அத்தியாயம்-8
அக்ஷர பிரஹ்ம
யோகம்
ஸ்வாமி
குருபரானந்தாவின் உபதேச விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது-09-02-2022
முகவுரை:
உபாஸனையையும் அதன் பலனையும் இந்த
அத்தியாயத்தில் கூறப்படுகிறது. மனதினால்
சகுணபிரம்மத்தை தியானித்தல் என்பது உபாஸனை என்று கூறுவர். சகுண பிரம்மன் என்பது ஈஸ்வரனை குறிக்கின்றது. உபாஸனம் மனதினால் செய்யப்படும் தியானம். இதற்கு விஷயமாக இருப்பது சகுண பிரம்மன். இதில் நியமங்கள் உண்டு. அதை கண்டிப்பாக
கடைப்பிடிக்க வேண்டும். மரண காலத்தில் எதை
நினைத்துக் கொண்டு இறக்கின்றோமோ அதற்கேற்ற உலகம் கிடைக்கின்றது.
உபாஸனையின் பலன்கள்
- நிஷ்காம
உபாஸகனுக்கு வேதாந்த ஞானத்தை அடையும் தகுதியை பெறுகிறான். அதாவது சாதன-சதுஷ்டய-சம்பத்தியை அடைகிறான்
- இகலோக
ஐஸ்வர்யங்களை அடைதல்
- பரலோக
இன்பங்களை அனுபவித்தல்
- ஓரளவு
வைராக்கியத்துடன் உபாஸனம் செய்தவர்கள் பிரம்மலோகத்தை அடைந்து அங்கிருக்கும்
சுகத்தில் வைராக்கியத்தை அடைந்து பிரஹ்ம ஞானத்தை அடைகின்றார்கள். இதற்கு கிரமமுக்தி என்று கூறுவர். இந்த
பலனை அடைபவர்களைப் பற்றி பகவான் இந்த அத்தியாயத்தில் கூறுகிறார்.
अर्जुन उवाच ।
किं तद् ब्रह्म किम्ध्यात्मं किं कर्म पुरुषोत्तम् ।
अधिभूतं च किं प्रोक्तमधिदैवं किमुच्यते ।। 1 ॥
அர்ஜுனன் கேட்கிறான்.
அந்த பிரம்மம் என்பது என்ன? அத்யாத்மம் என்பது
என்ன? கர்மம் என்பது என்ன? அதிபூதம் என்று எதை சொல்கிறார்கள்? அத்வைதம் இது என்று
எது கூறப்படுவது எது?
अधियज्ञः कथं कोऽत्र देहेऽस्मिन्मधुसूदन ।
प्रयाणकाले च कथं ज्ञेयोऽसि नियतात्मभिः ॥ 2 ॥
ஹே மதுஸூதனா!
இந்த உடலில் அதி4யக்ஞன் என்பவர்
யார்?
அவர் எப்படி இருக்கிறார்?
மரணகாலத்தில் எப்படி தாங்கள்
நினைக்கப்படுகிறீர்கள்?.
ஒழுக்கமாக வாழ்பவர்கள், உபாஸகர்கள் உங்களை எப்படி
நினைக்க வேண்டும்?
நியதாத்ம – ஒழுக்கமாக வாழ்தல்
श्रीभगवानुवाच ।
अक्षरं ब्रह्म परमं स्वभावोऽध्यात्ममुच्यते ।
भूतभावोद्भवकरॊ विसर्गः कर्मसंज्ञितः ॥ 3 ॥
ஶ்ரீபகவான் கூறுகிறார்.
அக்ஷரம் - அழியாத மேலான
தத்துவமே நிர்குண பிரம்மன்
அத்4யாத்மம்(அதி-உள்ளே+ஆத்மம்-உடலுக்கு ) – தோன்றியிருக்கும் உயிரினங்களுக்குள்ளே அதிஷ்டனமாக எது இருக்கின்றதோ அதுவே அழியாத
அத்யாத்மம்
ஸ்வபா4வோ அத்யாத்மம் - அழியாத ஆத்மா, ஜீவனுடைய உண்மையான ஸ்வரூபமே
அத்யாத்மம் என்று
உச்யதே –
சொல்லப்படுகிறது.
பாவ-புண்ணியங்களை பலனாக கொடுத்து பிறப்பிற்கு
காரணமாக இருக்கும் செயல்களை கர்மம் என்று
பகவான் குறிப்பிடுகின்றார். யாகம் என்ற
செயலையும் இது குறிக்கின்றது. தேவதைகளை குறித்து பொருட்களை அர்ப்பணம் செய்வதற்கு விஸர்க3ம்
என்று கூறுவர். விஸர்கமான கர்மம் என்று
அழைக்கப்படுகிறது.
பூத்பாவ உத்4பவகரஹ – மறுபிறப்பை
அடைவதற்கு காரணமாகவும், விதவிதமான சரீரத்தை எடுப்பதற்கு காரணமாக இருக்கும் கர்மமே விஸர்கம்
எனப்படுகிறது.
अधिभूतं क्षरो भावः पुरुषश्चाधिदैवतम् ।
अधियज्ञोऽहमेवात्र देहे देहभृतां वर ॥ 4 ॥
தேஹேப்4ருதாம் வர –
தேகத்தையுடையவர்களுக்குள் மேலான அர்ஜுனா!
அதி4பூ4தம் க்ஷரோ பா4வஹ – அதிபூதம்
என்பது அழியக்கூடியவைகள், நாம் பார்த்து அனுபவிக்கும் இந்த பிரபஞ்சம்
புருஷ ச அதி4தை3வதம் – அத்தைவதம்
என்பது ஹிரண்யகர்ப்பனை குறிக்கின்றது. இவர் சூட்சும பிரபஞ்சத்திற்கு அதிஷ்டான
தேவதை.
அதி4யக்ஞ அஹம் – நான்தான்
அதியக்ஞன், அதியக்ஞன் என்பவர் கர்மபலனை கொடுப்பவர்
அத்ர தேஹே – எல்லா
உடலுக்குள்ளும் இருக்கின்ற ஈஸ்வரனான நானே அதியக்ஞனாக எல்லா சரீரங்களுக்குள்ளும்
இருக்கின்றேன்.
अन्तकाले च मामेव स्मरन्मुक्त्वा कलेवरम् ।
यः प्रयाति स मद्भावं याति नास्त्यत्र संशयः ॥ 5 ॥
உபாஸகன் இகலோக சுகத்தை துறந்து, ஓரளவு
வைராக்கியத்துடன் இருந்து உயிரை விடுபவர்களை பற்றி பகவான் இங்கே குறிப்பிடுகிறார்.
எவனொருவன் மரணகாலத்திலும் என்னையே நினைத்துக்
கொண்டு உடலை விட்டு செல்கின்றானோ அவன் என் ஸ்வரூபத்தை அடைகின்றான். இதில்
சந்தேகம் கிடையாது.
யஹ அந்தகாலே -
எவனொருவன் மரணகாலத்தில்
ச மாம் ஏவ ஸ்மரன் – என்னையே நினைத்துக்
கொண்டு
கலேவரம் முக்த்வா – ஸ்தூல
சரீரத்தை விட்டு செல்கின்றானோ
ஸஹ ம்த்பாவம் ப்ரயாதி – அவன் என்
ஸ்வரூபத்தையே அடைகிறான்.
நாஸ்த்யத்ர ஸம்ஶய: - இதில் சந்தேகமே கிடையாது
यं यं वापि स्मरन्भावं त्यजत्यन्ते कलेवरम् ।
तं तमेवैति कौन्तेय सदा तद्भावभावितः ॥ 6 ॥
எந்தெந்த எண்ணத்தை நினைத்துக் கொண்டு மரணக்
காலத்தில் சரீரத்தை விடுகின்றானோ அந்தந்த ஸ்வரூபத்தையே அடைகின்றான். ஹே அர்ஜுனா!
ஏனெனில் அந்த ஸ்வரூபத்தையே, எண்ணத்தையே மனதில் எப்பொழுதும் நிறுத்தி
வைத்திருந்திருக்கின்றான். அந்த எண்ணங்களே
ஸம்ஸ்காரமாக பயிற்சியினால் மனதில் உருவாக்கி இருக்கின்றான்.
மனதைப்பற்றிய விசாரம்
மனதினுடைய சுபாவம் எந்த எண்ணத்தை தொடர்ந்து
நினைத்துக் கொண்டு இருக்கின்றோமோ அதுவாகவேதான் மனம் மாறியிருக்கும். நாம்தான் மனதையே உருவாக்குகின்றோம். நம்முடைய மனதின் செயல்பாட்டிற்கு நாம்தான்
காரணம். மனதை எதில் பயன்படுத்தினோம்
என்பதை பொறுத்துத்தான் மனம் அமைகின்றது.
நாம் தொடர்ந்து ஒன்றையே நினைக்கும்போது அதனுடைய ஸம்ஸ்காரங்கள் மனதில் நன்கு
பதிந்து விடும். மனதும் வயதான காலத்தில்
ஆரோக்கியத்தை, சக்தியை இழந்துவிடும் அந்த நேரத்தில் புதியதாக மனதை உருவாக்க
முடியாது. இந்தக் காலத்தில் நாம் எதை
ஸம்ஸ்காரமாக பதிந்து வைத்துள்ளோமோ அதுதான் செயல்படும். மரணகாலத்தில் நம்மால் எதையும் சிந்திக்க
முடியாது. எது ஸம்ஸ்காரமாக மனதில்
பதிந்துள்ளதோ அதுதான் மனதில் எழும்.
உபாஸகன் பகவான் நாமத்தையே உச்சரித்தால் அதுதான் மனதில் ஆழமாக
பதிந்திருக்கும். அதனால் இறக்கும் தருவாயில்
பகவான் நாமம்தான் மனதில் இருந்து கொண்டு இருக்கும். பகவான் நாமத்தை உச்சரித்துக் கொண்டிருப்பது
எதற்காக என்பதைப் பொறுத்துத்தான் பகவானை அடைதல் தீர்மானிக்கப்படுகிறது. அவரை அடைய வேண்டும் என்ற லட்சியத்துடன்
உச்சரித்திருந்தால் அவரை அடையலாம். மேலும் அவரிடம் நிஷ்காமமாக பக்தி
செலுத்தியிருக்க வேண்டும்.
तस्मात्सर्वेषु कालेषु मामनुस्मर युध्य च ।
मय्यर्पितमनोबुद्धिर्मामेवैष्यस्यसंशयः ॥ 7 ॥
ஆகவே எல்லாகாலங்களிலும் என்னையே நினைப்பாயாக!
இப்போது போர் புரிவாயாக, உன்னுடைய ஸ்வதர்மத்தை, கடமையை செய்வாயாக! என்னிடத்தில்
அர்ப்பணம் செய்யப்பட்ட மனதையும், புத்தியையும் உடையவனாக இருப்பாயாக! இப்படி
இருப்பதனால் சந்தேகமின்றி என்னையே அடைவாய். கர்மயோகப்படி கடமையை செய் என்ற பகவான்
குறிப்பிடுகின்றார்.
अभ्यासयोगयुक्तेन चेतसा नान्यगमिना ।
परमं पुरुषं दिव्यं याति पार्थानुचिन्तयन् ॥ 8 ॥
அப்யாஸம் - மீண்டும் மீண்டும் ஒன்றை முயற்சித்தல். (உ-ம்)
ஜபம் செய்யும் போது பகவான் நாமத்தை திரும்ப திரும்ப உச்சரித்துக் கொண்டிருப்பது.
இது மனதினால் செய்யக்கூடிய அப்யாஸம். துல்லிய
பிரயத்யயம் ஆவ்ருத்தி – ஒரே எண்ணமே அடுத்தடுத்து வருகின்ற நிலையே ஜபம்
அப்யாஸயோகம் மனதை
எடுத்துக்கொண்ட விஷயத்தை மட்டும் நினைத்துக் கொண்டிருக்குமாறு வைத்திருக்க முயற்சி
செய்தல். புத்தியினுடைய நிலையில் அப்யாஸம்
என்பது ஞானாப்யாஸம். ஒரு கருத்தையே
மீண்டும் மீண்டும் சிந்தித்து கொண்டிருத்தல். இதனால் அந்த கருத்து மனதில் நன்கு
பதிகின்றது. பிறகு அதுவே சுபாவமாகி
விடும். புத்தியை கூர்மைபடுத்துவதற்கு
இந்த அப்யாஸம் தேவைப்படுகிறது. இந்த அப்யாஸயோகத்தில் மூலமாக எடுத்துக்கொண்ட
விஷயத்தில் நிச்சயமாக வெற்றி பெறுலாம்.
பார்த2 - ஹே அர்ஜுனா!
அப்யாஸ யோக யுக்தேன – அப்யாஸ
யோகத்துடன் கூடிய
சேதஸா – மனதினால்
ந அன்யகாமினா – வேறு விஷயங்களை நோக்கி செல்லாமல், கடந்தகால, எதிர்காலத்தை பற்றியே நினைத்துக் கொண்டிருக்காமல், எந்த பொருட்களிடத்திலும் செல்லாமல்
அனுசிந்தயன் – என்னையே நினைத்துக்
கொண்டு, ஈஸ்வரனையே சிந்தித்துக் கொண்டு இருப்பவன்
பரமம் புருஷம் திவ்யம் யாதி - மேலான, அறிவு ஸ்வரூபமான, தெய்வீகமான
பரம்பொருளை அடைகின்றான்
कविं पुराणमनुशसितारं अणोरणीयंसमनुस्मरेधः ।
सर्वस्य धातारम्चिन्त्यरूपं आदित्यवर्णं तमस: परस्तात् ॥
9 ॥
யஹ அனுஸ்மரேத் – எவ்னொருவன் ஈஸ்வரனையே நினைக்கின்றானோ அவன் கீழ்கண்ட தத்துவங்களுடன் கூடிய ஈஸ்வரனையே அடைவான்.
கவிம் – அனைத்தையும்
அறியும் சக்தி, மூன்று காலத்தையும் அறியும் சக்தி
புராணம் – என்றும்
இருப்பது, அனாதியானது
அனுஶாஸிதாரம் – அனைவரையும்
ஆளும் திறமை. இந்த உலகம் ஈஸ்வரன் வகுத்த நியதிப்படிதான் இயங்கிக்
கொண்டிருக்கின்றது
மேற்கூறிய மூன்றும் ஈஸ்வரனின் லட்சணங்கள்.
அணோ: அணீயாம்ஸம் - சூட்சுமமானதை காட்டிலும் சூட்சுமமானது
ஸர்வஸ்ய தா4தாரம் - எல்லா
ஜீவரசிகளுக்கும் ஆதாரமானவர், எல்லா ஜீவராசிகளுக்கும் அவரவர்களுடைய கர்மபலனைக்
கொடுப்பவர்.
அசிந்தியரூபம் - வாக்காலும்,
மனதாலும் கிரகிக்க முடியாதவர்
ஆதித்ய வர்ணம் - சூரியனைப்போல
பிரகாசிப்பவர்
தமஸ: பரஸ்தாத் - இருளைக்
கடந்து இருப்பவர், அறியாமைக்கு அப்பாற்பட்டவர்
மேற்கூறிய அனைத்தும் நிர்குணபிரம்மனின் லட்சணங்கள்.
புராணங்கள் தர்ம-அதர்மத்தை
போதிக்கின்றது. தர்மத்துடன் வாழ்வதால் அடைகின்ற பலன்களை உபதேசிக்கின்றது. அதர்மத்துடன் வாழ்ந்தால்
அடைகின்ற துயரங்களையும் காட்டிக் கொடுக்கின்றது
प्रयाणकाले मनसाऽचलेन भक्त्या युक्तो योगबलेन चैव ।
भ्रुगोर्मध्ये प्राणमावेस्य सम्यक् स तं परं पुरुषमुपैति
दिव्यम् ॥ 10 ॥
ப்ராணகாலே – இறக்கும்
தறுவாயில்
மனஸாசலேன – மனதை அசைவற்று
வைத்திருத்தல்
பக்த்யா யுக்தஹ – பக்தியுடன்
கூடியதாக இருக்க வேண்டும்.
யோகபலேன ச ஏவ – அப்யாஸயோக
வலிமையுடன் இருக்க வேண்டும்.
பிராணனை அமைதிபடுத்தினால் மனம் அமைதி அடைந்து
விடும். எனவே பிராணனை ஒழுங்குபடுத்தும் பயிற்சியை செய்ய வேண்டும். கண்ணை மூடிக் கொண்டு பிராணனை கவனித்தாலே அதை
ஒழுங்குபடுத்திவிடலாம். அப்யாஸ யோகத்தின்
வலிமை கொண்டு இரண்டு புருவங்களுக்கு இடையில் உதானன் பிராணனை நன்றாக நிலை நிறுத்தி
வெற்றியடைபவன் அந்த மேலான, திவ்யமான புருஷனை, பரமாத்மாவை அடைகிறான்
यदक्षरं वेदविदो वदन्ति विशन्ति यद्यतयो वीतरागाः ।
यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं संग्रहेण
प्रवक्ष्ये ॥ 11 ॥
வேதத்தை அறிந்தவர்கள் எதை இறுதியான லட்சியமாக
கொள்கின்றார்களோ. எதை முயற்சி செய்து சாதகர்கள் அடைகிறார்களோ ( சாதகர்களான இவர்கள்
பற்றை விட்டவர்கள், வைராக்கியத்துடன் இருப்பவர்கள் ) எந்த ஒன்றை அடைய விரும்பி
பிரம்மச்சர்ய விரதத்தை பின்பற்றுகிறார்களோ ( குருகுலத்தில் பின்பற்ற வேண்டிய
நியமங்களை பிரம்மசர்ய விரதங்கள் என்று சங்கரர் கூறுகிறார் ) அந்த ஒன்றான
அக்ஷர-அழியாத ஒன்றை உனக்கு சுருக்கமாக சொல்லப் போகிறேன்.
सर्वद्वाराणि संयम्य मनो ह्रदि निरुध्य च ।
मूध्न्यार्धायात्मनः प्राणमास्थितो योगधारणाम् ॥ 12 ॥
எல்லா புலன்களின் வாயில்களையும் அடைத்து,
புலன்களையும் அமைதிபடுத்தி இருக்க வேண்டும்.
மனதை இதயத்தில் நிலைநிறுத்தி, வெளிவிஷயங்களிலிருந்து எடுத்து
விருப்பு-வெறுப்புக்கள் இல்லாமல் அமைதியாக வைத்திருக்க வேண்டும். தன்னுடைய பிராண சக்தியை (உதானன்) உச்சந்தலையில்
நிலைபெறச் செய்ய வேண்டும். மனதை ஒருமுகப்படுத்திய நிலையில் இருக்க வேண்டும்.
ऒमित्येकाक्षरं ब्रह्म व्याहरन्मामनुस्मरन् ।
यः प्रयाति त्यजन्देहं स याति परमां गतिम् ॥ 13 ॥
ஓம் என்ற ஓரெழுத்து மந்திரத்தையும்,
பிரம்மத்தையும் குறிக்கின்றது. அதாவது
சகுண பிரம்மத்தையும், நிர்குண பிரம்மத்தையும், பகவானுடைய எல்லா அவதாரத்தையும்
குறிக்கின்றது. இந்த மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு தியானம் செய்வதினால் சகுண
பிரம்மத்தை அடையலாம், விசாரம் செய்தால் நிர்குண பிரம்மத்தை அடையலாம்.
மாம் அனுஸ்மரன் – எவனொருவன்
என்னையே நினைத்துக் கொண்டு
யஹ ப்ரயாதி த்யஜன் தேஹம் – உடலை விட்டு
செல்கின்றானோ, அவன் மேலான கதியை, நிலையை அடைகின்றான். அதாவது கிரம முக்தியை
அடைகின்றான்
अनन्यचेताः सततं यो मां स्मरति नित्यशः ।
तस्याहं सुलभः पार्थ नित्ययुक्तस्य योगिनः ॥ 14 ॥
இதில் அப்யாஸத்தின் அவசியத்தை
வலியுறுத்துகின்றார்.
பொதுவாக எந்தவொன்றை
அடைய வேண்டுமென்றாலும் விடாமுயற்சி தேவை.
என்னை அடைவது மிக மிக சுலபமே என்று உற்சாகப்படுத்துகிறார். இந்த உலகத்திலுள்ள பொருளை அடைவது மிகவும்
கடினம். வேண்டுமென்று தேடினால் ஓடிக்
கொண்டு இருக்கும், வேண்டாம் என்று ஒதுக்கினால் தானாக நம்மை வந்தடையும். ஒன்று
நமக்கு கடினமாக இருப்பதற்கு காரணம் அதில் விருப்பம் இல்லாமல் முயற்சி செய்து
கொண்டிருப்பது. எனவே ஒன்றை அடைய அதில்
முழுவிருப்பம் இருக்க வேண்டும், அதை அடைவதற்கு தகுதியுடன் இருக்க வேண்டும்.
விடாமுயற்சியும் இருக்க வேண்டும்.
ஹே அர்ஜுனா! எவனொருவன் வேறு சிந்தனை
எதுவுமில்லாமல் தொடர்ந்து அதிக காலம் என்னை நினைத்துக் கொண்டிருக்கின்றானோ
அவனுக்கு நான் எளிதில் அடையக்கூடியவன். அவனே எப்பொழுதும் என்னிடம் ஒன்றிவிட்ட
யோகியாவான்.
मामुपेत्य पुनर्जन्म दुःखालयमशाश्वतम् ।
नाप्र्नुवन्ति महात्मानः संसिद्धिं परमां गता ॥ 15 ॥
இதில் மோட்சத்தில் பெருமையையும்,
சம்சாரத்தினுடைய குறைகளையும் கூறியிருக்கிறார்.
ஸம்ஸித்3தி4ம் பரமாம் கதா – மேலான
லட்சியமான மோட்சத்தை அடைந்தவர்கள்
மஹாத்மான: - மகாத்மாக்கள்,
மேலான மனதை, புத்தியை உடையவர்கள்
மாம் உபேத்ய – பரபிரம்மத்தை
அடைந்து, என்னை அடைந்து
புனர்ஜன்ம ந ஆனுவந்தி - மீண்டும்
பிறப்பை அடையமாட்டார்கள்
து:காலய்ம் அஶாஸ்வதம் – இந்த உடல்
துயரத்தினுடைய இருப்பிடமாகவும், நிலையற்றதாகவும் இருக்கின்றது.
துயரங்கள் மூன்றுவிதமாக வருகின்றது. அவைகள்
- ஆத்யாத்மிகம் – நம்மிடம் இருந்து வரும் துயரங்கள்,
- ஆதிபௌதிகம்
- சூழ்நிலைகளினால் வருகின்ற துயரங்கள்,
- அதிதைவிகம் – இயற்கையிலிருந்து வருகின்ற துயரங்கள் ஆகியவைகளாகும்.
இந்த உடலை போகத்திற்கு பயன்படுத்தினால் அதுவே
துன்பத்தின் இருப்பிடம் என்றும், ஞானயோகத்திற்கு பயன்படுத்தினால் அதுவே தேவாலயம்
என்றும் அழைக்கப்படுகிறது.
आब्रह्मभुवनाल्लोकाः पुनरावर्तिनोऽर्जुन ।
मामुपेत्य तु कौन्तेय पुनर्जन्म न विद्यते ॥ 16॥
ஹே அர்ஜுனா! பிரம்மலோக வரை உள்ள எல்லா உலகங்களை
அடைந்தாலும் திரும்பவும் இந்த உலகில் வந்து பிறக்க நேரிடும். என்னை அடைந்தவன் மீண்டும் பிறப்பதில்லை.
सहस्रयुगपर्यन्तमहर्यद् ब्रह्मणो विदुः ।
रात्रिं युगसहस्त्रान्तां तेऽहोरात्रविदो जनाः ॥ 17 ॥
கலியுகம் – 4,32,000 ஆண்டுகள்
த்வாபரயுகம் – 8,64,000 ஆண்டுகள்
த்ரேதாயுகம் – 12,96,000 ஆண்டுகள்
சத்ய யுகம் – 17,28,000 ஆண்டுகள்
சதுர்யுகம் = நான்கு யுகங்களின் ஆண்டுகளின்
கூட்டல், 43,20,000 ஆண்டுகள்
பிரம்மாவின் ஒரு பகல் = 1000 * சதுர்யுக காலம்,
இரவு = 1000 * சதுர்யுக காலம்
ஆயிரம் சதுர்யுகங்களைக் கொண்டது பிரம்மாவுக்கு
ஒரு பகலாகும். அவ்வாறே ஆயிரம் சதுர்யுகங்களைக்
கொண்டது ஒரு இரவாகும் என்று எந்த மனிதர்கள் தத்துவரீதியாக அறிகின்றார்களோ, அந்த
யோகிகள் பகலிரவு என்ற காலத்தில் தத்துவத்தை அறிந்தவர்களாகிறார்கள்
अव्यक्ताद् व्यक्तयः सर्वाः प्रभवन्त्यहरागमे ।
रात्र्यागमे प्रलीयन्ते तत्रैवाव्यक्तसंज्ञके ॥ 18 ॥
அஹ: ஆகம் – பிரம்மவினுடைய
பகல் நேரம் ஆரம்பிக்கும்போது
வ்யக்தயஹ ஸர்வா: ப்ரபவந்த – தனித்தனியாக இருக்கின்ற அனைத்து ஜீவராசிகளும் .
அவ்யக்தாத்3 – மாயையிலிருந்து தோன்றுகின்றன. வெளித்தோற்றத்திற்கு வராத நிலையிலிருந்து தோன்றுகின்றன.
ராத்ரி ஆகம் – அவரது இரவு
தொடங்கும் போது
ப்ரலீயந்தே – எல்லா
ஜீவராசிகளும்
தத்ர ஏவாவ்யக்த ஸம்ஞகே – அந்த
மாயையுக்குள், அவ்யக்தம் என்ற பெயருடைய மாயைக்குள் ஒடுங்குகின்றன.
भूतग्रामः स एवायं भूत्वा भूत्वा प्रलीयते ।
रात्र्यागमेऽवशः पार्थ प्रभवत्यहरागमे ॥ 19 ॥
ஹே அர்ஜுனா! அதே உயிரினங்களின் கூட்டம்
மீண்டும் மீண்டும் பிறந்து பிரம்மாவின் இரவு தொடங்கும்போது ஒடுங்குகின்றன. இது
அவைகளின் வசமின்றி நடக்கின்றது.
பிரம்மாவின் பகல் தொடங்கும்போது மீண்டும் தோன்றுகின்றது
விசாரம்
- பிராரப்தத்தின்
பலனை அனுபவிப்பத்துதான் தீர வேண்டும் என்ற நியதி இருக்கின்றது. எனவே நீ
எதுவும் செய்ய தேவையில்லை
- நாம்
அனுபவிக்கும் இன்ப-துன்பங்களுக்குக் காரணம் நாம்தான், வேறு மனிதர்களோ,
சூழ்நிலையோ காரணமில்லை. இப்படி
புரிந்து கொண்டால் இன்ப-துன்பத்தை தவிர வேறெந்த உணர்ச்சிகளும் தோன்றாது.
- நமக்கு வரும்
சுக-துக்கங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை
- பிரயத்தனம் –
இன்றைக்கு இருக்கும் நிலைக்கு காரணம் நேற்று நாம் செய்த செயலின்
அடிப்படையில்தான் அமைகின்றது. நிகழ்காலத்தில் வாழும் விதத்தை பொறுத்து எதிர்கால வாழ்க்கை நிலை அமைகிறது..
परस्तस्मात्तु
भावोऽन्योऽव्यक्तोऽव्यक्तात्सनातनः ।
यः स
सर्वेषु भूतेषु नश्यत्सु न विनश्यति ॥ 20 ॥
பரஹ – மேலான, உயர்ந்த
அவ்யக்தஹ பாவஹ - அவ்யக்தமான பிரம்மம்
தஸ்மாத் அவ்யக்தாத் - காரணரூபமான மாயைக்காட்டிலும்
அன்யாத் – வேறு
தன்மையுடையது
ஸனாதன – அது என்றும்
இருப்பது, மாற்றமடையாதது.
அவ்யக்தம் என்ற சொல்லால் மாயை, பிரம்மம் இரண்டையும் குறிக்கின்றார். ஏனென்றால் இவையிரண்டையும் மனதாலும், வாக்காலும், புலன்களாலும் கிரகிக்க முடியாது. எந்தவொரு அவ்யக்த தத்துவமானது எல்லா
ஜீவராசிகளும் அழிந்தாலும், தான் மட்டும் அழியாமல் இருக்கின்றதோ அதுதான் மோக்ஷரூபமான அவ்யக்தம்.
अव्यक्तोऽक्षर इत्युक्तस्तमाहुः परमां गतिम् ।
यं प्राप्य न निवर्तन्ते तद्धाम परमं मम ॥ 21 ॥
முன்னே கூறிய அவ்யக்தமான பரம்பொருளை அக்ஷரம்
என்று கூறப்பட்டது. இந்த அக்ஷரத்தை
அடைவதுதான் மிக உயர்ந்த லட்சியமாக கூறுகிறார்கள்.
இதை அடைவதை நாம் லட்சியமாக கொண்டுவிட்டால் மற்றதெல்லாம் நமக்கு
சாதனமாகி விடுகின்றது. எதை அடைந்தால் மீண்டும் திரும்புவதில்லையோ அது என்னுடைய
(பிரம்மத்தினுடைய) மேலான இருப்பிடமான மோட்சமாகும்..
पुरुषः स परः पार्थ भक्त्या लभ्यस्त्वनन्यया ।
यस्यान्तःस्थानि भूतानि येन सर्वमिदं ततम् ॥ 22 ॥
ஹே பார்த்த! அந்த மேலான புருஷன் (அக்ஷரம்) வேற்றுமை இல்லாத பக்தியினால் அடையப்படுகின்றது. எல்லா உயிரினங்களுக்குள்ளும் எந்த பிரம்மன்
இருக்கின்றதோ, எந்த பரமாத்மாவினால் இவைகளனைத்தும் இருக்கின்றனவோ, வியாபிக்கபட்டு
இருக்கின்றனவே அந்த பிரம்மத்தை பக்தியினால் அடையலாம்.
அனன்யா பக்தி - வேற்றுமை காணாத பக்தி, பிளவுபடாத பக்தி
பக்தி-1 மூன்று
விதமான வேறுபாடுகளையுடைய பக்தி. அவைகளாவது 1.பக்தன், 2.இறைவன், 3.அடைய வேண்டிய லட்சியம். இவைகளில் ஏதாவது ஒன்றை அடைவதற்கு இறைவனை வணங்குதல் இதற்கு
உதாரணம்
பக்தி-2 இரண்டு
விதமான வேற்றுமைகளை உடையது. அவைகளாவது 1.பக்தன்,
இறைவன். எனக்கு நல்ல புத்தியை கொடு என்று வேண்டுதல், உன்னை அடைவதற்கு எனக்கு உதவி
செய் என்று வேண்டுதல். இவ்வாறு லட்சியம் நம்மை அடைதலாகவோ இறைவனை அடைவதாகவோ
இருக்கலாம்
பக்தி-3 பக்தன், பகவான்
ஐக்கியத்தை உடையது. ஞானரூப பக்தி என்று சங்கரர் கூறுகிறார்.
यत्र काले त्वनावृत्तिमावृत्तिं चैव योगिनः ।
प्रयाता यान्ति तं कालं वक्ष्यामि भरतर्षभ ॥ 23 ॥
பரதர்ஷப – ஹே அர்ஜுனா!
ப்ரயாதாஹா – மரணமடைந்து
உடலை விட்டு செல்கின்ற
யோகின – சாதகர்கள்
(கர்மி, உபாஸகன்)
யத்ர காலே – எதன் வழியாக,
எந்த பாதையின் வழியாக
அனாவ்ருத்திம் – திரும்பி வராத
லோகத்தையும்
ஆவ்ருத்திம் – திரும்பி
வரக்கூடிய லோகத்தையும்
யாந்தி - அடைகிறார்களோ
தம் காலம் – அந்த பாதைகளை
வக்ஷ்யாமி – கூறுகிறேன்.
கர்மி – உடலாலும், வாக்காலும் தர்மப்படி
கடமைகளை செய்து கொண்டிருப்பவன். யாகங்கள்,
பூஜைகளை செய்து கொண்டிருப்பவன்.
உபாஸகன் – இஷ்ட தேவதையை தியானம் செய்து
கொண்டிருப்பவர்கள், தர்மத்துடன் வாழ்ந்து கொண்திருப்பவர்கள், இறைவனை வழிபட்டுக்
கொண்டிருப்பவர்கள்
இந்த இருவரும் இறந்த பிறகு இரண்டுவிதமான
லோகத்திற்கு செல்வார்கள். கர்மி
சொர்க்கத்திற்கும், உபாஸகன் பிரம்மலோகத்திற்கும் செல்வார்கள். சொர்க்க லோகத்திற்கு செல்பவர்கள் புண்ணியம்
தீர்ந்ததும் திரும்பி பூலோகத்திற்கு வந்து விடுவார்கள். பிரம்ம லோகத்திற்கு சென்றவர்களுக்கு அங்கேயே
ஞானத்தை அடைந்து முக்தி அடைய வாய்ப்பு இருக்கின்றது. இந்த இரண்டு லோகத்திற்கு
செல்கின்ற பாதகளையும் இதில் கூறப்படுகிறது.
अग्निर्जोतिरहः शुक्लः षण्मासा उत्तरायणं ।
तत्र प्रयाता गच्छन्ति ब्रह्म ब्रह्मविदो जनाः ॥ 24 ॥
அக்னி – அக்னி தேவதை
ஜ்யோதி – ஒளிக்கு
அதிஷ்டானமான தேவதை
அஹஹ – பகல் கால தேவதை
ஶுக்லஹ – சுக்ல
பட்சத்திற்குரிய (வளர்பிறை காலம்) தேவதை
ஷண்மாஸா உத்தராயணம் – சூரியன்
வடக்கே பிரயாணம் செய்வது (ஜன15 – ஜுலை-15) உத்தராயண தேவதை
தத்ர ப்ரயாதா - இந்த தேவதைகளின் பாதை வழியாக இறந்த பிறகு
செல்கின்ற
பிரஹ்மவிதஹ ஜனாஹா – சகுண
பிரம்மத்தை, ஈஸ்வரனை, ஹிரண்யகர்ப்பனை உபாஸித்த மனிதர்கள்
பிரஹ்ம கச்சந்தி – பிரம்ம
லோகத்தை அடைகிறார்கள்
धुमो रात्रिस्तथा कृष्णः षण्मासा दक्षिणायनम् ।
तत्र चान्द्रमसं ज्योतिर्योगि प्राप्य निवर्तते ॥ 25 ॥
தூமஹ – புகைக்குரிய
தேவதை
ராத்ரி – இரவு
காலத்தின் தேவதை
கிருஷ்ண – கிருஷ்ண பக்ஷ
(தேய் பிறை) தேவதை
ஷண்மாஸா தக்ஷிணாயனம் – சூரியன்
தெற்கே பயணிக்கும் காலத்தின் தேவதை. ஜுலை-16 – ஜன-14)
இந்த நான்கு தேவதைகள் இருக்கின்ற பாதை வழியாக
செல்கின்ற யோகிகள் (கர்மத்தை தர்மப்படி செய்து வாழ்ந்தவர்கள்) சொர்க்க லோகத்தை
(சந்திரமஸம் ஜ்யோதி) அடைந்து பிறகு திரும்பி விடுவார்கள்
விசாரம்
குறிப்பிட்ட காலத்தில் இறந்தால் நற்கதி
அடைவார்கள். வேறு சிலகாலத்தில்
இறந்தால் தீயகதி அடைவார்கள் என்ற நம்பிக்கை
மக்களிடையே இருக்கிறது. இது தவறான நம்பிக்கை.
மரணத்திற்கு பிறகு செல்வது மனமும், சிதாபாஸமும்தான்
ஜீவன் என்ற சொல்லுக்கு மூன்று தத்துவங்கள்
இருக்கிறது. அவைகள்
1. அழியாத, அறிவு ஸ்வரூபமான ஆத்மா
2. சூட்சும சரீரம், காரண சரீரம் – ஜடமான
சூட்சும பூதங்களால் உருவாக்கப்பட்டது. சூட்சும சரீரத்திற்கு ஆத்மாவை
பிரதிபலிக்கின்ற குணம் இருக்கின்றது. மனம்
ஆத்மாவை பிரதிபிம்பிக்கின்றது
3. சிதாபாஸம்
शुक्लकृष्णे गती ह्येते जगतः शश्वते मते ।
एकया यात्यनावृत्तिमन्ययावर्तते पुनः ॥ 26 ॥
பூலோகத்திற்கு சுக்ல கதி, கிருஷ்ண கதி என்று
இரண்டு பாதைகள் உள்ளதாக கருதப்படுகின்றது.
ஒரு பாதையில் (சுக்ல பாதை) சென்றால் மீண்டும் திரும்பாத நிலையை அடைவான்.
வேறு பாதையில் (கிருஷ்ண பாதை) செல்பவன் திரும்பி விடுகின்றான்.
·
நிஷ்காம உபாஸகன்,
காம்ய உபாஸகன் என்று
இரண்டு வகையினர் இருக்கின்றனர்..
நிஷ்காம உபாஸகன்
மனதூய்மையை அடைந்து ஞானத்திற்கு தகுதியடைந்து விடுகிறான். வேதாந்தம் சிரவணம் சாதனத்தின்
மூலம் பிரம்ம ஞானத்தை அறிவான்.
·
சாஸ்திரப்படி வாழ்க்கை வாழாதவனை
அதர்மி என்று அழைப்பர். அவன் கீழான லோகத்தை அடைவான் அல்லது இந்த லோகத்திலே பறவை, மிருகம், தாவரங்கள் போன்ற கீழான
பிறவியெடுப்பான்
·
யோகப்ரஷ்டன் என்ற சாதகனுக்கு போதிய காலம் இல்லாததால் ஞானயோகத்தை
முடிப்பதற்குள் இறந்து விட்டால்,
மீண்டும் பூலோகத்திலே
பிறந்து விட்ட இடத்தில் இருந்து ஞானயோகத்தை தொடர்வான்.
·
ஞானிக்கு எந்த கதியும் கிடையாது, பிரம்மத்தோடு
ஐக்கியமாகி விடுவான்.
नैते सृती पार्थ जानन्योगी मुह्यति कश्चन ।
तस्मात्सर्वेषु कालेषु योगयुक्तो भवार्जुन ॥ 27 ॥
ஹே அர்ஜுனா! இந்த இரண்டு பாதைகளையும் அறிந்தவன்
மோகத்தை அடைய மாட்டான். ஆகவே எல்லாகாலத்திலும் யோகத்தில் பொருந்தியவனாக இருப்பாயாக!
யோகயுக்தனாக, மனதை சமாதானத்தோடு, ஒருமுகப்படுத்தியவனாக இருப்பாயாக!
वेदेषु यज्ञेषु तपःसु चैव दानेषु यत्पुण्यफलं प्रदिष्टम् ।
अत्येति तत्सर्वमिदं विदित्वा योगी परं स्थानमुपैति चाधम् ॥
28 ॥
வேதத்தை அத்யயனம் செய்வதிலும், விதவிதமான
யாகங்களை செய்வதிலும், விதவிதமான தவங்கள், விரதங்கள் செய்வதினாலும் மேலும்
விதவிதமான தானம் செய்வதினாலும் எந்த புண்ணியமானது பலனாக சொல்லப்பட்டிருக்கின்றதோ
அவைகள் அனைத்தையும் இந்த உபாஸனைகளை செய்த யோகியானவன் கடந்து செல்கின்றான். அவனே
மேலான இருப்பிடமான மோட்சத்தை அடைகின்றான். பிரம்ம லோகத்திற்கு சென்று கிரம முக்தி
அடைகின்றான்
ஓம் தத் ஸத்
----0000----