Showing posts with label பகவத் கீதை-03. Show all posts
Showing posts with label பகவத் கீதை-03. Show all posts

Saturday, March 11, 2017

Srimad Bhagavat Gita - Chapter-03

அத்தியாயம்-3
கர்மயோகம்
ஸ்வாமி குருபரானந்தாவின் உபதேச விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது-14-02-2022

अर्जुन उवाच ।
ज्यायसी चेत्कर्मणस्ते मता बुद्दिर्जनार्दन ।
तत्किं कर्मणि घोरे मां नियोजयसि केशव ॥ 1 ॥
அர்ஜுனன் கேட்கிறான்.
ஹே ஜனார்னா! பிறப்பு-இறப்பு என்கின்ற சம்சாரத்தை அழிக்கக்கூடிய. ஞானம்தான் உயர்ந்தது. உங்களால் ஞானயோகமே கர்மத்தைக் காட்டிலும் மேலானது என்று கருதப்பட்டால் ஹே கேசவா! பின்னர் எதற்காக என்னை இந்த கோரமான கர்மத்தில் (போரில்) ஏன் என்னை ஈடுபடுத்துகிறீர்கள்?

व्यामिश्रेणेव वाक्येन बुद्धिं मोहयसीव मे ।
तदेकं वद निश्चित्य येन श्रेयोऽहमाप्रुयाम् ॥ 2 ॥
குழப்பத்தை ஏற்படுத்துகின்றதும், முரண்பாடுடையது போன்றதாகவும் போன்ற வார்த்தைகளால் என் புத்தியை மோகத்திற்குள்ளாக்கி விட்டீர்கள் போலிருக்கிறது.  என்னை குழப்புவது போலிருக்கிறது.  இந்த இரண்டில் ஒன்றை தீர்மானித்து கூறுங்கள் அதனால் நான் மேன்மையை அடைவேனாக!

श्रीभगवानुवाच ।
लोकेऽस्मिन् द्विविधा निष्टा पुरा प्रोक्ता मयनघ ।
ज्ञानयोगेन साङ्ख्यानां कर्मयोगेन योगिनाम् ॥ ३-३ ॥
பகவான் கூறுகிறார்.
பகவான் இரண்டு சாதனங்களை, யோகங்களை அறிமுகப்படுத்துகின்றார். இரண்டு நிஷ்டைகளையும் அறிமுகப்படுத்தியிருக்கின்றார். அவைகள் 
1. கர்மயோகம்,
2. ஞானயோகம் 
என்பதாகும். கர்மயோகம் ஞானயோகத்திற்கு தகுதிப்படுத்துகின்றது. ஞானயோகம் மோட்சத்தை அடைவதற்கு பயன்படுகின்றது.  மோட்சம் அடைவது என்பது  சம்சார பந்தத்தில் இருந்து விடுபடுதலாகும்,, ஜீவன்முக்தி அடைதலாகும்.  நிஷ்டா என்பது வாழ்க்கை முறை என்று புரிந்து கொள்ள வேண்டும். 
1. பிரவிருத்தி நிஷ்டா à இல்லறவாழ்க்கைàகர்மயோகம் சாதனத்தில் ஈடுபட வேண்டும்.
2. நிவிருத்தி மார்க்கம் à சந்நியாச வாழ்க்கைàதுறவற வாழ்க்கை à ஞான யோகத்தை கடைப்பிடித்து மோட்சத்தை அடைந்திட வேண்டும்.

இந்த மனித உலகத்தில் இரண்டுவிதமான வாழ்க்கை முறைகள் (நிஷ்டா) முன்பே என்னால் உபதேசிக்கப்பட்டது. ஹே பாவமற்றவனே! சந்நியாசிக்கு ஞானயோகத்தில் இருத்தலும், இல்லறத்தார்க்கு கர்மயோகம் என்ற சாதனத்தை கடைப்பிடித்துக் கொண்டிருத்தலும்  கூறப்பட்டிருக்கிறது

வேதம் என்பது இந்த உலகத்தை எப்படி கையாள வேண்டும் என்ற வழிமுறைகளை சொல்கின்ற செயல்முறை வழிகாட்டி புத்தகமாகும். சந்நியாசி ஞானயோக சாதனத்தை பயன்படுத்தி வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். இல்லறத்தில் இருப்பவர்கள் கர்மயோக சாதனத்தை பயன்படுத்தி வாழ வேண்டும். கர்மயோகத்தை முறையாக செய்து முடித்து ஞானயோகத்திற்கு தகுதி அடைந்தவுடன் சந்நியாசம் எடுத்துக்கொண்டு ஞானயோக சாதனத்தின் மூலம் ஜீவன் முக்தியை அடைந்திட வேண்டும்.

சந்நியாச வாழ்க்கை முறையே ஒருவனுக்கு மோட்சத்தைக் கொடுக்காது.  இல்லற வாழ்க்கையிலே இருந்து கொண்டும் இரண்டு சாதனங்களையும் பயன்படுத்தி மோட்சத்தை அடைந்து விடலாம். இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது வாழ்க்கை முறை மோட்சத்தைக் கொடுக்காது. இரண்டு சாதனங்களும் முக்கியமானது, மோட்சத்தைக் கொடுக்க கூடியது. பிறகு ஏன் இரண்டு வாழ்க்கை முறை சொல்லப்பட்டது என்று வினவினால் கர்மயோக சாதனத்தை பயன்படுத்துவதற்கு இல்லற வாழ்க்கை அனுகூலமாக இருக்கும். அதேமாதிரி ஞானயோக சாதனம் பயன்படுத்த சந்நியாசம் அனுகூலமாக இருக்கும் என்பதால் இந்த வாழ்க்கை முறை கூறப்பட்டது.

न कर्मणामनारम्भान्नैष्कर्म्यं युरुषोऽश्रुते ।
न च संन्यसनादेव सिद्धिं समधिगच्छति ॥ 4 ॥
ஒருவன் செயல்களை ஆரம்பிக்காமல் இருப்பதனாலேயே (நைஷ்கர்மயம்) பிரம்மத்தை அடையமாட்டான். எதனால் நைஷ்கர்மயம் பயன்படுத்தப்பட்டது.  நிஷ்கர்ம – செயல் இல்லாதது, நைஷ்கர்மயம் – செயலற்ற தன்மையில் இருப்பது, இது பிரம்மத்தை குறிக்கின்றது. செயலற்று இருப்பது என்பது பலனாக வரவேண்டும், நாமாக எடுத்துக் கொள்வதில்லை.  சந்நியாசத்தினல் மட்டும் மோட்சத்தை ஒருவன் அடைய முடியாது. 
ஶித்3தி4 – பரம புருஷார்த்தமான பிரம்ம ஞானநிஷ்டை.

न हि कश्चित्क्षणमपि जातु तिष्टत्यकर्मकृत् ।
कार्यते ह्यवशः कर्म सर्वः प्रकृतिजैर्गुणैः ॥ 5 ॥
எந்தவொரு மனிதனும் ஒரு கணம்கூட செயல் செய்யாமல் இருப்பது சம்பவிக்காது.  எல்லா ஜீவராசிகளும்  ப்ரகிருதியிலிருந்து உண்டான மூன்று குணங்களால் தன்வசமின்றி செயல் செய்ய தூண்டப்படுகிறார்கள்.

அக்ஞானியால் ஒரு கணம் செயல் செய்யாமல் இருக்க முடியாது. இந்த நியதிப்படி அர்ஜுனா உன்னால் செயல் செய்யாமல் இருக்க முடியாது.  அக்ஞானியானவன் அனாத்மாவை ஆத்மாவை நினைத்துக் கொண்டு இருக்கின்றான். நான் என்ற அபிமானம் மூன்று சரீரத்திலும் இருக்கின்றது.  இந்த அனாத்மா ஏதாவது ஒரு செயலில் ஈடுபட்டு கொண்டிருக்கும்.  எனவே இதில் அபிமானம் கொண்டு இருக்கும் ஜீவன் ஏதாவது செயலில் ஈடுபட்டு கொண்டிருப்பான். ஞானியினுடைய சரீரங்கள் செயல்பட்டு கொண்டிருந்தாலும் அவருக்கு அதில் அபிமானம் இல்லாததால் நான் எதுவும் செய்யவில்லை என்ற அறிவில் இருப்பான்.

ஞானி, அக்ஞானி இருவரையும் சேர்த்து எடுத்துக் கொண்டு பார்த்தால் சரீரத்தின் அடிப்படையில் செயல் செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.  அக்ஞானிகள் தன்வசமின்றி செயலில் ஈடுபடுத்தப்படுகின்றார்கள். மாயையிலிருந்து தோன்றிய முக்குணங்களினால் இவ்வாறு செயல் செய்ய தூண்டப்படுகிறார்கள்.

யோகம் - ஞானயோகத்திற்கு தகுதியை கொடுக்கும், ஞானயோகத்திற்கு கொண்டு செல்லும்.
கர்மயோகம் - கர்மம் செய்தாலும் ஞானயோகத்திற்கு கொண்டு சேர்க்கும்
ஞானயோகம் - ஆத்மஞானமானது, அறியாமையை நீக்கி ஆத்ம ஞானத்தை அடைய வைக்கும்.  பிரம்மத்துடன் எது நம்மை கொண்டு சேர்க்குமோ அதற்கு யோகம் என்று பெயர்.. ஆத்ம ஞானம் நம்மை பிரம்மத்துடன் ஐக்கியப்படுத்திவிடும்.

कर्मेन्द्रियाणि संयम्य य आस्ते मनसा स्मरन् ।
इन्द्रियार्थान्विमूढात्मा मिथ्याचारः स उच्यते ॥ 6 ॥
உடலளவில் செயல் புரியாமல் இருக்கலாம், ஆனால் மனதளவில் செயல் புரியாமல் இருக்க முடியாது.  ஒரு விஷயத்தை துறப்பது என்பது உடலளவிலும், மனதளவிலும் இருந்தால்தான் உண்மையான துறவாகும். புலன்கள் அளவில் ஒரு விஷயத்திலும் ஈடுபடாமல், ஆனால் மனதில் அதன் மீது பற்று இருந்தால் அது பொய்யான தியாகம், எப்பொழுதாவது மீண்டும் அந்த விஷயத்தில் ஈடுபடுத்திவிடும்.

ஒருவன் கர்மேந்திரியங்களை வெளித்தோற்றத்தில் கட்டுப்படுத்திவிட்டு ஆனால் மனதில் இந்திரியங்களின் விஷயத்தை, பொருட்களை சிந்தித்து கொண்டிருக்கிறான்.  இவன் அதிமுட்டாள், அறிவில் அவன் பொய்யான நடத்தையுள்ளவன் என்று கூறப்படுகின்றது. அவன் தன்னையே ஏமாற்றிக் கொள்கின்றான்.

यस्त्विन्द्रियाणि मनसा नियम्यारभतेऽर्जुन ।
कर्मेन्द्रियैः कर्मयोगमसक्तः स विशिष्यते ॥ 7 ॥
ஹே அர்ஜுனா! எவனொருவன் புலன்களை மனதின் மூலமாக வசப்படுத்தி பற்றில்லாதவனாக புலன்களின் துணைக் கொண்டு கர்மயோகத்தை ஆரம்பிக்கின்றானோ அவனே சிறந்தவன்

नियतं कुरु कर्म त्वं कर्म ज्यायो ह्यकर्मणः ।
शरीरयात्रापि च ते न प्रसिद्धयेदकर्मणा ॥ 8 ॥
கர்மயோகம் இரண்டு விஷயங்களை பற்றிக் கூறுகின்றது. அவைகள் 
1. எதைச் செய்ய வேண்டும், எதைக் செய்யக்கூடாது என்கின்ற ஞானத்தை அடைதல், 
2. செய்ய வேண்டிய செயல்களை எப்படிபட்ட பாவனையுடன் செய்ய வேண்டும் என்ற விஷயம்.

சாஸ்திரம் அனுமதிக்கப்பட்ட, நம் அறிவிலிருந்து தோன்றிய நம்மால் செய்யப்பட வேண்டிய செயல்களை நாம் செய்யவேண்டும். கட்டாயம் செய்ய வேண்டிய செயல்களையும், ஒரு சூழ்நிலையின் போது கட்டாயமாக செய்ய வேண்டியவைகளை செய்துதான் ஆக வேண்டும்.  செயல் செய்யாமல் இருப்பதைக் காட்டிலும் அதை செய்வது சிறந்தது.  மேலும் செயல் செய்யாமல் இருந்தால் உன்னால் சரீரத்தை காப்பாற்றுவதில் கூட முடியாததாகி விடும்.

·       நாம் செய்யும் செயல்கள் ராக-துவேஷத்திலிருந்து உற்பத்தியானவைகள்.  அறிவில் இருந்து தோன்றியவைகள், என்னால் செய்யப்பட்ட வேண்டியவைகள் என்று இரண்டு விதமாக நம்முடைய அன்றாட செயல்களை பிரித்துப் பார்க்கலாம்.
·       விருப்பு-வெறுப்புக்களிலிருந்து தோன்றிய செயல்களை கொஞ்ச கொஞ்சமாக குறைத்துக் கொள்ள வேண்டும்.  இவைகள் மூன்றாக பிரிக்கப்படுகின்றது. அவைகள் நிஷித்த கர்மங்கள், பிராயசித்த கர்மங்கள், காம்ய கர்மங்கள் ஆகும். நிஷித்த கர்மங்கள் என்பது சாஸ்திரத்தால் செய்யக் கூடாது என்று கூறப்பட்ட செயல்கள். இவ்வாறு நிஷேதம் செய்யப்படுகின்ற செயல்களை நம்மையும் மீறி நாம் செய்ய விரும்புவோம். பிராயசித்த கர்மம் என்பது நமக்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் கஷ்டங்களை நீக்குவதற்கு செய்யப்படுகின்ற பரிகாரங்களே ஆகும். இந்த கஷ்டங்கள் பிராரப்தத்தினால் வருகின்றது.  கர்மயோகியானவன் இதை அனுபவித்து தீர்க்க வேண்டும், அதற்கு பரிகாரத்தை தேடக்கூடாது. எனவே இதை செய்வதை குறைத்துக் கொள்ள வேண்டும்.  பிறகு முழுவதுமாக விட்டுவிட வேண்டும். காம்ய கர்மம் என்பது இன்பத்தை அனுபவிப்பதற்காக செய்கின்ற செயல்களாகும்.  கர்மயோகியானவன் இந்த கர்மத்தை சிறிது சிறிதாக குறைத்துக் கொண்டு பிறகு முழுவதுமாக விட்டுவிட வேண்டும்.

यज्ञार्थात्कर्मणोऽन्यत्र लोकोऽयं कर्मबन्धनः ।
तदर्थ कर्म कौन्तेय मुक्तसङ्गः समाचर ॥ 9 ॥
அவரவர்களுடைய அன்றாட கடமைகளை எந்த மனநிலையோடு செய்ய வேண்டும் என்று பகவான் கூறுகிறார்.  நாம் செய்யும் செயலினால் வரும் பலனில் பற்றில்லாமல் இருக்க வேண்டும். நம் கடமையை செய்து முடிக்கும்போது அதனால் பலன் அடைந்தவரிடம் எந்த உரிமையையும் எதிர்ப்பார்க்க கூடாது.  உரிமையை தியாகம் செய்ய வேண்டும். அவ்வாறு உரிமையை தியாகம் செய்பவருக்கு  நான் பலன் கொடுக்கிறேன் என்று பகவான் கூறுகின்றார். ஒருவர் யாருக்காவது உதவி செய்து விட்டு அவரிடம் நன்றியை எதிர்ப்பார்ப்பதால் அது கிடைக்காதபோது மனவருத்தம் ஏற்படுகின்றது. எல்லா கடமைகளையும் ஈஸ்வரனுக்காக செய்கின்றேன் என்று நினைத்து செய்ய வேண்டும்.

இறைவனுக்காக செய்கின்ற கர்மங்களை தவிர மற்ற கர்மங்களால் இந்த உலகம் பந்தப்படுகின்றது.  எனவே நாம் செய்கின்ற அனைத்தும் ஈஸ்வரனுக்காக செய்கின்றேன் என்று நினைத்து செய்ய வேண்டூம், கர்மயோகி பக்தனாக இருந்தால் தான் கர்மத்தை யோகமாக செய்ய முடியும்.  ஈஸ்வரன் என்னுடைய எஜமானன், நான அவரது சேவகன், அவர் கட்டளைப்படி என் கடமைகளை செய்கின்றேன் என்ற மனநிலையோடு செய்ய வேண்டும்.  நம் நன்றியுணர்வை இறைவனுக்கு வெளிக் காட்டுவது போல செய்ய வேண்டும். இறைவனால் நாம் அடைந்திருக்கும் பலனை எண்ணிப்பார்க்க வேண்டும். இந்த மனித சரீரமே நல்ல மனதுடன் நமக்கு கொடுத்து இருப்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.  இறைவனுக்காக செய்வது என்பது கடமையானது உரிமையை எதிர்பார்க்காமல் செய்வதாகும். இங்கு கர்மபந்தம் என்பது பாவ-புண்ணியங்களை அதாவது அதிருஷ்ட பலன்களை கொடுப்பதனால், இதிலிருந்து திருஷ்ட பலனாக ராக-துவேஷங்களையும் கொடுக்கின்றது.  எனவே அர்ஜுனா! அதற்காக, ஈஸ்வரனுக்காக பலனில் பற்றில்லாதவனாக கர்மத்தை நன்கு ஈடுபாடுடன் செய்வாயாக!

सहयज्ञाः प्रजाः सृष्ट्वा पुरोवाच प्रजापतिः ।
अनेन प्रसविष्यध्वमेष वोऽस्त्वष्टकामधुक ॥ 10 ॥
கர்மயோகம் என்கின்ற கர்மத்தை செய்யும் முறையும் அதனால் வருகின்ற பலன்கள் இறைவனால் வகுத்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இதை மனிதர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

யக்ஞா – கர்மயோக வாழ்க்கைமுறை என்பது விட்டுக்கொடுத்தும், பகிர்ந்துண்டும் வாழ்தல். இப்படிபட்ட வாழ்க்கைமுறையை கடைபிடித்து வாழும் அறிவை மனிதர்களுக்கு கொடுத்திருக்கின்றேன்.

இல்லறத்தில் இருப்பவர்கள் ஐந்து விதமான யாகங்கள் செய்ய வேண்டும். அவைகள் தேவயாகம், பித்ருயாகம், ரிஷியாகம், மனிதயாகம், பூதயாகம் ஆகும்.  இவைகள் வேதத்திலே சொல்லப்பட்டிருக்கின்றது. இவைகள் நியத கர்மங்களில் வருகின்றது.
1.     தேவயக்ஞம் – ஈஸ்வர வழிபாடு, இறைவழிபாடு நாட்தோறும் நம் வாழ்நாளை பிரார்த்தனையுடன் தொடங்கவேண்டும். அதேபோல இரவு தூங்கப்போகும் முன்பு பிரார்த்தனை செய்ய வேண்டும்.
2.     பித்ருயக்ஞம் – வாழ்ந்து மறைந்த நம்முடைய முன்னோர்களை நினைவு கூறுதல், அவர்களுக்கு செய்ய வேண்டிய கர்மங்களை செய்ய வேண்டும்.
3.     ரிஷியக்ஞம்  - ரிஷிகள் வகுத்து கொடுத்த சாஸ்திரங்களை படித்தல், அதன்படி வாழ்தல்.  அவைகளை காப்பாற்றி வைத்தல், மற்றவர்களுக்கு கற்பித்தல். இது ஒரு ஸத்ஸங்கமாகவும் கருதப்படுகின்றது.
4.     மனுஷ்யயக்ஞம் – மற்ற மனிதர்களுக்கு செய்ய வேண்டிய உதவிகள், சேவை, பிரதிபலன் எதுவும் எதிர்பார்க்காமல் செய்கின்ற அனைத்து சேவைகளும் செய்ய வேண்டும்
5.     பூதயக்ஞம் – மற்ற உயிரினங்களுக்கு செய்கின்ற சேவை, பாதுகாத்தல், உணவளித்தல் போன்றவைகளாகும்
இப்படிபட்ட வாழ்க்கைமுறையை வாழும் அறிவு மனிதர்களுக்கு கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இந்த அறிவுடன் மனிதர்களை ஸ்ருஷ்டி படைத்து பிரம்மாவானவர் கூறலானார்.  இந்த கர்மயோக வாழ்க்கையின் மூலமாக மேன்மை அடையுங்கள். உங்களை உயர்த்தி கொள்ளுங்கள். இந்த வாழ்க்கை முறை உங்களுக்கு விரும்பியது எல்லாம் கொடுப்பதாக இருக்கட்டும்.

देवान्भावयतानेन ते देवा भवय्न्त्तु वः ।
पास्परं भवयन्तः श्रेयः परमवाप्स्यथ ॥ 11 ॥
தர்மோ ரக்ஷதி ரக்ஷித – காப்பாற்றபட்ட தர்மம் நம்மை காப்பாற்றும்
நம்மால் பின்பற்றப்பட்ட தர்மம் நம்மை காப்பாற்றும்.  நாம் இயற்கையோடு சேர்ந்து வாழ வேண்டும். இயற்கையை காப்பாற்றினால் இயற்கை நம்மை காப்பாற்றும். இயற்கையை தேவதைகளாக இந்த ஸ்லோகத்தில் பகவான் குறிப்பிடுகின்றார். ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு மேன்மையான நிலையை அடையுங்கள். 

इष्टान्भोगन्हि वो देवा दास्यन्ते य्ज्ञभाविताः ।
तैर्दत्तान्प्रदयैभ्यो यो भुङ्क्ते स्तेन एव सः ॥ 12 ॥
உங்களால் வணங்கப்படுகின்ற தேவதைகள் போகங்களை உங்களுக்கு கொடுப்பார்கள். யாகங்கள்  மூலம் திருப்திபடுத்தப்பட்ட தேவதைகள் போகங்களை உங்களுக்கு கொடுப்பார்கள். தேவர்களினால் கொடுக்கப்பட்ட போகங்களை அவர்களுக்கு அர்ப்பணம், செய்யாமல் பிரசாத புத்தியில்லாமல் யார் அனுபவிக்கின்றீர்களோ அவர்கள் திருடனுக்கு சமமானவர்கள்.

यज्ञशिष्टशिनः सन्तो मुच्यन्ते सर्वमिल्बिषै ।
भुञ्जते ते त्वघं पापा ये पचन्त्यात्मकारणात् ॥ 13 ॥
யாகத்தில் எஞ்சியதை உண்பவர்கள் எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை அடைகின்றார்கள். ஆனால் யார் தனக்காக மட்டும் சமைக்கின்றார்களோ அவர்கள் பாவத்தையே சாப்பிடுகின்றார்கள். இவர்கள் கர்மத்தை யோகமாக செய்யாதவர்கள். இல்லறத்தில் இருப்பவர்கள் மற்ற ஆசிரமத்திலுள்ளவர்களுக்கு உணவுக்கொடுத்து விட்டு எஞ்சியிருக்கும் உணவை சாப்பிடுபவர்கள் கர்மயோகிகள். இவர்களுக்கு மோட்சத்தை அடைவதற்கு வரும் தடைகளெல்லாம் நீங்கிவிடும்.

अन्नाद्भवन्ति भूतानि पर्जन्यादन्नसम्भव:
यज्ञाद्भवति पर्जन्यो यज्ञः कर्मसमुद्भवः ॥ 14 ॥
எல்லா உயிரினங்களின் சரீரமானது உணவை சார்ந்திருக்கின்றது. உணவானது மழையைச் சார்ந்திருக்கின்றது. மழையானது யாகங்களைச் சார்ந்திருக்கின்றது. கண்ணுக்கு தெரியாத புண்ணியத்தைச் சார்ந்து மழை இருக்கின்றது. இந்த புண்ணியமானது கர்மயோகமாக செய்யும் செயலை சார்ந்திருக்கின்றது.  இந்த செயல் சரீரத்தை சார்ந்திருக்கின்றது.

உணவிலிருந்து ஜீவராசிகளின் ஸ்தூல சரீரங்கள் தோன்றுகின்றன.  மழையிலிருந்து உணவானது உற்பத்தியாகின்றது.  யாகத்திலிருந்து மழையானது உண்டாகின்றது. இங்கு யாகம் என்பது கண்ணுக்கு தெரியாத ஜீவராசிகளின் புண்ணியத்தை குறிக்கின்றது. இந்த யாகமானது புண்ணியத்தை கர்மயோகமாக செய்யும் செயலில் இருந்து உருவாக்குகின்றது.

कर्म ब्रह्मोविद्धि ब्रह्माक्षरसमुद्भवम् ।
तस्मात्सर्वगतं ब्रह्म नित्यं यज्ञे प्रतिष्टितम् ॥ 15 ॥
கர்மத்தைப்பற்றிய அறிவானது வேதத்திலிருந்து வந்ததாகவும், அடைவதாகவும் தெரிந்து கொள். எந்த கர்மம் புண்ணியத்தைக் கொடுக்கும், எந்த கர்மம் பாவத்தைக் கொடுக்கும் என்பதைப் பற்றி உபதேசிப்பது வேதம்தான் இந்த வேதம் பிரமாண ரூபமாக இருக்கின்றது. வேதமானது ஈஸ்வரனிடமிருந்து தோன்றியது.  ஆகவே வேதத்தின் உபதேசமானது எங்கும் பரவியிருக்கின்றது. நம்முடைய கர்மயோகப்படி செய்யும் செயல்களில் நிலைப் பெற்றிருக்கின்றது.

एवं प्रवर्तितं चक्रं ननुवर्तयतीह यः।
अघायुरिन्द्रियारामो मोघं पार्थ स जीवति ॥ 16 ॥
ஹே அர்ஜுனா!
இவ்விதம் உருவாக்கப்பட்ட இந்த ஜகத் சக்கரத்தை எவனொருவன் இந்த உலகில் பின்பற்றவில்லையோ, தர்மப்படி எவனொருவன் வாழவில்லையோ, அவர்கள் பாவமான வாழ்க்கையை உடையவர்கள், பிறவிப்பயனை அடைய முயற்சி செய்யாதவர்கள், இந்திரிய சுகங்களிலே காலத்தை கழித்துக் கொண்டிருப்பவர்கள், பயனற்ற வாழ்க்கையை உடையவர்கள். இந்த மனித வாழ்க்கையை பயனற்றதாக்கி கொள்கிறார்கள்

यस्त्वात्मरतिरेव स्यादात्मतृप्तश्च मानवः ।
आत्मन्येव च सन्तुष्टस्तस्य कार्य न विद्यते ॥ 17 ॥
எந்த மனிதன் தன்னிடத்திலேயே மகிழ்ந்திருப்பவனாக இருக்கின்றானோ, தன்னிடத்திலே திருப்தியாக இருக்கின்றானோ, தன்னிடத்திலேயே மிகவும் சுகமாக இருக்கின்றானோ அவனுக்கு செய்ய வேண்டிய செயல்கள் எதுவும் கிடையாது.

அக்ஞானிகள் புலனுகர் போகப் பொருட்களை மனதில் நினைத்து மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.  ஆனால் ஞானியானவன் தன்னை நினைத்துக் கொண்டே மகிழ்ச்சியுடன் இருக்கின்றான்.
ஆத்ம த்ருப்தஹ -  அக்ஞானிகள் ஒவ்வொருவரும் சில சூழ்நிலைகள், உடைமைகள், உறவினர்கள் போன்றவற்றில் திருப்தியில்லாமல் இருக்கின்றார்கள். ஞானிக்கு எது கிடைத்தாலும், எந்த சூழ்நிலையிலிருந்தாலும் அவைகளை திருப்தியுடன் ஏற்றுக்கொள்வான்.  எதிலும் குறையை காணமாட்டான். தனக்கு சம்பந்தபட்ட விஷயத்திலும் திருப்தியுடன் இருப்பான்.
ஆத்மனியேவ ஸந்துஷ்டி – ஞானியானவன் எல்லா நிலைகளிலும் மனநிறைவுடன் இருந்து கொண்டிருப்பான். எனவே ஞானிக்கு எந்தவிதமான வைதீகமான கர்மங்களும், லௌகீக கர்மங்களும் செய்வதற்கு இல்லை.

கௌதம புத்தரின் கருத்து: அரசர்கள் எப்பொழுதும் சந்தோஷமாக இருப்பதில்லை.  சேவகர்களும் எப்பொழுதும் துயரத்துடன் இருப்பதில்லை.  அரசு பொறுப்பை எடுத்துக் கொண்டால் திருப்தியுடன் இருப்பேன் என்றால்  அந்த திருப்தியை இந்த நிலையிலே அனுபவித்துக்கொண்திருக்கின்ற எனக்கு இந்த அரசு பொறுப்பு தேவையில்லை.

नैव तस्य कृतेनर्थो नकृतेनेह कश्चन ।
न चास्य सर्वभूतेषु कश्चिद्र्थव्यपाश्रयः ॥ 18 ॥
ஞானிக்கு ஏதாவது ஒன்றை செய்வதினால் எந்த பயனும் கிடையாது. எதுவும் செய்யாமலிருந்தாலும் இந்த உலகத்தில் எந்த பயனும் அடைவதில்லை. அவனுக்கு எல்லா ஜீவராசிகளிடத்தில் ஏதாவது ஒன்றிற்காக சார்ந்திருத்தல் என்பது கிடையாது

ஞானியின் வாழ்வில் பிராரப்த வசத்தினால் வருபவைகளை தவிர்ப்பதும் இல்லை.  எதிர்ப்பும் இல்லை. இது இப்படித்தான் நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. இறப்பிலும், வாழ்வதிலும் ஆசை கிடையாது. நிபந்தனையற்ற வாழ்க்கையாக வாழ்ந்து கொண்டிருப்பவன்.

உடல் ஆரோக்கியத்திற்காக ஏதாவது செய்யக்கூடாதா என்று வினவினால் அவர் அதையும் பிராரப்த வசத்திற்கு விட்டுவிடுவதால் அதுவும் தேவையிருக்காது. தன்னிடத்திலுள்ள பொருட்களை காப்பாற்றுவதற்காகவது ஏதாவது செய்யலாமே என்ற கேள்வி கேட்டால் அவனிடத்தில் பொருட்கள் எதுவும் இருக்காது. பொழுது போக்கிற்காகவது எதுவும் செய்யத் தேவையில்லை ஏனெனில் அவனிடத்திலே என்றும் மகிழ்ந்திருப்பதால் இதுவும் தேவையில்லை.

तस्माद्सक्तः सततं कार्य कर्म समाचर ।
असक्तो ह्याचरन्कर्म  परमप्नोति पुरुषः ॥ 19 ॥
ஆகவே எப்பொழுதும் செய்ய வேண்டிய கடமையை, கர்மத்தை செவ்வனே பற்றின்றி செய்து கொண்டிரு.  ஏனெனில் பற்றில்லாதவனாக கடமையை செய்து கொண்டு இருக்கின்ற மனிதன் பரமாத்வை, மோட்சத்தை அடைகிறான்.

कर्मणैव हि स्ंसिद्धिमास्थिता जनकादयः ।
लोकसंग्रहमेवापि सम्पश्यन्कर्तुमर्हसि ॥ 20 ॥
ஸம்ஸித்3தி4ம் – மோட்சம்
கர்மயோகத்தை செய்து கொண்டிருந்ததால் ஜனகர் போன்றவர்கள் இல்லறத்திலிருந்து கொண்டே மோட்சத்தை அடைந்தார்கள். சந்நியாசத்தை எடுத்துக் கொள்ளாமல் இல்லறத்தில் இருந்து கொண்டே ஞானத்தை அடைந்தார்கள். ஜனகர் ஞானியாக எடுத்துக் கொண்டால் அவர் சாஸ்திரத்தை நன்கு கற்று பிறகு கர்மத்தை யோகமாக செய்து கொண்டு மோட்சத்தை அடைந்தார்.  ஜனகர் ஞானியாக எடுத்துக் கொள்ளவில்லையென்றால் அவர் கடமையை பற்றின்றி கர்மயோகமாக செய்து மனத்தூய்மை அடைந்தார் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆத்ம ஞானம் இல்லாத அக்ஞானி, மனத்தூய்மையில்லாதவன் அதாவது ராக-துவேஷம் உடையவன் கர்மயோகத்தை பின்பற்ற வேண்டும்.  இந்த இரண்டையும் தன்னிடத்தே உள்ளது என்று ஏற்றுக் கொண்டவன்தான் கர்மயோகத்தை பின்பற்ற முடியும்.  ஒருவேளை அர்ஜுனன் மனத்தூய்மை அடைந்துவிட்டேன், ஞானத்தை அடைந்து விட்டேன் என்று நினைத்தால்
லோகஸங்க்ரஹம் -  உலகத்தில் நன்மையை பொருட்டுக்காக நன்கு மனதில் கொண்டு உன்னுடைய கடமையை செய்வதுதான் உனக்கு உரியசெயலாகும். உன்னுடைய பிராரப்தம் உன்னை இந்தப் போர்களத்தில் கொண்டு நிறுத்தி இருக்கின்றது.  எனவே அதை ஏற்றுக்கொண்டு உன் கடமையை செய்வதுதான் உனக்கு உரிய செயலாகும்

यद्यदाचरति श्रेष्टस्तत्तदेवेतरो जन: ।
स यत्प्रमाणं कुरुते लोकस्तदनूवर्तते ॥ 21 ॥
வேதம்      தர்ம-அதர்மத்தை அறிய உதவுகின்ற வழிகாட்டி, 
ஸ்மிருதி - வேதத்தில் சொல்லப்பட்ட கருத்துக்களை ரிஷிகள் எழுதிவைத்து இருப்பது. மனு ஸ்ம்ருதி, ராமாயணம், மகாபாரதம் போன்றைவைகள். 
சிஷ்டாசாரம் – நம்முடைய காலத்தில் வேதம் உரைக்கும் தர்மப்படி வாழ்ந்து கொண்டிருக்கும் மகான்கள் வாழ்க்கைமுறை)
ஶ்ரேஷ்ட -  உயர்ந்தவர், மகான்
உயர்ந்த மனிதர்கள் எதையெல்லாம் செய்கின்றார்களோ அவைகளையே மற்றவர்கள் பின்பற்றுகிறார்கள். அவர்கள் எதை சரி-தவறு என்று நிர்ணயித்து வாழ்கின்றார்களோ அதையே  மனிதர்கள் பின்பற்றி நடக்கிறார்கள். எனவே அர்ஜுனா நீ மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்ட வேண்டும்.

न मे पार्थास्ति कर्तव्यं त्रिषु लोकेषु किञ्चन ।
नानवाप्तमवाप्तव्यं वर्त एव च कर्माणि ॥ 22 ॥
ஹே அர்ஜுனா! எனக்கு செய்ய வேண்டியது மூவுலகங்களிலும் கொஞ்சம்கூட கிடையாது.  என்னால் அடைய வேண்டியது எதுவும் அடையப்படாமலும் இல்லை.  ஆனாலும் கூட நான் செயல்பட்டு கொண்டிருக்கின்றேன்.

அனவாப்தம் ச ந -  அடையப்படாமலும் இல்லை
வர்தே – ஈடுபட்டுள்ளேன்.

यदि ह्यहं न वर्तेयं जातु कर्मण्यतन्द्रितः ।
मम वत्मार्नुवर्तन्ते मनुष्याः पार्थ सर्वशः ॥ 23 ॥
ஏனெனில் பார்த்தா! ஒருவேளை நான் எல்லா காலங்களிலும் கவனத்துடன் கர்மங்களில் ஈடுபடாமல் இருந்தால், என்னுடைய வழியையை மனிதர்கள் எல்லா விஷயங்களிலும் பின்பற்றுவார்கள்.
அதந்த்ரஹ – கவனத்துடன், சோம்பல் இல்லாமல்
ஜாது - எப்பொழுதும்
ஸர்வஶ - எல்லாவிதத்திலும்
ந வர்தேயம் – ஈடுபடாமல் இருந்தால்
வக்தம் - வழியை
மனுஷ்யா - ஜீவர்களும் அதையையே 
அனுவர்தந்தே - பின்பற்றுவார்கள்

उत्सीदेयुरिमे लोका न कुर्या कर्म चेदहम् ।
सङ्करस्य च कर्ता स्यामुपहन्यामिमाः प्रजाः ॥ 24 
ந குர்யா கர்ம சேத்3 அஹம் -  நான் கர்மத்தை செய்யவில்லையென்றால் 
இமே லோகா – இந்த மனிதர்கள் – இந்த உலகமானது
உத்ஸீதேயு – நாசத்தை அடையும்
ஸங்கரஸ்ய ச கர்தா - குழப்பத்தை உண்டு பண்ணுபவனாகவும்
இமா: ப்ரஜா: -  இந்த மனிதர்களை 
உபஹன்யாமி - அழிப்பவனாகவும்
ஸ்யாம் - இருக்கிறேன் என்று மக்களால் எண்ணப்படும்.

நான் கர்மத்தை செய்யவில்லையென்றால் இந்த உலகமானது நாசத்தை அடைந்து விடும்.  நான் குழப்பத்தை உண்டு பண்ணுபவனாகவும், இந்த மனிதர்களை நானே அழிப்பவனாகவும் இருக்கிறேன் என்று மக்களால் எண்ணப்படும்.

सक्ताः कर्मण्यविद्वांसो यथा कुर्वन्ति भारत ।
कुर्याद्विद्वाम्स्तथासक्तश्चिकीर्षुर्लोकसंग्रहम् ॥ 25 ॥
ஸக்தா – பற்றுக் கொண்டு
அவித்3வாம்ஸ – அக்ஞானிகள்
அஸக்தா - பற்றில்லாமல்
லோகஸங்க்3ரஹம் – உலகத்திற்கு வழிகாட்டும்
சிகீர்ஷி – செய்ய விரும்பி
குர்யாத் – செய்ய வேண்டும்.

அக்ஞானிகள் பற்றுடன் கர்மங்களை செய்து கொண்டிருப்பதைப் போல ஞானிகளும் பற்றில்லாமல் கர்மங்களை செய்து கொண்டிருப்பார்கள். அவர்கள் செய்வது உலகத்திற்கு வழிகாட்டுவதற்காக செய்கின்றார்கள்

பிராரப்தம் சூழ்நிலைகளைக் கொடுக்கும் அதில் நமக்கு தேர்ந்தெடுக்கும் உரிமை கிடையாது. ஆனால் அதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற வாய்ப்பு நமக்கு உண்டு.

ஹே பா4ரத! செயலிலும் அதன் பலனிலும் பற்றுடைய அக்ஞானிகள் எவ்விதம் செயல் செய்கிறார்களோ அவ்விதமே ஞானியும் பற்றில்லாமல் செயல் செய்து கொண்டிருக்கிறான்.  உலகத்திற்கு நன்மையை செய்ய விரும்பியவனாக செயல் செய்து கொண்டிருக்கிறான்.

न बुद्धिभेदं जनयेदज्ञानां कर्मसङ्गनाम् ।
जोषयेत्सर्वकर्माणि विद्वान्युक्तः समाचरन् ॥ 26 ॥
போ4கத்தில் நாட்டம் உடையவனுக்கு தர்மத்தை உபதேசிக்க வேண்டும். மோட்சத்தை நாடுபவனுக்கு வைராக்கியத்தை உபதேசிக்க வேண்டும். 
புத்திபேதம் – புத்தியில் குழப்பம்
ந ஜனயேத் – உண்டாக்கக் கூடாது.
அக்ஞான கர்மஸங்கினாம் – கர்மத்தில் பற்றுக் கொண்டு விதவிதமாக செய்து கொண்டு இருப்பவர்களான அக்ஞானிகள்.
ஜோஷயேத் - உற்சாகபடுத்தல் 
வித்3வான்  - ஞானி
ஸர்வ கர்மாணி -  எல்லா செயல்களையும்
ஸமாசரன் -  நன்கு செய்து கொண்டு

இவர்களுடைய புத்தியில் குழப்பத்தை உண்டாக்க கூடாது.  அவர்களை உற்சாகப் படுத்த வேண்டும். (ஜோஷயேத்).  ஞானத்தில் நிலைபெற்ற ஞானி எல்லா செயல்களையும் நன்கு செய்துகொண்டு அக்ஞானிகளையும் உற்சாகப்படுத்த வேண்டும்.  அவர்கள் செய்து கொண்டிருக்கும் செயல்களை கர்மப்படி செய்வதற்கு உபதேசம் செய்ய வேண்டும்.

प्रकृतेः क्रियमाणानि गुणैः कर्माणि सर्वशः ।
अहङ्कारविमूढात्मा कर्ताहमिति मन्यते ॥ 27 ॥
ஞானியும் அக்ஞானியும் தம்முடைய கடமைகளை செய்துக் கொண்டிருந்தாலும் அவர்களுடைய மனநிலை வெவ்வேறாக இருக்கும்.  ஞானி செய்யும் செயல்கள் அவனை பந்தப்படுத்துவதில்லை.  அக்ஞானி செய்யும் செயல்கள் அவனை பந்தப்படுத்துகின்றது.  காரணம் அக்ஞானி செய்யும்போது தன்னை கர்த்தாவாக நினைத்துக் கொண்டு செயல்படுகிறான்.  ஞானி அவ்விதம் நினைப்பதில்லை.  எனவே அவன் பந்தப்படுவதில்லை.
ப்ரக்ருதே – அனாத்மா, மாயை
அனாத்மாவினுடைய குணங்களினால் எல்லாவிடத்திலும் எப்பொழுதும் செயல்கள் செய்யப்படுகின்றன. மாயை மூன்றுவிதமான குணங்களை உடையது. அவைகள் சத்துவ, ரஜஸ் மற்றும் தமஸ் ஆகியவைகளாகும்.  மாயையிலிருந்து தோன்றிய அனைத்துப் பொருட்களிலும் இந்த மூன்று குணங்கள் நிச்சயமாக இருக்கும். குணத்தில் மாற்றம் வரும்போது ஸ்ருஷ்டியானது தோன்றுகின்றது.  வெளிதோற்றத்திற்கு வராத நிலையில் மூன்று குணங்களும் சம அளவில் இருக்கும்.  நாம் செய்யும் செயல்களுக்கு காரணம் இந்த குணங்கள்தான்.
சத்துவ குணம் – சிந்தித்தல், படித்தல், வைதீக செயல்களை செய்தல்
ரஜோ குணம்   - உடலளவில் செயல்படுவது
தமோ குணம்  - செயலற்று இருப்பது, கவனக்குறைவாக இருப்பது
அஹங்காரம் – குணரூபமான, சரீரத்தில் நான் என்ற புத்தியினால்
விமூட4 ஆத்மா – குழம்பி விடுகிறான். மோகவசப்பட்டு இருக்கும் அக்ஞானி
அகர்தா அஹம் இத் மன்யதே – நான்தான் செயல் செய்கின்றேன் என்று நினைத்துக் கொள்கின்றான்.  இதிலிருந்து அக்ஞானி இந்தக் காரணத்தால்தான் கர்மத்தால் பந்தப்படுகிறான் என்று தெரிந்து கொள்ள முடிகிறது..

तत्त्वावोत्तु महाबाहो गुणकर्माविभागयोः ।
गुणा गुणेषु वर्तन्त इति मत्वा न सज्जते ॥ 28 ॥
நீண்ட கைகளையுடைய அர்ஜுனா! குணத்தின், கர்மத்தின் தத்துவத்தை அறிந்த ஞானி
குணங்கள் அனைத்தும் குணங்களினால் செயல்படுகின்றன என்று அறிந்து கொண்டு இருக்கும் ஞானியானவன் அவற்றில் பற்றுக் கொள்ளாதிருக்கின்றான்.  மேலும் எதிலும் சம்பந்தப்படாதவனாக இருக்கின்றான்.  

நாம் உலகம், உடல் என்று பிரித்து வைத்துள்ளோம்.  உடல் அனுபவிப்பவனாகவும், உலகம் அனுபவிக்கப்படும் பொருளாகவும் விவகாரம் செய்து கொண்டிருக்கின்றோம், பிரித்து வைத்திருக்கின்றோம்.  மாயையிலிருந்து பிரபஞ்சம் தோன்றியது, நம்முடலும் மாயையிலிருந்து வந்ததுதான் இரண்டும் ஒன்றாக இருந்தாலும் அக்ஞானி அவைகளை பிரித்து பார்க்கின்றனர்.

விபா4க3 – பிரித்தல், வேறுபட்டு இருத்தல்
குணா:  - சரீரம், மனம், புத்தி
கர்ம - செயல்கள் 
குணேஷு – அந்தந்த விஷயங்களில்
வர்தந்தே – செயல்படுகின்றது.

குணத்தின் விபாகம் – ஆத்மாவானது குணத்தினுடைய வேறுபட்ட தன்மை என்று அறிந்த ‘ஞானி
கர்மத்தின் விபாகம் – செய்யப்படுகின்ற செயல்கள் அனைத்தும் குணங்கள்தான் செய்கின்றது நான் அல்ல என்ற அறிவையுடைய ஞானி


प्रकृतेर्गुणसम्मूढाः सज्जन्ते गुणकर्मसु ।
तानकृत्स्नविदो मन्दान्कृत्स्नविन्न विचालयेत ॥ 29 ॥
ப்ரக்ருதியினுடைய, மாயையினுடைய குணங்களினால் மிகுந்த மோகத்தை அடைந்தவர்கள் குணத்திலும், கர்மத்திலும் பற்று வைக்கின்றார்கள்.  இந்கு குணம் சரீரத்தையும், அதனால் செய்யப்படும் செயல்களிலும் பற்று வைக்கின்றார்கள்.  இத்தகைய முற்றும் அறிந்திராத, மந்தபுத்தி உடைய அக்ஞானிகளுக்கு அனைத்தையும் அறிந்தவன் அதாவது ஆத்மா-அனாத்மா அறிவை உடையவன் பிரம்மத்தையும் ஜகத்தையும் முழுமையாக அறிந்தவன் வேதாந்தத்தை உபதேசிக்க கூடாது.

सयि सर्वाणि कर्माणी संन्यस्याध्यात्मचेतसा ।
निराशीर्निर्ममो भूता युध्यस्व विगतज्वरः ॥ 30 ॥ ***
இதில் ஐந்து வகையான கருத்துக்களை கூறி கர்மயோக உபதேசத்தை முடிக்கின்றார்.  யார்  மனத்தூய்மை அடைந்து ஆத்ம ஞானத்தை அடைய விரும்புகிறார்களோ அவர்கள் கர்மயோகத்தை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார் பகவான்.
1.     அத்3யாத்ம சேதஸா – ஆத்மாவை பற்றிய அறிவுடனும், விவேகத்துடனும் ஒருவன் கர்மயோகத்தை செய்ய வேண்டும். இங்கு விவேகம் என்பது பகவான் இதுவரை கூறிய கர்மயோகம் செய்யும் முறையை குறிப்பிடுகின்றார்  கர்மம் செய்வதில் இருக்கும் பாவனைதான் முதல் விவேகம், இது என்னால் இறைவனுக்காக செய்யப்பட வேண்டியது என்ற விவேகம். கர்ம பலனை இறைவன் கொடுப்பார் என்ற அறிவுடன் செயலில் ஈடுபடவேண்டும். ஆகவே பலனில் பற்றற்று சமநிலையுடன் இருக்க வேண்டும்.
2.     மயி ஸர்வாணி கர்மாணி ஸந்யஸ்யஹ – ஈஸ்வரார்ப்பண புத்தியுடன் கடமையை செய்து கொண்டிருக்க வேண்டும்.  ஈஸ்வரனான என்னிடத்தில் எல்லா செயல்களையும் அர்ப்பணம் செய்ய வேண்டும்.  பலனை அவர் கொடுக்கும் பிரசாதமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
3.     நிராஶீ – எதிர்பலனை எதுவும் எதிர்பார்க்காமல் இருத்தல். நம்முடைய கடமையில் இருந்து வரும் உரிமையை தியாகம் செய்து விட வேண்டும்.
4.     நிர்மமஹ பூ4தா – மமகாரத்தை தியாகம் செய்து விட வேண்டும். மமகாரம் என்பது என்னுடையது என்ற மனப்பாவமாகும்.  உலகில் உள்ள அனைத்தும் இறைவனுக்கு சொந்தமானது, அதை அனுபவிக்கலாம் ஆனால் உரிமை கொண்டாடக் கூடாது.  என்னுடைய பொருட்கள், என்னைச் சார்ந்தவர்கள், என்னுடைய உறவினர்கள் என்று எதையுமே என்னுடையதல்ல என்ற மனநிலையோடு இருக்க வேண்டும்.
5.     விக3தஜ்வர – சமமான பாவனையுடன் இருத்தல், மன அமைதியுடன் கடமை செய்து கொண்டிருக்க வேண்டும்.  செய்யப்போகும் செயலின் விளைவைப் பற்றி மனக்குழப்பம் இல்லாமல் மன அமைதியுடன் கடமையை செய்ய வேண்டும்.
யுத4யஸ்வ – ஆகையால் உன்னுடைய சுயதர்மமான யுத்தத்தை செய்வாயாக

ये मे मतमिदं नित्यमनुतिष्टन्ति मानवाः ।
श्रद्धावन्तोऽनसूयन्तो मुच्यन्ते तेऽपि कर्मभिः ॥ 31 ॥
எந்த மனிதர்கள் இந்த என்னுடைய கருத்துப்படி, நியதிப்படி எப்பொழுதும் பின்பற்றி வாழ்கின்றார்களோ, சிரத்தை உடையவர்களாக, பகவானின் இந்த நியதியில் முழு நம்பிக்கையுடையவர்களாக, குற்றங்குறை (அனஸூயந்த) காணாதவர்களாக இருந்து கொண்டு என் உபதேசத்தை பின்பற்றுபவர்களோ, அவர்கள்  கர்ம பந்தத்திலிருந்து விடுதலை அடைகின்றார்கள். பாவ-புண்ணியத்திலிருந்து விடுதலையை அடைகின்றார்கள்

ये त्वेतदभ्यसूयन्तो ननुतिष्टन्ति मे मतम् ।
सर्वज्ञानविमूढांस्तन्विद्धि नष्टान्चेतसः ॥ 32 ॥
ஆனால் எந்த மனிதர்கள் நான் வகுத்துக் கொடுத்த நியதிப்படி வாழாமல், அதில் குறை காண்பவர்களாக இருக்கிறார்களோ அவர்கள், எல்லாவிதமான ஞானத்திலும் மனமயக்கம் அடைந்தவர்களாகவும், நஷ்டத்தை அடைந்தவர்களாகவும் இருப்பார்கள் என்பதை அறிந்து கொள்வாயாக

ஸர்வக்ஞன விமூடா4 – மனிதனுக்கு இருக்க வேண்டிய இரண்டு அறிவானது, 1. இதைத்தான் அடைய வேண்டும், 2. அதை அடைவதற்கு இதுதான் பாதை என்று அறிதல். இவைகளை இவர்கள் அறியாமல் இருப்பார்கள்
நஷ்டா – அவனுடைய வாழ்க்கை முறையால் காலத்தை வீணாக்குவது மட்டுமல்லாமல், சீரழிந்தும் போகின்றார்கள்

सदृशं चेष्टते स्वस्याः प्रकृतेर्ज्ञानवानपि ।
प्रकृतिं यान्ति भूतानि निग्रहः किं करिष्यति ॥ 33 ॥
மனிதர்கள் தர்ம-அதர்மத்தைப் பற்றி தெரிந்தும் அதர்மத்தை செய்துக் கொண்டு தர்மத்தை விட்டு விடுகின்றார்களே என்ற கேள்விக்கான பதில் இதில் கிடைக்கிறது.  ஏன் எல்லோரும் கர்மயோகப்படி வாழ்வதில்லை மனிதர்கள் விதவிதமாக செயல்படுகிறார்கள் என்ற கேள்விக்கும் இதில் விடை கிடைக்கிறது. நம்மை சுற்றியிருப்பவர்கள் செய்யும் தவறுகளால் பாதிக்கப்படுகின்றோம். இந்த நிலையில் அவர்களை மாற்றுவதற்கு முயற்சி செய்தாலும் தோல்விதான் அடைவோம்.  அவரவர் தங்களுடைய ப்ரக்ருதியின் குணங்களுக்கேற்ப செயல்பட்டுக்  கொண்டு இருக்கிறார்கள். அதர்மப்படி வாழ்பவர்களை கண்டால் எரிச்சலடைகின்றோம், மனதால் பாதிக்கப்படுகின்றோம். இந்த நிலையில் அவர்களை மாற்றுவதற்கு முயற்சி செய்தாலும் தோல்விதான் அடைவோம். 

ஸ்வஸ்யாஹ - அவரவர்களைச் சார்ந்த
ப்ரக்ருதே           - சுபாவத்திற்கு
ஸத்3ருஶம்      -  ஏற்றவாறு
சேஷ்டதே         - செயல்களைச் செய்கிறார்கள்

ஒவ்வொருவரும் அவரவர்களுடைய சுபாவத்தின்படி செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள். இந்த சுபாவம் மனிதனுக்கு மனிதன் மாறுபடுகின்றது. ஏனென்றால் அவர்கள் பூர்வ ஜென்மங்களில் செய்த தர்ம-அதர்ம சம்ஸ்காரங்களுக்கேற்றவாறு இந்த பிறவியில் சுபாவங்கள் அமைகின்றது.  இந்த பிறவியில் எந்த ஸம்ஸ்காரம் வெளிப்படுகின்றதோ அதைத்தான் ப்ரக்ருதி, சுபாவம் என்று கூறப்படுகிறது என்று சங்கரர் விளக்கியுள்ளார். ஞானியும்கூட இதேபோலத்தான் செயல்படுகிறான்.

பூதானி - ஜீவராசிகள்
ப்ரக்ருதிம் யாந்தி – தன்னுடைய சுபாவப்படி செயல்படுகின்றன
நிக்3ரஹ கிம் கரிஷ்யாமி – இந்த சுபாவத்தை தடுப்பதால் என்ன பயன்?
இதிலிருந்து அவரவர்களுடைய இயற்கையான சுபாவத்தை யாராலும் மாற்றி அமைக்க முடியாது.  ஞானியாலும் கூட மாற்றி அமைத்துக் கொள்ள முடியாது ஞானியானவன் மோட்சம் அடையும் முயற்சியின் போது அதர்மத்தை அறவே நீக்கிவிட்டு, தர்மத்தை அப்படியே விட்டுவிடுகிறான். அதனால் அவன் பந்தப்படுவது இல்லை.

इन्द्रियस्येन्दियस्यर्थे रागद्वेषौ व्यवस्थितौ ।
तयोर्न वशमागच्छेत्तौ ह्यस्य परिपन्थिनौ ॥ 34 ॥
மனதிலுள்ள ஸம்ஸ்காரங்களினால் உலகிலுள்ள சில பொருட்கள் மீது ராகமும் சில பொருட்கள் மீது துவேஷமும் ஏற்படுகின்றது.  அந்த ஸம்ஸ்காரங்கள் வெளிப்படுகின்ற சூழ்நிலைகள் அமையும்போது அவைகள் மனதில் ராக துவேஷங்களாக வெளிப்படுகின்றன. எல்லா விருப்பு-வெறுப்புக்களும் செயலுக்கு வருவதில்லை.  சில விருப்பு-வெறுப்புக்கள்தான் செயலில் ஈடுபட வைக்கின்றது.  நம்முடைய முயற்சியும், நம்மிடத்திலுள்ள அறிவும் எந்த விருப்பு-வெறுப்புக்களுக்கு  துணை செய்கின்றதோ அவைகள்தான் செயலுக்கு வரும்.  நம்முடைய சுபாவத்தை நீக்குவதற்கு, செயல்பட முடியாததாக மாற்றுவதற்கு சாஸ்திர அறிவு, பெருமுயற்சி இவைகள்தான் துணைபுரியும்.  மனதில் தோன்றுகின்ற ராக-துவேஷங்களை தடுக்க முடியாது ஆனால் செயலுக்கு வரவிடாமல் தடுக்கலாம்.

ஸ்லோக விளக்கம்:
ஒவ்வொரு புலனகளுக்குரிய விஷயத்தில் விருப்பு வெறுப்பானது கண்டிப்பாக தோன்றும்,   அவைகளின் வசத்தில் அகப்படக்கூடாது. அவைகளின் பிடியில் அகப்பட்டுக் கொள்ளக் கூடாது.  அதாவது அவைகளை செயல்களாக வெளிபடுத்தக்கூடாது.  இவ்விரண்டும்தான் மோட்சத்தை அடைய முயற்சி செய்பவர்களுக்கு தடைகளாக இருக்கும் வழிப்பறி திருடர்கள்.  மேன்மையான பாதையில் சென்று கொண்டிருப்பவர்களுக்கு இடையூறு செய்யும் பெரும் எதிரிகள்.

श्रेयान्स्वधर्मो विगुणः प्रधर्मात्स्वनुष्टितात् ।
स्वधर्मे निधनं श्रेयः परधर्मो भयावहः ॥ 35 ॥
வானப்ரஸ்தாஸ்ர கடமைகள் – அளவோடு சாப்பிடுதல், மௌனமாக இருத்தல், ஜபம், தியானம், விரதம் போன்ற தவங்களை மேற்கொள்ளுதல் ஆகியவைகளாகும்
தன்னுடைய கடமையை குறையுடன் (விகுண) செய்தாலும் அதுவே சிறந்தது.  இது மற்றவர்களுடைய கடமைகளை நன்றாக செய்வதைக் காட்டிலும் உயர்ந்தது. தன்னுடைய கடமையை செய்து கொண்டிருக்கும் போது இறந்தாலும் அது மேன்மையை தரும்.  மற்றவர்கள் கடமையை செய்தால், பரதர்மத்தை செய்தால் அது பயத்தைத் தான் கொடுக்கும்.  பிறர் தர்மத்தை, கடமையை கடைப்பிடித்து வாழ்பவன் தன் நிலையிலிருந்து வீழ்ச்சி அடைகிறான்.

अर्जुन उवाच ।
अथ केन प्रयुक्तोऽयं पापं चरति पुरूषः ।
अनिच्छन्नपि वार्ष्णेय बलादिव नियोजितः ॥ 36 ॥
அர்ஜுனன் கேட்கிறான். 
ஹே கிருஷ்ண பகவான்!  பிறகு எந்த காரணத்தினால் தூண்டப்பட்டவனாக (ப்ரயுக்தஹ) இந்த மனிதன் அவன் விரும்பாவிட்டாலும் பாவத்தை செய்கின்றான்? எது அவனை பலவந்தமாக பாவத்தை செய்யுமாறு தூண்டுகிறது?

श्रीभववानुवाच ।
काम एष क्रोध एष रजोगुनसमुद्भवः ।
महाशनो महापाप्मा विद्धयेनमिह वैरिणम् ॥ 37 ॥
பகவான் கிருஷ்ணர் பதிலளிக்கிறார்.
ஆசையின் வசப்பட்டு பாவத்தை செய்கின்றான். நம் மனமே மனம், புத்தி என்ற  இரண்டு வகையாக செயல்படுகின்றது.  புத்தி என்பது ஒன்றை நிச்சயம் செய்கின்றது, தீர்மானிக்கின்றது பிறகு செயலில் ஈடுபட வைக்கின்றது. மனம் எதையுமே நிச்சயம் செய்யாது, புத்தியின் கட்டளையையும் கேட்காது.  அது தன்னிச்சையாக செயல்பட்டுக் கொண்டிருக்கும்.  அதனால்தான் பாவ காரியங்களை செய்ய வைத்துவிடும்.  மனதிலிருக்கும் ஆசையினால்தான் பாவ செயல்களை மனிதன் செய்கின்றான்.

ஸ்லோக விளக்கம்:
நம் அனுபவத்தில் இருக்கின்ற ஆசைதான் அதை அடைய தடை வரும் போது கோபமாக உருவெடுக்கின்றது.  கோபமாக மாறக்கூடிய ஆசையானது ரஜோ குணத்திலிருந்து உண்டாகின்றது. இதிலிருந்து ரஜோ குணத்தை குறைத்தால் ஆசையும் தானாக குறைந்துவிடும். ஆசை நிறைவேறிக் கொண்டிருந்தாலும் அவைகள் மேலும் வளர்ந்து கொண்டிருக்கும். ஆசைக்கு எவ்வளவு அனுபவித்தாலும் நிறைவு ஏற்படாது, போதும் என்ற மனநிலை வராது, மேலும் வேண்டும் என்று அதிகரிக்கும். அதாவது போகங்களில் போதும் என்ற எண்ணமில்லாத மனநிலையே பெரிய பாவ காரியங்களை செய்வதற்கு காரணமாக இருக்கின்றது. இதை அறிந்து கொள்வாயாக என்று பகவான் கூறுகிறார்.

धूमेनाव्रियते वह्निर्यथादर्शो मलेन च ।
यथोल्बेनानावृतो गर्भस्तथा तेनेदमावृरम् ॥ 38 ॥
இதில் ஆசை எவ்வாறு ஞானத்தை மறைத்துக் கொண்டிருக்கின்றது என்பதை உதாரணத்துடன் விளக்கப்படுகின்றது.  மனம் சாதாரண நிலையில் புத்தி சொல்வதை கேட்டு செயல்படும். ஆனால் ஆசை வயப்பட்டுவிட்டால் புத்தியின் கட்டளையை மாற்றியமைத்து செயல்படும். புத்தியையே தர்மத்தை விட்டுவிட்டு அதர்மத்தை செய்யலாம் என்று தீர்மானிக்க வைத்துவிடும்.

ஸ்லோக விளக்கம்:
நெருப்பானது புகையினால் எவ்விதம் மூடப்பட்டிருக்குமோ, அழுக்கானது எவ்விதம் நிலைக்கண்ணாடியை மூடிக்கொண்டிருக்குமோ அவ்விதமே ஆசையினால் அறிவு  மறைக்கப்பட்டிருக்கின்றது.  இந்கு அறிவு என்பது புத்தியின் சக்தியை குறிக்கின்றது.  சிந்தித்து பார்க்கும் சக்தியை மறைத்து விடுகின்றது.  சில ஆசைகளை சிறு முயற்சியுடன் நீக்கிவிடலாம்.  சில ஆசைகளை அதிக முயற்சியெடுத்து நீக்கிவிடலாம். வேறு சில ஆசைகளை பொறுமையோடு அனுபவித்துத்தான் தீர்த்து விட வேண்டும்.

आवृतं ज्ञानमेतेन ज्ञानिनो नित्यवैरिणा ।
कमरूपेण कौन्तेय दुष्पूरेणानलेन च ॥ 39 ॥
ஹே அர்ஜுனா! அக்ஞானிகளுக்கு என்றுமே பகைவனாக இருக்கின்ற ஆசையினால் அறிவானது மறைக்கப்படுகின்றது.  அக்ஞானிகளுக்கு நிறைவேறாத ஆசைகளே பகைவனாக இருக்கின்றது.  இந்த ஆசையை திருப்தியடைய செய்ய முடியாது.  ஆசைக்கு முடிவே கிடையாது.  ஆசையை அனுபவித்து தீர்க்க முடியாது. நெருப்பில் நெய்யை ஊற்ற ஊற்ற அது அதிகமாக எரிவதைப் போல ஆசைகள் நிறைவேற நிறைவேற இன்னும் அதிகமாக வளர்ந்து கொண்டு போகும்.

इन्द्रियाणि मनो बुद्धिरस्याधिष्टानमुच्यते ।
एतौर्विमोहयत्येष ज्ञानमवृत्य देहिनम् ॥ 40 ॥
ஆசையின் இருப்பிடங்கள் புலன்கள், மனம், புத்தி, என்று சொல்லப்படுகிறது. இவைகளுடன் இருக்கின்ற ஆசையானது ஜீவாத்மாவை விதவிதமாக மோகத்திற்கு உட்படுத்துகின்றது. மேலும் அறிவையும் மறைத்து விடுகின்றது.

ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் ஸம்ஸ்காரங்கள் இருக்கின்றது. இயற்கையான குணங்கள் இருக்கின்றது. அதன் அடிப்படையில் ராக-துவேஷங்கள் வெளிப்படுகிறது.  வெளியிலுள்ள விஷயங்கள் இந்திரியங்கள் மூலமாக மனதை அடைகின்றது.  இந்த ஸம்ஸ்காரங்களின் அடிப்படையில் சில பொருட்களில், விஷயங்களில் ஆசை ஏற்பட்டு விடுகின்றது.

तस्मात्त्वमिन्द्रियाण्यादौ नियम्य भरतर्षभ ।
पाप्मानं प्रजहि ह्येनं ज्ञानविज्ञाननाशनम् ॥ 41 ॥
இந்த ஆசையை வெற்றி கொள்வதற்கான வழியை பகவான் கூறுகிறார்.  ஶம, தம என்கின்ற சாதனங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் உபதேசிக்கின்றார்.

ஆகவே ஹே அர்ஜுனா! நீ முதலில் புலன்களை கட்டுப்படுத்த வேண்டும், ஒழுங்குப்படுத்த வேண்டும். இந்த பெரும்பாவியான ஆசையை நன்கு அழித்து விடுவாயாக.  இந்த ஆசையானது அடைந்த ஆத்ம ஞானத்தையும், விக்ஞானத்தையும் அழிக்கக் கூடியது. ஞானநிஷ்டையையும் அடைய விடாமல் தடுக்கக்கூடியது.  பிரம்மனே ஆத்மா என்ற அறிவை அடையவிடாமல் தடுக்க கூடியது.

इन्द्रियाणि परण्याहुरिन्द्रियेभ्यः परं मनः ।
मनसस्तु परा बुद्धिर्यो बुद्धेः परतस्तु सः  ॥ 42 ॥
ஒருபொருளை உடலளவில், புலன்களவில் அனுபவிக்காமல் விட்டுவிட்டாலும், மனதில் பற்றுதல் இருந்து கொண்டுதான் இருக்கும். ஆத்ம ஞானத்தினால்தான் இந்தப்பற்றை முழுவதுமாக நீக்கமுடியும்.  ஆத்ம ஞானத்தினால் எப்படி மனதில் இருக்கும் ஆசை அழிக்கப்படும். மனநிறைவின்மையினால் ஆசை உருவாகின்றது.  இந்த மனம் நிலையற்ற, குறையுள்ள வஸ்துவிடம் அபிமானம் கொண்டிருப்பதால் நிறைவின்மையுடன் இருக்கின்றது.  மனம் நான் பூரணமான ஸ்வரூபத்தை உடையவன் என்றும் எப்பொழுதும் நிறைவுடனும், திருப்தியுடனும் இருப்பவன் என்று அறிந்து கொண்டால் என்றென்றும் மன நிறைவுடன் இருக்கும், திருப்தியுடன் இருக்கும்.  ஆசைகள் தோன்றுவதற்கு வாய்ப்பே இருக்காது.

ஆத்மா அறிவு ஸ்வரூபமாகவும், என்றென்றும் மாறாமல் இருப்பது. இது மனம், புத்தி, உடல், புலன்கள், மற்றும் ஜகத் இவைகளை பிரகாசப்படுத்துகின்றது.  ஆத்மாவை அனாத்மாக்களான உடல், மனம், புத்தி இவைகளோடு கலந்து புரிந்து கொண்டு இருக்கின்றோம்.

ஸ்லோக விளக்கம்
பத்து இந்திரியங்கள் உடலைக் காட்டிலும் மேலானவை என்று கூறுகிறார்கள். இந்திரியங்களை காட்டிலும் மேலானது மனம், இதைக் காட்டிலும் புத்தி மேலானது. ஆனால் எந்தவொன்று புத்தியைக் காட்டிலும் மேலானதோ அதுவே ஆத்மா என்று புரிந்து கொள்ள வேண்டும்.

நான் என்ற புத்தியை ஆத்மாவுக்கு கொண்டு வரவேண்டும் என்று உபதேசிக்கப்பட்டு இருக்கின்றது.  பராணி என்று சொல்லுக்கு சூட்சுமமானது, அதிகமாக வியாபித்து இருக்கின்றது, அருகில் இருக்கின்றது என்று மூன்று வகையாக பொருட்கொள்ளப்-படுகிறது. நான் என்ற அபிமானத்தை ஸ்தூல சரீரத்திலிருந்து எடுத்து புலன்களில் வைக்க வேண்டும். இதேப்போன்று புலன்களிலிருந்து மனதுக்கும், மனதிலிருந்து புத்திக்கும் அபிமானத்தை கொண்டுவந்து இறுதியில் ஆத்மாதான் நான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

एवं बुद्धेः परं बुद्ध्वा संस्तभ्यात्मानमात्मना ।
जहि शत्रुं महाबाहो कामरूपं दुरासदम् ॥ 43 ॥
இவ்விதம் புத்தியைக் காட்டிலும் மேலாக ஆத்மாவை அறிந்து, இந்த ஆத்ம அறிவில் நிலைபெற்று, இந்த அறிவினால் அர்ஜுனா! வெற்றி கொள்ள கடினமான ஆசை என்கின்ற பகைவனை அழித்துவிடு.
து3ராஸத3ம் – நீக்குவதற்கு கடினம்
மனம், புத்தி, புலன்கள் இவைகளில் அபிமானத்துடன் இருந்தால் அதிலுள்ள தர்மங்கள், அதர்மங்கள் நம்மைச் சார்ந்ததாக எண்ணிக் கொள்ள நேரிடும்.

தொகுப்புரை
01-01     ஞானம்தான் மோட்சத்தை கொடுக்கும் என்றால் என்னை எதற்காக கர்மத்தில் ஈடுபட வைக்கின்றீர்கள்.
02-07     இரண்டு வாழ்க்கை முறை இல்லறம், துறவறம் அதேபோன்று இரண்டு சாதனங்கள் கர்மயோகம், ஞானயோகம். எந்த வாழ்க்கை முறையில் இருந்தாலும் இந்த இரண்டு சாதனங்களைப் பயன்படுத்தித்தான் மோட்சத்தை அடைய முடியும்.  ஞானயோகத்திற்கு வரவேண்டுமானால் கர்மயோகத்தின் மூலமாக மனத்தூய்மை அடைந்திருக்க வேண்டும். மனத்தூய்மையையும், சாதன சதுஷ்டய சம்பத்தி என்ற தகுதிகளை அடையாமல் கர்மத்தை விடக் கூடாது. அப்படி விடுபவன் மித்யாசரன் என்று அழைக்கப்படுவான்.
08-16     கர்மயோகத்தைப் பற்றிய விளக்கம் கூறியிருக்கிறார்.  அவரவர்களுடைய ஸ்வதர்மத்தை கடைப்பிடிக்க வேண்டும். புத்தியிலிருந்து வரும் செயலை ஈஸ்வர அர்ப்பணமாக செய்ய வேண்டும்.  பலனில் பற்றை வைக்காமல் அதை இறைவனின் பிரசாதமாக எடுத்துக் கொள்ள வேண்டும். தர்மப்படி வாழ்தல், அதுவே நம்மை பாதுகாக்கும். 
17-18     மோட்ச ஸ்வரூபத்தைப்பற்றிய அறிவுரை. தன்னிடத்திலே சுகமாகவும், திருப்தியாகவும் இருத்தல், இதை நான் செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்ற நிபந்தனையின்றி இருப்பவன்
19-19     கர்மயோகத்தைப் பற்றி விரிவாக கூறியிருக்கின்றார்
20-29     சிஷ்டாச்சாரன்- லோகசங்க்ரஹம் – மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக உன் கடமைகளை செய்துகொண்டு வரவேண்டும்.  உலக நன்மைக்காக செயல்களை செய்து கொண்டிருப்பது. சிஷ்டாச்சாரம் என்றால் மேலானவர்கள் எதை செய்கின்றார்களோ அதை மற்றவர்களும் பின்பற்றுவார்கள்.  ஞானிகள், கர்மத்திலும், போகத்திலும் இருப்பவர்களுக்கு எந்தவிதமான அறிவுரையும், விவேக வைராக்கியத்தைப் பற்றி பேசக் கூடாது.
30-30     கர்மயோகத்தின் ஸாரம் கூறப்பட்டது
31-32     கர்மயோகத்தின் பெருமைகளை கூறினார்
33-34     ப்ரக்ருதி-புருஷார்த்த விவேகம் – விதவிதமாக மக்கள் செயல்படுவதற்கான காரணம் கூறப்பட்டுள்ளது
35—35  பரதர்ம தியாகம் – மற்றவர்களின் கடமைகளை செய்யக் கூடாது என்று அறிவுறுத்தினார்.
36-36     எல்லோரும் விரும்பாமலே பாவத்தை ஏன் செய்கின்றார்கள்? என்று அர்ஜுனன் வினவினான்.
37-43     மனதில் இருக்கின்ற ஆசைதான் துன்பத்திற்குக் காரணம், காம ஸ்வரூபம், காமத்தின் இருப்பிடம். அதை நீக்குவதற்கான வழியை உபதேசித்துள்ளார். ஆசையின் ஸ்வரூபம் க்ரோதம், இருப்பிடம், இந்திரியங்கள் மனம், வெல்வதற்கான வழி ஆத்மஞானத்தை அடைதல்

ॐ तत्सदिति

A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...