எவ்வாறு விதவிதமான சித்திரங்கள் வரையப்பட்ட துணியில் நான்கு நிலைகள் காணப்படுகின்றனவோ, அதுபோல பரமாத்வை அறிந்து கொள்வதிலும் நான்கு நிலைகள் உண்டு. ஒரு வெள்ளை துணியில் சித்திரங்களை வரைவதற்கு நான்கு படிகள் உண்டு. அவைகளாவன,
2. அந்த துணியை படம் வரைவதற்கு ஏற்ற மாதிரி கெட்டியாக்க வேண்டும்
3. வரையவேண்டிய படங்களை வெளிப்புற உருவத்தை வரைந்து கொள்ள வேண்டும்.
இந்த நான்கு நிலைகளுக்குள் முதல்நிலை இயற்கையிலே சுத்தமாக இருப்பது தூய்மையானதாகும். அந்த துணியிலே கஞ்சியை பூசுவதனால் கெட்டியாகி விடுகிறது. பிறகு மையினால் கோடுகள் போட்டு வரையப்போகும் படங்கள் குறியிடப்படுகின்றன. இறுதியில் வர்ணங்களைப் பூசி நிறைவு செய்வதனால் வர்ணமிடப்படுகிறது.
1. பரமாத்மா இயல்பாக இருக்கும் நிலை சித் ஆகும்
2. மாயையோடு சேர்ந்து பார்க்கும் போது அந்தர்யாமி ஆகிறார்.
3. சூட்சும ஸ்ருஷ்டி என்ற காரணத்தால் ஹிரண்யகர்ப்பன் என்கின்ற ஸூத்ராத்மா என்று மாறுகிறார்.
4. ஸ்தூல ஸ்ருஷ்டி உருவானபோது விராட் ஆக மாறினார்.
பிரம்மதேவன் முதற்கொண்டு சிறு புல் வரையுள்ள எல்லா ஜீவராசிகளுடைய தேகங்கள் ஜடமாக இருந்தபோதிலும் பஞ்ச பூதங்களாக இருந்த போதிலும் மேலானதாகவும், கீழானதாகவும் என்று வேறுபடுத்திப் பார்க்கிறோம். வரையப்பட்ட படங்களில் மேலானது, கீழானது என்று வேறுபடுத்தி பார்க்கிறோம். வரைபடத்தில் காணப்படுகின்ற பிராணிகளிலும், மற்ற காட்சிகளிலும் பெரியது, சிறியது, அழகானது, அழகற்றது, மேலானது, கீழானது என்றெல்லாம் பலவிதமான ஏற்ற தாழ்வுகள் எவ்விதம் தெரியுமோ, அவ்விதம் உலகத்திலும் பலவிதமான ஏற்றத் தாழ்வுகள் காணப்படுகின்றன. பிராணிகளுக்குள் மிகவும் மேலானதாக பிரம்மாவும், மிகவும் கீழானதாக சிறுபுல், பூச்சிகளும் பார்க்கப்படுகிறது.
படத்தில் இருக்கின்ற மனிதர்கள் உடுத்தியிருக்கும் ஆடைகள் உண்மையானது போன்று வரையப்பட்டிருக்கும். இவைகளுக்கு ஆதாரமாய் இருப்பது வரைபட துணிதான். மனித உருவங்கள் உடுத்தி இருக்கின்ற விதவிதமான ஆடைகள் வர்ணம் கொண்டு தீட்டப்பட்டிருக்கிறது. இந்த வர்ணம் தீட்டப்பட்ட துணியானது அதற்கு ஆதாரமாக இருக்கின்ற துணியும் ஒன்றாக இருப்பது போல் பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் உள்ள துணியும், உண்மையான துணியையும் ஒன்றுசேர்த்துப் பார்த்து விடுகிறோம்.
துணியானது வரைபடத்திலுள்ள எல்லா இடத்திலும் வியாபித்து இருக்கின்றது. ஆடையானது மனித உருவத்தில் மட்டும் இருக்கிறது. சைதன்யம் எல்லா இடத்திலும் வியாபித்திருக்கிறது. ஆனால் விதவிதமான மனிதர்களிடத்தில் மட்டும் சிதாபாஸனாக இருக்கிறது. வரைபடத்தில் துணியும், துணியின் ஒருபகுதியும் இருக்கிறது. ஆதாரத்தின அடிப்படையில் இரண்டும் ஒன்றுதான் என்று சொல்லி விடலாம். ஆனால் அந்த உருவத்தில் உள்ள துணியில் வர்ணங்கள் ஏற்றி வைக்கப்பட்டிருப்பதை பார்த்தால் வரைப்படத்துணி வேறு, மனித ஆடைத்துணி வேறாக உள்ளது. அதேபோன்று சித்தும், சிதாபாஸனும் ஆதாரத்தின் அடிப்படையில் ஒன்றுதான் என்று சொல்லலாம். ஆனால் சைதன்யம் எல்லா இடத்திலும் வியாபித்திருக்கிறது. சிதாபாஸன் ஒரு இடத்தில் மட்டும் இருப்பதால் இரண்டும் வெவ்வேறானது.
ஆதாரமான துணியையும், வரையப்பட்ட துணியையும் வேறுபடுத்தி பார்க்காமல் அனுபவிக்கிறோம். அதேபோல சைதன்யத்தையும், சிதாபாஸனையும் ஒன்றாக பார்க்கின்ற தவறை நாம் செய்கின்றோம். இந்த சிதாபாஸனே ஜீவன் என்று அழைக்கப்படுகிறான். அந்த ஜீவன்தான் சம்சாரியாக இருக்கின்றான்.
சைதன்யத்தில் ஏற்றி வைக்கப்பட்ட உடல்களுக்குள் சிதாபாஸங்கள் பொய்யாக இருக்கிறது. இந்த சிதாபாஸனே ஜீவன் என்ற பெயருடையதாக இருக்கின்றது.; இந்த ஜீவர்கள் விதவிதமான சம்சாரத்தில் சுழன்று கொண்டிருக்கிறார்கள்.
படத்திலுள்ள ஆடைகள் போல் தெரிகின்ற வர்ணங்களை அறியாமையில் இருப்பவர்கள் ஆதாரமான துணியில் இருப்பதாக நினைக்கிறார்கள். அதுபோல ஜீவனிடத்தில் இருக்கின்ற சம்சாரமானது சைதன்யத்திடம் இருப்பதாக அறியாமையில் இருப்பவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சைதன்யம் சம்சாரத்தை அனுபவிக்க முடியாது. அதேபோல ஜடமான பொருட்களும் சம்சாரத்தை அனுபவிக்க முடியாது. சைதன்யம் எல்லாவிடத்திலும் வியாபித்து இருக்கிறது என்றால் ஜடபொருட்களில் மட்டும் ஏன் இல்லை? சித்திரத்தில் இருக்கின்ற மலை போன்றவற்றில் ஆடைகள் வரையப்படுவதில்லை. அதுபோல இந்த உலகத்திலுள்ள மண் போன்ற ஜடமான பொருட்களில் சிதாபாஸன் இருப்பதில்லை.
இந்த சம்சாரம் உண்மையானது. ஸத்திடம் நன்கு ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. நானாக இருக்கின்ற ஆத்மாவிடம் ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த விபரீதமான எண்ணமானது, பிராந்தியானது அவித்யா(அறியாமை) எனப்படுகிறது. இந்த சம்சாரம் ஆத்மாவோடுதான் சேர்ந்திருக்கின்றது என்ற உறுதியான எண்ணம்தான் அறியாமை. இந்த அறியாமையானது ஆத்ம ஞானத்தினால் மட்டும்தான் நீக்கப்படுகிறது.
சிதாபாஸனாக இருக்கின்ற ஜீவனுடைய சம்சாரமானது ஆத்மாவை சார்ந்ததல்ல என்ற அறிவை அடைவதுதான் ஆத்மஞானம் என்று புரிந்து கொள்ள வேண்டும். இதை விசாரம் செய்வதனால் அடையப்படுகிறது.
ஆகையால் எப்போதும் தொடர்ந்து விசாரத்தை மேற்கொள்ள வேண்டும். ஜீவன், ஜகத், பரமாத்மா இவை மூன்றையும் நன்கு விசாரம் செய்ய வேண்டும். ஜீவனையும், ஜகத்தையும் நீக்கும்போது ஆத்மா மட்டும் எஞ்சியிருக்கும்.
ஜகத், ஜீவன் இரண்டையும் நீக்குவது என்பது அலட்சியப்படுத்துதல் என்பதாகும். நமக்கு தெரியாமல் இருப்பது அல்ல, அனுபவத்துக்கு இல்லாமல் இருப்பதல்ல. ஆனால் மித்யா என்கின்ற தன்மையை மனதில் உறுதி செய்தலாகும். இது ஜகத்தின் உண்மை நிலையை காட்டும் பிரமாணத்தின் விஷயத்தை விட்டுவிடுதலே நீக்குதலாகும். கானல் நீரை பாக்கும் போது நீரின் தோற்றத்தை நீக்கவில்லை, பிரமாணத்தினால் அறியப்பட்ட அறிவை நீக்கிவிடுவது போன்றதாகும் இது. கானல் நீரின் அருகே சென்றால் அங்கு இருக்காது. எனவே அது வெறும் தோற்றம் என்ற அறிவை அடைவோம்.
பாத4ஹ என்பதை ஏற்றுக் கொள்ளாவிட்டால், ஆழ்ந்த உறக்கம், மயக்கநிலை இவைகளில் மோட்சத்தை முயற்சியில்லாமல் அடைதல் என்ற தவறான அறிவை அடைந்து விடுவோம். ஏனென்றால் இந்த நிலைகளில் உலகமே கண்ணுக்கு தெரியாமல் இருப்பதால், ஜகத்தை நீக்கி விட்டான், மோட்சத்தை அடைந்து விட்டான், ஆத்மாவை உணர்ந்து விட்டான் என்பதுபோல தோன்றி விடும். பரமாத்மா எஞ்சியிருத்தல் என்பதற்கு அதனுடைய சத்யத்வம் என்பதான உறுதியான அறிவுதான். ஆத்மா மட்டும் இருக்கிறது என்பதில் ஜகத் இல்லை என்றாகிறது.
விசாரம்
அதிஷ்டானத்தைப்பற்றிய அறிவுதான் பிரம்மத்தின் சத்யத்வத்தை நிச்சயம் செய்கிறது. நீக்குதல் எங்கெல்லாம் செய்கிறோமோ அங்கேயெல்லாம் அதனுடைய அதிஷ்டானம் இருக்க வேண்டும். இது பொதுவான அறிவு. விசேஷமான அறிவானது அதிஷ்டானத்தை பற்றிய முழுமையான அறிவு. பலமான பிரமாணத்தில் சரியான பிரமாணம் என்கின்ற அறிவு. உபநிஷத்; பிரமாணம் என்கின்ற ஞானம். வஸ்துவின் சத்யம் என்கின்ற அறிவுதான் அவசேஷம். ஜகத்தையே மனதுக்குள் நினைக்காமல் இருப்பது என்பது கிடையாது. இந்த உலகம் இல்லாமல் போகாது. அப்படி பொருட்படுத்தினால் ஜீவன் முக்தியானது ஏற்படாது.
தத்துவ விசாரத்தினால் அடைந்த அறிவானது இரண்டு விதமாக இருக்கிறது. அவைகள் பரோக்ஷ ஞானம், அபரோக்ஷ ஞானம் ஆகும். இவையிரண்டில் அபரோக்ஷ ஞானத்தை அடைந்தவுடன் இந்த விசாரமானது முடிவடைகிறது.
அபரா வித்யா - ஆத்மா அல்லாததைப் பற்றிய அறிவு பற்றிய விசாரம். ஏதாவது ஒரு அறிவை கேட்டு அடைவதே பரோக்ஷ ஞானமாகும். கேட்ட விஷயத்தை நேரிடையாக அனுபவித்து அறிந்து அடையும் அறிவே அபரோக்ஷ ஞானமாகும்.
பிரம்மன் இருக்கின்றது என்று மட்டும் அறிந்தால் அது பரோக்ஷ ஞானமாகும். நானே பிரம்மன் என்று அறிந்தால் அது அபரோக்ஷ ஞானம் (ஸாக்ஷாத்காரம்) என்று சொல்லப்படுகிறது. தொலைந்து போனதாக நினைத்துக் கொண்டிருக்கின்ற பத்தாவது மனிதன் இருக்கிறான் என்று சொல்லும் போது அவனை பரோக்ஷமாக அறிகிறான். நீதான் அந்த பத்தாவது மனிதன் என்று சொல்லும்போது நானேதான் அந்த பத்தாவது மனிதன் என்று அறிந்து கொள்ளும்போது அதுவே அபரோக்ஷமாக அறிகின்றான்.
அந்த ஆத்மா ஸாக்ஷாத்காரத்தை அடைவதற்காக ஆத்ம தத்துவமானது விசாரம் செய்யப்படுகிறது. இந்த விசாரத்தினால் எல்லாவிதமான சம்சாரத்திலிருந்தும் உடனடியாகவே மனிதன் விடுவிக்கப்படுகிறான்.
குடத்தில் உள்ள ஆகாசம், வரையறுக்கப்படாத மகா ஆகாசம், நீரில் பிரதிபலிக்கின்ற ஆகாசம், மேகத்திலுள்ள நீர்த்துளிகளில் பிரதிபலிக்கும் ஆகாசம் என்று ஆகாசமானது நான்குவிதமாக பார்க்கப்படுகிறது. ஆனால் ஆகாசம் ஒன்றுதான் இருக்கிறது.
ஜீவனிடம் இருக்கின்ற சைதன்யத்தை கூடஸ்தன் குடத்திலுள்ள ஆகாசத்திற்கும், மகாகாசமானது பிரம்ம சைதன்யத்திற்கும், சிதாபாஸன் ஜீவன் நீரில் பிரதிபலிக்கும் ஆகாசத்திற்கும், மேகத்தில் பிரதிபலிக்கின்ற ஆகாசமானது ஈஸ்வரனுக்கும் ஒப்பிடப்படுகிறது. கூடஸ்தன் ஜீவனின் ஸ்வரூபம், பிரம்மன் ஈஸ்வரனின் ஸ்வரூபம், ஜீவன், ஈஸ்வரன் என்று நான்கு விதமாக சைதன்யமானது இருக்கிறது. குடத்திலுள்ள ஆகாசம், எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கின்ற மகாகாசம், நீரில் தெரிகின்ற ஆகாசம், மேகத்தில் பிரதிபலிக்கின்ற ஆகாசம் என்று ஆகாசமானது நான்காக சொல்பது போல சித்தையும் பிரித்து பார்க்கப்படுகிறது.
அவச்சின்னம் - வரையறுக்கப்பட்டது போல இருக்கின்ற
மகா ஆகாசத்தினிடையே இருக்கின்ற மழை மேகங்களின் கூட்டங்களை பார்க்கின்றோம். அதில் இருக்கின்ற நீரில் பிரதிபிம்பமாக இருந்து கொண்டிருப்பது மேக ஆகாசம்.
மழை மேகங்களினிடத்தில் நீரின் தன்மையானது சிறு நீர்திவலைகளாக இருக்கிறது. அந்த நீர்த்துளிகளில் உள்ள ஆகாசத்தின் பிரதிபிம்பமே மேகாகாசம் என்று அனுமானம் மூலம் புரிந்து கொள்ள வேண்டும்.; நீருக்கு பிரதிபிம்பிக்கும் குணம் இருப்பதைக் காரணமாகக் கொண்டு இந்த அனுமானத்தை பயன்படுத்தலாம்.
ஸ்தூல, சூட்சுமம் என்கின்ற இரண்டு தேகத்தினால் வரையறுக்கப்பட்டது போல இருக்கின்ற சைதன்யம்;. இரண்டு தேகத்திற்கும் ஆதாரமாக இருக்கின்ற சைதன்யம் கூடம் போல் எந்தவித மாறுதலையும் அடையாமல் இருக்கின்ற சைதன்யம். இதையே கூடஸ்தன் என்று சொல்லப்படுகிறது. கொல்லன் பட்டறையில் உள்ள காய்ச்சிய இரும்புத்துண்டை அடித்து உருவமைப்பதற்காக வைத்திருக்கும் அசையாமல் பொருத்தப்பட்டிருக்கும் இரும்பு பலகை எந்தவிதமான மாறுதலை அடையாமல் இருப்பது போல சைதன்யம் எந்தவித மாறுதலையும் அடையாமல் இருக்கிறது. இதுவே சிதாபாஸனின் லட்சணமாகும்.
இனி, ஜீவனுடைய லட்சணம் கூறப்படுகிறது. நான் யார் என்பதன் உண்மையான அர்த்தம் என்ன என்பது விளக்கப்படுகிறது. சூட்சும சரீரமானது உண்மையான சைதன்யத்தின் மீது ஏற்றி வைக்கப்படுகிறது. இவ்வாறு ஏற்றி வைக்கப்படும் அந்தக்கரணத்தில் சைதன்யத்தினுடைய பிரதிபிம்பம் தோன்றுகிறது. இதையே சிதாபாஸன் என்று அழைக்கப்படுகிறது. பிராணனை ஸ்தூல சரீரத்தில் பிடித்து வைத்திருப்பதால் ஜீவன் என்று அழைக்கப்படுகிறது. பிராணன் இருப்பதற்கு காரணம் சிதாபாஸன்தான். இதுதான் பிராணனுக்கு ஆதாரமாக இருக்கிறது. ஜீவன் சம்சாரத்துடன் இணைந்து விட்டான்.
ஆகாசம் எப்படி பிரதிபலிக்கும் என்றால் நீரில் தெரியும் நம் உருவத்திற்கும் இடையே உள்ள தூரம் பிரதிபிம்பத்திலும் பார்க்கலாம். நீருக்கு இடம் கொடுத்த ஆகாசத்தை நாம் மறந்து விடுகிறோம். காரணம் ஜலாகாசத்தில் நம்முடைய கவனம் சென்று விடுகிறது. அதேபோல் கூடஸ்த சைதன்யத்தை மறந்துவிட்டு புத்தியில் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்ற சிதாபாஸத்தைதான் நாம் கவனித்துக் கொண்டிருக்கிறோம். பாம்பு எவ்வாறு கயிற்றை மறைக்கின்றதோ அதுபோல இது இருக்கின்றது. குழப்பத்திற்கு காரணம் ஒன்றின் தன்மை மற்றொன்றுக்கும், மற்றொன்றின் தன்மை இன்னொன்றிற்கும் சென்றுவிடுவதால் வருகிறது. புத்தியின் தன்மையை கூடஸ்தனில் ஏற்றி வைத்து அதனுடைய நித்யத் தன்மையை புரிந்து கொள்வதில்லை. புத்தி நகரும்போது கூடஸ்தன் நகருவதாகவும், அதன் அழிவை கூடஸ்தனுடைய அழிவாக நினைத்து வருந்துகிறோம். மரணம் ஜீவனுக்குத்தானே தவிர கூடஸ்தனுக்கல்ல என்பதை புரிந்து கொள்ளவில்லை. நான் அழியாதவனாக இருக்க வேண்டும் என்று நினைப்பதற்கு காரணம் நம்மிடையே அழியாத ஒன்று இருப்பதால்தான் அவ்வாறு நினைக்கிறோம். இதையே அன்யோன்ய அத்யாஸம் என்று அழைக்கப்படுகிறது.
எவ்விதம் பானையில் இருக்கின்ற முழுமையான ஆகாசமானது, ஜலத்தில் பிரதிபலிக்கும் ஆகாசத்தினால் மறைக்கப்பட்டு இருக்கிறதோ அதுபோல நம்முடைய கவனம் முழுவதும் ஜலாகாசத்தில் சென்று விடுவதால் நாம் மூலாகாசத்தை மறந்து விடுகிறோம். வெண்திரையை திரைப்படக் காட்சிகள் மறைக்கப்படுவது போல இதை புரிந்து கொள்ள வேண்டும். அதுபோல ஜீவனால் கூடஸ்தன் மறைக்கப்பட்டுள்ளான். அந்தக்கரணம்+சிதாபாஸன்=ஜீவன் என்று புரிந்து கொள்ள வேண்டும். இதையே அன்யோன்ய அத்யாஸம் என்று சொல்லப்படுகிறது.
இந்த அன்யோன்ய அத்யாஸத்திற்கு காரணம் அவித்யாதான் என்று கூறப்படுகிறது. இந்த அவித்யாவிற்கு காரணமே கிடையாது என்பதால் இதை மூலாவித்யா என்று அழைக்கப்படுகிறது. இந்த ஜீவன் கூடஸ்தனை பிரித்து புரிந்து கொள்வதில்லை. எப்பொழுதும் இயற்கையாகவே பிரித்து புரிந்து கொள்ளாத நிலையானது அனாதி என்று அழைக்கப்படுகிறது. இதையே மூல அவித்யா என்று அழைக்கப்படுகிறது..
இந்த அவித்யா இரண்டு விதமாக இருக்கிறது. அவைகள் விக்ஷேபம், ஆவரணம் ஆகியவைகளாகும். இவைகளே கூடஸ்தன் இல்லை, பிரகாசிக்கவில்லை என்று நினைக்க வைத்து கூடஸ்தனை மறைக்கிறது.
ஆத்மஞானத்தை அடைந்துவிட்ட ஞானி அறியாமையுடையவனிடம் “கூடஸ்தனை உனக்கு தெரியுமா என்று கேட்டபோது அவன் கூடஸ்தனை நான் அறிந்ததில்லை, எனக்கு விளங்கவுமில்லை என்று பதிலளிப்பான். மேலும் அதுமாதிரி ஒன்று இல்லவேயில்லை என்று வாய்விட்டு சொல்கிறான். இதிலிருந்து அவனுடைய அறியாமையை வெளிப்படுத்துகிறான் என்பதை புரிந்து கொள்ளலாம். கூடஸ்தனாக இருந்து கொண்டே அதை அறியாமல் இருப்பதை இதிலிருந்து நாம் அறிய முடிகிறது. சைதன்ய ஸ்வரூபமாக இருந்து கொண்டு அது விளங்கவில்லை என்று கூறுகிறான்.
தூணாக விளங்கிக் கொண்டிருக்கும் கூடஸ்தனை எப்படி அறியாமலிருக்க முடியும்? ஒன்றுக்கொன்று விரோதமான இரு பொருட்களிடத்தில் எப்படி சம்பந்தம் ஏற்பட முடியும்? எனவே அறியாமையே இல்லாத போது ஆவரணமும், விக்ஷேபமும் இல்லை. இதுபோன்ற தர்க்கரீதியில் கேட்கப்படும் கேள்விகளால் அதை அறிந்துக் கொள்ள முடியாது. நம்முடைய அனுபவமே இந்த தர்க்கங்களையெல்லாம் நீக்கி விடும். நம்முடைய அனுபவ விஷயத்தில் நம்பிக்கையில்லையென்றால் தர்க்கமும் கூட பலனைக் கொடுக்காது. தன்னை பகுத்தறிவுடன் கூடிய தர்க்கவாதி என்று நினைப்பவன் எப்படித்தான் தத்துவ நிச்சயத்தை ஒரு பொருளின் நிலையான முடிவை அடைய முடியும்?
தர்க்கமானது சில விஷயங்களை புரிந்து கொள்வதற்காக, மனதில் பதிய வைப்பதற்காக தேவைப்படும் போது அதை பயன்படுத்தலாம். ஆனால் இது அனுபவத்திற்கு விரோதமாக செல்லாமல் அதையொட்டி தர்க்கத்தை பயன்படுத்த வேண்டும். அனுபவத்திற்கு முரணான தர்க்கமே குதர்க்கம்.
நமது அனுபவமே பிரமாணமாக இருக்கும். ஆத்ம தத்துவமானது தெரியாவிட்டால் சாஸ்திரம் அதையே சைதன்யம் என்று சொல்கிறது. உபநிஷத் உபதேசிக்கின்ற அறிவு ஸ்வரூபமானது நம்முடைய அனுபவரூபமான அறியாமைக்கு விரோதமாக இருக்க முடியாது என்று தர்க்கம் செய்யலாம்.
ஞானமானது ஸ்வரூபஞானம், வ்ருத்திக்ஞானம் என்று இரு வகையாக இருக்கிறது. ஸ்வரூபஞானம் எல்லாவற்றையும் பிரகாசிக்கும், வ்ருத்திஞானம் நம் புத்தியில் மட்டும் தோன்றுவது. இந்த வகை ஞானத்தையும் ஸ்வரூபஞானம் பிரகாசிக்கும். அதேபோல மனதிலிக்கின்ற அறியாமையையும் ஸ்வரூபஞானம் காட்டிக் கொடுக்கிறது. இது எதற்கும் விரோதமாக இருப்பதில்லை. இது அறிவுக்கும், அறியாமைக்கும் விரோதமாக இல்லை. ஆனால் வ்ருத்திஞானம்தான் அறியாமைக்கு விரோதியாக இருக்கிறது. இது வந்துவிட்டால் ஆவரணம் சென்று விடும். இதுமாதிரி சிந்தித்து தர்க்கத்தை அனுபவத்தையொட்டி பயன்படுத்தலாம். அவித்யாவினுடைய ஆவரணம் (மறைத்தல்) என்ற விஷயத்தில் நமது அனுபவமானது காட்டிக் கொடுக்கப்பட்டது. உபநிஷத்தின் மூலமாக கூடஸ்தனே சைதன்யம் என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே சைதன்யம் அனுபவத்திற்கு அறியாமைக்கு பகைவன் அல்ல என்ற விதத்தில் தர்க்கத்தை செய்யலாம்.
கூடஸ்த சைதன்யம் அக்ஞானிக்கு விரோதியாக இருந்தால் இதை விளக்குவதற்கு வேறெந்த சைதன்யம் இல்லையென்று என்று அறிந்து கொள்ளலாம். விருத்திஞானம் வந்தால் அறியாமை சென்றுவிடும். பிரம்மஞானம்தான் அக்ஞானத்திற்கு விரோதி, பிரம்மம் அல்ல. எனவே அடைய வேண்டியது பிரம்மத்தைத்தான் என்று புரிந்து கொள்ள வேண்டும். கூடஸ்த சைதன்யம் ஆவரணத்திற்கு விரோதியாக இருந்தால் எதனால் இதை நீக்க முடியும்? விவேகமானது(விருத்திஞானம்) விரோதியாக இருக்கிறது. விவேகத்தையும் அதனால் சென்றுவிட்ட அறியாமையையும் ஞானியைப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.
அறியாமையினால் மறைக்கப்பட்ட கூடஸ்தனிடத்தில் ஸ்தூல, சூட்சும சரீரங்களுடன் கூடிய சிதாபாஸனானது கிளிஞ்கலில் வெள்ளி ஏற்றி வைத்து பார்ப்பது போல ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. விக்ஷேபம் என்பது அத்யாஸம்தான். கிளிஞ்சலில் வெள்ளியை பார்க்கின்ற அத்யாஸத்தில் மூன்று அம்சங்கள் உள்ளது. அவைகள் இது, இருக்கின்றது, வெள்ளி ஆகியவைகளாகும். இதில் முதலிரண்டு அம்சங்கள் மறைக்கப்படுவதில்லை. அதாவது கிளிஞ்சல் என்கின்ற “இது”, அது இருப்பதால் “இருக்கின்றது” என்பதும் மறைக்கப்படுவதில்லை. ஆனால் கிளிஞ்சலில் வெள்ளியை ஏற்றி வைத்திருக்கிறோம். கிளிஞ்சல் மட்டும்தான் மறைக்கப்பட்டு இருக்கிறது. எனவே முதலிரண்டு அம்சங்களை சாமான்ய அம்சங்கள் என்றும், மூன்றாவது அம்சமானது விசேஷ அம்சம் என்று அழைக்கப்படுகிறது. இது, இருக்கிறது என்பவைகள் உண்மையான வஸ்துவான கிளிஞ்சலைத்தான் குறிக்கிறது. வெள்ளியானது இந்த இரண்டு அம்சங்களை எடுத்துக் கொண்டு தன்னுடைய விசேஷ அம்சத்தை மட்டும் வெளிப்படுத்துகிறது. அத்யாஸம் நீங்கும் போது வெள்ளி மட்டும் மறைந்துவிடுகிறது. அதற்கு ஆதாரமாக இருக்கும் கிளிஞ்சல் காட்சியளிக்கும். இதிலிருந்து நாம் அறிவது அதிஷ்;டானத்தின் சாமான்ய அம்சங்கள் மறைக்கப்படுவதில்லை, அதன் விசேஷ அம்சம்தான் மறைந்து அத்யாஸ வஸ்துவின் விசேஷ அம்சம் தெரிகின்றது. சாமான்ய அம்சத்தில் தெரிகின்ற அனுபவமும், விசேஷ அம்சத்தின் மறைந்திருக்கும் அனுபவம்தான் அத்யாஸம்.
கூடஸ்தனை கிளிஞ்சலுக்கு ஒப்பிடலாம். கிளிஞ்சலிடத்தில் உள்ள இரண்டு சாமான்ய அம்சங்கள் போன்று கூடஸ்தனிடத்தில் தானாக பிரகாசித்தல் (இது), இருத்தல் (இருக்கின்ற) என்கின்ற சாமான்ய அம்சங்கள், கூடஸ்தனுடைய விசேஷ அம்சமான ஆனந்த ஸ்வரூபமானது மறைக்கப்பட்டு, சிதாபாஸனுடைய இரண்டு சரீரங்களின் தர்மங்கள் விசேஷ அம்சங்களாக எடுத்துக் கொள்கிறோம். நான் ஜீவனாக இருக்கிறேன் என்று சொல்லும் போது அதிஷ்டான கூடஸ்தனின் பொதுவான அம்சங்களை அப்படியே எடுத்துக் கொண்டு கூடஸ்தனை மறைத்து விட்டு ஜீவனை அதன் ஏற்றி வைத்து அனுபவிக்கிறோம்.
இந்த கிளிஞ்சலில் இது என்ற அம்சமும், இருக்கின்றது என்ற அம்சமும் அதை சார்ந்திருக்கிறது. இவைகள் அதில் பார்க்கப்படுகின்ற வெள்ளியில் காணப்படுகிறது. தானாக விளங்குதலும், இருத்தலாகவும் இருக்கின்ற தன்மையும் கூடஸ்தனை சார்ந்திருக்கிறது. சரீர தர்மங்கள் ஜீவனிடத்தில் பார்க்கப்படுகின்றது நான் ஜீவனாக இருக்கிறேன் என்ற அத்யாஸத்தில் “நான்”, “இருக்கிறேன்” ஆகிய இவையிரண்டும் கூடஸ்தனிடத்திலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
கிளிஞ்சலின் உண்மைத்தன்மையான அதன் பின்புறம் நீலவர்ணத்தோடு இருப்பதும், முக்கோண வடிவத்தை உடையதும் ஆகியவைகள் மறைக்கப்பட்டுள்ளது போல கூடஸ்தனிடத்தில் இருக்கின்ற தனித்திருத்தல் தன்மையும், ஆனந்தமாக இருத்தல் தன்மையும் மறைக்கப்பட்டிருக்கிறது.
மேற்சொன்ன உதாரணத்தில் கிளிஞ்சலில் ஏற்றி வைக்கப்பட்ட வெள்ளி நாணயம் என்று சொல்வது போல கூடஸ்தனிடத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருப்பது அகங்காரம் என்ற நிச்சயித்துக் கொள்ள வேண்டும். இது என்ற அம்சத்தை முதலில் பார்த்த பிறகுதான் அது வெள்ளி என்று எண்ணிக் கொள்கிறான். கூடஸ்தன் தானாகவே விளங்கிக் கொண்டிருப்பதால் அதில் அகங்காரத்தை ஏற்றி வைத்து ஜீவன் என்று கருதுகிறான்.
‘இது’, ‘இருக்கிறது’ என்பதிலிருந்து விசேஷ அம்சமான வெள்ளியும் வேறுபட்டு இருக்கிறது. அதுபோல தானாக விளங்கிக் கொண்டு இருப்பதும். இருத்தல் என்கின்ற கூடஸ்தனின் சாமான்ய அம்சங்களிலிருந்து விசேஷ அம்சமான ஜீவன் வேறுபட்டு இருக்கின்றது. சாமான்ய அம்சத்தையும், விசேஷ அம்சத்தையும் உதாரணத்திலுள்ள கிளிஞ்சலிலும், கூடஸ்தனிடத்திலும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
“தேவதத்தன் தான் மட்டும் செல்கின்றான்”, “நீதானே பார்”, “நான்தானே செய்து முடிக்கவில்லை” ஆகிய வாக்கியங்களில் தான்(ஸ்வயம்) என்ற சொல் இவ்விதமாக எல்லோராலும், எல்லாவிடத்திலும் பயன்படுத்தப்படுகிறது. இது வெள்ளி, இது துணி ஆகிய வாக்கியங்களில் ‘இது’ என்பது எல்லாவிடத்திலும் வருகிறதோ அதுபோல ‘நான்’ என்பது நீ, அவன், நான் முதலானதில் கூடவே வருகிறது.
ஸ்வயம் என்பது அஹம் என்பதிலிருந்து வேறுபட்டு இருக்கட்டும். அதனால் உன்னுடைய கூடஸ்தனிடத்தில் என்ன பிரயோஜனம்? ஸ்வயம் என்ற சொல்லுக்குப் பொருளானது இந்த கூடஸ்தன் என்பது என்னுடைய கருத்தாகும். ‘தான்’ என்ற சொல் மற்றவற்றைத்தானே நீக்குதலை செய்கிறது என்று கூறினால், கூடஸ்தனை ஆத்மா என்று சொல்ல நினைக்கின்ற எனக்கு உன்னுடைய கருத்து உதவிகரமாக இருக்கிறது. பிடித்தமானதாகவும் இருக்கிறது.
ஸ்வயம் என்ற சொல்லும், ஆத்மா என்ற சொல்லும் ஒரே பொருளைத்தான் குறிக்கிறது. அதனால் உலக வழக்கில் இந்த இரண்டு சொற்களுக்கும் சேர்ந்திருக்கும் பயன்பாடு இல்லை. ஆகவே ஸ்வயம் என்பதும், ஆத்மா என்பதும் மற்றவர்களை நீக்கி தான் மட்டும் இருக்கிறது.
பானை தானாக எதையும் அறியாது. இவ்விதமாக “தான்” என்பது பானை முதலிய அசேதனமான வஸ்துவிடமும் பயன்படுத்துவதை பார்க்கலாம். ஜட பொருட்களிலும் ஆத்மா இருப்பதால் ‘தான்’ என்ற சொல் பயன்படுத்தப்படும். உணர்வுடையது, ஜடம் என்ற வேற்றுமையானது மாறாது இருக்கின்ற ஆத்மாவால் உருவாக்கப்பட்டதல்ல. ஆனால் புத்தியில் வெளிப்படுகின்ற சிதாபாஸன்தான் இந்த வேற்றுமைக்கு காரணம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
உணர்வுமயமான சிதாபாஸமானது கூடஸ்தனிடத்தில் அறியாமையினால் ஏற்றி வைக்கப்பட்டு இருப்பது போல பானை முதலிய ஜடமானவைகளும் கூடஸ்தனிடத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. சிதாபாஸன் வியாபித்திருக்கின்ற போது சேதனம், வியாபிக்காத போது அசேதனம்.
அது, இது என்பவைகளும் தான் என்பதைப் போலவே நீ, நான் முதலியவைகளுடன் எல்லாவிடத்திலும் கூடவே வருகின்றன. ஆகையால் அவை இரண்டுமே ஆத்மாவைத்தான் குறிக்கின்றது என்று கூறினால் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்
அது, இது என்ற இந்த இரண்டும் ஆத்மா என்பதுடனும் வருகின்றன. ஆனாலும் இவை இரண்டும் நேரிடையாக ஆத்மாவை குறிக்கவில்லை. இது நல்லது என்று எப்படி பொருட்படுத்தப்படுகின்றதோ அதேமாதிரி ஆத்மாவையும் சுட்டிக்காட்டுவதற்கு பயன்படுத்தப் பட்டிருக்கிறது. அது, இது என்பது அடைமொழியாக இருக்கிறது.
உலக வழக்கு ஒன்று எடுத்துக் காட்டப்படுகிறது. அது-இது, தான்-வேறு, நீ-நான் இவை மூன்றும் ஒன்றுக்கொன்று எதிர்ப்பதங்களாக இருப்பது உலகத்தில் சாதாரணமாக பயன்படுத்தப்படுகிறது. இதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
‘வேறு’ என்ற சொல்லுக்கு எதிர்ச் சொல்லாக இருக்கின்ற ‘ஸ்வயம்’ என்ற சொல் கூடஸ்தன் என்று அறிந்து கொள்ள வேண்டும். நீ என்ற சொல்லினுடைய எதிர்ச்சொல்லான நான் (அனாத்மாவில் நான் என்ற புத்தி) கூடஸ்தனிடத்தில் கற்பனை செய்யப்பட்டுள்ளது.
அகங்காரத்திற்கும் கூடஸ்தனுக்கும் இடையே உள்ள வேற்றுமைளை ஏன் அறிந்து கொள்ள முடியவில்லையென்றால் மோக வசத்தில் மாட்டிக் கொள்வதால் அறிய முடிவதில்லை. இவையிரண்டும் தெளிவாக இருந்தாலும் கூட எப்படி வெள்ளி நாணயம், இது என்ற கிளிஞ்சலும் வேறுபட்டு இருக்கின்றதோ அதுபோல மோக வசத்தில் இருப்பவர்கள் இவையிரண்டையும் ஒன்றென்று பார்க்கிறார்கள்.
தாதா3த்ம்யம் என்பது ஒன்றை வேறான்றாக நினைத்துக் கொள்ளுதல் என்கின்ற அத்யாஸம். இதற்கு முன் சொல்லிய அக்ஞானத்தால் வந்திருக்கிறது. இந்த அக்ஞானத்தை நீக்கப்படும் போது அவித்யாவினுடைய காரியமான மோகம், அத்யாஸம் நீக்கப்படுகிறது.
அவித்யையிலிருந்து தோன்றுகின்ற ஆவரணமும். விக்ஷேபமும் ஆத்ம ஞானத்தினால் மட்டும்தான் அழிந்து விடுகிறது. அனாத்மாவான உடல்களும், பிரபஞ்சமும் ஆத்மாவில் ஏற்றி வைக்கப்பட்டு இருக்கின்ற விக்ஷேபம் சென்று விடும். விக்ஷேபத்தினுடைய அழிவு பிராரப்தத்தின் காலம் இருக்கும் வரை ஏற்படாது. பிராரப்தம் முடிந்ததும் அழிவு ஏற்படும். அதுவரை தோன்றிக் கொண்டுதான் இருக்கும் சம்சாரம் தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கும். விக்ஷேபத்தால் இருக்கின்ற சத்யத்வ புத்தியினால் சம்சாரம் இருக்கும், துயரத்தை அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டியதுதான். கானல் நீர் தோன்றினாலும் அதை அனுபவிக்க முடியாது என்பது போல இதுவாகும்.
காரணம் அழிந்தாலும் காரியம் ஒரு நொடி இருக்கும் என்ற தார்க்கிகர்கள் கூறுவது போல நமக்கும் ஏன் காரணமான அறியாமை சென்ற பின்னும் விக்ஷேபம் என்ற காரியம் சொஞ்ச காலம் இருக்கலாம்.
சில நாட்கள்தான் இருக்கக்கூடிய நூலுக்கு தார்க்கீகர்களால் அதற்கு தகுந்தவாறு காலம் நொடியாக இருக்கலாம் ஆனால் அறியாமையானது எண்ணக்கைக்கு அடங்காத காலமாக இருக்கின்றதால் அதற்கு தகுந்த காலமாக வேதாந்த விஷயத்தில் எடுத்துக் கொள்ளலாம்.
விசாரத்தை தாங்கக்கூடிய பிரமாணமற்ற தர்க்கவாதிகளை பயனற்ற வகையில் தத்துவத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். வேதம், யுக்தி, அனுபவம் இவை மூன்றையும் பிரமாணமாக வைத்துக் கொண்டு பார்க்கும் போது ஞானத்தினால் அவித்யாவின் ஆவரணம் நீங்கினாலும் பிராரப்த காலம் வரை விக்ஷேபம் இருக்கும். தேகாதிகள் இருக்கும் என்பதற்கான பிரமாணம் உபநிஷத்.
நான் என்று சொல்லப்படும் கூடஸ்தனுக்கும் நான் என்று சொல்லப்படும் மாறுதலை அடைந்து கொண்டிருக்கும் ஜீவனும் ஒன்றாக இருக்கும் தன்மை அறியாமையினால் ஏற்பட்டுவிட்டது.; சிலர் வேதாந்தத்தை பின்பற்றாமல் உபதேசத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அறியாமையினால் இருப்பதால் வெறும் யுக்தியை மட்டும் பயன்படுத்துகிறார்கள், தர்க்கத்தை மட்டும் பின்பற்றுகிறாகள்.. உபதேசத்தைப் போன்று தோன்றுகின்ற வாக்கியங்களை அவரவர் முடிவுக்கு ஏற்றவாறு எடுத்துக் கொள்கிறார்கள். கூடஸ்தனிடத்தில் ஆரம்பித்து ஸ்தூல சரீரம் வரை இருக்கின்ற அனைத்தினுடைய சேர்க்கையை ஆத்மா என்று கூறுகிறார்கள். இப்படிப்பட்ட கொள்கை உடையவர்கள் புத்தியை பயன்படுத்தாதவர்கள். பிரத்யக்ஷம் போன்ற பிரமாணத்தை பயன்படுத்துபவர்கள். கண் பிரத்யக்ஷம் இருப்பதைத்தான் காட்டுகிறது. அந்தப் பொருளின் உண்மைத் தன்மையை ஆராய்ந்துதான் அறிந்து கொள்ள முடியும்.
அவர்கள் தன்னுடைய கொள்கையை வேதத்தின் உபதேசத்தையொட்டி இருப்பதாக காட்டுவதற்காக சில உபநிஷத் வாக்கியங்களான அன்னமய கோசத்தையும். அசுரராஜன் விரோசனுடைய ஸ்தூல சரீரம்தான் ஆத்மா என்ற தீர்மானத்தையும் பிரமாணமாக கூறுகிறார்கள். ஜீவாத்மா உடலைவிட்டு செல்லும்போது ஏற்படுகின்ற உடலின் மரணத்தை அழிவை நாம் பார்ப்பதனால், தேகத்திலிருந்து வேறுபட்டதாக இருப்பதுதான் என்று கூறுகிறார்கள். சார்வாக்ய மதத்தை சார்ந்தவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்
பேசுகிறேன் போன்ற சொற்களை பயன்படுத்தும் போது பிரத்யக்ஷமாக கருதப்படுகின்ற “நான்” என்ற அறிவானது தேகத்திலிருந்து வேறாக இருக்கின்ற இந்திரியங்களே ஆத்மாவாக காட்டிக் கொடுக்கின்றது. வாக்கு முதலிய இந்திரியங்களுக்குள்ளே நடக்கின்ற வாக்குவாதங்களை உபநிஷத்தில் படித்து அறியலாம். இதிலிருந்து அவைகளுக்கு உள்ள அறிவு பூர்வமான சைதன்யம் இருப்பது தெரிவதால் ஆத்மாவாக இருத்தல் என்பது தெளிவாகிறது.
பிராணன்தான் ஆத்மா என்று சொல்பவர்கள் வைரண்யகர்ப்பர்கள்.இவர்கள் பிராணனை ஆத்மா என்று வாதிடுவார்கள். ஏனென்றால் இந்திரியங்கள் அழிந்து விட்டாலும் பிராணன் இருக்கின்ற வரை ஒருவன் உயிரோடு இருக்கிறான். பிராணனானது இந்திரியங்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போதும் விழித்துக் கொண்டு இருக்கிறது. பிராணமய கோசமானது ஆத்மாவென்று நன்கு தெளிவாக கூறப்பட்டுள்ளது என்று வாதிடுவார்கள்.
உபாஸனையை பரமாகக் கொண்டு செய்பவர்கள் மனதை ஆத்மாவென்று கூறுகிறார்கள். பிராணனுடைய அபோக்ருத்வம் எதையும் அனுபவிக்காத ஜடமானது என்று தெளிவாக தெரிகிறது. ஆகவே மனதுதான் வெளி உலகத்து விஷயங்களை அனுபவிக்கின்றது. மனிதர்களுடைய பந்தத்திற்கும், மோட்சத்திற்கும் காரணமாக இருப்பது மனம்தான். விஷயத்தின் மேல் வருகின்ற ஆசைதான் பந்தத்திற்கு காரணம் இந்தப்பற்றை நீக்குவதுதான் நிர்விஷயம். ஆகவே மனோமய கோசம்தான் ஆத்மாவென்று சொல்லப்படுகிறது. வேதாந்தமும் மனோமய கோசம்தான் ஆத்மாவென்று சொல்கிறது என்று கூறுகிறார்கள்.
விக்ஞானமய கோசம்தான் ஆத்மா என்று சிலர் கூறுகிறார்கள். அவர்கள் ஷணிகவாதிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். ஏனெனில் விக்ஞானமய கோசம் மனோமய கோசத்திற்கு காரணமாக இருக்கிறது என்பது தெளிவாக அறியப்படுகிறது.
விசாரம்
மனதில் எழும் எண்ணங்களின் இரண்டு பிரிவுகளானது அஹம் விருத்தி, இத3ம் விருத்தி என்பவைகளாகும். இதம் விருத்தி என்பது வெளியே உள்ள ஏதோ ஒரு பொருளை விஷயமாகக் கொண்டது. வெளியிலுள்ள எல்லாப் பொருட்களும் இதம் விருத்தியாகாது. எந்தப் பொருளை நம் கண் பார்த்து அறிகின்றதோ அவைகள்தான் இதம் விருத்தியாகும். அஹம் விருத்தி என்பது இதம் விருத்தியை பார்க்கும் எண்ணங்கள்தான். இதற்கு விஷயமாக இருப்பது அந்தக்கரணமான மனம்தான். மனதிலிருக்கும் எண்ணங்கள்தான் இவ்வாறு அழைக்கப்படுகிறது. அஹம் விருத்தி என்றும் இதம் விருத்தி என்றும் அந்தக்கரணம் இரண்டு விதமாக இருக்கிறது. அஹம் விருத்தியானது விக்ஞானமய கோசமாகின்றது. இதம் விருத்தி மனோமயமாகின்றது.
இதம் விருத்திக்கு அஹம் விருத்திதான் மூலமாக, விதையாக இருக்கிறது என்பது தெளிவாக இருக்கிறது. அஹம் விருத்தியை அறியாமல் வெளியே இருக்கின்ற பொருட்களை உடைய இதம் விருத்தியை அறிவதில்லை, அறிய முடியாது.
ஷணிக மதத்தினர் ஆத்மா என்கின்ற விக்ஞான மயத்தின் ஸ்வரூபம் ஷணிகம் என்றும் அதே சமயம் தானே விளங்கிக் கொண்டிருக்கிறது என்றும் கூறுகிறான். ஒவ்வொரு கணத்திலும் தோன்றி மறைதல் என்கின்ற அஹம் விருத்தியின் தன்மையானது அறியப்படுகிறது. இது எதனால் நன்கு அறியப்படுகின்றதோ அதனால் விக்ஞானமயம் ஷணிகம் என்று கூறப்படுகின்றது. இது இயல்பாக, சுயமாக நடந்கு கொண்டிருப்பதால் இதை தானாக விளங்கிக் கொண்டிருக்கிறது. நெருப்பிலிருந்து வெளிவருகின்ற தீப்பொறிகளைப் போன்று தோன்றி மறைகின்றது. அதே சமயம் தானே பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.
இந்த விக்ஞானமய கோசம்தான் ஜீவன் என்று உபநிஷத்துக்கள் கூறுகின்றன. ஜீவனுக்குத்தான் எல்லாவிதமான சம்சாரமும் இருக்கிறது. பிறப்பு, இறப்பு, சுகம், துக்கம் போன்ற அனுபவங்களை உடைய ஜீவன்தான் சம்சாரத்தை அனுபவிக்கிறான்.
ஷணிகமான விக்ஞானமயமானது ஆத்மாவல்ல. இது மின்னல், கண் இமைத்தல் போன்று நிலையற்றவை. ஷணிக விக்ஞானத்திற்கு வேறொன்றையும் நாம் இமை நீக்கிவிட்ட பிறகு பார்ப்பதில்லை. அதனால் சூன்யம்தான் ஆத்மா என்று புத்த மதத்தின் ஒரு பிரிவினரான மாத்யமிகர்கள் கூறுகிறார்கள்.
நாம் பார்த்து அனுபவிக்கின்ற இந்த உலகம் அஸத்தாக இருந்தது, சூன்யமாக இருந்தது என்கின்ற இப்படிபட்ட வேத வாக்கியங்களிலிருந்து சூன்யம்தான் நம்மால் கேட்கப்பட்டு உள்ளது. அதனால் சூன்யம்தான் ஆத்மா. இந்த அனைத்து உலகமும் அறியப்படுவது அறிவும் ஆகும் இவைகள் எல்லாம் அறியாமையால் கற்பிக்கப்பட்டு உள்ளது. வெளியே உள்ள பொருட்களும் அதை பார்க்கும் அறிவும் பொய்யானவை. கனவில் அனுபவிக்கும் பொருட்களும் அதைப்பற்றிய எண்ணங்களும் எப்படி பொய்யானதோ அதேபோல விழிப்பு நிலையில் இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
வைதீக மதத்தினர் ஆனந்தமய கோசம்தான் ஆத்மா என்று சொல்வார்கள். அதிஷ்டானம் இல்லாமல் அத்யாஸம் ஏற்படாது என்ற நியதிப்படி ஆத்மாவுக்கு இருத்தல் என்கின்ற தன்மையுண்டு. ஆத்மாதான் அதிஷ்டானமாக இருக்கிறது. சூன்யத்திற்கும் அதைப் பார்க்கின்ற சாட்சி என்ற ஒன்று இருக்க வேண்டும். சாட்சி என்ற ஒன்று இல்லையென்றால் சூன்யம்தான் இருக்கிறது என்று சொல்ல முடியாது. விக்ஞானமய கோசத்தைக் காட்டிலும் வேறாக இருப்பது அதற்கு ஆதாரமாகவும் இருப்பது ஆனந்தமய கோசம். இந்த ஆத்மாவை வெறும் இருப்பதாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். இதை வைதீக மதத்தை பின்பற்றுபவர்கள் சொல்கிறார்கள்.
ஆத்மா மிகப்பெரியதாக இருக்கிறது என்றும் மிகச்சிறியதாக இருக்கிறது என்றும் இரண்டுக்கும் இடைப்பட்டதாகவும் இருக்கிறது என்றும் ஆத்ம விஷயத்தில் வாதிடுபவர்கள் பலவிதமாக வாதம் செய்து கொண்டிருக்கிறார்கள். வேத வாக்கியங்களையும், யுக்தியையும் பயன்படுத்தி இந்த மாதிரி தவறாக வாதம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
மிகச்சிறியதென்று கூறுபவர்கள் ஆநதராலர்கள், சூட்சுமமான நாடிக்குள் சென்று வருவதால் இது மிகவும் சிறியதென்று கூறுகிறார்கள். தடைமுடியின் ஆயிரமாக பிரித்தால் அதில் உள்ள ஒரு பாகத்தின் அளவுடையது ஆத்மா என்றும், இது சூட்சும நாடிக்குள் சென்று வருவதால் அணுவளவு சிறியதென்றும் கூறுகிறார்கள்.
“அணுவுக்கு அணுவாக இருக்கிறது”. “சூட்சுமத்திலும் மிக சூட்சுமமானது” என்ற வேத வாக்கியங்கள் நூற்றுக்கணக்காகவும், ஆயிரக்கணக்காகவும் அணுவின் தன்மையை சொல்கின்றன. ரோமத்தின் நுனியின் நூறில் ஒரு பங்காக எடுத்துக் கொண்டு அதை மீண்டும் நூறாக வெட்டிய பிறகு அதிலொரு பங்குதான் ஜீவன் என்று அறியவும் என்று ஸ்ருதி கூறுகிறது.
திகம்பரர்கள் (ஜைன மதத்தினர்) ஆத்மா பெரிதுமல்ல, சிறியதுமல்ல இடைபட்ட அளவு உடையது என்று கூறுகிறார்கள். இவ்வாறு கூறுவதற்கு காரணம் “உச்சி முதல் கால்வரை இந்த சைதன்யம்தான் பரவி இருக்கிறது” என்ற வேத வாக்கும் இருக்கிறது. சூட்சும நாடிக்கு செல்வது என்பது சூட்சுமமான அவயவத்தின் மூலமாக சாத்தியமாகும். இந்த ஸ்தூல உடலை அதனுடைய கைகள் மூலமாக சட்டைக்குள் நுழைவது போல இதை புரிந்து கொள்ள வேண்டும். சிறிய, பெரிய உடலுக்குள் ஆத்மா நுழைதல் என்பது சுருங்கி, விரிதல் தன்மையால்தான் சாத்தியமாகும். ஆத்மாவினுடைய அம்சமான சுருங்கி விரிதல், வந்து போகுதல் ஆகியவற்றினால்தான் சாத்தியமாகும். ஆகவே இது இடைப்பட்ட அளவு என்று உறுதிப்படுத்தப்படுகிறது
இவ்விதம் கூறினால் அம்சங்களோடு கூடியது எதுவானாலும் பானையைப் போல அழிந்து போகலாம். ஆத்மா அழிவதாக சொன்னால் அந்த ஜீவன் செய்த பாவ, புண்ணியங்கள் அனுபவிக்கப்படாமல் சென்று விடுகிறது. செய்யாத பாவ, புண்ணியங்கள் புதியதாக வந்து விடும். ஆத்மா புதியதாக தோன்றினால் இவையிரண்டு தோஷங்களையும் யாராலும் நீக்க முடியாது. ஆகவே இந்த ஆத்மா இடைபட்ட அளவுடையது என்ற கருத்து சரியல்ல
ஆகவே ஆத்மா மிகவும் பெரியதுமல்ல, மிகச்சிறியதுமல்ல, இடைபட்ட அளவுடையதும் அல்ல. இது ஆகாசத்தைப் போல எங்கும் வியாபித்துள்ளது. அதனால் இது அம்சமற்றது, அவயவங்களுமற்றது என்ற கருத்து வேதத்தினால் ஏற்றுக் கொள்ளபட்டதாகும்.
இவ்விதம் கூறி ஆத்மாவினுடைய ஒரு விசேஷமுள்ள விஷயத்தில் விதவிதமான குழப்பம் ஏற்படுத்துகிறார்கள். அவைகள் இது ஜடமாக இருக்கிறது என்றும், அறிவு ஸ்வரூபமாக இருக்கிறது என்றும் இரண்டுமாகவும் இருக்கிறது என்றும் சிலர் குழப்பிக் கொள்கிறார்கள்.
பூர்வ மீமாம்ஸத்தின் ஒரு பிரிவினரான பிரபாகரர்களும், தார்க்கீகர்களும் இந்த ஆத்மா ஜடமானதுதான் என்று கூறுகிறார்கள். ஆத்மா ஜட ஸ்வரூபம்தான் என்பது ஒரு பொருள் ஆகாசத்தைப்போல இதுவும் ஒரு திரவ்யம்தான். ஆகாசத்திற்கு சப்தம் குணமாக இருப்பது போல ஆத்மாவுக்கு சைதன்யம் என்பது பொதுவான குணமாக இருக்கிறது. ஆத்மாவுக்கு விசேஷ குணங்களாக ஆசை, வெறுப்பு, முயற்சி, தர்மம், அதர்மம், சுகம், துக்கம், மனதிலிருக்கும் வாசனைகள் இருக்கின்றன. சைதன்யம் சாமான்ய குணமாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஆத்மா எல்லாவிடத்திலும் வியாபித்திருந்தாலும் அதனுடைய பாவ-புண்ணியத்தினுடைய வசத்தினால் மனதோடு சம்பந்தம் ஏற்படும்போது விதவிதமான குணங்கள் வெளிப்படுகிறது. பாவ, புண்ணியங்கள் சென்று விடும்போது உறக்கத்துக்கு சென்றுவிடுகிறது. இந்த நிலையில் மனதோடு உள்ள சம்பந்தம் நீங்கி விடுகிறது.
இந்த ஆத்மா ஜடமாக இருந்தாலும் அறிவுடன் செயல்படுவதற்கு காரணம் சைதன்யத்தை குணமாக கொண்டிருப்பதால்தான். அதனால் ஆசை, கோபம், முயற்சி போன்றவைகள் வெளிப்படுகிறது. இந்த குணங்கள் இருப்பதால் தர்ம, அதர்மம், பாவ-புண்ணியங்கள் அடைவதற்கு கர்த்தாவாகின்றது. பிறகு சுக-துக்கங்களை அனுபவிப்பதனால் போக்தாவாக ஆத்மா இருக்கிறது.
எவ்விதம் இந்தப் பிறவியில் கர்ம வசத்தினால் சுக-துக்கம் போன்ற அனுபவங்கள் வந்து செல்கின்றதோ அதுபோல கர்மத்தினால் வேறு உலகத்தில் உடல்கள் பிறவியெடுக்கும் போதும் ஆசை போன்ற உணர்ச்சிகளும் தோன்றுகின்றன. இவ்விதம் ஆத்மா எல்லாவிடத்திலும் வியாபித்திருந்தாலும் சென்று வருதல் நடைபெறலாம் என்பதை அறிந்து கொள்ளலாம். இதற்கு முழு கர்மகாண்டம் பிரமாணம் என்ற சொல்கிறார்கள்.
ஆழ்ந்த உறக்கத்தில் எது எஞ்சியிருக்கின்றதோ அதுவே ஆனந்தமய சோகமாகும். இதை தெளிவற்ற சைதன்யம் என்றும், ஆத்மாவென்றும் சொல்லப்படுகிறது. இதுவே முதலில் இருக்கின்ற ஆனந்தமய கோசம். இதுதான் பிரபாகரர்களுக்கு ஆத்மாவாக இருக்கிறது. மேற்சொன்ன குணங்களெல்லாம் ஆத்மாவுக்கு இருக்கின்றது.
ஆத்மாவிடம் சைதன்யம் மறைந்து இருக்கின்றது, இதை யூகித்து ஜட ஸ்வரூபமாகவும், அறிவு ஸ்வரூபமாகவும் இருப்பதாக பா4ட்டர்கள் கூறுகிறார்கள். தூங்கியெழுந்தவனுடைய நினைவின் துணைக்கொண்டு சைதன்யத்தை யூகம் செய்தல் என்பது நடைபெறுகிறது.
நமக்கு அனுபவம் இருந்தால்தான் அதை நினைவுக்கு கொண்டுவர முடியும், ஒன்றை நினைத்து பார்க்க முடியும். ஆழ்ந்த உறக்கத்தில் ஜடமாக இருந்து கொண்டு நான் நன்றாக உறங்கினேன் என்கின்ற ஜடமான தன்மையின் நினைவு வந்துள்ளது. ஜடமான தன்மையை உறக்கத்தில் அனுபவிக்காமல் இருந்தால் இந்த ஜட நினைவு கண்டிப்பாக வந்திருக்க முடியாது. இதிலிருந்து ஆத்மா ஜடமானதாகவும் சைதன்ய ஸ்வரூபமாகவும் இருக்கிறது என்பது உறுதியாகிறது.
“அறிபவனுடைய அறிவுக்கு அழிவு கிடையாது”, என்பது நல்ல தூக்க விஷயத்தில் வேதமும் சொல்கிறது. ஆகவே இந்த ஆத்மாவானது ஜடமானதாகவும், சேதன ஸ்வரூபமாகவும் உள்ளது. மின்மினி பூச்சி வெளிச்சம் உள்ளதாகவும், வெளிச்சம் இல்லாததாகவும் இருப்பதை போல இது இருக்கிறது.
ஒரு பொருளுக்கு இரண்டு வேறுபட்ட தன்மைகள் கண்டிப்பாக இருக்க முடியாது. இது அம்சமற்றதாக உள்ள பொருளுக்கு மட்டும் பொருந்தும். ஆகவே ஆத்மா அறிவு ஸ்வரூபம்தான் என்று சாங்கிய மதத்தை சார்ந்தவர்கள் கூறுகிறார்கள். ஜடமாயிருக்கும் அம்சமானது பிரகிருதியினுடைய ஸ்வரூபம். இது மாற்றத்தை அடையக் கூடியது. இந்த பிரகிருதியானது புருஷனுக்கு, ஜீவனுக்கு, பந்த-மோட்சம் அடைவதற்கு பயன்படுகிறது. பந்தம் என்பது சுக-துக்கங்களை கொடுக்கின்ற சம்சாரத்தை குறிக்கிறது.
எவ்விதமான சங்கமுமில்லாத அறிவு ஸ்வரூபமாக உள்ள சைதன்யத்திற்கு பந்தமும், மோட்சமும் சைதன்யத்திற்கும் பிரகிருதிக்கும் இடையே உள்ள வேற்றுமைளை உணராததினால் ஏற்படுவதாக கருதப்படுகிறது. பந்தத்தையும், முக்தியையும் தெளிவாக உணர வைப்பதற்காக இதற்கு முன் கூறுவது போல சைதன்யத்திற்குள் உள்ள வேற்றுமையை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதாவது சைதன்யம் பல உண்டு என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்.
‘மஹத் தத்துவத்திற்கு முன்பு அவ்யக்தம்’ என்று வேதத்தில் பிரகிருதியை இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியே ‘சங்கமற்றவனல்லவா’ என்ற வேத வாக்கியமும் சங்கமற்ற தன்மையையும் தெளிவாக கூறியிருக்கிறது. சைதன்யத்தினுடைய இருப்பினால் செயல்படுகின்ற பிரகிருதியை தன் கட்டுபாட்டுக்குள் வைத்திருப்பவர் ஈஸவரன் என்று யோக மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் கூறுகிறார்கள். அந்த ஈஸ்வரன் ஜீவனுக்கு வேறுபட்டவராக உபநிஷத்தில் சொல்லப்பட்டிருக்கிறதுஇ
மூன்று குணங்களும் சமமாக இருக்கின்ற நிலையையே பிரகிருதி அல்லது பிரதானம் என்று சொல்லப்படுகிறது. இந்த பிரகிருதிக்கும் ஜீவர்களுக்கும் தலைவராக இருப்பவர் ஈஸ்வரன் ஆவார். குணங்களுக்கும் தலைவனாக இருப்பவர் அவரேயாவார். இவ்வாறு வேத வாக்கியத்தில் கூறப்பட்டிருக்கிறது. பிருஹதாரண்ய உபநிஷத்தில் தெளிவாக (அஸம்ப்4ரமேண). ஈஸ்வரன் அந்தர்யாமியாக எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் இருந்து கொண்டு செயல்படுகின்றார் என்று விளக்கப்பட்டுள்ளது.
இந்த இடத்திலும் அதாவது ஈஸ்வர விஷயத்திலும் கூட குழப்பிக் கொண்டு இருக்கிறார்கள். அவரவர்களுக்கு தெரிந்த யுக்தியின்படி குழப்பிக் கொள்கிறார்கள். உபநிஷத் வாக்கியங்களையும் கூட கோடிட்டு காட்டுவதற்கு எடுத்துக் கொள்கிறார்கள். அவர்களுடைய கருத்தை உறுதிபடுத்துவதற்காக தாங்கள் புரிந்து கொண்ட மாதிரி அதை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
மனவருத்தங்கள் ஐந்து வகைகளாக இருக்கின்றன. அவைகள்
2. அஸ்மிதா - அகங்காரம், நான் என்கின்ற கர்வம்.
3. ராகஹ - பற்று – போக பொருட்களில் பற்று
4. துவேஷம் - வெறுப்பு – துக்கத்தை கொடுக்கக்கூடிய பொருட்களில் ஏற்படுவது
5. அபினிவேஷ - உயிரின் மீது இருக்கின்ற பற்று, மரணபயம்
ஈஸ்வரன் இந்த மனவருத்தங்களால் தாக்கப்படாதவர், விடுபட்டு இருப்பவர். கர்ம பலன்களான பாவ-புண்ணியங்களிலிருந்தும் விடுபட்டு இருப்பவர்.
கர்மபலன்கள் மூன்று வகைகளாக இருக்கின்றது. அவைகள் 1.பிறப்பு, 2.ஆயுட்காலம், 3.போகங்கள் (அனுபவங்கள்). இவைகள்தான் ஒருவனை துயரப்படுத்திக் கொண்டிருக்கின்றது. ஈஸ்வரன் இவைகளால் தாக்கப்படாதவராக இருக்கிறார். ஜீவனிடமிருந்து வேறுபட்ட விசேஷமான சைதன்யமே ஈஸ்வரன் ஆவார். ஜீவனைப் போல ஈஸ்வரனும் அஸங்கமான சைதன்ய ஸ்வரூபம்.
ஜீவனும், ஈஸ்வரனும் அஸங்கமான சைதன்யமாக இருந்த போதிலும் ஏதோவொரு விசேஷமிருப்பதால் ஈஸ்வரன் அனைத்தையும் ஆளுகின்றார், கட்டுப்படுத்துகின்ற சக்தியை உடையவராக இருக்கிறார். பந்தமும், மோட்சமும் விவஸ்தையற்றதாக போய்விடும். ஜீவனுக்கும், ஈஸ்வரனுக்கும் உள்ள வேற்றுமை ஏற்றுக்கொள்ளா விட்டால் இந்த நிலை ஏற்படும்.
ஈஸ்வரனிடத்திலிருக்கின்ற பயத்தினால் வாயு, அக்னி ஆகிய அனைத்து தேவதைகளும் தத்தம் வேலைகளை செய்து கொண்டிருக்கிறது. அஸங்கமான பரமாத்மாவுக்கு அனைத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்ற சக்தியானது வேத வாக்கியங்களில் கூறப்பட்டிருக்கின்றது. இது தர்க்கத்திற்கும், யுக்திக்கும் பொருந்தி வருகிறது. ஏனென்றால் ஈஸ்வரன் கிலேஷம், கர்மம் இவைகளால் பாதிக்கப்படாமல் இருக்கின்றார்.
ஜீவர்களும் கூட அஸங்கமாக இருக்கின்ற காரணத்தினால் கிலேச, கர்மாதிகள் வரமுடியாதுதான் இருந்தாலும் அறியாமையின் காரணமாக அக்ஞானத்தினால் கிலேசங்கள், கர்மங்கள் போன்ற சம்சாரம் வந்துள்ளது. இது முன்பே கூறப்பட்டது.
செயல்படுகின்ற சக்தி, ஆசைப்படுகின்ற சக்தி, அறிவு இவைகள் ஈஸ்வரனுடைய நிலையான குணங்களாக நினைக்கிறார்கள். அஸங்கமான ஈஸ்வரனுக்கு அனைத்தையும் கட்டுபடுத்துபவர் என்பது பொருந்தி வராது என்று தார்க்கீகர்கள் கூறுகிறார்கள்.
ஈஸ்வரனிடத்திலிருக்கின்ற தனித்தன்மைக்கு காரணம் அவரிடத்திலிருக்கின்ற குணங்களினால் தவிர வேறுவிதத்தில கிடையாது. நிறைவேறக்கூடிய ஆசைகளை உடையவர். சத்யமான இச்சைகளை உடையவர். வீண்போகாத சத்யமான தீர்மானமுடையவர் என்ற லட்சணங்களையுடையவர் ஈஸ்வரன் என்று ஸ்ருதியும் கூறுகிறது.
ஈஸ்வரனிடம் நித்ய ஞானம் போன்றவைகள் இருந்தால் அவருக்கு எல்லா நேரத்திலும் ஸ்ருஷ்டிதான் செய்து கொண்டிருப்பார். எனவே ஹிரண்யகர்ப்பன்தான் ஈஸ்வரன் இவர் சமஷ்டி சூட்சும சரீரங்களுக்கு அதிபதியாவார். சமஷ்டி சூட்சும சரீரங்களுடன் கூடியிருக்கிறார்.
பிருஹதாரண்ய உபநிஷத்தில் உள்ள உத்கீதப்பிரமாணத்தில் அந்த ஹிரண்யகர்ப்பனின் பெருமையானது மிகவும் நன்றாக கூறபட்டிருக்கிறது. பிராண சக்தியாக இருப்பதால் அனைத்தையும் தாங்கும் சக்தியாகவும் வேத வாக்கியத்தை உச்சரிப்பதற்கு பிராணன் அவசியமாக இருக்கின்றது. உடலுறுப்புக்கள் நன்றாக இயங்க வேண்டுமென்றால் பிராண சக்தி தேவைப்படுகிறது என்று ஹிரண்யகர்ப்பனுடைய பெருமை கூறப்பட்டிருக்கிறது. இவருக்கு காம-க்ரோதங்கள் இல்லாததால் சூட்சும சரீரம் இருந்த போதிலும் அவருக்கு ஜீவன் என்கின்ற தன்மை வராது. காரணம் கர்மம் போன்றவைகள் ராக-துவேஷங்கள், சுக-துக்கங்கள் போன்ற சம்சாரம் அவருக்கு கிடையாது.
ஈஸ்வரன் என்பவர் சமஷ்டி ஸ்தூல சரீரமான விராட் என்பவர்தான் என்ற மதத்தை சார்ந்தவர்கள். ஸ்தூல சரீரம் இல்லாமல் வெறும் சூட்சும சரீரம் மட்டும் நாம் எங்கும் பார்ப்பதில்லை. எனவே சமஷ்டி ஸ்தூல சரீரத்தை கொண்ட விராட் என்ற தத்துவம்தான் ஈஸ்வரன். எல்லா பக்கங்களிலும் தலை முதலிய உறுப்புக்கள் கொண்டவராக இருக்கிறார். அந்த ஈஸ்வரன் ஆயிரக்கணக்கான தலைகளை உடையவர். எல்லா பக்கங்களிலும் கண்களுள்ளவர் என்று வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்று எப்பொழுதும் விஸ்வரூபமான விராட்டை தியானிப்பவர்கள் கூறுகிறார்கள். எல்லாவிடத்திலும் கை, கால்கள் இருப்பதாக சொன்னால் சிறு புழுக்களும் ஈஸ்வரனாகி விடும். ஆகையால் நான்கு முகத்தையுடைய பிரம்மதேவன்தான் ஈஸ்வரன் வேறு யாருமில்லை, வேறு எந்த புருஷனும் ஈஸ்வரனல்ல.
புத்திரன் வேண்டும் என்ற காரணத்தினால் அவரை உபாசிக்கின்றவர்கள் இவ்விதம் சொல்கிறார்கள். ‘பிரஜைகளுக்கு அதிபதியாயிருப்பவர்’ ‘பிரஜைகளை ஸ்ருஷ்டித்தவர்’ என்பது முதலான வேத வாக்கியங்களை எடுத்துக் கூறுகிறார்கள்.
விஷ்ணுவினுடைய நாபியிலிருந்து தோன்றிய தாமரையில் பிறந்தவராக பிரம்மா இருக்கிறார். ஆகையால் விஷ்ணுதான் ஈஸ்வரன் என்று உலகத்தில் பாகவத ஜனங்கள் சொல்கிறார்கள். சிவனுடைய பாதத்தை தேடிக் கண்டுபிடிக்க விஷ்ணு சக்தியற்றவராக இருந்தார். ஆகையால்தான் விஷ்ணு ஈஸ்வரனல்ல, சிவன்தான் ஈஸ்வரன் என்று ஆகமங்களை பிரமாணமாக கொண்டவர்கள் சொல்கிறார்கள். சிவபெருமான் கூட முப்புரத்தை அழிப்பதற்காக கணபதியை பூஜித்தார். ஆகையால் வினாயகரை ஈஸ்வரன் என்று கணபத்ய மதத்தில் இருப்பவர்கள் கூறுகிறார்கள்.
இவ்விதம் மற்றவர்களும் தன்னுடைய பட்சத்தில் உள்ள அபிமானத்தால் வெவ்வேறாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். மந்திரங்கள், அர்த்த வாதங்கள், தேவதா ஸ்துதிகள், ரிஷி வாக்கியங்கள் முதலானவைகளை ஆதாரமாக வைத்துக் கொண்டு இவ்வாறு கூறுகிறார்கள்.
அந்தர்யாமில் ஆரம்பித்து மரம், செடி வரை ஈஸ்வரன் வியாபித்து இருக்கிறார் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். அரசமரம், எருக்க செடி, மூங்கில் முதலியவைகளை குலதெய்வமாக வணங்கப்படுகின்ற வழக்கம் இருக்கின்றதால் இவ்வாறு கூறுகிறார்கள்.
தத்துவத்தை நிச்சயம் செய்ய வேண்டும் என்று ஆசையுடன் அணுக வேண்டும். யுக்தியை பயன்படுத்தியும், உபநிஷத் உபதேசத்தை வைத்துக் கொண்டும் விசாரம் செய்ய வேண்டும். இவ்விதம் முயற்சித்தால் ஒரேவொரு சரியான அறிவுதான் அடைவோம். அந்த அறிவானது இனிமேல் சொல்லப்படுகிறது.
மாயையைப் பற்றிய விசாரம்
பிரகிருதியை மாயை என்று அறிந்து கொள்ள வேண்டும். இங்கே பிரகிருதி என்பது இந்த உலகத்துக்கு உபாதான காரணமானது எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மாயையை தன்னுடைய சக்தியாக வைத்திருப்பவர், நிமித்தக் காரணமாக இருப்பவர் மகேஸ்வரன். அவர் மாயையை தன் வசத்துக்குள் வைத்திருக்கிறார். அவருடைய அம்சமாக விளங்குகின்ற ஜீவர்களால் அனைத்தும் போக்கிய உலகப் பொருட்களால் வியாபிக்கப்பட்டிருக்கிறது. ஈஸ்வரன் தன்னுடைய சைதன்யத்தை உலக முழுவதும் வியாபிக்க வைத்திருக்கிறார். படைக்கப்பட்ட போக்கியப் பொருட்களை அனுபவிக்கும் போக்தாவாக ஜீவர்கள் இருப்பதற்கு தன்னுடைய சைதன்ய தன்மை ஜீவர்களிடம் வெளிப்படுத்தி இருக்கிறார்.
இவ்விதம் ஸ்ருதியின் துணைக்கொண்டு ஈஸ்வரன் விஷயத்தில் சரியான அறிவை நிச்சயம் செய்து கொள்ள வேண்டும். அப்படி செய்யும் போது யாரிடத்திலும் விரோதம் ஏற்படாது. ஈஸ்வரனைப் பற்றி பலவிதமாக வாதிப்பவர்களிடமும் விரோதம் ஏற்படாது.
இந்த மாயையானது தமோ குண ரூபமாக இருக்கின்றது. அக்ஞான ஸ்வரூபமாக இருக்கின்றது என்று தாபனீயம் என்ற உபநிஷததில்; சொல்லப்பட்டிருக்கிறது. நம்முடைய அனுபவம்தான் பிரமாணமாக இருக்கின்றது என்றும் உபநிஷத் சொல்கிறது.
மாயையின் தமோ ரூபம், அனுபவம் விளக்கப்படுகிறது. அனுபவிக்கின்ற பொருட்களின் ஜடத்தன்மையை நன்கு தெரிந்து கொண்டுதான் அனுபவிக்கின்றோம். சேதனமான மனம் மோக வசத்தில் இருப்பதையும் அறிந்து கொள்கின்ற அனுபவமும் நமக்கு இருக்கிறது. ஜட ஸ்வரூபமாகவும், மோக ஸ்வரூபமாகவும் மாயை இருக்கிறது என்ற அனுபவ பிரமாணம் இருக்கிறது என்று ஸ்ருதி கூறுகிறது. அனைவருக்கும் மிகத்தெளிவாக இந்த அனுபவம் இருக்கின்ற காரணத்தால் இந்த வேதமானது, மாயையை எல்லோருக்கும் பொதுவாக இருப்பதாக கூறுகிறது. எல்லோரும் மாயையின் லீலையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பானை முதலியவற்றில் இருக்கின்ற உணர்வற்ற, அறிவற்ற தன்மை உடையவைகளை ஜட ஸ்வருபம் என்று கூறப்படுகிறது. நம்முடைய புத்தியானது மழுங்கிய தெளிவற்ற நிலையை அடைந்து தவறான முடிவை எடுக்கும் நிலையே மோகம் என்று அழைக்கப்படுகிறது. அக்ஞானிகளுடைய பார்வையில் இந்த மாயா தத்துவம் அனைவராலும் அனுபவிக்கப்படுவதாக இருக்கிறது. யுக்தியின் அடிப்படையில் மாயை அனீர்வாச்யமாக இருக்கிறது. இது அஸத்தாகவும் இல்லை, ஸத்தாகவும் இல்லை என்று உபநிஷத் கூறுகிறது. அனீர்வாச்யம் என்பதற்கு இப்படிபட்டது என்று விளக்க முடியாதது என்பது பொருளாகும்.
விசாரம்:
இந்த மாயையை மூன்றுவிதமாக புரிந்து கொள்ள வேண்டும். அவைகள் துச்சா, அனீர்வாச்யம், வாஸ்தவீ ஆகியவைகளாகும். மாயையை அறிவின் அடிப்படையில் மூன்றுவிதமாக புரிந்துக் கொள்ளப்படுகிறது. 1. பாமர மக்களின் அறிவின்படி மாயா இருக்கிறது என்று அறியப்படுகிறது. 2.யுக்தியை பிரதானமாகக் கொண்டு மாயையை இருக்கிறது என்றும் சொல்லவில்லை, இல்லையென்றும் சொல்லவில்லை. அதாவது (அனீவாச்யமாக) விளக்க முடியாததாக இருக்கிறது 3. ஆத்ம ஞானத்தை அடைந்த ஞானி ஸ்ருதியை பிரமாணமாகக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கும் ஞானிக்கு இது இல்லவே இல்லை.
மனம் எதை அறிவைக் கொடுக்கும் கருவியாக பயன்படுத்துகின்றதோ அதைப் பொறுத்து மாயையின் லட்சணம் அமைகின்றது. உபநிஷத் போதனையின் மூலமாக அறியும் போது அது இல்லை என்றும், விசாரம் செய்பவர்களின் பார்வையில் இது அனீர்வாச்யம் என்றும், பிரத்யக்ஷ பிரமாணம் அடிப்படையில் பார்ப்பவர்களின் பார்வையில் அது உண்மையானது என்று மூன்றுவிதமாக மாயை பார்க்கப்படுகிறது.
மாயையினால் தனித்து இயங்க முடியாது. ஏனெனில் அது நாம ரூபங்களாக இருக்கின்றது. நாம் ரூபங்கள் காரணத்தை சார்ந்திருக்கும். மாயை பிரம்மத்தை சார்ந்திருக்கின்றது. மாயை தனித்திருக்க முடியாததாக இருக்கிறது. பிரம்மன் இல்லாமல் இந்த மாயையானது இருக்க முடியாது. களிமண் இல்லாமல் பானை இல்லாதது போல இந்த மாயை சுதந்திரமாக இருப்பது போலவும் காட்சியளிக்கிறது. அஸங்கமான சைதன்யத்தை மறைத்து வேறொன்றாக மாற்றிக்காட்டுவதால் கூடஸ்தனை மறைத்து ஜீவனை சம்சாரியாக வைத்திருக்கிறது.
மாறுதலை அடையாத கூடஸ்தனாகவும், எதனோடும் சம்பந்தப்படாததாக இருக்கின்ற சைதன்யத்தை தோன்றிக் கொண்டிருக்கும் உலகமாக மாற்றுகிறது. ஆத்மா பிரதிபிம்பித்து கொண்டிருக்கும் சிதாபாஸனாக இருந்து கொண்டு ஜீவனையும், ஈஸ்வரனையும் மாற்றிக் காட்டுகின்றது. கூடஸ்தனை எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்படுத்தாமல் இந்த உலகம் முதலியவற்றை மாயை உருவாக்கி காட்டுகிறது. செய்ய முடியாததை செய்து காட்டுகின்ற மாயையில் இந்த மாதிரி ஆச்சரியம் இருக்கிறது.
மாயையின் இந்த செய்ய முடியாததை செய்து காட்டுகின்ற இந்த குணம் அதனிடத்தில் இயல்பாகவே இருக்கின்றது. வேறெங்கு இருந்தும் இதற்கு வரவில்லை. எப்படி நீருக்கு திரவமாயிருக்கும் தன்மையும், நெருப்புக்கு உஷ்ணமும், கல்லுக்கு கடினத் தன்மையும் அவைகளில் இயல்பாகவே இருக்கின்றது போல மாயையின் இடத்தில் இந்த தன்மை இயல்பாக இருக்கிறது.
எதுவரை மக்கள் ஈஸ்வரனை, பிரம்ம தத்துவத்தை, மாயையை மிகத்தெளிவாக அறியவில்லையோ அதுவரை இந்த மாயை நம் மனதிற்கு ஆச்சரியத்தைக் கொடுத்து கொண்டிருக்கும். இதை நன்கு அறிந்து கொண்ட பிறகு மாயை அமைதியை அடைந்து விடுகிறது. மனதிற்கு எந்தவித ஆச்சரியத்தையும், பந்தத்தையும் கொடுக்கும் சக்தியிழந்து விடும், இல்லாததாகி விடும்.
ஆச்சரியத்தையே உடலாக கொண்டுள்ள மாயையானது கேள்வி ரூபமாக இருக்கிறது. இதனிடமிருந்து விடுவித்துக் கொள்வதற்கான பரிகாரத்தைத்தான் தேட வேண்டும். மாயைப்பற்றிய அறிவு வந்துவிட்டால் சரியான கடும் முயற்சியுடன் பரிகாரத்தை தேட வேண்டும். மாயையினுடைய தன்மை நாம் உறுதியாக அறிந்து கொள்ள வேண்டும். அதை நிச்சயம் செய்து கொள்வாயாக. உலகத்தில் இருக்கின்ற மாயையையும், அதன் தன்மையையும் கவனித்து அறிந்து கொள்வாயாக. எந்தவொன்று மிகத்தெளிவாக தெரிகிறதோ அந்த தோற்றத்தை விளக்க முடியாது. அது இருக்குமென்றும் சொல்ல முடியாது, இல்லையென்றும் சொல்ல முடியாது. இதுதான் மாயை, இதை இந்திரஜாலம் என்று உலக மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
இந்த உலகமானது மிகத்தெளிவாக தோன்றிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதன் தோற்றத்தை நிரூபிக்க முடியாது. ஆகவே இந்த உலகமானது மாயாமயமாக இருக்கின்றது. இந்த மாதிரி எந்த கருத்தையும் சாராமல் நடுநிலையோடு பார்த்து புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையை போன்று இதற்கு மேல் வேறென்ன மாயாஜாலம் இருக்க முடியும். கர்ப்பத்தில் சிசு வாழ்ந்து கொண்டிருத்தல் ஆணுடைய விந்து உயிருள்ள சிசுவாக மாறுகிறது. கை, கால், தலை, பாதம் போன்று விதவிதமான உறுப்புக்கள் அந்த சிசுவில் உருவாகிக் கொண்டு இருக்கிறது. சிசு வெளியே வந்த பிறகு குழந்தைப் பருவம், இளமை, முதுமை இப்படிபட்ட விதவிதமான வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறது. பார்த்தல், கேட்டல், சாப்பிடுதல், நுகர்தல் அதுபோல போகுதல், வருதல் போன்ற செயல்கள் எல்லாமே மாயாஜாலமாகத்தான் இருக்கிறது.
ஜீவனின் உடலைப் போல, ஆலமரத்தின் விதையிலிருந்து மரம் வெளிவருவதை நன்கு யோசித்து பார்த்தால் எப்படி இந்த விதைக்குள் இவ்வளவு பெரியமரம் வெளி வந்துள்ளது. ஆகவே இவையெல்லாம் மாயையின் செயல்பாடுகள் என்று நிச்சயம் செய்து கொள்.
மாயை என்பது மரம் விதையிலிருந்து வெளிப்படுவதற்குரிய சக்தி இருப்பது போல இந்த ஜகத்தும் வெளிப்படுவதற்கு தேவையான சக்தியை உடையது என்று நிச்சயித்து தெரிந்து கொள்ளலாம். இந்த மாயை என்கின்ற விதையானது ஒன்றாகத்தான் இருக்கிறது. நம்முடைய ஆழ்ந்து உறக்கத்தில் மாயாயின் விதை ஸ்வரூபமானது அனுபவிக்கப்படுகிறது. எப்படி மரமானது விதைக்குள் ஒடுங்கி இருக்கின்றதோ அதுபோல இந்த உலக முழுவதும் உள்ள வாஸனா ரூபங்கள் அந்த மாயையில் நன்கு ஒடுங்கியிருக்கின்றது.
அந்தக்கரணத்திலுள்ள வாஸனா ரூபமாக இருக்கின்ற காரண சரீரங்களில் சைதன்யமானது பிரதிபிம்பிக்கின்றது. மேகத்திலுள்ள நீர்த்துளிகளில் பிரதிபிம்பிக்கின்ற ஆகாசத்ததை போல புலன்களால் நேரடியாக அனுபவிக்க முடியாத சிதாபாஸமானது முமுக்ஷுக்களான உங்களால் அனுமானம் செய்யப்படட்டும். இங்கே ஈஸ்வர தத்துவத்தை குறிப்பிடுகின்றார்.
அந்தக்கரணம் காரண சரீரத்திலிருந்து வந்துள்ளதால் புத்தி வாசனைகளின் காரியமாக புரிந்து கொள்ளலாம். காரியத்தின் தன்மை காரணத்திலும் இருக்கும். அதுபோல காரியமான அந்தக்கரணத்தில் சிதாபாஸன் இருப்பதால் காரண சரீரத்திலும் இருக்கும் என்று அனுமானம் செய்யப்படுகின்றது. அந்த காரண சரீரம் சிதாபாஸத்துடன் கூடியதுதான் எனவே அதுதான் ஈஸ்வர சைதன்யம். காரண சரீரம்தான் சூட்சுமசரீரமாக, அந்தக்கரணமாக உருவாகி இருக்கிறது. ஆகவேதான் அந்தக்கரணத்தில் சிதாபாஸமானது மிகத் தெளிவாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
ஜீவனும், ஈஸ்வரனும் மாயையிலிருக்கின்ற மித்யா தன்மையோடு கூடிய சைதன்ய பிரதிபிம்பத்தின் துணைக் கொண்டு தோற்றவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று உபநிஷத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது. எனவே இவர்களிருவரும் மித்யா என்று புரிந்து கொள்ள வேண்டும். மேகத்திலுள்ள ஆகாசத்தையும், குடத்திலுள்ள நீரில் உள்ள ஆகாசத்தைப் போல இவையிரண்டும் மிகத்தெளிவாக நிலைநாட்டப்பட்டு உள்ளது.
மேகங்களை மாயைக்கும், மேகத்திலுள்ள நீர்த்துளிகளை காரண சரீரத்திலுள்ள கணக்கிலடங்காத சம்ஸ்காரங்களாகவும், மேகத்திலுள்ள நீர்த்துளிகளில் பிரதிபிம்பிக்கின்ற ஆகாசத்தை வாசனைகளில் பிரதிபிம்பிக்கின்ற சிதாபாஸத்திற்கு ஒப்பிடப்படுகிறது.
மாயையை தன் வசத்தில் வைத்திருப்பதால் ஈஸ்வரனை மாயீ என்றும் அழைப்பர்.
2. மஹேஸ்வரன் - அனைத்து சக்திகளையும் கொண்டுள்ளவர்
3. அந்தர்யாமி - அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் இருந்து கொண்டு ஆள்பவர்
4. சர்வக்ஞர் - அனைத்தையும் அறிபவர்
5. ஜகத்யோனி - ஜகத்துக்கு உபாதான காரணமாக இருப்பவர்
“ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்ற ஆனந்தமயத்தில் ஆரம்பித்து” இவ்விதமாக மாண்டுக்ய உபநிஷத்திலும், “இவரே சர்வக்ஞர்;” என்று வேறொரு உபநிஷத்திலும் ஈஸ்வரனை பற்றி கூறப்பட்டிருக்கிறது. இந்த ஈஸ்வரன் எந்த உலகத்தை படைத்திருக்கிறாரோ அதை வேறுவிதமாக மாற்றுவதற்கு எந்தவொரு மனிதனுக்கும் சக்தி கிடையாது. இதிலிருந்து இவர் சர்வேஸ்வரன் என்று உபநிஷத் மூலம் புரிந்து கொள்ளலாம்.
நாம் அடைந்த அறிவெல்லாம் வாசனையாக மனதில் இருப்பதால் நம்மால் அவைகளை தேவையான நேரத்தில் பயன்படுத்தி கொள்ள முடிகிறது. நாம் அறிந்து வைத்திருப்பவைகளை மட்டும்தான்; அறிய முடியும். ஆனால் ஈஸ்வரன் எல்லா ஜீவர்களின் வாசனைகளும் அவரிடத்தில் இருப்பதால் அவரால் அனைத்தையும் அறிய முடிகிறது. அனைத்து ஜீவராசிகளின் புத்தியினுடைய வாசனைகள், காரண சரீரத்தில் இருக்கின்றது. அந்த வாசனைகள் மூலமாக அனைத்தையும் அறிகின்றார், அறிபவராக இருக்கின்றார். இவ்வாறாக உபநிஷத்தில் கூறப்பட்டிருக்கிறது.
நம் மனதிலுள்ள வாசனைகளெல்லாம்; புலன்களுக்கு அப்பால் இருக்கிறது. எனவே இவைகளை பிரத்யக்ஷமாக அறிய முடியாது. ஈஸ்வரனுடைய உபாதியாக இருக்கின்ற வாசனைகளில் வெளிப்படுகின்ற சைதன்ய ஸ்வரூபமான ஈஸ்வரனை அறிய முடியாது. எல்லா ஜீவராசிகளினுடைய புத்தியிலுள்ள வாசனைகளை அறிந்தால் அனைத்தையும் அறிந்தவராக முடியும் என்ற அனுமானத்தினால் ஈஸ்வரனுடைய சர்வக்ஞத்தன்மையை புரிந்து கொள்ளலாம்.
விக்ஞானமயத்திலிருந்து ஆரம்பித்து மற்ற அனைத்து கோசங்களிலும் இருந்து கொண்டு அதாவது ஜீவனுக்குள் இருந்து கொண்டு மேலும் வெளியேயுள்ள பூமி முதலிய சமஷ்டிக்குள்ளும் இருந்து கொண்டு அனைத்தையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டிருப்பதால், அவருக்கு அந்தர்யாமி என்ற தன்மை இருக்கிறது. நம்முடைய புத்திக்குள் இருந்து கொண்டு, அதற்கு காரணமாக சூட்சுமமாக இருந்து கொண்டு புத்தியினால் அறியப்பட்டவராகவும் இருந்து கொண்டு இருக்கிறார். புத்தியையே உடலாக கொண்டிருக்கிறார். புத்தியில் இருந்து கொண்டு தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் அனைத்தையும் வைத்திருக்கிறார் என்று வேதத்தில் கூறப்பட்டு இருக்கிறது. எவ்விதம் துணிக்கு நூலானது உபாதான காரணமாக இருக்கிறதோ அவ்விதம் அனைத்திற்கும் உபாதான காரணமாக இருப்பதால் இந்த அந்தர்யாமி எல்லாவிடத்திலும் இருந்து கொண்டு இருக்கின்றார். துணியைக்காட்டிலும் சூட்சுமமானது அதற்குள் இருக்கின்ற நூல். நூலைக்காட்டிலும் சூட்சுமமாக இருக்கிறது அதனுள்ளே இருக்கின்ற பஞ்சு-துகள்கள். இந்த மாதிரி சூட்சுமமாகிக் கொண்டிருக்கும் நிலை எங்கு முடிவடைகிறது என்று அனுமானம்தான் செய்ய முடியும். நேரிடையாக அறிய முடியாது.
காரிய-காரண நிலைகளை இரண்டு, மூன்று நிலைகள் வரை இவைகளை அறிந்து கொள்ள முடியும். இந்த ஈஸ்வரன் கண்ணுக்கு தெரிந்து கொள்ள முடிகின்ற இரண்டு, மூன்ற நிலைவரைதான் அறிந்து கொள்ள முடியும். அதற்கு மேல் சென்றுவிட்டால் புலன்களால் கிரகிக்க முடியாது அளவுக்கு இருக்கும். எனவே இவைகளை யுக்தியின் மூலமாகவும், ஸ்ருதியின் மூலமாகவும்தான் அறிந்து கொள்ள முடியும்.
நூலானது துணிரூபமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இதை துணி நூலுக்கு உடலாக இருக்கிறது என்று சொல்லலாம். அதுபோல இந்த அந்தர்யாமிக்கு அனைத்துமே சேர்ந்து உடலாக இருக்கிறது. அனைத்துக்கும் உபாதான காரணமாக இருந்து கொண்டு அனைத்து ரூபமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. நூலை மடிப்பது, விரிப்பது, அசைப்பது அதனால் உருவாகியிருக்கும் துணிக்கும் அதேபோல கண்டிப்பாக நடக்கிறது. இதிலிருந்து துணிக்கு தனியாக சிறிதளவு எதுவும் பண்ண முடியாது. அந்த சுதந்திரம் கிடையாது.
மேற்கண்ட உதாரணத்தின்படி துணிக்கு எந்தவித சுதந்திரம் இல்லையோ அதுபோல இந்த அந்தர்யாமியானவர் எவ்விதம் எந்த வாசனையின் துணைக் கொண்டு மாற்றம் அடைகிறாரோ அப்படியேதான் அனைத்தும் மாற்றமடைகிறது என்பதில் சந்தேகம் கிடையாது. நாம் அனுபவிக்கும் வாழ்க்கை முறை ஈஸ்வரனால் வகுக்கப்பட்டது. எனவே அதனால் அடையும் இன்ப-துன்பங்கள் நம்முடைய வாசனைகளின் அடிப்படையில்தான் நமக்கு வருகின்றது. எனவே யாரையும் குறை சொல்லாமல் ஈஸ்வர பிரசாதமாக எடுத்துக் கொண்டு அனுபவித்து தீர்க்க வேண்டும்.
அர்ஜுனா! எல்லா ஜீவராசிகிளினுடைய இதயத்தில் ஈஸ்வரன் அமர்ந்திருக்கிறார். ஒரு இயந்திரத்தை இயக்குவது போல எல்லா ஜீவராசிகளையும் இயக்கி கொண்டு இருக்கிறார். ஸர்வபூதானாம் என்ற சொல்லுக்கான விளக்கம் இதில் கூறப்பட்டிருக்கிறது. ஸர்வபூதானி என்பது விக்ஞானமய கோசம்தான். ஜீவனையே விக்ஞானமய கோசமாக சொல்லப்படுகிறது. அந்தர்யாமியான ஈஸ்வரன் விக்ஞானமய கோசமாக பரிணாமம் அடைந்திருக்கிறார். இந்த விக்ஞானமயத்தின் இருப்பிடம் இதயமாகும். ஈஸ்வரன் எல்லா ஜீவர்களின் இதயத்திலும் இருந்து கொண்டு இருக்கிறார் என்று புரிந்து கொள்ள முடிகிறது. இந்த விக்ஞானமயத்திற்கே உபாதான காரணமாக இருப்பதால் அவரே காட்சியளிக்கிறார் என்று அறிய முடிகிறது. அந்தந்த கர்மத்திற்கேற்ற விதத்தில் விதவிதமாக அந்தர்யாமி மாற்றமடைந்து தோற்றத்தை அடைந்திருக்கிறார். அந்தர்யாமியே ஜீவனாக மாறி இயக்கிக் கொண்டிருக்கிறார்.
தேகம் கூடு போன்ற இயந்திரம். தேகம் என்பது மூன்று சரீரங்களும் சேர்ந்த கூடு போன்ற அமைப்புடையது என்று சொல்லப்படுகிறது. இந்த இயந்திரத்தில் ஏறி அமர்வது என்பது அந்த உடல் கூட்டின் மீது வைத்திருக்கின்ற அபிமானமாகும். வேத சாஸ்திரம் உரைக்கின்ற தர்ம, அதர்ம செயல்களையெல்லாம் ஈஸ்வரன் வகுத்த நியதிப்படித்தான் ஜீவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஈஸ்வரனே விக்ஞானமய ஸ்வரூபமாக, ஜீவ ஸ்வரூபமாக மாறியிருக்கிறார். ஜீவனுடைய செயல்தன்மையாகவும் இருந்து கொண்டு அந்தந்த ஜீவர்களின் காரண சரீரத்தில் இருக்கின்ற சம்ஸ்காரங்களின் சக்தியின் துணைக் கொண்டு ஈஸ்வரன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இதுதான் மாயையினால் ஆட்டி வைத்தல் என்பதற்கு பொருள். மாயையினால் ஜீவன் அலைந்து திரிந்து செயல்பட்டுக் கொண்டு இருக்கிறான்.
இப்படி சொல்வதைதான் உபநிஷத்தில் அந்தர்யாமி என்று குறிப்பிடப்படுகிறது. நீர், நிலம் போன்ற அனைத்திடத்திலும் இதே நியாயத்தை புத்தியினால் புரிந்து கொள்ள வேண்டும். சமஷ்டி விஷயத்தில் ஈஸ்வரன் இவ்வாறு செயல்படுகிறார். எல்லா ஜீவராசிகளும் இயற்கை சக்திகளும் ஈஸ்வரனால் இயக்கப்படுத்தப்பட்டு செயல்பட்டு கொண்டிருக்கிறது. எனவே எல்லாமே நம் இச்சைப்படி நடக்கவில்லை. சம்ஸ்காரத்தின் அடிப்படையில் நம்முடைய செயல்கள் அமைகின்றது.
தர்மம் எதுவென்று எனக்கு தெரிந்திருந்தாலும் என்னால் தர்மவழியில் செயல்பட முடியவில்லை. அதேபோல எது தர்மம் என்பதும் எனக்கு நன்றாக தெரியம். இருந்தாலும் என்னால் அதர்ம செயல் செய்வதிலிருந்து விடுபட முடியவில்லை. ஏதொவொரு சக்தியானது இதயத்தில் இருந்து கொண்டு எதைச் செய்ய தூண்டுகிறதோ அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன் என்று துரியோதனன் இறக்கும் நிலையில் இருக்கும் போது சொல்லப்பட்டதாகும்.
சுதந்திரமாக இயங்குதல் என்ற நிலையே கிடையாதா என்ற சந்தேகப்பட தேவையில்லை. ஈஸ்வரனே நம்முடைய சுதந்திரமாக செயல்படும் நிலையாகவும் மாறியிருக்கிறார். அடைய வேண்டிய புருஷார்த்தமாக அவர் இருக்கிறார்.
மேற்சொன்னபடி அறிவதனால் நம்மிடத்து எழும் கேள்வியான ஈஸ்வரனுடைய அனைத்தையும் ஆளக்கூடிய சக்தியானது நீக்கப்படவில்லை. மேலும் இந்த ஈஸ்வரனைப் பற்றியும் இப்படிப்பட்ட அறிவினால் நம்முடைய ஸ்வரூபம் எதனோடும் சம்பந்தப்படாத ஸ்வரூபம் என்கின்ற அறிவு ஏற்படும்.
இந்த ஞானத்தினாலேயே (நான் அஸங்கமானவன்) முக்தியை, மோட்சத்தை அடைந்திடலாம் என்று உபநிஷத் கூறுகின்றது. ஈஸ்வரன் ஆணையிடுபவராகவும் இருக்கிறார். ஈஸ்வரனுடைய ஆணைகள் வேதத்தின் மூலமாகவும், ஸ்ம்ருதி மூலமாகவும் பிறப்பிக்கிறார். ஸ்ருதியிலும், ஸ்ம்ருதியிலும் கூறப்பட்டவைகள் எல்லாம் என்னுடைய கட்டளைகள்தான் என்று பகவான் ஈஸ்வரன் பேசியிருக்கிறார்.
ஈஸ்வரனுடைய ஆணைகளே பயத்திற்கு காரணமாக இருக்கின்றன. காற்று போன்ற இயற்கை சக்திகளும் தேவர்களும் ஈஸ்வரனை கண்டு பயந்து தத்தம் வேலைகளை செய்து கொண்டிருக்கின்றன என்ற அறிந்துள்ளோம். மேற்கண்ட ஈஸ்வரத் தன்மை விசாரத்தின் மூலம் சர்வேஸ்வரன் தன்மை அறிந்து கொள்ள முடிகிறது. இது அந்தர்யாமி தன்மைக்கு வேறாக இருக்கிறது.
இந்த ஈஸ்வரனுடைய ஆணையால் சூரிய, சந்திரர்களும் தத்தம் வேலையை ஒழுங்காக செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பிருஹதாரண்ய உபநிஷத்தில் யாக்ஞவல்கியர் கூறியிருக்கிறார். ஈஸ்வரன் ஜீவராசிகளின் இதயத்திற்குள்ளும் நுழைந்து அவைகளுக்கு தலைவனாக இருந்து கொண்டு செயல்படுத்திக் கொண்டு இருக்கிறார் என்று உபநிஷத் கூறுகிறது. இது தைத்திரிய உபநிஷத்தில் ஆரண்ய வல்லியில் வந்திருக்கிறது.
ஈஸ்வரன் ஜகத்தினுடைய தோற்றத்திற்கும், இருத்தலுக்கும், அழிவிற்கும் காரணமாக இருப்பதால் அவரை ஜகத்தின் உபாதான காரணமாக சொல்லப்படுகிறது. அவர் ஜகத்யோனியாகத்தான் இருந்தாக வேண்டும் என்று அறிந்து கொள்ள முடியும்.
எந்தவொன்று ஏற்கனவே லயமாகி இருக்கின்றதோ அதுவே வெளித்தோற்றத்திற்கு வருவது ஸ்ருஷ்டியாகும். அனைத்து உலகமும் ஏற்கனவே ஈஸ்வரனாகிய தனக்குள் ஒடுங்கி இருந்த வெளித்தோற்றத்திற்கு கொண்டு வருவதே ஆவீர்பாவம் என்பதாகும். ஜீவராசிகளுடைய கர்மபலன்களுக்கேற்ப இவர் வெளிப்படுகிறார். எவ்விதம் சித்திரங்கள் வரைந்துள்ள துணியை விரித்து வைத்தால் அனைத்து படங்களும் தெரிகின்றதோ அதுபோலத்தான் இது இருக்கிறது. தோன்றிய உலகங்களனைத்தையும் தனக்குள் ஒடுக்கி வைத்து கொள்கிறார். ஜீவராசிகளின் கர்மபலன்கள் நாசம் அடையும்போது சமஷ்டி பிராரப்த கர்மபலன்கள் தீர்ந்ததும் எவ்வாறு வரைபட துணியை மடித்து வைக்கும்போது அதிலுள்ள படங்கள் மறைந்து விடுகின்றதோ அதைபோல தனக்குள் ஓடுக்கிக் கொள்கிறார்.
இந்த ஸ்ருஷ்டியும், லயமும் இரவு-பகல், தூக்கம்-விழிப்பு, கண்ணை மூடுதல்-திறத்தல், மனம் சும்மா இருப்பது-எதையாவது கற்பனை செய்து கொண்டிருப்பது போன்றுதான் இருக்கிறது. ஸ்ருஷ்டி, லயம் என்கின்ற சக்திகளை உடையவராக இருக்கின்ற காரணத்தாலே ஆரம்ப வாதம், பரிணாம வாதம் இவைகளின் மூலம் கேட்கின்ற கேள்விகளுக்கே இடமில்லை. ஆரம்ப வாதம் என்பது அஸத் காரிய வாதம் இல்லாததிலிருந்து உலகம் தோன்றியது என்று சொல்வது. இருத்தலே வேறுவிதமாக மாறி தோன்றி இருக்கிறது என்கின்ற வாதமே பரிணாம வாதம். இந்த இரண்டு வாதங்களின் கருத்துக்கே இங்கே இடமில்லை.
போக்யம் எப்தொழுதுமே ஜடமாகத்தான் இருக்கும். போக்தா உணர்வுபூர்வமாக இருப்பான். இவையிரண்டுக்கும் ஈஸ்வரன் எப்படி காரணமாக இருக்க முடியும் என்ற கேள்வி எழுகின்றது. மாயா என்கின்ற உபாதியின் அடிப்படையில் ஜடமான உலகத்திற்கு காரணமாக இருக்கின்றான். சைதன்ய பிரதிபிம்பத்தின் அடிப்படையில் ஜீவர்களுக்கும் காரணமாகவும் இருக்கின்றான். ஜடமான பொருட்களுக்கு காரணமாகின்றார். ஈஸ்வரன் அவருடைய ஜட அம்சததின் அடிப்படையில், மாயா சக்தியின் அடிப்படையில் அசேதன பொருட்களுக்கு காரணமாகின்றார். அதே ஈஸ்வரன் மாயைக்குள் பிரதிபிம்பிக்கின்ற சைதன்ய ஸ்வரூப அடிப்படையில் ஜீவராசிகளுக்கும் இவர் உபாதான காரணமாக இருக்கின்றார்.
ஈஸ்வர-பிரம்ம விசாரம் செய்யப்படுகிறது.
அன்யோன்ய அத்யாஸம் என்பது இரண்டு பொருட்களின் தன்மைகளானது ஒன்றின் மீது மற்றொன்றை ஏற்றி வைப்பதாகும். காய்ச்சிய இரும்பு குண்டு சுடுகிறது. இதில் நெருப்பின் சுடுகின்ற தன்மை இரும்பில் ஏற்றி வைக்கப்படுகிறது. இந்த அத்யாஸத்தை ஈஸ்வரனிடத்தில் செய்து இருக்கின்றோம். எப்படி ஜீவனுக்கும், கூடஸ்தனிடத்திலும் அன்யோன்ய அத்யாஸம் செய்திருக்கின்றோமோ அதேபோல ஈஸ்வரனிடத்திலும் செய்து இருக்கின்றோம். நாம் ஈஸ்வரனுக்கும், பிரம்மத்திற்கும் இடையே அத்யாஸம் செய்திருக்கிறோம் என்று முடிவு செய்துதான் அவர் இவ்விதம் கூறுகிறார்.
அறியாமையுடன் இருக்கும் போது இந்த விஷயத்தில் (ஈஸ்வர-பிரம்ம) பிரம்மத்திற்கு காரணமாக இருக்கிறார் என்ற அறிவுடன்தான் இருப்போம். உபாதான காரணமாக இருக்கின்ற ஈஸ்வரனிடத்தில் சத்யத்வம் இருக்கிறது என்ற அறிவுடன் இருப்போம். இதிலிருந்து இந்த இருவர் இரண்டுக்குமிடையே அன்யோன்ய அத்யாஸம் நம்மையறியாமலே செய்திருக்கின்றோம் என்று அறிந்து கொள்ள வேண்டும். அன்யோன்ய அத்யாஸத்தினால் இவையிரண்டும் எவ்வாறு கஞ்சி போட்ட துணியானது கெட்டியாக மாறுகின்றதோ, தூய்மையான துணியானது, கஞ்சி போட்ட துணிக்கும் வேற்றுமை தெரியாமல் ஒன்றாகி விட்டது. அதுபோல அறியாமையின் விளைவாக அத்யாஸத்தினால் ஈஸ்வரனும், பிரம்ம சைதன்யமும் ஒன்றாகி விட்டது.
மேகத்தில் பிரதிபலிக்கின்ற ஆகாசமும், மகா ஆகாசமும், இரண்டும் ஒன்றுதான். சாதாரண அறிவுடைய மக்களால் பிரித்துப் பார்க்கப்படுவதில்லை. அதுபோல பிரம்மத்திற்கும், ஈஸ்வரனுக்கும் ஒற்றுமையை பார்க்கிறார்கள் அக்ஞானத்துடன் இருப்பார்கள்.
உபக்ரமம் முதலிய அடையாளங்களை வைத்துக் கொண்டு மையக் கருத்தை விசாரம் செய்வதன் மூலமாக, ஆறவகையான அடையாளங்களால்
சத்யம், ஞானம், அனந்தம் ஆகிய லட்சணங்களையுடைய பிரம்மமானது வாக்குக்கும் மனதுக்கும் எட்டாததாக பிரம்மன் இருக்கிறது. இதிலிருந்து பிரம்மன் எதனோடும் சம்பந்தப்படாதது என்று உறுதி செய்யப்படுகிறது. மாயையை சாதகமாக உடைய ஈஸ்வரன் இந்த உலகத்தை தோற்றுவித்திருக்கிறார். ஈஸ்வரனுக்கும் வேறாக உள்ள ஜீவனும் இந்த உலகத்தில் மாயையினால் பந்தப்பட்டுள்ளான். இவ்விதம் வேறொரு உபநிஷத் கூறுகிறது. இதிலிருந்து ஈஸ்வரன் தான் படைப்பவர் என்ற கருத்து தெளிவாகிறது. சமஷ்டி ஆனந்தமயமான, மாயாமயமான இந்த ஈஸ்வரன் நான் பலவாக ஆவேனாக என்று சங்கல்பம் செய்தார். அவர் முதலில் ஹிரண்யகர்ப்ப ரூபமாக மாறிவிட்டார். ஆழ்ந்த உறக்கத்திலிருந்து கனவு நிலைக்கு வந்து விஷயங்களாலான உலகத்தை தோற்றுவிக்கின்றாரோ அவ்விதம் மாறியுள்ளார்.
இதில் ஹிரண்யகர்ப்பனுக்கு நான்கு லட்சணங்கள் சொல்லப்பட்டு இருக்கின்றது.
விடியற்காலத்திலும் மாலைப் பொழுதிலும் இந்த ஸ்தூல உலகமானது மந்தமான இருட்டில் மூழ்கியிருக்கும் போது எப்படி தோன்றுகிறதோ அதுபோல ஹிரண்யகர்ப்பனாக இருக்கும்போது ஜகத் தெளிவு இல்லாமல் காணப்படும். எவ்விதம் கெட்டி செய்யப்பட்ட துணியில் முதலில் வரையப்போகின்ற உருவங்களின் தோற்றத்தை பென்சிலால் வரையப்படகின்றதோ அதுபோல ஹிரண்யகர்ப்பனுடைய சரீரம் எங்கும் சூட்சுமமான உருவங்களால் அடையாளமிடப்பட்டிருக்கும். எல்லா பக்கங்களிலும் முளைவிட்டிருக்கும் பயிர்களோ காய்கறிகளோ எப்படி மென்மையாக இருக்குமோ அதுபோல ஜகத்தின் முளையாகிற இவர் மிகவும் மென்மையாக இருப்பார். சூரியனால் பிரகாசிக்கப்பட்ட இந்த உலகம் எவ்வாறு தெளிவாக இருக்குமோ வர்ணங்களை பூசிவிட்டு உருவங்களை உடைய துணியில் உள்ளவைகள் எவ்வளவு தெளிவாக இருக்குமோ, முழமையாக வளர்ந்த பயிரோ, செடிகளோ எப்படி தெளிவாக இருக்குமோ அப்படியே விராட் என்பவரும் தெளிவான சரீரத்தை உடையவர். விராட் ஸ்வரூபம் பகவத் கீதையில் விஸ்வரூப அத்தியாயத்திலும், புருஷ ஸுக்தத்திலும் கூட சொல்லப்பட்டிருக்கிறது. பிரம்மா முதல் சிறுபுல் வரை எல்லாவற்றையும் இவருடைய அவயவங்களாக சொல்லப்பட்டிருக்கிறது.
அந்த ஈஸ்வரனை எந்த விதத்திலெல்லாம் தியானம் செய்கின்றோமோ, உபாஸனை செய்கின்றோமோ அதற்கேற்ற பலனை அடையலாம். நாம் எந்த தேவதையை வழிபடுகின்றோமோ, எந்த முறையில் வழிபடுகின்றோமோ அதற்கேற்பதான் நாம் அடையும் பலனில் ஏற்றத்தாழ்வு இருக்கும்.
சம்சாரத்தில் அடைகின்ற பலனுக்கு வேறாக உள்ள முக்தி, மோட்சம் என்ற பலனானது பிரம்ம தத்துவத்தை அறிவதனால் மட்டும் அடைய முடியும். வேறெதனாலும் இந்த அறிவை அடைய முடியாது. கனவிலிருந்து வெளிவருவதற்கு விழித்துக் கொள்வதைத் தவிர வேறெந்த வழியும் கிடையாது. அதுபோல மெய்யறிவை அடைவதற்கு அறியாமையை நீக்குவது தவிர வேற வழியில்லை.
ஆனந்தமயமாக இருக்கின்ற ஈஸ்வரனும், விக்ஞானமயமாக இருக்கின்ற ஜீவனும் மாயையினால் கற்பிக்கப்பட்டவைகள்தான். இவர்கள் இருவர்களினால் மற்ற அனைத்தும் பொய்யாக உருவாக்கப்பட்டுள்ளது. ஜகத்தை ஸ்ருஷ்டி செய்யலாம் என்று சங்கல்பம் செய்ததிலிருந்து ஜீவனுக்குள்ளே நுழையும் வரையில் உள்ள படைப்புக்கள் ஈஸ்வரனால் பொய்யாக படைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்சாரமானது ஜீவனால் கற்பிக்கப்பட்டுள்ளது. விழிப்புநிலை விவகாரங்களில் இருந்து மோட்சம் அடையும் வரை உள்ள சம்சாரம் ஜீவனுடைய பொய்யான படைப்புக்கள்.
எப்பொழுதும் ஞானத்தில் நிலை பெற்றிருப்பவர்கள் ஞானியாக அறிந்து கொண்டு, மோட்சப் பாதையில் பயணிக்கும் அவர்களை நாம் அனைவரும் போற்றி, வணங்கி பின்பற்ற வேண்டும். ஆன்மீக பாதைக்கே வராமல் உலக விஷயங்கள்தான் சத்யம் என்று விவகாரம் செய்த கொண்டிருக்கும் அக்ஞானிகளைக் கண்டு பரிதாபப்பட வேண்டும். மோட்ச விஷயத்தில் குழப்பமடைந்தவர்களிடத்தில் வாதம் செய்யக் கூடாது.
ஆகையால் மோட்சத்தை நாடுபவர்கள் ஜீவ-ஈஸ்வரனை பற்றிய விஷயத்தை வாதம் செய்வதில் புத்தியை செலுத்தக் கூடாது. அதிகமாக விசாரம் செய்யக்கூடாது. ஆனால் பிரம்ம தத்துவத்தை விசாரத்தின் மூலம் அறிவதில்தான் புத்தியை செலுத்த வேண்டும். அந்த தத்துவத்தைத்தான் உணர வேண்டும். ஜீவ-ஈஸ்வர விசாரமானது பிரம்ம தத்துவத்தை நிச்சயம் செய்வதற்கு காரணமாக இருக்குமென்றால் இருக்கட்டும்.
தத்3, த்வம் என்ற இரண்டு சொற்களின் அர்த்தங்களும் நம்முடைய சித்தாந்தத்தில் வருவதில்லை. அத்வைதத்தை புரிய வைப்பதற்காக மட்டுமே இந்த இரண்டு சொற்களின் ஸ்வரூபங்களை வேதாந்தத்தால் விசாரம் செய்யப்படுகிறது. இது ஒரு படியாக மட்டுமே இருக்கிறது.
அனாதிகாலமாக இருக்கின்ற மாயையின் ஆவரண சக்தியினால் ஏற்பட்டுள்ள குழப்பத்தினால் ஜீவனும், ஈஸ்வரனும் முற்றிலும் வேறுபட்டவர்கள் என்று கருதுகிறார்கள். அந்த குழப்பத்தை நீக்குவதற்காக அந்த ஜீவ-ஈஸ்வர தத்துவங்களை நாம் விசாரம் செய்கின்றோம் அதை நிலைநாட்டுவதற்கு அல்ல. ஜீவ-ஈஸ்வர தத்துவங்கள் விசாரிக்க வேண்டும். ஆகவே ஏற்கனவே பொருத்தமான, சரியான, மிகத்தெளிவான உதாரணத்தின் மூலமாக கூறப்பட்டிருக்கிறது. குடாகாசம்-கூடஸ்தன், மகாகாசம்-பிரம்மன், நீருக்குள் இருக்கின்ற ஆகாசம் - ஜீவன், மேகாகாசம்-ஈஸ்வரன், என்ற உதாரணத்துடன் இந்த தத்துவங்கள் ஒப்பிடப்பட்டு விளக்கப்பட்டது.
பானைக்குள் இருக்கும் நீரும், மேகமும் ஜலாகாசமும், மேகாகாசமும் உருவாகுவதற்கு உபாதிகளாக இருக்கின்றவைகளாகும். இவையிரண்டும் (நீர், மேகம்) ஆதாரமாக இருக்கின்ற மகாகாசமும், குடாகாசமும் மிகத்தூய்மையாக இருக்கிறது.
ஆனந்தமயனும் (ஈஸ்வரனும்), விக்ஞானமயனும் (ஜீவனும்) மாயை என்கின்ற உபாதியாகவும் புத்தி(அ)அந்தக்கரணம் என்கின்ற உபாதியின் வசத்தில் இருக்கிறார்கள். இந்த இரண்டிற்கும் ஆதாரமாக மிகத் தூய்மையான ஸ்வரூபத்தை உடைய பிரம்மனும், கூடஸ்தனும் இருக்கிறார்கள்.
ஆத்மாக்களில் வேற்றுமை பார்க்கின்றதும் அதாவது பலவிதமாக இருக்கின்றது என்ற கொள்கையும் இந்த ஜகத் சத்யம் என்ற கொள்கையும் ஈஸ்வரன் ஜகத்திடமிருந்தும் ஜீவனிடம் இருந்து வேறுபட்டவர் என்ற கொள்கையும் அவர்கள் விட்டுவிட வேண்டும்.
ஆத்மா ஒன்றுதான் என்றால் ஒருவன் ஜீவன்முக்தி அடைந்துவிட்டால் எல்லா ஜீவர்களும் முக்தனாகி விடவேண்டும் அல்லது ஒரு ஜீவன் பந்த-மோட்சமென்ற சம்சாரத்திற்குள் இருந்தால் அனைத்து ஜீவர்களும் சம்சாரத்திற்குள்தானே இருந்தாக வேண்டும். மாயையைதான் ஜீவர்கள் பலவிதமாக காட்டுகிறது. பந்த-மோட்சம் என்ற நிலையிருக்க வேண்டுமென்றால் ஆத்மா பலவிதமாக இருக்க வேண்டும் என்பது தவறான கருத்து. வேதாந்தம் இதை ஏற்றுக் கொள்ளாது. இவ்வாறு மாயைக்கு பந்த, மோட்சத்தை கொடுக்கக்கூடிய சக்தியிருக்கிறது என்று நிலை நாட்டப்படுகிறது.
நடக்கவே முடியாததை நடத்தி காட்டுகிறேன் என்று மாயாஜாலக்காரன் சொல்லி காட்டுகின்ற விசித்திரமான வித்தையை நாம் பார்க்கவில்லையா! ஒன்றுக்கொன்று விரோதமானது என்று கவனிக்கவில்லையா! அதுபோலதான் மாயையும் ஜீவனிடத்தில் செய்கிறது. உண்மையான பந்தமும், மோட்சமும் என்பதை வேதமானது கொஞ்கம் கூட ஏற்றுக் கொள்வதில்லை. இதிலிருந்து பந்தமும், மோட்சமும் பொய்தான் என்று புரிந்து கொள்ள வேண்டும். பொய்யாக பந்தத்திலிருந்து விடுதலை பெற பொய்யான மோட்சத்தை அடைய வேண்டும். பந்தமும் பொய்யானது ஆனால் அனுபவத்திற்கு இருக்கின்றதால் அது மித்யாவென்று அறிந்து கொள்ள முடிகிறது.
மாயை என்ற பெயருடைய காமதேனு பசுவின் இரண்டு கன்றுகளே ஜீவ, ஈஸ்வரன் ஆகியவைகளாகும். அவைகளிலிருந்து கிடைக்கும் த்வைதம் என்கின்ற பாலை எவ்வளவு வேண்டுமானாலும் குடியுங்கள். ஜீவ-ஈஸ்வரனை நன்கு அனுபவத்துக் கொள்ளுங்கள். ஆனால் பிரம்ம தத்துவமான அத்வைதம்தான் உண்மையானது என்று உணர்ந்து கொள்ளுங்கள்.
பிரம்மன் அத்வைதம் என்பதை நிலைநாட்டுதல்
கூடஸ்தனுக்கும், பிரம்மத்திற்கும் இடையே உள்ள வேற்றுமை வெறும் பெயரளவுதான். அதைத் தாண்டி கிடையாது. குடத்திற்குள் உள்ள ஆகாசமும், மகாகாசமும் வேறுபடாமல் இருப்பது போல இந்த வேற்றுமையை புரிந்து கொள்ள வேண்டும்.
எந்த அத்வைதத்தை ஸ்ருஷ்டிக்கு முன்னால் இருந்ததோ அதுவேதான் இப்பொழுதும் இருந்து கொண்டிருக்கிறது. ஸ்ருஷ்டிக்கு பின்னாலும் அதே அத்வைதம்தான் இருக்கப்போகிறது. முக்தி அடைந்த காலத்திலும் இதுவேதான் இருக்கிறது. இந்தக் கருத்தை ஸ்ருதி மூலம் அறிகின்றோம். அப்படியிருக்கும்போது மாயையானது காரணமெதுவுமில்லாமல் தேவையில்லாமல் எல்லோரையும் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டிருக்கிறது.
மேற்கூறியபடி அத்வைதத்தை யார் ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களும் அறியாமையில், குழப்பத்தில் இருக்கிறார்கள், சம்சாரத்தில் இருக்கிறார்கள். இப்படி இருக்கும்போது இந்த ஆத்ம வித்யாவினால் என்ன பயன்?
சம்சாரம் என்பது இந்த உடலுக்கு வரும் இன்ப-துன்பங்கள் அல்ல, ஆழ்மனதில் உள்ள ராக-துவேஷங்களால் ஏற்பட்டிருக்கும் நிறைவு இல்லாத நிலையைத்தான் குறிக்கின்றது. ஞானத்திற்கு முன்பு இந்த ஞானிகளுக்கு இருந்த சம்சாரமானது நம்மால் பார்க்க முடியாத காரணத்தினால், சம்சாரம் நீங்கப்பெற்று மனநிறைவுடன் இருப்பதை பார்க்கின்றதனால் ஆத்ம ஞானத்திற்கு பலன் நிச்சயம் உண்டு என்பதை அறிய முடிகிறது.
இகலோகத்தில் இருக்கின்ற, பரலோகத்தில் இருக்கின்ற எல்லா சம்சாரங்களும் அனைத்து இன்ப-துன்பங்களும், வாழ்க்கையும், அனுபவிக்கப்படும் பொருட்களும், உண்மையானது. ஆகவே அத்வைதம் என்பது இல்லை, விளங்கவும் இல்லை. இதுதான் அக்ஞானிகளுடைய உறுதியான முடிவாகும். அக்ஞானியின் உறுதியான முடிவு த்வைதம் சத்யம், அத்வைதம் என்பதே கிடையாது, விளங்கவும் இல்லை. ஞானிக்கோ ஜகத் மித்யா, அத்வைதம் இருக்கிறது, விளங்கிக் கொண்டும் இருக்கிறது என்று மிகத் தெளிவாக அறியப்பட்டு இருக்கிறது. அவரவர்கள் எதை நிச்சயம் செய்திருக்கிறார்களோ அதன் அடிப்படையில்தான் பந்தப்படாதவராகவே, முக்தியடைந்தவனாகவே இருக்கிறார்கள். நான் பந்தப்பட்டவன் நான் முக்தியடைந்து இருக்கிறேன் என்று தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அவரவர் இவ்வாறு உறுதியான முடிவுடன் இருக்கிறார்கள்.
அத்வைதம் அபரோக்ஷமாக (மிகத்தெளிவாக) தெரியவில்லை என்று சொன்னால், அது தவறு, அது சைதன்ய ஸ்வரூபமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. அறிவு ஸ்வரூபமாக பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. எல்லா விஷயங்களும் த்வைதமாக இருக்கிறது. ஆனால் அவைகளைப் பற்றிய அறிவைக் கொடுத்துக் கொண்டிருக்கும் அறிவு ஸ்வரூபம் எப்பொழுதும் விளங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த சைதன்ய ஸ்வரூபமான அத்வைதம் முழுவதுமாக, எல்லாவிடத்திலும் பிரகாசிக்கவில்லை உன்னிடத்தில மட்டும்தான் விளங்கிக் கொண்டு இருக்கிறது என்றும், அனைத்து த்வைதமானது எல்லாவிடத்திலும் பிரகாசிக்கின்றதா என்று கேட்டால் என்ன சொல்வாய்?
த்வைதம் கொஞ்சமாகத்தான் தெரிகிறது. ஒரு பகுதிதான் பிரகாசிப்பதை அறிகிறேன். இதுபோல அத்வைதமும் கொஞ்சமாகத்தான் தெரிகிறது என்பது இரண்டும் சமமாக இருக்கிறது. இந்த கருத்தை கொண்டுதான் த்வைதம் முழுவதுமாக பிரகாசிக்கிறது என்று நிலை நாட்டுவது போல அத்வைதமும் ஏன் முழுவதுமாக பிரகாசிக்கக்கூடாது?
அத்வைதம் த்வைதத்திற்குள் வந்தால் த்வைதம் அப்படியேதான் இருக்கும் நிராகரிக்க முடியாது. எனவே த்வைதம் என்கின்ற அறிவு இருக்கும் போது எப்படி அத்வைதம் எப்படி சம்பவிக்க முடியும்? மனதிற்குள் சைதன்யம் ஒன்றாகவே விளங்கிக் கொண்டு இருப்பதால் அது த்வைதத்திற்கு விரோதமாக இருக்க முடியாது. ஆகவே இவையிரண்டும் சமமாக இருக்க முடியாது. த்வைதம் அத்வைதத்தை நீக்கிவிடும்.
அப்படியானால் நான் சொல்வகை கவனமாக கேள். இந்த த்வைதம் மாயையின் காரியமாக இருப்பதால், மித்யாவாக இருப்பதனால் அது அஸத். அதனால் அத்வைதம் மட்டுமே உண்மையானது. த்வைதமெல்லாம அத்வைதத்தில் ஒடுங்கும் போது எஞ்சியிருக்கும் அத்வைதம் மட்டும் விளங்கிக் கொண்டு இருக்கும். அனைத்து உலகமும் நினைத்து பார்க்க முடியாத வகையில் மாயையினால் அமைக்கப்பட்டு இருக்கிறது என்று உறுதி செய்து கொண்டு சத்யமாகவுள்ள அத்வைதம் மிஞ்சுகிறபடியினாலே பிரகாசிக்கிறது. த்வைதம் மித்யாகவும், அத்வைதம் சத்யமாக இருக்கின்றபடியால் ஒன்றுக்கொன்று விரோதமில்லை.
த்வைதம் பொய்யென்று தெரிந்தாலும் மறுபடியும் த்வைதம்தான் அதனடைய சத்யத்வ தன்மையுடன் தோன்றுகின்றதே என்றால் அப்போது மீண்டும் த்வைதத்தை பொய்யென்று விசாரம் செய்ய வேண்டும். இப்படி விசாரம் செய்வதற்கு எந்த சிரமும் இருக்காது. மீண்டும் மீண்டும் எவ்வளவு காலம் விசாரம் செய்ய வேண்டும் என்று சலித்து கொள்ளும் நிலை த்வைத விசாரத்தில் இருக்கலாம் ஆனால் அத்வைதத்தில் இருக்காது. அத்வைதத்தை அடையும் சாதனமும் ஆனந்தமாக இருக்கும், சாத்தியமும் ஆனந்தமயமாகும். ஏனென்றால் எல்லா தவறான கருத்துக்களும் தீய உணர்ச்சிகளும் நீங்கி விடுவதனால் சுகமாகத்தான், இருக்கும் சலிப்பு ஏற்படாது.
நான் அத்வைத ஸ்வரூபமாக இருக்கின்றேன் என்று தெரிந்தாலும் முன்போலவே பசி, தாகம் போன்ற இருமைகள் துயரங்கள் காணப்படுகின்றதே என்று கேட்டால் இவைகள் அனைத்தும் நான் என்று சொல்லப்படும் அகங்காரத்தில்தான் இருக்கிறது.
இந்த பசி, தாகம் முதலிய அனைத்தும் சைதன்யத்திற்கும் சென்று விடுகிறது. அனாத்மாக்களின் தர்மங்கள் சைதன்யத்தில் அத்யாஸம செய்து விடுகிறேன். சைதன்யத்தின் தர்மங்கள் உடலுக்கும் ஏற்றி விடுகிறேன் என்று கூறினால் இவ்வாறு அத்யாஸம் செய்யக் கூடாது. இதை விசாரம் செய்து பிரித்து எல்லா காலத்திலும் புரிந்து கொள்வாயாக.
இந்த அத்யாஸமானது மிக விரைவில் வந்து விடுகின்றதே என்று சோர்ந்து விடாதே பலமான வாசனையால் இவ்வாறு நேரிடுகிறது அதனால் விவேகத்தை விடாமல் திரும்ப திரும்ப மனதிற்குள் கொண்டு வந்து இந்த ஞானத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் அத்யாஸம் எப்பொழுதும் நேரிடாது.
இந்த த்வைத பிரபஞ்சமானது மித்யாவென்பதை யுக்தியினால் மட்டுமேதான் விசாரம் செய்து அடையப்படுகிறது. அனுபவத்தினால் இல்லையே என்று சொல்லக்கூடாது நினைத்துப் பார்க்க முடியாத அமைப்புத் தன்மை தானாகவே உணர்ந்து கொள்கின்ற அனுபவமில்லையா? இதுதானே பொய் தன்மை என்பது.
மித்யா தன்மை என்பது அநித்தியமாக இருந்து கொண்டு அனீர்வாச்யமாக இருப்பது. சைதன்யம் அனீர்வாச்யமாக இருந்தாலும் அது நிலையான தன்மை கொண்டதால் அது மித்யா என்று கூறப்படுகிறது. சைதன்யமும் கூட நினைத்துப் பார்க்க முடியாதமாகவும், வாக்கால் விளக்க முடியாததாகவும் உள்ள அமைப்பைக் கொண்டதுதான் என்று கேட்டால் அப்போது அது அப்படியே இருக்கட்டும். சைதன்யத்தை மிகத் தெளிவாக விளக்க முடியும் என்று சொல்லவில்லை. இதற்கு நிலையான தன்மையுள்ளது என்ற காரணத்தினால் இவ்வாறு சொல்லவில்லை.
நித்தியமான சைதன்யத்திற்கு முன்னே இல்லாமை என்பது கிடையாது. அது நம்மால் அனுபவிக்கப்படவுமில்லை. சைதன்யமானது என்றும் இருப்பது. நிலையாக இருந்து கொண்டிருப்பதாகும். சைதன்யத்தினால் த்வைதத்தின் முன்னால் இல்லாத தன்மையை அறியப்படுகிறது. எனவே அது அநித்யம்.
நாம் பார்த்து அனுபவிக்கின்ற அனைத்து த்வைதங்களும் முன்னால் இல்லாமை என்ற காரணத்தினால் அவைகள் பானையைப் போல தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அப்படியிருந்த போதிலும் அதை விளக்க முடியாது, நினைத்துப் பார்க்க முடியாது. இது மித்யாவாகவும், மாயாஜாலம் போன்றும் இருக்கிறது.
சைதன்யம் பிரத்யக்ஷமாகவும், மிகத்தெளிவாகவும் விளங்கிக் கொண்டு இருக்கிறது. இதைக் காட்டிலும் வேறாக உள்ள அனைத்தும் மித்யாவாக இருக்கின்ற தன்மை உடையது என்பது மிகத்தெளிவாக அனுபவித்து கொண்டிருக்கின்றோம்.
இவ்விதம் சைதன்யத்தைப் பற்றி தெரிந்தும்கூட பலர் துக்கத்துடன் இருக்கிறார்கள். ஏன் இந்த நிலையென்று விளக்குங்கள்? சார்வார்க்கர்கள் போன்றவர்கள் தர்க்கத்துடன் சிந்திப்பவர்கள் பகுத்தறிவாளிகள். இவர்களுக்கு இந்த உடல்தான் ஆத்மா என்ற கொள்கையுடையவர்கள், ஏன் இவ்வாறு அவர்கள் சொல்கிறார்கள?.
அவர்கள் சரியாக விசாரம் செய்யவில்லை. அவர்கள் புத்தியில் இருக்கின்ற குறையினாலும் சாத்விகமான சிரத்தை இல்லாததாலும் தவறான பிரமாணத்தை பயன்படுத்தியிருப்பதாலும் இவ்வாறு சொல்கிறார்கள். துயரத்துடன் இருக்கின்றவர்களால் சாஸ்திரத்தினுடைய பொருளை மிகத் தெளிவாக புரிந்து கொள்ள முடியாது.
மனதிலுள்ள அனைத்து ஆசைகளும் நீக்கப்பட்டுவிட்ட, சென்றவிட்ட நிலையே ஜீவ முக்தனின் மனநிலையாகும். இது உபநிஷத் உபதேசத்தின் மூலம் நம்மால் அறியப்பட்டிருக்கின்றது. நம்மால் இந்த நிலையானது அனுபவிக்கப்படவில்லையே என்று சந்தேகித்தால் நமக்கு தெரியாமலே அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்துக் கொள்வாயாக.
இதயத்திலுள்ள எல்லா முடிச்சுகளும் அவிழ்த்து விடப்படுகின்றன. ஆசைதான் இந்த முடிச்சுக்களாக இங்கே குறிப்பிடப்படுகின்றன. மனதிலுள்ள ஆசைகள்தான் நம்மை கட்டிவைத்திருக்கின்ற கனவு என்று உபநிஷத்தில் விளக்கப்பட்டுள்ளது. நாம் போகப் பொருட்களின் மீது வைக்கும் அளவற்ற ஆசைதான் நம்மை பந்தத்தில் கட்டி வைக்கின்றது. அதனால் துயரத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கின்றோம்.
அகங்காரத்தையும் சைதன்ய ஸ்வரூபத்தையும் அறியாமையால் ஒன்றாக்கப்பட்டு இருக்கிறது. அதாவது ஆத்மாவையும் அனாத்மாவையும் ஒன்றாக கட்டி வைக்கப்பட்டு இருக்கின்றது. பார்க்கப்படுகின்ற பொருளை நான் அடைய வேண்டும். எனக்கு இது வேண்டும் என்ற எண்ணம்தான் ஆசை என்ற சொல்லால் குறிப்பிடப்படுகின்றது.
சைதன்ய ஸ்வரூபமான ஆத்மாவை அகங்காரத்தில் நுழைக்காமல், சேர்க்காமல் (அகங்காரம் என்பது அனாத்மாவை ஆத்மாவாக நினைத்தல்) அகங்காரத்தை அதனிடமிருந்து வேறாகப் பார்த்து, ஆத்ம-அனாத்மாவை வெவ்வேறாக பிரித்து நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இந்த நிலையில் பொருட்களின் மீது ஆசை வைத்தாலும் அதனால் எந்த பாதிப்பும் அடைய மாட்டோம். ஏனென்றால்; இதயத்திலுள்ள முடிச்சுக்கள் அவிழ்த்து விடப்பட்டுவிட்ட நிலையில் இருக்கும்.
ஆத்மாவில் அனாத்மாவை அத்யாஸம் செய்து கொண்டிருப்பதால் எழும் ஆசைகள்தான் துயரத்தைக் கொடுக்கும். சம்சாரத்தில் வைத்து இருக்கும். இந்த அத்யாஸம் நீங்கிய எழுகின்ற ஆசைகளுக்கு துயரத்ததைக் கொடுக்கும் சக்தி இருக்காது.
பிராரப்த கர்மத்தினால் ஜீவன் முக்தியை அடைய முடியாது. சுய முயற்சியினால் தான் இதை அடையமுடியும். ஜீவன்முக்தி அடைந்தாலும் பிராரப்தத்தினால் வருகின்ற சுக-துக்கங்களை அனுபவித்துத்தான் தீர்க்க வேண்டும். எனவே சரீரத்தில் அபிமானம் வைத்தாக வேண்டும் என்ற கட்டாயம் இருந்தாலும் அதனால் கிடைக்கின்ற சுக, துக்கங்களை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது ஞானியின் கையில்தான் இருக்கிறது. ஆத்மாவையும், அனாத்மாவையும் சேர்ந்து பார்க்கும் அத்யாஸம் நீங்கிய பிறகும் ஆசைகள் பிராரப்தத்தினால் மனதில் எழலாம். பிரம்ம தத்துவத்தை அறிந்தும் கூட பாவங்கள் அதிகம் இருப்பதனால் மனதில் சந்தோஷமில்லாமல் இருக்கலாம் என்று நீ சொல்வது போல ஞானம் வந்தம் கூட ஆசைகள் மனதில் எழலாம்.
சூட்சும சரீரத்தை சார்ந்த ஆசை, மோசம் போன்றவைகள் அனைத்து உணர்ச்சிகளாலும் தேகத்தைச் சார்ந்த வியாதி முதலியவைகளாலும், வெளியே இருக்கின்ற மரம், செடி போன்றவைகளின் அழிவு ஏற்பட்டாலும் சைதன்ய ஸ்வரூபமான ஆத்மாவில் அபிமானம் வைத்திருப்பவனுக்கு ஒரு பாதிப்பும் ஏற்படாது. ஆத்மாவுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது.
ஆத்மாவில் அத்யாஸம் ஏற்படுவதற்கு முன்பும் இந்த மாதிரி நிலைதான் என்றால் இதை மறந்து விடக்கூடாது. இந்த அறிவை அடைவதுதான் அத்யாஸம் நீங்கியதால் விளையக் கூடியது. இந்த அறிவினால் நீ முக்தனாகி விட்டாய்.
ஆத்மாவைப் பற்றிய அக்ஞானத்தைத் தவிர வேறெதனாலும் நாம் துயரப்பட்டுக் கொண்டு இருக்கவில்லை. அக்ஞானமும், அக்ஞானத்தின் விளைவான அத்யாஸம், இவைகள் இருத்தல், இல்லாமை என்ற வேற்றுமைதான் ஞானிக்கும், அக்ஞானிக்கும் இடையே உள்ளது. செயல்படுவதிலோ, செயல்படாமல் நீங்கி இருத்தல் போன்றவற்றிலும் ஞானிக்கோ, அக்ஞானியிடத்திலோ எந்த வேற்றுமை கிடையாது. தேகம், புலன்கள், மனம், புத்தி இவைகளின் செயல்படுவதிலோ, செயல்படாமல் இருத்தலிலே சிறிதளவும் வேற்றுமையை பார்க்க முடியாது.
மேற்கூறிய இருவர்களிடத்திலிருக்கின்ற வேற்றுமையானது வேத சாஸ்திரத்தை படித்தவன், படிக்காதவன் என்பது மட்டும்தான். உணவு உட்கொள்வது போன்ற வேற்றுமை விஷயத்தில் இதேப்போன்று ஞானி-அக்ஞானி வேற்றுமை விஷயத்தில் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். ஆத்மஞானம் உடையவன் அந்த ஞானத்தை இல்லாதவன் என்ற ஒரு வேற்றுமைதான் இருக்கும்.
நல்லது எது வந்தாலும் சந்தோஷப்படுவதில்லை, துயரங்கள் வந்தாலும் வருத்தப்படுவதில்லை. இந்த இரண்டு நிலைகளிலும் ஒரே மனநிலையோடு உதாசீனனாக இருப்பான். இதுவே மனதிலுள்ள முடிச்சுக்கள் அறுக்கப்பட்ட நிலையாக கூறப்படுகிறது. துக்கத்திற்கான காரணம் வரும்போது வருத்தப்படுவதில்லை. சுகத்திற்கான காரணம் செல்லும்போது அதற்காக வருத்தப்படுவதில்லை. எது வந்தாலும் உதாசீனனாக இருப்பான். இதுவே ஆசையின் நாசம், கிரந்திபேதம் என்று கூறப்படுகிறது.
உதாசீனனாக ஞானி இருக்கின்றான் என்று சொன்னால், “போல” என்ற சொல் தேவையற்றதாக போய்விடும். உதாசீனன் என்பதை சாட்சி பாவத்துடன் இருப்பது என்பதையும் குறிக்கிறது. இந்த நிலை தமோ குணத்துடன் இருப்பவர்களிடையே பொதுவாக காணப்படுவதால் இதை உதாரணத்திற்காக பகவான் காட்டி இருக்கிறார். இவ்விதம் சந்தேகப்பட்டால் ஞானியின் தேகம், புலன்கள் முதலியவைகள் செயல்படுவதற்கேற்ற சக்தியிழந்து விடுகின்றது. இப்படிபட்ட ஒருவன் இருந்தால் அவன் வியாதியால் பாதிக்கப்பட்டு இருப்பவன் தவிர ஞானத்தை அடைந்த ஞானியல்ல.
பிரம்ம ஞானத்தை எந்த மகாபுத்திசாலிகள் சக்தியை அழிக்கின்ற வியாதியாக கருதுகிறார்களோ அவர்களுடைய அறிவு மிகவும் தெளிவானது! அவர்களால் செய்ய முடியாதது என்ன இருக்கிறது! என்று அவர்கள் நிந்திக்கப்படுகிறார்கள்.
ஜடபரதர் போன்றவர்கள் செயலற்ற ஜடம் போல் இருந்தார்கள் என்று புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்று சொன்னால் உபநிஷத்தில் சொல்லப்பட்டவைகளையும் நினைத்துப் பார்க்க வேண்டும். உணவு அருந்திக் கொண்டு, எதையாவது விளையாடி கொண்டு தன்னிடத்திலே மகிழ்ச்சியாகவும் ஞானி இருந்துக் கொண்டு இருக்கின்றார் என்று உபநிஷத்தில் விவரிக்கப்பட்டுள்ளவைகளை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
உணவை உட்கொள்வது, உறங்குதல் முதலியவைகளை ஜடபரதர் விட்டுவிட்டு வாழவில்லை. கல்லைப் போலவும், கட்டையை போலவும் எங்கேயோ இருந்தார்கள் என்பது இல்லவே இல்லை. ஆனால் சங்கத்திலிருந்து விலகியிருக்கவே உதாசீனமாக மாத்திரம் இருந்தார்கள். சங்கத்தினால் பற்று வந்துவிடுமோ என்ற பயத்தினால் இவ்வாறு உதாசீனனாக இருப்பார்கள்.
உலக அனுபவத்தில் பார்க்கும் போது பற்றுள்ளவனே துயரத்ததை அடைகின்றான். போகப் பொருட்களிலோ, சூழ்நிலையிலோ மனிதர்கள் மீதோ பற்று வந்துவிட்டால் அவைகளிலிருந்து துயரத்தைத்தான் அடைவோம். இவைகளிடமிருந்து பற்றற்று இருப்பவன் துயரத்தை அடைவதில்லை. ஆகவே பற்றானது விடப்பட வேண்டியது. மோட்சத்தை விரும்புபவர்களால் பற்றானது எப்பொழுதும் விடப்பட வேண்டும்.
ஞானயோக சாதனங்கள்
வைராக்கியம், ஞானம், உபரம இந்த மூன்று ஞானயோக சாதனங்கள் பற்றி கூறப்படுகிறது. இங்கு உபரம என்ற சொல்லுக்கு சம, தம, உபரதி, சமாதானம் இவைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இவை மூன்றும் ஒன்றுக்கொன்று துணை புரிகின்றன. உதவி செய்து கொள்கின்றது. பொதுவாக இந்த மூன்றும் சேர்ந்தேயிருக்கும். சில சமயங்களில் சிலரிடத்தில் சேர்ந்தில்லாமலும் இருக்கலாம்.
ஒன்றைப்பற்றி தெளிவாக அறிந்து கொள்ள வேண்டுமென்றால் ஒரு நியதியை பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறார். அது எவைகளுக்குள் ஹேதுவும், ஸ்வரூபமும், காரியமும் வேறுபடுகின்றதோ அவைகள் ஒன்றுக்கொன்று தனித்தன்மையை உடையதாக இருக்கிறது. சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள அர்த்தத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால் மேற்சொன்ன மூன்றையும் பயன்படுத்தி அறிந்து கொள்ளலாம்.
பார்க்கும் பொருளில் இருக்கின்ற குறையை பார்க்கின்ற அறிவு வைராக்கியம் வருவதற்கு ஹேதுவாக இருக்கிறது. இதனுடைய ஸ்வரூபம் அதை ஒதுக்கிவிட வேண்டுமென்கின்ற ஆசை, வேண்டாமென்று விட்டொழிக்கின்ற ஆசை, புலனுகர் போகத்திற்கு அடிமையாகிவிடாமல் இருத்தல் அதனுடைய பலன். இவைகள் எல்லாம் வைராக்கியத்திற்கான அசாதாரணமான ஹேது, முக்கியமான ஹேது, ஸ்வரூபம் காரியங்கள் என்கின்ற இந்த மூன்றும். வைராக்கியத்திற்கான ஹேதுக்கள் குறையை பார்த்தல். ஹேதுவை ஆராய்ச்சி செய்தால்தான் இதை அடைவதற்கான உபாயம் கிடைக்கும். இந்த தோஷத்தை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். இதனால் அதன் மீதுள்ள போகப்பற்று நீங்கிவிடும். விவேகத்தின் முதிர்ச்சிதான் வைராக்கியமாக மாறும். சுகத்தைக் கொடுக்கின்ற விஷயங்களில் மனதில் தோன்றுகின்ற விருப்பமின்மைதான் வைராக்கியத்தின் ஸ்வரூபமாக புரிந்து கொள்ள வேண்டும். வைராக்கியம் என்பது மனதில் ஏற்படுகின்ற பக்குவநிலை. வைராக்கியத்தினால் அடையும் பலன்கள் மனதில் அமைதி அடைதல், அதிக சுகத்தை அனுபவித்தல், மோட்சத்தை அடைவதற்கான பாதையில் கொண்டு செல்லும். வைராக்கியத்திற்கு தனித்துள்ள ஹேது, ஸ்வரூம், காரியம் ஆகியவைகள் தோஷத்தைப் பார்ப்பது ஹேது, விட்டுவிட நினைப்பது (ஸ்வரூபம்) மறுபடியும் போகப் பொருட்களை நாடாமல் இருப்பது காரியமாகும்.
ஆத்ம ஞானத்திற்கென்று தனித்துள்ள ஹேது சிரவணம், மனனம், நிதித்யாஸனம் ஆகிய மூன்றாகும். இந்த ஆத்மஞான நிஷ்டைக்கு ஹேது முதலிய மூன்றையும் குறிப்பிடுகிறார். பொதுவான அறிவை அடைவதற்கு ஹேது பிரமாணம். ஞானநிஷ்டை ஸ்வரூபம், பிரம்மத்தையும்(உண்மை) மித்யா(ஜகத்) பிரித்துக் காட்டுவதுதான் இதன் ஸ்வரூபம். சாதாரண அறிவின் ஸ்வரூபம் இருப்பதைக் காட்டுவது. ஞானநிஷ்டையின் பலன் மீண்டும் அத்யாஸம் தோன்றாது. இவை மூன்றும்தான் ஞானநிஷ்டையின் மூன்று தன்மையான ஹேது, ஸ்வரூபம், பலன் ஆகும். சாதாரண அறிவின் பலன் அக்ஞானம் நீங்குதல் ஆகும்.
உபரதியின் ஹேது யம, நியம முதலியவைகள், ஸ்வரூபம் மனம் அமைதியுடன் இருத்தல். நம்முடைய தேவையற்ற செயல்களான அனாத்மா விவகாரங்களை குறைத்துக் கொண்டு போகுதல், பொறுப்புக்களிலிருந்து முழுவதுமாக விட்டுவிடுதல் உபரதியினுடைய காரியமாகும். இதனால் கிடைக்கும் காலம் ஞானயோக அப்யாஸத்திற்கு பயன்படுத்த முடியும். இவ்வாறாக வைராக்கியம், ஞானம், உபரதி இவைகளின் வேற்றுமை கூறப்பட்டிருக்கிறது.
மோட்சத்தை நேரிடையாக கொடுக்கின்ற காரணமாக இருப்பதனால் தத்துவஞானமே பிரதானமாகும். ஞானத்தை அடைவதற்கு உதவியாக இருக்கும் சாதனங்கள் வைராக்கியம், உபரதி ஆகும்.
வைராக்கியம், ஞானம், உபரதி இவை மூன்றும் முழுமையான பக்குவத்துடன் இருக்குமானால் அதுவே செய்த மிகப்பெரிய தவத்தின் பலனாக இருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய பாவ காரியத்தினால் இந்த நிலையடைய தடை ஏற்படுகிறது. சிலரிடத்தில் மூன்றில் ஏதாவது ஒன்று எப்பொழுதாவது தடைபட்டு இருக்கலாம்.
வைராக்கியம், உபரதியும் முழுமையாக அடைந்திருக்கின்றோம் ஆனால் ஆத்மஞானம் ஏற்படவில்லையென்றால் இந்த நிலையை அடைவதற்கு காரணம் முமுக்ஷுத்வம் வராமல் இருக்கலாம். சரியான குருவை அடையாமலிருக்கலாம். அதனால் அவர்களால் ஜீவன் முக்தியை அடைந்திருக்கமாட்டார்கள். ஆனால் அவர்களுடைய தவத்தின் பலனாக இவையிரண்டும் அடைந்திருப்பதால் இவர்கள் புண்ணிய லோகத்திற்கு அல்லது இன்பத்தை கொடுக்கின்ற உலகத்திற்கோ இறந்த பிறகு செல்வார்கள். வாழும் காலத்தில் மனமகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.
ஆத்மஞானத்தை முழுமையாக அடைந்திருந்தும் மற்ற இரண்டும் போதுமானதாக இல்லாமல் தடைப்பட்டிற்கும் போது, அதாவது வைராக்கியம், உபரதி போதுமான அளவு இல்லாமலிருந்தாலும் மோட்சத்தை அடைந்து விடுவார்கள். அதாவது விதேக முக்தி கிடைத்துவிடும். ஜீவன் முக்திநிலை ஏற்படாது. வாழும்போது அனுபவித்து கொண்டிருக்கும் சம்சாரம் அப்படியே இருக்கும். சுக-துக்கத்தை அனுபவித்துக் கொண்டு இருப்போம்.
வைராக்கியம் முழுமையடைந்திருக்கும் நிலையில் பிரம்மலோகத்தையே சிறுபுல் போன்று சமமாக நினைக்க வைக்கும். எந்தப் பொருளிடத்திலும் பற்றெதுவும் வைக்காத நிலை.
1. யத3மானம் - வைராக்கியத்தை அடைய உதவும் சாதனங்களை பின்பற்றி முடிவு செயதல்
நானே பரமாத்மா என்ற எண்ணம் திடமாகும் போது ஞானமானது முழுமை அடைகிறது. அக்ஞான காலத்தில் நான் தேகம்தான் என்ற திடமான அபிமானம் இருப்பது போல நான் பிரம்மம் என்ற விஷயத்திலும் இருக்க வேண்டும். ஞானத்தை அடைய உதவும் படிகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.
2. தத் பதம் லட்சியார்த்தம்
3. பிரம்மம் அஸி லட்சியார்த்தம்
4. ஜகத் மித்யா லட்சியார்த்தம்
உபரதியின் முழுமையானது இறந்தகால விஷயங்களையும், எதிர்காலத்தில் வரப் போகின்றவற்றையும் நினைக்காமல், நிகழ்காலத்தில் மட்டும் வாழ்ந்து கொண்டு இருக்கும் போது அடையப்படுகிறது. எப்படி உறக்கத்தில் எல்லாவற்றையும் மறந்து விடுகின்றோமோ அதுபோல நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டிருத்தலே உபரதியின் எல்லையில் இருப்பதை காட்டிக் கொடுக்கும். இந்த வகையில் உபரதியின் முழுமையையும், ஏற்றத்தாழ்வையும் விசாரித்து புரிந்து கொண்டு அதை அடைவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
பிராரப்த கர்மபலன் விதவிதமாக வெளிப்பட்டு இருப்பதால் ஞானிகளின் வாழ்க்கை விதவிதமாக இருக்கின்றது. ஒவ்வொரு ஞானிகளின் வாழ்க்கை முறை வெவ்வேறு விதமாக அனுபவிக்கப்படுவதாக காணப்படும். இன்ப, துன்பங்கள் வெவ்வேறு விதமாக காணப்படுகிறது. தர்மத்துக்குட்பட்ட ஆசைகளும் வெவ்வேறுவிதமாக இருப்பதால் வாழ்க்கை முறை வேறுபடுகிறது. ஆகவே சாஸ்திர விஷயத்தில் பண்டிதர்களால் குழப்பமடையக் கூடாது. ஞானிகள் அடைந்த ஞானத்தினால் எல்லோரும் ஜீவன் முக்தியைதான் அனுபவிக்கின்றீர்கள்.
ஞானிகள் அவரவர்களுடைய பிராரப்த கர்மபலன்களின்படி வாழ்ந்து கொண்டு இருப்பார்கள். அவர்கள் அடைந்த ஞானத்தில் எந்த வேற்றுமையும் கிடையாது. ஞானத்தினாலடைந்த பலனான ஜீவன் முக்தியிலும் வேற்றுமை கிடையாது.
சைதன்யமான துணியில் வரையப்பட்ட படங்களான ஜகத், கெட்டித் துணியில் வரையப்பட்ட படங்களை போல சைதன்யத்தில் ஜகத் ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. வெண்திரையில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படத்தைப் போல சைதன்யமான என்னிடத்தில் இந்த ஜகத்திலுள்ள அனைத்தும் கற்பிக்கப்பட்டிருக்கின்றது. அசங்க ஸ்வரூபமான சைதன்யத்தில் இந்த உலகம் மாயையின் சக்தி மூலமாக இவைகள் எல்லாம் என்மீது ஏற்றி வைக்கப்படுவதற்கு. அவைகளுக்கு நான்தான் ஆதாரமாக இருந்து கொண்டிருக்கிறேன். இந்த ஜகத் என்கின்ற சித்திரங்களை நீக்கி, கண்டு கொள்ளாமல், உண்மை நிலையை கொடுக்காமல் சைதன்யம் மட்டும் இருக்கிறது என்று நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.
எந்த சாதகர்கள் இந்த சித்திர தீபம் என்கின்ற அத்தியாயத்தை தொடர்ந்து எப்போது படித்துக் கொண்டிருக்கிறீர்களோ வரைபடம் போல இருக்கின்ற இந்த உலகத்தை பார்த்து கொண்டிருந்த போதிலும் அதனால் முன்பு போல மோக வசத்திலிருக்க மாட்டார்கள். சம்சாரியாக இருக்க மாட்டார்கள்.
தொகுப்புரை
01-17 சித்திரபட உதாரணம்
சொல்லப்பட்டது. தூய்மையான துணியை பிரம்ம சைதன்யத்திற்கும்,
துணியிலுள்ள சுருக்கத்தை நீக்கி வரைவதற்கேற்றவாறு கெட்டிப் பண்ணி தயாராக
வைப்பதற்கு அந்தர்யாமி ஈஸ்வரன். படங்களின் வெளிப்புற வரைகோடுகளானது
ஹிரண்யகர்ப்பனாகவும், வர்ணம் பூசி முழுமையடைந்த படங்களுடன் கூடியதை
விராட் என்றும் வர்ணித்தார். ஜீவனும், ஈஸ்வரனும்
தெரிந்த கொண்டிருப்பதால் அவைகளின் மித்யாத்வத்தை நிச்சயம் செய்வதே அதை நீக்குதல் என்று
விளக்கி உள்ளார். ஜகத்தை நீக்கிவிட்டால் எஞ்சியிருப்பது சத்யமானதாக
இருக்கும் அதுவே சைதன்யம்.
18-21 ஆகாசத்தை உதாரணமாக
கூறினார். குடாகாசம்-கூடஸ்தன், வெளியேயுள்ள
மகாகாசம்-பிரம்மன், ஜலாகாசம்-ஜீவன்,சிதாபாஸம், மேகாகாசம்-ஈஸ்வரன் என்று ஒப்பிட்டு விளக்கியுள்ளார்.
22-57 கூடஸ்தனுக்கும்,
ஜீவனுக்கும் இடையே உள்ள குழப்பத்தை எடுத்து விசாரம் செய்து தெளிவுபடுத்தியுள்ளார்.
ஜீவனுடைய லட்சணம் கூறப்பட்டது. அவித்யா அறிமுகப்படுத்தப்பட்டு
அதனுடைய லட்சணம் கூறப்பட்டது. மாயையின் சக்திகளாக ஆவரணம்,
விக்ஷேபம் விளக்கப்பட்டது.
58-101 ஜீவ விஷயத்தில் எப்படியெல்லாம் குழம்பியிருக்கிறார்கள்
என்று விசாரம் செய்து தெளிவுபடுத்தியுள்ளார்.
102-121 ஈஸ்வரனுடைய
விஷயத்தில் உள்ள குழப்பத்தை விசாரம் செய்து தெளிவுபடுத்தியுள்ளார்
122-152 மாயா தத்துவ
விசாரம். மாயை பற்றி பல கோணங்களில் விசாரம்
செய்யப்பட்டுள்ளது. மாயையை மூன்றுவிதமாக பார்க்கப்படுகிறது.
பாமர மக்களுக்கு அது சத்யமாக தோன்றும். புத்தியுள்ளவர்களுக்கு
அது வாக்கால் விளக்க முடியாதது என்றும் ஞானயோக சாதகர்களுக்கு அது இல்லை என்றும் கூறியுள்ளார்.