Showing posts with label உத்தவ கீதை-17. Show all posts
Showing posts with label உத்தவ கீதை-17. Show all posts

Friday, September 15, 2017

Uddhava Gita - Chapter-17

அத்தியாயம்-17
திதிக்ஷாவின் பெருமையும், முக்கியத்துவம்
ஸ்வாமி குருபரானந்தாவின் உபதேச விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது-23-02-2022

ஶ்ரீபா3த3ராணிருவாச
ஸ ஏவமாஶம்ஸித உத்தவேன பா4க3வதமுக்2யேன தா3ஶார்ஹமுக்2ய: |
ஸபா4ஜயன்ப்4ருத்யவசோ முகுந்த3ஸ்தமாப3பா4ஷே ஶ்ரவணீயவீர்ய: || 1  |
பாகவத முக்யேன் – உத்தமமான பக்தனான
ஸ ஏவம் அஶம்ஸிதஹ – உத்தவரால் இவ்வாறு பிரார்த்திக்கப்பட்டதும்
யது குலத்தில் மேலானவராக இருக்கின்ற கிருஷ்ண பகவான் உத்தவருடைய உயர்ந்த, சிறப்பான கேள்வியை பாராட்டி, அங்கீகரித்து அவருக்கு பதிலளித்தார்.
ஶ்ரவனீய வீர்யஹ – பகவானைப் பற்றியும், அவரது வார்த்தைகளையும் கேட்க தகுந்தவைகள்

ஶ்ரீபகவானுவாச
பார்ஹஸ்பத்ய ஸ நாஸ்த்யத்ர ஸாது4ர்வைது3ர்ஜனேரிதை: |
து3ரக்தைர்பி4ன்னமாத்மானம் ய: ஸமாதா4துமீஶ்வர: || 2 ||
பகவான் கிருஷ்ணர் கூறுகிறார்.
பிரஜாபதியின் சீடனான உத்தவா! தீயமனிதர்களால் அவமதிக்கப்பட்ட சொற்களாலும், நடத்தைகளாலும் உடைந்த, தாக்கப்பட்ட மனதை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரும் சக்தியுடைய சாதுவை இந்த உலகத்தில் பார்ப்பது மிகவும் அரிது.

ந ததா2 தப்யதே வித்3த4: புமான்பா3ணைஸ்து மர்மகை3: |
யதா2 துத3ந்தி மர்மஸ்தா2 ஹ்யஸ்தாம் புருஷேஷவ: || 3 ||
உடலில் அதிக வலி கொடுக்ககூடிய இடத்தில் எய்த அம்பு கொடுக்கும் வலியை விட யாராவது சுடு வார்த்தைகளால் திட்டினால் அதனால் மனதில் ஏற்படும் வலியானது அதிகமாக இருக்கும்.
தீயினால் சுட்ட புண் உள்ளாறுமே ஆறாது நாவினால் சுட்ட வடு.என்ற வள்ளுவரின் வாக்கை இதனுடன் ஒப்பிட்டு பார்த்து மேலும் விளக்கம் பெறலாம்..

கதயந்தி மஹத்புண்யமிதிஹாஸமிஹோத்4த4வ |
தமஹம் வர்ணயிஶ்யாமி நிபோ3த4 ஸுஸமாஹித: || 4 ||
உத்தவா! இதை பற்றிய ஒரு கதை இருக்கின்றது.  மேலான, சிறந்த இதிகாசம் அது. ஒருவனுடைய புண்ணியமான கதையை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.  அந்தக் கதையை நான் உனக்கு சொல்லப்போகின்றேன்.  ஒருமுகப்படுத்தப்பட்ட மனதுடன் கேட்டு பயனடைவாயாக.

கேனசித்3பி4க்ஷுணா கீ3தம் பரிபூதேன து3ர்ஜனை: |
ஸ்மரதா த்4ருதியுக்தேன விபாகம் நிஜகர்மணாம் || 5 ||
யாரோ ஒரு சந்நியாசியைப் போன்ற ஒருவரால் உபதேசிக்கப்பட்ட கருத்து இருக்கிறது. அவன் எப்படி இருந்து பிறகு சந்நியாசியாக உயர்ந்தான் என்பதையும் சொல்கிறேன்.  தீய ஜனங்களால் தாக்கப்பட்டு கொண்டிருந்தவரைப் பற்றி சொல்கிறேன்.  இந்த அனுபவங்கள் கொடுக்கும் அறிவைக் கொண்டும், உறுதியான மனதைக் கொண்டும் எப்படி தாங்கிக் கொண்டான் என்பதையும், பிராரப்த பலனை எப்படி அனுபவித்தான் என்பதையும் கூறுகிறேன்.  நம்மை சுற்றியிருப்பவர்கள் நம்மை சரியாக புரிந்து கொள்ளாமல் இருப்பார்கள்.  தன்னுடைய பிராரப்த பலனை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒரு பிக்ஷூவின் கதை இது.

விபாகம் – துக்கம்,
துக்கம் இரண்டு வகையாக இருக்கிறது அவைகள் 
1. பரிஹர்த்ய துக்கம் - பொறுமையுடன் அனுபவிக்க வேண்டும். நம்மாலே நீக்கி கொள்ளக்கூடிய துயரங்கள்
2.அபரிஹாரம் துக்கம் – சகித்துக் கொள்ள வேண்டியது. . நம்மாலோ நீக்க முடியாத துயரங்கள்.
த்ருதியுக்தேன – கர்மபலனை உறுதியான மனதுடன் சகித்துக் கொண்டு இருத்தல்
ஸ்மரதா – சாஸ்திரத்திலிருந்து அடைந்த அறிவுடன் இந்த நிலையை அனுபவித்துக் கொண்டிருத்தல்

இப்படிபட்ட சாதுவின் உபதேசத்தைக் கூறப்போகிறேன்.

அவந்திஷு த்3விஜ: கஶ்சிதா3ஸீதா3ட்4யதம: ஶ்ரியா |
வார்தாவ்ருத்தி: கத3ர்யஸ்து காமீ லுப்3தோ4திகோபன: || 6
அவந்தி என்கின்ற தேசத்தில் யாரோ ஒரு பிராமணன் இருந்தார்.  பெரும் செல்வந்தராக இருந்தார். இவர் வியாபாரம், விவசாயம் செய்து கொண்டிருந்தார்.  அதேசமயம் அவர் தன்னைச் சார்ந்தவர்களான மனைவி, பிள்ளைகளை, நல்லவர்களை, வேலைக்காரர்களை, விருந்தினரை துன்புறுத்திக் கொண்டிருந்தார். தேவதைகளையும் திட்டிக் கொண்டிருந்தார். மேலும் பேராசையுடையவராகவும், பொருளாசையுடையவராகவும், அதிக கோபக்காரனாகவும், விதவிதமான சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசைப்படுபவராகவும் வாழ்ந்து வந்தார்.

ஞாதயோ தித2யஸ்தஸ்ய வாங்மாத்ரேணாபி நார்சிதா: |
ஶூன்யாவஸத2 ஆத்மாபி காலே காமைரனர்சித: || 7 ||
இவர் உறவினர்களுக்கும், விருந்தினர்களுக்கும் எந்தவிதத்திலும் உதவியும் செய்யவில்லை, நன்மையும் செய்யவில்லை.  நல்ல வார்த்தைகளை கூறி உபசரிக்கவுமில்லை.  இவன் வசிக்கும் இடம் சூன்யமாக இருந்தது. லட்சுமிகரமாக இல்லை, களையாக இல்லை.  தன்னுடைய மகிழ்ச்சிக்காக எதையும் கொடுக்கவில்லை, தானும் மகிழ்ந்திருக்கவில்லை.

து3ஹஶீலஸ்ய கத3ர்யஸ்ய த்3ருஹ்யந்தே புத்ரபா3ந்த4வா: |
தா3ரா து3ஹிதரோ ப்4ருத்யா விஷண்ணா நாசரன்ப்ரியம் || 8 ||
இவரது தீய குணத்தினால் எல்லோரையும் இம்சைப் படுத்திக் கொண்டிருந்ததால் இவரது பிள்ளைகள், மனைவி, உறவினர்கள் அவரிடம் வெறுப்பைத்தான் காட்டிக் கொண்டு இருந்தார்கள்.  அன்பை கொடுக்கவில்லை, வெறுத்தார்கள்.  மனைவியும் மகன்களும், வேலையாட்களும் இவனால் வேதனை அடைந்தவர்களாக இருப்பதால் அவர்களும் இவனிடத்தில் அன்பாக நடந்து கொள்ளவில்லை.

தஸ்யைவம் யக்ஷவித்தஸ்ய ச்யுதஸ்யோப4யலோகத: |
த4ர்மகாமவிஹீனஸ்ய சுக்ருது4: பஞ்சபா4கி3ன: || 9 ||
அவன் தான் சேர்த்த பணத்தை பூதத்தைப்போன்று பாதுகாத்து கொண்டிருந்தான்.  அதில் மட்டும் மகிழ்ச்சியாக இருந்தான். இகலோகத்தில் அன்பையும், இன்பத்தையும், பரலோக இன்பத்தையும் இழந்தவனாக இருந்தான்.  தர்மமும், பற்றற்ற மனநிலையும் இவனிடத்தில் இல்லாததால் இந்த நிலையை அடைந்திருந்தான்.  ஐந்து பேர்களுடைய அன்பையும், ஆசிர்வாதத்தையும், இழந்தவன். அவர்களுடைய வெறுப்பை மட்டும் பெற்றுக் கொண்டிருந்தான். ஐந்து பேர்கள் என்பது இறைவன், ரிஷிகள், பித்ருக்கள், மனிதர்கள், விலங்குகள்-பறவைகள் ஆகியவர்களாகும்
யக்ஷவித்தன் - கருமி

தத3வத்4யானவிஸ்ரஸ்த புண்யஸ்கந்த4ஸ்ய பூ4ரித3 |
அர்தே2ப்யகச்ச2ன்னித4னம் ப3ஹவாயாஸபரிஶ்ரம: || 10 ||
அதிக தானங்கள் செய்து கொண்டிருக்கின்ற உத்தவா! 
இவன் ஐந்து தேவதைகளையும் மதிக்காததால், அவர்களுக்கு செய்ய வேண்டிய கர்மங்களை செய்யாததால், புண்ணியத்தை இழந்து விடுகிறான்.  இவனிடமிருந்த செல்வங்களும் கூட சென்று விட்டது.  மனைவி, மக்கள், உறவினர்களும் விட்டுவிட்டு சென்றுவிட்டார்கள். ஆனால் கஷ்டங்கள் மட்டும் இருந்து கொண்டிருந்தது.

ஞாத்யோ ஜக்3ருஹு: கிஞ்சித்கிஞ்சித்3த3ஸ்யவ உத்தவ |
தை3வத: காலத: கிஞ்சித்3ப்3ரஹ்மப3ந்தோ4ர்ந்ருபார்தி2வாத் || 11 ||
உறவினர்களால் கொஞ்சம் கொஞ்சமாக செல்வமும் களவாடப்பட்டுவிட்டது.  திருடர்களால் கொஞ்சம் திருடப்பட்டுவிட்டது.  இயற்கையாக கொஞ்சம் அழிந்துவிட்டது.  காலத்தை சரியாக பயன்படுத்தாத காரணத்தால் சிறிது அழிந்துவிட்டது.  மீதியுள்ள செல்வங்களை அரசாங்கத்தாலும், மற்றவர்களாலும் எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஸ ஏவம் த்3ரவிணே நஷ்டே த4ர்மகாமவிவர்ஜித: |
உபேக்ஷிதஶ்ச ஸ்வஜனைஶ்சிந்தாமாப து3ரத்யயாம் || 12 ||
அவனிடமிருந்து இவ்வாறெல்லாம் செல்வம் கரைந்தவுடன் இன்பமும், தர்மமும் அவனை விட்டு சென்று விட்டன.  சுற்றியிருக்கின்ற உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் இவனை விட்டு விலகிவிட்டார்கள்.  இந்த நிலையில் தாங்கமுடியாத வேதனையில் ஆழ்ந்துவிட்டான்.

தஸ்யைவம் த்4யாயதோ தீர்க4ம் நஷ்டராயஸ்தபஸ்வின: |
கி2த்3யதோ பா3ஷ்பகண்ட2ஸ்ய நிர்வேத3: ஸுமஹானபூ4த் || 13 ||
இவ்வாறு அதிக காலம் வேதனைப்பட்டு கொண்டிருந்த இவனுக்கு அதைப்பற்றியே சிந்தனையிலே இருந்து கொண்டிருந்தான்.  அனைத்து செல்வத்தையும் இழந்தவனாக இவன் தீராத துன்பத்தில் இருந்து கொண்டு சிந்திக்கலானான்.  ஆழ்மனதில் வேதனைப்பட்டூக் கொண்டு கண்ணீர் விட்டுகொண்டிருந்தான்.  குரல் ததும்ப ஆரம்பித்தது. பிறகு இவனுக்கு மிக உயர்ந்த விரக்தி ஏற்பட்டுவிட்டது.

ஸ சாஹேத3மஹோ கஷ்டம் ப்ருதா2த்மா மேனுதாபித: |
ந த4ர்மாய ந காமாய யஸ்யார்தா2யாஸ ஈத்3ருஶ: || 14 ||
அவன் இவ்விதம் தனக்குள் பேசிக் கொண்டான். அய்யோ! என்னுடைய ஆத்மா, உடல், மனம் எந்தவித பயனில்லாமல் வேதனைப்படுத்தப்பட்டது தர்மமும் செய்யவில்லை. எந்தவித  இன்பத்தையும் அனுபவிக்கவில்லை.  இப்படிப்பட்ட நிலையிலுள்ள நான் செல்வத்தை கஷ்டப்பட்டு சேர்த்து எதற்கும் பயனில்லாமல் கஷ்டங்களைத்தான் அனுபவித்தேன்.

ப்ராயேணாதா2: கத3ர்யாணாம் ந ஸுகா2ய கதா3சன |
இஹ சாத்மோபதாபாய ம்ருதஸ்ய நரகாய ச || 15 ||
பொதுவாக கருமிகளில் கையில் இருக்கின்ற செல்வம் அவர்களின் சுகத்திற்காகவும்,  இன்பத்திற்காகவும், பயன்படாது.  மற்றவர்களுக்கும் பயன்படாது.  இந்த லோகத்தில் இருக்கும்போது இந்த உடல் செல்வத்தின் வசத்தில் இருப்பதனால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும்.  இறந்தபிறகு நரகத்திற்குத்தான் செல்ல நேரிடும்.  இவ்வுலகத்தில் அந்த செல்வம் துயரத்தைத்தான் கொடுத்து கொண்டிருக்கும்.

யஶோ யஶஸ்வினாம் ஶுத்3த4ம் ஶ்லாக்4யா யே கு3ணினாம் கு3ணா: |
லோப4: ஸ்வல்போபி தான்ஹந்தி ஶ்வித்ரோ ரூபமிவேப்ஸிதம் || 16 ||
ஶுத்தம் யஶஹ – நேர்மையோடு அடைந்த புகழானது
ஶ்லாக்யா குணாஹா – நற்குணங்கள்
ஒருவனுக்கு தகுதியுடைய புகழிருந்தால் அதை லோபம் (பகிர்ந்து கொடுக்காத குணம் ) நாசம் செய்து விடும்.  நம்மிடத்தே உள்ள லோபமானது சிறிது வந்தாலும் கூட புகழையும், நற்பண்புகளையும் அழித்து விடும்.  தோலுக்கு வரும் நோயானது ஒருவனுடைய உடலழகை அழித்து விடுகின்றது போல இந்த லோபம் மற்றும் பணத்தின் மீது உள்ள ஆசை புகழையும், நற்குணத்தையும் அழித்துவிடும்.

அர்த2ஸ்ய ஸாத4னே ஸித்3தே4 உத்கர்ஷ ரக்ஷேணே வ்யயே |
நாஶோப்போ4க3 ஆயாஸஸ்த்ராஸ்ஶ்சிந்தா ப்4ரமோ ந்ருணாம் || 17 ||
பணத்தை சம்பாதித்துக் கொண்டிருக்க வேண்டும். பணம் வந்தடைந்தாலும் மேலும் மேலும் சம்பாதிக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும்.  சரியாக செலவு செய்தால் அழிந்து போகும், சுகத்தை அனுபவித்தலுக்கு பயன்படுத்த வேண்டும்.  இவ்வாறு பணத்தை அடைவதற்கு நன்றாக உழைக்க வேண்டும்.  இதனால் காலமும், உடல் நலமும் செலவழிந்து விடும். மேலும் தன்னை விட்டு போய்விடக்கூடாது என்ற பயமும் வந்து விடும்.  பணத்தையே நினைத்துக் கொண்டிருந்தால் அதனை பெருக்க வேண்டும் என்றும், பாதுகாக்க வேண்டும் என்றும் எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டிருப்பான்.  எப்படி செலவு செய்ய வேண்டும் என்று சிந்திக்க வைக்கும். இந்த பணம் ஒருவனுடைய புத்தியை செயல்பட விடாமல் மதிமயக்கத்தை கொடுத்து விடும். இவ்வாறெல்லாம் பணவிஷயத்தில் நிகழ்கின்றன.

ஸ்தேயம் ஹிம்ஸாந்ருதம் த3ம்ப4: காம: க்ரோத4: ஸ்மயோ மத3: |
பே4தோ3 வைரமவிஶ்வாஸ: ஸம்ஸ்பர்தா4 வ்யஸனானி ச || 18 ||
ஏதே பஞ்சத3ஶானர்தா2 ஹ்யர்த2மூலா மதா ந்ருணாம் |
தஸ்மாத3னர்த2மர்தா2க்2யம் ஶ்ரேயோர்தீ2 தூ3ரதஸ்த்யஜேத் || 19 ||
பணம் என்னென்ன காரியங்கள் செய்யும் என்பது கூறப்படுகிறது. இது பதினைந்து வகையான அசுர குணங்களை கொண்டு வந்து சேர்த்துவிடும். அவைகளில் ஆறு குணங்கள் பணத்தை அடைய வேண்டும் என்ற முயற்சிக்கும் போது வந்தடைவது. அடுத்த ஒன்பது குணங்கள் பணத்தை அடைந்த பிறகு அடையும் குணங்கள்.
பணம் சம்பாதிக்கும் முயற்சியில் உள்ளவர்களிடையே இருக்கும் அசுர குணங்கள்
1.       ஸ்தேயம் – திருடுதல், பிறருடைய பணத்தை, உழைப்பை, காலத்தை அபகரித்தல்
2.       ஹிம்சை – மற்றவர்களை துன்புறுத்தல்
3.       அநிருதம் – பொய்கூறுதல், ஏமாற்றுதல், நம்பிக்கை துரோகம் செய்தல்
4.       தம்பஹ – பணத்துக்காக நடித்தல், இல்லாததை இருப்பதாக காட்டுதல், இருப்பதை பெரிதுபடுத்திக் கூறுதல்
5.       காமஹ – ஆசை
6.       க்ரோதம் – கோபம்
பணம் வந்தபிறகு வந்து சேர்கின்ற குணங்கள்
1.       ஸ்மயஹ – உயர்வு மனப்பான்மை, மனதுக்குள் தன்னை உயர்வாக நினைத்துக் கொண்டு கர்வத்துடன் இருத்தல்
2.       மதஹ – மற்றவர்களை சொல்லாலும், செயலாலும் அவமதித்தல்
3.       பேதஹ – யாருடனும் ஒத்துப்போகாமல் இருத்தல், தான் நினைப்பதுதான் சரி என்ற ஆணவம், யாருடைய ஆலோசனையையும் கேட்காத குணம்
4.       வைரம் – பகைமையை வளர்த்துவிடும்
5.       அவிஶ்வாஸம் – நம்பிக்கையின்மையை வளர்த்துவிடும். யார் மீதும் நம்பிக்கை வைக்காத குணம்
6.       ஸம்ஸ்பர்தா – போட்டி, பந்தயம்
7.       மதுவுக்கு அடிமையாகி விடுதல்
8.       மாதுவுக்கு அடிமையாகி விடுதல்
9.       சூதுவுக்கு அடிமையாகி விடுதல்
மேற்கண்ட பதினைந்து தீய குணங்கள் பணத்தையே மூலமாக கொண்டுள்ளது. பணம் என்கின்ற ஒன்று தீமையைத்தான் கொடுக்கிறது. தனக்கு மேலான நன்மை வர வேண்டும் என்று விரும்புபவன் பணத்தை அடைய வேண்டும் என்ற ஆசையிலிருந்து வெகு தூரம் விலகி நிற்க வேண்டும். இது உடலாரோக்கியம், மன ஆரோக்கியம் இரண்டையும் கெடுத்துவிடும் தன்மையுடையது

பி4த்3யந்தே ப்4ராதரோ தா3ரா: பிதர: ஸுஹ்ருத3ஸ்ததா2 |
ஏகாஸ்னிக்3தா4: காகிணினா ஸத்3ய: ஸர்வேரய: க்ருதா: || 20 ||
பித்யந்தே – உடைந்துவிடும்
சகோதர, சகோதரிகள், மனைவி, பங்காளிகள், உறவினர்கள், நண்பர்கள் போன்ற உறவுகளிடத்தில் உள்ள அன்பை கெடுத்துவிடும்.  யாரோ ஒருவரிடத்தில் நல்ல நட்பு இருந்திருந்தாலும் அதுவும் செல்வம் கெடுத்துவிடும்.  சிறிதளவு பணமே இவ்வளவையும் செய்து விடும். விரைவிலேயே முன்சொல்லிய அனைவரும் பகைவர்களாகி விடுவார்கள்

அர்தே2னால்பீயஸா ஹயேதே ஸ்ம்ரப்3தா4 தீப்தமன்யவ: |
த்யஜந்த்யாஶு ஸ்ப்ருதோ4 க்3னந்தி ஸஹஸோத்ஸ்ருஜ்ய ஸௌஹ்ருதம் || 21 ||
அதிகமான செல்வம் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். நாமே பகைவர்களை உருவாக்கிக் கொள்வோம். சிறிதளவு பணமே சிலருக்கு நம் மீது கோபத்தை ஏற்படுத்திவிடும். எனென்றால் பணத்தினால் அவர்களுடைய மனதை புண்படுத்தி விடுவதால் இவ்வாறு நேரிடும்.  அவர்களும் உடனே நம்முடைய அன்பை விட்டுவிட்டு பகைவர்களாக மாறி கொலை செய்யவும் துணிந்துவிடுவார்கள்.

லப்3த்4வா ஜன்மாமரப்ரார்த்2யம் மானுஷ்யம் தத்3த்3விஜாக்3ர்யதாம் |
தத3னாத்3த3த்ய யே ஸ்வார்த2ம் க்4னந்தி யாந்த்யஶுபா4ம் க3திம் || 22 ||
சரீரத்தின் மேன்மை புகழப்படுகிறது. 
அமர ப்ரார்தயம் – தேவர்களாலும் அடைய வேண்டும் என்று விரும்பப்படுகின்ற
ஜன்ம மானுஷ்யம் லப்த்வா – மனித உடலை அடைந்து
தத் த்விஜாக்ர்யதாம் – ஒரு பிராமண குலத்தில் பிறந்தும்
ஸ்வார்தம் தத் அனாத்3த3த்ய – மனித சரீரத்தினால் மட்டும் அடையக்கூடிய லட்சியத்தை அடையும் முயற்சி செய்யாமல்
யே ஸ்வார்த2ம் க்னந்தி – அந்த லட்சியத்தை கொலை செய்துவிட்டு,
யாந்த்யஸுபாம் கதிம் – இகலோகத்திலும், பரலோகத்திலும் துயரமான நிலையையே அடைகிறார்கள்

ஸ்வர்கா3பவர்க3யோத்3வாரம் ப்ராப்ய லோகமிமம் புமான் |
த்ரவிணே கோ னுஷஜ்ஜேத மர்த்யோனர்த2ஸ்ய தா4மனி || 23 ||
ஸ்வர்காபர்கய்த்வாரம் – தர்மத்தை பின்பற்றி வாழ்வதால் கிடைக்கும் புண்ணியத்தால் சொர்க்கத்திற்கும், மோட்சத்திற்கும் வாயிலாக இருக்கின்ற
இமம் லோக ப்ராப்ய – இந்த உலகத்தில் மனிதப்பிறவி அடைந்து, கர்மயோகப்படி வாழ்ந்து மோட்சத்தை அடைவதற்கு தகுதிஅடைகின்றனர்
அனர்த்தஸ்ய தாமனி – அழிவுக்கு இருப்பிடமாக இருக்கின்ற
த்ரவனே- பொருட்களுக்காக, பணத்துக்காக
நஹ அனுஷஜ்ஜேத – எந்தவொரு அறிவுடையவன் பணத்துக்காக சொர்க்கத்தையோ, மோட்சத்தையோ அடையும் வாய்ப்பை இழப்பான்

தே3வர்ஷிபித்ருபூ4தானி ஞாதீன்பந்தூ4ம்ஶ்ச பா4கி3ன: |
அஸம்விப4ஜ்ய சாத்மானம் யக்ஷவித்த: பதத்யத4: || 24 ||
எந்தவொரு மனிதனும் பஞ்சமகா யக்ஞத்துடன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். அவைகள்
1.       ஈஸ்வர வழிபாடு,
2.       ரிஷிவழிபாடு – ரிஷிகளின் நூல்களை படித்தல், அதன்படி வாழ்தல்,
3.       பித்ரு யக்ஞம் – நம்முடைய முன்னோர்களை வழிபடுதல்,
4.       பூதானி – மற்ற உயிரினங்களை போற்றுதல்,
5.       மனுஷ்ய யக்ஞம் – மனிதர்களை போற்றுதல்
இந்த ஐந்து பேர்களுக்கும் நாம் ஒவ்வொருவரும் கடன்பட்டிருக்கின்றோம்.  தனக்கு செய்ய வேண்டியவைகளை செய்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு செய்ய வேண்டியதை செய்யாமல், கொடுக்க வேண்டியதை கொடுக்காமல், பணத்தை சம்பாதித்துக் காப்பாற்றிக் கொண்டு வருபவன் கீழே விழுகின்றான், தாழ்ந்த நிலைக்கு சென்று விடுவான்.

வ்யர்த2யார்தே2ஹயா வித்தம் ப்ரமத்தஸ்ய வயோ ப3லம் |
குஶலா யேன ஸித்4யந்தி ஜரட2: கிம் நு ஸாத4யே || 25 ||
சில அறிவுடையவர்கள் மூன்றுவிதமான ஐஸ்வர்யங்களான செல்வம், வயது, சக்தி வைத்து பயன்படுத்தி நல்ல நிலையுடன் இருக்கின்றார்கள். என்னைப்போன்ற சிலர் இவைகளை இழந்து எதை சம்பாதிக்க முடியும். பணத்தின் மீதுள்ள ஆசையானது எனக்கு எந்தவிதத்திலும் உதவவில்லை.  இப்படிபட்ட பைத்தியக்காரனான நான் இந்த மூன்றையும் இழந்து விட்டேன்.  அளவுக்கு மீறி எதன் மீதும் பற்று வைக்கக்கூடாது.  அப்படி வைத்தால் அது நம்மை விட்டு சென்றுவிடும். அறிவுடையவர்கள் இந்த மூன்றின் துணைக் கொண்டு, மூன்றுவிதமான ஐஸ்வர்யங்களை பயன்படுத்தி சாதிக்கின்றார்கள், நல்ல நிலையை அடைகிறார்கள்.  வயோதிகனான எனக்கு இந்த மூன்று நிலைகளும் இப்போது கிடையாது. என்னால் எதை அடைய முடியும்?

கஸ்மாத்ஸங்க்லிஶ்யதே வித்3வான்வ்யர்த2யார்தே2ஹயாஸக்ருத் |
கஸ்யசின்மாயயா நூனம் லோகோயம் ஸுவிமோஹித: || 26 ||
செல்வத்தால் சுகம் வருவதில்லை.  ஒருவனுடைய இன்ப-துன்பத்திற்கு பணம் காரணமில்லை. இது மனநிறைவுக்கும் காரணமில்லை.  இதை மற்றவர்களிடம் பார்த்துக் கொண்டிருந்தாலும் அனைவரும் பணத்தை அடைய வேண்டும் என்று தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.  இந்த மோகத்துக் காரணம் பகவானுடைய மாயைதான்.  யாரை சரணடைந்தால் இந்த மோகத்திலிருந்து விடுபட முடியுமோ அவரை சரணடையாமல் செல்வத்தினால் பாதுகாப்பையும், சுகத்தையும் அடையலாம் என்று எண்ணிக் கொண்டு அதை அடைய பேராசைப்படுகிறார்கள்.  படித்தவர்கள் கூட பணத்தின் மீது பற்று வைத்து அதை அடைவதற்கு மிகவும் கஷ்டத்துடன் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.  பணத்தின் மீதுள்ள பேராசையினால் எந்த பலனும் கிடைக்காது என்று தெரிந்திருந்தும் அதையே மீண்டும் மீண்டும் நாடிக் கொண்டிருக்கிறார்கள்.  கண்டிப்பாக (நூனம்) யாரோ ஒருவனுடைய மாயையினால் இந்த உலகம் மோகத்துள்ளாக்கப்பட்டிருக்கிறது.

கிம் த4னைர்த4தனதை3ர்வா கிம் காமைர்வா காமதைருத |
ம்ருத்யுனா க்3ரஸ்யமானஸ்ய கர்மபி4ர்வோத ஜன்மதை: || 27 ||
கிம் த4னைஹி – பணத்தினால் என்ன பலன்? அது வந்தாலும், வராவிட்டாலும் எனக்கென்ன?
தனைஹி வா கிம் – பணத்தைக் கொடுப்பவனாக இருந்தாலும் என்ன பயன்?
காமை வா காமதைஹி வா – இன்பத்தைக் கொடுக்கும் பொருளினால் என்ன பயன்?
இன்பத்தைக் கொடுக்கும் மனிதர்களால் என்ன பயன்?
ம்ருத்யுனா க்ரஸ்யமானஸ்ய – இவைகளனைத்தும் மரணத்தின் பிடியில் இருக்கின்றது.
கர்மபிஹி உத ஜன்மதைஹி- நாம் செய்யும் தர்ம செயல்களனைத்தும் புண்ணியத்தைக் கொடுக்கும், அதனால் என்ன பயன்? பிறப்பு, இறப்பு காரணமாக இருக்கின்ற புண்ணிய கர்மங்களால் பயனொன்றுமில்லை.

நூனம் மே ப4க3வாம்ஸ்துஷ்ட: ஸர்வதே3வமயோ ஹரி: |
யேன நீதோ த3ஶாமேதாம் நிர்வேத3ஶ்சாத்மன: ப்லவ: || 28 ||
நூனம் மே பக்வாம் துஷ்டஹ – நிச்சயமாக பகவான் என்னிடம் மகிழ்ந்திருக்கிறார்
ஸர்வ தேவமயோ ஹரி: - எல்லா தேவதைகளாகவும் இருக்கின்ற ஸ்ரீஹரி பகவான்
யேன நீதய தஶாமேதாம் – என்மீது வைத்தன் அன்பினால்தான் நான் இந்த நிலைக்கு வந்திருக்கின்றேன்
நிர்வேதஶ்சாத்மனஹ ப்லவஹ – உலகிலுள்ள இன்பத்தைக் கொடுக்கின்ற பொருட்களின் மீதுள்ள வைராக்கியம்தான் ஜீவனுக்கு சம்சாரக் கடலை கடக்க உதவும் படகாகும்.

ஸோஹம் காலாவஶேஷேண ஶோஷயிஷ்யேங்க3மாத்மன: |
அப்ரமத்தோகி2லஸ்வார்தே2 யதி3 ஸ்யாத்ஸித்3த4 ஆத்மனி || 29 ||
ஸஹ அஹம் – இந்த நிலையை அடைந்த நான்
கால அவஶேஷேண – மீதியிருக்கின்ற காலத்தில்
யத் ஸ்யாத் – எனக்கு வாழும் காலமிருந்தால்
ஆத்மனி ஸித்3த4 – யாரையும் குறைகூறாமல் என்னிடத்திலே மகிழ்ச்சியுடன் இருப்பேன்
ஆத்மன அங்கம் – என்னுடைய மனதையும், உடலையும்
ஸோஷயிஷ்யே – தவத்தில் ஈடுபடுத்திக் கொள்வேன்
அப்ரமத்தஹ அகில ஸ்வார்த2 – இனிமேல் மிகவும் கவனமாக இருந்து கொண்டு 
ஸித்3த4 ஆத்மனி – என்னுடைய முக்கியமான புருஷார்த்தமான லட்சியத்தில் இருப்பேன்.

தத்ர மாமனுமோதே3ரந்த்3தேவாஸ்த்ரிபு4வனேஶ்வரா: |
முஹூர்தேன ப்3ரஹ்மலோகம் க2ட்வாங்க3: ஸமஸாத்4யத் || 30 ||
த்ரிபுவனேஶ்வரா தேவா – மூன்று உலகத்திலும் இருக்கும் ஈஸ்வரனும்,  தேவதைகளும்
தத்ர மாமனுமோதே3ரன் – இந்த நிலையிலுள்ள இந்த நேரத்தில் எனக்கு வழிகாட்டுவார்கள், உதவுவார்கள், அனுக்கிரஹம் செய்வார்கள்.
கத்வாங்கஹ – கட்வாங்கன் என்ற அரசன்
 ப்ரஹ்மலோமுஹுர்தேனகம் – குறுகிய காலத்தில் பிரம்மலோகத்தை
ஸமஸாத்4யத் – அடைந்து அங்கிருந்து கிரம முக்தி அடைந்தார்.
ஒரு முகூர்த்த காலத்திலே கட்வாங்க ராஜா மோட்சத்தை அடைந்ததைப் போன்று எனக்கிருக்கும் மீதியுள்ள காலத்தில் நானும் முயற்சி செய்து மோட்சத்தை அடைவேன் என்று தன்னம்பிக்கை அடைந்துள்ளார் என்று இதிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது.

ஶ்ரீபகவான் உவாச
இத்யபி4ப்ரேத்ய மனஸா ஹ்யாவந்த்யோ த்3விஜஸத்தம: |
உன்முச்ய ஹ்ருத3யக்3ரந்தீ2ன்ஶாந்தோ பி4க்ஷுரபூ4ன்முனி: || 31 ||
ஸ்ரீபகவான் கூறுகிறார்.
இதி அபிப்ரேத்ய மனஸா – இவ்விதம் மனதில் சிந்தனையை மேற்கொண்ட
அவந்த்ய த்விதஸத்தம– அவந்தி தேசத்தை சேர்ந்த உத்தமனான இந்த பிராமணன்
உன்முச்ய ஹ்ருத்3யக்ரந்தீ2 – இதயத்திலுள்ள முடிச்சுக்களான ராக-துவேஷங்களை முழுவதும் நீங்கப்பெற்று, அகங்காரம், மமகாரம் இவைகளெல்லாம் நீங்கப்பெற்று, சம்சாரத்தை கொடுக்கின்ற எண்ணங்கள் யாவையும் நீக்கிவிட்டு
ஶாந்தஹ – மனவமைதியை, மனநிறைவை அடைந்தவனாக
பிக்ஷுஹு அபூ4த் முனிஹி – சந்நியாஸ வாழ்க்கை முறையை ஏற்றுக் கொண்டான்.

ஸ சசார மஹீமேதாம் ஸம்யதாத்மேந்த்ரியானில: |
பி4க்ஷார்த2ம் நக3ரக்3ராமானஸங்கோலக்ஷிதோவிஶத் || 32 ||
சந்நியாசம் இருவகையாக இருக்கிறது. ஆத்மஞானத்தை அடைந்தபிறகு எடுத்துக் கொள்கின்ற சந்நியாசம், ஆத்மஞானத்தை அடைவதற்கு எடுத்துக் கொள்கின்ற சந்நியாசம்.

ஸஹ சார மஹீம் ஏதாம் – இந்த உலகத்தில் அந்த சந்நியாசி சஞ்சரித்துக் கொண்டு இருந்தார்.
ஸம்யத் ஆத்ம் இந்திரிய அனில – உடலையும், புலன்களையும், பிராணன்களையும் (உணவு கட்டுப்பாடு), தன்னுடைய கட்டுக்குள் வைத்துக் கொண்டு வாழ்ந்திருந்தான்
பிக்ஷார்தம் நகர கிராமன் – நகரத்துக்கும், கிராமத்துக்கும் உணவுக்காகத்தான் சென்றான்
அஸங்கஹ – எதனோடும், யாரோடும் பற்றில்லாமல் இருந்து கொண்டு
அலக்ஷிதஹ – யாரையும் கண்டுகொள்ளாமல் அலட்சியத்துடனும், யாருக்கும், எதற்கும் முக்கியத்துவம் கொடுக்காத நிலையில் இருந்து கொண்டு, தன்னை யாரென்று காட்டிக் கொள்ளாமல் இருந்து கொண்டு
அவிஶதஹ – மக்களிடைய சஞ்சரித்துக் கொண்டிருந்தார்.

தம் வை ப்ரவயஸம் பி4க்ஷுமவதூ4தமஸஜ்ஜனா: |
த்3ருஷ்ட்வா பர்யப4வன்ப4த்3ர ப3ஹுவீபி4: பரிபூ4திபி4: || 33 ||
நம்மை பலர் அவமதிப்பதற்கு காரணம் நாம் ஏதாவது ஒரு தவறு செய்து இருக்கின்றோமா என்று சுயபரிசோதனை செய்ய வேண்டும்.  நம்முடைய தவறாக  இருந்தால் அதை  திருத்திக் கொள்ளவேண்டுமே தவிர அவர் மீது கோபமோ, எரிச்சலோ கொள்ளக் கூடாது. அதுவே நம்முடைய தவறல்ல என்று இருந்தால் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று இதில் கூறப்பட்டிருக்கிறது.

பர்யபவன்பத்ர – உத்தவா!
அஸத் ஜனாஹா – தீய மனிதர்கள், பண்பாடற்ற மக்கள், சந்நியாசியின் பெருமையை அறியாதவர்கள்
தம் வை ப்ரவயஸம் பிக்ஷு அவதூதம் - அந்த வயதான சாதுவான, சந்நியாசியை
த்ருஷ்ட்வா – பார்த்து
பஹுவீபி: பர்பூதிபி: - அவரை பலவிதமாக அவமதித்தனர், பரிகாசம் செய்தனர்.


கேசித் த்ரிவேணும் ஜக்3ருஹுரேகே பாத்ரம் கமண்டலும் |
பீட2ம் சைகே க்ஷஸூத்ரம் ச கந்தா2ம் சீராணி கேசன || 34 ||
சிலர் அவர் கையிலுள்ள தடியை பிடுங்கிக் கொண்டார்கள். அவரிடம் உள்ள பிக்ஷை பாத்திரத்தையும், கமண்டலத்தையும், உட்காருவதற்கு வைத்திருந்த இருக்கையையும், ஜபமாலையையும் பிடுங்கிக் கொண்டார்கள். அவரது கிழிந்த உடையை இழுத்து பிடித்து விளையாடினார்கள்

ப்ராதா3ய ச புனஸ்தானி த3ர்ஶிதான்யாத3 துர்முனே: |
அன்னம் ச பை4க்ஷ்யஸம்பன்னம் பு4ஞ்ஜானஸ்ய ஸரீத்தடே || 35 ||
மூத்ரயந்தி ச பாபிஷ்டா: ஷ்டீவந்த்யஸ்ய ச மூர்த4னி |
யத்வாசம் வாசயந்தி தாட்3யந்தி ந வக்தி சேத் ||| 36 ||
அவரிடமிருந்து பிடுங்கியவற்றையெல்லாம் மீண்டும் கொடுத்து விடுவது போல கொடுத்து மீண்டும் பிடுங்கிக் கொள்வார்கள்.  ஆற்றங்கரையோரத்தில் அமர்ந்து கொண்டு பிட்சையெடுத்த உணவை சாப்பிடும் போது தொந்தரவு கொடுப்பார்கள்.  அவர்மீது எச்சிலை துப்புவார்கள். அவர் தூய்மைப்படுத்தி வைத்திருந்தை இடத்தில் மூத்திரத்தை பெய்து அசுத்தப்படுத்துவார்கள். இவ்வளவையும் சகித்துக் கொண்டு அமைதியாக இருந்தார். இவரை எவ்வாறேனும் பேச வைக்கவேண்டுமென்று மேலும் மேலும் துன்பத்தைக் கொடுத்தார்கள். பேசாமல் இருந்தால் ஏதாவது ஒரு பொருளை எடுத்து அவர்மீது எறிந்து துன்பத்தைக் கொடுத்தார்கள்

தர்ஜயந்த்யபரே வாக்3பி4: ஸ்தேனோயமிதி வாதி3ன: |
ப3த்4னந்தி ரஜ்ஜ்வா தம் கேசித்3ப3த்4யதாம் ப3த்4யதாமிதி || 37 ||
கடும் வார்த்தைகளால் அவரை திட்டினார்கள், விமர்சித்தார்கள், மிரட்டினார்கள். அவரைத் திருடன் என்று பழி சுமத்தினார்கள். கயிற்றால் கட்டிவைத்தார்கள். சிலர் இவன் திருடன் கயிற்றால் கட்டிப்போடுங்கள் என்று கூச்சலிட்டனர்.

க்ஷிபந்த்யேகேவஜானந்த ஏஷ த4ர்மத்4வஜ: ஶட: |
க்ஷீணாவித்த இமாம் வ்ருத்திமக்3ரஹீத்ஸ்வ ஜனோஜ்38 ||ஜி2த: || 38 ||
கடினமான சொற்களால் அவரை அவமதித்தனர்.  இவன் தர்மத்தை பின்பற்றுகிறேன் என்று கூறிக்கொண்டு எல்லோரையும் ஏமாற்றுகிறான் என்றும் விமர்சித்தார்கள். இவன் பணத்தை இழந்துவிட்டதால்தான் இந்த சந்நியாச வாழ்க்கையை எடுத்துக் கொண்டான். இவனுடைய உறவினர்களும் இவனை விரட்டி அடித்துவிட்டார்கள்

அஹோ ஏஷ மஹாஸாரோ த்4ருதிமாங்கிரிராடி3வ |
மௌனேன ஸாத4யத்யர்த2ம் ப3கவத்3த்3ருட4நிஶ்சய: || 39 ||
இவன் மிகவும் சக்தி வாய்ந்தவன், உயர்ந்த மலையைப் போல மனவுறுதியுடையவன் இவன் பேசாமல் இருந்து கொண்டு அனைத்தையும் சாதித்துக் கொள்கிறான்.  கொக்கைப் போல பொறுமையாக இருந்து லட்சியத்தை அடைந்து சாதிக்கிறான்.  சிலபேர் கோபத்திலும் அமைதியாக இருப்பார்கள், ஆனால் உள்ளுக்குள் மன உளைச்சலுடனும், ஆத்திரத்துடனும், பழிவாங்கும் சமயத்தை எதிர்பார்த்து கொண்டு இருப்பார்கள்.  சிலர் உண்மையிலே மன அமைதியுடம் மௌனமாக இருப்பார்கள்.

இத்யேகே விஹஸந்த்யேனமேகே து3ர்வாதயந்தி ச |
தம் ப3ப3ந்து4ர்னிருருது4ர்யதா2 க்ரீட3னகம் த்3விஜம் || 40 ||
இவ்விதம் சிலர் இவரைப்பார்த்து பரிகாசம் செய்தார்கள். கடும் சொற்களால் அவமரியாதை செய்தார்கள்.  இந்த சாதுவை பறவையை கட்டும் வலையால் கட்டிப் போட்டும் விளையாடினார்கள்.

ஏவம் ஸ பௌ4திகம் து3:க2ம் தை3விகம் தை3ஹிகம் ச யத் |
போ4க்தவ்யமாத்மனோ தி3ஷ்டம் ப்ராப்தம் ப்ராப்தமபு3த்4யத || 41 ||
இந்த உலகம் கொடுக்கும் அனுபவத்தை எப்படி எடுத்துக் கொண்டால் அதன் பாதிப்பிலிருந்து விடுபடமுடியும் என்று இதில் கூறியிருக்கிறார்.  உலகமானது அனுபவங்களை ஒரே மாதிரியாகத்தான் எல்லோருக்கும் கொடுத்து கொண்டிருக்கும். ஆனால் அதை எவ்வாறு ஒருவனால் எடுத்துக்கொள்ளப்படுகிறது என்பதை வைத்து அவனைப் பற்றி அறியலாம்.

ஏவம் ஸஹ – இவ்விதமாக அவர்
பௌதிக து3க்கம் – விலங்குகளாலும், மனிதர்களாலும் அனுபவிக்கப்படுகின்ற துயரங்கள்
தைவிக து3க்கம் – இயற்கையிலிருந்து வருகின்ற துயரங்கள்
தைஹிகம் து3க்கம் – நம்முடைய உடலிலிருந்து வருகின்ற துயரங்கள்
போக்தவ்யமாதமனஹ திஷ்டம் – இவைகள் என்னுடைய கர்மபலனாக வந்துள்ளது. ஆகவே இந்த துயரங்களை அனுபவித்துத்தான் ஆக வேண்டும் என்று ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை அடைந்து
ப்ராப்தம் ப்ராப்தம் அபுத்யத – இந்த மாதிரியான துக்கங்களை எப்பொழுது வந்தாலும் அவைகளை ஏற்றுக் கொண்டார்.

பரிபூ4த இமாம் கா3தா2மகா3யத நராத4ர்மை: |
பாதயத்3பி4: ஸ்வ த4ர்மஸ்தோ2 த்4ரிதிமாஸ்தாய ஸாத்த்விகீம் || 42 ||
தீய மனிதர்களால், சந்நியாச தர்மத்தில் நிலையாக இருப்பவருக்கு துன்பத்தைக் கொடுத்து அதிலிருந்து விலகிவிட செய்ய வேண்டும் என்று விரும்புவர்களால் அடைகின்ற துன்பங்களை சாத்விகமான மனதுடனும், உறுதியாக இருந்து கொண்டும், பழிவாங்கும் எண்ணமேயில்லாமல், எரிச்சலும் அடையாமல் அமைதியான மனதுடன் இருந்து கொன்டு இனிவரப் போகின்ற கருத்துக்களை உபதேசக்க ஆரம்பித்தார்

பிக்ஷு கீதா துவக்கம் ( 43-58)
த்3வீஜ உவாச
நாயம் ஜனோ மே ஸுக2து3:க2ஹேதுர்ன தே3வதாத்மா க்3ரஹகர்மகாலா: |
மன: பரம் காரணமாமனந்தி ஸம்ஸாரசக்ரம் பரிவர்தயேத்3யத் || 43 ||
நம்மிடமிருக்கும் பணம்தான் நம்முடைய சுக-துக்கங்களுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.  மனதில் இருக்கும் சில தோஷங்கள்தான் இவைகளுக்குக் காரணம். அவைகள் 
1. மனதின் பலவீனமானது அது எப்போதும் நம்மிடத்தில் இருப்பதில்லை, வெளிவிஷயங்களை     நாடிக் கொண்டிருக்கும். 
2. மனதிற்கு எதையாவது அபிமானித்தல் என்கின்ற ஒரு குணம் உண்டு.  அதுதான் சரீரத்தை நான் என்று நினைக்க வைக்கின்றது.  நான், என்னுடையது என்ற அபிமானத்துடன் இருக்கின்றது.  அகங்காரம், மமகாரம் என்ற தன்மையுடையதாக இருக்கிறது

நாயம் ஜனோ மே சுக-துக்க ஹேது – நாம் அனுபவிக்கின்ற சுக-துக்கங்களுக்கு காரணம் மற்ற மனிதர்கள் அல்ல.   இப்பொழுது என்னைத் துன்புறுத்திக் கொண்டிருக்கும் இந்த மனிதர்களால் அல்ல
ந தேவதா – எந்த தேவதைகளும் காரணம் அல்ல
ந ஆத்மா – என்னுடைய ஆத்மாவும் காரணம் அல்ல
ந க்ரஹகர்மகாலா: - கிரகங்களோ, கர்மவினைகளோ, காலமோ காரணம் அல்ல
மனபரம் காரணம் ஆமணந்தி – மனம்தான் முக்கிய காரணம் என்று வேதங்கள் கூறுகின்றது.
ஸம்ஸாரசக்ரம் பர்வர்தயேத்யத் – சம்சார சக்கரத்தை சுழலவைக்கின்ற மனம்தான் எல்லா இன்ப-துன்பங்களுக்கும் காரணமாகும்.

மனோ கு4ணான்வை ஸ்ருஜதே ப4லீயஸ்த்தஶ்ச
கர்மாணி விலக்ஷணானி |
ஶுக்லானி க்ருஷ்ணான்யத2 லோஹிதானி தேப்4ய:
ஸவர்ணா: ஸ்ருதயோ ப4வந்தி || 44 ||
மனம் எப்படி சம்சாரத்திற்கு காரணம் என்று இதில் புரிய வைக்கப்படுகிறது.  நம்முடைய மனதில் ஓடும் எண்ண ஓட்டங்கள் எந்த விதத்தில் இருக்கும். எப்படி முடிவு செய்கின்றது என்பதையும் சொல்லப்படுகிறது.

வெளிசூழ்நிலைகள், சம்பவங்கள், நம்முடைய செயல், அணுகுமுறை, இது மூன்றுவித குணங்களின் அடிப்படையில் இருப்பது. மேலும் புருஷார்த்தமான அந்த நிலையில் நாம் எடுக்கும் முடிவுகள் இவை மூன்றும் சேர்ந்து ஒருவித எண்ணவோட்டத்தை ஏற்படுத்துகிறது. வாசனையுடன் கூடிய பலமான மனமானது, சாத்விக, ராஜஸம், தாமஸம் என்ற குணங்களில் ஏதொவொன்றை சார்ந்து எண்ணவோட்ட‘ங்களை உருவாக்குகிறது (ஸ்ருஜதே). செயலில் ஈடுபடுத்தும் அளவுக்கு வலிமை வாய்ந்த எண்ணங்களைத்தான் இங்கு குறிப்பிடப்படுகின்றது. 
ததஶ்ச கர்மாணி விலக்ஷணானி – செயலில் ஈடுபடுத்தும் எண்ணத்தை தொடர்ந்து பலவிதமான செயல்கள் நம்மிடமிருந்து உருவாகின்றது
ஶுக்லானி கர்மாணி – சாத்விகமான செயல்கள்
க்ருஷ்ணானி கர்மாணி – தாமஸமான செயல்கள்
லோஹிதானி கர்மாணி – ராஜஸமான செயல்கள்
நம்மிடமிருந்து உருவாகலாம்
ஸவர்னா ஸ்ர்தயோ பவந்தி – அதற்கேற்றவாறு சம்சாரமானது அனுபவிக்கப்படுகிறது.

அனீஹ ஆத்மா மனஸா ஸமீஹதா ஹிரண்மயோ
மத்ஸக உத்3விசஷ்டே |
மன: ஸ்வலிங்க3ம் பரிக்3ருஹ்ய காமான்ஜுஷன்னிப3த்4தோ4
கு3ணஸங்க3தோஸௌ || 45 ||
மனதில் அனுபவிக்கின்ற சம்சாரத்திற்கு காரணங்களாக பரவசம், அறியாமை  என்று இரண்டு குறைகள் இருக்கின்றது. பரவசமென்பது சுகத்திலே கட்டுண்டு இருத்தல் இது ஒரு பெரிய பலவீனமாகும்.  இந்த ஸ்லோகத்தில் ஆத்ம ஸ்வரூபம் கூறப்படுகிறது. 
அனீஹ ஆத்மா – ஆத்மா செயலற்றது, அகர்ம ஸ்வரூபமானது
ஹிரண்மயஹ – சைதன்ய ஸ்வரூமானது, அறிவு ஸ்வரூபமானது
மனஸா ஸமீஹதா – மனதிற்கு மிக அருகில் இருந்துகொண்டு அதை பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது. மனதில் பிரதிபலித்து, வியாபித்து அதை அறிவுபூர்வமாக செயல்பட வைக்கின்றது
மத்ஸகஹ – மனம் ஆத்மாவுக்கு நண்பனை போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறது
உத்விசஷ்டே – இது அனைத்து செயல்களையும் சாட்சியாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது
மன:ஸ்வலிங்கம் பரிக்ருஹ்ய – மனமானது ஆத்மாவை அறிவதற்கு ஒரு உபகரணமாக, அடையாளமாக இருக்கின்றது.  ஆனால் சுபாவமான தன்னை நான்  என்று அபிமானித்துக் கொள்கின்றது
காமான் ஜுஷன் – எல்லா ஆசைகளையும் அனுபவித்துக் கொண்டு
குணஸங்கஹ அஸௌ – மூன்று குணங்களை சார்ந்திருக்கின்றதுமான மனதால், பலவீனமாக இருக்கின்ற மனதால் மனிதன்
நிபத்தஹ – துயரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றான், சம்சாரியாக இருக்கின்றான்

தா3னம் ஸ்வத4ர்மோ நியமோ யமஶ்ச ஶ்ருதம்
ச கர்மாணி ச ஸத்3வ்ரதானி |
ஸர்வே மனோ நிக்3ரஹலக்ஷணாந்தா: பரோ ஹி
யோகோ3 மனஸ: ஸமாதி4: || 46 ||
நம்முடைய சம்சாரத்திற்கு முதல் காரணம் மனமேதான். மனமே சம்சாரத்திற்கு காரணமாக இருப்பதால் அதை அழிக்க முயற்சி செய்யக் கூடாது. அதிலிருக்கின்ற துயரத்தை கொடுத்து கொண்டிருக்கின்ற இரண்டு தோஷங்களைத்தான் நீக்க முயற்சி செய்ய வேண்டும்.  முதல் குறையான பலவீனத்தை ஞானயோகத்தை தவிர மற்ற யோகங்களான கர்மயோகம், பக்தியோகம் போன்றவைகளால் நீக்கிவிட வேண்டும். இரண்டாவது குறையான அபிமானித்தல் என்பதை ஞானயோகத்தை பின்பற்றி நீக்கி விடலாம்.  எதை நான் என்று அறியாமலிருக்கும் வரையில் துயரங்களை அனுபவித்து கொண்டிருப்போம். 

மனதில் எழும் எண்ணங்கள் அந்த நேரத்தில் செயலுக்கு வருகின்ற சம்ஸ்காரங்கள், சூழ்நிலைகளை பொறுத்து அமைகின்றது.  இதன் அடிப்படையில்தான் செயல்கள் உருவாகின்றது.  அதற்கு தகுந்த சம்சாரம் கிடைக்கின்றது.  மனம் புலன்களுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விடுதலை பெறவேண்டும்.  மனம் உண்மையில் ஆத்மாவை நான் என்று சொல்ல வேண்டும்.  இந்த மனமே ஆத்மாவை அறிவதற்கு உதவி செய்கின்ற கருவியாக பயன்படுத்த வேண்டும்.  ஆனால் இப்படிபட்ட மனதை உலகத்திலுள்ள விஷயங்களில் அபிமானம் கொள்ள வைத்து துயரப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

இதில் மனதிலுள்ள முதல் குறையை நீக்குவதற்கான வழியை கூறுகின்றார்.  மோட்சத்தை அடைவதற்கு யோகத்தின் பங்கு என்ன?  யோகம் என்பதெது, அது எதுவரை கொண்டு செல்லும்?. இதனால்தான் முதல் குறையை நீக்க முடியும்.  ஞானயோகத்தை தவிர மற்ற அனைத்து யோகங்கள்தான் முதல் குறையை நீக்க முடியும். இந்த யோகம் நம்மிடமிருந்து வருகின்ற செயல்களைக் குறிக்கின்றது. எல்லா செயல்களும் பலன்களை கொடுக்கக் கூடியது.  பாவ-புண்ணியங்களானது நம் உடலிலிருந்து செய்யப்படும் செயல்களிலிருந்து அடைவது.  இந்த பலனை நாம் எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.  அதாவது சுகத்தை அனுபவிக்கலாம், மோட்சத்தை அடைவதற்குரிய சாதனமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.  மனதிலுள்ள முதல் குறையை போக்குவதற்கு பயன்படுத்துவதே அந்தப்பலனை முழுமையாக அனுபவித்து விடுவதற்கு சமமாகும். இந்த யோகங்கள் மனதை எதற்கும் அடிமையாகிவிடாமல் பலப்படுத்தினால் மனம் ஆத்மாவை தேடும் முயற்சியில் ஈடுபட ஆரம்பிக்கும்.  மனம் ஒருவன் இறக்கும்வரையில் பலத்துடன் இருக்குமாறு பகவான் படைத்திருக்கிறார்.

தானம் – இருப்பதை தேவையுள்ளவர்களுக்கு, தகுதியுடையவர்களுக்கு பகிர்ந்து கொடுத்தல். இதை செய்வதனால் மனம் பலமடையும்
ஸ்வதர்ம – நாம் செய்கின்ற அனைத்து செயல்களையும், வர்ணாசிரம அடிப்படையில் நமக்கு விதிக்கப்பட்ட கர்மங்களை அதன் பலனில் பற்றுக் கொள்ளாமல் செய்து கொண்டிருக்க வேண்டும். நம்முடைய மன ஆரோக்கியமாக இருப்பதற்குதான் நாம் அனைத்து செயல்களையும் செய்ய வேண்டும்.
நியமஹ – செய்ய வேண்டிய செயல்களை செய்தல்
யமஹ – செய்யக்கூடாத கர்மங்களை செய்யாதிருத்தல்
ஸ்ருதம் – சாஸ்திரத்தை கேட்டல், சாஸ்திர மந்திரங்களை ஓதுதல்
கர்மாணி – விதவிதமான தவங்களை செய்தல் – மன ஆரோக்கியத்தை லட்சியமாக கொண்டு தவங்களை செய்தல்
ஸத்வரதானி – நல்ல நல்ல விரதங்களை கடைபிடித்தல், சாத்விகமான விரதங்களை மேற்கொள்ளல், விரதங்கள் மனதையும்,உடலையும் பலப்படுத்துபவைகளாக இருக்க வேண்டும்
ஸர்வே – மேற்கூறிய எல்லா சாதனங்களும்
மனோ நிக்ரஹ லக்ஷணாந்தாஹ – மனதை பக்குபடுத்துவதில்தான் நிறைவடைகிறது.  மனதை நெறிப்படுத்த வேண்டும், முறைப்படுத்த வேண்டும். எதற்கும் அடிமையாகாத நிலையுடையதாக பக்குவபடுத்துதல் ஆகியவற்றிற்குத்தான் பயன்படுத்த உதவுகிறது.
பரோ ஹி யோகஹ மனஸஹ ஸமாதிஹி – எல்லா யோகங்களும் மனதை அமைதி படுத்துவதற்குத்தான் பயன்படுகின்றது. 

மனம் அமைதியடைந்துவிட்டால் இழப்பதற்கும், இனிமேல் அடைவதற்கும் ஒன்றுமிருக்காது. மனம் எப்பொழுதும் இன்பத்தையோ, சுகத்தையோ அடைவதற்கு வழியை தேடிக் கொண்டிருக்கும். இந்த சுபாவத்தை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி அதை சாதனமாக பயன்படுத்த பழக்க வேண்டும்.  கிடைக்கின்ற நேரத்தில் ஆத்மவிசாரத்தில் ஈடுபடுத்த வேண்டும்.  சில சாதனங்களை பயன்படுத்தி பலன் அடைந்ததும் அதை விட்டுவிட வேண்டும்.

ஸமாஹிதம் யஸ்ய மன: ப்ரஶாந்தம் தானாதி3பி4:
       கிம் வத3 தஸ்ய க்ருத்யம் |
அஸம்யதம் ய்ஸ்ய மனோ வினஶ்யத்3
தா3னாதி3பி4ஶ்சேத3பரம் கிமேபி4: || 47 ||
யஸ்ய  மனஹ – யாருடைய மனமானது அமைதியை அடைந்து விட்டதோ,
ஸமாஹிதம் ப்ரஶாந்தம் – முழுமையாக அமைதியடைந்து விட்டதோ, தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதோ. அவர்களுக்கு
தானாதிபிஹி கிம் வத3 தஸ்ய க்ருத்யம் – தானம் முதலிய சாதனங்களால் இனி ஆக வேண்டியது ஒன்றுமில்லை, அடைய வேண்டியது ஒன்றுமில்லை.

நற்காரியங்களை செய்வதனால் வரும் புண்ணியத்தையும் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்ட நிலையில் அவைகளை மீண்டும் செய்ய தேவையில்லை.  எல்லா சாதனங்களையு முறையாக  கடைப்பிடித்துக் கொண்டிருந்தாலும் மனம் அமைதி அடையவில்லையென்றால் அந்த சாதனங்களை பின்பற்றிக் கொண்டிருப்பதனால் எந்த பயனும் கிடையாது.

அஸம்யதம் யஸ்ய மனஸஹ – யாருடைய மனம் கட்டுபாடில்லாத நிலையில் இருக்கின்றதோ
வினஶ்யத் – மோட்ச மார்க்கத்திற்கு செல்லும் சக்தியை இழந்த மனம், நல்லதை கேட்கின்ற, சிந்திக்கின்ற, செயல்படுத்துகின்ற சக்தியிழந்த மனம்
தானாதிபிஹி ச அபரம் கிம் அபிஹி – இத்தகைய மனதைக் கொண்டு எல்லா சாதனங்களும் பின்பற்றி செயல்படுவதினால் எந்தவித பயனும் கிடைக்காது.

மனோவஶேன்யே ஹ்யப4வன்ஸ்ம தேவா
மனஶ்ச நான்யஸ்ய வஶம் ஸமேதி |
பீ4ஷ்மோ ஹி தே3வ: ஸஹஸ: ஸஹீயான்யுஞ்ஜ்யாத்3வஶே
தம் ஸ ஹி தே3வதேவ: || 48 ||
மனமானது சக்தி வாய்ந்ததாக இருப்பதனால் அதை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். எனவே கடும் முயற்சி செய்துதான் அதை கட்டுப்படுத்த வேண்டும். அவ்வாறு அதை வென்றவன்தான் ஜீவன் முக்தியை அடைய முடியும். மனம் ஒரு சேதனமான கருவியாக இருக்கின்றது  நாம் செய்ய நினைப்பதை மனம்தான் செயல்படுத்த வேண்டும்.  மனதை முறையாக நம் வசத்திற்கு படிபடியாகத்தான் கொண்டுவர வேண்டும். 
மனோவஶே அன்ய்யே தேவ அபவன்ஸ்ம – மற்ற தேவர்கள் மனதின் வசத்தில் இருக்கின்றார்கள். எல்லா இந்திரியங்களும் மனதின் வசத்தில்தான் இருக்கிறது.
மனஸ்ச நான்யஸ்ய வஶம் ஸமேதி – ஆனால் வேறொன்றின் கையில் மனம் சுலபமான வசப்படாது. மற்ற புலன்களின் வசத்திலும், புத்தியின் வசத்திலும் மனம் இல்லை.
பீஷ்மோ ஹி தேவ – இந்த மனமானது பயங்கரமானது
ஸஹஸஹ – பலமானதாக படைக்கப்பட்ட தத்துவங்களிலே மிக பலமானதாக மனம்
ஸஹியா – இருக்கின்றது
யுஞ்ஜ்யாத்வஶே தம் – இப்படிபட்ட மனதை தன் வசத்திற்குள் கொண்டு வரவேண்டும்
ஸஹ தேவதேவ – அப்படி வசப்படுத்தியவன் தேவர்களுக்கெல்லாம் தேவன்.

தம்து3ர்ஜயம் ஶத்ருமஸஹயவேக3மருந்துத3ம்
       தன்ன விஜித்ய கேசித் |
குர்வந்த்யஸத்3விக்3ரஹமத்ர மர்த்யைர்மித்ராண்யு-
       தா3ஸீனரிபூன்விமூடா4: || 49 ||
மேற்கூறியபடி மனதை நம் வசத்துக்குள் கொண்டுவராவிட்டால் எந்தவிதமான சம்சாரத்திற்குள் வைத்திருக்கும் என்பதை இதில் கூறியிருக்கிறார்.

தம் துர்ஜயம் ஶத்ரும் – இந்த மனமானது வெற்றி கொள்வதற்கு கடினமான பகைவன்
அஸஹய வேகம் – அதனுடைய வேகத்தை சுலபத்தில் கட்டுப்படுத்த முடியாது
அருந்ததம் – மனதில் ஓடும் தீய எண்ணங்களின் விளைவாக உடலிலுள்ள சில உயிரிவாழ உதவும் முக்கியமான உறுப்புக்கள் பாதிக்கப்படும்.
தத்ர ந விஜித்ய கேசித் – இப்படிபட்ட மனதை கட்டுப்படுத்தாமல், ஒழுங்குபடுத்தாமல் வைத்திருந்தால், இது துயரமான சூழ்நிலையை உருவாக்கிவிடுகிறது.
அருந்ததம்  
மனதில் ஓடும் சிலவித எண்ணங்களால், கோபம், பழிவாங்குதல் போன்ற எண்ணங்களால் உடலின் முக்கிய உறுப்புக்கள், மர்ம ஸ்தானங்கள், இதயம் போன்ற முக்கிய உறுப்புக்களின் செயல்பாட்டை பாதிக்கும். இப்படிபட்ட மனதை கட்டுப்படுத்தாமல் விட்டுவிடக்கூடாது. அப்படி விட்டுவிட்டால் துயரமான சூழ்நிலையை உருவாக்கிவிடும்

குருவந்த்யஸத் விக்ரஹம் அத்ர மர்த்யை– மற்றவர்களிடம் தேவையற்ற சண்டையில் ஈடுபட வைக்கின்றது. நம் மனதிலுள்ள நிறைவின்மை பலவிதத்தில் வெளிப்படும். இந்த இடத்தில் நம் மனதானது கட்டுப்படாமல் இருப்பதால் தேவையில்லாமல் மற்றவர்களிடம் வீண் வாதத்தில், சண்டையில் ஈடுபடுத்த வைத்துவிடும்.
அஸத் விக்ரஹம் – எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் பயனற்ற சண்டையில் ஈடுபடவைத்துவிடும்
நமக்குள்ளேயிருக்கும் பகைவர்களான காம, க்ரோதம், லோபம் போன்றவைகளை வென்று விட்டால் வெளியே எந்த பகைவர்களும் நமக்கு இருக்கமாட்டார்கள்.  அப்படி உள்ளேயிருக்கும் பகைவர்களை வெற்றி கொள்ளாமல் விட்டுவிட்டால் வெளியேயும் பகைவர்களை உருவாக்கி கொள்வோம்.
மித்ர உதா3ஸீன நிபூன் விமுடா4ஹ – இப்படி மனதைக் கட்டுபடுத்தாத மூடர்கள், வெளியே உள்ளவர்களை, நண்பனாகவும், கண்டு கொள்ளாதவனாகவும், பகைவனாகவும் பிரித்து வைத்துக் கொள்கிறார்கள். அதனால் சம்சார துயரத்தில் விழுந்து இருக்கின்றார்கள்.

தே3ஹம் மனோமாத்ரமிமம் க்3ருஹீத்வா
மமாஹமித்யந்த3தீ4யோ மனுஷ்யா: |
ஏஷோ ஹமன்யோ யமிதி ப்4ரமேண து3ரந்தபாரே
       ஹமஸி ப்3ரமந்தி || 50 ||
மனதிலுள்ள இரண்டாவது குறையை நீக்குவதற்கான வழியை 50-58 ஸ்லோகங்களில் விளக்குகின்றார்.  இதுவே ஞானயோகம், மனதிற்கு அறிவை கொடுத்தல், மூன்று படிகளில் இந்த ஆத்ம ஞானமானது அடையப்படுகிறது. அவைகள்
1.       த்ருக்-த்ருஷ்ய விவேகம் – நான் அல்லாத விஷயங்களிலிருந்து விடுபடுதல். பார்க்கப்படுவது, அனுபவிக்கப்படுவது அனைத்தும் நானல்ல என்று அனாத்மாக்களை நீக்குதல்
2.       அவஸ்தா த்ரய விவேகம் – நான் எல்லா அவஸ்தைகளிலும் தொடர்ந்து இருக்கின்றேன். சத்யமாக இருந்து கொண்டு இவைகளை பிரகாசிக்கிறேன் என்ற அறிவை அடைவது
3.       பிரம்மனுடன் ஐக்கியம் – ஆத்மாவாகிய நானே பிரம்மன் என்று உணர்தல்

மனுஷ்யா - மனிதர்கள்
தேஹம் – இந்த ஸ்தூல சரீரத்தை
மனோமாத்ரம் இமம் – அறியாமையினால் மனதில் மட்டும்
க்ருஹித்வா - நான் என்று நினைத்து கொண்டு
மம அஹம் இதி அந்த3 தி4யோ – தவறான அறிவால் இந்த உடலை நான் என்றும், உடலுடன் சம்பந்தபட்டவைகளனைத்தும் என்னுடையது என்று தவறாக நினைத்துக் கொண்டு
ஏஷஹ அஹம் அன்யே அயம் இதி ப்3ரமேண – இந்த உடல்தான் நான் என்றும் மற்றவைகள் எதுவும் நானில்லை என்ற குழப்பத்தில், மோகத்தில் இருக்கிறார்கள்
துராந்தபாரே – இந்த மோகத்தை கடக்க முடியாமல்
தமஸி ப்ரமந்தி -  மனிதர்கள் அறியாமை என்ற இருளில் உழன்று கொண்டு இருக்கிறார்கள்

ஜனஸ்து ஹேது: ஸுக2து3:க2யோஶ்சேத்கிமாத்மஶ்சாத்ர
ஹி பௌ4மயோஸ்தத் |
ஜிஹவாம் க்வசித்ஸந்த3ஶதி ஸ்வத3த்3பி4ஸ்தத்3வேத3னாயாம்
       கதமாய குப்யேத் || 51 ||
51-56 நான் என்ற சொல்லுக்கு ஆத்மாதான் பொருள் என்றும் இது பிரம்மதினின்று வேறல்ல என்பதை விளக்குகின்றார்

என்னுடைய துயரத்திற்கு காரணமாக இருப்பவர்கள் என்னை சுற்றியிருப்பவர்கள் என்ற எண்ணத்தை நீக்குகின்றார். நானே ஆத்மா என்று உணர்ந்திருந்தால் எனக்கு எப்படி மற்றவர்கள் துயரத்தை கொடுக்க முடியும், துயரத்திற்கு காரணமாக இருப்பார்கள்

ஜனஸ்து ஹேது: சேத் ஸுக து:க2 – நாம் அனுபவிக்கும் இன்ப-துன்பங்களுக்கு மனிதர்கள் காரணமாக இருந்தால்
கிம் ஆத்மனஹ ச அத்ர – ஆத்மாவாகிய எனக்கு ஒன்றுமில்லை
பௌமயோஹ தத் – பஞ்சபூதத்தினிலான இந்த உடலை வேறொரு பஞ்சபூத உடலினால் ஏதோ நடந்திருக்கிறது, பாதித்திருக்கின்றது
ஜிஹவாம் க்வசித்ஸந்த3ஶதி ஸ்வ – என்னுடைய நாக்கை பற்களால் கடித்துக் கொண்டால்
த3த்3பி4ஸ்தத்3வேத3னாயாம் – அந்த துன்பத்திற்காக
கதமாய குப்யேத் – யாரிடம் கோபித்து கொள்ள முடியும்.

ஞானம் அடையாதவர்கள் எப்படி இந்த சூழ்நிலையை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் மற்றவர்கள் நமக்கு துன்பம் கொடுக்கும்போது அவரை மன்னித்துவிட வேண்டும் அல்லது அவர் அறியாமையினால்தான் இவ்வாறு நடந்து கொள்கிறார் அல்லது என்னுடைய கர்மபலனை அனுபவித்து தீர்ப்பதற்கு உதவி செய்கின்றார் என்று சகித்துக் கொள்ள வேண்டும்.

து3:க2ஸ்ய ஹேதுர்யதி3 தே3வதாஸ்து
கிமாத்மனஸ்தத்ர விகாரயோஸ்தத் |
யத3ங்க3மங்கே3ன நிஹன்யதே க்வசித்க்ருத்4யேத
       கஸ்மை புருஷ: ஸ்வதே3ஹே || 52 ||
நமக்கு துன்பம் கொடுப்பவர்கள் தேவதைகள்தான் என்று நாம் நினைக்கின்றோம். கண்ணுக்கு தேவதை சூரியன், மனதுக்கு தேவதை சந்திரன் போன்று நம்முடைய ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு தேவதை அதிஷ்டானமாக இருக்கின்றது.  கைவிரலால் கண்ணைக் குத்திக் கொண்டால் கையிலுள்ள அதிஷ்டான தேவதை, கண் தேவதையை துன்புறுத்தி விட்டது என்று ஞானம் உள்ளவன் எடுத்துக் கொள்வான். இதிலிருந்து  உடலுக்கு அப்பால் சாட்சியாக இருந்து கொண்டு இருக்கும் ஆத்மாவாகிய எனக்கு யாரும் எவ்விதமான சுக-துக்கங்களை கொடுக்க முடியாது என்ற நிலையை அடைந்திட வேண்டும்.

து3:க2ஸ்ய ஹேதுர்யதி3 தே3வதாஸ்து – என்னுடைய உடலுக்கும், மனதிற்கும் வரும் துன்பத்திற்கு காரணம் ஏதோ ஒரு தேவதை என்றால்
கிமாத்மனஸ்தத்ர  - இதில் எனக்கு என்னவாகப் போகிறது!
விகாரயோ: தத் – இது இரண்டு தேவதைகளுக்கும் இடையே நடக்கும் சண்டை, ஆத்மாவாகிய எனக்கு ஒன்றுமில்லை
யத3ங்க3மங்கே3ன நிஹன்யதே – என்னுடை உடலிலுள்ள ஒரு அங்கம் வேறொரு அங்கத்தை துன்புறுத்திவிட்டால்
க்வசித்க்ருத்4யேத கஸ்மை – யாரிடத்தில் கோபித்துக் கொள்ள முடியும்
புருஷ: ஸ்வதே3ஹே  - மனிதன் எந்த அங்கத்திடம் கோபப்பட முடியும்.

ஆத்மா யதி3 ஸ்யாத்ஸுக3து3:க2ஹேது;
கிமன்யதஸ்தத்ர நிஜஸ்வபா4வ: |
ந ஹ்யாத்மனோ ன்யத்3யதி3 தன்ம்ருஷா
       ஸ்யாத்க்ருத்3யேத கஸ்மான்ன ஸுக2ம் ந  து3:க2ம் || 53 ||
சிலர் தான் அடையும் இன்பத்திற்கு ஆத்மாவே காரணம் என்று தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். அந்த கருத்தை தவறு என்று சுட்டிக் காட்டுகின்றார்

ஆத்மா யதி3 ஸ்யாத்ஸுக3து3:க2ஹேது: ஒருவேளை ஆத்மா சுக-துக்கங்களுக்கு காரணமாக இருக்கிறதென்றால்
கிமன்யதஸ்தத்ர நிஜஸ்வபா4வ: - இவைகள் உன்னுடைய இயற்கையான சுபாவமாகி விடும் எனவே அது உன்னுடைய
ந ஹி ஆத்மன: அன்யத்3 – ஆத்மாவுக்கு வேறாக எதுவும் இல்லை
யதி3 தன்ம்ருஷா ஸ்யாத் – ஆத்மாவுக்கு வெளியே உள்ளவைகள் பொய் என்று ஏற்றுக் கொள்கின்றாய்.
க்ருத்3யேத கஸ்மான் – யாரிடம் கோபித்துக் கொள்வாய்
ந ஸுக2ம் ந  து3:க2ம் – எனவே இன்பமும், இல்லை துன்பமும் இல்லை
இதிலிருந்து நீ அனுபவிக்கும் இன்ப-துன்பங்களுக்கு யாரையும் குறை சொல்ல முடியாது.

க்3ரஹா நிமித்தம் ஸுக2து3:க2யோஶ்சேத்கி-
மாத்மனோஜஸ்ய ஜனஸ்ய தே வை |
க்3ரஹைர்க்3ரஹஸ்யைவ வத3ந்தி பீடா3ம்
க்ருத்4யேத கஸ்மை புருஷஸ்த்தோன்ய: || 54 ||
க்3ரஹா நிமித்தம் ஸுக2து3:க2யோஶ்சேத் – என்னுடைய சுக-துக்கங்களுக்கு கிரகங்கள்தான் காரணமென்றால்
கிம் ஆத்மனா அஜஸ்ய  - பிறப்பற்ற ஆத்மாவாகிய எனக்கு ஒன்றுமில்லை, கிரகங்களால் எந்தவிதமான பாதிப்பும் எனக்கு கிடையாது
ஜனஸ்ய தே வை – பிறந்தவைகளுக்குதான் கிரகங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம்
க்3ரஹை க்3ரஹஸ்ய ஏவ வத3ந்தி பீடா3ம் – ஒருசில கிரகங்கள் வேறொரு கிரகத்திற்கு பாதிப்பு கொடுக்கலாம், நான் என்கின்ற ஆத்மாவிடம் இது நடக்காது
க்ருத்4யேத கஸ்மை புருஷஸ்த்தோன்ய: - இந்த உடலுக்கு வேறான ஆத்மாவாகிய நான் யாரிடத்தில் கோபப்படுவேன்.

கர்மாஸ்து ஹேது: ஸுக2து3:க2யோஶ்சேத்கி
மாத்மனஸ்த்த்3தி4 ஜடா3ஜட3த்வே |
தே3ஹஸ்த்வசித்புருஷோ யம் ஸுபர்ண: க்ருத்4யேத
கஸ்மை ந ஹி கர்மமூலம் || 55 ||

கர்மாஸ்து ஹேது: ஸுக2து3:க2யோஶ்சேத் – கர்மபலன்கள்தான் நமது சுக-துக்கங்களுக்கு காரணம் என்று எடுத்துக் கொண்டால்
கிம் ஆத்மன: - ஆத்மாவாகிய எனக்கென்ன!!
தத்3தி4 ஜட3 அஜட3த்வே – அகங்காரத்தைத்தான் இது பாதிக்கும்.
தே3ஹ அத்வசித் – இந்த உடல் ஜடம்
புருஷ: அயம் ஸுபர்ண: ஆத்மாவாகிய நான் சைதன்ய ஸ்வரூபம்
க்ருத்4யேத கஸ்மை ந ஹி கர்மமூலம் –யாரிடத்து நான் கோபித்துக் கொள்ள முடியும்.

அகங்காரமே பொய் என்றாகும்போது கர்மபலன்களும் பொய்யாகின்றது.  கர்மபலன்களால் இந்த தேகத்திற்கும், மனதிற்கும்தான் பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆத்மாவாகிய என்னை இவைகளால் ஒன்றும் செய்ய முடியாது

காலஸ்து ஹேது: ஸுக2து3:க2யோஶ்சேத்கி-
       மாத்மனஸ்தத்ர த தா3த்மகோஸௌ |
நாக்3னிர்ஹி தாபோ ந ஹிமஸ்ய தத்ஸ்யாத்க்ருத்4யேத
       கஸ்மை ந பரஸ்ய த்3வந்த்3வம் || 56 ||
சுக-துக்கங்களுக்கு காலம்தான் காரணமென்றால் ஆத்மாவாகிய எனக்கு ஒன்றும் இல்லை.  இந்த காலமானது ஆத்மாவாகிய என்னிடத்திலிருந்துதான் தோன்றி இருக்கின்ற பொய்யான ஒன்று. உஷ்ணமானது நெருப்பை ஒன்றும் செய்ய முடியாது,  குளிரானது பனிக்கட்டியை ஒன்றும் செய்ய முடியாது.  அதுபோல காலம் என்னை ஒன்றும் செய்ய முடியாது.  நான் யாரிடத்து கோபித்துக் கொள்ள முடியும். ஆத்மாவாகிய என்னிடத்திலே இருமைகளே கிடையாது

ந கேனசித்கவாபி கத2ஞ்சனாஸ்ய த்3வந்த்3வோபராக3: பரத: பரஸ்ய |
யதா2ஹம: ஸம்ஸ்ருதிரூபிண: ஸ்யாதேவம் ப்ரபு3த்தோ4 ந பி3பே4தி பூ4தை: || 57 ||
யாராலும் எந்தவிதத்திலும், எந்த ரூபத்தினாலும் இந்த அகங்காரத்திற்கு மேலாக இருக்கின்ற ஆத்மாவுக்கு இருமைகளால் பாதிப்பும் இல்லை. ஆனால் இந்த சம்சார ஸ்வரூபமாக இருக்கின்ற அகங்காரத்திற்கு இருமைகளால் தாக்கும் நிலையென்றும் இருக்கும். இவ்விதம் ஆத்மஞானத்தை அறிந்தவன் உலகத்தில் உள்ள எந்த பொருட்களை கண்டும் பயப்படமாட்டான்

ஏதாம் ஸ ஆஸ்தா2ய பராத்மனிஷ்டா2மத்4யாஸிதாம் பூர்வதமைர்மஹர்ஷிபி4: |
அஹம் தரிஷ்யாமி து3ரந்தபாரம் தமோ முகுந்தா3ங்க்4ரி நிஷேவயைவ || 58 ||
இப்படிபட்ட நான் இப்படிபட்ட பரமாத்மாவில் நிலைபெறுகின்ற பிரம்ம ஞானத்தை எடுத்துக் கொண்டேன். இதற்குமுன் வாழ்ந்த ரிஷிகள் சென்ற பாதையானது பின்பற்றபட்ட இந்த அறிவை நான் எடுத்துக் கொண்டேன். நான் கடக்க முடியாத சம்சாரக் கடலை கடந்துவிட்டேன். கிருஷ்ணபகவானின் பாதத்திற்கு பணிவிடை செய்ததினால் நான் இந்த நிலையை அடைந்தேன். அவருடைய அருளால்தான் இது எனக்கு சாத்தியமானது.
பிக்ஷு கீதை முடிவடைந்தது
ஶ்ரீபகவான் உவாச
நிர்வித்3ய நஷ்டத்ரவிணே க3தக்லம: ப்ரவ்ரஜ்ய கா3ம் பர்யடமான இத்த2ம் |
நிராக்ருதோ ஸத்3பி4ரபி ஸ்வத4ர்மாத3கம்பிதோமூம் முனிராஹ கா3தா2ம் || 59 ||
சரியான அறிவை நன்கு அடைந்து பொருட்களையெல்லாம் இழந்திருந்தாலும்,  எந்த பயமும் இல்லாதவனாக, துறவற வாழ்க்கையை மேற்கொண்டு பிக்ஷை எடுத்துக் கொண்டு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தபோது இப்படிபட்ட உபதேசத்தை செய்தார்.  அகிம்சையிலிருந்து இவரை வெளியே கொண்டுவர இந்த உலகம் முயற்சி செய்தது.  ஆனால் அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு மனம் தளராமல் முயற்சி செய்து ஞானத்தை அடைந்த பிறகு இந்த உபதேசத்தை செய்தார்

ஸுக2து3:க2ப்ரதோ3 நான்ய: புருஷஸ்யாத்மவிப்4ரம: |
மித்ரோதா3ஸீனரிபவ: ஸம்ஸாரஸ்தமஸ: க்ருத: || 60 ||
நம்முடைய சுக-துக்கங்களுக்கு காரணம் வேறெதுவுமில்லை, தன்னைப் புரிந்து கொள்ளாததினால் அவைகளை அனுபவிக்கிறோம். சம்சாரம் என்பது நண்பர்கள், பகைவர்கள் என்று நாமே உருவாக்கி கொள்வதுதான். இது தமோ குணத்தில் இருந்து உருவாக்கப்படுகின்றது

தஸ்மாத்ஸர்வாத்மன தாத் நிக்3ருஹாண மனோ தி4யா |
மய்யவேஶிதயா யுக்த ஏதாவன்யோக3ஸங்க்3ரஹ: || 61 ||
ஆகவே, அறிவின் துணைக் கொண்டு மனதை முழுமையாக வசப்படுத்துவாயாக, பலப்படுத்துவாயாக, தூய்மையாக்குவாயாக.  என்னிடம் மனதை செலுத்தி என்னை உணர்ந்து கொள்வாயாக.  இவ்வளவுதான் அனைத்து சாதனங்களுடைய முடிவும்.

ய ஏதாம் பி4க்ஷுணா கீ3தாம் ப்3ரஹ்ம நிஷ்டா2ம் ஸமாஹித: |
தா4யரஞ்ச்2ரவயஞ்ச்2ருண்வந்த்3வந்த்3வைர்னிவாபி4பூ4யதே || 62 ||
இந்தப் பிக்ஷு கீதையை படிப்பதினால் அடையும் பலனை இதில் கூறுகின்றார்.
யாரொருவன் இந்த சந்நியாசியால் உபதேசிக்கப்பட்ட பிரம்மத்தில் நிலைபெறுகின்ற இந்த தத்துவத்தை மன ஒருமுகத்துடனும், சிரத்தையுடனும் கேட்கின்றானோ, அல்லது மற்றவர்களுக்கு எடுத்து சொல்கின்றானோ, அந்த அறிவை தன்னிடத்தில் நிலை நிறுத்தி கொள்கின்றானோ அவன் இந்த உலகத்தினால் எந்த பாதிப்பும் அடைவதில்லை, இருமைகளால் துயரமடைவதில்லை.

ஓம் தத் ஸத்



A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...