Showing posts with label சாந்தோக்ய உபநிஷத்-07. Show all posts
Showing posts with label சாந்தோக்ய உபநிஷத்-07. Show all posts

Wednesday, November 21, 2012

சாந்தோக்ய உபநிஷத்-அத்யாயம்-7

சாந்தோக்ய உபநிஷத்-அத்தியாயம்-7
ஸ்வாமி குருபரானந்தா உபதேசம் விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது18-03-2022
பூம வித்யா
 
இந்த அத்தியாயத்தில் சொல்லப்படும் கருத்துக்களின் சாரம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.
·         சாகா சந்திர நியாயம்: மூன்றாம் பிறையை மரக்கிளையைக் காட்டி பிறகு தெரிய வைக்கும் உத்தி
·         ஆனந்தம்தான் பிரம்மஸ்வரூபம் என்று எடுத்துக்கொண்டு பிரம்மத்தை உணர வைத்தல்
·         பிரம்ம ஞானத்தை அடைய வேண்டுமென்றால் குருவின் உபதேசம் மூலமாகத் தான் முயற்சி செய்ய வேண்டும்.
·         நடுநிலை அதிகாரிகளுக்கு சில பண்புகள் தேவை, அதையும் இந்த அத்தியாயத்தில் விளக்கப்படுகிறது.
·         குருவிடம் எப்படிப்பட்டவனாக செல்ல வேண்டும் என்பதையும் எடுத்துரைக்கிறது

காண்டம்-1
பகுதி 1-15     பிரம்ம பிராப்தி ஸோபானம் - பிரம்மத்தை அடைவதற்கு உதவும் பதினைந்து படிகள் கூறப்படுகிறது.
பகுதி 16-22         அதிகாரத்துவ குணங்கள்
பகுதி 23-26         பூம வித்யா பற்றிய விளக்கம்
 
1.      நாரதர் சனத்குமார் என்கின்ற குருவை அடைந்து, “பகவானே ஆத்ம ஞானத்தை உபதேசம் செய்யுங்கள், என்று வேண்டிக்கேட்டார். சனத்குமாரரும் அதற்கு இசைந்து, “முதலில் நீ எதையெல்லாம் அறிந்து வைத்திருக்கிறாயென்று எனக்கு சொல், நான் அவையெல்லாம் தவிர்த்து அதற்கு மேலானதையெல்லாம் உபதேசிக்கிறேன் என்று கூறினார்.
2.      நாரதர் அவருக்கு தெரிந்ததையெல்லாம் கூறத்தொடங்கினார். எனக்கு நான்கு வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், மொழி இலக்கணம், கணிதசாஸ்திரம், சகுண அறிவு, தர்க்கம், நீதி சாஸ்திரம், வான சாஸ்திரம், சொல் இலக்கணம், வேதத்தை புரிந்து கொள்ளக்கூடிய அங்கங்கள், ஜோதிடம் மற்றும் ஆய கலைகள் அறுபத்திநான்கு ஆகியவைகளெல்லாம் தெரியும் என்று முடித்தார்
3.      இவைகளெல்லாம் வெறும் வார்த்தைகள்தான் என்று அறிந்திருக்கிறேன். ஆனால் ஆத்ம ஞானத்தை இன்னும் அடையாதவனாக இருக்கிறேன். உங்களைப் போன்ற ஞானிகளின் மூலமாக ஆத்மாவை அறிந்தவன் எல்லா துயரங்களையும் வென்றவன்.  நான் மிகவும் ஆழ்ந்த துயரத்தில் இருக்கிறேன். என்னை இந்த துயரத்திலிருந்து காப்பாற்றுவீர்களாக என்று நாரதர் வேண்டினார்.
             
சனத்குமாரர் கூறத்தொடங்கினார்,நீ எதையெல்லாம் அறிந்து வைத்து இருக்கிறாயோ அவையெல்லாம் வெறும் வார்த்தைகள்தான், சப்தங்கள்தான்.
 
ஆத்ம ஸ்துதி – இந்த ஞானத்தை அடைய வேண்டும் என்ற உந்துதல் வேண்டும். நம்மிடம் இருக்கின்ற அறிவினால் எல்லா துயரங்களையும் நிரந்தரமாக போக்கி ஆனந்தத்தை தர இயலாது என்று மனதார அறிய வேண்டும். இவ்வாறே நாரதரின் மனநிலை இருந்தது.  குருவிடம் செல்லும் போது நம்மிடையே உள்ள அறிவை எல்லாம் நீக்கி விட்டு செல்ல வேண்டும். ஒருவன் ஒரு பிறவியில் ஒரு விஷயத்தில்தான் நிஷ்டையடைய முடியும்.

 

ஆத்மாவை அறிந்தவன் துயரத்தை அனுபவிப்பதில்லை.  அக்ஞானம்தான் சோகத்திற்கு காரணம், தன்னை அறியாததுதான் அக்ஞானம் என்று கூறப்படுகிறது.  சோகம் என்பது எதிலும் நிறைவின்மை, அடைய வேண்டியது நிறைய இருக்கிறது என்று நினைத்தல்.  ஆத்மாவை அறிந்தவன் இந்த நிறைவின்மையை நீக்கி விடுகிறான்
4.      நாமத்தை பிரம்மமாக உபாஸனை செய்ய வேண்டும். நாமத்தின் தாத்பர்யம் அது ஒரு சப்தம், அது அர்த்தத்தை கொடுக்கிறது, விவகாரத்திற்குட்பட்டது. விகாரம் என்பது காரியம், காரியம் மித்யா.  நாரதரின் அறிவெல்லாம் வெறும் சப்தமே.
5.      யார் நாமத்தை பிரம்மமாக உபாஸனை செய்கிறார்களோ அவர்கள் இரண்டு விதமான பலன்களை அடைவார்கள். ஒன்று நிஷ்காம உபாஸனை இது அடுத்த படிக்கு எடுத்துச் செல்லும் அதுதான் முமுக்ஷுத்வம். இரண்டாவது சகாம உபாஸனை - இது யார் பிரம்மத்தை நாமமாக உபாஸனை செய்கிறார்களோ அவர்களுக்கு எந்த அளவுக்கு செய்தார்களோ அந்த அளவுக்கு பலன் கிடைக்கும்.
 
நாரதர் - நாமத்தை விட பெரியதாக ஏதாவது இருக்கிறதா?
குரு   - இருக்கிறது
நாரதர் - அதை எனக்கு உபதேசம் செய்யுங்கள்.
குரு   - செய்கிறேன்
 
பூ4ய - பெரியது;
ஸத்யம் உத்கிருஷ்  - தத்துவம் மேலானது;
பிரம்மன ஸாமீப்யம் - பிரம்மத்திற்கு அருகில்

 

காண்டம்-‍2
1.       நாமத்தை விட பெரியதாக இருப்பது வாக்கு (பேச்சு).  வாக்கினால்தான் எநத அறிவையும் அடைய முடியும். இதன்மூலம்தான் இன்ப துன்பங்களை அடைய முடியும்.  நாம் அடையும் அறிவானது கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்படுகிறது.
a.  வேத, இதிகாச, புராணங்களிலிருந்து அறிவை அடைதல்
b.  பஞ்ச பூதங்களைப்பற்றிய அறிவை அடைதல்
c.  தேவ, மனித, விலங்குகள், பறவைகள், மரச்செடி, கொடிகள், புழு மற்றும் பூச்சிகள் பற்றிய அறிவை அடைதல்
d.  தர்ம-அதர்மம், உண்மை-பொய், இன்ப-துன்பம் ஆகியவற்றின் அறிவை அடைதல்
வாக்கு இல்லாமலிருந்தால் இவைகளையெல்லாம் நம்மால் அடைந்திருக்க முடியாது.  வாக்குதான் இவையனைத்தையும் பற்றிய அறிவை கொடுக்கிறது. எனவே வாக்கை பிரம்மமாக உபாஸனை செய்வாயாக என்று குரு கூறினார். இதனால் அடைகின்ற சகாம பலனானது எதையும் சாராதிருக்கும் சக்தியை அடைவதாகும்.
 
நாரதர் - வாக்கை விட பெரியதாக ஏதாவது இருக்கிறதா?
குரு   - இருக்கிறது
நாரதர் - அதை எனக்கு உபதேசம் செய்யுங்கள்.
குரு   - செய்கிறேன்

 

காண்டம்-‍3
வாக்கை காட்டிலும் மேலானது மனம்தான். இதனுடைய லட்சணம் சங்கல்ப, விகல்பம் உடையது. மனதில் அதை பேசலாம், இதை செய்யலாம் போன்ற விருப்பங்கள் இவைகள் வந்துகொண்டே இருக்கும்.. இவைகள் நான்கு நிலைகளாக இருக்கலாம். அவைகள்,
·   ஆசையாக மட்டும் இருத்தல்
·   சிந்தனையை மட்டும் தூண்டி விட்டுவிட்டு அப்படியே அடங்கி விடுதல்
·   வாக்கிலே வெளிபடுதல்
·   செயலிலே வெளிப்படுதல்
போன்றவைகளாகும்.
 
நமது உள்ளங்கையில் இரண்டு சிறிய பழங்கள் வைத்திருக்க முடிகிறதென்றால் அந்தளவுக்கு உள்ளங்கையில் இடமானது என்று அறியமுடிகிறது.  அதுபோல மனமானது அதிகமாக வியாபித்திருப்பதால், வாக்கையும், நாமத்தையும் மனமானது அனுபவிக்கிறது.
·   ஒருவன் மந்திரத்தை உச்சரித்துக்கொண்டிருப்பேன் என்று இச்சைக்கொண்டு அதை செய்து கொண்டிருப்பான்.
·   சிலர் அகர்த்தவாகவும், அபோக்தாவாகவும் உள்ள நான் இந்த இச்சா மனதினால் கர்த்தாவாகவும், போக்தாவாகவும் இருந்துகொண்டு இன்ப துன்பங்களை அனுபவிக்கிறேன்.
·   ஒவ்வொருவருடைய மனதில் எந்த உலகத்தை அடைய வேண்டும் என்ற ஆசை உள்ளதோ அதை இந்த இச்சா காரணமாக அடைந்தே தீருவோம். இங்கே இச்சை சாதனம், நாம் எதை அடைந்தோமோ அது சாத்தியமாக இருக்கிறது.
·   நாம் எதை அனுபவித்துக்கொண்டிருக்கிறோமோ அது ஒரு காலத்தில் நம்மால் ஆசைபடப்பட்டதாகும்.
சகாம பலன் எவ்வளவு தீவிரமாக உபாஸிக்கிறோமோ அவ்வளவு தூரம் வியாபிக்க முடியும்.  அதனால் விரும்பியதை அடையலாம்.
நிஷ்காம பலன்  அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும்.
 
காண்டம்-‍4
மனதை விட பெரியது சங்கல்பம். இப்படி செய்யலாம் அல்லது செய்ய வேண்டாம் என்று பார்க்கின்ற சக்தியுடைய மனதிலுள்ள எண்ணம். நல்லது எது கெட்டது எது என்று பிரித்துப்பார்க்கும் சக்தி. இதன் அடிப்படையில்தான் கிரமமாக பிரவிருத்தியில் ஈடுபடுவோம்.  எனவே எது செய்ய வேண்டும் என்று விரும்புகிறோமோ அதை சங்கல்பம் செய்து விட வேண்டும். இதை வைத்துத்தான் மனதானது செயலில் இறங்கும்.
 
உபசாரம் - கற்பனை செய்து விளக்குதல்
 
இந்த உலகத்தில் உள்ள பொருட்கள் எல்லாம் நான் இப்படித்தான் இருப்பேன் என்ற சங்கல்பத்தினால்தான் அவைகள் அப்படி தோன்றுகின்றன. மழை நான் இப்படித்தான் நீராக பொழிவேன் என்ற சங்கல்பத்தினால் அது அவ்வாறாக பெய்து கொண்டிருக்கிறது. அதேபோல பஞ்சபூதங்கள் அவைகளது சங்கல்பத்தினால்தான் அந்தந்த குணங்களைப் பெற்று தோற்றமளிக்கிறது.
 
எல்லோருக்கும் அறிந்தோ, அறியாமலோ அவர்கள் செய்த சங்கல்பத்தினால்தான் அவர்கள் வாழ்க்கை முறை அமைந்திருக்கிறது. எனவே நாம் உயர்ந்த தர்ம வாழ்க்கை வாழ வேண்டுமென்றால் முதலில் சங்கல்பத்தை செய்தாக வேண்டும்.  பிறகு எல்லாமே கிரமமாக நிறைவேற்றப்பட்டு நினைத்த மாதிரி வாழ்க்கை நெறியை அமைத்துக் கொள்ளலாம்.
 
சகாம பலன் இப்படி சங்கல்பத்தை பிரம்மம் என்று எண்ணி தியானித்தால், நாம் சங்கல்பம் செய்ததை அடைந்தே தீருவோம்.
 
காண்டம்-‍5
சங்கல்பத்தை விட பெரியது சித்தம். சித்தம் என்றால் சரியாக புரிந்து கொள்ளுதல் (Understanding the environments and  things).  நமக்கு துன்பம் வருவது நாம் சரியாக சூழ்நிலையை புரிந்து கொள்ளாததே காரணமாகும்
 
1. ந்த நேரத்தில் அமைந்த சூழ்நிலைக்கேற்றவாறு விஷயங்களை புரிந்து கொள்ளுதல்,  சூழ்நிலைக்கேற்றவாறு நடந்து கொள்ளுதல்
2. அதீதம், அனாகம விஷய பிரயோஜன நிரூபணஹ.. கடந்தது, வரப்போவது இவைகளின் பயனை உணரும் சக்தி.
 
ஒருவன் பலநூல்களைக் கற்று வித்வானாக இருந்தாலும், தாம் கற்றதின் சாராம்சத்தை அறியாதவராகவும், அதை சூழ்நிலைக்கேற்றவாறு மற்றவர்களுக்கு எடுத்துரைக்க இயலாவிட்டால் அவன் கற்றதினால் ஒன்றும் பயனில்லை. ஒருவன் கற்றது சிறியதாக இருந்தாலும் அதை சரியாக புரிந்து கொண்டு மற்றவர்களுக்கு தெளிவாக விளக்கும் திறனிருந்தால் அவனை வித்வானாக ஒப்புக்கொள்ளப்படுகிறது.
 
சகாம பலன் இப்படி சித்தத்தை பிரம்மமாக தியானித்து கொண்டு இருப்பவர்கள் நிலையான பயமற்ற, சித்தத்தை நன்கு புரிந்து கொண்டும் அப்படியே வாழ்ந்து கொண்டும் இருப்பவர்கள் உலகத்தை அடைவார்கள்.
 
காண்டம்-‍6
சித்தத்தை விட மேலானது தியானம். தியானம் என்பது உற்று நோக்கும் திறன், மனதை ஒருமுகப்படுத்துதல். ஒருவன் சூழ்நிலையை சரியாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால் மனம் அமைதியாக இருக்க வேண்டும். இந்த மன அமைதி தியானத்தினால்தான் கிடைக்கும்.  நம் மனதில் அமைதி இருக்கும்போது பார்க்கும் பொருட்களெல்லாம் அமைதியாக இருப்பது போல் தோற்றமளிக்கும்.
 
Contemplate means Think intently and at length, as for reflection of certain Duties mentioned in the Scriptures.  This is what is called concentration.  The greatness of contemplation is actually is seen in its results.
 
பதவி, பொன், பொருளால் புகழுடன் விளங்குபவர்கள் அனுபவிக்கும் இன்பமானது, தியானத்தின் மூலம் அடைகின்ற பலனில் சிறு துளிதான் என்று உபநிஷத் தியானத்தின் பெருமையை உபதேசிக்கிறது.
 
தியானம் செய்யாதவர்கள் கலகத்தில் ஈடுபடுவார்கள், சண்டை போடுபவர்களாக இருப்பார்கள், மற்றவர்களை குறைக் கூறிக் கொண்டேயிருப்பார்கள். மற்றவர்களிடம் இருக்கும் குறையை அறிவது ஞானம், ஆனால் அதைப் பற்றியே பேசி மகிழ்ந்து கொண்டிருப்பவர்கள், பொய் கூறி ஏமாற்றுபவர்களாக அல்லது மற்றவர்களை துன்பத்தில் ஆழ்த்தி மகிழ்ந்து கொண்டிருப்பவர்களாக இருப்பார்கள்.  எனவே தியானத்தை பிரம்மம் என்று தியானிக்க வேண்டும்.
 
சகாம பலன் இப்படி தியானிப்பவர்கள் அடையும் பலன், அவர்கள் அறிவும், ஞானமும் உள்ள உலகத்தை அனுபவிப்பார்கள்.  ஞானம் என்பது வேதங்கள் உபதேசிக்கும் தத்துவ ஞானம்.
 
காண்டம்-‍7
தியானத்தை காட்டிலும் மேலானது விக்ஞானம்.
 
விக்ஞானம்:  தியானம் போன்றவற்றை எப்படி முறையாக செய்ய வேண்டும் என்ற ஞானம். பிறகு அதனால் கிடைக்கும் பலன், கிடைக்காத பலன், எவ்வளவு நாள் செய்ய வேண்டும் என்ற அறிவும் இருக்க வேண்டும்.
 
எந்த சாதனையை உபயோகிக்க வேண்டுமென்றாலும், முதலில் அதை சரியாக உபயோகிக்கும் முறையைப் பற்றிய அறிவை அடைந்த பின்னர்தான் அதை உபயோகிக்க ஆரம்பிக்க வேண்டும்.
இந்த ஞானத்தை அடைந்தவர்கள் அடையும் பலனானது என்னவென்றால், அறிவும், வேத ஞானமும் உடைய மனிதர்கள் வாழும்  இடத்தில் வசிப்பார்கள்.
 
காண்டம்-‍8
பரிசரன் – சேவை
உபஸத்த - குருவுக்கு பிரியமானவன்

விக்ஞானத்திற்கு மேலானது சக்திதான்.
தேகம்பலத்தோடு இருந்தால்தான் உலக விவகாரங்களில் ஈடுபட முடியும். மனோபலம் நம்மை தீய சக்திகளிடமிருந்து காத்துக்கொள்ள உதவுகிறது. புத்திபலம் சூட்சும விஷயங்களை புரிந்துக்கொள்ள உதவுகிறது. எவையெல்லாம் விக்ஞானத்தை அடைவதற்கு உதவி புரிகின்றதோ அவையெல்லாம் இந்திரியபலம். எல்லா பலத்தையும் உடைய ஒருவன் நூறு அறிவுடையவர்களை பயமுறுத்தும் சக்தியுடையவர்களாக இருப்பான்.  தேகம் பலத்தோடு இருந்தால்தான், குருவைத்தேடி அவரிருக்கும் இடத்தை அடைந்து பணிவிடை செய்ய முடியும்.  குருவுக்கு சேவை செய்வது மூலம் தன்னுடைய பணிவை உணர்த்துவதன் மூலம் அவருடைய பிரியமான சிஷ்யனாகிறான்.


குரு உபதேசிக்கும்போது முழு கவனத்துடன் கேட்க வேண்டும்.  இப்படி கவனத்துடன் கேட்டவற்றை சிந்தித்துப்பார்த்து அதில் நிலைப்பட வேண்டும்.
 
மந்தா      குருவின் வார்த்தையை மீண்டும் மீண்டும் சிந்தித்தல்
போத்தா    சரியாக புரிந்து கொண்டவனாகிறான், மீண்டும் மீண்டும் சிந்திப்பதால் அறிவை அடைகிறான்.
கர்த்தா     இவ்விதம் அறிந்த அறிவின் மூலம் அதனை செயல்படுத்த தொடங்குவான்.
விக்ஞாதா  செயல் மூலம் பலனை அடைகிறான்.
 
இவையெல்லாம் கிரமமாக செய்வதற்கு சக்தி வேண்டும்.
 
காண்டம்-‍9
உணவே சக்தியைக்காட்டிலும் மேலானது.  இது எல்லாவகையான சக்திக்கும் காரணமாக இருக்கிறது. இது பிருத்வி பூதத்தை குறிப்பாக உணர்த்துகிறது. பத்து நாட்களுக்கு உணவு உண்ணாமல் உயிரோடு இருக்கும் ஒருவனால் பார்க்க முடியாது, கேட்க முடியாது, எதையும் புரிந்துக்கொள்ளும் சக்தியை இழந்திருப்பான்.  ஆனால் உணவை உண்டபின் அவனுக்கு இழந்த சக்தியெல்லாம் திருமப அடைந்தவனாகிறான்.  உணவையே பிரம்மமாக தியானித்து கொண்டு இருப்பவர்கள் நல்ல உணவும், நீர் வகைகள் உள்ள உலகத்தை அடைந்து இன்பமாக இருப்பார்கள்.
 
காண்டம்-‍10
உணவைக் காட்டிலும் மேலானது நீராகும்.
 
இது நீர் தத்துவத்தை குறிக்கும். மேலும் நீரானது உணவுக் கிடைப்பதற்கு காரணமாகிறது. இது உலகத்திலுள்ள அனைத்துனுடைய தோற்றம் உருவாவதற்கு காரணமாகவும் இருக்கிறது.  இப்படிபட்ட நீரை பிரம்மமாக தியானித்து கொண்டு இருப்பவர்களுக்கு எல்லா விருப்பங்களும் நிறைவேறும்.

காண்டம்-‍11
நீரைக் காட்டிலும் மேலானது நெருப்பாகும். இது நீருக்கு காரணமாக இருக்கிறது. இது  வாயுவை சூடாக்குவதால் மக்கள் காற்று மண்டலம் சூடாக இருப்பதாக உணர்ந்து இன்று மழை வரலாம் என்று கூறுவர். மேலும் இடி, மின்னல் உருவாகி மழை வருவதற்கு காரணமாகிறது.  இப்படிப்பட்ட சக்தியை உடைய அக்னியை பிரம்மமாக உபாஸனை செய்தால், அவர்கள் தேஜஸான உடலைப்பெற்று, தேஜஸான உலகத்தை அடைந்து இன்பமாக இருப்பார்கள்.
 
காண்டம்-‍12
அக்னியைக் காட்டிலும் மேலானது ஆகாயம்.  மற்ற நான்கு பூதங்களும் இதிலிருந்துதான் தோன்றியுள்ளது.  சூரியனும், சந்திரனும் ஆகாசத்தில்தான் காட்சியளிக்கிறது. ஆகாசத்தின் இருப்பினால்தான் நாம் பேசுவது பிறரால் கேட்க முடிகிறது. நாம் அனுபவிக்கும் சுக, துக்கங்களுக்கும், உயிரினங்கள் தோன்றி மறைவதற்கும் காரணமாக இருப்பதும் இதுவேதான்.  எனவே ஆகாசத்தை பிரம்மமாக உபாஸிக்க வேண்டும். இதை உபாஸிப்பவர்கள் அடையும் பயனாவது மிகவும் பெரிய இடத்தையும், ஒளியுடன் கூடியதும், எந்த குறைகளும் இல்லாத உலகத்தை அடைந்து இன்பமாக இருப்பார்கள்.
 
காண்டம்-‍13
ஞாபகசக்தி ஆகாசத்தை காட்டிலும் மேலானது.
 
நம்மைச்சுற்றி நமக்கு நன்கு தெரிந்தவர்கள் இருந்தாலும் நினைவு இல்லையென்றால் அவர்களிடம் உரையாட முடியாது, யாரென்றும் அறியவும் முடியாது, சிந்திக்க முடியாது. ஆனால் ஞாபகசக்தி வந்துவிட்டால் எல்லாமும் நன்றாக தெரியவரும்.
 
எனவே ஞாபகசக்தியை பிரம்மமாக உபாஸிக்க வேண்டும். இதை உபாஸிப்பவர்கள் அடையும் பயனாவது இது எவ்வளவு தூரம் வியாபித்திருக்கிறதோ அவ்வளவு தூரம் வியாபிக்கும் திறனடைவார்கள்.
 
காண்டம்-‍14
ஆசையானது ஞாபகசக்தியை காட்டிலும் மேலானது. ஆசையின் தூண்டுதலால்தான் எதுவும் நம் நினைவுக்கு வரும்.  பிறகு அதை நிறைவேற்ற செயலில் இறங்குவோம். அதன் பலனை அடைவோம்.  ஆசையினால்தான் எல்லா விருப்பங்களும் நிறைவேறுகின்றது. 
 
எனவே ஆசையைப் பிரம்மமாக உபாஸிக்க வேண்டும். இதை உபாஸிப்பவர்கள் அடையும் பயனாவது இது எவ்வளவு தூரம் வியாபித்திருக்கிறதோ அவ்வளவு தூரம் வியாபிக்கும் திறனடைவார்கள்.
 
காண்டம்-‍15
ஆசையை காட்டிலும் மேலானது பிராணன். ஹிரண்யகர்ப்பன், அனைத்து சூட்சும பூதங்களுக்கு ஆதாரமாக இருக்கிறார். இவரே ஸர்வாத்மாவாக இருக்கிறார். விராட் அனைத்து ஸ்தூல ஆதாரமாக இருக்கிறார். இந்த உலகிலுள்ள ஜீவர்கள் அனைவரும் ஹிரண்யகர்ப்பனாகவே பாவிக்கப்படுகிறது. (உ-ம்) மாதா, பிதா, சகோதரன், போன்றவர்கள் எல்லாமே ஒன்றுதான்.
 
பெரியவர்களை மரியாதையின்றி பேசுவது அவர்களை கொன்று விடுவதற்கு சமமாக கருதப்படும்.  இப்படிப்பட்டவர்களை சான்றோர்கள் ஒதுக்கி வைப்பார்கள்.  ஆனால் இறந்து விட்ட தாய், தந்தை இவர்களின் உடலை தீயிலிட்டு கொளுத்தினால் யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.  ஏனென்றால் பிராணனானது உடலை விட்டு சென்று விட்டதால் இறந்த உடலுக்கு அந்த மரியாதை கொடுக்காவிட்டால் குறையேதும் இல்லை.
பார்த்தல், பிறகு சிந்தித்தல் அதனால் நிச்சயம் செய்யப்படுவது, அனைத்து அனாத்மா விஷயங்களை தாண்டி பேசுபவன் அதிவாதி என்று அழைக்கப்படுவான்.  யாராவது அதிவாதியைப் பார்த்து, “நீங்கள் உங்கள் நிலையிலிருந்து எங்கள் நிலைக்கு இறங்கி வந்து பேச வேண்டும், என்று கேட்டால், நான் இந்த நிலையிலிருந்துதான் பேசுவேன் என்று பதிலளிக்க வேண்டும்.
 
காண்டம்-‍16
முமுக்ஷுத்வம் தீவிரமாகி விட்டால்தான் அது செயலுக்கு வருகிறது. எவ்வளவு கஷ்டம் வந்தாலும் பொறுத்துக்கொள்ளுதல், எவ்வளவு தடைகள் வந்தாலும் முயற்சி செய்து அதை நீக்கி முன்னேறுதல், இதற்காக தியாகங்களை செய்தல் போன்றவை பரபிரம்மத்தை அடைவதில் உள்ள தீவிரத்தை காட்டுகிறது.  யார் பிரம்மத்தை அறிந்து பேசுகிறாரோ அவரை அதிவாதி என்று அழைப்பர்.  பிரம்மத்தை அடைவதுதான் முடிவான இலட்சியமாக கொண்டிருக்க வேண்டும்.
 
காண்டம்-‍17
விஞ்ஞானத்தை அடைய முயற்சி செய்யவேண்டும்.  விஞ்ஞானம் என்பது பிரம்மத்தைப் பற்றிய அறிவாகும். அதை அறிந்தவனால்தான் சத்தியத்தைப்பற்றி பேச முடியும். இதை அடைவது எப்படி? அதற்குரிய சாதனம் என்ன? என்று கேட்டால், விசாரம்தான் ஞானத்தை அடைய உதவும் சாதனம். ஏன் விசாரம் தேவை? எதை, எப்பொழுது விசாரம் செய்ய வேண்டும்?
 
காண்டம்-‍18
விசாரத்தின் தேவை:
நான் சம்சாரியா, அசம்சாரியா என்று சந்தேகம் வந்தால் நம் அனுபவத்தின் அடிப்படையில் அறிந்து கொள்ளலாம்.  வேதம் ஜீவர்களை பூரணமானவர்கள், அழிவற்றவர்கள் என்று உரைக்கிறது.  அதே வேதம் கர்ம காண்டத்தில் சம்சாரி என்ற பாவனையில் சில இடங்களில் போதிக்கிறது. இதைத்தான் விசாரம் செய்தறிய வேண்டும்.  நான் என்னை யார் என்று நினைக்கிறேன்.  நம் அனுபவம் நம்மை சம்சாரி என்று உணர்த்துகிறது. எனவே இரண்டு பிரமாணங்கள் இரண்டு விதமான அர்த்தத்தை கொடுக்கும்போது விசாரம் அவசியமாகிறது.
 
எதை விசாரம் செய்வது:
வாச்யார்த்த விசாரம்:  வாக்கியத்தின் அர்த்தத்தை விசாரம் செய்தல். எந்த அடிப்படையில் உபதேசம் செய்கிறது என்று வேதாந்த வாக்கியத்தை விசாரம் செய்ய வேண்டும்.  விசாரம் செய்யாமல் ஒருவனுக்கு அறிவு கிடைக்காது.  புத்தியிலுள்ள தமஸானது செய்யவிடாது, புத்திக்கூர்மை விசாரம் செய்ய உதவும்.  ஆனால் அதை செயல்படுத்த மனதானது தமஸாக இருக்கக்கூடாது
 
காண்டம்-‍19
விசாரம் செய்வதற்கு சாதனம் என்ன?
அது சிரத்தை என்கின்ற குணமாகும். சிரத்தையானது வேதாந்த வாக்கியத்திலும், குரு வார்த்தையிலும் நம்பிக்கை வைத்தல்.  இதுதான் பயனை அடைவதற்கு முன் அதைத் தரக்கூடிய செயலை செய்ய வைக்கும்.  ஞானம் வந்தவுடன் சிரத்தையின் அவசியம் முடிந்து விடுகிறது.  எனவே சிரத்தையுடன் இருக்க வேண்டும்.  ஒருவன் வேதாந்த குரு வார்த்தையின் மீது சிரத்தையுடன் இருக்கும்போதுதான் ஞானமடைய விசாரம் செய்து கொண்டிருப்பான்.  சிரத்தையில்லாதவன் விசாரத்தில் ஈடுபடமாட்டான். எனவே சிரத்தைத்தான் நம்மால் அடையப்பட வேண்டும்.
 
காண்டம்-‍20
இந்த சிரத்தையை வளர்த்துக்கொள்ள நிஷ்டா என்ற சாதனம் தேவை. குருவுக்கு செய்யும் சேவையில் சிரத்தை வரும். ஞானத்தை பலனை அடைந்தவரை நாடினால் சிரத்தை தானாக வரும்.  பிரம்ம நிஷ்டை உள்ள குருவையடைய வேண்டும். அவர் ஸ்ரோத்ரனாகவும் இருக்க வேண்டும். அதனால் அப்படிப்பட்ட குருவினுடைய அருகில் செல்ல சேவை (நிஷ்டா) உதவுகிறது. இந்த சேவை மூலம் பணிவு என்ற குணம் வந்து விடுகிறது.  இதனால் விக்ஞானமய கோசத்திலிருந்து விடுபட முடியும்.  எந்தவித பலனும் எதிர்ப்பார்க்காமல், மனம் கோணாமல் தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.  இப்படி செய்யும் போது சிரத்தை வந்து விடுகிறது.  சேவை செய்யாதவர்களுக்கு சிரத்தை வராது.
 

காண்டம்-21
க்ரிதி:- சமஹ(மனக்கட்டுப்பாடு), தமஹ(இந்திரியக்கட்டுப்பாடு)
சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டும் போதாது மனக்கட்டுப்பாடும், இந்திரியக்கட்டுப்பாடும் தேவை.
 
காண்டம்-‍22
ஒருவன் எந்தவிதமான காரியத்தில் ஈடுபட்டாலும், அதில் சுகம் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தினால்தான் ஈடுபடுவான்.  யோகியும் சுகத்தை நாடித்தான் ஒரு காரியத்தில் ஈடுபடுகிறான்.
 
மனக்கட்டுப்பாடு, இந்திரியக்கட்டுப்பாட்டினால் அடையும் இன்பம் நூறு மடங்கு இருக்கும். எனவே இந்தவகையான இன்பத்தினைத்தான் நாட வேண்டும்.
 
காண்டம்-‍23
பூமா, மஹத் - பரபிரம்மம், நிரதிஷ்யம் - முழுமையானது, பூர்ணம் - நிறைந்து.
 
எது பூமாவோ அதுதான் சுகம்.  சுகம் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. ஒன்று ஆபாஸ சுகம், மற்றொன்று சுபாவமாக உள்ளது. (உ-ம்) காபியில் இருக்கும் இனிப்பு ஆபாஸ சுகம், ஆனால் அதில் இருக்கும் சர்க்கரையில் இருக்கும் இனிப்பானது சுபாவமானது, இயற்கையானது.
 
நாம் அனுபவிக்கும் சுகமானது, அனுபவிக்கும் விஷயத்தினுடைய சுபாவமானதல்ல.  அல்பமான அனைத்து விஷயங்களில் அனுபவிக்கும் சுகத்தை நாம் அடைய விரும்புகிறோம், சுகத்தை பார்க்கிறோம்.  உண்மையில் அந்த சுகமானது திருப்தியைக் கொடுக்காமல் மேலும் அதைவிட மேலான சுகத்தை அடைய வேண்டும் என்ற ஆசையை தூண்டி விடுகிறது. எனவே இதையெல்லாம் தவிர்த்து பூமாவைத்தான் நாட வேண்டும் அதுதான் சுகத்தின் இருப்பிடம். பூமாவை அடைந்தால் நீ சுகத்தை அடைவாய்.  அனாத்மாவில் சுபாவ சுகம் இருக்கிறதென்றால் அதை எல்லோருக்கும் சுக புத்தியை உண்டு செய்யும். ஆனால் உண்மையில் அப்படி இல்லை. எனவே அதில் தெரியும் சுகம் வெறும் தோற்றமாகும். உதாரணமாக சிலருக்கு சுகம் கொடுக்கும் விஷயமே மற்றவருக்கு துக்கத்தைக் கொடுக்கும்.
 
காண்டம்-‍24 (Important)***
यत्र नान्यद्पश्यति नान्यचछृणॊति नन्यद्विजानाति स भूमाऽथ यत्नान्यत्पश्यत्यच्छृणॊद्यन्यद्विजानाति तदल्पं यॊ वै भूमा तदमृतम्थ यदल्पं दन्मर्त्यं स भगवः कस्मिन्प्रदिष्टित इति स्वे महिम्नि यदि व न महिम्नीदि
 
நான் என்ற சொல்லில் ஆத்மாவும், அனாத்மாவும் சேர்ந்து குறிக்கிறது. இங்கே அனாத்மாவை மட்டும் நீக்கி விட்டால் ஆத்மா தானாகவே புரிந்துவிடும். ஆத்மாவைப் பற்றி அனுபவம் இருக்கிறது ஆனால் அறிவில்லை.
 
யத்ர - எதனிடத்தில்;
அன்யத் - வேறொன்றை;
ந பஷ்யதி - பார்க்கவில்லையோ; அதுவே பூமாவாகும்.
ஒருவன் அதாவது எதனிடத்தில் ஒன்றை ஒன்றினால் பார்ப்பது இல்லையோ அல்லது வேறொன்றை அறிவதில்லையோ அதுவே பூமாவாகும்.
 
யத்ர நான்ய பஷ்யதி, நான்ய விஜானாதி,  நான்ய ஸ்னோதி, தத்ர பூமா.
·   நாம ரூபங்கள் நிஷேதம் செய்யப்படுகிறது
·   எல்லா இந்திரியங்களின் விஷயங்களும் நிஷேதம் செய்யப்படுகிறது
·   பூமா என்பது தெரிவதில்லை, உணரப்படவேண்டியது.
·   அறிபவனொருவன் (சிதாபாசன்) இந்திரியங்களை பயன்படுத்தி விஷயங்களை அறிந்துக்கொண்டிருக்கிறான்.
·   சிதாபாசன், அந்தக்கரணம், பிரபஞ்சம் இவையெல்லாம் எதில் ஒடுங்குகிறதோ அதுவே சைதன்யம்
·   பார்ப்பவன் பார்க்கும்பொருள், பார்க்க உதவும் கருவி இவையெல்லாம் நீக்கி விட்டால் பிறகு உணரப்படுவது பரப்பிரம்மம்
·   எது காட்சி மாதிரி தோன்றிக்கொண்டிருக்கிறதோ அதைத்தான் நீக்க முடியும்.
 
பிரம்ம லக்ஷணங்கள்:-
1.      பிரம்மஸ்வரூபம் - விவகாரத்திற்குள் வருவதில்லை.  நாம் அனுபவிக்கின்ற பிரபஞ்சம்  மித்யா, இதுதான் விவகாரத்திற்கு வருகிறது. இவை ஞான விவகாரம், கர்ம விவகாரம் என இருவகையாக பிரிக்கப்படுகிறது.
2.        நிர்விகல்பம் - பேதமற்றது - பிரம்மத்தில் பேதமற்றது.
3.        விகல்பம் - பேதம்
a.        ஞான விவகாரத்திற்கு தேவையான விகல்பம். அறிபவன்(பிரமாதா), பிரமாணம் (கருவி), பிரமேயம் (அறியப்படும் பொருள்). இந்த மூன்றும் இருந்தால்தான் ஞானம் ஏற்படும்.
b.        கர்ம விவகாரத்திற்கு தேவையான விகல்பம். கர்த்தா, கரணம் கர்ம (பொருள்)

 

காரக பேதங்கள் : கர்ம விவகாரத்தில் இருக்கும் பேதங்கள் நிர்விகல்பம் என்றால் ஞானபேதமும் இல்லாதது, கர்மபேதமும் இல்லாதது
 
நிர்விகல்ப விசாரம்
ஆழ்ந்த தூக்கத்திலும், மயக்கமடைந்த நிலையிலும் யோகிகளின் சமாதி நிலையிலும் . வேறொன்றையும் பார்ப்பதில்லை அறிவதுமில்லை. இது பிரம்ம லட்சணைக்கு பொருந்தி இருந்தாலும் இது அநித்யமாக இருப்பதாலும், காலவரையறைக்குட்பட்டதாலும் இது பிரம்ம லக்ஷணையில் சேராது.
 
அவஸ்தை (காலவரையறைக்குட்பட்ட அனுபவம்) என்பது வேறொரு அவஸ்தையால் நீக்கப்படும் ஆனால் ஸ்வரூபம் என்பது நிலையானது, நித்தியமானது இதுவே பூமா என்றழைக்கப்படுகிறது.
 
சவிகல்ப அவஸ்தை, நிர்விகல்ப அவஸ்தை இந்த இரு அவஸ்தைகளுக்கும் இடையே நிலையாக இருப்பது நிர்விகல்பமாக இருப்பது பூமா என்ற பிரம்மம். இப்படி நிர்விகல்ப ஸ்வரூபமாக இருப்பது நான் என்று உணர்ந்து விட்டால் பிரம்மஞானியாகி விடுவோம்.
 
சவிகல்ப அவஸ்தை ஒரு லட்சியமில்லை, சாத்தியமுமில்லை சம்சாரத்திலிருந்து தற்காலிகமாக ஓய்வில் இருக்கிற நிலை, திரும்பவும் சம்சாரத்திற்கு வந்து விடும். இது ஒரு சாதனையுமில்லை, சாத்தியமுமில்லை. ஆனால் சவிகல்ப அவஸ்தை நிர்விகல்ப ஸ்வரூபத்தை அடைவதற்கு சாதனையாக கொள்ளலாம்.
 
சில பொருட்கள் அனுபவத்தில் இருந்தாலும் அறிவில்லையென்றால் அதையறிய முடியாது. உதாரணமாக பத்தாவது மனிதனை தேடும் ஒருவன், தன்னை விட்டு விட்டு மற்ற ஒன்பது பேர்களை எண்ணி, பத்தாவது மனிதன் தொலைந்து விட்டான் என்று கவலைப்படும்போது வேறொருவன் அவனை பார்த்து நீதான் அந்த பத்தாவது மனிதன் என்று கூறியவுடன் அவன் தன்னை உணர்ந்து கொண்டது போல.  ஜாக்ர அவஸ்தையில் இருந்துதான் ஞானத்தை அடைய வேண்டும். இந்த ஞானம் நிர்விகல்ப ஸ்வரூபம் (சாத்தியம்) இதை நிச்சயம் செய்பவர்தான் முமுக்க்ஷு.
 
கர்ம கர்த்துரு தோஷம்: அறிபவனும் அறியப்படும் பொருளும் எப்போதும் நடக்காது. தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் தெரியும் போதும், அதை அனைத்தப்பிறகு எதுவும் தெரியாத இருந்தாலும் அது அப்படியேதான் இருக்கும். எவன் ஒன்றை பார்க்கிறானோ, கேட்கிறானோ, அறிகிறானோ அது அனாத்மா, மாயை, சவிகல்ப நிலை.
 
காரணம்-1 பூமாவை அம்ருதம் என்று சொல்வதால் அது நித்யமானது
காரணம்-2  சவிகல்ப அவஸ்தை நிகழ்காலத்தில் அனுபவிப்பது. அதேமாதிரி பூமாவும் இருந்துக்கொண்டிருக்கும். உதாரணமாக, கயிற்றில் பாம்பு பார்ப்பது போல இரண்டும் ஒரே காலத்தில் நிகழ்வது.
 
வேறொன்றில்லை, பார்க்கவில்லை, கேட்கவில்லை, அறியவில்லை என்ற வார்த்தைகள் அதை மட்டும் பார்க்கிறோம் என்று பொருள் கொள்ளலாம் அதே போல வேறொன்று இருக்கிறது ஆனால் இப்பொழுது அது தெரியவில்லை என்றும் பொருள் கொள்ளலாம். இதிலிருந்து பார்ப்பவன், கேட்பவன் என்ற த்வைதம் தெரிகிறது.
 
1.        கர்ம கர்த்திரு தோஷத்தின்படி பார்ப்பவனும், பார்க்கப்படும் பொருளும் எப்பொழுதும் ஒன்றாக இருக்காது
2.        அவித்யை அடிப்படையிலே இந்த மாதிரி சொல்லியிருக்கிறது.  பிரம்மத்தில் ஏற்றி வைக்கப்பட்ட விஷயங்களை நீக்குகிறோம்.
 
அறியாமை இருக்கும்வரை த்வைதம் தெரிந்து கொண்டேயிருக்கும். அக்ஞானம் இருக்கும் வரை இந்த உலகம் தெரிந்து கொண்டேயிருக்கும். ஞானம் வந்தபின் கயிற்றில் தோன்றிய பாம்பு மறைவதைப்போல மறைந்து விடும்.
 
ஸ்ருஷ்டி - நாமரூப வெளிப்பாடு
பிரளயம் - நாமரூப ஒடுங்குதல்
நிஷேதம் - நாமரூபம் ஒன்றுமில்லை என்று நீக்குவது
விஜானாதி - மனம் கிரகிக்கக்கூடிய விஷயங்கள், அனுபவமாக ஏற்படுதல்
 
மனதினால் அடையமுடியாது என்றால், ஒரு பொருளாக அடைய முடியாது.  மனதினால் அறிவது என்றால், சவிகல்ப அவஸ்தையை சாதனமாக கொண்டு அறிவது. கனவில் பார்க்கும் விஷயங்கள், பொருட்கள் எல்லாம், அனுபவிக்கும் விஷயங்கள் யாவும் நான்தான். கனவு முடிந்ததும் அவைகள்  மறைந்து விடுகிறது, ஆனால் நான் மட்டும் இருக்கிறேன். இது கானல் நீரை பற்றிய அறிவு வந்ததும், அதைப்பார்த்தாலும் அதை அனுபவிக்கக் கூடியதல்ல என்று உதாசீனபடுத்துகிறோம்.
 
த்வைதம் நீக்கம் என்பது சம்சாரம் அழிவதைக் குறிக்கிறது, மோட்சத்தை அடைவதை காட்டுகிறது. எது அல்பமோ அது அழிவடையக் கூடியது.  பூமாவோ நித்யமானது.
 
நாரதர்: அந்த பூமா எதில் இருக்கிறது? எது தாங்கிக்கொண்டிருக்கிறது? எதை சார்ந்திருக்கிறது? அதற்கு எது அதிஷ்டானமாக இருக்கிறது?
சனத்:   இதற்கு ஆதாரம் எதுவும் கிடையாது. அதன் சக்தியிலே அது இருக்கின்றது.
நாரதர்: அது எப்படி ஒரு பொருளுக்கு ஆதாரமாக அதுவாகவே இருக்க முடியும்?
சனத்:   அதற்கு ஆதாரமாக எதுவும் இல்லை.
 
ஒரு புத்தகம் இருக்கிறது, அதை கிழித்து விட்டால் புத்தகம் போய் விடுகிறது குப்பை என்று அழைக்கப்படுகிறது. அதை எரித்து விட்டால் குப்பை என்ற நாமரூபம் போய் சாம்பல் என்றாகிறது. இங்கு இருத்தல் எல்லா நிலையிலும் இருக்கிறது. எனவே இருத்தல் என்பது சுதந்திரமாக இருக்கிறது எதையும் சார்ந்து இல்லை என்று தெளிவாகிறது.
 
பூமா என்பது அத்வைதம் என்று நிலைநாட்டப்பட்டது. இனி அதை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். ஒருவனுடைய புகழும் பெருமையும் பணத்தால் அல்லது இருக்கும் பதவியால் வந்தவையாக இருக்கும். இதிலிருந்து ஒருவன் எதையாவது ஒன்றை சார்ந்துதான் இருக்கிறான்.
 
காண்டம்-‍25 (Important)*** பரபிரம்ம லக்ஷணம் / பிரயோஜனம்
ஒரு பொருள் பூரணமாக உள்ளது என்று உறுதி செய்ய வேண்டுமென்றால் அதற்கு இணையாக வேறொன்று இருக்கக்கூடாது
 
பூமாவுக்கு வேறுபட்டதாக இரண்டு தத்துவங்கள் தோன்றிக்கொண்டிருக்கிறது. ஜகத்தும், ஜீவனும் வேறாக (விலக்ஷணம்) இருப்பதாக நினைக்கிறோம். ஜகத்தானது ஜடமாக பூமாவுக்கு வேறாக தோன்றுகிறது. ஜீவன் அறிவு ஸ்வரூபம் இது பூமா போன்றதாக உள்ளது. இது இரண்டும் இல்லையென்று நிரூபிக்க வேண்டும். காரிய காரண தத்துவத்தை பயன்படுத்தி நீக்கப்படும். ஜீவனிடத்திலுள்ள மூன்று சரீரங்கள் ஜகத்துடன் சேர்த்து விட்டு அறிவையும், பிரம்ம ஸ்வரூபத்துடன் ஐக்கியப்படுத்திட வேண்டும்.
 
ஜகத்தை நிஷேதம் செய்யும் இரண்டாவது உபாயம்
ஒரு சொற்றொடரில் உள்ள எல்லா சொற்களும் பொருளைக் குறிக்கிறது. வாக்யம் எப்பொழுதும் த்வைதத்தை போதிக்கிறது. ஆனால் சில வாக்கியங்கள் ஒரே பொருளை மட்டும் குறிக்கலாம். உதாரணமாக தயாள குணமுள்ள, தசரத புதல்வன், மனித அவதாரம், தர்மத்தை ரக்ஷிக்கும் ராமபிரான். இந்த வாக்கியத்தில் உள்ள எல்லா சொற்களும் ஒரே பொருளான ராமரை மட்டும் குறிக்கிறது. இதற்கு சாமான அதிகரணம் என்று பெயர். எனவே ஒரு வாக்கியம் சாமானதிகரண்யமாக இருப்பதால் அது இருமையைக் குறிக்காது.
 
1.        ஐக்கிய சாமானாதி கரணம் - ஒரு சொல்லிலுள்ள இரண்டு சொற்களை ஐக்கியப்படுத்தி ஒன்றை சமானப்படுத்துதல், உதாரணமாக தத்துவம்-அஸி, மொட்டையுடன் இப்போது காட்சியளிக்கும் இவர், முன்பு தாடி மீசையுடன் இருந்தார்.
2.        பாதாய சாமானாதி கரணம் - தூணில் தெரிந்த திருடன் என்ற வாக்கியத்தில், திருடன் என்ற சொல்லின் பொருள் நீங்கி தூண் மட்டும் நான் இருக்கிறேன் என்பதைக்காட்டுகிறது.  அதுபோல ஜகத்தானது பிரம்மம்தான், என்ற சொற்றொடரில் ஜகத்தானது நீக்கப்பட்டு பிரம்மத்திடம் மட்டும் பொருள் கொள்கிறது.
 
அதிகரணம்: ஒரு சொல் எந்தப்பொருளை குறிக்கிறதோ அதற்கு அதிகரணம் என்று பெயர். (உ-ம்) புத்தகம் - இந்தச்சொல் புத்தகத்தை மட்டும் குறிக்கிறது.
சாமானதிகரணம்: ஒரு சொற்றொடரில் உள்ள எல்லாச் சொற்களும் அதற்குரிய அதிகரணத்தை குறிப்பதால் இது இவ்வாறு அழைக்கப்படுகிறது.
 
ஸ ஏவ இத3ம் ஸர்வம் – ப்3ரஹ்ம ஏவ ஸர்வம் கர்ம:
மரத்தினால் செய்யப்பட்ட யானை பொம்மையில், அதன் உருவத்தை பார்க்கும்போது மரம் மறைந்து விடுகிறது.  மரத்தை பார்க்கும்போது யானை உருவம் மறைந்துவிடும்.  அதேபோல பிரம்மத்தின்மீது ஏற்றி வைக்கப்பட்ட ஜகத்தை நீக்கி பிரம்மத்தை மட்டும் பார்க்க வேண்டும்.  அதுவே இவையனைத்துமாக இருக்கிறது.
அஹம் ஏவ இத3ம் ஸர்வம் - நானே இவையனைத்துமாக இருக்கிறேன் என்று புரிந்து கொள்ள வேண்டும். இங்கே நான் என்பது ஆத்மாவை குறிக்கிறது.
ஆத்மா ஏவ இத3ம் ஸர்வம்- ஆத்மா மட்டும்தான் எங்கும் வியாபித்திருக்கிறது
 
ஆத்மாவிடமிருந்து வேறுபடாத விஷயம்தான் நான். பார்க்கிறதெல்லாம் நான்தான் “அது என்பதை “நான் என்று அழைக்கக் காரணம் அனாத்மாவை ஆத்மாவோடு சேர்த்துப்பார்ப்பதால்தான்.  இங்கு அனாத்மாவை நீக்கி ஆத்மாவை நான்தான் என்று உணர வேண்டும். நான் என்பதை அழித்துவிட வேண்டும் என்று யாரும் விரும்ப மாட்டார்கள். இவ்வாறு பிரம்மமே நான் என்று அறிந்தவுடன் அதன் உண்மை ஸ்வரூபத்தை அடைகிறோம். இதுவே மோட்சத்தை அடைதல் என்று கூறுகிறோம். எந்த ஜீவன் இவ்விதமாக அறிகிறானோ (சிரவணம்), இவ்விதமாக சிந்திக்கின்றானோ (மனனம்), பிறகு அந்தச் சிந்தனையில் நிலைபெற முயற்சி செய்து கொண்டு இருக்கிறானோ(நிதித்யாஸனம்) அவன் இந்த மாதிரியான பலனை அடைகிறான். இதுதான் ஜீவன்முக்தி நிலை. நம் ஆனந்தத்திற்கு வெளியே உள்ள பொருட்களை நாடுதல், நமக்கு நாமே சில நிபந்தனைகளை போட்டுக்கொண்டு அதன் அடிப்படையில் இன்பத்தை நாடுகிறோம், தேடுகிறோம்.
 
ஆத்ம மிதுனஹ - தன் ஆனந்தத்தை, பற்றை தேடுதல்
ஆத்மானந்தஹ  - ஆனந்தம் தன்னிடத்திலேதான்
ஸ்வராட்        - தனக்குத்தானே ராஜாவாக இருக்கிறான்.
 
ஜீவன் முக்தன் மீதமுள்ள வாழ்நாள் முழுவதும் இப்படியே இருக்கிறான். உயிர் வாழ்வதற்கு பிறவற்றை சார்ந்திருக்க வேண்டும். அதாவது அன்னம், நீர், வாயு போன்றவற்றின் உதவி தேவைப்படுகிறது. ஆனால், தன்னிடத்தில் ஆனந்தமாக இருப்பதற்கு எதையும் சார்ந்திருக்க தேவையில்லை.  எல்லா உலகத்திலும் தன் விருப்பப்படி வாழலாம். எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லை. உலகத்திலுள்ள எல்லா பொருட்களின் மீது ஆசையில்லாமன் இருக்கிறான்.
 
அக்ஞானியின் நிலை:
யார் இந்த அறிவை அடையாமல் இருக்கிறார்களோ அவர்கள் மற்றவர்களை சார்ந்திருக்கிறார்கள். இவர்கள் அழியக்கூடிய உலகத்தில் அழியக்கூடிய உடலைப்பெற்று வாழ்வார்கள். இவர்கள் எல்லா உலகத்திலும் மற்றவர்களுக்கு கட்டுப்பட்டு இருப்பார்கள்.  அதாவது ஆசைவசப்பட்டு துன்பத்தில் உழன்று கொண்டிருப்பார்கள்.
 
காண்டம்-‍26
இவ்விதம் படிப்படியாக தாண்டி ஞானத்தையடைந்த ஞானியானவனுக்கு இந்தப்படிகள் எல்லாம் அவன் மீது ஏற்றி வைத்துப்பார்க்கப்பட்டதுதான். எல்லாமே என்னிடமிருந்துதான் தோற்றுவிக்கப்பட்டது. அனைத்து ஸ்ருஷ்டியும், லயமும் என்னிடத்தில் இருந்துதான் வந்தது, ஒடுங்குகிறது. 
 
பார்ப்பவன் பார்ப்பதில்லை - ஆத்மாவை பார்ப்பவன், மரணத்தைப் பார்ப்பதில்லை. நோயை பார்ப்பதில்லை, துயரத்தை பார்ப்பதில்லை. இவன் எல்லாவற்றையும் தானாக பார்ப்பான், எல்லாவிதத்திலும் தன்னையே அடைகிறான்.
 
மனதுக்கு இந்திரியங்கள் மூலம் நல்ல விஷயங்களை கொடுத்தால் சித்த ஸுத்தி ஏற்பட்டு அடைய வேண்டிய ஞானத்தை அடைவதில் வெற்றியடையலம்.
 
----0000----

A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...