அத்தியாயம்-6
தியான யோகம்
ஸ்வாமி
குருபரானந்தாவின் உபதேச விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது-11-02-2022
முகவுரை:
தியானம் என்பது ஒருவிதமான சாதனம். இது பிரதானமாக
மனதினால் செய்யப்படுவது. மனதிலிருக்கும் பயம், கோபம், தாபம், பாதுகாப்பின்மையால் அனுபவிக்கும் நிறைவின்மையே
சம்சாரம். இதற்கு நம்மிடத்தே இருக்கும்
அறியாமைதான் காரணம் என்று உணர வேண்டும். இந்த அறியாமையை ஆத்ம ஞானத்தினால்தான் போக்கிக் கொள்ள முடியும்., இருளை நீக்க ஒளி தேவைப்படுவது
போல அறியாமை என்ற இருளை போக்க ஆத்மஞானம் என்ற ஒளி தேவைப்படுகிறது. இந்த ஞானத்தை அடைய உதவும் பிரமானத்தை நாம் நாட
வேண்டும். ஆத்மஞானத்தை தரக்கூடிய சாதனம்
உபநிஷத் என்று வேதாந்தம் கூறுகிறது.
மோட்சம் என்ற லட்சியத்தை அடைவதற்கு தியானத்தின்
பங்கு என்ன? தியானத்தால் ஞானத்தை அடைய முடியாது. ஆனால் தியானம் நம்மை இந்த ஞானத்தை அடைவதற்கு
தயார்படுத்துகின்றது. அடைந்த ஞானத்தில்
நிலை பெறுவதற்கும் பயன்படுகிறது. நம்மை
தகுதிபடுத்துவதற்காக செய்யப்படுகின்ற தியானமே உபாஸனம் என்று அழைப்பர். ஞானநிஷ்டைக்கு செய்யப்படுவது நிதித்யாஸனம்
என்று கூறுவர்.
உபாஸனம்
தியானம் ஞானம் அடைவதற்காக
செய்யப்படுவதில்லை. சித்திகளை பெறுவதற்கு
தியானம் செய்யக்கூடாது. தியானம் செய்யும்போது சில புது அனுபவங்கள் வந்தாலும் அதை
விட்டுவிட வேண்டும். உடல்
ஆரோக்கியத்திற்காகவும், வேறு பலன்களை அடைவதற்காகவும் தியானம் செய்யக்கூடாது.
நம்முடைய மனதில் பலவிதமான பலவீனங்கள்
இருப்பதால் உபாஸனையும் நான்கு விதமாக பிரித்து செய்யப்படுகின்றது. இவைகளை நன்கு
செய்துவிட்டால் நாம் சிரவணத்திற்கு தகுதியடைந்து விடுவோம்.
முதல்நிலை தியானம் – (மனதை
அமைதிப்படுத்தும் தியானம்)
முதல் மூன்று மாதங்கள் உடலை செயலற்று
குறிப்பிட்ட நேரம் அமர்ந்து பழக வேண்டும். அப்போது உடலில் எந்தவிதமான அசைவும் இருக்கக்கூடாது. புலன்களை அமைதிப்படுத்தி பழக வேண்டும், பிராணனை சமப்படுத்தி பழக வேண்டும். உள்மூச்சு,
வெளிமூச்சு இவையிரண்டும் சமமாகவும், மென்மையாகவும் இருக்க வேணடும்.
மனம் இரண்டுவிதமாக செயல்பட்டுக்
கொண்டிருக்கின்றது. கர்த்தாவாகவும், கரணமாகவும் இருக்கின்றது. மனதை நாம் எப்போதும் கர்த்தாவாக பயன்படுத்தி
வந்திருக்கின்றோம். நம்முடைய மனதை நாமே பார்த்து பழக வேண்டும். அப்போது மனம் கரணமாக செயல்படுகின்றது.
இறுதியில் நாம் பார்க்கும் பொருளாக மனதை மாற்ற வேண்டும். இதுதான் இந்த தியானத்தின் முடிவாகும்.. நாமே இரண்டாக
பிரிந்து மனதால் மனதை பார்த்து பழக வேண்டும். மூக்குகண்ணாடி வழியே பொருட்களை
பார்க்கும் போது மூக்குக் கண்ணாடியை விட்டுவிடுவோம். அதுபோல மனதின் வழியே உலகத்தை
பார்க்கும் போது மனதை பார்ப்பதில்லை.
நம் மனதில் ஓடும் எண்ணங்களை வேடிக்கை பார்க்க
வேண்டும். நதியோரத்தில் அமர்ந்து கொண்டு நீரோட்டத்தை பார்த்துக் கொண்டிருப்பது போல
மனதில் ஒடும் எண்ணங்களை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். எப்படிபட்ட எண்ணங்கள் இருந்தாலும் அதனால்
பாதிக்கப்படாமல் சாட்சியாக பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.
இந்த நிலையில் மனம் நமக்கு முதலில்
அறிமுகமாகின்றது பிறகு அதுவே அமைதியாகின்றது.
புத்தியின் வேலை சிந்திப்பது, திட்டமிடுவது, முடிவெடுப்பது, ஆராய்ந்து
அறிவது. புத்திக்கு சில கட்டளைகள் கொடுக்க
வேண்டும். ஏ புத்தியே! உன்னுடைய வேலைகளை சிறிது நேரம் நிறுத்தி வைத்திரு என்று
கட்டளையிட வேண்டும். தியானம் செய்யும் இந்த நேரம் ஓய்வு நேரம் என்று கூறி புத்தியை
அமைதிப்படுத்த வேண்டும்.
இந்த தியானத்தை வெற்றிகரமாக செய்து
முடித்தால்தான் மேற்கொண்டு தொடர முடியும்.
இதற்காக ஓராண்டு போனாலும் அதற்காக கவலைப்படாமல் முயற்சியை தொடர வேண்டும்.
தியானத்தில் அமர்ந்தவுடன் எல்லாமும் அமைதியுடன் இருக்க வேண்டும். இப்போதுதான் தியானத்திற்கு தயாராகின்றோம்.
இரண்டால் நிலை தியானம் ( மனதை
ஒருமுகப்படுத்தும் தியானம் )
நாம் எதைக் குறித்து தியானிக்க
விரும்புகின்றோமோ அதிலேயே மனதை குவித்தல். மனதிற்கு நாம் ஒரு வேலையை கொடுத்தால்
அதைத்தவிர வேறெதையும் சிந்திக்காமல் பழக்க வேண்டும். நாம் எந்த நேரத்தில் எதை நினைப்போம் என்று
நமக்கே தெரியாது. அடுத்த நிமிடத்தில்
எதைப்பற்றி மனம் நினைக்கும் என்று நமக்கே தெரியாது. இந்த தியானத்தில் ஓம் நமோ
நாராயணா என்ற மந்திரத்தையோ, அல்லது ஓம் நமசிவாய என்ற மந்திரத்தையோ உச்சரித்துக் கொண்டு
நாராயண பகவானை அல்லது சிவபெருமானை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று மனதிற்கு
கட்டளையிட வேண்டும். முதலில் ஒவ்வொரு ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரத்திற்குஇடையில் வேறு பல
எண்ணங்கள் வந்து போகும் இந்த நிலையிலிருந்து ஒவ்வொரு எண்ணமும் ஓம் நமோ நாராயணாய
என்றே இருக்க வேண்டும் என்ற நிலைக்கு மனதை கொண்டு வர வேண்டும். இப்படி செய்வதனால்
மனதிற்கு சக்தி பெருகும். அஷ்டமஹா சக்திகளும் வரலாம், மனமும் ஒருமுகப்படும்.
செய்யும் முறை
- மனதளவில்
பூஜையை செய்து பழக வேண்டும், ஒரு பெரிய செயலை செய்ய வைத்து பழக்க வேண்டும்.
- மானஸ
பாராயணம் – ஏதாவது ஸ்லோகங்களை பாரயாணம் செய்து கொண்டிருக்க வேண்டும்
- மானஸ ஜபம் –
ஏதாவது ஒரு மந்திரத்தையே சொல்லிக் கொண்டிருத்தல்
இந்த நேரத்தில் பகவான் திருநாமம் மட்டும்தான்
தாரணையாக மனதில் ஓடிக் கொண்டிருக்க வேண்டும். இதை வாழ்நாள் முழுவதும் 10-15
நிமிடமாவது செய்து கொண்டிருக்க வேண்டும்.
மூன்றாவது நிலை தியானம் ( மனதை விரிவுபடுத்தும் தியானம் )
இது சாஸ்திரத்தின் துணைக்கொண்டு செய்யப்படுகின்ற
தியானம். இதனால் நம்முடைய அகங்காரமானது விரிந்து விடும். எல்லா ஜீவராசிகளையும் தானாக பார்க்கும்
அளவுக்கு மனம் விரிவடைய வேண்டும். அனைத்து
ஜீவராசிகளும் ஈஸ்வரனிடமிருந்து தோன்றிய காரியங்கள் என்ற அடிப்படையில் அனைத்திலும்
ஈஸ்வரனையே பார்க்கும் அளவுக்கு, ஈஸ்வரனாகவே பாவிக்கும் அளவுக்கு மனம் விரிவடையும்.
உதாரணமாக ஸர்வம் இதம் பிரஹ்மன், தஸ்மாத்3 தத்ஜலாந்தி ஶாந்தஹ என்ற
சாந்தோக்ய உபநிஷத் வாக்கியத்தின்படி உலகத்தின் மீதுள்ள விருப்பு-வெறுப்புக்களை
நீக்கி, அனைத்தையும் ஈஸ்வர ஸ்வரூபமாக தியானிக்க வேண்டும். இதுபோன்ற வெவ்வேறு உபாஸனைகள் உபநிஷத்தில்
உள்ளது இவைகளை பின்பற்றுவதன் மூலம் மனம் நன்கு விரிவடைந்து உடலை ஆரோக்கியமாக
வைத்திருக்க உதவும்.
நான்காவது நிலை
தியானம் ( நல்ல பண்புகள தியானித்தல் )
என்னென்ன நற்பண்புகள் நம்மிடையே இருந்தால்
வேதாந்த கருத்துக்களை சிந்திக்க முடியும் என்று சாஸ்திரமும், நீதிநூல்களும்
சொல்லியிருக்கின்றதோ அவைகளை அடைவதற்கு தியானம் செய்ய வேண்டும். பொய்
சொல்வதனால் நமக்கு பலன் கிடைக்கும் என்ற சூழ்நிலையிலும் உண்மை பேசாமல் பொய் சொல்லி
பலனை அடைவார்கள். தர்ம-அதர்ம அறிவானது நம்
வாழ்க்கையை வழி நடத்துகிறது. அதன் மீது
வைத்திருக்கும் மதிப்பைப் பொறுத்துதான் நமது பண்புகளை கடைபிடிக்க உதவும். தர்ம சாஸ்திரம் பண்புகளை மட்டும் போதிக்கவில்லை,
அதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற அறிவையும்
போதிக்கின்றது. நற்குணத்தை
கடைப்பிடிப்பதால் வரும் கஷ்டங்களை பொறுத்துக்கொண்டு அதை விடாமல் கடைப்பிடிக்க
வேண்டும். அதனால் மனதில் அளவற்ற மகிழ்ச்சி கிடைக்கும். இந்த மகிழ்ச்சியை
அனுபவித்து விட்டால் அதிலிருந்து விலக மாட்டோம். அவைகள் சுபாவமாகவே மாறிவிடும்.
இந்த தியானத்தில் ஒவ்வொரு நற்பண்பாக
எடுத்துக்கொண்டு அதன் பலனை தியானம் செய்ய வேண்டும். இந்த நற்பண்புகளை கடைப்பிடித்து வாழ்ந்த
மகான்கள் வாழ்க்கை முறையை தியானித்து பழக வேண்டும். இந்த நற்பண்புகள்தான் ஒருவனின்
வாழ்க்கை தரத்தை நிர்ணயிக்கும்.
இதேப்போன்று தீய குணமொன்றை நீக்குவதற்கு அதற்கெதிரான நல்ல குணத்தை
எடுத்துக் கொண்டு அதன் பலனை தியானித்து அந்த தீய குணத்தை நீக்கிவிடலாம்.
இந்த நான்கு தியானத்தை வெற்றிகரமாக செய்து
முடிப்பதனால், வேதாந்த உபதேசம் நமக்கு நன்கு புரியும். மோட்சத்தை அடைவதற்கு தகுதியை கொடுக்கும். பிறகு குருவை நாடி வேதாந்த உபதேசம்
பெறவேண்டும். இதுவே சிரவணம் என்று அழைக்கப்படுகிறது. பிறகு சிரவணத்தில் வரும் சந்தேகத்தை நீக்கும் சாதனம்
மனனம். சந்தேகமில்லாத ஞானத்தை அடைந்த பின்னர் செய்ய வேண்டிய தியானம் நிதிதித்யாஸனம்
நிதித்யாஸன விசாரம்
ஆத்ம ஞானத்தை அடைந்த பின்னர் செய்ய வேண்டிய தியானம்
நிதித்யாஸனமாகும். நம்முடைய மனதில் இரண்டு வகையான குறைகள் இருக்கின்றன. அவைகள் 1.
அஸுத்தி (மலம்), 2. அறியாமை. மனதிலுள்ள
அழுக்குகளான ராக-துவேஷங்களால் மனம் சஞ்சலமடைந்து கொண்டிருக்கிறது. இந்த தோஷத்தை அதற்குரிய சாதனம் மூலம் நீக்கி
கொள்ள முடியும். ஆனால் அறியாமையை அறிவைக்
கொண்டுதான் நீக்க வேண்டும். ஆத்மாவைப்
பற்றிய அறியாமை எல்லா ஜீவராசிகளிடையும் பிறக்கும் போதே இருக்கின்றது. இதை நீக்கும் பிரமாணமான உபநிஷத்தை நாட
வேண்டும். இதையும் குருமுகமாகத்தான்
கேட்டு அறிவை அடைய வேண்டும். இதுவே சிரவணம் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் நம்மைப்பற்றிய புதிய அறிவை
அடைவோம். இதனால் அறியாமை நீங்குகின்றது.
ஆனால் சில சந்தேகங்கள் வரலாம், அவைகளை மனனம் என்ற சாதனம் மூலம் போக்கிக் கொண்டு சந்தேகமற்ற அறிவை
அடைய வேண்டும்.
நான் உடல், மனம் இவைகளுக்கு அப்பாற்பட்டவன், இவைகளை
பிரகாசிக்கின்ற அறிவு ஸ்வரூபம், என்றும் இருப்பவன் என்ற தெளிவான அறிவை அடைய
வேண்டும். என்னைத் தவிர மற்ற அனைத்தும் (உடல், மனம், ஜகத் ) மித்யா, வெறும்
தோற்றமே என்ற திடமான அறிவு ஏற்படும்.
இதனால் என்றென்றும் மனநிறைவுடன் இருப்போம். எந்த சூழ்நிலையிலும் சுகமோ, துக்கமோ, பயமோ
அடையமாட்டோம். இந்த நிலையிலும் அவனுக்கு ஒரு தடை இருக்கின்றது. இந்த ஞானத்தில் நிலையாக இருக்க முடிவதில்லை. உடலையும், மனதையும் வைத்துக் கொண்டு இந்த அறிவை
அடைந்திருக்கின்றோம். அனாத்மாக்களோடு விவகாரம் செய்ய வேண்டியிருப்பதால் இந்த
அறிவிலிருந்து நழுவி விடுகின்றான். மீண்டும் சம்சார சக்கரத்தில் மாட்டிக்
கொள்கிறான். இந்த நிலையில்தான் நாம்
அடைந்த அறிவில் நிலைப்பெறுவதற்கு நிதித்யாஸனம் என்கின்ற தியான சாதனத்தை பயன்படுத்த
வேண்டும்.
இந்த தியானத்தில் எந்த அறிவை அடைந்தோமோ அதில் இருந்து
பழகுதல். இது இரண்டுவகையானது. அவைகள்,
- ஞானத்தை அடைந்தும் மீண்டும் சிரவணத்தை தொடர்ந்தால் அது நிதித்யாசனமாக கருதப்படுகின்றது. ஒவ்வொரு தீய சூழ்நிலைகளிலும் நாம் அறிவை பயன்படுத்த தயாராகுதல்.
- இது உபாஸனம் போன்று சில நியமங்களைப் பயன்படுத்தி ஓரிடத்தில் அமர்ந்து ஆத்ம ஸ்வரூபத்தை தியானித்தல். ஒவ்வொருவருக்கும் அவரது மனதில் சில பலவீனங்கள் இருக்கலாம், பாதிப்புக்கள் இருக்கலாம். இந்த பாதிப்பை நீக்குவதற்கு தனி முயற்சி செய்ய வேண்டும். இந்தப் பாதிப்பிலிருந்து நீங்கிட வேண்டும்.
உபாஸனைக்கும், நிதித்யாஸனத்திற்கும் உள்ள வேற்றுமைகள்:
உபாஸனம்
|
நிதித்யாஸனம்
|
|
1
|
காலம், இடம் போன்ற
விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
|
விதிகளை பின்பற்றலாம்
ஆனால் கட்டாயமில்லை.
|
2
|
விஷயமாக இருப்பது, சகுண
பிரம்மன் (மாயையுடன் கூடிய பிரம்மன் )
|
விஷயமாக இருப்பது நிர்குண பிரம்மன் (ஜகத்
மித்யா, பிரம்ம சத்யம்)
|
3
|
உபாஸகன் அக்ஞானி, ஆத்ம
தத்துவத்தை அறியாதவன் செய்யும் தியானம்
|
ஆத்ம ஞானி, ஆத்ம ஞானத்தை
அடைந்தவன் செய்யும் தியானம்
|
4
|
பலன்கள் இரண்டு.
1. சகாம பலன் ( லௌகீக
நன்மைக்காக, வசதிக்காக, செல்வத்தை அடைதல்) அஷ்டமகா சித்திகளை அடைதல்
2. நிஷ்காம பலன் –
ஞானயோகத்திற்கு தகுதி அடைகின்றான்
|
ஞான நிஷ்டை அடைதல், ஜீவன்
முக்தி அடைதல்
|
இந்த அத்தியாயத்தில் நிதித்யாஸன தியானத்தைப்பற்றி
உபதேசிக்கின்றார். இந்த தியானம் செய்வதற்கு
தேவையான விதிமுறைகளையும் கூறியுள்ளார். இதற்கு கருவியாக இருப்பது மனம்தான். இந்த
நிலைக்கு மனம் வருவதற்கு பல சாதனங்களை கடைப்பிடித்து இருக்க வேண்டும்.
பதஞ்சலி முனிவர் தியானம் என்ற சாதனம்
செய்வதற்கே பல படிகளை யோக சூத்திரத்தில் கூறியிருக்கின்றார். இதை அஷ்டாங்க யோகம் என்று பெயர்.
- யமம் – அஹிம்ஸா, ஸத்யம், அஸ்தேயம்,
பிரம்மச்சர்யம், அபரிக்ரஹம்
- நியமம் – தூய்மை, சந்தோஷம், தவம், ஸ்வாத்யாயம், ஈஸ்வர பிரணிதானம்.
இவையிரண்டும் நம் உடலிலிருந்து வெளிப்படும் செயல்களை முறைப்படுத்தல்
- ஆஸனம் –
உடலுக்கான பயிற்சிகள், அன்னமய கோசத்தை நன்றாக வைத்திருக்கும்
- பிராணாயமம் –
பிராணனை ஒழுங்குபடுத்துதல், மூச்சுக்காற்றை முறைபடுத்துதல்
- ப்ரத்யாஹாரம்
– ஞானேந்திரிய ஒழுக்கம், நல்ல விஷயங்களை மனதுக்கு கொடுத்தல்
- தாரணா –
மனதை நல்ல விஷயத்தில் பொருத்தி வைத்தல்
- தியானம் –
நாம் எந்த ஒன்றை தியானத்திற்கு எடுத்துக் கொண்டிருக்கிறோமோ அதில் சென்று,
சென்று திரும்பும். சஜாதீய விருத்தி –
ஒரே விதமான எண்ணங்கள், விஜாதீய விருத்தி - விபரீத எண்ணங்கள்
- சமாதி –
தியானத்தினுடைய முடிவு, மன அமைதியை அடைதல், இதுவே சமாதி நிலையாகும். இதுவே
நிதித்யாஸத்திற்கு அங்கமாக இருக்கின்றது
श्रीभगवानुवाच ।
अनाश्रितः कर्मफलं कार्यं कर्म करोति यः ।
स संन्यासी च योगी च न निरग्निर्न चाक्रियः ॥ 1 ॥
தியானம் என்ற சாதனத்தை மேற்கொள்வதற்கு முன்
நாம் செய்ய வேண்டிய சாதனங்கள் பகிரங்க சாதனம், அந்தரங்க சாதனம்
ஆதியவைகளாகும். நம் வாழ்க்கையை எப்படி வாழ
வேண்டும் என்று விளக்குவதே பகிரங்க சாதனமாகும். தியானம் செய்வதற்கு முன் செய்ய
வேண்டிய ஏற்பாடுகளான இடம், ஆஸனம் இவையிரண்டையும் இந்த அத்தியாயத்தில்
விளக்கியிருக்கிறார். பிறகு தியான ஸ்வரூபத்தையும், பலனையும் கூறியிருக்கிறார்.
முதல் பகிரங்க சாதனமாக கர்மயோகத்தின் பெருமையை
இந்த ஸ்லோகத்தில் கூறுகிறார். இதில்
கர்மயோகியை சந்நியாசிக்கு நிகராக கூறியிருக்கிறார். மனதை அமைதிபடுத்தும் யோகிக்கு நிகராகவும்
கூறியிருக்கிறார்.
ஶ்ரீபகவான் கூறுகிறார்.
அனாஶ்ரித கர்ம பலம் – கர்மத்தில்
பலனை சார்ந்திருக்காமல் பலனில் பற்றில்லாமல்
கார்யம் கர்ம – செய்யப்பட
வேண்டிய செயல்களை, நம்முடைய கடமைகளை
யஹ கரோதி – எவனொருவன்
செய்கின்றானோ
ஸஹ ஸந்நியாஸீ – அவன்தான்
சந்நியாசி (ஞானயோகத்தில் ஈடுபட்டுள்ளவன்)
யோகீ ச – அவனேதான்
யோகியாகவும் இருக்கின்றான். ( தியானயோகத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் கர்மயோகி)
இவ்வாறு கர்மயோகியை சந்நியாஸி என்றும்,
தியானயோகி என்றும் கூறியிருப்பது கர்மயோகத்தில் பெருமையை எடுத்துரைப்பதற்காகவும்,
அதன் முக்கியத்துவத்தையும் குறிப்பிடவே என்று புரிந்து கொள்ள வேண்டும்.
நிரக்னிஹ – சந்நியாசியை
இவ்வாறு அழைக்கப்படுகின்றனர்.
ச அக்ரியஹ - எந்த செயல்களும் இல்லாதவன் சந்நியாசி, வேதம் விதித்திருக்கின்ற கடமையும் இல்லாதவன்
இல்லறத்தில் இருப்பவர் யோகம் செய்வதற்கும்,
அக்னிஹோத்ரம் என்ற யாகம் செய்வதற்கும் முதன்முதலில் ஏற்றிய அக்னியை அப்படியே
பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். இரண்டு நிலையில் இந்த அக்னியை அணைக்கலாம்.
அவைகள் அவன் இறந்த பிறகும்,, சந்நியாசத்தை எடுத்துக் கொண்ட பிறகும் அனைக்கலாம்.
यं संन्यासमिति प्राहुर्योगं तं विद्धि पाण्डव ।
न ह्यसंन्यस्तमङ्कल्पो योगी भवति कश्चन ॥ 2 ॥
சாஸ்திரத்தை அறிந்தவர்கள் எதை சந்நியாசம் என்று
அழைக்கின்றார்களோ அதுவே கர்மயோகம் என்று அறிந்து கொள் அர்ஜுனா என்று சொல்வதன்
மூலம் கர்மயோகத்தை புகழ்கின்றார்.
சந்நியாசி, கர்மயோகி இருவரிடத்திலும் தியாகம் என்ற குணம் இருக்கும்,.
கர்மயோகி கர்மபலனில் இருக்கும் பற்றை தியாகம் செய்கின்றான். சந்நியாசி, செயல்கள்
செய்வதையே தியாகம் செய்கின்றான். கர்மயோகியிடத்திலும் ஓரளவு மன அமைதியிருக்கும்.
கஶ்சன – யாராக
இருந்தாலும்
ந ஹி அஸந்யஸ்தம் ஸங்கல்பஹ – சங்கல்பத்தை
விட்டுவிடாமல் இருப்பவன்
யோகீ ந பவதி – யோகியாக
இருக்க மாட்டான். மன அமைதியுடன் இருக்கமாட்டான்
சங்கல்பம் – நாம் செய்கின்ற செயலின் பலனை பற்றி
நினைப்பது, அதாவது சுகத்தை கொடுக்கும் என்று நினைப்பது, அந்த செயலை செய்து
கொண்டிருக்கும்போதே இவ்வாறு நினைத்துக் கொண்டிருப்பது. பலன் எப்படி இருந்தாலும் அதை இறைவனின்
பிரசாதமாக எண்ணி ஏற்றுக் கொள்ள வேண்டும்.
சத்துவ குணத்தில் இருந்துகொண்டு எனக்கு கடமைகள்
எதுவும் கிடையாது என்று நினைத்தால் அப்பொழுதிலிருந்து நமக்கு எந்தவித கடமைகள்
இல்லை என்று புரிந்து கொள்ளலாம். இதுவே மனதிலிருக்கும் மோகம் நீங்கிய நிலையாகும்.
आरुरुक्षोर्मुनेर्योगं कर्म कारणमुच्यते । ***
योगरूढस्य तस्यैव शमः करणमुच्यते ॥ 3 ॥
கர்மயோகத்தின் எல்லையும், ஏன் கர்மயோகத்தை
புகழ்கிறார் என்பதையும் இதில் கூறியிருக்கிறார்.
ஆருருக்ஷு: - தியான யோகத்தை
நோக்கி முன்னேற விரும்புகின்றவன், ஒன்றை அடைய விரும்புபவன்
யோகரூடன் – அடைய
விரும்பியதை அடைந்தவன், தியானயோகத்தில் அமர்ந்தவன்
ஆர்ருக்ஷோஹ முனிர்யோகம் – முனிவனாக
இருக்கின்ற ஆருருக்ஷு ( மந்த வைராக்கியம், மந்த முமுக்ஷு உடையவன் ), தியானயோகத்தை
அடைய விரும்புபவன்
கர்ம காரணம் உச்யதே – இத்தகையவர்களுக்கு கர்மயோகம் சாதனமாக சொல்லப்படுகின்றது
யோகாரூடஸ்ய தஸ்ய ஏவ – கர்மயோகத்தை
செய்த ஆருருக்ஷாவே யோகரூடனாக உயர்கின்றான்.
ஶம: காரனமுச்யதே -
அவனுக்குத்தான் நிவிருத்தி,
நிவிருத்தி என்பது எல்லா பொறுப்புக்களிலிருந்து முழுவதுமாக
விடுபடுதல். இதுதான் அவனுக்கு தியான
யோகத்தை செய்வதற்கு சாதனமாக இருக்கின்றது.
இந்த ஆருருக்ஷிக்கு கர்மயோகம் சாதனமாகும்,
யோகாரூடனுக்கு கர்மயோகத்தை விட்டுவிடுதலாகும்.
ஆருருக்ஷன் என்பவனுக்கு தியானயோகத்தை அடைய வேண்டும் என்ற விருப்பமுடையவன்,
ஆனால் தகுதியில்லாமல் இருக்கின்றான்.
இவனுக்கு கர்மயோகத்தை சாதனமாக பயன்படுத்துமாறு பகவான் பரிந்துரைக்கிறார். இந்த சாதனம் அவனை
தகுதிபடுத்திவிடும். தியானயோகத்தை அடைந்தவுடன் அவனே யோகாரூடனாக மாறுகிறான். இந்த நிலையில் கர்மயோகத்தை விட்டுவிட வேண்டும்.
பிறகு ஞான யோகத்தை தொடர வேண்டும்.
கர்மயோகத்தை சரியாக கடைப்பிடிப்பதனால் வைராக்கியத்தை முழுமையாக அடைய
முடியும். வைராக்கியம் அடைந்த பொருட்கள்
மனதிலிருந்து அகன்று விடும். தியானத்தில்
அவைகள் தடையாக இருக்காது.
यदा गि नेन्द्रियार्थेषु न कर्मस्वनुषज्जते ।
सर्वसङ्कल्पसंन्यासी योगारूढस्तदोच्यते ॥ 4 ॥
யதா3 - எப்பொழுது
ந இந்த்ரிய அர்தேஷு அனுஷஜ்ஜதே – புலன்களால்
அனுபவிக்கக்கூடிய பொருட்கள் மீது பற்று வைக்காமல், அவைகள் எனக்கு பிரயோஜனமில்லை
என்று மனம் நினைக்கிறது
ந கர்மேஷு – கர்மங்களிலும்
பற்றுக் கொள்வதில்லையோ ( ரஜோ குணத்தில் இருந்து விடுபட்டவன் )
ஸர்வ சங்கல்ப சந்நியாஸி – எல்லா
சங்கல்பங்களையும் விட்டுவிட்டான். போகப் பொருட்கள் சுகம் கொடுக்கும் என்று
நினைப்பு இல்லாதவன்
ததா3 - அப்பொழுது
யோகரூடன் உச்யதே அவன் யோகரூடன்
என்று அழைக்கப்படுகிறான்.
எப்பொழுது ஒருவன் யோகரூடனாக உயர்வடைகிறான்
என்பதை இதில் கூறியிருக்கிறார்.
வைராக்கியமும், முமுக்ஷுத்வமும் தீவிர நிலையை அடைய பெற்றவன்தான் யோகரூடனாக
உயர்வடைகிறான். மனதிலிருந்து பொருட்கள் மீதுள்ள ஆசைகள் முழுவதுமான
சென்றுவிட்டவுடன் இந்த நிலையை அடைகிறான்.
சங்கல்பத்தினால்தான் ஆசைகள் எழுகின்றன. சுகம் கொடுக்கும் என்ற புத்தியுடன் ஒன்றை நினைத்துக்
கொண்டிருப்பதே சங்கல்பம், இதுவே ஆசையாக உருவெடுக்கின்றது. புலன்களால் அனுபவிக்கப்படும் பொருட்களில்
வேண்டும் என்ற ஆசை இல்லாமல் இருக்கின்ற அறிவுடையவன், செயல்களில் பற்றில்லாமல்
இருக்கின்றான். இந்த மூன்றும் இல்லாத
நிலையை அடைந்தவர்களே யோகரூடர்கள். தனிமை
தண்டனையாக நினைக்காமல், சாதனமாக நினைக்கும் மனநிலை அடைந்தவனே யோகரூடன்.
उद्धरेदात्मनात्मनं नात्मानमवसादयेत् ।
आत्मैव ह्यात्मनो बन्धुरात्मौव रिपुरात्मनः ।। 5 ॥
நிதித்யாஸனம் என்கின்ற சாதனத்தை
பயன்படுத்துவதற்கு யாரும் உதவ முடியாது.
ஆத்மனா ஆத்மானம் – உன்னை உன்னாலே, தன்னை தன்னால்
உத்தரேதி –
சம்சாரத்திலிருந்து உயர்த்திக் கொள்ள வேண்டும்
ந ஆத்மானம் அவஸாதயேத் – உன்னை நீயே
தாழ்த்திக் கொள்ளக் கூடாது.
ஆத்மா ஏவ ஹி ஆத்மனஹ பந்து – நமக்கு நாமே
நண்பன்
ஆத்மா ஏவ ரிபு: ஆத்மானஹ – நாமே நமக்கு
பகைவன் (ரிபுஹு)
சாதகன் தன்னைத் தானே உயர்த்திக் கொள்ள வேண்டும். இந்த நிலைக்கு வந்தவனுக்கு அவனைத் தவிர யாரும் உதவ முடியாது. கவனக்குறைவினால் மீண்டும் அனாத்மாவில், சம்சாரத்தில் விழுந்து விடாதே. புலன்கள் வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாது, வெளி விஷயங்களில் விழுந்து விடக்கூடாது.
बन्धुरात्मात्मनस्तस्य येनात्मैवात्मना जितः ।
अनात्मनस्तु श्त्रुत्वे वर्तेतात्मैव शत्रुवत् ॥ 6 ॥
புலன்கள் உன் வசத்தில் இருந்தால் உனக்கு நீயே
நண்பன். அவைகள் உன் வசத்தில் இல்லையென்றால் உனக்கு நீயே பகைவன் என்று இதில்
கூறியிருக்கிறார்.
யேன – எந்த ஜீவனால்
ஆத்மா ஏவ ஆத்மனஹ ஜிதஹ – உடலும் மனமும் ஜெயிக்கப்பட்டிருக்கின்றது.
பந்து4 ஆத்மா ஆத்மனஹ தஸ்ய – அவனுக்கு உடலும்,
மனமும் நண்பன்
அனாத்மனஹ – அவைகளை ஜெயிக்காதவன்
ஆத்மா ஏவ - தனக்குத் தானே
ஶத்ருவத் – பகைமையுடன்
வர்தேத – செயல்படுவான்.
வெளிசூழ்நிலைகளால் பாதிக்கப்படாமலிருந்தால்
நமக்கு நாமே நண்பனாக இருப்போம். பாதிக்கப்பட்டால் பகைவனாக இருப்போம்.
जितात्मनः प्रशान्तस्य परमात्मा समाहितः ।
शीतोष्णसुखदुःखेषु तथा मानापमानयोः ॥ 7 ॥
ஜிதாத்மனஹ – உடல், மனம்,
புலன்களை முழுமையாக தன்வசப்படுத்தி
ப்ரஶாந்தஸ்ய – முழுமன
அமைதியடைந்தவனுக்கு
பரமாத்மா ஸமாஹிதஹ – பரபிரம்மத்தை
தெளிவாக ஆத்மாவாக அறிந்தவனுக்கு. தன்னுடைய
பிரம்மஸ்வரூபம் நன்கு விளங்கும். நன்கு
உணர்ந்து அதுவாகவே இருப்பான்.
ஶீதோஷ்ண – குளிரையும்,
உஷ்ணத்தையும்
ஸுக2 து:கே2ஶு –
இன்ப-துன்பத்தையும்
ததா2 மான அபமானயஹ – அதுபோல மான
அவமானம்
போன்ற இருமைகளை நாம் பிராரப்தத்தின் வசமாக
அனுபவிக்கின்றோம். பரமாத்மாவை அனுபவிப்பவன்
இந்த இருமைகளிலிருந்து விடுபட்டிருப்பான்.
புலன்கள், உடல், மனம் இவைகளை வென்றவன், மன
அமைதியை அடைந்தவன். இவனுக்கு தன்னுடைய ஸ்வரூபமான பிரம்மன் நன்கு விளங்குகின்றது.
உடல் அனுபவிக்கும் குளிர்-வெப்பம் போன்ற இருமைகளும், மனதினால் அனுபவிக்கும்
இன்ப-துன்பங்கள் போன்ற இருமைகளும், புத்தியால் அனுபவிக்கின்ற மான-அவமானம் போன்ற
இருமைகளும் இவனை பாதிக்காது
ज्ञानविज्ञानतृप्तात्मा कूटस्थॊ विजितेन्द्रियः ।
युक्त इत्युच्यते योगी समलोष्टास्मकञ्चनः ॥ 8 ॥
ஞான விக்ஞான த்ருப்தாத்மா –
ஞானத்தினாலும், விக்ஞானத்தினாலும் மன திருப்தியை அடைகின்றான். இதனால் அடைந்த மன நிறைவானது என்றும்
இருக்கும். அக்ஞானிகள் அடையும் திருப்தி
நிலையற்றது, நிபந்தனையுடன் கூடியது.
ஞானம் – வேதாந்த
சாஸ்திரம் கற்று முடித்தபின் அடையும் மனதிருப்தி
விக்ஞானம் – சாஸ்திரம்
உபதேசித்த ஞானத்தை உணர்வுபூர்வமாக, சந்தேகமில்லாமல் அறிந்திருப்பது. சாஸ்திரம் உபதேசம் என்னுடைய ஞானமாக
அடைந்திருப்பது. அதனால் அடையும் நிரந்தர மனதிருப்தி. இவையிரண்டையும் தியானத்தின்
மூலம் அடையும் பலனாக இருக்கின்றது.
கூடஸ்தஹ – அடைந்த
திருப்தியில் உறுதியுடன் இருப்பவன், அடைந்த அறிவில் உறுதியாக இருப்பவன்.
ஒருவனது உண்மையான ஸ்வரூபம் கோபமான
சூழ்நிலையிலோ, துயரமான சூழ்நிலையிலோ இருக்கும்போது வெளிப்படும்.
விஜிதேந்த்ரியஹ – இந்திரியங்களை
வென்றவனாக இருப்பான்
யோகீ – இந்த தியான
யோகியானவன், முக்தன்
ஸமலோஷ்ட அஸ்ம அகஞ்சனஹ மண்ணாங்கட்டி, பானை, தங்கம் இவைகளை சமமாக
பார்ப்பவன்.
யுக்த இதி உச்யதே – இப்படிபட்டவனை ஞானத்தில் பொருந்தியவன் என்று சொல்லப்படுகிறது.
सुह्र्न्मित्रर्युदासीनमध्यस्थद्वेष्यबन्धुषु ।
साधुष्वपि च पपेषु समबुद्धिर्विशिष्यते ॥ 9 ।।
ஸுஹ்ருதி – நல்லவர்கள்,
எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவுபவர்கள்
மித்ர – நண்பர்கள்.
ஒரே சுபாவமுடைய இருவரிடத்தில் ஏற்படும் நட்பு
அரி - பகைவன்
உதாஸீனம் – நம்மை கண்டு
கொள்ளாதவர்கள்
மத்யஸ்த2ன் – நடுநிலையோடு
இருப்பவன்
துவேஷி – வெறுப்பவன்,
இழிவாக பேசுபவன், நம் கண்முன்னே இவ்வாறு செயல்படுபவன்
பந்துஷு -
உறவினர்களிடத்தில்
ஸாது – சாஸ்திரப்படி
வாழ்பவர்கள், சான்றோர்களிடத்தில்
பாபேஷ -
பாவிகளிடத்தில்
ஸமபுத்தி விஶிஷ்யதே – இத்தகைய
மனிதர்களிடத்திலும் சமமான புத்தியை உடையவன், இவனே மேலானவனாகவும், உயர்ந்தவனாகவும்
இருக்கின்றான்
சமபுத்தி – எல்லா விஷயத்தையும் ஒன்றாக பாவித்தல். எந்த விஷயத்தாலும் பாதிக்கப்படாமல் இருக்கும் நிலை.
விசாரம்
ஞானி சமபுத்தியை உடையவன் என்று சொல்கிறோம்.
இங்கே சமபுத்தி என்பது ஒரேவிதமாக இவர்களிடத்தில் விவகாரம் செய்ய மாட்டான்.
அவரவர்களுக்கு ஏற்றவாறு நடந்து கொள்வான்.
ஆனாலும் அவர்களிடத்தில் துவேஷம் எதுவும் இல்லாமல் நடத்துவான். ஒருவன் இன்று தீயகுணத்துடன் இருந்தாலும், நாளை
திருந்தி நற்குணங்களை உடையவனாக இருப்பான்.
எனவே ஒருவனை தீர்மானிக்கும் போது அவனையும், அவனது குணங்களையும் பிரித்து
பார்த்து நடத்த வேண்டும். எந்த மனிதனை குறித்தும் நிரந்தரமான முடிவுக் கொள்ளக்கூடாது. ஒவ்வொருவரும்
சூழ்நிலைகள் காரணமாக அவ்வாறு இருக்கிறார்கள் என்று எடுத்துக் கொண்டு அவர்கள் மீது
துவேஷம் கொள்ளக் கூடாது. தீயகுணமுள்ளவர்
இடத்தில் கூட கருணையுடன் இருக்க வேண்டும்.
योगी युञ्जीत सततमात्मानं रहसि स्थितः ।
एकाकी यतचित्तात्मा निरशीरपरिग्रहः । 10 ॥
இனி அந்தரங்க சாதனத்தைப் பற்றி கூறுகிறார்.
தியானம் செய்வதற்கு முன் செய்ய வேண்டிய
முன்னேற்பாடுகளை கூறுகின்றார்.
யோகீன – தியானம் செய்ய
விரும்புபவன்
ஸததம் – எப்பொழுதும் (
இடைவிடாது, கவனமாக, அதிக காலமானாலும்)
ஆத்மானம் யுஞ்ஜீத - தியானத்தில் மனதை ஈடுபடுத்த வேண்டும். பொருத்த
வேண்டும்
ரஹஸி ஸ்தி2தஹ – தனிமையான
இடத்தில் (யாரும் வராத இடத்தில்), அது பயமற்ற இடமாகவும், பாதுகாப்பான இடமாகவும்
இருக்க வேண்டும்.
ஏகாகீ – தனியாக,
யத சித்தாத்மா – மனம்,
புலன்களுடன் கூடிய உடலை அடக்கியவனாக
நிராஶீ – மனதில்
தற்காலிமாக எந்த ஆசைகளும் இல்லாமல் இருக்க வேண்டும்
அபரிக்ரஹ – தனக்கென்று
எதையும் சேர்த்து வைத்துக் கொள்ளாதவனாக இருக்க வேண்டும். குறிப்பாக விலைமதிப்புள்ள
பொருட்களை தம் வசம் வைத்துக் கொள்ளக் கூடாது.
शुचौ देशे प्रतिष्टाप्य स्थिरमासनमात्मनः ।
नात्युच्छ्रितं नतिनीचं चैलजिजन्कुशोत्तरम् ॥ 11 ॥
ஶுசௌ தேஶே – தூய்மையான
இடத்தில்
ஸ்திர ஆஸனம் ஆத்மனஹ – தன்னுடைய
இருக்கையை நிலையானதாக, அசைவற்றதாக
ப்ரதிஷ்டாப்ய – அமைத்துக்
கொள்ள வேண்டும்.
சைல அஜின குஶ உத்தரம் – புல்லைப்
போட்டு, அதன்மீது மான் தோலை போட்டு அதன் மீது துணியை போட்டிருக்க வேண்டும்.
ந அத்யுச்ச்ரிதம், ந அதிநீசம் – அதிக உயரமாக
இல்லாமலும், மிகவும் தாழ்வாக இல்லாமலும் இருக்கை இருக்க வேண்டும்.
தூய்மையான இடத்தில் தனக்கென்று ஒரு இருக்கையை அசைவற்றதாக இருக்குமாறு அமைத்துக் கொள்ள வேண்டும். தூய்மை என்பது அந்த இடம் நல்ல விஷயத்திற்கு பயன்படுத்தியிருக்க வேண்டும். அந்த இடம் சுத்தமாக இருக்க வேண்டும். அமரும் இருக்கை தரையிலிருந்து சற்று உயரத்தில் இருக்க வேண்டும், கடினமாக இருக்க கூடாது. இதனால் உடலுக்கு கஷ்டம் எதுவும் வரக்கூடாது. பூமியில் இருக்கின்ற வெப்பம், குளிர்ச்சி இவைகளால் உடல் தாக்காமல் இருப்பதற்காக மான் தோலை பகவான் இங்கே குறிப்பிட்டிருக்கின்றார். புல், மான்தோல், துணி இவைகள் ஒன்றன்மேல் ஒன்றாக் அடுக்கி வைத்திருக்க வேண்டும்.
तत्रैकाग्रं मनः कृत्वा यतचित्तेन्द्रियक्रियः ।
उपविस्यासने युञ्ज्याद्यॊगमात्मविशुद्धये ॥ 12 ॥
தத்ர ஏகாக்ரம் மன க்ருத்வா – ஆஸனத்தில்
அமர்ந்த பிறகு, மனதை ஒருமுகப்படுத்த வேண்டும். தியானத்திற்கு தேர்ந்தெடுத்த
விஷயத்தை தவிர வேறெதையும் மனது நினைக்க கூடாது. எடுத்துக் கொண்ட விஷயத்தில்
மட்டும் மனதை குவிக்க வேண்டும்.
யத சித்த இந்த்ரியக்ரியஹ – சித்தத்தின்
செயல்களையும், புலன்களின் செயல்களையும் நிறுத்திக் கொள்ள வேண்டும். மனதும் சித்தத்திலிருந்து எதையாவது எடுத்துக்
கொண்டு கற்பனை செய்து கொண்டிருப்பதை நிறுத்த வேண்டும். புத்தி எதையும் திட்டமிட்டு கொண்டிருக்கக்
கூடாது.
தத்ர உபவிஶ்யாஸனே – அந்த ஆஸனத்தில்
அமர்ந்து கொண்டு
யோகம் யுஞ்ஜ்யாத் – தியானத்தில்
ஈடுபடவேண்டும்.
ஆத்மவிஶுத்தயே –
மனத்தூய்மைக்காக தியானத்தை செய்ய வேண்டும். மனம் அமைதி அடைய வேண்டும் என்ற
குறிக்கோளுக்காக தியானம் செய்ய வேண்டும்.
समं कायशिरोग्रीवं धारयन्नचलं स्थिरः ।
सम्प्रेक्ष्य नसिकाग्रं स्वं दिशश्चानवलोकयन् ॥ 13 ॥
இதையே பதஞ்சலி யோகசூத்திரத்தில் ஸ்திரஶுகமாஸனம்
என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இதன் பொருள் வெகுநேரம் சுகமாக நிலைத்து உட்கார
சௌகர்யமான இருக்கை. என்பதாகும்
ஸமம் காய ஶிரோ க்ரீவம் – உடல்,
கழுத்து, தலை இவைகள் நேராக இருக்க வேண்டும்,
ஸ்திர: - நிலையாக,
அசைலம் - அசைவற்றதாக
தாரயன – தொடர்ந்து
வைத்துக் கொண்டு
ஸ்வம் நாஸிகாக்ரம் – மூக்கு நுனியை
மட்டும்
திஶ ச அவலோகயன் – வேறெந்த
திசைகளையும் பார்க்காமல்
ஸம்ப்ரேக்ஷய – பார்த்துக்
கொண்டு இருக்க வேண்டும்.
கண்களை மென்மையாக மூடிக்கொண்டு பார்வை மூக்கின்
நுனியில் இருக்க வேண்டும்,
வேறெந்த பக்கமும் பார்வையை செலுத்தக் கூடாது.
प्रशान्तात्मा विगतभिर्ब्रह्मचारिव्रते स्थितः ।
मनः संयम्य मच्चित्ते युक्त आसीत मत्परः ॥ 14 ॥
ப்ரஶாந்தாத்மா – அமைதியான மனதை
கொண்டவனாக,
அமைதிபடுத்தப்பட்ட மனதுடன். நம்முடைய மனதையே பார்த்தல், மனம் எப்படி
இருந்தாலும் அப்படியே ஏற்றுக் கொள்ளுதல் இவையிரண்டும் மனதை அமைதிபடுத்துவதற்கான
சாதனமாக கூறப்படுகின்றது.
விக3தபி4 – பயமெதுவும்
இல்லாதவனாக இருக்க வேண்டும்.
ப்ரஹ்மசாரி வ்ரதே ஸ்தி2த – குருவுக்கு
சேவை செய்தல், எளிமையாக வாழ்தல் அதிக போகத்தில் ஈடுபடக்கூடாது.
மனஸம்யம்ய – மனதை தன்
வசத்தில் கொண்டுவந்து
மச்சித்தே – பகவானை
நினைத்துக் கொண்டு
மத்பரஹ – பகவானே
அடையத்தக்க சிறந்த கதியாக கொண்டு
யுக்த ஆஸீத – தியானம்
செய்பவன் அமர்ந்திருக்க வேண்டும்.
இறைவனைத் தவிர வேறெந்த உலக விஷயங்களையோ,
போகங்களையோ, பொருட்களையோ அடைய வேண்டும் என்பதை குறிக்கோளாக வைக்க கூடாது.
தியானத்திற்கு முன் செய்ய வேண்டிய
முன்னேற்பாடுகள் (அந்தரங்க சாதனம்)
- அமரும் இடம்
- காலம்
(15-20 நிமிடங்கள்) காலை, மாலை பொழுது
- ஆசனம்,
அமரும் இருக்கை
- எப்படி அமர
வேண்டும்
- பிராணன் அமைதியாக இருக்க வேண்டும்
- புலன்களை
எதையையும் செய்யவிடாமல் வைத்திருக்க வேண்டும்.
- மன நிலை அமைதியாக இருக்க வேண்டும்
- புத்தியும்
அமைதியாக இருக்க வேண்டும்.
युञ्जन्नेवं सदात्मानं योगी नियतमानसः ।
शान्तिं निर्वाणपरमां मत्संस्थामधिगच्छति ॥ 15 ॥
யுஞ்ஜன்னேவன் – இதுவரை
சொல்லப்பட்ட வகையில் தியானத்தில்
ஸதாத்மானம் – மனதை
ஈடுபடுத்திக் கொண்டு
யோகீ – தியானம்
செய்யும் சாதகன்
நியதமானஸ: - மனதை தன்
வசத்தில் கொண்டு வந்து விட்டவன், மனதை நண்பனாக கொண்டு வந்துவிட்டவன்
ஶாந்திம் அதி4க3ச்ச2தி – மன அமைதியை
அடைகின்றான். அவன் உயிரோடு இருக்கும்வரை மனநிறைவுடன் இருப்பான்
நிர்வாண– சரீரத்தோடு
சம்பந்தம் இல்லாமல் இருந்து கொண்டு
பரமாம் – மோட்சத்தை
அடைகின்றான்
மத்ஸம்ஸ்தாம் – பகவானுடைய
ஸ்வரூபமாக இருப்பான். பிரஹ்ம
ஸ்வரூபமாக இருப்பான்.
நிர்வாணம், பரமாம் இரண்டுமே என்னுடைய
அனுக்கிரகத்தினால்தான் அடைய முடியும்.
नात्यश्नतस्तु योगोऽस्ति न चैकान्तमनश्नतः ।
न चातिस्वप्नशीलस्य जाग्रतो नैव चार्जुन ॥ 16 ॥
எல்லா விஷயங்களிலும் நாம் அளவுடன் இருக்க
வேண்டும். மனதின் பலவீனம் ஏதாவது ஒரு உச்சத்தில் இருக்கும்.
ஹே அர்ஜுனா!
ந அத்யஶ்னதஸ்து யோகோஸ்தி – அதிகமாக
உண்பவனுக்கு தியானம் கைகூடாது
ந ச ஏகாந்தமனஶ்னத –அறவே உண்ணாமல்
இருப்பவனுக்கும் தியானம் கைகூடாது
ந ச அதி ஸ்வப்ன ஶீலஸ்ய – அதிகமாக
உறங்கும் பழக்கம் உள்ளவனுக்கும்
ஜாக்ரத ந ஏவ – அதிகமாக
விழித்துக் கொண்டிருப்பவனுக்கும் கைகூடாது
युक्ताहारविहारस्य युक्तचेष्टस्य कर्मसु ।
युक्तस्वप्नावबोधस्य योगो भवति दुःखहा ॥ 17 ॥
யுக்தாஹார விஹாரஸ்ய – தேவையான அளவு
உணவு உட்கொண்டு நடமாடுகின்றவனுக்கு, ஓய்வெடுப்பவனுக்கு
யுக்தசேஷ்டஸ்ய கர்மஸு – நமது கடமைகளை
செய்வதிலும் அளவுடன் இருக்க வேண்டும். அதிகமாக உழைக்க வேண்டும்.
யுக்தஸ்வப்ன அவபோதஸ்ய –
உறக்கத்திலும், விழிப்பையும் அளவுடன் வைத்துக் கொண்டிருப்பவன்
யோகோ பவதி து:க2ஹா – இவ்வாறு
இருப்பவனுக்கு தியானம் துயரத்தை போக்குகின்ற சாதனமாக அமையும். துயரத்தை போக்குகின்ற தியானம் கைகூடுகின்றது.
यदा विनियतं चित्तमात्मन्येवावतिष्टते ।
निःस्पृहः सर्वकामेभ्यो युक्त इतुच्यते तदा ॥ 18 ॥
தியானத்தில் என்ன செய்ய வேண்டும்? அது
எப்படிபட்டது என்பதை இதில் கூறுகிறார்.
உபாஸனை என்பது ஞானத்தை அடைய தகுதியடைவதற்காக செய்யப்படுகின்ற தியானம். நிதித்யாஸனம் என்பது அடைந்த ஞானத்தில் நிலை
பெறுவதற்காக செய்யபடுகின்ற தியானம்.
யதா வினியதம் சித்தம் – உபாஸனையினால்
எப்பொழுது மனமானது தன் வசப்பட்டுள்ளதோ, உபாஸனை மூலம் மனதை வசப்படுத்தி,
அமைதியடையச் செய்து
ஆத்மனி ஏவ அவதிஷ்டதே –ஆத்மாவிடத்தில்
மட்டும் நன்கு நிலை பெற்றிருக்கிறது
ததா3 அப்பொழுது
ஸர்வ காமேப்யஹ – அனைத்து
பொருட்களிலிருந்தும்
நி:ஸ்ப்ருஹ: - மனதில்
ஆசையற்ற மனிதனை, மனம் சுபாவமாகவே எதிலும் ஒட்டிக் கொள்ளாமல் இருத்தல்
யுக்த இதி உச்யதே – தியானத்தில் முதிர்ந்த
நிலை பெற்றவன் என்று கூறப்படுகிறது.
பார்க்கும் பொருட்களிலிருந்தும், கேட்ட
விஷயத்திலிருந்தும் இயல்பாகவே மனம் விலகும் நிலை. இந்த நிலை விவேகம் இருந்தாலும்
ஏற்படாது. அதற்கு மூன்று காரணங்கள் கூறப்படுகிறது. அவைகள் வைராக்கியம் குறைவாக இருப்பது, ஸம்ஸ்கார
பலத்தினால், ஞானம் திடமாக இல்லாதிருத்தல் ஆகியவைகளாகும். தியானத்தின் முடிவில்
இந்த மூன்று குறைகளும் நீங்கிவிடும்.
यथा दीपो निवातस्थो नेङ्गते सोपमा स्मृता ।
योगिनो यतचित्तस्य युञ्जतो योगमात्मनः ॥ 19 ॥
சிம்னி விளக்கின் சுடரை மனதிற்கும், சிம்னியை
வைராக்கியம், விவேகம் இவைகளையும், முழு சிம்னி விளக்கை ஸ்தூல உடம்பிற்கும் உவமானமாக் கூறப்படுகிறது
யுஞ்ஜதஹ யோக ஆத்மனஹ – ஆத்மாவை
விஷயமாக கொண்ட தியானத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற
யோகினஹ – நிதித்யாஸனம்
செய்து கொண்டிருப்பவனுடைய
யதசித்தஸ்ய – கட்டுப்பட்ட
மனதானது
ஸ உபமா ஸ்ம்ருதா – இந்த
உவமையுடன் ஒப்பிடப்படுகின்றது.
யதா2 தீபஹ நிவாதஸ்தஹ – காற்றில்லாத
இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் தீபத்தின் சுடரைப் போல
ந இங்கதஹ – அசையாமல்
இருக்கும்.
यत्रोपरमते चित्तं निरुद्धं योगसेवया ।
यत्र चैवात्मनात्मानं पस्यन्नात्मनि तुष्यति ॥ 20 ॥
ஜீவன் முக்தனின் ஏழு லட்சணங்களில் இனி
கூறப்படுகின்றது.
1. சித்த உபரமஹ –
மனதினுடைய முழு அமைதி
2. ஆத்ம தர்ஶன
ஜன்ய - ஆத்மதிருப்தி: - ஆத்மாவை அறிந்ததனால் வருகின்ற மனநிறைவு. தன் உண்மையான
ஸ்வரூபத்தை அறிவதனால் அடையப்படுகின்ற,
தன்னிடத்திலே மகிழ்ச்சியாக இருக்கின்ற
யத்ர உபரமதே சித்தம் – எந்த நிலையில்
(மோட்சம் அடைந்த நிலையில்) மனதானது முழு அமைதியுடன் இருக்கின்றதோ
நிருத்3த4ம் யோகஸேவயா –
தியானப்பயிற்சியினால் அமைதிப்படுத்தப்பட்ட மனம், முறைப்படுத்தப்பட்ட மனம்,
வசப்படுத்தப்பட்ட மனமானது, அடக்கப்பட்ட மனமானது
யத்ர – எந்த மோட்சத்தில்
ஆத்மனா ஆத்மானம் பஶ்யன் – மனதினால்
பரமாத்மாவை பார்த்துக் கொண்டு இருப்பதனால்
ஆத்மனி துஷ்யதி – தன்னிடத்தில்
திருப்தி அடைகின்றான், மகிழ்ந்திருக்கின்றான்.
सुखमात्यन्तिकं यत्तद् बुद्धिग्राह्यमतीन्द्रियम् ।
वेत्ति यत्र न चैवायं स्थितश्चलति तत्त्वतः ॥ 21 ॥
3. ஆத்யந்திகம்
ஸுகம் – முழுமையான மனநிறைவு, எல்லையில்லா ஆனந்தம்
அதீந்த்ரியம் – இந்த ஆனந்தம்
புலன்கள் விஷயங்களுடன் சேர்வதால் அடையும் ஆனந்தமல்ல
யத் புத்தி க்ராஹ்யம் – இது
புத்தியினால், மனதினால் அனுபவிக்கக்கூடியது.
எந்த ஆனந்தம் புத்தியினால் மட்டும் அனுபவிக்கப்படுகின்றதோ,
புலன்களின் துணையின்றி அனுபவிக்கப்படுகின்றதோ அது மோட்சத்தினாலே மட்டும் அடையக்கூடியது,
4.தத்வ நிஷ்டா –
உண்மையிலிருந்து நழுவி விடாமல் இருத்தல், பரம்பொருளில் நிலையாக இருத்தல்
அயம் தத்வதஹ ஸ்தி2தஹ – இந்த ஞானி
ஆத்ம தத்துவத்தில் நிலையாக இருப்பான்.
ந ஏவ சலதி – அடைந்த அறிவில் அசைவதில்லையோ,
அதுவே மோட்ச நிலை.
யத்ர வேத்தி – இவ்வாறு
அறிந்து கொள்வாயாக
यं लब्ध्वा चापरं लाभं मन्यते नाधिकं ततः ।
यस्मिन्स्थितो न दुःखेन गुरुणापि विचाल्यते ॥ 22 ॥
5. நிரதிஶய லாபஹ – இதற்கு மேல்
அடையமுடியாத லாபம்
6. து:கே2ன அவிசாலனம் – துயரத்தினால் கலங்காது இருத்தல், அசையாது இருத்தல்
யம் லப்3த்4வா – எதை அடைந்து
ச அபரம் லாப4ம் – அதற்கு மேலான
லாபத்தை
ததஹ அதி4கம் – அதைவிட
அதிகமான ஒன்றை
ந மன்யதே – ஒருவன்
நினைக்கவில்லையோ
யஸ்மின் ஸ்திதஹ – எந்த
ஞானத்தினால் நிலைபெற்றவனாக இருந்து
ந குருணா அபி விசால்யதே – மிகப்பெரிய,
அதிகமான துயரத்தினாலும் கூட அசைவதில்லையோ
तं विद्याद् दुःखसम्योगवियोगं योगस्ंज्ञितम् ।
स निश्चयेन योक्तव्यो योगोऽनिर्विण्णचेतसा ॥ 23 ॥
7. து:க
ஸம்யோகவியோகம் – துயரத்தினுடைய சேர்க்கையிலிருந்து விடுதலை
அடைதல்
து:க2ஸம்யோக வியோகம் – துயரங்களின்
சேர்க்கையிலிருந்து விடுபடுவதும்
யோகஸம்ஞிதம் – மோட்சம் என்ற
பெயர் கொண்டதுமான
தம் வித்யாத்3 – அதை அறிந்து
கொள்ள வேண்டும்.
ஸஹ நிஶ்சயேன யோக்தவ்யஹ யோகஹ-
இந்த தியான யோகத்தை உறுதியுடன் கண்டிப்பாக செய்ய வேண்டும்.
அநிர்விண்ண சேதஸா –
விடாமுயற்சியுடன், மனச்சோர்வடையாமல் செய்ய வேண்டும்.
நிதித்யாஸனம் என்கின்ற தியான யோகத்தின் பலன்
கிடைப்பதற்கு அதிக காலம் ஆகும். இந்த
யோகத்தின் போதுதான் மனசஞ்சலம் அதிகமாகும்.
அந்த நிலையில் மனச்சோர்வு அடையாமல் விடாமுயற்சியுடன் தொடர்ந்து செய்து
வந்தால் முழுமையான மன அமைதியை அடையலாம்.
सङ्कल्पप्रभवन्कामांस्त्यक्त्वा सर्वानशेषतः ।
मनसैवेन्द्रियग्रामं विनियम्य समन्ततः ॥ 24 ॥
ஸங்கல்ப ப்ரப4வான் காமான் –
சங்கல்பத்திலிருந்து உருவாகிய ஆசைகள்
த்யக்த்வா ஸர்வான் அஶேஷதஹ –
எல்லாவற்றையும் மீதமில்லாமல் துறக்க வேண்டும்
மனஸா ஏவ இந்த்ரியக்ராமம் – மனதினால்
புலன்களின் கூட்டத்தை
வினியம்ய ஸமந்ததஹ – எல்லா
புறங்களிலிருந்தும், விஷயங்களிலிருந்தும் நன்கு அடக்க வேண்டும்,
நமக்கு உலகத்திலுள்ள எந்தப்பொருட்களின் மீது
ஆசையுள்ளதோ அந்த விருத்திகள் மட்டுமே மனதில் இருக்கும், இந்த ஆசைகள் சங்கல்பத்திலிருந்துதான் தோன்றுகிறது. சங்கல்பம் என்பது அந்தப்பொருட்களால் சுகத்தை,
இன்பத்தை அடையலாம் என்ற புத்தி. இதை ஸோபனாத்யாஸம் என்றும் கூறுவர். இந்த சங்கல்பமே
அதை அடைய வேண்டும் என்ற நிலைக்கு செல்லும்போது அதுவே ஆசையாக மாறுகிறது.
அந்தப்பொருள் எனக்கு வேண்டும் என்ற எண்ணமே மனதில் திரும்ப திரும்ப வரும். தியானத்தில் இருக்கும்போது இந்த எண்ணங்கள்
மீண்டும் மீண்டும் வந்து தடையாக இருக்கும்.
இந்த ஆசைகள் நீங்குவதற்கு அதிலுள்ள குறைகளை ஆராய்ந்து பார்த்து அதை முயற்சி
செய்து நீக்க வேண்டும். பிறகு எல்லா சங்கல்பங்களையும் நீக்கிவிட வேண்டும்.
शनैः शनैरुपरमेद् बुद्धया धृतिगृहीतया ।
आत्मसंस्थं मनः कृत्वा न किञ्चिदपि चिन्तयेत् ॥ 25 ॥
ஶனைஹி ஶனைஹி – மெல்ல மெல்ல,
அவசரப்படாமல், படிப்படியாக
உபரமேத் –
அனாத்மாவிலிருந்து மனதை எடுத்து
புத்தயா த்4ருதிக்3ருஹீத்யா – உறுதியான
புத்தியைக் கொண்டு
ஆத்ம ஸம்ஸ்த்2ம் மனஹ - ஆத்ம
ஸ்வரூபத்தில் மனதை பொருத்த வேண்டும்
க்ருத்வா ந கிஞ்சிதபி சிந்தயேத் – இதை தவிர
வேறெதையும் நினைக்காமல் இருக்க வேண்டும்.
यतो यतो निश्चरति मनश्चञ्जलमस्थिरम् ।
ततस्ततो नियम्यैतदात्मन्येव वशं नयेत् ॥ 26 ॥
மனமானது இயற்கையிலே சஞ்சலத்துடனும், அலைபாயும் தன்மையுடனும்
படைக்கப்பட்டிருக்கிறது.
யதஹ யதஹ நிஶ்சரதி – எந்தெந்த
விஷயங்களை, பொருட்களை நோக்கி மனமானது செல்கின்றதோ
மனஹ சஞ்ஜல்ம் அஸ்திரம் – மனம்
இயற்கையில் சஞ்சலத்துடனும், நிலையில்லாததாகவும் இருக்கின்ற தன்மையுடையது என்று
ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ததஹ ததஹ நியம்யே ஏதத் – அதிலிருந்து
இந்த மனதை தடுத்து நிறுத்தி
ஆத்மன்யேவ வஶாம் நயேத் – நம்
வசத்திற்கு கொண்டு வர வேண்டும்.
प्रशान्तमनसं ह्येनं योगिनं सुखमुत्तमम् ।
उपैति शान्तरजसं ब्रह्मभूतमकल्मषम् ॥ 27 ॥
ப்ரஶாந்த மனஸம் – சத்துவ
குணத்தினால் அமைதியடைந்த ஞானி
ஹி ஏனம் யோகினம் – ஏனென்றால்
இந்த யோகியான ஞானியை
ஶாந்த ரஜஸம் – ரஜோ
குணத்திலிருந்து விடுபட்டவன்
அகல்மஷம் – தமோ
குணத்திலிருந்தும் விடுபட்டவன்
ப்ரஹ்ம பூ4தம் – ப்ரஹ்ம
ஸ்வரூபமாக இருப்பவன், முக்தனாக இருப்பவன்
ஸுக2ம் உத்தமம் உபைதி – இவனுக்கு
மேலான உயர்ந்த சுகமானது வந்து அடைகின்றது.
युञ्जन्नेवं सदात्मानं योगी विगतकल्मषः ।
सुखेन ब्रह्मसंस्पर्शमत्यन्तं सुखमश्नुते ॥ 28 ॥
ஸ்தாத்மானம் – எப்பொழுதும்
ஆத்மஞானத்தோடு தன்னை தியானித்தில்
யஞ்ஜன்னேவம் – ஈடுபடுத்திக்
கொண்டு இருக்கின்ற யோகியானவன்
யோகீ விக3த கல்மஷ: - மனதில் உள்ள
அசுத்தங்களை (ராக-துவேஷம்) நீக்கி
ஸுகே2ன ப்ரஹ்ம ஸம்ஸ்பர்ஶம் – எளிதாக
பிரம்மத்தோடு ஐக்கியத்தை
அத்யந்தம் ஸுக2ம் – முடிவற்ற,
நிறைவான சுகத்தை
அஶ்னுதே - அடைகின்றான்
सर्वभूतस्थमात्मानं सर्वभूतानि चात्मनि ।
ईक्षते योगयुक्तात्मा सर्वत्र समदर्शनः ॥ 29 ॥
யோகயுக்தாத்மா – ஞானியானவன்,
ஆத்மஞானத்தில் உறுதியடைந்த மனதையுடையவன்
ஆத்மானம் - தன்னை
ஸர்வபூதஸ்த2ம் – எல்லா
உயிர்களிடத்திலும்
ஸர்வபூதானி – எல்லா
உயிரினங்களையும்
ச ஆத்மனி -
தன்னிடத்திலும்
ஈக்ஷதே -
பார்க்கின்றான்
ஸர்வத்ர ஸமதர்ஶன: -
எல்லாவற்றிலும் பிரம்மத்தை காண்கின்றான். எல்லாவிடத்திலும் பிரம்மத்தை
பார்க்கின்றான்.
விசாரம்
களிமண் சொல்கின்றது நான் எல்லா பானைகளிலும்
இருக்கின்றேன். அனைத்து பானைகளும் என்னிடத்தில்தான் இருக்கின்றது என்று சொல்லும்
போது, களிமண் மட்டும்தான் இருக்கின்றது என்று புரிந்து கொள்ள முடிகின்றது. ஸ்தூல சரீரங்கள் பானைகள், களிமண் என்பது ஆத்மா
என்ற உதாரணத்தோடு ஒப்பிட்டு பார்க்கும் போது ஆத்மா ஒன்றுதான் இருக்கின்றது என்று
எளிதாக புரிந்து கொள்ளலாம். ஆத்மாவாகிய
நான் எல்லா உயிரினங்களிலும் இருக்கின்றேன். எல்லா உயிரினங்களும் என்னிடத்தில்
இருக்கின்றது அவைகள் மித்யாவாகி இருக்கின்றது
यो मां पश्यति सर्वत्र सर्वं च मयि पश्यति ।
तस्याहं न प्रणाश्यामि स च मे न प्रणश्यति ॥ 30 ॥
யஹ மாம் பஶ்யதி ஸர்வத்ர – எவனொருவன்
என்னை (பகவானை) எல்லா விடத்திலும் பார்க்கின்றானோ
ஸர்வம் ச மயி பஶ்யதி – எல்லா
உயிர்களையும் என்னிடத்தில் பார்க்கின்றானோ
தஸ்ய - அவனுக்கு
அஹம் ந ப்ரணாஶ்யாமி – நான்
காணப்படாமல் இருப்பதில்லை
ஸஹ ச மே ந ப்ரணஶ்யதி – அவன் எனக்கு
காணப்படாமல் இருப்பவனல்ல
सर्वभूतस्थितं यो मां भजत्येकत्वमास्थितः ।
सर्वथा वर्तमानोऽपि स योगी सयि वर्तते ॥ 31 ॥
எல்லா பூதராசிகளிலும் இருக்கின்ற என்னை
எவனொருவன் வழிபடுகின்றனோ அவன் ஒன்றாக இருந்துகொண்டிருக்கின்ற ஆத்ம தத்துவத்தில்
நிலைபெற்றவனாக இருக்கின்றான்.
ஸர்வதா2 வர்தமான அபி – எந்தவகையில்
அவன் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், விதவிதமான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தாலும்
ஸஹ யோகீ மயி அர்ததே – அந்த
யோகியானவன் என்னிடத்தில்தான் இருக்கின்றான்.
பொதுவாக நமக்கு நம்முடைய செயல்களிலும், வாழும்
சூழ்நிலைகளிலும் திருப்தி கிடையாது, சலிப்பு இருக்கின்றது. ஆனால் இவைகளால் உண்மையில் மன அமைதியை
இழக்கவில்லை. நம்முடைய உண்மை ஸ்வரூபத்தை அறியாத காரணத்தில்தான் நம்மால்
சம்சாரத்திலிருந்து விடுபடவில்லை.
மேற்சொன்னபடி ஆத்ம தத்துவத்தில் நிலைபெற்றுவிட்டால் நாம் எங்கு இருந்தாலும்
என்ன செய்து கொண்டிருந்தாலும் என்றென்றும் திருப்தியுடன் இருப்போம். டைய பிராரப்தத்தினால் வாழ்ந்து கொண்டிருந்தாலும்
அதனால் எந்த பாதிப்பும் இல்லாமல் மனநிறைவுடன் இருப்போம்
आत्मौपम्येन सर्वत्र समं पश्यति योऽर्जुन ।
सुखं वा यदि वा दुःखं स योगी परमो मतः । 32 ॥
மற்ற ஜீவராசிகளின் உடலையும், மனதையும் எப்படி
பார்ப்பான்? எப்படி நடத்துவான்? என்பதை இதில் பகவான் கூறியிருக்கிறார். தன்னுடைய உடலையும், மனதையும் எப்படி நடத்துவானோ
அதேமாதிரி மற்ற உயிரினங்களை பாவிப்பான்.
இந்த பாவனையோடு நடந்துகொள்வதால் அஹிம்சையை சுபாவமாகவே கடைப்பிடித்து
கொண்டிருப்பான்.
யோ அர்ஜுன – ஹே அர்ஜுனா!
ஆத்மா ஔபம்யேன – தன்னுடைய
அனாத்மாவை அளவுகோலாகக் கொண்டு
ஸுக2ம் வா யத் வா து:க2ம் – சுகமாக
இருந்தாலும், துயரமாக இருந்தாலும்
ஸர்வத்ர ஸமம் பஶ்யதி – எல்லா
ஜீவராசிகளிடத்திலும் சமநோக்குடன் இருப்பான்
ஸஹ யோகீ பரமஹ மதஹ – இப்படிப்பட்ட
யோகியானவன் உயர்ந்தவன். இது என்னுடைய கருத்து.
अर्जुन उवाच ।
योऽयं योगस्त्वया प्रोक्तः साम्येन मधुसूदन ।
एतस्याहं न प्श्यामि चञ्जलत्वात्स्थितिं स्थिराम् ॥ 33 ॥
அர்ஜுனன் கூறுகிறான் .
யஹ த்வயா ப்ரோக்தா – எது உங்களால்
உபதேசிக்கப்பட்டதோ, மதுஸுதனா
யஹ அயம் யோகம் ஸாம்யேன – அந்த யோகம்
சமபாவனையோடு கூடியது
ஏதஸ்ய – அந்த யோகமானது
சஞ்சலவாத் – மனதினுடைய
சஞ்சலத்தினால்
ஸ்திராம் ஸ்திதிம் – உறுதியாக
மனதில் இருப்பதை
ந பஶ்யாமி – நான்
காணவில்லை, உணரவில்லை
பதஞ்சலி யோகஸூத்ரம் (1/12)
அப்யாஸ வைராக்யாப்யாம் தன்னிரோதஹ –
பயிற்சியினாலும், வைராக்கியத்தாலும் சித்தத்தின் போக்கானது அடக்கப்படுகிறது.
चञ्जलं हि मनः कृष्ण प्रमाथि बलवद् दृढम् ।
तस्याहं निग्रहं मन्ये वायोरिव सुदुष्करम् ॥ 34 ॥
சஞ்ஜலம் ஹி மனஹ க்ருஷ்ண – ஹே கிருஷ்ண
பகவானே! என்னுடைய மனம்
சஞ்சலத்துடன் இருக்கின்றது. எதிலும்
நிலைக்காமல் அலைபாய்ந்து கொண்டு
இருக்கிறது
ப்ரமாதி2 – கலங்கடித்துக்
கொண்டிருக்கின்றது
ப3லவத்3 – மிகவும்
வலிமையானதாக இருக்கின்றது
த்ருட4ம் – திடமாகவும்,
உறுதியாகவும் இருக்கின்றது. அதாவது தன்னுடைய சுபாவமான சஞ்சலத்தின் இருப்பதில்
உறுதியாக இருக்கின்றது.
தஸ்ய – இப்படிபட்ட
மனதை
அஹம் நிக்3ரஹம் – நான் என்னுடைய
வசத்திற்கு கொண்டுவருவது
வாயோரிவ – காற்றை
தடுத்து நிறுத்துவது போன்று
ஸுதுஷ்கரம் மன்யே – மிகவும்
கடினமானது என்று நினைக்கிறேன்
श्रीभववानुवाच ।
असंशयं महबाहो मनो दुर्निग्रहं चलम् ।
अभ्यासेन तु कौन्तेय वैरग्येण च गृह्यते ॥ ६-३५ ॥
ஶ்ரீபகவான் பதிலளிக்கிறார்.
அஸம்ஶயம் மஹாபாஹோ – நீண்ட
கைகளுடைய அர்ஜுனா! சந்தேகமில்லாமல்
மனஹ துர்நிக்3ரஹம் சலம் – மனதை
வசப்படுவதும், கட்டுபடுத்துவதும் கடினம்தாம், சஞ்சலத்துடன்தான் இருக்கும்
து கௌந்தேய – ஆனால்
குந்தியின் மகனே அர்ஜுனா!
அப்யாஸேன - தொடர்ந்து முயற்சி செய்வதாலும்
வைராக்யேன ச -
வைராக்கியத்தினாலும்
க்3ருஹ்யதே – மனதை
வசப்படுத்திவிடலாம்.
உதாரணமாக ஒன்றை செய்வது கடினம் என்று நினைத்து
அதை செய்ய ஆரம்பித்தால் அதை சுலபமாக செய்து முடித்துவிடலாம். ஏனெனில் கடினம் என்று
முன்பாகவே நினைத்துவிட்டால் எந்த செயலும் கடினமாகத்தான் இருக்கும். நாம் நம்மை தயார்படுத்திக் கொண்டு எந்த செயலை செய்தாலும்
அதை செய்து முடித்து விடலாம கடினமாக தெரியாது. மனதை கட்டுபடுத்துவது மிகவும்
கடினம்தான் ஏனென்றால் அதற்கு நான்கு காரணங்கள் உண்டு. அவைகள்
- மனம்
மிகவும் சூட்சுமமாக இருக்கின்றது
- மனதின்
சுபாவமே சஞ்சலமாக இருப்பதுதான், வெளிவிஷயங்களை நாடி செல்லுமாறு
படைக்கப்பட்டிருக்கின்றது
- மனதை ஒரு
பொருளாக பார்ப்பதே மிகவும் கடினம்.
நாம் வசப்படுத்த வேண்டிய பொருளாக பார்ப்பது கடினம்
- காலம்
காலமாக மனம் அதன் விருப்பப்படிதான் செயல்பட வைத்து விட்டோம். எனவே நம்
வசத்திற்கு கொண்டு வருவதற்கு மிகவும் கடினம்
இதை செயல்படுத்துவதற்கு சிலவிதமான பாவனைகளை
கொண்டு வரவேண்டும். பத்ரகிரி என்பவர்
தன்னுதை வைராக்கிய சதகம் என்ற நூலில் இந்த பாவனையை நன்கு கூறியிருக்கிறார். அவைகள்
மனதை கட்டுபடுத்துவது கடினம் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். எனவே மிக அதிகமான முயற்சி இதற்கு தேவை என்ற
அறிவுடன் இதை அணுகவேண்டும். பொறுமையுடன் நம் முயற்சியை வெற்றி அடையும் வரை தொடர
வேண்டும்.
வைராக்கியம் –
வெளிவிஷயங்களையே நாடிச் செல்லும் மனதை தடுத்து
நிறுத்த வேண்டும். பிறகு அந்த மனதை நம்
விரும்புகின்ற விஷயத்தில் நிலைபெற வைக்க வேண்டும். முதலில் நம் மனது எந்த விஷயத்தை அடிக்கடி
நாடிச் செல்லுகின்றது என்பதை பார்க்க வேண்டும்.
அந்த விஷயங்கள், பொருட்கள் தெரிந்துவிட்டால் அதில் வைத்திருக்கும் ஆசையை
நீக்க வேண்டும். இதையே வைராக்கியம் என்று கூறுவர். நம்மால் கொடுக்கப்பட்டிருக்கும்
மதிப்பை நீக்கிவிடுதலே வைராக்கியம். பிறகு
மனது அதை நாடிச் செல்லாது.
வைராக்கியத்தை எப்படி அடைவது? நாம் அதிக
விரும்பும் பொருட்களிலுள்ள குறையை நன்கு ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதன் மீதுள்ள
மதிப்பை நீக்க வேண்டும். இதுவே தோஷ தர்ஶனம் என்பதாகும். தோஷ தரிசன அப்யாஸம் என்பது மீண்டும் மீண்டும்
குறையை நினைத்துப் பார்க்க வேண்டும். இந்தக் குறைகளே ஒருவனை அடிமையாக்கி விடுகின்றது, இவைகள் நிலையற்றது,
துயரத்தை கொடுக்கும் தன்மையுடையது என்று தெரிந்து கொள்ள வ்ண்.
அப்யாஸம்
மீண்டும் மீண்டும் தொடர்ந்து பயிற்சி செய்தல்
(ஆவிருத்தி) மனதிற்கு ஒரு வேலை கொடுத்து அதை மட்டும் செய்யும் அளவுக்கு பழக்க
வேண்டும். வேறு எண்ணத்திற்கு செல்லும்போது அதை திரும்ப கொண்டு வந்து கொடுத்த
எண்ணத்தையே நினைக்க வைக்க வேண்டும்.
தீர்க்க கால – அதிகமான காலம்
நைரந்தர்ய – மீண்டும் மீண்டும்
ஸிரத்த அதிசனயஹ – முழுமையான சிரத்தையுடன்
க்ரியமானஹ யதினஹ – செய்யப்படுகின்ற முயற்சி
தியானத்தின் போது வரும் நான்கு தடைகளானது
விக்ஷேபம் (சஞ்சலம்), நித்திரை, கஷாயம், ரஸாஸ்வாதம் (யோக சூத்திரத்தில் கூறப்பட்ட
தடைகள்) ஆகியவைகள் ஆகும். முதல் தடையை
நீக்க மேற்கூறிய கருத்துக்களை பயன்படுத்த வேண்டும், இரண்டாவது தடையான உறக்கம் போதிய உறக்கம்
இல்லாமையினாலும், அதிக உணவு சாப்பிடுவதாலும். இதை நீக்க வேண்டும். மூன்றாவது தடையான கஷாயம் இது மனதிற்கு வருகின்ற
ஒருவிதமான மந்தநிலை. இதுதானாகத்தான் நீங்கும். அதுவரை பொறுமையாக இதை அனுபவித்து
தீர்க்க வேண்டும். தியானத்தின் போது
உள்மனதில் தொடர்பு கொள்வோம். இதிலுள்ள ஸம்ஸ்காரங்கள் வெளிவந்து மனதை ஜடத்தைப் போல்
மாற்றிவிடும். செயலற்ற நிலைக்கு கொண்டு செல்லும்.
நான்காவது தடையான ரஸாஸ்வாதமான தியானித்து கொண்டிருக்கின்ற மனம்
அமைதியடைந்துவிட்ட போடு அதையே அனுபவிக்க ஆரம்பித்துவிடுவோம். இதையையே தவிர்க்க
வேண்டும்.
असंयतात्मना योगो दुष्प्राप इति मे मतिः ।
वस्यात्मन तु यतता शक्योऽवप्रुमुपायतः ॥ 36 ॥
அஸம்யத ஆத்மனா யோகஹ துஷ்ப்ராப: - மனதை
வசப்படுத்த இயலாதவனால் நிதித்யாஸனம், ஞானநிஷ்டை அடையமுடியாது.
இதி மே மதி – இது என்னுடைய
கருத்து
து - ஆனால்
வஶ்யாத்மனஹ – மனதை
வசப்படுத்திய
உபாயதஹ – இங்கு
சொல்லப்பட்ட உபாயத்தை பயன்படுத்தி
யததா – முயற்சியை
செய்பவனால்
அவாப்ரும் ஶகய: - யோகத்தை, ஞானநிஷ்டையை அடைய முடியும்.
अर्जुन उवाच ।
अयतिः श्रद्धयोपेतो योगाच्चलितमानसः ।
अप्राप्य योगसंसिद्धिं कां गतिं कृष्ण गच्छति ॥ 37 ॥
அர்ஜுனர் கேட்கிறார்.
மனதை எப்படி வசப்படுத்த முடியும்? இந்த
முயற்சியில் தோல்வியடைந்தால் என்ன ஆகும்? போன்ற சந்தேகங்கள் அர்ஜுனன் மனதில்
எழுந்தன.
ஒருவன் கர்மயோகத்தினால் மனத்தூய்மை அடைந்து
ஞானயோகத்திற்கு வந்து சிரவண, மனனம் மூலம் ஞானத்தை அடைகின்றான். பிறகு அடைந்த ஞானத்தில் நிலைபெற
முயற்சிக்கின்றான். நிதித்யாஸனம் என்ற
சாதனத்தை பயன்படுத்த ஆரம்பிக்கின்றான். இந்த நேரத்தில் அவனால் அதை முடிக்க
முடியாமல் இறந்து விடுகின்றான். அவனுடைய நிலை என்ன? என்ன பலனை அடைவான்? என்று
அர்ஜுனன் பகவானிடம் கேட்கின்றான்.
அயதி – முழுமையடையாத
முயற்சியை செய்தவன், பலன் கொடுக்கும் வரை முயற்சி செய்யாதவன், அதாவது தியான
யோகத்தில் ஈடுபட்டு அதை முழுமையாக முடிக்க முடியாதவன், இவைகளெல்லாம் போதிய காலம்
இல்லாததினால் நேரிடலாம்.
இவனிடத்திலிருக்கின்ற வாஸனைகளின் பலத்தினால் அதன் பிடியில் இருந்து விடுபட
இயலாததனால் அல்லது சொல்ல முடியாத தடைகளினாலும் இது நேரிடலாம்.
ஶ்ரத்த4யா உபேதஹ – இவன் முழு
சிரத்தை உடையவன். நிதித்யாஸனத்தின் பலன் ஞான நிஷ்டைதான் என்பதில் முழு
நம்பிக்கையுடையவன்
யோகாத் சலித் மானஸஹ –
மரணத்தறுவாயில் யோகத்திலிருந்து விலகிய மனதை அடைந்த நிலைக்கு சென்றுவிட்டான். ஞானநிஷ்டை அடைவதற்கு முன்பே அதில் இருந்து மனம்
நழுவிவிட்ட நிலைக்கு சென்றவன்
அப்ராப்ய யோக ஸம்ஸித்தி4ம் – தியானத்தின்
பலனான மோட்சத்தை அடையாமல் போய்விட்டால்
காம் க3திம் க3ச்சதி க்ருஷ்ண – ஹே கிருஷ்ண
பகவானே! அவன் என்ன கதியை அடைவான்
कच्चिन्नोभयविभ्रष्टश्छिन्नाभ्रमिव नश्यति ।
अप्रतिष्टो महबाहो विमूढो ब्रह्मणः पथि ॥ 38 ॥
கச்சித் உப4ய விப்4ரஷ்ட – இரண்டு
வழிகளினின்று வீழ்ந்தவன் அதாவது கர்மத்தில் இருந்தும், ஞானத்திலிருந்தும்
அப்4ரதிஷ்ட: - எந்த ஆதாரமும்
இல்லாதவன். ( ஞானம் இது மோட்சத்திற்கு ஆதாரம் கர்மத்தை விட்டதினால் பாவ-புண்ணிய ஆதாரங்கள் இல்லாதவன் –)
மஹாபா4ஹோ – ஹே கிருஷ்ண பகவானே!
நீண்ட கைகளையுடையவரே!
விமூட ப்ரஹ்மண: பதி2 – மோட்சத்தை
(பிரம்மத்தை) அடைகின்ற மார்க்கத்தில் மோகத்தை அடைந்து விட்டவன், அதன் பலனை
அடையாதவன்
சின்ன அப்ரம் இல –
மேகக்கூட்டத்திலிருந்து பிரிந்த சிறிய மேகத்தைப்போல
ந நஶ்யதி – அழிந்துவிட
மாட்டானா
एतन्मे संशयं कृष्ण छेत्तुमर्हस्यशोषतः ।
त्वदन्यः सम्शयस्यास्य छेत्ता न ह्युपपद्यते ॥ 39 ॥
त्वदन्यः सम्शयस्यास्य छेत्ता न ह्युपपद्यते ॥ 39 ॥
ஏதன்மே ஸம்ஶயம் க்ருஷ்ண – ஹே கிருஷ்ண
பகவானே! என்னுடைய இந்த சந்தேகத்தை நீக்குவதற்கு
சே2த்தும் அர்ஹஸி அஶேஷதஹ – மீதியில்லாமல்
முழுமையாக போக்குவதற்கு நீங்களே தகுதியானவர், உங்களால்தான் முடியும்
த்வத் அன்யஹ – உங்களைத் தவிர
வேறொருவரால்
அஸ்ய ஸம்ஶயஸ்ய சேத்தா – இந்த
சந்தேகத்தை
ந உபபத்யதே - நீக்க முடியாது
श्रीभववानुवाच ।
पार्थ नैवेह नामुत्र विनाशस्तस्य विद्यते ।
न हि कल्याणकृत्कश्चिद् दुर्गतिं तात गच्छति ॥ 40 ॥
பார்த2 - ஹே பார்த்த!
இஹ ந அமுத்ர – இந்த
லோகத்திலும், பரலோகத்திலும், இம்மையிலும் மறுமையிலும்
ந ஏவ விநாஶ ந வித்யதே – அவனுக்கு
கண்டிப்பாக அழிவு என்பது கிடையாது
தாத - பிரியமானவனே
கல்யாண க்ருதி – நற்காரியங்களை
செய்தவன்
கஶ்சித் துர்கதி2ம் – ஒரு நாளும்
கீழான நிலையை
ந ஹி கச்சதி – அடைவதில்லை.
प्राप्य युण्यकृतां लोकानुषित्वा शाश्वतीः समाः ।
शुचीनां श्रीमतां गेहे योगभ्रष्टोऽभिजायते ॥ 41 ॥
ப்ராப்ய புண்யக்ருதாம் லோகான் – புண்ணியத்தை
உடையவர்கள் அடையக்கூடிய உலகத்தை அடைந்து
உஷித்வா ஶாஶ்வதீ: ஸமா: - அங்கு அதிககாலம் வாழ்ந்து
யோகப்ரஷ்ட – இந்த
யோகபிரஷ்டன் ( பிரம்மத்தை அடையும் முயற்சியில் தோல்வி அடைந்தவன் )
கே3ஹே ஶுசீனாம் ஸ்ரீமதாம் –
நல்லொழுக்கமுடைய செல்வந்தர்கள் வீட்டில்
அபிஜாயதே - பிறக்கின்றான்
இவ்வாறு முற்பிறவியில் முயன்று தோல்வியடந்த
பிரம்மத்தை அடையும் சாதனத்தை மீண்டும் தொடர்வதற்கான சூழ்நிலையில் பிறக்கின்றான்
ஞானி இறந்தபின்
பிரம்மத்தோடு ஐக்கியமாகி விடுவான். சாதாரண
ஜீவர்கள் புண்ணியங்கள் அதிகமாக இருந்தால் மேலான உலகத்திற்கு சென்று இன்பத்தை
அனுபவித்து, புண்ணியம் தீர்ந்ததும் மீண்டும் சஞ்சித கர்மத்திற்கேற்றவாறு மறுபிறவி
எடுப்பான். பாவங்கள் அதிகமாக இருந்தால்
கீழான உலகத்திற்கு சென்று துன்பத்தை அனுபவித்து விட்டு மறுபிறவியெடுப்பான்.
யோகபிரஷ்டனுக்கு வேதாந்த
சிரவணத்தால் அதிக்மான புண்ணியங்கள் சேர்ந்து இருப்பதால் மீண்டும்
மனிதப்பிறவியெடுப்பான். மனப்பக்குவத்துடன் பிறந்து முற்பிறவியில் விட்ட சாதனத்தை
மீண்டும் தொடர்வான். அதிக புண்ணியத்தால் அதிக சுகம் கொடுக்கு மேலான உலகத்தை
அடைந்து பல்லாண்டுகள் சுகத்தை அனுபவித்துவிட்டு மீண்டும் ஞான சாதனத்தை
தொடர்வதற்கேற்ற சூழ்நிலையில் மனிதனாக பிறந்து அதை தொடர்வான்.
अथवा योगिनामेव कुले भवति धीमताम् ।
एताद्धि दुर्लभतरं लोके जन्म यदीदृशम् ॥ 42 ॥
கடைசி படியில் வீழ்ந்துவிட்ட யோகபிரஷ்டனின்
நிலையை இதில் கூறுகின்றார்.
அதவா தீ4மதாம் – ஆத்ம ஞானத்தை
அடைந்த இன்னொருவன்
யோகினாம் ஏவ குலே ப4வதி – ஞானிகளுடைய குலத்தில் பிறப்பெடுக்கின்றான்
யத் ஈத்ருஶம் – இத்தகைய பிறப்பு
ஏதத் ஜன்ம துர்லபதரம் லோகே – இந்த
மாதிரியான பிறப்பு இவ்வுலகில் மிகவும் அரிதாகவே உள்ளது
तत्र तं बुद्धिसंयोगं लभते पौर्वदेहिकम् ।
यतते च ततो भूयः संसिद्धौ कुरुनन्दन ॥ 43 ॥
குருநந்தன – ஹே அர்ஜுனா!
குருவம்சத்தின் புதல்வனே!
தத்ர - இந்த ஜென்மத்தில்
தம் புத்திஸம்யோகம் – முற்பிறவியில்
அவன் எவ்வளவு மனப்பக்குவத்தை அடைந்தானோ,
லபதே – அதை
அடைகின்றான்
பௌர்வதேஹிகம் – முற்பிறவியில்
மனிதனாக இருந்து ஞானயோக முயற்சியில் எவ்வளவு தூரம் முன்னேறி இருந்தானோ அந்த
இடத்திலிருந்து மீண்டும் முயற்சியை தொடர்வான்
ஸ்ம்ஸித்தௌ4 – மோட்சத்தை
அடைவதற்கு, பிரம்ம நிஷ்டை அடைவதற்கு
யததே ச ததோ பூ4ய: - அந்த பக்குவத்திலிருந்து மீண்டும் முயற்சி
செய்வான்
पूर्वाभ्यासेन तेनैव ह्रियते ह्यवशोऽपि सः ।
हिज्ञासुरपि योगस्य शब्दब्रह्मातिवर्तते ॥ 44 ॥
முன் ஜென்மத்தில் செய்த சாதனத்தினாலேயே தன்
வசமிழந்தவனாகவே மோட்ச மார்க்கத்தை நோக்கி இழுக்கப்படுகின்றான்.
ஜிக்ஞாஸு அபி – மோட்சத்தை
அடைய விரும்புபவன் கூட
யோகஸ்ய - மோட்ச மார்க்கத்தினுடைய
ஶப்தப்ரஹ்ம அதி வர்ததே – கர்மங்களின்
பலனைப் பொருட்படுத்தாமல் கர்ம காண்டத்தை கடந்து செல்கின்றான்.
प्रयत्नाद्यतमानस्तु योगी संशुद्धकिल्बिषः ।
अनेकजन्मसंसिद्धस्ततो याति परां गतिम् ॥ 45 ॥
ப்ரயத்னாத்3 யதமானஹ யோகீ –
முழுமுயற்சியுடன் பயிற்சி செய்யும் சாதகன்
ஸம்ஶுத்3த4கில்பிஷ: - அனைத்து
பாவங்களும் நீங்கப்பெற்று
அனேக ஜன்ம ஸம்ஸித்த: - பல
பிறவிகளிலும் ஏற்பட்ட மனப்பதிவுகளின் வலிமையால் இப்பிறவியிலேயே மனத்தூய்மை அடைந்து
ததஹ யாதி பராம் க3திம் – இறுதியில்
மேலான கதியை (மோட்சத்தை) அடைகிறான்.
கர்மயோகிàஉபாஸகன்àவேதாந்த சிரவணம்àமனனம்àநிதித்யாஸனம் àஞானநிஷ்டை
तपस्विभ्योऽधिको योगी ज्ञानिभ्योऽपि मथोऽधिकः ।
कर्मिभ्यश्चाधिको योगी तस्मद्योगी भवार्जुन ॥ 46 ॥
ஹே அர்ஜுனா!
தபஸ்விப்4ய அதிகஹ யோகீ – ஞானமில்லாமல்
தவத்தை செய்பவர்களைக் காட்டிலும், உபாஸகர்களை காட்டிலும் உயர்ந்தவன்
ஞானிப்4ய அபி மதோ2 அதி4கஹ – சிரவணம்
செய்து கொண்டிருப்பவனைக் காட்டிலும் மேலானவனாக கருதப்படுகின்றான்.
கர்மிப்4ய ச அதி4கஹ யோகீ – கர்மத்தை
செய்து கொண்டிருப்பவனைக் காட்டிலும் நிதித்யாஸகன் உயர்ந்தவன்
தஸ்மாத் யோகீ பவ அர்ஜுன! – எனவே நீ
யோகியாக உயர்வாயாக அர்ஜுனா!
योगिनामपि सर्वेषां मद्गतेनान्तरात्मना ।
श्रद्धावान्भजते यो मां स मे युक्ततमो मतः ॥ 47 ॥
தியானம் செய்பவர்களில் யாரொருவன் என்னிடம்
ஈடுபாடு கொண்ட மனதுடனும் சிரத்தையுடனும் என்னை நாடுகின்றானோ, அடைய முயற்சி
செய்கின்றானோ, அவன் என்னால் மிகவும் உயர்ந்தவனாக கருதப்படுகிறான்
தொகுப்புரை
இதில் ஆறுவகையான கருத்துக்களை
கூறியிருக்கிறார்.
01-32 1. பகிரங்க சாதனம், 2. அந்தரங்க சாதனம், 3.தியான
ஸ்வரூபம், 4.தியான பலன்
32-47 5. தியானத்திற்கு வரும் தடைகளும் அதை நீக்கும்
உபாயங்கள், 6. யோகபிரஷ்டனை பற்றியது
01-06 பகிரங்க சாதனத்தை பற்றிய கருத்துக்கள்.
கர்மயோகத்தை பகிரங்க சாதனாக கூறினார்.
ஆருருக்ஸு – ஞானயோகத்திற்கு வர விரும்புவனுக்கு கர்மயோகம் சாதனமாகின்றது.
அதைக் கண்டு செய்தவுடன் கர்மங்களை விட்டுவிட வேண்டும். இந்த நிதித்யாஸன சாதனையின் போது தனக்கு தானே
முயற்சி செய்து உயர்த்திக் கொள்ள வேண்டும். இந்த நிலையில் எங்கிருந்து
யாரிடமிருந்தும் உதவி பெற முடியாது
07-09 தியானப்பலன் கூறப்பட்டிருக்கிறது. இதன் பலனாக
சமநோக்கு என்ற குணம் சுபாவமாக இருக்கும்
10-14 அந்தரங்க சாதனம் பற்றிக் கூறப்பட்டது. தியானம் செய்வதற்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள
கூறினார். இடம், சூழ்நிலை, இருக்கை
ஆகியவைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை கூறினார்.
15 தியானப்பலன் கூறப்பட்டது. மனசாந்தியுடன்
இருப்பது
16-17 மீண்டும் பகிரங்க சாதனம் கூறப்பட்டது. ஆகாரம்,
உறக்கம், செயல்கள் அனைத்தும் அளவுடன் இருக்க வேண்டும்.
18-19 தியான ஸ்வரூபம் விளக்கப்பட்டது. தியானத்திற்குரிய விஷயம் நிர்குணமான பிரம்மனே.
காற்றில்லாத இடத்தில் அசையாது இருக்கும் சுடர்போல மனம் அமைதியாக இருக்கும்
20-23 தியானத்தின் பலன்களை ஜீவன் முக்தியின் லட்சணமாக
கூறினார். மனதானது நம்மிடத்து எளிதாக வசம்
வந்துவிடும். ஆத்ம தர்ஶன – மனநிறைவு, மேலான சுகத்துடன் இருப்பான். புலன்களாலே
மனதினாலே வந்த சுகங்கள் அல்ல அவைகள்.
அடைந்த ஞானத்தில் நிலைபெற்றிருக்கும். ஆனந்தத்தின் எல்லையை அடைதல்,
கடினமான, துயரமான சூழ்நிலைகளிலும் மனம் சஞ்சலமற்று இருத்தல், துயரத்திலிருந்து
தன்னை பிரித்துக் கொண்டு இருத்தல்
24-26 தியான ஸ்வரூபம் – அனாத்மா விஷயத்தையை எடுத்தல்,
ஆத்ம விருத்தியை வைத்துக் கொள்ளுதல்
27-32 தியானத்தினுடைய பலன் ஸர்வாத்மபாவஹ. தன்னை
எல்லா ஜீவராசிகள் இடத்திலும், தன்னிடத்தில் அவைகளனைத்தையும் பார்த்தல்
33-36 அர்ஜுனனுடைய கேள்வியும், பகவான் பதிலும் இதில்
அடங்கியிருக்கிறது. மனம் சஞ்சலத்துடன்
இருக்கின்றதே என்ற கேள்விக்கு மனதின் இயற்கையான சுபாவம் இது. இதனை அப்யாஸத்தாலும்
வைராக்கியம் என்ற சாதனத்தை பயன்படுத்தியும் அமைதிப்படுத்தலாம்.
37-47 ஞானமார்க்கத்திற்கு வந்து வெற்றியடையாமல்
இறந்துவிட்டால் அவனுடைய நிலைய பகவான் விவரித்திருக்கின்றார். இவனையே யோகப்ரஷ்டன்
என்று கூறப்படுகின்றது
ॐ तत्सदिति