பஞ்சதசி
அத்தியாயம்-2
பஞ்சமகாபூத விவேகம்
சாந்தோக்ய உபநிஷத்தில் உள்ள 6.2.1 ஸ்லோகத்தின் பொருள்தான் இதில் விரிவாக
விளக்கப்படுகிறது.
எந்தவொன்று ஸத்தாகவும், ஒன்றாகவும் இருப்பதாக கேட்கப்பட்டதோ, அந்தவொன்றை
பஞ்சபூதங்களை பிரித்துப் பார்ப்பதினால் புரிந்து கொள்ள
முடியும். ஐந்து பூதங்களை விசாரிப்பதன்
மூலமாக பிரித்தறியப்படுகிறது.
சாந்தோக்ய உபநிஷத் ஸ்லோகம் 6.2.1
பிரியமானவனே! இந்த ஜகத் தோன்றுவதற்கு முன்னே ஸத் மட்டும் இரண்டற்றதாக ஒன்றாகவே இருந்தது. இந்த உபநிஷத் வாக்கியத்தை புரிந்து
கொள்வதற்கு ஏன் பஞ்சபூதத்தைப் பற்றி விசாரம் செய்து அறிந்து கொள்ள வேண்டும்?
இங்கு சொல்லப்பட்ட ஸத் புலன்களுக்கு விஷயமாக இல்லாததால் அதை அறிந்து கொள்ள முடியாது. பிரத்யக்ஷ பிரமாணத்தாலும், அனுமானத்தாலும் புரிந்து கொள்ள முடியாது. ஸத்தின் மீது எதையாவது ஏற்றி வைக்கப்பட்டிருந்தால் அவைகளின் துணைக்கொண்டு அவைகளுக்கு ஆதாரமாக இருக்கின்ற ஸத்தை அறிந்து கொள்ள முடியும். இந்த ஐந்து பூதங்களின் விசாரம் செய்தோமானால் அதை நீக்கி ஸத்தை புரிந்து கொள்ள முடியும்.
ஆகாசம், வாயு, அக்னி, நீர், நிலம் ஆகியவற்றின் குணங்களாக வரிசை கிரமமாக சப்தம், தொடுதல், உருவம், சுவை, வாசனை ஆகியவைகள் இருக்கின்றது. இந்த குணத்தின் அடிப்படையில் வேற்றுமைகள் இருக்கிறது. மாயை இந்த குணங்களை எடுத்துக் கொண்டு ஐந்து பூதங்களாக தோற்றமளிக்கிறது. பூதங்களில் குணம் அதிகமாகும் போது ஸ்தூலமாகிறது. ஆகாசத்தில் இருக்கும் ஒரு குணம், வாயுவில் இருக்கும் தொடுதல் என்கின்ற குணத்தோடு சேர்ந்து வாயுவில் இரண்டு குணமாகிறது. வாயுவிலுள்ள இரண்டு குணங்களோடு அக்னியின் ஒரு குணத்தோடு சேர்ந்து அக்னியில் மூன்று குணமாகிறது. அக்னியின் மூன்று குணங்களும் நீரின் ஒரு குணத்தோடு சேர்ந்து நீரில் நான்கு குணமாகிறது. நீரிலுள்ள நான்கு குணங்களும் நிலத்தின் ஒரு குணத்தோடு சேர்ந்து நிலத்தில் ஐந்து குணங்களாகின்றது.
ஆகாசத்திலிருக்கின்ற சப்தமானது எதிரொலி மூலமாக அறியப்படுகிறது. வாயுவில் உஸ் என்ற சப்தமும், உஷ்ணமில்லாமல், குளுமையும் இல்லாத ஸ்பர்சமும் அறியப்படுகிறது. நெருப்பில் புகு, புகு என்ற சப்தமும், சூடாயிருக்கின்ற ஸ்பர்சமும், பிரகாசமாயிருக்கும் ரூபம், நீரில் புலு.புலு என்ற சப்தமும், குளிர்ந்த ஸ்பர்சமும், நெருப்பு ரூபமும், இனிப்பான சுவையும் அறியப்படுகிறது. பூமியில் கடா,கடா என்ற சப்தமும், கடினமாயிருக்கும் ஸ்பர்சமும், நீலம் போன்ற விதவிதமான ரூபங்கள், இனிப்பம், புளிப்பும் முதலிய சுவையும், நல்ல வாசனை, கெட்ட வாசனை ஆகிய இரண்டு விதமான குணங்களும் அறியப்படுகிறது. இந்த பூதங்களில் உள்ள குணங்கள் எல்லாம் தெளிவாக விளக்கப்பட்டது. காது, தோல், கண், நாக்கு, மூக்கு இவைகள் ஐந்தும் ஞானேந்திரியங்களாகும்.
ஆகாசம் - காது - சப்தம் - கேட்கும் சக்தி
வாயு - தோல் - தொடுதல் - தொட்டுணரும் சக்தி
அக்னி - கண்கள் - உருவம் - பார்க்கும்
சக்தி
நீர் - நாக்கு - சுவை - சுவைக்கும் சக்தி
நிலம் - மூக்கு - மணம் - நுகரும் சக்தி
எந்த இந்திரியம் எந்த பூதத்திடமிருந்து தோன்றியதோ அந்த பூதத்தின விசேஷ குணத்தைத்தான் கிரகிக்க முடியும். ஞானேந்திரியங்கள் சுபாவமாக வெளி விஷயங்களை நாடித்தான் செல்வதாக படைக்கப்பட்டிருக்கிறது. இந்திரியங்களால் இருப்பதை அனுமானம் மூலமாகத்தான் அறிந்து கொள்ள முடியும்.
இந்த ஐந்து ஞானேந்திரியங்கள் காது முதலிய கோளகங்களில் வீற்றிருந்து செயல்படுகின்றன. சப்தம் முதலியவைகளை விஷயங்களாக கிரகிக்கின்றன. இவைகள் சூட்சுமமாக இருக்கின்ற காரணத்தால் அதனுடைய காரியத்தின் துணைக் கொண்டு அதன் இருப்பபை அறிந்து கொள்ள முடியும். இவைகள் இயற்கையாக வெளி விஷயங்களை நோக்கி ஓடுகின்றது.
இந்த ஞானேந்திரியங்கள் உடலுக்குள்ளே உள்ள விஷயங்களையும் கிரகிக்கின்றன. காதை மூடிக் கொண்டு பார்த்தால் உள்ளேயிருக்கும் சப்தத்தை கேட்க முடியும். பிராண வாயுவின் சப்தமும், ஜடாக்னியின் சப்தமும் கேட்கலாம். நீரை குடிக்கும் போதும், உணவை சாப்பிடும் போதும் உள்ளேயிருக்கும் ஸ்பரிசம் உணரப்படுகிறது. கண்ணை மூடிக்கொண்டால் உள்ளேயிருக்கும் இருளை பார்க்கிறோம். சாப்பிட்டு விட்டு ஏப்பம் விடும்போது மணமும், சுவையும் அறியப்படுகிறது. இதிலிருந்து ஞானேந்திரியங்கள் உள்விஷயங்களையும் கிரகிக்கின்றது என்பதை புரிந்து கொள்ளலாம்.
ஸ்லோகம்-10
பேசுதல், எடுத்தல், நடத்தல், மலம் கழித்தல், சுகத்தை அனுபவித்தல் போன்ற ஐந்து செயல்களுக்குள் இந்த செயல்களைத் தவிர உள்ள அனைத்து செயல்களும் அடங்கிவிடும். விவசாயம், வியாபாரம், சேவை செய்தல் போன்ற செயல்களும் இவை ஐந்துக்குள் அடங்கிவிடும்.
வாய், கைகள், கால்கள், குதம், உபஸ்தம் என்கின்ற கர்மேந்திரியங்களால் மேற்கூறிய அனைத்து செயல்கள் வெளிப்படுகின்றன. இவைகள் வாய் முதலிய கோளகங்களில் இருந்து கொண்டு செயல்படுகின்றன. மனம், புத்தி, சித்தம், அகங்காரம் இவை நான்கும் சேர்ந்ததே அந்தக்கரணம் என்று அழைக்கப்படுகிறது. இதுவே ஞானேந்திரியங்களுக்கும், கர்மேந்திரியங்களுக்கும் தலைவனாக இருக்கிறது. இது இதயத்தில் வீற்றிருக்கிறது. ஸ்தூல இதயம் அதனுடைய இருப்பிடம். இந்திரியங்களின் உதவியால்தான் மனம் ஞானத்தை அடைகிறது. இந்த மனமானது வெளிவிஷயங்களைப் பற்றிய அறிவை இந்திரியங்கள் துணையில்லாமல் அடைய முடியாது. இந்திரியங்கள் வெளி விஷயங்களால் பாதிக்கப்படாமல் அதாவது சுகத்தை விரும்பாமல் இருந்து விட்டால், மற்றவர்களிடத்திலிருக்கும் பலவீனத்தை ஏற்றுக் கொள்ளுதல், பொறுமை, ஆசைப்பட்ட பொருளை அடைவதால் மகிழ்ச்சி வருவது போன்ற உணர்ச்சிகள் எழுவதில்லை. அந்த ஆசை மனதை சென்று அடைவதால் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம்.
ஞானேந்திரியங்களுக்குள் விஷயங்கள் கிரகிக்கப்பட்டு வந்துவிட்ட பிறகு மனது நல்லது, கெட்டதை பார்க்கிறது. மனதின் இந்த செயலை செய்யவிடாமல் தடுத்து விடுவதே மனதைக் கட்டுப்படுத்துவதாகும். இந்த மனதிற்கு சத்துவ, ரஜோ, தமோ ஆகிய குணங்கள் இருக்கிறது. அந்தக் குணங்களினால் மனம் மாறிக் கொண்டு இருக்கிறது, அலைபாய்ந்து கொண்டிருக்கிறது.
பொறுமை, மன்னிக்கும் குணம், பரந்த மனப்பான்மை போன்ற உணர்ச்சிகள் சத்துவ குணத்திலிருந்து தோன்றியவை. ஆசை, கோபம், லோபம், ஆசைக்கு தடை வரும் போதும், எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாத போதும் எழுகின்றது கோபம். பகிர்ந்து கொள்ளாத குணமே லோபம், செயலில் ஒன்றை அடைய முயற்சி செய்து கொண்டிருத்தல் போன்றவைகள் எல்லாம் ரஜோ குணத்தினால் வருபவைகள்.
சோம்பல், விபரீத ஞானம், மோகம், தேவையில்லாத நேரத்தில் வருகின்ற உறக்கம் போன்ற குணங்கள் தமோ குண பிரதானத்தினால் வருபவைகள். செய்ய வேண்டிய செயல்கள் இருந்தாலும் அதைச் செய்யாமல் சோம்பலாக இருத்தல், உறங்கிக் கொண்டிருத்தல் ஆகியவைகள் தமோகுண மேலோங்கி இருக்கும் போது வெளிப்படும். சத்துவ குண பிரதானத்தினால் புண்ணியத்தை அடைகிறோம். ரஜோ குண பிரதானத்தினால் பாவத்தை அடைகிறோம். இந்த குண பிரதானத்தினால் உருவர்கும் தீய குணங்களினால் செயலை செய்வதால் பாவங்களை அடையப்படுகின்றது. சத்துவ குணம் அறிவை அடைய உதவும் ஞான சக்தி, ரஜோ குணமானது செயலில்
தமோ குணத்தினால் பாவமும் வராது, புண்ணியமும் வராது, ஆனால் வாழ்நாள் வீணாக கழிந்து கொண்டிருக்கும். மனதை, ஸ்தூல சரீரத்தை, நான் என்று சொல்பவன் கர்த்தாவாக இருக்கிறான். அகங்காரத்தினால் கர்த்தாவாக இருக்கிறான். இவ்விதமாக உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. தொட்டுணர்தல், கேட்டல் முதலியவைகள் வெளியே அனுபவிக்கிள்ற பஞ்ச பூதங்களினுடைய விகாரம் என்று தெளிவாக தெரிகின்றது. இந்திரியங்கள் முதலியவைகளில் கூட அந்த பஞ்சபூத மாற்றத்தினால் உருவானது என்பதை சாஸ்திர யுக்தியினாலும் அறிந்து கொள்ள வேண்டும்.
அன்னமயத்தின் சூட்சும அம்சம் மனதிலும், ஜலத்தினுடையது பிராணனிலும், தேஜஸின் சூட்சும அம்சம் வாக்கிலும் சேருவதாக சாஸ்திரம் சொல்கிறது.
அனுமான வாக்கியம் - இந்திரியங்கள் பஞ்சபூதங்களிலிருந்து உருவாக்கப்பட்டன.
ஹேது – உணவு சாப்பிட்டால்தான் மனம் செயல்படுகிறது. எனவே உணவுக்கும்,
மனதுக்கும் சம்பந்தம் இருக்கிறது. இதிலிருந்து
பஞ்சபூதத்திலிருந்துதான் மனம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.
உணவு சாப்பிடாமல் நீர் மட்டும் குடித்துக் கொண்டிருந்தால் பிராணன் இருந்துக்
கொண்டிருக்கும். இதிலிருந்து நம்மால் பஞ்சபூதத்திலிருந்து தான்
பிராணன் உருவாக்கப்பட்டது என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.
பத்து இந்திரியங்கள், மனம் ஒன்று சேர்ந்து எவைகளையெல்லாம் அறிகின்றதோ, அனுமானத்தினாலும், சாஸ்திர பிரமானத்தினாலும் எவைகளெல்லாம் அறியப்படுகின்றதோ அவைகளனைத்தும், எவைகளெல்லாம் இருக்கின்றதோ அவைகளும், ஜகத்தும் இதம் என்ற சப்தத்தினால் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. நாம் அனுபவிக்கும் இவைகளனைத்தும் படைப்புக்கு முன்னே இரண்டற்ற ஒன்றாக மட்டும் இருக்கின்ற ஸத் மட்டும்தான் இருந்தது. பெயர், உருவங்கள் எதுவும் இல்லை. இதுதான் ஆருணியின் உபதேசம்.
வேற்றுமைகளில் மூன்று வகையுண்டு. அவைகள் 1.ஸ்வகத வேற்றுமை, 2.ஸஜாதீய வேறறுமை, 3.விஜாதீய வேற்றுமை ஆகியவைகளாகும்.
1.
ஸ்வகத வேற்றுமை என்பது தனக்குள்ளே இருக்கின்ற வேற்றுமை. எந்த ஒன்றிற்கு உறுப்புக்கள் இருக்கின்றதோ
அது ஸ்வகத வேற்றுமையைச் சேர்ந்தது
2.
ஸஜாதீய வேற்றுமை – ஒரே ஜாதியில் இருப்பவைகளுக்குள்
இருக்கின்ற வேற்றுமை இது. மனித ஜாதிக்குள் இருக்கின்ற வேற்றுமை
இந்த வகையை சேர்ந்தது.
3.
விஜாதீய வேற்றுமை – ஒன்றிற்கு வேறாக இருப்பவைகள்.
மனித ஜாதிக்கு வேறாக இருக்கின்ற மிருக ஜாதி இதற்கு உதாரணம்.
ஒரு மரத்திடம் இருக்கின்ற வேற்றுமை ஸ்வகத பேதம். ஒரு மரத்தில் இலை, கிளை, பூ, பழம் போன்றவைகளால் இந்த பேதம் ஏற்படுகிறது. இந்த மரத்ததை தவிர வேறு வகையான மரங்களும் இருப்பதால் ஸஜாதீய பேதம் வந்து விடுகிறது. மரத்திற்கு வேறாக கல், மண் போன்ற பொருட்களோடு ஒப்பிட்டு பார்க்கும்போது விஜாதீய பேதம் வந்து விடுகிறது;. வேற்றுமையுடன் இருக்கின்ற ஒன்றில் உள்ள வேற்றுமையானது ஒரு கட்டுப்பாட்டுக்குள், வரையறைக்குள் அதை வைத்திருக்கும்.
எவ்விதம் ஒரு பொருளுக்கு மூன்றுவித வேற்றுமைகள் இருக்கிறதோ அதுபோல ஸத் என்கின்ற வஸ்துவுக்குள் வருகின்ற வேற்றுமைகள் நீக்கப்படுகின்றது. இது ஒன்றுதான் இருக்கிறது என்று சொல்லும்போது ஸ்வகத பேதம் நீக்கப்படுகறது. ஓன்று மட்டும்தான் இருக்கிறது என்று சொல்லும்போது ஸஜாதீய பேதம் நீக்கப்படுகிறது. இரண்டற்றது என்று சொல்லும்போது விஜாதீய பேதம் நீக்கப்படுகிறது.
எது அவயவங்களுடன் இருக்கிறதோ அது ஸ்வகத வேதத்துடன் இருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். உறுப்புக்களுக்கு நாசம் வந்தால் அந்த பொருளுக்கும் நாசம் வந்து விடும். இதிலிருந்து அறிந்து கொள்வது ஒரு பொருள் அழியக்கூடாது என்றால் அதனிடத்தில் உறுப்புக்கள் இருக்கக்கூடாது.
ஸத்திற்கு உறுப்புக்கள் இருப்பதாக சந்தேகப்படக்கூடாது. ஸத் அவயவங்களுடன் இருப்பதாக காட்டுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே ஸத்திற்கு ஸ்வகத பேதம் என்பது இல்லையென்று உறுதியாகிறது. நாமங்களும், உருவங்களும் ஸத்திற்கு அவயவங்கள் அல்ல. ஏனென்றால் இந்த நாம-ரூபங்கள் ஸ்ருஷ்டிக்கு முன்னால் இல்லை.
நாம-ரூபங்களின் வெளிப்பாடே ஸ்ருஷ்டியாகும். இந்த ஸ்ருஷ்டிக்கு முன்னே இவைகளின் வெளிப்பாடு இல்லை. ஆகவே ஸத்தானது அவயவங்களற்றது. ஆகாசத்தைப் போல இது இருப்பதை புரிந்து கொள்ளலாம்.
ஜாதி என்பது ஒன்றுதான் ஆனால் அது எல்லாவிடத்திலும் வியாபித்திருக்கிறது. மனிதத்தன்மை என்பது ஒன்றுதான் ஆனால் அது எல்லா மனிதர்களிடத்திலும் வியாபித்திருக்கிறது. ஸத்திற்கு வேறாகவொரு ஸத் கிடையாது. அது எந்தவொன்றையும் சார்ந்து இல்லாததால் இவ்வாறு கூறப்படுகிறது. நாம-ரூபங்களாக இருக்கின்ற ஜகத் உபாதி வேற்றுமையினால் இவ்வாறு தோன்றுகிறது. ஆனால் உண்மையில் ஸத்திற்கு ஸஜாதீய பேதம் கிடையாது.
மனிதனிடத்தில் விஜாதீய பேதம் இருப்பதற்கு காரணம் மனிதனைத் தவிர மற்றவைகளும் இருக்கின்றது. எந்த தன்மையில் வேற்றுமை இருக்கிறது என்பதை சொல்ல வேண்டும். வேற்றுமையை பார்க்கின்ற நான் (அனுயோகி) எதனிடத்தில் (பிரதியோகி) வேற்றுமையை பார்க்கிறேன். இருத்தல் விஷயத்தில் விஜாதீய பேதம் இருக்க வேண்டுமென்றால் ஸத்திற்கு அப்பாற்பட்ட ஏதாவது ஒன்று இருக்க வேண்டும். ஸத்திற்கு வேறுபட்டதாக தோன்றுவது அஸத் மட்டும்தான். ஆனால் இது பிரதியோகியாக இருக்கும் தன்மை கிடையாது. இதுவே அத்வீதியம் என்று குறிப்பிடப்படுகிறது.
ஸத்திற்கு விஜாதீய பேதமாக இருப்பது அஸத்தாகும். அந்த அஸத்தானது இல்லையென்று அறியப்படுகிறது. ஆகவே இந்த இல்லாதவொன்றுக்கு பிரதியோகியாக இருக்கும் தகுதியை இழந்துவிடுகிறது. எனவே ஸத்திற்கு விஜாதீய பேதமே வரமுடியாது.
ஸத்தானது ஒன்றுமட்டும்தான், இரண்டற்றது என்பது நிலைநாட்டப்பட்டுவிட்டது. இந்த விஷயத்தில் சில சூன்யவாதிகள் மனக்குழப்பத்துடன் இருக்கிறார்கள். அவர்களுடைய கருத்து இவைகளெல்லாம் ஸ்ருஷ்டிக்கு முன்னால் அஸத்தாக இருந்தது. அதாவது சூன்யமாகத்தான் இருந்தது. இதிலிருந்து அவர்கள் சொல்ல வருவது சூன்யம்தான், ஏகமேவ அத்விதீயம் என்பதுதான்.
நீரில் மூழ்கியவனுடைய இந்திரியங்கள் எவ்வாறு சக்தியிழந்து இருக்குமோ அவ்வாறு சூன்யவாதிகளின் புத்தியும் செயலிழந்து இருக்கிறது. தர்க்கத்தினால் பிரம்மத்தை அறிய முயல்வது நீருக்குள் இருந்து கொண்டு கண்களை பயன்படுத்துவது போல இருக்கிறது. பிரம்மன் பிளவுபடாதது, ஒன்றாகவே இருக்கிறது என்பதைக் கேட்டு அதை சரியாக புரிந்து கொள்ளாமல் இந்த பிரம்மத்திடமிருந்து பயத்தை அடைகிறார்கள்.
கௌடபாதர் என்ற பெயருடைய குருவானவர் வேற்றுமையற்ற பிரம்ம விஷயத்தில் மிகவும் அளவுகடந்த பயத்தைப் பற்றி சொல்லியிருக்கறார். குணங்களுடன் கூடிய சகுண பிரம்மத்தில் நிலைபெற்றுள்ளவர்களான மற்ற யோகிகளுக்கு, சூன்யவாதிகளுக்கு
வணங்கத்தக்க பாதங்களையுடைய பகவான் சங்கரர், சூன்யவாதிகளை வறட்டு வாதத்தில் திறமையானவர்கள் என்றும், பயனற்ற வாதங்களில் புத்திசாலிகள் எனவும் கூறியிருக்கிறார். இவர்கள் உண்மையை அறியும் விஷயத்தில் குழப்பத்தில் இருக்கிறார்கள். தர்க்கத்தினால் அடைய முடியாத ஸத் ஸ்வரூபமான ஆத்ம விஷயத்தில் இவர்கள் குழம்பி இருக்கிறார்கள்.
அசிந்த்யம் - ஸத்தானது அனுமான பிரமாணத்திற்கு அப்பாற்பட்டது.
உபநிஷத் கூறும் கருத்துக்களை மதிக்காமல் மூர்க்கத்தனத்தினால் இந்த புத்த மதத்தை சார்ந்த அறியாமையுடன் இருக்கின்ற பௌத்தர்கள் ஆத்மா என்பது ஒன்றுமில்லை என்று பேசுகிறார்கள். இவர்கள் அனுமானம் என்ற ஒரு பிரமாணத்தை மட்டும் பயன்படுத்துபவர்கள். அதனால்தான் அவர்கள் இத்தகைய அறிவை அடைந்து இருக்கிறார்கள். ஒருவன் எந்த பிரமாணத்தை பயன்படுத்துகின்றானோ, அது கொடுக்கும் அறிவைத்தான் அடைவான். அவர்கள் இத்தகைய அறிவை அடைந்திருக்கிறார்கள் என்று சுரேஷ்வராச்சாரியார் கூறுகிறார்.
இருத்தல் சூன்யத்தின் ஸ்வரூபமா அல்லது சம்பந்தம் உடையதா? என்ற கேள்விக்கு விடை தேட வேண்டும். அதாவது சுடுநீர் என்று சொல்லும்போது சுடுதல் நீரின் ஸ்வரூபமா? அல்லது நீரோடு சம்பந்தம் உடையதா? என்று விசாரிக்கும் போது சுடுதல் நீரோடு சம்பந்தம் உடையது என்று அறிந்து கொள்ளலாம். நெருப்பு சுடுகின்றது என்று சொல்லும் இடத்தில, சுடுதல் நெருப்பின் சுபாவம் என்று சொல்வோம். அதேபோல சூன்யம் என்பதற்கு இல்லாதது என்று அர்த்தம். எனவே சூன்யம் இருந்தது என்ற வாக்கியத்தில் இருத்தல் சூன்யத்தோடு சம்பந்தப்படாதது, அதனுடைய ஸ்வரூபம் கிடையாது. இது வியாகாத தோஷம். முரண்பாடான வாக்கியமாக இருக்கும். அதாவது நான் ஊமை என்று சொல்வது போன்றதாகும்.
சூன்யம் இருந்தது என்று சொல்லும் போது, இருத்தல் சூன்யத்தோடு சம்பந்தப்பட்டு இருக்கிறதா? அல்லது இருத்தல் அதன் ஸ்வரூபமாகவே இருக்கிறதா? என்று விசாரிக்கும் போது இவையிரண்டும் சூன்யத்தோடு பொருந்தாது. இதனால் வியாகாத தோஷம் இதில் வந்து விடும்.
இருளுடன் ஒளி சம்பந்தமே ஏற்படாது. சம்பந்தமே இல்லாதபோது அதன் ஸ்வரூபமாக இருக்க முடியாது. அதுபோல ஸத்தானது அஸத்தோடு சேர முடியாது. அப்படியிருக்கும் போது எப்படி ஸ்வரூபமாக இருக்கமுடியும் என்று சொல்கிறாய்.
ஆகாசம் முதலிய பஞ்சபூதங்களின் விகாரங்களாக இருக்கின்ற இந்த உலகம் வெறும் நாம-ரூபம்தான். மாயையினால் அறியாமையினால் நன்றாக பிரம்மத்தின் மீது ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்றது. சூன்யவாதி சொல்வது போல சூன்யமும் வெறும் நாம-ரூபம்தான் என்று சொன்னால் அதுவும் சரிதான்.
அந்த ஸத்தும் நாம, ரூபம் என்கின்ற இரண்டாக கற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. என்று கூறுவது தவறாகும். இந்த நாம ரூபங்களுக்கு ஆதாரமாக இருக்கின்றது ஸத். ஆதாரம் இல்லாமல் தவறு எதுவும் நேராது. ஓன்று மித்யாவாக இருக்க வேண்டுமானால் அதற்கு ஏதாவது ஆதாரம் இருக்க வேண்டும் என்ற நியதி இருக்கிறது. ஆதாரமில்லாமல் நாம் எதையும் ஏற்றி வைக்க முடியாது. கயிறு இல்லாமல் பாம்பு தோன்றாது. எனவே ஆதாரமில்லாத அத்யாஸத்தை பார்க்கவே முடியாது. ஸத் என்கின்ற ஆதாரமில்லாமல் நாம ரூபங்கள் தோன்றாது.
ஸத் என்ற சொல்லுக்கும், அஸத் என்ற சொல்லுக்கும் வேற்றுமை இருந்தால் இருமை வந்துவிடும். இந்த இரண்டு சொற்களுக்குமடையே வேற்றுமையில்லை என்று சொன்னால் புனருக்தி தோஷம் ஏற்பட்டுவிடும். அதாவது சொன்னதையே திரும்ப சொல்லுதல் என்ற குறையே புனருக்தி தோஷம். ஜபம் செய்யும்போது ஒரே நாமத்தையே திரும்ப திரும்ப சொல்கின்றோம். குருவானவர் ஒரே விஷயத்தையே திரும்ப திரும்ப உபதேசிப்பது புனருக்தி தோஷம் கிடையாது. புரியாததை திரும்ப திரும்ப சொன்னால் தோஷமாகாது. புரிந்துவிட்டால் அதுவே தோஷமாகிவிடும். எனவே இந்த விஷயத்தில் சந்தேகம் கொள்ளாதே. உலக வாழ்வில் நம் அனுபவத்தில் இவ்விதமான ஒரே சொல் திரும்ப திரும்ப சொல்வதை பார்க்கின்றோம்.
செயலை செய்கின்றான், சொல்லை சொல்கின்றான், சுமையை சுமக்கின்றான் என்று சொல்வது போல இதை எடுத்து கொள்ள வேண்டும். இப்படிபட்ட வாசனையுடன் கூடியவர்களுக்காக ஸத் இருந்தது என்று கூறப்பட்டுள்ளது. காலம் என்றவொன்றே தோன்றாத போது எப்படி முன்னே என்ற சொல் கூறலாம் என்று வினவினால் கால வாசனையினால் அவ்வாறு கூறப்பட்டது என்று ஏற்றுக் கொள்ளலாம். சீடர்களுக்குத்தான் இவ்வாறு கூறப்படுகிறது. இந்த வாக்கியத்தில் உள்ள இந்த இருமையை சந்தேகப்படக் கூடாது.
கேள்விகளும், சந்தேகங்களும், பதில்களும் விவகாரம் செய்யும்போது மனம் இருமையில்; இருக்கலாம். அத்வைத நிலையில் மனம் இருக்கும்போது சந்தேகமும், கேள்வியும் இருக்காது. பதில்களும் கூட இருக்காது. அத்வைதம் மட்டும்தான் அசைவற்றதாகவும், அமைதியுடனும், ஆழமானதாகவும், மனதினால் கிரகிக்க முடியாததாகவும் இருக்கிறது. அது வெளிச்சமும் கிடையாது, இருளும் கிடையாது. அதாவது இருமைக்கு அப்பாற்பட்டதானதாக இருக்கிறது. அனைத்தையும் வியாபித்துக் கொண்டிருக்கிறது. பெயரற்றது, வெளித்தோற்றத்திற்கு வராதது, உருவமற்றது. விளக்க முடியாததாக இருக்கின்றது. இந்த ஸத் மட்டும்தான எஞ்சியிருக்கிறது.
ஆகாசத்தை தவிர மற்ற நான்கு பூதங்கள் அஸத்தாக, ஸத்யமானதாக இல்லாததை ஏற்றுக் கொள்கிறேன். பரமாணு என்ற நிலைவரை அவைகள் நாசத்தை அடைகிறது. எனவே அவைகளை நிலையற்றவைகளாக ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் ஆகாசத்தினுடைய இல்லாமையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்ற கருத்து வரும் போது இவ்வாறு எண்ணிப் பார்க்க வேண்டும். பூமி முதலிய நான்கு பூதங்களை நீக்கி வெறும் ஆகாசத்தை மட்டும் எவ்விதம் புத்தியால் புரிந்து கொண்டிருக்கிறோமோ, அவ்விதமே ஆகாசமும் இல்லாத ஸத்தானது, பிரம்மமானது புத்தியைக் கொண்டு கிரகித்துக் கொள்ள வேண்டும்.
நான்கு பூதங்கள் இல்லாமல், பதார்த்தங்கள் இல்லாமல் ஆகாசம் மட்டும் பார்க்கப்படுகின்றது என்றால் இருளும், ஒளியும் இல்லாமல் ஆகாசத்தை பார்க்க முடியாது. பிரத்யக்ஷ பிரமாணத்திற்குட்படாத ஒரு தத்துவத்தை நித்யம் என்று சொல்ல முடியாது. மேலும் ஆகாசத்தை நீக்கி ஸத் மட்டும் இருக்கிறது என்று சொல்லும் போது ஆகாசத்தை பிரத்யக்ஷ பிரமாணத்தால் பார்க்க முடியாது அல்லவா?
அஸத்துடன் கலக்காத நாம-ரூபங்களில்லாமல் இருக்கின்ற ஸத் வஸ்து அறிவாளிகளால் தெளிவாக அனுபவிக்கப்படுகிறது. மனம் அமைதியாக இருக்கும் போது, விக்ஷேபங்கள் இல்லாத போது ஸத்தானது தெளிவாக பிரகாசிக்கின்றது. அந்த நிலை சூன்யமான நிலையில்லை. எண்ணம் இல்லாததினால் நான் இருக்கின்றேன் என்ற எண்ணம் மட்டும்தான் இருக்கிறது. அந்த நிலை சூன்யமான நிலை கிடையாது.
ஸத் இருக்கிறது என்ற எண்ணமும் இல்லையென்றால் ஸத் இல்லையல்லவா? ஸத் புத்தி இருக்க வேண்டாம். ஏனென்றால் அது சுயபிரகாச ரூபமாக இருந்து கொண்டு இருக்கிறது. அதன் இருப்பை அறிவதற்கு வேறெந்த பொருளும், பிரமாணமும் தேவையில்லை. மன அமைதியையும் சாட்சியாக பார்த்துக் கொண்டிருக்கிறது. நான் இருக்கின்றேன், ஸத் ஸ்வரூபம் மட்டும் இருக்கின்றது என்பதை தகுதியுடைய மனிதர்களால் புரிந்து கொள்ளப்படுகிறது. எவ்விதம் மனமானது சஞ்சலமடையாமல் இருக்கும் போது சாட்சி சைதன்யம் சஞ்சலமற்று அமைதியாகவும், ஒன்றாக மட்டும் இருக்கிறதோ அதுபோல மாயை வெளிப்படுவதற்கு முன்பு ஸத்தானது ஒன்றாகவும், இரண்டற்றதாகவும் இருக்கின்றது.
மாயை என்பது சாரமற்றது, தனியாக இருக்கும் சக்தியற்றது. காரியத்தின் மூலமாக அறியப்படுவது, யூகிக்கக்கூடியது, ஸத்திடம் இருக்கின்ற சக்தி ஆகிய இவைகளே மாயையின் லட்சணங்களாக கூறப்படுகிறது. அக்னியிடத்தில் இருக்கும் சக்தியைப் போன்றது இந்த மாயா சக்தி. உதாரணமாக ஒருவருடைய வாயைப் பார்த்து இவர் நன்றாக பாடுவாரா, மாட்டாரா என்பதை சொல்ல முடியாது. அவர் பாடிக் கேட்ட பின்புதான் அவரிடத்தில் இருக்கும் பாடும் சக்தியை அறிந்து கொள்ள முடியும். சக்தியானது வெளிப்படும்போதுதான் அதை புரிந்து கொள்ள முடியும். அக்னியிடத்தில் சுடும் தன்மையே அதனுடைய சக்தியாக புரிந்து கொள்ள வேண்டும். உஷ்ண சக்தியை உணர்ந்து விட்டால் அக்னியை தெரிந்து கொள்கிறோம். அதுபோல உலகமாக தோன்றி கொண்டிருக்கின்ற மாயா சக்தியை பார்த்து ஸத்தை புரிந்து கொள்ளலாம். சக்தியை அது வெளிப்படுவதற்கு முன்பு அறிந்து கொள்ள முடியாது. எந்த சக்தி எந்த இடத்தில் இருக்கிறது என்பதை எவராலும் சொல்ல முடியாது.
மித்யா – ஒரு பொருளின் இருத்தலின் தன்மையைக் குறிக்கும்.
மாயா – பிரம்மத்திடம் இருக்கின்ற விளக்க முடியாத சக்தியை குறிக்கிறது
கயிற்றில் தோன்றும் பாம்பு மாயை என்று சொல்கிறோம். அதனுடைய இருப்பை மித்யா என்று சொல்கிறோம்.
இந்த பிரபஞ்சம் மாயையிலிருந்து வெளிப்பட்ட தோற்றம். அதையே மித்யா என்று சொல்கிறோம்.
நெருப்புக்கு நெருப்பே சக்தியாக இருக்க முடியாதது போல ஸத்தினுடைய சக்தியானது ஸத் அல்ல. ஸத்துக்கும் வேறானது இருந்தால் அதனுடைய தத்துவத்தை சொல்வாயாக என்று வினவினால் அதனுடைய ஸ்வரூபம் எனனவென்று சொல்லுங்கள்.
சூன்யம் என்று சொன்னால் அது மாயாவின் காரியம் என்று சொல்லப்பட்டது. எனவே சூன்யம் என்றும் சொல்ல முடியாது. இந்த சூன்யமானது அஸத்தும் அல்ல, ஸத்தும் அல்ல. அது எப்படி இருக்கின்றதோ அப்படியிருப்பதாக ஏற்றுக் கொள்வாயாக. அதுவே அதன் தன்மையாக புரிந்து கொள். இந்த சக்தியை விளக்க முடியாது என்று தெரிந்து கொள்.
மாயா நிஸ்தத்துவம் என்பதற்கான பிரமாண வேதவாக்கியம் மாயா சக்தி அஸத்தும் அல்ல ஸத்தும் அல்ல என்று கூறுகிறது. ஸ்ருஷ்டிக்கு முன்னே சக்தியாக மட்டும் இருக்கும். ஆனால் சக்தியாகவே தமஸாக மட்டும் இருந்தது. தமஹ என்ற சொல் மாயைத்தான் குறிக்கிறது. தமஹ என்பது ஆவரணமாக இருக்கின்ற மாயையின் தன்மையை குறிக்கிறது. ஸத்தினுடைய சம்பந்தத்தினால் இந்த தமஸுக்கு, மாயைக்கு இருத்தல் என்ற தன்மை தற்காலிகமாக கிடைத்தது. பாம்பின் இருத்தல் கயிற்றின் இருத்தலை குறிப்பதைப் போல புரிந்து கொள்ள வேண்டும். இது அறிவினால் நீக்கப்படுவதால் இதற்கு தனக்கென்று இருத்தல் என்பது கிடையாது.
ஆகவேதான் பிரம்மத்திற்கு வேறாக இரண்டாவதாக எதையும் சூன்யத்தைப் போல கணக்கிடுவதில்லை. உதாரணமாக உலகத்தில் உள்ள ஒருவனிடம் இருக்கும் சக்தியையும் அவனையும் பிரித்துப் பார்ப்பதில்லை. தனித்தனியாக இருத்தலை பிரித்து பிரித்து கணக்கிட மாட்டோம்.
சக்தியின் அளவைப் பொறுத்து வாழ்க்கையின் தரம், வளர்ச்சி இருக்கும் என்று கூறும்போது வளர்ச்சிக்கு காரணம் சக்தியல்ல. அந்த அறிவின் வெளிப்பாடுதான் வளர்ச்சிக்கு காரணமாக அமைகின்றது. போர், விவசாயம், வியாபாரம் ஆகியவற்றில் சக்தியை வெளிக்காட்டும்போதுதான் அவன் வளர்ச்சி அடைகிறான். எனவே சக்தியின் வெளிப்பாடுதான் ஒருவனுடைய உயர்வு, தாழ்வுக்கு காரணமாக இருக்கிறது.
எல்லாவிதத்திலும் சக்தியை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. சக்தியினுடைய காரியம் தோன்றாததால் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. எனவே இருமையை சந்தேகப்பட முடியாது.
அந்த மாயா சக்தியானது பிரம்மனிடத்தில் முழுமையாக வியாபிக்கவில்லை. ஆனால் ஒரு பகுதியில் மட்டும் வியாபித்திருக்கிறது. பூமியில் உள்ள படைக்கப்பட்ட பூதங்கள் அனைத்தும் பிரம்மத்தினுடைய நான்கில் ஒரு பங்கு மட்டும்தான், தானாக பிரகாசிக்கின்ற பிரம்மனாக ஆத்ம ஸ்பரூபமாக மீதி மூன்று பங்காக இருக்கின்றது. இது மாயையானது பிரம்மத்தின் ஒரு பகுதியை மட்டும்தான் வியாபிக்கின்றது என்று வேதசாஸ்திரம் கூறுகிறது. இந்த உலகம் முழுவதையும் பிரம்ம ஸ்வரூபமாகிய நான் என்ற அம்சத்தினால் வியாபிக்கப்பட்டிருக்கிறது. இவ்விதம் கிருஷ்ண பகவான் அர்ஜுனனுக்கு கூறியுள்ளார். இந்த ஜகத்தானது ஒரு பகுதியை மட்டும்தான் வியாபித்திருக்கிறது.
அந்த பரமாத்மா உலகத்தையம், அனைத்து படைப்புக்களையும் முழுமையாக வியாபித்தும் அதைக் கடந்தும் இருக்கிறார். இந்த கருத்து புருஷ ஸுக்தத்திலும், சகுண பிரம்மனாகவும் (பிரபஞ்சத்துடன் கூடியதாகவும் ), நிர்குண பிரம்மனாகவும் ( காரிய பிரபஞ்சமற்றதாகவும்) இரண்டுவிதமாக பிரம்மன் இருக்கிறது என்று பிரம்ம சூத்திரத்திலும் கூறப்பட்டிருக்கிறது.
பிரம்மன் அம்சமற்றதாக இருந்த போதிலும் ஏதோ ஒரு அம்சத்தை அதன் மீது ஏற்றி வைத்து முழுமையாகவோ, ஒரு அம்சத்தையோ இந்த மாயை வியாபிக்கின்றது என்று கேட்கின்ற சிஷ்யனுக்கு, சாதகனுக்கு, அக்ஞானிக்கு புரியும் வகையில் ஒரு அம்சத்தை பாதிக்கிறது என்று சொல்லப்படுகிறது. கேட்பவனுக்கு நன்மை வரவேண்டுமென்று நோக்கத்தை உடைய வேதமானது இவ்வாறு கூறுகிறது.
ஸத்தாக இருக்கின்ற பிரம்மத்தை சார்ந்திருக்கின்ற சக்தியானது (மாயை) ஸத் ஸ்வரூபத்தில் காரியமான பிரபஞ்சத்தை படைக்கின்றது, விக்ஷேபம் செய்கின்றது, அத்யாஸம் செய்கின்றது. சுவரில் பலவிதமான படங்கள் வரைந்திருப்பதைப் போல பிரம்மத்தின் மீது மாயை படைப்புக்களை ஏற்றி வைத்து இருக்கிறது. ஆனால் மாயை பிரம்மத்தை சார்ந்து இருக்கிறது.
ஆகாசமானது முதலில் படைக்கப்பட்டது. இது இடம் கொடுக்கும் தன்மை உடையது. இது இடைவெளி கொடுக்கின்ற தன்மையுடையது. இந்த ஆகாசம் இத்தகைய தன்மையுடையதாக இருக்கிறது. இந்த ஆகாசம் இருக்கிறது என்பதிலிருந்து இருத்தல் என்பது ஆகாசத்திற்கும் சென்றுள்ளது என்பதை அறியலாம்.
ஸத் ஒரே ஒரு தன்மையுடைய தத்துவமாக இருக்கிறது. ஆகாசம் இரண்டு தன்மை உடையதாக இருக்கிறது. ஸத்தில் இடம் கொடுத்தல் தன்மை இல்லை. ஆகாசத்தில் இருத்தலும், இடம் கொடுக்கும் தன்மை ஆகிய இரண்டும் இருக்கிறது.
இடம் கொடுக்கும் தன்மை அல்லது சப்தம் ஆகாசத்தின் குணமாக இருக்கிறது. இந்த குணமானது ஸத் இடத்தில் இல்லை. ஆகாசத்தில் இரண்டு இருக்கிறது அவைகள் ஸத், சப்தம் ஆகும். அதனால் ஸத் ஒன்றாகவும், ஆகாசம் இரண்டு தன்மை உடையதாகவும் இருக்கிறது.
மாயையானது தர்மியை தர்மமாகவும், தர்மத்தை தர்மியாகவும் மாற்றி புரிந்து கொள்ள வைத்து விடுகிறது. தங்கத்திலான வளையல் என்று கூறும் வாக்கியத்தில் தர்மியான தங்கம் தர்மமாகிவிட்டது. தங்கத்தில் இருந்துதான் வளையல் உருவாக்கப்பட்டிருக்கிறது. வளையல்தான் தங்கத்தினுடைய தர்மம். இதுவே தர்மியாக கூறப்படுகிறது. எந்தவொரு சக்தியானது ஆகாசத்தை தோற்றுவித்ததோ அதே மாயா சக்தியானது ஸத்திற்கும், ஆகாசத்திற்கும் வேற்றுமை தெரிகின்ற நிலையை செய்ய வைத்தும், தர்மமாக இருக்கும் தன்மையையும், தர்மியாக இருக்கும் தன்மையையும் தலைகீழாக புரிந்து கொள்ள வைத்திருக்கிறது.
ஸத்திற்கு ஆகாசம் என்கின்ற தன்மை வந்துவிட்டது. உதாரணமாக இருக்கும் இடம் என்ற வாக்கியத்தில் இருத்தல் தர்மமாகி, இடம் தர்மியாகி விடுகிறது. ஸத்தின் தன்மை ஆகாசத்திற்கு வந்துவிட்டது. ஸத்தைப் பற்றிய அறியாமையினால் தர்க்கவாதிகளும், மற்றவர்களும் இந்த தவறை செய்கிறார்கள். இது மாயையினால் மட்டும் செய்யக்கூடியது.
எந்தவொரு பொருளானது எப்படி இருக்கின்றதோ அதனுடைய தன்மையானது சரியான பிரமாணத்தின் மூலமாக அப்படியே தெரிகின்றது. பிராந்தியின் போது அதுவே வேறாக தெரிதலும், தவறாக தெரிவதும் எல்லோராலும் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
இவ்விதம் தவறாக புரிந்து கொள்ளும் வாய்ப்பு இருப்பதனால், வேதசாஸ்திர விசாரம் செய்வதற்கு முன் எந்தப்பொருள் எப்படி தெரிகின்றதோ அதுவே விசாரம் செய்வதனால் தலைகீழாக மாறிவிடும். ஆகவே விசாரம் செய்ய வேண்டியிருப்பதால் ஆகாசத்தைப் பற்றிய விசாரத்தை மீண்டும் மேற்கொள்ளலாம்.
ஸத்தையும், ஆகாசத்தையும் விசாரத்தின் விஷயமாக எடுத்துக்கொள்கிறோம். விசாரத்தின் முடிவில் ஆகாசம் வேறு, ஸத் வேறு என்று பிரித்து அறிய வேண்டும். பிரித்த பிறகு ஸத் உண்மையானது என்றும், ஆகாசம் மித்யா என்றும் புரிந்து கொள்ள வேண்டும். ஆகாசம், ஸத் இரண்டையும் உச்சரிக்கும் போது சப்தம் வேறுபடுவதால் இரண்டு வஸ்து என்பது உறுதியாகிறது. புத்தியில் வேற்றுமை இருப்பதனால், மனதில் தோன்றும் எண்ணங்களிலும் வேற்றுமை இருப்பதனால் ஆகாசமும். ஸத்தும் வெவ்வேறானவை என்று அறிந்து கொள்ளலாம். ஏன் இரண்டு காரணங்களைக் கொடுக்கிறார் என்று ஆராய்ந்து பார்க்கும்போது சப்த பேதம் இருந்தாலும் ஒரே பொருளைக் குறிக்கலாம். எனவே இரண்டாவது காரணமான வெவ்வேறு அர்த்தங்களை உடையது என்பதன் மூலமாக சாத்தியத்தை உறுதிப்படுத்தப்படுகிறது. ஸத்தானது வாயு முதலிய மற்ற பூதங்களிலும் இருக்கிறது. ஆனால் ஆகாசம் மற்ற இடங்களில் இல்லை என்ற வேற்றுமை அறிவும் இருக்கிறது. இந்த வேற்றுமைகளின் மூலம் ஆகாசமும், ஸத்தும் வெவ்வேறானது என்று நிலைநாட்டலாம்.
ஸத் என்கின்ற வஸ்துவானது அதிகமாக வியாபித்திருப்பதால் அதை தர்மி என்று கூறப்படுகிறது. ஆகாசமானது தர்மமாக இருக்கிறது. இந்த அறிவின் துணைக் கொண்டு ஸத்திலிருந்து ஆகாசத்தை பிரிக்கும் போது ஆகாசத்தின ஸ்வரூபம் என்ன என்று அறிந்து கொள்ள முடியும்.
ஆகாசம் என்பது இடம் கொடுப்பது என்று கூறினால் அதை அஸத் என்றும். ஸத்திலிருந்து வேறுபட்டது என்றும் புரிந்து கொள்ளலாம். இது அஸத்தும் அல்ல, இல்லாததும் அல்ல, ஏனென்றால் இது நம் அனுபவத்தி;ற்கு இருக்கிறது என்ற சந்தேகம் வந்தால் இது மித்யாவின் லட்சணமாக இருப்பதால் இந்த கருத்துக்கு முரணாக இருக்கிறது என்று தெளிவடைய வேண்டும்.
அனுபவத்தில் ஆகாசம் பிரகாசிக்கிறது என்றால் பிரகாசித்தால் என்ன? இது மாயையினிடத்தில் இருக்கின்ற அழகு, அலங்காரம் என்று தெரிந்து கொள். எது இல்லையோ ஆனால் பிரகாசித்துக் கொண்டிருக்கிறதோ அதுவே மித்யாவாகும். எது ஸ்வரூபமாக இல்லாததாக இருக்கின்றது ஆனால் அனுபவத்திற்கு இருக்கின்றதோ அதுதான் மித்யா. கனவில் கண்ட யானை போல இல்லாதவொன்று இருக்கின்ற மாதிரி தோன்றுவதற்கு காரணம் என்ற சந்தேகத்தில் பிரமாணத்தை தவறாக பயன்படுத்துவதால் இந்த அனுபவம் நேரிடுகிறது. இதையே அத்யாஸம் என்று கூறுவா;.
மனிதத்தன்மை உள்ள ஜீவன் என்கின்ற பிரிவுக்குள்ளே இருக்கின்ற தனித்தனியான தன்மைகள், உயரமான மனிதன், படித்த மனிதன், அவயவங்களை உடையவன், அவயவங்கள், பொருளும் அதனுடைய குணங்களும் என்று இவ்விதம் பிரித்து பார்ப்பது போல ஆகாசத்திற்கும், ஸத்திற்கும் இடையே இருக்கின்ற தன்மைகள் வேறாக பிரித்து பார்த்து புரிந்து கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் வேற்றுமை பார்ப்பது தவறானது.
ஆகாசத்திற்கும் ஸத்திற்கும் இடையே உள்ள வேற்றுமை புரிந்து கொண்ட போதிலும் மனதிற்குள் நன்கு பதியவில்லையென்றால் அப்போது மனமானது ஒருமுகப்படாமல் சஞ்சலத்துடன் இருக்கலாம்; அல்லது அடைந்த அறிவிலேயே சந்தேகம் இருக்கலாம். இந்த ஞானம் மனதுக்குள்ளே ஆழ்ந்து பதியாமல் இருப்பதற்கு இவையிரண்டில் எதாவதுவொன்று காரணமாக இருக்கலாம்.
மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சியை செய்து பழகியிருக்க வேண்டும். ஜபம், உபாஸனம் இதற்கான சிறந்த சாதனமாகும். தியானம் செய்யும் முயற்சியில் கவனமாக இருக்க வேண்டும். கவனக்குறைவாக இருந்துவிடக் கூடாது. தொடர்ந்து முறையாக செய்து கொண்டு வர வேண்டும். இதனால் மனவொருமுகப்பாட்டை அடைந்திட வேண்டும். தியானத்துக்கு வரும் தடைகளை கவனத்துடன் இருந்து நீக்கிட வேண்டும். இது முதல் தடையை நீக்கும் சாதனம். இரண்டாவது தடையான அடைந்த அறிவில் சந்தேகம் இருந்தால் மனனம் என்ற சாதனத்தை பயன்படுத்தி இந்த தடையை நீக்கிக் கொள்ள வேண்டும். பிரமாணத்தின் துணைக்கொண்டும், யுக்தியின் துணைக் கொண்டும் மனனம் செய்ய வேண்டும். இந்த இரண்டு சாதனங்களை பயன்படுத்தினால் அடைந்த அறிவில் நிலை பெற்றுவிடுவோம்.
நிதித்யாஸனம், சிரவணம் ஆகிய பிரமாணத்தை பயன்படுத்தி விசாரம் செய்தல். மனனத்தின் மூலமாகவும் அறிவு பூர்வமாக சிந்தித்தும் சந்தேகத்தை நீக்குதல் போன்ற சாதனங்களை பயன்படுத்தி ஆகாசத்திற்கும் ஸத்திற்கும் இடையே உள்ள வேற்றுமை உறுதியாகி விட்டால் மீண்டும் ஆகாசத்தினை உண்மையானதாக பார்க்கமாட்டோம். ஸத்தாக இருக்கின்ற வஸ்து ஆகாசமாக காட்சியளிக்காது.
ஞானிக்கு இந்த உலகம் எப்பொழுதும் மித்யாவாகத்தான் தெரிந்து கொண்டிருக்கும். ஸத்தில்லாத தன்மை, ஸாரமற்றது என்ற அறிவு மேலுக்கு வந்து ஆகாசம் இல்லாமல் அனாத்மா கலக்காமல தெளிவாக விளங்கிக்கொண்டிருககும். இந்த வாசனையாகி-விட்ட-அறிவு உறுதியாகிவிட்ட பிறகு ஆகாசத்தை சத்தியமாக புரிந்து கொண்டவர்களை, ஸத் ஸ்வரூப மட்டும் புரிந்து கொள்ளாத அறியாமையில் உள்ளவர்களை பார்த்து உதாசீனனாக இருப்பான்.
இவ்விதம் ஆகாசத்தை மித்யாவென்றும், ஸத்தை (பிரம்மத்தை) சத்தியம் என்றும் மனதில் நன்கு நிலை நிறுத்தியபின் இப்போது செய்த இந்த விசாரத்தின் அடிப்படையில் வாயு முதலிய மற்ற பூதங்களிலிருந்து பிரம்மத்தை பிரித்து அறிந்து கொள்ள வேண்டும்.
மெய்பொருளின் ஒரு பகுதியைத்தான் மாயை வியாபித்துக் கொண்டிருக்கிறது. மாயையின் ஒரு பகுதியை ஆகாசம் வியாபித்திருக்கிறது. அந்து ஆகாசத்தின ஒரு பகுதியை வாயுவானது வியாபித்திருக்கிறது. இவ்விதம் ஒன்றின் மேலொன்று ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்றது.
வாயுவின் விசேஷ குணம் தொட்டுணர்தல். அதனுடைய பொதுவான தர்மங்கள் நகர்தல், வேகம் ஆகியவைகளாகும். ஸத், மாயா, ஆகாசம் ஆகியவைகளில் இருக்கின்ற குணங்கள், தன்மைகள் வாயுவிடத்திலும் உள்ளன. காற்று இருக்கின்றது என்ற வாக்கியத்தில் இருக்கும் இருத்தல் குணம் தொpகிறது. ஸத்திடமிருந்து வாயுவை பிரித்து பார்க்கும் போது மாயையிடத்தில் இருக்கின்ற மித்யா என்கின்ற சுபாவமானது விளங்கும். ஆகாசத்தை சார்ந்த சப்தம் என்ற குணம் வாயுவிலும் இருக்கிறது. வாயுவிடத்தில் ஸத், மாயா, ஆகாசம் ஆகியவைகளுடைய மூன்று குணங்களான இருத்தல், மித்யா, சப்தம் இருக்கின்றது.
கேள்வி : ஆகாசம் எல்லாவிடத்திலும் வியாபிக்கவில்லை என்று முன்பு சொன்னீர்கள் ஆனால் வாயுவில் வியாபித்திருக்கிறது என்று எப்படி சொல்ல முடியும்?
எல்லாவற்றிலும் ஸத் இருக்கிறது ஆகாசமும் அதேமாதிரி
வியாபிக்கிறது என்று சொல்லவில்லை என்று இதற்குமுன் சொல்லி இருக்கிறீர்கள். இப்போது ஆகாசம் தொடர்ந்து இருக்கிறது
என்று கூறுகிறீர்கள். எப்படி உபதேசம் முரண்படுகிறது?
பதில் : இடைவெளிதான் வியாபிக்கவில்லை என்ற முன்பு சொல்லப்பட்டது. இப்போது சப்த குணத்தின் அடிப்படையில் வியாபிக்கிறது என்று கூறினேன். இந்த என்னுடைய உபதேசத்தில் எங்கே முரண்பாடு இருக்கிறது?
ஸத் என்ற வஸ்துவிடமிருந்து வேறாக இருக்கின்ற காரணத்தினால் தோன்றி இருக்கின்ற பூதங்கள் அனைத்தும் அஸத்தாக இருக்கிறது என்று கூறுகிறீர்கள். அப்போது வெளித்தோற்றத்திற்கு வராத நிலையிலுள்ள மாயாவிடமிருந்து வேறாக இருக்கின்ற காரணத்தால் மாயாவின் ஸ்பரூபமான மித்யாவாக இல்லாமல் ஏன் இருக்கக்கூடாது?
வேற்றுமையை முக்கிய வேற்றுமை, அவாந்த்ர வேற்றுமை என்று இரண்டாக பிரிக்கலாம். (உ-ம்) குதிரைக்கும் பசுவுக்கும் இடையே உள்ளது முக்கிய வேற்றுமை. வெள்ளைப்பசுவுக்கும் கறுப்பு பசுவுக்கும் இடையே உள்ளது அவாந்த்ர வேற்றுமை. இந்த வேற்றுமையில் இரண்டு பொருட்களுக்குமிடையே உள்ள லட்சணங்கள் பொருந்தியிருக்கும் ஆனால் மற்ற விதத்தில் வேற்றுமைகள் இருக்கும். மாயைக்கும் பூதங்களுக்கும் இடையே உள்ள வேற்றுமை அவாந்த்ர வேற்றுமை. ஸவரூபத்தில் வேற்றுமை இல்லை ஆனால் மற்ற விதத்தில் வேற்றுமை இருக்கும். இவைகளுக்குள் மித்யா பொதுவாக இருப்பதால் வாயுவும் மித்யாவாகும்.
சார்ந்திருத்தல் தன்மைதான் வாயுவிடத்திலும் மற்ற பூதங்கள் விஷயத்திலும் மித்யாவாக இருக்கும் தன்மையை நிர்ணயம் செய்யப்படுவதற்கு காரணம். இது மித்யாவின் லட்சணமான மாயையிடமும் அதன் கார்யமான வாயுவிடத்திலும் பொருந்துகின்றது. வெளித்தோற்றத்திற்கு வந்து இருத்தல், வராமல் இருத்தல் என்ற வேற்றுமை இருக்கிறது. என்றாலும் ஸ்வரூப லட்சணம் ஒன்றாக இருப்பதால் இரண்டுமே மித்யாதான்.
சத்யத்திற்கும் மித்யாவிற்கும் உள்ள விசாரம் தான் எடுத்துக் கொண்ட விஷயமானதால் அதை சிந்திக்க வேண்டும், விசாரம் செய்ய வேண்டும். அஸத்துக்குள் அவாந்த்ர பேதங்கள் இருக்கட்டும். அதைப்பற்றி விசாரம் செய்வதால் பயனொன்றுமில்லை. ஸத் வஸ்துதான் பிரம்மன் மற்ற அம்சங்களான வாயு முதலியவைகள் அனைத்தும் மித்யாவாகும். வாயுவின் மித்யா என்ற தன்மையை மெல்ல மெல்ல மனதில் நிலைப்படுத்த வேண்டும். வாயுவில் இருக்கும் சத்தியத்வ புத்தியை விட்டுவிட வேண்டும்.
ஆகாசத்ததை விசாரித்ததைப் போல அக்னியையும் விசாரம் செய்ய வேண்டும். வாயுவைக் காட்டிலும் குறைவாக வியாபிக்கும் தன்மையுடையதாக விசாரம் செய்ய வேண்டும். பிரம்மத்தை எது மறைக்கின்றது என்ற விஷயத்தில், குறைவாக வியாபித்தல், அதிகமாக வியாபித்தல் ஆகியவைகள் பஞ்சகோச விவேகத்தில் ஒவ்வொரு கோசமும் எவ்விதம் பிரம்மத்தை மறைக்கிறது என்ற விசார சாஸ்திரத்தில் பார்க்கலாம்.
வாயுவை விட பத்தில் ஒரு பங்காக குறைந்திருக்கும். தேஜஸ் வாயுவில் ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. ஐந்து பூதங்களுக்குள் உள்ள பத்தில் ஒன்று என்ற ஏற்றத்தாழ்வு புராணங்களில் கூறப்பட்டிருக்கிறது. அக்னி உஷ்ணம், பிரகாசம் ஆகிய தன்மைகளை உடையது. இதனிடத்தில் இதற்கு முன் உள்ள தத்துவங்களின் தன்மைகளும் கூட இருக்கிறது. அவைகள் இருத்தல், மித்யா, சப்தம், தொட்டுணர்தல் ஆகியவைகளாகும். ஸத்தினுடைய இருத்தல், மாயையின் மித்யாத்வம், ஆகாசத்திலிருந்து சப்தம், வாயுவிடமிருந்து தொடுதல் ஆகிய தன்மைகளும் அக்னியுடன் இருக்கும். ஸத்திடமிருந்து வஸ்து இருத்தல் என்ற தன்மை மாயையிலிருந்து தோன்றி இருப்பதால் மித்யா தன்மையும், ஆகாசத்தினுடைய சப்தம், வாயுவின் தொட்டு உணர்தல் ஆகிய அம்சங்களுடன் கூடிய அக்னியினுடைய குணம் ரூபம். இந்த தன்மைகளுடைய அக்னியை ஸத்திலிருந்து வேறாக உள்ள அனைத்தும் மித்யாவென்ற அறிவுடன் விசாரம் செய்து பிரித்து புரிந்து கொள்ள வேண்டும்.
அக்னியை ஸத்திடமிருந்து பிரித்த பிறகு அது மித்யா என்று மனதில் நன்கு பதியும் வரை விசாரம் செய்து கொண்டிருக்க வேண்டும். பிறகு நீரானது அக்னியை காட்டிலும் பத்து மடங்கு குறைவாக வியாபித்திருக்கின்றது என்பதையும், நெருப்பில் நீரானது ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் வி;சாரம் செய்ய வேண்டும். நீர் இருக்கிறது, மித்யா. சப்தம், ஸ்பர்சம், இவைகளுடன் அக்னியின் ரூபம் இருக்கிறது. அவைகளுடன் தொடர்ச்சியாக தன்னுடைய சொந்த குணமான சுவையும் (ரஸம்) இருக்கிறது. ஸத்திலிருந்து நீரை பிரித்து அதனுடைய மித்யாத்வத்தை உறுதியாக மனதில் பதிய வைத்த பிறகு அதிலிருந்து பத்து மடங்கு குறைவாக வியாபித்திருக்கும் பூமியானது அதன் மீது ஏற்றி வைக்கப்பட்டிருப்பதை விசாரம் செய்ய வேண்டும். பூமியில் இருத்தல், மித்யா, சப்தம், ஸ்பர்சம், ரூபம், சுவை இவைகளெல்லாம் மற்றவைகளிலிருந்து வந்த குணங்கள். இதனுடைய சொந்த குணமானது வாசனை (கந்தம்) ஸத்திலிருந்து பிரித்து விசாரம் செய்யப்படட்டும்.
இதுவரை பார்த்தவைகள் எல்லாம் சூட்சும பூதங்களைப் ப்ற்றிய விசாரமாகும். பஞ்ச ஸ்தூல பூதங்களும் சேர்ந்து இருப்பதையே பிரமாண்டம் என்கின்றோம். இந்த பிரம்மாண்டத்திலிருந்துதான் பார்த்து அனுபவிக்கின்ற இந்த உலகம் உருவாகியது. பிரம்மாண்டம் பரிமாணத்தை அடைந்து உயிர்கள் வாழும் பதினான்கு உலகங்களாக மாறியிருக்கிறது. அந்தந்த உலகங்களுக்கேற்ற உடல்களும் தோன்றியிருக்கிறது. இவைகள் யாவும் மித்யாதான் என்று புரிந்து கொள்ள வேண்டும். இத்துடன் சூட்சுமமான பஞ்சபூத விசாரம் முடிவடைந்தது.
ஸ்தூல ஸ்ருஷ்டி விசாரம்
பூமியை ஸத்திலிருந்து பிரித்து விட்ட போது அது மித்யாவாக எஞ்சி இருக்கிறது. இது பூமியென்பதேயில்லை என்று புரிந்து கொள்ள வேண்டும். பஞ்ச ஸ்தூல பூதங்கள் சேர்ந்து மொத்தமாக இருப்பதையே பிரம்மாண்டம் என்று கூறப்படுகிறது. பூமியைக் காட்டிலும் பத்து மடங்கு குறைவாக வியாபித்துக் கொண்டிருக்கிறது. இது பூமியிலிருந்து தோன்றியதுதான்.
உயிரினங்கள் வாழவும், அனுபவிக்க தகுதியுடையதாகவும் மாறிய நிலையே புவனம் என்று அழைக்கப்படுகிறது. பிரமாண்டத்திலிருந்து பதினான்கு உலகங்கள் தோன்றியிருக்கிறது. இந்த உலகங்கள் பிரமாண்டத்தை விட பத்து மடங்கு குறைவாக வியாபித்திருக்கிறது. இந்த உலகங்களிலிருந்து சரீரங்களுடைய ஜுவராசிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்தந்த உலகத்திற்கேற்ற உடலுடன் ஜுவராசிகளின் உடல்கள் தோன்றின.
பிரமாண்டம் உலகங்கள், உடல்கள் ஆகியவற்றை ஸத் வஸ்துவிடமிருந்து பிரித்துப் பார்த்தால் அவைகளும் மித்யாவாக இருப்பதை புரிந்து கொள்ளலாம்.
விசாரம்:
பொதுவாக இருப்பதெல்லாம் தெரிய வரும். இல்லாதவைகள் பார்க்கப்படுவதில்லை.
இருப்பது தெரியவில்லை என்றால் அது ஒரு சூழ்நிலையில், நிபந்தனையில் ஆவரணத்தால் மறைக்கப்பட்டிருக்கலாம். உதாரணமாக
இருளில் உள்ள பொருட்கள் தெரிவதில்லை. அதுபோல அத்வைதமான பிரம்மன்
இருந்தும் தெரியவில்லை என்றால் அது உன்னிடத்தில் இருக்கும் ஆவரணத்தினால்தான் என்று
அறிந்து கொள். இல்லாதது பிரமையாலும், பிராந்தியாலும்,
அத்யாஸத்தினாலும் இருப்பது போல தெரியலாம். உதாரணமாக
கயிற்றில் தோன்றும் பாம்பு. இல்லாத பிரமாண்டம், உலகம், சரீரம் முதலியவை இல்லையென்றால் இருக்கட்டுமே.
அவைகள் தெரிந்து கொண்டிருந்தாலும் அனுபவத்துக்கு இருந்து கொண்டிருந்த
போதிலும் இந்த மித்யா தத்துவத்திற்கு ஒரு குறைவும் வந்து விடாது.
சூட்சும பூதங்களிலிருந்து தோன்றியவைகளான பிரமாண்டம், உலகங்கள், தேகங்கள் ஆகியவைகளெல்லாம் மித்யா என்று உறுதியாக மனதில் பதிந்துவிட்ட பிறகு ஸத் வஸ்துவானது இரண்டற்றது என்ற இந்த அறிவானது எப்பொழுதும் எந்த மாறுதலை அடையாது, மனதில் நிலையாக இருக்கும்.
உலகம் மித்யா என்று நன்கு புரிந்துவிட்ட பிறகு எப்படி வாழ முடியும்?
மித்யா என்ற அறிவானது உலக விவகாரத்திற்கு விரோதமாக
இருக்காது. இந்த அறிவு வந்து நிலைப் பெற்ற
பிறகு மனதில் இருக்கின்ற சம்சாரம் சென்றவிடும். உலகத்தில் அதே
மாதிரிதான் விவகாரம் செய்து கொண்டிருப்போம். அதனால் மனதால் பாதிக்கப்பட
மாட்டோம், துயரத்தை அடைய மாட்டோம். ஸத்தாக
இருக்கின்ற அத்வைதம் பூமி முதலிய பூதங்களைக் கொண்ட த்வைதம் என்று வேறாக பிரித்து புரிந்து
கொண்ட பிறகு இந்த உலகத்தில் அந்தந்த செயல்பாடுகள் எப்படி இருந்ததோ அப்படியேதான் இருக்கும்.
சாங்க்யர், காணாதர், புத்த மதத்தவர் ஆகியவர்கள் எல்லாம் இந்த உலகத்தில் விதவிதமான வேற்றுமைகளை கற்பனை செய்துக் கொண்டு பேசுகிறார்கள். பலவிதமான யுக்திகளையெல்லாம் அனுமானங்களையும் இதற்கு கையாள்கிறார்கள். அவைகள் அவ்விதமாகவே இருக்கட்டும்.
மற்ற மதத்தை சார்ந்தவர்களால் அதிக முக்கியத்துவம் கொடுக்காததும், சாஸ்திர சித்தமான, ஸத் ரூபமானதுமான அத்வைதமானது குறைவாக மதிக்கப்பட்டுவிட்டது. அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அத்வைதிகளான நம்மால் சந்தேகம் இல்லாமல் இருமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காததால்; என்ன குறை வந்துவிட்டது.
ஜகத்தின் மித்யாத்வம் அறிவு வரவர பிரம்மன் சத்தியம் என்ற அறிவு வரும். இருமையின் முக்கியத்துவம் குறைய குறையத்தான் அத்வைத அறிவானது நிலைபெறும். அந்த உறுதியான அறிவினால் மனிதன் ஜீவன்முக்தனாக வாழ்ந்து கொண்டிருப்பான்.
ஹே அர்ஜுனா! ஆத்மா என்ற அறிவினிலே நிலைபெற்றுவிட்டால் அவன் மோகத்தில் வீழ்ந்துவிடமாட்டான். மரணத்தறுவாயில் இந்த அறிவு வந்தாலும் கூட பிரம்மத்துடன் கலந்துவிடுவான். இது பகவான் பகவத்கீதையில் அர்ஜுனனுக்கு கூறய உபதேசம்.
அந்திமக்காலம் என்பது அறியாமை நீங்கும் காலம், மோகம் நீங்கும் காலமாகும்.
ஸத் ஸ்வரூபமான அத்வைதம், பொய்யான த்வைதம் இந்த இரண்டிற்கும்
ஒன்றை மற்றொன்றாக புரிந்து கொள்வதால், ஸத்திலே ஜகத்தை கலந்து
விடுவது இருக்கிறதோ, அறிவு ஸ்வரூபமான ஸத்தை ஜடமான அனாத்மாக்களில்
கலந்து விடுகின்ற அறியாமையின் முடிவு காலமானது அந்திமக்காலம். உண்மை, பொய் கலந்திருக்கும் கலவையில்தான் அவைகளை பிரித்து
பார்த்து அறிவை அடையும் அந்திமக்காலம் என்ற சொல்லுக்குப் பொருளாகும். இதைத் தவிர வேறெந்தப் பொருளும் கிடையாது.
அந்திமக்காலம் என்ற சொல்லுக்கு பொருளாக எல்லோருக்கும் தெரிந்திருப்பது பிராணன் உடலை விட்டு நீங்கும் காலமாகும். அந்த மரண காலத்திலும் அறியாமை சென்றுவிட்டால் மீண்டும் வராது. ஆரோக்கியமாக இருந்து கொண்டு இறந்தாலும், அமர்ந்திருக்கும் போதோ அல்லது நோய்வாய்பட்டோ அல்லது உலகத்தில் அங்கும் இங்கும் சஞ்சரித்துக் கொண்டு இருக்கும் போதோ அல்லது மயக்க நிலையில் இருக்கும் போதோ அல்லது இந்த ஞானியின் உயிர்; பிரியட்டும் அதனால் அறியாமை மீண்டும் வராது.
ஓவ்வொரு நாளும் கனவு, ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாலும் அடைந்து அறிவை மறந்திருந்தாலும் விழித்தபின் அந்த அறிவு இல்லாதவனாக கருதப்படமாட்டான். அதுபோல ஆத்ம வித்யாவை அடைந்து விட்டால் அது அழிவதில்லை.
நாம் அடைந்த அறிவு எப்போது நீங்கிவிடும் என்று பார்க்கும்போது ஒரு பிரமாணத்தின் மூலம் அடைந்த அறிவானது அதைவிட பலமான பிரமாணத்தின் மூலமாக அந்த இழந்து விடலாம். வேதாந்தம்தான் பலமான பிரமாணமாக இருப்பதால் அதன் மூலம் அடைந்த அறிவானது அழிந்து போகாது. ஒரு பிரமாணத்தின் மூலமாக அடைந்த அறிவானது அதைவிட சக்தி வாய்ந்த மற்றொரு பிரமாணத்தின துணையில்லாமல் அழிக்கவோ, நீக்கவோ முடியாது. உபநிஷத்தை காட்டிலும் சக்தி வாய்ந்த பிரமாணத்தை பார்க்க முடியாது.
ஆகவே வேதாந்தத்தினால் நன்றாக உறுதி செய்யப்பட்ட இரண்டற்றதானதும், ஸத் ஸ்வரூபமானதுமான பிரம்மத்தை வேறெந்த பிரமாணத்தாலும் நீக்கப்படமுடியாது. மரணகாலத்திலும் கூட இந்த பஞ்கபூத விவேகத்தினால் அடைந்த மோட்சமானது நம்மிடமே இருக்கும்.
தொகுப்புரை
01-01 ஸ்ருதி வாக்கிய அறிமுகம்
02-06 ஒவ்வொரு பூதங்களின்
குணங்களிலுள்ள வேற்றுமைகள் கூறப்பட்டது
07-18 பூதங்களிலிருந்து
என்னென்ன தோன்றியது என்பதை கூறப்பட்டது. இவைகளிலிருந்து இந்திரியங்கள்
தோன்றின, விசேஷ குணங்கள் கிரகிக்கபட்டுள்ளது.
19-25 மீண்டும் ஸ்ருதி
வாக்கியம் விளக்கப்பட்டது. இதில் “ஏகமேவ
அத்விதீயம்” என்ற வாக்கியத்தில் உள்ள சொற்களின் பொருளானது விரிவாக
விளக்கப்பட்டது.
26-46 சூன்யவாதமானது
சரியான உதாரணங்களுடன் நிராகரிக்கப்பட்டது. சில சந்தேகங்களை எழுப்பி அவைகளுக்கு பதிலளிக்கப்பட்டது.
நியாயவாதி, தர்க்கவாதி ஆகியவர்களின் கொள்கையை நிராகரணம்
செய்யப்பட்டது.
47-58 இந்தப் பகுதியில்
மாயா தத்துவ விசாரம் விரிவாக செய்யப்பட்டது. இதை மித்யாவென்றும்,
அஸாரம் என்பது எடுத்துக்காட்டப்பட்டது. காரியத்தை
வைத்துத்தான் காரணமான மாயையை புரிந்து கொள்ள முடியம் என்ற கூறப்பட்டுள்ளது.
இது ஒரு வகையான சக்தி என்று அறிமுகப்படுத்தி விவரித்துள்ளார்.
59-98 மீண்டும் பஞ்சபூத
விசாரம் விரிவாக செய்யப்பட்டது. இதில் ஒவ்வொரு பூதத்திற்கும்
லட்சணம் கொடுத்து அதன் மித்யாத்வத்தை புரிய வைத்துள்ளார். இவைகள்
மாயையிலிருந்து வந்ததால் மித்யாவென்றும், மாயா ஸத்திலிருந்து
வந்ததால் ஸத் என்றும் புரிய வைத்துள்ளார். புரிந்து கொள்வதற்காக
இவைகள் அவைகளின் காரணத்தில் பத்தில் ஒரு பங்கு வியாபித்திருக்கிறது என்று கூறினார்.
ஒவ்வொரு பூதத்திலும் சொந்த குணத்தோடு அவைகளின் முந்தைய பூதங்களின் குணங்களும்
சேர்ந்து உள்ளது. ஸ்தூல பூதங்களையும், உலகங்களையும்,
தேகங்களாகவும் விரிவாக விளக்கியுள்ளார்.
99-109 முடிவுரை: மித்யாவையொட்டி எழுகின்ற
சந்தேகங்களையெல்லாம் நீக்கி உள்ளார். சத்யமாக நினைத்தவைகள் மித்யாவாகும்
போதும் நம்முடைய அன்றாட விவகாரங்கள் பாதிக்காது. இது பலமான பிரமாணமான
உபநிஷத்தால் கூறப்பட்டிருக்கிறது. இதனால் இந்த அறிவை எதனாலும்
நீக்க முடியாது.
எந்தவொன்று ஸத்தாகவும், ஒன்றாகவும் இருப்பதாக கேட்கப்பட்டதோ, அந்தவொன்றை
சாந்தோக்ய உபநிஷத் ஸ்லோகம் 6.2.1
இங்கு சொல்லப்பட்ட ஸத் புலன்களுக்கு விஷயமாக இல்லாததால் அதை அறிந்து கொள்ள முடியாது. பிரத்யக்ஷ பிரமாணத்தாலும், அனுமானத்தாலும் புரிந்து கொள்ள முடியாது. ஸத்தின் மீது எதையாவது ஏற்றி வைக்கப்பட்டிருந்தால் அவைகளின் துணைக்கொண்டு அவைகளுக்கு ஆதாரமாக இருக்கின்ற ஸத்தை அறிந்து கொள்ள முடியும். இந்த ஐந்து பூதங்களின் விசாரம் செய்தோமானால் அதை நீக்கி ஸத்தை புரிந்து கொள்ள முடியும்.
ஆகாசம், வாயு, அக்னி, நீர், நிலம் ஆகியவற்றின் குணங்களாக வரிசை கிரமமாக சப்தம், தொடுதல், உருவம், சுவை, வாசனை ஆகியவைகள் இருக்கின்றது. இந்த குணத்தின் அடிப்படையில் வேற்றுமைகள் இருக்கிறது. மாயை இந்த குணங்களை எடுத்துக் கொண்டு ஐந்து பூதங்களாக தோற்றமளிக்கிறது. பூதங்களில் குணம் அதிகமாகும் போது ஸ்தூலமாகிறது. ஆகாசத்தில் இருக்கும் ஒரு குணம், வாயுவில் இருக்கும் தொடுதல் என்கின்ற குணத்தோடு சேர்ந்து வாயுவில் இரண்டு குணமாகிறது. வாயுவிலுள்ள இரண்டு குணங்களோடு அக்னியின் ஒரு குணத்தோடு சேர்ந்து அக்னியில் மூன்று குணமாகிறது. அக்னியின் மூன்று குணங்களும் நீரின் ஒரு குணத்தோடு சேர்ந்து நீரில் நான்கு குணமாகிறது. நீரிலுள்ள நான்கு குணங்களும் நிலத்தின் ஒரு குணத்தோடு சேர்ந்து நிலத்தில் ஐந்து குணங்களாகின்றது.
ஆகாசத்திலிருக்கின்ற சப்தமானது எதிரொலி மூலமாக அறியப்படுகிறது. வாயுவில் உஸ் என்ற சப்தமும், உஷ்ணமில்லாமல், குளுமையும் இல்லாத ஸ்பர்சமும் அறியப்படுகிறது. நெருப்பில் புகு, புகு என்ற சப்தமும், சூடாயிருக்கின்ற ஸ்பர்சமும், பிரகாசமாயிருக்கும் ரூபம், நீரில் புலு.புலு என்ற சப்தமும், குளிர்ந்த ஸ்பர்சமும், நெருப்பு ரூபமும், இனிப்பான சுவையும் அறியப்படுகிறது. பூமியில் கடா,கடா என்ற சப்தமும், கடினமாயிருக்கும் ஸ்பர்சமும், நீலம் போன்ற விதவிதமான ரூபங்கள், இனிப்பம், புளிப்பும் முதலிய சுவையும், நல்ல வாசனை, கெட்ட வாசனை ஆகிய இரண்டு விதமான குணங்களும் அறியப்படுகிறது. இந்த பூதங்களில் உள்ள குணங்கள் எல்லாம் தெளிவாக விளக்கப்பட்டது. காது, தோல், கண், நாக்கு, மூக்கு இவைகள் ஐந்தும் ஞானேந்திரியங்களாகும்.
ஆகாசம் - காது - சப்தம் - கேட்கும் சக்தி
எந்த இந்திரியம் எந்த பூதத்திடமிருந்து தோன்றியதோ அந்த பூதத்தின விசேஷ குணத்தைத்தான் கிரகிக்க முடியும். ஞானேந்திரியங்கள் சுபாவமாக வெளி விஷயங்களை நாடித்தான் செல்வதாக படைக்கப்பட்டிருக்கிறது. இந்திரியங்களால் இருப்பதை அனுமானம் மூலமாகத்தான் அறிந்து கொள்ள முடியும்.
இந்த ஐந்து ஞானேந்திரியங்கள் காது முதலிய கோளகங்களில் வீற்றிருந்து செயல்படுகின்றன. சப்தம் முதலியவைகளை விஷயங்களாக கிரகிக்கின்றன. இவைகள் சூட்சுமமாக இருக்கின்ற காரணத்தால் அதனுடைய காரியத்தின் துணைக் கொண்டு அதன் இருப்பபை அறிந்து கொள்ள முடியும். இவைகள் இயற்கையாக வெளி விஷயங்களை நோக்கி ஓடுகின்றது.
இந்த ஞானேந்திரியங்கள் உடலுக்குள்ளே உள்ள விஷயங்களையும் கிரகிக்கின்றன. காதை மூடிக் கொண்டு பார்த்தால் உள்ளேயிருக்கும் சப்தத்தை கேட்க முடியும். பிராண வாயுவின் சப்தமும், ஜடாக்னியின் சப்தமும் கேட்கலாம். நீரை குடிக்கும் போதும், உணவை சாப்பிடும் போதும் உள்ளேயிருக்கும் ஸ்பரிசம் உணரப்படுகிறது. கண்ணை மூடிக்கொண்டால் உள்ளேயிருக்கும் இருளை பார்க்கிறோம். சாப்பிட்டு விட்டு ஏப்பம் விடும்போது மணமும், சுவையும் அறியப்படுகிறது. இதிலிருந்து ஞானேந்திரியங்கள் உள்விஷயங்களையும் கிரகிக்கின்றது என்பதை புரிந்து கொள்ளலாம்.
ஸ்லோகம்-10
பேசுதல், எடுத்தல், நடத்தல், மலம் கழித்தல், சுகத்தை அனுபவித்தல் போன்ற ஐந்து செயல்களுக்குள் இந்த செயல்களைத் தவிர உள்ள அனைத்து செயல்களும் அடங்கிவிடும். விவசாயம், வியாபாரம், சேவை செய்தல் போன்ற செயல்களும் இவை ஐந்துக்குள் அடங்கிவிடும்.
வாய், கைகள், கால்கள், குதம், உபஸ்தம் என்கின்ற கர்மேந்திரியங்களால் மேற்கூறிய அனைத்து செயல்கள் வெளிப்படுகின்றன. இவைகள் வாய் முதலிய கோளகங்களில் இருந்து கொண்டு செயல்படுகின்றன. மனம், புத்தி, சித்தம், அகங்காரம் இவை நான்கும் சேர்ந்ததே அந்தக்கரணம் என்று அழைக்கப்படுகிறது. இதுவே ஞானேந்திரியங்களுக்கும், கர்மேந்திரியங்களுக்கும் தலைவனாக இருக்கிறது. இது இதயத்தில் வீற்றிருக்கிறது. ஸ்தூல இதயம் அதனுடைய இருப்பிடம். இந்திரியங்களின் உதவியால்தான் மனம் ஞானத்தை அடைகிறது. இந்த மனமானது வெளிவிஷயங்களைப் பற்றிய அறிவை இந்திரியங்கள் துணையில்லாமல் அடைய முடியாது. இந்திரியங்கள் வெளி விஷயங்களால் பாதிக்கப்படாமல் அதாவது சுகத்தை விரும்பாமல் இருந்து விட்டால், மற்றவர்களிடத்திலிருக்கும் பலவீனத்தை ஏற்றுக் கொள்ளுதல், பொறுமை, ஆசைப்பட்ட பொருளை அடைவதால் மகிழ்ச்சி வருவது போன்ற உணர்ச்சிகள் எழுவதில்லை. அந்த ஆசை மனதை சென்று அடைவதால் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம்.
ஞானேந்திரியங்களுக்குள் விஷயங்கள் கிரகிக்கப்பட்டு வந்துவிட்ட பிறகு மனது நல்லது, கெட்டதை பார்க்கிறது. மனதின் இந்த செயலை செய்யவிடாமல் தடுத்து விடுவதே மனதைக் கட்டுப்படுத்துவதாகும். இந்த மனதிற்கு சத்துவ, ரஜோ, தமோ ஆகிய குணங்கள் இருக்கிறது. அந்தக் குணங்களினால் மனம் மாறிக் கொண்டு இருக்கிறது, அலைபாய்ந்து கொண்டிருக்கிறது.
பொறுமை, மன்னிக்கும் குணம், பரந்த மனப்பான்மை போன்ற உணர்ச்சிகள் சத்துவ குணத்திலிருந்து தோன்றியவை. ஆசை, கோபம், லோபம், ஆசைக்கு தடை வரும் போதும், எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாத போதும் எழுகின்றது கோபம். பகிர்ந்து கொள்ளாத குணமே லோபம், செயலில் ஒன்றை அடைய முயற்சி செய்து கொண்டிருத்தல் போன்றவைகள் எல்லாம் ரஜோ குணத்தினால் வருபவைகள்.
சோம்பல், விபரீத ஞானம், மோகம், தேவையில்லாத நேரத்தில் வருகின்ற உறக்கம் போன்ற குணங்கள் தமோ குண பிரதானத்தினால் வருபவைகள். செய்ய வேண்டிய செயல்கள் இருந்தாலும் அதைச் செய்யாமல் சோம்பலாக இருத்தல், உறங்கிக் கொண்டிருத்தல் ஆகியவைகள் தமோகுண மேலோங்கி இருக்கும் போது வெளிப்படும். சத்துவ குண பிரதானத்தினால் புண்ணியத்தை அடைகிறோம். ரஜோ குண பிரதானத்தினால் பாவத்தை அடைகிறோம். இந்த குண பிரதானத்தினால் உருவர்கும் தீய குணங்களினால் செயலை செய்வதால் பாவங்களை அடையப்படுகின்றது. சத்துவ குணம் அறிவை அடைய உதவும் ஞான சக்தி, ரஜோ குணமானது செயலில்
தமோ குணத்தினால் பாவமும் வராது, புண்ணியமும் வராது, ஆனால் வாழ்நாள் வீணாக கழிந்து கொண்டிருக்கும். மனதை, ஸ்தூல சரீரத்தை, நான் என்று சொல்பவன் கர்த்தாவாக இருக்கிறான். அகங்காரத்தினால் கர்த்தாவாக இருக்கிறான். இவ்விதமாக உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. தொட்டுணர்தல், கேட்டல் முதலியவைகள் வெளியே அனுபவிக்கிள்ற பஞ்ச பூதங்களினுடைய விகாரம் என்று தெளிவாக தெரிகின்றது. இந்திரியங்கள் முதலியவைகளில் கூட அந்த பஞ்சபூத மாற்றத்தினால் உருவானது என்பதை சாஸ்திர யுக்தியினாலும் அறிந்து கொள்ள வேண்டும்.
அன்னமயத்தின் சூட்சும அம்சம் மனதிலும், ஜலத்தினுடையது பிராணனிலும், தேஜஸின் சூட்சும அம்சம் வாக்கிலும் சேருவதாக சாஸ்திரம் சொல்கிறது.
அனுமான வாக்கியம் - இந்திரியங்கள் பஞ்சபூதங்களிலிருந்து உருவாக்கப்பட்டன.
பத்து இந்திரியங்கள், மனம் ஒன்று சேர்ந்து எவைகளையெல்லாம் அறிகின்றதோ, அனுமானத்தினாலும், சாஸ்திர பிரமானத்தினாலும் எவைகளெல்லாம் அறியப்படுகின்றதோ அவைகளனைத்தும், எவைகளெல்லாம் இருக்கின்றதோ அவைகளும், ஜகத்தும் இதம் என்ற சப்தத்தினால் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. நாம் அனுபவிக்கும் இவைகளனைத்தும் படைப்புக்கு முன்னே இரண்டற்ற ஒன்றாக மட்டும் இருக்கின்ற ஸத் மட்டும்தான் இருந்தது. பெயர், உருவங்கள் எதுவும் இல்லை. இதுதான் ஆருணியின் உபதேசம்.
வேற்றுமைகளில் மூன்று வகையுண்டு. அவைகள் 1.ஸ்வகத வேற்றுமை, 2.ஸஜாதீய வேறறுமை, 3.விஜாதீய வேற்றுமை ஆகியவைகளாகும்.
ஒரு மரத்திடம் இருக்கின்ற வேற்றுமை ஸ்வகத பேதம். ஒரு மரத்தில் இலை, கிளை, பூ, பழம் போன்றவைகளால் இந்த பேதம் ஏற்படுகிறது. இந்த மரத்ததை தவிர வேறு வகையான மரங்களும் இருப்பதால் ஸஜாதீய பேதம் வந்து விடுகிறது. மரத்திற்கு வேறாக கல், மண் போன்ற பொருட்களோடு ஒப்பிட்டு பார்க்கும்போது விஜாதீய பேதம் வந்து விடுகிறது;. வேற்றுமையுடன் இருக்கின்ற ஒன்றில் உள்ள வேற்றுமையானது ஒரு கட்டுப்பாட்டுக்குள், வரையறைக்குள் அதை வைத்திருக்கும்.
எவ்விதம் ஒரு பொருளுக்கு மூன்றுவித வேற்றுமைகள் இருக்கிறதோ அதுபோல ஸத் என்கின்ற வஸ்துவுக்குள் வருகின்ற வேற்றுமைகள் நீக்கப்படுகின்றது. இது ஒன்றுதான் இருக்கிறது என்று சொல்லும்போது ஸ்வகத பேதம் நீக்கப்படுகறது. ஓன்று மட்டும்தான் இருக்கிறது என்று சொல்லும்போது ஸஜாதீய பேதம் நீக்கப்படுகிறது. இரண்டற்றது என்று சொல்லும்போது விஜாதீய பேதம் நீக்கப்படுகிறது.
எது அவயவங்களுடன் இருக்கிறதோ அது ஸ்வகத வேதத்துடன் இருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். உறுப்புக்களுக்கு நாசம் வந்தால் அந்த பொருளுக்கும் நாசம் வந்து விடும். இதிலிருந்து அறிந்து கொள்வது ஒரு பொருள் அழியக்கூடாது என்றால் அதனிடத்தில் உறுப்புக்கள் இருக்கக்கூடாது.
ஸத்திற்கு உறுப்புக்கள் இருப்பதாக சந்தேகப்படக்கூடாது. ஸத் அவயவங்களுடன் இருப்பதாக காட்டுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே ஸத்திற்கு ஸ்வகத பேதம் என்பது இல்லையென்று உறுதியாகிறது. நாமங்களும், உருவங்களும் ஸத்திற்கு அவயவங்கள் அல்ல. ஏனென்றால் இந்த நாம-ரூபங்கள் ஸ்ருஷ்டிக்கு முன்னால் இல்லை.
நாம-ரூபங்களின் வெளிப்பாடே ஸ்ருஷ்டியாகும். இந்த ஸ்ருஷ்டிக்கு முன்னே இவைகளின் வெளிப்பாடு இல்லை. ஆகவே ஸத்தானது அவயவங்களற்றது. ஆகாசத்தைப் போல இது இருப்பதை புரிந்து கொள்ளலாம்.
ஜாதி என்பது ஒன்றுதான் ஆனால் அது எல்லாவிடத்திலும் வியாபித்திருக்கிறது. மனிதத்தன்மை என்பது ஒன்றுதான் ஆனால் அது எல்லா மனிதர்களிடத்திலும் வியாபித்திருக்கிறது. ஸத்திற்கு வேறாகவொரு ஸத் கிடையாது. அது எந்தவொன்றையும் சார்ந்து இல்லாததால் இவ்வாறு கூறப்படுகிறது. நாம-ரூபங்களாக இருக்கின்ற ஜகத் உபாதி வேற்றுமையினால் இவ்வாறு தோன்றுகிறது. ஆனால் உண்மையில் ஸத்திற்கு ஸஜாதீய பேதம் கிடையாது.
மனிதனிடத்தில் விஜாதீய பேதம் இருப்பதற்கு காரணம் மனிதனைத் தவிர மற்றவைகளும் இருக்கின்றது. எந்த தன்மையில் வேற்றுமை இருக்கிறது என்பதை சொல்ல வேண்டும். வேற்றுமையை பார்க்கின்ற நான் (அனுயோகி) எதனிடத்தில் (பிரதியோகி) வேற்றுமையை பார்க்கிறேன். இருத்தல் விஷயத்தில் விஜாதீய பேதம் இருக்க வேண்டுமென்றால் ஸத்திற்கு அப்பாற்பட்ட ஏதாவது ஒன்று இருக்க வேண்டும். ஸத்திற்கு வேறுபட்டதாக தோன்றுவது அஸத் மட்டும்தான். ஆனால் இது பிரதியோகியாக இருக்கும் தன்மை கிடையாது. இதுவே அத்வீதியம் என்று குறிப்பிடப்படுகிறது.
ஸத்திற்கு விஜாதீய பேதமாக இருப்பது அஸத்தாகும். அந்த அஸத்தானது இல்லையென்று அறியப்படுகிறது. ஆகவே இந்த இல்லாதவொன்றுக்கு பிரதியோகியாக இருக்கும் தகுதியை இழந்துவிடுகிறது. எனவே ஸத்திற்கு விஜாதீய பேதமே வரமுடியாது.
ஸத்தானது ஒன்றுமட்டும்தான், இரண்டற்றது என்பது நிலைநாட்டப்பட்டுவிட்டது. இந்த விஷயத்தில் சில சூன்யவாதிகள் மனக்குழப்பத்துடன் இருக்கிறார்கள். அவர்களுடைய கருத்து இவைகளெல்லாம் ஸ்ருஷ்டிக்கு முன்னால் அஸத்தாக இருந்தது. அதாவது சூன்யமாகத்தான் இருந்தது. இதிலிருந்து அவர்கள் சொல்ல வருவது சூன்யம்தான், ஏகமேவ அத்விதீயம் என்பதுதான்.
நீரில் மூழ்கியவனுடைய இந்திரியங்கள் எவ்வாறு சக்தியிழந்து இருக்குமோ அவ்வாறு சூன்யவாதிகளின் புத்தியும் செயலிழந்து இருக்கிறது. தர்க்கத்தினால் பிரம்மத்தை அறிய முயல்வது நீருக்குள் இருந்து கொண்டு கண்களை பயன்படுத்துவது போல இருக்கிறது. பிரம்மன் பிளவுபடாதது, ஒன்றாகவே இருக்கிறது என்பதைக் கேட்டு அதை சரியாக புரிந்து கொள்ளாமல் இந்த பிரம்மத்திடமிருந்து பயத்தை அடைகிறார்கள்.
கௌடபாதர் என்ற பெயருடைய குருவானவர் வேற்றுமையற்ற பிரம்ம விஷயத்தில் மிகவும் அளவுகடந்த பயத்தைப் பற்றி சொல்லியிருக்கறார். குணங்களுடன் கூடிய சகுண பிரம்மத்தில் நிலைபெற்றுள்ளவர்களான மற்ற யோகிகளுக்கு, சூன்யவாதிகளுக்கு
வணங்கத்தக்க பாதங்களையுடைய பகவான் சங்கரர், சூன்யவாதிகளை வறட்டு வாதத்தில் திறமையானவர்கள் என்றும், பயனற்ற வாதங்களில் புத்திசாலிகள் எனவும் கூறியிருக்கிறார். இவர்கள் உண்மையை அறியும் விஷயத்தில் குழப்பத்தில் இருக்கிறார்கள். தர்க்கத்தினால் அடைய முடியாத ஸத் ஸ்வரூபமான ஆத்ம விஷயத்தில் இவர்கள் குழம்பி இருக்கிறார்கள்.
உபநிஷத் கூறும் கருத்துக்களை மதிக்காமல் மூர்க்கத்தனத்தினால் இந்த புத்த மதத்தை சார்ந்த அறியாமையுடன் இருக்கின்ற பௌத்தர்கள் ஆத்மா என்பது ஒன்றுமில்லை என்று பேசுகிறார்கள். இவர்கள் அனுமானம் என்ற ஒரு பிரமாணத்தை மட்டும் பயன்படுத்துபவர்கள். அதனால்தான் அவர்கள் இத்தகைய அறிவை அடைந்து இருக்கிறார்கள். ஒருவன் எந்த பிரமாணத்தை பயன்படுத்துகின்றானோ, அது கொடுக்கும் அறிவைத்தான் அடைவான். அவர்கள் இத்தகைய அறிவை அடைந்திருக்கிறார்கள் என்று சுரேஷ்வராச்சாரியார் கூறுகிறார்.
இருத்தல் சூன்யத்தின் ஸ்வரூபமா அல்லது சம்பந்தம் உடையதா? என்ற கேள்விக்கு விடை தேட வேண்டும். அதாவது சுடுநீர் என்று சொல்லும்போது சுடுதல் நீரின் ஸ்வரூபமா? அல்லது நீரோடு சம்பந்தம் உடையதா? என்று விசாரிக்கும் போது சுடுதல் நீரோடு சம்பந்தம் உடையது என்று அறிந்து கொள்ளலாம். நெருப்பு சுடுகின்றது என்று சொல்லும் இடத்தில, சுடுதல் நெருப்பின் சுபாவம் என்று சொல்வோம். அதேபோல சூன்யம் என்பதற்கு இல்லாதது என்று அர்த்தம். எனவே சூன்யம் இருந்தது என்ற வாக்கியத்தில் இருத்தல் சூன்யத்தோடு சம்பந்தப்படாதது, அதனுடைய ஸ்வரூபம் கிடையாது. இது வியாகாத தோஷம். முரண்பாடான வாக்கியமாக இருக்கும். அதாவது நான் ஊமை என்று சொல்வது போன்றதாகும்.
சூன்யம் இருந்தது என்று சொல்லும் போது, இருத்தல் சூன்யத்தோடு சம்பந்தப்பட்டு இருக்கிறதா? அல்லது இருத்தல் அதன் ஸ்வரூபமாகவே இருக்கிறதா? என்று விசாரிக்கும் போது இவையிரண்டும் சூன்யத்தோடு பொருந்தாது. இதனால் வியாகாத தோஷம் இதில் வந்து விடும்.
இருளுடன் ஒளி சம்பந்தமே ஏற்படாது. சம்பந்தமே இல்லாதபோது அதன் ஸ்வரூபமாக இருக்க முடியாது. அதுபோல ஸத்தானது அஸத்தோடு சேர முடியாது. அப்படியிருக்கும் போது எப்படி ஸ்வரூபமாக இருக்கமுடியும் என்று சொல்கிறாய்.
ஆகாசம் முதலிய பஞ்சபூதங்களின் விகாரங்களாக இருக்கின்ற இந்த உலகம் வெறும் நாம-ரூபம்தான். மாயையினால் அறியாமையினால் நன்றாக பிரம்மத்தின் மீது ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்றது. சூன்யவாதி சொல்வது போல சூன்யமும் வெறும் நாம-ரூபம்தான் என்று சொன்னால் அதுவும் சரிதான்.
அந்த ஸத்தும் நாம, ரூபம் என்கின்ற இரண்டாக கற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. என்று கூறுவது தவறாகும். இந்த நாம ரூபங்களுக்கு ஆதாரமாக இருக்கின்றது ஸத். ஆதாரம் இல்லாமல் தவறு எதுவும் நேராது. ஓன்று மித்யாவாக இருக்க வேண்டுமானால் அதற்கு ஏதாவது ஆதாரம் இருக்க வேண்டும் என்ற நியதி இருக்கிறது. ஆதாரமில்லாமல் நாம் எதையும் ஏற்றி வைக்க முடியாது. கயிறு இல்லாமல் பாம்பு தோன்றாது. எனவே ஆதாரமில்லாத அத்யாஸத்தை பார்க்கவே முடியாது. ஸத் என்கின்ற ஆதாரமில்லாமல் நாம ரூபங்கள் தோன்றாது.
ஸத் என்ற சொல்லுக்கும், அஸத் என்ற சொல்லுக்கும் வேற்றுமை இருந்தால் இருமை வந்துவிடும். இந்த இரண்டு சொற்களுக்குமடையே வேற்றுமையில்லை என்று சொன்னால் புனருக்தி தோஷம் ஏற்பட்டுவிடும். அதாவது சொன்னதையே திரும்ப சொல்லுதல் என்ற குறையே புனருக்தி தோஷம். ஜபம் செய்யும்போது ஒரே நாமத்தையே திரும்ப திரும்ப சொல்கின்றோம். குருவானவர் ஒரே விஷயத்தையே திரும்ப திரும்ப உபதேசிப்பது புனருக்தி தோஷம் கிடையாது. புரியாததை திரும்ப திரும்ப சொன்னால் தோஷமாகாது. புரிந்துவிட்டால் அதுவே தோஷமாகிவிடும். எனவே இந்த விஷயத்தில் சந்தேகம் கொள்ளாதே. உலக வாழ்வில் நம் அனுபவத்தில் இவ்விதமான ஒரே சொல் திரும்ப திரும்ப சொல்வதை பார்க்கின்றோம்.
செயலை செய்கின்றான், சொல்லை சொல்கின்றான், சுமையை சுமக்கின்றான் என்று சொல்வது போல இதை எடுத்து கொள்ள வேண்டும். இப்படிபட்ட வாசனையுடன் கூடியவர்களுக்காக ஸத் இருந்தது என்று கூறப்பட்டுள்ளது. காலம் என்றவொன்றே தோன்றாத போது எப்படி முன்னே என்ற சொல் கூறலாம் என்று வினவினால் கால வாசனையினால் அவ்வாறு கூறப்பட்டது என்று ஏற்றுக் கொள்ளலாம். சீடர்களுக்குத்தான் இவ்வாறு கூறப்படுகிறது. இந்த வாக்கியத்தில் உள்ள இந்த இருமையை சந்தேகப்படக் கூடாது.
கேள்விகளும், சந்தேகங்களும், பதில்களும் விவகாரம் செய்யும்போது மனம் இருமையில்; இருக்கலாம். அத்வைத நிலையில் மனம் இருக்கும்போது சந்தேகமும், கேள்வியும் இருக்காது. பதில்களும் கூட இருக்காது. அத்வைதம் மட்டும்தான் அசைவற்றதாகவும், அமைதியுடனும், ஆழமானதாகவும், மனதினால் கிரகிக்க முடியாததாகவும் இருக்கிறது. அது வெளிச்சமும் கிடையாது, இருளும் கிடையாது. அதாவது இருமைக்கு அப்பாற்பட்டதானதாக இருக்கிறது. அனைத்தையும் வியாபித்துக் கொண்டிருக்கிறது. பெயரற்றது, வெளித்தோற்றத்திற்கு வராதது, உருவமற்றது. விளக்க முடியாததாக இருக்கின்றது. இந்த ஸத் மட்டும்தான எஞ்சியிருக்கிறது.
ஆகாசத்தை தவிர மற்ற நான்கு பூதங்கள் அஸத்தாக, ஸத்யமானதாக இல்லாததை ஏற்றுக் கொள்கிறேன். பரமாணு என்ற நிலைவரை அவைகள் நாசத்தை அடைகிறது. எனவே அவைகளை நிலையற்றவைகளாக ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் ஆகாசத்தினுடைய இல்லாமையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்ற கருத்து வரும் போது இவ்வாறு எண்ணிப் பார்க்க வேண்டும். பூமி முதலிய நான்கு பூதங்களை நீக்கி வெறும் ஆகாசத்தை மட்டும் எவ்விதம் புத்தியால் புரிந்து கொண்டிருக்கிறோமோ, அவ்விதமே ஆகாசமும் இல்லாத ஸத்தானது, பிரம்மமானது புத்தியைக் கொண்டு கிரகித்துக் கொள்ள வேண்டும்.
நான்கு பூதங்கள் இல்லாமல், பதார்த்தங்கள் இல்லாமல் ஆகாசம் மட்டும் பார்க்கப்படுகின்றது என்றால் இருளும், ஒளியும் இல்லாமல் ஆகாசத்தை பார்க்க முடியாது. பிரத்யக்ஷ பிரமாணத்திற்குட்படாத ஒரு தத்துவத்தை நித்யம் என்று சொல்ல முடியாது. மேலும் ஆகாசத்தை நீக்கி ஸத் மட்டும் இருக்கிறது என்று சொல்லும் போது ஆகாசத்தை பிரத்யக்ஷ பிரமாணத்தால் பார்க்க முடியாது அல்லவா?
அஸத்துடன் கலக்காத நாம-ரூபங்களில்லாமல் இருக்கின்ற ஸத் வஸ்து அறிவாளிகளால் தெளிவாக அனுபவிக்கப்படுகிறது. மனம் அமைதியாக இருக்கும் போது, விக்ஷேபங்கள் இல்லாத போது ஸத்தானது தெளிவாக பிரகாசிக்கின்றது. அந்த நிலை சூன்யமான நிலையில்லை. எண்ணம் இல்லாததினால் நான் இருக்கின்றேன் என்ற எண்ணம் மட்டும்தான் இருக்கிறது. அந்த நிலை சூன்யமான நிலை கிடையாது.
ஸத் இருக்கிறது என்ற எண்ணமும் இல்லையென்றால் ஸத் இல்லையல்லவா? ஸத் புத்தி இருக்க வேண்டாம். ஏனென்றால் அது சுயபிரகாச ரூபமாக இருந்து கொண்டு இருக்கிறது. அதன் இருப்பை அறிவதற்கு வேறெந்த பொருளும், பிரமாணமும் தேவையில்லை. மன அமைதியையும் சாட்சியாக பார்த்துக் கொண்டிருக்கிறது. நான் இருக்கின்றேன், ஸத் ஸ்வரூபம் மட்டும் இருக்கின்றது என்பதை தகுதியுடைய மனிதர்களால் புரிந்து கொள்ளப்படுகிறது. எவ்விதம் மனமானது சஞ்சலமடையாமல் இருக்கும் போது சாட்சி சைதன்யம் சஞ்சலமற்று அமைதியாகவும், ஒன்றாக மட்டும் இருக்கிறதோ அதுபோல மாயை வெளிப்படுவதற்கு முன்பு ஸத்தானது ஒன்றாகவும், இரண்டற்றதாகவும் இருக்கின்றது.
மாயை என்பது சாரமற்றது, தனியாக இருக்கும் சக்தியற்றது. காரியத்தின் மூலமாக அறியப்படுவது, யூகிக்கக்கூடியது, ஸத்திடம் இருக்கின்ற சக்தி ஆகிய இவைகளே மாயையின் லட்சணங்களாக கூறப்படுகிறது. அக்னியிடத்தில் இருக்கும் சக்தியைப் போன்றது இந்த மாயா சக்தி. உதாரணமாக ஒருவருடைய வாயைப் பார்த்து இவர் நன்றாக பாடுவாரா, மாட்டாரா என்பதை சொல்ல முடியாது. அவர் பாடிக் கேட்ட பின்புதான் அவரிடத்தில் இருக்கும் பாடும் சக்தியை அறிந்து கொள்ள முடியும். சக்தியானது வெளிப்படும்போதுதான் அதை புரிந்து கொள்ள முடியும். அக்னியிடத்தில் சுடும் தன்மையே அதனுடைய சக்தியாக புரிந்து கொள்ள வேண்டும். உஷ்ண சக்தியை உணர்ந்து விட்டால் அக்னியை தெரிந்து கொள்கிறோம். அதுபோல உலகமாக தோன்றி கொண்டிருக்கின்ற மாயா சக்தியை பார்த்து ஸத்தை புரிந்து கொள்ளலாம். சக்தியை அது வெளிப்படுவதற்கு முன்பு அறிந்து கொள்ள முடியாது. எந்த சக்தி எந்த இடத்தில் இருக்கிறது என்பதை எவராலும் சொல்ல முடியாது.
மித்யா – ஒரு பொருளின் இருத்தலின் தன்மையைக் குறிக்கும்.
நெருப்புக்கு நெருப்பே சக்தியாக இருக்க முடியாதது போல ஸத்தினுடைய சக்தியானது ஸத் அல்ல. ஸத்துக்கும் வேறானது இருந்தால் அதனுடைய தத்துவத்தை சொல்வாயாக என்று வினவினால் அதனுடைய ஸ்வரூபம் எனனவென்று சொல்லுங்கள்.
சூன்யம் என்று சொன்னால் அது மாயாவின் காரியம் என்று சொல்லப்பட்டது. எனவே சூன்யம் என்றும் சொல்ல முடியாது. இந்த சூன்யமானது அஸத்தும் அல்ல, ஸத்தும் அல்ல. அது எப்படி இருக்கின்றதோ அப்படியிருப்பதாக ஏற்றுக் கொள்வாயாக. அதுவே அதன் தன்மையாக புரிந்து கொள். இந்த சக்தியை விளக்க முடியாது என்று தெரிந்து கொள்.
மாயா நிஸ்தத்துவம் என்பதற்கான பிரமாண வேதவாக்கியம் மாயா சக்தி அஸத்தும் அல்ல ஸத்தும் அல்ல என்று கூறுகிறது. ஸ்ருஷ்டிக்கு முன்னே சக்தியாக மட்டும் இருக்கும். ஆனால் சக்தியாகவே தமஸாக மட்டும் இருந்தது. தமஹ என்ற சொல் மாயைத்தான் குறிக்கிறது. தமஹ என்பது ஆவரணமாக இருக்கின்ற மாயையின் தன்மையை குறிக்கிறது. ஸத்தினுடைய சம்பந்தத்தினால் இந்த தமஸுக்கு, மாயைக்கு இருத்தல் என்ற தன்மை தற்காலிகமாக கிடைத்தது. பாம்பின் இருத்தல் கயிற்றின் இருத்தலை குறிப்பதைப் போல புரிந்து கொள்ள வேண்டும். இது அறிவினால் நீக்கப்படுவதால் இதற்கு தனக்கென்று இருத்தல் என்பது கிடையாது.
ஆகவேதான் பிரம்மத்திற்கு வேறாக இரண்டாவதாக எதையும் சூன்யத்தைப் போல கணக்கிடுவதில்லை. உதாரணமாக உலகத்தில் உள்ள ஒருவனிடம் இருக்கும் சக்தியையும் அவனையும் பிரித்துப் பார்ப்பதில்லை. தனித்தனியாக இருத்தலை பிரித்து பிரித்து கணக்கிட மாட்டோம்.
சக்தியின் அளவைப் பொறுத்து வாழ்க்கையின் தரம், வளர்ச்சி இருக்கும் என்று கூறும்போது வளர்ச்சிக்கு காரணம் சக்தியல்ல. அந்த அறிவின் வெளிப்பாடுதான் வளர்ச்சிக்கு காரணமாக அமைகின்றது. போர், விவசாயம், வியாபாரம் ஆகியவற்றில் சக்தியை வெளிக்காட்டும்போதுதான் அவன் வளர்ச்சி அடைகிறான். எனவே சக்தியின் வெளிப்பாடுதான் ஒருவனுடைய உயர்வு, தாழ்வுக்கு காரணமாக இருக்கிறது.
எல்லாவிதத்திலும் சக்தியை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. சக்தியினுடைய காரியம் தோன்றாததால் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. எனவே இருமையை சந்தேகப்பட முடியாது.
அந்த மாயா சக்தியானது பிரம்மனிடத்தில் முழுமையாக வியாபிக்கவில்லை. ஆனால் ஒரு பகுதியில் மட்டும் வியாபித்திருக்கிறது. பூமியில் உள்ள படைக்கப்பட்ட பூதங்கள் அனைத்தும் பிரம்மத்தினுடைய நான்கில் ஒரு பங்கு மட்டும்தான், தானாக பிரகாசிக்கின்ற பிரம்மனாக ஆத்ம ஸ்பரூபமாக மீதி மூன்று பங்காக இருக்கின்றது. இது மாயையானது பிரம்மத்தின் ஒரு பகுதியை மட்டும்தான் வியாபிக்கின்றது என்று வேதசாஸ்திரம் கூறுகிறது. இந்த உலகம் முழுவதையும் பிரம்ம ஸ்வரூபமாகிய நான் என்ற அம்சத்தினால் வியாபிக்கப்பட்டிருக்கிறது. இவ்விதம் கிருஷ்ண பகவான் அர்ஜுனனுக்கு கூறியுள்ளார். இந்த ஜகத்தானது ஒரு பகுதியை மட்டும்தான் வியாபித்திருக்கிறது.
அந்த பரமாத்மா உலகத்தையம், அனைத்து படைப்புக்களையும் முழுமையாக வியாபித்தும் அதைக் கடந்தும் இருக்கிறார். இந்த கருத்து புருஷ ஸுக்தத்திலும், சகுண பிரம்மனாகவும் (பிரபஞ்சத்துடன் கூடியதாகவும் ), நிர்குண பிரம்மனாகவும் ( காரிய பிரபஞ்சமற்றதாகவும்) இரண்டுவிதமாக பிரம்மன் இருக்கிறது என்று பிரம்ம சூத்திரத்திலும் கூறப்பட்டிருக்கிறது.
பிரம்மன் அம்சமற்றதாக இருந்த போதிலும் ஏதோ ஒரு அம்சத்தை அதன் மீது ஏற்றி வைத்து முழுமையாகவோ, ஒரு அம்சத்தையோ இந்த மாயை வியாபிக்கின்றது என்று கேட்கின்ற சிஷ்யனுக்கு, சாதகனுக்கு, அக்ஞானிக்கு புரியும் வகையில் ஒரு அம்சத்தை பாதிக்கிறது என்று சொல்லப்படுகிறது. கேட்பவனுக்கு நன்மை வரவேண்டுமென்று நோக்கத்தை உடைய வேதமானது இவ்வாறு கூறுகிறது.
ஸத்தாக இருக்கின்ற பிரம்மத்தை சார்ந்திருக்கின்ற சக்தியானது (மாயை) ஸத் ஸ்வரூபத்தில் காரியமான பிரபஞ்சத்தை படைக்கின்றது, விக்ஷேபம் செய்கின்றது, அத்யாஸம் செய்கின்றது. சுவரில் பலவிதமான படங்கள் வரைந்திருப்பதைப் போல பிரம்மத்தின் மீது மாயை படைப்புக்களை ஏற்றி வைத்து இருக்கிறது. ஆனால் மாயை பிரம்மத்தை சார்ந்து இருக்கிறது.
ஆகாசமானது முதலில் படைக்கப்பட்டது. இது இடம் கொடுக்கும் தன்மை உடையது. இது இடைவெளி கொடுக்கின்ற தன்மையுடையது. இந்த ஆகாசம் இத்தகைய தன்மையுடையதாக இருக்கிறது. இந்த ஆகாசம் இருக்கிறது என்பதிலிருந்து இருத்தல் என்பது ஆகாசத்திற்கும் சென்றுள்ளது என்பதை அறியலாம்.
ஸத் ஒரே ஒரு தன்மையுடைய தத்துவமாக இருக்கிறது. ஆகாசம் இரண்டு தன்மை உடையதாக இருக்கிறது. ஸத்தில் இடம் கொடுத்தல் தன்மை இல்லை. ஆகாசத்தில் இருத்தலும், இடம் கொடுக்கும் தன்மை ஆகிய இரண்டும் இருக்கிறது.
இடம் கொடுக்கும் தன்மை அல்லது சப்தம் ஆகாசத்தின் குணமாக இருக்கிறது. இந்த குணமானது ஸத் இடத்தில் இல்லை. ஆகாசத்தில் இரண்டு இருக்கிறது அவைகள் ஸத், சப்தம் ஆகும். அதனால் ஸத் ஒன்றாகவும், ஆகாசம் இரண்டு தன்மை உடையதாகவும் இருக்கிறது.
மாயையானது தர்மியை தர்மமாகவும், தர்மத்தை தர்மியாகவும் மாற்றி புரிந்து கொள்ள வைத்து விடுகிறது. தங்கத்திலான வளையல் என்று கூறும் வாக்கியத்தில் தர்மியான தங்கம் தர்மமாகிவிட்டது. தங்கத்தில் இருந்துதான் வளையல் உருவாக்கப்பட்டிருக்கிறது. வளையல்தான் தங்கத்தினுடைய தர்மம். இதுவே தர்மியாக கூறப்படுகிறது. எந்தவொரு சக்தியானது ஆகாசத்தை தோற்றுவித்ததோ அதே மாயா சக்தியானது ஸத்திற்கும், ஆகாசத்திற்கும் வேற்றுமை தெரிகின்ற நிலையை செய்ய வைத்தும், தர்மமாக இருக்கும் தன்மையையும், தர்மியாக இருக்கும் தன்மையையும் தலைகீழாக புரிந்து கொள்ள வைத்திருக்கிறது.
ஸத்திற்கு ஆகாசம் என்கின்ற தன்மை வந்துவிட்டது. உதாரணமாக இருக்கும் இடம் என்ற வாக்கியத்தில் இருத்தல் தர்மமாகி, இடம் தர்மியாகி விடுகிறது. ஸத்தின் தன்மை ஆகாசத்திற்கு வந்துவிட்டது. ஸத்தைப் பற்றிய அறியாமையினால் தர்க்கவாதிகளும், மற்றவர்களும் இந்த தவறை செய்கிறார்கள். இது மாயையினால் மட்டும் செய்யக்கூடியது.
எந்தவொரு பொருளானது எப்படி இருக்கின்றதோ அதனுடைய தன்மையானது சரியான பிரமாணத்தின் மூலமாக அப்படியே தெரிகின்றது. பிராந்தியின் போது அதுவே வேறாக தெரிதலும், தவறாக தெரிவதும் எல்லோராலும் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
இவ்விதம் தவறாக புரிந்து கொள்ளும் வாய்ப்பு இருப்பதனால், வேதசாஸ்திர விசாரம் செய்வதற்கு முன் எந்தப்பொருள் எப்படி தெரிகின்றதோ அதுவே விசாரம் செய்வதனால் தலைகீழாக மாறிவிடும். ஆகவே விசாரம் செய்ய வேண்டியிருப்பதால் ஆகாசத்தைப் பற்றிய விசாரத்தை மீண்டும் மேற்கொள்ளலாம்.
ஸத்தையும், ஆகாசத்தையும் விசாரத்தின் விஷயமாக எடுத்துக்கொள்கிறோம். விசாரத்தின் முடிவில் ஆகாசம் வேறு, ஸத் வேறு என்று பிரித்து அறிய வேண்டும். பிரித்த பிறகு ஸத் உண்மையானது என்றும், ஆகாசம் மித்யா என்றும் புரிந்து கொள்ள வேண்டும். ஆகாசம், ஸத் இரண்டையும் உச்சரிக்கும் போது சப்தம் வேறுபடுவதால் இரண்டு வஸ்து என்பது உறுதியாகிறது. புத்தியில் வேற்றுமை இருப்பதனால், மனதில் தோன்றும் எண்ணங்களிலும் வேற்றுமை இருப்பதனால் ஆகாசமும். ஸத்தும் வெவ்வேறானவை என்று அறிந்து கொள்ளலாம். ஏன் இரண்டு காரணங்களைக் கொடுக்கிறார் என்று ஆராய்ந்து பார்க்கும்போது சப்த பேதம் இருந்தாலும் ஒரே பொருளைக் குறிக்கலாம். எனவே இரண்டாவது காரணமான வெவ்வேறு அர்த்தங்களை உடையது என்பதன் மூலமாக சாத்தியத்தை உறுதிப்படுத்தப்படுகிறது. ஸத்தானது வாயு முதலிய மற்ற பூதங்களிலும் இருக்கிறது. ஆனால் ஆகாசம் மற்ற இடங்களில் இல்லை என்ற வேற்றுமை அறிவும் இருக்கிறது. இந்த வேற்றுமைகளின் மூலம் ஆகாசமும், ஸத்தும் வெவ்வேறானது என்று நிலைநாட்டலாம்.
ஸத் என்கின்ற வஸ்துவானது அதிகமாக வியாபித்திருப்பதால் அதை தர்மி என்று கூறப்படுகிறது. ஆகாசமானது தர்மமாக இருக்கிறது. இந்த அறிவின் துணைக் கொண்டு ஸத்திலிருந்து ஆகாசத்தை பிரிக்கும் போது ஆகாசத்தின ஸ்வரூபம் என்ன என்று அறிந்து கொள்ள முடியும்.
ஆகாசம் என்பது இடம் கொடுப்பது என்று கூறினால் அதை அஸத் என்றும். ஸத்திலிருந்து வேறுபட்டது என்றும் புரிந்து கொள்ளலாம். இது அஸத்தும் அல்ல, இல்லாததும் அல்ல, ஏனென்றால் இது நம் அனுபவத்தி;ற்கு இருக்கிறது என்ற சந்தேகம் வந்தால் இது மித்யாவின் லட்சணமாக இருப்பதால் இந்த கருத்துக்கு முரணாக இருக்கிறது என்று தெளிவடைய வேண்டும்.
அனுபவத்தில் ஆகாசம் பிரகாசிக்கிறது என்றால் பிரகாசித்தால் என்ன? இது மாயையினிடத்தில் இருக்கின்ற அழகு, அலங்காரம் என்று தெரிந்து கொள். எது இல்லையோ ஆனால் பிரகாசித்துக் கொண்டிருக்கிறதோ அதுவே மித்யாவாகும். எது ஸ்வரூபமாக இல்லாததாக இருக்கின்றது ஆனால் அனுபவத்திற்கு இருக்கின்றதோ அதுதான் மித்யா. கனவில் கண்ட யானை போல இல்லாதவொன்று இருக்கின்ற மாதிரி தோன்றுவதற்கு காரணம் என்ற சந்தேகத்தில் பிரமாணத்தை தவறாக பயன்படுத்துவதால் இந்த அனுபவம் நேரிடுகிறது. இதையே அத்யாஸம் என்று கூறுவா;.
மனிதத்தன்மை உள்ள ஜீவன் என்கின்ற பிரிவுக்குள்ளே இருக்கின்ற தனித்தனியான தன்மைகள், உயரமான மனிதன், படித்த மனிதன், அவயவங்களை உடையவன், அவயவங்கள், பொருளும் அதனுடைய குணங்களும் என்று இவ்விதம் பிரித்து பார்ப்பது போல ஆகாசத்திற்கும், ஸத்திற்கும் இடையே இருக்கின்ற தன்மைகள் வேறாக பிரித்து பார்த்து புரிந்து கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் வேற்றுமை பார்ப்பது தவறானது.
ஆகாசத்திற்கும் ஸத்திற்கும் இடையே உள்ள வேற்றுமை புரிந்து கொண்ட போதிலும் மனதிற்குள் நன்கு பதியவில்லையென்றால் அப்போது மனமானது ஒருமுகப்படாமல் சஞ்சலத்துடன் இருக்கலாம்; அல்லது அடைந்த அறிவிலேயே சந்தேகம் இருக்கலாம். இந்த ஞானம் மனதுக்குள்ளே ஆழ்ந்து பதியாமல் இருப்பதற்கு இவையிரண்டில் எதாவதுவொன்று காரணமாக இருக்கலாம்.
மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சியை செய்து பழகியிருக்க வேண்டும். ஜபம், உபாஸனம் இதற்கான சிறந்த சாதனமாகும். தியானம் செய்யும் முயற்சியில் கவனமாக இருக்க வேண்டும். கவனக்குறைவாக இருந்துவிடக் கூடாது. தொடர்ந்து முறையாக செய்து கொண்டு வர வேண்டும். இதனால் மனவொருமுகப்பாட்டை அடைந்திட வேண்டும். தியானத்துக்கு வரும் தடைகளை கவனத்துடன் இருந்து நீக்கிட வேண்டும். இது முதல் தடையை நீக்கும் சாதனம். இரண்டாவது தடையான அடைந்த அறிவில் சந்தேகம் இருந்தால் மனனம் என்ற சாதனத்தை பயன்படுத்தி இந்த தடையை நீக்கிக் கொள்ள வேண்டும். பிரமாணத்தின் துணைக்கொண்டும், யுக்தியின் துணைக் கொண்டும் மனனம் செய்ய வேண்டும். இந்த இரண்டு சாதனங்களை பயன்படுத்தினால் அடைந்த அறிவில் நிலை பெற்றுவிடுவோம்.
நிதித்யாஸனம், சிரவணம் ஆகிய பிரமாணத்தை பயன்படுத்தி விசாரம் செய்தல். மனனத்தின் மூலமாகவும் அறிவு பூர்வமாக சிந்தித்தும் சந்தேகத்தை நீக்குதல் போன்ற சாதனங்களை பயன்படுத்தி ஆகாசத்திற்கும் ஸத்திற்கும் இடையே உள்ள வேற்றுமை உறுதியாகி விட்டால் மீண்டும் ஆகாசத்தினை உண்மையானதாக பார்க்கமாட்டோம். ஸத்தாக இருக்கின்ற வஸ்து ஆகாசமாக காட்சியளிக்காது.
ஞானிக்கு இந்த உலகம் எப்பொழுதும் மித்யாவாகத்தான் தெரிந்து கொண்டிருக்கும். ஸத்தில்லாத தன்மை, ஸாரமற்றது என்ற அறிவு மேலுக்கு வந்து ஆகாசம் இல்லாமல் அனாத்மா கலக்காமல தெளிவாக விளங்கிக்கொண்டிருககும். இந்த வாசனையாகி-விட்ட-அறிவு உறுதியாகிவிட்ட பிறகு ஆகாசத்தை சத்தியமாக புரிந்து கொண்டவர்களை, ஸத் ஸ்வரூப மட்டும் புரிந்து கொள்ளாத அறியாமையில் உள்ளவர்களை பார்த்து உதாசீனனாக இருப்பான்.
இவ்விதம் ஆகாசத்தை மித்யாவென்றும், ஸத்தை (பிரம்மத்தை) சத்தியம் என்றும் மனதில் நன்கு நிலை நிறுத்தியபின் இப்போது செய்த இந்த விசாரத்தின் அடிப்படையில் வாயு முதலிய மற்ற பூதங்களிலிருந்து பிரம்மத்தை பிரித்து அறிந்து கொள்ள வேண்டும்.
மெய்பொருளின் ஒரு பகுதியைத்தான் மாயை வியாபித்துக் கொண்டிருக்கிறது. மாயையின் ஒரு பகுதியை ஆகாசம் வியாபித்திருக்கிறது. அந்து ஆகாசத்தின ஒரு பகுதியை வாயுவானது வியாபித்திருக்கிறது. இவ்விதம் ஒன்றின் மேலொன்று ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்றது.
வாயுவின் விசேஷ குணம் தொட்டுணர்தல். அதனுடைய பொதுவான தர்மங்கள் நகர்தல், வேகம் ஆகியவைகளாகும். ஸத், மாயா, ஆகாசம் ஆகியவைகளில் இருக்கின்ற குணங்கள், தன்மைகள் வாயுவிடத்திலும் உள்ளன. காற்று இருக்கின்றது என்ற வாக்கியத்தில் இருக்கும் இருத்தல் குணம் தொpகிறது. ஸத்திடமிருந்து வாயுவை பிரித்து பார்க்கும் போது மாயையிடத்தில் இருக்கின்ற மித்யா என்கின்ற சுபாவமானது விளங்கும். ஆகாசத்தை சார்ந்த சப்தம் என்ற குணம் வாயுவிலும் இருக்கிறது. வாயுவிடத்தில் ஸத், மாயா, ஆகாசம் ஆகியவைகளுடைய மூன்று குணங்களான இருத்தல், மித்யா, சப்தம் இருக்கின்றது.
கேள்வி : ஆகாசம் எல்லாவிடத்திலும் வியாபிக்கவில்லை என்று முன்பு சொன்னீர்கள் ஆனால் வாயுவில் வியாபித்திருக்கிறது என்று எப்படி சொல்ல முடியும்?
பதில் : இடைவெளிதான் வியாபிக்கவில்லை என்ற முன்பு சொல்லப்பட்டது. இப்போது சப்த குணத்தின் அடிப்படையில் வியாபிக்கிறது என்று கூறினேன். இந்த என்னுடைய உபதேசத்தில் எங்கே முரண்பாடு இருக்கிறது?
ஸத் என்ற வஸ்துவிடமிருந்து வேறாக இருக்கின்ற காரணத்தினால் தோன்றி இருக்கின்ற பூதங்கள் அனைத்தும் அஸத்தாக இருக்கிறது என்று கூறுகிறீர்கள். அப்போது வெளித்தோற்றத்திற்கு வராத நிலையிலுள்ள மாயாவிடமிருந்து வேறாக இருக்கின்ற காரணத்தால் மாயாவின் ஸ்பரூபமான மித்யாவாக இல்லாமல் ஏன் இருக்கக்கூடாது?
வேற்றுமையை முக்கிய வேற்றுமை, அவாந்த்ர வேற்றுமை என்று இரண்டாக பிரிக்கலாம். (உ-ம்) குதிரைக்கும் பசுவுக்கும் இடையே உள்ளது முக்கிய வேற்றுமை. வெள்ளைப்பசுவுக்கும் கறுப்பு பசுவுக்கும் இடையே உள்ளது அவாந்த்ர வேற்றுமை. இந்த வேற்றுமையில் இரண்டு பொருட்களுக்குமிடையே உள்ள லட்சணங்கள் பொருந்தியிருக்கும் ஆனால் மற்ற விதத்தில் வேற்றுமைகள் இருக்கும். மாயைக்கும் பூதங்களுக்கும் இடையே உள்ள வேற்றுமை அவாந்த்ர வேற்றுமை. ஸவரூபத்தில் வேற்றுமை இல்லை ஆனால் மற்ற விதத்தில் வேற்றுமை இருக்கும். இவைகளுக்குள் மித்யா பொதுவாக இருப்பதால் வாயுவும் மித்யாவாகும்.
சார்ந்திருத்தல் தன்மைதான் வாயுவிடத்திலும் மற்ற பூதங்கள் விஷயத்திலும் மித்யாவாக இருக்கும் தன்மையை நிர்ணயம் செய்யப்படுவதற்கு காரணம். இது மித்யாவின் லட்சணமான மாயையிடமும் அதன் கார்யமான வாயுவிடத்திலும் பொருந்துகின்றது. வெளித்தோற்றத்திற்கு வந்து இருத்தல், வராமல் இருத்தல் என்ற வேற்றுமை இருக்கிறது. என்றாலும் ஸ்வரூப லட்சணம் ஒன்றாக இருப்பதால் இரண்டுமே மித்யாதான்.
சத்யத்திற்கும் மித்யாவிற்கும் உள்ள விசாரம் தான் எடுத்துக் கொண்ட விஷயமானதால் அதை சிந்திக்க வேண்டும், விசாரம் செய்ய வேண்டும். அஸத்துக்குள் அவாந்த்ர பேதங்கள் இருக்கட்டும். அதைப்பற்றி விசாரம் செய்வதால் பயனொன்றுமில்லை. ஸத் வஸ்துதான் பிரம்மன் மற்ற அம்சங்களான வாயு முதலியவைகள் அனைத்தும் மித்யாவாகும். வாயுவின் மித்யா என்ற தன்மையை மெல்ல மெல்ல மனதில் நிலைப்படுத்த வேண்டும். வாயுவில் இருக்கும் சத்தியத்வ புத்தியை விட்டுவிட வேண்டும்.
ஆகாசத்ததை விசாரித்ததைப் போல அக்னியையும் விசாரம் செய்ய வேண்டும். வாயுவைக் காட்டிலும் குறைவாக வியாபிக்கும் தன்மையுடையதாக விசாரம் செய்ய வேண்டும். பிரம்மத்தை எது மறைக்கின்றது என்ற விஷயத்தில், குறைவாக வியாபித்தல், அதிகமாக வியாபித்தல் ஆகியவைகள் பஞ்சகோச விவேகத்தில் ஒவ்வொரு கோசமும் எவ்விதம் பிரம்மத்தை மறைக்கிறது என்ற விசார சாஸ்திரத்தில் பார்க்கலாம்.
வாயுவை விட பத்தில் ஒரு பங்காக குறைந்திருக்கும். தேஜஸ் வாயுவில் ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. ஐந்து பூதங்களுக்குள் உள்ள பத்தில் ஒன்று என்ற ஏற்றத்தாழ்வு புராணங்களில் கூறப்பட்டிருக்கிறது. அக்னி உஷ்ணம், பிரகாசம் ஆகிய தன்மைகளை உடையது. இதனிடத்தில் இதற்கு முன் உள்ள தத்துவங்களின் தன்மைகளும் கூட இருக்கிறது. அவைகள் இருத்தல், மித்யா, சப்தம், தொட்டுணர்தல் ஆகியவைகளாகும். ஸத்தினுடைய இருத்தல், மாயையின் மித்யாத்வம், ஆகாசத்திலிருந்து சப்தம், வாயுவிடமிருந்து தொடுதல் ஆகிய தன்மைகளும் அக்னியுடன் இருக்கும். ஸத்திடமிருந்து வஸ்து இருத்தல் என்ற தன்மை மாயையிலிருந்து தோன்றி இருப்பதால் மித்யா தன்மையும், ஆகாசத்தினுடைய சப்தம், வாயுவின் தொட்டு உணர்தல் ஆகிய அம்சங்களுடன் கூடிய அக்னியினுடைய குணம் ரூபம். இந்த தன்மைகளுடைய அக்னியை ஸத்திலிருந்து வேறாக உள்ள அனைத்தும் மித்யாவென்ற அறிவுடன் விசாரம் செய்து பிரித்து புரிந்து கொள்ள வேண்டும்.
அக்னியை ஸத்திடமிருந்து பிரித்த பிறகு அது மித்யா என்று மனதில் நன்கு பதியும் வரை விசாரம் செய்து கொண்டிருக்க வேண்டும். பிறகு நீரானது அக்னியை காட்டிலும் பத்து மடங்கு குறைவாக வியாபித்திருக்கின்றது என்பதையும், நெருப்பில் நீரானது ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் வி;சாரம் செய்ய வேண்டும். நீர் இருக்கிறது, மித்யா. சப்தம், ஸ்பர்சம், இவைகளுடன் அக்னியின் ரூபம் இருக்கிறது. அவைகளுடன் தொடர்ச்சியாக தன்னுடைய சொந்த குணமான சுவையும் (ரஸம்) இருக்கிறது. ஸத்திலிருந்து நீரை பிரித்து அதனுடைய மித்யாத்வத்தை உறுதியாக மனதில் பதிய வைத்த பிறகு அதிலிருந்து பத்து மடங்கு குறைவாக வியாபித்திருக்கும் பூமியானது அதன் மீது ஏற்றி வைக்கப்பட்டிருப்பதை விசாரம் செய்ய வேண்டும். பூமியில் இருத்தல், மித்யா, சப்தம், ஸ்பர்சம், ரூபம், சுவை இவைகளெல்லாம் மற்றவைகளிலிருந்து வந்த குணங்கள். இதனுடைய சொந்த குணமானது வாசனை (கந்தம்) ஸத்திலிருந்து பிரித்து விசாரம் செய்யப்படட்டும்.
இதுவரை பார்த்தவைகள் எல்லாம் சூட்சும பூதங்களைப் ப்ற்றிய விசாரமாகும். பஞ்ச ஸ்தூல பூதங்களும் சேர்ந்து இருப்பதையே பிரமாண்டம் என்கின்றோம். இந்த பிரம்மாண்டத்திலிருந்துதான் பார்த்து அனுபவிக்கின்ற இந்த உலகம் உருவாகியது. பிரம்மாண்டம் பரிமாணத்தை அடைந்து உயிர்கள் வாழும் பதினான்கு உலகங்களாக மாறியிருக்கிறது. அந்தந்த உலகங்களுக்கேற்ற உடல்களும் தோன்றியிருக்கிறது. இவைகள் யாவும் மித்யாதான் என்று புரிந்து கொள்ள வேண்டும். இத்துடன் சூட்சுமமான பஞ்சபூத விசாரம் முடிவடைந்தது.
ஸ்தூல ஸ்ருஷ்டி விசாரம்
பூமியை ஸத்திலிருந்து பிரித்து விட்ட போது அது மித்யாவாக எஞ்சி இருக்கிறது. இது பூமியென்பதேயில்லை என்று புரிந்து கொள்ள வேண்டும். பஞ்ச ஸ்தூல பூதங்கள் சேர்ந்து மொத்தமாக இருப்பதையே பிரம்மாண்டம் என்று கூறப்படுகிறது. பூமியைக் காட்டிலும் பத்து மடங்கு குறைவாக வியாபித்துக் கொண்டிருக்கிறது. இது பூமியிலிருந்து தோன்றியதுதான்.
உயிரினங்கள் வாழவும், அனுபவிக்க தகுதியுடையதாகவும் மாறிய நிலையே புவனம் என்று அழைக்கப்படுகிறது. பிரமாண்டத்திலிருந்து பதினான்கு உலகங்கள் தோன்றியிருக்கிறது. இந்த உலகங்கள் பிரமாண்டத்தை விட பத்து மடங்கு குறைவாக வியாபித்திருக்கிறது. இந்த உலகங்களிலிருந்து சரீரங்களுடைய ஜுவராசிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்தந்த உலகத்திற்கேற்ற உடலுடன் ஜுவராசிகளின் உடல்கள் தோன்றின.
பிரமாண்டம் உலகங்கள், உடல்கள் ஆகியவற்றை ஸத் வஸ்துவிடமிருந்து பிரித்துப் பார்த்தால் அவைகளும் மித்யாவாக இருப்பதை புரிந்து கொள்ளலாம்.
விசாரம்:
சூட்சும பூதங்களிலிருந்து தோன்றியவைகளான பிரமாண்டம், உலகங்கள், தேகங்கள் ஆகியவைகளெல்லாம் மித்யா என்று உறுதியாக மனதில் பதிந்துவிட்ட பிறகு ஸத் வஸ்துவானது இரண்டற்றது என்ற இந்த அறிவானது எப்பொழுதும் எந்த மாறுதலை அடையாது, மனதில் நிலையாக இருக்கும்.
உலகம் மித்யா என்று நன்கு புரிந்துவிட்ட பிறகு எப்படி வாழ முடியும்?
சாங்க்யர், காணாதர், புத்த மதத்தவர் ஆகியவர்கள் எல்லாம் இந்த உலகத்தில் விதவிதமான வேற்றுமைகளை கற்பனை செய்துக் கொண்டு பேசுகிறார்கள். பலவிதமான யுக்திகளையெல்லாம் அனுமானங்களையும் இதற்கு கையாள்கிறார்கள். அவைகள் அவ்விதமாகவே இருக்கட்டும்.
மற்ற மதத்தை சார்ந்தவர்களால் அதிக முக்கியத்துவம் கொடுக்காததும், சாஸ்திர சித்தமான, ஸத் ரூபமானதுமான அத்வைதமானது குறைவாக மதிக்கப்பட்டுவிட்டது. அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அத்வைதிகளான நம்மால் சந்தேகம் இல்லாமல் இருமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காததால்; என்ன குறை வந்துவிட்டது.
ஜகத்தின் மித்யாத்வம் அறிவு வரவர பிரம்மன் சத்தியம் என்ற அறிவு வரும். இருமையின் முக்கியத்துவம் குறைய குறையத்தான் அத்வைத அறிவானது நிலைபெறும். அந்த உறுதியான அறிவினால் மனிதன் ஜீவன்முக்தனாக வாழ்ந்து கொண்டிருப்பான்.
ஹே அர்ஜுனா! ஆத்மா என்ற அறிவினிலே நிலைபெற்றுவிட்டால் அவன் மோகத்தில் வீழ்ந்துவிடமாட்டான். மரணத்தறுவாயில் இந்த அறிவு வந்தாலும் கூட பிரம்மத்துடன் கலந்துவிடுவான். இது பகவான் பகவத்கீதையில் அர்ஜுனனுக்கு கூறய உபதேசம்.
அந்திமக்காலம் என்பது அறியாமை நீங்கும் காலம், மோகம் நீங்கும் காலமாகும்.
அந்திமக்காலம் என்ற சொல்லுக்கு பொருளாக எல்லோருக்கும் தெரிந்திருப்பது பிராணன் உடலை விட்டு நீங்கும் காலமாகும். அந்த மரண காலத்திலும் அறியாமை சென்றுவிட்டால் மீண்டும் வராது. ஆரோக்கியமாக இருந்து கொண்டு இறந்தாலும், அமர்ந்திருக்கும் போதோ அல்லது நோய்வாய்பட்டோ அல்லது உலகத்தில் அங்கும் இங்கும் சஞ்சரித்துக் கொண்டு இருக்கும் போதோ அல்லது மயக்க நிலையில் இருக்கும் போதோ அல்லது இந்த ஞானியின் உயிர்; பிரியட்டும் அதனால் அறியாமை மீண்டும் வராது.
ஓவ்வொரு நாளும் கனவு, ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாலும் அடைந்து அறிவை மறந்திருந்தாலும் விழித்தபின் அந்த அறிவு இல்லாதவனாக கருதப்படமாட்டான். அதுபோல ஆத்ம வித்யாவை அடைந்து விட்டால் அது அழிவதில்லை.
நாம் அடைந்த அறிவு எப்போது நீங்கிவிடும் என்று பார்க்கும்போது ஒரு பிரமாணத்தின் மூலம் அடைந்த அறிவானது அதைவிட பலமான பிரமாணத்தின் மூலமாக அந்த இழந்து விடலாம். வேதாந்தம்தான் பலமான பிரமாணமாக இருப்பதால் அதன் மூலம் அடைந்த அறிவானது அழிந்து போகாது. ஒரு பிரமாணத்தின் மூலமாக அடைந்த அறிவானது அதைவிட சக்தி வாய்ந்த மற்றொரு பிரமாணத்தின துணையில்லாமல் அழிக்கவோ, நீக்கவோ முடியாது. உபநிஷத்தை காட்டிலும் சக்தி வாய்ந்த பிரமாணத்தை பார்க்க முடியாது.
ஆகவே வேதாந்தத்தினால் நன்றாக உறுதி செய்யப்பட்ட இரண்டற்றதானதும், ஸத் ஸ்வரூபமானதுமான பிரம்மத்தை வேறெந்த பிரமாணத்தாலும் நீக்கப்படமுடியாது. மரணகாலத்திலும் கூட இந்த பஞ்கபூத விவேகத்தினால் அடைந்த மோட்சமானது நம்மிடமே இருக்கும்.
தொகுப்புரை
01-01 ஸ்ருதி வாக்கிய அறிமுகம்
----ooo000ooo----