பஞ்சதசி
அத்தியாயம்-10
நாடக தீபம்
முகவுரை.
இரண்டற்றதாகவும், ஆனந்தமாகவும், பூரணமாகவும் இருக்கின்ற பரமாத்மா தன்னுடைய மாயா சக்தியினால் தானே ஜகத்தாக தோன்றி அதில் ஜீவன் என்ற ரூபத்துடன் பிரவேசித்தார். விஷ்ணு முதலான மேலான தேகங்களில் பிரவேசித்துக் கொண்டு தேவதையாக ஆனார். மனிதன் முதலிய கீழான தேகங்களில் இருந்து கொண்டு அந்த தேவதைகளை பூஜிக்கிறான்.
பல ஜன்மாக்களில் இறைவனை வழிபட்டதன் பலனாக, கர்மயோகப்படி வாழ்ந்ததன் பலனாக, தர்மப்படி வாழ்ந்ததன் பலனாக தன்னுடைய உண்மை ஸ்வரூபத்தை விசாரம் செய்ய ஆசைப்படுகிறான். விசாரம் செய்வதனால் தன் ஸ்வரூபத்தை மறைத்திருந்த மாயையானது நாசம் அடையம்போது தான் மட்டும் மிஞ்சி நிற்கிறான்.
இரண்டற்றதாகவும், ஆனந்த ஸ்வரூபமாகவும் உள்ள ஆத்ம தத்துவத்தை இரண்டாக புரிந்து கொள்ளும் போதும், ஆனந்தமானது துக்கமாக இருப்பதாக பார்ப்பதும், பந்தமாக சொல்லப்படுகிறது. தன்னுடைய ஸ்வரூபத்திலேயே நிலைத்திருப்பது மோட்சம் என்று சொல்லப்படுகிறது. விசாரம் இல்லாததினால் ஏற்பட்டிருக்கும் அறியாமையோடு இருப்பதனால் ஏற்பட்டிருக்கும் பந்தமானது விலகிவிடும். ஆகையால் எப்போதுமே முழுவதுமாக ஜீவனையும், ஈஸ்வரனையும் பரமாத்மாவையும் விசாரித்து கொண்டிருக்க வேண்டும்.
அனாத்மாவான தேகத்தில் நான் என்ற உறுதியான அபிமானம் கொண்டிருப்பவனே செயல் செய்கிறவன் (கர்த்தா) என்று அழைக்கப்படுகிறான். அவனே ஜீவன் என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்த ஜீவனுக்கு இருக்கின்ற சாதனம் மனதுதான். இந்த மனதினுடைய இரண்டுவிதமான செயல்கள் கிரமமாக மனதினுள்ளே தோன்றி கொண்டிருக்கும். அவைகள் எண்ணவோட்டங்களான உள்விருத்தி, வெளிவிருத்தி ஆகும்.
உடலுக்குள்ளே இருப்பதை “நான்” என்று சொல்கின்ற எண்ணத்தை கர்த்தா என்ற தன்மை சுட்டிக் காட்டுகிறது. வெளியிலிருக்கின்ற “இது” என்கின்ற எண்ணமானது உடலுக்கு வெளியே உள்ள வஸ்துவை சுட்டிக்காட்டுகின்றது. வெளியேயுள்ள விஷயங்களில் வேற்றுமைகளான மணம், உருவம், சுவை முதலியவைகளை ஒன்றோடொன்று கலந்து விடாமல் மூக்கு முதலிய ஐந்துவிதமான புலன்கள் அறிகின்றன. கர்த்தாவான ஜீவனையும் அவனுடைய செயல்களையும் அப்படியே ஒன்றுக்கொன்று வேறுபடுகின்ற விஷயங்களையும் கூட எந்தவொன்று எந்த மாறுதலையும் அடையாமல் பிரகாசப்படுத்துகின்றதோ அதுதான் சைதன்ய ஸ்வரூபமாக உள்ள சாட்சி. நான் பார்க்கிறேன், கேட்கிறேன், முகர்கிறேன், சுவைக்கின்றேன், தொடுகிறேன் இவை எல்லாவற்றையும் நாட்டிய மண்டபத்தில் உள்ள தீபம் போல சாட்சி சைதன்யம் பிரகாசப்படுத்துகின்றது.
நாட்டிய அரங்கத்திலுள்ள தீபமானது எஜமானனையும் (நாட்டிய ஏற்பாடு செய்தவர்) பார்வையாளர்களையும், நாட்டியம் ஆடுபவளையும் ஒரே நேரத்தில் தான் எந்த மாறுதலையும் அடையாமல் பிரகாசப்படுத்தும். இவர்கள் இல்லாது போனாலும் பிரகாசித்துக் கொண்டிருக்கும்.
சாட்சி சைதன்யமானது அகங்காரம், புத்தி, விஷயங்கள் இவைகளையெல்லாம் பிரகாசப்படுத்துகிறது. அகங்காரம் முதலானவைகள் இல்லாது போனாலும் கூட இந்த சாட்சியானது தானே பிரகாசித்துக் கொண்டிருக்கும். கூடஸ்தன் அறிவு ஸ்வரூபமாக இருப்பதால் இடைவிடாமல் பிரகாசித்துக் கொண்டே இருக்கும் போது அதனுடைய பிரகாசத்தினால் பிரகாசிக்கின்ற புத்தியானது பலவிதமாக ஆடுகின்ற நர்த்தகியை குறிக்கிறது.
புத்தியின் நடனமானது மனதில் எழுகின்ற விதவிதமான எண்ணங்களாக புரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய ஸ்தூல சரீரம்தான் நடன அரங்கமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அகங்காரமானது நாட்டியத்தை இயக்குபவராகவும் விஷயங்கள் பார்வையாளர்களாகவும், புத்தியானது நடனமாடுபவரையும், பக்க வாத்தியமானது புலன்களாகவும் இவைகளை பிரகாசித்துக் கொண்டிருக்கும் தீபத்தை சாட்சி சைதன்யமாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
தான் பொருத்தப்பட்ட இடத்திலிருந்து கொண்டு தீபமானது எப்படி எல்லா இடங்களையும் பிரகாசப்படுத்திக் கொண்டிருக்கின்றதோ அப்படியே சாட்சி சைதன்யமும் அசையாமல் இருந்து கொண்டு உள்ளே உள்ளவற்றையும் வெளியே உள்ளவற்றையும் பிரகாசிக்கின்றது. வெளியே, உள்ளே என்கின்ற இந்த பிரிவானது தேகத்தின் அடிப்படையில் தானே தவிர சாட்சி சைதன்யத்தின் அடிப்படையில் கிடையாது. தேகத்திற்கு வெளியே உள்ளது விஷயங்களாகும். தேகத்திற்கு உள்ளே இருப்பது அகங்காரம். தேகத்திற்குள்ளே இருக்கின்ற புத்தி இந்திரியங்களோடு சேர்ந்து கொண்டு மீண்டும் மீண்டும் வெளியே செல்கிறது. சாட்சி சைதன்யத்தினால் பிரகாசப்படுத்தப்பட்ட புத்தியினுடைய சஞ்சலத்தன்மை சாட்சியினிடத்தில் பொய்யாக ஏற்றி வைக்கப்படுகிறது.
ஜன்னல் வழியாக வீட்டுக்குள்ளே வருகின்ற வெகு சிறிய அளவான வெயிலானது அசைவற்று இருக்கும். ஆனால் வெயிலில் கையை மேலும் கீழும் ஆட்டினால் வெயிலும் ஆடுவது போல தோன்றும். அதுபோல தன்னுடைய இருப்பிடத்திலேயே இருக்கின்ற சாட்சியானது வெளியிலும், உள்ளேயும் போவது வருவது போன்றவற்றை எதையும் செய்யாமல் இருந்தாலும் புத்தியினுடைய சஞ்சலத்தினால் அவ்விதமே செய்வது போல தோன்றுகிறது.
சாட்சி சைதன்யம் வெளியேமில்லை, உள்ளேயும் இருப்பதில்லை. இந்த இரண்டு இடங்களும் புத்தியின் அடிப்படையில் கூறப்படுகிறது. புத்தி முதலானவைகள் முழுமையாக ஒடுங்கியிருக்கும்போது, எங்கு சாட்சி சைதன்யம் பிரகாசிக்கிறதோ அங்கே அது இருக்கிறது. எந்தவித இடமும் காணவில்லையே என்று கூறினால் அப்போது சைதன்யமும் இடமற்றதாக இருக்கட்டும். எல்லாவிடங்களும் ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது என்ற அடிப்படையில் அதற்கு தன்னுடைய அடிப்படையில் எங்கும் வியாபித்திருக்கும் தன்மை கூட அதனிடத்தில் கிடையாது.
உள்ளே, வெளியே, எல்லாவிடத்திலும் என்று புத்தியானது எந்த இடத்தை கல்பிக்கிறதோ அந்த இடங்களில் சாட்சி சைதன்யம் இருப்பதாக தோன்றுகிறது. இதேபோல பொருட்களிடத்திலும் இந்த நியாயத்தை சேர்த்து கொண்டு புரிந்து கொள்ள வேண்டும். புத்தியினால் எந்தெந்த ரூபங்களை கற்பிக்கப்படுகின்றதோ அவைகளைதான் பிரகாசப்படுத்தி கொண்டு அந்தந்த ரூபங்களுக்கு சாட்சியாக இருக்கிறது. ஆனால் அது வாக்கிற்கும், புத்திக்கும் விஷயமாகாது. வாக்கினாலும், புத்தியினாலும் கிரகிக்க முடியாத தன்மையுடையது என்று என்னால் எப்படி புரிந்து கொள்ள முடியும் என்று கேட்டால் அதை கிரகிக்க தேவையில்லை அறிந்து கொள்ள வேண்டும் என்று எல்லாமும் நன்கு அடங்கினபோது அது தானாகவே அறிவாக எஞ்சி நிற்கும்.
சாட்சி சைதன்யம் தானாக பிரகாசித்துக் கொண்டிருப்பதனால் அதை புரிந்து கொள்வதற்கு பிரமாணம் எதுவும் தேவையில்லை. இத்தகைய அறிவு வேண்டும் என்று விரும்பினால் அதை குருமுகமாக வேதாந்தத்தை உபதேசமாக கேட்டு அடைய வேண்டும். இவ்வாறு கிரகிப்பது எல்லாவற்றையும் விட்டுவிட முடியாததாக இருந்தால் அந்த நிலையில் புத்தியையே சரணடைந்து விடு. சாஸ்திரம் உரைக்கும் ஞானத்தில் சரணடைந்து விடு. அந்த ஞானத்தின் துணைக்கொண்டு வெளியேயும், உள்ளேயும் சாட்சியை அனுபவிக்கப்படட்டும்.
----ooo000ooo----