Showing posts with label உத்தவ கீதை-01. Show all posts
Showing posts with label உத்தவ கீதை-01. Show all posts

Saturday, April 22, 2017

Uddhava Gita - Chapter-01

உத்தவ கீதை
அத்தியாயம்-1
ஸ்வாமி குருபரானந்தரின் உபதேச விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது-16-02-2022

யதா3த்த2 மாம் மஹாபா4க்3 தச்சிகீர்ஷிதமேவ மே |
ப்ரஹ்மா ப4வோ லோகபாலா: ஸ்வர்வாஸம் மேSபி4காங்க்ஷிண: || 1 ||

ஹே உத்தவா! என்னுடைய விஷயத்தில் நீ கூறிய யது குலத்தின் நாசம், அவதார தோற்றத்தை விட்டு விடுதல் ஆகியவைகள்  என்னால் தீர்மானிக்கப்விரும்பபட்டதுதான். பிரம்மாவும் சிவனும் மேலும் மற்ற தேவர்களான இந்திரன் போன்ற லோக பாலகர்களும் நான் வைகுண்டத்துக்கு வந்துவிட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

மயா நிஷ்பாதி3தம் ஹயத்ர தே3வகார்யமஶேஷத: |
யத3ர்த2மவதீர்ணோSஹமம்ஶேன ப்3ரஹமணார்தித: || 2 ||

பூலோகத்தில் என்னால் தேவ காரியங்களும் குறைவில்லாமல் முடிக்கப்பட்டுவிட்டன. என்னுடைய ஒரு அம்சமான பலராமனுடன் சேர்ந்து, பிரம்ம தேவரின் வேண்டுகோளுக்கு இணங்கி எந்தக் காரணத்திற்காக நான் அவதாரம் எடுத்தேனோ அது முடிவடைந்துவிட்டது.

குலம் வை ஶாப நிர்த3க்3த4ம் நங்க்ஷ்யத்யன்யோன்யவிக்3ரஹாத் |
ஸமுத்3ர: ஸப்தமே ஹயேனாம் புரீம் ச ப்லாவயிஷ்யதி || 3 ||

அந்தணர் சாபத்திற்கு ஆளாகிவிட்ட இந்த யதுகுலம் பரஸ்பர சண்டைகளினால் முற்றிலுமாக அழிந்துவிட போகின்றது. இன்றிலிருந்து ஏழாவது நாளில் சமுத்திரமானது இந்த நகரை மூழ்கடிக்கப்போகிறது.

யஹர்யேவாயம் மயா த்யக்தோ லோகோSயம் நஷ்டமங்க3ல: |
ப4விஷ்யத்யசிராத்ஸாதோ4 கலினாபி நிராக்ருத: || 4 ||

நான் இந்த பூமியை விட்டு சென்ற பிறகு இந்த நகரமானது தர்மத்தை இழந்து விடும். இது உடனடியாக நடக்கப்போகிறது. பிறகு உலகமானது கலியினால் வியாபிக்கப் போகின்றது.

ந வஸ்தவ்யம் த்வயைவேஹ மயா த்யக்தே மஹீதலே |
ஜனோSப4த்3ர்ரூசிர்ப4த்3ர ப4விஷ்யதி கலௌ யுகே3 || 5 ||

நான் இந்த பூமியை விட்டு சென்ற பின், நீ இங்கே இருக்கத்தகாது.  ஹே உத்தவா! கலியுகத்தில் மக்கள் அதர்மத்தில் பற்று கொண்டவர்களாக இருப்பார்கள்

த்வம் து ஸர்வம் பரித்யஜ்ய ஸ்னேஹம் ஸ்வஜனப3ந்து4ஷு |
மய்யாவேஶ்ய மன: ஸம்யக்ஸமத்3ருக்3விசரஸ்வ கா3ம் || 6 ||

நீ அனைத்தையும் ( பொருட்களையும், உறவினர்களையும் ) துறந்து விடு, முழுமையாக தியாகம்  செய்துவிடு.  உன்னுடைய உற்றார், உறவினர்களிடம் கொண்டுள்ள பற்றை தியாகம் செய்து விடு. என்னிடமே மனதை நன்றாக நிலைநிறுத்தி, எல்லா பிராணிகளிடத்திலும் சமநோக்குடன் உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிரு. 

விசாரம்
·        பகவான் ஆத்மா, அனாத்மா என்று பிரிக்கின்றார்.  நான் என்ற செல்லின் உண்மைப் பொருள் ஆத்மா. இதைத்தவிர மற்ற அனைத்தும் அனாத்மாக்கள். இங்கு ஆத்மாவின் ஸ்வரூபத்தை சுருக்கமாக கூறுகின்றார்.
·        நான் அல்லாத மற்றவைகளான அனாத்மாக்களின் (ஜகத்) ஸ்வரூபத்தையும் சுருக்கமாக கூறுகின்றார்
·        சம்சார ஸ்வரூபம் வர்ணிக்கப்படுகிறது.  சம்சாரத்தின் காரணமும் விளக்கப்படுகிறது
·        சம்சார நிவிருத்தி ஞானத்தினால்தான் அடைய முடியும்.  ஞான ஸ்வரூபம் விளக்கப்படுகின்றது
·        ஞானத்தை அடைவதற்கான சாதனம், நேரிடையாக ஞானத்தைக் கொடுக்கின்ற சாதனம். ஞானத்தை அடைவதற்கு தகுதிபடுத்திக் கொள்ள உதவும் சாதனம் இவைகளும் பகவான கூறுகின்றார்
·        ஞானத்தினால் அடையப்பெறும் பலன்
·        ஞானியினுடைய ஸ்வரூபம் வர்ணிக்கப்படுகிறது.
·        தியாகம் செய்வதற்கான காரணங்களாக இருப்பவை. மோகத்தை தியாகம் செய்ய வேண்டும்
·        ஒரு பொருளின் மதிப்பு நம்மால்தான் நிர்ணயிக்கப்படுகிறது. எனவே அந்த மதிப்பை விடுவதே தியாகம்
·        மோகமும், விரதமும் தியாகத்திற்கு காரணமாக இருக்கின்றது
·        விரக்தியிலும் தியாகத்தை செய்ய முடியும், வைராக்கியத்தினாலும் தியாக செய்ய முடியும். வைராக்கியம் இயலாமையினாலும் ஏற்படலாம். விவேகத்தினாலும் ஏற்படலாம்
·       ஞானத்தினாலும் தியாகத்தை செய்ய முடியும்.
·       தியாகம் செய்வது என்பது அவைகள் என்னுடையது, என்னைச் சார்ந்தவர்கள் என்ற எண்ணத்தை விட்டுவிடுவது. பொருட்களையும், உறவினர்களையும் விட்டுவிடுவது என்பது மனதினால் என்னுடையது, என்னுடையவர்கள் என்ற எண்ணமில்லாமல்  விவகாரம் செய்து கொண்டு இருக்கலாம்.  உலகத்திடமிருந்தும், ஜீவர்களிடமிருந்தும் எதையும் எதிர்பார்த்து விவகாரம் செய்யக்கூடாது.
மயி ஆவேஶ்ய மன: ஸம்யக் – என்னிடத்தில் (பரம்பொருளாகிய ஈஸ்வரனிடத்தில்) உன் மனதை                     நன்றாக நிலைநிறுத்தி
கா2ம் – பூமியில்
விசரஸ்வ – சஞ்சரித்துக் கொண்டிரு, வாழ்ந்து கொண்டிரு.
ஸமத்3ருக் – அனைத்தையும் சமமாக பார்த்துக் கொண்டிருப்பவனாக, சமநோக்கு உடையவனாக இருந்து கொண்டிரு.

அனாத்மாக்களில் வேற்றுமையிருந்தாலும் மித்யா என்கின்ற தன்மை அனைத்திலும்  இருக்கிறது. ஆத்மாவில் சத்யம் என்றவொன்று பொதுவாக இருக்கிறது. அனாத்மாக்களில் மித்யாவையும், ஆத்மாவில் ஏகம் என்று பார்ப்பதே சமநோக்கு பார்வை ஆகும்

யதி3த3ம் மனஸா வாசா சக்ஷுர்ப்4யாம் ஶ்ரவணாதி3பி4: |
நஶ்வரம் க்3ருஹ்யமாணம் ச வித்3தி4 மாயாமனோமயம் || 7 ||

இதில் பகவான் ஜகத் எப்படி மித்யாவென்று கூறுகிறார்.
யத்3 இத3ம் – நாம் பார்த்து அனுபவிக்கின்றவைகள்
க்3ருஹ்யமாணம் –  புலன்களால் கிரகிக்கப்படுகின்றவைகள்
நஶ்வரம் – அழியக்கூடியது
மனம், வாக்கு, செவி, கண்கள், தோல் முதலிய பிரமாணங்களால் எவைகளெல்லாம் கிரகிக்கப்படுகின்றதோ, அனுபவிக்கப்படுகின்றதோ அவைகளெல்லாம் அழியும் தன்மை உடையவை, நிலையற்றவைகள், காலவரையறைக்குட்பட்டது என்று அறிந்து கொள் உத்தவா!

மாயா மனோமயம் – ஜாக்ரத் உலகத்தில் அனுபவிக்கப்படும் பொருட்கள் ஈஸ்வரனின் மாயையினால் தோற்றுவிக்கப்பட்டு இருக்கிறது. கனவுலகத்தில் அனுபவிக்கப்படுபவைகள் நம்முடைய மனதால் தோற்றுவிக்கப்படுகிறது.

மனதிலுள்ள எண்ணங்களினால் அவைகள் தோற்றுவிக்கப்பட்டவைகள். கற்பனை உலகமும் மனோமயம் என்று அழைக்கலாம். பகவானுடைய மனதினால் தோற்றுவிக்கப்பட்டது இந்த ஜாக்ரத் உலகம், இது மாயாமயம். மனதினால் படைக்கப்பட்டவைகள் மித்யாவாக இருப்பதைப் போல பகவானின் மனதினால் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் இந்த ஜகத்தும் மித்யா என்று அறிந்து கொள்ள வேண்டும்.

மித்யாவின் லட்சணம் தோன்றி கொண்டிருக்கும் எந்தவொன்று சூன்யமாகவும், நித்யமாகவும் இல்லாமல் இருக்கின்றதோ அதுவே மித்யா. இந்த உலகம் கிரகிக்கப்படுவதாகவும், நிலையற்றதாகவும் இருப்பதனால் இது மித்யாவாக கருதப்படுகிறது.

பும்ஸோSயுக்தஸ்ய நானார்தோ2 ப்4ரம: ஸ கு3ணதோ4ஷபா4க் |
கர்மாகர்மவிகர்மேதி கு3ணதோ3ஷதி4யோ பி4தா3 || 8 ||

அயுக்தஸ்ய – ஆத்ம ஞானமில்லாத,  அக்ஞானத்துடன் கூடியிருக்கின்ற
பும்ஸஹ – ஜீவனுக்கு;
நானார்த2: ப்4ரமஹ – இருமை தோன்றுகின்றது, விதவிதமான பொருட்கள் என்ற மனமயக்கம் ஏற்படுகின்றது.
ஸ கு3ணதோ3ஷ பா4க்3 – இது நல்லது, இது கெட்டது என்ற பாகுபாடும் தோன்றுகின்றது
பொருளிடத்தில் குணதோஷம் இருக்கிறதா அல்லது மனதிலிருந்து வருகின்றதா என்று பார்க்கும் போது இது ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றது என்று அறியலாம்.  மனதிலிருந்தால் ராக-துவேஷம் என்றும், பொருட்களிலிருந்தால் அதுவே குண-தோஷம் என்றும் அழைக்கப்படுகின்றது.

கு3ணதோ3ஷதி4யஹ – குண-தோஷம் உடைய புத்தியுடையவனுக்கு
கர்ம      - செய்ய வேண்டிய செயல்களை செய்தல்
அகர்ம - செய்ய வேண்டிய செயல்களை செய்யாமல் இருத்தல்
விகர்ம - செய்யக்கூடாத செயலை செய்தல் ஆகிய
பி4தா3  - வேற்றுமைகள் தோன்றுகின்றது, உண்டாகின்றது

புத்தியில் குண-தோஷம் உள்ளவனுக்கு மேலே கூறப்பட்ட செயல் வேறுபாடுகள் தோன்றுகிறது.  செயல்களினால் பாவ-புண்ணியங்களை அடைகின்றோம். இவைகள் சுக-துக்கத்தை கொடுத்துத்தான் தீரும்.  எனவே அதற்கேற்ற உடல் எடுத்தாக வேண்டும். இவ்வாறு பிறப்பு எற்படுகின்றது.  மீண்டும் கர்மம்àபாவ-புண்ணியங்கள்àபிறப்பு இவ்வாறு சம்சார சக்கரத்தில் ஜீவன் சுழன்று கொண்டிருப்பான்

தஸ்மாத3 யுக்தேந்த்3ரியக்3ராமோ யுக்தசித்த இத3ம் ஜகத் |
ஆத்மநீக்ஷஸ்வ விததமாத்மானம் மய்யாதீ4ஶ்வரே || 9 ||

இதில் ஶமஹ (மனக்கட்டுபாடு), த3மஹ – இந்திரியக் கட்டுப்பாடு என்ற சாதனங்களைப் பயன்படுத்தி ஞானத்தை அடைய வேண்டும் என்று பகவான் கூறுகின்றார்.

தஸ்மாத்3 – ஆகவே, சம்சார சக்கரத்திலிருந்து விடுபட வேண்டும்.
யுக்த இந்திரிய கி3ராமஹ – அனைத்து இந்திரியங்களையும் கட்டுப்படுத்தியவனாக இரு, உன் வசத்துக்குள் கொண்டு வா. 
நாம் ஞான இந்திரியங்களை பிரத்யக்ஷ பிரமாணமாகவும், போகத்தை அனுபவிக்கும் கருவியாகவும் பயன்படுத்துகின்றோம்.
யுக்த சித்த – மனமும் உன் வசத்துக்குள் இருக்க வேண்டும்.
விததம் ஆத்மானாம் – எங்கும் வியாபித்திருக்கின்ற உன்னை
ஆத்மனீக்ஷஸ்வ – உன்னிடத்திலே காண்பாயாக.
மயி அதீ4ஶ்வரே – அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கின்ற என்னிடத்திலும் பார்.

கனவில் தோன்றியிருக்கும் அனைத்தும் உன்னால் தோற்றுவிக்கப்பட்டது. உன்னாலே அழிக்கப்பட்டு, உன்னிடத்திலே லயமடைந்திருக்கின்றது. அதேபோல ஜாக்ரத் அவஸ்தையில் இந்த உலகம் பிரம்மனான என்னால் தோற்றுவிக்கப்பட்டது. என்னாலே அழிக்கப்படும், என்னிடத்திலே லயமடைந்துவிடும் என்ற உணர்வு பூர்வமான அறிவை அடைய வேண்டும்.

ஞானவிக்ஞான ஸம்யுக்த ஆத்மபூ4த: ஶரீரிணாம் |
ஆத்மானுப4வதுஷ்டாத்மா நாந்தராயைர்விஹன்யஸே || 10 ||

ஞான விக்ஞான ஸம்யுக்த - ஞானத்துடனும், விக்ஞானத்துடனும் (ஞான நிஷ்டையில் இருக்கும் நிலை) இருப்பவன், ஞான நிஷ்டையை அடைந்திருக்கும் ஞானியானவன்.
ஆத்மபூ4த ஶரீரிணாம் – சரீரங்களையுடைய எல்லா ஜீவராசிகளிடத்திலும் தன்னையே பார்க்கின்றான்
ஆத்ம அனுப4வ துஷ்ட ஆத்மா – ஆத்ம ஞானமே அனுபவமாக கொண்டதினால், ஆத்மஞானத்தை  அபரோக்மாகஷ அடைந்திருப்பதால் மன திருப்தியை அடைந்திருப்பான் ஞானி
ந விஹன்யஸே அந்தராயஹ – பிராரப்தத்தினால் உனக்கு வரும் கஷ்டங்களினாலும், தடைகளாலும் பாதிக்கப்படாமல் இருப்பாயாக உத்தவா!

தோ3ஷபு3த்3யோ ப4யாதீதோ நிஷேதா4ன்ன நிவர்ததே |
கு3ணபு3த்3த்4யா ச விஹிதம் ந கரோதி யதா2ர்ப4க: || 11 ||
உப4யாதீதஹ – ஆத்மஞானத்தை அடைந்திருப்பதால் ஞானி இருமையை கடந்தவன், நன்மை-தீமை, தர்ம-அதர்மம், விருப்பு-வெறுப்பு போன்ற இருமைகளுக்கு அப்பாற்பட்டவன்
யதா2 அர்ப4கஹ – சிறு குழந்தையைப் போல
தோ3ஷ புத்3தி4 - அதர்மம், கோபம், வெறுப்பு போன்ற தீயகுணங்களுடைய தோஷ புத்தியால்
நிஷேதா4த் ந நிவர்த்தே – செய்யக்கூடாததை செய்யாமல் விலகுவதுமில்லை
குணபுத்3த்4யா – குண புத்தியால் 
ச விஹிதம் ந கரோதி – செய்ய வேண்டியதை செய்வதும் இல்லை

இந்த ஸ்லோகத்தில் ஞானிக்கு விதி நிஷேதம் கிடையாது என்று கூறப்பட்டிருக்கிறது. இவன் அகர்த்தாவாக இருப்பதாலும், தர்மத்துடன்தான் வாழ்ந்து கொண்டிருப்பதாலும் இவனுக்கு விதி நிஷேதம் கிடையாது. எனவே இவன் செய்கின்ற செயல்கள் பாவ-புண்ணியங்களை உருவாக்காது.

அக்ஞானி கர்த்தாவாக இருப்பதால் அவனுக்கு விதி நிஷேதம் உண்டு. தர்ம-அதர்மத்தை தேர்ந்தெடுக்கும் உரிமையுடையவனுக்குத்தான் விதி நிஷேதம் உண்டு. இவர்கள் செய்கின்ற செயல்களிலிருந்து பாவ-புண்ணியங்கள் உருவாகின்றது. 

ஸர்வபூ4தஸுஹ்ருச்சா2ந்தோ ஞானவிக்3ஞான நிஶ்சய: |
பஶ்யன்மதா3த்மகம் விஶ்வம் ந விபத்3யேத வை புன: || 12 ||

ஸுஹ்ருத் – நண்பன் – எதிர்ப்பார்ப்பின்றி நட்புடன் பழகுபவன்
ஸர்வபூத – எல்லா ஜீவராசிகளினுடைய மகிழ்ச்சியினால் மகிழ்ந்திருப்பான்.  
ஞானி ஜகத் மித்யா என்ற புத்தியுடனும், மனம் சாந்தத்துடனும் இருப்பான், மனம் மென்மையாக இருக்கும்
ஶாந்தஹ – அவனுடைய மனம் என்றும் அமைதியுடன் இருந்து கொண்டு இருக்கும்.  அவனுடைய சித்தமும் அமைதியாக இருக்கும்
ஞான விக்ஞான நிஶ்சய – ஞானத்திலும், ஞான நிஷ்டையிலும் உறுதியை அடைந்து விட்டான்.
பஶ்யன் மதா3த்மகம் விஶ்வம் – இந்த உலகத்தை என் ஸ்வரூபமாகவே பார்க்கின்றான்
ந விபத்3யேத வை புன: - இதனால் சம்சாரத்தில் மீண்டும் வீழ்ந்து விட மாட்டான்

ஶ்ரீஶுக உவாச
இத்யாதி3ஷ்டோ ப3க3வதா மஹாபா4க3வதோ ந்ருப |
உத்3த4வ: ப்ரணிபத்யாஹ தத்3 த்வம் ஜிக்3ஞாஸுரச்யுதம் || 13 ||

ஶ்ரீஶுகர் கூறுகிறார்
கிருப ஹே பரீக்ஷித் ராஜனே!
இதி ஆதி3ஷ்டஹ – இவ்விதம் உபதேசிக்கப்பட்டபின்
மஹாபாகவதஹ – பரமபக்தரான, பக்தர்களுக்குள் மேலானவரான, மோட்சத்தை அடைய விரும்புகின்ற பக்தனான
உத்தவ – உத்தவர்
தத் த்வம் ஜிக்ஞாஸு – ஆத்ம தத்துவத்தை அறிந்து கொள்ள விரும்புபவனாக
ப்ரணிபத்யாஹ அச்யுதம் – அச்சுதனான ஸ்ரீகிருஷ்ண பகவானை பணிவுடன் வணங்கிக் கேட்டார்.

ஶ்ரீஉத்3த4வ உவாச
யோகே3ஶ யோகா3வின்யாஸ யோகா3த்மன்யோக3ஸம்ப4வ |
நி:ஶ்ரேயஸாய மே ப்ரோக்தஸ்த்யாக3: ஸன்னயாஸலக்ஷண: || 14  ||

உத்தவர் கேட்கிறார்
யோகே3ஶ - யோகத்திற்கு தலைவரே! எல்லா சாதனங்களுக்கும் பலனை தருபவரே!
யோகவின்யாஸ – சாதகர்களை காப்பாற்றுபவராகவும்; பக்தர்களை ரக்ஷிப்பவராகவும்
யோகா3த்மன் – சாதனங்களின் ஸ்வரூபமாகராகவும் இருப்பவரே
யோக3ஸம்ப4வ – சாதனங்களின் தோற்றத்திற்கும் காரணமானவரே1
ஸந்ந்யாஸ லக்ஷண – சந்நியாஸ ஸ்வரூபமானது
தியாகஹ - தியாகமானது
நிஶ்ரெயஸாய – மோட்சத்தைப் பற்றியது, ஆன்மீக மேன்மைக்காக
மே ப்ரோக்தஹ – எனக்கு உங்களால் உபதேசிக்கப்பட்டது

த்யாகோ3Sயம் துஷ்கரோ பூ4மன்காமானாம் விஷயாத்மபி4: |
ஸதராம் த்வயி ஸர்வாத்மன்னப4க்தைரிதி மே மதி: || 15 ||

பூமன் – எல்லையற்றவரே! பிரஹ்ம ஸ்வரூபமாக இருப்பவரே!
காமானாம் விஷயாதமபி4: - புலனுகர் இன்பங்களில் பற்றுக் கொண்டு பற்பல விஷயங்களில் சிக்கியுள்ளவர்களால்
அயம் த்யாக3ஹ – இந்த தியாகத்தை செயல்படுத்துவது மிகவும் கடினம்
த்வயி அபக்தைஹி ஸுதராம் – அதிலும் தங்களிடம் பக்தி செலுத்தாதவர்களுக்கு கண்டிப்பாக மிகவும் கடினம்.
ஸர்வாத்மா – அனைத்துமாக இருக்கின்றவரே!
இதி மே மதி: - இது என்னுடைய கருத்து

ஸோSஹம் ம்மாஹமிதி மூட4மதிர்விகா3ட4ஸ்
        த்வன்மாயயா விரசிதாத்மனி ஸானுபந்தே4 |
தத்த்வஞ்தஸா நிக3தி3தம் ப4வதா யதா2ஹம்
        ஸம்ஸாத4யாமி ப4க3வன்னனுஶாதி4 ப்4ருத்யம் || 16 ||

ப்4ருத்யம் – உங்கள் சேவகனான எனக்கு
ப4வதா நிக3தி3தம் – உங்களால் உபதேசிக்கப்பட்ட தியாகத்தை
யதா2 அஹம் – எவ்விதம் நான்
அஞ்ஜஸா ஸம்ஸாத4யாமி – உடனடியாக, நன்கு அடையமுடியுமோ
பகவன் அனுஶாதி4 – பகவானே அதை உபதேசித்து அருளுங்கள்
மூ4டமதிஹி – தவறான புத்தியுடையவனாகவும், அறியாமையுடனும், மோகத்திலும் இருக்கின்றேன்
ஸஹ அஹம் – இப்படிபட்ட நான்
அஹம மம இதி = நான் என்னுடையது என்ற புத்தியை உடையவனாக, இந்த அனாத்மாவான உடலில் நான் என்னுடையது என்ற மதிமயக்கத்தில் மூழ்கி இருக்கின்றேன்.
த்வன் மாய்யா விரசித ஆத்மனி – உங்களுடைய மாயையினால் உருவக்கப்பட்ட இந்த சரீரத்தில்
விகா3த4 – மூழ்கி இருக்கின்றேன்
ஸானுப3ந்தே4 – உற்றார்-உறவினர்களிடத்திலும் நான், என்னுடையது என்ற பற்றில் மூழ்கியவனாக இருக்கின்றேன்.

விசாரம்
தியாகம் செய்வது மோட்சத்தை அடைவதற்கு ஒப்பாகும், தியாகம் செய்ய முடியாத நிலை சம்சாரத்திலே இருக்கும் நிலை. சம்சாரம்தான் தியாகத்தை செய்ய விடாமல் தடுக்கின்றது. உடலும், உலகமும் அனாத்மாக்கள். இவைகள் மீதுள்ள விடமுடியாத பற்றே சம்சாரம். அந்தக்கரணத்திலிருக்கும் அதிருப்திதான் பற்றை ஏற்படுத்துகின்றது.  இந்த மனநிறைவின்மைக்குக் காரணம் அனாத்மாவான உடலின் மீது கொண்டிருக்கும் அபிமானம்தான். இதனால் உடலினுடைய தர்மங்களும் உன்னுடைய தர்மமாகின்றது உடலுக்கு பசி ஏற்பட்டால் உன்னுடையதாகின்றது. உடலுக்கு வரும் துன்பங்கள் நம்முடைய துன்பமாக கருதி வருந்துகிறோம். இந்த அபிமானம் வருவதற்குக் காரணம் உண்மையான நான் எது என்ற அறியாமைதான், அக்ஞானம்தான். ஆத்ம அக்ஞானம், தன்னைப் பற்றிய அக்ஞானம், அனாத்மாக்கள் மித்யா என்று அறிந்து கொள்ளாதது. அறியாமை அனாதியாக இருந்து வருகின்றது.

ஸத்யஸ்ய தே ஸ்வத்3ருஶ ஆத்மன ஆத்மனோSன்யம்
        வக்தாரமீஶ விபு3தே4ஷ்வபி நானுசக்ஷே |
ஸர்வே விமோஹித்தி4யஸ்தவ மாய்யேமே
        ப்3ரஹமாத3யஸ்தனுப்4ருதோ ப3ஹிர்ர்த2பா4வா: || 17 ||

இதில் உத்தவருக்கு பகவானிடத்தல் இருக்கும் சிரத்தையை எடுத்துக்காட்டுகின்றது.
ஈஶ - ஈஶ்வரரே
ஆத்மனஹ - எனக்கு
விபு3தே4ஷ் அபி – தேவர்களுக்குள்ளும் கூட
அன்யம் வக்தாரம் – உங்களைத் தவிர உபதேசிப்பவர் வேறொருவரை
ந அனுசக்ஷே - பார்க்கவில்லை
ஸத்யஸ்ய – என்றும் இருக்கின்ற
ஸ்வத்3ருஶ - சுயமாக பிரகாசித்துக் கொண்டிருக்கின்ற சைதன்ய ஸ்வரூபமாக
ஆதமன – ஆத்ம தத்துவமாக இருக்கின்ற பகவானே
மாயயா – உங்களுடைய வசத்தினால்
ஸர்வே விமோஹித தி4ய – எல்லா ஜீவராசிகளும் ஆத்மா-அனாத்மா விஷயத்தில் மோக வசப்பட்டுள்ள புத்தியை உடையவர்களாக இருக்கிறார்கள்
தனுப4ருதோ – உடலைத் தாங்கியுள்ள
ப்3ரஹ்மாத4யஹ – பிரம்மா முதலிய எல்லோரும்
ப4ஹிரர்த2பா4வா – எல்லா ஜீவராசிகளும் வெளி விஷயத்தையே பார்க்கும் உணர்வு உடையவர்களாக இயற்கையாகவே இருக்கிறார்கள். யாருமே உட்புறமாக மனதை திருப்பி விசாரம் செய்வதில்லை

தஸ்மாத்3 ப4வந்தமனவத்3யமனந்தபாரம்
        ஸர்வக்3ஞமீஶ்வரமகுண்ட2விகுண்ட2தி4ஷ்ண்யம் |
நிர்விண்ணதீ4ரஹமு ஹே வ்ருஜினாபி4தப்தோ
        நாராயணம் நரஸக2ம் ஶரணம் ப்ரபத்3யே || 18 ||
ஶரணம் ப்ரபத்3யே – நான் சரணடைகிறேன்.

தஸ்மாத்3 ப4வந்தம் – ஆகவே உங்களை
அனவத்யம் – குற்றமற்றவர், குறையொன்றுமில்லாதவர், வஞ்சகமற்றவர்
அனந்தபாரம் – காலத்தாலும், தேசத்தாலும் வரையறுக்கப்படாதவர், நித்யமானவர். 
இது குரு அடைந்துள்ள ஞானத்தை குறிக்கின்றது)
ஸர்வக்ஞம் – அனைத்தையும் அறிந்தவர், ஆத்ம தத்துவத்தை உபதேசிக்க தேவையான அனைத்து அறிவையும் கொண்டவர். இது பகவானுக்கு பொருந்தாது மற்ற ஸத்குருவிற்கு பொருந்தும்.
ஈஶ்வரம் – பகவானைக் குறிக்கும் போது இது ஸ்துதியாக இருக்கின்றது. குருவைக் குறிக்கும் போது சாமர்த்தியம் உடையவராக இருப்பதை குறிக்கும். மன்னிக்கும் குணமும், பொறுமையும் உடையவர். சிஷயனிடத்தில் இருக்கும் குறைகளை நீக்கி அரவனைத்து உயர்த்தும் சாமார்த்தியம் உடையவர்
அகுண்ட2விகுண்ட2 த்4ருஷ்ன்யம் – அழிவில்லாத வைகுண்டத்தை இருப்பிடமாக கொண்ட பகவானே! பிரம்ம நிலையில் குரு இருக்குமிடம் அழியாததாகும்.  அதாவது பிரம்மனாகவே இருக்கின்றவர்.
நாராயணம் – பகவானை குறிக்கும் போது நீங்கள் நாராயணனாக இருக்கிறீர்கள். நாரம் என்ற சொல்லுக்கு மனித சமூகம், அயணம் என்பது இருப்பிடம், லட்சியம் குறிக்கின்றது.
  1. எல்லா ஜீவர்களுக்குள்ளும் இருக்கின்ற சாட்சி ஸ்வரூபமாக இருப்பவர்
  2. ஜீவர்கள் அடைய வேண்டிய லட்சியமாக இருப்பவர்
நரஸக2ம் – எல்லா மனிதர்களுக்கும் நண்பராக இருப்பவர், அஜாதசத்ருவாக இருக்கும் தங்களை நான் சரணடைகின்றேன்.
நிர்விண்ணதீ4ரஹம் – நான் துயரமடைந்த மனதுடையவனாக இருக்கின்றேன்
வ்ரஜின அபிதப்தஹ – பாவத்தினால் கூட நான் வாடிக் கொண்டிருக்கின்றேன். மனதிலிருக்கும் விருப்பு-வெறுப்பு, பொறாமை போன்ற தீய குணங்களினால் வதைக்கப்பட்டு கொண்டு  இருக்கின்றேன்.

ஶ்ரீப4கவான் உவாச
ப்ராயேண மனுஜா லோகே லோகதத்த்வ்விசக்ஷணா: |
ஸமுத்3த4ரந்தி ஹயாத்மானமாத்மனைவாஶுபா4ஶயாத் || 19 ||
ஶ்ரீபகவான் கூறினார்.
மனிதர்கள் தம்மைத்தாமே உயர்த்திக் கொள்ள வேண்டும். ஒருவருடைய முன்னேற்றத்திற்கு அவனேதான் காரணமாக இருக்கின்றான். ஒரு விஷயத்தில் முடிவெடுப்பதற்கு முன்னர் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
ப்ராயேண – பொதுவாக எப்பொழுதும்
லோகே மனுஜா – இந்த உலகத்திலுள்ள மனிதர்கள்
லோகதத்த்வ விசக்ஷணா: - இந்த உலகத்திலுள்ள விஷயங்களை, தத்துவங்களை ஆராய்ந்து முடிவெடுக்கிறார்கள்.
அஶுப4 ஆஶயாத் – அவர்களிடத்திலிருக்கும் விஷய, அசுப வாஸனைகளிலிருந்து, எல்லாவித தீய குணங்களிலிருந்து
ஆத்மானாம் ஆத்மனா ஏவ – தன்னை தன்னாலேயே
ஸமுத்3த4ராந்தி – உயர்த்திக் கொள்கிறார்கள்
நிகழ்காலத்தில் எடுக்கப்படும் முடிவுகள்தான் வருங்காலத்தில் ஊழ்வினையாக வருகின்றது. எனவே ஆராய்ந்து அறியும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆத்மனோ கு3ருராத்மைவ புருஷஸ்ய விஶேஷத: |
யத்ப்ரத்யக்ஷானுமானாப்4யாம் ஶ்ரேயோSஸாவனுவிந்ததே || 20 ||

குறிப்பாக மனிதனானவன் தனக்கு தானே குருவாக இருக்க முடியும்.
தவறான அறிவு:
  • என்னுடைய ஆத்மாதான் எனக்கு குரு என்று நினைத்துக் கொண்டிருப்பது
  • என்னுடைய மனமே எனக்கு குரு என்று நினைத்துக் கொண்டிருப்பது, அறியாமையோடு கூடிய மனம் எப்படி அறியாமையை நீக்கும் குருவாக முடியாது
  • மனதின் ஒருபகுதி சிஷ்யனாகவும், இன்னொரு பகுதி குருவாகவும் இருக்கிறது என்று நினைப்பவர்கள்
  • எனக்கு வெளியிலிருக்கும் எவரும் குருவாக இருக்க தேவையில்லை என்று நினைப்பது
சரியான அறிவு:
  • உனக்கு நீயே குருவைப் போல என்று புரிந்து கொள்ள முடியும். குருவானவர் தனது சிஷ்யனை உயர்த்துவது போல உன்னை நீயே உயர்த்திக் கொள்ள வேண்டும்.
ஆத்மனஹ - ஜீவனான எனக்கு (ஸ்தூல, சூட்சும, காரண சரீரங்களை உடையவன்)
ஆத்மா ஏவ குரு – புத்தியானது குருவைப்போல உள்ளது. எல்லா பிரமாணங்களுக்கும் பின்னால் மனம் இருந்து கொண்டு இருக்கின்றது. புத்தியானது அறிவைக் கொடுக்கும் பொதுவான பிரமாணமாக இருக்கின்றது.
யத் – எப்படி குருவாக இருப்பது என்றால்
பிரதியக்ஷ, அனுமானம் இவைகளின் மூலமாக தனக்கு தானே நன்மையை தேடிக் கொள்கின்றான். இதிலிருந்து அறிவைக் கொடுக்கும் கருவிகள் எல்லோரிடத்திலும் இருக்கின்றது என்று தெரிந்து கொள்ளலாம்.  எனவே ஒருவன் அவைகளை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஒருவன் எப்படியாவது ஈஸ்வரனுடைய கிருபையை அடைந்தாக வேண்டும்.  தர்மப்படி வாழ்ந்து அவன் நாமத்தை ஸ்மரித்துக் கொண்டு இருக்க வேண்டும். குருவினுடைய கிருபையை பணிவு மூலம் அடைய வேண்டும். சாஸ்திரத்தின் கிருபையை அடைய வேண்டும். ஆத்ம கிருபையை அடைய வேண்டும். அதாவது நம்மிடத்தில் நமக்கே கிருபையிருக்க வேண்டும்.  ஈஸ்வர, குரு கிருபை அடைந்தவர்களுக்கு இந்த ஆத்ம கிருபை நிச்சயமாக கிடைக்கும்

புருஷத்வே ச மாம் தீ4ரா: ஸாங்க்2ய்யோக3விஷாரதா3: |
ஆவிஸ்தராம் ப்ரபஶ்யந்தி ஸர்வஶக்த்யுப ப்3ரும்ஹிதம் || 21 ||

இதில் பகவான் மனிதப்பிறவியின் மதிப்பைக் கூறுகின்றார்.
புருஷத்வே – மனிதனுடைய ஜென்மத்தில்தான்
தீ4ரா: - விவேகமுடையவர்கள்
ஸாங்க்2ய யோக3 – சாங்கியத்திலும், யோகத்திலும்
விஶாரதா3: - தேர்ச்சி அடைந்தவர்களாக இருப்பதால்
ஸர்வஶக்த்யுப ப்3ரும்ஹிதம் – அனைத்து ஆற்றலும் கொண்ட பரமாத்வான
மாம் ஆவிஸ்தராம் ப்ரபஶ்யந்தி – என்னை அடைகின்றார்கள்
ஸாங்க்2யம் என்பதற்கு ஆத்ம ஞானத்தை அடைய உதவும் ஞானயோகத்தை பயன்படுத்தி அதை அடைந்திருத்தல் என்று பொருட்கொள்ள வேண்டும். யோக3ம் என்பதற்கு அடைந்த ஞானத்தில் நிலை பெற்றிருத்தல், உள்ளத்தூய்மை அடைவதற்கு தேவையான தவத்தை மேற்கொண்டு அதை அடைதல் என்று பொருட் கொள்ள வேண்டும்.

ஏகத்3வித்ரிசதுஸ்பாதோ3 ப3ஹுபாத3ஸ்ததா2பத3: |
ப3ஹவ்ய: ஸந்தி புர: ஸ்ருஷ்டாஸ்தாஸாம் மே பௌருஷீ ப்ரியா || 22 ||

படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளில் மனிதப்பிறவிதான் எனக்கு பிடித்தமானது. ஒரு கால்களுடையவைகள், இரண்டு கால்களுடையவைகள், மூன்று கால்களுடையவைகள், நான்கு கால்களுடையவைகள், பல கால்களுடையவைகள், கால்களே இல்லாதவைகள் என பலவகைப்பட்ட படைப்புக்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. அவைகளிலே எனக்கு மனித சரீரம்தான் பிடித்தமானது

அத்ர மாம் ம்ருக3யந்த்யத்3தா4 யுக்தா ஹேதுபி4ஶ்வரம் |
க்3ருஹயமாணௌர்கு3ர்ணௌர்லிங்கை3ர் க்3ராஹயமனுமானக்த: || 23 ||

மனித சரீரத்திலிருந்து கொண்டு புத்தியின் துணைக்கொண்டு என்னை அறிகின்றார்கள். சரியான பிரமாணத்தை பயன்படுத்தி புத்தியில் என்னை அடையும் வழியை அறிகின்றார்கள். வெறும் புலன்களைக் கொண்டு என்னை அறியமுடியாது.

புகையானது நெருப்பின் இருப்பைக் காட்டிக் கொடுக்கின்றது. வெளிச்சமானது பொருட்களைக் காட்டிக் கொடுக்கின்றது.  பொருட்களின் இருப்பு வெளிச்சத்தைக் காட்டிக் கொடுக்கின்றது. அனாத்மாவைக் கொண்டுதான் ஆத்மாவை அறிந்து கொள்ள முடியும்.

தம் அனுபவத்திற்கு வருகின்ற பொருட்களைக் கொண்டு என்னை புரிந்து கொள்கிறார்கள். மனித சரீரத்தில் ஈஸ்வரரான என்னை நேரிடையாக தேடுகின்றார்கள்.  தகுதியுடையவர்கள் யுக்தியினாலும் இவ்வாறு முயற்சிக்கின்றார்கள்.  மனிதனால் புலன்களினால் அனுபவிக்கப்படுகின்ற பொருட்களைக் கொண்டு அவைகளை அடையாளமாக எடுத்துக் கொண்டு கிரகிக்க முடியாத ஆத்மாவை (என்னை) புரிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள்

அத்ராப்யுதா3ஹரந்தீம்மிதிஹாஸம் புராதனம் |
அவதூ4தஸ்ய ஸ்ம்வாத3ம் யதோ3ரமித்தேஜஸ: || 24 ||

இந்த விஷயமாக மிகப் பழமையான ஒரு இதிகாசத்தை, கதையை நம் முன்னோர்கள் கூறி இருக்கின்றார்கள். அது யது மகராஜாவுக்கும், மிகுந்த தேஜஸ்வியான அவதூதருக்கும் இடையே நடந்த உரையாடலாக இருக்கின்றது.

அவதூ4தம் த்3வியம் கஞ்சிச்சரந்தமகுதோப4யம் |
கவிம் நிரீக்ஷ்ய தருணம் யது3: பப்ரச்ச2 த4ர்மவித் || 25 ||

த்3விஜம் – இருபிறப்பாளர் (பிராமணர்), ஞானத்தினால் வேறொரு பிறப்பை எடுத்த
கஞ்சித் சரந்தம் – யாரோ ஒருவர் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்
அகுதோப4யம் – எதனாலும் பயப்படுத்த முடியாதவர்; எதைக் கண்டும் பயப்படாதவர்
கவிம், தருணம் – ஆத்ம ஞானி, அறிவாளி, இளம் வயதுடையவர்
நிரீக்ஷ்ய – இப்படிப்பட்டவரை பார்த்து
த4ர்மவித் – தர்மத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்து கொண்டிருந்த
யது3:  - யது3 என்ற அரசன்
ப்ப்ரச்ச2 – கீழ்கண்ட கேள்விகளை கேட்டார்

ஶ்ரீயது3ருவாச
குதோ பு3த்3தி4ரியம் ப்3ரஹ்மன்னகர்து: ஸுவிஶாரதா3 |
யாமாஸாத்3ய ப4வால்லோகம் வித்3வாம்ஶ்சரதி பா3லவத் || 26 ||

யது மகராஜன் கேட்டான்.
அவதூ3தர் – சந்நியாஸ ஆசிரமத்தில் இருக்கும் ஒரு வகையினர். இதற்கு நன்கு அனைத்தையும் துறந்து விடுதல் என்று பொருட்படும்.  ஆசிரம தர்மங்கள், விதிகள் காலத்திற்கு தகுந்தவாறு மாறிக் கொண்டேயிருக்கும்.  இந்த வகையான சந்நியாஸிகளுக்கு எந்தவிதமான விதியும் கிடையாது. இவர் சமுதாயத்திற்கு வெளியே வாழ்பவர். வர்ணாசிரம விதிகளுக்கு அப்பாற்பட்டவர்.
    - அக்ஷரத்வாத் – அழியாத ஞானத்தை உடையவர்
     - வரேன்யாத் – நாடப்பட வேண்டியவர்
தூ3  - தூ3த சம்சாராத் – சம்சாரத்தை விட்டவர்
       - தத்வமஸி என்ற வாக்கியத்தை உணர்ந்தவர்.

குதஹ இயம் ஸுவிஶாரதா3 புத்3தி4 – எங்கிருந்து இந்த மிகமிக நுட்பமான, ஆழ்ந்த, தெளிவான அறிவை அடைந்தீர்கள்?
ப்ரஹமன் ப4வான் – ஹே பிராம்மணரே, தாங்கள்
யாம் ஆஸாத்3ய – எந்த அறிவை அடைந்து
பா4லவத் சரதி – பாலகனைப் போல சஞ்சரித்துக் கொண்டிருக்கிறீர்கள்
அகர்து – எந்த செயலையும் செய்யாமல், செயல் எதுவும் செய்வதில்லை, இன்பத்திற்காகவும், அறிவை அடைவதற்காகவும் எந்தச் செயலும் செய்வதில்லை
லோகம் வித்3வான் – இந்த உலகத்தின் தன்மை நன்கு அறிந்து கொண்டு, இந்த உலகத்திற்கு இன்பத்தை, சுகத்தைக் கொடுக்கும் சக்தி கிடையாது, பொய்யானது, நிலையற்றது என்று தெரிந்தும் சந்தோஷமாக எப்படி இருக்கின்றீர்கள்.

ப்ராயோ த4ர்மா4ர்த2காமேஷு விவித்ஸாயாம ச மானவா: |
ஹேதுனைவ ஸமீஹந்த ஆயுஷோ யஶஸ: ஶ்ரிய: || 27 ||

ப்ராயஹ - பொதுவாக
தர்ம அர்த்த2 காமேஷு – புருஷார்த்தமான அறம், பொருள், இன்பம் இவைகளை அடைவதற்கு, புண்ணியத்தை அடைவதற்கான தர்மத்தைக் கடைப்பிடித்தும், வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை அடைவதிலும், சுகத்திற்கு தேவையான பொருட்களை அடைவதிலும் செயல்படுகிறார்கள்
விவித்ஸா – இவைகளை அடைவதற்கு தேவையான அறிவை நாடுகிறார்கள்
மானவா ஹேதுனா ஏவ – மனிதர்கள் இதற்காகவே
ஸமீஹந்த – முயற்சி செய்கிறார்கள்
ஆயுஶஹ, யஶஹ, ஶ்ரியஹ – நீண்ட ஆயுளோடும், புகழோடும், செல்வ செழிப்போடும்
இருக்க வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். செயலில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள்

த்வம் து கல்ப: கவிர்த3க்ஷ: ஸுப3கோ3Sம்ருதபா4ஷண: |
ந கர்தா நேஹஸே கிஞ்சிஜ்ஜடோ3ன்மத்தபிஶாசவத் || 28 ||

த்வம் து கல்ப: - நீங்கள் செயல்திறன் படைத்தவர், அறிவு திறன் படைத்தவராக இருக்கிறீர்கள், சாஸ்திர ஞானமும் இருக்கிறது, சாமர்த்தியம் கொண்டவர்
ஸுப4க3: - பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கிறீர்கள்
அம்ருதபா4ஷண – நல்ல பேச்சாற்றல் உடையவராக இருக்கிறீர்கள், மற்றவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் பேசும் திறன் உடையவராக இருக்கிறீர்கள்
ந கர்தா – ஆனால் எதையும் செய்வதில்லை
ந ஈஹஸே கிஞ்சித் – எதற்கும் ஆசைப்படாமல் இருக்கிறீர்கள்
ஜ்ட3ம் – உயிரற்ற பொருள் போலவும்
உன்மத்த – சித்தம் கலங்கியவரைப் போலவும்
பிஶாசவத் – தீயசக்தியால் ஆட்கொள்ளப்பட்டவனைப் போலவும், பிசாசைப் போலவும் இருக்கிறீர்கள்.

ஜனேஷு த3ஹயமானேஷு காமலோப3த3வாக்3னினா |
ந தப்யஸேSக்3னினா முக்தோ க3ங்கா3ம்ப4:ஸ்த2 இவ த்3விப: || 29 ||

கங்கையின் நீருக்குள் இருக்கும் யானையானது சுற்றி எரியும் காட்டு நெருப்பால் பாதிக்கப்படாதது போல இந்த உலகிலிருக்கும் மனிதர்கள் காமம், லோபம், என்கின்ற காட்டுத் தீயினால் எரிக்கப்படுகிறார்கள். (காமம், கோபம், மதம், மோஹம், மாத்ஸர்யம் போன்ற துன்பத்தைக் கொடுக்க்க்கூடிய உணர்வுகளால், எண்ணங்கள் – காட்டு தீக்கு உவமையாக கூறப்படுகிறது.) ஆனால் இந்த அக்னியால் எரிக்கப்படாமல் முற்றிலும் விடுபட்டவராக நீங்கள் ஆனந்தமயமாக நிற்கிறீர்கள்.

த்வம் ஹி ந: ப்ருச்ச2தாம் ப்3ரஹ்மன்னாத்மன்யானந்தகாரணம் |
ப்3ரூஹி ஸ்பர்ஶாவிஹீனஸ்ய ப4வத: கேவலாத்மன: || 30 ||

ஹே பிரம்மனே! கேட்கின்ற எங்களுக்கு நீங்கள் உபதேசம் செய்ய வேண்டும்.  உங்களிடத்திலேயே நீங்கள் ஆனந்தமாக இருப்பதற்கும், எந்த பொருட்களில்லாமல் தனிமையிலே இருந்து கொண்டும், சுகம் தரும் விஷயங்களை எதுவும் இல்லாமல் இருந்து கொண்டும் எவ்வாறு ஆனந்தமாக இருக்கிறீர்கள். எங்களுக்குத் தாங்கள் தயவு செய்து உபதேசித்தருள வேண்டும்.

இதிலிருந்து உலகத்தில் உள்ள எந்தப்பொருட்களுக்கும் முழு மனநிறைவை, மன அமைதியை சுகத்தைக் கொடுக்கும் சக்தியற்றவை என்ற் தெரிந்துக் கொள்ளலாம்

ஶ்ரீபகவான் உவாச
யது3னைவம் மஹாபா4கோ3 ப்3ரஹ்மண்யேன ஸுமேத4ஸா |
ப்ருஷ்ட: ஸபா4ஜித: ப்ராஹ ப்ரஶ்ரயாவனதம் த்3விஜ: || 31 ||

ஶ்ரீபகவான் கூறுகிறார்.
ஹே உத்தவா! வேதத்தையும், குருவையும் மதிக்கின்றவரும், புரிந்து கொள்ளும் ஆற்றலமுடைய யது மன்னனால் பணிவுடனும், பக்தியுடனும் வணங்கிக் கேட்கப்பட்டதும் அவர் கீழ்கண்டவாறு உபதேசம் செய்யத் தொடங்கினார். சிஷ்யனுக்கு இருக்க வேண்டிய தகுதிகளை பகவான் இங்கு குறிப்பால் உணர்ந்து இருக்கின்றார்.

ஶ்ரீப்3ராஹ்மண உவாச
ஸந்தி மே கு3ரவோ ராஜன் ப3ஹவோ பு3த்3த்4யுபஶ்ரிதா: |
யதோ பு3த்3தி4முபாதா3ய முக்தோSடாமீஹ தான்ஶ்ருணு || 32 ||

ஶ்ரீபிராமணர் பதிலளிக்கிறார்.
ஹே அரசே! எனக்கு பல குருமார்கள் எனக்கு இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து அறிவைப் பெற்றேன். இவர்கள் என்னுடைய புத்தியினால் அடையப் பெற்றவர்கள். அந்த குருமார்களிடம் இருந்து ஞானத்தை அடைந்து இந்த உலகத்தில் முக்தனாக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். அந்த குருமார்களை பற்றிக் கூறுகிறேன். கேட்பாயாக!

விசாரம்
  1. குருவே தேவையில்லை என்று சிலர் கூறுவார்கள். இது தவறான கருத்து. இது வியாகாத தோஷம் என்று கூறுவர். நான் ஊமை என்று ஒருவன் சொல்வது போல இருக்கிறது. குரு தேவையில்லை என்ற ஒருவரிடமிருந்து கேட்கும்போது சொல்பவர் இவருக்கு குருவாகி இருக்கிறார்.
  2. எனக்கு நானே குருவாக இருக்கிறேன். அறியாமையுள்ள என் மனமே எனக்கு எப்படி கொடுக்க முடியும்? இதுவும் தவறான கருத்து. இதை ஆத்மாஶ்ரேய தோஷம்
  3. ஒரு அறிவுக்கு ஒரு குரு. இப்படி பார்க்கும் போது பல குருமார்கள் நமக்கு தேவைப்படுகிறது. ஏக வித்3யா ஏக குரு. ஒரு பாடத்திற்கு ஒரு குருதான் சரியான முறை. வேதாந்தம் படிக்க ஒரு குருவிடம்தான் செல்ல வேண்டும்.
ப்ருதி3வீ வாயுராகாஶமாபோSக்3னிஶ்சந்த்3ரமா ரவி: |
கபோதோSஜகர: ஸிந்து4: பதங்கோ3 மது4க்ருத்3க3ஹ: || 33 ||
மது4ஹா ஹரிணோ மீன: பிங்க3லா குர்ரோSர்ப4க: |
குமாரீ ஶரக்ருத்ஸர்ப ஊர்ணனாபி4: ஸுபேஶக்ருத் || 34 ||

இந்த இரண்டு ஸ்லோகங்களில் அவருடைய குருமார்களாக யார் யார் என்று கூறியிருக்கின்றார்.
நிலம், வாயு, ஆகாஶம், நீர், அக்னி, சந்திரன், சூரியன், புறா(கபோதஹ), மலைப்பாம்பு (அஜகர), ஸிந்து4-கடல், பதங்க3-விட்டிற்பூச்சி, மது4க்ருத்-தேனி, க3ஜ-யானை, மது4ஹா-தேனெடுப்பவன், ஹரிண-மான், மீனஹ-மீன், பிங்க3லா-வேசி, குரா-ஒருவிதமான பறவை, அர்ப4கஹ-குழந்தை, குமாரீ-இளம்பெண், ஶரக்ருத்-அம்பு தொடுப்பவன், ஸர்பஹ-பாம்பு, ஊர்ணநாபி4-சிலந்தி, ஸுபோஶக்ருத்- குளவி.

ஏதே மே கு3ரவோ ராஜன் சதுர்விஶதிராஶ்ரிதா: |
ஶிக்ஷா வ்ருத்திபி4ரேதேஷாமன்வஶிக்ஷமிஹாத்மன: || 35 ||

அரசே! இந்த 24 குருமார்களிடமிருந்து எந்தெந்த அறிவைப் பெற்றேன் என்பதைச் சொல்கிறேன். இவைகளின் செயல்களை கவனித்து படிப்பினையைக் கற்றுக் கொண்டேன்.
விசாரம்
புத்தியைக் கொண்டு நான் அடைந்த ஆசாரியர்கள் சிலர் ஜடமானவைகள், சில விலங்குகள், பறவைகள் என்று உள்ளன.  நாம் எப்படி புரிந்து கொள்ள வேண்டும். இவைகள் நேரிடையாக ஞானத்தை கொடுக்கக்கூடியவைகள் அல்ல. அவைகளின் குணங்கள், செயல்களை கூர்ந்து கவனித்து நாமே அறிவை அடைந்துக் கொள்ள வேண்டியது. உலகத்திடமிருந்து இருவகையாக அறிவை அடையலாம்.  அவைகள் 1. எப்படி இருக்க வேண்டும், 2.எப்படி இருக்க கூடாது (வியதிரேகம்) என்பதாகும்.

யதோ யதனுஶிக்ஶாமி யதா2 வா நாஹுஷாத்மஜ |
தத்ததா2 புருஷவ்யாக்4ர நிபோ3த4 கத2யாமி தே || 36 ||

நாஹுஶாத்மஜஹே யயாதி மகராஜனின் மகனே! யயாதி குலத்தென்றலே!
எந்த குருவிடமிருந்து எந்த அறிவை நான் கற்றுக் கொண்டேன், எவ்விதம் கற்றுக் கொண்டேன் என்பதை 
 உனக்கு நான் சொல்லப்போகிறேன். வீரபுருஷனே! கவனமாக கேள்.

பூ4தைராக்ரம்யமாணோSபி தீ4ரோ தை3வ வஶானுகை: |
த்த்3வித்3வான்ன சலேன்மார்காதன்வஶிக்ஷம் க்ஷிதேர்வ்ரதம் ||
37 ||

இதில் பூமியிடமிருந்து பொறுமை என்ற பண்பைக் கற்றுக் கொண்டேன் என்று கூறியிருக்கிறார். பொறுமையானது பலமும், சகிப்புத்தன்மையும் கலந்திருக்கும் ஒரு குணம். பொறுமையாக இருப்பது பலவீனமல்ல. சோம்பலையும், தாமதமாக செய்வதையும், தமோ குண செயல்கள் இவைகளை பொறுமையாக எடுத்துக் கொள்ளக்கூடாது.  பொறுமை என்பது ஒருவிதமான செயலேயாகும்.  செயலின்மையல்ல. இது சத்துவ குணத்தின் வெளிப்பாடு, எங்கேயெல்லாம் இதைக் கடைப்பிடிக்க வேண்டும்.
  1. செயல் செய்யும்போது அந்த செயலுக்கேற்ற வேகத்தில் செய்ய வேண்டும்
  2. செயலை செய்து முடித்தப்பிறகு அதன் பலனை அடைவதில் பொறுமையை கடைபிடிக்க வேண்டும்
  3. கர்ம பலனை அனுபவிக்கும் போது பொறுமையாக இருக்க வேண்டும். அந்த பலன் நாம் எதிர்பார்த்தபடி இல்லையென்றால் கோபமடையக் கூடாது
  4. துயரமான சூழ்நிலையில் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்நிலையில் இந்த சூழ்நிலையை மாற்ற முயற்சி செய்ய வேண்டும். அப்போதும் நீங்கவில்லை என்றால் பொறுமையுடன் அனுபவித்து தீர்க்க வேண்டும்.
நமக்கு இன்ப-துன்பத்தைக் கொடுப்பவர்கள் அனைவரும் கர்த்தாவாக நினைக்காமல் கருவியாக எண்ணிக் கொள்ள வேண்டும். இறைவன் சங்கல்பத்தின்படி இது நடக்கின்றது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் என்னுடைய கர்ம பலனை தீர்த்துக் கொள்வதற்காக எனக்கு துன்பத்தை தருகிறார்கள் என்று எண்ணிக் கொள்ள வேண்டும்.
  1. இன்பத்தை அனுபவிக்கும் போது பொறுமையோடு செயல்பட வேண்டும்
  2. இன்பத்தை அனுபவிப்பதை தள்ளி வைத்து பிறகு அனுபவித்தல்
  3. மாற்ற முடியாத விஷயத்திலும் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும்.
ஸ்லோக விளக்கம்
நம்மை சுற்றியுள்ளவர்களால் (மனிதர்கள், சூழ்நிலைகள், பிராணிகள்) எவ்வளவுதான் துன்புறுத்தப்பட்டாலும், அவைகள் எல்லாம் தெய்வ சங்கல்பத்தின்படி, பிராரப்தத்தின்படி நடக்கின்றது என்று அறிந்தவர்கள் தர்மத்திலிருந்து வீழ்வதில்லை. இந்த பண்பை பூமியிடம் இருந்து கற்றுக் கொண்டேன். பொறுமை என்ற குணத்தை பூமியிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பண்பாகும்.

பொறுமையைக் கடைப்பிடிக்க உதவும் வழிகள்
  1. யாருமே என்னுடைய துயரத்திற்கு காரணமில்லை, என்னுடைய பிராரப்தமேதான் காரணம்
  2. எதையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை இருக்க வேண்டும்
  3. பயிற்சியினால் பொறுமையை அடைய முடியும். எந்தெந்த இடத்தில் பொறுமை இல்லாமல் செயல்படுகின்றோமோ அந்தந்த இடத்தில் பொறுமையை பயிற்சி செய்து அடைய வேண்டும்.
  4. ரஜோ குணத்தை தவிர்க்க வேண்டும்.  ஆகாரம், பழக்க வழக்கங்கள் சாத்வீகமாக இருக்க வேண்டும்.
  5. பொறுமையாக இருப்பதனால் அடையும் பலன்கள்
    1. இந்தக் குணத்தை அடைந்திருப்பதே பலனாகும்
    2. மற்ற சாதனங்களை தொடர்ந்து செய்ய முடியும்
    3. நம்முடைய முயற்சிக்கு வரும் தடைகளை தகர்த்தெறிய முடியும்
    4. விடாமுயற்சியுடன் செயலை தொடர்ந்து செய்து வெற்றி பெற முடியும்
ஶஶ்வத்பரார்த2ஸர்வேஹ: பரார்தை2காந்தஸம்ப4வ: |
ஸாது4: ஶிக்ஷேத பூ4ப்4ருத்தோ நக3ஷிஷ்ய பராத்மதாம் || 38 ||

இதில் மற்றவர்களுக்கு உதவி செய்தல் (பரோபகாரம், சேவை) என்ற பண்பும் கூறப்படுகின்றது. மரங்களும், மலைகளும் பரோபகார சிந்தனையைக் கற்பிக்கின்றன.  பூமியின் எல்லா செயல்களும் பிறர் நன்மைக்காகவே நடைபெறுகின்றன. நம்முடைய அறிவை, உழைப்பை, காலத்தை, செல்வத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். எதையும் எதிர்பார்க்காமல் செய்ய வேண்டும்.

விசாரம் (சேவை)
பரோபகாரம் அல்லது சேவை என்பது மற்றவர்களுக்கு உதவி செய்தல், ஆனால் எதையும் எதிர்பார்க்காமல் இதை செய்ய வேண்டும். குருவுக்கு சேவை செய்யும் சிஷ்யனுக்கு எந்த எதிர்பார்ப்பும் இருக்கக்கூடாது. அவருக்கு சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்தை எண்ணி மகிழ வேண்டும்.  சேவை என்பது ஒருவிதமான ஈகைக்குணம், உழைப்பைக் கொடுத்தல். இது லோபம் என்ற தீய குணத்தை நீக்கி கொள்வதற்கு பயன்படும். அறிவை பணத்தைக் கொடுத்து வாங்கலாம், இதுவே குருதட்சணை என்பர்.  அறிவை சேவையின் மூலமும் அடையலாம்.  சேவையின் மூலம் பெற்ற அறிவில்தான் உயர்வடைய முடியும்.  இந்த உலகத்திடமிருந்து பல நன்மைகளை அடைந்திருப்போம். இதன் மூலம் இந்த உலகத்திற்கு நாம் பலவகையில் கடன்பட்டிருக்கின்றோம்.  இந்த கடனை தீர்ப்பதற்கு சேவைதான் உதவி செய்கின்றது.  சேவை என்பது ஒருவகையான முதலீடு போல கருதப்படும். ஆத்ம ஞானத்தை பெறுவதற்கு உதவி புரிகின்றது.  எனவே சேவை செய்வதால் பயனின்றி போகாது. சேவையினால் நம் மனம் விரிவடைகின்றது. இயற்கையை, சுற்றுப்புற சூழ்நிலைகளை பாதுகாப்பதற்கான மனப்பக்குவத்தைக் கொடுக்கும். சேவை என்பது நிஷ்காம்ய கர்மமென்று சொல்லப்படுகின்றது. சேவை செய்வதில் கர்வம் அடையக்கூடாது.  புகழுக்காக செய்யக் கூடாது.

ஸ்லோக விளக்கம்
மலைகள், மரங்கள் ஆகியவைகளின் எல்லா செயல்களும் பிறர் நன்மைக்காகவே நடைபெறுகின்றது. இதனுடைய பிறப்பே மற்றவர்களுக்கு உதவும் பொருட்டே அமைந்துள்ளது. நல்ல மனிதன், சாதகன் இதை கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு மலைகள், மரங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்தல் என்கின்ற பண்பைக் கற்றுக் கொடுக்கின்றது

ப்ராணவ்ருத் த்யைவ ஸந்துஷ்யேன்முனிர் நைவேந்த்3ரிய ப்ரியை: |
ஞானம் யதா2 ந நஶ்யேத நாவகீர்யேத வாங்மன: || 39 ||

நம் உடலுக்குள் சென்றுவரும் சுவாசக்காற்றை பிராணன் என்று கூறுகின்றோம். இதில் உணவு ஒழுக்கத்தை பாடமாக கூறுகிறார். நாம் உட்கொள்ளும் உணவு உடலுக்கு சக்தியை கொடுக்க வேண்டும், உடலுக்கு ஹிதமாக இருக்க வேண்டும், அளவாக உண்ண வேண்டும், தூய்மையாக இருக்க வேண்டும், கிருஷ்ணார்ப்பணம் செய்து பிரசாதமாக பாவித்துக் கொண்டு சாப்பிட வேண்டும்.

நம்மால் ஏன் உணவு கட்டுப்பாடுடன் இருக்க முடிவதில்லை?
Ø  சுவைகளை நாடுவதால் அதிகமாக உணவை உட்கொள்கின்றோம்
Ø  மன அழுத்தம், தனிமை, வெறுமை, பொழுது போக்குவதற்கு அடிக்கடி சாப்பிடுகிறோம்
Ø  அதிகமாக சாப்பிடுவதே பழக்கமாக இருத்தல்
Ø  மற்ற புலன்கள் வழியே அனுபவிக்கும் இன்பத்தை நிறுத்திவிட்டால், சாப்பிட வேண்டும் என்று மனம் எண்ண வைத்து சாப்பிட வைத்து விடும்.
உபாயம்
Ø  அறிவுபூர்வமாகவும், உணர்வுபூர்வமாகவும் உடல் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்று உறுதிக் கொள்ள வேண்டும்
Ø  விரதமிருந்து பழக வேண்டும்
Ø  மனதை அமைதிப்படுத்தி வைத்திருக்க வேண்டும்
Ø  மனதிற்கு சுகத்தை கொடுக்க வேண்டும்
Ø  உடற்பயிற்சி செய்ய வேண்டும்

ஸ்லோக விளக்கம்
சாதகர்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கின்ற ஆகாரத்தை அளவுடன் உட்கொண்டு மகிழ்ந்திருக்க வேண்டும்.  புலன்களை சந்தோஷப்படுத்தும் உணவை அதிகமாக உட்கொள்ளக் கூடாது.  நம் அறிவுத்திறன் இழந்துவிடாத அளவுக்கு உணவை உட்கொள்ள வேண்டும். மேலும் வாக்கும், மனமும் அறிவையும், சக்தியையும் இழக்காதவாறு உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

விஷயேஷ்வாவிஶன்யோகீ3 நானாத4ர்மேஷு ஸர்வத: |
கு3ணதோ3ஶவ்யபேதாத்மா ந விஷஜ்ஜேத வாயுவத் || 40 ||

ஒரு மனிதன், சாதகன் விஷயங்களை அனுபவிக்கும் போது, எதிர்நோக்கும் போது
ஆவிஶன் – விஷயங்களை சந்திக்கும் போது
நானாத4ர்மேஷு – விதவிதமான தர்மத்தையுடைய, குணத்தையுடைய விஷயங்கள்
ஸர்வதஹ – எல்லா இடங்களிலும் சுற்றித் திரிந்தாலும்
ஆத்மா – அந்தக்கரணம்
குண-தோஷ வ்யபேதா – அந்தந்த விஷயங்களில் உள்ள இன்ப-துன்பங்களால் பாதிக்கப்படாமல்
வாயுவத் – காற்றைப் போல
ந விஷஜ்ஜேத -  பற்றற்று இருக்க வேண்டும்.
காற்று எல்லா இடங்களிலும் வீசிக் கொண்டிருந்தாலும் எதனுடன் ஒட்டுறவு கொள்வதில்லை. பிற பொருட்களின் மணத்தை தாங்கிச் சென்றாலும் பிறகு விட்டுவிடுகின்றது.

பார்தி2வேஷ்விஹ தேஹேஷு ப்ரவிஷ்டஸ்தத்3 கு3ணாஶ்ரய: |
கு3ணைர் ந யுஜ்யதே யோகீ3 க3ந்தை4ர்வாயுரிவாத்ம த்3ருக் || 41 ||

இந்த ஸ்தூல சரீரத்தில் நான் என்று அபிமானம் வைக்காமல், இது நான் பயன்படுத்தும் கருவி என்று நினைக்க வேண்டும். ஞானி தன் உடலை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பான்.
பார்தி2வேஷு இஹ – பஞ்ச பூதங்களால் உருவான இந்த
தே3ஹேஷு ப்ரவிஷ்டஹ – உடலுக்குள் பிரவேசித்தவர்கள், ஜீவர்கள்
தத்3 குண ஆஶ்ரயஹ – அதனுடைய குணங்களை சார்ந்திருந்தாலும் கூட
க3ந்தை4வாயுஃ இவாதி – காற்று எப்படி வாசனைகளுடன் எப்படி ஒட்டுவதில்லையோ, 
கு3ணைஹி ந யுஜ்யதே யோகீ – யோகியும் நான் என்ற புத்தியை உடல் மீது வைப்பதில்லை
ஆத்ம த்3ருக் – ஆத்மாவை அறிந்த ஞானியும் இதே மாதிரி இருப்பான்
அக்ஞானி உடல் மீது அபிமானம் வைக்கின்றான், சாதகன் அதை ஒரு கருவியாக கருதுகின்றான். ஞானிக்கு அதுவே வேடிக்கைப் பொருளாக இருக்கின்றது.

அந்தர்ஹிதஶ்ச ஸ்தி2ர ஜங்க3மேஷு
        ப்3ரஹ்மாத்ம பா4வேன ஸமன்வயேன |
வ்யாப்த்யாவ்யவச்சே2த3மஸங்க3மாத்மனோ
        முனிர்னப4ஸ்த்வம் விததஸ்ய பா4வயேத் || 42 ||

ஆகாசத்திடமிருந்து ஆத்மாவின் சில லட்சணங்களைக் கண்டு கொண்டார். இதில் ஆத்ம தியானத்தை கூறுகின்றார். ஆத்மாவிற்கும், ஆகாசத்திற்கும் பொருந்திவரும் லட்சணங்கள்
  1. அந்தர்யாமி – அனைத்துக்குள்ளும் ஊடுருவி இருப்பது
  2. ப4ரஹ்மன் – பெரியது
  3. வியாபித்தல் – எல்லா இடத்திலும் வியாபித்திருக்கின்றது
  4. பூரணஹ – முழுமையாக இருப்பது
  5. அஸங்காஹ – எதனோடும் ஒட்டாமல் இருப்பது
ஸ்தி2ரஜங்க3மேஷு – அசைவதும், அசையாமல் இருப்பதுமான படைப்புக்கள் அனைத்துக்கும்
அந்தர்ஹிதஹ ச ஆத்மா – உள்ளே வீற்றிருப்பது ஆத்மா;
பிரஹ்மாத்ம பா4வேன – பிரம்ம ஸ்வரூபமாக இருக்கிறது.

ஸமன்வயேன – வெற்றிடம் இல்லாமல் முழுவதுமாக
வ்யாப்த்யா – அனைத்தையும் வியாபித்தும் 
அவ்யவச்சேதம் – பிளவுப்படாததாகவும், பூரணமானதாகவும்
அஸங்கம் – எதனுடனும் ஒட்டுதல் இல்லாததாகவும், சம்பந்தப்படாததாகவும்
விததஸ்ய  – எங்கும் நிறைந்திருக்கின்றதாகவும் உள்ள  
முனி நப4ஸ்த்வம் ஆத்மா– ஆகாசத்தின் இந்த லட்சணங்கள் ஆத்மாவில்
பா4வயேத – இருப்பதாக பாவிக்க வேண்டும்.

தேஜோSப3ன்னமயைர்பா4வைர் மேகா4த்3யைர் வாயுனேரிதை: |
ந ஸ்ப்ருஶ்யதே ந ப4ஸ்த த்3வத்காலஸ்ருஷ்டைர் கு3ணை: புமான் || 43 ||

மேகா4த்3யைஹி வாயுனஹ ஈரிதை: - காற்றினால் அலைக்கழிக்கப்படுகின்ற மேகங்கள்
ந ஸ்ப்ருஶ்யதே – ஆகாசத்தில் ஒட்டுவதில்லை
தத்3வத்3 - அதைப்போல
தேஜோ, ஆப அன்னம் – நீர், நெருப்பு, அன்னம் போன்ற பஞ்சபூதங்களால்
பா4வைஹி – உருவாக்கப்பட்ட இந்த உடலினால்,
காலஸ்ருஷ்டை கு3ண: - பிராரப்தத்தினால் உருவான உடலினால்
புமான் ந ஸ்ப்ருஶ்யதே – மனிதன் என்று பாதிப்பதில்லை என்று அறிந்து கொள்ள வேண்டும்.

ஸ்வச்ச2: ப்ரக்ருதித: ஸ்னிக்3தோ4 மாது4ர்யஸ்தீர்த2பூ4ர் ந்ருணாம் |
முனி: புனாத்யபாம் மித்ரமீக்ஷோபஸ்பர்ஶகீர்தனை: || 44 ||

நீரின் மூலம் ஞானியின் லட்சணத்தைக் கூறுகின்றார். நீரினிடத்து உள்ள நான்கு லட்சணங்கள் ஞானியிடம் இருப்பதை எடுத்துக் காட்டுகின்றார். ஞானம் இப்படிபட்ட பலனைக் கொடுக்கும் என்று புரிந்து கொள்ளலாம். ஞானத்தின் பெருமையையும், மோட்ச லட்சணமாக ஞானியின் லட்சணத்தை புரிந்து கொள்ளலாம். இதை அறிவதன் மூலம் இப்படிபட்ட பலனை அடைவதற்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் இதை முமுக்ஷுத்வம் என்று கூறுவர்.

நீருக்குள் நான்கு குணங்களை ஞானியிடத்துப் பார்க்கலாம் என்று கூறுகிறார். அவைகள்
ஸ்வச்ச2: ப்ரக்ருதித - .தூய்மையானது இயற்கையில்
ஸ்னிக்3தோ4 – இணைத்து வைக்கும் குணத்தையுடையது, ஒன்றையொன்றுடன் சேர்க்கும் குணம்,
மாது4ர்யஸ் – இயற்கையிலே சுவையென்ற குணத்தையுடையது
தீர்த2பூ3ர் ந்ருணாம் – மனிதர்களை தூய்மைப்படுத்துவது (ஸம்ஸ்கார ரூபமாக நீரை தூய்மைபடுத்துதல் )
ஈக்ஷணம் – புனித நீரை பார்த்தாலே நம்மிடத்திலே உள்ள பாவங்கள் குறையும்
உப ஸ்பர்ஶ - புனித நீரை தலையில் தெளித்துக் கொள்வதினாலும், நீராடினாலும் புண்ணியம் கிடைக்கும்
கீர்த்தனம் – புனித நீரை புகழ்ந்து பாடுதல்,
இவைகள் மூலமாக தூய்மைப்படுத்தப்படுத்தப்படுகின்றது. நீரினுடைய குணங்கள் தன்னிடத்திலே கொண்டுள்ள ஞானி மக்களை தூய்மைப்படுத்துகிறார்.

ப்ரக்ருதித:  - ஞானியானவன் முழுமையாக, சுபாவமாக
ஸ்வச்சஹ – தூய்மை அடைந்தவன். 
குழந்தையைப் போல யாரையும் வஞ்சிக்காத குணமுடையவன், தர்மவான், யாரிடமும் விருப்பு-வெறுப்பு கொள்ளாதவர், நம்பிக்கைக்கு உரியவன்.  ஞானத்தினால் தூய்மை அடைந்து இருப்பதால் அவன் எப்பொழுதுமே அப்படியேதான் இருப்பான்.

ஸ்னிக்4த4ஹ – இணைப்பது, நட்புணர்வுடையவன், யாரிடமும் வெறுப்பு கொள்ள மாட்டான்
மாது4ர்யஹ – சொல்லிலும், செயலிலும் மென்மையானவன், மற்றவர்களை சொற்களாலும், மனதாலும் துன்புறுத்தமாட்டான்.
தீர்த2பூ4ஹு ந்ருணாம் – மற்றவர்களையும் தூய்மைப்படுத்துகிறான்
அபாம் மித்ரம் – நீருக்கு நண்பனாக இருப்பதால் நீரைப்போல மூன்று விதத்தில் மற்றவர்களை தூய்மைப்படுத்துகிறான். ஞானியைப் பார்த்தாலே புண்ணியம் கிடைக்கும். அவருடைய ஆசிர்வாதத்தை பெறுவதாலும், தொடுவதாலும், புகழ்வதினாலும் நாம் தூய்மை அடையலாம்.
பார்த்தல்
ஞானியின் வாழ்க்கை முறைகளைப் பார்ப்பதினால் நமக்கும் நம்பிக்கையும், ஊக்கமும் கிடைக்கும். செல்வமும், புகழும், அதிகாரமும், பதவியும், சந்தோஷத்தைக் கொடுப்பது நிலையற்றது.  ஆனால் இவைகளில்லாமல் ஞானியானவன் மகிழ்ச்சியாக இருப்பதைக் கொண்டு தம் சாதனத்தை தொடர்ந்து செய்து கொண்டிருப்பான்
தொடுதல்
ஞானிக்கு செய்கின்ற சேவையினால் தூய்மை அடைவோம்.  பாதபூஜை செய்யும்போது, நம்மை தொட்டு ஆசிர்வாதம் செய்யும் போது தூய்மை அடைந்து விடுவோம்
பாடுதல்
ஞானியை போற்றி புகழ்வதால் தூய்மை அடைந்து விடுவோம். ஞானியுடன் ஸத்சங்கம் வைத்துக் கொண்டு அவருடைய உபதேசங்களை கேட்பதனால் (சிரவணம்) தூய்மை அடைந்து விடுவோம்.

தேஜஸ்வீ தபஸா தீ3ப்தோ தீ3ப்தோ து3ர்த4ர்ஷோத3ரபா4ஜன: |
ஸர்வப4க்ஷ்யோSபி யுக்தாத்மா நாத3த்தே மலமக்3னிவத் || 45 ||

இனி அக்னியை ஞானியுடன் ஒப்பிட்டு கூறுகின்றார். இதில் நெருப்பினுடைய ஐந்து குணங்களைக் கூறி அதை ஞானியிடத்து இருக்கும் சில குணங்களோடு ஒப்பிட்டு கூறுகின்றார்.
அக்னியின் 5 குணங்கள்
  1. தேஜஸ்வீ தபஸா = அக்னியிடம் இருக்கும் உஷ்ணத்தன்மை, உஷ்ணத்தால் உருக்கும் தன்மை
  2. தபஸா தீ3ப்தஹ – வெளிச்சம்
  3. து3த4ர்ஷஹ – நெருங்க முடியாது; அருகில் செல்ல முடியாது
  4. உத3ரபா4ஜனஹ – வயிற்றையே பாத்திரமாகக் கொண்டுள்ளது. எரிந்து கொண்டிருக்கும் தீயில் எதைப் போட்டாலும் பொசுக்கி விடும்
  5. ஸர்வ ப4க்ஷ அபி மல மத்3னிவத் நாத3த்தே – யாகத்தில் இருக்கும் அக்னியின் போடும் பொருட்கள் நல்லதாக இருந்தாலும், கெட்டதாக இருந்தாலும் அதனால் அக்னிக்கு தோஷம் வராது, அசுத்தம் வராது (மலம் அக்னிவத் ந ஆதத்தே)
ஞானியின் லட்சணங்கள்
  1. தேஜஸ்வீ தபஸா = தவத்தால் வைராக்கியம் உடையவர்; வைராக்கியத்தையே காட்டிக் கொள்ள மாட்டார்
  2. தபஸா தீ3ப்தஹ – விவேகம், ஞானத்தினால் ஓளிர்ந்து கொண்டிருப்பவர்
  3. து3த4ர்ஷஹ – சம்சாரம் ஞானியை நெருங்காது; அசுர குணங்கள் இவனை நெருங்காது, தன்னைத் தானே சந்திக்கும் சக்தி உடையவன்
  4. உத3ரபா4ஜனஹ – அபரிக்ரஹம் – தேவைக்கு மேல் எதையும் வைத்திருக்க மாட்டான்
  5. ஸர்வ ப4க்ஷ்யோ அபி அக்னிவத் – அஸத் ப்ரதிக்ரஹம் தோஷம் – பாவிகளிடம் இருந்து உணவை பெற்றுக் கொண்டால் வரும் தோஷம். இவருக்கு கிடையாது. அதர்மமான வழியில் சேர்த்து செல்வத்தை பெற்றாலும் தோஷம் வரும், தீயவர்கள் கொடுக்கும். உணவும் பாவத்தைக் கொடுக்கும். ஞானிக்கு இப்படிப்பட்ட தோஷங்கள் எதுவும் கிடையாது.
விசாரம்
  1. தேஜஸ்வீ – போகப் பொருட்களில் பற்றின்மையே வைராக்கியம் என்பது. மனமோ,புலன்கள் சோர்வடையும் போது வைராக்கியம் வரலாம். இவைகள் நிலையற்றவை. சாதகனிடம் இருக்கின்ற வைராக்கியம். விவேகத்திலிருந்து வந்திருப்பது. போகப்பொருட்களின் நிலையற்ற தன்மை, புலன்கள் சக்தியுள்ள வரைதான் இன்பத்தைக் கொடுக்கும் என்ற  வைராக்கியத்துடன் இருப்பான்.  ஞானியிடம் இருக்கின்ற வைராக்கியம் ஞானத்தினால் திடமானது, சுபாவமானது. ஜகத் மித்யா என்ற ஞானத்திலிருந்து வந்தது வைராக்கியம். உலகத்தை ஈஸ்வர ஸ்வரூபமாக பார்க்கும் திறனுடையவன்.  இவனுடைய வைராக்கியம் உதாஸீன குணத்தையும் குறிக்கின்றது.
  2. தீப்தஹ – அந்தக்கரணத்திலுள்ள அறியாமையையும் அறிந்திருப்பான். தன்னுடைய உண்மை ஸ்வரூபத்தை அறிந்து உணர்ந்திருப்பதால் ஒளிவீசும் தன்மையுடன் இருக்கிறான்.
  3. துர்தர்ஷஹ – துயரத்தை கொடுக்கும் விஷயங்கள் அவனை நெருங்காது. தன்னைத் தானே சந்திக்கும் திறனுடையவன். தன்னுடைய வாஸனைகளை பயமின்றி சந்திக்கும் பலமுடையவன். சம்சார எண்ணங்கள் அவனுக்குள் வராது. தீயகுணங்கள் அவனை நெருங்காது.
  4. உதரபாஜனஹ – தேவைக்கு மேல் எதையும் வைத்திருக்க மாட்டான். இல்லறத்தில் இருக்கும் ஞானிக்கு விவகாரத்திற்காக தேவைக்கு மேல் பொருட்கள் வைத்திருக்கலாம். ஆனால் அவைகள் பற்றில்லாமல் மனதளவில் துறந்திருக்க வேண்டும். சந்நியாஸியான ஞானி தேவைக்கு மேல் எதையும் வைத்திருக்க மாட்டான். தேவைக்கு மேல் இருக்கும் பொருட்களை பராமரிப்பதற்கு காலத்தையும் சக்தியையும் எடுத்துக் கொள்ளும். சாதகன் முயற்சி செய்து இதை செய்து வருவான். ஞானிக்கு இது சுபாவமாகவே இருக்கும்
  5. ஸர்வ......அக்னிவத் – சாதகர்கள் தீயவர்களிடமிருந்து எதையும் பெற்றுக் கொள்ளக்கூடாது. தீயவர்களிடமிருந்து பெறும் உணவும், மற்ற அனைத்தும் பாவங்களோடு சேர்ந்து நம்மை அடையும். ஞானிக்கு புலன்கள் வழியே செய்யும் தீயவைகளும் செயலிழந்து போகும்.
க்வசிச்ச3ன்ன: க்வசித ஸ்பஷ்ட உபாஸ்ய: ஶ்ரேய இச்ச2தாம் |
பு3ங்க்தே ஸ்ர்வத்ர தா3த்ருணாம் த3ஹன்ப்ராகு3த் தராஶுப4ம் || 46 ||

அக்னியின் குணங்கள்
  1. க்வசிச்ச2ன்னஹ – சாம்பலால் மறைக்கப்பட்டிருக்கும் அக்னி
  2. க்வசித ஸ்பஷ்ட – சில இடங்களில் தெளிவாக தெரியும்
  3. உபாஸ்யஹ – வணங்கத்தக்கது
  4. ஶ்ரேய இச்ச2தாம் – மேன்மையை விரும்புபவர்களால்
  5. தஹன் – எரித்து விடுதல்
ஞானியிடத்து இருக்கும் இந்த குணங்கள்
  1. சில ஞானிகள் தன்னை மறைத்துக் கொள்வார்கள்
  2. சில ஞானிகள் தன்னை உள்ளபடிக் காட்டிக் கொள்வார்கள்
  3. ஞானிகள் வணங்கத்தக்கவர்கள், யாருக்கு நன்மை வேண்டுமோ அவர்களால் வணங்கத்தக்கவர்கள்
  4. ஞானி பிறருடைய பழைய, புதிய, வரப்போகின்ற பாவங்களை எரித்து விடும் சக்தி உடையவர். யார் அவரை வணங்குகின்றார்களோ அவர்களுடைய பாவங்களை எரித்து விடுவார்கள்
ஸ்லோக விளக்கம்
  1. ஞானிகள் எல்லோருக்கும் வெளிப்படையாக காட்டிக் கொள்ள மாட்டார்கள், மறைந்து இருப்பார்கள். அவர்களை புரிந்து கொள்ள முடியாது. அடையாலம் கண்டு கொள்ள முடியாது. மீன் நீந்தி செல்லும் பாதை தெரியாதது போல, பறவை பறந்து சென்றப் பாதை தெரியாதது போல ஞானி வாழ்ந்து சென்ற பாதையும் தெரியாது
  2. சில ஞானிகள் தெளிவாக தெரியும்படி இருப்பார்கள். அவர்களுடைய இந்த புகழ் இறைவனுடைய சங்கல்பம்
  3. ஞானியும் வணங்கப்பட வேண்டியவன். மேன்மையை அடைய விரும்புகிறார்களால் வணங்கத்தக்கவர். அவரிடத்து உள்ள ஞானத்தை வணங்குகிறோம். அவருடைய உபதேசத்தைக் கேட்க வேண்டும். அறிவுரையை கேட்க வேண்டும். அவர் மீது சிரத்தை வைக்க வேண்டும். நம்பிக்கையோடு கேட்பவைகள்தான் நம்மிடம் அறிவாக மாறும்
  4. மற்றவர்களின் பாவத்தை எரிக்கும், நீக்கும் சக்தி ஞானியிடம் இருக்கின்றது.  எனவே இவர் ஈஸ்வரனுக்கு இணையாக கருதப்படுகிறார்.  மாற்றக்கூடிய பிராரப்த கர்ம பலன்களை நீக்கிவிடுவார்.  மற்றவைகளை சந்திக்க கூடிய சக்தியை கொடுப்பார்
  5. எல்லாவிடத்திலும், எல்லாவற்றையும் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் ஏற்றுக் கொள்வார்
ஸ்வமாயயா ஸ்ருஷ்டமித3ம் ஸத3ஸல்லக்ஷணம் விபு4: |
ப்ரவிஷ்ட ஈயதே தத்தத் ஸ்வரூபோSக்3னிரிவைதா4ஸி || 47 ||

இங்கு அக்னியின் ஒரு குணம் ஆத்மாவின் லக்ஷணத்தோடு ஒப்பிடப்படுகின்றது. ஆத்மாவானது நிர்குணமாகவும், சகுணமாகவும் இருக்கின்றது என்பதை எடுத்துக் காட்டுகின்றது.  ஆத்மா தனியாக பார்த்தால் அது உருவமற்றது.  உபாதியுடன் சேர்த்து பார்த்தால் உருவமுடையதாக காட்சியளிக்கும். அக்னிக்கென்று தனி உருவம் கிடையாது. ஆனால் எந்தப்பொருளோடு சம்பந்தப்படும்போது அதன் உருவத்துடன் காட்சியளிக்கின்றது. எந்தவொன்று தன்னுடைய தர்மத்தை பொய்யாக கொடுத்தால் அதற்கு உபாதி என்ற பெயர். ஸ்படிகத்தின் அருகே உள்ள சிவப்பு நிற மலர் அதன் நிறத்தை பொய்யாக கொடுப்பதால் அதற்கு உபாதி என்று பெயர். அதேபோல இந்த உலகம் இன்ப-துன்பங்களை பொய்யாக கொடுத்துக் கொண்டிருக்கிறது.  அதனால் இந்த உலகம் உபாதி என்று புரிந்து கொண்டால் அது கொடுக்கும் சுக-துக்கங்களால் பாதிக்கப்பட்டோம்.

விபு: - பரமாத்மா, பரம்பொருள்
ஸ்வமாயயா – தன்னிடம் இருக்கின்ற மாயையின் துணைக்கொண்டு
இத3ம் ஸ்ருஷ்டம் – இந்த உலகத்தை படைத்தார்.
ஸத் – புலன்களுக்கு புலப்படுவது, காரியம் - உருவம்
அஸத் – புலன்களுக்கு புலப்படாதது – காரணம் - அருவம்
லக்ஷணம் - தன்மையுடைய
ப்ரவிஷ்டஹ – இந்த உலகத்தினுள் பரமாத்மா நுழைந்திருக்கிறார்
தத் தத் ஸ்வரூப ஈயதே – அந்தந்த உருவமாக இருப்பதாக தோன்றுகின்றார். இந்த உலகமாகவே அவர் காட்சியளிக்கிறார்.
அக்னி இவ ஏதஸி – அக்னி எந்தப் பொருளோடு சம்பந்தம் வைக்கும்போது அதன் உருவமாக காட்சியளிப்பது போல இது இருக்கிறது

விஸர்க3த்3யா: ஶ்மஶானாந்தா பா4வா தே3ஹஸ்ய நாத்மன: |
கலானாமிவ சந்த்3ரஸ்ய காலேனாவ்யக்தவர்த்மனா || 48 ||

காலேன – காலத்தினால் 
கலானாமிவ சந்த்ரஸ்ய  - சந்திரன் தேய்ந்தும், வளர்வது போன்று  தோன்றுகிறது.
சந்திரனின் வளர்பிறை; தேய்பிறை இவைகளெல்லாம் நாம் நிலவின் மீது ஏற்றி வைத்திருக்கும் கற்பனையான எண்ணம். உண்மையில் நிலவு எப்பொழுதும் முழுமையாகத்தான் இருக்கிறது  
ஆத்மா தியானம் என்பது இரண்டாக பிரிக்கலாம். 
1.ஆத்ம ஸ்வரூபத்தை தியானிப்பது, 
2. அனாத்மா நிஷேதம் செய்து தியானிப்பது. 
நிலவு போல இந்த உடலுக்கு நேர்கின்ற விஷயங்கள் ஆத்மாவுக்கு ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது.  அனாத்மாக்களின் தர்மங்கள் யாவும் ஆத்மாவில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது.  காலத்தினால்தான் நிலவின் தேய்வு, வளர்ச்சி தெரிகின்றது. காலம் ஓடிக்கொண்டேதான் இருக்கிறது. கண்ணுக்கு தெரியாமல் சூட்சுமமாகவும் இருக்கிறது.

அவ்யக்த வர்தமனா – கண்ணுக்கு புலப்படாமல் ஓடிக்கொண்டு இருக்கின்றது. நம் புத்திக்கு புரிந்து கொள்ள முடியாததும், அனுபவித்துக் கொண்டு இருப்பதாலும் இதை மாயை என்று புரிந்து கொள்ளலாம். காலம் என்பது இரண்டு நிகழ்வுகளுக்கு இடையே உள்ள இடைவெளி இரண்டு எண்ணங்களுக்குமிடையே உள்ள இடைவெளிதான் என்றும் அறிந்து கொள்ளலாம்.  காலம் என்பது நம் மனதுக்குள்தான் இருக்கிறது. தூங்கும்போது காலம் போவது தெரியாது. மனம் ஒரே எண்ணத்தில் மட்டும் இருக்கும்போது காலத்தை நினைக்க மாட்டோம். ஆகாசமும் இதே மாதிரித்தான், காலமும் தேசத்தையும் விளக்க முடியாது. அதுபோல

தேஹஸ்ய – இந்த உலகினுடைய
விஸர்கா3த3யா – பிறப்பில் ஆரம்பித்து
ஶ்மஶானாந்தா – மயானத்திற்கு செல்லப்படும் வரையில்
பா4வா – வருகின்ற மாற்றங்கள் (இருத்தல், பிறத்தல், வளர்தல்)
ந ஆத்மனஹ – ஆத்மாவாகிய எனக்கல்ல
நம் உடலுக்கு வரும் கஷ்ட-நஷ்டங்கள், மாற்றங்கள் அனைத்தையும் நாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். இவைகள் ஆத்மாவான எனக்கு ஒரு சம்பந்தமில்லை என்று தியானம் செய்ய வேண்டும்.

காலேன ஹயோக4வேகே3ன பூ4தானாம் ப்ரப4வாப்யயௌ |
நித்யாவபி ந த்3ருஶ்யேதே ஆத்மனோSக்3னேர்யதா3ர்சிஷாம் || 49 ||

காலேன ஹயோக4வேகேன – கால வெள்ளத்தைப் போல
பூதானாம் – எல்லா ஜீவராசிகளின்
ப்ரப4வாப்யௌ – பிறப்பு-இறப்பும் நிகழ்ந்து கொண்டிருந்தாலும்
நித்யா அபி – எப்பொழுதும் இருந்தாலும் கூட
ந ஆத்மத்3ருஶ்யதே – ஆத்மாவுக்கு இது சம்பந்தமில்லை
அக்னேர்யதா2ர்சிஷாம் – அக்னியிலிருந்து புறப்படும் ஜுவாலைகள் தோன்றி, மறைகின்றன. ஆனால் அக்னிக்கும் இதற்கும் எந்த  சம்பந்தமுமில்லை.

கு3ணைர்கு3ணானுபாத3த்தே யதா2காலம் விமுஞ்சதி |
ந தேஷு யுஜ்யதே யோகீ3 கோ3பி4ர்கா3 இவ கோ3பதி: || 50 ||

கோ3பதி – ஒளிப்பொருந்திய சூரியனுடைய
கோ3பி4ஹ – கிரணங்களின் மூலம்
கா3 இவ – நீரை உறிஞ்சிய
யதா2காலம் விமுஞ்சதி – தண்ணீரையே சில காலம் கழித்து மழையாக பொழிகிறது
யோகீ3 – அதுபோல ஒரு சாதகன்
குணைஹி – இந்திரியங்களின் மூலம்
குணான் – விஷயங்களை
உபாத3த்தே - அனுபவிக்கின்றோம்
யதா2 காலம் – சரியான நேரத்தில், தேவையான காலத்தில்
விமுஞ்சதி – விட்டுவிட வேண்டும்
ந தேஷு யுஜ்யதே – தன்னிடத்திலே வைத்திருக்க கூடாது
1.      இந்த உலகத்திற்கு பயன்பட வேண்டும், பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பொருளைப் பெற்றுக் கொள்வதிலும், வழங்குவதிலும் ஒட்டுதலில்லாமல் சாதகன் இருக்க வேண்டும். இந்தப் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
2.     ஒரு பொருளை பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் நேரம் வரும்போது அதை விட்டுவிடவும் தயாராக இருக்க வேண்டும்.

பு3த்4யதே ஸ்வே ந பே4தே3ன வ்யக்திஸ்த2 இவ தத்3 க3த: |
லக்ஷ்யதே ஸ்தூ2லமதிபி4ராத்மா சாவஸ்தி2தோSர்கவத் || 51 ||

அர்கவத் ஆத்மா – சூரியனைப் போல ஆத்மாவானது
வியக்திஸ்த2 – ஒவ்வொரு உடலிலும் தனித்தனியாக
ச அவஸ்தி2தஹ – இருந்து கொண்டிருக்கின்றது
இவ தத்3க3தஹ – அதற்குள் இருப்பது போல தெரிகின்றது
லக்ஷ்யதே – இவ்விதம் கருதப்படுகிறது
ஸ்தூ2லமதி பிஹி – ஸ்தூல புத்தியையுடையவர்கள், சூட்சுமமான அறிவில்லாதவர்கள், அனுபவத்தை மட்டும் வைத்து முடிவு செய்பவர்கள். 
ஸ்வே ந பே3தே3ன –  தன்னை(ஆத்மாவை) உடலிலிருந்து வேறுபட்டதாக அறிவதில்லை.

சூரியன் பல நீர்நிலைகளில் பிரதிபிம்பமாக இருப்பது போல ஆத்மாவானது அறிவற்றவர்களால் எல்லா உடல்களிலும் இருப்பதாக கருதப்படுகிறது.

நாதிஸ்னேஹ: ப்ரஸங்கோ3 வா கர்தவ்ய: க்வாபி கேனசித் |
குர்வன்விந்தே3த ஸந்தாபம் கபோத இவ தீ3னதீ4: || 52 ||

க்வாபி கேனசித் – எந்த மனிதர்களுடனும், பொருட்களுடனும் ஜடப்பொருளான வீடு, இடம் ஆகியவற்றில்
அதி ஸ்னேஹம் – மனதளவில் அதிகமான பற்றும்
ப்ரஸங்கஹ – ஸ்தூலமா விஷயத்தில் அதிகமான பற்றும்
ந கர்தவ்ய - வைக்கக்கூடாது.
குர்வன் – அப்படி வைத்தால்
கபோத இவ – புறாவைப் போல
தீ3னதீ4: - அடிமைப்பட்ட மனதையுடையவன்
விந்தே3த ஸந்தாபம் – துயரத்தை அடைவான்; ; தாபத்தை அடைவான்

விசாரம்
மனிதர்களிடத்திலோ, பொருட்களிடத்திலோ, வீடு, நிலம் போன்ற செல்வத்தின் மீதோ அளவு கடந்த பற்று வைத்திருப்பவர்களால், அதிலிருந்து விடுபட முடியாமல் துயரத்தில் வீழ்கிறார்கள்.
*       மனித இனத்தில் மட்டும் உறவுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. குழந்தையிலிருந்து உறவுகளின் மீது வைக்கும் பற்று இறுதிவரை தொடர்ந்து வெவ்வேறு நிலைகளில் இருக்கின்றது.
*       உறவுகள் நம்மிடத்திலிருந்து விதவிதமான உணர்வுகளை வெளிப்படுவதற்கு காரணமாக இருக்கின்றது
*       சில உணர்வுகள் வளர்வதற்கு இது காரணமாகின்றது
*       உணர்வுகள் மேம்படுவதற்கு உதவுகின்றது. ஒரு மனிதனுடைய குணாதிசயங்கள் அவனுக்கு கிடைத்திருக்கும் உறவுமுறைகளை வைத்து அமைகின்றது.  எனவே இந்த உறவுகளின் தரத்திற்கேற்ப நம்முடைய மனநிலை, குணநலன்கள் அமைகின்றது, மாறுகின்றது

நாம் எதற்காக உறவுகளை வைத்துக் கொள்ள வேண்டும்
*       தாயின் அன்பையும், தந்தையினுடைய அன்பும், வழிகாட்டுதலும் குருவினுடைய ஆசீர்வாதமும் நம்முடைய மனநிலையை வளமாக வைத்திருக்கும்
*       மனம் விரிவடைவதற்கும் உறவுகள் காரணமாகின்றது. மனத்தூய்மை, மனப்பக்குவம் அடைய உறவுகளை சரியான முறையில் வைத்துக்கொள்ள வேண்டும். உறவுகளை சரியாக கையாள விட்டால் நம்மை அடிமைப்படுத்தி விடும், துயரத்தில் ஆழ்த்திவிடும். அவர்களை சார்ந்து வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறோம். எதிர்ப்பார்ப்புக்கள் உருவாக்கி விடும். இந்த எதிர்பார்ப்பு அசுர குணங்களை கொடுத்துவிடும்.  றவுகள் அழிந்துப்போனாலோ, பிரிந்து போனாலோ துயரத்தை அடைவோம்.

உறவை மனத்தூய்மையைக் கொடுக்கும் சாதனமாக மாற்றும் வழி:
  1. உறவைப் பற்றிய அடிப்படை ஞானங்கள் நமக்கு தேவையாக இருக்கிறது. எல்லா உறவு முறைகளும் சாதனமேயின்றி, சாத்தியமல்ல. (உ-ம்) உணவை உட்கொள்வது சாத்தியமல்ல, சாதனம் சாதனமாக இருக்கும்போது அதனுடைய முடிவு நன்றாக இருக்கும்.  சிலவகை சாதனங்களே சுகமாகவே இயற்கையிலே இருக்கிறது. சாப்பிடுவது என்ற சாதனம் சுகமானது.  சாத்தியமான பசி நீங்குதல் சுகத்தைக் கொடுக்கும், சாதனத்தில் இருக்கும் சுகத்தை அனுபவிக்க ஆரம்பித்தால் அதனால் அடையப்படும் சாத்தியம் துயரத்தை கொடுக்கும். பணம் சாதனமாக இருக்கும்போது சுகத்தை அடையலாம். சாத்தியமாக வைத்துக் கொண்டால் அதனால் அடையும் பலனை அனுபவிக்காமல் துயரப்படுவோம்.  அதேபோல உறவுகளும் சாதனமாக பயன்படுத்த வேண்டும். சாத்தியமாக நினைக்க கூடாது. உறவுகள் நிலையானதில்லை. உறவு இருக்கும்வரை மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும். பிரிவு வந்தால் அதனை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் வந்துவிடும்.
  2. எல்லா உறவுகளும் காலத்திற்குட்பட்டது. குரு-சிஷ்யன் உறவில், சிஷ்யன் அடைய வேண்டிய அறிவை பெறும் வரைதான் இந்த உறவு நீடிக்கும். தாய் - குழந்தை உறவானது உலக அறிவு பெறும்வயது வரைதான் நீடிக்கும். அதற்குப்பிறகு அந்த குழந்தை தாயை சார்ந்து இருப்பதில்லை. மரியாதையுடன், நன்றியுடனும் இருக்க வேண்டும்.
  3. உறவுகள் எதன் அடிப்படையில் உருவாகின்றது?
    1. நம்முடைய விருப்பத்தின் அடிப்படையிலும்
    2. கர்ம நிமித்தமாகவும் உறவுகள் ஏற்படுகின்றன. இதில் நம்முடைய விருப்பம் எதுவும் கிடையாது. பாவ-புண்ணியங்களின் அடிப்படையில் உறவுகள் அமைகின்றது
    3. இருவருடைய முழு விருப்பத்துடன் உறவு வைத்துக் கொண்டால் அந்த உறவில் மகிழ்ச்சி இருக்கும்.
  4. உறவுகளில் இருக்க வேண்டிய பாவனைகள்:
    1. உறவில் வரும் சுகமும், இன்பமும், துயரமும் நிலையானதல்ல என்ற உண்மையை நன்கு அறிந்து கொண்டு அந்த உறவில் இருக்க வேண்டும்.  அதே உறவின் மூலம் துயரமும் வரலாம்,  உறவும் முடிவடைந்திடலாம். எனவே  அதனால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும்.
    2. உறவில் வரும் துக்கமும் நிலையானதல்ல, என்றும் உணர்ந்திருக்க வேண்டும். அப்படி நிலையாக கஷ்டத்தைக் கொடுக்கும் உறவை இறைவன் பிரசாதமாக எடுத்துக் கொண்டு பொறுத்துக் கொள்ள வேண்டும்.
  5. அவ்வப்போது தனிமையாகவும் இருந்து பழக வேண்டும். உடலளவிலும், மனதளவிலும் தனித்திருந்து பழகிக் கொள்ள வேண்டும்.
  6. அஶக்தி – யாரும் என்னைச் சார்ந்தவர்களல்ல என்று எண்ணிக் கொண்டிருக்க வேண்டும். அனபிஷிவங்கஹ – நாமும் யாரையும் சார்ந்திருக்க கூடாது.
கபோத: கஶ்சனாரண்யே க்ருதனீதோ3 வனஸ்பதௌ |
கபோத்யா பா4ர்யா ஸா4த4முவாஸ் கதிசித்ஸமா: || 53 ||

கபோதஹ க்ருதனீடோ3 – காட்டில் ஒரு புறா
கபோத்யா பா4ர்யயா ஸார்த4ம் – மனைவியான பெண் புறாவுடன்
கதிசித்ஸமா: உவாஸ - சிலவருடங்கள் வசித்து வந்தது.

கபோதௌ ஸ்னேஹகு3ணித ஹ்ருதயௌ கு3ஹத4ர்மிணௌ |
த்3ரிஷ்டம் த்3ருஷ்த்யாங்க3மங்கே3ன பு3த்3தி4ம் பு3த்3த்4யா ப3ப3ந்த4து: || 54 ||

நட்பு என்பது மனதளவில் பற்று வைத்திருப்பது.
இரண்டு புறாக்களும் அன்பினால் சேர்ந்துள்ளது. இல்லறத்தில் ஈடுபட்ட அந்த இரண்டு புறாக்களுக்கும் இடையே அன்பு வளர்ந்து கொண்டே வந்தது. பரஸ்பர மரியாதையுடனும் இரண்டும் ஒரே குறிக்கோளூடனும், ஒரே பண்புகளூடனும் சேர்ந்து வாழ்ந்து வந்தன.

ஶய்யாஸனாடனஸ்தா2ன வார்தா க்ரிடா3ஶனாதி3கம் |
மிது2னீபூ4ய விஶ்ரப்3தௌ4 சேரதுர்வனராஜிஷு || 55 ||

ஒருவருக்கொருவர் முழு நம்பிக்கையுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தன. ஒரே கூட்டில் படுத்து உறங்கின. அமர்ந்திருந்தன, பேசிக் கொண்டிருந்தன.  ஒன்றாகவே சாப்பிட்டுக்கொண்டும் சுற்றித்திரிந்தன.

யம் யம் வாஞ்ச2தி ஸா ராஜன் தர்பயந்த்யனுகாம்பிதா |
தம் தம் ஸமனயத்காமம் க்ருச்ச்2ரேணாப்யஜிதேந்த்3ரிய: || 56 ||

ஹே ராஜன்! ஆண்புறாவால் அரவனைக்கப்பட்ட ஆண்புறாவை திருப்திபடுத்திய பெண்புறா எதையெல்லாம் விரும்பியதோ அவைகளனைத்தும் இந்திரிய சுகத்திற்கு அடிமையாகிவிட்ட ஆண்புறா  நிறைவேற்றிக் கொண்டிருந்தது. இதிலிருந்து ஒருவரையொருவர் சார்ந்திருக்கும் நிலைக்கு சென்று விட்டன. அதில் தர்ம-அதர்மத்தை விட்டுவிட்டன.

கபோதீ ப்ரத2மம் க3ர்ப4ம் க்3ருஹணந்தீ கால ஆக3தே |
அண்டா3னி ஸுஷுவே நீடே3 ஸ்தபத்யு: ஸன்னிதௌ4 ஸதீ |  57 ||

உரிய காலத்தில் பெண்புறா கருவுற்று ஆண் புறா இருக்கும்போதே முட்டைகளை போட்டது.

தேஷு காலே வ்யஜாயந்த ரசிதாவயவ ஹரே: |
ஶக்திபி4ர்து3ர்விபா4வ்யாபி4: கோமலாங்க3தனூருஹா:  || 58 ||

உரிய காலத்தில் அந்த முட்டைகளிலிருந்து குஞ்சுகள் பொரிந்தன.  இறைவனின் சக்தியால் உருவாக்கப்பட்ட உடலுறுப்புக்களுடன் நம்மால் புரிந்து கொள்ளாத வகையில் குஞ்சுகள் தோன்றின.  அவைகள் மென்மையான அங்கங்களையும், இறகுகளுமுடையதாக இருந்தன.

ப்ரஜா: புபுஶது: ப்ரீதௌ த3ம்பதீ புத்ரவத்ஸலௌ |
ஶ்ருண்வந்தௌ கூஜிதம் தாஸாம் நிர்வ்ருதௌ கலபா4ஷிதை: || 59 ||

புறாத் தம்பதிகள் தம் குஞ்சுகளிடம் மிகுந்த அன்பு கொண்டு மகிழ்ச்சியோடு சீராட்டி வளர்த்தன. அவைகளின் குரலைக் கேட்டு கேட்டு மகிழ்ந்தன.

தாஸாம் பதத்ரை: ஸுஸ்பர்ஶை: கூஜிதைர்முக்3த4சேஷ்டிதை: |
ப்ரத்யுத்3க3மைரதீ3னானாம் பிதரௌ முத3மாபது: ||  60 ||

புறா பெற்றோர்கள் தன்னையே சார்ந்துள்ள தம்முடைய குஞ்சுகளினுடைய மென்மையான சிறகுகளை தொட்டுப் பார்த்தும், கலகலவென்ற மழலை குரலையும், வேடிக்கையான விளையாட்டையும், தத்தி தத்தி நடந்து வருவதைப் பார்த்தும் மகிழ்ச்சி அடைந்தன.

ஸ்னேஹானு ப3த்3த4 ஹ்ருத3யாவன்யோன்யம் விஷ்ணுமாயயா |
விமோஹிதௌ தீ3னதி4யௌ ஶிஶூன்புபுஷது: ப்ரஜா: || 61 ||

ஒருவொருவர் பற்றினால், அன்பினால் கட்டுண்டு இருக்கின்றனர்.  விஷ்ணுவின் மாயையினால் மயங்கி மோகத்திற்கு (தெளிந்த அறிவின்மை) சென்று தீன நிலையை அடைந்து விட்டன. இந்த குஞ்சுகளை சீராட்டி வளர்த்துக் கொண்டிருந்தன.  இந்த நிலைமை மனிதர்களிடத்திலும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஸ்னேஹம் – பாசம், பற்று; மோஹம் – தீ3ன பா4வம்

விசாரம்
தூய்மையான அன்பிருந்தால்தான் தியாகம், கருணை, பக்தி, மன்னித்தல், பொறுமை போன்ற நற்பண்புகளை அடைய உதவுகின்றது.  இறுதியில் சம, தமாதிகளுடன், விவேக, வைராக்கியம் வர வேண்டும். ஆனால் பாசம் மனிதர்களை மோகத்தில் (மதிமயக்கம்) கொண்டு சென்றுவிடும்.  ஒவ்வொன்றிற்கும் அதற்கு தகுந்த மதிப்பைக் கொடுக்கவில்லையென்றால் அதற்குப் பெயர்தான் மோகஹம்.  எது சாதனம், எது சாத்தியம் என்பதில் ஏற்படும் குழப்பம். எல்லா உறவுகளும் நம்மை பக்குவபடுத்தி மனதை விரிவடைய உதவும் சாதனமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.  இல்லறத்தில் இருப்பவர்கள் குழந்தைகளை வளர்த்து பெரியவனாக்கி வாழ்க்கை அமைத்துக் கொடுப்பது சாத்தியமாக கொள்கிறார்கள். எனவே அவர் துயரங்களை அனுபவிக்கிறார்கள். மனைவியை மகிழ்ச்சியுடன், நலமுடன் வைத்திருக்க வேண்டும் என்று சாத்தியமாக வைத்திருப்பதால் துயரங்களை அனுபவிக்க நேரிடும்.  இதே மற்ற நெருங்கிய உறவுகளை சாத்தியமாக இருந்தால் மோக வசப்பட்டு துயரப்படுகிறார்கள். தீன நிலைக்கு சென்று விடுகிறார்கள்.  தன்னுடைய தனித்தன்மைய இழந்து விடுகின்றார்கள். சுதந்திரத்தை இழந்து விடுகின்றார்கள். அசுர குணத்தில் வீழ்ந்து விடுகிறார்கள். சம்சாரிகளாகவே இருப்பார்கள்.  உணவுதான் உயிர்வாழ உதவுகின்றது. அதையே அளவுக்கு மீறியும், தூய்மை இல்லாத உணவுகளை உண்பதால் உடலுக்கு கெடுதல்தான் ஏற்படும்.

ஏக்த3 ஜக்3மதுஸ்தாஸாமன்னர்த2ம் தௌ குடும்பி3னௌ |
பரித: கானனே தஸ்மின்னர்தி2னௌ சேரதுஶிசரம் || 62 ||

ஒரு நாள் அந்த இரண்டு பறவைகள் குஞ்சுகளுக்கு உணவை தேடி கூட்டை விட்டு, காட்டில் வெகுதூரம் சுற்றித் திரிந்தன.

த்3ருஷ்ட்வா தான்லுப்3த4க: கஶ்சித்3யத்3ருச்சா2தோ வனேசர: |
ஜக்3ருஹே ஜாலமாதத்ய சரத: ஸ்வாலயாந்திகே || 63 ||

ஒரு சமயம் வேடன் ஒருவன் தற்செயலாக புறாக்கூடு இருந்த மரத்தின் பக்கமாக வந்தான். அந்தக் குஞ்சுகளை வலைவீசி பிடித்தான்.

கபோதஶ்ச கபோதீ ச ப்ரஜாபோஷே ஸ்தோ3த்ஸுகௌ |
க3தௌ போஶணமாதா3ய ஸ்வனீட3முபஜக்3மது: || 64 ||

அந்த ஆண்-பெண் புறாக்கள், தம் குஞ்சுகளின் பராமரிப்பில் ஆர்வமுடையதாக இருந்து கொண்டு அவைகளுக்கு உணவை எடுத்துக் கொண்டு தம் கூட்டுக்குத் திரும்பி வந்தன.

கபோதீ ஸ்வாத்ம ஜான்வீக்ஷ்ய பா3லகான் ஜாலஸம்வ்ருதான் |
தானப்4யதா4வத் க்ரோஶந்தீ க்ரோஶதோ ப்4ருஶ து3:கி2தா || 65 ||

வலையில் சிக்கியிருந்த தன் குஞ்சுகளை கண்ட பெண்புறா முனகிக் கொண்டிருக்கும் அவைகளை மிகவும் துயரத்துடன் அரற்றிக் கொண்டு ஒடிற்று.

ஸாஸக்ருத்ஸ்னேஹகு3ணிதா தீ3னசித்தாஜமாயயா |
ஸ்வயம் சாப3த்4யத ஶிசா ப3த்3தா4ன்பஶ்யந்த்ய பஸ்ம்ருதி: || 66 ||

பாசக் கயிற்றினால் இறுக்கிக் கட்டப்பட்டதும் பந்தத்தில் வீழ்ந்து கிடக்கும் பெண்புறா, பகவானுடைய மாயையினால் தன் நினைவு, அறிவை இழந்ததுமான பெண்புறா, குஞ்சுகள் சிக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து தானும் வலையில் விழுந்தது.  மோக வலையில் வீழ்ந்து விட்டால் அதுவரை அடைந்த அறிவெல்லாம் நினைவுக்கு வராது.

கபோத: ஸ்வாத்ம ஜான்ப3த்3தா4னாத்மனோSப்யதி4கான் ப்ரியான் |
பா4ர்யாம் சாத்மஸமாம் தீ3னோ வில்லாபாதி து3:கி2த: || 67 ||

தன் உயிருக்கும் மேலான குஞ்சுகளும் தன் உயிருக்கு உயிரான மனைவியும் வலையில் மாட்டிக் கொண்டு விட்டதைப் பார்த்து, உள்ளம் கலங்கிய ஆண்புறா மிக்க துயரத்துடன் புலம்பத் துவங்கியது.

அஹோ மே பஶ்யதாபாயமல்ப புண்யஸ்ய து3ர்மதே: |
அத்ருப்தஸ்யா க்ருதார்த2ஸ்ய க்3ருஹஸ்த்ரைவர்கி3கோ ஹத: || 68 ||

அய்யோ! எனக்கு வந்த கஷ்டத்தைப் பாருங்கள். நான் அற்பமான புண்ணியத்தை உடையவன்.  கெட்ட மதியுடையவன், அறிவில்லாதவன், வாழ்க்கையில் மனத்திருப்தி ஏற்படவேயில்லை. செய்ய வேண்டியவைகளை செய்யாதவன்.  ஆசைகள் எதுவும் நிறைவேறவில்லை. இல்லற ஆசிரமத்தில் மூன்று லட்சியங்களான தர்ம-அர்த்த-காமம் இவைகள் அழிந்து போய்விட்டதே

அனுரூபானுகூலா ச யஸ்ய மே பதிதே3வதா
பூ4ன்யே க்3ருஹே மாம் ஸந்த்யஜ்ய புத்ரை: ஸ்வர்யாதி ஸாது4பி4: || 69 ||

அனுரூபா  - ஒரே மாதிரியாக சிந்திப்பவன், என் விருப்பபடி நடப்பவன்
அனுகூலா – எல்லா வகையில் எனக்கு இணையாக இருந்தாள்
ச யஸ்ய மே பதிதே3வதா – மேலும் என்னுடைய மனைவிக்கு நானே இஷ்ட தேவதை
ஸூன்யே க்3ருஹே மாம் ஸந்த்3யஜ்ய – பாழடைந்த கூட்டில் என்னை தவிக்க விட்டுவிட்டு
புத்ரை: ஸ்வர்யாதி ஸாது4பி4: - நல்ல குஞ்சுகளுடன், அவள் மேலுலகம் செல்லப் போகிறாள்

ஸோSஹம் பூ4ன்யே க்3ருஹே தீ3னோ ம்ருத்தரோ ம்ருதப்ரஜ: |
ஜிஜீவிஷே கிமர்த2ம் வா விது4ரோ து3:க2ஜீவித: || 70 ||

இப்படிபட்ட நான் பாழடைந்த வீட்டில் நான் இப்பொழுது பரிதாபத்திற்குட்பட்டவனாக இருக்கிறேன். மனைவியை பறிகொடுத்தவன். குழந்தைகளையும் பறிகொடுத்தவனாக, இனி எதற்காக நான் வாழ வேண்டும் அனாதையாகி விட்டேன். எனது வாழ்க்கையே துயரமாக மாறிவிட்டது.

தாம்ஸ்ததை2வாவ்ருதான்ஶிக்3பி4ர்ம்ருத்யுக்ரஸ்தான்விசேஷ்டத: |
ஸ்வயம் ச க்ருபணா: ஶிக்ஷு பஶ்யன்னப்யபு3தோ4Sபதத் || 71 ||

வலையில் சிக்கிக் கொண்ட புறாக்கள், மரணத்தின் பிடியில் அகப்பட்டு தவித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தும், மதி கேட்டுப் போன ஆண்புறா அறிவை இழந்து வலையில் விழுந்தது.

தம் லப்3த்4வா லுப்3த4க்: க்ரூர்: கபோதம் த்3ருஹமேதி4னம் |
கபோதகான்கபோதீம் ச ஸித்3தா4ர்த2: ப்ரயயௌ த்3ருஹம் || 72 ||

மனைவி குழந்தைகளோடு கூடிய இல்லறத்தில் இருந்த சம்சாரியான அந்த ஆண்புறாவை குரூரமான வேடன் எடுத்துக் கொண்டு, தான் வந்த வேலை முடிந்துவிட்ட திருப்தியுடன் தன் வீட்டை நோக்கிப் புறப்பட்டான்.

ஏவம் குடு3ம்ப்3யஶாந்தாத்மா த3வந்த்3வாராம: பத்த்ரிவத் |
புஷ்ணான்குடு3ம்ப3ம் க்ருபண: ஸானுப3ந்தோ4Sவஸீத3தி || 73 ||

இவ்வாறுதான் இல்லறத்தில் இருக்கும் மூட மனிதன், மனம், புலன்கள் கட்டுப்பாடு இல்லாதவன் இருமைகளில் மூழ்கியிருப்பவனாக, புறாக்களைப் போல தன் குடும்பத்தினரை பராமரித்துக் கொண்டு, சுயநலத்துடன் இருந்து கொண்டு, குடும்பத்துடன் சேர்ந்து அழிந்து போகிறான். இல்லறத்தில் இருந்து கொண்டு சுயநலவாதியாக இருக்கக்கூடாது. மனம் விரிவடைந்திருக்க வேண்டும். தூய்மை அடைந்திருக்க வேண்டும் என்பதுதான் நீதி.

ய: ப்ராப்ய மானுஷம் லோகம் முக்தித்3வாரமபாவ்ருதம் |
க்3ருஹேஷு க2த3வத்ஸக்தஸ்தமாரூட4ச்யுதம் விது3: || 74 ||

இதில் மனிதப்பிறவியின் மகத்துவத்தை கூறுகின்றார். மனிதனுடைய உண்மையான இறுதி லட்சியம் எது என்பதையும் எடுத்துக் காட்டுகின்றார்.

எவனொருவன் முக்தி அடைவதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும் வாயில் போன்றிருக்கும் மனித சரீரத்தை அடைந்து,. புறாவைப்போல உலகப் பற்றில் ஆழ்ந்திருக்கின்றானோ, அவன்  ஆன்மீக உன்னதப் படிகளில் ஏறி வழுக்கி விழுந்தவனாவான். அடைந்த மனித சரீரத்தை வீணாக்கி விட்டவனாக இருக்கிறான்
                                  --------------------------------------------------------------

A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...