Showing posts with label பகவத் கீதை-10. Show all posts
Showing posts with label பகவத் கீதை-10. Show all posts

Thursday, December 8, 2016

Srimad Bhagavat Gita - Chapter-10

அத்தியாயம்-10
விபூதியோகம்
ஸ்வாமி குருபரானந்தாவின் உபதேச விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது-07-02-2022
முகவுரை:
ஈஸ்வரனே இந்த உலகத்திற்கு உபாதான காரணமாகவும், நிமித்த காரணமாகவும் இருக்கின்றார்.  உபாதான காரணம் என்பது மூன்று காலங்களிலும் இருப்பது, இருந்து கொண்டிருப்பது.  காரியத்தில் உபாதான காரணத்தைத்தான் நாம் பார்க்கின்றோம். உபாதான காரணமாக இருக்கின்ற ஈஸ்வரனே அனைத்திலும் இருக்கின்றார்.  அவரைத்தான் நாம் பார்க்கின்றோம் என்ற அறிவோடு பார்க்க வேண்டும்.  காரியங்கள் என்பது வெறும் மாயை, நாம-ரூபங்களே அவைகள் என்று புரிந்து கொள்ள வேண்டும்.  உதாரணமாக எல்லா பானைகளிலும் நாம் பார்ப்பது களிமண்தான், விதவிதமான பானைகள் வெறும் நாம-ரூபங்கள்தான் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஆனால் இயல்பாக நாம் உலகத்தைத்தான் உண்மையென்ற புத்தியோடு பார்க்கின்றோம்.  ஏன் ஈஸ்வர த்ருஷ்டியை இழந்தோம்? எது அவரை நினைக்க விடாமல், பார்க்க விடாமல் தடுக்கிறது? என்று ஆராய்வோம்.  ஆடை, வீடு  தருகின்ற அடிப்படை பயனை நாம் மறந்து விடுகின்றோம்.  ஆனால்  அதில் அலங்காரங்களை சேர்த்து பயன்படுத்த முயற்சி செய்கிறோம். நாம் அடிப்படை பயனை மறந்து அதிலே ஏற்றி வைத்திருக்கும் நாம-ரூபங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிலே நம் கவனத்தை செலுத்துகின்றோம். 

நம் கவனம் அதிஷ்டானத்திலிருந்து நாம-ரூபத்திற்கு சென்று விடுகின்றது.  இதேபோன்று பிரபஞ்சம் ஈஸ்வர ஸ்வரூபம்தான்.  ஆனால் நாம் இதை மறந்து விட்டு அதில் ஏற்றி வைத்திருக்கும் நாம-ரூபத்திலே நமது  கவனத்தை செலுத்துகிறோம்.  எப்படி நாம-ரூபத்திலிருந்து அதிஷ்டானத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று பார்க்க வேண்டும் பகவான் இந்த உலகத்தில் இருக்கும் சில பெருமைகளை எடுத்துக் கொண்டு அதற்கு அதிஷ்டானமாக நான்தான் இருக்கின்றேன் என்று நம் கவனத்தை அவைகளில் கொண்டு வருவதற்கு முயற்சி செய்கிறார். இதனால் நாம் நாம-ரூபத்தில் இருந்து நம் கவனத்தை எடுத்து ஈஸ்வர ஸ்வரூபமாக பார்க்கலாம்.

இந்த அத்தியாயத்தில் மூலம் நம்முடைய கவனம் ஈஸ்வர ரூபத்தை பார்க்கும் பயிற்சியை தொடங்கி வைக்கின்ற பகவான். இதனால் நாம ரூபத்தினால் வரும் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

அவருடைய விபூதிகளைக் கேட்டதனால் அடையும் பலன்கள் இனி பார்க்கலாம்.
1.    உபாஸனார்த்தம் – தியானத்திற்கு –  அவரது பெருமைகளை பலமுறை தியானிப்பதனால் அனைத்தும் ஈஸ்வர ஸ்வரூபமாக பார்க்க முடியும்.  இந்த விபூதியோகம் தியானத்திற்காக விராட் உபாஸனை அறிவுறுத்தப்படுகிறது.
2.    த்வேஷ நிவாரனார்த்தம் – வெறுப்பை நீக்குவதற்காக – இந்த உலகத்தில் இருந்து  நமக்கு இயல்பாகவே சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்று எண்ணம் இருக்கின்றது.  இதையே உலகத்தின் மீதுள்ள மோகம் கூறப்படுகின்றது. துயரங்கள் நிறைந்த உலகத்தை சுகமாக எண்ணுவதே மோகம் எனப்படுகிறது.  உலகத்தில் உள்ள அனைத்தும் சாதனமாக இருக்கின்றது, ஆனால் அவைகளை சாத்தியமாக எண்ணுவதே மோகம் என்று அழைக்கப்படுகிறது.  சாஸ்திர அறிவு இருந்தாலும்  உலகத்தை துயரமயமானது என்று நிந்திப்பதற்கு காரணம் அதிலுள்ள மோஹத்தை நீக்குவதற்காகத்தான். இதனால் மோகம் சென்று வெறுப்பு வந்திருக்கும் நிலையில் இந்த விபூதிகள் அதை நீக்கி கொள்ள பயன்படும்.
3.    அபிமான நாஶார்த்தம் – அகங்காரத்தை நீக்குவதற்காக -  நம்மிடம் இருக்கும் திறமையும், புகழும் ஈஸ்வரனுடையதே என்ற அறிவை அடைவோம். அவைகள் என்னுடையது என்ற அகங்காரம் நீங்கி பணிவுடன் இருப்போம்.  இந்த திறமையும், புகழும் என்னுடைய முயற்சியால் அடைந்தது என்று கர்வம் அடைந்திடுவோம். இந்த கர்வத்தை அவைகள்  இறைவனுடையது என்ற அறிவுதான்  நீக்கிவிடும்.
4.    அஸூயா நாஶார்த்தம் – பொறாமை நீக்குவதற்காக  - நம் நெருங்கியவர்களிடம் இருக்கும் திறமையும், புகழும், செல்வமும் கண்டு பொறாமை அடைவோம்.  பொதுவாக எல்லோருக்கும் உள்ளுக்குள் இருந்து கொண்டேதான் இருக்கும்,. ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டோம்.  இதை நீக்க வேண்டும் என்றால் ஈஸ்வரனுடைய அனுகிரஹமும், அவரை பற்றிய அறிவும் இருக்க வேண்டும். இந்த பொறாமை நீங்க வேண்டுமென்றால் அவைகளனைத்தும் பகவானுடையதே என்ற அறிவு வளர வேண்டும்.
5.    மனோ விஶனார்த்தம் – மனதை விரிவுபடுத்துவதற்காக – பொதுவாக நாம் பகவானுக்கு நாம-ரூபத்தைக் கொடுத்து இஷ்ட தேவதையாக வழிபட்டுக் கொண்டிருப்போம். இதனால் மற்ற தேவதைகளை ஏற்றுக்கொள்ளமாட்டோம். அனைத்து இஷ்ட தேவதைகளுக்குள்ளும் ஈஸ்வரன்தான் இருக்கின்றார் என்ற அறிவு வந்துவிட்டால் நம்முடைய மனம் விரிவடைந்து அனைத்து தேவதைகளை ஒரே மனப்பாவத்தோடு பார்ப்போம், வழிபடுவோம்.
6.     த்வந்த்வ நிவ்ருத்தியார்த்தம் – இருமை நீக்குவதற்காக – தர்மமாக மட்டுமல்ல, அதர்மமாகவும் நான் இருக்கின்றேன் என்று சொல்கின்றார்.  பொதுவாக அதர்மத்தை எல்லோரும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஆனால் அதர்மத்தினால் தாக்கப்படாத மனநிலையை அடைய வேண்டும். இதனால் எந்த இருமையாலும் தாக்கப்படமாட்டோம்.
7.     அத்வைத ஸித்தியார்த்தம் – அத்வைதத்தை நிலைநாட்டுவதற்காக – நான் என்றும், உலகம் என்றும் இரண்டு காரணிகள் நம் அறிவில் இருக்கின்றது.  சாஸ்திரம் ஈஸ்வரனை அறிமுகப்படுத்துகின்றது.  இந்த விபூதியினால் ஈஸ்வரன் உலகம் ஒன்றுதான் என்ற அறிவை அடைவோம்.  உடலும், மனமும் நான்தான் என்று கூறும்போது நான் என்பது ஈஸ்வரனோடு ஐக்கியமாகி, ஈஸ்வரன் மட்டும் இருப்பார்.  இதனால் அத்வைதம் சித்திக்கின்றது.  நான் என்ற அகங்காரம் சென்று விடுகின்றது. ஜீவனிடத்தில் இருக்கும் அறிவு ஸ்வரூபமும், ஆத்மஸ்வரூபமும் நான்தான் என்று கூறி ஜீவ-ஈஸ்வர ஐக்கியம் அறிவை கொடுக்கின்றார்.

श्रीभगवानुवाच ।
भूय एव महाबाहो शृणु मे परमं वचः ।
यत्तेऽहं प्रीयमाणाय वक्ष्यामि हितकाम्यया ॥ 1 ॥
ஶ்ரீபகவான் கூறினார்.
ஹே அர்ஜுனா!
ப்ரீயமாணாய – என்னுடைய உபதேசத்தை கேட்டு மகிழ்ந்த உனக்கு
ஶ்ருணு மே பரமம் வசஹ – என்னுடைய மேலான உபதேசத்தை கேள்.
ஹிதகாம்யயா – உன்னுடைய நன்மைக்காக
அஹம் பூய ஏவ வக்ஷ்யாமி – நான் மீண்டும் கூறப்போகிறேன்
பகவான் இவ்வாறு திரும்ப திரும்ப சொல்வதற்கு மூன்று காரணங்கள் உண்டு. அவைகள் 
  1. 1. சூட்சுமமாக இருப்பதால், 
  2. 2. புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினமாக இருப்பதாலும், 
  3. 3. ஒரு விஷயத்தை சரியாக புரிந்து கொள்ளும்வரை அதையே திரும்ப திரும்ப சொல்லுவது ஆகியவைகளாகும்
ஹே அர்ஜுனா!, என்னுடைய மிக உயர்ந்த பொருள் பொதிந்த சொற்களை கேட்பாயாக.  நான் இதுவரை செய்த உபதேசத்தைக் கேட்டு மகிழ்ந்த உனக்கு உன்னுடைய நன்மைக்காக மீண்டும் கூறப்போகிறேன்.

न मे विदुः सुरगणा प्रभवं न महर्षयः ।
अहमादिर्हि देवानां महर्षीणां च सर्वशः ॥ 2 ॥
ஸுரக3ணா மஹர்ஷய – இந்திரன் போன்ற தேவர்களும், மகரிஷிகளும்
மே ந விது3: ப்ரப4வம் – என்னையும், என்னுடைய பெருமைகளையும் அறிய மாட்டார்கள்.
ப்ரப4வம் – என்னுடைய பெருமை, சக்தி (ஶ்ருஷ்டி, லயம், அனுகிரஹம், நாஶம்), என்னுடைய உண்மையான தோற்றத்தை யாரும் அறியமாட்டார்கள்.
அனைத்து விதத்திலும் தேவர்களுக்கும், மகரிஷிகளுக்கும் நானே காரணமாக இருக்கின்றேன்.

यो ममजमनादिं च वेत्ति लोकमहेश्वरम् ।
असम्मढः स मर्त्येषु सर्वपापैः प्रमुच्यते ॥ 3 ॥
நிர்குண ஸ்வரூபம் – மாயை இல்லாத நிலையிலிருக்கும் ஈஸ்வரன்
சகுண ஸ்வரூபம் – மாயையை தனக்குள் வைத்துக் கொண்டு வெளிப்படும் ரூபம்
யார் என்னை பிறப்பற்றவனாகவும், தோற்றமற்றவனாகவும், என்றும் இருந்து கொண்டிருப்பவனாகவும் அறிகின்றார்களோ, நிர்குண ஸ்வரூபமாக அறிகிறார்களோ உலகத்துக்கு ஈஸ்வரனாகவும், படைப்புக்கு காரணமாகவும் யார் அறிகிறார்களோ அவர்கள் மனிதர்களுக்குள் அறிவாளி, மோக வசப்படாதவன், அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபடுகின்றான்

बुद्धिर्ज्ञानमसम्मोहः क्षमा सत्यं दमः शमः ।
सुखं दुःखं भवोऽभावो भयं चाभयमेव च ॥ 4 ॥
अहिंसा समता दुष्टिस्तपो दानं यशोऽयशः ।
भवन्ति भावा भूतानां मत्त एव पृथग्विधा ॥ 5 ॥
பு3த்தி4            மிக நுண்ணிய விஷயங்களை புரிந்து கொள்ளும் திறன்
ஞானம்          ஆத்ம தத்துவ ஞானம், ஆத்மாவைப் பற்றிய அறிவு, இந்த அறிவை அடையக்கூடிய சக்தி
அஸம்மோஹ:   தெளிவு, மனதில் எந்தவிட மோஹமும் இல்லாமல், சஞ்சலமும் இல்லாமல் தெளிவாக இருக்கும் சக்தி
க்ஷமா             பொறுமை என்னும் குணம், கடினமான சூழ்நிலையிலும் மனம் அமைதியாக இருத்தல் 
ஸத்யம்         நாம் அறிந்ததை, கேட்டதை, பார்த்ததை அப்படியே பேசுதல்
த3மஹ          புலனடக்கம், விஷயங்களிலிருந்து புலன்களிடமிருந்து விலக்கி கொள்ளுதல்
ஶமஹ           மன அமைதி, மனவடக்கம், இந்திரிய விஷயங்களிலிருந்து விலக்கி கொள்ளுதல்
ஸுக2ம்         சுகம், இன்பம்
து3:க2ம்         துயரம், துன்பம்
ப4வஹ         பிறப்பு, தோன்றுதல்
அப4வஹ    இறப்பு, அழிதல்
பயம்               பயம் என்ற உணர்வு
அபயம்          பயமின்மை
அஹிம்ஸா யாரையும் துன்புறாத்தமல் இருத்தல்
ஸமதா          சமமான மனபா4வம், எல்லா நிலைகளிலும் மனம் சமமாக பாவிக்கும் தன்மையும்
துஷ்டி            திருப்தி, மனநிறைவு, போதும் என்ற மனப்பான்மை, கிடைத்ததில் திருப்தியோடு இருத்தல்தன்னிடத்தில் இருப்பதிலும் திருப்தியோடு இருத்தல்
தபஹ            உடலுக்கும், மனதுக்கும் நாமாக விரும்பி கொடுக்கும் ஆக்க பூர்வமான கஷ்டம், துன்பம் அதன் மூலம் அவைகளை பலப்படுத்துதல், ஒழுங்குபடுத்துதல்
தானம்          மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற குணம்
யஶ:               புகழ், தர்மவழியிலே அடைந்த புகழ், நற்பண்புகளாலே அடைந்த புகழ்
அயஶ:          இகழ்ச்சி, அதர்மவழியில் சென்றதால் அடையும் நிலை

மனமும் என்னுடைய படைப்பு, அதில் தோன்றும் உணர்வுகளும் என்னுடைய படைப்பு என்று உணர்ந்து கொள்ள வேண்டும். எல்லா ஜீவராசிகளுக்கும் மேற்கூறிய வெவ்வேறான பாவனைகளும், உணர்வுகளும் என்னிடமிருந்துதான் தோன்றுகின்றது. அவரவர்களின் கர்மபலன்களுக்கேற்ப மனதில் இந்த பாவனைகளும், உணர்வுகளும் தோன்றுகின்றது. மனதிலிருக்கின்ற அனைத்து பாவனைகளும், உணர்ச்சிகளும் அவரவர் கர்மபலனுக்கேற்றவாறு என்னால் தோற்றுவிக்கப்பட்டன.  அதேபோல அவர்களுடைய ஸ்தூல உடலமைப்பும் தோன்றியிருக்கின்றது

महर्षयः सप्त पूर्वे चत्वारो मनवस्तथा ।
सद्भावा मानसा जाता येषां लोक इमाः प्रजाः ॥ 6 ॥
ஏழு ரிஷிகளும் என்னிடமிருந்துதான் தோன்றினார்கள். முதலில் தோன்றிய நான்கு ரிஷிகளும், அவ்வாறே மனுக்களும் என்னிடமிருந்துதான் தோன்றினார்கள்.  இவர்கள் என்னுடைய ஸ்வரூபம் இவர்கள் அனைவரும் மனதிலிருந்து தோன்றியவர்கள். இவர்களுடைய, மனுக்களுடைய இந்த உலகில் இருக்கும் ஜீவராசிகள் தோன்றின.

एतां विभूतिं योगं च मम यो वेत्ति तत्त्वतः ।
सोऽविकम्पेन योगेन युज्यते नात्र संशयः ॥ 7 ॥
யோகம் – சக்தி – மாயையை குறிக்கின்றது. இது எப்பொழுதும் ஏதாவது ஒன்றை சார்ந்துதான் இருக்கும்.
விபூ4தி – ஈஸ்வர சக்தி வெளிப்பாடு
சக்தி என்பது கண்ணுக்கு தெரியாதது, ஆனால் அதன் வெளிப்பாட்டை அறிய முடியும். யார் என்னுடைய யோகசக்தியையும், அந்த சக்தியின் வெளிப்பாட்டையும் சரியாக அறிகின்றானோ.  அவன் யோகத்துடன் கூடியவனாக ஆகிறான். உறுதியான ஆத்ம ஞானத்தை அடைகிறான். இந்த விஷயத்தில் சிறிதளவும் சந்தேகமில்லை

अहं सर्वस्य प्रभवो मत्तः सर्वं प्रवर्तते ।
इति मत्वा भजन्ते मां बुधा भावसमन्विताः ॥ 8 ॥
மூன்று விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அவைகள் 
1. இந்த உலகம் ஈஸ்வரனிடமிருந்து தோன்றியது, 
2. ஈஸ்வரனே உலகமாக காட்சியளிக்கிறார், 
3.இந்த உலகம் வெறும் தோற்றமேயன்றி உண்மையானதல்ல
ஆகியவைகளாகும்.

அஹம் ஸர்வஸ்ய ப்ரப4வஹ – ஈஸ்வரனாகிய நான் உலகத்திலுள்ள அனைத்தும் தோன்றுவதற்கு காரணமாக இருக்கிறேன்.
மத்தஹ ஸர்வம் ப்ரவர்த்தே – என்னிடத்திலிருந்தே அனைத்தும் தோன்றியுள்ளது.
இதி மத்வா – இவ்விதம் அறிந்து கொண்டு
பு3தா4: - அறிவுடைய பக்தர்கள்
மாம் பஜந்தே – என்னை வழிபடுகின்றார்கள், நாடுகின்றார்கள்
இவர்கள் என்னைத் தவிர வேறெதை அடைந்தாலும் அவைகள் நிலையற்றது என்று புரிந்து கொண்டவர்கள்.
பா4வஸமன்விதாஹா – பக்தியுடன் கூடியவர்களாக இவர்கள் இருக்கின்றார்கள்
அபி4நிவேஶம் – ஏதாவது ஒன்றின் மீது தீராது ஆசை கொண்டிருத்தல், அடைந்தே தீர வேண்டும் என்ற உறுதியான எண்ணம்

मच्चित्ता मद्गतप्राणा बोधयन्तः परस्परम् ।
कथयन्तश्च मां नित्यं तुष्यन्ति च रमन्ति च ॥ 9 ॥
மத் சிந்தா – இடைவிடாது என்னையே நினைத்து கொண்டிருப்பவர்கள், என்னிடமே மனதை செலுத்துபவர்கள், 
பார்க்கும் அனைத்துமே ஈஸ்வரஸ்வரூபமாகவே நினைப்பதால் இவ்வாறு என்னை இடைவிடாது நினைத்து கொண்டிருக்க முடிகிறது.
மத்3க3தப்ராணா     - எனக்காகவே வாழ்கிறார்கள், அவர்களுடைய புலன்களெல்லாம் என்னை நோக்கியே இருக்கின்றது. புலன்களை எனக்காகவே பயன்படுத்துகிறார்கள்
போத4யந்த பரஸ்பரம் – தங்களுக்குள் என்னுடைய தத்துவத்தை, பெருமைகளை பற்றி போதித்துக் கொண்டிருப்பார்கள்.  ஈஸ்வரனைப் பற்றி அறிந்த அறிவையும், அனுபவத்தையும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வார்கள்.
கத2யந்தஶ்ய மாம் நித்யம் -  என்னைப் பற்றியே எப்பொழுதும் பேசிக் கொண்டு இருப்பார்கள். பகவானின் கல்யாண குணங்களை, பெருமைகளை மட்டும் எப்போதும் பேசிக் கொண்டிருப்பார்கள்.
துஷ்யந்தி ச – இவ்வாறு மகிழ்ச்சியுடன் செயல்பட்டுக் கொண்டிருப்பார்கள்
ரமந்தி ச – மேலும் தன்னிடத்திலே இன்புற்றிருப்பார்கள்.

हेषां सततयुक्तानां भजतां प्फ़ीतिपूर्वकम् ।
ददामि बुद्धियोगं तं येन मामुपयन्ति ते ॥ 10 ॥
இந்த பக்தர்கள் என்றென்றும் எல்லா ஆசைகளிலிருந்தும் விலகி பகவானிடம் அன்பு செலுத்திக் கொண்டிருப்பார்கள், ஈஸ்வரன் மீது உறுதியான பக்தியுடையவர்கள். பேரன்போடு வழிபடுபவர்கள், எந்தவித வேண்டுதல் இல்லாமல் அன்பு மட்டுமே வைத்திருப்பார்கள். இப்படிபட்ட பக்தர்களுக்கு எந்த ஞானத்தால் பிரம்மத்தை, என்னை அடையமுடியுமோ அந்த ஆத்ம ஞானத்தை அளிக்கிறேன்.

तेषामेवानुकम्पार्थमहमज्ञानजं तमः ।
नाशयाम्यात्मभावस्थो ज्ञानदीपेन भास्वता ॥ 11 ॥
தேஷாம் ஏவ அனுகம்பார்த2ம் – அவர்களுக்கு என்னுடைய கருணையினால்
அஹம் அக்ஞானஜம் தம நாஶயாம் – அறியாமையினால் உண்டான இருளை, மோஹத்தை நீக்குகிறேன்.
ஆத்ம பா4வஸ்த2ஹ – அவர்களுடைய உள்ளத்தில் இருந்து கொண்டு
ஞானதீ3பேன பா4ஸ்வதா – ஒளிமயமான அறிவினால் இருளாக இருக்கின்ற அறியாமையை நீக்குகிறேன்.

பக்தி என்கின்ற எண்ணெயினால்தான் தீபமாகிய அறிவு வளரும்.  தீபம் தொடர்ந்து எரிவதற்கு லேசான காற்று தேவைப்படுவது போல, தீவிர முமுக்ஷுத்வம் கிடைக்கும். ஈஸ்வரனை அடைய வேண்டும் என்ற காற்று தேவை. விளக்கு எரிய உதவும் திரியாக தவ வாழ்க்கை இருக்கிறது.  வேகமாக வீசும் காற்றிலிருந்து தீபம் அணையாமல் இருப்பதற்கு செய்யும் பாதுகாப்பு போல நம்முடைய இந்திரியங்களை வெளிவிஷயங்களில் செல்லாமல் தடுப்பு போட வேண்டும்.

நாம் வாழ்க்கையில் எதை அடைந்தாலும் அது இரண்டு வகையாக பிரிக்கலாம்.
1.   இல்லாததை அடைதல்,
2.   இருப்பதையே அடைதல்.
அதேபோல இழந்ததை அடைதல் என்று இரண்டு வகையாக பிரிக்கலாம். 
1.   அழிந்து போய்விடுதல்,   
2.   இழந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருத்தல், அறியாமையினால் இழந்திருப்பது..  அறியாமையால் இழந்ததை அறிவினால்தான் அடையமுடியும். 

கர்மம் காரகம்   – கர்மம் ஒன்றை உற்பத்தி செய்யும்
ஞானம் ஞாபதம் – அறிவு ஒன்றை காட்டிக் கொடுக்கும்

अर्जुन उवाच ।
परं ब्रह्म परं घाम पवित्रं परमं भवान् ।
पुरुषं शाश्वतम् दिव्यमादिदेवमजं विभुम् ॥ 12 ॥
आहुस्त्वामृषयः सर्वे देवर्षिर्नारदस्तथा ।
असितो देवलो व्यासः स्वयं चैव ब्रवीषि मे ॥ 13 ॥
அர்ஜுனன் கூறுகிறான்.
நீங்கள் மேலான பிரம்மஸ்வரூபம், மேலான இருப்பிடம், அடையக்கூடிய லட்சியம், மேலான அறிவு ஸ்வரூபம், மேலான தூய்மைபடுத்தும் சாதனமாகவும் இருக்கிறீர்கள்.
எல்லா ரிஷிகளும் உங்களை எல்லா உடல்களுக்குள் வீற்றிருப்பவராகவும் (ப்ரத்யகா3த்மா) எங்கும் வியாபித்திருப்பவராகவும், என்றும் இருப்பவராகவும், எதையும் சார்ந்திருக்காமல் சுயபிரகாசமாகவும், எல்லா தேவர்களுக்கும் காரணமாகவும், பிறப்பற்றவராகவும், விதவிதமாக தோன்றிக்கொண்டிருப்பவராகவும், எங்கும் நிறைந்திருப்பவராகவும் இருப்பதாக கூறுகிறார்கள்.  அவ்வாறே தேவரிஷியான நாரதரூம், அஸிதர் என்ற ரிஷியும் தேவலரும், வியாஸரும் கூடக் இவ்வாறே கூறுகிறார்கள்.  என்னிடமும் இவ்வாறே நீங்கள் கூறுகிறீர்கள். உங்களுடைய உண்மையான ஸ்வரூபத்தை எனக்கு கூறினீர்கள்

सर्वमेतदृतं मन्ये यन्मां वदसि केशव ।
न हि ते भगवन्व्यक्तिं विदुर्देवा न दानवा  ॥ 14 ॥
நாம் கேட்கின்ற அனைத்துமே அறிவாகாது, பலன்தராது, கேட்டதில் எதை நிச்சயமாக
நம்புகிறோமோ அதனால்தான் பயனடைவோம். உண்மையான வார்த்தைகளை சரியாக புரிந்து கொள்வதே ஒருவிதமான சக்தி. இதை மனத்தூய்மையினால்தான் அடைய முடியும்

கேசவா! என்னிடம் எதைக் கூறுகிறீர்களோ அவையெல்லாம் உண்மையென்றே எண்ணுகிறேன்.  பகவானே! உங்களுடைய பெருமைகளை தேவர்கள் கூட அறிய மாட்டார்கள், அசுரர்களும் அறிய மாட்டார்கள்.

स्वयमेवात्मनात्मनं वेत्थ त्वं पुरुषोत्तम् ।
भूतभावन भूतेश देवदेव जगत्पते ॥ 15 ॥
உங்களைப் பற்றி நீங்களேதான் அறிவீர்கள், மனிதர்களில் உத்தமமாக இருப்பவரே! புருஷோத்தமா! ஜீவராசிகளை தோற்றுவிப்பவரே, அனைத்தையும் காப்பவரே! எல்லா தேவர்களுக்கும் தேவராக இருப்பவரே! ஜீவராசிகளுக்கு தலைவனாக இருப்பவரே! உலகத்துக்கும் தலைவனாக இருப்பவரே!

वक्तुमर्हस्यशेषेण दिव्या स्यात्मविभूतयः ।
याभिर्विभूतिभिर्लोकानिमंस्तवं व्याप्य तिष्टसि ॥ 16 ॥
எந்தப் பெருமைகளுடன் இந்த உலகத்தை வியாபித்துக் கொண்டு இருக்கிறீர்களோ அப்படிபட்ட உங்களுடைய ஸ்வரூபமாக இருக்கின்ற பெருமைகளை முழுமையாக கூறுவதற்கு நீங்கள்தான் தகுதி வாய்ந்தவர்.

कथं विद्यामहं योगिंस्त्वां सदा परिचिन्तयन् ।
केषु केषु च भावेषु चिन्त्योऽसि भगवन्मया ॥ 17 ॥
யோகேஸ்வரரே! எல்லா சக்திகளையும் உடையவரே! நான் எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டு எப்படி உங்களை அறிந்து கொள்வது, எப்படி புரிந்து கொள்வேன். பகவானே! என்னால் நீங்கள் எந்தெந்த பொருட்களில் சிந்தித்து அறிந்து கொள்ளத்தக்கவராக விளங்குகிறீர்கள்?

विस्तरेणात्मनो योगं विभूतिं च जनार्दन ।
भूयः कथय तृप्तिर्हि शृण्वतो नास्ति मेऽमृतम् ॥ 18 ॥
ஜனார்தனா! உங்களுடைய யோக சக்தியையும், பெருமைகளையும், விபூதியையும் மீண்டும் விரிவாக கூறுங்கள்.  ஏனெனில் உங்களுடைய அமுதமொழியைக் கேட்டும் எனக்கு திருப்தி ஏற்படவில்லை.

श्रीभवानुवाच ।
हन्त ते कथयिष्यामि दिव्या ह्यात्मविभूतयः ।
प्राधान्यतः कुरुश्रेष्ट नास्त्यन्तो विस्तरस्य मे ॥ 19 ॥
ஶ்ரீபகவான் கூறுகிறார்.
குருகுலத்தில் சிறந்தவனே! இப்பொழுது உனக்கு என்னுடைய தெய்வீகமான, இயற்கையான பெருமைகளில், வெளிப்பட்டிருக்கின்ற ஸ்வரூபத்தில் முக்கியமானதை மட்டும் கூறப்போகின்றேன். என்னுடைய பெருமைகளின் விளக்கத்திற்கு முடிவே கிடையாது.

अतमात्मा गुडाकेश सर्वभूताशयस्थितः ।
अहमाधिश्च मध्यं च भूतानामन्त एव च ॥ 20 ॥
கு3டாகேஶ - உறங்க வேண்டிய நேரத்தில் மட்டும் உறங்குபவன், தமோ குணத்தில் இல்லாதவன், தூக்கத்தின் வசத்தில்லாதவன்

ஹே அர்ஜுனா! எல்லா ஜீவராசிகளின் இதயத்தில் ஆத்மாவாக இருக்கிறேன்.  நானே அனைத்தினுடைய தோற்றத்திற்கும், இருத்தலுக்கும், அழிவுக்கும் காரணமாக இருக்கிறேன்

आदित्यानामहं विष्णुर्ज्योतिषां रविरंशुमान् ।
मरीचिर्मरुतामस्मि नक्षत्राणामहं शशी ॥ 21 ॥
நான் பன்னிரண்டு ஆதித்ய தேவர்களுக்குள் விஷ்ணுவாக இருக்கின்றேன். ஒவ்வொரு மாதத்திற்கும் உள்ள அதிஷ்டான தேவதைகள் இவர்கள். விஷ்ணு தை மாதத்திற்கு அதிபதியாக இருப்பவர்.  ஒளிர்பவைகளுக்குள் கிரணங்களோடு கூடிய சூரியனாகவும், மருத் தேவதைகளுக்குள் மரீசி என்ற தேவதையாகவும், இரவில் வெளிச்சத்தை கொடுக்கக்கூடிய  சந்திரனாக இருக்கின்றேன்.

மனிதர்களுக்குள் புரிந்து கொள்ளும் சக்தி வேறுபடுகின்றது.  மிக சூட்சுமமானதை புரிந்து கொள்ளும் சக்தியானது உச்சநிலை உடையது. இது மாதிரி எந்த சில சக்திகள் உச்சநிலையில் உள்ளதோ அவைகளை மட்டும் எடுத்துக்கொண்டு அவைகள் அனைத்தும் என்னுடைய வெளிப்பாடே என்று கூறுகிறார். அறிவின் உச்சநிலையே ஆத்ம ஞானத்தை அறிவதாகும்.  இந்த ஆத்மஞானமாக நான் இருக்கிறேன் என்று கூறுகிறார். இதேபோல கடைநிலையில் உள்ள அனைத்து சக்திகளும் நானே என்று கூறுகிறார்.  நாம் தியானம் செய்வதற்காக சிலவற்றை எடுத்துக்கொண்டு அவைகளாக நான் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். உலகத்தின் மீதுள்ள துவேஷ புத்தியையும், நம்முடைய கர்வத்தையும், பொறாமையையும் நீக்குவதற்கு இவைகள் உதவுகின்றன.

वेदानां सामवेदोऽस्मि देवानामस्मि वासवः ।
इन्द्रियाणां मनश्चास्मि भूतानामस्मि चेतना ॥ 22 ॥
வேதங்களுக்குள் சாமவேதமாக இருக்கின்றேன்.  தேவர்களுக்குள் நான் இந்திரனாக இருக்கின்றேன்.  இந்திரியங்களுக்குள் மனதாக இருக்கின்றேன். புலன்களுக்கு பின்னால் மனது இல்லையென்றால் அவைகளால் ஒரு பயனும் இல்லை.  எனவே மனதாக இருக்கின்றேன். மேலும் உடல்களுக்குள் சிதாபாஸமாகவும், புத்தியில் பிரதிபலிக்கின்ற ஆத்மாவாகவும், புத்தியாகவும் இருக்கின்றேன்.

रुद्राणां शङ्करश्चास्मि वित्तेशो यक्षरक्षसाम् ।
वसूनां पवकश्चास्मि मेरुः शिखरिणामहम् ॥ 23 ॥
நான் பதினொன்று ருத்ரர்களில் சங்கரனாக இருக்கிறேன்.  ருத்ரர் என்ற சொல்லுக்கு அழ வைப்பவர்கள் என்று பொருள், இவர்கள் துயரங்கள் நீங்குவதற்கு அழுகையை வரவைத்து விடுபவர்கள்.  பிறகு நன்மையை கொடுப்பவர்கள்.  யக்ஷர்களில் (பொருளை தேடுபவர்களில்), அரக்கர்களில் (மற்றவர்களுக்கு கஷ்ட நஷ்டங்களை பார்க்காமல் செல்வத்தை ஈட்டுபவன்) செல்வத்திற்கு அதிபதியான குபேரனாக இருக்கிறேன்.  எட்டு வஸுக்களுக்குளில் அக்னியாக இருக்கிறேன்.  உயர்ந்த மலைகளுக்குள் மேரு மலையாக இருக்கிறேன்.

पुरोधसां च मुख्यं मां विद्धि पार्थ बृहस्पतिम् ।
सेनानीनामहं स्कन्दः सरसामस्मि सागरः ॥ 24 ॥
ஹே அர்ஜுனா! புரோகிதர்களில் ( கர்ம காண்டத்தில் பாண்டித்யம் உடையவர்கள், நன்கு கற்றறிந்தவர்கள், கர்ம காண்டத்திற்கு குருவாக இருப்பவர்கள் ) முக்கியமானவராக இருக்கும் ப்ருஹஸ்பதி என்று என்னை அறிந்து கொள்ள வேண்டும்.  இவர் இந்திரனுக்கு புரோகிதராக இருப்பவர்.  படைத்தலைவர்களுக்குள் நான் ஸ்கந்தனாக, முருகப்பெருமானாக இருக்கிறேன்.  நீர் நிலைகளுக்குள் கடலாக இருக்கிறேன்.

महर्षीणां भृगुरहं गिरामस्म्येकमक्षरम् ।
यज्ञानां जपयज्ञोऽस्मि स्थावराणां हिमालयः ॥ 25 ॥
மகரிஷிகளுக்குள் ப்4ருகு மஹரிஷியாகவும், சொற்களுக்குள் ஓரெழுத்தான ஓம்காரமாக இருக்கிறேன்.  யக்ஞங்களுக்குள், இறைவழிபாட்டுக்குள் ஜபமாக இருக்கிறேன். அசையாத பொருட்களுக்குள் நான் இமயமலையாக இருக்கிறேன்.

अश्वत्थः सर्ववृक्षाणां देवर्षीणां च नारदः ।
गन्धर्वाणां चित्ररथः सिद्धानां कपिलो मुनिः ॥ 26 ॥
மரங்களுக்குள் அரசமரமாக நான் இருக்கிறேன். தேவரிஷிகளுக்குள் நாரதராகவும், கந்தர்வகளுக்குள் சித்ரகேதனாகவும், சித்தர்களுக்குள் கபிலமுனியாகவும் இருக்கிறேன்.
ரிஷிகள் என்பவர்கள் ஆத்மஞானத்தை அடைந்தவர்கள்
கந்தர்வர்கள் – தேவலோகத்தில் பாடல்களை பாடுபவர்கள்
சித்தர்கள் – இவர்கள் பிறக்கும்போதே தர்மம், ஞானம், வைராக்கியம் இவைகளோடு பிறந்திருப்பவர்கள்

उच्चैःश्रवसमश्वानां विद्धि माममृतोद्भवम् ।
ऐरावनं गजेन्द्राणां नराणां च नराधिपम् ॥ 27 ॥
குதிரைகளுக்குள் உச்சைஸ்வரம் என்ற குதிரையாகவும், இருக்கிறேன் என்று அறிந்து கொள்.  இந்த குதிரை அமிர்தத்தை கடையும்போது வெளிப்பட்டது. இதேப்போன்று அதிலிருந்து வெளிப்பட்ட ஐராவதம் என்கின்ற யானையாகவும், மனிதர்களுக்குள் அரசனாகவும் இருக்கிறேன் என்று அறிந்து கொள்.

आयुधानामहं वज्रं धेनूनामस्मि कामधुक् ।
प्रजनश्चास्मि कन्दर्पः सर्पाणामस्मि वासुकिः ॥ 28 ॥
நான் ஆயுதங்களில் வஜ்ராயுதமாகவும், பசுக்களுக்குள் காமதேனுவாகவும், சந்ததியை உருவாக்குவதற்கு காரணமான மன்மதனாகவும், விஷத்தையுடைய பாம்புகளில் வாசுகியாக இருக்கிறேன்.

अनन्तश्चास्मि नागानां वरुणो यादसामहम् ।
पितॄणामर्यमा चास्मि यमः संयमतामहम् ॥ 29 ॥
விஷமில்லாத பாம்புகளில் அனந்தம் என்கின்ற ஆதிசேஷனாகவும், ஜலதேவதைகளில் வருணனாகவும், பித்ரு தேவதைகளில் அரியமாவாகவும், முறைபடுத்துபவர்களில், அடக்கி ஆள்பவர்களில் யமனாகவும் நாம் இருக்கிறேன்.

प्रह्लदश्चास्मि दैत्यानां कालः कलयतामहम् ।
मृगाणां च मृगेन्द्रोऽहं वैनतेयश्च पक्षिणाम् ॥ 30 ॥
நான் தை3த்யர்களில் (அசுரர்களில்) பிரகலாதனாகவும், நல்லது, கெட்டது கொடுப்பதற்குள் காலமாகவும், மிருகங்களுக்குள் சிங்கமாகவும், பறவைகளுக்குள் கருடனாகவும் இருக்கிறேன்.

पवनः पवतामस्मि रामः शस्त्रभृतामहम् ।
झषाणां मकरश्चास्मि स्रोतसामस्मि जाह्नवी ॥ 31 ॥
நான் தூய்மைபடுத்துபவைகளுக்குள் காற்றாகவும், ஆயுதம் தாங்கியவர்களுக்குள் ராமனாகவும், மீன் இனங்களுக்குள் மகர மீனாக இருக்கின்றேன்.  ஓடுகின்ற நதிகளுக்குள் கங்கையாக இருக்கின்றேன்.

सर्गानामदिरन्तश्च मध्यं चैवाहमर्जुन ।
अध्यात्मविद्या विद्यानां वादः प्रवदतामहम् ॥ 32 ॥
ஹே அரிஜுனா! இந்த அனைத்து தோற்றத்திற்கும், இருத்தலுக்கும், லயத்திற்கும் நான் காரணமாக இருக்கின்றேன். அறிவுகளுக்குள் ஆத்மஞானமாக இருக்கின்றேன். ஆத்ம ஞானத்தை தவிர மற்ற அனைத்து அறிவும் நிலையற்றதாக மாறக்கூடியதாக இருக்கும்.  இந்த ஞானம் ஒன்றுதான் சம்சாரத்திலிருந்து விடுதலையை கொடுக்கும் மனநிறைவைக் கொடுக்கும். இதை அடைந்து விட்டால் வேறெந்த அறிவும் தேவைப்படாது.  வாதம் செய்பவர்களிடம் இருக்கின்ற வாதமாக இருக்கின்றேன். தர்க்கம் செய்பவர்களுடைய தத்துவத்தை தீர்மானம் செய்ய உதவும் வாதமாகவும் நான் இருக்கின்றேன். 
ஸம்வாதம் என்ற சொல் குரு-சிஷ்யன் உரையாடலை குறிக்கும்

விதண்டா:   அடுத்தவன் என்ன சொன்னாலும், அது சரியல்ல என்று வாதிடுவது
ஜல்பம்:          அடுத்தவர் கருத்தை எடுத்துக்கொள்ளாமல், தான் பேசுவதை மட்டும் வற்புறுத்தி பேசுவது
வாதம்:           உண்மையை தெரிந்து கொள்வதற்கு விவாதம் செய்வது. சரியான முடிவு எடுப்பதற்காக விவாதம் செய்வது.

अक्षराणामकारोऽस्मि द्वन्द्वः सामसिकस्य च।
अहमेवाक्षयः कालो धाताहं विश्वतोमुखः ॥ 33 ॥
நான் எழுத்துக்களில் அகாரமாகவும், தனித்தனியான இரண்டு சொற்களின் சேர்க்கை ஸமாஸம் என்று கூறப்படுகிறது.  கூட்டுத்தொகை என்று தமிழில் கூறப்படுகிறது. இது வாக்கியத்தில் சேர்ந்திருக்கும். அதை பிரித்து படித்து புரிந்து கொள்ள வேண்டும். அப்படி பிரிக்கும்போது சரியான பொருள் வருமாறு இருக்க வேண்டும்.  த்வந்தம் (உம்மைத்தொகை) என்ற ஸமாஸமாக நான் இருக்கின்றேன்.  இந்த ஸமாஸத்தில் இரண்டு சொற்களும் சமமான அந்தஸ்து இருக்கின்றது. (உ-ம்) சுக-துக்கம், இரவு-பகல் போன்றவைகள். நானே அழியாத காலமாகவும் இருக்கின்றேன். நானே கர்ம பலனைக் கொடுப்பவனாகவும், அனைத்து திசைகளையும் பார்த்து கொண்டு இருப்பவனாகவும் இருக்கின்றேன்

मृत्युः सर्वहरश्चाहमुद्भवश्च भविष्यताम् ।
कीर्थिः श्रीर्वाक्च नारीणां स्मृतिर्केधा धृतिः क्षमा ॥ 34 ॥
நான் அனைத்தையும் அழிக்கின்ற மரணமாகவும், இனிமேல் வர இருக்கின்ற அனைத்துமாகவும், புகழாகவும், செல்வமாகவும், வாக்காகவும், ஞாபக சக்தியாகவும், நினைவுத்திறனாகவும், பொறுமையாகவும், உறுதியாகவும் இருக்கின்றேன்.

बृहत्साम् तथा साम्नां गायत्री छन्दसामहम् ।
मासानां मार्गशीर्षॊऽहमृतूनां कुसुमाकरः ॥ 35 ॥
ஸாம கானத்தில் பாடப்பட்டுள்ள மந்திரங்களுக்குள் ப்ருஹதஸாம்மாக இருக்கிறேன். சந்தங்களுக்குள் காயத்ரீ என்ற சந்தமாகவும், மாதங்களில் மார்கழியாகவும், பருவ காலங்களில் வசந்த காலமாகவும் இருக்கிறேன்.

சந்தஸ் – செய்யுளை அமைக்கும் முறை
காயத்ரீ என்ற சந்தஸ் மூன்று வரிகளை கொண்டது.  ஒவ்வொரு வரியிலும் 8 எழுத்துக்கல் இருக்கும்.  காயத்ரீ சந்தஸ்ஸில் உள்ள மந்திரங்கள் தேவதைகளையும் குறிக்கின்றது.  எது உச்சரிப்பவர்களை காப்பாற்றுகின்றதோ அதற்கு காயத்ரீ என்றும் கூறுவர். சூரிய தேவைனை குறித்த மந்திரத்திற்கு காயத்ரீ என்று பெயர். இதை சாவித்திரி என்றும் அழைப்பர்.  இரண்டு விதமாக இந்த சூரியதேவ காயத்ரி மந்திரத்திற்கு பொருள் கூறப்படுகிறது.  இது மனத்தூய்மையை அடையவும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த மந்திரத்திற்கு முன் ஓம் பூ,புவ,ஸ்வ: என்ற மூன்று சொற்கள் சேர்க்கப்படுகிறது. இவை மூன்றும் முதன்முதலில் பிரம்மாவால் உச்சரிக்கப்பட்ட மங்கலமான சொற்கள்.

சூரிய காயத்ரி மந்திரம்
ஓம் பூர்புவஸ்வஹ |
தத்3 சவிதுர்வரேண்யம் |
ப4ர்கோ தேவஸ்ய தீ3மஹி |
த்யோயோ ந ப்ரசோதயாத் ||

பொருள்-1
யஹ நஹ த்3யஹ – யார் (சூரிய தேவனை குறிக்கின்றது) எங்களுடைய அறிவை
ப்ரசோதயாத் – தூண்டுகிறாரோ கொடுக்கக்கூடியவரோம், பிரகாசிக்க செய்கிறாரோ
தஸ்ய தெவஸ்ய சவிது: - அந்த சூரிய தேவனுடைய
தத்3 வரேண்யம் ப4ர்க: - அந்த மேலான ஒளியை
தீ3மஹி - தியானிப்போமாக, வணங்குவோமாக

பொருள்-2
தத்3 – இருத்தல் (ஸத்), ப4ர்கஹ – சைதன்யம் (சித்), வரேண்யம் – ஆனந்தம்
தேவஸ்ய சவிது: - ஈஸ்வரனுடைய
யஹ – எந்த ஈஸ்வரனே ஆத்மாவாக, சச்சிதானந்த ஸ்வரூபமாக
நஹ தீ3மஹி ப்ரசோதயாத் – எங்களுடைய புத்திக்கு சாட்சியாக இருக்கின்றதோ
தீமஹி – அதை நிதித்யாசனம் செய்கின்றோம்.

द्यूतं छलयतामस्मि तेजस्तेजस्विनमहम्।
जयोऽस्मि व्यवसायोऽस्मि सत्त्वं सत्त्ववतमहम् ॥ 36 ॥
நான் ஏமாற்றுபவைகளில் சூதாட்டமாகவும், அறிவு, செயல்திறன் உடையவர்களின் அந்தந்த திறமையாக இருக்கின்றேன்,  வெற்றி பெறுபவர்களில் வெற்றியாகவும், முயற்சி செய்பவனின் முயற்சியாகவும், நற்குணங்கள் உடையவர்களிடத்தில் உள்ள அந்த குணங்களாகவும் நான் இருக்கிறேன்.

பொதுவாக ஏதாவது ஒரு நல்ல குணம் இருந்தால் அதனோடு சேர்ந்து தீய குணமும் வரும். இந்த நல்ல குணம் பகவான் என்று நினைத்தால் கெட்ட குணத்தை தவிர்த்து விடலாம்.

वृष्णीनां वासुदेवोऽस्मि पाण्डवानां धनञ्जयः ।
मुनीनामप्यहं व्यासः कवीनामुशना कविः ॥ 37 ॥
நான் யாதவ குலத்தில் இருப்பவர்களுக்குள் வாசுதேவனாகவும், பாண்டவர்களில் அர்ஜுனனாகவும். முனிவர்களில் வியாஸராகவும், சூட்சுமமான விஷயத்தை பார்ப்பவர்களில் சுக்ராச்சாரியராகவும் இருக்கிறேன்.

दण्डो दमयतामस्मि नीतिरस्मि जिगीशताम् ।
मौनं चैवास्मि गुह्यानां ज्ञानं ज्ञानवतामहम् ॥ 38 ॥
தண்டனை கொடுப்பவர்களிடம் இருக்கின்ற தண்டனையாக இருக்கிறேன்.  நமக்கு வரும் கஷ்டம், வியாதி போன்றவைகள் பகவான கர்மபலனாக கொடுக்கும் தண்டனைகள். இதை அவரது பிரசாதமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். வெற்றி பெற விரும்புவர்களிடத்தில் இருக்கின்ற சரியான திட்டமாகவும், திறமையாகவும் இருக்கிறேன்.  வாழ்க்கையில் வெற்றிபெற விரும்புவர்களிடத்தில் இருக்கும் தர்மம், நியாயம், சரியான செயல்திட்டம் போன்றவைகளாக இருக்கிறேன். மறைக்க வேண்டியவைகளுக்குள் மௌனமாக இருக்கிறேன்.  ஞானிகளிடம் இருக்கும் ஞானமாக இருக்கிறேன்.

यच्चापि सर्वभूतानां बीजं तदहमर्जुन ।
न तदस्मि विना य्त्स्यान्मय भूतं चराचरम् ॥ 39 ॥
மேலும் அர்ஜுனா! எல்லா படைப்புகளுக்கும் எது காரணமாக இருக்கின்றதோ அதுவாக நான் இருக்கிறேன்.  அசையும், அசையாத பொருட்கள் அனைத்துமாகவும் இருக்கிறேன். நான் இல்லாமல் அவைகள் இருக்காது.

नान्तोऽस्मि मम दिव्यानां विभूतीनां परन्तप ।
एष तूद्देशतः प्रोक्तो विभूतेर्विस्तरो मया ॥ 40 ॥
என்னுடைய மேலான பெருமைகளுக்கு முடிவே இல்லை அர்ஜுனா! இதுவரை கூறிய என்னுடைய விளக்கமான பெருமைகளை உதாரணத்துக்காக ஓரளவுதான் சுருக்கமாக என்னால் கூறப்பட்டது.

यद्यद्विभूतिमत्सत्त्वं श्रीमदूर्जितमेव वा ।
तत्तदेवावगच्छ त्वं मम तेजोंशसम्भवम् ॥ 41 ॥
எவையெல்லாம் பெருமையுடனும், செல்வத்துடனும், சக்தி படைத்ததாகவும் இருக்கின்றதோ அவைகளெல்லாம் என்னுடைய சக்தியினுடைய ஒரு அம்சமாக அறிந்து கொள்.  இதிலிருந்து நாம் நன்கு தெரிந்து கொள்வது இந்த உலகத்தில் ஈஸ்வரனை தவிர எதையும் பார்க்க முடியாது.

अथवा बहुनैतेन किं ज्ञातेन ताअर्जुन ।
विष्टभ्याहमिदं कृत्स्नमेकांशेन स्थितो जगथ् ॥ 42 ॥
ஹே அர்ஜுனா!  இவ்வாறு அதிகம் தெரிந்து கொள்வதால் உனக்கு என்ன பயன்?  நான் இந்த முழுமையான உலகமனைத்தையும் என்னுடைய ஒரு அம்சத்தினால் வியாபித்து கொண்டிருக்கின்றேன்.  நானே இந்த உலகத்திலுள்ள அனைத்துமாக இருக்கின்றேன்.

தொகுப்புரை
01-03    அறிமுகம்
04-07    பகவானுடைய பெருமைகளின் சுருக்கம் கூறப்பட்டது.  மனதிற்குள் இருக்கும் குணங்கள் அனைத்தும் என்னிடமிருந்து தோன்றியது.  என்னுடைய விபூதியையும், யோகத்தையும் சரியாக புரிந்துகொள்பவருடைய சக்தியும், அது வெளிப்படும் தோற்றமும் நானே
08-11    இந்த விபூதி ஞானம் நம்மை படிப்படியாக ஆத்ம ஞானத்திற்கு கொண்டு செல்லும் என்று கூறப்பட்டது.  1. இந்த ஜகத் இறைவனிடம் இருந்து வந்தது. 2. இறைவனை அனைத்துமாக பார்க்கும் சக்தி, 3. இவைகள் யாவும் தோற்றம்
12-18    அர்ஜுனன் பகவானின் விபூதிகள் அனைத்தையும் கூறுங்கள் என்று வேண்டிக் கொண்டான்.
19-38    பகவான் சில விபூதிகளை மட்டும் கூறினார்.
39-42    இதுவரை கூறியதை தொகுத்து கூறி முடிவு செய்தார்.

ॐ तत्सदिति



A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...