Showing posts with label பஞ்சதசி-09. Show all posts
Showing posts with label பஞ்சதசி-09. Show all posts

Saturday, July 27, 2019

Pancadasi Chapter-9- Rev-01

பஞ்சதசி
அத்தியாயம்-9
தியான தீபம்
 
பிரம்ம தத்துவத்தை உபாஸனை செய்வது ஸம்வாதி பிரம்மம் போன்றதாகும். இவ்வாறாகவும் மோட்சத்தை அடையலாம் என்று சொல்லப்படுகிறது. இதைத்தான் ந்ருஸிம்ஹ உத்தரதாபனீய உபநிஷத்தில்; சொல்லப்பட்டிருக்கிறது. ஸம்வாதி பிரம்மம் என்றால் தெரிந்தே செய்யும் தவறு நன்மையில் முடிவதைக் குறிக்கிறது.
 
ஒரு அறைக்குள் ஒரு தீபம் இருக்கிறது. அதனுடைய வெளிச்சம் அறைக்கு வெளியே வாசலில் தெரிகின்றது. அதேபோல வேறொரு இடத்தில்(அறையில்) ரத்தினம் ஒன்று இருக்கிறது. அதனுடைய வெளிச்சமானது அறைக்கு வெளியே வாசல் வழியாக தெரிகின்றது. தூரத்திலிருந்து இரண்டு வெளிச்சங்களையும் பார்த்துவிட்டு ரத்தினம் என்று நினைத்துக் கொண்டு அவைளை நோக்கி ஓடுகின்ற இரண்டு பேர்களிடத்திலும் வெளிச்சத்தில் ரத்தினம் என்று ஏற்பட்ட எண்ணமானது தவறான அறிவு. தீபத்தின் வெளிச்சத்தைப் பார்த்து ஓடுபவனால் ரத்தினம் அடையப்படுவதில்லை. ரத்தினத்தின் வெளிச்சத்தைப் பார்த்து ஓடுபவனால் நிச்சயம் ரத்தினம் அடையப்படுகிறது.
 
தீபத்தின் வெளிச்சத்தைப் பார்த்து ரத்தினமென்று ஏற்பட்ட தவறான எண்ணமே விஸம்வாதிப்ரமம் என்று அழைக்கப்படுகிறது. ரத்தினத்தின் வெளிச்சத்தை பார்த்து ரத்தினம் என்று ஏற்பட்ட தவறான எண்ணம் ஸம்வாதிப்ரமம் என்று சொல்லப்படுகிறது. ஆவியை புகையென்று தவறாக எண்ணிக்கொண்டு அங்கே நெருப்பு இருக்குமென்ற அனுமானம் செய்யும்போது அந்த இடத்தில் சில நேரங்களில் உண்மையிலே நெருப்பு இருக்கலாம். இதையே ஸம்வாதிபிரமம் என்று அழைக்கப்படுகிறது. கோதாவரி நதியின் நீரை கங்காநதியின் நீரென்று நினைத்து தூய்மைக்காக ப்ரோக்ஷணம் செய்து கொண்டாலும், தூய்மையை அடைகிறான். இதுவே ஸம்வாதிபிரமம் என்றும் அழைக்கப்படுகிறது. காய்ச்சலால் நடுங்கிக் கொண்டே தன் சுயநினைவில்லாமல் நாராயண நாமத்தை சொல்லிக் கொண்டு இறந்துவிட்டவன் சொர்க்கத்தை அடைகிறான். இதுவும் ஸம்வாதிபிரமம் என்று அழைக்கப்படுகிறது.
 
இவ்விதமாக அனுபவத்தினாலும், அனுமானத்தினாலும் சாஸ்திரத்தில் உள்ள சிரத்தை விஷயத்தில் இதுவரை கூறிய தவறான எண்ணம் பலனைக் கொடுக்கின்ற ஸம்வாதிபிரமங்கள் கோடிக்கணக்காக இருக்கின்றன என்பது எல்லோரும் அறிந்ததே.
 
ஸம்வாதிபிரமங்கள் இல்லையென்றால் மண், கட்டை, கல் முதலானவைகள் எப்படி தேவதைகளை பூஜிக்க முடியும்? பெண் முதலானவர்கள்தான் எப்படி அக்னி முதலானவர்களை உபாஸிக்கத்தக்கவர்களாவார்கள்? தவறாக புரிந்து கொண்டாலும் அதனால் தான் விரும்பிய பலனை அடைந்துவிடலாம். விரும்பிய பனம்பழம் காக்கை அமர கீழே விழுவது போல இது இருக்கிறது. இதையே ஸம்வாதிபிரமம் என்று சொல்லப்படுகிறது. ஸம்வாதிம்பிரமம் என்பது அதனுடைய அடிப்படையில் தவறாக இருந்த போதிலும் நல்ல பலனைக் கொடுக்கிறது. அதுபோல பிரம்ம தத்துவத்தை உபாஸனை செய்தால் கூட மோட்சம் என்ற பலனைக் அடைந்து விட முடியும்.
 
உபநிஷத்துக்களிலிருந்து பிளவுபடாமல் ஒன்றாகவே இருக்கும் தன்மை உடைய பிரம்ம தத்துவத்தை பரோக்ஷமாக தெரிந்து கொண்டு அதுவே நானாக இருக்கிறேன் என்று தியானம் செய்கிறார்கள்.
 
பரோக்ஷ ஞானத்தை புலன்களால் அடைய முடியாது. நம்முடைய தனித் தன்மையை, ஆத்ம தத்துவத்தை விட்டுவிட்டு சாஸ்திரத்தின் துணைக்கொண்டு விஷ்ணு போன்ற தேவதைகளின் சிலைகளில் அந்த தேவதைகள் இருப்பதாக அறிவது போல, நிர்குண பிரம்மன் இருக்கிறது என்று சாமான்யமாக ஏற்படும் ஞானம் பரோக்ஷ ஞானமாகும்.
 
நான்கு கைகளையுடையது போன்றவற்றை அறிந்த போதிலும் இந்திரியங்களால் அவ்வித மூர்த்தியை பார்க்காததினால் அடையப்பட்ட ஞானம் பரோக்ஷம் என்று அறியப்பட வேண்டும். ஏனெனில் அப்போது விஷ்ணுவைப் பார்க்கவில்லை. பரோக்ஷம் என்ற தவறினால் இவ்வறிவு பொய்யானதாகி விடாது. ஏனெனில் சாஸ்திரமென்ற பிரமாணத்தினாலேயே சத்யமான மூர்த்தி தோன்றிக் கொண்டு இருப்பதால் பரோக்ஷ ஞானம் பொய்யாகிவிடாது.
 
சச்சிதானந்த ஸ்வரூபமாக இருக்கின்ற பிரம்மன் வேதாந்த சாஸ்திரத்தின் மூலம் பிரகாசித்துக் கொண்டிருந்த போதிலும் தனக்குள்ளே சாட்சியாக இருப்பதே பிரம்மன் என்பதை புரிந்து கொள்ளாமல் இருப்பதால் அந்த பிரம்மனை நேரில் அறியப்படுவதில்லை. சாஸ்திரத்தில் சொல்லிய முறைப்படியே பிரம்மன் சச்சிதானந்தம் என்கின்ற தீர்மானம் ஏற்பட்டிருப்பதால் அந்த ஞானம் பரோக்ஷமாக இருந்தாலும் அது சரியான ஞானம்தான் விபரீதமான ஞானமல்ல.
 
வேதாந்த சாஸ்திரங்களில் மகாவாக்கியங்களால் பிரம்மமானது உள்ளே ஆத்மாவாக வர்ணிக்கப்பட்டிருந்த போதிலும் கூட பிரம்மமானது நன்கு விசாரம் செய்வதற்கு தகுதியில்லாதவர்களால் அபரோக்ஷமாக அறிவது மிகவும் சிரமமாக இருக்கின்றது.
 
தேகம் முதலானவைகள்தான் ஆத்மா (நான்) என்கின்ற பிராந்தி நன்கு உறுதியாக இருக்கும்போது மனிதன் மந்தபுத்தியுள்ளவனாக இருக்கிறான். எனவே பலாத்காரமாக பிரம்மத்தை ஆத்மாவாக அறிவதற்கு சக்தியற்றவனாக இருக்கிறான்.
 
சிரத்தையோடு கூடியவனாயும் வேதாந்த சாஸ்திரத்தை கேட்பவனாகவும் இருக்கும் ஒருவனால் பிரம்மத்தை பரோக்ஷமாக மட்டும் சுலபமாக அறிந்து கொள்ள முடியும். பிரம்மனை அபரோக்ஷமாக த்வைதமாக பார்க்கின்ற அறிவானது பரோக்ஷமான அத்வைத அறிவைக் கெடுத்துவிடாது.
 
அபரோக்ஷமாயுள்ள கல் என்ற புத்தியானது பரோக்ஷமான ஈஸ்வரனை அறிந்திருப்பதை கெடுத்துவிடாது. விக்கிரங்கள் முதலியவைகளில் விஷ்ணு இருக்கின்றார் என்ற அறிவை யாரும் மறுக்கமாட்டார்கள்.
 
ஈஸ்வரனைப் பற்றிய பரோக்ஷமான அறிவை அடைவதற்கு அதை உபதேசிக்கும் சாஸ்திரத்தில் சிரத்தை இருக்க வேண்டும். சிரத்தையற்றவனுக்கு பரோக்ஷமாக ஏற்பட்டுவிடும் என்று சொல்ல முடியாது. சிரத்தை உள்ளவனுக்குத்தான் வேதசம்பந்தமான எல்லா விஷயங்களிலும் தகுதியிருப்பதனால் பரோக்ஷ ஞானம் ஏற்பட்டுவிடும்.
 
அபரோக்ஷ ஞானமடைவதற்கு விசாரம் செய்ய வேண்டுமென்று சொல்லப்பட்டது. பரோக்ஷ ஞானத்திற்கு விசாரம் தேவையில்லை என்று சொல்லப்படுகிறது. சாதாரணமாக எதாவது ஒன்றை ஒருமுறை சொன்னாலே அறிவு ஏற்பட்டுவிடும். இது பரோக்ஷ ஞானம் என்பதற்கு பொருந்தும். உத்தம அதிகாரியாக இருக்கின்ற சாதகர்களுக்கு அபரோக்ஷ ஞானம் ஒருமுறை கேட்ட உபதேசத்திலிருந்து அறிவை அடைந்து விட முடியும். மற்றவர்களுக்கு விசாரத்தின் மூலமாகத்தான் அடைய முடியும். சரியான சாஸ்திர அறிவையுடைய பெரியோர்கள் ஒரு தடவை உபதேசம் செய்வதனாலேயே பரோக்ஷ ஞானம் ஏற்பட்டுவிடும். இதிலிருந்து பரோக்ஷ ஞானம் அடைவதற்கு விசாரம் தேவையில்லை என்பதை உணர்த்தப்பட்டது. விஷ்ணு பகவானின் உருவமானது இப்படிபட்டது என்று உபதேசம் செய்தால் இதற்கு விசாரம் செய்ய வேண்டிய அவசியமில்லை.
 
விதவிதமான கர்மங்களையும், உபாஸனைகளையும் அனுஷ்டானம் செய்யும் முறையானது நிர்ணயம் செய்யாததனால் விசாரம் செய்யப்பட வேண்டும். வேதத்தில் விதவிதமான சாகைகளில் கர்மங்களுககும், உபாஸனைகளுக்கும் உரிய மந்திரங்கள் நிறைந்து இருக்கின்றன. எந்த மனிதனாலும் அவைகளை தானே விசாரம் செய்து நிர்ணயம் செய்துவிட முடியும். அவைகள் ஏற்கனவே விசாரம் செய்து வைத்திருப்பதால் அதை மிக சிரத்தையுடன் கடைப்பிடித்தாலே போதும் என்று கூறப்படுகிறது.
 
கர்மகாண்டத்தில் உபாஸனையும், கர்மங்களும் எப்படி செய்ய வேண்டும் என்று கல்ப சூத்திரங்களில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவைகளில் நம்பிக்கை உள்ள ஆஸ்திகன் விசாரம் செய்ய வேண்டிய அவசியமில்லாமலே உடனே அனுஷ்டிக்க முடியும். விதவிதமான உபாஸனைகளை கடைப்பிடிக்கும் முறைகளை ரிஷிகளால் எழுதப்பட்ட நூல்களில் கூறப்பட்டிருக்கின்றன. விசாரம் செய்ய சக்தியற்ற மனிதர்கள் அவைகளை குருவிடமிருந்து கேட்டறிந்து உபாஸிக்கிறார்கள். கர்மகாண்டத்திலுள்ள வேத வாக்கியங்களை அர்த்தத்தை நிர்ணயம் செய்ய நினைக்கும் மனிதன் விசாரம் செய்யட்டும். ரிஷிகளின் உபதேசத்தினால் மட்டும் அனுஷ்டானம் செய்ய முடியும். விசாரம் செய்ய வேண்டிய அவசியமில்லை.
 
பிரம்மத்தை பற்றிய அபரோக்ஷ ஞானத்தை நேரிடையாக ஞானத்தை விசாரம் செய்யாமல் வேதாந்த குருவினுடைய உபதேசத்தால் மட்டும் மனிதர்களுக்கு ஏற்படாது.
 
பரோக்ஷ ஞானம் ஏற்படவிடாமல் சிரத்தையின்மை தடையாக இருக்கிறது. வேறெதும் காரணமாக இருப்பதில்லை. அபரோக்ஷ ஞானம் ஏற்படவிடாமல் தடையாக இருப்பது விசாரம் செய்யாமல் இருப்பதாகும். பிரம்மத்தை அபரோக்ஷமாக விசாரம் செய்தும் அறிய முடியவில்லை என்றால் மீண்டும் மீண்டும் விசாரம் செய்து கொண்டேயிருக்க வேண்டும். ஏனென்றால் விசாரம் அபரோக்ஷ தன்மையிலே முடிவடைய வேண்டும் என்ற நிலை இருப்பதால் விசாரம் செய்தேயாக வேண்டும். மரணம் அடையும் வரையில் ஆத்ம தத்துவத்தை விசாரம் செய்தும் அபரோக்ஷ ஞானத்தைத அடையவில்லையானால் ஞானத்திற்கு தடையாக இருப்பது நீங்கியவுடன் மறுப்பிறவியில் நிச்சயம் அடைவான்.
 
இந்த லோகத்திலோ அடுத்த பிறவியிலோ தடைகள் நீங்கப்பெற்று ஞானத்தை அடையலாம் என்று வியாச பகவான் பிரம்மசூத்திரத்தில் கூறியிருக்கிறார். கர்ப்பத்தில் இருந்து கொண்டிருக்கும் போதே வாமதேவர் நான் பூரணமானவன் என்ற ஆத்ம தத்துவத்தை அறிந்து கொண்டார். முற்பிறவியில் செய்த விசாரத்தினால் அவரால் இந்த நிலையிலும் அறிந்து கொள்ள முடிந்தது. வேத அத்யயனம் முதலியவைகளில் எப்படியோ அப்படியேதான் இதிலும் இருக்கின்றது.
 
பலதடவை அத்யயனம் செய்திருந்தும் கூட எப்பொழுதாவது ஞாபகப்படுத்தி பார்க்கும் போது அது நினைவுக்கு வராமலிருந்தாலும் கூட மறுபடியும் அத்யயனம் செய்யாமலே பின் ஒருநாள் முன் அத்யயனம் செய்திருந்ததை வைத்து மனிதன் நினைவுக்கு கொண்டு வந்துவிடுவான்.
 
பயிர், கர்ப்பம் முதலியவைகள் எப்படி காலத்தினால் பக்குவமடைகின்றனவோ அதுபோல ஆத்மவிசாரம் கூட மெதுவாக காலத்தினால் பக்குவமடைந்து பலனைக் கொடுக்கும். திரும்ப திரும்ப விசாரம் செய்தாலும் கூட மூன்றுவிதமான தடைகளால் தத்துவத்தை அறிய முடிவதில்லை என்ற விஷயம் வார்த்திகத்தில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. அந்த ஞானம் எப்படி வரும் என்றால் தடைகள் நீங்கும்போது வந்துவிடும். இந்த தடைகளானது முன்னேயுள்ளது. வரப்போகின்றவைகள், இப்பொழுது இருந்து கொண்டிருப்பவைகள் என்று மூன்றுவிதமாக இருக்கின்றது.
 
வேதத்தின் அர்த்தத்தையும், வேதத்தையும் அறிந்தவர்களாலும் கூட தடைகள் இருப்பதனால் மோட்சத்தை அடைவதில்லை. ஒரு; உதாரணத்தின் மூலம் இதை தெளிவாக எடுத்துக் காட்டப்படுகிறது. தன் வீட்டின் ஒரு அறையில் உள்ள தரைக்கு கீழே தங்கப்புதையல் இருப்பதை அறியாமல் அதன் மேலேயே நடந்து கொண்டு தன்னை ஏழை என்று ஒருவன் நினைத்து கொண்டிருப்பது போல, நமக்குள்ளே இருக்கும் ஆனந்தமயமான ஆத்மஞானத்தை அடையாமல் சம்சாரத்தில் உழன்று துன்புறுகிறோம் என்று இந்த உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்.
 
முன்பு மனைவியின் மீது வைத்திருந்த அன்பாகிய பிரதிபந்தத்தினால் சந்நியாஸி ஒருவருக்கு ஆத்ம தத்துவத்தை அறிந்து கொள்ள முடியவில்லை என்றவொரு கதை உலகத்தில் சொல்லப்பட்டு வருகிறது. குருவானவர் தன் மனைவியிடத்தில் வைத்திருக்கும் அன்பை அனுசரித்தே மனைவிக்கு ஆத்ம தத்துவத்தை உபதேசம் செய்தார். அதனால் அந்த சந்நியாசிக்கு இருந்த தடைகள் விலகிவிட்டபடியால் அவர் அறிய வேண்டியதை அறிந்து கொண்டார்.
 
  1. அதீத பிரதிபந்தம் -  மனிதர்கள், பொருட்கள் மீதுள்ள அதிகமான பற்று என்பது ஏற்கனவே இருக்கின்ற தடைகள்.
  2. வர்த்தமான பிரதிபந்தம் -   இப்பொழுது இருக்கின்ற தடைகள். இது நான்காக பிரிக்கப்பட்டிருக்கிறது. அவைகள்
2.1.  இப்போது ஏற்பட்டிருக்கும் விஷயங்கள், அனுபவிக்கின்ற பொருட்களின் மீதுள்ள       பற்று
2.2.  மந்தபுத்தியாக இருத்தல்
2.3.  வீண் தர்க்கம்
2.4.  தவறான சிந்தனையில் இருக்கின்ற பிடிவாதம்
ஆகியவைகளாகும்.

சம,தம முதலிய தகுதிகளை அடைவதன் மூலமாகவும், சிரவணம் போன்ற ஞானயோக சாதனங்களின் மூலம் அந்தந்த பலவீனத்திற்கு ஏற்ற சாதனத்தை பயன்படுத்துவதன் மூலம் இந்த பிரதிபந்தம் நீக்கப்பட்டு விட்டால், அதனால் பிரம்மமாயிருக்கும் தன்மையை அடைந்துவிடுவான்.
 
ஆகாமி பிரதிபந்தம் (பின்னால் ஏற்படப் போகும் தடைகள்) வாமதேவர் விஷயத்தில் ஒரு ஜன்மாவில் கழிந்து விட்டது. அதேபோல ஜடபரதர் என்ற ஞானிக்கு மூன்று ஜன்மாக்களால் கழிந்துவிட்டது என்று சொல்லப்பட்டு இருக்கிறது.
 
பகவத்கீதையில் (6.40 - 6.44) யோகப்பிரஷ்டனுக்கு பலபிறவிகள் சென்று தடைகள் விலகுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் விசாரம் பயனற்றது என்று ஆகிவிடாது.
 
யோகபிரஷ்டன் ஆத்ம தத்துவத்தை விசாரித்ததின் பலனாக புண்ணியம் செய்தவர்களின் உலகங்களை அடைந்து பிறகு தூய்மையான செல்வந்தர்களின் குடும்பத்தில் பிறப்பான். உலகபோகத்தில் ஆசை உள்ளவர்களாக இருந்தால் மீண்டும் மீண்டும் பூலோகத்தில் நற்குடியில், செல்வந்தன் குடும்பத்தில் பிறப்பான்.
உலக போகப்பொருட்களில் ஆசையில்லாதவனாக இருப்பவன் பிரம்ம தத்துவத்தை விசாரம் செய்ததன் பலனாக புத்திசாலிகளாகவும் யோகிகளாகவும் உள்ள குலத்திலேயே பிறப்பான். விசாரத்தை தொடர்வதற்கேற்ற சூழ்நிலைகளுள்ள இடத்தில் பிறப்பார்கள். இதுமாதிரி பிறப்பவர்கள் மிகவும் குறைவு. இவ்வாறு அந்த யோகிகளின் குடும்பத்தில் பிறந்து முற்பிறவியில் சம்பாதிக்கப்பட்ட அறிவுடனே இருக்கிறான். அதைவிட மேலும் அதிகமாக அடைவதற்கு முயற்சிக்கின்றான். ஆகையால் இப்படிப்பட்ட நிலை அடைவது மிகவும் அரிது. முற்பிறவியில் செய்த அப்யாஸத்தினால் அவனுடைய வசத்தில்லாமல், கட்டுக்குள் இல்லாமல் ஆத்மதத்துவ விசாரத்தை செய்துகொண்டிருப்பான். இவ்விதம் பலபிறவிகளில் நன்கு சித்தியடைந்து பிறகு உத்தமமான கதியை அடைகிறான்.
 
இதுவரை இகலோகத்தில் வைராக்கியமில்லாமல் செய்யும் ஆத்ம விசாரம் பலனைக் கொடுக்காது என்று விளக்கிக் கூறியுள்ளார். அதேபோல பரலோகத்தின் மீது பற்றுள்ளவர்களுக்கும் ஆத்மவிசாரம் பலனைக் கொடுக்காது. பிரம்ம லோகத்தின் மீது அதிகமாக பற்றுக் கொண்டிருக்கும் போது அதை அடக்கிக் கொண்டு ஆத்மாவைப் பற்றிய விசாரம் செய்வதால் அவனால் அபரோக்ஷ ஆத்மஞானத்தை அடைய முடியாது.
 
உபநிஷத்துக்களினால் அடைந்த ஞானத்தினால் நன்கு உறுதி செய்யப்பட்ட விஷயத்தை உள்ளவர்கள், வேதாந்த சாஸ்திரத்தின் வாக்கியப்படி பிரம்மலோகத்தில் இருந்து கொண்டே முடிவில் பிரம்மாவோடு கூடவே மோட்சத்தை அடைகிறான். பலருக்கு இப்படிபட்ட உபநிஷத்தின் உபதேசத்தை விசாரம் செய்வதற்கு கூட கர்மவினையினால் தடை வரலாம். உபநிஷத்தை கேட்பதற்கு கூட வாய்ப்பு கிடைப்பதில்லை. என்ற கடோ உபநிஷத்தின் வாக்கியப்படி இதை புரிந்து கொள்ளலாம்.
 
இரண்டுவிதமான பிரதிபந்தங்களாக நமக்குள் இருக்கும் புத்தியின் புரிந்து கொள்ளும் சக்தியின் குறைவாக இருப்பதாலும், நுட்பமான ஆத்மவிசாரத்தை புரிந்து கொள்ளும் சக்தியில்லாமல் இருப்பதாலும் நமக்கு வெளியே இருக்கின்ற தடையான ஆத்மஞானத்தை உபதேசிக்கக்கூடிய சரியான குரு, சூழ்நிலை போன்றவைகள் கிடைக்காமல் இருப்பதாலும் விசாரத்தை செய்ய முடியாத போது நிர்குண பிரம்மத்தை உபாஸிக்க வேண்டும்.
 
நிர்குண பிரம்ம தத்தவத்தின் உபாஸனை சாத்தியமில்லை என்பது கிடையாது. சகுண பிரம்மத்தை எப்படி உபாஸனம் செய்கின்றோமோ அதேபோல இங்கேயும் ஒரேவிதமான எண்ணத்தை திரும்ப திரும்ப கொண்டு வந்து தியானிக்க முடியும்.
 
நிர்குண பிரம்மமானது வாக்குக்கும், மனதுக்கும் அறியப்படாதது, எட்டாதது. இப்படி இருப்பதால் இது உபாஸனைக்குரிய விஷயமில்ல என்று கூறினால், வாக்குக்கும், மனதுக்கும் எட்டாத இதையே அறிந்து கொள்ளவும் முடியாது. வாக்கு, மனது முதலியவற்றிற்கு விஷயமாகாமல் இருக்கின்ற தன்மையை உடையதாக இருக்கின்றது என்றுதான் ஒருவன் அறிகின்றான் என்று சொன்னால் அதேமாதிரி வாக்கு முதலியவற்றிற்கு எட்டாத தன்னையை உடையது என்று உபாஸனை செய்யட்டுமே. ஏன் முடியாது?
 
ஒருவேளை நிர்குண பிரம்மத்தை உபாஸித்தால் அதற்கு சகுண பிரம்ம தன்மை வந்துவிடும் என்று கூறினால், அதேமாதிரி நிர்குண பிரம்மத்தை அறிகிறேன் என்று கூறினாலும் சகுண தன்மை வந்துவிடுமல்லவா. லட்சண விருத்தியினால் அறியப்படும் தன்மையென்றால் லட்சணாவிருத்தியினால் குறிப்பிட்டதாகவே உபாஸிக்கட்டும்.
 
நீ அதையே பிரம்மமாக அறிந்து கொள், எதை உபாஸிக்கிறாயோ அதையல்ல என்ற வேதாந்த வாக்கியத்திலிருந்து பிரம்மத்தை உபாஸிக்கப்படும் தன்மை நிராகரிக்கப்பட்டிருக்கிறது. என்று கூறினால் அறியப்படுவதில் இருந்து அது வேறுதான் என்று அதே உபநிஷத்தில் சொல்லப்பட்டு இருப்பதால் அதற்கு அறியப்படும் தன்மையும் கிடையாது. வேதத்தில் சொல்லியிருக்கின்றபடியேதான் அது அறியத்தக்கது என்றால் அப்படியே வேதத்தில் சொல்லியிருக்கின்றபடியே உபாஸிக்கப்படட்டும்.
 
அறியப்படும் தன்மை உண்மையில்லையென்றால். உபாஸிக்கப்படும் தன்மையும் உண்மையல்ல என்று வைத்துக் கொள். புத்தி விருத்தியால் வியாபிக்கப்படுவது அறியப்படும் தன்மையென்றால் உபாஸிக்கப்படும் தன்மையிலும் இது சமானமே. உபாஸனையினாலும் புத்தி விருத்தியினால் வியாபிக்கும் தன்மையுண்டு. விருத்தி வியாப்தியும், பல வியாப்தியும் சேர்ந்திருக்கும் போதுதான் அறிவு அடையப்படும். வெறும் விருத்தி வியாப்தியினால் அறிவை அடைய முடியாது என்ற நியதிப்படி மேலே கூறப்பட்டுள்ளது.
 
உபாஸனையில் உங்களுக்கு ஏன் இவ்வளவு அபிமானம் இருக்கிறது என்று கேட்டால், இந்த உபாஸனை விஷயம் பல ஸ்ருதிகளில் காணப்படுவதால் அதில் பிரமாணமில்லையென்று சொல்ல முடியாது. உத்தர தாபனீய உபநிஷத்திலும், பிரஷ்ண உபநிஷத்திலும், கடோ உபநிஷத்திலும், மாண்டூக்ய உபநிஷத்திலும் இதுபோல இடங்களில் நிர்குண பிரம்மத்தினுடைய உபாஸனை கூறப்பட்டிருக்கிறது.
 
இந்த நிர்குண பிரம்ம உபாஸனையை செய்யும் முறையானது பஞசீகரணம் என்ற பிரகரணத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது. இந்த உபாஸனையானது ஞான சாதனம் என்று கூறலாம். இந்த நிர்குண பிரம்ம உபாஸனையை யாரும் பின்பற்றவில்லை என்பதால் இது சரியான முறையில்லையென்று ஆகிவிடாது.
 
இதைவிட சகுண பிரம்ம உபாஸனைகள் அதிக பலன் கொடுக்கும் என்று நினைத்துக் கொண்டு மற்றவர்களை வசம் செய்வது முதலான பலன்களை தரக்கூடிய மந்திரங்கள் மூடர்கள் ஜபம் செய்யட்டும். அவர்களை விட அதிமூடர்களாக இருப்பவர்கள் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையால் பயிர்தொழில், வியாபாரம் செய்வதில்
 
உபாஸனை ஒரே விதமாக இருப்பதால் எல்லா வேதாந்த உபநிஷத்துக்களில் உள்ள நிர்குண பிரம்ம குணங்களை இங்கு ஒன்று சேர்க்க வேண்டும். இந்த நிர்குண உபாஸனம் ஒரேயொருவிதமாகத்தான் இருக்கிறது. நிர்குண ஸ்வரூபத்தை விளக்குகின்ற எல்லா வாக்கியங்களையும் எடுத்துக் கொண்டு ஒன்று சேர்த்து உபாஸனை செய்ய வேண்டும். இதுவே குண உபஸம்ஹார நியாயம் என்று அழைக்கப்படுகிறது.
 
விதிமுறையில் சொல்லப்பட்டிருக்கும் ஆனந்தம் முதலான குணக்கூட்டங்களை ஒன்று சேர்க்க வேண்டும். ஆனந்தம் முதலியவை என்ற தொடங்கும் சூத்திரத்தில் வியாசபகவானால் வர்ணிக்கப்படுகிறது. நிஷேத முறையில் சொல்லப்பட்டிருக்கின்ற ஸ்தூலம் இல்லாதது முதலான குணக் கூட்டங்களை ஒன்று சேர்க்க வேண்டும். அவ்விதமே வியாசரால் அக்ஷரத்தில் த்வைத நிஷேத ஞானங்களுக்கு என்ற சூத்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. நிர்குண பிரம்மத்தினுடைய குணங்களுக்கு லட்சியார்த்தமாக வேண்டும்.
 
ஆனந்தம் போன்றவைகளாலும், ஸ்தூலமல்லாதது முதலியவைகளாலும் இங்கு நிர்குண பிரம்மத்தை லட்சியார்த்தமாக விளக்குகிறது. அந்த பிளவுபடாத, ஒன்றாகவுள்ள ஆத்மாவாக நானாக இருக்கிறேன் என்று இவ்விதம் முமூக்ஷூக்கள் உபாஸிக்க வேண்டும்.
 
ஞானத்திற்கும், உபாஸனைக்கும் இடையே உள்ள வேற்றுமை என்னவென்றால்  ஞானம் என்பது வஸ்து தந்திரம், உபாஸனம் என்பது கர்த்ரு தந்திரம். வஸ்து தந்திரம் என்பது வெளியே இருக்கின்ற அறியப்படுகின்ற பொருட்களின் ஆதாரம். இதுதான் மனதில் அடையப்படுகின்ற அறிவுக்கு காரணமாக இருக்கும். அறிபவனுக்கு இதில் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடையாது. கர்த்ரு தந்த்ரம் என்பது செய்பவனின் அடிப்படையில் உபாஸனை அமைகின்றது.
 
விசாரத்தினால் ஞானம் ஏற்படும். தனக்கு பிடிக்கவில்லை என்றாலும்; ஞானம் ஏற்படுவதை தடுக்க முடியாது. ஞானம் தோன்றியவுடனே இந்த சம்சாரத்தில் உள்ள அனைத்து உண்மைகளையும், உண்மைத்தன்மையையும் எரித்துவிடும். ஞானம் வந்த அளவினாலேயே செய்ய வேண்டியதையெல்லாம் செய்து முடித்து விட்டேன் என்ற நிலையான திருப்தியை அடைந்து ஜீவன் முக்தி நிலையை அடைந்து பிராரப்த கர்மபலனின் முடிவை எதிர்பார்த்துக கொண்டிருக்கிறான்.
 
உபாஸனைக்கு சிரத்தைதான் முக்கியமாக தேவைப்படுகிறது. நிர்குணத்தை அதிகமாக விசாரம் செய்யக்கூடாது. ஒரேயொரு எண்ணத்தை தொடர்ந்து தியானித்துக் கொண்டிருக்க வேண்டும். இவை மூன்றும்தான் இந்த தியானத்துக்கு தேவையான தகுதிகள். குருவினுடைய உபதேசத்தில் முழு நம்பிக்கை வைத்து அதே சமயம் ஆத்ம தத்துவத்தை போதிய அளவுக்கு விசாரம் செய்யாமலிருந்து கொண்டு வேறு எண்ணங்கள் குறுக்கிடாமல், அந்த தத்துவம் எவ்விதம் உபதேசத்தினால் கிரகிக்கப்பட்டதோ அவ்வித மனோ விருத்திகளுடன் சிந்திக்க வேண்டும்.
 
எப்பொழுது சிந்திக்கப்படும் வஸ்துவின் ஸ்வரூபம் தானேயென்று ஞானம் வருகின்றதோ அதுவரை தியானம் செய்ய வேண்டும். ஞானம் ஏற்படவில்லை என்றால் மரணம் அடையும்வரை அவ்விதமாகவே தியானம் செய்து கொண்டுவர வேண்டும். பிச்சையெடுத்துக் கொண்டிருக்கின்ற பிரம்மச்சாரி உபாஸகன் பிராணனை ஸம்வர்க்க ரூபமாக மனதில் உபாஸனை செய்து கொண்டே பிச்சையெடுக்கிறான். உபாஸனை என்பது விருப்பப்படி செய்யலாம், செய்யாமலும் இருக்கலாம் அல்லது வேறுவிதமாக செய்ய முடியும். ஆகவே எப்பொழுதும் எண்ணத்தின் தொடர்ச்சியானது செய்து கொண்டேயிருக்க வேண்டும். அத்வைத வாசனையை வளர்த்துக் கொள்ள இவ்வாறு செய்ய வேண்டும்.
 
வேதத்ததை முழுகவனத்துடன் அத்யயனம் செய்பவனும் திடமான வாசனை ஏற்பட்டு இருப்பதால் கனவில் கூட வேதம் சொல்லிக் கொண்டிருப்பான். ஜபம் செய்து கொண்டிருப்பவர்களுக்கும் கனவில் ஜபம் செய்து கொண்டிருப்பார். அதுபோல நிர்குண தியானம் செய்பவரும் கூட தியான வாசனையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உபாஸனைக்கு விரோதமான எண்ணத்தை விட்டுவிட்டு இடைவிடாமல் தியானம் செய்கிறவன் வாசனையின் பலத்தினால் கனவு முதலானதில் கூட தியானத்ததையே செய்து கொண்டிருப்பான்.
 
பரபுருஷனிடம் அதிக ஆசை வைத்திருக்கும் பெண் வீட்டுக் காரியத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும், அவன் நினைவாகவே இருப்பதைப் போல தன்னுடைய பிராரப்தத்தை அனுபவித்துக் கொண்டிருந்த போதிலும் விஷயத்தின் மீது உள்ள ஆசையின் பலத்தினால் எப்பொழுதும் ஆசைக்குரிய பொருளை தியானம் செய்து கொண்டிருக்க முடியும். இதில் சந்தேகமே கிடையாது.  
 
இவ்விதமே நிர்குண உபாஸனை செய்து கொண்டிருந்தாலும் உலக சம்பந்தமான காரியத்தை அரைகுறையாகத்தான் செய்வான். தத்துவமறிந்தவனோ இந்த ஞானத்திற்கு உலக காரியம் விரோதம் இல்லாததினால் உலக காரியத்தை நன்றாகவே செய்வான். இந்த பிரபஞ்சமானது மித்யா என்றும், ஆத்மா சைதன்ய ஸ்வரூபத்துடன் கூடியது என்ற அறிவுடனும் இருக்கையில் உலக விவகாரம் செய்கின்ற ஞானிக்கு எது விரோதமாக இருக்கும்.
 
விவகாரம் ஜகத்தினுடைய உண்மையாக இருக்கின்ற தன்மை தேவையில்லை. அதேபோல ஆத்மா ஜபம் என்ற தன்மையும் தேவையில்லை. ஆனால் விவகாரத்திற்கு தேவையான பொருட்கள், சாதனங்கள் மட்டும் தேவையாக இருக்கிறது. விவகாரம் செய்ய வேண்டியதற்கான சாதனங்கள் மனம், வாக்கு, சரீரம், அவைகளுக்கு வெளியிலுள்ள பொருட்கள் ஆகும். ஆத்ம தத்துவத்தை அறிந்த ஞானியானவன் இவைகளை நாசம் செய்வதில்லை. எனவே அவனுக்கு ஏன் விவகாரம் செய்யக்கூடாது.
 
ஞானி மனதை அழித்துவிடுகின்றான் என்று சொன்னால் அப்படி செய்பவன் தியானம் செய்பவை தவிர வேறெதுவும் அவனுக்கு கிடையாதது போலாகிவிடும். பானையின் தத்துவத்தை அறிந்திருப்பவன் மனதை, புத்தியை நாசமடைய செய்வதில்லை. பானையினுடைய தத்துவமான அதிலுள்ள களிமண் சத்யம், நாம ரூபம் மித்யா என்கின்ற அறிவை அடைந்திருப்பான்.
 
பிரமாணத்தை பயன்படுத்தியவுடன் பானையானது பிரகாசிக்குமேயானால் தானே பிரகாசிக்கின்ற இந்த ஆத்மா குடத்தைப் போலக்கூடவா பிரகாசிக்காது? ஆத்மாவின் ஸ்வயம் பிரகாசத்தன்மையினால் என்ன பயன்? ஆத்ம தத்துவத்தை அறிவதென்றால் அது விஷயமாக புத்தியில் தோன்றுகின்ற விருத்தியோ நொடிக்கு நொடி நாசம் அடைகிறது என்ற இந்த நியாயம் குடம் முதலியவற்றிலும் பொருந்தி வரும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். குடம் முதலியதை தீர்மானமாக அறிந்தவுடன் அதனால் ஏற்பட்ட மனதில் வரும் எண்ணங்கள் அழிந்து போவது உண்மைதான் ஆனால் குடத்ததைப் பற்றிய அறிவை கொண்டுவர நினைத்தால் நினைவுக்கு கொண்டு வரமுடியும் என்று கூறினால் ஆத்மா விஷயத்திலும் இதே போலத்தான் சமமானதாக இருக்கிறது. அந்த ஆத்மாவை உறுதியாக அறிந்த பிறகு எப்பொழுது வேண்டுமோ அப்பொழுதே அதைப்பற்றி சொல்லவோ, நினைக்கவோ மேலும் தியானம் செய்யவோ தத்துவஞானி சக்தியுள்ளவனாக இருக்கிறான்.
 
உபாஸகனைப் போல ஞானியும் தியானம் செய்து கொண்டு உலக சம்பந்தப் பட்டதை மறப்பானாகில், அந்த மறதி தியானத்தினால்தான் தவிர அடைந்த ஞானத்தில் இருக்காது. ஞானிக்கு நிர்குண தியானம் செய்ய விரும்பினால் செய்யலாம். அவசியம் செய்தாக வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. ஆத்ம ஞானத்தை அடைந்து விட்டதாலேயே முக்தி அடைந்து விட்டதால் முக்திக்காக தியானம் செய்ய வேண்டியதில்லை. ஞானத்திலேதான் கைவல்யம் என்று வேதாந்த சாஸ்திரங்களில் பறை சாற்றப்படுகிறது. ஞானிக்கு விருப்பம் இருந்தால் ஆத்ம விஷயமாக பேசலாம், மனனம் செய்யலாம், தியானம் செய்யலாம் என்றிருப்பதால் அவன் பேசித்தான் ஆக வேண்டுமென்பது எப்படி கிடையாதோ அப்படியே தியான விஷயத்திலும் அவசியமென்பது கிடையாது.
 
ஞானியானவன் தியானம் செய்யவில்லையென்றால் அப்போது வெளி விஷயங்களில் செயல்பட ஆரம்பித்து விடுவதால் இவனுக்கு என்ன குறை வந்துவிடும். இப்படி ஞானி செயல்படுவதால் சாஸ்திரம் விதித்திருக்கின்ற இது செய்யலாம், இது செய்யக்கூடாது என்ற எல்லையை மீறும்படி ஏற்படும் என்று நிலை ஏற்பட்டுவிடும் என்ற கேள்விக்கே இடமில்லை. இந்த சாஸ்திர விதி ஞானிக்கு பொருந்தாது. யாருக்கு அனாத்மாக்களான வர்ணம், ஆசிரமம், வயது, விதவிதமான வாழ்க்கை முறையில் இருத்தல் முதலியவற்றில் அபிமானம் இருக்கின்றதோ. அவனுக்குத்தான் எல்லாவிதமான விதிகளும்(செய்ய வேண்டியது), நிஷேதங்களும்(செய்யக்கூடாதது) உண்டு. வர்ணம், ஆசிரமம் முதலியவைகள் மாயையினால் தேகத்தில் ஏற்றி வைக்கப்பட்டவைகள். இவைகள் ஞான ஸ்வரூபமான ஆத்மாவை சார்ந்ததில்லை. என்று ஞானத்தையும். தன்னை ஆத்ம ஸ்வரூபமாக கொண்டிருக்கின்ற உறுதியான எண்ணத்தையும் கொண்டவனாக இருக்கின்றான் ஞானி. எனவே தியானம் அல்லது செயல்கள் அவன் செய்யட்டும் அல்லது செய்யாமலிருக்கட்டும் மனதினால் எல்லா ஆசைகளையும் விட்டவனாக இருக்கின்ற முக்தன். மிகவும் உயர்ந்த ஞானத்தை உடையவன் இந்த முக்தன். அந்த ஞானிக்கு செயல் செய்யாமலிருந்தாலும், செய்து கொண்டிருந்தாலும் அதனால் எந்த பலனையும் அடைய மாட்டான். ஆத்ம ஞானத்தினால் மனமானது  வாசனைகளற்றதாக இருப்பதால் தியானத்தாலும், ஜபத்தாலும் எந்த பலனையும் அடைய மாட்டான்.
 
ஆத்மா எதனோடும் சேராது, எதவும் அதனோடு சேராது, அதற்கு வேறான அனைத்தும் இந்திரஜாலத்தைப் போல மித்யாவாக இருக்கிறது என்ற உறுதியான தீர்மானத்துடன் கூடின மனதில் எங்கிருந்த வாசனை வரும்? அதாவது இந்த ஞானமே வாசனைகள் அனைத்தையும் அழித்து விடுகின்றது. இவ்விதம் நாம் பார்க்கும் போது ஞானிக்கு எதிலும் எல்லைகள் எதுவும் கிடையாது. யாருக்கு செய்ய வேண்டியது என்று உண்டோ, எல்லையை விதிக்கப்பட்டிருக்கின்றதோ அவனுக்குத்தான் மீறி விடுவோமோ என்பதைப் பற்றி சந்தேகமே இருக்கும். குழந்தைக்கு விதி என்பது ஒன்றும் கிடையாததினால் அதை மீறுவது என்பது காணப்படுவதில்லை. விதி என்பது கிடையாதென்பது சமமாக இருக்கும் போது ஞானிக்கு மீறுவது என்பது கிடையாது.
 
குழந்தைக்கு ஒன்றும் தெரியாது என்றால் தத்துவ ஞானி அனைத்தையும் அறிந்தவனாக  இருக்கிறான். அரைகுறையாக அறிந்து வைத்திருப்பவனுக்குத்தான் எல்லா விதி, நிஷேங்களும் உண்டு. மற்ற இருவருக்கும் கிடையாது. யாரிடத்தில் சாபம் கொடுப்பதற்கும், அனுக்கிரகம் செய்யவும் சாமார்த்தியம் இருக்கிறதோ அவர்தான் ஆத்மஞானி என்று கூறினால் அப்படியல்ல. சாபம், அனுக்கிரகம் முதலான சக்திகள் செய்த தவத்தின் பலனாகத்தான் அடையப்படுகிறது.
 
வியாசர் போன்ற ஞானிகளுக்கும் தவத்தினால் சாபம் கொடுத்தல், அனுக்கிரகம் பண்ணுதல் போன்றவற்றை பலன்களாக அடைந்திருக்கிறார்கள். அவர்கள் அடைந்த ஞானத்திற்கு காரணம் சாபம் முதலிய சித்திகளை அடைய செய்யும் தவத்திற்கு வேறான தவத்தை செய்தால்தான் என்று அறிந்து கொள்ள வேண்டும். மேற்கூறிய இரண்டுவிதமான தவங்களையும் யார் நன்கு செய்திருக்கிறார்களோ அவருக்குத்தான் ஞானமும், சாபம் கொடுத்தல் போன்ற பலன்களை அடைந்திருப்பார்கள். ஏதோவொன்றை மட்டும் செய்தால் அதனுடைய பலனை மட்டும்தான் அடைவார்கள்.
 
சித்திகளை அடையாதவன், விதிகளெதுவும் இல்லாத ஞானியை சித்திகளைப் பெற்ற அக்ஞானிகளான தபஸ்விகளாலும் நிந்திக்கப்படுகிறான். எப்பொழுதும் உலக போகங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் மற்றவர்களால் நிந்திக்கப்படுகிறான். சித்திகளை அடைந்த அக்ஞானிகள் போகத்தினால் ஏற்படும் மகிழ்ச்சிக்காக பிட்சை பாத்திரம், உடைகள் போன்றவற்றை பாதுகாக்க வேண்டுமென்றால் வைராக்கிய குணத்தால் வருகின்ற பெருமையை ஏற்றுக் கொள்ள முடியாத இவர்களுடைய நியம அனுஷ்டானத்தோடு இருத்தலே வெகு ஆச்சரியம்.
 
சித்திகளை அடைந்த தபஸ்விகள் வர்ணாசிரம தர்மத்தை பின்பற்றி வாழ்கிறார்கள், அவர்களை குறைக்கூறி ஏளனம் செய்தால் அதனால் அவர்களுக்கு குறையொன்றும் இல்லை. இந்த தபஸ்விகள் தேகமே ஆத்மா என்ற எண்ணம் கொண்டவர்களாகவும்,  ஆசிரமத்தில் அபிமானம் உள்ளவர்களாகவும் இருந்து கொண்டு ஞானியை நிந்திக்கட்டும் அதனால் ஞானிக்கு எந்தக் குறையும் இல்லை. ஆகையால் இவ்விதமாக தத்துவஞானம் ஏற்படும்போது மனம், வாக்கு, தேகம், முதலிய கர்ம சாதனங்கள் இல்லாமல் போகவில்லை ஆதலால் ஞானியால் உலக விவகாரங்களையும், அரசாங்க செயல்களையும் நன்றாக செய்ய முடியும்.
 
ஜகத் மித்யா என்ற அறிவினால் அதில் இச்சை இருக்காது என்று சொன்னால், இல்லாமல் இருக்கட்டும். எப்படி பிராரப்தம் செயல்பட வைக்கின்றதோ அதன்படி ஞானி  செயல் செய்து கொண்டிருப்பான். தியானம் செய்து கொண்டோ உலக விவகாரங்களையோ செய்து கொண்டோ இருக்கலாம். உபாஸனை செய்பவன் எப்பொழுதும் தியானம் செய்து கொண்டேதான் இருக்க வேண்டும். ஏனென்றால் தான் பிரம்மன் என்கின்ற தன்மையானது தியானத்தினாலே ஏற்பட்டிருக்கிறது. எப்படி சிலையில் விஷ்ணுபகவான் என்று பாவித்துக் கொண்டிருக்கும் வரையில் தெய்வத்தன்மை இருக்கின்றதோ அதுபோல பிரம்மத்தன்மையும் இருக்கும்.
 
எது தியானத்தினால் உருவாக்கப்பட்டிருக்கின்றதோ அது தியானம் இல்லாத போது சென்றுவிடும். ஆனால் சத்யமான பிரம்ம ஸ்வரூபமாக இருக்கிறேன் என்ற பிரம்மனாகவிருக்கும் தன்மையானது ஆத்மஞானம் இல்லை என்றாலும் போகாது. ஆகையால் அறிதல் என்பது இருக்கின்ற பொருளை நினைவுப்படுத்துகிறதே தவிர எப்பொழுதும் இருக்கின்றனை உண்டு பண்ணுவதில்லை. பொருள் இருப்பதை காட்டிக் கொடுப்பதுதான் அறிவின் வேலை. அந்தப் பொருளை காட்டிக் கொடுப்பதற்கு எந்த காரணமும் இல்லை என்ற காரணத்தினால் மட்டும் சத்யமாக இருப்பது இல்லாமல் போய்விடாது அல்லவா?
 
பிரம்மனுக்கு உண்மையாக இருக்கும் தன்மை எப்பொழுதும் இருக்கின்றது என்று சொல்லும் உபாஸகனுக்கும் கூட பிரம்மனாக இருக்கும் தன்மையும் உண்மையாக இருக்கின்றது. அதேபோல பாமரன், உபாஸகன் ஆகிய இருவரிடத்திலும் அறியாமையினால் மோட்சம் இல்லாத நிலை ஒன்றாக இருந்தாலும் உபாஸகள் தியானம் செய்வது மேலானதுதான். பாமரர்கள் செயல்படுவதைக் காட்டிலும் பயனற்ற செயல்களை, தேவையற்ற செயல்களை செய்து கொண்டிருப்பதைக் காட்டிலும் பொறுப்புடன் கூடிய செயல்களை செய்து கொண்டிருப்பது மேலானது. கர்மயோகமானது மேலானது. இதைக் காட்டிலும் சகுணபிரம்ம உபாஸனை மேலானது. இதைவிட நிர்குண பிரம்ம உபாஸனை மேலானது. எவ்வளவுக்கெவ்வளவு ஞானத்திற்கருகில் இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு மேலான தன்மை அதிகப்படுகிறது. பிரம்ம ஞானமாகவே ஆகிவிடுகிறது. நிர்குண உபாஸனையானது கொஞ்ச கொஞ்சமாக நேரிடையாக பிரம்ம ஞானமாகவே ஆகிவிடுகிறது.
 
ஸம்வாதிபிரம்ம பலன் ஏற்படும்போது வாஸ்தவ ஞானமாக எப்படி ஏற்பட்டு விடுகிறதோ அப்படியே உபாஸனையும் நன்றாக பழுத்து விடுவதால் மோட்ச காலத்தில் பிரம்ம ஞானத்தை அடையவைத்து விடுகிறது. ஸம்வாதிபிரம்மத்தினால் செயல்பட மனிதனுக்கு வேறொரு பிரமாணத்தின் மூலமாக சரியான அறிவானது ஏற்படுகிறது. என்று கேட்டால் அவ்விதமாக உபாஸனையும் வேறு பிரமாணத்திற்கு காரணமாக ஆகட்டும்.
 
மூர்த்தி தியானம், மந்திர ஜபம் முதலானவற்றிற்கும் கூட காரணமாகும் தன்மை இருக்கிறதே என்றால் இருக்கட்டும். அப்படி இருந்தாலும் இந்த உபாஸனையில் ஆத்ம ஸாக்ஷாத்காரத்திற்கு அருகில் இருக்கிறது என்ற சிறப்பு இருக்கிறது. நிர்குண உபாஸனையானது கொஞ்ச கொஞ்சமாக பக்குவமானால் மனம் ஒருமுகப்பட்டு சமாதி நிலையை அடைவோம். அதிலிருந்து மனம் அமைதி அடையப் பெற்று மோட்சமானது சிரமமில்லாமல் கிடைத்துவிடுகிறது. சாதகனுக்கு மனம் பக்குவமடைந்து அமைதியடையும்போது அசங்கமான ஆத்மவஸ்து எஞ்சி நிற்கின்றது. மீண்டும் மீண்டும் இந்த ஆத்மாவை தியானம் செய்வதனால் உண்மையானது ஆத்மாவை பற்றிய சரியான ஞானமானது மகாவாக்கியத்தில் இருந்து ஏற்படும்.
 
மாற்றமடையாததும், எதனோடும் சம்பந்தப்படாததும், என்றும் இருப்பதும், தன்னை தானே விளக்கிக் கொண்டிருப்பதும், ஒன்றாக இருப்பதும், முழுமையானதாக  இருக்கின்றதுமான லட்சணங்களைக் கொண்ட ஆத்மா புத்தியில் எந்தவிதமான தடையுமில்லாமல் உடனே அறிவாக மாறும். இதில் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது.
 
நிர்குண உபாஸனையானது ஆத்மஞான பலனை அடைவதற்குதான் என்ற அம்ருதபிந்த முதலான உபநிஷத்துக்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இவ்விதம் அனுபவிக்கக்கூடிய பலனைக் கொடுக்கக்கூடிய (ஆத்மஞானத்தை அடைவதற்கான தகுதியை கொடுப்பதால்) காரணத்தால் மற்ற உபாஸனைகளை விட மேலானதாக இருக்கிறது.
 
இந்த நிர்குண பிரம்மன் உபாஸனையை விட்டுவிட்டு புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்லுதல், ஜபம் முதலியவைகளையே செய்து கொண்டிருக்கின்ற செயலானது கையிலிருக்கும் அன்னத்தை விட்டெறிந்துவிட்டு கையை நக்குவது போலாகும். நிர்குண உபாஸகர்களும், விசாரம் செய்யும் தகுதியிருக்கும் போது ஆத்ம விசாரத்தை விட்டுவிடுகின்ற விஷயத்தில் கூட இவ்விதம்தான். அதனால்தான் விசாரம் செய்ய முடியாத நிலையில் யோகமானது சொல்லப்பட்டிருக்கிறது.
 
பலவிதமான சஞ்சலத்தோடு கவலையோடு கூடிய மனமுள்ளவர்களுக்கு விசாரத்தினால் தத்துவஞானம் ஏற்படுவதில்லை. அதனால் அவர்களுக்கு யோகம்தான் முக்கியமான சாதனம். அந்த யோகத்தினால் புத்தியினுடைய புரிந்து கொள்ளாத தன்மையானது நீக்கப்படுகிறது. எந்த மோட்ச ஸ்தானமானது சாங்கிய யோகிகளால் அடையப்படுகிறதோ. அதே ஸ்தானமானது யோகிகளாலும் அடையப்படுகிறது. சாங்கியம், யோகம் இவையிரண்டும் முக்தி என்கின்ற ஒரே லட்சியத்தை அடைவதற்காகத்தான் என்று எவன் அறிகின்றானோ அவன்தான் சரியாக அறிகிறான்.
 
அந்த ஜகத்திற்கு காரணமான பிரம்மன் சாங்கிய ஞான சாதனங்களாலும், யோகத்தினாலும் அடையப்படுகிறது என்ற உபநிஷத்தில் கூறப்பட்டிருக்கிறது. சாங்கிய சாஸ்திரத்திலும், யோக சாஸ்திரத்திலும் எந்த கருத்தானது சொல்லப்பட்டு இருக்கிறதோ வேதாந்த சாஸ்திரத்திற்கு எதிராக உள்ளதோ அவையனைத்தும் பொய்யானவைகள்.
 
நிர்குண உபாஸமானது இந்தப் பிறவியில் முதிர்வடையாமல் போய்விட்டால் அத்தகையவனுக்கு மரண காலத்திலோ அல்லது மறுபிறவியிலோ அல்லது பிரம்ம லோகத்திலோ தத்துவ ஞானத்தை அறிந்து முக்தியை அடைவான் என்று சொல்லப்படுகிறது. எந்தெந்த தத்துவத்தை நினைத்துக் கொண்டு இறுதியில் மரணம் அடைந்து விடுகிறானோ அந்தந்த தத்துவத்தை மறுபிறவியில் அடைகிறான். எதை நினைத்துக் கொண்டிருக்கிறானோ அதையையே அனுசரித்துப் போகிறான் என்று சாஸ்திரம் சொல்லியிருக்கிறது. கடைசி காலத்தில் எந்த உண்மையானது அதிக காலம் தொடர்ந்து இருந்திருக்கின்றதோ அதன் அடிப்படையில் கண்டிப்பாக மறுபிறவியில் அமையும். அப்படியிருப்பதனால் சகுண உபாஸனை செய்பவருக்கு எப்படி கடைசிகாலத்தில் சகுண எண்ணம் மட்டும்தான் இருக்குமோ அப்படியே நிர்குண உபாஸனுக்கும் நிர்குண எண்ணம்தான் இருக்கும்.
 
நிர்குண உபாஸனையின் மூலம் அடையப்படுகின்ற அதை நித்யமாக நிர்குணமாக இருக்கும் தன்மை என்று பெயருக்காகதான் செய்யப்படுகிறது. உண்மையில் இது ஸம்வாதி பிரம்மத்தில் ஏற்படுவது. ஞானத்தினால்தான் மோட்சம் என்று சாஸ்திரம் சொல்லும்போது உபாஸனையில் மோட்சம் ஏற்படுமென்று எப்படி சொல்ல முடியும் என்றால் அந்த உபாஸனை ஞானத்தை உண்டு பண்ணி அதன் மூலமாகத்தான் மோட்சத்தைக் கொடுக்கிறது. இந்த உபாஸனத்திற்கு ஞானத்தை கொடுக்கும் தகுதியுண்டு. நிர்குண உபாஸனையின் சக்தியினால் தொன்றுதொட்டுள்ள அறியாமையை நீங்கி ஞானம் ஏற்படுகிறது. அனைத்துக்கும் மூலமான பிரம்மத்தை பற்றிய ஞானம் ஏற்படுகிறது. அவிமுக்தன் என்பவன் சிவனை உபாஸித்ததனால் தாரக பிரம்மனைப் பற்றிய ஞானம் ஏற்படுவது போல இது ஏற்படுத்தும்.
 
அவன் ஆசையற்றவனாகவும், எல்லா ஆசைகளையும் விட்டவனாகவும் ஆசைகளின் விதைகளெதுவும் இல்லாதவனாகவும், சரீரங்கள் இல்லாதவனாகவும், புலன்களில் அபிமானவற்றவனாகவும், புலன்களெதுவும் இல்லாதவனாகவும், சம்சாரமற்ற நிலையான பயமற்ற நிலையை அடைகிறான் என்றும் தாபனீய உபநிஷத்தில் முக்தனாக இருக்கும் தன்மையை பலனாக சொல்லப்பட்டிருக்கிறது.
 
உபாஸனையினுடைய சக்தியின் பலனாக தத்துவ ஞானமானது இறுதியில் ஏற்படுகின்றது. ஆகையால் மோட்சத்தை அடைவதற்கு ஞானத்தை தவிர வேறு வழி கிடையாது. இவ்வாறு சாஸ்திரமானது எவ்விதத்திலும் வேறுபடவில்லை. ஆசையற்ற நிர்குண உபாஸனத்தின் பலனாக மோட்சம் கிடைக்கிறது. என்று தாபனீய உபநிஷத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. சகாம, வைராக்கியமற்ற உபாஸனை செய்வதன் பலனாக பிரம்மலோகத்தை அடையப்படுகிறது என்று பிரஸ்ன உபநிஷத்தில் கூறப்பட்டிருக்கிறது.
 
யாரொருவர் மூன்று மாத்திரைகளுடன் கூடிய பிரணவத்தை பிரம்மமாக உபாஸிக்கிறாரோ அவர் பிரம்மலோத்தை அடைகிறார். அங்கே ஹிரண்யகர்ப்பரை விட மேலானவராக உள்ள பரபிரம்மத்தை நேரில் அடைகிறார்.
 
வியாச பகவான் தன்னுடைய பிரம்ம சூத்திரத்தில் அப்ரதீக என்ற அதிகரணத்தில் எதை ஒருவன் தியானம் செய்கிறானோ அதுவாகவே ஆகிவிடுகிறான் என்ற நியாயம் இருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆகையால் வைராக்கியமற்ற ஆசையில்லாமல் உபாஸனை செய்பவருக்கு பிரம்மலோகம் பலனாக சொல்லப்பட்டிருக்கிறது. நிர்குண உபாஸனையின் சக்தயினால் பிரம்மலோகத்தை அடைந்து அங்கே ஆத்ம தத்துவத்தை நேரிடையாக அடைகின்றார். இவர் மறுபடியும் இகலோகத்திற்கு திரும்பி வருவது கிடையாது. பிரம்மாவின் கல்பத்தின் முடிவில் அங்கேயிருந்தே மோட்சத்தை அடைந்து விடுகிறார்.
 
வேதத்தில் சொல்லப்படுகின்ற பிரணவ உபாஸனைகள் பெரும்பாலும் நிர்குண பிரம்ம உபாஸனைதான். சில இடங்களில் இந்த ஓங்கார உபாஸனைக்கு சகுணத் தன்மையும் சொல்லப்பட்டு இருக்கிறது.
 
கேள்வி கேட்ட சத்யகாமர் என்கின்ற சீடனுக்கு பிப்பலாதர் என்ற குருவால், ஓங்காரமென்பது பரபிரம்ம ரூபமாகவும், அபரபிரம்மரூபமாகவும் நன்கு விளக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஓங்காரத்தை ஆலம்பனமாக தியானித்து எவன் எதை விரும்புகின்றானோ அவனுக்கு அது கிடைக்கும். என்று யமதர்மராஜா நசிகேதுவுக்கு ஆத்ம தத்துவத்தை உபதேசிக்கும் போது இவ்வாறு கூறியிருக்கிறார்.
 
நிர்குண பிரம்மத்தை நன்றாக உபாஸிக்கிறவனுக்கு இப்பொழுதே, இங்கேயே அல்லது மரண காலத்திலோ அல்லது பிரம்மலோகத்தில் பிரம்மத்தை நேரிடையாக அறிந்து கொள்வான்.
 
இதுவரை சொல்லிய விஷயமானது ஆத்மபுராணம் என்ற புராணத்திலும் கூட மிகத் தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. விசாரம் செய்ய சக்தியில்லாதவன் ஆத்மாவை எப்பொழுதும் இடைவிடாமல் முழுமுயற்சியுடன் உபாஸிக்க வேண்டும் என்று ஆத்மகீதையில் நன்கு சொல்லப்பட்டிருக்கிறது.
 
ஆத்மாகிய என்னை நேரிடையாக புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும் சந்தேகம் இல்லாமல் முழுமையான சிரத்தையுடன் என்னையே தியானிக்க வேண்டும். அவ்விதம் தியானம் செய்து வந்தால் நாளடைவில் நான் அவசியமாக அனுபவத்திற்கு விஷயமாக புரிந்து கொள்பவனாக ஆகிவிடுவான்.
 
பூமிக்கு அடியிலுள்ள புதையலை அடைவதற்கு எப்படி தோண்டுவதை தவிர வேறு வழி கிடையாதோ அதுபோல என்னை அடைவதற்கு தன்னுடைய ஸ்வரூபத்தை விசாரம் செய்வதை தவிர வேறு வழி கிடையாது. தேகமாகிற கல்லை, மண்ணை அப்புறப்படுத்திவிட்டு பிறகு புத்தியாகிற கடப்பாரையால் மனதாகின்ற பூமியை பல தடவை தோண்டி புதையலாகிற என்னை மனிதன் எடுத்துக் கொள்ள வேண்டும். தேக அபிமானத்தை விட்டுவிட்டு, சரீரத்தில் வைத்திருக்கும் ராக துவேஷங்கள் அனைத்தையும் நீக்கிவிட்டு புத்தியை கொண்டு ஆத்மாவை மனதில் விசாரம் செய்து ஆத்மாவை அடைய வேண்டும்.
 
அனுபவம் இல்லாது போனாலும் ஆத்மஞானம் இல்லாத போதிலும் நான் பிரம்மன் என்று தியானம் செய்ய வேண்டும். பொதுவாக தியானத்தினாலே இல்லாததைக் கூட அடையப்படுகிறது. அப்படியிருக்கும் போது எப்பொழுதும் அடையப்பட்டு இருக்கின்ற பிரம்மன் அடையப்படும் என்று சொல்லவும் வேண்டுமோ!
 
தியானத்தினால் நாளுக்கு நாள் அனாத்மாவை, சரீரத்திலிருந்தும் உலக புலனுகர் போகப் பொருட்களிலுள்ள பற்றையும் தகர்த்தெறிந்து விடுகின்ற பலனை பார்த்துக் கொண்டு இருப்பவன் கூட தியானம் செய்யவில்லை என்றால் அவனைவிட முட்டாளாக வேறு யார் இருக்க முடியும். மனிதனாக பிறந்தும் மனிதனுக்கு இருக்க வேண்டிய அறிவில்லாதவனாக மிருகம் போலிருக்கிறான் என்று இதனால் அறிவுறுத்தப்படுகிறது.
 
தியானத்தின் மூலமாக தேகத்திலுள்ள அபிமானத்தை விட்டுவிட்டு இரண்டற்றதான ஆத்மாவான தன்னை அறிந்து மரணத்தின் கூடிய மனிதன்(சாதகன்) மரணமற்றவனாக ஆகி இங்கேயே பிரம்மத்தை அடைகின்றான், பிரம்மனாகவே ஆகிவிடுகிறான்.
 
இந்த தியானதீபம் என்கின்ற அத்தியாயத்தை நன்கு படித்து ஆராய்ந்து தெளிந்த அறிவை யார் அடைகின்றானோ அவன் சந்தேகத்திலிருந்து விடுவிக்கபட்டவனாக இடைவிடாமல் பிரம்மத்தை தியானம் செய்வான்.
 
----ooo000ooo----

A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...