உத்தவ கீதை
அத்தியாயம்-2
ஸ்வாமி குருபரானந்தரின் உபதேச விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது - 18-02-2022
ஸுக2மைந்த்3ரியகம்
ராஜன் ஸ்வர்கே3 நரக ஏவ ச |
தே3ஹினாம் யத்3யதா2
து3:க2ம் தஸ்மான்னேச்சே2த தத3 பு3த4: || 1 ||
- காலத்தையும், சக்தியையும் வீணாக்க கூடாது. தேவையில்லாதவற்றில்
நம்முடைய காலத்தையும், சக்தியையும் விரயம் செய்யக்கூடாது
- பிராரப்தத்தின் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்
- பிராரப்தத்தின் வசத்தால் பிறந்த ஜீவனுக்கு தேவையான உணவும்,
நீரும் கிடைக்கும்படியாக படைக்கப்பட்டிருக்கும், எனவே பிராரப்தத்தினால்
ஏற்கனவே கிடைக்கப்பெற்ற உணவுக்காக முயற்சி செய்து காலத்தையும், சக்தியையும்
வீணாக்கக் கூடாது
- எது நமக்கு கிடைக்கின்றதோ அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள
வேண்டும். போக்தாவாக இருக்கும்போதுதான் இதைக் கடைப்பிடிக்க வேண்டும்,
- பிராரப்தத்திடம் சரணடைந்து விடு, செய்த செயலின் பலன் நம்முடைய
முயற்சியினாலும், பிராரப்தத்தின் நியதிப்படித்தான் கிடைக்கும்.
ஸ்லோக விளக்கம்
முயற்சியின்றி
இன்பத்தை அடைவதைப்போல துன்பமும் வந்து சேரும் என்ற உண்மையை புரிந்து கொள்ள
வேண்டும். எனவே எதையும் முயற்சி
செய்துதான் அடைய வேண்டும் என்ற நிலையில்தான் காலத்தை, சக்தியையும் பயன்படுத்த வேண்டும்.
ஹே! ராஜன் எப்படி
துன்பமானது மனிதர்களுக்கு முயற்சியின்றி வருகின்றதோ அதைப்போல இன்பமும் வருகிறது. புலன்கள் வழியாக அடையப்படும் இன்ப-துன்பங்கள்
சுவர்க்கத்தில் கிடைப்பது போல நரகத்திலும் கிடைக்கின்றன. பிராரப்தம் இவைகளை இயற்கையாக கொடுத்து
விடுகின்றது. ஆகவே சாதகன், விவேகியானவன்
அனாத்ம சுகங்களை நோக்கி செயல்பட்டு காலத்தையும், சக்தியையும் வீணாக்கக் கூடாது.
க்3ராஸம் ஸும்ருஷ்டம்
விரஸம் மஹாந்தம் ஸ்தோகமேவ வா |
யத்3ருச்ச2யைவாபதிதம்
க்3ரஸேதா3ஜக3ரோSக்ரிய:
|| 2 ||
ஸும்ருஷ்டம் – பார்ப்பதற்கு உண்ண வேண்டும் என்ற வகையில் இருப்பது, சுவையாக
இருக்கின்ற உணவு
விரஸம் – சுவையில்லாததாக, விரும்பத்தகாத வாசனையுடைய உணவு
க்3ராஸம் – அன்னம் போன்று அனுபவிக்கப்படும் மற்றவைகளும்
மஹாந்தம் – நிறையவோ
ஸ்தோகம் யத்3ருச்ச2யா
– குறைவாகவோ, தானாக எது
கிடைக்கிறதோ
ஆபதிதம் - கிடைத்ததை
அஜக3ரஹ – மலைப்பாம்புப் போல
அக்ரியஹ – விருப்பு-வெறுப்பு இல்லாமல், சஞ்சலமில்லாமல் உண்டு வாழ வேண்டும்.
தானாக எது
கிடைக்கிறதோ அதையே புசித்து யோகியானவன், சாதகன் திருப்தியுடன் இருக்க
வேண்டும். கிடைத்த உணவில் சுவை
இருந்தாலும் இல்லாவிட்டாலும் நிறையவோ, குறைவாகவோ கிடைத்தாலும், மலைப்பாம்பு தன்
இடத்தில் அசையாமலிருந்தவாறே, தனக்கு கிடைக்கும் உணவை உண்டு வாழ்வதைப் போல வாழ
வேண்டும்
ஶயீதாஹானி பூ4ரீணீ
நிராஹாரோSனுபக்ரம: |
யதி3 நோபனயேத்3
க்3ராஸோ மஹாஹிரிவ தி3ஷ்டபு4க் || 3 ||
தொடர்ந்து பல நாட்கள்
உணவு கிடைக்காவிட்டாலும் கிடைக்கும் வரையில் பொறுமையாக இருக்க வேண்டும், தேவையானது தேவையான நேரத்தில் கிடைக்காமல் போகலாம், ஆனால் நிச்சயம் நேரம் வரும்போது கிடைக்காமல் போகாது. அதுவரையில் பொறுமையாக இருக்க வேண்டும். பிராரப்தத்தை அனுபவித்துக் கொண்டு
உதாசீனத்தோடு, மன சஞ்சலம் இல்லாமல் மலைப்பாம்பு போல இருக்க வேண்டும்.
ஓஜ:ஸஹோப3லயுதம்
பி3ப்4ரத்3 தே3ஹமகர்மகம் |
ஶயானோ வீதனித்3ரஶ்ச
நேஹேதேந்த்4ரியவானபி || 4 ||
நம் உடலில் தேவையான
சக்தியிருந்தாலும் காத்திருந்து பழக வேண்டும். இந்தி3ரிய சக்தி, மனோபலம், உடல்
பலம் ஆகிய இவை மூன்றும் ஒருவனுக்கு சேர்ந்திருந்தாலும் கூட எந்த செயலும் செய்யாமல்
பொறுமையாக காத்திருக்க வேண்டும். மலைப்பாம்பு உறங்காமல் காத்துக் கொண்டிருப்பதை
போல அனைத்து இந்தி3ரிய சக்திகள் இருக்கும் போதும் மனோபலம், இந்திரிய
பலம், சரீர பலம் ஆகியவைகள் பெற்றிருந்தாலும் அத்துடன் செயல்படுவதற்கான
சாமர்த்தியம் இந்திரியங்களுக்கு இருந்தாலும் எப்போதும் உறங்கிக் கொண்டிருப்பவனைப்
போல செயலற்று இருக்க வேண்டும்.
முனி:
ப்ரஸன்னக3ம்பீ4ரோ து3ர்விகா3ஹயோ து3ரத்யய: |
அனந்தபாரோ ஹயக்ஷோப்4ய:
ஸ்திமிதோத3 இவார்ணவ: || 5 ||
இதில் கடலை ஞானிக்கு
ஒப்பிடுகின்றார். இதில் ஏழு குணங்களை ஞானிக்கும் இருப்பதாக எடுத்துக்
காட்டுகின்றார். இது ஞானப்பலன்களாக எடுத்துக் கொள்ள வேண்டும். கடலின் ஏழு குணங்கள்
இதில் கூறப்பட்டிருக்கிறது.
முனி – ஜீவன் முக்தன்
அர்ணவ இவ – கடலைப் போல இருக்கிறாள்
பிரஸன்னஹ – தெளிந்த, அமைதியான, எளிமையான
க3ம்பீ4ரஹ – ஆழ்ந்த, கம்பீரமாகவும்
து3ர்விகா3ஹயோ – உண்மையான தன்மையை அறிந்து கொள்ள முடியாது
து4ரத்யம் – கடலை கடக்க முடியாது
அனந்தபாரம் - கரையற்றதாகவும்
அக்ஷோப்4ய – விகாரபடுத்த முடியாது
ஸ்திமித உத3ஹ – அசைவற்ற நீருடன் இருப்பது
இந்தக் குணங்களை
ஞானியின் குணங்களுடன் ஒப்பிடப்படுகிறது:
- அமைதியான, தெளிந்த மனதுடையவன், எளிதில் மகிழ்ச்சியடைகின்றவன்,
ஞானத்தை அடைந்திருந்தும் அதனால் கர்வப்படாமல் பணிவுடன் இருப்பான். மிகவும்
எளிமையாக காட்சியளிப்பான்
- கம்பீரமாகவும் இருப்பான், வணங்கத்தக்கவனாக காட்சியளிப்பான்,
ஆழ்ந்து சிந்தித்து செயல்படுவான்.
- ஞானியையும் சுலபமாக புரிந்து கொள்ள முடியாது. நீ மற்றவர்களைப்பற்றி
என்ன சொல்லுகிறாயோ அது மாதிரித்தான் நீ இருக்கின்றாய். இதுவரை கூறப்பட்ட
குணங்கள் அவனிடம் வெளிப்படையாக தெரியாது.
- அடைந்த அறிவில் உறுதியாக இருப்பான். அவனது அறிவில் எந்த
சந்தேகமும் கிடையாது. அதை யாராலும் மாற்ற முடியாது. அறிவுக்கு எதிராக யார்
வேறு கருத்து சொன்னாலும் அவர் அறிவிலிருந்து மாறமாட்டார். இவருடைய அறிவு
பாறையைப் போன்றது.
- எல்லையற்றது, காலத்திற்குட்படாதது, கரையற்றது, காலத்தையும், தேசத்தையும் கடந்து இருப்பது. இது ஆத்மாவின் லட்சணம்.
இப்படிபட்ட லட்சணத்தை உடைய ஆத்மாவாக நான் இருக்கின்றேன் என்ற உணர்வுடன்
இருப்பவள். மரணபயமற்றவன்
- இவனை உணர்ச்சியினால் துயரப்படமாட்டாள். உறுதியான
உணர்வுகளையுடையவன். நம்முடைய உணர்ச்சிகளின் வெளிப்பாடு சுற்றியிருப்பவர்களின்
உணர்ச்சிகளைப் பொறுத்து அமைகின்றது. இதுபோல ஞானியின் உணர்ச்சி நிலை எந்த
நிலையிலும் மாறுபடாது, உணர்ச்சி வசப்படமாட்டான். எதனாலும் நிலைகுலையாமல்
இருப்பான்.
- பூரணமான மனதையுடையவன், நிறைவான மனதையுடையவன்
ஸம்ருத்3த4காமோ ஹீனோ
வா நாராயணபரோ முனி: |
நோத்ஸர்பேத ந ஶுஷ்யேத
ஸரித்3பி4ரிவ ஸாக3ர: || 6 ||
ஸரித்3பி4ஹி ஸாக3ர – பலவிதமான நதிகள் கடலில் வந்து கலப்பதாலும்
ந ஸர்பேத – நீர் பெருகி விடுவதில்லை
ந ஶுஷ்யேத – நீர் குறைந்தும் விடுவதில்லை. அதேபோல பகவான் நாராயணனை பரம்பொருளாக
கொண்டுள்ள ஞானி;
காமஹ – தனக்கு இன்பத்தைக் கொடுக்கின்ற பொருட்கள்
ஸம்ருத்3த4 – தேவைக்கும் அதிகமாக இருக்கின்ற நிலை
ஹீனஹ – அடிப்படை தேவையான பொருட்கள் இல்லாத நிலை
இந்த இரண்டு
நிலைகளிலும் மனநிலை சமமாக இருக்கும். இவனது மனநிலை வெளிச்சூழலைப் பொறுத்து
இருக்காது. ஞானிக்கு ஆசைகள் நிறைவேறினால் மகிழ்ச்சியடையவோ, நிறைவேறாதபோது கலக்கம்
அடையவோ மாட்டான். இருமைகளை கடந்தவான் என்று புரிந்து கொள்ளலாம்.
த்3ருஷ்ட்வா
ஸ்த்ரியம் தேவமாயாம் தத்3ப4வைர ஜிதேந்த்ரிய: |
ப்ரலோபி4த:
பதத்யந்தே4 தமஸ்யக்3னௌ பதங்க3வத் || 7 ||
இதில் புலனடக்கத்தின்
அவசியத்தை, தேவையை எடுத்துக் காட்டுகின்றார். நம்மிடத்திலுள்ள ஞானேந்திரியங்களை
அளவுடன் பயன்படுத்தினால் அறிவை அடைகின்றோம். சுகத்தையும் அனுபவிக்கின்றோம், அதற்கு
அடிமையாகி அளவுக்கு மீறி பயன்படுத்தினால் துன்பத்தை அனுபவிப்போம். சரீர-மன-புத்தி
இவைகளை பலவீனப்படுத்தும் விஷயங்களிலிருந்து நீங்கியிருத்தல் என்பது த3மஹ
என்று அழைப்படும்.
புலன்களை வெற்றி
கொள்ளாதவன் மாயை வடிவமுடைய பெண்ணுடலால் கவரப்பட்டு பயங்கரமான இருளில்(துன்பத்தில்),தீயில் வீழ்ந்து மாய்ந்து போகும் விட்டில் பூச்சியைப் போல மோகத்தில் விழுந்து விடுகிறான்.
யோஷித்3தி4ரண்யாப4ரணாம்ப3ராதி3
த்3ரவ்யேஷு மாயாரசிதேஷு மூட4: |
ப்ரலோபி4தாத்மா
ஹ்யுபபோ4க3பு3த்3த்4யா பதங்க3வன்னஶ்யதி நஷ்ட த்3ருஷ்டி: || 8 ||
கண்ணுக்கு இன்பம்
தருவது போல காட்சியளிக்கும் எந்த பொருட்களையும் அடைய விரும்பி அடிமையாகிவிட்டால்
அதனால் அழிவை அடைவோம். மாயையால் உண்டாக்கப்பட்ட பெண், பொன், ஆபரணங்கள், ஆடை முதலிய
பொருட்களால் வசீகரிக்கப்பட்டு அக்ஞானி ( அவைகளை அனுபவித்து இன்பம் காணும்
நோக்கத்துடன் ) தன் அறிவை இழந்து அவைகளை அனுபவிக்க ஈடுபட்டு விட்டில் பூச்சியைப்
போல அழிந்து போகிறான்.
ஸ்தோகம் ஸ்தோகம்
க்3ரஸேத்3க்3ராஸம் தே3ஹோ வர்தேத யாவதா |
க்3ருஹானஹிம்ஸன்னதிஷ்டே2த்3வ்ருத்திம்
மாது4கரீம் முனி: || 9 ||
- மற்றவர்கள கஷ்டத்திற்குள்ளாக்கி எதையும் அவர்களிடமிருந்து
பெறக்கூடாது. எப்படி தேனீ மலரை நாசம்
செய்யாமல் தேனெடுக்கின்றதோ அது போல இருக்க வேண்டும்,
- தேனீயைப் போல சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.
- தேனி தூய்மையான மலரின் மட்டும்தான் அமரும் அதேபோல ஞானியும்
எப்போதும் சாத்விகமான எண்ணங்களுடன்தான் இருப்பான். ஆனால் அக்ஞானியோ ஈயைப்போல நல்லது, கெட்டது
இரண்டிலும் அமர்வதைப்போல நல்லது-கெட்டதுமான செயல்களில் ஈடுபடுவான்.
க்3ராஸம் ஸ்தோகம்
ஸ்தோகம் – உணவை சிறிது
சிறிதாக
க்3ரஸேதி - ஏற்றுக் கொள்ள வேண்டும்
யாவதா – எவ்வளவு எடுத்துக் கொண்டால்
தேஹோ வர்தேத – சரீரத்தை காப்பாற்றி வைத்துக் கொள்ள முடியுமோ
சந்நியாஸியானவன்
பிக்ஷை போடுபவர்களுக்கு துன்பம் கொடுக்காமல் உணவை பெற வேண்டும். எவ்வாறு தேனி மலர்களை நாசம் செய்யாமல்
தேனெடுக்கின்றதோ அதுபோல இருக்க வேண்டும்.
அணுப்4யஶ்ச
மஹத்3ப்4யஶ்ச ஶாஸ்த்ரேப்4ய: குஶலோ நர: |
ஸர்வத:
ஸாரமாத3த்3யாத்புஷ்பேப்4ய இவ ஷட்பத3: || 10 ||
யாரிடமிருந்தும் அறிவை
பெறுவதில் ஆர்வமாக இருக்க வேண்டும். அறிவை பெற விரும்பும் மனிதன் அது எங்கிருந்து
கிடைத்தாலும், எதனிடமிருந்து கிடைத்தாலும், யாரிடமிருந்து கிடைத்தாலும் பெற்றுக்
கொள்ள வேண்டும். எவ்வாறு தேனீ கொஞ்ச
கொஞ்சமாக வெவ்வேறு மலர்களிடமிருந்து தேனை
எடுக்கின்றதோ அதுபோல அறிவை அடைய வேண்டும்.
ஸாயந்தனம் ஶ்வஸ்தனம்
வா ந ஸங்க்3ருணீத ஹி4க்ஷிதம் |
பாணிபாத்ரோத3ராமத்ரோ
மக்ஷிகேவ ந ஸங்க்3ரஹீ || 11 ||
தேவைக்கு மேல்
பொருட்களை வைத்திருக்கக்கூடாது. தேனீ தேனை
சேர்த்து வைத்திருப்பதால் தானும் அழிந்து கஷ்டபட்டு சேர்த்து வைத்த தேனையும்
இழந்து விடுகிறது. எனவே தேவைக்கு
அதிகமாக வைத்திருக்க கூடாது. சந்நியாசி பிச்சையெடுத்து வந்த ஆகாரத்தை அடுத்த வேளைக்கு, நாளைக்கு என்று சேர்த்து
வைக்கக்கூடாது. இல்லறத்தில் இருப்பவர்கள் தேவையற்ற பொருட்களை சேர்த்து வைத்துக்
கொள்ளக்கூடாது. சந்நியாசிக்கு கைகளே
பிச்சை பாத்திரமாக இருக்கின்றது. அதனை
வைக்குமிடம் வயிறாக இருக்கின்றது. வயிறு நிறையும் வரைதான் பிச்சை ஏற்றுக் கொள்ள
வேண்டும்.
தர்மமான முறையில் புலன்களின்
சுகத்தை அனுபவிக்கும் போது நாம் அதற்கு அடிமையாகவில்லை என்று புரிந்து
கொள்ளலாம். புலன்களின் இன்பத்திற்கு
அடிமையாகி விடக்கூடாது.
ஸாயந்தனம் ஶ்வஸ்தனம்
வா ந ஸங்க்3ருஹணீத பி4க்ஷுக: |
மக்ஷிகா இவ ஸங்க்3ருஹணன்ஸஹ
தேன வினஶ்யதி || 12 ||
துறவி தனக்கு கிடைத்த
அன்னத்தை அடுத்த வேளைக்கோ, நாளைக்கோ என்று சேர்த்து வைத்துக் கொள்ளக் கூடாது. தான் சேகரித்ததை சேர்த்து வைத்துக் கொள்ளும்
தேனீ, தானும் அதனுடன் சேர்ந்து அழிந்து விடுவதைப் போல அன்னத்தை சேர்த்து வைத்துக்
கொள்ளும் துறவியும் அழிந்து விடுவான்
யதா3பி யுவதீம்
பி4க்ஷுர் ந ஸ்ப்ருஶேத்3 தா3ரவீமபி |
ஸ்ப்ருஶன் கரீவ
ப3த்4யேத கரிண்யா அங்க3ஸங்க3த: || 13 ||
சந்நியாசி சரீர
சுகத்தை நாடக்கூடாது. அப்படி நாடினால் ஆண்யானைப் போல சம்சாரத்தில் விழுந்து
விடுவான். பெண் யானையை கண்டு மோகித்து
செல்லும் ஆண் யானையானது தன்னை பிடிப்பதற்காக வெட்டியுள்ள குழியில் விழுந்து
விடுவது போல துறவியும் பெண் மோகத்தால் சம்சாரத்தில் விழுந்துவிடுவான்.
நாதி4க3ச்சே2த்
ஸ்த்ரியம் ப்ராஞ: கர்ஹிசின் ம்ருத்யுமாத்மன: |
ப3லாதி4கை: ஸ ஹன்யேத
க3ஜைரன்யைர் க3ஜோ யதா2 || 14 |\
பெண் யானையின்
உறவுக்கு ஆசைப்பட்டு அதனருகே செல்லும் யானையானது, அதே பெண் யானையிடம் மோகம் கொண்ட
வேறொரு பலசாலியான ஆண்யானையினால் கொல்லப்படுவது போல நல்லறிவு படைத்தவன் தனக்கு ஒரு
காலத்தில் எமனாக மாறக் கூடிய பெண்ணின் சரீர சுகத்திற்கு நாடிச் செல்லக்கூடாது.
ந தே3யம்
நோப்போ4க்3யம் ச லுப்3தை4ர்ய து3:க2ஸஞ்சிதம் |
பு4ங்க்தே தத3பி
தச்சான்யோ மது4ஹேவார்தா2வின்மது4 || 15 ||
லுப்3தை4ர்ய - லோபியானவன்
து3:க2ஸஞ்சிதம் – கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை
ந தே3யம் – பிறருக்கும் கொடுப்பதில்லை
நோப்போ4க்3யம் ச - தானும் அனுபவிப்பதில்லை
தச்சான்யோ - வேறொருவன்
தத3பி - அதை
பு4ங்க்தே - அனுபவிக்கின்றான்.
மது4ஹேவார்தா2வின்மது4 – எவ்விதம் தேனெடுப்பவனிடமிருந்து தேனை வாங்கி வேறொருவன் அனுபவிக்கின்றானோ
அதுபோல இருக்கின்றது.
லோபியாக இருக்கக்கூடாது
என்ற பாடத்தை இந்தக் குருவிடமிருந்து கற்றுக் கொண்டேன். சம்பாதித்த பணத்தைக்
கொண்டு சுகத்தை தர்மப்படியும், அளவுடனும் அனுபவித்துக் கொள்ள வேண்டும். பிறருக்கு பகிர்ந்து கொடுக்கவும்
வேண்டும். இல்லையென்றால் நாம் உழைத்து
சேர்த்த பணத்தை வேறு யாரோ அனுபவிக்குமாறு ஆகிவிடும். எப்படி தேனெடுப்பவனிடம்
இருந்து தேனை வேறொருவன் வாங்கி அனுபவிக்கின்றானோ அதுபோல ஆகிவிடும். எதை அனுபவிக்க வேண்டுமோ அதன் மீது உரிமைக்
கொண்டாடாமல் இருந்தால் அனுபவிக்கலாம்.
ஸுது3:கோ2பார்ஜிதைர்
வித்தைராஶாஸானாம் க்3ருஹாஶிஷ: |
மது3ஹேவாக்3ரதோ
பு4ங்க்தே யதிர் வை க்3ருஹமேதி4னாம் || 16 ||
வைராக்கியம் உடையவன்
உலகத்தை நன்கு அனுபவிப்பான். மிகவும்
கஷ்டப்பட்டு சேர்த்த செல்வத்தினால், விதவிதமான ஆசைகளுடன் இல்லறத்தில் இருப்பவர்கள்
எப்படி தேனை எடுப்பவன் முதலிலனுபவிக்கின்றானோ அதுபோல இல்லறத்தில் இருப்பவர்களின்
செல்வத்தை முதலில் அதன் மீதுள்ள வைராக்கியத்தை உடைய துறவிக்கு கொடுத்துவிட்டு
நன்கு அனுபவிக்கின்றான். நாம் சேர்த்த
செல்வத்தின் மீது அதிக பற்றிருந்தால் அதை முழுமையாக அனுபவிக்க முடியாது.
க்3ராம்யகீ3தம் ந
ஶ்ருணுயாத்3 யதிர்வனசர: க்வசித் |
ஶிக்ஷேத ஹரிணாத்
ப3த்3தா4ன் ம்ருக3யோர்கீ3த மோஹிதாத் || 17 ||
காதுக்கு அடிமையாகி
விடக்கூடாது.
காட்டில் வாழும்
துறவியானவன் ஒருபொழுதும் உலக இன்ப சம்பந்தமான பாடல்களைக் கேட்க கூடாது. வேடனின் இசையில் மயங்கி வலையில் சிக்கிக்
கொள்ளும் மானிடமிருந்து இந்த பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். அதாவது ரஜோ, தமோ
குண அடிப்படையில் இருக்கும் பாடல்களை இசையை கேட்கக்கூடாது.
ந்ருத்யவாதி3த்ரகீ3தானி
ஜுஷன் த்3ராம்யாணி யோஷிதாம் |
ஆஸாம் க்ரீட3னகோ வஶ்ய
ருஷ்யஶ்ருங்கோ3 ம்ருகீ3ஸுத: || 18 ||
ரிஷ்யஸ்ருங்கர் என்ற
தபஸ்வியானவர் இசைக்கு மயங்கியிருப்பவர். பெண்களின் மோகத்தை கொடுக்கின்ற உலகாயுத
ஆட்டம், பாட்டங்களில் மனம் வசப்பட்டுவிட்டதால் அவர்கள் வசத்துக்கு ஆளாகி
கைப்பாவையாக ஆனார். அதனால் அவரது தவ வாழ்க்கையே அழிந்து விட்டது
ஜிஹ்வயாதிப்ரமாதி2ன்யா
ஜனோ ரஸவிமோஹித: |
ம்ருத்யு ம்ருச்ச2த்ய
ஸத்3பு3த்3தி4ர் மீனஸ்து ப3டி3ஶைர் யதா2 || 19 ||
ஜனஹ - மனிதர்கள்
ஜிஹ்வயா – நாக்கினால்
அதிப்ரமாதி2ன்யா – மிகவும் கெடுதலை கொடுக்கக்கூடிய
ரஸவிமோஹிதஹ – சுவையென்ற சுகத்தில் மோகம் அடைந்து இருக்கிறார்கள், சுவைக்கு
அடிமையாகி இருக்கிறார்கள். அதனால்
ம்ருதியும் இச்சதி – நோயினால் பீடிக்கப்பட்டு மரணத்தை அடைகிறார்கள்.
அஸத் புத்தி – இவர்கள் அறிவில்லாதவர்கள்; உண்மையை உணராதவர்கள்
மீனானது தூண்டிலில்
இருக்கும் உணவுக்கு ஆசைப்பட்டு உயிரிழப்பதை போல இது இருக்கிறது.
இந்த்3ரியாணி
ஜயந்த்யாஶு நிராஹாரா மனீஷிண: |
வர்ஜயித்வா து ரஸனம்
தன்னிரன்னஸ்ய வர்த4ர்தே || 20 ||
புலன்களால் அடையும்
இன்பத்தை விட, அதை வசப்படுத்தினாலடையும் இன்பம் மிகவும் மேலானது, அதிகமானதாகவும்
இருக்கிறது. இந்த உண்மையை அறிந்து கொண்டவன் புலனடக்கத்தை பயிற்சி செய்கின்றான்.
இது மோட்சத்திற்கு தகுதியும் ஏற்படுத்துகின்றது.
ஒருவன் மற்ற புலன்களை
கட்டுபடுத்தும் போது மனதில் ஏற்படும் வெற்றிடத்தை நாக்கின் மூலமாக வெளிபட்டு அதற்கு
அடிமையாகி விடுகிறான். வயதாகி விட்ட பிறகு மற்ற கர்மேந்திரியங்கள்,
ஞானேந்திரியங்கள் பலம் இழந்து இருக்கும் போது அப்போது ஏற்படும் ஏக்கம் நாவின்
மூலமாகத்தான் தீர்த்துக் கொள்ள வேட்கை ஏற்படும்.
மனீஷிணஹ – அறிவாளிகள், விவேகிகள்
நிராஹார – மற்ற இந்திரியங்களுக்கு உணவு கொடுக்காமல்
வர்ஜயித்வா து ரஸனம் – நாக்கை மட்டும் விட்டுவிட்டு
இந்திரியாணி ஜயந்தி – எளிதில் புலன்களை வென்று விடுகிறார்கள்
தத்3 நிரன்னஸ்ய
வர்த்தே – இந்த நாவின்
மீதுள்ள பற்றானது மேலும் பலமான வேட்கையை உண்டு பண்ணுகிறது.
தாவஜ்ஜிதேந்த்ரியோ ந
ஸ்யாத்விஜிதான்யேந்த்ரிய: புமான் |
ந ஜயேத்3 ரஸனம்
யாவ்ஜ்ஜிதம் ஸ்ர்வம் ஜிதே ரஸே || 21 ||
ஜிதே ரஸே – நாக்கை வென்று விட்டால்
ஸர்வம் இதம் – அனைத்து புலன்களையும் வென்று விடலாம்
நாக்கைத் தவிர மற்ற எல்லா
இந்திரியங்களையும் வென்று விடலாம். நாக்கை அடக்காத வரையில் எவனொருவனும் எல்லா புலன்களையெல்லாம் வென்றவனாக கருதப்பட
மாட்டான் ஆனால் நாக்கை மட்டுமே கட்டுப்படுத்திவிட்டவன், மற்ற இந்திரியங்களையும்
கட்டுப்படுத்திவிட்டவனாக எண்ணத்தக்கவன்.
பிங்கலா நாம
வேஶ்யாஸீத்3 விதேஹ நக3ரே புரா |
தஸ்யா மே ஶிக்ஷிதம்
கிஞ்சின்னிபோ3த4 ந்ருப நந்தன || 22 ||
அரசே! முன்பு ஒரு
காலத்தில் விதேக நகரில் பிங்களா என்கின்ற வேசி வாழ்ந்து வந்தாள். அவளிடமிருந்தும் நான் ஒரு சிறுபாடம் கற்றுக்
கொண்டேன். அதைக் கேள்!
இதிலிருந்து அறிந்து
கொள்ள வேண்டியது எவ்வளவு கீழ்நிலையிலிருந்தாலும் பாவ வாழ்க்கை வாழ்ந்திருந்தாலும்
ஞானத்தை அடையமுடியும் என்ற கருத்து.
வைராக்கியத்தை அடைந்தால் தான் உண்மையான ஆனந்தத்தை அடைய முடியும். உன்னை நீயேதான் உயர்த்திக் கொள்ள
வேண்டும். யார் மீதும் குறை சொல்லக்
கூடாது.
ஸா ஸ்வைரிண்யேக்தா3 காந்தம் ஸத்கேத உபனேஷ்யதீ |
அபூ4த்காலே ப3ஹிர் த்3வாரே பி3ப்4ரதீ ரூபமுத்தமம் || 23 ||
வேசியான அவள் ஒரு
நாள் தன்மனதிற்கு பிடித்த நாயகனை படுக்கையறைக்கு அழைத்துப் போக
விருப்பங்கொண்டவளாய் சிறந்த அலங்காரத்தை செய்து கொண்டவளாய் இரவு வேளையில் வெளியில்
வாயிற்படியில் நின்றாள்.
மார்க3 ஆகச்ச2தோ
வீக்ஷ்ய புருஷான் புருஷர்ஶப4 |
ஹான்ஶுல்கதான்வித்தவத:
காந்தான்மேனேSர்த2காமுகி
|| 24 ||
பணத்தில் ஆசைகொண்ட
அவள் வழியில் வருகின்ற புருஷர்களைப் பார்த்து செல்வந்தர்களும், தனக்கு வேண்டிய
பொருட்களை கொடுப்பவர்களுமான அவர்களையே போகத்திற்குரியவர்கள் என்று எண்ணினாள்
ஆகதேஷ்வபயாதேஷு
ஸட்3கெதோபஜீவினி |
அப்யன்யோ வித்தவான்கோSபி மாம்பைஷ்யதி பூ4ரித3: || 25 ||
ஏவம் துராஶயா த்4வஸ்த
நித்3ரா த்3வார்யவலம்ப3தீ |
நிர்க3ச்ச2ந்தீ
ப்ரவிஶதீ நிஶீத2ம் ஸமபத்3யத || 26 ||
வந்தவர்கள் எல்லோரும்
போனபொழுது ரகசியமாக பரபுருஷர்களிடத்தில் கிரீடை செய்து அதனால் கிடைத்த பணத்தைக் கொண்டு ஜீவனம் நடத்தும் அவள்
பணமுள்ளவனும் அதனால் அதிகம் பொருளை கொடுப்பவனுமான எவனாவது ஒருவன் என்னை
அடையமாட்டானா என்ற கெட்ட எண்ணத்தினால் நித்திரையிழந்தவளாய் வாயிற்படியில்
நிற்கின்றவளாயும் உள்ளுக்கும், வெளியேயும் போய் வந்து கொண்டு இருந்ததில் நடுஇரவை
அடைந்து விட்டது
தஸ்யா வித்தாஶயா
ஶுஷ்யத்3 வக்த்ராயா தீ3னசேதஸ: |
நிர்வேத3: பரமோ ஜக்ஞே
சிந்தாஹேது: ஸுக2வஹ: || 27 ||
பணத்திலாசையினால்
வாடின முகமுடையவளும், வருத்தமுற்ற மனமுடையவளுமான அவளுக்கு விசாரத்திற்கு
காரணமானதும் சுகத்தை தருவதுமான மேலான வைராக்கியம் உண்டாயிற்று
பணத்தையே லட்சியமாக கொண்டு
வாழ்ந்த அவருடைய முகம் வாடிப் போயிற்று, மிகவும் கவலை கொண்டாள். மேலான உண்மையான,
நிலையான உண்மையான பரம் பொருளை நாடுவதற்கான வைராக்கியத்தை அடைந்தாள். போகத்தில் இருக்கும் நிலையாமை, துயரத்தை
தரக்கூடியது என்று ஆராய்ந்தறிவதால், மனதை நிறைக்க முடியாது என்று நினைத்ததினால்
வைராக்கியத்தை அடைந்தாள்.
தஸ்யா
நிர்விண்ணசித்தாயா கீ3தம் ஶ்ருணு யதா2 மம |
நிர்வேத3 ஆஶாபாஶானாம்
புருஷஸ்ய யதா2 ஹயஸி: || 28 ||
வைராக்கியம் அடைந்த
மனமுடையவளான அவளுடைய வார்த்தையை உள்ளபடி என்னிடமிருந்து கேட்பாயாக, ஏனென்றால்
மனிதனுடைய ஆசாபாசங்களுக்கு வைராக்கியமானது கத்திபோல் நாசகரமாகிறது
புருஷஸ்ய - மனிதர்களின்
ஆஶாபாஶானாம் – மனதிலுள்ள அனைத்து ஆசைகளை வெட்டுவதற்கான
நிர்வேத3 ஹ்யஸி – வைராக்கியம் என்பது பெரிய கத்தியாக அமைகிறது
ஆஶா – சோபான அத்யாசம்; பாஶம் - போகப்பொருட்களின் மீதுள்ள அதிகப்பற்று
ந ஹயங்கா3ஜாத
நிர்வேதோ3 தே3ஹப3ந்த4ம் ஜிஹாஸதி |
யதா2 விக்ஞானரஹிதோ
மனுஜீ மமதாம் ந்ருப || 29 ||
ஓ அரசே! ஆத்ம
ஞானமில்லாத மனிதன் எவ்விதம் மமகாரத்தை விடமுடியாதவனாக இருக்கிறானோ அவ்விதமே
வைராக்கியம் இல்லாதவனால் தேகத்தின் மீதுள்ள அபிமானத்தை விட விரும்ப மாட்டான்.
வைராக்கியம்தான் பஞ்ச கோசத்திலிருக்கும் அபிமானத்தை நம்மிடமிருந்து விடவைக்கும்.
அஜாத நிர்வேத – வைராக்கியம் அடையாதவனால்
தேஹபந்தம் – தேகத்திலுள்ள அபிமானத்தை
ந ஜிஹாஸதி – விடமுடியாது.
வேசி பிங்க3லா உவாச
அஹோ மே மோஹவிததிம்
பஶ்யதாவிஜிதாத்மன: |
யா காந்தாத3ஸத: காமம்
காம்யே யேன பா3லிஶா || 30 ||
பிங்களா கூறினாள்.
அஹோ! ஆகா
அவிஜிதாத்மனஹ – மனம், புலன்களை வெற்றிக் கொள்ளாத
மே மோஹவிததிம் பஶ்யத - என்னுடைய அதிக மோகத்தின் விளைவைப் பாருங்கள்.
காந்தாத3ஸத: - ஒழுக்கமில்லாத மனிதர்களிடமிருந்து
பா3லிஶா - சிறுபிள்ளைத்தனமாக
காமம் காம்யே யேன - காமத்தை அடைய விரும்பினேன்.
ஸந்தம் ஸமீபே ரமணம்
ரதிப்ரத3ம் வித்தப்ரத3ம் நித்யமிமம் விஹாய |
அகாமத3ம் து3:க2
ப4யாதி4ஶோக மோஹப்ரத3ம் துச்ச2மஹம் ப4ஜேSஞா || 31 ||
எப்பொழுதும்
உடனிருப்பவர், நல்ல மனிதர், ஆனந்த வடிவினர் உண்மையான இன்பம் வழங்குபவர்; தேவையான
நேரத்தில் செல்வம் அளிப்பவர்; ஆகியோர்களை அறிவில்லாமல் நான் விட்டு விட்டேன்.
அகாமதம் - உண்மையான இன்பத்தை கொடுக்காதவர்கள்
துக்கம், பயம், மன
உளைச்சல், உடல்நோய், துயரம், மனமயக்கம் இவைகளைக் கொடுக்கின்ற இழிந்த செயலில்
மதியில்லாதவளான நான் ஈடுபட்டிருந்தேனே!
அஹோ மயாத்மா
பரிதாபிதோ வ்ருதா2
ஸாங்கேத்ய வ்ருத்த்யாதி விக3ஹர்யவார்தயா |
ஸ்த்ரைணான்னராத்3யார்த2
த்ருஷோSனுஶோச்யாத்
க்ரீதேன வித்தம் ரதிமாத்மனேச்ச2தீ || 32 ||
அந்தோ! நான் என்னையே
துயரப்படுத்திக் கொண்டேன், இதனால் எந்தப் பயனுமில்லை. என்னுடைய மனதையும், உடலையும்
வீணாக நானே வருத்திக் கொண்டேன். சரீரத்திலுள்ள இன்பத்தை மட்டுமே பார்ப்பவர்கள்,
அனுபவிக்க விரும்புபவர்கள், வெறும் பணத்தை மட்டும் லட்சியமாக கொண்டவர்கள்,
துயரத்தை தானும் அனுபவித்துக் கொண்டு மற்றவர்களுக்கு துயரத்தை கொடுக்கும் மட்டமான
மனிதர்களிடம் உறவு கொண்டேன். இந்தக் உடலைக் கொண்டு செல்வம் சேர்க்கவும், இன்பம்
அனுபவிக்கவும் மிகவும் இகழ்ச்சிக்குரிய வேசித் தொழிலை மேற்கொண்டேனே!
யத3ஸ்தி2வி4ர்
நிர்மிதவம்ஶவம்ஸ்ய
ஸ்தூ2ணம் த்வசா ரோமனகை2: பினத3த4ம் |
க்ஷரன்னவத்3வாரமகா3ரமேதத்3
விண்மூத்ரபூர்ண மது3பைதி கான்யா || 33 ||
குறுக்கும்
நெடுக்குமாக மூங்கில்கள் போன்ற எலும்புகள் தூண்களாக கொண்டு இந்த உடல் பின்னப்பட்டு
உள்ளது. இந்த உடல் தோல், ரோமம், நகங்கள்
முதலியவைகளால் மூடப்பட்டுள்ளது. உடலாகிற
வீட்டில் ஒன்பது வாயில்களும், உள்ளே மலஜலம் நிரம்பியுள்ளது. மோகம் வரும் போது இவ்வாறாக எண்ணிக் கொள்ள
வேண்டும். இவ்வளவு மோசமான உடலின் மீது
மோகம் கொள்ளக் கூடாது.
விதே3ஹானாம் புரே
ஹ்யஸ்மின்னஹமேகைவ மூட4தீ4: |
யான்யமிச்ச2ந்த்யஸத்யஸ்மாதா3த்மதா3த்காம
மச்யுதாத் || 34 ||
இந்த விதேக நகரத்தில்
நான் ஒருத்திதான் அதிமுட்டாள். என்னையே
எனக்கு திருப்பிக் கொடுக்கின்ற பகவான் கொடுக்கும் இன்பத்தை விட்டுவிட்டு
வெளியேயுள்ள மனிதர்களிடம் விருப்பம் கொண்டேனே வேறொரு கீழான இன்பத்தை நாடிச்
சென்றுவிட்டேன். நல்ல புத்தியில்லாதவளாக
இருந்ததால் இப்படி செய்துவிட்டேன்.
ஸுஹ்ருத்ப்ரேஷ்ட2தமோ
நாத2 ஆத்மா சாயம் ஶரீரிணாம் |
விக்ரியாத்மனைவாஹம்
ரமேSனேன யதா2 ரமா || 35 ||
ஸுஹ்ருத் – நண்பன்,
நம் நன்மைக்காக உதவும் குணமுடையவன். பகவான் நண்பனாக இருந்து கொண்டு வேதங்கள்,
சாஸ்திரங்கள் மூலம் நம்முடைய நன்மைக்காக உபதேசம் செய்திருக்கிறார்.
ப்ரேஷ்த2தமஹ – நாம் அன்பு செலுத்துவதற்கு உயர்ந்தவர், நம் நலனை விரும்புபவர்
நாத2 – தலைவர், கர்ம பலனை தருபவர்
யதா2 ரமா – எவ்வாறு லட்சுமிதேவி பகவானிடத்தில் இருக்கின்றாளோ அது போல
ஆத்மா ச அயம்
ஶரீரிணாம் –
ஆத்மாவாகவும், மேலும் இந்த விஷ்ணுபகவான் எல்லா உடல்களிலும் வீற்றிருக்கிறார்
விக்ரியாத் ஆத்மனா
அஹம் – என்னையே அவருக்கு
சமர்ப்பணம் செய்து சுகித்திருப்பேன்.
கியத்ப்ரியம் தே
வ்யப4ஜன்காமா யே காமதா3 நரா: |
ஆத்3யந்தவந்தோ
பா4ர்யாயா தே3வா வா காலவித்3ருதா: || 36 |\
ஆத்யந்தவந்தஹ – தொடக்கமும் முடிவும் உடைய
பா4ர்யாயா – பெண்ணான எனக்கு
கியத் ப்ரியம் தே
வ்யப4ஜன் காமா யே –
இன்பத்தைத் தரும் பொருட்களால் எவ்வளவு இன்பத்தைத்தான் எனக்கு கொடுத்து விட
முடியும்.
காலவித்3ருதா: - காலத்திற்கு உட்பட்ட
காமதா3 நரா: தே3வா வா- மனிதர்களாலும்,தேவர்களாலும் எவ்வளவு சுகத்தை கொடுக்க முடியும்?
நூனம் மே ப4கவான்
ப்ரிதோ விஷ்ணு: கேனாபி கர்மணா |
நிர்வெதோ3Sயம் து3ராஶாயா யன்மே ஜாத: ஸுகா2வஹ: || 37 ||
என்னிடத்தில் பகவான்
விஷ்ணு மகிழ்ச்சி அடைந்திருக்க வேண்டும். எனக்கு தெரியாத ஏதோவொரு புண்ணீய பலனாகத்தான் பகவானின் கருணை பெற்று இருக்கிறேன். அவரது கருணையால்தான்
துராஶயா – துர்நடத்தையுள்ளவளான எனக்கு
நிர்வேதோSயம் மே ஜாதஹ ஸுகா2வஹ: – எனக்கு இந்த உண்மையான சுகத்தைக் கொடுக்கக்கூடிய வைராக்கியம் வந்தது.
மைவம்
ஸ்யுர்மந்த3பா4க்3யாயா: க்லேஶா நிர்வேத3ஹேதவ: |
யேனானுப3ந்த4ம்
நிர்ஹ்ருத்ய புருஷ: ஶமம்ருச்ச2தி || 38 ||
க்லேஶா நிர்வேத3 ஹேதவ: - மனத்துயரங்கள் காரணமாக அடைந்த வைராக்கியத்தினால்
மைவம் ஸ்யுஹ
மந்த3ப4க்3யாயா: இவ்விதம்
துர்பாக்கியசாலியான என்னிடத்தில் மாற்றம் நடந்திருக்கிறது.
யேன – இந்த வைராக்கியம்
அனுபந்த3ம் – அனைத்து பொருட்களிடத்தில் இருக்கும் பந்தத்தில் இருந்து
நிர்ஹ்ருத்ய – விடுவிக்கின்றது. அதனால்
புருஷ: ஶமம்ருச்ச2தி – மனிதன் மன அமைதியை அடைகின்றான்.
தேனோபக்ருதமாதா3ய
ஶிரஸா க்3ராம்யஸங்க3தா: |
த்யக்த்வா துராஶா:
ஶரணம் வ்ரஜமி தமதீ4ஶ்வரம் || 39 ||
தேன உபக்ருதம் ஶிரஸா
ஆதா3ய – இறைவனால்
வழங்கப்பட்ட நல்ல புத்தியை தலை வணங்கி மனப்பூர்வமாக
ஏற்றுக் கொண்டு
க்3ராம்ய ஸங்க3தா: - இதுவரை வாழ்ந்து வந்த அதர்மமான வாழ்க்கை முறையையும்
து3ராஶா: - தீய எண்ணங்களையும்
த்யக்த்வா - விட்டுவிட்டு
தம் அதீ4ஶ்வரம் – அந்த உலகநாயகனை
ஶரணம் வ்ரஜாமி – சரணடைகின்றேன்.
ஸந்துஷ்டா ஶ்ரத்3த3 த4த்யேதத்3யதா2லாபே4ன
ஜீவதீ |
விஹராம்யமுனைவாஹமாத்மனா
ரமணேன வை || 40 ||
ஸந்துஷ்டா யதாலாபேன – எனக்கு கிடைப்பதைக் கொண்டு திருப்தியடைந்து
ஜீவதி – வாழ்ந்து கொண்டிருப்பேன்.
ஶ்ரத்த3தி4 - சிரத்தையுடையவளாகவும்
என்னுடைய வாழ்க்கையை
ஆத்மாவாகிய இறைவனுடன் மகிழ்ச்சியுடன் வாழ்வேன்.
ஸம்ஸாரகூபே பதிதம் விஷயைர்முஷிதேக்ஷணம்
|
க்3ரஸ்தம் காலாஹினாத்மானம்
கோSன்யஸ்த்ராதுமதீ4ஶ்வர: || 41 ||
ஜீவர்கள் சம்சாரம்
(அறியாமை, மோகம்) என்ற கிணற்றில் விழுந்திருக்கிறார்கள். புலன்களுக்கு போகம் தரும்
உலகவிஷயங்களால் எல்லா புலன்களும் களவாடப்பட்டு விட்டது.
க்3ரஸ்தம் காலாஹினா – காலம் என்ற மலைப்பாம்பின் பிடியில் இருக்கின்றார்கள். இந்த
நிலையிருக்கும். ஜீவர்கள் பகவானைத் தவிர வேறு யாரால் காப்பாற்ற முடியும்.
ஆத்மைவ ஹயாத்மனோ கோ3ப்தா
நிர்வித்3யேத யதா3கி2லாத |
அப்ரமத்த இத3ம் பஶ்யேத்3
க்3ரஸ்தம் காலாஹினா ஜக3த் || 42 ||
உன்னை நீயேதான்
காப்பாற்றிக் கொள்ள வேண்டும். கவனமாக இருக்க வேண்டும். சத்துவ குணத்தில் மனதை
வைத்திருக்க வேண்டும்.
யதா2 காலாஹினா ஜகத் – காலம் என்ற பாம்பினால் இந்த உலகம் பீடிக்கப்பட்டு
இருக்கின்றது. இது உலகத்தின நிலையாமையை குறிக்கின்றது.
அகி2லாத்
நிர்வேத்3யேத –
எல்லாவித உலக இன்பங்களிலிருந்து வைராக்கியம் அடைய வேண்டும்
ஶ்ரீப்3ரஹ்மணா உவாச
ஏவம் வ்யவஸிதமதிர்து3ராஶாம்
காந்த தர்ஶஜாம் |
சி2த்த்வோபஶமமாஸ்தா2ய
ஶய்யாமுபவிவேஶ ஸா || 43 ||
ஶ்ரீபகவான் கூறினார்.
இவ்வாறு நிச்சயம்
செய்து கொண்ட மன உறுதியடைந்த அவள் தீய எண்ணங்களையும், உலகத்தில் உள்ள இன்பங்களையும்
வெட்டி தள்ளி விட்டு மன அமைதியை அடைந்து, தன்னுடைய இருக்கையில் அமர்ந்திருந்தாள்
ஆஶா ஹி பரமம் து3:க2ம்
நைராஶ்யம் பரமம் ஸுக2ம் |
யதா2 ஸஞ்சி2த்3ய காந்தாஶாம்
ஸுக2ம் ஸுஷ்வாப பிங்க3லா || 44 ||
மனதிலுள்ள பேராசைகளே
பெருந்துக்கம் பற்றற்ற மனநிலையே மேலான சுகம் என்ற உண்மையை உணர்ந்து விட்டாள். இவ்வாறு அவள் அனைத்து உலக இன்பங்களையும் துறந்துவிட்டு நிம்மதியாக உறங்கினாள்.
ஆஶா -
1. எதிர்பார்ப்பு
(ப்ரதிக்ஷா) à துயரத்திற்குக் காரணமாக அமையும்,
2. விருப்பம், வேண்டும் à இதுவும் துயரத்திற்கு காரணமாக அமையும்,
3. நம்பிக்கை –
அனாத்மா பொருட்களின் மீதுள்ள நம்பிக்கை அவைகள் எனக்கு திருப்தியை, சுகத்தைக்
கொடுக்கும் என்ற நம்பிக்கை..
தொகுப்புரை
* அனாத்மா
சுகத்திற்காக காலத்தையும், சக்தியையும் வீணாக்கக்கூடாது. நம் பிராரப்தத்தினால்
இன்பமும், துன்பமும் நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அனுபவித்துத்தான்
தீர வேண்டும். எனவே வைராக்கியத்தையும், ஆத்ம ஞானத்தையும் அடைவதற்கு முயற்சி செய்ய
வேண்டும்.
* புலன்களினால்
கிடைக்கும் இன்பத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
* மற்றவர்களுக்கு
ஹிம்சை கொடுக்காமல் அவர்களிடமிருந்து பொருட்களை, உணவையோ பெற்றுக் கொள்ளலாம். தேவைக்கு மேல் சேர்த்து வைப்பதால் நாமும்
அனுபவிக்காமல் அவைகள் அழிந்துபோகும் மற்றவர்களால் களவாடப்படும்
* இந்திரிய
சுகத்தை நாடக்கூடாது
* உலக
இன்பத்தை தருகின்ற ராஜஸ, தாமஸ இசையில் மயங்கி விடக்கூடாது.
* உணவு
சுவைக்கு அடிமையாகக் கூடாது. இந்த சுவையுணர்வை வென்றுவிட்டால் மற்ற அனைத்து
புலன்களையும் வென்றுவிடலாம்.
* எவ்வளவு
பாவங்களை செய்திருந்தாலும் நாம் திருந்தி வைராக்கியத்தை அடையலாம், இறைவன் மீது
பக்தியை ஏற்பட்டு அவன் சரணடைந்து பாவங்களை நீக்கி கொள்ள முடியும்
* இந்த
விஷயத்தில் நம்மை நாமே உயர்த்திக் கொள்ள வேண்டும்.
ஓம் தத் ஸத்