Showing posts with label பகவத் கீதை-02. Show all posts
Showing posts with label பகவத் கீதை-02. Show all posts

Saturday, March 11, 2017

Srimad Bhagavat Gita - Chapter-02

அத்தியாயம்-2
சாங்க்ய யோகம்
ஸ்வாமி குருபரானந்தாவின் உபதேச விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது-15-02-2022

सञ्जय उवाच ।
तं तथा कृपयाविष्टमश्रुपूर्णाकुलेक्षणम् ।
विषीदन्तमिदं वाक्यमुवाच मधुसूदन:  ॥ 01 ॥
சஞ்சயன் கூறலானார்.
இவ்வாறு இரக்கத்தினால் மூழ்கடிக்கப்பட்ட கண்களில் நீர் ததும்பும் சோக விழிகளுடன் வருந்திய அர்ஜுனனை நோக்கி பகவான் மதுசூதனன் இனி பேசத்தொடங்கினார்.

श्रीभगवनुवाच ।
कुतस्त्वा कस्मलमिदं विषमे समुपस्थितम् ।
अनार्यजुष्टमस्वर्ग्यमकीर्तिकरमर्जुन ॥ 02 ॥
ஶ்ரீபகவான் கூறுகிறார்.
கல்மஷம் – மனதினுடைய மோகம்
இந்த கீழ்மையான மோகமானது, மனசோர்வானது உன்னிடம் எங்கிருந்து வந்தடைந்தது.  நெருக்கடியான சமயத்தில். இது உனக்கு எதற்குமே பயன்படாது. இது உனக்கு புகழை கொடுக்காது.  இறந்த பின்பு உன்னை சொர்க்கத்திற்கும் கொண்டு செல்லாது, இது மேலானவர்களால், பெரியவர்களால் செய்யத்தக்கதல்ல.

பகவான் என்ற சொல்லுக்கு ஆறு ஐஸ்வர்யங்களையும் முழுவதுமாக உடையவர் என்று பொருளாகும்.
பக – ஆறு ஐஸ்வர்யங்கள். 1. ஆட்சி செய்தல், 2.புண்ணியம், 3. புகழ், 4.செல்வங்கள்,
5. அறிவு, 6. வைராக்கியம்

எல்லா துயரங்களுக்கும் பொதுவான காரணம் இருக்கிறது. அதை நீக்கிவிட்டால் இவைகள் நீங்கிவிடும். இதை நீங்குவதற்கான உபாயம் பகவானால் கூறப்படுகிறது. ஒவ்வொருவரும் சூழ்நிலைகளால் துயரத்தை அனுபவிக்கின்றார்கள்.

1.       நான் சம்சாரத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கின்றேன் என்று அறிந்து கொள்ளுதல்,
2.       இதிலிருந்து விடுதலையடைய வேண்டும் என்ற விருப்பம்,
3.       இது என்னுடைய புத்தியின் துணைக்கொண்டு நீக்க முடியாது என்று உணர்தல்,
4.       இதை நீக்குவதற்கு குருவிடம் சென்றடைதல்

மேற்கூறிய நான்கு நிலைகளில், நான்காவது நிலையை அடைந்தவன் கீதையை படிக்க வேண்டும், உபதேசமாக பெற வேண்டும் என்ற விருப்பம் உடையவனாவான். 

சோகமும், மோகமும் சம்சார ஸ்வரூபமாக இருக்கின்றது என்பதை முதல் அத்தியாயம் உரைக்கின்றது.

क्लैब्यं मा सम गमः पार्थ नैतत्त्वय्युपपद्यते ।
क्षुद्रं हृदयदौर्बल्यं त्यत्तवोत्तिष्ट परन्तप ॥ 03 ॥
ஹே பார்தா! நீ மனசோர்வு அடையாதே. இந்த தன்மை உனக்கு பொருந்தாது. கீழ்மையான மனதினுடைய பலவீனத்தை விட்டு விட்டு நீ எழுந்திரு.
க்லைப்3யம் – கோழை, ஆண்மையற்றவன்

अर्जुन उवाच ।
कथं भीष्ममहं सङ्ख्ये द्रोणं च मधुसूदन ।
इषुभिः प्रतियोत्स्यामि पूजार्हावरिसूदन ॥ 04 ॥
அர்ஜுனன் கூறுகிறான்.
ஹே மதுசூதனா! எப்படி பீஷ்மரையும், துரோணரையும் இந்தப் போரில் அம்புகளை  அவர்கள் மீது எய்த முடியும்.  அவர்களிருவரும் வணங்குவதற்குரியவர்கள் அவர்களை என்னால் எப்படி கொல்ல முடியும்? ஹே ஹரிஸூத3னா!

गुरूनहत्वा हि महानुभावन् श्रेयो भोक्तुं भैक्ष्यमपीह लोके ।
हत्वार्थकामांस्तु गुरूनिहैव भुञ्जीय भोगान् रूधिरप्रदिग्धान् ॥ 05 ॥
இவர்களை கொன்று இந்த போரில் வென்று அவர்கள் ரத்தம் தோய்ந்த அரசபோகத்தையும், செல்வத்தையும், இன்பங்களையும்தான் நான் அனுபவிக்க முடியும்.  அவர்கள் அழிவினால் அடையும் போகங்கள் எனக்கு வேண்டாம். இது அவனிடத்தில் உள்ள வைராக்கியத்தை காட்டுகிறது.

न चैतद्विद्मः कतरन्नो गरीयो य्द्वा जयेम यदि वा नो जयेयुः ।
यानेव हत्वा न हिहीविषामः तेऽवस्थिताः प्रमुखे धार्तरष्ट्राः ॥ 06 ॥
போரில் நாம் வெற்றி அடைவது சிறந்ததா அல்லது அவர்கள் நம்மை வெற்றி கொள்வது சிறந்ததா? நாம் எவர்களை கொன்று வாழ்வதற்கும் விருப்பமில்லாமல் இருப்போமோ, அத்தகையவர்கள் திருதாஷ்டிரனைச் சார்ந்தவர்கள் அவர்கள்தான் எதிரே இருக்கின்றார்கள்.

कार्पण्यदोषॊपहतस्वभावः पृच्छामि त्वां धर्मसम्मूढचेताः ।
यच्छॆयः स्यान्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं शाधि मां त्वां प्रपन्नम् ॥ 07 ॥
கர்ப்பண்யம்- சிறுமை, கீழ்மையான தன்னையிழந்த நிலையில்
க்ருபணன் – கஞ்சன், யார் இந்த ஆத்ம தத்துவத்தை தெரிந்து கொள்ளாமல் இறந்து போகின்றானோ அவன் க்ருபணன், தன்னிடத்திலேயே மகிழ்ச்சி அடையாதவன்

நான் கார்ப்பண்யம் என்ற குறையை அடைந்தவனாக இருக்கிறேன். அப்படிப்பட்ட மனதை, தன்மையையுடையவனாகி விட்டேன். எனவே உங்களை நான் கேட்கின்றேன். என் மனமானது, புத்தியானது தர்மத்தில் மிகவும் அறிவற்றவனாக, எது சரி, எது தவறு என்று நிச்சயிக்கும் விஷயத்தில் மூடனாக இருக்கின்றேன். இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை அறியாதவனாக இருக்கின்றேன். எது நிச்சயமான நன்மையாக இருக்கின்றதோ அதை எனக்கு கூறுங்கள் என்று பிரார்த்திக்கின்றான். அதை நிச்சயமாக உறுதியாக சொல்லுங்கள். உங்களுடைய சிஷ்யனாக நான் இதைக் கேட்கின்றேன். உங்களையே சரணடைந்தவனான எனக்கு உபதேசம் செய்யுங்கள், என்னைக் காப்பாற்றுங்கள்.

न हि प्रपस्यामि ममापनुद्याद् यच्छोकमुच्छोषणमिन्द्रियाणाम् ।
अवाप्य भूमावसपत्नमृद्धं रज्यं सुराणामपि चाधिपत्यम् ॥ 08 
எவையெல்லாம் என்னுடைய துயரத்தை நீக்காது என்பதை நான் அறிந்திருக்கின்றேன். எனவே என் சோகத்தை நீக்கக்கூடியதை நீங்கள்தான் உபதேசம் செய்ய வேண்டும். நான் என்னுடைய சோகமானது நீக்கப்படும் என்று நிச்சயமாக பார்க்கவில்லை. என்னுடைய இந்திரியங்களை வாட்டுகின்ற, தகிக்கின்ற சோகம், அடைந்த போதிலும் இந்த பூமி முழுவதுமே பகைவர்கள் இல்லாத ராஜ்ஜியமாக கிடைத்தாலும், செழிப்பான நாடு கிடைத்தாலும், தேவர்களுக்கே தலைவனாக ஆனாலும் என் துயரமானது நிச்சயமாக நீங்காது

நான்குவிதமான தகுதிகளை உடைந்தவன் மோட்சத்தை அடைவதற்கு தகுதி உடையவனாகின்றான். அவைகள்
1.       நித்ய-அநித்ய வஸ்து விவேகம்,
2.       வைராக்கியம் – போகத்தில் விருப்பமின்மை,
3.       நித்யமான வஸ்துவை அடைய வேண்டும் ஆசை இதுவே முமுக்ஷுத்வம்,
4.       ஆறுவிதமான தகுதிகளை சேர்த்து ஒன்றாக கூறப்படுகிறது. (ஶமம், தமம், திதிக்ஷா, உபரம, சமாதானம், சிரத்தை)
ஶமஹ – மனதை வசப்படுத்துதல்,
தமஹ – இந்திரியக் கட்டுப்பாடு,
உபரமஹ – கட்டுபடுத்துவதை தொடர்ந்து சிலகாலம் வைத்திருத்தல்
திதிக்ஷா – பொறுமை, சகிப்புத்தன்மை, பொறுத்துக்கொள்ளுதல்
சிரத்3தா4 – குருவாக்கியத்தில் முழு நம்பிக்கை வைத்தல், சாஸ்திரத்திலும் நம்பிக்கை
சமாதானம் – கட்டுபடுத்திய மனதை எடுத்துக்கொண்ட லட்சியத்தில் வைத்தல்

सञ्जय उवाच ।
एवमुत्तवा हृषीकेशं गुडाकेशः परन्तपः ।
न यॊत्स्य इति वोविन्दमुत्तवा तूष्णीं बभूव ह ॥ 09 ॥
இவ்விதம் கூறி, பகவானிடம் ஐந்து இந்திரியங்களுக்கு தலைவன், உறக்கத்தை வென்றவன் (கு3டாகேசன்), எதிரிகளை வெல்பவன் (பரந்தபஹ), அர்ச்சுனன். நான் போர் புரிய மாட்டேன் என்று பகவானிடம் நிச்சயமாக கூறிவிட்டு அமைதியாக இருந்தான்.

तमुवाच हृषीकेशः प्रहसन्निव भारत् ।
सेनयोरूभ्ययोर्मध्ये विषीदन्तमिदं वचः ॥ 10 ॥
பரதகுல அரசே!
அர்ச்சுனனிடம் பகவான் கூறினார்.  புன்முறுவலுடன் – இரண்டு சேனைகளுக்கும் இடையே இப்பொது இருக்கின்ற, துயரத்துடன் இருக்கின்ற அர்ச்சுனனிடம் பேச ஆரம்பிக்கின்றார்

श्रीभगवानुवाच ।
अशोच्यानन्वशोचस्तवं प्रज्ञावादांश्च भाषसे ।
गतासूनगतासूंश्च ननुशोचन्ति पन्डिताः ॥ 11 ॥
ஶ்ரீபகவான் கூறினார்.
நீ  யோக்கியதை இல்லாத விஷயத்தில் துயரப்படுகின்றாய்  – ஞானியைப் போல் பேசுகின்றாய் –– இறந்தவர்களையும் – இருப்பவர்களையும் குறித்து பண்டிதர்கள் துயரப்படமாட்டார்கள்

ஞானிகள் தங்களிடத்தில் சுபாவாமாக உள்ள ஆத்மஞானத்தினால் எதற்கும் துயரப்படுவதில்லை.  ஆனால் அக்ஞானிகளோ அறியாமையினால் துயரப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

·        நம்முடைய அனுபவத்தில் சோகத்திற்கு எவ்வளவோ காரணங்கள் இருப்பதாக அறிந்திருக்கின்றோம். ஆனால் எப்படி ஆத்மஞானம் என்ற ஒன்றானது துயரங்கள் அனைத்தையும் நீக்க முடியும்.
·       பொதுவாக நமக்கு நெருங்கியவர்களுக்கு ஏற்படும் மரணம் நம் சோகத்திற்கு காரணமாக இருக்கின்றது.
·       மரணம் எங்கு நடந்தாலும் நமக்கு துயரம் கொடுப்பதில்லை. நமக்கு நெருங்கியவர்களின் மரணம் துயரத்தைக் கொடுக்கின்றது.
·       நான், என்னுடையது எங்கே சம்பந்தப்படுகின்றதோ அந்த சூழ்நிலைகள்தான் சோகத்திற்கு காரணமாகி விடும்.
·       துயர சம்பவங்களிலிருந்து நான் என்னுடையது என்பதை நீக்கிவிட்டல் நமக்கு துயரத்தை கொடுக்காது.
·       நான் என்ற சொல்லுக்கு நாம் புரிந்து கொள்வது உடலும், மனமும்தான் இந்த தவறான அறிவை நீக்கி, நான் இவைகள் அல்ல என்று புரிந்து கொள்ள வேண்டும்.

ஆத்ம ஞான விசாரம்
சூழ்நிலைகள் துயரம் கொடுப்பதில்லை. நாம்தான் அதற்குக் காரணம் என்று புரிந்து கொள்ள வேண்டும். எனவே நம்மைப் பற்றிய அறியாமைதான் இதற்கு காரணம் என்று தெரிந்து கொள்வோம். எந்த சூழ்நிலையானது நான் என்னுடையது என்று சம்பந்தபட்டிருக்கின்றதோ அதிலிருந்து துயரத்தை அடைந்தே தீருவோம்.

தேஹம், சரீரம், அனாத்மா என்று அழைக்கப்படுகின்ற உடலும், இதை அறிகின்ற தேஹி, சரீரி என்று அழைக்கப்படுகின்ற ஆத்மாவும் சேர்ந்துதான் நான் அல்லது ஜீவன் என்று அறிந்திருக்கின்றோம். ஜீவனுக்கு மூன்று சரீரங்கள் உண்டு. ஸ்தூல, சூட்சும, காரண சரீரம் ஆகியவைகளாகும்.  கண்ணுக்கு தெரிகின்ற உடல், ஸ்தூல சரீரம், கண்ணுக்கு தெரியாது ஆனால் நமக்குள்ளே இருக்கின்ற மனமே சூட்சும சரீரம், ஞானேந்திரியங்களின் சக்தியை நம்மால் பார்க்க முடியாது. எனவே இவைகளும் சூட்சும சரீரத்தின் அங்கங்களாகின்றது.  கர்மேந்திரியங்கள் செயல்கள் செய்வதற்காக இருக்கின்றது.  அந்த சக்திகளும் சூட்சும சரீரத்தில் அடங்கும். காரண சரீரம், ஸ்தூல, சூட்சும சரீரங்களுக்கு காரணமாக இருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றது.  இதை அவ்யக்தம் என்றும் அழைக்கப்படுகின்றது. வெளித் தோற்றத்திற்கு வராத நிலையில் இருப்பது இந்த சரீரம். உடலும், மனமும் அவரவர்கள் செய்த கர்ம பலன்களான புண்ணிய-பாவங்களால் அடையப்படுகின்றது.  பாவ-புண்ணியங்களின் இருப்பிடமாகவும், எப்பொழுது தோன்றியது என்று சொல்ல முடியாது, அழிவே கிடையாது.  ஆத்மஞானத்தின் மூலத்தினால் மட்டும்தான் இது அழிவை அடையும்.

ஆத்மா இந்த மூன்று சரீரத்தையும் அறிபவன். மூன்று சரீரங்களும் அறியப்படும் பொருளாகின்றது, ஜடமாகவும்  இருக்கின்றது.  ஆத்மா   அறிவு ஸ்வரூபமாக இருக்கின்றது. சித் என்றும் சாஸ்திரம் அழைக்கின்றது.

न त्वेवाहं जातु नासं न त्वं नेमे जनाधिपाः ।
न चैव न भविष्यामः सर्वे वयमतः परम् ॥ 12 ॥
ஆத்மா நிலையானது என்பது இதன் மையக் கருத்து.  அனாத்மா அநித்யம். நான் எப்பொழுது இல்லாமல் இருந்தேன் என்பது இல்லை.  அதேபோல நீயும் எப்பொழுதாவது இல்லை என்பதும் இல்லை.  மேலும் இந்த அரசர்கள் எப்பொழுதாவது இல்லாமல் இருந்தார்கள் என்பதும் இல்லை. இந்த தேகத்தின் நாசத்திற்குப் பிறகு நாம் அனைவரும் இல்லாமல் போவோம் என்பதும் கிடையாது. இதிலிருந்து ஆத்மா நிலையானது என்றும் இருப்பது என்று அறிந்து கொள்ள வேண்டும்.

देहिनोऽस्मेन्यथा देने कौमारं यौवनं जरा ।
तथा देहन्तरप्राप्तिर्धीरस्तत्र न मुह्यति ॥ 13 ॥
ஆத்மா நிர்விகாரம் மாற்றமடையாதது என்பது இதன் மையக்கருத்து. அனாத்மா சவிகாரம் அதாவது மாற்றத்திற்குரியது.

சூட்சுமமான விஷயங்கள் தன்னை பிரதிபலிக்கும் தன்மையையுடையது.  ஆத்மாவின் பிரதிபிம்பம் மனதில் இருக்கின்றது.  உதாரணமாக கண்ணாடியில் பிரதிபலிக்கும் சூரியன், இரண்டாக தெரிகின்றது. இதன் உதவியால் கண்ணாடி பிரகாசமாக தோற்றமளிக்கிறது. அதேபோல ஆத்மா மனதில் பிரதிபலிப்பதால் மனம் பிரகாசிக்கிறது. இதை சிதாபாஸம் என்று கூறுவர். ஆபாஸம் என்பதற்கு அதைப்போல என்று பொருள். 

உடலுக்கு குழந்தைப்பருவம், இளமை, வயோதிகம் என்ற மாற்றங்கள் வருகின்றது.  ஆனால் ஆத்மாவுக்கு இந்த மாற்றங்கள் கிடையாது. அதுபோல வேறு உடலையும் எடுக்கின்றது. எனவே விவேகிகள் இதைக்குறித்து மோகப்படுவதில்லை, துயரப்படுவதில்லை.

मात्रास्पशर्स्तु कौन्तेय शीतोष्णासुखदुःखदा:  ।
आगमापायिनोऽनित्यास्तांस्तितिक्षस्व भारत ॥ 14 ॥
ஹே அர்ஜுனா! இந்திரியங்கள் விஷயங்களோடு சம்பந்தப்படும்போது இன்ப-துன்பங்கள், குளிர்-வெப்பம் இவைகளை அனுபவிப்போம்.  நிலையற்ற இவைகள் வந்து போகின்றவைகள்.  எனவே இவைகளை சகித்துக் கொள்ள வேண்டும்.  இவைகளை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.  அறியப்படுகின்ற அனுபவிக்கப்படுகின்ற இந்த உலகம் சுக-துக்கங்களை கொடுக்கும்.

यं हि न् व्यथयन्त्येते पुरुषं पुरुषर्षभ ।
समदुःखसुखं धीरं सोऽमृतत्वाय कल्पते ॥ 15  ॥
நாம் பார்த்து அனுபவிக்கின்ற விஷயங்கள் யாரை பாதிக்கவில்லையோ ஹே அர்ஜுனா! அவனே சுக-துக்கத்தில் சமமாக இருப்பவன், விவேகத்தை உடையவன்! அவன் மோட்சத்திற்கு தகுதியுடையவனாகின்றான்.  (அம்ருதத்வ  - மோட்சத்திற்கு)

नासतो विद्यते भावो नाभावो विद्यते सतः ।
उभयोरपि दृष्टोऽन्तस्त्वनयोस्तत्त्वदशिर्भिः ॥ 16 ॥
ஆத்மா சத்யம், அனாத்மா மித்யா, பிரஹ்மம் சத்யம், ஜகத் மித்யா. மித்யாவுக்கு-இல்லாமைக்கு இருத்தல் இல்லை. இருத்தலுக்கு இல்லாமை கிடையாது. இந்த இரண்டினுடைய தத்துவ நிர்ணயமானதானது பிரம்ம தத்துவத்தை அறிந்தவர்களால் அறியப்படுகின்றது
அஸத்-1. எல்லா காலத்திலும் அனுபவத்திற்கு இல்லாதது – (உ-ம்) முயல்கொம்பு,
2. மித்யா என்பது நம் அனுபவத்திற்கு மட்டும் இருக்கும், ஆனால் உண்மையில் இல்லை. (உ-ம்) கானல் நீர், கயிற்றில் தோன்றூம் பாம்பு
ஸத்யம் – 1. எது மூன்று காலத்திலும் இருக்கின்றதோ அது ஸத், 2.எது எதையும் சார்ந்திராமல் இருக்கின்றதோ
மித்யா – 1.எது நிகழ் காலத்தில் இருக்கின்றதோ அது அஸத், 2. எது வேறொன்றை சார்ந்திருக்கின்றதோ, அது அஸத். (உ-ம்) கயிற்றில் தோன்றுகின்ற பாம்பு உதாரணத்தில் கயிறு மூன்று காலங்களிலும் இருக்கின்றது. அது பாம்பை சாராமல் சுதந்திரமாக இருப்பதால் கயிறு ஸத் என்று புரிந்து கொள்ளலாம்.  பாம்பு நிகழ்காலத்தில் மட்டும்தான் இருக்கின்றது.  அது கயிற்றைச் சார்ந்திருக்கின்றது. எனவே பாம்பை மித்யா என்று புரிந்து கொள்ளலாம். காரணம் – ஸத்யம்; காரியம் – மித்யா

v    நிகழ்காலத்தில் மட்டும் இருப்பதற்கு இருத்தல் என்ற குணத்தைக் கொடுக்கக் கூடாது. அது இல்லாததற்கு சமம்.  மாறிக் கொண்டேயிருந்தும் இந்த உலகத்தை நிலையாக இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் தவறை செய்யக்கூடாது. அது மித்யா என்று புரிந்து கொள்ள வேண்டும்.
v    எது மூன்றுகாலத்திலும் இருக்கின்றதோ அது என்றும் இருந்து கொண்டு இருக்கும். இது அனுபவத்திற்கு வராமல் தற்காலிகமாக இருந்தாலும், இந்த நிலை அதன் மீது வேறொன்றை பார்க்கும்போது நேரிடும், அது இருந்து கொண்டுதான் இருக்கின்றது.

சங்கரரின் விளக்கம்
v  பிரதிக்ஞா – சீதோஷ்ணம், சுக-துக்கம் போன்ற இரட்டைகளை கொடுக்கின்ற உடல், உலகம் அனைத்தும் மித்யா, அவைகளுக்கு காரணமானவைகளும் மித்யா.
v  இவைகள் மாற்றத்தை அடைவதனால்
v  இதனால் சூன்ய வாதம் வந்துவிடாதா?
v  நாம் அடையும் அறிவில் இரண்டு அம்சங்கள் இருக்கின்றது. அவைகள் அறிவு, இருத்தல். உதாரணமாக புத்தகம் இருக்கின்றது என்ற வாக்கியத்தில் புத்தகம் என்பது அறிவு, இருக்கின்றது என்பது இருத்தலை குறிக்கின்றது. இங்கே அறிவு அஸத், இருத்தல் என்பது ஸத் என்று புரிந்து கொள்ள வேண்டும்.  இவ்வாறு யோசிக்கும்போது இருத்தல் என்பது தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது. அறிவானது மாறிக்கொண்டே இருக்கின்றது. மாறாமல் இருக்கின்ற இருத்தலே பிரம்மன்.
v  பானை இருக்கின்றது என்பதில் உள்ள இருத்தல் உடைந்ததும் இருத்தலும் சென்று விடுகின்றதோ என்று வினவினால், அந்த இருத்தல் வேறொன்றுக்கு சென்று விடுகின்றது. உடைந்த பானைக்கு அருகில் உள்ள துணியைப்பார்த்து துணி இருக்கின்றது.
v   பானை என்பதும் தொடர்ந்து இருக்கின்றதே! ஒரு பானை உடைந்தாலும் வேறொரு பானையைப் பார்த்து சொல்லலாமே! பானைக்கு பதில் துணியைப் பார்க்கும் போது பானையில் உள்ள இருத்தல் துணிக்கு சென்று விடுகின்றது. அப்போது பானை என்று புத்தி இருப்பதில்லை.  ஆனால் இருத்தல் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கின்றது.
v    உடைந்த பானையில் இருத்தல் தெரியவில்லையே! ஸத்தை அனுபவிக்க வேண்டுமென்றால் அதற்கு நாமரூபம் தேவைப்படுகின்றது வெளிச்சத்தை பிரதிபலிக்கும் பொருளிருந்தால்தான் அதை பார்க்க முடியும். அதை நேரிடையாக பார்க்க முடியாது
v    எப்படி ஒரே இடத்தில் ஸத்தும், அஸத்தும் இருக்க முடியும்? இருளும், ஒளியும் சேர்ந்திருக்காதல்லவா? இவையிரண்டும் சேர்ந்திருக்காது. ஆனால் மித்யாவும், ஸத்தும் ஒரெ இடத்தில் இருக்கலாம். அஸத்தான பாம்பு, ஸத்தான கயிறும் ஒரே இடத்தில் தோன்றுவதை போல இவையிரண்டும் இருக்கின்றன.

अविनशि तु तद्विद्धि येन सर्वमिदं ततम् ।
विनाशमग्ययस्यास्य न कश्चित्कर्तुमर्हति ॥ 17 ॥
ஆத்மா எங்கும் வியாபித்திருக்கின்றது.  அனாத்மா ஒரு இடத்தில்தான் வியாபித்து இருக்கிறது. இது இந்த ஸ்லோகத்தின் மையக் கருத்து. ஆத்மாவை அழிக்கவே முடியாதுகாலத்தையும், இடத்தையும் பிரிக்க முடியாது. ஓரிடத்தில் ஒரு காலத்தில் ஒன்றுதான் இருக்க முடியும். ஆத்மா மூன்று காலத்திலும் இருப்பதால் அது எல்லா இடத்திலும் இருப்பதாக அறிந்து கொள்ள முடிகின்றது.  ஆத்மாவானது உருவமற்றதாக இருப்பதாலும் எங்கும் இருக்கின்றது. இதிலிருந்து அது இரண்டற்றதாகத்தான் இருக்க வேண்டும் என்ற அறிவையும் அடையலாம்.

ஸ்லோக விளக்கம்
ஆத்மாவை அறியாதது என்று தெரிந்துக் கொள். ஆத்மா எல்லாவற்றையும் வியாபித்துக் கொண்டிருக்கின்றது.  இந்த மாற்றமடையாதிருக்கும் ஆத்மாவை யாருக்கும் அழிக்கும் சக்தி கிடையாது.

சங்கரர் விளக்கம்
எவைகளுக்கு உறுப்புக்கள் இருக்கின்றதோ அதற்குத்தான் சீர்கேடு வருகின்றது. பிறகு முழுவதுமாக அழிந்துவிடும்.  ஆத்மாவுக்கு உறுப்புக்களில்லாததினால் அழிவு கிடையாது.  மாறாது அன்பு வைத்திருக்கும் பொருளோ, மனிதனோ விட்டுப்போனால் அது அவரையே அழித்துவிடும்.  தன்னை சார்ந்தது என்று நினைத்து விட்டோமானால் அதன் அழிவு அவனை சீர்கேட்டை கொண்டுவரும்.  ஆனால் ஆத்மா எதையும் சார்ந்தில்லாதிருப்பதால் அதற்கு சீர்கேடு, தேய்வு எதுவும் வராது.

अन्तवन्त इमे देहा नित्यस्योक्ताः शरीरिणः ।
अनधिनोऽप्रमेयस्य तस्मद्युध्यस्व भारत  ॥ 18 ॥
ஜகத் – பிரவாக நித்யம் – மாறிக்கொண்டேயிருந்துக் கொண்டிருக்கும்
ஆத்மா – கூடஸ்த நித்யம் – மாறாமல் இருந்து கொண்டிருப்பது

அழியக்கூடிய இந்த உடல்கள் அழியாமல் இருந்து கொண்டிருக்கின்ற ஆத்மாவில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்றது.  ஆத்மாவை இந்திரியங்களாலும், வாக்கு, மனம் இவைகளால் கிரகிக்க முடியாது. ஆகவே அர்ஜுனா! போரைத் தொடங்கு, போர் செய், என் கடமையை செய்.

य एनं वेत्ति हन्तारं यश्चैनं मन्यते हतम्
उभौ तौ न विजानीतो नायं हन्ति न हन्यते ॥ 19 ॥
கர்த்தா என்பவன் செயலை செய்பவன், நான் செய்தேன் என்று எண்ணுவது அகங்காரம். செயலினால் வரும் பலன்கள் திருஷ்டபலன், அதிருஷ்ட பலன் (கண்ணுக்கு தெரியாத பலன் பாவ-புண்ணியங்கள்).  தானம் செய்யும்போது நம்மிடம் உள்ள செல்வம் வேறொருவருக்கு செல்வது திருஷ்ட பலன், அதனால் விளையும் புண்ணியம் அதிர்ஷ்ட பலன்.  இந்த பாவ-புண்ணியங்களை அடைந்தவனுக்கு சுக துக்கங்களாக ஒரு காலத்தில் கிடைக்கப்பெறும். இதிலிருந்து அறிந்து கொள்வது யார் கர்த்தாவாக இருக்கின்றானோ; அதன் பலனை அனுபவிப்பவனாகவும் அவனேதான் இருப்பான். இவன் இவ்வாறு சம்சாரத்திலே இருந்து கொண்டிருப்பான்.

ஸ்லோக விளக்கம்
எவனொருவன் ஆத்மாவை கொலை செய்பவனாக அறிகின்றானோ, கர்த்தாவாக அறிகின்றானோ, மேலும் இந்த ஆத்மா கொல்லப்பட்டதாக நினைக்கின்றானோ, போக்தாவாக நினைக்கின்றானோ இவ்வாறு இரண்டுவிதமாக ஆத்மாவை நினைப்பவர்கள், ஆத்ம தத்துவத்தை அறியவில்லை. இந்த ஆத்மா யாரையும் கொல்லாது, யாராலும் கொல்லப்படுவதில்லை.

न जायते म्रियते वा कदाचिन् नायं भूत्वा भविता वा न भूय:  ।
अजो नित्यः शश्वतोऽयं पुराणो न हन्यते हन्यमाने शरीरे ॥ 20 ॥
ஆத்ம ஆறுவிதமான மாற்றங்கள் இல்லாதது.  ஸ்தூல சரீரம் ஆறுவிதமான மாற்றங்களை உடையதாக இருக்கின்றது. அவைகள் 1. இருத்தல், 2.பிறத்தல், 3.வளர்தல், 4.மாறுதல், 5.தேய்தல், 6.அழிவடைதல்

ஸ்லோக விளக்கம்
ஆத்மாவுக்கு பிறப்பில்லை, இறப்புமில்லை, எல்லா காலத்திலும் இருப்பது. ஒரு காலத்தில் தோன்றி மீண்டும் இல்லாமல் போனது என்பது கிடையாது. இது இல்லாமல் இருந்து மீண்டும் தோன்றியது என்பது கிடையாது.
அஜஹ – பிறக்காதது; நித்யஹ – என்றும் இருப்பது
சாஸ்வதம் – தொடர்ந்து இருப்பது
அயம் புராணவ – மாறாமல் இருப்பது
இந்த உடலானது கொல்லப்பட்டாலும், ஆத்மா சொல்லப்படுவதில்லை

वेदाविनाशिनं नित्यं यएनमहमव्ययम् ।
कथं स पुरुषः पार्थ कं घातयनि हन्ति कम् ॥ 21 ॥
ஆத்மா கர்த்தாவும் அல்ல; செயல் செய்ய தூண்டுவதாகவும் இல்லை. செயலை செய்விப்பவன், ஹேதுகர்த்தா என்றும் கூறுவர்.
ஸ்லோக விளக்கம்
யாரொருவன் ஆத்மாவை அழியாதது, என்றும் உள்ளது.  பிறப்பற்றது, மாற்றத்தை அடையாதது (அவ்யயம்) என்று அறிகின்றானோ, அவன்  யாரை கொல்வான், கொலை செய்ய தூண்டுவான், யாரையும் கொல்லவும் மாட்டான், கொலை செய்யவும் தூண்டவும் மாட்டான். ஞானியானவன் தானும் எந்த செயலும் செய்யமாட்டான். யாரையும் செயலில் ஈடுபட வைக்கமாட்டான். ஞானி ஆத்மாவாக இருப்பதல் இந்த லக்ஷணம் ஆத்மாவிற்கும் செல்கிறது.

ஞானிக்கு கர்மம் செய்வதிலிருந்து விடுதலையளிக்கிறது சாஸ்திரம். எந்த கடமைகளும் அவனுக்கு கிடையாது

नवानि गृह्णाति नरोऽप्राणि ।
तथा शरीराणि विहाय हीणार्न्यन्यानि स्ंयाति नवानि देही ॥ 22 ॥
ஆத்மா எந்தவித மாற்றமும் அடையாதது.  காரண சரீரம் என்பது கர்ம பலன்களின் இருப்பிடமாக இருக்கின்றது. இது புதியதாக தோன்றவில்லை. வெளிப்பட்ட பிராரப்த கர்ம பலனை, செயலுக்கு வந்த கர்ம பலனை அனுபவிக்க ஒரு ஸ்தூல உடலை அடைகின்றது.  இதை போக ஆயதனம் என்றும் கூறுவர். இவ்வாறு பிராரப்த பலனுக்கேற்ப விதவிதமான உடலை அடைகின்றான். ஆனால் எல்லா காலத்திலும் மாறாமல் இருக்கின்றது.

ஸ்லோக விளக்கம்
பழைய, கிழிந்த ஆடைகளை எப்படி ஒருவன் விட்டுவிட்டு வேறு புதிய ஆடையை அணிகின்றானோ அதுபோல இந்த ஜீவாத்மா தானிருக்கின்ற உடலின் ஆயுள் முடிந்தவுடன் அதை விட்டுவிட்டு வேறு புதிய உடலை அடைகின்றது. இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது ஆத்மாவுக்கு எந்த விதமான மாற்றமும், அழிவும் கிடையாது.

नैनं  छिन्दन्ति शस्त्राणि नैनं दहनि पावकः ।
न चैनं क्लेदयन्त्यापॊ न शोषयति मारुतः ॥ 23 ॥
ஆயுதங்களால் ஆத்மாவை வெட்டமுடியாது, நெருப்பாலும் இதை அழிக்க முடியாது, நீராலும், காற்றாலும் இதை அழிக்க முடியாது. ஆத்மாவுக்கு எந்த விதத்திலும் அழிவு கிடையாது.

अच्छेद्योऽयमदाह्योऽयमक्लेद्योऽशोष्य एव च ।
नित्यः सर्वगतः स्थाणुरचलोऽयं सनातन:  ॥ 24 ॥
நிச்சயமாக ஆயுதங்களால் ஆத்மாவை வெட்டபட முடியாததாகவும், நெருப்பால் எரிக்கப்பட்ட முடியாததாகவும், நீராலும் நனைக்க முடியாததாகவும், காற்றால் உலர்த்திட முடியாததாகவும் இருக்கின்றது. இது நிலையானது எல்லாவிடத்திலும் வியாபித்திருக்கின்றது (ஸர்வகதஹ) ஒரே இடத்தில் உறுதியாக இருக்கின்றது. அசைவற்றதாகவும் இருக்கின்றது (அசைலம்) காரணமற்றது (ஸனாதனம்)

अव्यक्तोऽयमचिन्त्योऽयमविकार्योऽयमुच्यते ।
त्स्मादेवं विदित्वैनं नानुशोचितुमर्हसि ॥ 25 ॥
ஆத்மா வெளிதோற்றத்திற்கு வராதது, இந்திரியங்களால் கிரகிக்க முடியாது, மனதினாலும் கிரகிக்க முடியாது(அசிந்த்யஹ).  மாற்றத்திற்குட்படாதது(அவிகாரியம்),  இது காரியமும் அல்ல, அதாவது எதனிடமிருந்தும் உற்பத்தியாகவில்லை என்று உபநிஷத்தில் சொல்லப்படுகின்றது. ஆகவே இவ்விதம் ஆத்மாவை அறிந்தால் துயரப்படுவதற்கு எந்தவிதமான அவசியமும் கிடையாது.

अथ चैनं नित्यहातं नित्यं वा मन्यसे मृतम् ।
तथापि त्वं महबाहो नैवं शोचितुमर्हसि ॥ 26 ॥
ஒருவேளை இந்த ஆத்மா  பிறப்பதாகவும், இறப்பதாகவும். நீ நினைத்தாலும் கூட மேலும் ஆத்மா மீண்டும் மீண்டும் பிறப்பதாகவும், இந்த ஸ்தூல உடல் பிறக்கும் போது பிறப்பதாகவும், இறப்பதாகவும் நீ கருதினால் அப்போது கூட நீண்ட கைகளுடைய அர்ஜுனா! இவ்விதம் துயரப்பட வேண்டிய அவசியம் இல்லை.

जातस्य हि ध्रुवो मृत्युर्ध्रुवं जन्म मृतस्य च ।
तस्मादपरिहार्येऽर्थे न त्वं शोचितुमर्हसि ॥ 27 ॥
எந்தவொன்று பிறக்கின்றதோ அதற்கு மரணம் என்பது நிச்சயம். எவையெல்லாம் இறந்து விடுகின்றதோ அவைகளுக்கு பிறப்பு என்பது நிச்சயம். ஆகவே பரிகாரம் இல்லாத விஷயத்தில், மாறாத விஷயத்தில், மாற்ற முடியாத விஷயத்தில் நிச்சயமாக நடக்கும் என்ற விஷயத்தில் நீ துயரப்பட வேண்டிய அவசியமில்லை.

अव्यक्तादीनि भूतानि ग्यक्तमध्यानि भारत ।
अव्यक्तनिधनान्येव तत्र का परिदेवना ॥  28 ॥
இதில் பிறப்பு, இறப்பின் லக்ஷணம் கூறப்படுகிறது.
அவ்யக்தம் – வெளித்தோற்றத்திற்கு வராத நிலை
வ்யக்தம் – வெளித்தோற்றத்திற்கு வந்த நிலை
இருப்பதை யாராலும் அழிக்க முடியாது, உருமாற்றம் செய்யலாம். அதேபோல இல்லாததை தோற்றுவிக்க முடியாது
எல்லா ஜீவராசிகளின் சரீரங்கள் முதலில் வெளித்தோற்றத்திற்கு வராமல் இருந்தது. இடையில் வெளித்தோற்றத்திற்கு வந்தது. ஹே அர்ஜுனா! இறுதியில் மீண்டும் அவ்யக்தத்திற்கு செல்கின்றது. இப்படி இருக்கும்போது எதற்கு மன வேதனைப்பட வேண்டும்.

आश्चर्यवत्पस्यति कश्चिदेनम् आश्चर्यवद्वदति तथैव चान्य झ् ।
आश्चर्यवच्चैनम्न्यः शृणोति श्रुत्वाप्येनं वेद न चैव कश्चित् ॥ 29 ॥
ஆத்ம ஞானத்தின் பெருமையைக் கூறுகின்றது.
·         ஆத்ம தத்துவத்தை புரிந்து கொள்வது மிகவும் கடினம், இது அசாதாரணமானது
·         இந்த தத்துவத்தை உபதேசிக்கும் குருவும் அரிதாக இருப்பார்கள்
·         இந்த தத்துவத்தை கேட்கின்ற சிஷ்யர்களும் மிகவும் அரிது
·         ஆஶ்சர்யம் – சூட்சுமமானது, அரிதானது, அசாதாரணமானது,
துர்லபம் – அரிதானது, துர்போதம் – கடினமானது

ஸ்லோக விளக்கம்
ஆத்ம ஞானம் அசாதாரணமானது, எனவே அதை அடைவதற்கு கடினம், அசாதாரண முயற்சி தேவை. ஆத்மஞானத்தை அடைந்த ஞானியும் ஆஶ்சர்யம். ஆத்ம தத்துவ உபதேசமும் அசாதாரணமானது (ஆஶ்சர்யம்)

சிலர் இந்த ஆத்மாவை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள், இதை அறிதல் ஆச்சரியம் என்று கருதுகின்றான். ஏனென்றால் இது அசாதாரணமானது, கடினமானது. இதை அறிபவனும் வெகு சிலரே (துர்லபம் – அரிது). மேலும் சிலர்தான் இதை உபதேசம் செய்கின்றார்கள். இந்த ஆத்ம உபதேசம் மிகவும் அசாதாரணமானது.  இதை கேட்பதும் அசாதாரணமானது, கேட்பவர்களும் சிலரே. சிலர் இதைக்கேட்டாலும் கூட புரிந்து கொள்வதே இல்லை.  எனவே இதை அறிவை முழுமுயற்சியுடன் அடைய முடியும். நம்மிடத்து உள்ள தீயபண்புகளை நீக்க வேண்டும். மனத்தூய்மை பெற வேண்டும்.

देही नित्यमवध्योऽयं देहे सर्वस्य भारत ।
तस्मात्सवार्णि भूतानि न त्वं शोचितुमर्हसि ॥ 30 ॥
தேஹி-ஆத்மா, 
எல்லா உடல்களிலும் உள்ள இந்த ஆத்மாவானது  அழிக்கப்படாதது. அனைத்து தேகங்களும் அழிந்தாலும் கூட இந்த ஆத்மா அழியாது. ஹே அர்ஜுனா! ஆகவே எல்லா ஜீவராசிகளையும், உயிரினங்களையும் குறித்து நீ துயரப்பட அவசியம் இல்லை

स्वधर्ममपि चावेक्ष्य न विकम्पितुमर्हसि ।
धर्म्याद्धि युद्धाच्छ्रेयोऽन्यत्क्षत्रियस्य न विद्यते ॥ 31 ॥
உன்னுடைய ஸ்வதர்மத்தின் அடிப்படையில் பார்த்தாலும் நீ கலங்கத் தேவையில்லை. தயங்கத் தேவையில்லை. தர்மத்திலிருந்து விலகாமல் போர் புரிவதைத் தவிர வேறு நன்மை சத்திரியனுக்கு கிடையாது. இது மனத்தூய்மையைக் கொடுக்கும். 
விகம்பிதம்  - கலக்கம், தயக்கம்

यदृच्छया चोपपन्नं स्वर्गद्वार्मपावृतम् ।
सुखिनः क्षत्रियाः पार्थ लभन्ते युद्धमीदृशम् ॥ 32 ॥
தர்மயுத்தம் செய்யும் வாய்ப்பு உனக்கு தானாக, உன்னுடைய முயற்சியின்றி கிடைத்திருக்கின்றது. இந்த யுத்தம் சொர்க்கத்தின் வாயிலை திறப்பதற்கு உதவும் அதிர்ஷ்டமுடைய சத்திரியர்களுக்குத்தான் இப்படிபட்ட போர் செய்யும் வாய்ப்பு கிடைக்கின்றது.

अथ चेत्त्वमिमं धर्म्यं संग्रामं न करिष्यासि ।
ततः स्वधर्मं कीर्तिं च हित्वा पापमवाप्स्यसि ॥ 33 ॥
ஒருவேளை நீ இந்த தர்மத்திற்குட்பட்ட போரை செய்யவில்லையென்றால், அதன் விளைவாக உன்னுடைய ஸ்வதர்மத்தினால் அடையும் புகழை இழந்து பாவத்தை அடைவாய். இகழ்ச்சிதான் வந்து சேரும், நரகத்தைத்தான் அடைவாய்

अकीर्तिं चापि भूतानि कथयिष्यन्ति तेऽव्ययाम् ।
स्म्भावितस्य चाकीर्तिर्मरणादतिरिच्यते ॥ 34 ॥
எல்லா மனிதர்களும் உன்னை நெடுநாள் இகழ்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். பெரும் புகழையும், மரியாதையையும் அடைந்த உனக்கு இது மரணத்தை விட மோசமானது

भयाद्रणादुपरतं संस्यन्ते त्वां महारथाः ।
येषां च त्वं बहुमतो भूत्वा यास्यसि लाघवम् ॥ 35 ॥
நீ இரக்கத்தினால் போரிலிருந்து விலகிவிட்டாய் என்று யாரும் நினைக்கமாட்டார்கள் போருக்கு பயந்து விலகிவிட்டாய் என்று போர்வீர்ர்கள் கூறுவார்கள். நீ யாரிடத்தில் எல்லாம் பெரும் மதிப்பை அடைந்தாயோ அவர்களிடத்திலெல்லாம் சிறுமைபட்டு போய்விடுவாய்.

अवाच्यवादांश्च बहून्वदिष्यन्ति तवाहिता: ।
निन्दन्तस्तव सामर्थ्यं ततो दुःकतरं नु किम् ॥ 36 ॥
உன்னுடைய பகைவர்கள் உன்னைப்பற்றி மோசமாக பலவிதமாக பேசுவார்கள், உன்னுடைய வீரத்தை தாழ்த்தி பேசுபவர்கள். இதை கேட்பதைக் காட்டிலும் வேறெந்த துயரம் இருக்குமா அர்ஜுனா!

हतो वा प्राप्स्यसि स्वर्गं जित्वा वा भोक्ष्यसे महीम् ।
तस्मादुत्तिष्ट कौन्तेय युद्धाय कृतनिश्चयः ॥ 37 ॥
இந்தப் போரில் கொல்லப்பட்டால் சொர்க்கத்தை அடைவாய். வெற்றி அடைந்தால் இந்த பூமியை அனுபவிப்பாய். ஹே அர்ஜுனா! ஆகவே எழுந்திரு, போர் புரிவதற்கு நிச்சயம் செய்தவனாக கடமையை செய்ய எழுந்திரு.

सुखदुःखे समे कृत्वा लाभालाभौ जयाजयौ ।
ततो युद्धाय युज्यस्व नैवं पापमवाप्स्यसि ॥ 38 ॥
சுக-துக்கங்களையும், லாப-நஷ்டத்தையும், வெற்றி-தோல்வி இவைகளை விருப்பு வெறுப்பில்லாமல் சமமாக பாவித்து கடமையை செய்வாயாக, போர் புரிவாய். இதனால் பாவத்தை அடைய மாட்டாய்

एषा तेऽभिहिता साङ्ख्ये बुद्धिर्योगे त्विमां शृणु ।
बुद्धया युक्तो यया पार्थ कर्मबन्धं प्रहास्यसि ॥ 39 ॥
இந்த அறிவானது உனக்கு சொல்லப்பட்டது. இதுவரை ஆத்ம தத்துவத்தை பற்றிய விஷயத்தை கூறப்பட்டது. இனிமேல் கர்மயோகத்தை பற்றிய உபதேசத்தை செய்யப் போகின்றேன் அதைக் கவனமாக கேள்.  பார்த்தா! எந்த பாவனையுடன் பொருந்தியவனாக இருந்தால், கர்ம பந்தத்திலிருந்து விடுதலையடைவாய் என்பதையும்  உபதேசம் செய்யப் போகின்றேன் அதையும் கவனமாக கேள்.

ஸ்லோகம் 40 முதல் ஸ்லோகம் 46 வரை கர்மயோகத்தின் பெருமையை கூறுகிறார்.

नेहाभिक्रमनशोऽस्ति प्रत्यवायो न विद्यते ।
स्वल्पमप्यस्य धर्मस्य त्रायते महतो भयात् ॥ 40 ॥
கர்மயோகத்தில் தோல்வி என்பதே கிடையாது.  கர்மத்தில் தோல்வி இருக்கும். கர்மயோகத்தில்  விபரீத பலன்(ப்ரத்யவாய) வரவே வராது. ஆனால் கர்மத்தில் வரலாம். கர்மயோகமாக சிறிதளவு செய்தாலும் பலன் வரும், ஆனால் கர்மத்தில் முழுவதும் செய்தால்தான் பலன் கிடைக்கும். பெரிய பயத்திலிருந்து காப்பாற்றப்படுகின்றான். சம்சார பயத்திலிருந்து விடுவிக்கப்படுகின்றான்.  தோல்விகளைப் பற்றிய பயம், எதிர்மறைவான பலன் வந்துவிடுமோ என்ற பயம். இதுவரை செய்த முயற்சி போதுமோ என்ற பயம் போன்ற பயங்களிலிருந்து விடுதலை கிடைக்கும்

व्यवसायात्मिका बुद्धिरेकेह क्रुनन्दन ।
बहुशाखा द्यनन्ताश्च बुद्धयोऽव्यवसायिनाम् ॥ 41॥
கர்மயோகியின் புத்தியானது நிலையானதாகவும், உறுதியாகவும் இருக்கும்.
வ்யவஸாயாத்மிக – உறுதியான புத்தி, மனநிலை
வாழ்வின் முடிவான லட்சியத்தை நிச்சயம் செய்து அதிலேயே உறுதியாக இருந்து அதை அடைவதற்கு இதுதான் சாதனம் என்று தெரிந்திருப்பவன்தான் கர்மயோகி.. மோட்சத்தை அடைவதற்கான மார்க்கத்தை அறிந்தவன். கர்மயோகத்தின் மூலம் மனத்தூய்மை அடைந்து ஆத்ம ஞானத்திற்கு தகுதியாகின்றான். கர்மயோகப்படி வாழவில்லையென்றால் அத்தகையவர்களுக்கு சாத்தியம்-சாதனம் முடிவற்றதாக இருக்கும்.

यमिमां पुष्पितां वाचं प्रवदन्त्यविपश्चितः  ।
वेदवादरताः पार्थ नान्यदस्तीति वादिनः ॥ 42 ॥
कामत्मानः स्वर्गपरा जन्मकर्मफलप्रदाम् ।
क्रियाविसेषबहुलां भोगैश्चर्यगतिं प्रति ॥ 43 ॥
भोगैश्वर्यप्रसक्तानां तयपहृतचेतसाम् ।
व्यवसायान्मिका बुद्धिः समधौ न विधीयते ॥ 44 ॥
எந்தக்காரணத்தினால் ஒருவனுடைய மனமானது அலைபாய்ந்து கொண்டு இருக்கின்றது என்பதை பற்றியும், வியவாஸிக புத்தியுடையவனைப்பற்றி பகவான் விளக்குகின்றார்.
அவிபஶ்சிதஹ -  சுயசிந்தனையற்றவர்கள், அறிவிலிகள்,

சுயசிந்தனையற்றவர்கள், அறிவிலிகள் சில வார்த்தைகள் பேசுகின்றார்கள். இந்த  கர்ம காண்டத்திலேயே திருப்தியுடன் இருப்பவர்கள், அதையே பேசிக் கொண்டிருப்பவர்கள், போகத்தை அனுபவிப்பதை தவிர வேறெந்த லட்சியமும் கிடையாது என்று வாதிடுவார்கள். ஆசை ஸ்வருபமாக இருப்பவர்கள். சொர்க்கத்தை முடிவான லட்சியமாக எண்ணிக் கொண்டிருப்பார்கள்.  இவர்கள் கீழ்கண்டவாறு பேசுகின்றார்கள். 

அவர்கள் பேசுகின்ற வார்த்தைகள் கேட்பதற்கு நன்றாக இருக்கும் ஆனால் பயனற்ற வார்த்தைகள்.  கர்மபலனான பிறப்பு-இறப்பைக் கொடுக்கும் வார்த்தைகள். பலவிதமான சாதனங்களை பேசுபவராக அவர்கள் பேச்சிருக்கும். இவர்கள் போகத்திற்காகவும், ஐஸ்வர்யத்திற்காகவும் இவ்வாறு பேசுகிறார்கள். போகத்திலும், ஐஸ்வர்யத்திலும் ஆசையுடையவர்களாக இருப்பவர்கள். இந்த வார்த்தைகளினால் ஈர்க்கப்பட்டு புத்தியை இழந்து இருப்பவனுக்கு நிச்சயமான அறிவான வ்யவஸிகா புத்தியானது இருக்காது.

त्रैगुन्यविषया वेदा निस्त्रैगुण्यो भवार्जुन ।
निर्द्वन्द्वो नित्यसत्त्वस्थो निर्योगक्षेम आत्मवान् ॥ 45 ॥
வ்யவஸாயாத்மிக புத்தியை அடைவதற்காக உபாயத்தை கூறுகின்றார். வேதத்தின் கர்ம காண்டத்தில் சம்சாரத்தைப் பற்றித்தான் பேசப்பட்டிருக்கின்றது.
த்ரைகுண்டா விஷயம் – சம்சார சம்பந்தமான விஷயம், 
மூன்று குணத்தின் விளைவுக்கு த்ரைகுண்யா என்று குறிப்பிடப்படுகின்றது. மனமானது சத்துவ, ரஜோ, தமோ என்று மூன்று குணங்களையுடையது.
சத்துவ குணம் – அறிதல், அமைதி
ரஜோ குணம் – ஆசை, செயல்
தமோ குணம் – மோகம், செயலின்மை, சோம்பல்
இவை மூன்றும் நம்மை பந்தப்படுத்திக் கொண்டிருக்கும்.

நிஸ்த்ரைகுண்யோ பவ – நிஷ்காமமாக இருக்கப் பழகு, சம்சாரத்தில் வைராக்கியத்தோடு இரு.
நிர்த்3ப3ந்தவஹ பவ – இருமைகளைக் கடந்தவனாக இரு. சுகம்-துக்கம் போன்றவற்றில் சமமாக ஏற்றுக்கொள்.
நித்யஸத்வஸ்தஹ பவ - எப்பொழுதும் சத்துவ குணத்தில் இருப்பாயாக. சரியாக சூழ்நிலைகளை புரிந்து கொள்ளுதல், பொறுமையாக இருத்தல்
நிர்யோகக்ஷேமஹ பவ – வாழ்க்கைக்கு தேவையானவற்றை மட்டும் சம்பாதிக்க வேண்டும்.  அதைக் காப்பாற்ற வேண்டும். அதிகமாக சம்பாதிப்பதிலும், பாதுகாப்பதிலும் காலத்தை செலவிடாதே.
ஆத்மவான் பவ – கவனமாக இரு. தமோ குணத்திற்கு சென்றுவிடாதே! உன்னிடத்தில் இருப்பவனாக இரு.

यावानर्थ उदपाने सर्वतः सम्प्लुतोदके ।
तावान्सर्वेषु वेदेषु ब्राह्मणस्य विजनतः ॥ 46 ॥
எல்லாவிடத்திலும் நீர் இருக்கும்போது சிறிய நீர்த்தேக்கத்தினால் எவ்வளவு பயன் அடைவான் என்றால் பயனில்லை என்று பொருள். அதேபோல பிரம்மத்தை அறிந்தவனுக்கு முழு வேதத்தினாலும் ஒரு பயனும் இல்லை.

कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन ।
मा कर्मफ,अहेतुर्भूर्मा ते सङ्गोऽस्त्वकर्मणि ॥ 47 ॥
ஒரு செயலை செய்யும்போது எப்படிபட்ட பாவனையோடு செய்ய வேண்டும். அதன் பலனை எப்படி அனுபவிக்க வேண்டும் என்ற பாவனை. இதையே கர்மயோகம் என்று கூறப்படுகிறது. இதற்கு புத்தியோகம் என்ற வேறு பெயரும் உண்டு.

ஒருவனுக்கு செயல் செய்வதற்கு தேர்ந்தெடுக்கின்ற வாய்ப்பு உண்டு, உரிமை உண்டு. கர்மத்தினுடைய பலனில் உரிமையில்லை, செய்த செயலின் விளைவை நிச்சயிப்பதில் உரிமை கிடையாது. கர்மபலன் நம் விருப்பப்படி இருக்காது. கர்மத்தின் பலனை உருவாக்கிக் கொண்டு இருக்காதே. நீ செயலின்மையில் பற்றுக் கொள்ளாதே. அர்ஜுனா! உனக்கு கர்மம் செய்வதற்குத்தான் உரிமையுண்டு. செயலின் பலனில் பற்று வைக்காதே. கர்மம் செய்யும்போது மனதில் சங்கல்பத்தை மேற்கொண்டு பாவ-புண்ணிய பலனை அடையாதே, மனத்தூய்மை அடைவதே நல்லது. செயலின்மையில் பற்றுக் கொள்ளாதே.

योगस्थाः कुरू कर्माणि सङ्गं त्यत्तवा धनञ्जय ।
सिद्धयासिद्धयोः समो भूत्वा समत्वं योग उच्यते ॥ 48 ॥
கர்மயோகத்தின் லட்சணம் இதில் கூறப்படுகின்றது.  ஈஸ்வர அர்ப்பண புத்தியுடன் செய்து, ஈஸ்வரனுடைய பிரசாதமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.  இதுவே கர்மயோக லட்சணம்.
v  நம்முடைய அன்றாடம் செய்ய வேண்டிய செயல்களை, கடமைகளை. ஆசையினால் தூண்டப்பட்டு செய்கின்ற செயல்களை கர்மயோகமாக செய்ய வேண்டும்
v  சில கடமைகளை விரும்பி செய்வோம், சிலவற்றை விருப்பமில்லாமல் செய்வோம்
v  கடமைகளில் விருப்பு, வெறுப்பின்றி சமநிலையுடன் இருக்கும் மனநிலை. கடமையும் உரிமையும் சேர்ந்தே இருக்கும்
v  நாம் செய்யும் செயல்களினால் வரும் விளைவிலும் சமநிலையுடன் இருக்கின்ற மனநிலை
v  நாம் செய்யும் செயலினால் பலன் கிடைக்காது என்று தெரிந்துவிட்டால் அதை செய்வதை தவிர்த்து விடுவோம். இந்த நிலையில் நாம் இதை ஈஸ்வர அர்ப்பணமாக செய்ய வேண்டும்.  பலன்கள் ஈஸ்வரனால் கொடுக்கப்படுகின்றது என்ற மனப்பாவனையோடு செய்ய வேண்டும்.
v  செயலின் பலனை ஈஸ்வரனிடத்திலிருந்து எதிர்பார்க்க வேண்டும்.
v  காம்ய கர்மத்தினால் அடையும் பலனை ஈஸ்வரனின் பிரசாதமாக அனுபவிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் அந்த போகத்தை நாளடைவில் அனுபவிப்பதை விட்டுவிடுவோம்.
தனஞ்ஜய – ஹே அர்ஜுனா!
ஸமத்வம் யோக: உச்யதே – கர்மயோகத்தில் சமமாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகின்றது.
யோகஸ்த: - கர்மத்தில் சமபாவனை இருப்பவனாக, கர்மயோகத்தில் நிலைப் பெற்றவனாக
குரு கர்மாணி – கர்மங்களை நீ செய்ய வேண்டும்.
ஸங்கம் த்யக்த்வா – பலனில்,  செய்யும் கடமைகளில் பற்றை துறந்து
ஸித்தயாஸித்தயோ ஸமோ பூ4த்வா – செயலின் விளைவு வெற்றி தோல்விகளில் சமமாக பாவித்து கர்மத்தை செய்ய வேண்டும்.

दूरेण ह्यवरं कर्म बुद्धियोगाद्धनञ्जय ।
बुद्धौ शरणमन्विच्छ कृपणाः फलहेतवः ॥ 49 ॥
தனஞ்ஜய – அர்ஜுனா!
தூரேண ஹி அவரம் கர்ம புத்தியோகாத் – பலனில் பற்றுக் கொண்டு செய்யப்படுகின்ற செயல்கள் அனைத்தும் மிகவும் கீழ்த்தரமானது, கர்மயோகத்தின்படி செய்யாத செயல்கள் அனைத்தும் கீழ்மையானது
க்ருபணா பலஹேதவ:- பலனால் தூண்டப்பட்டு செயல் செய்பவர்கள் பரிதாபத்திற்கு உரியவர்கள்.
புத்தௌ ஶரணம் அன்விச்ச2 – எனவே கர்மயோகத்தில் சரணடைவாயாக. கர்மயோகப்படி வாழ்க்கையை வாழ்வாயாக

बुद्धियुक्तो जहतीह उभे सुकृतदुष्कृते ।
तस्माद्योगाय युज्यस्व योगः कर्मसु कौशलम् ॥ 50 ॥
கர்மயோகப்படி வாழ்ந்தால் அடைகின்ற  இறுதியான பலன் இதில் கூறப்படுகிறது.,
புத்தியுக்தஹ புருஹ – கர்மயோகப்படி வாழ்பவன்
இஹ – இந்த சரீரம் இருக்கும்போது, இந்தப்பிறவியிலே
உபே ஸுக்ருதம், துஷ்க்ருதே – புண்ணியங்கள், பாவங்கள் இவைகள் இரண்டையும் கொடுக்கின்ற கர்ம பந்தங்கள் 
ஜகாதி – சென்று விடுகின்றது;
கர்மயோகத்தின் நேரடியான பலன் சித்த ஸுத்தியை (மனத்தூய்மையை) அடைவதாகும். 
தஸ்மாத் யோகாய யுஜ்யஸ்வ  - எனவே கர்மயோகத்தில் உன்னை பிணைத்துக் கொள்வாயாக.
யோக: கர்மஸு கௌஶலம் உச்யதே – செயல்களுக்குள் திறமையானது, பந்தத்திலிருந்து விடுதலையடைவதற்கு உதவும் திறமையுடைய கர்மயோகம் என்று சொல்லப்படுகின்றது.

கர்மத்தினால் எல்லா ஜீவன்களும் பந்தப்படுகின்றன. நாம் செய்யும் செயல் முடிந்தாலும். அது நம் மனதில் விருப்பு-வெறுப்புக்களை பதிவு செய்கிறது. இந்த விருப்பு-வெறுப்புக்கள் மீண்டும் நம்மை செயலில் ஈடுபட வைக்கும்.  இந்த சரீரத்திலே ஜீவன் சுழன்று கொண்டிருப்பான். கர்மயோகத்தில் இந்த விருப்பு – வெறுப்புக்கள் தூண்டுகின்ற செயல்கள் பதிவு செய்வதில்லை. எனவே கர்ம பந்தத்திலிருந்து விடுபடுகின்றான். இதனால் ஞான யோகத்திற்கு தகுதியடைந்து விடுவான். கர்மங்கள் இரண்டு விதத்திலும் பந்தப்படுத்தும், கண்ணுக்கு தெரிகின்ற விருப்பு – வெறுப்புக்களைக் கொடுக்க கூடியது, கண்ணுக்கு தெரியாத பாவ-புண்ணியங்களை கொடுக்க கூடியது. கர்மயோகப்படி செய்யும் செயல்கள் இவையிரண்டையும் கொடுக்காமலிருக்க செய்யும் திறனுடையது.

कर्मजं बुद्धियुक्ता हि फलं त्यक्त्वा वा मनीषिणः ।
जन्मबन्धविनिर्मुक्ताः पदं गच्छन्त्यनामयम् ॥ 51 ॥
புத்தியுக்தா – கர்மயோகப்படி வாழ்பவர்கள்
கர்மஜம் பலம் த்யக்த்வா – கர்மத்திலிருந்து வரும் பலன்களான பாவ-புண்ணியங்களை தியாகம் செய்கின்றார்கள்
மனீஷிணஹ பவந்தி – பிறகு ஞானயோகத்தினால் பிரஹ்ம ஞானத்தை அடைந்து ஞானியாகின்றார்கள்
ஜன்மபந்த4 விநிர்முக்தா: - பிறப்பு-இறப்பு என்ற தளையிலிருந்து விடுபடுகின்றார்கள்
பதம் கச்ச2ந்தி அனாமயம் – மோட்சத்தை அடைகின்றார்கள். பிரம்மத்தோடு ஐக்கியமாகின்றார்கள். குறைவற்ற பதத்தை அடைகின்றார்கள்.
மனீஷா – ஞானம்;  அனாமயம் - குறைவற்ற

यदा ते मोहकलिलं बुद्धिर्व्यतितरिष्यति ।
तदा गन्तासि निर्वेदं श्रोतव्यस्य श्रुतस्य च ।  52 ॥
கர்மயோகத்தின் பலனை அடைந்து விட்டேன் என்பதை எப்படி தெரிந்து கொள்வது தெரிந்து விட்டால் பிறகு கர்மயோகத்தை விட்டுவிட்டு ஞானயோகத்திற்கு செல்லலாம்.
யதா3 தே புத்தி  - எப்பொழுது உன்னுடைய புத்தியானது
மோஹகலிலம் – மோகம் என்கின்ற அசுத்தத்தை
வ்யதிதரிஷ்யதி – கடந்து செல்லுமோ, ஆட்கொள்ளப்படாதிருக்குமோ
ததா3 – அப்பொழுது
ஸ்ரோதவ்யஸ்ய – இனிமேல் கேட்கப்படுகின்ற விஷயத்திலும், அறியப்போவதிலும்
ஸ்ருதஸ்ய ச – ஏற்கனவே கேட்ட விஷயத்திலும், அறிந்த விஷயத்திலும்
நிர்வேதம் கந்தாஸி – அப்பொழுது நீ வைராக்கியத்தை அடைவாய்.

கர்மயோகப்படி வாழ்ந்து வந்தால் புத்தியிலுள்ள மோகத்தை நீக்கிவிடலாம்.  அந்தகரணத்தில் வரும் எண்ணங்களின் அடிப்படையில் மனம், புத்தி என்று இரு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்றை பிரித்துப்பார்ப்பது, தீர்மானிப்பது புத்தியின் சுபாவம். எது தர்மம், எது அதர்மம் என்று பிரித்துப்பார்த்தல், உண்மை-பொய்யை பிரித்தல், நித்யம், அனித்யம் என்று பிரித்துப்பார்த்தல் இதற்கு உதாரணமாகும்.  சில சமயங்களில் இந்த புத்திக்கு மோகம் என்ற நோய் வந்தால் அதன் சுபாவத்திற்கு நேர்மாறாக செயல்புரியும்.  இந்த நேரத்தில் நமக்கு நன்மை தரும் விஷயத்தில் நன்மை தராது என்று முடிவெடுக்கும்.  மது அருந்துவது தீமையைக் கொடுக்கும் என்று தெரிந்து இருந்தாலும் மோகத்தினால் பீடிக்கப்பட்ட புத்தியானது அதை அருந்த முடிவெடுக்கும்

நாம் கர்மயோகப்படி வாழ்ந்தால் பகவான் புத்திக்கு வரும் மோகத்தை நீக்கி விடுவார்.  மோகத்தால் ஆத்மா-அனாத்மா என்ற விவேகமானது ஏற்படாது.  ஆத்மாவை அனாத்மாவாக புரிந்து கொண்டு செயல்பட்டு கொண்டிருக்கும்.  அனாத்மாவை ஆத்மாவாக புரிந்து கொண்டிருக்கும். இந்த நிலையே சம்சாரம் இதனால் நம்முடைய வாழ்க்கையின் முடிவான லட்சியம் எது என்று தீர்மானிக்க முடியாது.  கர்மயோகத்தால் இந்த மோகமானது நீங்குவதால் உண்மையான முடிவான லட்சியத்தை அறிந்து கொள்ள முடியும்.  அதை அடைவதற்குரிய சாதனத்தை பயன்படுத்தி அடைந்து விடுவான்.  மோட்சத்தை புருஷார்த்தமாக தேர்ந்தெடுப்பான். அதை அடைவதற்கு ஏற்றவாறு வாழ்க்கையை அமைத்துக் கொள்வான்.

கர்மயோகம் கொடுக்கின்ற இரண்டாவது பலன் வைராக்கியம். மனதிலிருக்கின்ற குறை ஆசைப்படுதல், எனக்கு தேவை என்று விரும்புதல். இதை நீங்கிய நிலையே வைராக்கியம்.  மனமானது ஏதாவது ஒன்றை பற்றிக் கொண்டேயிருக்கும் தன்மை உடையது. வைராக்கியம் என்பது மனோபாவம். இந்த உலகத்தை ஒருவிதமாக பார்க்கும், உலகத்திலுள்ள பொருட்களை குறித்து இருக்கும் ஒருவித பாவனை எல்லாப் பொருட்களிலும் போகத்தை அனுபவிக்க வேண்டும் என்ற புத்தியை நீக்கி விடுதல். உலகப்பொருட்களை  தேவைக்காக மட்டும் பயன்படுத்த வேண்டும். அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையை விலக்க வேண்டும். இந்த அறிவு விவேகத்தினால் அடையலாம். கர்மயோகத்தினால் கிடைக்கப்பெறும் பலன்கள் 1. விவேகம், 2.வைராக்கியம், 3.முமுக்ஷூத்வம் ஆகியவைகளாகும்.

श्रुतिविप्रतिपन्ना ते यदा स्थास्यति निश्चला ।
समधावचला बुद्धिस्तदा योगमवाप्स्यसि ॥ 53 ॥
ஞானயோகம்àசிரவணம்àமனனம்àநிதித்யாஸனம்à மோட்சம். இந்த மூன்று சாதனங்களின் பலனை அடைந்து விட்டேன் என்று எப்படி அறிந்து கொள்வது என்பதை இந்த ஸ்லோகத்தில் கூறப்படுகிறது.
தே புத்தி – உன்னுடைய புத்தியானது
ஸ்ருதி விப்ரதிபன்னா – கர்மகாண்ட வாக்கியங்களினால் பாதிக்கப்பட்ட, குழப்பப்பட்ட
சிலர் பேர் இதை செய் என்பார்கள், வேறொருவர் அதை செய் என்று சொல்வார்கள், இதனால் மனம் குழப்பமடைந்து விடும்
பஹூ பேதம் ப்ராப்யதி – விதவிதமான வேற்றுமைகளை அடைந்த மனம் 
யதா – எப்பொழுது, சிரவணம், மன்னம், நிதித்யாஸனம் செய்த பிறகு
ஸமாதௌ – சமாதியில், ஆத்மாவில்
அசலா – உறுதியாக, சந்தேகமில்லாமல், சஞ்சலமில்லாமல்
நிஶ்சல ஸ்தாயதி – நிலையாக நிற்குமோ, அமைதியாக நிற்குமோ
ததா யோகம் அவாப்ஸ்யதி – அப்போது மோட்சத்தை மனநிறைவை நீ அடைந்துள்ளதாக புரிந்து கொள்.

अर्जुन उवाच।
स्थितपज्ञस्य का भाषा समधिस्थस्य केशव ।
स्थितधीः किं प्रभ्याषेत किमसीत व्रजेत किम् ॥ 54 ॥
அர்ஜுனார் வினவினான்.
தாங்கள் கூறியபடி வாழ்ந்து மோட்சத்தை அடைந்த ஞானியின் லட்சணத்தை கூறுங்கள்.
ஞ: - ஆத்மாவை அறிந்தவர்;
பிரக்ஞ: - சந்தேகமில்லாமல் ஆத்மாவை அறிந்தவர்
கா பா4ஷா – குணங்களின் லட்சணம் என்ன?
ஸ்தி2தப்ரக்ஞஸ்ய – சந்தேகமில்லாமல் உறுதியாக ஆத்ம ஞானத்தை அடைந்தவனின், 
ஸமாதி4ஸ்தஸ்ய – ஆத்ம தத்துவத்தில் நிலைப்பெற்றுள்ளவன்
ஸ்திததீ4: - உறுதியான ஞானத்தையுடையவன்
கிம் ப்ரப்யஷேத – எப்படி பேசுவான், பேசுகிறான்?
கிம் ஆஸீத – எப்படி அமர்கின்றான்?
கிம் வ்ரஜேத – எப்படி நடக்கின்றான்?

ஞானியினுடைய மனதால், உடலால், வாக்கால் எப்படி இருப்பான். மற்றவர்களிடத்து எப்படி நடந்து கொள்வான், எப்படி பேசுவான்? எப்படி அமர்ந்திருப்பான்? தனிமையில் ஒரு விவகாரம் இல்லாதபோது அவனிடத்தில் எப்படி இருப்பான். எப்படி நடக்கின்றான். ஞானம் அடைந்தாலும், ஸ்தூல சரீரம் அப்படியேதான் இருக்கும். பிராரப்தத்தின்படி அது இயங்கி கொண்டிருக்கும், கஷ்ட-நஷ்டத்தில் சுகத்தில் எப்படி இருப்பான்? பிராரப்தத்தை அனுபவிப்பான், சந்திப்பான்?

श्रीभावनुवाच।
प्रजहाति यदा कमन्सर्वान्पार्थ मनोगतान् ।
आत्मन्येवात्मना तुष्टः स्थितप्रज्ञ्स्तदोच्यते ॥ 55 ॥
ஸ்ரீபகவான் கூறுகிறார்.
ஞானியினுடைய சுபாவமான இயல்புகளே சாதகர்களுடைய சாதனமாக இருக்கின்றது

மனோகதான் – மனதில் இருக்கின்ற
ஸர்வான் காமான் – எல்லா ஆசைகளையும்
யதா3 ப்ரஜஹாதி – எப்பொழுது நன்கு விட்டுவிடுகின்றானோ
ஆத்மன் ஏவ ஆத்மனாம் – தன்னிடத்திலேயே தானே
துஷ்ட: - திருப்தியடைகின்றானோ
ததா3 - அப்பொழுது
ஸ்திதப்ரக்ஞன் உச்யதே – ஸ்திதப்ரக்ஞன் என்று சொல்லப்படுகிறான்.

காம: - சொல்லின் அர்த்தம்
நம் மனதில் விதவிதமான ஆசைகள் எழுகின்றன.  அவைகளில் சில நிறைவேறி இருக்கும்.  சில நிறைவேறாமல் இருக்கும்.  நிறைவேறாத சில ஆசைகளினால் நாம் பாதிக்கப்படுவதில்லை. சிலவற்றால் பாதிக்கப்படுகின்றோம்.

ஆசைகளானது பந்தப்பட்ட ஆசைகள், பந்தப்படாத ஆசைகள் என்று இருவகையாக பிரிக்கப்படுகின்றன.  எந்த ஆசை நிறைவேற வேண்டும் என்ற நிபந்தனையுடன் இருக்கின்றதோ அவைகள் பந்தப்படுத்தம் ஆசைகள். மற்றவைகளனைத்தும் பந்தப்படுத்தாத ஆசைகள். பந்தப்படுத்தும் ஆசைகளின் மூலக்காரணம் மனநிறைவின்மைதான். மனது நிறைவுடன் இருக்கும்போது எந்த ஆசைகளும் தோன்றாது.  நாம் என்ற எதில் அபிமானம் வைக்கின்றோமோ, அதனுடைய தர்மம் நம்முடையதாகின்றது. அனாத்மாவான மனதும், உடலும் நிறைவின்மை உடையது. எனவே இதில் அபிமானம் வைக்கும்போதும் ஆசைகள் இருந்து கொண்டே இருக்கும்.

ஞானியின் அபிமானம் ஆத்மாவில் இருப்பதால் பந்தப்படுத்தும் எல்லா ஆசைகள் அவனை விட்டு விலகிவிடுகின்றன. நிறைவுடன் இருக்கும் மனதில் தோன்றும் ஆசைகள் அவனை பந்தப்படுத்தாது. பந்தப்படுத்தும் ஆசைகளும் பந்தப்படுத்தாத ஆசைகளாக மாறிவிடும்.

மனோக3தான்:-
ஆசை மனதைபற்றியதுதான், ஆத்மாவுக்கு இதற்கும் சம்பந்தம் எதுவுமில்லை. 
ஆழ்ந்த உறக்கத்தில் எந்த ஆசைகளும் இருப்பதில்லை. விழித்ததும் அவைகளும் விழித்து விடுகின்றன. மேலும் வெளி விஷயத்திலும் ஆசைகள் இருப்பதில்லை.  நாம் எப்பொழுதும் நம்முடைய திருப்திக்கு நிபந்தனைகளை வைத்திருப்போம். அந்த நிபந்தனைகளில்லாதபோது நாம் அதிருப்தியாகின்றோம். நம்முடைய திருப்திக்கும் வெளி விஷயங்களுக்கும் சம்பந்தம் வைத்திருக்கின்றோம். எப்பொழுது ஒருவன் தன்னுடைய திருப்திக்கு வெளிவிஷயங்களின் சம்பந்தம் இல்லாமல் தன்னிடத்திலே திருப்தியுடன் இருக்கின்றானோ அவனே ஞானி, ஸ்திதப்ரக்ஞன். இவனுடைய மனநிறைவுக்கு எதுவுமே காரணமாக இருக்காது, தானே அதற்கு காரணமாக இருப்பான்.

இந்த லட்சணங்களை நம்மிடத்தே இருக்கின்றதோ, இல்லையா என்று சோதித்துப் பார்ப்பதற்காகத்தான் பகவான் கூறியிருக்கிறார். இதை மற்றவர்களிடத்து சோதிக்க முடியாது. இந்த லட்சணங்கள் மனதைச் சார்ந்ததாக இருப்பதால் இதை மற்றவர்கள் இடத்தில் சோதிக்க முடியாது.

दुःकेष्वनुद्विग्नमनाः सुखेषु विगतस्पृहः ।
वीतरागभयक्रोधः स्थितधीर्मुनिरूच्यते ॥ 56॥
பிராரப்தம்தான் ஒருவனுடைய இன்ப-துன்பங்களுடைய சூழ்நிலைகளை உருவாக்கிக் கொடுத்துவிடும். இதை நாம் அனுபவித்துத்தான் தீர வேண்டும். இந்த சூழ்நிலையை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது நம் வசம்தான் உள்ளது, பிராரப்தம் வசம் கிடையாது. ஞானியானவன் இந்த இரண்டு சூழ்நிலையிலும் ஒரே மனநிலையோடு இருப்பான்
து3:கேஷு – துயரத்திற்குக் காரணமான சூழ்நிலையில்
அனுவிக்3ன மனா: - அமைதியான மனநிலையோடு இருப்பான்
ஸுகேஷு – சுகமான சூழ்நிலையை சந்திக்கும்போது
விக3தஸ்ப்ருஹ – அதிக உற்சாகத்துடன் இருக்க மாட்டான். இது தொடர வேண்டும் என்று ஆசைப்படமாட்டான்.
இவ்வாறு இரண்டு சூழ்நிலைகளிலும் சமமான மனநிலையுடன் இருப்பான்
வீதராக3ப4யக்ரோத4: - பற்று, ஆசை, பயம் (கோபம், வெறுப்பு, துவேஷம்) இவைகளிலிருந்து விடுபட்டவனாக இருப்பான். இவைகள்தான் நம்மை சம்சாரத்தில் வைத்திருக்கும்.  அகங்காரனாக இருப்பதால் ராகத்திலிருந்து விடுபட்டவனாக இருக்கின்றார். எதையாவது சார்ந்திருப்பதால்தான் அதிலிருந்து பயம் வருகின்றது.  யாரையும் சார்ந்தில்லாததால் எந்தவிதமான பயமும் அவனுக்கு கிடையாது எதிர்ப்பார்ப்பினால்தான் துவேஷம் வருகின்றது.  யாரிடமும் எந்த எதிர்பார்ப்பும் இல்லையென்றால் துவேஷம் அவனை தீண்டுவதில்லை.
ஸ்தி2த்தீ4 முனி: உச்யதே – எந்த முனிவருக்கு இந்த லட்சணங்கள் இருக்கின்றதோ, அவர்தான் ஆத்ம ஞானத்தில் நிலை பெற்றிருப்பவர் என்று சொல்லப்படுகின்றது.

यः सर्वत्रानभिस्नेहस्तत्तत्प्राप्य शुभाशुभम् ।
नाभिनन्दति न द्वेष्टि तस्य प्रज्ञा प्रतिष्टिता ॥ 57 ॥
யஹ ஸர்வத்ர – யாரொருவன் எல்லா மனிதர்களிடத்திலும், காலத்திலும், சூழ்நிலைகளிலும்
அனபி4ஸ்னேஹ – பற்றில்லாதவனாக இருந்து கொண்டு 
தத்ததி ப்ராப்ய ஶுப-அஶுபம் – நல்லது-கெட்டதை அடைந்தாலும்
ந அபி3னந்திதி ந துவேஷம் – மகிழ்வாக இருப்பதுமில்லை, வெறுப்பதுமில்லை
தஸ்ய ப்ரக்ஞ ப்ரதிஷ்டிதா – இப்படிபட்டவனுடைய ஞானம்தான் நிலைப்பெற்றதாக இருக்கும்.
எந்த இடத்தில் நாம் பற்று வைத்திருக்கின்றோமோ அங்கேதான் நாம் தர்ம-அதர்மத்தைப் பார்ப்போம்.

यदा संहरते चायं कूर्मोऽङ्गानीव सर्वशः ।
इन्द्रयाणीन्द्रियार्थेभ्यस्तस्य प्रज्ञा प्रतिष्टिता ॥ 58 ॥
ஆமையானது எப்படி தன் நான்கு கால்களையும், தலையும் ஆபத்துக் காலத்தில் பகைவர்களைக் கண்டால் தனது ஒட்டுக்குள் இழுத்துக் கொள்ளுமோ, அதேப்போன்று ஞானியானவன் இந்திரியங்களை பயன்படுத்துவான்.  ஆனால் மன அமைதிக்கு காரணமாக இருக்கும் விஷயங்களில் பயன்படுத்தமாட்டான்.
யதா3 – எப்படி
கூர்ம அங்காணி இவ – ஆமை அவயவங்களை
ஸ்ம்ஹரதே ச – உள்ளுக்குள் இழுத்துக் கொள்வது போல 
அயம் – ஞானநிஷ்டைக்கு முயற்சி செய்யும் சாதகன்
ஸர்வஶ: - எல்லா திசைகளிலும்
இந்திரியானி இந்த்ரியார்த2 அர்தே2ப்யஹ – இந்திரியங்களை அவைகளாலே அனுபவிக்கப்படும் விஷயங்களிலிருந்து இழுத்துக் கொள்ள வேண்டும்.
தஸ்ய ப்ரக்ஞா ப்ரதிஷ்டிதா – அப்படிபட்ட சாதகனின் ஞானம் நிலைப்படும்.

ப்ரக்ஞன் – விசாரம்
நான் என்னுடைய உண்மையான ஸ்வரூபத்தை பற்றி அறிவை சாஸ்திர சிரவணம், மனனம் மூலம் அடைந்திருக்கிறேன்.  நானே பிரம்மன், பூரணமானவன், ஈஸ்வரன் என்ற அறிவையும்  அடைந்திருக்கிறேன். நாம் இந்த அறிவை அடைந்தும் சம்சாரத்தையும் அனுபவித்துக் கொண்டு இருக்கின்றோம். இந்த அறிவானது ஆழ்ந்த மனதுக்குள் சென்றால் அதுவே நம்முடைய சுபாவமாக மாறிவிடும். நிதித்யாசனம் நன்கு செய்வதற்கு ஶம, தமம் என்ற இரண்டு தகுதிகளை அடைந்தாக வேண்டும். இந்த சாதனம் ஞானத்தை ஞானநிஷ்டையாக மாற்றக் கூடியது.  தியானத்தில் பலனை அடைய வேண்டுமானால் மனம் ஓரளவாவது அமைதியுடன், சஞ்சலப்படாமல் இருக்க வேண்டும்.  ஐந்து இந்திரியங்கள் மன சஞ்சலத்திற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. எனவே இந்திரியங்களை நமது கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். மனம் அதிகமாக காது வழியாகத்தான் அமைதியை இழக்கின்றது. தமத்தை அடைந்திருந்தாலும் மனமானது தானாகவே ஏதாவது எண்ணங்களை உருவாக்கிக் கொண்டு வேறெங்காவது சஞ்சரித்துக் கொண்டு இருக்கும். நம் கட்டுக்குள் இருக்காது. எனவே சமத்தையும் அடைய வேண்டும்

विषया विनिवर्तन्ते निराहारस्य देहिनः ।
रसवर्जं रसोऽप्यस्य परं दृष्ट्वा निवर्तन्तॆ ॥ 59 ॥
நிராஹாரஸ்ய தேஹின: - இந்திரியங்களுக்கு விஷயங்கள் என்ற உணவை கொடுக்காத ஜீவனுக்கு
விஷயா  - அந்தந்த விஷயங்களின் அனுபவங்களை
ரஸவர்ஜம் – பற்று நீங்காமல்
விநிவர்தந்தே - நீக்கப்படுகின்றது
ரஸஹ அபி அஸ்ய – அந்த பற்றும் கூட
பரம் த்ருஷ்த்வா நிவர்தந்தே – பரம் பொருளை அறிந்த பிறகு அதாவது ஞான நிஷ்டை அடைந்த பிறகு நீங்கி விடுகின்றது.

ஜீவனானவன் புலனடக்கத்தால் மனதுக்கு உணவை கொடுக்காமல் விஷயங்களிலிருந்து விலகி இருக்கின்றான்.  ஆனால் அதிலுள்ள பற்று மட்டும் இருந்து கொண்டிருக்கிறது.  பரம்பொருளை அறிந்த பிறகு அந்த பற்றும் நீங்கி விடுகின்றது.

यततो ह्यपि कौन्तेय पुरुषस्य विपश्चितः ।
इन्द्रियाणि प्रमथीनि हरन्थि प्रसभं मनः  ॥ 60 ॥
ஹே அர்ஜுனா! அறிவை உடையவனாக இருந்து கொண்டு முயற்சி செய்து கொண்டு
இருக்கின்றவனுக்கும், சக்தி வாய்ந்த இந்திரியங்கள் மனதை பலவந்தமாக இழுத்து சென்று விடுகின்றன.

तानि सर्वाणि संयम्य युक्त आसीत मत्परः ।
वशे हि यस्येन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्टिता । 61 ॥
ஞான நிஷ்டை அடைவதற்காக முயற்சி செய்பவர்கள் எல்லா புலன்களையும் முயற்சி செய்து தன் வசத்திற்குள் கொண்டு வந்து மனக்கட்டுபாடுடன் இருந்து கொண்டு, ஒருமுகப்படுத்தப்பட்ட மனதுடன் நிதித்யாசனத்தில் ஈடுபட்டு கொண்டு இருக்க வேண்டும். இந்த நிலையில் என்னையே பரமகதியாக கொண்டு தியானத்தில் இருக்க வேண்டும்.  யாருடைய புலன்கள் அவனுடைய வசத்தில் இருக்கின்றனவோ அவர்களுடைய ஞானமானது நிலை பெறும்.

ध्यायतो विषयान्पुंसः सङ्गस्तेषूपजायते ।
सङ्गात्सञ्जायते कामः कमत्क्रोधोऽभिजायते ॥ 62 ॥
உலகத்திலுள்ள புலன்நுகர் பொருட்களையே தொடர்ந்து நினைத்துக் கொண்டு இருப்பவனுக்கு அந்தப்பொருளின் மீது பற்றானது ஏற்படுகிறது. அந்த பற்றிலிருந்து ஆசை தோன்றுகின்றது. அந்தப்பொருளை அடைந்து அனுபவிக்க வேண்டும், என்ற எண்ணமே ஆசை என்று புரிந்து கொள்ள வேண்டும்.  இந்த ஆசையிலிருந்து கோபம், வெறுப்பு மேலும் துவேஷம் போன்ற தீய உணர்ச்சிகள் தோன்றுகின்றது. இந்த ஆசை நிறைவேறாமல் யாரெல்லாம், எதுவெல்லாம் தடைகளாக இருக்குமோ அவர்கள் /அவைகள் மீது க்ரோதம் ஏற்படுகின்றது.

क्रोधाद्भवति सम्मोहः सम्मोहात्स्मृतिविभ्रमः ।
स्मृतिभ्रंशाद् बुद्धिनाशो बुद्धिनाशात्प्रणस्यति ॥ 63 ॥
க்ரோதத்திலிருந்து அதிக மோகம், மனமயக்கம் ஏற்படுகின்றது. கோபத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி பேச வேண்டும் என்ற அறிவை இழந்து விடுவோம். இந்த மோகத்தினால் நாம் பெற்ற அறிவை இழந்து விடுவோம். சாஸ்திரத்தை குருமூலம் கேட்டு அறிவாக இருக்கின்றதை நாம் இழந்துவிடுவோம். நம் புத்தியிலுள்ள அறிவானது பயன்படாமல் போய்விடும், நினைவாற்றல் வெளிப்படாததால் புத்தி அதாவது விவேகம் அழிந்து விடுகின்றது. புத்தியின் செயலான நல்லது-கெட்டது என்று பிரித்தறியும் அறிவுதான் விவேகம். இவ்வாறு புத்தி அழிந்து விடுவதால் தன் நிலையிலிருந்து வீழ்ச்சியடைகின்றான். புருஷார்தத்தை (அறம், பொருள், இன்பம், வீடுபேறு ) அடைய முடியாத நிலைக்கு சென்று விடுகின்றான்.

रागद्वेषविमुक्तौस्तु विषयानिन्द्रियैश्चरन् ।
आत्मवस्यैर्विधेयात्मा प्रसादमधिगच्छति ॥ 64 ॥
விருப்பு-வெறுப்புக்களிலிருந்து விடுபட்டு தன்வசத்திலிருந்து இந்திரியங்களுடன் உலக வாழ்க்கையின் செயல்படுகின்றான்.
ஆத்மவஸ்யை – தன்னிடத்தில் இருக்கின்ற மனதை 
விதே4யாத்மா – தன் வசத்தில் வைத்துக் கொண்டிருக்கும் சாதகன்
ப்ரஸாதம் அதிகச்சதி – மன அமைதியை அடைகின்றான்.

प्रसादे सर्वदुःखानां हानिरस्योपहायते ।
प्रसन्नचेतसो स्याशु बुद्धिः पर्यवतिष्टते ॥ 65 ॥
யார் மனம் அமைதியாக இருக்கின்றதோ, அவனுடைய எல்லாவிதமான துயரங்களும் நாசமாகி விடுகின்றது. மனதிலுள்ள விக்ஷேபங்கள் அழிகின்றது. அமைதியான மனதையுடையவனுக்கு விரைவில் புத்தியானது உறுதியாக நிலைபெறும். இங்கு புத்தி என்பது ஆத்மஞானத்தை குறிக்கின்றது.

नास्ति बुद्दिरयुक्तस्य न चायुक्तस्य भावना ।
न चाभावयतः शान्तिरशान्तस्य कुतः सुखम् ॥ 66 ॥
மனக்கட்டுப்பாடு இல்லாதவனுக்கு ஆத்மஞானம் ஏற்படாது. எதை அடைய விரும்புகின்றோமோ அதில் மனம் பொருந்தி இருக்க வேண்டும். இல்லையென்றால் விரும்பியதை அடைய முடியாது. மனக்கட்டுப்பாடு இல்லாதவனுக்கு  ஆத்மஞான தியானம் நடக்காது. ஆத்மஞானத்தை மனதில் கொண்டு வந்து நிறுத்தி அதில் நிலைபெற முடியாது.  நிதித்யாஸனம் செய்யாதவனுக்கு மன அமைதி கிடைக்காது.  மன அமைதியில்லாதவனுக்கு சுகமும் கிடைக்காது, மனநிறைவும் இருக்காது
(பாவனா – நிதித்யாஸனம் )
(ஶாந்தி – உபரம – உலகத்திலிருந்து விலகி இருத்தல் ).

इन्द्रियाणां हि चरतां यन्मनोऽनुविधीयते ।
तदस्य हरनि प्रज्ञां वयुर्नावमिवाम्भसि ॥ 67 ॥
எந்த மனமானது கட்டுப்படாமல் விஷயங்களை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது இந்திரியங்களும் அதை தொடர்ந்து செல்கின்றது. அந்த மனமானது இந்திரிய விஷயங்களுடன்தான் இருக்கின்றது. இப்படிபட்ட மனமுடையவனின் அறிவை மனம் அபகரித்துக் கொண்டு சென்று விடுகின்றது. காற்றானது சிறுபடகை அடித்துக் கொண்டு செல்வது போல, மூழ்கடிப்பது போல மனம் புத்தியை மழுங்கச் செய்து விடும்.

तस्माद्यस्य महाबाहो निगृहीतानि सर्वशः ।
इन्द्रियाणिन्द्रियार्थेभ्यस्तस्य प्रज्ञा प्रतिष्टिता ॥ 68॥
ஆகவே அர்ஜுனா!, எல்லாவிதத்திலும் விஷயங்களை நோக்கி செல்லாமல்  புலன்கள் கட்டுபடுத்தப்பட்டிருக்கின்றதோ, விஷயங்களிலிருந்து விலக்கப்பட்டிருக்கின்றதோ அவருடைய ஞானமானது நிலைபெறுகின்றது.

या निशा सर्वभूतानां तस्यां जागर्ति संयमी ।
य्स्यां जाग्रति भूतानि सा निशा प्स्यतो मुनेः ॥ 69 ॥
எல்லா ஜீவராசிகளுக்கும், மனிதர்களுக்கும், அக்ஞானிகளுக்கும் எது இரவாக இருக்கின்றதோ அதுவே ஸ்திதப்ரக்ஞனுக்கு, ஞானினுக்கு விழித்துக் கொண்டிருக்கின்ற பகலாக இருக்கின்றது..  எதில் எல்லா ஜீவராசிகளும் விழித்துக் கொண்டிருக்கின்ற பகலாக இருக்கின்றதோ அதுவே ஆத்ம தத்துவத்தை உணர்ந்தவனுக்கு இரவாக இருக்கின்றது.  ஞானம் வந்திருந்தால் உலகம் தெரிந்து கொண்டிருக்கும் ஆனால் அது பொய்யான தோற்றம் என்று அறிவு இருந்து கொண்டு இருக்கும். அக்ஞானியானவன் நான் கர்த்தா, போக்தா என்று நினைத்துக் கொண்டு ஜகத்தை மெய்யென்று அனுபவித்துக் கொண்டிருப்பான்.

*      இரவு என்பது பரமார்த்த தத்துவம்.  எல்லா ஜீவராசிகளுக்கும் பரமார்த்த தத்துவமானது. இரவுப் போலிருக்கின்றது, அறியாமையில் இருக்கின்றது.  ஞானியானவன் இதில் விழித்துக் கொண்டிருக்கிறார், அதாவது அத்வைதத்தை உணர்ந்திருக்கின்றான்.
*      எல்லா ஜீவராசிகளுக்கும் த்வைதத்தில் இருக்கின்றார்களோ, பகலாக இருக்கின்றது. ஆனால் ஞானிக்கு அதுவே இரவாக இருக்கின்றது. ஞானியானவன் கர்த்ருத்வம், போக்த்ருத்வம் என்பவைகள் உடல், மனதை சார்ந்தது என்ற அறிவுடன் விவகாரம் செய்து கொண்டிருப்பான்.

आपूर्यमाणमचलप्रतिष्टं समुद्रमापः प्रविशन्ति यद्वत् ।
तद्वत्कामा यं प्रविशन्ति सर्वे स शान्तिमाप्नोति न् कामकामी ॥ 70 ॥
ஆசைகளை முழுவதும் துறந்தவனே ஞானி என்பது இதன் கருத்து. நீரானது கடலை நோக்கி சென்று  கலந்து விடுகின்றது. எல்லா பக்கங்களிலும் நீர் நிறைந்து இருக்கும் அதே சமயம் அசைவற்று இருக்கும், நதிகள் அதன் தன்மையை இழந்து கடலின் தன்மையை அடைந்து விடுகின்றது. அவ்விதம் எல்லா ஆசைகளும், அனுபவங்களும், விதவிதமான விஷயங்களும் ஞானியை அடந்தாலும் அவைகளுடைய சுயதன்மையை இழந்து விடுகின்றது. ஞானி இவைகளால் பாதிக்கப்படாமல் இருக்கின்றான்.  இப்படிபட்டவன் அமைதியை அடைகின்றான்.  உலக விஷயங்களில் பற்று வைத்திருப்பவன் அமைதியை அடைவதில்லை.

நம்முடைய மன அமைதியின்மைக்கு மற்றவர்களின் சொற்களை நாம் எவ்வாறு ஏற்றுக் கொள்கிறோம் என்பதை பொறுத்திருக்கிறது. அவர்களூதைய வார்த்தைகளுக்கு எந்தவிதமான மதிப்பும் கொடுக்காமல், அவற்றை ஏற்றுக் கொள்ளாமல் அவைகளை வெறும் அர்த்தமற்ற சப்தமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் மன அமைதி பாதிக்கப்படாமல் இருக்கும்.

विहाय कमान्यः सर्वान्पुमांश्चरति निःस्पृहः ।
निर्ममो निरहङ्कारः स शन्तिमधिगच्छति ॥ 71 
எவனொருவன் எல்லா பந்தப்படுத்துகின்ற ஆசைகளையும் துறந்துவிட்டு, பற்றற்றவனாகவும், மமகாரமற்றவனாகவும் (என்னுடையது என்று எதையும் நினைக்காதவனாக இருத்தல் ) அகங்காரமற்றவனாகவும் ( கர்வமில்லாதவன், நான் என்ற அபிமானத்தை அனாத்மாவில் வைக்காதிருத்தல்) இப்படிபட்டவன் மேலான சாந்தியான மோட்சத்தை அடைகிறான்.

एषा ब्राह्मी शितिः पर्था नैनां प्राप्य विमुह्यति ।
शित्वास्यामन्तकालेऽपि ब्रह्मनिर्वाणमृच्छति ॥ 72 ॥
ஹே அர்ஜுனா! இதுவே பிரம்மத்தை அடைந்தவனின் நிலை. ஜீவன் முக்தி அடைந்தவனின் நிலை. இந்த மனநிலை அடைந்தவனால் மோகத்தை அடைய முடியாது. இந்த ஞானத்தை அடைந்து உயிர் பிரியும் நேரத்தில் அடைந்தாலும்  பிரம்மத்தை அடைகின்றான். பிராரப்த முடிவில் இறந்த பிறகு விதேஹ முக்தியை அடைகின்றான்.

ॐ तत्सदिति


A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...