Showing posts with label கர்மயோகம். Show all posts
Showing posts with label கர்மயோகம். Show all posts

Monday, October 8, 2012

கர்மயோகம்-ஸ்வாமி குருபரானந்தா


கர்மயோகம்

ஸ்வாமி குருபரானந்தா


உடல், வாக்கு, மனம் என்ற மூன்று இடங்களிலிருந்து வெளிப்படும் செயலே கர்மமாகும். இது இரண்டு வகையாக வெளிப்படும், ஒன்று இயற்கையாக செய்யப்படுவது, மற்றொன்று தூண்டுதலால் செய்யப்படுவது.

கர்மயோகம் என்பது கர்மத்தை கருவியாக பயன்படுத்துதல், சாதனமாக பயன்படுத்துதல். ஆசையை பூர்த்தி செய்வதற்காக ஏதாவது ஒரு செயலை செய்கின்றோம்.  ஆசையை வளர்ப்பதற்கு காரணமாக அமையும் கர்மமானது விருப்பு வெறுப்புக்களை பதிவு செய்துவிடுகிறது. நாம் வளர வளர நம்மிடையே விருப்பு, வெறுப்புக்களும் வளர்கிறது.  இதன் விளைவாக பாவ, புண்ணியத்தை உற்பத்தி செய்து, நம்மை பந்தப்படுத்திக் கொண்டு இருக்கிறது.

நம் மனமானது இந்த விருப்பு வெறுப்புக்களின் குவியலாக இருக்கிறது. இவ்வாறு கர்மமானது விருப்பு வெறுப்புக்களை வளர்வதற்கு காரணமாக இருக்கிறது, இதே கர்மமானது விருப்பு வெறுப்புக்களை நீக்குவதற்கும் காரணமாக இருக்கிறது.  நாம் அடைய வேண்டிய மனம் எதுவென்றால், நம்மை அமைதியாக வைத்துக் கொள்ளக்கூடிய விருப்பு வெறுப்புக்களற்றதாக இருக்க வேண்டும். எந்தச் செயல்கள் நம்மை பந்தப் படுத்திக் கொண்டு இருக்கிறதோ அதையே நம்மை பந்தப்படுத்தாதவாறு செய்து தூய்மையாக வைத்துக் கொள்ளலாம். இதற்கு ஒரே வழி கர்மயோகம் என்ற சாதனைதான்.
கர்மமானது ஒரு யோகமாக செய்தோமானால் நம் மனதில் உள்ள விருப்பு வெறுப்புக்கள் வெகுவாக குறையும், உண்மை, பொய் இவற்றை மறைத்துக் கொண்டு இருக்கும் மோக மாயை அறியும் சக்தி, அறிவானது உருவாகும்.

கர்மங்கள் பலவகையாக இருக்கிறது, கடமைகளாக சில கர்மங்கள், காம்யமாக சில கர்மங்கள், கஷடங்கள் தீருவதற்கு செய்யப்படும் சில கர்மங்கள் (பிராயசித்த கர்மம்), சாஸ்திரம் மற்றும் சான்றோர்களால் விலக்கப்பட்ட சில கர்மங்கள் என பலவகையாக இருக்கிறது.  செயல்களை செய்பவன் கர்த்தா என்று அழைக்கப்படுகிறான்.  செயல்களின் விளைவை அன்பவிக்கும் போது அவனே போக்தாவாக இருக்கிறான். கர்த்தாவாக இருக்கும் போது எந்த மனநிலையோடு இருக்க வேண்டும், போக்தாவாக் இருக்கும் போது எந்த மனநிலையில் இருக்க வேண்டும் என்ற அறிவை அடைய வேண்டும்.
பகவான் கீதையில் கர்மத்தைப் பற்றி கீழ்கண்டவாறு கூறியிருக்கிறார்.

·         1.செயலை செய்யும் முறையை தேர்ந்தெடுக்கும் உரிமை நமக்கு இருக்கிறது
·         2.செயலை செய்து முடித்துவிட்ட பிறகு அதன் பலனை தீர்மானம் செய்வதற்கு உரிமையில்லை.
·         3.செயலினுடைய பலன் நம்முடைய சங்கல்பத்தின்படி (எந்த பாவனையில் செய்கிறோமோ) அமைகிறது.  பாவ, புண்ணியங்களும் இதன் அடிப்படையில்தான் அமைகிறது.
·         4.செயலின்மையில் பற்றுக் கொள்ளக் கூடாது.

தர்மம் என்பது சரியான செயலை சரியான பாவனையோடு செய்வது. இது இரண்டு வகையாக இருக்கிறது.  ஒன்று சாமான்ய தர்மம், மற்றொன்று விசேஷ தர்மம்

சாமான்ய தர்மம்: எது எல்லா இடத்திலும், எல்லா காலத்திலும் மாறாமல் இருக்க கூடியது.  உதாரணமாக மற்றவர்க்ளை துன்புறுத்தாமல் இருப்பது, பொய் பேசாமை, உண்மை பேசுவது.  இந்த தர்மத்தை எப்படி அறிந்து கொள்ள முடியும் என்று கேட்டால், உனக்கு எது பிடிக்குமோ அதுதான் மற்றவர்களுக்கும் பிடிக்கும், உனக்கு எதில் விருப்பமில்லையோ அதில் மற்றவர்களுக்கும் விருப்பமிருக்காது. எவை எனக்கு கஷடத்தையோ, துன்பத்தையோ கொடுக்குமோ அதனை மற்றவர்களுக்கு செய்யாதே, எந்த செயல்கள் நன்மையை கொடுக்குமோ அதைத்தான் மற்றவர்களுக்கும் செய்ய வேண்டும்.

விசேஷ தர்மம்: இது மாற்றத்துக்குரியது, காலம், இடம், பொரும், மனிதன் இவைகளுக்கு ஏற்றவாறு மாறும் தன்மையுடையது.  இதை நியத கர்மம் என்றும் கூறுவர்.  அவரவர்களுடைய அன்றாட கலமைகள், கண்டிப்பாக செய்ய வேண்டிய கர்மங்கள், எதை செய்யாமல் இருந்தால் குற்ற உணர்வு வருமோ அதுவே நம்முடைய விசேஷ கடமை என்று தெரிந்து கொள்ளலாம். இப்படி கடமைகளை செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய பாவனை என்ன என்பதை தெரிந்துக் கொண்டு அதன்படி நடக்க வேண்டும்.

செய்யும் செயலில் இருக்க வேண்டிய பாவனை
1.       ராக, துவேஷம் (விருப்பு, வெறுப்பு) இருக்க கூடாது. அதே சமயம் நம் உழைப்பின்றி வரும் எதையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது.
2.       நாம் செய்யும் கடமையினால் பலன் அடைந்தவர்களிடம் நமக்கு உரிமை இருக்கிறது.  அது கிடைக்காவிட்டால் அதை கேட்டுப் பார்க்கலாம். அப்படியும் கிடைக்காவிட்டால் இறைவன் நமக்கு கொடுப்பான் என்ற நம்பிக்கையோடு அந்த உரிமையை தியாகம் செய்து விட வேண்டும்.

3.       கடமையை செய்கிறேன், ஆனால் உரிமை மறுக்கபடும் போது யாருக்காக நான் செய்ய வேண்டும் என்றால், ஈஸ்வரார்ப்பனம் என்ற பாவனையோடு செய்ய வேண்டும்.  நான் செய்யும் கடமையையே இறைவழிபாடாக செய்யும் மனப்பாங்கோடு செய்ய வேண்டும். அப்படி செய்வதால் உரிமையை கடவுளிடம் எதிர்பார்க்கலாம்.  கடவுளும் ஏதோ ஒரு வகையில் பலனை கொடுப்பார்.

4.       கிருஷ்ண பகவான் கீதையில், நீ உன்னுடைய கடமையை மட்டும் செய் மற்றவர்களுடைய கடமையை செய்ய முயற்சிக்காதே. அதனால் நம்முடைய கடமையை மட்டும் செய்து கொண்டிய்ருந்தாலே போதும்.

5.       நாம் சரியாக செய்யும் கடமையில் பலன் கிடைக்காவிட்டால் அதற்காக நாம் வருந்த தேவையில்லை, மனதில் குற்ற உணர்வை அடைய கூடாது.

கிருஷண பகவான் கீதையில் சில புதிய கடமைகளை செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். இல்லறத்தி இருப்பவர்களுக்கு மூன்று கடமைகளை கூறியிருக்கிறார். அவைகள் யக்ஞம், தானம், தவம்.

யக்ஞம்: (இறைவழிபாடு) வேதத்தில் கூறப்பட்ட ஐந்து வகையான யக்ஞங்களை கட்டாயம் நாம் கடைபிடிக்க வேண்டும்.

1.       1.தேவ யக்ஞம்: பிரார்த்தனை - இறைவனை வழிபடுதல். தினந்தோறும் ஒரு சில நிமிடங்களாவது இதற்கு நாம் ஒதுக்க வேண்டும்.  பிரார்த்தனை என்பது மானசீகமாக இறைவனிடம் வேண்டுதல் விடுப்பது.
2.       2.ரிஷி யக்ஞம்: உயர்ந்த கருத்துக்களை கூறும் நூல்களை படிப்பது, ஆன்மீக சம்பந்தமான அறிவை அடைய மகான்களின் நூல்களை படிப்பது
3.       3.பித்ரு யக்ஞம்: நம் குடும்பத்தில் வாழ்ந்த பெரியோர்கள் காட்டிய நல்ல நெறிகளையும், எப்படி வாழக் கூடாது என்ற உபதேசத்தையும் நினைவு கூர்தல், வயதான காலத்தில் பெரியோர்கள் எதிர்பார்ப்பது அன்பும், ஆதரவும்தான் அதை நாம் பூர்த்தி செய்ய வேண்டும்.
4.      4. மனுஷ்ய யக்ஞம்: விருந்தினர்கள், உறவினர்களுக்கு செய்யும் உதவிகள்.
5.       5.பூத யக்ஞம்: மற்ற உயிர்களுக்கு உதவி செய்தல்

தானம்:
இல்லறத்தில் இருப்பவர்கள் மற்ற ஆசிரமத்தில் உள்ளவர்களை பராமரிக்க வேண்டும்.  அவர்களுக்கு பொருளுதவி செய்ய வேண்டும்.  மனிதர்களுக்கு லோபம் என்பது பலவீனமான குணம்.  நாம் ஈட்டிய பொருளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.  ஈகை இசைபட வாழ்தல் என்ற வள்ளுவரின் வாசகம்படி ஈகை குணத்தை வீட்டிலிருந்து ஆரம்பித்து பின் உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் மற்ற ஆசிரமத்தில் உள்ளவர்களுக்கும் கொடுத்து உதவ வேண்டும்.  பகவான் நமக்கு அதிக செல்வம் கொடுத்தால் நம்மை தானத்தின் மூலம் தூய்மை படுத்துவதற்கு வசதி செய்து கொடுத்திருக்கிறார் என்று எண்ணி தானம் செய்து மனத்தூய்மை அடைந்திட வேண்டும்.

தவம்:
சாஸ்திரம் நமக்கு பொருளை ஈட்ட வேண்டும் என்று கட்டளையிடுகிறது.  அதேமாதிரி உலக இன்பங்களை தர்ம வழிப்படி அனுபவிக்க வேண்டும் என்றும் கட்டளையிடுகிறது.  வயதாகும்போது இந்திரியங்களும் சக்தியையிழந்து கொண்டே போகும்.  ஒரு நிலையில் அனுபவிக்கும் சக்தியை முற்றிலுமாக இழந்து விடும்.  இதுவரை அனுபவித்த இன்பங்கள் இல்லாமல் வாழ்ந்தாக வேண்டும்.  ஆனால் அந்த நிலையை எதிர்கொள்வது மிகவும் கடினமாக இருக்கும்.  எனவே சக்தி இருக்கும்போதே இதைப்பழக்கிக் கொள்ள வேண்டும்.  அதற்குரிய சாதனை தவம் என்றழைக்கப்படுகிறது.  இது பகுதி நேர சாதனை, வானபிரஸ்த ஆசிரமத்தின் முழுநேர சாதனையாகும். இல்லறத்தில் இருக்கும்போதே விரதமிருத்தல், மௌனமாக இருத்தல், தனியாக இருத்தல் போன்றவற்றை பழகிக் கொள்ள வேண்டும்.
வானபிரஸ்தாஸ்ரம கடமைகள்:
உல்க இன்பங்களிலிருந்து முழுவதுமாக விலகி தவமே முழுநேர சதனையாக இருக்க வேண்டும்.  நம்மிடம் உள்ள பொறுப்புக்களை உரியவர்களிடம் கொடுத்து விட்டு, அதனால் கிடைக்கும் நேரத்தை மௌனம், தியானம், ஜபம் செய்தல் போன்றவற்றின் மூலமாக தன்னிடத்திலேயே நிலைத்து நிற்க பழக வேண்டும்.

காம்ய கர்மம்
இவ்வுலக, பரலோக இன்பத்தையடைய செய்யப்படும் செயல்கள் யாவும் காம்ய கர்மம் என்று அழைக்கப்படும்.  இவைகள் கடமைகள் ஆகமாட்டா. இநத செயல்களை தர்மப்படி செய்ய வேண்டும், அளவுடன் இருக்க வேண்டும்.  இதை அனுபவிக்கும் போது போக்தாவாக இருப்பதால், இவைகள் இறைவனின் பிரசாதமாக எண்ணி அனுபவிக்க வேண்டும்.  இந்த இன்பங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதை கொஞசம் கொஞ்சமாக குறைத்து பின் முற்றிலுமாக விட்டு விட வேண்டும்.  இதை செய்ய வேண்டும் என்ற ஆசையையும் மன்திலிருந்து நீக்கி விட வேண்டும்.

பிராயசித்த கர்மம்:
நமக்கு வரும் அதிக கஷ்டங்களைப் போக்கிக் கொள்ள, பிராயசித்த கர்மத்தை செய்வோம்.  நாம் அனுபவிக்கும் துன்பங்களை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டுமென்றால் இறைவன் தனக்கு கொடுக்கும் சோதனைகளாக நினைக்க வேண்டும்.  இதை கொஞசம் கொஞ்சமாக குறைத்து பின் முற்றிலுமாக விட்டு விட வேண்டும். 


பலன்கள்
1.       கர்மயோகத்தில் தோல்வி என்பதே கிடையாது
2.       இதில் விபரீத பலன்களே வராது
3.       எவ்வளவு தூரம் செய்கின்றோமோ அந்த அளவுக்கு பலன் வரும்.  இதில் செய்த கர்மம் வீண் போகாது
4.       நமக்கு விருப்பு, வெறுப்புக்கள் புதியதாக உண்டாகாது.  ஏற்கனவே இருப்பவைகளும் தானே நீங்கி விடும்.
5.       நம்முடைய விவேகம் வளர்ச்சியடையும். இதுவே வைராக்யம், முமுக்ஷுத்வம் என்று கூறபடுகிறது.
6.       இது ஒருவனை நன்கு பக்குவபடுத்தி ஞானயோகத்திற்கு எடுத்துச் செல்கிறது, மோட்சம் அடையும் வரை உதவியாக இருக்கும்.

ஒம் தத் ஸத்

A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...