அத்தியாயம்-16
தெய்வீக-ஆசுரி
சம்பத் யோகம்
ஸ்வாமி
குருபரானந்தாவின் உபதேச விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது-27-01-2022
முகவுரை:
மனிதர்களை சத்துவகுண பிரதானமாக உடையவர்கள்,
ரஜோகுண பிரதானமாக உடையவர்கள், தமோ குண பிரதானமாக உடையவர்கள் என்று மூன்று வகையாக
பிரிக்கலாம். தமோகுண பிரதானமாக உடையவர்கள்
அசுரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு க்ரோதம் (வெறுப்பு), மற்றவர்களை
துன்புறுத்துவது போன்ற குணங்கள் சுபாவமாக இருக்கும். ரஜோகுண பிரதானமாக
உடையவர்களுக்கு ஆசைதான் அதிகமாக இருக்கும்.
அதனால் அதை அடைய செயல்பட்டுக் கொண்டே இருப்பார்கள். அதை அடைவதற்கு தடையாக
இருப்பவர்களை துன்புறுத்த தயங்க மாட்டார்கள்.
அடைய நினைக்கும் பொருளை அடைந்தால் மகிழ்ச்சி அடைவார்கள். அடைய எடுக்கும்
முயற்சியில் மற்றவர்களுக்கு துன்பம் வந்தாலும் கவலைப்படமாட்டார்கள். சுயநலவாதியாக இருப்பார்கள். இந்த இரண்டு
குணங்கள் பிரதானமாக உடையவர்களிடத்து இருக்கும் குணங்கள் ஆசுரி ஸம்பத் என்று
அழைக்கப்படுகின்றது. சத்துவ குண பிரதானமாக
இருப்பவர்கள் தெய்வீக பண்புகளை உடையவர்களாக இருப்பார்கள். மற்றவர்களை
எந்தவிதத்திலும் துன்புறுத்த மாட்டார்கள்.
இந்த அத்தியாயத்தில் எவையெல்லாம் அசுர குணங்கள் என்பதையும் அதை நீக்கி விட
வேண்டிய வழிகளையும், எவையெல்லாம் தெய்வீக குணங்கள் என்பதையும், அதை எவ்வாறு அடைய
வேண்டும் என்பதை கூறியிருக்கின்றார்.
தெய்வீக சம்பத் லட்சணங்கள்
- நல்ல
ஸம்ஸ்காரங்கள் இருக்கும் – சாத்வீக சுப வாஸனைகள் இருக்கும்
- வேதம்
செய்யச் சொல்வதை செய்வார்கள், செய்யக்கூடாது என்பவைகளை செய்யாதிருப்பாரகள். இது
சத்துவ குணத்தினால் மட்டும்தான் முடியும்
- ஆத்ம ஞானம்
அடையும் முயற்சியில் ஒருவனை ஈடுபடுத்தும்
ஆசுரி ஸம்பத் லட்சணங்கள்
- அசுப
வாசனைகளை உடையவர்களாக இருப்பார்கள்
- அதர்மப்படி
வாழ்ந்து கொண்டிருப்பார்கள்
- வேத சாஸ்திரம் செய்யாதே என்று உரைக்கும் கர்மங்களை செய்து கொண்டிருப்பார்கள்
அறியாமையை நீக்கும் முயற்சிக்கு மூன்றுவித
தடைகள் வரும்.
1. ப்ரமாண
அஸம்பா4வனா – ஞானத்தை அதைய உதவும் நேரிடையான கருவியில் குறையிருந்தால் சரியான
அறிவை அடைய முடியாது.
2. ப்ரமேய
அஸம்பா4வனா – அறியப்படும் விஷயத்தில் இருக்கும் குறையினாலும் அறிவை அடையாமலோ
அல்லது தவறான அறிவையோ அடைவோம். அறிவை அடைய
நினைக்கும் பொருள் மிக சூட்சுமமாக இருந்தால் அதுவே தடையாக இருக்கலாம். பிரம்மன் அதிசூட்சுமமாக இருப்பதால் அதை
அறிவதற்கு மிகக் கடினமாக இருக்கிறது. பிரம்மன் அதை தேடுபவனாகவே இருப்பதால் அது மிக
சூட்சுமமாக இருக்கிறது
3. விபரீத பா4வனா /
ப்ரமாத்ரு அஸித்3தி4 – அறிபவனிடத்தில் இருக்கும் தடை. அறியப்படும் விஷயத்தை அறிவதற்கேற்ற
தகுதியில்லாமல் இருக்கும் தடை. கேட்கும்
விஷயத்தை மனம் கவனிக்காமல் இருந்தாலும் தடையேற்படும்.
பிரம்மன் அறியப்படும் பொருள். அதை அறிவதற்கு உபநிஷத் பிரமாணமாக
இருக்கின்றது. பிரமாதா என்பவன் சாதன
சதுஷ்டய ஸம்பத்தி என்ற தகுதியை உடையவன். இந்த தகுதியைத்தான் பகவான் தெய்வீக சம்பத்
என்று கூறுகின்றார். மேலும்
நம்மிடமிருக்கும் ஆசுரி சம்பத்தையும் நீக்கிவிட வேண்டும் என்றும் கூறுகிறார்.
श्रीभगवानुवाच ।
अभयं सत्त्वसंशुद्धिर्ज्ञानयोगव्यवस्थितिः ।
दानं दमश्च यज्ञश्च स्वाध्यायस्तप आर्जवम् ॥ १६-१ ॥
1. அப4யம் – பயமற்ற
மனம், பயமின்மை.
முதலில் பயத்தை ஆராய்ந்துப் பார்க்கலாம்.
1.1. எல்லா
பொருட்களும் பயத்துடன் சேர்ந்தே இருக்கின்றது.
(உ-ம்)
1.1.1. போகம் தரும்
பொருட்களில் அனுபவித்தால் நோய் வந்து விடுமோ என்ற பயம்
1.1.2. குலப்பெருமையில்
நாசம் வந்து விடுமோ என்ற பயம்
1.1.3. செல்வமிருந்தால்
வருமான வரி அதிகாரிகளை கண்டு பயம், திருடு போய் விடுமோ என்ற பயம்
1.1.4. அடைந்த புகழ்
தன்னை விட்டு சென்று விடுமோ என்ற பயம்.
தை3ன்யம் – கீழான நிலைக்கு சென்று விடுதல்
1.1.5. உடல்
பலமிருந்தால் பகைவர்களிடமிருந்து வரும் பயம்
1.1.6. உடலழகுள்ளவர்களுக்கு
வயோதிகத்தை கண்டு பயம்
1.1.7. சாஸ்திரத்தை
அறிந்தவர்களுக்கு மற்ற சாஸ்திர வித்வான்களை கண்டு பயம். அவர்கள் வாதம் செய்ய வந்து
விடுவார்களோ, வாதத்தில் நாம் தோற்று விடுவோமோ என்ற பயம்
1.1.8. நற்பண்புகள்
இருந்தால் அவைகள் நீங்கும்படி யாராவது களங்கம் கற்பித்து விடுவார்களோ என்ற பயம்
1.1.9. உடலுக்கு அழிவு
வந்து விடுமோ என்ற மரணபயம்
வைராக்கியம் இருந்தாலே இவைகளனைத்தும் நம்மிடம் இருக்காது. வைராக்கியம் ஒன்றுதான் அபயத்தை
தரக்கூடியது..
1.2. மனதில் வரும் வேதனையே
பயமாக இருக்கின்றது. எதிர்காலத்தில் வரும் என்று நினைத்து நிகழ்காலத்தில் பயத்தை
அனுபவிப்பது.
வியோகாம் - விரும்புவது நம்மை விட்டு செல்வது;
ஸம்யோகம் - விரும்பாதது வந்து
சேர்வது,
துக்கம் வருவதற்கான காரணத்தை கண்டும் பயம் கொள்கின்றோம். இந்த பயமே துக்கமாக மாறுகின்றது. அதை அனுபவித்துக் கொண்டிருப்போம்.
1.3. சாஸ்திரத்தை கேட்கும்போது அதனால் நமக்கு ஏதாவது வந்து விடுமோ என்ற
பயம். சாஸ்திரம் சொல்கின்றபடி வாழ
முடியுமா என்ற சந்தேகத்தினல் அதை கடைப்பிடித்தால் நம்மால் சுகத்தை அனுபவிக்காமல்
போய் விடுமோ என்ற பயம். நாம் வாழ்க்கையில் எது செய்திருந்தாலும் அவைகள் அன்பினாலோ
அல்லது பயத்தினாலோ செய்திருப்போம்.
1.4. பயத்தை மூன்று வகையாக பிரிக்கலாம. அவைகள் துயரம் வந்துவிடுமோ என்ற பயம்,
அறியாமையினால் வருகின்ற பயம், நாசத்தினால் வருகின்ற பயம்
1.4.1. நாச பயம்:- நாம் அழிந்து
விடுவோமோ என்ற பயம். நம்மிடத்துள்ள செல்வங்களான வீடு, நிலம் போன்றவைகள் அழிந்து
விடுமோ என்கின்ற பயம், அடைந்த பெருமையும், புகழும் சென்று விடுமோ என்ற பயம்.
மமகாரத்தை குறித்த பயம், அகங்காரத்தை குறித்த பயம்
1.4.2. துக்க பயம்:- நமக்கு துயரம்
வந்து விடுமோ என்ற பயம். வயோதிகத்தை கண்டு பயம். வயோதிகத்தில் மற்றவர்கள் படும்
துன்பத்தைக் கண்டு நமக்கு இதேபோல வந்து விடுமோ என்கின்ற பயம்.
1.4.3. அறியாமை பயம்:- நம் அறிவுக்கோ,
கண்ணுக்கோ எதுவும் தெரியாமல் இருந்தாலும் பயப்படுவோம். இருட்டைக் கண்டு பயம். ஏனென்றால் இருட்டில்
ஒன்றும் பார்க்க முடியாது. அதனால் நம் உடலுக்கோ, உயிருக்கோ ஏதாவது ஆபத்து வந்து
விடுமோ என்ற பயம்.
1.5. பயப்படுவது ஒரு
நல்ல பண்பாக பகவான் கூறுகிறார். தர்மத்தை
மீறுவதனால் ஏற்படும் பயம் நல்லதேயாகும்.
இந்த உணர்வு நம்மை பாதுகாத்து கொள்ள பயன்படுகின்றது. தீயகாரியங்களைக் கண்டு பயப்படுதல் நல்லது. இது வாழ்க்கையை சரியான முறையில் வாழ
வைக்கின்றது.
பயத்தை நீக்கிக்
கொள்ள உதவும் வழிகள்:
1.1. வைராக்கியத்தை
வளர்த்து கொள்வதனால் பயம் நம்மை விட்டு சென்று விடும். உலகப்பொருட்களில் பற்று
நீங்கி இருப்பதால் அதன் காரணமாக வரும் பயம் நீங்கி விடுகின்றது. இந்த குணம் லோபம், க்ரோதம் இவைகளை நீக்கி
விடுகின்றது.
1.2. விவேகத்தி்ன் துணைக் கொண்டு பயத்திலிருந்து விடுபட வேண்டும். எது நிச்சயமாக நடக்குமோ அதைக் கண்டு பயப்படுவதனால் பயனில்லை என்ற விவேகம்.
நம்மால் எவ்வளவு துயரத்தை தாங்கமுடியுமோ அந்தளவு தான் இயற்கையிலிருந்து நாம்
அடைவோம். துயரத்தில் அளவு அதிகமாகி விட்டால் சுயநினைவை இழந்து விடுவோம். இந்த ரகசிய அறிவை அடைய வேண்டும். துயரத்தை தாங்கும் சக்தியை பகவான்
கொடுத்திருக்கிறார் என்ற அறிவு இருக்க வேண்டும்.
1.3. சிரத்தை பயத்தை
நீக்கும் சக்தியை கொடுக்கின்றது. பகவானிடத்தில் வைக்கும் முழுநம்பிக்கை நமக்கு
அபயத்தைக் கொடுக்கும்., தர்மத்துடன்
வாழ்வதினால் அபயத்தை அடைவேன் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும்.
1.4. நம்மிடத்திருக்கும்
பயங்களை ஒரு வெள்ளைத் தாளில் வரிசையாக எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு
அதிலிருந்து ஒவ்வொரு பயத்தை எடுத்துக் கொண்டு அனுபவிக்க வேண்டும். அதை தைரியமாக சந்தித்து அதிலிருந்து விடுபட
வேண்டும், பயத்தைக்
கண்டு பயந்தோடக் கூடாது. பயத்தை அனுபவித்து பழகினாலே அது
நம்மையறியாமலே சென்று விடும், இவ்வாறு பழக்கத்தால் அடைந்த பயத்தை அனுபவித்து
நீக்கி கொள்ள வேண்டும்,
இத்துடன் பயத்தைப் பற்றிய
ஆராய்ச்சி முடிவுற்றது. பயம் நீங்கிய நிலையே அபயமாகும். அபயம் இரண்டு வகையாக
பிரிக்கப்படுகிறது. முதலாவது ஞானயோக சாதகர்களாகிய நாம் மேற்கூறிய வழிகளை பயன்படுத்தி அடைகின்ற அபயம். இரண்டாவது
சாத்தியமாக அடைய வேண்டிய பிரம்மத்தைக் குறிக்கின்ற அபயமாகும்.
முதல் வகை அபயத்தை அடைந்து விட்டாலும் முழுவதுமாக
பயம் நம்மைவிட்டு சென்றுவிடாது. பயத்தின் விதை நமக்குள் இருந்துகொண்டுதானிருக்கும்.
இருமையை பார்க்கும்வரை இரண்டாவது வகையான அபயத்தை அடையமாட்டோம். எனவே மனிதப்பிறவியின்
இறுதி லட்சியமான பிரம்மத்தை அடையும்போதுதான் அபயத்தை அடைவோம்.
பகவான் இங்கே அபயத்தை தெய்வீக பண்பாக கூறியிருப்பது பயமின்மையை குறீக்கிறது.
2. ஸத்வஸம்ஶுத்3தி4: (ஸத்வம் – மனம்;
ஸம்ஶுத்தி – தூய்மை) மனத்தூய்மை.
ஞானயோகத்திற்கான தகுதிகளான சாதன-சது3ஷ்டய-சம்பத்தி.
2.1. இது எல்லா
தெய்வீக குணங்களும் உள்ள மனதை குறிக்கின்றது. ஆசுரி குணங்கள் நீங்கிய மனதைக்
குறிக்கின்றது. (விளக்கம் – 13வது அத்தியாயம்)
2.2. நாம் செய்யும்
செயல்களில் தூய்மை, வஞ்சனை இவைகள் இல்லாமல் இருக்க வேண்டும்,
3. ஞானயோக
விவஸ்தி2தி- அத்யாத்ம ஞான நித்யத்வம் (படிக்க 13வது)
3.1. ஞானம் – ஆத்ம
ஞானத்திற்கு சாதனமான சிரவணம், மனனம், சாஸ்திரத்தை குருமுகமாக கேட்டு அடையும் அறிவு
3.2. யோகம் –
நிதிதித்யாஸனத்தைக் குறிக்கின்றது. ஞானநிஷ்டைக்கு பயன்படுத்துகின்ற சாதனம்.
3.3. விவஸ்திதி-
தொடர்ச்சி, இந்த சாதனங்களை சாத்தியத்தை அடையும்வரை தொடர்ந்து செய்து கொண்டிருக்க
வேண்டும்.
3.4. சிரவண, மன்ன,
நிதிதித்யாஸனம் இவைகளை லட்சியத்தை அடையும் வரை தொடர்ந்து செய்வது எப்படி என்று
வினவும்போது, அந்த லட்சியத்தின் மீது தீவிரமான ஆசையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
3.5. தீவிரமான ஆசையை
வளர்த்துக் கொள்வது எப்படி என்று வினவும்போது
3.5.1. இலட்சியத்தை அடிக்கடி
மனதில் நினைத்து கொண்டிருக்க வேண்டும். இதையே சங்கல்பம் என்று கூறுவர். சாத்தியத்தை மீண்டும் மீண்டும்
நினைத்துப்பார்க்கும் வகையில் சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
3.5.2. நாம் அடைய விரும்பும்
லட்சியத்தின் பலனை நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும், இதுவே பிரயோஜன தியானம்
4. தா3னம்: நம்மிடம்
உள்ளவற்றை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். தன்னுடைய பொருளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு அறிவுபூர்வமாக பகிர்ந்து கொள்ள வேண்டும், தகுதியுடையவருக்குத்தான் தானம் செய்ய
வேண்டும். சிரத்தையுடன் கொடுக்க
வேண்டும். மனப்பூர்வமாக கொடுக்க வேண்டும். வாங்குபவர்களுக்கு மரியாதை, மதிப்பு கொடுக்க
வேண்டும். நம்மை தானம் செய்யும் நிலையில்
வைத்திருக்கும் பகவானுக்கு நன்றி செலுத்த வேண்டும். இந்த குணத்தினால் அடையும் பலன்கள்:
4.1. லோபம் என்கின்ற
தீயகுணம் நம்மை விட்டு நீங்கும்
4.2. மனம்
விரிவடையும், பரந்த மனப்பான்மையுடன் இருப்போம்
4.3. தியாகத்தினால்
நம்மை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று உபநிஷத் அறிவுறுத்துகிறது. தானம் செய்து பழகி விட்டால், எல்லாவற்றையும்
விட்டு விடுவதற்கு சுலபமாக இருக்கும்.
இந்த குணத்தின் மூலம் நான் என்று நம் உடல் மீது வைத்திருக்கும் அபிமானம்
மற்ற உடல்களிலும் வியாபிக்கும். தாய்
குழந்தை சாப்பிடுவதை பார்த்து மகிழ்வது போல நம் மனமும் அடையும்.
5. த3மஹ - இந்திரியக்கட்டுபாடு, புலனடக்கம். மனதிற்கு புலன்கள் வழியே கொடுக்கப்படுகின்ற விஷயங்கள்தான்
அதனுடைய அமைதிக்கும், சஞ்சலத்திற்கும் காரணமாக அமைகின்றது. பலன்கள் விஷயங்களோடு சம்பந்தம் வைக்கும்
போதும், தியானம் செய்யும் போதும் மனம் சஞ்சலத்தை அடைகின்றது. மனம் சஞ்சலப்படுகின்ற இடத்தில் புலன்களை
பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.
5.1. இதை அடைய எடுக்க
வேண்டிய முயற்சிகள்:
5.1.1. சூழ்நிலைகளின்
அடிப்படையில்தான் புலன்கள் வசப்படுதல், வசப்படாமலிருத்தல் நடக்கின்றது. எனவே புலன்களை வசப்படுத்தும் சூழ்நிலைகளை
தவிர்க்க வேண்டும்.
5.1.2. தவிர்க்க முடியாத
சூழ்நிலைகளின் புலன்களை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.
5.1.3. மோகம் தரும் விஷயத்தில்
பகவானை பார்க்க வேண்டும். மனம் சஞ்சலப்பட வைப்பவைகள் அனைத்தும் ஈஸ்வர ஸ்வரூபம் என்பதை பயிற்சி செய்து அடைய வேண்டும்
5.1.4. சஞ்சலப்பட வைக்கும்
விஷயங்களில் விஷத்தை பார்க்க வேண்டும்.
இன்பத்தை தரும் பொருட்களில் குறைகளை பார்க்க வேண்டும்,
5.1.5. இன்பத்தை தர்மத்துடனும்,
அளவுடனும் அனுபவிக்க வேண்டும். இதற்கு சாஸ்திரம் அனுமதி கொடுக்கின்றது.
5.2. இதனால் அடையும்
பலன்கள்
5.2.1. நல்ல ஸம்ஸ்காரங்கள் கிடைக்கும். மனதில் நல்ல பதிவுகள் பதிவாகும்.
5.2.2. மனோபலம், மன அமைதி
கிடைக்கும்
5.2.3. மனம் ஆரோக்கியத்துடன்
இருக்கும்
6. யக்ஞம் – இறைவழிபாடு
6.1. வேதத்தில்
உரைக்கப்பட்ட கர்மங்களை செய்தல்
6.2. ஸ்ம்ருதிகளில் ரிஷிகள்
வகுத்து வைத்திருக்கும் யக்ஞங்களை செய்தல், பூஜை செய்தல், பஞ்சமகா யாகங்கள்
முக்கியமாக கூறப்பட்டிருக்கின்றது. உலகத்திலிருந்து பெற்றதிற்கு நாம் ஏதோ ஒரு
விதத்தில் திருப்பி கொடுத்து விட வேண்டும். அந்த பஞ்சமகா யாகங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றது
6.2.1. பூத யக்ஞம் - உயிரினங்களினால் அடையும் பலன்களை அவைகளுக்கே திருப்பி கொடுக்கும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும்
6.2.2. மனித யக்ஞம் – மற்ற
மனிதர்களிடத்தில் இருந்து பெற்ற பலன்களுக்காக.
அவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் திருப்பி செய்து விட வேண்டும்
6.2.3. ரிஷி யக்ஞம் – ரிஷிகளுக்கு
செய்ய வேண்டிய கர்மங்கள். அவர்களிடம்
இருந்து பெற்ற அறிவுக்காக நாம் செய்ய வேண்டிய நன்றி கடன்களாவது, அவர்களை வணங்குதல், அவர்கள்
சொற்படி நடத்தல் ஆகியவைகளாகும்.
6.2.4. பித்ரு யக்ஞம் – நமது
முன்னோர்களை நினைத்து செய்ய வேண்டிய கர்மங்கள், அவர்களை வணங்குதல்
6.2.5. தேவ யக்ஞம் – ஈஸ்வரனை
வழிபடுதல்
7. ஸ்வாத்4யாயம்: சாஸ்திரங்களை
மனப்பாடம் செய்தல் (ஸப்த க்ரஹனம்), பொருளை புரிந்து கொள்ளுதல் (அர்த்த
க்3ரஹனம்). வேத பாராயணம் புண்ணியத்தைக்
கொடுக்கும், மன ஒருமுகப்பாட்டைக் கொடுக்கும், பொறுமையை வளர்க்கும். இதைப் படிப்பதனால் அடையும் பலன்கள். அறிவை அடைய
உதவுகின்றது, ஸத்ஸங்கம் போல செயல்படுகின்றது, நினைவுப்படுத்திக் கொள்ள
உதவுகின்றது.
8. தபஹ - தவம் – நம்மை நாமே உருக்கி கொள்ளுதல்
8.1. நற்குணங்களை
அடைவதற்கு அதிகமாக முயற்சி செய்ய வேண்டும்.
தீய குணங்கள் தானாக விரைவில் நம்மை அடைந்து விடும். நற்பண்புகளை அடைவதற்கு
விதவிதமான சாதனங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இதையே பொதுவாக தவம் என்று குறிப்பிடப்படுகின்றது.
திருவள்ளுவர் திருக்குறளில் “நம் கஷ்டங்களை பொறுத்துக் கொண்டும், மற்றவர்களுக்கு
கஷ்டத்தை கொடுக்காமல் இருப்பதே தவம்.” என்று கூறியிருக்கிறார். மூன்று நிலைகளில் தவங்களை செய்யலாம். அவைகள்
உடலாலும், மனதாலும் சொல்லாலும் செய்கின்றவைகள்.
சாத்விகம், ராஜஸம், தாமஸம் என்று மூன்று வகையாகவும்
பிரிக்கப்படுகின்றது. தவத்தில் முடிவில்
அதிக சக்தியை பெற வேண்டுமேயொழிய துன்பத்தை அனுபவிக்கக்கூடாது. நம் கடமையை செய்வதே
தவமாக கருத வேண்டும்.
8.2. முதல்நிலை தவம் – மாணவர்கள்
செய்ய வேண்டிய தவங்கள் ஸ்வாத்யாயம் பிரம்மசர்யத்தை கடைபிதிம், எளிமையாக இருத்தல்
8.3. க்ரஹாஸ்ரம தவம் – யாகம், தானம்,
தவம்
8.4. வானப்ரஸ்தாஸ்ரம
தவம் – தவம் மட்டும் (மௌனம், விரதம்)
8.5. சந்நியாஸ்ரம தவம்
- ஶமஹ, த3மஹ
(கடினமான, மேலான தவங்கள் இவை)
8.6. வாழ்க்கையில் எதை
அடைய விரும்பினாலும், தவத்தின் மூலமாக அடைந்து விடலாம். உடல் ஆரோக்கியமாக
இருந்தால்தான் தவத்தை மேற்கொள்ள முடியும்.
முதலில் எளிதான தவத்தில் ஆரம்பித்து படிப்படியாக கடினமான தவத்திற்கு செல்ல
வேண்டும்.
8.7. தவம் செய்வதற்கு
மேற்கொள்ள வேண்டிய உபாயங்கள்:
8.7.1. உடல், மனம்,
வாக்கு இவைகள் சக்தியுடன் இருக்க வேண்டும்.
8.7.2. தவத்தினால்
முக்கிய பலனுடன் மேலும் சில பலன்கள் தானாகவே வரும்.
அவைகளை ஒதுக்கி விட வேண்டும்.
8.7.3. நம்மால் செய்ய
முடிகின்ற தவத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.
8.7.4. தவத்தினால்
சக்தியைத்தான் அடைய வேண்டுமே தவிர துன்பத்தை அடையக் கூடாது.
9. ஆர்ஜவம் – இதைப் பற்றி 13வது
அத்தியாயத்தில் விரிவாக பகவான் கூறியிருக்கிறார். நேர்மையாக இருத்தல். மனம், வாக்கு, சொல் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்க
வேண்டும். அதாவது எண்ணங்கள், செயல், சொல் ஆகியவைகள்
ஒன்றாகவே இருக்க வேண்டும். மனதிலிருப்பதை,
சொல்ல வேண்டும், சொல்லியபடி செயல்பட வேண்டும். சொல்வதொன்று செய்வதொன்று இருக்க
கூடாது. நினைப்பதொன்று சொல்வதொன்றாக இருக்க கூடாது.
अहिंसा सत्यमक्रोधस्तयागः शान्तिरपैशुनम् ।
दया भूतेष्वलोकुप्त्वं मार्दवं ह्रीरचापलम् ॥ 2 ॥
10. அஹிம்ஸா –
துன்புறுத்தாமை
11. ஸத்யம் - வாய்மை, உண்மைப்பேசுதல்
11.1. எதை பார்த்தோமோ,
கேட்டோமோ அதையே சொல்லுதல், செய்தல்.
11.2. பார்த்ததையும்,
கேட்டதையும் உண்மைதான் என்று ஆராய்ந்து பார்த்தபின் உண்மையென்றால் அதை சொல்லுதல்
11.3. அநிருத்த
வர்ஜனம் – பொய் சொல்லாமல் இருத்தல்.
நடந்ததையெல்லாம் கூறுதல் மட்டும் உண்மை பேசுவதல்ல. நடக்காதவைகளை கூறாமல் இருத்தலும்
வாய்மை. உண்மையை
கேட்கும் சக்தியில்லாதவர்களிடத்தில் மறைக்கலாம்.
11.4. பொய் நன்மையை
கொடுக்குமென்றால் அதுவும் வாய்மையாக கருதப்படும்
11.5. நன்மை தரும்
நிகழ்ச்சியை கூறுதல் வாய்மை, அதை கூறாமல் இருத்தல் பொய்மை. தீமைதரும் நிகழ்ச்சியை கூறாமல் இருத்தல், அதை
கூறுதல் பொய்மை.
11.6. பலன்கள்:
11.6.1. மனத்தூய்மை அடைவதற்கு
ஒரு முக்கிய காரணமாக அமைகின்றது
11.6.2. மனச்சுமை
நீங்கப்பெறுவோம்.
11.6.3. வாய்மை தர்மமாக
இருப்பதால், புண்ணியத்தை அடையலாம் அதனால் சுகத்தை அடையலாம்.
11.6.4. மனோபலத்தை
அடைவோம்.
11.7.உபாயம்:
11.7.1. திருடாமை, புறங்கூறாமை
போன்ற பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்
11.7.2. அளவாக பேச
வேண்டும்.
11.7.3. நமக்கு நாமே
நேர்மையாக இருக்க வேண்டும்.
11.7.4. நம்மிடத்திலுள்ள
பலவீனங்களை, குறைகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை அடைந்திருக்க வேண்டும்.
11.7.5. உண்மைப்பேசி பழக
வேண்டும்.
12. அக்ரோதஹ – கோபப்படாமல்
இருத்தல்
12.1. நாம் எதை
வெறுக்கின்றோமோ அத்தகைய செயல்களை, நிந்தனைகளை செய்யத் தூண்டுவது
12.2. மற்றவர்களை
மூன்று நிலைகளில் துன்புறுத்தி விடுவோம்.
12.3. பாவத்தை
அடைவதற்கும், மனதுன்பத்திற்கும் காரணமாக இருக்கும்
12.4. தன்னைத்தான்
காக்கின் சினம் காக்க காவாக்கால், தன்னையே கொல்லும் சினம்
12.5. நமக்கு வெளியே
உள்ள பொருட்களிடமிருந்தும், மனிதர்களிடமிருந்தும் பாதுகாத்து கொள்ளுதல் புறப்பாதுகாப்பாகும். நம் உள்ளத்தை பாதுகாப்பது அகப்பாதுகாப்பாகும். கோபமானது அகப்பகையையும், புறப்பகையையும் தேடிக் கொடுக்கும்
12.6. கோபத்துடன்
இருப்பவனிடம் யாரும் நட்பு பாராட்டமாட்டார்கள், உதவி செய்ய மாட்டார்கள்.
12.7. காரணங்கள்: ( செல்லிடத்து
சினங்காப்பான்)
12.7.1. வெறுப்பு
கோபத்திற்கு காரணமாக இருக்கிறது.
வெளிப்படுத்தபட்ட வெறுப்பே கோபமாகும்
12.7.2. ஆசைகளிலிருந்து
கோபம் வெளிப்படும். நிறைவேறாத ஆசைக்கு
காரணமாக இருப்பவரிடம் வருவது கோபம்
12.7.3. எதிர்பார்ப்பு
வைத்திருத்தல், எதிர்பார்ப்பது கிடைக்கவில்லையென்றால் கோபம் வந்துவிடும்
12.7.4. அக்ஷமா –
பொறுமையின்மை – இதுவும் கோபத்தை தூண்டிவிடும்
12.7.5. ஒன்றை நிறைவேற்றிக்கொள்ளவும் கோபத்தை பயன்படுத்துகின்றோம்
12.7.6. எப்பொழுதெல்லாம்
நம்முடைய அகங்காரத்திற்கு குறை வருகின்றதோ அப்பொழுதெல்லாம் கோபத்திற்கு
ஆளாகின்றோம்.
12.7.7. அதர்மத்தை
செய்பவர்களை கண்டால் வந்துவிடும்
12.7.8. கோபமே சுபாவமாக
இருக்கின்றது
12.8. உபாயம்:
12.8.1. த்3வேஷ
நிவிருத்தி – வெறுப்பை நீக்கி விடுதல்
12.8.2. ராக3 த்யாகஹ –
புலனுகர் போகப் பொருட்களிடத்தும், மனிதர்களிடத்தும் இருக்கின்ற அதிக பற்றை
விலக்கிவிட வேண்டும்.
12.8.3. எதிர்பார்ப்பு
எதுவும் இல்லாமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அதன் விளைவு எப்படியிருந்தாலும் ஏற்றுக் கொள்ளும்
மனப்பான்மையுடன் இருக்க வேண்டும்.
நம்முடைய எதிர்ப்பார்ப்புப்படி மற்றவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று
நினைக்கக் கூடாது.
12.8.4. பொறுமையை
கடைப்பிடிக்க வேண்டும்.
12.8.5. ஒரு காரியத்தை
கோபத்தினால் ‘நிறைவேற்றும் பழக்கத்தை வைத்துக் கொள்ளக் கூடாது
12.8.6. மன்னிக்கும்
குணம் வேண்டும்
12.8.7. மற்றவர்கள் நம்மை
துன்புறுத்தும்போதோ, பொய் சொல்லும்போதோ, அவமானப்படுத்தினாலோ கோபம் அடையக்கூடாது.
இவ்வாறு நடந்து கொள்வது அவர்களின் குணத்தை காட்டிக் கொடுக்கின்றது என்று எடுத்துக்
கொள்ள வேண்டும்
12.8.8. அதர்மத்தை
கண்டால் சகித்துக்கொள்ள வேண்டும். எல்லாமே ஈஸ்வரன் வகுத்த நியதிப்படித்தான்
நடக்கின்றது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
12.8.9. கோபம் ரஜோ
குணத்திலிருக்கும்போது வெளிப்படும் குணம். எனவே இதில் இருந்து நீங்கி சத்துவ
குணத்திற்கு சென்றுவிட வேண்டும்.
13. த்யாக3ஹ - தியாகம் (சந்நியாசம்)
13.1. தியாகம் என்பது
மனதிற்குள்ளேயும், வெளியேயும் இருக்கின்ற பொருட்களை துறந்து விடுதல். எதிர்பார்ப்பு இல்லாமை, விட்டுகொடுத்தல்,
மன்னித்தல், தீய குணங்களை நீக்குதல் இவையெல்லாம் தியாகத்தின் வெளிப்பாடுகளாகும். போகம் தரும் பொருட்களையும், மனிதர்களையும்
விலக்கி விடுதலும் தியாகம்தான். இது விவேகத்திலிருந்து வருவது. விவேகம் முதிர்ச்சி அடையும் போது வைராக்கியம்
வருகின்றது. அதைத் தொடர்ந்து வருவதே
தியாகம். மோகத்தினால் செய்யும் தியாகம்
தமோ குணத்திலிருக்கும்போது செய்வது, ரஜோ குணத்திலிருக்கும்போது செய்யும் தியாகம்
கஷ்டத்தை நினைத்து ஒன்றை விட்டுவிடுவது.
சத்துவ குணத்திலிருக்கும் போது செய்யும் தியாகம் அறிவினால் ஒன்றை
விட்டுவிடுவது. சாத்விக குண தியாகம்தான்
பலனைக் கொடுக்கும். இது மோட்ச சாதனமாகும்.
14. ஶாந்தி – மன அமைதி,
மனக்கட்டுப்பாடு
14.1. இது தியாகத்தின் பலனாக கருதப்படுகின்றது. மனம் கரணமாக
இருப்பதால் அதை நம் கட்டுக்குள் இருக்க வேண்டும், அப்போதுதான் விரும்புகின்ற
லட்சியத்தை அடைய முடியும். மனதை கரணமாக
வைத்திருக்க வேண்டும், கர்த்தாவாக செயல்படாமல் இருக்க வேண்டும்,
14.2. மனம் பிரத்யக்ஷ
பிரமாணத்திற்கு பொதுவான கரணமாக செயல்படுகிறது.
புலன்களின் மூலமாக அறிவை அடைவதற்கு மனம் தேவை.
14.3. அனுமான
பிரமானத்திற்கு விசேஷ கரணமாக செயல்படுகின்றது
14.4. சுக-துக்க
அனுபவங்களுக்கும் கரணமாக செயல்படுகின்றது
14.5. குணங்களின்
இருப்பிடமாகவும் இருக்கின்றது
14.6. ஆத்மஞான
அடைவதற்கும், அதில் நிஷ்டை அடைவதற்கும் கரணமாக இருக்கின்றது
14.7. மனம் நல்ல
கருவியாக இல்லையென்றால் அதனால் அடையும் கஷ்டங்கள்:
14.7.1. புலன்களின்
மூலமாக சரியான அறிவை அடைய முடியாது
14.7.2. அனுமானத்தின்
மூலம் சரியான அறிவை அடைய முடியாது, சூழ்நிலைக்கேற்ப நடந்து கொள்ளமாட்டோம்.
14.7.3. நாம்
அனுபவிக்கும் இன்ப-துன்பங்களுக்குக் காரணமாக இருக்கும்
14.7.4. தீய குணங்களை
அடைவோம், இருக்கின்ற நற்குணங்களையும் இழக்கும் நிலை ஏற்படும்.
14.7.5. தியானம்
செய்வதற்கு தடைகள் வரும்.
14.8. உபாயம்:
14.8.1. மனதுக்குள் நல்ல
குணங்களை அடைதல்
14.8.2. தியானத்தின்
மூலம் மனதை பழக்கப்படுத்துதல், நாம் சொல்லும் எண்ணத்தை மட்டும் நினைக்கும்படி
பழக்க வேண்டும். இந்த இடத்தில் வெறும் கருவியாக இருக்கும்படி பழக்கப்படுத்த
வேண்டும்.
14.8.3. மனத்தூய்மை அடைதல்,
மனஒருமுகப்பாட்டை அடைதல்
15. அபைஶுனம்: மற்றவர்களுடைய பலவீனங்களை, குறைகளை
வெளிப்படுத்தாமல் இருத்தல்.
15.1. ஒருவருடைய
பலவீனத்தை தெரிந்து கொண்டு அதை மற்றவர்களிடம் சொல்லக்கூடாது. அப்படிபட்டவர்களை உதாசீனப்படுத்த வேண்டும்.
மற்றவர்களுடைய பலம், பலவீனத்தை தெரிந்து கொள்வதில் தவறில்லை. ஆனால் யாரிடமும் வெளிபடுத்தக்கூடாது.
15.2. ஒருவர் பற்றிய
குறையை சொல்லும்போது அவர் அருகே இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டால், நாம் பேச
மாட்டோம்.
15.3. இது ஒரு பாவகரமான
செயல்
15.4. இப்படி பேசினால்
அந்த பலவீனங்கள் நம்மை வந்தடையும்.
15.5. இது பகைமையை
வளர்க்கும் அவரது அன்பை இழந்து விடுவோம்.
16. த3யா பூ4தேஷு:
உயிர்களிடத்தில் கருணை காட்டுதல்.
கஷ்டத்திலிருக்கும் உயிரினங்களைப் பார்க்கும் போது வர வேண்டிய உணர்வு,
கருணை. இது ஒரு அளவுடன் இருக்க வேண்டும்.
இது நம்மை துயரப்படுத்தும் நிலைக்கு செல்லக்கூடாது.
16.1. பலன்கள்-
16.1.1. மன்னித்தல் என்ற
குணம் வளரும்
16.1.2. அஹிம்சையை பின்பற்ற உதவும்
16.1.3. மனதிலிருக்கும்
துவேஷம் நீங்கும்
16.1.4. சந்நியாசத்தை
எடுத்துக் கொள்வதற்கு உதவி புரியும்
16.1.5. ஞானியின் மனமானது
உலகத்திடம் விவகாரம் செய்யும்போது மென்மையாக இருக்கும். உலகம் அவனிடத்து விவகாரம் செய்யும்போது
பாறையைப் போன்று கடினமாக இருக்கும்
17. அலோலுப்த்வம் – இந்திரிய
அசாபல்யம் – புலன்களை அமைதியாக வைத்திருத்தல்.
புலன்களுக்கான விஷயங்கள் இருக்கும் சூழ்நிலையில் அவைகளை அமைதியாக வைத்திருக்க
வேண்டும். இது எவ்வளவு தூரம் நம் மனதை கட்டுக்குள் வைத்திருக்கிறோம் என்பதைக் காட்டும். அலோல சக்ஷு – அலைபாயாத கண்கள்.
18. மார்த3வம் – மென்மையாக
இருத்தல்
18.1. மற்றவர்களிடத்து
மென்மையாக பேசுதல், நடந்து கொள்ளுதல்
18.2. மற்றவர்கள் தவறு
செய்தாலும் மென்மையான வகையில் தண்டனைக் கொடுக்க வேண்டும்.
18.3. பொறுமையும்,
கருணையும் இந்தக் குணத்தை அடைய உதவும்
19. ஹ்ரீ – பணிவு,
இனிமையாக இருத்தல், தவறு செய்வதற்கு வெட்கப்படுதல், சங்கோஜப்படுதல்.
19.1. செய்யக்கூடாததை
செய்கின்ற விஷயத்தில் வரவேண்டிய வெட்கம்
19.2. உடை, ஆபரணங்களை
அணிவதிலும், பேசுவதிலும் எளிமையாக இருக்க வேண்டும்.
20. அசாபலம் - பயனற்ற செயல்களை செய்யாமல் இருத்தல்.
தேவையில்லாமல் கை, கால்களை ஆட்டிக்கொண்டிருத்தல் போன்றவற்றை செய்து
கொண்டிருத்தல், கர்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள் தேவையில்லாமல் செயலில்
ஈடுபடுத்திக் கொண்டிருத்தல். இதனால் கவனக்குறைவினால் பாதிக்கப்படுவோம்.
ப்ரமாதம் – கவனக்குறைவு அப்ரமாதம் –
கவனக்குறைவின்மை
तेजः क्षमा धृतिः शौचमद्रोहो नातिमानिता ।
बवन्ति सम्पदं दैवीमभिजातस्य भारत ॥ १६-३ ॥
21. தேஜஹ - திறமையுடன் இருத்தல் (அறிவுத்திறமை,
செயல்திறமை), அறிவு பூர்வமாக செயல்களை விரைவுடன் செய்து முடித்தல்
22. க்ஷமா – பொறுமை,
மன்னித்தல். இந்தக் குணங்களால் நாம்தான்
அதிக பயன் அடைவோம். செய்த தவறுக்கு அதற்கேற்ற தண்டனைக் கொடுக்கலாம் ஆனால் அதே சமயத்தில் ஆழ்மனதில் மன்னிக்க
வேண்டும். அவர்களிடத்து அறியாமையையும்,
இயலாமையையும் பார்த்து அதனால் அவர்கள் செய்யும் தவறை மன்னிக்க வேண்டும்.
23. த்4ருதிஹி – மன உறுதியுடன்
இருத்தல் ( will power ) எடுத்த முடிவில்
உறுதியாக இருக்கும் மனப்பான்மை. சாத்விக
உறுதி, ராஜஸ உறுதி, தாமஸ உறுதி என்று மூன்றாக பகவான் பிரித்திருக்கின்றார். ஒரு
லட்சியத்தை முடிவு செய்து அதை அடையும் வரையில் உறுதியாக இருக்க வேண்டும். செயல்படுத்தும் விஷயம் மனதில் இருக்கும்
சக்தியை பொறுத்து அமைகின்றது.
23.1. ஒன்றை தொடங்கும்
போது தடைகள் வரும் என்று நினைத்து செயலில் இறங்க மாட்டார்கள்
23.2. சிலர் தடைகள்
வராத வரையில் செய்து கொண்டிருப்பார்கள், தடைகள் வந்து விட்டால் செய்வதை விட்டு
விடுவார்கள்
23.3. வேறு சிலர்
தடைகள் வந்தாலும் அதைத் தாண்டி செயலில் ஈடுபட்டு முடிவை அடைவார்கள்
23.4. இந்த தடைகள்
துன்பத்தின் வடிவமாகவும் இருக்கலாம, இன்பத்தில் உருவத்திலும் வரலாம்.
23.5. உபாயம்
23.5.1. சரியான
விஷயத்தில் மட்டும் உறுதியாக இருக்க வேண்டும். எது சுலபமாக அடைய முடியுமோ அதை லட்சியமாக
வைக்க வேண்டும். இதில் கிடைக்கும் வெற்றி நமக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். அடுத்த
லட்சியத்தில் ஈடுபடுவதற்கு உதவி செய்யும்
23.5.2. எந்த கஷ்டம்
வந்தாலும், தடைகள் வந்தாலும் பயந்து முயற்சியை விட்டுவிடமாட்டேன் என்ற மனநிலையோடு
செயலில் ஈடுபட வேண்டும்.
23.5.3. எடுத்துக் கொண்ட
லட்சியத்தில் முக்கியத்துவத்தையும், தேவையையும் உணர வேண்டும்.
23.5.4. வெளி
சூழ்நிலைகளால் நம் உறுதி இழக்காமல் இருக்குமாறு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
23.5.5. நம் உறுதியை
குலைக்கும் பலவீனத்தை கண்டுபிடித்து நீக்கிக் கொள்ள வேண்டும்.
24. ஶௌசம் – தூய்மையாக
இருத்தல் (13வது அத்தியாயத்தில் விரிவாக விளக்கப்பட்டது) தூய்மையாக இருப்பதற்கு காலம், உழைப்பு இவைகள் தேவைப்பட்டால் கொடுக்க தயங்க கூடாது.
25. ந அதிமானிதா- தன்னை உயர்வாக எண்ணாமல் இருத்தல். நம்மிடத்தில் நற்பண்புகள் இருந்தாலும், அதிக
திறமைகள், உயர்ந்த அறிவு இவைகல் இருந்தாலும் அதனால் உயர்வு மனப்பான்மை அடையக்கூடாது.
அந்த நிலையில் எல்லாம் ஈஸ்வர பிரசாதமாக கருதி எளிமையாக, அடக்கமாக இருக்க வேண்டும்.
தெய்வீக சம்பத்துடனும், நல்ல ஸம்ஸ்கார்ங்களுடன் பிறந்தவர்களுக்கு மேற் சொல்லப்பட்ட
நற்பண்புகளை அடைந்திருப்பார்கள்
.
दम्भो दर्पोऽभिमानश्च क्रोधः पारुष्यमेव च ।
अज्ञानं चाभिजातस्य पार्थ सम्पदमासुरीम् ॥ १६-४ ॥
ரஜோ, தமோ குணத்திலிருக்கும்போது
இருப்பவைகள் தீய குணங்கள். இந்தக் குணங்களை
உடையவனையும், அவனைச் சார்ந்தவனையும் இவைகள் பாதிக்கும். பாவத்தை கொடுத்து துயரத்தை அனுபவிக்க வைக்கும். நம்முடைய தவறை மற்றவர்கள் சுட்டிக் காட்டும்போது
அதை மனதில் ஏற்றுக்கொண்டு அதை நீக்க முயற்சி செய்ய வேண்டும். தீயகுணங்களை நம்மால் மாற்றிக் கொள்ள முடியும்
என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். பகவான்
கூறிய தீய குணங்கள் நம்மிடத்தில் இருந்தால் அவைகளை நீக்கிக் கொள்ள வேண்டும்.
a. தம்ப4ஹ - பகட்டு, டம்பம் – நம்மிடத்திருக்கும்
நற்குணங்களை நாமே விளம்பரப்படுத்தி கொள்ளுதல், நம்மிடத்திலிருக்கும் திறமைகளை நாமே
பறைச் சாற்றிக்கொள்ளுதல். செல்வத்தை
வெளிக்காட்டும் வகையில் நடந்து கொள்ளுதல்.
b. த3ர்பஹ – கர்வம், திமிர் –
பெரியோர்களை அவமதித்தல்
c. அபி4மானம் - மனதுக்குள் தன்னை உயர்வாக நினைத்துக்
கொள்ளுதல். தான் பிறந்த குலம், ஜாதி,
தவம், சாஸ்திர அறிவு நிமித்தமக தன்னை உயர்வாக நினைத்துக் கொண்டு செயல்படுதல்
d. க்ரோதம் – கோபம்
e. பாருஷ்யம் - கடினமானவனாக, கடுமையாக இருத்தல். ஒருவர் செய்த தவறுக்கும் அதிகமான தண்டனை
கொடுக்க கூடாது. கடுமையான சொற்களை பயன்படுத்தக் கூடாது. பிறர் மனம் புண்படும்படி
பேசவோ, நடந்து கொள்ளவோ கூடாது.
f. அக்ஞானம் – அறியாமை –
தர்ம-அதர்மத்தை பற்றிய விஷயத்தில் அறியாமை. எது நன்மை தருபவைகள், எது தீமை
தருபவைகள் என்பதைப் பற்றிய அறியாமை.
ஆஸுரி சம்பத3ம் அபி4 ஜாதஸ்ய – அசுர குணத்துடன்
கூடியவராக பிறந்தவர்களிடம் இவைகள் எல்லாம் இருக்கும்.
दैवी सम्पद्विमोक्षाय निबन्धायासुरी मता ।
मा शुचः सम्पदं दैवीमभिजातोऽसि पाण्डव ॥ १६-५ ॥
தைவீ ஸம்பத்3
விமோக்ஷாய - தெய்வீக
பண்புகள் மோட்சத்தை அடைவதற்கு உதவி செய்யும்.
நிப3ந்தா4தாயாஸுரீ
மதா - தீய பண்புகள்
நம்மை பந்தப்படுத்தி சம்சாரத்திலே வைத்திருந்து துயரத்தை கொடுத்து கொண்டிருக்கும்
நற்பண்புகள் ஒருவனை மோட்சபாதைக்கு மட்டுமே
அழைத்துச் செல்லும், அதுவே மோட்சத்தைக் கொடுக்காது. இதனால் ரஜோ, தமோ குணத்தினால்
வரும் தடைகள் நீங்கி விடும். ஆனால் சத்துவ
குணத்தினல் வரும் தடைகள் இருந்து கொண்டுதான் இருக்கும். தெய்வீக சம்பத்
மற்றவர்களையும், அதை சார்ந்தவனையும் துன்புறுத்தாது. ஆனால் ஆசுரி சம்பத்
மற்றவர்களுக்கு துன்பத்தையும் கொடுத்து, பயத்தையும் கொடுக்கும். புண்ணியத்தினால் சுகத்தை அடைவோம். சுகத்தை தவிர்த்து விட்டால் மனத்தூய்மையை
அடைவோம். தீயபண்புகள் நம்மை எப்பொழுதும்
பந்தத்திலே வைத்திருக்கும் அதனால் துயரத்தையே அனுபவித்து கொண்டிருப்போம்.
மா ஶுச: - நீ வருத்தப்படாதே அர்ஜுனா
பாண்டவ தை3வீம் ஸம்பத3ம் அபி4ஜாதோ அஸி – நீ
நற்பண்புகளுடனும், நல்ல ஸம்ஸ்காரங்களுடன் பிறந்திருக்கின்றாய்.
द्वौ भूतसर्गौ लोकेऽस्मिन्दैव आसुर एव च ।
दैवो विस्तजशः प्रोक्त आसुरं पार्थ मे शृणु ॥ १६-६ ॥
அஸ்மின் லோக - இந்த உலகத்தில்
த்வௌ பூ4தஸர்கௌ3 - இரண்டுவிதமான மனித தன்மைகள் உள்ளன. அவைகள்
தை3வ அஸுர ஏவ ச - தெய்வீக பண்புகள் , அசுர பண்புகள்
சாஸ்திர ஸம்ஸ்காரத்தின் துணைக்கொண்டு இயற்மையாக
இருக்கின்ற ஸம்ஸ்காரங்களை வெற்றிக் கொள்பவன் தேவனாக கருதப்படுகிறான். இல்லை
என்றால் அசுரனாக கருதப்படுகிறான். இவ்வாறாக மனிதன் இரண்டுவிதமாக இருக்கிறான்.
தைவ: விஸ்தரஶள் ப்ரோக்தஹ - இதுவரை தெய்வீக சம்பத்துக்கள் விரிவாக சொல்லப்பட்டது
ஆஸுரம் மெ ஶ்ருணு – பார்த்தா,
என்னிடமிருந்து அசுர சம்பத்தையும் கேள்!
இவைகளை அடையாள கண்டு கொண்டு அவைகளை நீக்கி விடு. பிறகு மீண்டும் வந்துவிடாமல் இருப்பதற்கு விழிப்பாக இருப்பாயாக.
प्रवृत्तिं च निवृत्तिम् च जना न विदुरासुराः ।
न शौचं नापि चाचारो न सत्यं तेषु विद्यते ॥ १६-७ ॥
ப்ரவ்ருத்தின் ச
நிவ்ருத்திம் ச - செய்ய வேண்டியது (தர்மம்), செய்யக்கூடாதது
(அதர்மம்)
ஜனா ந விது:
அஸுரா: - இவற்றை அறியாதவர்கள் அசுரர்கள்
ந ஶௌசம் தேஷு வித்யதே - அவர்களிடத்தில் தூய்மை இருக்காது
ந அபி ச ஆசாரஹ - மேலும் ஒழுக்கமற்றவர்களாக இருப்பார்கள், நன்னடத்தை அற்றவர்களாக இருப்பார்கள், சாஸ்திரம்
சொல்லியபடி நடக்காதவர்கள்
ந ஸத்யம் - உண்மை பேச மாட்டார்கள்.
மற்றவர்களிடம் அன்பாகவும், உண்மையாகவும்,
இனிமையாகவும் பேசமாட்டார்கள்.
உறக்கம் என்பது நித்ய மரணம் என்பதால் விழித்தவுடன்
குளிக்க வேண்டும்.
असत्यमप्रतिष्टं ते जगदाहुरनीश्वरम् ।
अपरस्यरसम्भूतं किमन्यत्कामहैतुकम् ॥ १६-८ ॥
தே – அசுரர்கள்
இந்த உலகத்தைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்
என்பதைப் பற்றி பகவான் இதில் கூறியிருக்கிறார்.
ஜகத் - இந்த உலகத்தில் ( இது உலகத்தில் வாழும் மனிதர்களை
குறிக்கிறது)
அஸத்யம் - எல்லோரும்
பொய்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆத்மவத் மன்யதெ ஜகத் – தன்னைப் போலவே
மற்றவர்களையும் நினைக்கின்றான். உலகத்திலுள்ள வாழ்க்கை நெறிமுறைகளுக்கு வேத
சாஸ்திரம் பிரமாணம் அல்ல என்று கூறுகிறார்கள். வேத சாஸ்திரமானது ஒருவன்
எப்படி வாழ வேண்டும் என்று உரைக்கும் வழிகாட்டியாக அவர்கள் கருதவில்லை.
அப்ரதிஷ்டம் - இந்த உலகம்
தர்மத்தை கடைபிடிக்கவில்லை. அதேபோல தர்மம் இந்த உலகத்தை காப்பாற்றவில்லை. தர்மம்-அதர்ம், பாவ-புண்ணியம் என்பதெல்லாம்
கிடையாது என்று கருதுகின்றார்கள்
அனீஶ்வரம் - இந்த உலகத்திற்கு
பகவான் தேவையில்லை. இறைவன் என்று யாரும்
கிடையாது என்றும் கருதுகிறார்கள்
காம ஹைதுகம் - ஆசைதான் அனைத்துக்கும் காரணமாக
இருக்கின்றது
கிம் அன்யத் - ஆசையைத் தவிர வேறென்ன இருக்கிறது!
அபர பர ஸம்பூதம்
- ஆண்-பெண் சேர்க்கையினால்தான் ஜீவராசிகள்
தோன்றிக் கொண்டு இருக்கின்றன. ஆசையை பூர்த்தி செய்வதற்கான செயல்களை செய்து அதை அடைகின்றார்கள். இவர்கள்
பிரத்யக்ஷ பிரமாணத்தை மட்டும்தான் பயன்படுத்துகிறார்கள்.
एतां दृष्टिमवष्टभ्य नष्टात्मानोऽम्पबुद्धयः ।
प्रभवन्त्युग्रकर्माणः क्षयाय जगतोऽहिताः ॥ १६-९ ॥
ஏதாம்
த்ருஷ்டியம் அவஷ்டப்4ய - மேற்கூறிய தவறான கருத்துக்களை
பின்பற்றுவதனால்
அல்ப புத்த்யஹ - அவர்களுடைய
கீழ்மையான புத்தியினால்
நஷ்டாத்மானஹ - அவர்கள் தங்களையே இழக்கின்றார்கள், இழப்பைத்தான்
அடைகிறார்கள்.
இவர்களுக்கு எது உண்மையானது, எவைகளையெல்லம்
இழக்கின்றோம் என்பதே தெரியாமல் இருக்கின்றார்கள்.
எது தர்மம், எது அதர்மம் என்பது
எல்லோருக்கும் தெரியும், இருந்தாலும் அதர்மத்தை செய்வதினால் என்ன இழப்பை
அடைகின்றோம் என்பதை யார் பார்க்கின்றார்களோ அவர்களுடைய மனம்தான் பக்குவமுடன்
இருக்கின்றது என்று அறிந்து கொள்ளலாம்.
உக்3ர கர்மாணஹ - கொடூரமான செயல்களில் ஈடுபடுபவர்கள், மற்றவர்களை
துன்புறுத்தும் செயலில் ஈடுபடுபவர்கள் எல்லாம் ஆசைவயப்பட்டவர்கள். இவர்கள் ஆசையை அடைவதற்கு தடையாக இருப்பதை கொடூரமாக உடைத்தெறிகிறார்கள்.
க்ஷயாய ப்ரபவந்தயஹ – இவர்கள் உலகத்தை
நாசம் செய்யும் செயல்களை செய்து கொண்டிருப்பவர்கள். உடலை அழிக்கும் விஷக்கிருமிகள் போல
உலகத்தினுடைய அழிவுக்கு காரணமாக இருக்கின்றார்கள்.
काममाश्रित्य दुष्पूरं दम्भमानमदान्विताः ।
मोहाद्गृहीत्वासद्ग्राहान्प्रवर्तन्तेऽशुचिव्रता ॥ १६-१० ॥
து3ஷ்பூரம் – நிறைக்க
முடியாத, எவ்வித த்திலும் பூர்த்தி செய்ய முடியாத, நிறைவேறாத
காம்ம் ஆஶ்ரித்ய – ஆசைகளை
உடையவர்களாக
த3ம்ப4மானம்
அதான்விதா; -
டம்பம், மானம், மதம், ஆடம்பரம், தற்பெருமை,திமிர் போன்ற
குணங்களுடன் கூடியவர்களாக இருப்பவர்கள்.
தம்பம் - தானம்
போன்ற நற்காரியங்கள் செய்கின்றேன் என்று வெளிக்காட்டிக் கொள்ளுதல்
மானம் - தன்னை உயர்வாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள்
மதம் - கர்வத்துடனும்,
திமிருடனும் இருப்பவர்கள்
அஸத்2க்4ராஹான் - தவறான
கருத்துக்களை, கொள்கைகளை
மோஹாத் - அறியாமையினால்
க்ருஹீத்வா - ஏற்றுக்கொண்டு, பற்றிக் கொண்டு
அஶுவ்ரதா - தூய்மையற்ற விரதங்களை,
செயல்களையே மேற்கொண்டு
ப்ரவர்தந்தே - நடந்து கொள்கிறார்கள்.
चिन्तमपरिमेयां च प्रलयान्तामुपाश्रिताः ।
कामोपभोगपरमा एतावदिति निश्चिताः ॥ १६-११ ॥
அபரிமேயாம் - எண்ணற்ற
சிந்தாம் - கவலைகள்,
புலம்பல்கள்
உபாஶ்ரிதா - உடையவர்களாக
ப்ரலயாந்தாம்- மரணகாலம் வரை
காம உப்போ4க ப்ரமாஹா – ஆசைகளை
பூர்த்தி செய்வதிலும், அதை அனுபவிப்பதிலும் நாட்டம் உடையவர்களாகவும்
ஏதாவத் இதி நிஶ்சிதாஹா - சுகமெல்லாம் இவ்வளவுதான் என்று தீர்மானம்
கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.
அர்த்தம், காமம் மட்டும்தான் இந்த உலகத்தில் இருக்கின்றது என்று நிச்சயித்து அதை நாடி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்
மரணகாலம் வரை அளவிடமுடியாத கவலைகளை உடையவர்களாக இருப்பார்கள். பொருட்களை அடைவதிலும், அதைக் காப்பாற்றுவதிலும் மனக் கவலையோடு இருப்பார்கள், மனத்துயரத்தோடு இருப்பார்கள்
आशापाशशतैर्बद्धाः कमक्रोधपरायणाः ।
ईहन्ते कामभोगार्थमन्यायेनार्थसञ्चयान् ॥ १६-१२ ॥
ஆஶா பாஶா ஶதை – எதிர்பார்ப்பு,
ஆசை என்கின்ற நூற்றுக்கணக்கான கயிறுகளால்
பத்தா4: - கட்டுண்டு
இருக்கின்றார்கள்
காம க்ரோத4 பராயணா - ஆசைக்கும், கோபத்திற்கும் பலியாகிவிடுகிறார்கள்
ஈஹந்தே
காமபோ4கா3ர்த2ம் – ஆசைபட்ட பொருட்களை
அனுபவிக்க முயற்சி செய்கிறார்கள்
அன்யாயேன - தர்மத்திற்கு முரணான வழியில், நியாயமில்லாத
வழியில்
அர்த ஸஞ்சயான் - செல்வம், முதலியவற்றை அடைவதிலேயே
ஈஹந்தே - முயற்சி செய்கிறார்கள்
इदमद्या मया लब्धामिमं प्राप्स्ये मनोरथम् ।
इदमस्तीदमपि मे भविष्यति पुनर्धनम् ॥ १६-१३ ॥
இதம் அத்3யா மய லப்3தா4ம் - இன்று என்னால் இவ்வளவு அடையப்பட்டு விட்டது
இம்ம் ப்ராப்ஸயே மனோரதம் – மேலும் இந்த
விருப்பத்தையும் அடைவேன்
இதம் அஸ்தி - இவ்வளவு செல்வம் உள்ளது
இதம் அபிமே பவிஷ்யதி புனர்த4னம் - மேலும் இவ்வளவு செல்வத்தை அடைவேன் என்று செயல்பட்டுக் கொண்டிருகின்றனர்.
असौ मया हतः शत्रुर्हनिष्ये चापरानपि ।
ईश्चरोऽहमहं भोगी सिद्धोऽहं बलवान्सुखी ॥ १६-१४ ॥
அஸௌ மயா ஹத: ஶத்ரு - இந்த பகைவன் என்னால் கொல்லப்பட்டான்
அனிஷ்யே ச அபரானபி - மேலும் மற்றவர்களையும் நான் கொல்வேன்
ஈஶ்வர: அஹம் – நானே ஈஸ்வரனாக
இருக்கின்றேன். நான்தான் தலைவனாக இருக்கின்றேன்.
எல்லோரையும் ஆள்பவனாக இருக்கின்றேன்.
அஹம் போகீ - நான் சுகத்தையும், போகத்தையும் அனுபவிப்பனாக
இருக்கின்றேண்.
அஹம் ஸித்த4: - எல்லா சித்திகளையும் அடைந்தவன், வாழ்க்கையில்
அடைய வேண்டியதெல்லாம் அடைந்து விட்டேன்.
பலவான் ஸுகி- வலிமை மிக்கவனாகவும், சுகத்தை உடையவனாகவும், உடல் ஆரோக்கியத்துடனும்
இருக்கின்றேன்.
आढ्योऽभिजनवानस्मि कोऽन्योऽस्ति शदृशो मया ।
यक्ष्ये दास्यामि मोदिष्य इत्यज्ञानविमोहिताः ॥ १६-१५ ॥
ஆட்யா - நான் செல்வந்தன் என்ற செருக்கோடு இருப்பார்கள்
அபி ஜனவான் அஸ்மி - நான் உயர்ந்த குலத்தில் பிறந்திருக்கின்றேன்
ஶத்ருஶ: மயா - எனக்கு நிகராக
கஹ அன்யஹ அஸ்தி – வேறு யாரொருவன்
இருக்கின்றான்.
யக்ஷ்யே - யாகங்களை செய்பவன், (இதிலிருந்து அறிந்து கொள்வது
யாகங்களை செய்பவனாக மட்டும் இருந்தாலும் கூட உயர்ந்தவனாக கருதிக் கொள்ளக்
கூடாது. பலனைக் கருதி செய்வதுதான் யாகம்,
அதை சரியாக செய்யவில்லையென்றால் பாவத்தை பலனாக அடையலாம்)
தாஸ்யாமி - தானங்களையெல்லாம் செய்வேன். ( தகுதியில்லாகவர்களுக்கு செல்வத்தையும்,
பொருட்களைக் கொடுத்தல் தானம் என்று கருதக்கூடாது)
மோதிஷ்ய – எப்படி வேண்டுமானாலும் சந்தோஷமாக இருப்பேன்
இதி அக்ஞான விமோஹிதா:: - இவ்வாறு
அறியாமையின் வசத்தில் வீழ்ந்து இருக்கிறார்கள்.
अने कचित्तविभ्रान्ता मोहजालसमावृताः ।
प्रसक्ताः कामभोगेषु पतन्ति नरकेऽशुचौ ॥ १६-१६ ॥
- விதவிதமான
எண்ணங்களினால் மோகத்தை அடைந்திருக்கிறார்கள்
- மோகம்
(அறியாமை) என்ற வலையினால் மூடப்பட்டிருக்கிறார்கள்
- இன்பம்
தரும் பொருட்களுக்கு அடிமையாகி இருக்கின்றார்கள்
- இறுதியில் துயரத்தைக் கொடுக்கக் கூடிய நரகத்தில்தான் வீழ்வார்கள்
आत्मसम्भाविताः स्तब्धा धनमानमदान्विताः ।
यजन्ते नामयज्ञैस्ते दम्भेनाविधिपूर्वकम् ॥ १६-१७ ॥
ஆத்ம ஸம்பா4விதா: - அசுரர்கள் தன்னைத்தானே புகழ்ந்து
கொண்டிருப்பார்கள்
ஸ்தப்3தா4 - வளைந்து
கொடுக்காமல் இருப்பார்கள், பணிவற்றவர்கள், தான் கொண்ட கருத்தில் பிடிவாதமாக
இருப்பவர்கள்
த4ன - அடைந்த பொருட்களினாலும், புகழினாலும் கர்வம்
கொண்டவர்கள்
மான - தன்னை
உயர்ந்தவனாக கருதிக் கொண்டிருப்பவர்கள்
மதம் - மற்றவர்களுக்கு
மதிப்பு, மரியாதை கொடுக்க மாட்டார்கள்
அன்விதா - இத்தகைய குணங்களை
உடையவர்களாக இருப்பார்கள்.
இவர்களும் யாகங்களும், பூஜைகளும் பெயரளவில்
செய்து கொண்டிருப்பார்கள். தன்னுடைய பெருமையை காட்டிக் கொள்வதற்காக யாகத்தை
செய்வார்கள், முறையில்லாமல் செய்து கொண்டிருப்பார்கள்
अहंकारं बलं दर्पं कामं क्रोधं च संश्रिताः ।
ममत्मपरदेहेषु प्रद्विषन्तोऽभ्यसूयकाः ॥ १६-१८ ॥
அகங்காரத்தையுடையவர்களாக இருப்பார்கள். வலிமையான கர்வம், ஆசை, கோபம்
போன்ற தீய குணங்களுடன் கூடியிருப்பவர்கள்.
அப்4யஸுயகா: -
நல்லவர்களிடம், ஆன்மீகத்தில் உள்ளவர்களிடம் குறை காண்பார்கள்.
மாம் ப்ரத்விஷந்தஹ – இறைவனையே வெறுப்பவர்கள்
ஆத்ம பரதே3ஹேஷு - எல்லோருடைய உடலுக்குள்ளும்
இருக்கின்ற பகவானையே வெறுக்கின்றார்கள்.
பகவானுடைய உபதேசங்களை கேட்காமல் இருத்தலே அவரை
வெறுத்தலுக்கு சமமாக கருதப்படுகின்றது.
तानहं द्विषतः क्रुरान्संसारेषु नराधमान् ।
क्षिपाम्यजस्रमशुभानासुरीष्वेव योनिषु ॥ १६-१९ ॥
ஆஸுரிஷ்வேவ யோனிஷு - நான் அவர்களை அசுர பிறவியிலேயே தள்ளுகிறேன். விலங்கு போன்ற பிறவிகளை அடைய செய்கின்றேன்.
தான் த்3விஷத: - உலகிலுள்ள அனைவரையும் வெறுப்பவர்கள். சன்மார்க்கத்தில் இருப்பவர்களை, நல்லவர்களை
வெறுப்பார்கள். பெரியோர்களின் அறிவுரையையும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
க்ரூரான் - ஹிம்சை செய்பவர்கள், இரக்கமற்றவர்கள்
ஸம்ஸாரேஷு – சம்சாரத்தில் இருக்கின்ற
அசுரர்கள்
நர அத4மான் –
மனிதர்களுக்குள் கீழானவர்கள்
அஶுபா4ன் – நன்மையெதுவும் செய்யாதவர்கள்
க்ஷிபாம் அஜஸ்ரம் – இத்தகையோர் மீண்டும் மீண்டும்
கீழான நிலைக்கு தள்ளப்படுவார்கள்
आसुरीं योनिमापन्ना मूढा जन्मनि जज्मनि ।
ममप्रप्यैव कौन्तेय ततो यान्त्यधमां गतिम् ॥ १६-२० ॥
ஹே அர்ஜுனா! அசுர ஜன்மத்தை அடைந்தவர்களாகவும்,
மூடர்களாகவும் இருப்பவர்கள் ஒவ்வொரு ஜன்மத்திலும் என்னை அடையாகலேயே, என்னை அடைவதற்குரிய
சாதனங்களை அடையாமலே கீழான நிலையையே அடைகிறார்கள். மனித ஜன்மத்தை நன்கு
பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மீண்டும்
பிறவாத நிலையை அடையச் செய்கின்ற பிரம்மஞானத்தை அடைவதற்குகந்த மனிதப்பிறவி என்பதை
குறிப்பால் பகவான் உணர்த்துகின்றார்.
त्रिविधं नरकस्येदं द्वारं नशनमात्मनः ।
कामः क्रोधस्तथा लोभस्तस्मादेतत्त्रयं त्यजेत् ॥ १६-२१ ॥
எல்லா அசுர குணங்களும் மூன்று முக்கியமான
குணத்திலிருந்து தோன்றுபவைகள். இந்த
மூன்றும் நரகத்திற்கு செல்கின்ற பாதையாகும்.
தன்னுடைய அழிவையே தானே தேடிக் கொள்வதற்கும் இந்த மூன்றும் காரணமாக
இருக்கின்றன. அவைகள் ஆசை, கோபம், லோபம்
(பகிர்ந்து கொள்ளாத குணம்), ஆகவே இந்த மூன்றையும் நம்மிடமிருந்து நீக்கிக் கொள்ள
வேண்டும்.
एतैर्विमुक्तः कौन्तेय जमोद्वारैस्त्रिभिर्नरः ।
आचरत्यात्मनः श्रेयस्ततो याति परां गतिम् ॥ १६-२२ ॥
ஹே அர்ஜுனா! நரகத்திற்கு கொண்டு சேர்க்கின்ற இந்த
மூன்று குணங்களிலிருந்து விடுதலையடைந்த மனிதன் தனக்கு நன்மையை செய்து கொள்கிறான்.
பிறகு மேலான நிலையை அடைகின்றான்.
यः शस्त्रविधिमुत्सृज्य वर्तते कामकारतः ।
न स सिद्धिमवाप्नोति न सुखं न परां गतिम् ॥ १६-२३ ॥
எவனொருவன் சாஸ்திரம் உரைக்கும் உபதேசத்தை
விட்டு விடுகின்றானோ, ஆசையின் வசப்பட்டு
இருக்கின்றானோ அவன் மனத்தூய்மையை அடைய மாட்டான். மனித சரீரத்தினால் அனுபவிக்கும் சுகத்தை
அடையமாட்டான். மோட்சமும் கிடைக்காமல்
சம்சாரத்திலேயே இருப்பான். ஆகவே அசுர
சம்பத்தை தியாகம் செய்யவில்லையென்றால் மேற்கூறியவைகளை அனுபவிக்க வேண்டியதாக இருக்கும்.
तस्माचछास्त्रं प्रमाणं ते कार्याकार्यव्यवस्थितौ ।
ज्ञात्वा शास्त्रविधानोक्तं कर्म कर्तुमिहार्हसि ॥ १६-२४ ॥
ஆகவே, அர்ஜுனா! உனக்கு சாஸ்திரம் அறிவை
அடைய உதவும் கருவியாக இருக்கிறது. எது செய்ய வேண்டும், எது செய்யக்கூடாது என்ற விஷயத்தில்
சாஸ்திரம்தான் வழிகாட்டி. எனவே ஆசையில் வீழ்ந்து விடாதே. ஆசைக் காட்டும் பாதையில் செல்லாதே என்று அறிவுறுத்துகின்றார். சாஸ்திரத்தில் கூறப்பட்ட விதியை, நெறிமுறைகளை
அறிந்து செயலை செய்ய கடமைபட்டவனாக இருக்கின்றாய். சாஸ்திரம் சொற்படி நட என்று சொல்லும்போது அதன்
மீடு முழு நம்பிக்கை (சிரத்தை) வைக்க வேண்டும் என்று குறிப்பால் உணர்த்துகின்றார்.
தொகுப்புரை
இந்த அத்தியாயத்தில் நற்பண்புகளைப் பற்றியும்,
அசுர சம்பத் உடையவர்களுடைய கொள்கைகளையும், விவரித்துள்ளார். நற்பண்புகள் இருந்தால்தான் மனிதலோக இன்பத்தை
முழுமையாக அனுபவிக்க முடியும். இந்த
சுகத்தை தியாகம் செய்தால் மோட்சத்திற்கு தகுதி பெறுவோம். ஞானநிஷ்டைக்கும் இவைகள் உதவி செய்யும்.
01-03 இதில்
26 நற்பண்புகளை பகவான் கூறியிருக்கின்றார்
04 அசுர
குணத்தின் சாரத்தைக் கூறியிருக்கிறார்
05 இரண்டு
பண்புகளின் விளைவுகளையும் கூறியிருக்கிறார்.
06-21 அசுர குணங்களை விளக்கியுள்ளார். பொதுவாக தீய குணங்கள் தானாகவே நம்மை
வந்தடையும். எனவே அவைகளை நாம் எச்சரிக்கையோடு இருந்து அவைகள் நம்மிடம்
வந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏற்கனவே இருந்தால் முயற்சி செய்து
நீக்கிக் கொள்ள வேண்டும். இல்லாமிருந்தால்
வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. அக்ஞானம் – தர்ம அதர்மத்தை பற்றிய
அறியாமை
2. மோஹம் – மன மயக்கம் – அதர்மத்தை தர்மமாகவும்,
தர்மத்தை அதர்ம மாகவும் எண்ணுதல்
3. ஹிம்ஸா – பிற உயிர்களை துன்புறுத்துதல்
4. அக-புறத்தூய்மை இல்லாமலிருத்தல்,
சுற்றுப்புற சூழ்நிலைகளையும் அசுத்தமாக வைத்திருத்தல்
5. அனாசாரம் – ஆசாரமில்லாமல் இருத்தல்,
பண்பாடற்றவர்களாகவும், நன்னடத்தையற்றவராகவும் இருத்தல்
6. அஸத்யம் – பொய்யே பேசிக்
கொண்டிருப்பவர்கள்
7. அனீஶ்வரம் – இறைவன் என்பவரே கிடையாது
என்று எண்ணுபவர்கள்
8. ஆசை – தர்மத்திற்கு புறம்பாக இருக்கும்
ஆசை, பேராசை, பிறர் சொத்தை அபகரிக்கும் ஆசை, அதர்மமான வழியில் எல்லாவற்றையும் அடையவிரும்பும்
ஆசை
9. கோபம் – கோபத்தின் விளைவாக பிறருக்கு
ஹிம்ஸை செய்தல்
10. லோபம் – கஞ்சத்தனம், தான் மட்டும்
அனுபவிக்க வேண்டும் என்றாசை
11. சிந்தா பரத்வம் – எப்பொழுதும் மனதில்
துயரப்பட்டு கொண்டிருத்தல்
12. மானித்வம் – கர்வம், தன்னை உயர்வாக
எண்ணிக் கொள்ளுதல்
13. தம்பித்வம் – தன்னை உயர்வாக, பகட்டாக
காட்டிக் கொள்ளுதல்
14. ஆத்மஸ்துதி – தன்னையே புகழ்ந்து
கொள்ளுதல்
22 அசுர குணங்களை நீக்கிவிடுவதால் கிடைக்கும்
பலன்கள் கூறப்பட்டுள்ளது.
23. அசுர குணங்களை வைத்திருந்தால் கிடைக்கும்
பலன்களை கூறப்பட்டுள்ளது மனத்தூய்மை இல்லாமை , மோட்சநிலை அடைய முடியாத நிலை , மன
அமைதி இல்லாதிருத்தல்
24. சாஸ்திரம்தான் அறிவைக் கொடுக்கும் கருவியாக
இருக்கின்றது. எனவே அது கூறியபடி நடந்து கொள்ள வேண்டும் என்று
பகவான் வலியுறுக்கியிருக்கின்றார்.
ஓம் தத் ஸத்