Showing posts with label பஞ்சதசி-07. Show all posts
Showing posts with label பஞ்சதசி-07. Show all posts

Thursday, July 25, 2019

Pancadasi Chapter-7-Rev-01

பஞ்சதசி
அத்தியாயம்-7
திருப்தி தீபம்
 
இந்த ஸ்லோகம் பிருஹதாரண்ய உபநிஷத்தில் நான்காவது அத்தியாயமான சாரீரக அத்தியாயம் 12வது ஸ்லோகத்திலிருந்து எடுக்கப்பட்டு விளக்கப்படுகிறது.
சாதகன் ஒருவன்; 'நான் இந்த பரமாத்மாவாக இருக்கிறேன்என்று தன்னையே அறிந்தானேயானால் அவன் எதை விரும்புவான், யாருடைய பிரயோஜனத்திற்காக உடலுக்கு வரும் துயரங்களை பொறுத்துக் கொள்வான். இவன் எப்போதும் தனக்குள் மனதிருப்தியுடன் மனநிறைவுடன் இருப்பான்.
 
மேற்சொன்ன உபநிஷத்தின் இந்தக் கருத்தை மிகத் தெளிவாக இந்த அத்தியாயத்தில் விசாரம் செய்யப்படுகிறது. ஜீவன் முக்தனுடைய மனதில் எந்தவொரு திருப்தி இருக்கின்றதோ அதை இந்த விசாரத்தின் மூலம் தெளிவாகும்.
 
ஜீவனையும், ஈஸ்வரனையும் மாயையானது பொய்யாக வெறும் தோற்றமாக உருவாக்கி இருக்கிறது என்று உபநிஷத்தில் சொல்லபட்டுள்ள காரணத்தினால் ஜீவனும், ஈஸ்வரனும் ஏற்றி வைக்கப்பட்ட தத்துவங்கள் என்று அறிந்து கொள்ள முடிகிறது. இவை இரண்டும் சேர்ந்து மற்ற அனைத்தும் கற்பனை செய்யப்பட்டுள்ளது.
 
ஈஸ்வரனால் ஸ்ருஷ்டியானது சங்கல்பம் செய்ததில் இருந்து ஜீவனுக்குள் நுழையும் வரை கற்பிக்கப்பட்டுள்ளது. ஜீவனால் தோற்றுவிக்கப்பட்டது சம்சாரம்தான். விழிப்பு நிலையில் ஆரம்பித்து மோட்சம் அடையும் வரையுள்ள அனைத்தும் ஜீவனுடைய ஸ்ருஷ்டி. ஈஸ்வர ஸ்ருஷ்டியின் மீது தன்னுடைய ஸ்ருஷ்டியை உண்டாக்கிக் கொள்கிறான் ஜீவன்.
 
எவ்வித மாறுதலை அடையாததாக இருக்கின்ற கூடஸ்தன், எந்தவித சங்கமும் இல்லாததாக இருக்கின்ற அஸங்கன், அறிவு ஸ்வரூபமாகவும், பிராந்திக்கு ஆதாரமாகவும் இருக்கின்ற ஆத்மாவானது ஒன்றுக்கொன்று அத்யாஸத்தினால் அஸங்கமாயிருக்கும் இங்கே புருஷன் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. சூட்சும சரீரத்தில் வெளிப்படுகின்ற, ஆத்மாவோடு சங்கம் வைக்க முடியாத சூட்சும சரீரத்தில் வெளிப்படுகின்ற, சைதன்யத்துடன் சம்பந்தம் வைக்க முடியாததுமான ஜீவனே புருஷன் என்று உபநிஷத் மந்திரத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. சரீரத்தோடு சம்பந்தப்படாத சேதன தத்துவம்தான் ஜீவன்.
 
அதிஷ்டானத்துடன் கூடிய ஜீவன் மோட்சம் முதலியவற்றிற்கு அதிகாரியாக இருக்க முடியும் என்று சொல்லப்படுகிறது. அதிஷ்டானமற்ற ஜீவன் மோட்சத்திற்கு அதிகாரியாக சொல்லப்படுவதில்லை. ஆதாரமில்லாமல் அத்யாஸமானது எந்த இடத்திலும் ஏற்படாது. எப்போது அதிஷ்டான அம்சத்துடன் கூடியதாக இருக்கின்ற ஆத்மாவின் பிராந்தி அம்சத்தை மட்டும் மனதில் கிரகித்துக் கொண்டிருக்கிறானோ அப்போது நான் சம்சாரி என்றே ஜீவன் நினைக்கிறான்.
 
கண்ணாடியில் பிரதிபலிக்கும் சூரியவொளியைக் கொண்டு வீட்டிலுள்ள ஒரு பொருளை பிரகாசிக்க செய்ய முடியும். அந்த பிரகாசத்தில் சூரியனுடைய அம்சமும் இருக்கிறது. கண்ணாடியின் அம்சமும் இருக்கிறது. ஏனென்றால் தனித்த சூரியவொளி வீட்டிற்குள் வரவில்லை. தனித்த கண்ணாடிக்கும் பிரகாசிக்கும் தன்மை கிடையாது. ஆகையால் கண்ணாடி 'நான் பிரகாசிக்க செய்கிறேன்என்று சொன்னால் அது உண்மையில்லை. அப்படியே சூரியனும் 'நான் பிரகாசிக்க செய்கிறேன்என்று சொன்னாலும் உண்மையில்லை. இரண்டுமே பிராந்திதான் ஆகும்.  ஆகையால் பிராந்தி இடங்களிலெல்லாம் அதிஷ்டானம் தோற்றம் இரண்டின் அம்சங்களும் இருக்கும். அதுபோலதான் ஜீவன் நான் சம்சாரி என்று நினைப்பது. அதில் நான் என்பது சுத்த சைதன்யத்தின் அம்சம். அதை புத்தியுடன் கலந்து புத்தியின் அம்சமான சம்சாரத்தை தன்னிடம் இருப்பதாக எண்ணி விடுகிறான். சுத்த சைதன்ய அம்சத்தையும், புத்தியின் அம்சத்தையும் கலக்காமல் பார்த்தாமேயானால் தனக்கு எவ்வித சம்சாரமும் கிடையாது என்பதை உணர்வான்.
 
பிராந்தியின் அம்சத்தை விலக்கிவிட்டு எப்பொழுது அதிஷ்டானத்திற்கு முக்கியத்வம் கொடுக்கப்படுகிறதோ அப்பொழுது நான் சைதன்ய ஸ்வரூபன், சங்கமற்றவன் என்று உணர்வான். சங்கத்துடன் கூடிய அகங்காரம் சைதன்யத்தை நான் என்று சொல்வது பொருந்தாது. நான் என்ற சொல்லுக்கு மூன்று அர்த்தங்கள் உண்டு. முதலாவது பொதுவாக எல்லோராலும் பயன்படுத்துவது. மற்ற இரண்டு அர்த்தங்கள் அரிதாக பயன்படுத்தப்படுகின்றது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
 
அன்யோன்ய அத்யாஸத்தினால் பரமாத்மா ஸ்வரூபத்தையும், சிதாபாஸத்தின்  ஸ்வரூபத்தையும் மாறி புரிந்து கொண்டு அவையிரண்டையும் ஒன்றாக கலக்கும் போது முக்கியார்த்தமாகின்றது. இதை அக்ஞானிகளால் மட்டும்தான் பயன்படுத்தப்படுகிறது. ஞானி உபதேசம் செய்யும்போதோ, நிதித்யாஸனம் செய்யும் போதோ “நான்” என்ற சொல்லும்போது சைதன்ய ஸ்வரூபமான கூடஸ்தனைதான் பொருட்படுத்துகின்றார். ஆனால் உலக விவகாரம் செய்யும்போது வெறும் சிதாபாஸத்தை மட்டும்தான் “நான்” என்று பொருட்படுத்துகிறான். ஒன்றுக்கொன்று வேறாக இருக்கின்ற சிதாபாஸமும், கூடஸ்தனும் முக்கியற்றதுமான, விசேஷமான அர்த்தங்களாக இருக்கின்றது.
 
உலக விவகாரத்தில், நான் செல்கிறேன் என்ற உலக விவகாரத்தில் ஞானியானவன் சிதாபாஸத்தை கூடஸ்தனிடம் இருந்து பிரித்து “நான்” என்ற சொல்லினுடைய அர்த்தத்துடன் கூறுகிறார். சாஸ்திரத்தினுடைய உபதேசத்தின் அடிப்படையில் வைதீக விவகாரத்தின் அடிப்படையில் நான் அஸங்கமானவன், சைதன்ய ஸ்வரூபமானவன் என்ற பொருளில் “நான்” என்ற சொல்லை பயன்படுத்தி கொண்டிருப்பான். அப்பொழுது இந்த “நான்” என்ற சொல்லும்போது கூடஸ்தனை மட்டும் குறிப்பிடுகிறான். ஐக்கியம் என்று சொல்லும் போது இரண்டு பொருட்கள் இருப்பதாகின்றது. ஆனால் ஒரு பொருள் அதற்கு வேறாக இருப்பது போல் தோன்றிக் கொண்டிருக்கின்ற வேறொரு பொருளோடுதான் ஐக்கியம் பயன்படுத்தலாம். ஒரே பொருள் இருவிதமாக தெரிந்தால் ஐக்கியம் சம்பவிக்கும். நீரில் தெரியும் சந்திர பிம்பமும், சந்திரனும் ஒன்றுதான் ஐக்கியம் சாத்தியமாகும்.
 
அறிதல், அறியாமல் இருத்தல் என்ற தன்மைகள் சிதாபாஸத்திற்குதான் பொருந்தும். ஆத்மாவுக்கு பொருந்தாது. அப்படி இருக்கும் போது சிதாபாஸனானவன் நான் கூடஸ்தனாக இருக்கின்றேன் என்று எப்படி அறிய முடியும்?
 
இதில் தவறு எதுவும் கிடையாது. இந்த சிதாபாஸன், கூடஸ்தன் என்கின்ற ஒன்றை தன் ஒரே ஸ்வரூபமாக கொண்டவன். இந்த பொய்யான தோற்றம் மித்யாவாக இருப்பதனாலும், கூடஸ்தன் என்ற தன்மை மட்டும் எஞ்சியிருப்பதனாலும், சிதாபாஸன் தன்னை கூடஸ்தன் என்று சொல்ல முடியும். நான் கூடஸ்தனாக இருக்கின்றேன் என்கின்ற ஞானமும் கூட மித்யாவாகும். கயிற்றில் தோன்றம் பாம்பு போய்விட்டது என்ற அறிவும் மித்யாவாக இருப்பதைபோல இந்த ஞானமும் மித்யாதான். இப்படிபட்ட தன்மையுடைய ஞானத்தினாலும் சம்சாரமானது நீங்கும். நாம் வழிபடும் இந்த தேவதைக்கு இத்தகைய பலி போதும் என்று உலக விவகாரத்தில் மக்களால் சொல்லப்படுகிறது. கனவில் காணும் புலியிடம் தப்பித்துக் கொள்ள விழித்துக் கொள்வது பயன்படுவது போல இதை புரிந்து கொள்ள வேண்டும்.
 
ஆகவே சிதாபாஸன் கூடஸ்தனிடமிருந்து பிரிக்க முடியாத்தாக இருக்கிறான். கூடஸ்தனை ஞானத்தினால் பிரித்து நான் கூடஸ்தனாக இருக்கின்றேன் என்று அறிய அவனுக்கு தகுதியிருப்பதாக உபநிஷத்தின் மந்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது.
 
அக்ஞானியிடத்தில் உள்ள தேகம்தான் ஆத்மா என்று பொய்யான அறிவு, சந்தேகமற்ற உறுதியான அறிவாக இருப்பது போல இந்த பரமாத்மா விஷயத்தில் கூடஸ்தனிடத்தில் சந்தேகமில்லாமல் உறுதியான அறிவை அடைவதற்கு “அயம்” என்ற சொல் உபயோகப்படுத்தப்படுகிறது. அக்ஞானியானவன் தேகத்தை ஆத்மாவாக அறிந்து கொண்டு இருக்கின்றான். அதுபோல சந்தேகமில்லாமலும், உறுதியாகவும் இந்த அறிவில் இருக்கிறான். ஞானிகளுக்கு தேகம்தான் ஆத்மா என்ற அறிவு நீங்கி விட்டிருக்கும். யாருக்கு பரமாத்மாவில் நான் என்ற அறிவு இருக்கிறதோ அவர்கள் விரும்பாவிட்டாலும் மோட்சத்தை அடைந்திருப்பார்கள்.
 
“அயம்” என்ற சொல் ஒரு பொருள் நேரில் தெளிவாக தெரிவதை குறிக்கிறது என்றால் அதுவும் சரிதான். தானே விளங்குகின்ற சைதன்யமானது எப்பொழுதும் விளங்கிக் கொண்டிருக்கின்றது என்றும் கூறலாம். பொருளையும், அறிவையும் அபரோக்ஷமாக தெரியலாம். நேரில் தெரிவதும், நேரில் தெரியாததும், அறிந்தும், அறியாததும் ஆகியவைகள் எப்பொழுது தெரிந்துக் கொண்டேயிருக்கின்ற பிரம்மனிடத்தில் இருக்கலாம். எப்படி பத்தாவது மனிதனிடத்தில் இருக்கின்றதோ அதுபோலவாகும்.
 
முதல்நிலை அறியாமையை ஏழு படிகளின் வழிகளை கடப்பதன் மூலம் அபரோக்ஷ ஞானத்தை அடையலாம் என்ற கூறப்படுகிறது. ஒன்பது என்ற எண்ணிக்கையோடு அறிவை இழந்த பத்தாவது மனிதனுடைய முட்டாள்தனத்தினால் பத்தாவது மனிதனாக நான் இருக்கிறேன் என்று அறிந்து கொள்ள முடிவதில்லை. இந்த நிலையில் மற்ற ஒன்பது பேர்களைப் பார்த்து கொண்டிருந்த போதிலும் பிராந்தியால் தன்னை பத்தாவது பேர்வழியாக அறிந்து கொள்ளவில்லை. இதுதான் முதல்படியான அக்ஞானம்.
 
அக்ஞானத்தை சுட்டிக்காட்டுவதையே ஆவரணம் என்று குறிப்பிடப்படுகிறது. பத்தாவது மனிதன் இங்கு இல்லை, எனக்கு தெரியவில்லை என்று பத்தாவது மனிதனாகவே இருக்கின்ற அவனே இப்படி சொல்கிறான். இவ்விதம் கூறுவது அக்ஞானத்தின் விளைவான ஆவரணமே காரணம் என்று கருதுகிறார்கள். பத்தாவது மனிதன் நதியில் இறந்துவிட்டான் என்று துக்கப்பட்டுக் கொண்டு அழுகிறான். அழுதல் முதலிய உணர்ச்சிகள் அக்ஞானத்தினால் ஏற்பட்ட விக்ஷேபம் என்று வித்வான்கள் கூறுகிறார்கள். பத்தாவது மனிதன் இறக்கவில்லை உயிரோடு இருக்கிறான் என்று நல்லறிவுடைய ஒருவரின் பேச்சைக் கேட்டவுடனே அந்த பத்தாவது மனிதன் எங்கேயோ இருக்கிறான் என்று மறைமுகமாக அறிந்து கொள்கிறான். எப்படி  சொர்க்கம் போன்றவற்றை நாம் அறிகின்றோமோ அதுபோல இவன் பத்தாவது மனிதனை அறிகிறான். இதுவே பரோக்ஷமாக அறிவதாகும். நீயேதான் அந்த பத்தாவது மனிதன் என்று பத்துபேர்களையும் எண்ணிக்காட்டி சொன்னவுடன் அபரோக்ஷமாக பத்தாவது மனிதனை அறிந்து கொள்கின்றான். பிறகு  அழுகையை நிறுத்திக் கொண்டான். இதுதான் சோகநிவிருத்தி படியாகும். இறுதியில் மகிழ்ச்சியடைகின்றான். இதுதான் ஏழாவது படியான மனதிருப்தி அடைதலை குறிக்கிறது.
 
அந்த ஏழபடிகளாவது
1. அறியாமை,
2. ஆவரணம்,
3. விக்ஷேபம்,
4. பரோக்ஷ ஞானம்,
5. அபரோக்ஷ ஞானம்,
6. துக்கநிவிருத்தி,
7. திருப்தி(சந்தோஷம்)
ஆகியவைகளாகும். இந்த ஏழு படிகளையும் சைதன்ய ஸ்வரூபமான ஆத்மா விஷயத்திலும் பொருத்தி பார்க்க வேண்டும்.
 

முதல்படி          இந்த சிதாபாஸனான ஜீவன் சம்சாரத்தில் முதல்படி

இரண்டாவது படி - கூடஸ்தன் என்ற தத்துவம் இல்லை, பிரகாசிக்கவும் இல்லை என்று ஜீவன் கூறுவது ஆவரண நிலையை குறிக்கிறது. யாராவது கூடஸ்தன் பற்றிக் கூறும்போது ஜீவன் இவ்வாறு கூறுகிறான். தன்னுடைய அக்ஞானத்தை வெளிப்படுத்துகிறான்.

மூன்றாவது படி -   நான் செயல் செய்பவன், செயலின் பலன்களை அனுபவிப்பவன் என்று கூறுவதன் மூலம் அவன் விக்ஷேபத்தை அடைந்திருப்பது தெரிகிறது.

நான்காவது படி -  கூடஸ்தன் இருக்கின்றது என்ற இப்படிபட்ட குருவின் உபநிஷத் வார்த்தையினால் கூடஸ்தனை பரோக்ஷமாக அறிகிறான்

ஐந்தாவது படி -    இந்த அறிவு வந்தபிறகு கூடஸ்தனே நானாக இருக்கிறேன் என்ற மகா வாக்கியத்தை விசாரம் செய்து அடையும் போது அபரோக்ஷமான அறிவை அடைகிறான்.

ஆறாவது படி -     நான் செயல்களை செய்பவன், செயல்களின் பலனை அனுபவிப்பவன் ஆகிய சோக கூட்டங்களை விட்டுவிடுகிறான்.

ஏழாவது படி -     என்னால் செய்ய வேண்டியது எல்லாம் செய்தாகிவிட்டது, அடைய                        வேண்டியது எல்லாம் அடைந்தாகி விட்டது என்ற மனநிறைவையும்,                      மனமகிழ்ச்சியையும் அடைகின்றான். கர்த்தாவாகவும் போக்தாவாகவும்                    இருப்பதுதான் சம்சாரம்
அக்ஞானம், ஆவரணம், அப்படியே விக்ஷேபம், பரோக்ஷ ஞானம், அபரோக்ஷ ஞானம், சோக நிவிருத்தி, தடையில்லாத திருப்தி ஆகிய இந்த ஏழு அவஸ்தைகளும் யாரைச் சார்ந்துள்ளது என்று வினவினால் அவைகள் சிதாபாஸனைச் சார்ந்ததே என்று ஏன் விசாரம் செய்ய வேண்டும்?
 
இந்த ஏழு அவஸ்தைகள் சிதாபாஸத்துக்கு இருக்கின்றது. இந்த ஏழு அவஸ்தைகளுக்குள் பந்தமும், மோட்சமும் அடங்கி இருக்கிறது. இந்த அவஸ்தைகளுக்குள் முதல் மூன்று அவஸ்தைகள் பந்த ஸ்வரூபமாக பந்தத்தை உண்டு பண்ணுகின்றவைகளாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
 
நான் அறியவில்லை என்ற அனுபவமே அக்ஞானம். கூடஸ்தனை கண்டு கொள்ளாமல் இருக்கின்ற நிலைக்கு அறியாமை. ஆத்மாவை அறிந்து கொள்வதில் உதாஸீன புத்தியுடன் இருப்பது அறியாமையின் வெளிப்பாடு. களிமண்ணுக்கு காரண, காரிய அவஸ்தைகள் என்று இரண்டு உண்டு. பானையின் இல்லாமையுடன் இருப்பது காரண, களிமண். காரணம் காரியம் இல்லாமையுடன் இருக்கிறது. பானை உருவானவுடன் களிமண் இல்லாதுபோகும். அதுபோல விசாரத்தின் இல்லாமையினால் இருப்பது அக்ஞானம் என்று சொல்லப்படுகிறது.
 
கூடஸ்தனை தவறான விதத்தில் விசாரம் செய்து, தவறான வழியில் தர்க்கத்தை பயன்படுத்தி சிந்தித்து அது இல்லை, கண்டிப்பாக பிரகாசிக்கவில்லை என்று சொல்வது நேரெதிரான விவகாரக் கருத்தாகும். இதுவே ஆவிருத்தியின் காரியம் என்று கருதப்படுகிறது.
 
ஸ்தூல, சூட்சும சரீரங்களுடன் கூடிய சிதாபாஸன் விக்ஷேபம் என்று சொல்லப்படுகிறது. செயல் செய்பவன் முதலியவைகள் எல்லாவிதமான துயரத்துடன் கூடியவன். இது சம்சாரம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த சிதாபாஸனிடம் இருக்கின்ற இந்த நிலையையே பந்தம் என்று சொல்லப்படுகிறது.
 
அக்ஞானமும், ஆவிருத்தியும் விக்ஷேபத்திற்கு முன்னாலே இருப்பவைகளாக இருந்தாலும் இவையிரண்டும் சிதாபாஸனுக்குதான் ஆத்மாவின் அவஸ்தை கிடையாது.
 
சிதாபாஸனுக்கு வெளித்தோற்றத்திற்கு வராத நிலை, வெளித்தோற்றத்திற்கு வந்த நிலையென்ற இரண்டு அவஸ்தைகள் உண்டு. விழிப்பு நிலையில் சிதாபாஸன் தெளிவான நிலையில் இருக்கிறது. ஆழ்ந்த உறக்கத்தில் சூட்சும சரீரம் காரண சரீரத்தில் ஒடுங்கும்போது சிதாபாஸன் வெளிப்படாமல் இருக்கின்றான். விழித்திருக்கும் போதும், சூட்சும சரீரம் வெளிப்படும் போதும் சிதாபாஸனும் வெளிப்படுகிறான். எனவே முதலிரண்டு அவஸ்தைகளும் ஒடுங்கிய சிதாபாஸனை சார்ந்துள்ளது. அடுத்த ஐந்து அவஸ்தைகளும் வெளிப்பட்டுள்ள சிதாபாஸனை சார்ந்துள்ளதாக புரிந்து கொள்ள வேண்டும். சிதாபாஸனுடைய தோற்றத்திற்கு முன் வெளித்தோற்றத்திற்கு வராத நிலையில் (அவ்யக்த நிலை) இருக்கிறான். ஆகவே அக்ஞான, ஆவிருத்தி இவையிரண்டு அவஸ்தைகளும் சிதாபாஸனிடத்தில் இருக்கின்றது என்பதற்கு விரோதமாக இல்லை. இந்த இரண்டு அவஸ்தைகளும் (அக்ஞானம், ஆவிருத்தி) பிரம்மனிடத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருப்பதால் அவைகள் பிரம்மத்தின் அவஸ்தைகள் என்று கருதக்கூடாது. ஏனென்றால் எல்லா அவஸ்தைகளும் பிரம்மனிடத்தில்தான் ஏற்றி வைக்கப்பட்டு இருக்கிறது.
 
நான் சம்சாரி, நான் பரோக்ஷ, அபரோக்ஷ ஞானத்தை அடைந்தவன், சோகங்கள் நீங்கப்பெற்றவன், நான் மனதிருப்தியுடன் இருக்கிறேன் இவ்விதம் முதலிரண்டு அவஸ்தைகள் தவிர மற்ற அவஸ்தைகள் ஜீவனிடம் இருப்பதாக நமக்கு தெரிகிறது. பிரம்மனிடத்தில் இல்லையென்று என்று சொன்னால், நான் அக்ஞானத்துடன் இருக்கிறேன். கூடஸ்தன் இருக்கின்றானா என்று கேட்கும் போது பிரம்மத்தினுடைய இருப்பும், விளங்குதல் எனக்கு தெரியவில்லை. என்னுடைய அறிவின்படி அறியவில்லை என்று சொல்லுவதிலிருந்து முதலிரண்டு அவஸ்தைகளும்கூட ஜீவனிடத்தில் இருக்கின்றது என்று அறிய முடிகிறது.
 
அக்ஞானம் பிரம்மனை சார்ந்து இருக்கிறது என்பது அதிஷ்டானத்தின் அடிப்படையில் இவ்வாறு கூறப்படுகிறது. அக்ஞான அவஸ்தை ஜீவனிடத்தில் இருக்கிறது என்பது அக்ஞானத்தில் அபிமானம் இருக்கிறது என்பதன் அடிப்படையில் கூறப்படுகிறது. இரண்டுவிதமான ஞானத்தினால் இந்த அக்ஞானமானது நீங்கும்போது அதனால் தோன்றிய ஆவரணமும் நீங்குகிறது.
 
உபநிஷத் உபதேசித்த பிரம்மன் இருக்கிறது என்ற பரோக்ஷ ஞானத்தினால் இல்லை என்று சொல்கின்ற அக்ஞான ஆவிருத்தி நீங்குகிறது. அபரோக்ஷ ஞானமானது பிரம்மன் எனக்கு விளங்கவில்லை என்ற ஆவிருத்தி காரணமான அறியாமையை நீக்கி விடுகிறது. பரம்பொருள் பிரகாசிக்கவில்லை என்ற மறைத்தலானது நீங்கும் போது பிரம்மத்தில் ஜீவனாக இருக்கும் தன்மையை ஏற்றி வைத்திருக்கும் நிலை நீங்குகிறது. நான் செய்பவன், நான் அனுபவிப்பவன் போன்ற எல்லா துயரங்களும் சம்சாரம் என்று அழைக்கப்படுகிறது. இதுவும் சென்று விடுகிறது. எல்லா சம்சாரங்களும் நீங்கிய பிறகு மனதில் நிலையான அமைதியை உணர்கிறோம். சோகங்கள் நிலையாக நீங்கிய உணர்வை அடைகின்றோம். தங்குதடை இல்லாத திருப்தியானது மனதில் உண்டாகின்றது. இதற்குப் பிறகு சோகமானது மீண்டும் தோன்றாது.
 
அபரோக்ஷ ஞானம், சோகம் நீங்குதல் இவையிரண்டு அவஸ்தைகளும் ஜீவனிடத்தில் இருப்பதாக ஆத்மானாம் சேத் என்று தொடங்குகின்ற உபநிஷத் வாக்கியத்தில் கூறப்பட்டிருக்கிறது.
 
அயம் என்ற சொல்லினால் அபரோக்ஷமாக இருக்கும் தன்மை பொருட்படுத்தப்படுகிறது. இந்த அபரோக்ஷத்திலும் இரண்டு விதமாக இருக்கிறது. அவைகள் அபரோக்ஷமாக இருக்கும் விஷயங்கள், பொருட்கள், அபரோக்ஷமாக இருக்கின்ற ஞானம் என்பதாகும். விஷயம் தானாக பிரகாசித்துக் கொண்டிருப்பதால் அது அபரோக்ஷமாக இருக்கிறது. புத்தியாலும் அபரோக்ஷமாக அதைப் பார்ப்பதாலும் அது அபரோக்ஷமாக இருக்கிறது.
 
பிரம்மத்ததை பரோக்ஷமாக அறிந்து கொண்ட காலத்திலும் கூட அது தானாக பிரகாசித்துக் கொண்டிருக்கிறது என்றுதான் புரிந்து கொள்கின்றோம். பிரம்மன் ஸ்வயம் பிரகாசமாகத்தான் இருக்கிறது என்று புரிந்து கொண்ட காலத்திலும் அது அவ்வாறாகத் தான் இருக்கிறது. நான் பிரம்மன் என்று புரிந்து கொள்ளாத போதிலும் பிரம்மன் இருக்கிறது என்று புரிந்து கொள்ளுதலே பரோக்ஷ ஞானமாகும். இந்த பரோக்ஷஞானம் பிராந்தியால் ஏற்பட்டதல்ல. பிரம்மன் இல்லை என்று ஏதாவதொரு பிரமாணத்தின் மூலம் நிரூபிக்கப்படுகிறது என்று சொன்னால் அப்போது கண்டிப்பாக நீக்கப்பட்டிருக்கலாம். அத்தகைய பிரபலமான பிரமாணத்தை நாம் காணவில்லை. ஆகையால் இந்த பரோக்ஷ ஞானத்தினால் பிரம்மன் இருக்கிறது என்பது பாதிக்கப்படாது. பதார்த்தம் இவ்விதம் என்று விசேஷமாக நேரில் தெரியாத காரணத்தினால் மாத்திரம் பிராந்தி தன்மை உண்டென்றால் சொர்க்கத்தை நேரில் விசேஷமாக அறியாமல் பொதுவாக இருக்கிறதென்று மாத்திரம் அறிவதால் அந்த அறிவும் பிராந்தியென்று ஏற்பட்டுவிடும். அபரோக்ஷ ஞானத்திற்கு தகுதியான ஒன்றிற்கு பரோக்ஷ ஞானம் ஏற்படுவது தவறல்ல. பிரம்மன் பரோக்ஷமாக அறியக்கூடியது என்று ஒருவன் அறிவதில்லை. ஆனால் அந்த பிரம்மன் இருக்கிறது என்று அறிகின்ற இந்த பரோக்ஷம் என்ற பெயரிடப்பட்டிருக்கிறது.
 
ஒரு அம்சத்தை கிரகிக்கவில்லையென்றால் அந்த அறிவும் பிராந்தி என்று கூறினால் பானையைப் பார்த்து அடையும் ஞானமும் தவறாகி விடும். பிரம்மன் அம்சங்களற்றதாக இருந்தபோதிலும் அது அம்சத்துட்ன கூடியதாக இருத்தல் என்பது நீக்கக்கூடிய வேற்றுமைகளுடன் கூடிய அம்சங்கள் ஏற்றி வைத்துள்ளோம். இல்லை என்கின்ற அம்சமானது பரோக்ஷ ஞானத்தை அடைவதன் மூலம் நீங்குகிறது. அது பிரகாசிக்கவில்லை, தெரியவில்லை என்ற அம்சமானது அபரோக்ஷ ஞானத்தை அடைவதன் மூலம் நீக்கப்படுகிறது.
 
பத்தாவது மனிதன் இருக்கின்றான் என்ற ஞானம் பரோக்ஷமானது. இந்த ஞானம் பிராந்தியால் வந்ததல்ல என்று அறிய முடிகிறது. அதுபோல பிரம்மன் இருக்கின்ற ஞானமும் சரியான ஞானம்தான். பிராந்தியால் ஏற்பட்டதல்ல. இவையிரண்டிலும் அக்ஞானத்தினுடைய ஆவரணம் பொதுவாக இருக்கிறது. பத்தாவது மனிதன் நீயேதான் என்ற வாக்கியத்திலிருந்து விசேஷ ஞானம் வெளிப்படுகிறது. விஷயத்தை நேரிலே கிரகிக்கும் அறிவு ஏற்படுகிறது. அப்படியோ ஆத்மாவே பிரம்மன், நான் பிரம்மன் என்ற வாக்கியத்தின் பொருளை முழுவதுமாக எந்தவித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் தீரவிசாரனை செய்த பிறகு தானே பிரம்மன் என்ற பிரம்மத்தின் ஸ்வரூபம், விசேஷமான அறிவு நேரில் கிரகிக்கப்படுகிறது.
 
பத்தாவது மனிதன் யார்? என்று கேட்டதற்கு நீயேதான் என்ற பதில் வந்தவுடன் தன்னையும் சேர்த்து எண்ணிப் பார்த்தவுடன் தான்தான் பத்தாவது மனிதன் என்று அறிந்து கொள்கிறான். பத்தாவது மனிதனாக இருக்கிறேன் என்ற வாக்கியத்திலிருந்து அடைந்த இவனுடைய தவறான அறிவானது அவனை விட்டு சென்றுவிட்டது. முதலில் எண்ணப்பட்டாலும், இடையில் எண்ணப்பட்டாலும் கடைசி மனிதனாக எண்ணப்பட்டாலும் ஒன்பது பேர்கள்தான் இருக்கிறார்கள் என்ற சந்தேகமே வராது.
 
“ஸத்3தான் ஸ்ருஷ்டிக்கு முன்னே இருந்ததுஇது போன்ற வாக்கியங்கள் பிரம்மத்தின் இருப்பானது பரோக்ஷமாக அறியப்படுகிறது. “நீயே அதுவாக இருக்கிறாய்” என்கின்ற வாக்கியத்தின் மூலமாக “அதுவாக நானாக இருக்கிறேன்” என்பது நன்கு கிரகிக்கப்படுகிறது. இதுவே பிரம்மத்தைப்பற்றிய அபரோக்ஷ ஞானமாகும். ஒருவனுக்கு நான் பிரம்மன் என்கின்ற ஞானமானது மாறவே மாறாது. ஆகவே அடைந்த அபரோக்ஷ ஞானம் நம்மிடத்தேதான் நிலைத்திருக்கும்.
 
ஸ்ருஷ்டி, லயம், ஸ்திதி இவைகளுக்கு காரணமாக உடைய லட்சணத்தையுடைய அந்த பிரம்மத்தை பிருகு மகரிஷி முன்பு பரோக்ஷமாக அறிந்து பிறகு விசாரம் செய்ததினால் அந்த பிரம்மனே ஆத்மாவாக இருப்பதாக, தனிஸ்வரூபமாக புரிந்து கொண்டார். நீயே பிரம்மனாக இருக்கின்றாய் என்ற வாக்கியமானது பிருகுவினுடைய குருவாக இருந்த தந்தையால் சொல்லப்படவில்லை என்றாலும் அன்னம், பிராணன் இவைகளை விசாரம் செய்கின்ற இடத்தை உபதேசித்து இருக்கின்றார். எதை விசாரம் செய்தால் தத்-த்வம்-அஸி என்ற ஞானம் அடைய முடியுமோ அந்த இடத்தை குறிப்பாக காட்டியுள்ளார்.
 
அன்னமய, பிராணமய முதலிய கோசங்கள் தெளிவாக மீண்டும் மீண்டும் விசாரம் செய்து ஆனந்த ஸ்வரூபமாக தன்னையறிந்து கொண்டு பிரம்மத்தினுடைய லட்சணத்தை தன்னுடைய ஆனந்த ஸ்வரூபமான ஆத்மாவோடு இணைத்து ஐக்கியத்தை புரிந்து கொண்டார்.
 
சத்யம், ஞானம், அனந்தம் என்ற லட்சணங்களைக் கூறி இவைகள் பிரம்மத்தின் ஸ்வரூபங்களாக கூறி இந்த பிரம்மத்தை தன்னுடைய இதயத்திற்குள் இருப்பதாக விளக்கப்பட்டிருக்கிறது. கோசங்களுக்கும் உள்ளேயிருக்கும் இது காட்டப்பட்டிருக்கிறது.
 
இந்திரன் இந்த ஆத்மாவை விளக்குகின்ற லட்சணங்களின் மூலமாக பரோக்ஷ ஞானத்தை அடைந்திருந்தாலும் பரோக்ஷமான அறிவை அடைய குருவை நான்கு முறை அணுகி அறிவை அடைந்தான்.
 
ஐதரேதய உபநிஷத்தில் 'ஆத்மாதான் ஸ்ருஷ்டிக்கு முன்னே இருந்ததுஎன்ற இந்த வாக்கியத்தின் மூலம் அதை பரோக்ஷமாக விளக்கியுள்ளது. இந்த முழு ஸ்ருஷ்டியானது முதலில் ஏற்றி வைக்கப்பட்டு நீக்கியதன் மூலமாக ஆத்மாதான் பிரம்மன் என்று காட்டியிருக்கிறது. இதன் மூலம் அபரோக்ஷ ஞானத்தை உபதேசிக்கிறது.
 
பிரம்மனுடைய இருத்தல் பற்றி சொல்லுகின்ற வாக்கியங்கள் எல்லாம் அவாந்தர வாக்கியங்கள். பிரம்மத்தைப்பற்றிய அறிவானது பரோக்ஷமாக அடையப்படும். மகாவாக்கியங்களை விசாரம் செய்வதன் மூலமாக அபரோக்ஷ ஞானத்தை அடைவோம்.  எல்லா உபநிஷத்திலும் இவ்வாறுதான் பிரம்ம ஞானம் உபதேசிக்கப்படுகிறது.
 
பிரம்மனை அபரோக்ஷமாக புரிந்து கொள்ள மகாவாக்கியங்கள்தான் காரணம் என்று சொல்லப்பட்டது. ஸ்ரீசங்கராச்சாரியார் எழுதிய வாக்ய விருத்தி என்று நூலில் பிரம்மத்தை அபரோக்ஷமாக மகாவாக்கியங்கள் மூலம்தான் அடையலாம் என்று குறிப்பிடுவதிலிருந்து இதற்கு எதிராக எந்த கருத்தும் கிடையாது.
 
முதல்படி
மகாவாக்கியத்தின் பொதுவான அர்த்தத்தை தெரிந்து கொள்ளுதல். சொல், சொல்லுக்கான பொருள், அதைப்பற்றிய எண்ணம் (பிரத்யயம்) இவை மூன்றும் சேர்ந்திருக்கும். “நான்” என்ற சப்தத்தை உச்சரித்தவுடன் அதைப்பற்றிய எண்ணம் மனதில் எழுகிறது. இந்த சப்தத்தைக் குறிக்கின்ற வஸ்து எது என்று சாதாரணமாக எல்லா மனிதர்களும் எதை புரிந்து கொண்டிருக்கின்றார்களோ அதுதான் ஆத்மா, தேகமல்ல.
வாச்யார்த்தம் - ஜீவன் - அவித்யாவை உபாதியாக உடையவன். நான் என்று நினைத்தல், நான் என்கின்ற எண்ணம் இவையிரண்டுக்கும் ஆலம்பனமாக எந்தவொன்று பிரகாசித்துக் கொண்டிருக்கின்றதோ அதுதான் “நான்” என்ற சொல்லினுடைய வாச்யார்த்தமாக இருக்கிறது. சூட்சும சரீரத்தின் கலந்திருக்கின்ற அறிவு ஸ்வரூபமான சைதன்யத்தை இது குறிக்கிறது. இதுவே த்வம் பதத்திற்கான வாச்யார்த்தம்.
 
இதில் தத் என்ற பதத்தின் அர்த்தம் சொல்லப்படுகிறது. இதை சாஸ்திரத்தின் உதவியுடன்தான் புரிந்து கொள்ள முடியும். இந்த சொல்லினுடைய வாச்யார்த்தம் ஈஸ்வரன். மாயையை உபாதியாக கொண்டுள்ள தத்துவம்தான் ஈஸ்வரன். ஸ்ருஷ்டிக்கு காரணமானவர். அனைத்தையும் அறிபவர். அனைத்து சக்திகளையும் உடையவர் என்ற லட்சணங்களுடன் கூடியவர்தான் ஈஸ்வரன். ஈஸ்வரனை பரோக்ஷமாக இருக்கின்ற தன்மையுடன் இருப்பதாக புரிந்து கொள்கின்றோம். எங்கேயோ இருப்பதாக தவறாக புரிந்து கொண்டிருக்கிறோம். சத்யம், ஞானம், அனந்தம் என்ற ஸ்வரூபங்களை உடையதாக புரிந்துக் கொண்டிருக்கின்றோம். இதை தத் என்ற சொல்லின் பொருளாக வாச்யார்த்தமாக புரிந்து கொண்டிருக்கின்றோம்.
 
இரண்டாவது படி (தத் - த்வம் சம்பந்தம்)
ஐக்கிய சம்பந்தமாக இருப்பதால், ஒன்றுக்கொன்று விரோதமாக இருப்பதாக சந்தேகம் வருவது
 
மூன்றாவது படி
அதனால் வாச்யார்த்தத்தை விட்டுவிட்டு லட்சியார்த்தத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒன்றாக இருக்கும் தன்மை அருகில் இருத்தல், தூரத்தில் இருத்தல் என்ற சம்பந்தம் உண்டாகாது. அது போலவே இருமைகளுடன் கூடியதாகவும், முழுமையாக இருக்கின்றதாகவும் தோன்றுகின்ற பரமாத்மாவின் அம்சங்கள் ஒன்றுக்கொன்று முரண்பாட்டுடன் இருக்கின்றது போல தோன்றுகிறது, ஒன்றாக இருக்கும் தன்மையில் முரண்பாடு தோன்றுகிறது. ஆகவே லட்சணைக்கு செல்ல வேண்டியிருக்கிறது. வாச்யார்தத்தை தியாகம் செய்துவிட்டு லட்சியார்தத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
 
தத் த்வம் அஸி முதலிய மகா வாக்கியங்களில் பா43 தியாக லட்சணை என்ற லட்சணையை எடுத்துக் கொள்ள வேண்டும். அவன்தான் இவன் முதலான வாக்கியத்தில் உள்ள பதங்களில் எப்படி பாதியை தியாகம் செய்து புரிந்து கொள்கின்றோமோ, வேறுவிதமான லட்சணையை எடுத்துக் கொள்ளக் கூடாது.
 
ஸம்ஸர்கம் - விசேஷன-விசேஷம் சம்பந்தம் (நீலத்தாமரை)
விஸிஷ்டஹ - அம்சம்-அம்சி சம்பந்தம் ( சங்கு-சக்கர-கதாதாரி). ஜீவர்கள்-ஈஸ்வரனுடைய அங்கமாக இருத்தல்
இப்படிப்பட்ட உறவுமுறைகள் மகாவாக்கிய அர்த்தத்தில் ஏற்றுக் கொள்வது இல்லை. பிளவுபடாத ஒன்றாக இருக்கின்ற ஸ்வரூபத்தை உடையது என்று மகாவாக்கியத்தின் பொருளாக அறிவாளிகளால் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
 
எது ஜீவனாக விளங்கிக் கொண்டிருக்கின்றதோ அதுவேதான் ஒன்றாக இருக்கின்ற ஆனந்தமய ஸ்வரூபமானது. இது த்வம், தத் இவையிரண்டிற்கும் இடையே உள்ள ஐக்கியத்தை குறிக்கின்றது. ஒன்றாகவும், ஆனந்த ஸ்வரூபமாகவும் எது இருக்கின்றதோ அதுவே மனதுக்கு சாட்சியாக விளங்கிக் கொண்டிருக்கிறது. இது தத்-த்வம் என்ற உறவை குறிக்கிறது. இவ்விதம் மகாவாக்கியத்தை விசாரம் செய்வதால் ஒன்றிலொன்று ஐக்கியமாகின்றது என்ற ஞானம் எப்போது அடையப்படுகின்றதோ அப்போது த்வம்-அஹம் என்ற சொல்லின் பொருளில் பிரம்மனில்லாத அறிவானது நீங்குகின்றது.
 
மகாவாக்கியத்திலிருக்கும் தத்-அது என்ற சொல்லில் இருக்கும் பரோக்ஷம் எங்கேயோ இருக்கிறார் என்ற எண்ணம் நீங்குகிறது. இவ்விதம் இருப்பதால் என்ன பலன்? என்று கேட்டால் சந்தேகம் வந்தால் நான் என்ற சொல்லுக்கு பொருளானது பூரணமாகவும், ஆனந்த ஸ்வரூபமாகவும் ஒன்றாகவும் எப்பொழுதும் விளங்கிக் கொண்டிருக்கும். இவ்விதம் மகாவாக்கியத்தை விசாரம் செய்வதனால் அபரோக்ஷ ஞானம் அடையலாம் என்று இருக்கும்போது மகாவாக்கியத்தில் இருந்து பரோக்ஷ ஞானம்தான் கிடைக்கும் என்று சொல்பவர்களின் சாஸ்திர அறிவை நிச்சயக்கப்பட்ட முடிவு செய்யப்பட்ட ஞானத்தினால் ஒரு பயனும் இல்லை.
 
சாஸ்திர சித்தாந்தம் இருக்கட்டும், யுக்தியின் மூலமாக எந்த வாக்கியத்தைக் கேட்டாலும் பரோக்ஷ ஞானத்தைத்தான் அடைய முடியும் என்று நிலைநாட்டுகிறேன். சொர்க்கம் இருக்கின்றது என்பதை வாக்கியத்தின் மூலமாக பரோக்ஷமாக அறிகின்றோம். ஆனால் பத்தாவது மனிதனை அபரோக்ஷமாக அறிவதற்கு நீதான் அந்த பத்தாவது மனிதன் என்ற வாக்கியம்தான் உதவுகிறது.
 
அந்தக்கரணத்தில் பிரதிபலிக்கின்ற ஞான ஸ்வரூபமான ஜீவன், அந்தக்கரணத்தை உபாதியாக்கி கொண்டிருக்கின்ற ஜீவன் அபரோக்ஷமாக புரிந்து கொள்ள தகுதி உடையதாக இருக்கிறது. பிரம்மன் எந்த உபாதியுமில்லாத ஸ்வரூபத்தை உடையதாக இருப்பதால் அபரோக்ஷமாகவும் அறிந்து கொள்ள முடியாது, பரோக்ஷமாகவும் அறிந்து கொள்ள முடியாது என்ற கருத்து தவறானது.
 
பிரம்மத்தின் தன்மையை அறிந்து கொள்வதற்கு உபாதியுடன் கூடியுள்ளதாகத்தான் இருக்க வேண்டும். விதேக முக்தி அடைகிற வரைக்கும் உபாதியுடன் பிரம்மன் இருந்து கொண்டிருக்கும். அந்தக்கரணம் ஜீவனுக்கு உபாதியாக இருக்கின்றது. இப்படி என்று சொல்கின்ற வித்யாவானது விதி வாக்கியம் உபாதியாக இருப்பது போல அப்படி இல்லை என்ற நிஷேத வாக்கியமும் உபாதியாக இருக்கிறது. தங்கம், இரும்பு என்கின்ற உலோகத்தினால் செய்யப்பட்ட சங்கிலியாக இருந்த போதிலும் கட்டி வைக்க உதவுகின்றது என்பதில் வேறுபாடில்லை.
 
ஓன்றினிடத்தில் இல்லாத தன்மையை கூறுவதன் மூலமாகவும், நேரிடையாக கூறுவதன் மூலமாகவும் வேதாந்தத்தினுடைய உபதேசம் பண்ணுகின்ற முறையானது இரண்டு விதமாகவும் இருக்கின்றது. இவ்வாறு ஆதிசங்கரர் கூறி இருக்கிறார்.
 
“நான்” என்ற சொல்லின் அர்த்தத்தை முழுவதுமாக விட்டுவிட்டால் நானே பிரம்மன் என்ற அறிவு எப்படி ஏற்படும் என்று கேட்டால் நான் என்ற சொல் குறிக்கின்ற பொருளின் ஒர அம்சத்தைத்தான், அனாத்மா பகுதியை மட்டும்தான் பாக தியாக லட்சணையின்படி நீக்கி விடுகின்றோம். தவிர முழு அர்த்தத்தையும் நீக்கி விடவில்லை.
 
அந்தக்கரணத்தை நீக்கிவிட்டால் எஞ்சியிருக்கும் சைதன்ய ஸ்வரூபமாக இருக்கின்ற சாட்சியினிடத்தில் நான் பிரம்மன் என்ற மகாவாக்கியத்தினால் பிரம்மத்தின் தன்மை அறியப்படுகிறது.
 
விருத்திவியாப்தி, பலவியாப்தி என்கின்ற இருவகையான படிகள் மூலம் அறிவை அடைய முடியும். சாட்சிதான் பிரம்மன் என்று அறிவை வெறும் வ்ருத்தி வியாப்தி மூலமாக அடைந்து விடலாம். சாட்சியான சைதன்யமானது தானாக பிரகாசித்துக் கொண்டிருந்தாலும் எண்ணங்கள் மூலமாக சாட்சியாக இருக்கின்ற ஆத்மாவை வியாபிக்கின்றது. பானை முதலிய ஜடமான விஷயத்தை அறிவதில் வ்ருத்தி விபாப்தி தேவைப்படுகின்றது. சாஸ்திரத்தை வகுத்துக் கொடுத்த சான்றோர்களால் பலவியாப்தி தேவையில்லை என்று கூறிப்பட்டிருக்கிறது.
 
மனமும் அதில் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்ற சிதாபாஸனும் பானையை வியாபித்துள்ளது. அதனால் பானை இருக்கிறது என்ற அறிவை அடைகின்றோம். பானையைப் பற்றிய இல்லாமை நீங்குகிறது. சிதாபாஸத்தின் மூலம் பானையானது தெரிகிறது. தவறான ஞானம் ஏற்படுத்துவதற்குக் காரணம் விருத்தி வியாப்திதான். ஒரு பொருளைப் பார்ப்பதினால் அதை வியாபிக்கின்ற மனதில் வரும் எண்ணங்களான இருத்தல் என்ற அறிவு தவறில்லாமல் இருந்தால் அந்தப் பொருளின் சரியான தோற்றத்தை உணர முடியும்.
 
பிரம்மன் விஷயத்தில் அதைப்பற்றிய அறியாமையை நீக்குவதற்கு விருத்தி வியாப்தி தேவைப்படுகிறது. இந்த பிரம்ம ஞான விஷயமாகவே சாட்சி ஸ்வரூபமாக இருக்கின்ற சைதன்யம் தானாக விஷயமாக பிரகாசித்துக் கொண்டிருப்பதால் சிதாபாஸன் தேவையில்லை. அதாவது பலவியாப்தி தேவையில்லை.
 
இருட்டறையிலுள்ள பானை அறிவதற்கு கண்ணும், தீபமும் தேவைப்படுகிறது. இதுபோல தீபத்தைப் பார்க்கும் விஷயத்தில் இரண்டும் தேவைப்படுவதில்லை. வெறும் கண் மட்டுமே தேவைப்படுகிறது. இங்கு பானை விஷயத்தில் விருத்தி வியாப்தி, பல வியாப்தி தேவைப்படுகிறது. ஆனால் தீபவிஷயத்தில் விருத்தி வியாப்தி மட்டுமே போதுமானதாக இருக்கின்றது.
 
ஆத்மாவை பார்க்கும் விஷயத்தில் பலவியாப்தியாக சிதாபாஸனாக இருந்தாலும் அது ஆத்மாவின் பிரதிபிம்பமாக இருப்பதால் அதனால் எந்த பயனும் கிடையாது. இந்த சிதாபாஸன் ஆத்மாவை அறியும் விஷயத்தில் இருந்த போதிலும் அது ஆத்மாவுடன் ஒடுங்கி விடுவதால் பிரம்ம விஷயத்தில் விசேஷமான பலன் எதுவும் ஏற்படாது. பானை அறிவதில் சிதாபாஸன் அதை விளங்க வைக்கின்ற பலவியாப்தியை ஆத்ம விஷயத்தில் கொடுக்க முடியாது.
 
மனம் புலன்களால் அறிய முடியாது. தொன்றுதொட்டு இருந்து வருவது, தோற்றம் இல்லாதது. இந்த வாக்கியங்கள் போல் பலவியாப்தி தேவையில்லையென்று ஸ்ருதியில் சொல்லப்பட்டிருக்கிறது. மனதினால் மட்டும் இந்த பிரம்மம் அறியப்படும் என்று இவ்வாறு விருத்தி வியாப்தி தேவை என்றும் சொல்லப்படுகிறது.
 
'ஆத்மாவை இது நான் என்று அறிந்தால்என்கின்ற வாக்கியத்தில் உள்ள “அயம்-அந்த” சொல்லினுடைய விளக்கத்தின் ஒரு பகுதி இதுவரை பார்க்கப்பட்டது. அபரோக்ஷ ஞானம் இருவிதமான பொருள் இருப்பதாக சொல்லப்பட்டது. அவைகள் 1.பொருளின் அபரோக்ஷ ஞானம், 2.அறிவின் அபரோக்ஷ தன்மை ஆகும். இந்த வாக்கியத்தில் பிரம்மனிடமிருந்து வேறுபடாத ஆத்மாவை விஷயமாக எடுத்துக் கொண்டு எந்தவொரு ஞானம் ஏற்படுகிறதோ அதுதான் சொல்லப்பட்டிருக்கிறது. பிரம்மன்தான் ஆத்மா என்று விசேஷமாக கிரகிக்கின்ற அறிவு எதுவோ அதுதான் இதுவரை சொல்லப்பட்டது.
 
மகாவாக்கிய விசாரத்திற்குப் பிறகு அபரோக்ஷ ஞானமானது வருவதாகவே இருக்கட்டும். ஞானம் வந்த போதிலும் அது உறுதியாக இருப்பதில்லை. எனவே அபரோக்ஷ ஞானம் அடைந்த பிறகும் சிரவணம், மனனம், நிதித்யாஸனம் ஆகியவற்றை ஞானம் திடமாகும்வரை தொடர்ந்து மீண்டும் மீண்டும் செய்து கொண்டு வரவேண்டும் என்று ஆசாரியர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
 
நான் பிரம்மன் என்ற இந்த மகாவாக்கியத்திலிருந்து வருகின்ற ஞானமானது எதுவரை உறுதியாகுமோ அதுவரை சமம் முதலிய சாதனங்களுடன் கூடியவைகளால் சிரவணம், முதலியவைகளை விடாமல் தொடர்ந்து அப்யாஸம் செய்துகொண்டு வர வேண்டும்.
 
ஏதாவது ஒரு அறிவை அடைவதற்கு தடைகளாக மூன்று இடத்தில் வரலாம். அவைகள் 1.பிரமாணம்- அறிவை கொடுக்கும் கருவி, 2.பிரமேயம் -அறியப்படும் பொருள், 3.பிரமாதா- அறிவை அடைபவன் ஆகும். ஞான நிஷ்டைக்கும் தடைகள் இந்த மூன்று இடத்தில்தான் வருகின்றது.
ப்ரமாண அஸம்பா4வனா - பிரமாணத்திலிருந்து வருகின்ற தடைகள்
பிரமேய அஸம்பா4வனா - பிரமேயத்திலிருந்து வருகின்ற தடைகள்
பிரமாதா விபாPதபாவனா - பிரமாதாவிடத்தில் உள்ள தடைகள்.
அபரோக்ஷஞானம் உறுதியடையாமல் இருப்பதற்கு நிச்சயமான காரணங்கள் இருக்கின்றன. உபநிஷத் வாக்கியங்கள் மேல் அதாவது பிரமாணத்திலேயே இருக்கின்ற பலவிதமான தடைகள். ஞானத்தைக் கொடுக்கின்ற வாக்கியங்களிலிருக்கும் தடைகள். ஞானத்தை அறிபவனிடத்தில் இருக்கின்ற தடைகள் (தவறான கருத்தை அடைகின்ற எண்ணங்கள்)
 
உபநிஷத் வாக்கியங்கள் பலவிதமாக பொருட்படுத்தப்படுகிறது. விதவிதமான கர்மங்கள், விஷயங்கள், கர்மங்கள், பலன்கள், அதிகாரிகள், விதவிதமான ஆசைகளை உடையவர்கள், வேதத்திலுள்ள வெவ்வேறு பகுதிகளில் உள்ள விதவிதமான வேற்றமைகளுடன் கூடிய விஷயங்கள் வெவ்வேறு வேதங்கள் உடைய வெவ்வேறு பகுதிகளில் சொல்லப்பட்டிருக்கிறது. இதேப்போன்று உபநிஷத்தில் இத்தகைய வேற்றுமைகள் இருக்குமோ என்று சந்தேகிக்கக்கூடாது என்ற காரணத்தினால் மீண்டும் சிரவணத்தை தொடர்ந்து செய்து கொண்டு வரவேண்டும்.
 
எல்லா உபநிஷத்தும் பிரம்ம தத்துவத்தைத்தான் மையக்கருத்தாக போதிக்கிறது என்று புரியும் வரை உபநிஷத்தை; கேட்டுக் கொண்டிருப்பதே சிரவணம் எனப்படும். ஆரம்பத்திலோ, இடையிலோ, இறுதியிலோ பிரம்மனாக இருக்கின்ற ஆத்மா என்ற அறிவை கொடுப்பதுதான் மையக் கருத்தாக இருக்கும். இந்த ஞானத்தை அடைவதற்கு செய்யும் முயற்சியே, சாதனமே சிரவணம் எனப்படுகிறது.
 
பிரம்ம சூத்திரத்திலுள்ள நான்காவது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள ஜீவ-பிரம்மன் ஐக்கிய கருத்தை நன்கு உபதேசிக்கப்பட்டுள்ளது.
 
பிரமேய அஸம்பாவானாத் : சிரவணத்தில் ஜீவ-பிரம்ம ஐக்கியத்தைச் சொல்கிறது என்று நன்கு புரிந்து கொண்டாலும், இதைத்தான் சொல்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இது சாத்தியமா என்ற வேறொரு சந்தேகம் எழலாம். இதையே பிரமேய அஸம்பாவானாத் என்று அழைக்கப்படுகிறது. பார்த்துக் அனுபவித்துக் கொண்டிருக்கும் ஜகத் எப்படி மித்யாவாக இருக்க முடியும் என்ற சந்தேகம் வரலாம். இந்த சந்தேகங்களை நீக்குவதற்கு மனனம் என்ற சாதனத்தை விடாமுயற்சியுடன் பயன்படுத்திக் கொண்டு வரவேண்டும்.
 
மனனம் தர்க்கத்தை பிரதானமாக கொண்டு சிந்தித்து தெளிய உதவுகின்ற சாதனம். அதாவது காரிய-காரண பாவத்தை உணர்தலே தர்க்கம் என்று கூறப்படுகிறது. சிரவணத்தில் கிடைக்கப்பெற்ற கருத்துக்கள் எல்லாம் விசாரம் செய்வதுதான் தர்க்கம் அல்லது யுக்தி என்று புரிந்து கொள்ள வேண்டும். இதனால் புத்தி அமைதியடைந்து இந்த மையக்கருத்தை சந்தேகமில்லாமல் புரிந்து கொள்ளும். புத்தியை அமைதிப்படுத்தும் செயலை செய்கின்ற தர்க்கத்தின் மூலம் பிரம்மத்தினுடைய விஷயத்தில் இது இப்படி இருக்கலாம் என்ற வாய்ப்பு என்ற நம்பிக்கை ஏற்படும் என்று வியாச பகவான் இரண்டாவது அத்தியாயத்தில் கூறியிருக்கிறார்.
 
பல பிறவிகளில் உறுதியான அப்யாஸம் செய்திருப்பதால் ஸ்தூல, சூட்சும சரீரங்களில் நான் என்கின்ற எண்ணம் கண நேரத்தில் உடனடியாக மீண்டும், மீண்டும் கண்டிப்பாக வந்து கொண்டேயிருக்கும். அப்படியே ஜகத் சத்யம் என்கின்ற எண்ணமும் திரும்பதிரும்ப ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும். இதுதான் விபரீத பாவனையாகும். இது மனதை ஒருமுகப்படுத்தினாலே நீங்கிவிடும். வேதாந்த சிரவணம், மனனம், செய்வதற்கு முன்பே உபாஸனை செய்திருந்தால் மனவொருமுகப்பாட்டுடன் இருந்திருப்போம்.
 
ஆகவேதான் உபாஸனை செய்யாமலிருக்கின்ற காரணத்தால் இங்கு பிரம்மத்தை உபதேசிக்கின்ற உபநிஷத்திலும் உபாஸனைகள் கூறப்பட்டிருக்கின்றது. இதனால் வேதாந்த விசாரத்திற்கு வருவதற்கு முன்பு உபாஸனையை செய்யாதவர்களால் பிரம்மத்தை உபாஸனை மூலமாக அப்யாஸம் செய்ய வேண்டும். அதாவது நிதித்யாஸனத்தை விடாமல் செய்து கொண்டு வரவேண்டும்.
 
நிர்குண பிரம்மத்தை மட்டும் சிந்தித்து கொண்டிருத்தல் அதை மட்டும் பேசிக் கொண்டு இருத்தல், அந்த ஒன்றையே பரம புருஷார்த்தமாக வைத்திருத்தல் இவைகளே பிரம்ம அப்யாஸம் என்று அறிவாளிகள் அறிந்திருக்கிறார்கள்.
 
சாதன சம்பத்தியை அடைந்திருக்கும் சாதகன் சிரவணம் மூலம் ஆத்ம ஸ்வரூபத்தை தெளிவாக அறிந்து பிரம்ம நிஷ்டை அடைய விரும்புவான். ஞானநிஷ்டை அடையும் சாதனத்தில் பிரம்ம வித்யாவைத் தவிர வேறெந்த உபதேசங்களை கேட்க வேண்டாம். சிந்திக்க வேண்டாம். இது வீண்சிரமம், காலத்தையும், சக்தியையும் பயனற்ற விதத்தில் செலவழித்தல். அனாத்மா விஷயங்களை கேட்பதும், சிந்திப்பதும், பேசுவதும் முற்றிலுமாக தவிர்த்துவிட வேண்டும். வைதீக விஷயத்திலும் அதிகமான காலத்தை செலவிட வேண்டாம். விதவிதமான சாஸ்திரங்களை விட்டுவிட வேண்டும். இவைகள் நம்முடைய வாக்கு இந்திரியத்திற்கு வீண்சிரமம் கொடுக்கும்.
 
ஈஸ்வரனிடமிருந்து தன்னை வேறுபடாமல் தியானித்து இருக்கின்றவர்களுக்கு ஞான நிஷ்டை கிடைக்கிறது. இவ்வாறு ஸ்ருதியும், ஸ்மிருதியும் எப்பொழுதும் நம்முடைய புத்தியானது ஆத்மா ஸ்வரூபத்திலேயே ஒருமுகப்படுத்த வேண்டும் என்று உபதேசிக்கிறது. ஜீவனிடத்தில் இருக்கின்ற விபரீதபாவனைகளை நாசம் செய்வதற்காக இதை சொல்லியிருக்கிறது.
 
எந்தவொன்று எப்படி இருக்கின்றதோ அந்தவொன்றின் உண்மைத் தன்மையை விட்டுவிட்டு வேறுவிதமாக எண்ணுவதே விபரீத பாவனையாகும். உதாரணமாக மகன் தந்தை ஆகியோரிடத்தில் பகைவன் என்ற நினைப்பது போல இது இருக்கிறது. இந்த ஆத்மாவானது தேகம் முதலியவற்றிலிருந்து வேறாக இருக்கின்றது. இந்த உலகமும் மித்யாவாக இருக்கின்றது. தேகத்தையும் ஆத்மாவாக நினைப்பதும் ஜகத்தை சத்யமாக நினைப்பதும், இவையிரண்டும்தான் விபரீதபாவனையாகும்.
 
இந்த விபரீதபாவனையானது ஆத்ம தத்துவத்தை தியானிக்கும் போது அழிந்து விடுகின்றது. ஆகவே எல்லா காலத்திலும் இந்த ஆத்மா மூன்று தேகத்திலிருந்து வேறானது என்று தியானிக்க வேண்டும். அதேபோல இந்த உலகமும் பொய்யென்று எப்பொழுதும் தியானித்துக் கொண்டிருக்க வேண்டும்.
 
கேள்வி:
நிதித்யாஸனம் என்பது மந்திரத்தை ஜபம் செய்வது போலவா? ஜபத்தினுடைய விதிமுறைகளான ஏதாவது ஒரு மந்திரத்தை நாமத்தை இவ்வளவு எண்ணிக்கைப் பண்ண வேண்டும். ஜபத்தின் முடிவின் பலன் கிடைக்கும் அது போலவா? அல்லது சகுண உபாஸனையான ஏதாவது ஒரு தெய்வத்தின் உருவத்தை தியானிப்பது போலவா? ஆத்மா மூன்று சரீரத்திலிருந்து வேறுபட்டது என்றும், ஜகத் மித்யா என்றும் இங்கு திரும்ப திரும்ப அப்யாஸம் செய்ய வேண்டுமா? மேற்சொன்ன இரண்டைப் போலவா அல்லது வேறுவிதமானதா?
 
பதில்:
வேறுவிதமானது என்று அறிந்து கொள். உதாரணமாக பசியை நீக்க உணவு  உட்கொள்வது போல தெரியக்கூடிய பலனை எதிர்பார்த்து செய்வதால் நியமங்கள் எதுவும் இல்லாமலே செய்யக்கூடியது இந்த நிதித்யாஸனம். பசி எடுக்கும் போது சாப்பிட விரும்புபவன் எந்தவிதமான நியமங்களையும், எண்ணிக்கையுடனோ சாப்பிடுவது கிடையாது.
 
சாப்பிடலாம், சாப்பிடமலுமிருக்கலாம் தன் விருப்பப்படி வேறு விதமாகவும் சாப்பிடலாம். ஏதேனும் ஒரு விதமாய் பசியைப் போக்கடிக்கவே நினைப்பான். செயல் செய்பவனுக்கு சுதந்திரம் இருக்கும் பட்சத்தில் செய்யவும், செய்யாமலிருக்கவும் மாற்றி செய்யவும் முடியும். நியமம் இருந்தால் இந்த மாதிரி சுதந்திரம் இருக்காது.
 
ஜபமானது நியமத்துடன் செய்ய வேண்டும். நியமப்படி செய்யவில்லை என்றால் ப்ரத்யவாய தோஷம் வந்துவிடும். வேறுவிதமாக தலைகீழாக செய்தால் பலனும் விபரீதமாக இருக்கும். மந்திரம் ஸ்வரத்துடனும். உச்சரிப்பும் சரியாக செய்யாவிட்டால் விபரீதமான பலன் அடைந்து விடுவோம்.
 
பசியைப்போல தெரியக்கூடிய துக்கத்தைக் கொடுப்பது போல இந்த விபரீதபாவனா அனுபவிக்கக்கூடிய துயரத்தைக் கொடுக்கக்கூடியது எனவே இந்த விபரீதபாவனானது வெல்வதற்கு நம்மால் முடியக்கூடிய ஏதாவது ஒரு விதத்தில் செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் இவ்விதம்தான் செய்ய வேண்டுமென்ற நியமமில்லை.
 
உபாயம் என்னவென்று ஏற்கனவே அதையே நினைப்பது அதைப்பற்றியே போவது முதலானதென்று சொல்லப்பட்டுவிட்டது.
 
ஈஸ்வரனுடைய நாமத்தையோ, உருவத்தையோ தொடர்ந்து தியானித்து கொண்டிருக்கும் போது வேறு எண்ணத்தினால் தடையெதுவும் ஏற்படாமல் மனதில் எது தொடர்ந்து தியானிக்கப்படுகின்றதோ அதுவே சரியான தியானம். இந்த நிலையில் மனதை மிகவும் கஷ்டப்பட்டு பிடித்து வைக்க வேண்டியதாக இருக்கிறது. ஏனென்றால் மனம் இயற்கையாக சஞ்சலப்படும் தன்மையுடையதாக இருக்கிறது.
 
ஹே கிருஷ்ணா! மனமானது சஞ்சலத்தை உடையது. அடிக்கடி முடிவை மாற்றிக் கொண்டேயிருக்கும், அலைபாய்ந்து கொண்டேயிருக்கும்.
ப்ரமாதி - செய்யக்கூடாத என்பதையே திரும்ப திரும்ப செய்துக் கொண்டிருக்கும். வேண்டாம் என்பதை பலாத்காரமாக செய்யத் தூண்டுவது
3லவதி - சுதந்திரமாக செயல்படக்கூடிய சக்தியுள்ளது. வாசனையின் பலத்தினால் இவ்வாறு இருக்கிறது
த்3ருடம் - உறுதியாக, திடமாக இருப்பது. விஷயங்கள் இருந்தாலும், இல்லை என்றாலும் அதை நினைத்து துயரப்படுத்திக் கொண்டு இருக்கும்.
இத்தகைய மனதைக் கட்டுபடுத்துவது என்பது காற்றை கையில் பிடிப்பது எவ்வளவு கடினமோ அதைவிடக் கடினமானதாக கருதுகிறேன்.
 
மனதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமானது. கடல்நீர் முழுவதையும் குடிப்பதை விடவும், மேரு மலையை தோண்டி எடுப்பதை விடவும் அக்னியை குடிப்பதை விடவும், மேரு மலையை தோண்டி எடுப்பதைவிடவும் மனதை அடக்குவது மிகவும் கடினம்.
 
நிதித்யாஸனத்தில் எந்தவிதக்கட்டுபாடும் மனதிற்கு கிடையாது. சங்கிலியால் கட்டி வைக்கப்பட்ட உடலுக்கு எந்தவித சுதந்திரமும் இருக்காது. அதுபோல கட்டுப்பாடு நிதித்யாஸனத்தில் கிடையாது. ஆனால் எண்ணிக்கையற்ற இதிகாசங்கள், உபநிஷத்தில் சொல்லப்பட்ட கருத்துக்கள், ஞானிகளின் வாழ்க்கை வரலாறு மூலமாக புத்திக்கு வினோதமான விஷயங்களாக பார்த்துக் கொண்டிருப்பது போல இருக்கும். நடனத்தைப் பார்ப்பது போலவும், நடனமாடுவது போலவும் மனதிற்கு நிதித்யாஸனம் பண்ணுவது இருக்கிறது.
 
நிதித்யாஸனத்தின் போது ஆத்மா சைதன்ய ஸ்பரூபம்தான் தோன்றிக் கொண்டிருக்கும் உலகம் மித்யா என்றுதான் கடைசியில் முடிவுக்கு வருவோம். இந்த அறிவைப் போதிக்கும் கருத்துக்களை நிதித்யாஸனத்தின் போது தியானிப்பதால் இவைகள் மூலமாக மனமானது இதற்கு விரோதமாக செல்லாது.
 
விவசாயம், வியாபாரம், பொறுப்பான பதவியிலிருந்து கொண்டு செயல் செய்து கொண்டிருத்தல் முதலியவைகள் வேதாந்த கருத்துக்களையே மனம் மீண்டும் நினைத்துக் கொண்டிருத்தல் என்பது நடக்கவே நடக்காது. எனவே பொறுப்புக்கள் அதிகமாக குறைத்துக் கொண்டு நிதித்யாஸனத்திற்கு அதிக்காலம் ஒதுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
 
இந்த நிதித்யாஸனத்தில் அப்யாஸம் செய்து கொண்டேயிருப்பவனால் கூட போஜனம் முதலிய சிறு உலக விவகாரங்களை செய்து கொண்டு வரமுடியும். முழுமையான விக்ஷேபமானது ஏற்படாதபடியால் உடனடியாக மறுபடியும் நினைவுக்கு நிதித்யாஸன ஆத்ம விஷயத்தை கொண்டுவர முடியும்.
 
ஆத்ம தத்துவ அறிவை மறந்துவிடுதலால் மட்டும் விபரீதபாவனை ஏற்படுவதில்லை, சம்சாரியாக இருப்பதில்லை. ஆனால் விபரீதபாவனை வரும்போது சம்சாரம் வந்து விடுகிறது. ஆத்ம தத்துவத்தையே புரிந்து கொள்ளுங்கள். அதைத் தவிர வேறு பேச்சுக்களை விட்டுவிடுங்கள். அனாத்மா சம்பந்தமான பேச்சுக்களை விட்டுவிட வேண்டும். அனாத்மா விஷயங்களை கேட்கவும் கூடாது. இது முண்டக உபநிஷத்தில் கூறப்பட்டிருக்கிறது. மேலும் வேறொரு உபநிஷத்திலும் அதிகமான சப்தங்களையும் படிக்கவோ, கேட்கவோ கூடாது. இதனால் வாக்கு இந்திரியத்திற்கு கஷ்டத்தைத்தான் கொடுக்கக் கூடியது. வேதாந்தத்திற்கு வேறாக இருக்கின்ற சாஸ்திரங்களை படிக்கக்கூடாது.
 
ஜனக மகாராஜா போன்றவர்கள் எப்படி ராஜபரிபாலனம் செய்து கொண்டு இருந்தார்கள் என்று கேட்டால் அவர்கள் ஆத்ம ஞானத்தில் நிலைபெற்றவர்கள் உனக்கும் ஞானநிஷ்டை ஏற்பட்டுவிட்டால் நீயும் தர்க்க சாஸ்திரம் படிக்கலாம், விவசாயமும் செய்து கொண்டிருக்கலாம்.
----ooo000ooo----


A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...