Showing posts with label உத்தவ கீதை-13. Show all posts
Showing posts with label உத்தவ கீதை-13. Show all posts

Thursday, July 20, 2017

Uddhava Gita - Chapter-13

அத்தியாயம்-13
பக்தி, ஞானம், மனவடக்கம், புலனடக்கம்
ஸ்வாமி குருபரானந்தாவின் உபதேச விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது-22-02-2022

ஶ்ரீபகவான் உவாச
யோ வித்3யாஶ்ருதஸம்பன்ன: ஆத்மவான்னானுமானிக: |
மயாமாத்ரமித3ம் ஞாத்வா ஞானம் ச மயி ஸந்ந்யஸேத் || 1 ||

யஹ: எவனொருவன்
வித்யா ஶ்ருத ஸம்பன்ன – ஆத்ம ஞானம் அடையும்வரை வேதாந்தத்தை கேட்கின்ற மனநிலையை அடைந்தவன், சிரவணம் செய்து கொண்டிருப்பவன்
ஆத்மவான் – தன்னுடைய புலன்களையும், மனதையும், உடலையும், தன வசத்துக்கு கொண்டு வந்தவன்
: அனுமானிகஹ – தர்க்க பிரமாணத்தால் மோக வசப்படாதவன், அனுமானத்தை பயன்படுத்தாதவன்
மாயா மாத்ரம் இதம் ஞாத்வா – இந்த உலகம் மித்யா என்ற அறிந்தவன், இப்படி அறிந்தவனுக்கு அதற்கு ஆதாரமாக இருக்கின்ற மெய்ப்பொருளை அறிந்திருப்பான்
மயி ஞானம் ச ஸந்ந்யஸேத் – அடைந்த மித்யா என்ற ஞானத்தையும் என்னிடத்திலே ஐக்கியப்படுத்தி விடுவாயாக.

கயிற்றில் தோன்றும் பாம்பு விஷயத்தில் இரண்டு விருத்திகள் இருக்கின்றன.  ஒன்று பாம்பு என்கின்ற எண்ணம், இன்னொன்று கயிறு என்கின்ற எண்ணம்.  இதில் பாம்பு என்கின்ற எண்ணம்  பொய்யானதால், அது  விடப்படவேண்டும். அதேப்போன்று பொய்யாக தோன்றுகின்ற உலகம் என்ற எண்ணத்தை, அறிவை பிரம்மஸ்வரூபமாக இருக்கின்ற பகவானிடத்தில் விட்டுவிட வேண்டும். ஞானத்தை அடைந்த பிறகு அதை அடைய பயன்படுத்திய சாதனங்களையும் விட்டுவிட வேண்டும்.

ஞானினஸ்த்வஹமேவேஷ்ட: ஸ்வார்தோ2 ஸம்பத: |
ஸ்வர்க3ஶ்சைவாபவர்க3ஶ்ச நான்தோSதோ2 மத்3ருதே ப்ரிய: || 2 ||

ஞானிக்கு அடைய வேண்டியதும், செய்ய வேண்டியதும் ஒன்றும் இல்லை.  அவனுக்கு நான் ஒருவன்தான் மிகவும் பிடித்தமானவன். ஞானிக்கு நான்தான் அடைய வேண்டிய இலக்காகும்.  பயன்படுத்தும் சாதனங்களும் கூட நான்தான். இதுதான் உண்மை. அவனுக்கு சொர்க்கமும், மோட்சமும் என்னைத்தவிர வேறொன்றில்லை என்னைத் தவிர வேறெந்தப் பொருளிடத்தும் அவனுக்கு விருப்பம் இல்லை.

ஞானவிக்ஞானஸம்ஸித்3தா4: பத3ம் ஶ்ரேஶ்ட2ம் விது3ர்மம |
ஞானீ ப்ரியதமோSதோ மே ஞானேனாஸௌ பி3ப4ர்தி மாம் || 3 ||

ஞான விக்ஞான ஸம்ஸித்தா – ஞானத்தையும், விக்ஞானத்தையும் அடைந்தவன்.
ஞானம் என்பது பரோக்ஷமாக பிரம்மத்தை அறிந்து கொள்வது.  விக்ஞானம் என்பது அபரோக்ஷமாக, உணர்வுபூர்வமாக பிரம்மத்தை அறிந்திருப்பது, அதன் பலனை அனுபவித்துக் கொண்டிருப்பது. இது ஞான நிஷ்டை அடைந்த நிலை. இந்த நிலையில் இருப்பவர்கள்
மம – என்னுடைய
ஶ்ரேஷ்டம் விது: - மேலான திருவடிகளை, ஸ்வரூபத்தை அறிந்திருப்பார்கள்
ஞான ப்ரியதமோ அதோ மே – ஆகவே ஞானியே எனக்கு மிகவும் பிடித்தமானவன்
அஸௌ மாம் – அந்த ஞானி என்னை
ஞானேன பிபர்தி – ஆத்ம ஞானத்தின் அடிப்படையில் நேசிக்கிறான், அன்பு செலுத்துகிறான்

தபஸ்தீர்த2ம் ஜபோ தா3னம் பவித்ராணீதராணி ச |
நாலம் குர்வந்தி தாம் ஸித்3தி4ம் யா ஞானகலயா க்ருதா || 4 ||

ஆத்மஞானத்தின் பெருமையை பகவான் இதில் குறிப்பிடுகின்றார்.  நம் மனதை தூய்மை படுத்தும் சாதனங்களான தவம், புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்லுதல், ஜபம் (பகவான் நாமத்தை மனதுக்குள் உச்சரித்தல் ) தானம், - நம்மிடத்துள்ளதை பகிர்ந்து கொள்ளுதல், போன்றவைகள் நமக்கு எவ்வளவு பலனைக் கொடுக்குமோ, அவைகள் ஞானத்தால் அடையும் பலனில் ஒரு துளியாகத்தான் இருக்கும்.

தஸ்மாத்3 ஞானேன ஸஹிதம் ஞாத்வா ஸ்வாத்மானமுத்3த4வ |
ஞானவிக்ஞானஸம்பன்னோ ப4வ மாம் ப4க்திபா4வத: || 5 ||
உத்தவா! ஆகவே ஞானத்தை அடைய வைக்கும் சாதனங்களை பயன்படுத்தி (சிரவணம், மனனம், நிதித்யாஸனம் ) ஆத்ம தத்துவத்தை அறிந்து, ஞானத்துடனும், விக்ஞானத்துடன் கூடியவனாக இருந்து கொண்டு என்னை நாடி வருவாயாக, பக்தியென்ற  உணர்வுடன் என்னை அடைய முயற்சிப்பாயாக.

ஞானவிக்ஞானயக்ஞேன மாமிஷ்ட்வாத்மானமாத்மனி |
ஸர்வயக்ஞபதிம் மாம் வை ஸம்ஸித்3தி4ம் முனயோக3மன் || 6 ||

ஞான விக்ஞான – ஆத்ம ஞானமும், ஞான நிஷ்டையும் அடைந்து
மாம் இஷ்ட்வா – என்னை வழிபட்டு
ஸர்வ யக்ஞபதிம் மாம் – அனைத்து கர்மங்களுக்கும் தலைவனாக இருக்கின்ற என்னை அடைந்துள்ளார்கள்.  மாபெரும் முனிவர்கள் மோட்சத்தை அடைந்துள்ளார்கள்
ஆத்மானம் ஆத்மனி – அவர்களுடைய ஆத்மாவாகவும் இருக்கின்ற என்னை தனக்குள்ளே வழிபட்டார்கள்

த்வய்யுத்3த4வாஶ்ரயதி யஸ்த்ரிவிதோ4 விகாரோ
        மாயாந்தராபததிநாத்3யபவர்க3யோர்யத் |
ஜன்மாதயோஸ்ய யத3மீ தவ தஸ்ய கிம் ஸ்யுர
        ஆத்3யந்தயோர்யத3ஸதோஸ்தி ததே3வ மத்4யே || 7 ||

உத்தவா! ஆத்மாவாகிய உன்னிடத்தில் இந்த உலகமானது மூன்று விதமாக பிளவுபட்டுள்ளது. அவைகள் அத்யாத்மிகம், ஆதிபௌதிகம், ஆதிதைவதம் என்கின்ற தேஹம், புலன்கள், தேவதைகள் ஆகியவைகளாகும். இந்த உலகங்கள் வேறொன்றை சார்ந்திருப்பதால் அவைகள் மித்யாவாக இருக்கின்றது. எது முன்பும், பின்பும் கிடையாது ஆனால் இடைக்காலத்தில் மட்டும் இருக்கின்றது அது மித்யா என்று புரிந்து கொள்.
ந ஆத்ய அபவர்கயஹ அஸ்ய – அது தொடக்கத்தில் இல்லை, இறுதியிலும் இல்லை
அந்தரா ஆபத்தி – இடைக்காலத்தில் மட்டும் இருப்பது)
அமீ ஜன்மாத்ய அஸ்ய: - இந்த பிறப்பு, இறப்பு போன்ற மாற்றங்கள் இந்த உலகத்தில் உள்ள பொருட்களில்,ஜீவராசிகளில் இருக்கிறது
தவ தஸ்ய கிம் ஸ்யு – இவைகளால் உனக்கு ஒரு சம்பந்தமும் இல்லை.
அஸதஹ – இந்த பொய்யான உலகத்திற்கு (அஸத்துக்கு)
அஸ்தி தத்3 ஏவ மத்3யே - முன்னும், பின்னும் இருந்து கொண்டு இடைக்காலத்திலும் இருப்பது. கயிற்றில்தோன்றிய பாம்பு முன்னும் இல்லை, பின்னேயும் இல்லை ஆனால் கயிறு இருந்து கொண்டுதான் இருந்தது.  பாம்பு தோன்றிக் கொண்டிருக்கும் போதும் இருந்தது

ஶ்ரீஉத3த4வ உவாச
ஞானம் விஷுத்3த4ம் விபுலம் யதை2தத்3வைராக்3யவிக்ஞானயுதம் புராணம் |
ஆக்2யாஹி விஶ்வேஶ்வர விஶ்வமூர்தே த்வத்3ப4க்தியோக3ம் ச மஹத்3விம்ருக்யம் || 8 ||

விஶ்வஶ்வர – உலகத்துக்கெல்லாம் பகவானாக இருப்பவரே!
விஶ்வமுர்தே – உலக வடிவமாகவே இருக்கின்ற பகவானே!
விஸுத்தம் – தூய்மையாக இருக்கின்றவரே, ஜீவர்களை தூய்மைப்படுத்துகின்றவரே!
விபுலம்  -  சந்தேகமில்லாமல் உறுதியாக புரிந்து கொள்ள முடியும் வகையில் தெளிவாக
வைராக்ய யுதம் – வைராக்கியத்துடன் கூடியதுமான ஞானம்
விக்ஞானயுதம் – பலனை அனுபவிக்க க்கூடியதுமான
புராணம் – மிகப்பழமையானதுமான
மஹத் விம்ருக்யம் – மேலான சில மகான்களால் நாடப்படுவதுமான
யத் ஏதத் – இந்த ஆத்ம ஞானத்தை
ஆக்யாஹி – விளக்குங்கள்.
ஆத்ம ஞானத்தை எனக்கு உறுதியாக புரியும் வகையில் விளக்குங்கள். அதேபோல உங்களிடத்தில் பக்தி செலுத்துகின்ற நெறிமுறைகளை போதிக்கும் பக்தியோகத்தையும் எனக்கு நன்றாக புரியும்படி விளக்குங்கள்

தாபத்ரயேணாபி4ஹதஸ்ய கோ4ரே ஸந்தப்யமானஸ்ய ப4வாத்4வனீஶ |
பஶ்யாமி நான்யச்ச2ரணம் தவாங்க்4ரி த்3வந்த்3வாத்பத்ராத3ம்ருதாபி4வர்ஷாத் || 9 ||

கோ4ரே – மிக கடினமானதும்,பயங்கரமானதுமான
ப4வாத்4வனி – சம்சாரப் பாதையில்
தாபத்ரயேண – மூன்றுவிதமான தாபங்களினால் (அத்யாத்மிகம், ஆதிபௌதிகம், ஆதிதைவதம்)
அபிஹதஸ்ய – தாக்கப்பட்டு தவித்துக் கொண்டிருக்கும் என்னை
ஸந்தப்யமானஸ்ய – மிகவும் துயரப்பட்டு கொண்டிருக்கின்ற என்னை
அம்ருத அபி வர்ஷாத் – மோட்சம் என்கின்ற அமுதத்தைத் தருகின்ற
ஆதபத்ர தவ அங்க்ரித்வந்த்வாத் – நிழல் தரும் குடைப்போன்ற உங்களுடைய திருவடிகளை
பஸ்யாம் ந அன்யத் சரணம் – தவிர வேறெந்த புகலிடத்தையும் நான் பார்க்கவில்லை

தஷ்டம் ஜனம் ஸம்பதிதம் பி3லேஸ்மின்காலாஹினா க்ஷுத்ரஸுகோ2ருதர்ஷம் |
ஸமுத்3தரைனம் க்ருபயாபவர்க்3யைர்வசோபி4ராஸிஞ்ச மஹானுபா4வ || 10 ||

மஹானுபாவ – மகானுபாவரே!
தஷ்டம் ஜனம் – எல்லா மனிதர்களும் காலம் என்கின்ற பாம்பினால் தீண்டபட்டிருக்கிறார்கள்
பிலே அஸ்மின் ஸம்பதிதம் – இருண்ட கிணற்றில் விழுந்து கிடக்கிறார்கள்
க்ஷுத்ரஸுகஹ உருதர்ஷம் – இந்த நிலையிலுள்ள மக்களை கரையேற்றுங்கள்
க்ருபயா அபவர்க3ய வசோபி4 – தயைகூர்ந்து முக்தியை கொடுக்கவல்ல தங்கள் உபதேசத்தினால்
ஆஸிஞ்ச – எங்களை தூய்மைபடுத்துங்கள்

ஶ்ரீபகவான் உவாச
இத்த2மேத்த்புரா ராஜா பீ4ஷ்மம் த4ர்மப்4ருதாம் வரம் |
அஜாதஶத்ரு: ப்ப்ரச்ச2 ஸர்வேஷாம் நோனுஶ்ருண்வதாம் || 11 ||

ஶ்ரீபகவான் உபதேசிக்கிறார்
முன்னொரு சமயம் அஜாதசத்ரு என்றழைக்கப்படுகின்றவரும், தர்மஸ்வரூபியுமான பாண்டவ  ராஜ யுதிஷ்திரர் பீஷ்மரிடம் இதே கேள்வியை கேட்டார். அப்போது நாங்கள் அருகிலிருந்து கேட்டோம்.
அஜாத சத்ரு – யாரையும் பகைவனாக நினைக்காத குணத்தையுடையவர்
தர்மஸ்வரூபி – தர்மத்தை பாதுகாக்கும் குணத்தையுடையவர்.

நிவ்ருத்தே பா4ரதே யுத்3தே4 ஸுஹ்ருன்னித4னவிஹவல: |
ஶ்ருத்வா த4ர்மான்ப3ஹூன்பஶ்சான்மோக்ஷத4ர்மானப்ருச்ச2த || 12 ||

பாரத யுத்தம் முடிவடைந்த பிறகு, உற்றார்-உறவினர்களின் அழிவினை கண்டு மனம் கலங்கிய தர்மபுத்திரர் பலவிதமான தர்மங்களை கேட்டறிந்து பின்னர் மோட்ச தர்மத்தையும் கேட்டார்.

தானஹம் தேபி4தா4ஸ்யாமி தே3வவ்ரதமகா2ச்ச்2ருதான் |
ஞானவைராக்யவிக்ஞான ஶ்ரத்3தா4ப4க்த்யுபப்3ரும்ஹிதான் || 13 ||

அந்த உபதேசங்களைத்தான் நான் உனக்கு கூறப்போகிறேன்.  பிஷ்மருடைய திருவாயிலிருந்து வந்த உபதேசத்தை, மோட்ச சாதனங்களை, தர்மங்களை உனக்கு கூறுகிறேன். மோட்சத்தை அடைய உதவி செய்யும் சாதனங்களே மோட்ச தர்மங்கள் என்று இங்கு கூறப்படுகிறது.  ஞானம், வைராக்கியம், விக்ஞானம் (பலனை உடனே தரக்கூடிய ஞானம், அபரோக்ஷ ஞானம்),  சிரத்தை, பக்தியோகம் இவைகள் அனைத்தும் சேர்ந்திருக்கின்ற மோட்ச தர்மத்தை கூறப்போகிறேன்.

நவைகாதஶ பஞ்ச த்ரீன்பா4வான்பூ4தேஷு யேன வை |
ஈக்ஷேதாதா2யிகமப்யேஷு தத்3ஞானம் மம நிஶ்சிதம் || 14 ||

நவ – ஒன்பது
ஏகாதஶ - பதினொன்று
பஞ்ச – ஐந்து
த்ரீன் – மூன்று
மாயை, ஆத்மா, ஹிரண்யகர்ப்பன், விராட், பிரக்ருதி, புருஷன், மஹத், அகங்காரம், ஐந்து வகையான சூட்சும பூதங்கள் இவைகள் ஒன்பது
ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள், மனம் – பதினொன்று
ஐந்து ஸ்தூல பூதங்கள், மூன்று குணங்கள் (சத்துவ, ரஜோ, தமோ ), ஆகிய இருபத்தியெட்டு தத்துவங்களும் எந்தவொன்றில் ஒன்றாக அறிகிறானோ, பார்க்கின்றானோ அதுவே பிரஹ்ம ஞானம், இது என்னால் உறுதி செய்யப்பட்டது.

ஏத தே3வ ஹி விக்ஞானம் ந ததை2கேன யேன யத் |
ஸ்தி2த்யுத்ய்பத்த்யப்ய்யான்பஶ்யேத்3பா4வானாம் த்ரிகு3ணாத்மனாம் || 15 ||

முன்பு கூறிய ஞானம்தான் விக்ஞானமாகும். ஒரு தத்துவத்தினால் அனைத்தும் வியாபிக்கப்பட்டிருக்கிறது.  இப்போது பார்க்கும் வேற்றுமைகளை எப்போது பார்க்கவில்லையோ, அந்த நிலையே விக்ஞானம்.  எந்த சூழ்நிலையிலும் எந்த ஞானம் வெளிப்பட்டு விவகாரம் செய்கின்றதோ அதுவே விக்ஞானம்.  தோற்றம்-இருத்தல்-அழிதல் இவைகளைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.  மூண்று குணங்களால் உருவாக்கப்பட்ட எல்லாப்பொருட்களிலும் இந்த மூன்றையும் பார்க்க வேண்டும்.

ஆதா3வந்தே ச மத்4யே ச ஸ்ருஜ்யாத்ஸ்ருஜ்யம் யத3ன்வியாத் |
புனஸ்தத்ப்ரதிஸங்க்ராமே யச்சி2ஷ்யேத ததே3வ ஸத் || 16 ||

ஆதி அந்த மத்யே ஸ்ருத்யாத்ஸ்ருஜ்யம்– தோற்றம், இருத்தல், மாற்றமடைதல், அழிதல்
புனஹ தத் – மீண்டும் அது
ப்ரதிஸங்க்ராமே ததேவ ஸத் – ஒரு காரியத்திலிருந்து வேறொரு காரியத்திற்கு செல்லும்போது எது தொடர்ந்து இருக்கிறதோ அதுதான் ஸத் என்று சொல்லப்படுகிறது.

ஶ்ருதி: ப்ரத்யக்ஷமைதிஹயமனுமானம் சதுஷ்டயம் |
ப்ரமாணேஷ்வனவஸ்தா2னாத்3விகல்பாத்ஸ விரஜ்யதே || 17 ||

ஶ்ருதி: - வேதாந்த சாஸ்திரம்,
பிரத்யக்ஷம் - நம் அனுபவங்கள்,
ஐதிஹ்யம் – மகான்களின் அனுபவங்கள்,
அனுமானம் - யுக்தியின் மூலமறிதல்
ஆகிய இவைகள் நான்கும் முக்கியமான பிரமாணங்களாக இருக்கின்றது.
ப்ரமாணேஷ் அனவஸ்தானாத் – இந்த நான்கு பிரமாணங்களாலும் இந்த ஜகத் நிலையற்றது, நிரந்தரமற்றது, மாறும் தன்மையுடையது என்பதால்
ஸஹ விகல்பாத் விரஜ்யதே – ஞானயோகியானவன் உலகத்தின் மீது வைராக்கியத்தை அடைகிறான்

கர்மணாம் பரிணாமித்வாதா3விரிஞ்ச்யாத3மங்க3லம் |
விபஸ்ஶ்சின்னஶ்வரம் பஶ்யேத3த்3ருஷ்டமபி த்3ருஷ்டவத் || 18 ||

விபஸ்சித் – ஞானயோகத்தில் இருப்பவன்
அதிருஷ்டம் அபி அவிரிஞ்சாத் – பார்க்கப்படாத போதிலும் பிரம்மலோகம் வரையிலும் மற்ற லோகங்களும்
திருஷ்டவத் – பார்க்கின்ற உலகத்தை வைத்து
நஶ்வரம் பஶ்யேத் – நிலையற்றது என்று பார்க்கின்றான்.
கர்மணாம் – செய்கின்ற அனைத்து செயல்களின் பலன்களும்
பரிணாமித்வாத் – வரையறுக்கப்பட்டவைகள்
அமங்கலம் – புனிதமற்றது, துயரத்தைக் கொடுக்க கூடியது

ப4க்தியோக3: புரைவோக்த: ப்ரீயமாணாய தேனக4 |
புனஶ்ச கத2யிஷ்யாமி மத்3ப4க்தே: காரணம் பரம் || 19 ||

பாவங்களற்ற உத்தவா! இந்த பக்தியோகமானது எனக்கு பிரியமானவனான உனக்கு முன்னரே விளக்கமாக கூறிவிட்டேன். இருந்தாலும் மீண்டும் கூறுகிறேன்.  என்னிடத்தில் பக்தியை அடைவதற்கான உயர்ந்த சாதனமான பக்தியைப் பற்றிக் கூறுகிறேன்.

ஶ்ரத்3தா4ம்ருதகதா2யாம் மே ஶஶ்வன்மத3னுகீர்தனம் |
பரினிஷ்டா2 ச பூஜாயாம் ஸ்துதிபி4: ஸ்தவனம் மம || 20 ||

இறைவனைப்பற்றிய அமுதமான கதைகளைக் கேட்க வேண்டும் என்ற விருப்பம். கேட்ட கதைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளுதல், படித்தல், பூஜைகளை முழு ஈடுபாடுடன் தொடர்ந்து செய்தல். என்னை தோத்திரங்களால் துதித்தல் ஆகியவற்றை சிரத்தையோடு செய்து கொண்டு வரவேண்டும்.

ஆத3ர: பரிசர்யாயாம் ஸர்வாங்கை3ரபி4வந்த3னம் |
மத்3ப4க்தபூஜாப்4யதி4கா ஸர்வபூ4தேஷு மன்மதி: || 21 ||

எனக்கு சேவை செய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருத்தல், உடலிலுள்ள எல்லா அங்கங்களும் தரையில் படும்படி விழுந்து நமஸ்கரித்தல், என்னை பூஜிப்பதைக் காட்டிலும் என் பக்தர்களுக்கு அதிகமாக சேவை செய்தல், எல்லா ஜீவராசிகளிடத்திலும் என்னையே பார்த்தல் ஆகியவைகள் என்மீது பக்தியை வளர்க்கும்.

மத3ர்தே2ஷ்வங்க3சேஷ்டா ச வசஸா மத்3கு3ணேரணம் |
மய்யர்பணம் மனஸ: ஸர்வகாமவிவர்ஜனம் || 22 ||

அங்க சேஷ்டஹ – புலன்களின் செயல்கள்
மதர்தேஷு – என் பொருட்டாகவே இருக்க வேண்டும்
வசஸா மத்குண ஏரணம் – சொற்களால் என் குணங்களை புகழ்தல்
மய்யர்பணம் ச மனஸஹ – மனதை என்னிடத்தில் சமர்ப்பிக்க வேண்டும். 
மனம் இறைவனையே சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும். எப்பொழுதும் பகவத் சிந்தனையோடு இருக்க வேண்டும்.
ஸர்வ கர்வ விவர்ஜனம் – மனதிலுள்ள எல்லாவித ஆசைகளையும் விட்டொழிக்க வேண்டும்.

மத3ர்தேர்த2பரித்யாகோ3 போ4க3ஸ்ய ச சுக2ஸ்ய ச |
இஷ்டம் த2த்தம் ஹுதம் ஜப்தம் மத3ர்த2 யத்3வ்ரதம் தப: || 23 ||

எனக்காகவெ செல்வம், சுகம், போகம் ஆகியவற்றை துறப்பது, விதவிதமான விரதங்கள், தவங்களான யாகம், தானம் ஹோமங்கள்,ஜபம் ஆகியவற்றை எனக்காக மட்டும் செய்ய வேண்டும்.

ஏவம் த4ர்மைர்மனுஷ்யாணாமுத்3த4வாத்மனிவேதி3னாம் |
மயி ஸஞ்ஜாயதே ப4க்தி: கோன்யோஸ்யாவஶிஷ்யதே || 24 ||

உத்தவா! இதுவரை கூறிய பக்தி சாதனங்களால் தன்னையே என்னிடம் அர்ப்பணம் செய்பவனின் மனதில் என்னிடத்திலே சாத்திய பக்தியானது தோன்றுகிறது. இந்த நிலையை அடைந்த பராபக்தனுக்கு அடைய வேண்டிய வேறு இருக்கிறதா என்ன?

யதா3த்மன்யர்பிதம் சித்தம் ஶாந்தம் ஸத்த்வோப ப்3ருஹிதம் |
த4ர்மம் ஞானம் ஸ வைராக்3யமைஶ்வர்யம் சாபி4பத்3யதே || 25 ||

ஒருவன் மனதை ஆத்மாவில் சமர்பித்திருப்பதல் அது எப்பொழுதும் அமைதியுடன் இருக்கும்.  சத்துவ குணத்தினால் வளர்ந்திருப்பதால் அவனால் இவ்வாறு செய்ய முடிகிறது.  அப்போது தர்மம், ஞானம், வைராக்கியம், ஐஸ்வர்யம் இவைகளையும் அடைகின்றான்.

யத3ர்பிதம் தத்3ர்பிதம் தத்3விகல்பே இந்த்3ரியை: பரிதா4வதி |
ரஜஸ்வலம் சாஸன்னிஷ்ட2ம் சித்தம் வித்3தி4 விபர்ய்யம் || 26 ||

ஒருவேளை இந்த உலகத்தில் மனதை அர்ப்பித்துவிட்டால், உன்னுடைய புலன்கள் மூலம் போகப்பொருட்களையே நோக்கி ஓடினால் அந்த மனமானது ரஜோ குணம் மேலோங்கிய நிலையில் இருக்கும். தமோ குணம் மேலோங்கிய நிலையில் இருக்கும்.மனம் எப்பொழுதும் பொய்யையே நம்பிக் கொண்டிருக்கும். உத்தவா! இதை நீ அறிந்துக் கொள்வாயாக.  மேலும் மேற்சொன்ன நான்கு பலன்களுக்கு எதிர்மாறாக இருப்பதைதான் அடைவான்.

த4ர்மோ மத்3ப4க்திக்ருத்ப்ரோக்தோ ஞானம் சைகாத்ம்யத3ர்ஷனம் |
கு4ணேஸ்வஸங்கோ3 வைராக்3யமைஶ்வர்யம் சாணிமாத3ய: || 27 ||

என்மீது ஏற்படும் மேலான, முழுமையான பக்தியே தர்மம் என்று கூறப்படுகிறது. எல்லாவற்றையும் பரமாத்மா என்று சமமாகப் பார்ப்பது ஞானம் என்று கூறப்படுகிறது. புலனுகர் பொருட்களில் பற்றுக் கொள்ளாமலும், தன்னுடல் மீது அபிமானம் வைக்காமல் இருக்கும் நிலை வைராக்கியத்தை குறிக்கின்றது.  மேலும் அனிமா போன்ற சித்திகளை அடையலாம்.

ஶ்ரீஉத்தவ உவாச யம: கதிவித4: ப்ரோக்தோ |
நியமோ வாரிகர்ஷண க: ஶம: கோ த3ம: க்ருஷ்ண || 28 ||
கா திதிக்ஷா த்4ருதி: ப்ரபோ4 கிம் தா3னம் கிம் தப: ஶௌர்யம் |
கிம்ஸத்யம்ருதமுச்யதே கஸ்த்யாக3: கிம் த4னம் சேஷ்டம் || 29 ||

உத்தவர் மீண்டும் கேட்கிறார்.
எதிரிகளை அழிப்பவரே! நியமம், யமம், என்ற சாதனத்தில் எத்தனை வகையான சாதனங்கள் இருக்கின்றது. கிருஷ்ண பகவானே! ஶமம், தமம், திதிக்ஷா, திருதி என்றால் என்ன? தானம், தவம், ஶௌர்யம்(துணிச்சல்), வாய்மை, ரிதம்(சரியாக புரிந்து கொள்ளும் திறமை), தியாகம், பிரியமான செல்வம், யக்ஞம், மேலும் தக்ஷிணை இவைகளின் பொருளையும் கூற வேண்டும்.

கோ யக்ஞ: கா ச த3க்ஷிண பும்ஸ: கிம் ஸ்வித்3ப3லம் ஶ்ரீமன் |
ப4கோ3 லாப4ஶ்வ கேஶவ கா வித்3யா ஹ்ரீ: பரா கா ஶ்ரீ: || 30 ||

மனிதனுக்கு எதுதான் உண்மையான சக்தி? பாக்கியவான் என்பதற்கு என்ன அர்த்தம்? லாபம் என்பது என்ன? உயர்ந்த கல்வி, வெட்கப்படுதல், சொத்து, சுகம், துக்கம் இவைகளின் பொருளை கூறுங்கள்.

கிம் ஸுக2ம் து3:க2மேவ ச க: பண்டி3த: கஶ்ச மூர்க2: |
க: பந்தா2 உத்பஶஶ்ச க: க: ஸ்வர்கோ3 நரக: க: ஸ்வித் || 31 ||

யார் அறிவாளி? தவறான பாதை எது? யார் முட்டாள்? சரியான பாதை எது? சொர்க்கம், நரகம் என்பவைகள் எது? யார் உறவினன்? இல்லம் என்பது எது?

கோ ப3ந்து4ருத கிம் க்3ருஹம்க ஆட்4ய: கோ த3ரித்3ரோ வா |
க்ருபண: க: க ஈஶ்வர: ஏதான்ப்ரஶ்னான்மம ப்3ரூஹி |
விபரீதாம்ஶ்ச ஸத்பதே ஶ்ரீப4க3வானுவாச || 32 ||

யார் செல்வந்தன்?, யாய் ஏழை? யார் மூர்க்கன், பரிதாபத்துக்குரியவன்? யார் ஈஸ்வரன்? இந்த கேள்விகளுக்கான பதிலை கூறுங்கள். அத்துடன் இவற்றிற்கு எதிரான இயல்புகள் பற்றியும் விளக்குங்கள் பகவானே!

அஹிம்ஸா ஸத்யமஸ்தேயமஸங்கோ3 ஹ்ரீரஸஞ்சய: |
ஆஸ்திக்யம் ப்3ரஹ்மசர்யம் ச மௌனம் ஸ்தை2ர்யம் க்ஷமாப4யம் || 33 ||

ஶ்ரீபகவான் பதிலளிக்கிறார்.
  1. அஹிம்ஸா – பிறரை சொல்லாலும் செயலாலும், மனதாலும் துன்புறுத்தாமலிருப்பது. ஆரம்ப நிலையில் இருக்கும் சாதகனுக்கு இது மனதில் எடுக்கும் சங்கல்பமாக இருக்க வேண்டும். இதுவே மேலும் பல நற்பண்புகளை அடைவதற்கு உதவும். இது ஒரு மஹாவிரதம். எந்த நிபந்தனையுமின்றி இதைக் கடைப்பிடிக்க வேண்டும்.
  2. ஸத்யம் – உண்மை பேசுதல், எந்த நிபந்தனையுமின்றி இதை கடைப்பிடித்தல். இதுவும் ஒரு மகாவிரதம். பேசுவதெல்லாம் உண்மையாக இருக்க வேண்டும்.
  3. அஸ்தேயம் – திருடாமை. பிறர் செல்வத்தை, உழைப்பை, அறிவை, புகழை அபகரிக்காமல், திருடாமல் இருத்தல்.
  4. அஸங்கஹ – பற்றின்மை (மனிதர்களிடத்தில்). பற்றினால் நாம் கட்டப்படக்கூடாது.
  5. ஹ்ரீஹி – கர்வமின்மை, அமானித்வம், பணிவு, அடக்கம்
  6. அஸஞ்சஹ – அபரிக்ரஹம் – தேவைக்கு மேல் எதையும் சேர்த்து வைத்துக் கொள்ளாதிருத்தல்
  7. ஆஸ்திக்யம் – சாஸ்திரத்தையும், குருவையும் நம்புதல், சாஸ்திரம் கூறும் ஈஸ்வரனின் ஸ்வரூபத்தையும், தர்ம-அதர்மத்தை பற்றியும், நிர்குண பிரம்மத்தைப் பற்றியும் கூறுவதை நம்புதல். இதை உபதேசிக்கும் குருவின் மீதும் நம்பிக்கை வைத்தல். சாஸ்திரம் புரியவில்லை என்றாலும் அந்த உபதேசத்தின் நம்பிக்கை வைத்தல்
  8. பிரம்மசர்யம் – மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நியமங்கள். குருவுக்கு சேவை செய்தல், புலனடக்கம், சம்பாதிக்காமல் இருத்தல் ஆகிய நியமங்களையும் பின்பற்ற வேண்டும்.  ஒழுக்கம் என்பது எல்லா ஆசிரமத்திற்கும் பொதுவானது
  9. மௌனம்  - வாயாலும், மனதாலும் அமைதியாக இருத்தல்
  10. ஸ்தைர்யம் – சாத்வீகமாக எடுத்த முடிவில் உறுதியாக இருப்பது, ரஜோ அடிப்படையில் எடுத்தல் முடிவில் உறுதியாக இருப்பதை பிடிவாதம் என்று கூறப்படுகிறது
  11. க்ஷமா – பொறுமை – கர்மபலன் கிடைக்கும் வரையில் இருக்க வேண்டிய குணம். பொறுமையுடன் காத்திருத்தல்
  12. அபயம் – ஞானப்பலனையும் இவ்வாறு அழைக்கப்படுகிறது.  பயத்தை சந்திக்கின்ற துணிவை பகவான் குறிப்பிடுகின்றார்.

ஶௌசம் ஜபஸ்தபோ ஹோம: ஶ்ரத்3தா4தித்2யம் மத3ர்சனம் |
தீர்தா2டனம் பரார்தே2ஹா துஷ்டிராசார்யஸேவனம் || 34 ||
  1. ஶௌசம்  – அகத்தூய்மையுடன் இருத்தல், 
  2. ஶௌசம்  - புறத்தூய்மையையுடன் இருத்தல்
  3. ஜபம் – மந்திர ஆவிருத்தி – ஏதோ ஒரு மந்திரத்தை மீண்டும் மீண்டும் மனதுக்குள் உச்சரித்தல், சத்தமாக உச்சரித்தல், இது ஒரு வகையான தியானம்.  மனதை ஒரு இடத்தில் குவிப்பதற்கேற்ற சாதனம்
  4. தபஹ – தவம் – நாம் செய்கின்ற அனைத்து ஆன்மீக சாதங்களும் தவமென்று பொதுவாக குறிப்பிடப்படுகிறது. நமக்கு நாமே விரும்பி துயரத்தைக் கொடுத்துக் கொள்ளுதல். வாக்கு, மனம், உடல் இவைகளினால் செய்யப்படுவது. இதனால் நம்முடல் பலத்தை அடைய வேண்டுமேயொழிய பலவீனமடையக்கூடாது.
  5. ஹோமம் – தேவதையை மனதில் நினைத்துக் கொண்டு ஏதாவது ஒரு பொருளை தியாகம் செய்தல். ஈஸ்வரபிரணிதானம். இது ஒருவகையான வழிபாடு
  6. ஶ்ரத்தா – தன்னம்பிக்கை
  7. அதித்யம்  - விருந்தோம்பல்
  8. மத் அர்சனம் – இறைவழிபாடு, இறைவனைக் குறித்து நாம அர்ச்சனை செய்தல். இது ஒருவகையான பக்தியின் வெளிப்பாடு
  9. தீர்த்தாடனம்  - புண்ணிய ஸ்தலங்களுக்கு யாத்திரை செல்லுதல், புண்ணிய நதிகள் இருக்கும் இடங்களுக்கு யாத்திரை செய்தல்
  10. பரார்த ஈஹா – மற்றவர்களுடைய நன்மைக்காக சேவை செய்தல், காலம், உழைப்பு, பொருளைக் கொடுத்தல், சமுதாய சேவை
  11. துஷ்டி – போதும் என்ற மனநிலை (பலனை அடையும் போது இருக்க வேண்டியது)
  12. ஆசார்யசேவனம் – குருசேவை, குருவுக்கு பணிவிடை செய்தல்
ஏதே யமா: ஸனியமா உப4யோர்த்3வாத3ஶ ஸ்ம்ருதா: |
பும்ஸாமுபாஸிதாஸ்தாத் யதா2காமம் து3ஹந்தி ஹி || 35 ||

நான் மேற்கூறிய 12 வகையான யம, நியமங்களை ஒருவன் கடைப்பிடிக்க வேண்டும். இவையெல்லாம் ஒழுங்காக கடைப்பிடித்தால் எதை விரும்புகின்றானோ அவைகளை எல்லாம் அடைவான்//

ஶமோ மன்னிஷ்ட2தா பு3த்3தே4ர்த3ம இந்த்ரியஸம்யம: |
திதிக்ஷா து3:க2ஸம்மர்ஷோ ஜிஹ்வோபஸ்த2ஜயோ த்4ருதி: || 36 ||

ஶமம் என்ற சொல்லுக்கு அர்த்தம் மனதை இறைவன்பால் செலுத்துவதாகும். புலன்களை அடக்கிவைத்தல் என்பது தமம்.  புலன்களால் அறிவையும் அடைகிறோம், இன்ப-துன்பங்களையும் அடைகிறோம். திதிக்ஷா என்பது துயரத்தைப் பொறுத்துக் கொள்ளுதல். ஸம்மர்ஷஹ – சகித்துக் கொள்ளுதல் த்4ருதி என்பதற்கு பொதுவான அர்த்தம் உறுதி. ஆனால் பகவான் கொடுக்கும் பொருள் வாக்கு கட்டுப்பாடு. பிரம்மசர்ய ஒழுக்கத்தில் உறுதியாக இருப்பது.

த3ண்ட3ன்யாஸ: பரம் தா3னம் காமத்யாக3ஸ்த்ப: ஸ்ம்ருதம் |
ஸ்வபா4வ்விஜய: ஶௌர்யம் ஸத்யம் ச ஸமத2ர்ஶனம் || 37 ||

தா3னம்  - மற்ற உயிர்களை தண்டிக்காமல் விட்டுவிடுதல், தீங்கு செய்யாமல் இருத்தல், மன்னித்து விடுதலே உயர்ந்த தானம் என்று கூறுகிறார்.
தவம் – ஆசைகளை துறப்பதே தவமாக கருதுகிறார். (ஸம்ருதம்)
ஸௌர்யம் – சூரத்தனம், அசாதாரண செயலை செய்து முடிக்கும் திறமை, இயல்பான தீய குணத்தை அடக்கும் திறமை, இயல்பாகவே இருந்து கொண்டு மற்றவர்களுக்கு துன்பங்களை கொடுக்க கூடிய பழக்க வழக்கங்களை, குணங்களை விட்டுவிட வேண்டும்.  இதில் வெற்றி அடைதல். அதர்மமான சுபாவத்தைத்தன் வெற்றிக் கொள்ள வேண்டும்.
ஸத்யம் ஸமதர்ஶனம் – பார்க்கும் அனைத்தையும் சமமாக பார்க்க வேண்டும்.  சமபாவனையுடன் இருத்தல், எங்கும் சமமாக இருக்கும் பிரம்மஞானத்துடன் உலகத்தை பார்க்கும் விதம், நிலையற்ற உலகத்தில் நிலையான பிரம்மத்தை பார்க்கும் திறன்.

அன்யச்ச ஸுந்ருதா வாணீ கவிபி4: பரிகீர்திதா |
கர்மஸ்வஸங்கம: ஸௌசம் த்யாக3: ஸன்ன்யாஸ உச்யதே || 38 ||

ரிதம் – பொதுவான அர்த்தம் சரியாக புரிந்து கொள்ளுதல். உண்மையாகவும், அன்புடனும், ஹிதமாகவும், அளவுடனும் பேச வேண்டும்.  மகான்கள் இவ்வாறு சொல்கிறார்கள்
தியாகஹ – மனதளவில் இருக்கும் பற்றின்மை, சுற்றியுள்ள உறவுகளிடத்திலும், பொருட்களிடத்திலும், மனதளவில் பற்றற்று இருத்தல், சந்நியாஸ வாழ்க்கை முறையை எடுத்துக் கொள்ளுதல்.

த4ர்ம இஷ்டம் த4னம் ந்ருணாம் யக்ஞோஹம் ப4க3வத்தம: |
த3க்ஷிணா ஞானஸந்தேஶ: ப்ராணாயாம: பரம் ப3லம் || 39 ||

தர்மத்தில் ஈடுபாடுடன் இருப்பதால் அடையும் புண்ணியங்கள் விரும்புவதையெல்லாம் கொடுத்துவிட்டு தீர்ந்து போகும். யக்ஞம் என்பதற்கு யாகம், வைதீக கர்மம் என்பது பொதுவான அர்த்தம். பரம்பொருளான விஷ்ணுவாக இருக்கின்ற நானேதான் யக்ஞமாக இருக்கின்றேன். கர்ம பலனை கொடுப்பவனாக இருக்கிறேன். தட்சணை என்பது அறிவைக் கொடுத்தலேயாகும். பிராணாயாமத்தால் மனதையும், உடலையும், ஆரோக்கியமாகவும், சக்தியுடையதாகவும் வைத்திருக்க வேண்டும்.

ப4கோ3 ம ஐஶ்வரோ பா4வோ லாபோ4 மத்4ப4க்திருத்தம்: |
வித்3யாத்மனி பி4தா3பா3தோ4 ஜுகு3ப்ஸா ஹ்ரீரகர்மஸு || 40 ||

பகஹ – ஆறுவிதமான குணங்களான ஐஸ்வர்யம், வீர்யம், ஶ்ரீ, ஞானம், வைராக்கியம் இவைகளை உடைய பகவானே! என்னிடத்தில் இருக்கும் மேலான பக்தியே என்னுடைய லாபம்.  ஆத்மாவைப்பற்றிய அறிவும், ஆத்மாவில் பார்க்கும் வேற்றுமையை நீக்க உதவும் அறிவும், அதர்மமான செயலை செய்யும் போது வெட்கம்  அடைந்திட வேண்டும்.

ஶ்ரீர்கு3ணா நைரபிக்ஷ்யாத்3யா: ஸுக2ம் து3:க2ஸுகா2த்யய: |
து3:க2ம் காமஸுகா2பேக்ஷா பண்டி3தோ ப3ந்த4மோக்ஷவித் || 41 ||

நற்பண்புகளே ஒருவனுடைய செல்வமாகும், 
மனதளவில் சுதந்திரமாக இருத்தல் போன்ற நற்பண்புகள். 
உடலளவில் மற்றவர்களை சார்ந்துதான் வாழமுடியும்.
நைரபேக்ஷயம் – மனதளவில் யாரையும் சார்ந்திருக்காதிருத்தல்
சுகத்தையும், துக்கத்தையும் தாண்டி செல்வது, தவம் செய்யும்போது அனுபவிக்கும் துயரத்தை சகித்துக் கொண்டிருத்தல், 
தானாக வரும் சுகங்களை அனுபவிக்காமல் விலக்கி இருத்தல்,
விரும்பிய பொருளில் கிடைக்கும் சுகம் வேண்டும் என்று மனதில் ஏற்படும் அரிப்பு, மனவேட்கை ஏற்படாமல் இருத்தல்
பந்தத்தையும், மோட்சத்தையும் லட்சணங்களை சரியாக அறிந்தவனே அறிவாளி.  இவனே வேதாந்தம் படிப்பதற்கு அதிகாரியாகின்றான்.  இன்பம் வேண்டும் என்று அரித்துக் கொண்டு இருக்கும் மனநிலையே பந்தம். இன்ப-துன்பத்தை கடந்து செல்வது மோட்சம்.

மூர்கோ2 தே3ஹாத்3யஹம்பு3த்3தி4: பந்தா2 மன்னிக3ம: ஸ்ம்ருத: |
உத்பத2ஶ்சித்தவிக்ஷேப: ஸ்வர்க3: ஸத்த்வகு3ணோத3ய: || 42 ||

மூர்க2ஹ – உடல் முதலியவற்றில் நான் என்ற அபிமானம் கொண்டவன், மூர்க்கன்
பந்தா மன்னிகம: ஸ்ம்ருத: - இறைவனால் வகுத்துக் கொடுத்த நீதி சாஸ்திரங்கள், வேத சாஸ்திரங்கள் காட்டும் பாதையில் செல்ல வேண்டும்
உத்பத: சித்தவிக்ஷேப: - மனம் போன போக்கிலே செல்வதுதான் தவறான பாதை. அதிலே செல்லக் கூடாது.
ஸ்வர்கஹ ஸத்த்வகுண உதயஹ – சத்துவ குணத்தை அடைதலே சுவர்க்கம், சத்துவ குணம் பிரதானமாக மாறுவதே சுவர்க்கமாக கருதப்படுகிறது.

நரகஸ்தமௌன்னாஹோ ப3ந்து4ர்கு3ருரஹம் ஸகே2 |
க்3ருஹம் ஶரீரம் மானுஷ்யம் கு3ணாட4யோ ஹயாட்4ய உச்யதே \\ 43 ||

ஸகே – நண்பா உத்தவா!
நரகம் – தமோகுண வளர்ச்சிதான் நரகம், தமோகுணத்தின் பிடியில் இருக்கும் நிலை. 
தமோ குணத்தின் விளைவு கவனக்குறைவுடன் செயல்பட்டுக் கொண்டிருத்தல், மோக வசப்பட்டு எதையும் தவறாக புரிந்து கொள்ளுதல், தன்னிஷ்டப்படி வாழ்ந்து கொண்டிருத்தல்
ப3ந்து3 – உறவினர்; குருவாக இருக்கின்ற நானேதான் உன் உறவினன், குரு
கிருஹம் – இல்லம் – நம்முடைய ஸ்தூல சரீரம்தான் நமது இல்லம். எனவே இதை தூய்மையாகவும், ஆரோக்கியத்துடனும், சக்தியுடனும் வைத்திருக்க வேண்டும்
ஆட்ய – செல்வந்தன். நற்பண்புகளுடன் இருப்பவனே உண்மையான செல்வந்தன்.

த3ரித்3ரோ யஸ்த்வஸந்துஷ்ட: க்ருபணோ யோஜிதேந்த்ரிய: |
கு3ணேஷ்வஸக்த்தீ4ரீஶோ கு3ணஸங்கோ3 விபர்யய: || 44 ||
தரித்3ரஹ – ஏழை – யாருக்கு போதுமென்ற மனமில்லையோ அவனே ஏழை. கிடைத்ததில் திருப்தியடையாதவனே ஏழை
யஹ அஜிதேந்திரியஹ க்ருபண – புலன்களை அடக்காதவன் பரிதாபத்திற்குரியவன்
ஈஸ்வரன் – புலனுகர் பொருட்களில் பற்றில்லாத மனதையுடையவன்
இதற்கு மாறாக போகப்பொருட்களில் பற்றற்று இருப்பவன் மேற்சொன்ன சொற்களின் பொருளுக்கு எதிர்மறையான நிலையை உடையவன்

ஏத உத்தவ தே ப்ரஶ்னா: ஸர்வே ஸாது4 நிரூபிதா: |
கிம் வர்ணிதேன ப3ஹுனா லக்ஷணம் கு3ணதோ3ஷயோ |
கு3ணதோ3ஷத்3ருஶிர்தோ3ஷோ கு3ணஸ்தூப4யவர்ஜித: || 45 ||

உத்தவா! நீ கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் தெளிவாகவும், நீ எதிர்பார்த்தபடி பதில் அளிக்கப்பட்டு விட்டது.  இப்படி பலவிதமாக சொல்வதான் என்ன பயன் நல்லது, கெட்டது இவைகளின் உண்மையான லட்சணையை சொல்கிறேன். நல்லது, கெட்டது என்று பிரித்துப் பார்ப்பதுதான் கெட்டது.  இவையிரண்டையும் பிரித்து பார்க்காமல் அவைகளை கடந்து செல்வதே நல்லது.

ஓம் தத் ஸத்

A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...