Showing posts with label பகவத் கீதை-09. Show all posts
Showing posts with label பகவத் கீதை-09. Show all posts

Friday, March 3, 2017

Srimad Bhagavat Gita - Chapter-09

அத்தியாயம்-9
ராஜ வித்யா – ராஜ குஹ்ய யோகம்
ஸ்வாமி குருபரானந்தாவின் உபதேச விளக்கம்
முகவுரை:
இந்த அத்தியாயத்தில் கூறப்படும் கருத்துக்களாவன:
1. ஈஸ்வரன் ஸ்வரூபம்
2. பக்தியை பற்றிய உபதேசம் – இதில் உபாஸனம் என்ற சாதனமும் இருக்கிறது
3. இறைவன் அனுகிரஹம் அளித்தல்

श्रीभगवानुवाच ।
इदं तु ते गुह्यतमं प्रवक्षयाम्यनसूयवे ।
ज्ञानं विज्ञानसहितं यज्ज्ञात्वा मोक्ष्यसेऽशुभात् ॥ 1 ॥
ஶ்ரீபகவான் கூறினார்.
அனஸூயவே – மற்றவர்களின் குறைகளைக்கூறி மகிழாமல் இருக்கும் குணத்தை உடையவனும், மற்றவர்களிடத்தில் குற்றம், குறை கண்டாலும் அவைகளை வெளிப்படுத்தாத குணத்தை உடையவனுமான அர்ஜுனா!
யத் ஞாத்வா       - எதை அறிந்தால்
அஸூபாத்           - துயரத்திலிருந்து
மோக்ஷயஸே   - விடுதலையடைவாயோ
குஹ்யதமம்       - மிகவும் உயர்ந்த ரகசியமானதும், மறைத்து போற்றத்தக்கதும்
விக்ஞான ஸஹிதம் -  இது விக்ஞானத்தோடு கூடிய, அபரோக்ஷமாக அறியக்கூடிய
இதம் ஞானம்      - இந்த அறிவை
தே ப்ரவக்ஷ்யாமி   - உனக்கு கூறுகிறேன்.

மற்றவர்களின் குறைகளை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.  ஏனென்றால் இந்த அறிவானது அவர்களிடம் எச்சரிக்கையாக நடந்து கொள்ள உதவி புரியும். ரகசியம் என்று இங்கே குறிப்பிடுவது மேன்மையானது, உயர்ந்தது, அறிந்து கொள்ள அரியது, எளிதில் கிடைக்காதது, புதிராக இருப்பது, கவனமாக கையாள வேண்டியது என்பதை உணர்த்துகிறது. எனவே தகுதியுடையவர்களுக்கு மட்டும் சொல்ல வேண்டும்.

அறிவானது பணத்தின் மூலமும், அறிவு பரிமற்றத்தின் மூலமும், சேவை செய்வதன் மூலமும் அடையலாம்.  ஆனால் இவைகளுக்குள் சேவை செய்து அடையும் அறிவே நிலைத்து நிற்கும். வேதாந்த அறிவினால்தான் இந்த அறிவை சரியாக புரிந்து கொள்ள முடியும்.  குஹ்யதமம் என்று சொல்வதனால் கேட்பவர் மனதானது நுண்ணியதாகும் அதனால் மனம் மிகவும் உன்னிப்பாக கவனிக்கும். 

ஞானம் என்பது பரோக்ஷமானது, வெறும் அறிவை மட்டும் குறிப்பது. விக்ஞானம் என்பது அடைந்த அறிவை அனுபவிக்கக்கூடியது.

रानविद्या राजगुह्यं पवित्रमिदमुत्तमम् ।
प्रत्यक्षावगमं धर्म्य सुसुखं कर्तुमव्ययम् ॥ 2 ॥
நாம் அடையும் அறிவுகளுக்கெல்லாம் தலையானதாக இருக்கிறது இந்த பரம்பொருளைப் பற்றிய அறிவு. எனவே இதை ராஜவித்யா என்று பகவான் அழைக்கிறார். இந்த அறிவானது என்றும் மாறாதது, இதை அடைந்தவுடன் மற்ற அனைத்து அறிவுகளும் பொய்யானது என்று நமக்கே தெரிய வரும். இது முழு மனநிறைவைக் கொடுக்கும், பாதுகாப்பைக் கொடுக்கும்.  மேலும் உத்தமமான பலனைக் கொடுக்கக்கூடியதாகும்.
ராஜ குஹ்யம் – ரகசியங்களிலே ராஜாவாக இருப்பது
ராஜ வித்3யா  - அறிவுகளுக்கெல்லாம் ராஜாவாக இருப்பது
பவித்ரம் இதம் உத்தமம் – மிகவும் உயர்ந்தது, புனிதமானது. மனதை தூய்மைபடுத்தும் சாதனங்களிலே மிகச்சிறந்தது. அகங்காரத்தை அடியோடு அழிக்கக்கூடியது. பாவ-புண்ணியங்களை நீக்கி சம்சாரத்திலிருந்து விடுவிக்கக்கூடியது.
ப்ரத்யக்ஷ அவகமம் – ஆத்மஞானத்தின் பலன் உயிரோடிருக்கும்போதே அனுபவிக்கக்கூடியது. இங்கேயே இப்போதே அனுபவிக்கக்கூடியது.
தர்ம்யம்    தர்மத்திற்குட்பட்டது
கர்தும் ஸுஸுக2ம் – கடைப்பிடிப்பதற்கு மிகவும் எளிதானது.
அவ்யயம்  - அழியாத பலனைக் கொடுக்கக்கூடியது.

மேற்கூறிய அனைத்தும் விக்ஞானத்துடன் கூடிய ஞானத்தின் பெருமைகளாக பகவான் கூறியிருக்கிறார்.

अश्रद्दधानाः पुरुषा धर्मस्यास्य प्रन्तप ।
अप्राप्य मां निवर्तन्ते मृतयुसंसारवर्त्मनि ॥ 3 ॥
சிரத்தையிருந்தால்தான் எந்தவொரு அறிவையும் அடைய முடியும்.  அறிவை அடைந்தவுடன் சிரத்தைக்கு அவசியமில்லை. ஒரு விஷயத்தில் சிரத்தை இல்லை என்றால் அதைப்பற்றிய அறிவை அடைய முடியாது.  சிரத்தை மூன்று விஷயத்தில் இருக்க வேண்டும். அவைகள் 1. ஞான ஸ்வரூபத்தில், 2. ஞான சாதனத்தில் (சாஸ்திரம், குரு), 3. ஞான பலனில் ஆகியவைகளாகும்.

பரந்தப - ஹே அர்ஜுனா!
அஸ்ய தர்மஸ்ய – இந்த தர்மத்தில் (ஞான ஸ்வருபம், சாதனம், பலன்)
அஶ்ரத்ததா4னா புருஷா – சிரத்தையற்ற மனிதர்கள்
அப்ராப்ய மாம் – என்னை (ஈஸ்வரனை) அடையாமல்
ம்ருத்யு ஸம்ஸார வர்தமனி நிவர்தந்தே – மரணத்துடன் கூடிய சம்சாரத்தில், துயரத்துடன் கூடிய சம்சாரத்தில் நிச்சயமாக சுழன்று கொண்டிருப்பார்கள்.  பகவானை அடையக்கூடிய சாதனத்தையே பயன்படுத்தமாட்டார்கள், அந்தப் பாதையையே அடையமாட்டார்கள்.

मया ततमिदं सर्वं जगदव्यक्तमूर्तिना ।
सत्स्थानि सर्वभुतानि न चाहं तेष्ववस्थितः ॥ 4 ॥ ***
பிரம்ம தத்துவத்தை மாயையுடன் சேர்த்துப் பார்த்தல், மாயையை நீக்கிப் பார்த்தல் என்று இருவகையாக ஈஸ்வரனை அறியலாம். இதில் நிர்குணமான, மாயை நீங்கிய ஈஸ்வரனை உபதேசிக்கின்றார்.

இதம் ஸர்வம் ஜகத் - தோன்றிக் கொண்டிருக்கின்ற இந்த உலகத்திலுள்ள அனைத்தும்
அவ்யக்த மூர்தினா - வெளிதோற்றத்திற்கு வராத ஸ்வரூபமாக இருக்கின்ற அனைத்தும்
மயா ததம்                    - என்னால் வியாபிக்கப்பட்டுள்ளது.
மத்ஸ்தானி ஸர்வ பூதானி - உலகத்திலுள்ள அனைத்தும் என்னிடத்தில் இருக்கின்றது.
ந ச அஹம் தேஷு அவஸ்தி2த: - நான் (ஈஸ்வரன்) அவைகளை சார்ந்தில்லை. அதாவது நான் அவைகளிடத்தில் இல்லை

வெளித்தோற்றதிற்கு வராதவைகள் புலன்களால் கிரகிக்க முடியாது. இது ஸத், சித், ஆனந்த ஸ்வரூபமான பிரம்மத்தை குறிக்கின்றது, நிர்குண ஸ்வரூபத்தை குறிக்கிறது. இந்த உலகத்துக்கும், பிரம்ம ஸ்வரூபமான ஈஸ்வரனுக்குமிடையே உள்ள சம்பந்தத்தை உபதேசிக்கின்றார்.
தவறான கருத்துக்கள்
  • ஈஸ்வரன் படைப்பவர், உலகம் படைக்கப்பட்டவை. இருவரும் தனித்தனியாக இருக்கின்றது.  குயவன் பானையை உருவாக்குவது போல இறைவன் இந்த உலகத்திலுள்ள அனைத்தையும் உருவாக்குகின்றார். த்வைதிகள்தான் இந்த கருத்தை உடையவர்கள். இப்படி சொல்வதால் ஈஸ்வரன் பூர்ணமானவர் என்ற தன்மை பொய்யாகி விடும்
  • ஈஸ்வரன் ஒருவர்தான் அவரது உடலே இந்த உலகம் என்று விசிஷ்டாத்வைதிகள் கூறுகிறார்கள். அங்கத்தில் ஒரு குறை வந்தால் அதை உடைய அங்கியை பாதிக்கும்.  அதுபோல உலகதிலுள்ள குறைகள் ஈஸ்வரனை பாதிக்கும்.  உலகத்தில் ஏற்படும் மாற்றங்கள், ஈஸ்வரன் மாற்றங்களை உடையவர் என்று கருத தோன்றும். ஆனால் ஈஸ்வரனுடைய தன்மைக்கு இது வியாகாத தோஷமாகி விடும். அவயவங்கள் அற்றவர் என்ற கருத்துக்கும் விரோதமாக இருக்கின்றது.
  • ஈஸ்வரனே உலகம், இந்த உலகமே ஈஸ்வரன். இந்த உலகம் சத்யம் என்ற பொருளில் இவ்வாறு கூறுகிறார்கள். நிலையில்லாத, துயரங்களையுடைய இந்த உலகமானது ஈஸ்வரனாக இருக்க முடியாது.
அத்வைத சித்தாந்தம்
ஈஸ்வரனுக்கும் உலகத்துக்கும் உள்ள சம்பந்தமானது சத்ய-மித்யாவுக்கும் இடையே உள்ள சம்பந்தம் போன்றது. கயிற்றில் தோன்றும் பாம்பு மித்யா, கயிறு சத்யம். இதுவே சத்ய-மித்யா சம்பந்தம்.

न च मत्स्थानि भूतानि पश्य मे योगमैश्वरम् ।
भूतभृन्न च भूतस्थो ममात्मा भूतभावनः ॥ 5 ॥
களிமண்ணால் செய்யப்பட்ட பானையில் இருப்பது களிமண்தான் ஆனால் அதனுடன் நாம-ரூபம்தான் சேர்க்கப்பட்டிருக்கிறது.  காரணமான களிமண் சத்யம், நாம-ரூபம் மித்யா. பானை வஸ்துவல்ல, களிமண்தான் வஸ்து. எல்லா பானைகளும் களிமண் இடத்தில் இருக்கின்றது. ஆனால் களிமண் பானைகளிடத்தில் இல்லை.  களிமண் இருப்பதற்கு பானையை சார்ந்திருக்க வேண்டியதில்லை.  ஆனால் பானைகள் களிமண்ணைச் சார்ந்துதான் இருக்கின்றது.  எனவே பானையானது மித்யா என்று அழைக்கப்படுகின்றது.

ந ச மத்ஸ்தா2னி பூதானி – உலகத்திலுள்ள அனைத்துமே (உயிரினங்கள், பொருட்கள்) என்னிடத்தில் இருக்கின்றது.  இந்த உலகத்தில் படைக்கப்பட்ட அனைத்துமே என்னிடத்தில் இருக்கின்றது.
பஶ்ய மே யோக3ம் ஐஶ்வரம் – என்னுடைய யோக சக்தியை பார். ஈஸ்வரனான என்னுடைய மாயையின் செயலை பார்.
மம ஆத்மா பூதபா4வன:  - நானேதான் அனைத்து உயிரினங்களையும் படைப்பவனாக இருந்தாலும்
பூ4தப்4ருத் ச                            - அவைகளின் இருப்புக்கும் காரணமாக இருந்த போதிலும்
ந ச பூதஸ்த2ஹ                    - அவைகளில் நிலைப்பெற்று இருப்பதில்லை.

ஈஸ்வரன் என்ற அறிவால் இந்த ஜகத்தை மறைத்து விடு என்று சங்கரர் கூறியிருக்கின்றார்.  ஈஸாவாஸ்யம் இதம் ஸர்வம் என்ற சொற்றொடருக்கு விளக்கம் சொல்லும்போது இவ்வாறு கூறியிருக்கின்றார்.

यथाकशस्थितो नित्यं वायुः सर्वत्रगो महान् ।
तथा सर्वाणि भूतानि मत्स्थानीत्युपधारय ॥ 6 ॥
யதா மஹான் வாயு: ஸர்வத்ரக3ஹ – எங்கும் சஞ்சரிக்கின்ற பெருங்காற்று
நித்யம் ஆகாஶ ஸ்திதஹ – எப்பொழுதும் ஆகாசத்துக்குள் இருக்கின்றது என்றாலும் ஆகாசம் காற்றுடன் சங்கம் வைப்பதில்லை.
ததா ஸர்வாணி பூதானி – அதேபோல எல்லா உயிரினங்களும்
மத்ஸ்தானி – என்னிடத்தில் இருக்கின்றன இருந்தாலும் நான் அஸங்கமாகவே
             அவைகளிடத்தில் இருக்கின்றேன்.
இதி உபதா4ரயஹ – என்று மனதில் நன்கு அறிந்து கொள்.

சத்ய - மித்யா வஸ்துக்களுக்குமிடையே எந்தவித சம்பந்தமும் இருக்காது. சாலையில் தெரியும் கானல்நீருக்கும் சாலைக்கும் எந்த சம்பந்தமுமிருக்காது. இரண்டு பொருட்கள் ஒரே இடத்தில் இருந்தாலும் சம்பந்தம் ஏற்படாது.  இது கீழ்கண்ட நிலைகளில் ஏற்படும்.
  • அருவமான பொருளுடன் உருவமுற்ற பொருளுடன் சம்பந்தமிருக்காது. (உ-ம்) அருவமான ஆகாசத்திற்கும் அது வியாபித்திருக்கும் எந்தவொன்றுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இருக்காது. அதேபோல அருவமான பிரம்மத்திடம் உருவமுடைய ஜகத்திற்கும் எந்த சம்பந்தமும் ஏற்படாது.
  • சத்யமான பொருளுக்கும், மித்யாவான பொருளுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது.  சத்தியமான சாலைக்கும், அதில் தெரியும் மித்யாவான கானல்நீருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
நாம் அனுபவிக்கும் துயரமனைத்தும் ஏதாவது ஒன்றுடன் சங்கம் வைத்துக் கொள்வதால்தான் வருகின்றது.

सर्वभूतानि कौन्तेय प्रकृतिं यान्ति मामिकाम् ।
कल्पक्षये पुनस्तानि कल्पादौ विसृजाम्यहम् ॥ 7 ॥
விஶ்ருஜாம் – தோன்றுகின்றன அனைத்தும்
மாமிகாம் -  என்னையே
யாந்தி -  அடைகின்றன
ஹே அர்ஜுனா! எல்லா உயிரினங்களும் ப்ரக்ருதியை அடைகின்றன.  இந்த ப்ரகிருதியானது என்னைச் சார்ந்திருக்கின்றது.  இந்த நிலை கல்பத்தின் முடிவில் நடைபெறுகின்றது.  திரும்பவும் அதே உயிரினங்களை கல்பத்தின் துவக்கத்தில் நான் தோன்றச் செய்கின்றேன்

இந்த உலகத்துக்கு இரண்டு நிலைகள் உண்டு. ஒன்று இப்பொழுது நாம் பார்த்து அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலை அதாவது காரிய நிலை.  இரண்டாவது நிலை அவ்யக்தா அவஸ்தா அதாவது வெளித்தோற்றத்திற்கு வராத நிலை, காரண நிலை. இதுவே மாயா, ப்ரக்ருதி என்று அழைக்கப்படுகின்றது.  இது ஈஸ்வரனை சார்ந்து இருக்கிறது. மாயையிலிருந்து உலகம் தோன்றுகிறது, பிறகு ஒடுங்குகின்றது. இதுவே ஈஸ்வரனின் செயலாகும்..

प्रकृतिं स्वामवष्टभ्य विसृजामि पुनः पुनः ।
भूतग्राममिमं कृत्स्नमवशं प्रकृतेर्वशात् ॥ 8 ॥
ப்ர்க்ருதிம் -  ஜீவர்களுடைய கர்மபலன்களின் இருப்பிடம், தொகுப்பு
ஸ்வாமவஷ்டப்4ய – என்னுடைய பிரகிருதியை வசப்படுத்தி
க்ருத்ஸ்னம் அவஶம் – சுதந்திரமற்ற முக்குணத்தினால் வேறு வழியில்லாமல்
ப்ரக்ருதே வஶாத் – பிரகிருதியின் வசத்தில் இருக்கும்
பூதக்ராம்மிம் – இந்த ஜீவராசிகளனைத்தையும்
புன: புன:     - மீண்டும் மீண்டும்
விஸ்ருஜாமி - தோற்றுவிக்கின்றேன்
ஜீவர்கள் அவரவர்களுடைய குணநலன்களுக்கேற்ப, கர்மபலனுக்கேற்றவாறு படைக்கப்படுகின்றார்கள்.

न् च मां तानि कर्माणि निबध्नन्ति धनञ्जय ।
उदासीनवदासीनमसक्तं तेषु कर्मसु ॥ 9 ॥
தனஞ்ஜய - அர்ஜுனா!
உதாஸீனவத் ஆஸீனம் – உதாசீனனைப் போல் இருக்கின்ற .
மாம் - என்னை
தானி கர்மாணி - படைத்தல், காத்தல், அழித்தல்  போன்ற செயல்கள்
நிப3த்4னந்தி – பந்தப்படுவதில்லை
அஸக்தம் தேஷு கர்மஸு – அந்த செயல்களில் பற்றில்லாமல் இருக்கின்ற 
மாம் - என்னை
நிப3த்4னந்தி – பந்தப்படுவதில்லை

ஹே அர்ஜுனா! தோற்றுவித்தல், பாதுகாத்தல், எடுத்துக் கொள்ளுதல்  போன்ற செயல்களை செய்தாலும் அதனால் நான் பந்தப்படுவதில்லை.

ஈஸ்வரன் இயல்பாகவே முக்தனாக இருக்கின்றார். இந்த நிலையை நாம் கடின முயற்சி செய்துதான் அடைய வேண்டும்.  இவர் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய செயல்களை செய்யும் கர்த்தாவாக இருந்தாலும் பந்தப்படாமல் இருக்கிறார். அதுபோல ஜீவனும் செயல்களை செய்து கொண்டிருந்தாலும் பந்தப்படாமல் இருக்கலாம் என்று குறிப்பால் உணர்த்தியிருக்கிறார்.

मयाध्यक्षेण प्रकृतिः सूयते सचराचरम् ।
हेतुनानेन कौन्तेय जगद्विपरिवर्तते ॥ 10 ॥
கௌந்தேய  - ஹே குந்தியில் மைந்தனே!
மயா – சைதன்ய ஸ்வரூபமான, ஸத் ஸ்வரூபமான, சாக்ஷி ஸ்வரூபமான  என்னுடைய
அத்4யக்ஷேண – மேற்பார்வையினால், கண்காணிப்பால்
ப்ரக்ருதி; ஸூயதே ஸசராசரம் – மாயையானது அசைகின்ற, அசையாதவைகளுடன் கூடிய இந்த உலகமனைத்தையும் தோற்றுவிக்கிறது
ஹேதுனானேன – இந்த காரணத்தால்
ஜகத் விபரிவர்த்தே – இந்த உலகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஜகத்தை படைப்பது என்ற காரியத்திற்காக நான் என்னுடைய ப்ரக்ருதிக்கு இருப்பையும், உணர்வையும் ஊட்டுகின்ற தலைவனாக இருக்கிறேன். என்னுடைய தலைமையின் மூலம் ஊக்கம் பெற்று அவைகள் படைப்பு முதலான எல்லா செயல்களையும் செய்து கொண்டிருக்கிறது.

अवजानन्ति मां मूढा मनुषीं तनुमाश्रितम् ।
परं भावमजानन्तो मम भूतमहेश्वरं ॥ 11  ॥
அவஜானந்தி மாம் மூடா4 – ஈஸ்வர ஸ்வரூபமான, பிரம்ம ஸ்வரூபமான என்னை அறிவிலிகள் அவமதிக்கிறார்கள்.
மானுஷீம் தனும் ஆஶ்ரிதம் – மனித உடலை தாங்கிக் கொண்டிருக்கும்
பரம் பா4வம் அஜானந்தஹ மம – என்னுடைய மேலான, பிரம்ம ஸ்வரூபத்தை அறியாதவர்கள்
பூ4த மஹேஶ்வரம் – உயிரினங்களுக்கெல்லாம் தலைவனாக இருக்கின்றேன் என்பதை அறியாதவர்கள்

இறைவன் இருப்பதையே ஏற்றுக் கொள்ளாத நிலையையே அவரை அவமதிப்பதற்கு சமமாகிறது.  பலனை வேண்டி கிடைக்காமல் போனாலும் அவரை நிந்திக்கிறார்கள். தனக்கு பிடித்த நாம ரூபத்துடன் கூடிய தேவதையை மட்டும்தான் இறைவன் என்று நினைத்துக் கொண்டு மற்ற நாம-ரூப தேவதைகளை அவமதிக்கிறார்கள்

அவதாரம் என்பது தர்மத்தை காப்பாற்றுவதற்கும், பக்தர்களுக்கு காட்சியளிக்கவும், அனுகிரஹம் செய்வதற்காகவும் நிகழ்கின்றது.

मोघाशा मोघकर्माणो मोघज्ञाना विचेतसः ।
राक्षसीमासुरीं चैव प्रकृतिं मोहिनीं श्रिताः ॥ 12 
இதில் சம்சாரியை வர்ணிக்கிறார்.  பக்தியுள்ளவர்களையும், பக்தியற்றவர்களையும் இதில் வர்ணிக்கிறார்.

மோகா4ஶா – பயனற்ற எதிர்பார்ப்புக்கள், பயனற்ற ஆசையுடையவர்கள்
மோக4கர்மாணஹ – பயனற்ற செயல்களை செய்பவர்கள், செய்கின்ற செயல்கள் அனைத்தும் பயனற்றதாக விடும்
மோக4ஞானா – பயனற்ற அறிவை உடையவர்களாக இருப்பார்கள்
விசேதஸஹ – தர்ம-அதர்ம அறிவும், சத்யம்-மித்யா அறிவும் இல்லாதவர்கள்
ராக்ஷஸீம் ஆஸுரீம் ச ஏவ ப்ரக்ருதிம் – ராட்சர்களுடைய, அரக்கர்களுடைய இயல்பை உடையவர்களாக மட்டும் இருப்பார்கள்
மோஹினீம் ஶ்ரிதா: - புத்தியை மயக்குகின்ற, மோகத்திற்கு வசப்பட்டு அதன்படி செயல்களை செய்து கொண்டிருப்பார்கள்

महात्मानस्तु मां पार्थ दैवीं प्रकृतिमाश्रिताः ।
भजन्त्यनन्यमनसो ज्ञात्वा भूतादिमव्ययम् ॥ 13 ॥
பார்த2                ஹே அர்ஜுனா!
மஹாத்மான:  தூய்மையான மனதை உடையவர்கள் ( பல பிறவிகளில் செய்த  நல்ல செயல்களால் இந்த மனதை அடைந்தவர்கள் )
மாம் பஜந்தி   என்னை வழிபடுகிறார்கள்நாடுகிறார்கள்
அனன்யமனஸ: இவர்கள் ஈஸ்வரனைத் தவிர வேறெதிலும் மனதை செலுத்தாதவர்கள். இந்த உலகமே ஈஸ்வரனாக பாவிக்கும் மனதை உடையவர்கள்

தைவீம் ப்ரக்ருதிம் ஆஶ்ரிதா:-     தெய்வீகத்தன்மையை பின்பற்றுகிறார்கள். இவர்கள் சத்துவ குணத்தை சார்ந்து இருக்கிறார்கள். மனக்கட்டுப்பாடுபுலனடக்கம் உடையவர்களாக     இருப்பார்கள்.
ஞாத்வா பூதாதி3ம் அவ்யயம் - என்னை அனைத்திற்கும் காரணமென்றும்அழிவற்ற தத்துவமாகவும் அறிந்து கொண்டவர்கள் இந்த பக்தர்கள்..

सततं कीर्तयन्तो मां यतन्तश्च दृढव्रता ।
नमस्यन्तश्च मां भक्त्या नित्ययुक्ता उपासते ॥ 14 ॥
இதில் பக்தர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
பக்தன் என்பவன் பகவான் பார்த்துக் கொள்வார் என்று எதையும் செய்யாமல் இருக்கக்கூடாது. அஹிம்சை, ஶம, த3ம ஆகியவைகளை விடாமுயற்சியுடன் பின்பற்றி கொண்டிருக்க வேண்டும். இப்படிபட்டவர்கள்தான் உண்மையான பக்தர்கள்.

ஞானி எதுவுமில்லாமல் அளவில்லாத ஆனந்தத்தை அனுபவித்துக் கொண்டிருப்பான். அவர் அவ்வாறு இருப்பதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும். அவனிடத்தில் இருப்பது ஆத்மஞானம், தன்னுடைய ஸ்வரூப ஞானதை அடைந்திருப்பதால்தான் இவ்வாறு இருக்க முடிகின்றது என்று சங்கரர் கூறியிருக்கிறார்.

யதந்தஹ ச        - முயற்சி செய்வார்கள்
த்ருத3 வ்ரதா:       - எடுத்துக் கொண்ட முயற்சியில் (நற்பண்புகளை அடைவதில்) உறுதியாக இருக்க வேண்டும்.  முயற்சியை எந்த நிலையிலும் கைவிடாதிருத்தல்
ஸததம் கீர்தயந்தஹ மாம் – எப்பொழுதும் என்னுடைய நாமங்களையும், பெருமைகளையும் கீர்த்தனம் செய்து கொண்டிருப்பவர்கள். பகவானுடைய குணங்களையும், பெருமைகளையும் கேட்டுக் கொண்டிருப்பவர்கள், சிந்தித்து கொண்டு இருப்பவர்கள்
நமஸ்யந்தஹ மாம் பக்தியா – என்னை பக்தியுடன் சரணடைந்தவர்கள், தாம் அடையும் அனைத்தையும், அனுபவிக்கும் அனைத்தையும், ஈஸ்வரனின் பிரசாதமாக ஏற்றுக் கொள்வார்கள்
நித்ய்யுக்தா: உபாஸதே – எப்பொழுது மனதில் சஞ்சலமின்றி வழிபடுகின்றார்கள். வேறெதிலும் நாட்டமில்லாமல் எப்பொழுதும் என்னிடத்தில் மனதை நிலைநிறுத்தி வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ज्ञानयज्ञेन चाप्यन्यॆ यजन्तो मामुपासते ।
एकत्वेन पृथाक्त्वेन बहुधा विश्वतोमुखम् ॥ 15 ॥
இதில் பக்தர்கள் இறைவனை வழிபடும் முறையை பகவான் கூறியிருக்கிறார்
ஞானயக்ஞேன ச அபி அன்யே மாம் யஜந்தஹ – சிலர் ஆத்மஞானமாக என்னை வழிபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.  ஞானயோகத்தினல் இறைவனை தியானித்துக் கொண்டிருப்பவரை இங்கு குறிப்பிடுகின்றார்.
ப்ருதக்த்வேன – சிலர் தன்னிடத்திலும் வேறாக எண்ணி வழிபடுகிறார்கள்.  தான் வேறு, ஈஸ்வரன் வேறு என்ற வேற்றுமையுடன் வழிபடுகிறார்கள். இதையே இஷ்ட தேவதை பக்தி என்று கூறுகிறார்.
ஏகத்வேன – சிலர் ஈஸ்வரன் ஒருவர்தான் என்ற அறிவுடன் பக்தி செலுத்தி கொண்டு இருப்பார்கள்.  எல்லா தேவதா ரூபமாக இருப்பவர்தான் ஈஸ்வரன்தான் என்ற அறிவுடன் இருக்கும் பக்தர்கள், தானும் ஈஸ்வரனும் ஒன்றுதான் என்று எண்ணிக் கொண்டு பக்தி செலுத்துபவர்கள்.
பஹூதா – விதவிதமான் நிலைகளில்
விஶ்வதோமுகம் – உலகத்திலுள்ள அனைத்துமாக ஈஸ்வரன் இருக்கின்றார் என்ற உணர்வுடன் வழிபடுகிறார்கள். ஈஸ்வரன் இந்த உலகத்திற்கு உபாதான காரணமாக இருப்பதிலிருந்து அவரால் தோற்றுவிக்கபட்ட அனைத்திலும் ஈஸ்வரன் இருக்கிறார் என்று வழிபடுகிறார்கள்.

अहं क्रतुरहं यज्ञः स्वधाहमहमौषधम् ।
मन्त्रो हमहमेवाज्यमहमग्निरहं हुतं ॥ 16 ॥
அஹம் க்ரதுரஹம் -  நானே வேதத்தில் சொல்லப்பட்ட கர்மங்கள் - ஶ்ரௌத கர்மம்
யக்ஞஹ – ஸ்ம்ருதியில் சொல்லப்பட்ட கர்மங்களும் நானே – ஸ்மார்த்த கர்மம்
ஸ்வதா4 – யாகத்தில் பித்ருக்களுக்கு கொடுக்கின்ற அன்னமாக இருப்பவனும் நானே
ஔஷத4ம் – நானே நாம் உட்கொள்ளும் உணவுப்பொருட்களாகவும், மருந்தாகவும், மூலிகைகளாகவும் இருக்கின்றேன்
மந்த்ரஹ அஹம் – தேவர்களை அழைக்கும் மந்திரங்கள், யாகத்தில் ஓதப்படும் மந்திரங்கள் ஆகியவைகளாகவும்
ஆஜ்யம் அஹம் - நெய்யாகவும்
அக்னி அஹம் -  நெருப்பாகவும்
ஹுதம் அஹம் - யாகமாகவும் நான் இருக்கிறேன்.

पिताहमस्य जगतो माता धाता पितामहः ।
वेद्यं पवित्रमोंकार ऋक्शाम यजुरेव च ॥ 17 ॥
இந்த உலகத்துக்கு நானே தந்தையாகவும், தாயாகவும், தாத்தாவாகவும், ஜீவர்களுக்கு கர்மபலனை கொடுப்பவனாகவும், அறியத்தக்கவனாகவும், பரபிரஹ்ம ஸ்வரூபமாக அறியக்கூடியவனாகவும், தூய்மைபடுத்தும் பொருளாகவும், ஓங்கார ஸ்வரூபமாகவும், சகுண, நிர்குண பிரஹ்ம்மாகவும் இருக்கின்றேன். மேலும் ரிக், ஸாம, யஹுர் வேதங்களாகவும் இருக்கின்றேன்

गतिर्भर्ताप्रभुः साक्षी निवासः शरणं सुह्र्त् ।
पभवः प्रलयः स्थानं निधानं बीजमव्ययं ॥ 18 ॥
கதி:          - அடையத்தக்கவனாகவும், மோக்ஷ லட்சியமாகவும்
ப4ர்தா:       - அனைவரையும் பாதுகாப்பவனாகவும்
ப்ரபு:         - எல்லோருக்கும் தலைவனாகவும்
ஸாக்ஷீ      - அனைத்து ஜீவராசிகளையும் பார்த்துக் கொண்டிருப்பவனாகவும்
நிவாஸ:     - அனைத்து ஜீவராசிகளுடைய இருப்பிடமாகவும்
ஶரணம்     - துயரத்தை போக்குபவனாகவும்
ஸுஹ்ருத்   - நண்பனாகவும், நன்மையே செய்யக்கூடியவனாகவும்
ப்ரப4வ: ப்ரலய: - அகில உலகத்தையும் தோற்றுவிப்பவனாகவும், ஒடுங்குவதற்கு காரணமாகவும்
ஸ்தா2னம்   - நிலையாக தங்குமிடமாகவும்
நிதா4னம்    - பாதுகாப்பான இடமாகவும், எல்லோருடைய கர்மபலன்களும் பாதுகாப்பாக இருக்குமிடமாகவும்
அவ்யயம் பீஜம் – அழிவில்லாத விதையாகவும்

ஆகியவைகளாக நான் இருப்பதாக அறிந்து கொள்.

तपाम्यहमहं वर्ष निगृह्णाम्युत्सृजामि च ।
अमृतं चैव मृत्युश्च सदसच्चाहमर्जुन ॥ 19 ॥
அர்ஜுன – ஹே அர்ஜுனா!
தபாம் – சூரியனாக இருந்து கொண்டு சக்தியை கொடுத்து கொண்டிருப்பவனாகவும்
வர்ஷம் நித்3ருஹ்ணாம் - மழை பொழிய வைப்பவனாகவும்
உத்ஸ்ருஜாமி –, நிறுத்தி வைப்பவனாகவும்
அம்ருதம் ச ஏவ -  இறவாப் பெருநிலைக்கு காரணமாகவும்
ம்ருத்யம் ச – மரணமாகவும், மஹாகாலனாகவும்
ஸத் அஸத் ச அஹம் – ஸ்தூலமாகவும், சூட்சுமமாகவும் நானே இருக்கின்றேன்.
நான் வெளித்தோற்றத்திற்கு வந்தவைகளாகவும், வராதவைகளாகவும் இருக்கிறேன்.

त्रैविद्या मां सोमपाः पूतपापा यज्ञैरिष्ट्वा स्वर्गतिं प्रर्थयन्ते ।
ते पुण्यमासाद्य सुरेन्द्रलोकं अश्नन्ति दिव्यान्दिवि देवभोगान् ॥ 20 ॥
த்ரைவித்யா         மூன்று வேதங்களில்லுள்ள கர்ம காண்டத்தை மட்டும் அறிந்தவர்கள்
ஸோமபாஹா    யாகம் செய்பவர்கள், யாகத்தில் முடிவில் பிரசாதமாக சோம பானத்தை அருந்துபவர்கள்
பூதபாபா:                பாவங்கள் அகன்று தூய்மை அடைந்தவர்கள்

மாம் யக்ஞை இஷ்ட்வா –     தேவதா ரூபத்தில் இருக்கின்ற என்னை விதவிதமான யாகங்களினால் உபாசித்து வழிபடுகின்றவர்கள்
ஸ்வர்கதிம் ப்ரார்த2யந்தே – சொர்க்கலோகத்தை அடைவதை வேண்டுகின்ற
தே - இவர்கள்
ஸுரேந்த்ரலோகம் ஆஸாத்ய – சொர்க்கலோகத்தை அடைந்து
புண்யம் -  புண்ணியத்தில் பலனாக
திவி திவ்யான் தேவபோகான் – சொர்க்கதிலுள்ள தேவர்கள் அனுபவிக்கும்  போகத்தை
அஶ்னந்தி - அனுபவிக்கின்றார்கள்

ते तं भुक्त्वा स्वर्गलोकं विशालं शिणे पुन्ये मर्त्यलोकं विशन्ति ।
एवं त्रयीधर्ममनुप्रपन्ना गतागतं कामकामा लभन्ते ॥ 21 ॥
தே தம் புக்த்வா ஸ்வர்கலோகம் விஶாலம்-  அவர்கள் பரந்து விரிந்திருக்கும் அந்த சொர்க்க லோகத்தை அடைந்து போகங்களை அனுபவித்துவிட்டு புண்ணியம் தீர்ந்தவுடன் 
மர்த்யலோகம் – மரணத்தை தரக்கூடிய பூலோகத்தை
விஶந்தி - அடைகிறார்கள்
ஏவம் த்ரயீதர்மம் அனுப்ரபன்னா – இவ்வாறு மூன்று வேதங்களின் கர்ம காண்டத்தை மட்டும் பின்பற்றுபவர்கள்
காமகாம: – இன்பம் தரூம் பொருட்களில் பற்றுடையவர்கள்
கதாகதம் – மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து சம்சார கதியை
லபந்தே -  அடைகிறார்கள்

अनन्याश्चिन्तयन्तो मां ये जनाः पर्युपासते ।
तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम् ॥ 22 ॥
நிஷ்காம பக்தர்களின் லட்சணத்தைக் கூறிவிட்டு இத்தகைய பக்தர்களுக்கு ஒரு உறுதிமொழியையும் கொடுக்கிறார்
அனன்யாஹ – என்னை வேறாக கருதாத நிஷ்காம பக்தர்கள்
மாம் சிந்தயந்தஹ -  என்னையே மனதில் நினைத்துக் கொண்டிருப்பவர்கள்
யே ஜனா: - இவ்வாறு எந்த மனிதர்கள்
பர்யுபாஸதே – என்னை வழிபடுகிறார்களோ
தேஷாம் -  அவர்களுக்கு
நித்யா அபியுக்தானாம் – எப்பொழுதும் என்மீது உறுதியான பக்தி செலுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு
யோகக்ஷேமம் – வாழ்க்கைக்கு தேவையானதை கொடுத்தும், கொடுத்ததை காப்பாற்றுவேன்
வஹாம்யஹம் – என்ற உறுதியை வழங்குகின்றேன்

விசாரம்
அனன்யஹ – ஈஸ்வரனை அடைவதை தவிர வேறெதிலும் நாட்டமில்லாதவர்கள், வேறெந்த லட்சியமும் இல்லாதவர்கள். இறைவனை அடைவதுதான் ஒரே குறிக்கோளாகவும், இலட்சியமாகவும் கொண்டவர்கள்.  எதை அடைந்தாலும் அவைகளை அவரை அடையும் சாதனமாக எடுத்துக் கொள்ளும் பக்தர்கள்.  இந்த பக்தர்களுக்கு ஈஸ்வரனே சாதனா-சாத்தியமாகவும் இருக்கின்றார்.  அத்வைத ஞானத்தை உடையவர்கள். சாதகன், சாதனம், சாத்தியம் ஆகிய மூன்றும் ஒன்றுதான் என்று கருதுபவர்கள்.  தான் அடையப்போகும் ஈஸ்வரன் தனக்கு வேறாக இல்லை என்று உறுதியாக நினைப்பவர்கள்.
மாம் சிந்தயந்தஹ – அவர்கள் காலம் முழுவதும் ஈஸ்வரனை அடைவதற்கு மட்டும் செலவழிப்பவர்கள்.
பர்யுபாஸதே – அனைத்திலும் ஈஸ்வரனையே காண்பவர்கள்
யோகக்ஷேமம் – தான் வாழ்வதற்கு தேவையான பொருட்களையும் கொடுத்து அதை காப்பாற்றுவேன். ஏனென்றால் இந்த பக்தர்கள் காலம், மனம் எல்லாமும் இறை சிந்தனையுடன் இருப்பதால், அடிப்படை தேவையான பொருட்களை ஈட்டுவதில் காலத்தை செலவிடமாட்டார்கள்.
யோகம் – ஆத்மஞானம்; க்ஷேமம் – ஞானநிஷ்டை
நிஷ்காம பக்தர்களுக்கு பிரஹ்ம ஞானத்தையும் கொடுத்து அதில் நிலைபெற்றிடவும் உதவுகின்றேன்.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது இறைவனிடம் நிபந்தனையற்ற நம்பிக்கை வைக்க வேண்டும். நம்பிக்கைக்குரியவரை நம்பாமல் அவரை இழந்துவிட்டால் அதனால் வரும் துயரம், நஷ்டம் மிகப்பெரியதாக இருக்கும். இந்த நம்பிக்கை நமக்கு வரவேண்டுமென்றால், மற்றவர்களுடைய நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்க வேண்டும்.  பகவானுடைய வார்த்தைகளான வேதாந்தத்தையும், பகவத்கீதையையும் முழுமையாக நம்ப வேண்டும்.

येऽप्यन्यदेवताभक्ता यजन्ते श्रद्धयान्विताः ।
तेऽपि मामेव कौन्तेय यजन्त्यविधिपूर्वकम् ॥ 23 ॥
தேவர்களும் ஜீவர்கள்தான். முன் ஜென்மத்தில் சம்பாதித்த அதிக புண்ணியத்தினால் இவ்வாறு பிறந்திருக்கிறார்கள்.  இவர்கள் அதிக சக்திகள் உடையவர்களாக இருக்கிறார்கள்.  இவர்களும் ஈஸ்வரன் கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கின்றார்கள்.  அவர்களிடம் இருக்கும் சக்திகளும் ஈஸ்வரனுடையதே.

யே அப்யன்யதேவதா ப4க்தா - ஹே அர்ஜுனா! சிலர் விதவிதமான தேவதைகள் மீது பக்தி கொண்டிருப்பார்கள்.
யஜந்தே – அந்த தேவதைகளை நம்பிக்கையுடன் வழிபடுகின்றார்கள்
ஶரத்தயா அன்விதா: அபி – அந்த தேவதைகளிடம் முழுநம்பிக்கை உடையவர்களாக இருப்பார்கள்
தே பி மாம் ஏவ யஜந்தி – அவர்களும் ஈஸ்வரனாக இருக்கின்ற என்னையே வழிபடுகிறார்கள்
அவிதி4 பூர்வகம் – இந்த அறிவில்லாதவர்களாக மற்ற தேவதைகளை  வழிபடுகிறார்கள்

अहं हि सर्वयज्ञानां भोक्ता च प्रभुरेव च ।
न तु ममभिजानन्ति तत्त्वेनातश्च्यवन्ति ते ॥ 24 ॥
ஈஸ்வரனாகிய நான் அனைத்து யாகங்களுக்கும், பூஜைகளுக்கும் உரிய பலனை அனுபவிப்பவனாகவும், தலைவனாகவும் இருக்கின்றேன்.
ந து மாம் அபி ஜானந்தி தத்வேன – ஆனால் மக்கள் என்னை ஈஸ்வர தத்துவ ரீதியாக அறிவதில்லை
அத: தே ஶ்ச்யவந்தி – ஆகையால் அவர்கள் மோக்ஷத்தை அடையாமல் வீழ்ச்சி அடைகிறார்கள்

यान्ति देवव्रता देवन्पितॄन्यान्ति पितृव्रताः ।
भूतानि यान्ति भूतेज्या यान्ति मद्याजिनोऽपि माम् ॥ 25 ॥
நாம் செய்யும் பூஜையினால் அடையும் பலனானது நம்முடைய சங்கல்பத்தின் அடிப்படையில்தான் அமைகின்றது.
தேவர்களை பூஜிப்பவர்கள் தேவர்களை அடைகிறார்கள்.  தேவலோக போகத்தை அனுபவிக்க வேண்டி இவ்வாறு பூஜிப்பார்கள்.  பித்ருக்களை பூஜிப்பவர்கள் பித்ருக்களையும், பூதங்களை, சிறு சிறு துஷ்ட தேவதைகளை வழிபடுபவர்கள் அவைகளையே அடைவார்கள். என்னை அடையவேண்டும் என்று வழிபடுபவர்கள் என்னையே அடைகிறார்கள்.

पत्रं पुष्पं फलं योयं यो मे भक्त्या प्रयच्छति ।
तदहं भक्त्युपह्र्तमश्नामि प्रयतात्मनः ॥ 26 ॥
ப்ரயதாத்மன: -  தூய்மையான மனதுடன்
அஶ்னாமி – ஏற்றுக் கொள்கிறேன். உட்கொள்கிறேன்

எவனொருவன் பக்தியோடு ஈஸ்வரனான எனக்கு இலை, மலர், பழம், நீர் முதலியவற்றை அர்ப்பணம் செய்கிறானோ, தூய்மையான மனதையுடைய பக்தனுடைய பக்தியுணர்வுடன் கொடுக்கப்பட்ட அவைகளை நான் ஏற்றுக் கொள்கிறேன்.  இதிலிருந்து பகவான் பக்தி என்ற மனோபாவத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றார் என்பதை புரிந்து கொள்ளலாம்.

நிஷ்காம பக்தி செலுத்துவது மிக எளிது, இதில் ப்ரத்யவாஹ தோஷம் வராது, அதாவது ஏதாவது தவறு செய்தாலும் அதனால் குறையொன்றும் வராது.  பக்திக்கு ஏதாவது அளவுகோல் இருக்கின்றதா என்று கேட்டால் இறைவனுக்காக நாம் செய்யும் தியாகம்தான் பக்தியின் அளவுகோலாக சொல்ல முடியும். இறைவனுக்கு அர்ப்பணம் செய்யும் அளவுதான் பக்தியின் அளவாக எடுத்துக் கொள்ளலாம்.  பக்திபாவனைதான் கோவிலுக்கு தவறாமல் செல்லுதல், பூஜை செய்தல், போன்ற செயல்கள் செய்யத் தூண்டுகிறது. எனவே இறைவனிடத்தில் நாம் கொண்டிருக்கும் மனோபாவம்தான் பக்தி என்று சொல்லப்படுகிறது.  இறைவனுக்காக செய்யும் செயல்கள் நமக்கு அவர் மீது பக்தியை வளர்க்கும்.

यत्करोषि यदश्नासि युज्जुहोषि ददासि यत् ।
यत्तपस्यसि कौन्तेय तत्कुरुष्व मदर्पणम् ॥ 27 ॥
கர்மயோகிதான் பக்தனாக இருக்க முடியும். பக்தன்தான் கர்மயோகியாக இருக்க முடியும்.
ஹே அர்ஜுனா! எவையெல்லாம் செய்கிறாயோ, எதையெல்லாம் சாப்பிடுகிறாயோ, எந்தெந்த யாகங்களை செய்கின்றாயோ, எதையெல்லாம் மற்றவர்களுக்கு தானமாக கொடுக்கின்றாயோ, எந்தெந்த தவங்களை செய்கின்றாயோ அவைகளனைத்தையும் எனக்கு அர்ப்பணம் செய்துவிடு.

செய்கின்ற செயல்களனைத்தையும் இறைவழிபாடாக செய்யவேண்டும். இயல்பாக நாம் என்னென்ன செய்கின்றோமோ அதனால் வருகின்ற பலன்களை, சாஸ்திரம் சொன்னபடி கர்மங்களை செய்வதனால் வருகின்ற பலன்களை, தர்மத்திற்குட்பட்ட செய்லகளினால் வரும் பலன்களை பகவானுக்கு அர்ப்பணம் செய்து விட வேண்டும். சாதாரணமாக சாப்பிடும் உணவை விட கோயில்களில் பிரசாதமாக கிடைக்கும் உணவை பயபக்தியுடன் சாப்பிடுவோம்.

பகவானுக்கு அர்ப்பணம் செய்வதிலே திருப்தியை அடைய வேண்டும்.  என்னுடையது என்பதை தியாகம் செய்திட வேண்டும்.  இறைவனுக்கு அர்ப்பணம் செய்யும் பொருட்கள் அனைத்தும் இறைவனுடையது, என்னுடையதல்ல என்ற மனபாவத்தோடு செய்ய வேண்டும்.  நம்மிடத்திருக்கும் அனைத்தும் இறைவனுடயது என்றும் அவைகள் நாம் பயன்படுத்துவதற்காக கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற புத்தியுடன் இருக்க வேண்டும்.

शुभाशुभफलैरेवं मोक्ष्यसे कर्मबन्धनैः ।
संन्यासयोगयुक्तात्मा विमुक्तो मामुपैष्यसि ॥ 28 ॥
ஶுபம் அஶுபம் – விரும்புவது, விரும்பாதது
கர்மபந்த4னை:  - பாவ-புண்ணியங்கள்
பலைரேவம் மோக்ஷ்யஸே  -  இவைகளிலிருந்து விடுதலை அடைவாயாக.  மோக்ஷத்தை அடைவாயாக. 
இவைகளை எனக்கு அர்ப்பணம் செய்து செயல்களை செய்யும்போது இந்நிலையை அடைவாய்
மாம் உபைஷ்யஸி – நிர்குண ரூபமான பிரம்மத்தை அடைவாய்
ஸந்யாஸ யோக யுக்தாத்மா – கர்மபந்தத்திலிருந்து விடுதலையடையப் போகும் சாதகன்,  இப்படிபட்ட மனதுடன் கூடியவன், சந்நியாசத்துடனும், யோகத்துடனும் பொருந்திய மனதையுடையவன்.  
விமுக்தோ – இத்தகைய சாதகன் உயிரோடு இருக்கும்போது முக்தியை அடைகின்றான்.  மனநிறைவை அடைகின்றான்.
சந்நியாசம் என்றால் விட்டுவிடுதல் என்றும், யோகம் என்றால் செய்தல் என்றும் அர்த்தம் கொள்ள வேண்டும் . கர்மயோகி சங்கல்பத்தை சந்நியாசம் செய்கின்றான். பக்தன் என்னுடையது என்பதை தியாகம் செய்கின்றான்.  சந்நியாஸி அகங்காரத்தை விட்டுவிடுகிறான்.  யோகம் என்பது ஈஸ்வரனுக்காக செயல் செய்வதாகும். சந்நியாஸம் என்பது என்னுடையது என்பதை தியாகம் செய்வதாகும்.

समोऽहं सर्वभूतेषु न मे द्वेष्योऽस्ति न प्रियः ।
ये भजन्ति तु मां भक्त्या मयि ते तेषु चाप्यहम् ॥ 29 ॥
ஸமோஹம் ஸர்வபூதேஷு – எல்லா ஜீவராசிகளையும் நான் சமமாக பாவிக்கின்றேன்.
ந மே த்வேஷ்யோ அஸ்தி – என்னுடைய வெறுப்புக்குரியவன் யாருமில்லை.
ந ப்ரியஹ - விருப்பத்திற்குரியவனும் யாருமில்லை
யே பஜந்தி து மாம் பக்த்யா – யார் என்னை பக்தியுடன் வழிபடுகின்றார்களோ
தே மயி – அவர்கள் என்னிடத்தில் இருக்கிறார்கள்
தே ச அபி மாம் – அவர்களிடத்தில் நான் இருக்கிறேன்.
யார் எந்த மனபாவத்தோடு என்னை அணுகுகிறார்களோ, பக்தி செலுத்துகிறார்களோ அவர்களுடைய தகுதிகேற்ப பலனை கொடுக்கிறேன்.
மயிதே தேஷு சாப்யஹம் – என்னைப் பற்றிய உண்மையை அறிந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய மனம் முழுவதும் நான்தான் நிறைந்திருப்பேன். இந்த உலகத்திலுள்ள எதை பார்த்தாலும் அதில் என்னையே பார்ப்பார்கள்.

अपि चेत्सुदुराचारो भजते मामनन्यभाक् ।
साधुरेव स मन्तव्यः सम्यग्व्यवसितो हि सः ॥ 30 ॥
நிஷ்காம பக்திதான் ஞானத்தை கொடுக்கும் இந்த ஞானத்தினால் மனம் தூய்மை அடைகிறது.
அபி ச ஸ்துராசாரஹ – மிகக்கீழான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தாலும் கூட
அனன்யபாக் – வேறெதையும் நாடாமல், வேண்டாமல்
மாம் பஜதே – என்னை ஒருவன் வழிப்பட்டால்
ஸாது4ரேவ ஸ மந்தவ்ய – அவனே உயர்ந்தவனாக கருதப்படுகிறான்
ஸஹ - அவன்
ஸம்யக் வ்யவஸித – இப்போது சரியான பாதைக்கு வந்திருக்கின்றான்.

क्षिप्रं भवति धर्मात्मा शश्चच्छान्तिं निगच्छति ।
कौन्तेय प्रतिजानीहि न मे भक्तः प्रणश्यति ॥ 31 ॥
மேலே கூறிய பக்தன் விரைவிலேயே தர்ம வழியை கடைப்பிடிப்பவனாகிறான்.  அதனால் நிலையான மன அமைதியை அடைகின்றான்.  ஹே அர்ஜுனா! என்னுடைய பக்தன் அழிவதில்லை என்று எடுத்துரைப்பாயாக.  பகவானை முழுமையாக நம்பி அவரது உபதேசப்படி வாழ்பவன்தான் உண்மையான மேற்கூறிய பக்தன்.  இத்தகைய பக்தன் அழிவதில்லை, வீழ்வதுமில்லை. ஆன்மீக வளர்ச்சியில் இருந்து விழுந்துவிடமாட்டான்.

मां हि पार्थ व्यपश्रित्य येऽपि स्युः पपयोनयः ।
स्त्रियो चैश्यास्तथा शूद्रास्तेऽपि यान्ति परां गतिम् ॥ 32 ॥
ஹே அர்ஜுனா! என்னை சரணமடையாதவர்கள் யாராக இருந்தாலும் அதர்மத்துடன் வாழ்பவர்கள். என்னைச சரணமடைந்தவர்கள் பாவச் செயலை செய்பவர்களாக இருந்தாலும், பெண்கள், வைசியர்கள், அவ்வாறே ஶுத்ரர்கள் போன்றவர்களாக இருந்தாலும் அவர்கள் அனைவரும் மேலான மோட்சத்தை அடைகிறார்கள்.

किं पुनर्ब्राह्मणाः पुण्या भक्ता राजर्ष्यस्तथा ।
अनित्यमसुखं लोकमिमं प्राप्य भजस्व माम् ॥ 33 ॥
புண்ணியத்தை செய்தவர்களான பிராமணர்களும் அவ்வாறே பக்தர்களான ராஜரிஷிகளும் என்னை சரணடைந்து பரமகதியான மோட்சத்தை அடைகிறார்கள்.  இந்த உலகம் நிலையற்றது, துயரத்தைக் கொடுக்க கூடியது. இந்த உலகத்தில் மனித உடலையடைந்த நீ என்னை வழிப்படுவாயாக!

मन्मना भव मद्भक्तो मद्याजी मां नमस्कुरु ।
मामेवैष्यसि युत्तवैवमत्मानं मत्परायणः ॥ 34 ॥
மத்பராயணஹ – என்னையே வாழ்க்கையில் அடையக்கூடிய இறுதி லட்சியமாக கொண்டிருப்பாயாக.  ஈஸ்வரனை அடைவதே ஒரே லட்சியமாக கொண்டிரு.
மன்மனாஹா – என்னிடத்திலே மனதை வைத்தவனாக இரு.
மத்பக்தஹ – என்னுடைய  பக்தனாக இரு. ஈஸ்வரபக்தனாக இரு.
மத்3யாஜீ – அனைத்து யாகங்களையும், கடமைகளையும் எனக்காக மட்டும் செய்து கொண்டிரு.
மாம் நமஸ்குரு – என்னையே வணங்க வேண்டும்.
மாமேவைஷ்யஸி யுத்தவைவமத்மானம் உன்னுடைய ஆத்மாவாக இருக்கின்ற என்னிடம் இவ்விதம் உன்னைப் பொருத்திக் கொண்டால் என்னையே அடைவாய்.

தொகுப்புரை
இதில் ஈஸ்வர ஸ்வரூபத்தையும், பக்தி, ஈஸ்வர அனுக்கிரகம் என்ற மூன்று கருத்துக்கள் வெவ்வேறு விதத்தில் கூறப்பட்டுள்ளது
01-03     ஞானத்தின் மகிமை, ஞான சாதனம், ஞானப்பலன் இவைகள் கூறப்பட்டுள்ளது இந்த ஞானாமானது ராஜ வித்யா என்றும், ராஜ குஹ்யம் என்றும் பகவான் கூறி இருக்கிறார்.  மற்ற அறிவை விட இது மிகவும் மேலானது. ராஜ குஹ்யம் என்பது மிகப்பெரிய ரகசியம் என்று அர்த்தமாகிறது. இந்த ஞானத்தை அடைந்தவர்கள் உபதேசித்தாலும் இது ரகசியமாகவே இருக்கும். எனவே நாம் அதிக முயற்சியுடன்தான் இந்த அறிவை அடைய முடியும்.  ஞான சாதனமாக சிரத்தையை வலியுறுத்தினார்.  சாஸ்திரத்தின் உபதேசம் மீது முழு சிரத்தையில்லாமல் இந்த அறிவை அடைய முடியாது. ஞானப்பலனாக துயரத்துடன் கூடிய சம்சாரத்திலிருந்து விடுபடலாம்.
04-10     ஈஸ்வர ஸ்வரூபத்தை விளக்கியுள்ளார்.  1. ஶோபாதீக ஈஸ்வரன் ( மாயையுடன் கூடிய பிரம்மம்), 2. நிருபாதீக ஈஸ்வரன் – நிர்குண பிரம்மன். நிர்குணபிரம்மத்தின் அஸங்க ஸ்வரூபத்தை விளக்கியுள்ளார்.
11-12     சம்சார காரணத்தையும், சம்சாரியைப் பற்றியும் வர்ணித்துள்ளார். சம்சாரம் அறியாமையின் விளைவுதான்.
13-15    விதவிதமான பக்தியை பற்றி கூறியிருக்கிறார்.  ஏகபக்தி, அனேக பக்தி, அரூப பக்தி போன்ற பலவகையான பக்தியைப் பற்றி விளக்கியுள்ளார்
16-19    ஈஸ்வரனின் பெருமைகளைப் பேசினார்
20-21    சகாம பக்தன் அடையும் பலனையும், அவனுடைய நிலையையும் விளக்கியுள்ளார்.
22         நிஷ்காம பக்தர்களுக்கு பகவான் கொடுக்கும் உறுதிமொழி.  அவர்கள் வாழ்வதற்கு தேவையான பொருட்களை கொடுத்து அவைகளை நானே காப்பாற்றுகிறேன் என்பதாகும்.  ஞானத்தையும் அளித்து அதில் நிலைபெறவும் உதவுகின்றேன்.
23-25     அக்ஞானிகள் பக்தி செலுத்தும் விதத்தையும், அதனால் அவர்கள் அடையும் பலன்களையும் விளக்கியுள்ளார்.
26-27     நிஷ்காம பக்தியை எப்படி செலுத்துவது என்பதைப் பற்றி கூறியுள்ளார். பக்தியுடன் எதைக் கொடுத்தாலும் நான் ஏற்றுக் கொள்வேன். எல்லாவற்றையும் எனக்கு அர்ப்பணம் செய்வதும் ஒருவிதமான பக்தியே என்று கூறியுள்ளார்.
28          நிஷ்காம பக்தியின் பலன் ஜீவன் முக்தி, விதேஹ முக்தி
29          பக்தர்களிடத்தில் பகவான் எவ்வாறு நடந்து கொள்கிறார் என்று விளக்கியுள்ளார்
30-34     பக்தியின் பெருமையையும், பலனையும் கூறியுள்ளார்.  என் மீது பக்தி செலுத்துபவன் என்று அழிவதில்லை.  தர்மத்துடன் வாழ்பவர்களை தர்மமே பாதுகாக்கும்.  மோக்ஷத்தை அடைவதற்கு எந்த நியமங்கள் கிடையாது என்பதையும் கூறியுள்ளார்.  ஈஸ்வர ப்ராப்தி இறுதி பலனாக கூறி அத்தியாயத்தை முடித்துள்ளார்

ॐ तत्सदिति
----oooOOooo ---


A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...