Showing posts with label பகவத் கீதை-07. Show all posts
Showing posts with label பகவத் கீதை-07. Show all posts

Monday, March 6, 2017

Srimad Bhagavat Gita - Chapter-07

அத்தியாயம்-7
ஞான-விக்ஞான யோகம்
ஸ்வாமி குருபரானந்தாவின் உபதேச விளக்கம்
முகவுரை:
பகவத்கீதை மூன்று பகுதியாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு பகுதியும் ஆறு அத்தியாயங்களைக் கொண்டது.  முதல் பகுதியில் அதாவது முதல் ஆறு அத்தியாயங்களில் முக்கியமாக கூறப்பட்ட கருத்துக்களானது ஜீவஸ்வரூபம், கர்மயோகம், பிரயத்தனம் (விடாமுயற்சி) மற்றும் சுயமுயற்சியாகும்.  இரண்டாவது பகுதியான இரண்டாவது ஆறு அத்தியாயங்களில் ஈஸ்வர ஸ்வரூபம், பக்தியோகம், ஈஸ்வர அனுக்ரஹம் இவைகள் விளக்கப்பட்டிருக்கின்றது.  மூன்றாவது பகுதியான கடைசி ஆறு அத்தியாயங்களில் ஜீவ-ஈஸ்வர ஐக்கியம், ஞானயோகம் மேலும் நற்பண்புகளும் விளக்கப்பட்டிருக்கின்றது.

श्रीभगवानुवाच ।
मय्यासक्तमनाः पार्थ योगं युञ्जन्मदाश्रयः ।
असंशयं समग्रं मां यथा ज्ञास्यसि तच्छृणु ॥ 1 ॥   
ஶ்ரீபகவான் கூறுகிறார்.
மய்யாஸக்தமனா: பார்த2 – ஹே அர்ஜுனா! என்னிடத்தில் மிகுந்த அன்பும், பற்றும் கொண்ட மனதுடனும் அதாவது என்மீது அளவில்லாத பக்தி கொண்டவனாகவும்
யோகம் புஞ்ஜன் – ஞானயோகத்தில் ஈடுபட்டு கொண்டிருப்பவனாகவும்
மத் ஆஶ்ரயஹ – என்னையே சரணடைந்தவனாகவும்
அஸம்ஶயம் – சந்தேகமில்லாமல்
ஸமக்3ரம் - முழுமையாக
மயம் யதா2 ஞாஸ்யஸி – என்னை எவ்விதம் தெரிந்து கொள்ளப்போகிறாயோ
தத் ஶ்ருணு – அதை நீ கேள்.

பக்தி என்பது ஈஸ்வரனிடம் நாம் வைக்கும் அன்புதான். பகவானிடத்தில் முழுமையான அன்பு செலுத்தினால்தான் அவரது பூரண அருளை பெறமுடியும். ஞானயோகம் என்பது ஈஸ்வரனை பற்றிய அறிவை அடைவதற்கு கடைப்பிடிக்கும் சாதனம். அவைகள் சிரவணம், மனனம், நிதித்யாஸனம் ஆகியவைகளாகும்.  மாயையுடன் கூடிய பிரம்மத்திற்கு ஈஸ்வரன் என்றும், ஈஸ்வரனையே சகுண பிரம்மன் என்றும் அழைப்பர்.  ஈஸ்வரனுடைய சகுண, நிர்குண இரண்டையும் தெரிந்து கொள்வதுதான் அவரை முழுமையாக அறிந்து கொண்டதற்கு சமமாகும்.

ज्ञानं तेऽहं सविज्ञानमिदं वक्ष्याम्यशेषतः ।
यज्ज्ञात्वा नेह भूयोऽन्यज्ज्ञातव्यमवशिष्यते ॥ 2 ॥
ஞானம் தே அஹம் ஸவிக்ஞானமிதம் வக்ஷ்யாமி அஶேஷதஹ – நான் விக்ஞானத்துடன் கூடிய இந்த ஆத்மதத்துவ ஞானத்தை முழுமையாக உனக்கு சொல்லப் போகிறேன்.
யத் ஞாத்வா இஹ பூய அன்யத் – எதை அறிந்து கொண்டபின் இங்கு
ஞாதவ்யம் அன்யதி ந அவிஶிஷ்யதே – வேறெதையும் தெரிந்து கொள்ள தேவையில்லையோ அதைப் பற்றியும் 
அஶேஷத – ஞானத்துடன் சம்பந்தப்பட்ட மற்ற கருத்துக்களையும் சொல்லப் போகிறேன். சாதனம், பலன் போன்றவற்றையும் சொல்லப்போகின்றேன்.

இதில் ஈஸ்வர ஸ்வரூபத்தை சொல்லப்போகிறேன்.  எவ்வாறு எல்லாப் பானைகளுக்கும் காரணம் களிமண் என்பதை தெரிந்து கொண்டால் அதிலிருந்து தோன்றிய அனைத்தையும் தெரிந்து கொள்ளலாமோ. அதேமாதிரி எந்த ஒன்றை நீ தெரிந்து கொண்டால் அதிலிருந்து தோன்றிய அனைத்தையும் அறிந்து கொள்வாய்.  அந்த ஒன்றான ஈஸ்வரனை உனக்கு சொல்லப்போகிறேன் என்று பகவான் கூறுகிறார். ஈஸ்வர ஞானத்தை அடைந்துவிட்டால் அதற்கு மேல் அறிய வேண்டியது எதுவும் இருக்காது.
ஞானம்
  1. பரோக்ஷ ஞானம், கேள்வி ஞானம்
  2. சகுண பிரம்ம ஞானம்
  3. பிரம்மன் இருக்கின்றது என்ற அறிவு
  4. சாஸ்திரத்தில் சொல்லப்பட்டதை சரியாக புரிந்து கொள்ளுதல்
விக்ஞானம்
  1. அபரோக்ஷ ஞானம், நேரிடையாக அனுபவிக்கும் அறிவு
  2. நிர்குண பிரம்ம அறிவு
  3. நானே பிரம்மனாக இருக்கின்றேன்
  4. அனுபவ ஞானம் – சாஸ்திரம் கொடுத்த அறிவும் என்னுடைய அனுபவத்திற்கும் முரண்பாடில்லாத அறிவு.  சாஸ்திரம் என்னைத்தான் உபதேசிக்கின்றது என்று நாம் அறியும் நிலை.
मनुष्याणां सहस्त्रेषु कश्चिद्यतति सिद्धये ।
यततामपि सिद्धानां कश्चिन्मां वेत्ति तत्त्वतः ।। 3 ॥
பல்லாயிரக்கணக்கான மனிதர்களுக்குள் யாரோ ஒருவன்தான் மோட்சத்தை, ஈஸ்வர ஞானத்தை அடைய முயற்சி செய்கின்றான்.  முயற்சி செய்கின்ற ஞானயோகிகளில் யாரோ ஒருவன்தான் என்னை (ஈஸ்வரனை) சரியாக அறிகின்றான். இந்த ஞானத்தை அடைவது மிகவும் கடினம் என்றும் அதற்காக அதிக முயற்சி செய்ய வேண்டும் என்றும் பகவான் உணர்த்துகின்றார்.

भूमिरपोऽनलो वायुः खं मनो बुद्धिरेव च ।
अहंकार इतीयं मे भिन्ना प्रकृतिरष्टधा ॥ 4 ॥
சூட்சுமமான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாசம் ஆகியவைகள் சூட்சும பூதங்கள். மனம், புத்தி(மஹத்), அஹங்காரம்(மூலப்ரக்ருதி), இவைகள் என்று இந்த பிரக்ருதி எட்டு வகையாக பிரிக்கப்பட்டிருக்கின்றது.

ஈஸ்வரனுக்குள் பிரம்மன், மாயை என்கின்ற இரண்டு தத்துவங்கள் சேர்ந்துள்ளது.
  • பிரம்மத்தின் தோற்றத்தையும், மாயையின் தோற்றத்தையும் சொல்ல முடியாது அவைகள் அனாதி. எனவே ஈஸ்வரனும் அனாதியாகின்றார்
  • பிரம்மன் என்றும் இருக்கின்றது.  மாயை என்றும் இருப்பதுபோல் தெரிகின்றது
  • பிரம்ம ஸ்வரூபம் சேதனம், அறிவு ஸ்வரூபம்.  மாயை வெறும் ஜடம், அசேதனம்
  • பிரம்ம நிர்விகாரம், மாற்றமடையாதது, மாயை விகாரத்திற்குட்பட்டது
  • பிரம்மன் நிர்குணமானது, மாயை மூன்றுவிதமான குணங்களுடன் கூடியது. அதாவது சகுணமானது
  • பிரம்மன் எதையும் சாராமல் இருப்பது, சுதந்திரமானது.  மாயை பிரம்மத்தை சார்ந்துதான் இருக்கும்
  • பிரம்மன் சத்யம், மாயை மித்யா
ஈஸ்வரனிடமிருந்து அனைத்து ஸ்ருஷ்டியும் தோன்றியது.  எனவே ஈஸ்வரன் காரணமாகவும், படைக்கப்பட்டவைகளனைத்தும் காரியங்களாகவும் கருதப்படுகிறது. எந்த படைப்பிற்கும் மூன்றுவிதமான நிலைகள் உண்டு. அவைகள் காரணம், சூட்சுமம், ஸ்தூலம் ஆகியவைகளாகும். 

ஸாங்க்ய யோகம்
25 தத்தவங்களைக் கொண்டது. புருஷன் (ஆத்மா), ப்ரக்ருதியில்(மாயா), மூன்று குணங்களும் சம அளவில் இருக்கின்றது. இதிலிருந்து மஹத் உருவாகின்றது.  மஹத்திலிருந்து அகங்காரமும், இதலிருந்து ஐந்து சூட்சும பூதங்களும் தோன்றன. பஞ்ச சூட்சும பூதங்களின் சத்தவ குணத்திலிருந்து மனமும், ரஜோகுணத்திலிருந்து பத்து இந்திரியங்களும், தமோ குணத்திலிருந்து ஸ்தூல பஞ்ச பூதங்களும் தோன்றின.

अपरेयमितस्त्वन्यां प्रकृतिं विद्धि मे पराम् ।
जीवभूतां महाबाहो ययेदं धार्यते जगत् ॥ 5 ॥
பகவான் பரா ப்ரக்ருதியை பிரம்மனாகவும், அபரா ப்ரக்ருதியை மாயையாகவும் குறிப்பிடுகின்றார்.  இவையிரண்டின் சேர்க்கை நானேதான் என்று கூறுகிறார்.  ஈஸ்வரனின் ஸ்வரூபமே பிரம்மன்.  ஈஸ்வரனின் சுபாவமே மாயை என்று அறிந்து கொள்ள வேண்டும்.
மஹாபாஹோ – ஹே அர்ஜுனா!
அபரா இயம் – இந்த எட்டு வகையான தத்துவங்கள் உயர்ந்தவைகள் கிடையாது, இவைகள் அபரா ப்ரக்ருதி என்று அழைக்கப்படுகின்றது.
இதரா அன்யா ப்ரக்ருதிம் –– இதிலிருந்து வேறுபட்ட ப்ரக்ருதியே
வித்தி4 மே பராம் - என்னுடைய மேலான ப்ரக்ருதியாக தெரிந்து கொள்
ஜீவபூதாம் – இது அறிவு ஸ்வரூபமானது, சைதன்ய ஸ்வரூபமானது
யயா இதம் தார்யதே ஜகத் – இந்த பராப்ரக்ருதி உலகத்தை தாங்கிக் கொண்டு இருக்கின்றது
இதிலிருந்து அபரா ப்ரக்ருதியானது பரா ப்ரக்ருதியை சார்ந்திருக்கிறது என்று தெரிந்து கொள்ள முடிகின்றது.  எது ஒன்றை சார்ந்திருக்கின்றதோ அது மித்யாவாக இருக்கும், பொய்யான தோற்றத்தையுடையதாக இருக்கும்

एतद्योनीनि भूतानि सर्वाणीत्युपधारय ।
अहं कृत्स्नस्य जगतः प्रभवः प्रलयस्तथा ।। 6 ॥
ஸ்ருஷ்டி, ஸ்திதி, லய காரணமே உபாதான காரணமாகும். ஸ்ருஷ்டிக்கு மட்டுமே காரணமாக இருப்பது நிமித்த காரணம்
பூதானி ஸர்வாணி – அனைத்து படைப்புக்களும், தோன்றியுள்ள அனைத்தும்
ஏதத்3 யோனீனி – பரா-அபரா ப்ரக்ருதி இவையிரண்டையும் காரணமாக கொண்டது.
இதி உபதா4ரய – இதை நன்கு புரிந்து கொள்வாயாக
அஹம் க்ருத்ஸ்னஸ்ய ஜகத: ப்ரப4வ – நானே அனைத்து படைப்புக்கும் காரணம்
ப்ரலய ததா2 – அதேபோல பிரளயத்திற்கும், லயத்திற்கும் நானே காரணம்.

मत्तः परतरं नान्यत्किञ्चिदस्ति धनञ्जय ।
मयि सर्वमिदं प्रोतं सूत्रे मणिगणा इव ॥ 7 ॥
தனஞ்ஜய – ஹே அர்ஜுனா!
மத்த: பரதரம் அன்யத் ந கிஞ்சிதஸ்தி – எனக்கு வேறாக எந்தப்பொருளும் கிடையாது
ஸூத்ரே மணிக3ணா இவ – கயிற்றில் உள்ள மணிகள் போல
மயி இதம் ஸர்வம் ப்ரோதம் – என்னிடத்தில் ஸ்ருஷ்டிகள் அனைத்தும் கோர்க்கப்பட்டுள்ளது.
இந்த உதாரணத்தை மணிகள் மாலை போல் இருப்பதற்கு எப்படி நூலானது காரணமோ அதுபோல உலகமனைத்தும் என்னைச் சார்ந்திருக்கின்றது, பகவானை சார்ந்திருக்கிறது.

रसोऽहमप्सु कौन्तेय प्रभास्मि शशिसूर्ययोः ।
प्रणवः सर्ववेदेषु शब्दः खे पौरुषं नृषु ॥ 8 ॥
ஹே அர்ஜுனா! நான் (ஈஸ்வரன்) நீரிலிருக்கும் சுவையாக இருக்கின்றேன். சூரியன், சந்திரன் இவைகளில் உள்ள ஒளியாகவும் இருக்கின்றேன்.  எல்லா வேதங்களுக்குள் இருக்கின்ற ப்ரணவ (ஓங்கார) ரூபமாக இருக்கின்றேன்.  ஆகாசத்தின் சப்தமாகவும், ஆண்களிடத்தில் ஆண்மையாகவும் இருக்கின்றேன்.

நாம் உணர்வுமயமாகவும், அறிவுமயமானவர்களாகவும் இருக்கின்றோம். சரியான அறிவை அடைந்திருந்தாலும், உணர்ச்சிமயம் துணை புரியவில்லை என்றால் அதன் பலனை அடைய முடியாது.  நமக்கு தெரியாத அறிமுகமில்லதவருக்கு விபத்து ஏற்பட்டால் அது ஒரு சம்பவமாகத்தான் இருக்கும். அதனால் வருத்தமடைய மாட்டோம்.  நாம் நேசிப்பவர் இறந்துவிட்டால் மிகவும் துயரப்படுகின்றோம்.  இறப்பு என்பது எல்லோருக்கும் வருவதுதான் என்ற அறிவு இருந்தாலும் நம்மால் துயரப்படாமல் இருக்க முடியாது.  இங்கே அறிவு பயன் தரவில்லை.  நமக்கு ஏற்கனவே உலகத்தின் மீது தீவிர பயத்துடனும், ராக-துவேஷங்களுடன் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.  பகவான் இந்த உலகமே நான்தான் என்று அறிவைக் கொடுத்து இருக்கின்றார்.  இருந்தாலும் நம்மாலும் இந்த அறிவின் மூலம் பகவானை உலகத்தில் உள்ள அனைத்திலும் பார்க்கும் முடிவதில்லை.  நம்முடைய உணர்வு இந்த அறிவுடன் இணையாமல் இருப்பதால் இந்த நிலை.

पुण्यो गन्धः पृथिव्यां च तेजश्चास्मि विभावसौ ।
जीवनं सर्वभुतेषु तपश्चस्मि जपस्विषु ॥ 9 ॥
நிலத்தின் நல்ல வாசனையாகவும், இயற்கையான மண்ணின் வாசனையாகவும் நெருப்பில் இருக்கின்ற உஷ்ணமாகவும், எல்லா ஜீவராசிகளிலுள்ள உணவாகவும், ஆயுளாகவும், தவம் செய்பவர்களுடைய தவமாகவும் நான் இருக்கின்றேன்.

झिवं मां सर्वभुतानां विद्धि पार्थ सनातनम् ।
बुद्धिर्बुद्धिमतामस्मि तेजस्तेजस्विनामहम् ॥ 10 ॥
ஹே அர்ஜுனா! அனைத்து ஜீவராசிகளுக்கு மூலகாரணமாக என்னை அறிந்து கொள்வாயாக.  காரணமற்ற தோற்றமாக என்றும் இருக்கின்றவனாக அறிவாயாக.  அறிவுடையவர்களுடைய அறிவாகவும், அறியும் திறனாகவும், மனோபலம் உடையவர்களுடைய பலமாகவும் இருக்கின்றேன்.

बलं बलवतां चाहं कामरागविवर्जितम् ।
धर्माविरुद्धो भूतेषु कामोऽस्मि भरतर्षभ ॥ 11 ॥
உடல் வலிமையுடையவர்களுடைய தர்மத்திற்குட்பட்ட உடல்வலிமையாகவும், தர்மத்திற்கு மாறுபடாத எல்லா உயிரினங்களின் ஆசைகளாகவும் இருக்கின்றேன்.
காமம் என்பது இல்லாத பொருளின் மீது ஆசைப்படுதல். ராகம் என்பது இருக்கும் பொருள் தன்னிடமே இருக்கவேண்டும் என்ற ஆசை

ये चैव सात्त्विका भावा राजसास्तामसाश्च ये ।
मत्त एवेति तान्विद्धि न त्वहं तेषु ते मयि ॥ 12 ॥
சத்துவ குணத்திலிருந்து தோன்றிய பொருட்களும், ரஜோ குணத்திலிருந்து தோன்றிய பொருட்களும், தமோ குணத்திலிருந்து தோன்றிய பொருட்களும் என்னிடமிருந்துதான் வந்ததாக நீ அறிவாயாக.  ஆனால் நான் அவைகளிடத்தில் இல்லை.  அவைகள் என்னிடத்தில் இருக்கின்றது. களிமண் எல்லா பானைகளிலும் இருக்கின்றது.  ஆனால் பானைகளிடத்தில் களிமண் கிடையாது., பானையைச் சார்ந்து களிமண் இல்லை.  அதுபோல இந்த ஜகத் பகவானை சார்ந்திருக்கின்றது. ஆனால் நான் அவைகளைச் சார்ந்தில்லை என்று சொல்வதாக புரிந்து கொள்ள வேண்டும்.

त्रिभिर्गुनमयैभावैरेभिः सर्वमिदं जगत् ।
मोहितं नाभिजानाति मामेभ्यः परमव्ययम् ॥ 13 ॥
நாம் மனதில் அனுபவிக்கும் துயரத்திற்கான காரணத்தை இதில் கூறுகின்றார். இந்த மூன்று குணங்களின் மாற்றத்தினால் தோன்றிய பொருட்களில் எல்லா ஜீவராசிகளும் மோகத்தை அடைந்துவிட்டது. அதனால் என்னை இந்த உலகம் அறிவதில்லை. இக்குணங்களுக்கு மேலானவனாகவும், அழிவற்றவனாகவும் இருக்கின்ற என்னை இந்த உலகம் புரிந்து கொள்வதில்லை.

दैवि ह्येषा गुणमयी मम माया दुरत्यया ।
मामेव ये प्रपद्यन्ते मायामेतां तरन्ति ते ॥ 14 ॥
மாயா தத்துவத்தின் லட்சணத்தையும், துயரத்தை நீக்குவதற்கான வழியையும் இதில் கூறுகிறார்.
மாயா – எது உண்மையில்  இல்லையோ, இருப்பதுபோல் காட்சி அளிக்கின்றதோ அது மாயை.
குணமயீ மம மாயா – முக்குணங்களையுடையது என்னுடைய மாயை
தை3வி – ஈஸ்வரனைச் சார்ந்திருப்பது; அதற்கு சுதந்திரமான இருப்பு கிடையாது
துரத்யயா – கடப்பதற்கு கடினமானது
ஹி ஏஷா – ஏனென்றால் இந்த மாயைக்கு விக்ஷேபம், ஆவரணம் என்ற இருவகையான சக்திகள் இருக்கின்றது.  விக்ஷேபம் புத்தியினால் தோற்றுவிப்பது, ஆவரணம் என்பது இருப்பதை மறைத்தல்
மாமேவ யே ப்ரத்யந்தே – யார் என்னையே சரணடைகிறார்களோ
மாயாமேதாம் தரந்தி தே – அவர்கள்தான் இந்த மாயையை கடந்து செல்கின்றார்கள்

யார் என்னையே, ஈஸ்வரனையே சரணடைகிறார்களோ அவர்கள்தான் இந்த மாயையை கடந்து செல்கின்றார்கள்.

சரணாகதி விசாரம்
நம் முயற்சியை விட்டுவிடுவது என்று இதற்கு பொருளல்ல.  நாம் பகவானை விடாமுயற்சியுடன் அடையும் சாதனத்தை பலனடையும் வரை தொடர்ந்து செய்து கொண்டிருக்க வேண்டும். இது மனதில் நாம் அடைய வேண்டிய பாவனை. நாம் செய்து கொண்டிருக்கும் செயலிலும், அடைந்த வெற்றியிலும், தடைகள் வந்தாலும், சிக்கலில் இருந்தாலும் நாம் கடைப்பிடிக்க வேண்டிய பாவனை. நம்முடைய அகங்காரத்தின் பலவீனத்தை உணர வேண்டும். நான் அடைந்த வெற்றிகள், தோல்விகள் எல்லாம் என்னுடைய முயற்சியினால்தான் என்று நம் அகங்காரத்தைத் தான் குறிக்கின்றோம். நம்முடைய மனதினாலும் புத்தியாலும் மட்டும் சம்சாரத்தை கடக்கும் சக்தி, மாயையை கடக்கும் சக்தி கிடையாது என்று உணர வேண்டும், இது ஈஸ்வரனின் அனுகிரகத்தினால் மட்டுமே சாத்தியம் ஆகும்.  எனவே அவரது உதவியை நாட வேண்டும்.

நமக்கு நல்லது எது, கெட்டது எது என்று நாம்தான் தீர்மானிக்கின்றோம்.  அதனால் தான் அந்த எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறாவிட்டால் மகிழ்ச்சியோ, துயரமோ வருகின்றது.  அதே சமயம் ஈஸ்வரன்தான் நமக்கு இவைகளை தீர்மானித்து வைத்து இருக்கின்றார். ஏனென்றால் அவர் என்னை மிகவும் நேசிக்கின்றார். எவையெல்லாம் நாம் அனுபவிக்கின்றோமோ அவைகளெல்லாம் ஈஸ்வரனின் நியதிப்படிதான் நடக்கின்றது. எனவே அதை அவருடைய பிரசாதமாக ஏற்றுக் கொள்வதே சரணாகதி என்ற சொல்லுக்கு சரியான பொருளாகும்.  நம்முடைய அகங்காரத்தை பகவானிடம் சரணடைய வைத்துவிட்டால், பகவானுடைய சக்தி நம்முடைய சக்தியாகிவிடும்.  இறைசக்தியிருந்துவிட்டால் மாயையை மிக எளிதாக கடந்து விடலாம்.  ஏற்கனவே மாயை அவரது கட்டுப்பாட்டில் இருக்கின்றது.

न मां दुष्कृतिनो मूढाः प्रपद्यन्ते नराधमा ।
माययापह्र्तज्ञाना आसुरं भावमाश्रिताः ॥ 15 ॥
மோகத்தின் வசப்பட்ட மூடர்கள் என்னை வழிபடுவதில்லை.
துஷ்க்ருதினஹ – பாவச் செயல்களை செய்கின்றவர்கள். 
இதனால் விளையும் பாவங்களே என்னை வழிபடுவதற்கு தடையாக இருக்கின்றது.  போகப் பொருட்கள் கொடுத்தாலும் விவேகத்தை நீக்கிவிடுவதால் எது உண்மையான, நிலையான சுகத்தைக் கொடுக்கக்கூடியது என்பதை புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள்.  நிஷித்த கர்மத்தினால் பாவத்தைச் சேர்த்துக் கொண்டவர்கள் மோகத்தின் வசத்தில் இருக்கின்றார்கள்.
நர அத4மாஹ – கீழான மனிதர்கள். குணத்தில் கீழ்மையாக இருப்பவர்கள், தீய குணங்களை உடையவர்கள். தாமஸ, ராஜஸ குணத்தை உடையவர்களாக இருப்பார்கள்.
மாயயா அபஹ்ருத ஞானா – மாயையினால் அவர்களிடமிருந்த அறிவையெல்லாம் பறிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.  மாயையின் விளைவான காம-க்ரோதம் போன்றவற்றை கொடுத்து அறிவை மயங்க செய்துவிடுகின்றது. பற்றில்லாத இடத்தில் நம் அறிவான பறிபோகாது.
ஆஸீரம் பா4வம் ஆஶ்ரிதா – அசுரர்களுடைய தன்மையை உடையவர்களாக இருப்பார்கள்.  பொய் சொல்லுதலும், மற்றவர்களை துன்பப்படுத்தும் குணம் உடையவர்களாக இருப்பார்கள்.

चतुर्विधा भजन्ते मां जनाः सुकृतिनोऽर्जुन ।
आर्तो हिज्ञासुरर्थार्थी ज्ञानी च भरतर्षभ ॥ 16 ॥
பரதர்ஷப – ஹே அர்ஜுனா!
சதுர்விதா4 ஜனா: மாம் ப3ஜந்தே – நான்குவிதமான மனிதர்கள் என்னை வழிபடுகிறார்கள். அந்த நான்குவிதமான மனிதர்கள் கீழ்கண்டவர்கள்.
ஸுக்ருதினஹ – புண்ணிய செயலை செய்து புண்ணியத்தை அடைந்தவர்கள்
ஆர்தஹ - துயரப்பட்டு கொண்டிருப்பவர்கள்
ஜிக்ஞாஸு – மோட்சத்தை விரும்புபவர்கள்
அர்தா2ர்தீ – பொருட்களை, சுகத்தை விரும்புபவர்கள்
ஞானி ச – ஆத்ம ஞானத்தை அடைந்த ஞானிகளும் கூட என்னை வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பக்தர்களை நான்கு விதமாக பகவான் பிரித்திருக்கிறார்.
1.       ஆர்த்தஹ – துயரத்தில் இருப்பவர்கள், கஷ்டத்தில் இருப்பவர்கள். இப்படிபட்ட பக்தர்கள் ஏதோவொரு கஷ்டத்திலிருந்து விடுபட இறைவனை வழிபடுவார்கள். நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து விடுபட இறைவனை நோக்கி செல்வார்கள்.  அகங்காரத்தின் சக்திக்கு மீறிய துயரத்தை அனுபவிக்கும் போதுதான் பக்தி வரும்.
2.       அர்த்தார்த்தி – பொருட்களை விரும்புவதில்லை, ஐஸ்வர்யத்தை, இன்பத்தை விரும்புவார்கள் துயரத்திலும், இன்பத்திலும், வெற்றியிலும் இறைவனை வழிபட்டு கொண்டிருப்பார்கள்.  இகலோக, பரலோக இன்பத்தை, புகழை, ஐஸ்வர்யத்தை விரும்பும் பக்தர்கள் இத்தகையவர்கள்.
3.       ஜிக்ஞாஸு – பகவானையே, மோட்சத்தை அடைய விரும்புபவர்கள்.  இவர்களுக்கு வரும் துயரத்தையும், சுகத்தையும் பொருட்படுத்துவதில்லை. ஆனால் இறைவனை மட்டும் அடைவதற்கு முயற்சி செய்வார்கள், வழிபடுவார்கள்.
4.       ஞானி – என்னை அறிந்து உணர்ந்தவர்கள்.  ஈஸ்வரனை பற்றிய முழு அறிவை அடைந்தவர்கள், ஈஸ்வனாகவே இருக்கின்றான் இருந்தாலும் அவரை வழிபட்டுக் கொண்டிருப்பான்.

तेषां ज्ञानी नित्ययुक्त एकभक्तिर्विशिष्यते ।
प्रियो हि ज्ञानिनोऽत्यर्थमहं स च मम प्रियः ॥ 17 ॥
நாம் இறைவனிடம் வைக்கும் அன்பே பக்தி என்று அழைக்கப்படுகிறது. அன்பு மூன்று வகையாக இருக்கிறது.  அவைகள்,
1. நம்மிடம் வைக்கும் அன்பு, 
2. எதை அடைய விரும்புகிறோமோ அதன் மீது வைக்கும் அன்பு, 
3. விரும்பியதை அடைய உதவும் சாதனத்தின் மீது வைக்கும் அன்பு 
ஆகியவைகளாகும்.  ஞானியின் பக்தியானது பிளவுப்படாதது.  ஞானியான பிறகு இந்த மூன்று வகையான பக்தியும் ஒன்றாகி விடுகின்றது.  ஞானியின் மனதிலிருந்து ஆசை அறவே நீங்கி விட்டது என்று சொல்வதற்கு காரணம் ஆசைப்படக்கூடிய பொருட்கள்  எதுவுமே அவனுக்கு கிடையாது.
தேஷாம்  - இந்த நான்கு வகையான பக்தர்களுக்குள் ஞானியானவன் உயர்ந்தவன். இந்த ஞானியின் பக்தி பிளவுப்படாமல் ஒன்றாக இருக்கின்றது.  இவன் பிரம்மத்தில் எப்பொழுதும் மனதை பொருத்தியவனாக இருக்கிறான்.  பகவான் மீது முழுமையான அன்பு செலுத்தி கொண்டிருப்பவன்.  ஞானிகளுக்கும் நான்தான் முழுமையான பிரியமாக இருக்கிறேன். பிரம்மமாகவே தன்னைப் புரிந்து கொண்டவன் இவன்.  எனக்கு அந்த ஞானிதான் மிகவும் பிரியமானவன். இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது பகவானிடத்தில் நாம் எவ்வளவு அன்பு வைத்திருக்கின்றோமோ அதே அளவு நமக்கு பகவானிடமிருந்து திரும்ப கிடைக்கும்.  ஆனால் மனிதர்களிடத்தில் இது சாத்தியம் ஆகாது. நாம் யாரை நேசிக்கின்றோமோ, அவரிடமிருந்து அதேயளவு நேசம்  நமக்கு கிடைக்காது. ஆனால் அவர் வேறொருவரை அதிகமாக நேசிப்பார்.

उदाराः सर्व एवैते ज्ञानी त्वात्मैव मे मतम् ।
आस्थितः स हि युक्तात्मा मामेवारुत्तमां गतिम् ॥ 18 ॥
இவர்கள் எல்லோரும், மேற்கூறிய நால்வரும் சிறந்தவர்கள்தான். ஆனால் ஞானி மட்டும்தான் என்னுடைய ஸ்வரூபம் என்பது என்னுடைய கருத்து. ஞானி உததமமான, மிகவும் உயர்ந்த கதியாகிய என்னையே பற்றிக் கொண்டவன். அவன் பிரம்மனிடத்தில் ஒன்றிய மனதை அடைந்திருப்பவன்.

बहूनां जन्मनामन्ते ज्ञानवान्मां प्रपद्यते ।
वासुदेवः सर्वमिति स सहाअत्मा सुदुर्लभः ॥ 19 ॥
பல பிறவிகளாக படிபடியாக உயர்ந்து பிறகு இறுதியில் ஞானத்தை அடைந்தவனாக உயர்ந்து நிர்குண ஸ்வரூபமான என்னை அடைகின்றான். அனைத்தும் ஈஸ்வர ஸ்வரூபமாக பார்க்கும் மனதையுடையவன். இந்த ஞானி இப்படிப்பட்ட மகாத்மா இருப்பது மிகவும் அரிது.

कामैस्तैस्तैर्ह्र्तज्ञानाः प्रपद्यन्तेऽन्यदेवताः ।
तं तं नियममास्थाय प्रकृत्या नियताः स्वया ॥ 20 ॥
விதவிதமான ஆசைகளால் அறிவை இழந்தவர்கள், விவேகத்தை இழந்தவர்கள் எது நல்லது கொடுக்கும், எது தீமையை கொடுக்கும் என்று பிரித்தறியும் விவேகத்தை இழந்தவர்கள். இந்த சகாம பக்தர்கள் என்னை விட்டுவிட்டு விதவிதமான மற்ற தேவதைகளை வழிபடுகிறார்கள்.
அன்ய தேவதா: - உலகத்திலுள்ள சக்திகளுக்கும், ஐஸ்வர்யத்திற்கும் அதிஷ்டான தேவதைகள் இருக்கின்றார்கள். சகாம பக்தர்களுக்கு எந்த ஐஸ்வர்யம் வேண்டுமோ அதற்குரிய தேவதையை வழிபடுவார்கள். இங்கு தேவதைகளை சாதனமாக கொண்டுதான் தான் விரும்பியதை அடைகின்றார்கள். ஈஸ்வரன் பற்றிய அறிவில்லாதவர்கள் இவர்கள். அவரவர்களுடைய குணத்தின் அடிப்படையில் வழிபாடு செய்கின்றார்கள். விதவிதமான வழிபாட்டு முறைகளை, விரதங்களை எடுத்துக் கொண்டு வழிபடுகின்றார்கள்.

यो यो यां यां तनुं भक्तः श्रद्धयार्चितुमिच्छति ।
तस्य तस्याचलां श्रद्धां तामेव विदधाम्यहम् ॥ 21 ॥
எந்த பக்தர்கள் எந்தெந்த தேவதை சிரத்தையுடன் வழிபட விரும்புகின்றார்களோ அந்த பக்தர்களுடைய சிரத்தையை திடப்படுத்துகிறேன்.  நான் அந்த தேவதை ஸ்வரூபத்திலே உள்ள சிரத்தையை உறுதிபட வைக்கின்றேன்.

स तया श्रद्धया युक्तस्तस्याराधनमीहते ।
लभते च ततः कामान्मयैवविहितान्हि तान् ॥ 22 ॥
இத்தகைய பக்தன் நான் உறுதிபடுத்திய அந்த சிரத்தையுடன் கூடியவனாக அந்த தேவதையை வழிபடுகின்றான். அப்படி செய்த வழிபாட்டினால் அவர்கள் விரும்பிய போகங்களை அடைகிறார்கள். உண்மையில் இவைகள் என்னால், ஈஸ்வரனால் கொடுக்கப்பட்டவைகள். அவரவர்களுக்கு தகுதிக்கேற்ப அவைகள் கொடுக்கப்படுகின்றான்.

अन्तवत्तु फलं तेषां तद्भवत्यल्पमेधसाम् ।
देवान्देवयजो यान्ति मद्भक्त यान्ति मामपि ॥ 23 ॥
ஆனால் அந்தப் பக்தர்களுடைய அடையும் பலனானது அழிவுக்குட்பட்டதாக இருக்கின்றது. இவர்கள் சிற்றறிவு உடைய காம்ய பக்தர்கள்.
கர்மபலனில் நான்கு குறைகள் உண்டு
  1. நிலையற்றதாக இருக்கிறது. (நிலையற்ற பொருட்களிலிருந்து தோன்றுவது நிலையற்றதாகவே இருக்கும்)
  2. மன நிறைவை கொடுக்காது
  3. பந்தப்படுத்தும். எல்லா அனாத்மாக்களும் நம்மை பந்தப்படுத்துப்பவைகள்தான். சுகத்தை தருவதாக நினைக்கும் பொருட்களால் அடிமைப்படுத்தி விடப்படுவாய். நம்மிடத்து இருக்கும் சக்தி குறைந்து போகும்.
  4. உழைப்பும், காலமும், சக்தியும் வீணாகின்றது.
அல்பமேத4ஸாம் – சிற்றறிவு உடையவர்கள், அழியக்கூடிய பலனில் நாட்டம் உடையவர்கள், கீழான தேவதைகளிடத்தில் புத்தியுடையவர்கள், பக்குவமடையாத புத்தியுடையவர்கள்
தேவான் தேவயஜோ யாந்தி – மற்ற தேவதைகளை வழிபடுபவர்கள் அந்த தேவதைகளை அடைகிறார்கள். அந்த தேவதைகள் இருக்கும் லோகத்திற்கு செல்கிறார்கள்
மத்3ப4க்தா யாந்தி மாம் அபி – ஈஸ்வரனை அடைய விரும்பும் பக்தன் என்னையே நிர்குண ஸ்வரூபமான என்னையே அடைகிறான்.

अव्यक्तं व्यक्तिमापन्नं मन्यन्ते मामबुद्धयः ।
परं भावमजानन्तो ममाव्ययमनुत्तमम् ॥ 24 ॥
இதில் ப்ரா பிரக்ருதியின் நான்கு லட்சணைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
  1. அவ்யக்தம்   - புலன்களால் அறிய முடியாதது , தானே விளங்கிக் கொண்டிருக்கிறது. அனுபவத்தில் வராதது.
  2. பரம்பா4வம் - மேலான ஸத்யம் – என்றுமிருக்கின்ற உண்மை, என்றும் மாறாத உண்மை, பாரமார்த்திக ஸத்யம்
  3. அவயயம்      - அழியாதது, மாற்றமடையாதது, தேய்வடையாதது
  4. அனுத்தமம்  - இதற்கு மேல் உயர்ந்தது எதுவும் இல்லை. இதுதான் அதிகபட்சம் சிறப்பு வாய்ந்தது,      இணையற்றது. இதை அடைந்து விட்டால் அதற்கு மேல் அடைய வேண்டியது எதுவும் இல்லை.
நம்முடைய மனதில் சூட்சுமமாக இருக்கும் துயரத்தை சூட்சுமமான ஞானத்தினால்தான் நீக்க முடியும், ஸ்தூலமான எதைக்கொண்டு. இந்த சம்சாரத்தை நீக்க முடியாது.

ஸ்லோக விளக்கம்
புலன்களுக்கு அப்பாற்பட்டு இருக்கின்ற என்னை வெளித்தோற்றத்திற்கு வந்த தோற்றமாக அடைந்தவன் என்று எண்ணுகிறார்கள். அறிவற்றவர்கள் என்னுடைய மேலான சத்யமான மாற்றமடையாதவன், உத்தமமான ஸ்வரூபத்தை அறிந்து கொள்ளாமல் இவ்விதம் எண்ணுகிறார்கள்

नाहं प्रकाशः सर्वस्य योगमायासमावृतः ।
मूढोऽयं नाभिजानाति लोको मामजमव्ययम् ॥ 25 ॥
நான் எல்லோருக்கும் புலப்படுவதில்லை, விளங்குவதில்லை. யோக மாயையால் நன்கு மறைக்கப்பட்டுள்ளேன். யோகம் என்பது மூன்று குணங்களின் சேர்க்கையாக இருக்கின்றது. சூரியனை மேகம் மறைப்பதை போன்று மாயை என்னை மறைக்கிறது. இந்த அறிவற்ற மனிதர்கள் என்னை அறிவதில்லை, என்னை பிறப்பற்றவன், அழிவற்றவன் என்று அறிவதில்லை.

वेदाहं समतीतानि वर्तमानानि चार्जुन ।
भविष्यणि च भूतानि मां तु वेद न कश्चन ॥ 26 ॥
நான் அனைத்தையும் அறிபவன், அனைத்திற்கும் சாட்சியாக இருக்கின்றேன். ஹே அர்ஜுனா! கடந்ததையும் அறிகின்றேன், இப்போது நடப்பதையும், இனி வரப்போகின்ற அனைத்தையும் நான் அறிவேன். ஆனால் ஈஸ்வர ஸ்வரூபமாகிய என்னை அறிய மாட்டார்கள்.  நான் ஸ்ருஷ்டியின் காரணமாக இருப்பதால் அனைத்தையும் அறிகின்றேன். நான் சாட்சி சைதன்ய ஸ்வரூபமாக இருக்கின்றேன். என்னால்தான் உயிரினங்கள் அனைத்தும் உணர்வு மயமாக இயங்குகிறது. எனவே ஜடமான இவைகளால் என்னை அறிய முடியாது.

इच्छद्वेषसमुत्थेन द्वन्द्वमोहेन भारत ।
सर्वभूतानि सम्मोहं सर्गे यान्ति परन्तप ॥ 27 ॥
சம்சாரத்தை அனுபவிப்பது நம்முடைய மனம்தான். அந்த மனதில் ஞானம் ஏற்பட வேண்டும், அதில் நிலைபெற வேண்டும். அப்போதுதான் சம்சாரத்திலிருந்து விடுதலை அடைவோம்.  மனமே ஞானம் அடைவதற்கு தடையாக இருக்கும்.  இந்த உலகம் இருமை ஸ்வரூபமாக இருக்கின்றது.  குளிர்-வெப்பம், சுகம்-துக்கம் போன்ற இருமைகளை உடையது.  நாம் இந்த உலகத்தை நன்மை தரக்கூடியது, தீமை தரக்கூடியது என்று இரண்டாக பிரித்திருக்கின்றோம்.  இந்த இருமை நம் மனதிலுள்ள இருமையான ராக-துவேஷத்தினால்தான் இவ்வாறு பிரிக்கப்படுகின்றது.  நாம் இந்த விருப்பு-வெறுப்புடன்தான் பிறக்கின்றோம்.  இந்த உலகமானது  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக தோன்றுகிறது.  மனதில் வரும் மோகம் புத்தியிலுள்ள  சரியாக அறியும் திறனை இழக்க செய்துவிடும்

பாரத - ஹே அர்ஜுனா!
இச்சா த்வேஷ ஸமுத்தே2ன விருப்பு-வெறுப்புக்களிலிருந்து தோன்றிய
மோஹேன – மன மயக்கத்தினால், மனதில் இருக்கின்ற மோகத்தினால்
ஸர்வபூதானி – எல்லா ஜீவராசிகளும்
ஸம்மோஹம் – புத்தியில் வருகின்ற மோகம், அறிவை இழந்த நிலை, நல்லது, கெட்டதை  பிரித்துப்பார்க்கும் சக்தியில்லாத நிலை. இதனால்தான் நாம் நன்மையை கண்டு பயந்து ஓதுங்கி, கெட்டதை நாடி ஓடுகின்றோம்.
யாந்தி ஸர்கே – பிறக்கும் போதே இந்த நிலையோடுதான் இருக்கின்றோம்.
எனவே நாம் முயற்சி செய்துதான் இந்த அறியாமையிலிருந்து விடுபட்டு மோட்சத்தை அடைய வேண்டும்.

येषां त्वन्तगतं पापं जनानां पुण्यकर्मणाम् ।
ते द्वन्द्वमोहनिर्मुक्ता भजन्ते मां दृढव्रताः ॥ 28 ॥
யார் தர்மப்படி வாழ்கின்றார்களோ அவர்கள் மனதிலிருந்து ராக-துவேஷங்கள் சென்று விடும்.  அதனால் அவர்களது புத்தி விவேக சக்தியுடன் செயல்படும்.
புண்யகர்மணாம் – கர்மயோகப்படி வாழ்ந்ததினால்
யேஷாம் து அந்தக3ம் பாபம் ஜனானாம் – எந்த மனிதர்களுக்கு பாவங்களானது சென்று விட்டதோ
தே த்வந்த்வ மோஹ நிர்முக்தா: அவர்கள் இருமை நிமித்தமான மோகத்திலிருந்து விடுபடுகின்றார்கள்.  புத்தியில் விவேக சக்தி உண்டாகிறது, அறிவு தெளிவாகிறது.
பஜந்தே மாம் த்ருட4வ்ரதா: - என்னை திடமான மனதுடன் வழிபடுகின்றார்கள், நாடுகிறார்கள்

जरामरणमोक्षाय मामाश्रित्य यतन्ति ये ।
ते ब्रह्म तद्विदुः कृत्स्नमध्यात्मं कर्म चाखिलम् ॥ 29 ॥
யே - எவர்கள்
ஜராமரண மோக்ஷாய - மூப்பு, இறப்பு இவற்றிலிருந்து விடுபடுவதற்காக
மாம் ஆஶ்ரித்ய யதந்தி - என்னை சரணடைந்து முயற்சி செய்கின்றார்கள். இங்கு முயற்சி என்பது ஞானயோக சாதனத்தை (சிரவணம், மனனம், நிதித்யாஸனம்) பயன்படுத்தி மோட்சத்தை அடைய முயற்சி செய்வதை குறிக்கின்றது.
தே - அவர்கள்
தத3 பிரஹ்ம விது: க்ருத்ஸ்னம் – அந்த பிரம்மத்தை முழுமையாக அறிகிறார்கள்
அத்4யாத்மம் - அத்யாமத்தையும்
கர்ம ச அகிலம் – முழுமையான கர்மத்தையும் அறிகிறார்கள்

साधिभूताधिदैवं मां साधियज्ञं च ये विदुः ।
प्रयाणकालेऽपि च मां ते विदुर्युक्तचेतसः ॥ 30 ॥
அதிபூதஹப் – அதி பூதத்தையும்
அதிதைவம்ப் – அதி தைவமாகவும்
அதியக்ஞம் ச – அதி யக்ஞமாகவும்
ப்ரயாணகாலே அபி – மரணத்தறுவாயிலும் கூட என்னை அறிகின்றார்கள்
யுக்தசேதஸ - மனஒருமுகத்தோடு
தே மாம் ச விது3: - அவர்கள் என்னை அறிகின்றார்கள்

தொகுப்புரை
01-03    என்னைச் சரணடைந்து ஈஸ்வர ஸ்வரூபத்தை பற்றி நான் கூறுவதை கவனமாக கேட்டு அறிந்து கொள்.  இந்த அறிவை அடைவதுதான் மனநிறைவை தரும். இதை வெகுசிலர் தான் அடைந்திருக்கின்றார்கள்
04-07    ஈஸ்வர ஸ்வரூம், பரா ப்ரக்ருதி, அபரா ப்ரக்ருதி இவற்றை விளக்கியுள்ளார். அபரா ப்ரக்ருதி என்பது மாயையும் அதனால் உருவாக்கப்பட்ட ஜகத் என்றும், பரா ப்ரக்ருதி என்பது பிரம்மன் என்றும் கூறியுள்ளார்.
08-12    ஈஸ்வரனுடய பெருமைகளை கூறினார்.  இந்த ஜகத்துக்கு உபாதான காரணமாகவும், நிமித்த காரணமாகவும் ஈஸ்வரன் இருக்கின்றார்.  இந்த உலகமே ஈஸ்வரனாக இருப்பதை இதிலிருந்து விளக்கியுள்ளார்.  உலகத்தில் இருக்கின்ற பெரும் சக்திகள் சிலவற்றைக் கூறி அவைகள் யாவும் நானேதான் என்று கூறியுள்ளார்.
13          சம்சாரத்தின் காரணத்தை பகவான் கூறியிருக்கிறார்.  அறியாமையிலிருந்து மாயையின் ஆவரண சக்தி மூலமாக நான் மறைக்கப்பட்டு,  மனமயக்கத்தில் மனிதர்கள் மூழ்கியிருக்கின்றனர்.
14          மாயையின் லட்சணம், அறியாமையிலிருந்து விடுபட சரணாகதி ஒன்றுதான் வழி என்று கூறியுள்ளார்.  முக்குணங்களை உடைய மாயையின் வசத்தில் இருக்கும் ஜீவர்கள் இதை கடக்க ஈஸ்வரனை சரணடைவதுதான் ஒரே வழி. சரணாகதி என்பது அகங்காரத்தின் பலவீனத்தை உணர்தல், அகங்காரத்தின் சக்தியின் அளவையறிந்து இது மாயையை கடக்க போதாது என்று உணர்ந்து ஈஸ்வரனின் சக்தியை அடைய முயற்சி செய்ய வேண்டும்.
15-16    பக்தர்கள் ஆர்த்த, அர்த்தார்த்த, ஜிக்னாஸு, ஞானி என நான்காக பிரித்தார்.
17-19    ஞானியின் பக்தியை மெச்சினார்.  எல்லோருமே சிறந்தவர்கள்தான், என்றாலும் ஞானிதான் தன்னை முழுமையாக உணர்ந்து இருப்பதால் மிக உயர்ந்தவன்
20-23    சகாம பக்தர்களின் பக்தியை, இறைவழிபாட்டின் முறையைக் கூறி, அவர்களுக்கு அந்தந்த இஷ்ட தேவதையின் மீதுள்ள  சிரத்தை வளர அருள் புரிகின்றேன் என்று கூறி ஆனால் இதனால் அடையும் பலன்கள் அழிவுக்கு உட்பட்டது என்றும் எச்சரித்துள்ளார்.
24-26    பரா ப்ரக்ருதியின் ஸ்வ்ரூபம், பிரம்ம ஸ்வரூபம் விளக்கப்பட்டது. இது புலன்களுக்கு அப்பாற்பட்டது என்றும் தெளிவுறுத்தியுள்ளார்
27-28    ஒருவன் எப்படி படிப்படியாக மோட்சத்தை அடைகின்றான் என்பதையும்,.  பிறக்கும் போதே சம்சாரியாகத்தான் எல்லோரும் பிறக்கின்றார்கள் என்பதையும் கூறியுள்ளார்.
29-30    சம்சாரியாக பிறந்து பிறகு மோட்சத்தை அடைந்தவன் ஏழு விதமான தத்துவத்தை அறிந்துள்ளான் என்று கூறியுள்ளார்.

ஓம் தத் ஸத்


A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...