத்தல் என்ற தன்மையுடைய
ஆத்மாவை உணர்ந்த ஞானிக்கு இல்லாமை என்ற தன்மை ஒருகணமும் புலப்படாது. உண்மையில்
இந்த சமாதியைப் பற்றிய கேள்வியே தவறு. எல்லாம் ஆத்மாவாக உணரப்படும் நிலையில் எது
எதில் சமாதி அடையும்? நான் ஆத்மாவிலேயே சதா நிலைபெற்று நிற்கின்ற நிலையில்தான் இருந்து வருகிறேன்.
ஆத்மாவை அடைய மனதை மனதாலே வசப்படுத்தி அதை அழிக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆத்மா
பிரகாசிக்கும்.
விவேகத்தை
உடையவர்கள் சம்சாரக் கடலை இப்படிச் சுலபமாக தாண்டி விடுவார்கள்.
தேகத்தின் மேலுள்ள பற்றுதலை நீக்கி அதன் செயல்களில் ஈடுபட்டுக் கொள்ளாமல்
சாட்சியாகவே நின்று அனைத்து செயல்களிலும், விளைவுகளிலும் சமமாக
இருப்பார்கள். ஒரு ரதத்தின் அச்சு உடைந்தால் சாரதி எப்படி பாதிக்கப்படுவதில்லையோ, அப்படியே
தேகத்தின்பால் ஏற்பட்ட வியவகாரங்களில் சஞ்சலமின்றி உறுதியான மனமுடையவர்களாக
இருக்கவேண்டும். உலகில் அனேகவிதமான பொருட்கள் இருக்கின்றன. ஒன்றுக்கொன்று யாதொரு
சம்பந்தமும் இல்லை. ஒன்று அழிவதால் மற்றவைகளுக்கு ஒரு பாதிப்பும் ஏற்படாது. நம்
தேகமும் இவ்விதமென்றுதான் கருதப்பட வேண்டும். தேகத்தின் நாசத்தால் சித்துக்கு
நாசமேது?
ஞானி, அக்ஞானி இருவரும்
தேகத்தை உடையவர்களாக இருக்கிறார்கள். ஞானியானவன் எல்லாக் கர்மங்களையும் செய்தும்
செய்யாதவனைப் போலிருக்கிறான். அக்ஞானியோ அவைகளால் இன்ப-துன்பங்களை அனுபவித்து
பிறப்பு-இறப்பு சூழலில் சிக்கிக்கொள்கிறான்.
ஆகையால்
ஞானிக்கும் அக்ஞானிக்கும் உள்ள வித்தியாசம் தேகத்தின் மேலுள்ள பற்றுதலேயாகும்.
இப்பற்றுதல் இரண்டு வகைப்படும். முதலாவது அக்ஞான வசத்தால் வெறுமே வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பது. இதுவே பந்தத்திற்கு காரணமாகும். இரண்டாவது
பரோபகாரமானது. செடி, கொடிகள், மரம். மட்டையெல்லாம்
நிலத்திலிருந்து நீரை பருகி, வெயிலினால் வாட்டப்பட்டும், காற்றினால்
அடிக்கப்பட்டும் வளருகின்றன. இக்கஷ்டங்கள் எல்லாம் சகிப்பது உயிர் வாழ்வதன்
பொருட்டேயாகும். கிருமிகள், புழுப்பூச்சிகள் எல்லாம் பலவிதமாகக் கஷ்டப்பட்டு, சந்துபொந்துகளில்
வசித்து எப்படியோ உயிர் வாழ்கின்றன. எதன் பொருட்டு இவைகளெல்லாம் அனுபவிக்க
வேண்டும்?
வாழ வேண்டும்
என்ற ஆசையினாலேதான் கஷ்டங்களை பொறுத்துக் கொள்கின்றன. கழுதை ஏன் மூட்டை சுமக்க
வேண்டும். அடியும் உதையும் படவேண்டும்? தன் வாழ்க்கையின் மேலுள்ள பற்றுதலாலேயாகும். மனிதர்களும்
இவ்வாறே கஷ்ட-நஷ்டங்களை அனுபவித்துக் கொண்டும், இவைகளிலிருந்து
தப்பித்துக் கொள்ள வழி தெரியாமலும் அவைகளிலேயே சுழன்று கொண்டிருக்கிறார்கள்.
இப்படியில்லாமல்
ஆத்ம தத்துவத்தை உணர்ந்து தேகத்தின்மேல் ஒருவித ஆசையுமின்றி வாழ்க்கையை நடத்துகிறவர்கள் மேன்மை பொருந்திய பற்றுதலை உடையவராவர்கள். பஞ்ச பூதங்கள் தத்தம்
தன்மைகளில் நிற்பதும், திசைப்பாலர்கள்
திசைகளை காப்பாற்றி வருவதும், சூரிய சந்திரர்கள் இடைவிடாமல் சஞ்சரித்து வருவதும், இவைகளெல்லாம் பொது
நன்மைக்காக இருப்பதால் போற்றத்தக்க பற்றுதலாகும். மகாவிஷ்ணு மூன்று உலகங்களை
பாதுகாத்து வருவதும், பிரம்மா
திரும்பித் திரும்பி சிருஷ்டியில் ஈடுபடுவதும் பற்றுதலாலேதான். ஆனால் இதுவும்
போற்றத்தக்க பற்றுதலாகும். இப்பற்றுதலுக்கு காரணம் வாசனைகளேயாகும். இந்த வாசனையால்
கட்டுப்பட்டுப் பிரபஞ்சம் சதா நடைபெறுவது என்ன ஆச்சரியம்?
ஆகையால் எவன்
பற்றுதலை ஒழித்து, தேக
வியவகாரங்களில் ஈடுபட்டுக் கொள்ளாமல் சாட்சியாக நின்று சம்சாரத்தை நடத்திவருகிறானோ
அவனே ஜீவன்முக்தனாகிறான். இப்படியின்றி பற்றுதலுடன் காரியங்களைச் செய்கிறவர்கள்
துன்பத்தைத்தான் அனுபவிக்க வேண்டும். சமுத்திரக் கரையிலுள்ள மணலை எண்ணினாலும்
எண்ணலாம்,
இவர்கள்
எடுக்கும் ஜன்மங்களைக் கணக்கிலடங்காது, ஆகையால்
வாசனைகளால் ஏற்படும் தூண்டுதல்களை அடக்கி மனதை அசைவற்றிருக்கும்படிச் செய்வதே
யுக்தியாகும். அதாவது எப்பொழுதும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் எல்லாவித
எண்ணங்களையும் மனதிலிருந்து நீக்கியவனாக இருத்தலாகும். மனதில்
யாதொரு சிந்தையும் இருக்கக்கூடாது. வஸ்து, விஷயம் ஆகியவைகளின் எண்ணங்களையும் நீக்க வேண்டும்.
மனதை புருவமத்தி, நாசி நுனி, பிரம்மரந்திரம்
இவைகளில் நிலைநிறுத்துவதாகிய தியானமும் விடப்பட வேண்டும். ஆத்மாவெனும் சிந்தைகூட
மனதில் இருக்கக்கூடாது. சுருக்கமாக மனம் சர்வ சூன்யமாய் இருப்பதே முறை. இதை
இடைவிடாப் பயிற்சியினால் அடைந்தால், பிறகு ஆத்மா தானாகவே பிரகாசிக்கும். மனம் முற்றிலும்
ஒழிந்தால்தான் ஆத்மா உதிக்க இயலும். சந்திரகலை கொஞ்ச கொஞ்சமாக குறைந்து
அமாவாசையன்று முற்றிலும் மறைந்து சூரியப்பிரகாசத்தில் கலந்து விடுவது போல, மனமும் ஆத்ம ஜோதியில்
மறைந்துவிட வேண்டும்.
துரியாதீத
நிலை
இவ்வித
நிலையில் மனதை வைத்திருப்பவன் என்ன கர்மங்களைச் செய்து வந்தாலும், அக்கர்மங்கள்
இந்திரியங்களால் செய்யப்பட்டவைகளாகவே கருதப்படும். பார்ப்போருக்குச் செயல்களாகத்
தோன்றினாலும் உண்மையில் அவைகள் பலனில் நோக்கமில்லாதவைகளாகும். மனம் மேருமலைபோல்
அசைவற்றேயிருக்கும். லோக வியவகாரங்கள் அனைத்தும் அவனுடைய களங்கமற்ற மனதில்
அப்படியே ஒருவித மாறுபாடின்றிப் பிரதிபலிக்கும். ஏனெனில் மனம் ஆத்மாவாகப்
பிரகாசிப்பதால் இவ்வாறிருக்கிறது. சதா நித்திரையில் இருப்பவன்போல்தான் இவன்
இருப்பான். அதாவது லோக வியவகாரங்களிலோ, ஆத்ம விஷயத்திலோ அவன் எப்பொழுதும் விழித்தவனாகவே
இருப்பான். ஒரு குழந்தை கை கால்களை யாதொரு சிந்தனையின்றி உதைத்துக் கொள்ளுகிற்து.
அவ்வாறேதான் ஜீவன் முக்தன் கர்மங்களைச் செய்வதுமாகும். அவன் உள்ளம் எப்பொழுதும்
குளிர்ந்தேயிருக்கும். இந்நிலைதான் பெரியோர்களால் துரியத்தைத் தாண்டிய பதவியென்று
சொல்லப்படுகிறது. இந்த நிலை தேகத்தைக் கூடிவாழும் நிலையில்தான் அடையப்பட
வேண்டியது. இதற்கு அடுத்த பதவியானது, தேகத்திலிருந்து விடுதலை அடைந்த பிறகு சித்திக்கும்.
இந்நிலையில் தண்ணீரில் போட்ட உப்பைப்போல் ஜீவன் ஆத்மாவுடன் கலந்துவிடும்.
இப்பதவி
ஆனந்தத்தையும் தாண்டி நிற்பதாகும். அதுவே ஆனந்தமயமாக இருப்பதால், அதற்கு
உணர்ச்சியென்பது எப்படிப் பொருந்தும்? இதைப்பற்றி வாயால் சொல்லவோ, மனதால் உணரவோ
சாத்தியமில்லை. அது இவைகளுக்கு எட்டாத நிலையாகும்.
நாம்
செய்யவேண்டிய முயற்சிகளெல்லாம் தேகத்தின் உதவியால் அடைகின்ற ஜீவன்முக்தி நிலையை பற்றியேயாகும். இதுவே
வாழ்க்கையில் இன்பத்தையும் சுகத்தையும் தரும். இப்படியிருப்பதை மனதில் கொண்டு உன்
கர்மங்களைச் செய்வாயாக. தேகத்தில் அபிமானம் இல்லையென்றால் கர்மங்கள் பற்றுதலின்றி
செய்யப்படும். ஆராய்ந்து பார்த்தால் தேகத்திற்கும் ஆத்மாவுக்கும் என்ன சம்பந்தம்? ஒன்று ஜடம் மற்றொன்று
சேதனம். பனிக்கட்டி சுடுகிறதென்றால் பொருந்துமா? வெளிச்சத்தில்
இருட்டைக் காணமுடியுமா? இவைகள் எவ்வளவு அசம்பாவிதமோ அவ்வளவுதான் தேக-ஆத்மா
சம்பந்தமும். ஒன்று நித்திய சத்தியம், சுயப்பிரகாசம், மற்றொன்று வெறும் ஜடம். இவ்விரண்டும் ஒன்றோடொன்று
எப்படிக் கலக்கும்? ஆகையால்
பந்தம்-மோட்சம் என்பது அறிவின்மை.
பிறகு இதை
அடக்கும் மார்க்கங்கள் இரண்டு, அதாவது மேற்சொன்ன இரண்டு அம்சங்களைத் தழுவி, ஒன்று சித்த
விருத்திகளைத் தடைசெய்யும் யோக மார்க்கம், மற்றொன்று சித்தத்தின்
நாசத்தையே தழுவிய ஞானமார்க்கம்.
ராமன்: பிராண அபான
வாயுக்களைத் தடை செய்து மனதை அடக்கும்படியான யோக மார்க்கத்தைப் பற்றி எனக்கு
விளக்குங்கள்.
வசிஷ்: நமது தேகம் அனேக நாடிகளால் வியாபிக்கப்பட்டு
இவைகளின் அசைவால் தேகத்தில் விசித்திரமான கிரியைகள் நடைபெறுகின்றன. இந்த நாடிகள்
எல்லாவற்றின் அசைவிற்கும் ஒரே பிராணன்தான காரணம். அபான, வியான, உதான, சமானமென்று
சொல்லப்படும் இதர அசைவுகள் கற்பனைகளே. ஒவ்வொரு தேகபாகத்தை, செயல்பாட்டை ஒட்டி ஒரே
பிராணனுக்கு வேறுபெயர்கள் கொடுக்கப்பட்டன. காலத்தை அனுசரித்து மலர்கள் எப்படி
மலர்கின்றனவோ அதேமாதிரி இரண்டு என்ற பாவம் ஏற்பட்ட கணமே சித்தம் விஸ்தரிக்க
ஆரம்பிக்கின்றது. இதனால் சங்கல்பங்கள் அலைகள்போல் அடுத்தடுத்து உதிக்கின்றன. ஆகவே
அசைவு அல்லது பிராணன்தான் மனம். அசைவு குறைந்தால் மனம் சாந்தி அடைகிறது. மனம்
விஸ்தரித்தால் சம்சாரம் வலுக்கிறது. எப்படியென்றால் சூரியன் உதயமானதும் மக்கள்
பிரவிருத்தியில் ஈடுபடுவது போல இது இருக்கிறது.
பிராணாயாமம்
செய்யும் முறை
இந்த
மனதினுடைய அசைவை தடைசெய்யும் யோகமார்க்கம் பலவிதம். ஆனால் இதைப் பிரயாசமின்றிச்
செய்வதே முக்கியம். பிராணனென்பது அசைவைத் தவிர வாயுவல்ல.
ஆகையால் வாயுவை அடக்கி தேகத்தை துன்பப்படுத்துவதில் லாபமில்லை. அசைவை அடக்க ரேசகம், கும்பகம், பூரகம் என்பவைகளில்
ஏதாவதொன்றை அனுசரித்து மனதை ஒருமுகப்படுத்துவதே பிராணாயாமம் எனப்படும்.
மனோவிருத்திகளை அடக்கி ஒரே விஷயத்தில் மனதை நிறுத்தி அப்யசிப்பதே யோகமெனப்படும்.
இவைகளைத் தவிர வேறு அப்யாசங்களும் உண்டு. அதாவது நாசி நுனியிலோ அல்லது 12 அங்குலத்திற்கு
அப்பாலோ அல்லது புருவ மத்தியிலோ பார்வையை நிறுத்தி, மனதையும்
அப்பார்வையிலே செலுத்துவது. எவ்வித அப்யாசமாயினும் மனதை வசப்படுத்துவதில்
கண்ணாயிருக்க வேண்டும்.
ஞானமார்க்கம்
வசிஷ்:
ஆதியும்,
அந்தமும்
இல்லாத ஆத்மாவொன்றுதான் சத்தியம். இதுவே பிரபஞ்சம் முழுவதும் வியாபித்தும், ஆதரித்தும் வருகிறது
என்ற நிச்சயம் மனதில் ஏற்பட்டு, அதை எப்பொழுதும் சாதகம் செய்து வருவதே ஞானமார்க்கமாகும்.
எந்தக்காரியத்தைச் செய்வதற்கு முன்பும், அல்லது எந்த எண்ணம் மனதில் உதித்தாலும், அந்தக்கணமே அது எதற்காக, எவ்விதம், யார் பொருட்டுச் செய்யப்படுகிறது என்ற விசாரணையைச் செய்து, இவைகளுக்கெல்லாம்
சாட்சியாய் நிற்கும் அறிவின் உணர்ச்சிகளே என்பதை உணர்ந்து வருவதே ஞான சாதனமாகும். ஆகையால் இந்தச் சாதனம் சும்மாயிருக்கும்போது
மாத்திரம் செய்யப்படுகின்ற அப்பியாசமல்ல, எப்பொழுதும் செய்யப்பட வேண்டியதாகும். எதை செய்த
போதிலும் விசாரணை செய்த பின்னரே, அதைத் தொடர வேண்டும். இப்படிப் பயின்று வந்தால், நாளடைவில் மனம்
ஆத்மாவை நோக்கியே செல்லும். இதனால் காரியங்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படலாம் என்ற
பயமே வேண்டியதில்லை. காரியம் இன்னும் நன்றாக நடைபெறுவதோடு கூட, அதனால் ஏற்படும்
பலன்களில் பற்றுதலும் குறைந்துவிடும்.
ஞானிகளும், ஜீவன்முக்தர்களும் சதா
இவ்வாராய்ச்சியைச் செய்துகொண்டே இருப்பார்கள். ஏனெனில் அப்படிச் செய்வதாலேதான்
மனம் மறுபடியும் உலக வியவகாரங்களுக்கு நழுவாமலிருக்கும். எப்பொழுதும் செய்து கொண்டிருப்பதே ஞானத்திற்கு ஊன்றுகோலாகும்.
வெறும் ஆராய்ச்சி செய்வதாலேயே ஞானமடையலாம் என்பதற்கு இன்னொரு திருஷ்டாந்தமும் உண்டு.
விந்தியமலைச்
சார்பில் ஒரு காலத்தில் வசித்து வந்த வீதஹவ்யன் என்ற முனிவர், சாஸ்திரங்களைப்
படித்தும், கர்மானுஷ்டாங்களைச்
செய்தும்,
வெகு காலம்
ஞானம் உதயமாகாததைக் கண்டு மேலும் இவைகளைக் குறித்து ஆராய்ச்சி செய்யலானார். இதன்
முடிவாகக் கர்மங்களுக்கு ஓய்வில்லை என்றும் ஞானத்தை அடைய ஆராய்ச்சியால்தான்
முடியும் என்றும் தீர்மானித்து, அந்த மார்க்கத்தையே கடைப்பிடித்துச் சில காலத்தில்
பலனையும் கண்டார். இந்தப் பக்குவமான நிலையில் ஒரு நாள், நிர்விகல்ப சமாதியை
அடைய எண்ணி, பர்ணசாலையில்
உட்புகுந்து, பத்மாசனத்தில்
அமர்ந்து,
கண்களை மூடிக்
கொஞ்ச நேரம் மனதை அடக்கிப் பிறகு, பின்வருமாறு ஆலோசிக்கலானார்.
கர்மங்களெல்லாம்
இந்திரியங்களால் செய்யப்படுகின்றன. இவ்விந்திரியங்களோ ஜடப்பொருட்களாக இருப்பதால்
இவைகளால் தன்னிச்சையாக யாதொன்றும் செய்ய முடியாது. வெளி வஸ்துக்களுக்கும்
இவைகளுக்கும் என்ன சம்பந்தம்? ஒரு பொருளைக் கண்களால் பார்க்கும்பொழுது, கண் அனுபவிப்பது
ஒன்றுமில்லை. கண் கண்ணாகவும் பதார்த்தம் பதார்த்தமாகவுமே இருக்கின்றன.
இவ்விரண்டையும் பிணைத்த சம்பந்தம், பார்வையால் ஏற்படும் அனுபவம் ஆகியவைகளுக்கு காரணமாக எது இருக்கிறதோ அதனுடைய உதவியால்தான் கர்மங்கள்
நடைபெறுகின்றன. ஆகையால் பந்தம் இந்திரியங்களால் ஏற்பட முடியாது.
பந்தம்
மனதாலும் ஏற்படுவதில்லை
பிறகு மனதைப்
பற்றிக் கவனித்தால், இது குரங்கைப்
போல சதா சஞ்சலத்திலேயே கண்ணாயிருக்கிறது. இதற்கேற்ப பஞ்ச இந்திரியங்களின்
சகவாசமும் ஏற்பட்டுள்ளது. அவைகளை ஒட்டிப் பதார்த்தங்கள்மேல் இச்சை வைத்து
வருத்தத்தைத் தேடிக்கொள்கிறது. பிச்சைக்காரன் வீடுவீடாகப் போய்க் கெஞ்சுவது போல்.
சுகத்தை அடைவதாக எண்ணி ஒவ்வொரு பதார்த்தமாகப் பார்த்து வருகிறது. கடைசியில் அடைவது
என்னமோ துக்கம் மட்டும்தான். ஜட பதார்த்தங்களோடு கூடி இருப்பதும் ஜடம்தானே. ஆனால் மனம்
தானே எல்லாம் செய்வதாகவும் அடைவதாகவும் நினைத்துக் கொள்கிறது. ஜடத்தன்மையை
உடையவற்றிற்கு செயலும், போகமும் ஏது? ஜடப்பொருட்கள் அநித்தியம், அசத்தியம். ஒருகணம்
தோன்றி மறுகணமே அழிகின்றவைகளுக்கு இருத்தல் என்ற தன்மை ஏது? ஆகையால் இவைகளெல்லாம்
தோற்றங்களே, இல்லாதவைகளேயாகும்.
இந்த மனமும் அதேமாதிரி இல்லாததே. இல்லாதது கர்த்தாவாகவும், போக்தாவாகவும் எப்படி
இருக்கமுடியும்? இத்தன்மைகள்
சர்வ வியாபியாகயிருக்கும் பிரம்மத்துக்கே உரியதாகும். பிரம்மத்திற்கும் மனதிற்கும்
உறவு இருக்க முடியாது. ஏனெனில் சமஜாதி அல்லது சமநிலைமையில் இருப்பவர்களுக்குத்தான்
உறவும்,
பகையும்
ஏற்படும். சூட்சுமமாயிருக்கும் பிரம்மத்துக்கும் ஜடமாகிய மனதிற்கும் இந்த
சம்பந்தங்களே இருக்காது. கண் ஒருபொருளைப் பார்க்கும்பொழுது அவ்விரண்டிற்கும் என்ன
சம்பந்தம்? மூக்குக்கும்
மலரின் வாசனைக்கும் என்ன சம்பந்தம்? அதேமாதிரி ஜடப்பொருட்களையே பின்பற்றும் மனதிற்கும்
சூட்சுமமான பிரம்மத்துக்கும் யாதொரு சம்பந்தமும் இருக்க முடியாது. அகங்காரமாகிய
மோகத்தால்தான் மனம் தன்னைச் சித்தாகப் பாவித்துக் கொள்கிறது. அது சித்தாக இருந்தால், அது எல்லாமுமாக இருக்க
வேண்டும். நான், நீயென்ற
வித்தியாசங்களை உணரக்கூடாது. உற்பத்தி, நாசம் ஆகியவற்றிற்கும் உட்படக்கூடாது.
மனதை ஜடமாகப்
பாவித்தால் அதற்குக் கர்த்தா, போக்தா என்ற தன்மைகள் கிடையாது. அப்படியின்றி ஜடபாவனைகளை
விட்டு ஆத்மாவை அடைந்தால், அப்பொழுதும் அதற்குக் கர்த்தா, போக்தா என்ற தன்மைகள்
பொருந்தாது. ஏனெனில் அப்பொழுது அதுவே எல்லாமுமாகவும் ஒன்றாகவும் இருக்கின்றது.
ஒன்று என்பதில் கர்த்தா-காரியம் என்ற இரட்டை பாவம் எப்படிப் பொருந்தும்? ஆகவே இவைகள் ஜடமாகிய
வஸ்துக்களிலாவது அல்லது ஆத்மாவாகிய சத்தியத்திலாவது பொருந்தாது. இரண்டு என்ற
பாவனையால் ஏற்படும் தோற்றங்களே ஜடப்பொருட்களாகும்.
இவ்வாறு
தீர்க்க ஆலோசனையில் வெகுகாலம் இருந்த பிறகு வீதஹவ்யனுக்கு பரிபூரண ஞானம்
ஏற்பட்டது. இந்த நிலையில் உறுதியாக இருந்து கொண்டு தன் இந்திரியங்களையும், மனதையும் நோக்கி தனக்குத்தானே
பின்வருமாறு சொல்லிக்கொண்டான்.
உங்களை நான்
இப்பொழுது நன்கு அறிந்து கொண்டேன். இவ்வளவு காலம் உங்களால் நான் ஏமாற்றப்பட்டேன்.
இப்பொழுது எனக்கு அறிவு ஏற்பட்டது. விபரீதமான புத்தி இவ்வளவு காலம் என்னிடத்து
நிலை நின்ற காரணம் உங்களை ஆத்மாவென்று நினைத்ததே. வாஸ்தவத்தில் நீங்கள்
இல்லாதவர்கள், ஆகவே எப்படி
ஆத்மாவாக இருக்கமுடியும்? ஆகையால் நீங்கள் போகலாம். உங்கள் சகவாசம் போதும்.
நீங்கள் நாசமானால் எல்லோருக்கும் நலம், உங்களுக்கும் நலம். ஏனெனில் உங்களுடைய இல்லாமைதான்
ஆத்மாவின் சொரூபம். ஆகையால் உங்களுக்கும் மோட்சகதி ஏற்படும்.
கால-தேசக்
கிரமங்கள் மனதில் அடங்கியவை
வசிஷ்: காலம், தேசம் இரண்டும்
நம்முடைய உணர்ச்சிகள். தன்னுடைய தற்காலத்துத் தன்மையாகவே கால தேசங்களை மனம்
உணருகின்றது. இவையிரண்டும் மனோமாத்திர உணர்ச்சிகள். மனதை விட்டுத் தனி பிரமாணங்களல்ல. மனதின்
அசைவு எப்பொழுதும் ஒரேமாதிரி இருப்பதில்லை. ஒரு சமயத்தில் வெகு நிதானமாகவும்
மற்றச் சமயங்களில் வெகு துரிதமாகவும், ஒருகணம் வெகு சிறிய பிரதேசத்தில் அடங்கியபடியும், வேறுகணம் பூமி
முழுவதையும் அடக்கியபடியும், இப்படித் தன் இஷ்டப்படியெல்லாம் காலத்தையும் தேசத்தையும்
அனுபவித்து வருகிறது. ஆகையால் மனதின் வேகத்தைத் தழுவித்தான் காலம் ஒவ்வொரு கணமும்
நிர்ணயிக்கப்படுகிறது.
வீதஹவ்யனின்
மனத்தோற்றங்களைக் கவனிக்க, பூர்வ ஜன்மங்களில் இச்சைகளாகப் பாவிக்கப்பட்ட இந்திரப்
பதவி, சிவபக்த முனிவர் ஆகிய
எல்லாம் அனேக ஆயிர வருடங்களில் நடைபெறும் பாவனைகளாக இருந்தன. தற்சமயமிருக்கும் மனோ
நிலையில் இவைகள் வெகு சீக்கிரம் நடைபெறும் தோற்றங்களாகக் காணப்பட்டன. மேலும்
தேகத்தை அனுசரித்து நேரும் அனுபவங்களுக்குக் காலப் பிரமாணம் வேறு. அப்படியின்றி
அனுபவங்கள் மனோ மாத்திரமாக இருப்பின், அவை வெகு சொற்ப காலத்தில் ஏற்படும். மேலும் ஆயிர
வருடத்திய அனுபவங்களுக்கு அவைகள் நடைபெறும்பொழுது அவ்வளவு காலம்
வேண்டியிருப்பினும், தற்சமயம்
இவைகளை மனதில் சிந்திக்கும்பொழுது, வெகு சொல்ப காலத்தில் பூரணமாகக் காணலாம்.
ராமன்: வீதஹவ்யன்
ஜீவன்முக்தனாக இருந்தும் பந்தம், மோட்சம் என்ற நோக்கங்களை அடைந்ததேன்?
வசிஷ்: ராமா! உனக்குத்
திரும்பத் திரும்ப இந்த சந்தேகம் ஏற்படுவதேன்? வீதஹவ்யனின்
சிதாகாசத்தில் இந்த பாவங்கள் ஏது? உன்னுடைய சிதாகாசத்தில் கூட அவை ஏற்பட முடியாதே!
ஏனென்றால் அவைகள் அஸத் ரூபம். ஜகத் முழுதும் சித்மயமாக இருக்கும்போது சித்தால்
வேறொன்றை எவ்வாறு உணரமுடியும்? ஆனால் ஜகத் நோக்கம் ஏற்படும்போது, அதாவது சித்தானது மனம்
என்கின்ற நிலைக்கு இறங்கியதும், ஜீவன்முக்தன் தனக்கு புலப்படுபவைகளைக் காட்சிகளாகவே
உணருகின்றான். மற்றவர்களுக்கு இவைகள் உண்மையாகத் தோன்றிகிறது.
வீதஹவ்யன் தன்
தேக நிலையைக் கண்டதும் மறுபடியும் ஏன் இந்த உடலை அடைய எண்ணினான். அடுத்த கணம்
தனக்குத் தேகம் இருந்தாலும், இல்லாமல் போனாலும் எல்லாம் ஒன்றே என்ற எண்ணிக் கொண்டான்.
ஆகையால் இதை நாசம் செய்யும் பிரயத்தனம்தான் ஏன்? என்ற முடிவையடைந்து
தேகத்தை மீண்டும் அடைய முயற்சி செய்தான். இதன் பொருட்டுச் சூரியனையும், பிங்களனையும்
ஆசிரயித்து, தேகத்தினுள்ளே
புகுந்து அதை இயங்கச் செய்தான்.
ஞானமார்க்கம்
ஆனால்
ஞானமார்க்கத்தை அனுசரிப்பவர்களால் சொல்லப்படுவது வேறாகும். அதாவது ஆத்ம
தத்துவத்தில் சித்தத்தின் உற்பத்திக்குக் காரணம் வாசனையேயாகும். இவ்வாசனையைப் பற்றி, பெரியோர்களால்
சொல்லப்பட்டதைக் கேள்.
விசாரணை
செய்யாமல் ஒரு பதார்த்தத்தைப் பார்க்கும்போது மனதில் ஒரு பாவனை ஏற்படுகிறது.
இந்தப் பாவனை திடமானது, அது வாசனையாக நிற்கும். இவ்வாசனையின் காரணத்தால் பாவனை
தீவிரமாகி, உணர்ச்சி என்ற
ஸ்பந்தம் உணரப்படும். பிறகு வஸ்துவாக மாறி நிற்கும். ஆக ஒன்றுக்கொன்று காரணமாக
உணரப்படும் வஸ்துக்களுக்கு அதீனமாக இருக்கும் நிலையே மனம் என்று சொல்லப்படுகிறது.
ஆகவே இந்த மனமாக நிற்கின்ற நிலைக்கு விசாரணை செய்யாத தவறான பார்வையே காரணம், அதாவது அக்ஞானமே
காரணம். பிறப்பு-இறப்புக்கும் இந்த மனமேதான் காரணம். ஆகவே பாவனை, வாசனை இவ்விரண்டில்
ஏதாவது ஒன்று அழிந்தால் மற்றொன்று கூடவே அழிந்துவிடும். பாவனை ஏற்படாமல் வாசனை
ஏற்படமுடியாது. அல்லது வாசனை முற்றிலும் அழிந்தால் பாவனையும் ஏற்படக் காரணமில்லை.
எவன் உணர்ச்சி
என்னும் தன்மையில் ஈடுபடாமல் நிர்மலமான அறிவின் தன்மையில் இருக்கிறானோ அவனே
மனமற்றவனாவான். அவனே ஜீவன்முக்தனாவான். வறுக்கப்பட்ட விதைபோல் யாதொரு
கிளர்ச்சிக்கும் ஆதாரமில்லாதவனாவான். எக்காரியத்தைச் செய்தாலும் இயந்திரத்தைப் போல பாவனையின்றி
இருக்கின்ற நிலையே அந்த நிலையாகும். பாவனையின்றி இருக்கும் நிலையே அந்த நிலையாகும்.
இந்த வாசனை, பாவனை
இரண்டும் எள்ளும், எண்ணையும்
போலவும்,
விதையும்
மரமும் போலவும் ஒன்றுக்கொன்று காரணமாகும். ஆனால் உணர்ச்சியானது உணர்பவனின்றி
இருக்க முடியாது. உணர்பவனுடைய நோக்கமே உணர்ச்சியாகும். உணர்ச்சியே பிறகு
வஸ்துவாகும். ஆகையால் உணர்பவன்தான் வஸ்துவாகப் பிரதிபலிக்கின்றான். உணர்ச்சியின்
அழிவே வஸ்துவாகப் பிரதிபலிக்கின்றது. உணர்ச்சியின் அழிவே வஸ்து ஜாலங்களின்
நாசமாகும். உணர்பவனுடைய சங்கல்பமே உணர்ச்சியாகும். ஆகவே பதார்த்தமும், சங்கல்பமும் ஏற்படாத
நிலையில் அறிகிறவனும், அறியப்படும்
பொருளும்வெறும் அறிவாய், அதாவது ஒன்றாய் நிற்கும். ஆகையால் அறிவில் எது
தோன்றினாலும் அதை உடனே அழித்தால், பிறகு உணர்ச்சி ஜாலங்களே அதாவது சம்சாரமே ஏற்படாது.
இதுவே மோட்சத்திற்கு உபாயமாகும். ஆகையால் நீ உணர்ச்சியென்னும் தன்மையில்
இருந்துகொண்டு, ஒன்றையும்
உணராமல் இருப்பாயாக. உணர்ச்சியே இல்லாமலிருப்பது ஜடம், தமோ குணத்தால்
முழுவதும் ஆட்கொள்ளப்பட்ட நிலையாகும். ஆகையால் உணர்ச்சியேயின்றி இருத்தலாகாது.
ராமன்: அதாவது ஜடமற்ற
உணர்ச்சி ஏற்பட வேண்டுமென்றாகும். அது எப்படி முடியும்? ஏனெனில் உணர்ச்சியானது
ஜடம்.
உணர்ச்சியின்
தத்துவம்
வசிஷ்: உணர்ச்சியே
இல்லாமலிருக்க முடியாது. உறக்கத்தில் மட்டும்தான் இது ஏற்படலாம். உறக்கமே ஒரு ஜட
அவஸ்தையாகும். விழிப்பில் உணர்ச்சிகள் ஏற்பட்டுக்கொண்டேயிருக்க அவைகளை ஏற்றுக்
கொள்ளாமலிருப்பது, அதாவது
அவைகளால் யாதொரு வேறுபாடில்லாமல் தன் சுயநிலையில் இருப்பதே சேதனமான உணராமையாகும்.
வேறுபாடு அடையும்பொழுதுதான் மனம் இருப்பதாக அறிகிறோம். வேறுபாடு இல்லாமல்
இருந்தால் மனம் அழிந்து வெறும்அறிவாக நிற்பதைக் காண்போம். யோகிகளும், ஞானிகளும் அதாவது
ஜீவன்முக்தர்கள் இந்நிலையில்தான் இருக்கிறார்கள். பட்டுப்பூச்சி தானே தன் வலையில்
சிக்கிக்கொள்வதுபோல் அறிவானது அறியும் தன்மையில் ஈடுபட்டுக்கொண்டு, பதார்த்தங்களாக
விஸ்தரித்து, சம்சாரத்தில்
சிக்கிக் கொண்டு, திண்டாடிக்
கடைசியில் துயரங்களால் அறிவையடைந்து மறுபடியும் பூர்வ அறிவு நிலையை அதாவது
மோட்சத்தை அடைகின்றது. எதிலிருந்து நழுவியதோ அதையே மறுபடியும் அடைகிறது. ஆகவே
பிரபஞ்சம் எல்லாம் அறிவைத் தவிர வேறல்ல. “நான்”, “நீ”, “பதார்த்தம்” என்னும் பாவனைகள்
எல்லாம்,
அறிவினுடைய
சங்கல்பங்களேயாகும். இந்தச்சங்கல்பமே பாவனை, வாசனை ஆகிய
இரண்டிற்கும் மூலகாரணமாகும்.
ஞானமார்க்கமே
உயர்ந்தது
வசிஷ்: இதுவரையில் அனேக
உபாயங்கள் சொல்லப்பட்டன. இவைகளில் யோகமார்க்கமும் ஞானமார்க்கமும் முக்கியமாகும்.
ஆனால் யோகமார்க்கம் நல்ல குரு உபதேசம் பெற்று, வெகுகாலம்
பிரயாசைப்பட்டு பழகி வந்தால் ஞானமார்க்கத்திற்கு உபாயமாகும். அந்த மார்க்கத்தால்
மாத்திரம் ஞானத்தை அடைய முடியாது. ஏனெனில் அது உணர்ச்சி சமுதாயத்தை ஒட்டியே
நிற்கின்றது. உணர்ச்சியில் ஈடுபட்டிருக்கும் வரை, ஞானம் எவ்விதம்
சித்திக்கும்? ஆகையால்
காலத்தை வீணாகக் கழிக்காமல் நேராக ஞானமார்க்கத்தையே அனுசரிப்பதுதான் நல்லது.
இந்த
ஞானமார்க்கத்தைக் கவனித்தால், வாசனையை ஒழிக்கும் முறையை மேற்கொள்வது தவறென தெரிய
வரும். மேருமலையை அசைத்தாலும் வாசனையைத் தனியாக அழிப்பது அசாத்தியம். எவ்வளவு
காலம் முயற்சி செய்தாலும் அதைச் செய்ய முடியாது. சித்தம்(மனம்) நசிக்காமல் வாசனை
போகாது. வாசனை போகாமல் சித்தம் அழியாது. ஆத்மா உணரப்படாமல் சித்தம் நசிப்பதில்லை, வாசனையும் அழிவதில்லை.
வாசனையும் சித்தமும் அழியாமல் ஆத்ம உணர்ச்சி ஏற்படுவதில்லை. ஆகவே மூன்றையும்
ஆசிரயித்து, பௌருஷத்துடனும், விவேகத்துடனும் முயற்சி
செய்து வந்தால் காலக்கிரமத்தில் ஆத்மஞானம் அடையப்படும். இதுவே எல்லாவற்றிற்கும் மேலான சுலபமான முறை. பலர்
இதைத்தான் அனுசரிக்க முடியும். இதற்கு மேலான மார்க்கம் உணர்ச்சிகளை நிரோதம் செய்து
வருவது. இதையும் வெகுகாலம் கிரமமாகவும் ஊக்கத்துடனும் பழகி வந்தால் பலனை அடையலாம்.
இதைவிட வெகு சீக்கிரம் ஆத்ம பதவியை அடைய சத்திய சாமான்ய ஸ்திதியை பௌருஷத்துடனும், யுக்தியுடனும்
அனுசரித்து வருவதாகும். இந்த சத்திய சாமான்ய ஸ்திதியின் எல்லையாகிய 'கேவலம் இருத்தல்"
என்ற தன்மையை ஒரு கண நேரமாவது விவேகத்தால் அடைந்தால், ஆத்மபதவி உடனே
சித்திக்கும்.
மனிதனாகப்
பிறந்து கொஞ்சமாவது ஆத்ம விசாரணையில் ஈடுபடாமலும் சேதனம் என்பதைக் கொஞ்சமாவது
அடக்கிப் பழகாமலும் இருந்தால் அந்த ஜன்மம் வியர்த்தமே. ஆசாபாசங்களில் கொஞ்சமாவது
வைராக்கியம் ஏற்படாமலிருந்தாலும் அந்த ஜன்மம் வீணாகும். இவைகளால் திரும்பித்
திரும்பி ஜன்மமெடுத்து துக்க சாகரத்தில் மூழ்கிக் கிடக்க வேண்டும்.
விவேகிகளாக
இருப்பவர்கள் மேற்சொல்லிய மார்க்கங்களில் ஏதாவதொன்றை அனுசரித்துக் காலக்கிரமத்தில்
ஞானத்தை அடைந்து பிறகு சுகத்தை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். ஞானமே பலம், ஞானமே சுபம், ஞானவானே தைரியசாலி, ஞானவானே மனிதன், மற்றவர்களெல்லாம்
பசுவிற்குச் சமானம். ஆகையால் நீயும் ஞானியாகக் கடவது. ஞானம் என்பது சம்பந்தம், அதாவது அறிகிறவன்
அறியப்படுவதில் லயமாவதாகும். இதுவே பந்தமுமாகும். இங்கே இரண்டு என்ற பாவம்
பந்தத்திற்குக் காரணம், ஒன்று என்ற பாவம் மோட்சத்திற்கு உபாயமாகும். இவ்வித
ஐக்கியமின்றி ஞானமும் ஏற்படாது. பந்தமும் ஏற்படாது. இந்த இரண்டிலுமுள்ள
வித்தியாசம் என்னவென்றால் ஒரு நிலையில் பற்றுதலில்லாமலும், மற்றொரு நிலையில்
பற்றுதலோடு கூடியும் இருப்பதே.
ஆகையால் நீ
இனி உன் வாழ்நாட்களை நடத்த வேண்டிய முறையாவது, மனதை சஞ்சலமற்றதாக
வைத்துக்கொண்டு எந்த கர்மத்திலும், விஷயத்திலும் உன் கவனத்தை செலுத்தாமல், ஆனால் யதேச்சையாக
ஏற்படும் கர்மங்களைப் பற்றுதலின்றிச் சரிவரச் செய்தும், பிறகு எவ்வித
சுகத்திலும், துக்கத்திலும், ஆபத்திலும், சௌகரியத்திலும் மனம்
கலங்காமல் 'நான் ஆத்மா"
என்ற நிச்சயத்தை நழுவ விடாமல் ஸ்திரமாகவும், சமமாகவும், மௌனமாகவும் இருக்க
வேண்டும். இவ்வாறு இருந்தால் நீ ஜீவன்முக்தன் ஆவாய்.
உபசமன பிரகரணம் முற்றும்.