உத்தவ கீதை-அத்தியாயம்-06
ஸ்வாமி குருபரானந்தாவின் உபதேச விளக்கம்
முகவுரை
பக்தியானது பலவிதமான
ஆன்மீக சாதனங்களில் பயன்படுத்தப்படுகின்றது. கர்மயோகம், உபாஸனம் இந்த இரண்டு
சாதனங்களின் போது பக்தி இருந்தால்தான் வெற்றி பெற முடியும். இந்த வெற்றிதான்
ஞானயோகத்திற்கு அழைத்து செல்லும். ஞானயோகத்திலும் பக்தி இருக்கும். இந்த பக்தியை
முமுக்ஷுத்வம் என்று கூறப்படுகிறது. இதிலிருந்து நாம் விலகி செல்ல விரும்புகின்ற
விஷயங்களில் வைராக்கியமாக இருப்பது பக்தி. பக்திதான் ஒருவனை முக்தனாக்குகிறது.
பக்தி கிரம
முக்தியையும் கொடுக்கின்றது. ஒருவேளை இந்தப்பிறவியிலே விவேக, வைராக்கியம், ஞானம்
வரவில்லையென்றாலும் தீவிர பக்தனாக இருந்தால் அவன் இறந்த பின் பிரம்மலோகத்திற்கு
சென்று அங்கிருந்து முக்தியை அடைகின்றான்.
சாஸ்திரம் ஒரு சப்த
பிரமாணம். வாக்கியமாக வரும் சப்தம் நமக்கு புரிந்தால்தான் அது சப்த பிரமாணமாகும். ஒருவர் சொல்லும் வாக்கியத்தை, அவர் சொல்ல வரும் கருத்தோடு புரிந்து கொண்டால்
அதுவே சப்த பிரமாணமாகும். சாஸ்திரத்தில் சொல்லப்படும் வாக்கியங்களின் பொருட்கள்
இடத்திற்கேற்ப சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
மனிதப்பிறவியில்தான்
நேரிடையாக மோட்சத்தை அடைய முடியும். ஆனால்
விலங்குகள், மரங்கள், ரிஷிபத்தினிகள் இவர்களுக்கு பகவான் மோட்சத்தை கொடுத்தார்
என்றால் அவர்கள் கிரமமுக்தியை அடைவார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும். மற்றும்
அர்த்தவாதமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது பக்தியின் பெருமையை சொல்வதற்காக இவ்வாறு கூறுகின்றார்
என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஶ்ரீபகவான் உவாச
ந ரோத4யதி மாம் யோகோ3
ந ஸாங்க்2யம் தர்ம ஏவ ச |
ந
ஸ்வாத்4யாயஸ்தபஸ்த்யாகோ3 நேஷ்டாபூர்தம் ந த2க்ஷிணா || 1 ||
ந ரோத4யதி மாம் – பக்தியில்லாமல் கீழ்கண்ட செயல்களை செய்தாலும் அவைகள் என்னை அடையச்
செய்யாது
யோகம் ஸாங்க்2யம் – விதவிதமான யோகாசனங்களாலும், சாஸ்திர விசாரத்தினாலும்
த4ர்ம ஏவ ச – விதவிதமான தானங்கள் செய்வதினாலும்
ஸ்வாத்4யாய – வேதத்தை ஓதுவதினாலும்
தபஹ த்4யாகஹ – விதவிதமான தவங்களை செய்வதினாலும், தியாகங்களை செய்வதாலும்
இஷ்டா பூர்தம் - யாகம், சமுதாய சேவையினாலும்
தக்ஷிணா – அந்தணர்களுக்கு தட்சணை கொடுப்பதினாலும்
என்மீது
பக்தியில்லாமல் இவைகளால் என்னை அடைய முடியாது. என் அருளை பெற முடியாது
வ்ரதானி
யஞஶ்ச2ந்தா3ம்ஸி தீர்தா2னி நியமா யமா: |
யதா2வருந்தே4
ஸத்ஸங்க3: ஸர்வஸங்கா3பஹோ ஹி மாம் || 2 ||
வ்ரதானி யக்ஞஹ – விதவிதமான விரதங்களை மேற்கொள்ளுதல், யாகங்களை செய்தல்
ச2ந்தா3ம்ஸி
தீர்தா2னி – விசேஷ மந்திரங்களை ஜபித்தல், புண்ணிய ஸ்தலங்களுக்கு யாத்திரை செல்லுதல்
நியமா யமா – செய்ய வேண்டியதை கடைபிடித்துக் கொண்டும், தவிர்க்க வேண்டியவைகளை
கடைபிடித்துக் கொண்டும்
ஸத்ஸங்க3 – பகவானிடம் பக்தி செய்வதைப் போல
யதா2வருந்தே4 – இவைகள் என்னை வசப்படுத்தக் கூடியவை அல்ல
ஸர்வ ஸங்கா3பஹோ ஹி
மாம் – ஏனென்றால் என்மீது
கொண்ட பக்தியானது எல்லாவித பற்றுதல்களையும் நீக்கி விடுகின்றன.
ஸத்ஸங்கே3ன ஹி தை3தேயா யாதுதா4னா ம்ருகா3: க2கா3: |
க3ந்த4ர்வாப்ஸரஸோ நாகா3: ஸித்3தா4ஶ்சாரணகு3ஹ்யகா: || 3
||
வித்3யாத4ரா மனுஷ்யேஷு வைஶ்யா: ஶூத்3ரா: ஸ்த்ரியோSந்த்யஜா:
|
ரஜஸ்தம:ப்ரக்ருதயஸ்தஸ்மிம்ஸ்தஸ்மின்யுகே3 யுக் || 4
||
ப3ஹவோ மத்பத3ம் ப்ராப்தாஸ்த்வாஷ்ட்ரகாயாத4வாதய: |
வ்ருஷபர்வா ப3லிர்பா3ணோ மயஶ்சாத2 விபி4ஷ்ண: || 5
||
ஸுக்3ரீவோ
ஹனுமாந்ர்க்ஷோ க3ஜோ க்3ருத்4ரோ வணிக்பத2: |
வ்யாத4: குப்3ஜா
வ்ரஜே கோ3ப்யோ யக்ஞபத்ன்யஸ்த தா2பரே || 6 ||
மேலே உள்ள நான்கு
ஸ்லோகங்களில் பக்தியால் பலனடைந்தவர்களில் சிலரை உதாரணத்திற்காக கூறுகின்றார்.
உத்தவரே! என் மீது
பக்தி செலுத்திய காரணத்தால் அசுர-ராட்சஸர்கள், சில விலங்குகள், பறவைகள்,
கந்தர்வ-அப்ரஸ்கள், நாகர்கள், ஸித்தர்கள், சாரண-குஹ்யக வித்யாதரர்கள் மற்றும்
மனிதர்களில் வைசியர்கள், சூத்திரர்கள், பெண்களும், மிகக்கீழான நிலையில்
உள்ளவர்கள், ஆகியோர்களும், முக்குணத்தில் எந்த குணத்தில் ஜீவர்கள் இருந்தாலும்
அவர்களும், மேலும் பலர் என் திருவடியை அடைந்திருக்கிறார்கள். அவர்கள்
விருத்திராசுரன், பிரகலாதன், விருஷபர்வா, பலி சக்கரவர்த்தி, பாணாசுரன், மயன்,
விபீஷணன், சுக்ரீவன், ஹனுமான், ஜாம்பவான், கஜேந்திரன், ஜடாயு, வணிகன்,
தர்மவியாதன், குப்ஜை, வ்ரஜ தேசத்திலிருக்கும் கோபிகைகள், ரிஷிபத்தினிகள் மற்றும்
பலரும் என்மீது கொண்ட பக்தியினாலே என்னை அடைந்தவர்கள்
தே நாதீ4தஶ்ருதிக3ணா
நோபாஸிதமஹத்தமா: |
அவ்ரதாதப்த தபஸ:
மத்ஸங்கா3ன்மாமுபாக3தா: || 7 ||
இவர்கள் விதவிதமான சாஸ்திரங்கள்
படித்ததில்லை, எந்தவிதமான தியானங்களோ, உபாஸனைகளோ செய்யவில்லை. எந்தவிதமான
விரதங்களும் மேற்கொள்ளவில்லை. தவங்களும் செய்யவில்லை. என்னிடத்தில் கொண்ட
சங்கத்தினால் ஒன்றினாலே என்னை அடைந்துள்ளார்கள்
கேவலேன ஹி பா4வேன
கோ3ப்யோ கா3வோ நகா3 ம்ருகா3: |
யேSன்யே மூடா4தி4யோ நாகா3: ஸித்3தா4 மாமீயுரஞ்ஜஸா || 8 ||
இறைவன் மீது
செலுத்தப்படுகின்ற அன்பினால் மட்டுமே கோபிகைகள், பசுக்கள், மரங்கள், விலங்குகள்,
அறிவற்றவர்கள், நாகங்கள், சித்தர்கள் போன்றவர்கள் என்னை அடைந்தார்கள்
யம் ந யோகே3ன
ஸாங்க்2யேன தானவ்ரத தபோSத்4வரை:
|
வ்யாக்2யாஸ்வாத்4யாயஸன்ன்யாஸை:
ப்ராப்னுயாத்3யத்னவானபி || 9 ||
எவ்வளவுதான் கடும்
முயற்சி செய்தாலும், யோகம், சாஸ்திர விசாரம், தானம், விரதங்களை அனுஷ்டித்தல்,
தவம், வேள்வி, வேதாத்யயனம், ஸ்வாத்யாயம், துறவு முதலிய சாதனங்களை பின்பற்றுவதனால்
மட்டும் என்னை அடைய முடியாது.
ராமேண ஸார்த4ம்
மது2ராம் ப்ரணீதே ஶ்வாப2ல்மினா மய்யனுரக்தசித்தா: |
விகா3ட4பா4வேன ந மே
வியோக3 தீவ்ரத4யோSன்யம்
த3த்3ருஶு: ஸுகா2ய || 10 ||
என்னையும் பலராமனையும்
அக்ரூரர் மதுரா நகருக்கு அழைத்து சென்ற போது பிருந்தாவனமானது என்னிடத்தில் இருந்த
ஆழங்காண முடியாத அன்பினால், பக்தியால், நிரம்பித் தளும்பியது. பிருந்தாவனவாசிகள் என்னுடைய
பிரிவினால் தாங்க முடியாத துயரத்தை அடைந்தார்கள்.
பகவான் மீது பக்தியை வளர்த்துக் கொள்ள முடியாததால் அடையும் துயரமே நம்
பக்தியின் அளவை எடுத்துக் காட்டுகின்றது. அந்த கோபிகைகள் என்னைத் தவிர வேறெதிலும்
சுகத்தைக் காணவில்லை. அதனால்தான் இத்தகைய துயரத்தை அடைந்தார்கள்.
தாஸ்தா: க்ஷபா:
ப்ரேஷ்டதமேன நீதா மயைவ வ்ருந்தாவனகோ3 சரேண |
க்ஷணார்த4வத்தா:
புனரங்க3 தாஸாம் ஹீனா மயா கல்பஸமா ப3பூ4வு: || 11 ||
வ்ருந்தா – துளஸி;
வ்ருந்தாவனம் – துளஸி மலர்களை உடைய வனம்
அவர்களுடைய
எல்லையில்லாத அன்புக்குரிய பிருந்தாவனத்து இடையனான என்னுடன் பல இரவுகள்
கழித்திருக்கின்றனர். அப்போது அந்த இரவுகள் எல்லாம் அரைநொடி பொழுதாக கழிந்தன. ஆனால் நான் இல்லாத இரவுகள் கற்பகாலம் போல்
மிகவும் நீண்டதாகி விட்டன.
தா
நாவித3ன்மய்யனுஷங்க3ப3த்3த4 தி4ய: ஸ்வமாத்மானமத3ஸ்த்தே2தம் |
யதா2 ஸமாதௌ4 முனயோSப்3தி4தோயே நத்ய: ப்ரவிஷ்டா இவ நாமரூபே || 12 ||
மயி அனுஷங்க ப3த்3த4
தி4ய: - என்னிடத்தில்
பிரிக்க முடியாத பிரேமை கொண்டிருந்ததால்
ஸ்வாத்மானம் – தங்களுடைய உடல், மனம் போன்றவற்றையும் மறந்திருந்தார்கள்
தா நாவிதன் – தங்களை மறந்திருந்தார்கள்
அத3 ச இத3ம் – தாங்கள் இருக்கும் சூழ்நிலைகளையும் மறந்திருந்தார்கள்
கோபிகைகள் இவ்வாறு
அனாத்மாவில் உள்ள அபிமானத்தை முற்றிலுமாக இழந்தார்கள். முனிவர்கள் எவ்வாறு சமாதி
நிலையில் தம்மை மறந்து பகவானுடன் ஒன்றிப்போகிறார்களோ அதேபோல கோபிகைகள் என்னுடன்
ஒன்றிப் போனார்கள். கடலில் கலந்து விட்ட
நதிகள் எவ்வாறு தத்தம் பெயரையும், தனித்தன்மையையும் இழந்து விடுகின்றதோ அதுபோல
என்னுடன் கலந்துவிட்ட கோபிகைகள் இருந்தார்கள்
யோக சமாதி – யோக தியானத்தில் அடையும் சமாதி நிலை, இந்நிலையில் மனதில் விக்ஷேபம்
எதுவும் இருக்காது. மனஒருநிலைப்பட்டு
அமைதியாக இருக்கும், இவர்கள் ஞானியாகவும் இருக்கலாம், அக்ஞானியாகவும் இருக்கலாம்.
ஞான சமாதி – ஆத்ம ஞானத்தில் ஸத் என்று நினைத்ததையெல்லாம் ஒன்றுதான் என்று
நினைத்தல் அல்லது மித்யாவென்றூ புரிந்து கொண்ட நிலை.
மத்காம ரமணம்
ஜாரமஸ்வரூபவிதோ3Sப3லா: |
ப்3ரஹ்ம மாம் பரம ம்
ப்ராபு: ஸங்கா3ச்ச2தஸஹஸ்ரஶ: || 13 ||
கோபிகைகள் என்னுடைய
உண்மையான ஸ்வரூபத்தை அறிந்தவர்களில்லை.
ஆனால் தூய்மையான மனதுடையவர்கள். என் மீது மிகவும் அன்பு கொண்டவர்கள்.
என்னுடைய மேலான பிரம்மத்தை அடைந்தார்கள்.
நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான அந்தப் பெண்கள் என் மீதுள்ள பற்றினால்
மட்டுமே இந்த நிலையை அடைந்தார்கள்.
தஸ்மாத்த்வமுத்3த4வோத்ஸ்ருஜ்ய
சோத3னாம் ப்ரதிசோதனாம் |
ப்ரவ்ருத்திம் ச
நிவ்ருத்திம் ச ஶ்ரோதவ்யம் ஶ்ருதமேவ ச || 14 ||
ஆகவே உத்தவா! நீ
சாஸ்திரங்கள் உரைத்த கட்டளைகள், விதிமுறைகளையும், சாஸ்திரத்தில் செய்யாதே என்று
கூறுபவைகளையும், உன்னுடைய கடமைகளை, செயல்களை ஆகிய அனைத்தையும் செய்வதை
விட்டுவிடு. சந்நியாச தர்மங்கள், கேட்க
விரும்பியவைகள், இதுவரை கேட்டவைகள் இவைகள் அனைத்தையும் விட்டுவிடு.
மாமேகமேவ
ஶரணமாத்மானம் ஸர்வதே3ஹினாம் |
யாஹி ஸ்ர்வாத்மபா4வென
மயா ஸ்யா ஹயகுதோப4ய: || 15 ||
என்னை ஒருவனையே
சரணடைவாயாக. எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் ஆத்மாவாக இருக்கின்ற என்னிடத்தில் மட்டும்
ஒன்றிய மனதுடன் சரணடைவாயாக. அப்போது
எதனிடமிருந்தும் உனக்கு பயம் ஏற்படாது. விதவிதமான காரணத்திலிருந்து அடையும்
பயத்திலிருந்து விடுபடுவாய்(அக்ருதோ பய:)
ஶ்ரீஉத்3த4வ உவாச
ஸம்ஶய: ஶ்ருண்வதோ
வாசம் தவ யோகே3ஶ்வரேஶ்வர |
ந நிவர்ததே ஆத்மஸ்தோ2
யேன ப்4ராம்யதி மே மன: || 16 ||
உத்தவர் கேட்கிறார்.
யோகேஸ்வர்களுக்கெல்லாம்
தலைவராக இருப்பவரே! தங்களுடைய உரையைக் கேட்ட பிறகு, என் மனதில் ஒரு சந்தேகம்
வந்தது. ஆனால் அது நீங்கவில்லை. இந்த
சந்தேகத்தினால் என் மனம் குழப்பமடைகின்றது. நான் கடமையை செய்ய வேண்டுமா? வேண்டாமா?
மோட்சத்திற்கு கர்மம் செய்வது மட்டும்தான் வழியா அல்லது ஞானத்தில்தான் மோட்சத்தை
அடைய முடியுமா?
ஶ்ரீபகவான் உவாச
ஸ ஏஷ ஜீவோ
விவரப்ரஸூதி: ப்ராணேன கோ4ஷேண க்3ருஹாம் ப்ரவிஷ்ட: |
மனோமயம் ஸூக்ஷ்ம
முபேத்ய ரூபம் மாத்ரா ஸ்வரோ வர்ன இதி ஸ்த2விஷ்ட2: || 17 ||
ஶ்ரீபகவான்
கூறுகிறார்.
ஸ்ருஷ்டி என்பது
வஸ்துவும் நாம-ரூபமும் சேர்ந்ததே.
களிமண்ணினால் 10 உருவங்கள், 10 நாமங்கள் உருவாக்கப்படுகிறது. அதுவே பானைகள்
என்று அழைக்கப்படுகிறது. சப்தம் காரண நிலையிலிருக்கும் போது அதற்கு பிந்து
என்றும், சூட்சும நிலையிலிருக்கும் போது அதற்கே நாத3ம் என்றும், ஸ்தூல நிலைக்கு கலா என்றும்
அழைப்பர். பிந்துவின் ஸ்தானம் மூலாதாரம், நாதத்தின் ஸ்தானம் அடிவயிறு, கலாவின்
ஸ்தானம் தொண்டை. நாம ஸ்ருஷ்டியை மூன்று
நிலைகளாக படைத்தேன்.
ஸ ஏஷ ஜீவஹ – அந்த ஈஸ்வரன் (ஜீவர்களை உயிர்வாழ வைப்பவன்)
விவரப்ரஸூதி: - விதவிதமான இடங்களில் விதவிதமாக வெளிப்படுபவர்
கோ4ஷேண – காரண ருபமான சப்தமாக (பிந்து)
கு3ஹாம் - மூலாதாரத்தில்
ப்ராணேன ப்ரவிஷ்ட: - பிராண சக்தி மூலம் நுழைகின்றார்
மனோமயம் ஸூக்ஷ்மம்
உபேத்ய ரூபம் – பிறகு
சப்தம் சூட்சும ரூபமாக மனதில் வெளிப்படுகிறார்
ஸ்த2விஷ்ட2: - சப்தம் ஸ்தூல ரூபமாக வெளிப்படுகிறார்
மாத்ரா – ஒலியின் ஏற்றத்தாழ்வுகளாக (குறில், நெடில் )
ஸ்வரஹ – ஒலியை ஸ்வர பேத3த்தோடு (உச்ச ஸ்தாயி, கீழ் ஸ்தாயி)
வர்ண – எழுத்து வடிவமாக மாறுகிறது
இவ்வாறாக சப்தம்
ஸ்தூல ரூபத்தை அடைகின்றது
யதா2னல: கே2Sனிலப3ந்து4ருஷ்மா ப3லேன தா3ருண்யதி4மத்2யமான: |
அணு: ப்ரஜாதோ ஹவிஷா
ஸமேத4தே ததை2வ மே வ்யக்திரியம் ஹி வாணீ || 18 ||
யதா2 அனல: - எவ்விதம் அக்னியானது
அனில ப3ந்து4: - வாயுவால் வளர்க்கப்படுகிறது
கே2 ஊஷ்மா – ஆகாயத்தில் உஷ்ணரூபமாக (காரண ரூபமாக இருக்கின்றது)
ப3லேன தா3ருணி
அதி4மத்2யமான: -
அரணிக்கட்டைகளை பலமாக உராயும் போது
அணு: ப்ரஜாதோ – சிறு பொறியாக வெளிப்படும் (சூட்சும வடிவமாக இருக்கிறது)
ஹவிஷா ஸமேத4தே – நெருப்பு பற்றிக் கொள்ளும் பொருளுடன் சேர்ந்து பெரிய அக்னியாக
மாறுகின்றது. (ஸ்தூல வடிவம்)
ததை2வ - அதுபோல
மே – என்னுடைய சப்த பிரம்மம்
வ்யக்திரியம் ஹி வாணீ – முத்லில் மிக நுண்ணிய உருவம் எடுத்து, பின்னர் ஸ்தூல வடிவம்
எடுக்கின்றது.
பரபிரம்மமான நானே
சப்தபிரம்மமாக வெளிப்படுகிறேன்.
ஏவம் க3தி3: கர்ம
க3திர்விஸர்கோ3 க்4ராணோ ரஸோ த்3ருக்ஸ்பர்ஶ: ஶ்ருதிஶ்ச |
ஸங்கல்பவிஞானமதா2பி4மான:
ஸூத்ரம் ரஜ:ஸத்த்வதமோவிகார: || 19 ||
சத்துவ, ரஜோ, தமோ குணங்களின்
மாறுபட்ட சேர்க்கைகளே ஸ்ருஷ்டியாக உருவாகிறது
ஹிரண்யகர்ப்பன்
என்கின்ற தத்துவம் முதலில் தோன்றியது. இவ்வாறு கர்மேந்திரியங்களின் சக்திகளான,
பேசுதல், செயல்களை செய்யும் கைகள், நடக்க உதவும் கால்கள், உடலிலிருந்து
கழிவுப்பொருட்களை வெளியேற்றவது (மலம்) போன்றவைகள். ஞானேந்திரியங்களின் சக்திகளான
நுகர்தல், சுவைத்தல், பார்த்தல், தொடுதல், கேட்டல் போன்றவைகள், சங்கல்பம் செய்ய
வல்ல மனம், புத்தி, அகங்காரம் ஆகிய இவைகளெல்லாம் தோன்றின
அயம் ஹி
ஜீவஸ்த்ரிவ்ருத3ப்3ஜயோ நிரவ்யக்த ஏகோ வயஸா ஸ ஆத்3ய: |
விஶிலஷ்டஶக்திர்ப3ஹுதே4வ
பா4தி பீ3ஜானி யோனிம் ப்ரதிபத்3ய யத்3வத் || 20 ||
இந்த ஈஸ்வர தத்துவம்
முக்குண மாயையை தன்னுடைய சக்தியாக வைத்துக் கொண்டிருக்கிறார். சூட்சும
பிரபஞ்சத்திற்கு காரணமாக இருப்பவர். ஆனால் அவர் வெளித்தோற்றத்திற்கு வராதவர். புலன்களால கிரகிக்க முடியாதவர். அவர்
ஒன்றாகத்தான் இருக்கின்றார். காலத்தையும் கடந்து இருப்பவர். விதவிதமான சக்திகளாக
வெளிப்பட்டு இருக்கிறார். விதவிதமாக
இருப்பதாக தோன்றுகிறார். விளைநிலத்தில்
விதைக்கப்பட்ட விதைகள் காலப்போக்கில் கிளைகள், இலைகள், மலர்கள், பழங்கள் என
பல்கிப் பெருகுவதைப் போல பரமாத்மா தன் மாயையின் சக்தியின் துணைக் கொண்டு விதவிதமாக
தோன்றி இருக்கின்றார்.
யஸ்மின் இத3ம் ப்ரொதமஶேஷமோதம்
யடோ யதா2 தந்துவிதானஸம்ஸ்த2: |
ய ஏஷ ஸம்ஸாரதரு: புராண:
கர்மாத்மக: புஶ்ப்ப2லே ப்ரஸூதே || 21 ||
இந்த சம்சாரம்
மரத்திற்கு ஒப்பிடப்படுகிறது. இது தொன்று
தொட்டு இருக்கின்றது. இது கர்ம ஸ்வரூபமாக
இருக்கின்றது. அதாவது சம்சாரம் என்பது செயல் விளைவுகளின் தொடர்ச்சியாக
இருக்கின்றது. மரமானது மலர்களை, பழங்களை
உற்பத்தி செய்வதுபோல் இந்த சம்சாரம். செயலையும், அதன் விளைவையும்
கொடுக்கின்றது. சுக-துக்கங்களை கொடுத்து
கொண்டு இருக்கின்றது. துணியென்பது குறுக்கும், நெடுக்குமாக நெய்யப்பட நூல்தான்
என்பது போல இந்த உலகம் பகவானில் விளங்கிக் கொண்டிருக்கின்றது
த்3வே அஸ்ய பீ3ஜே ஶதமூலஸ்த்ரினால:
பஞ்சஸ்கந்த4: பஞ்சரஸப்ரஸூதி: |
த3ஶைகஶாகே2 த்3விஸுபர்ணனீSஸ்த்ரிவல்கலோ த்3விப2லோSர்கம் ப்ரவிஷ்ட: || 22 ||
சம்சாரம் என்ற
மரத்திற்கு இரண்டு விதைகள் (பாவ-புண்ணியம்), நூற்றுக்கணக்கான வேர்கள்
(மனப்பதிவுகள்-வாஸனைகள், ஆசைகள்), மூன்று முக்கிய பிரதான கிளைகள் (ஸ்தூல, சூட்சும,
காரண சரீரங்கள்), ஐந்து பெரிய கிளைகள் (பஞ்ச பூதங்கள்), ஐந்து வகைச் சாறுகள்
(ஞானேந்திரியங்கள் வழியாக கிடைக்கும் அனுபவங்கள், சுவை, ஒலி, ஒளி, ஓசை, நாற்றம்),
பதினொன்று சிறு கிளைகள் (ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள், மனம்),
இரண்டு அழகான பறவைகளின் கூடுகள் (ஜீவன், ஈஸ்வரன் (அ) ஞானி-அக்ஞானி)), மூன்று
பட்டைகள் (வாத, பித்தம், கபம்), இரண்டுவிதமான பழங்கள் (சுகம், துக்கம்), இத்தகைய
சம்சாரம் என்கின்ற மரம் பிரம்மலோக வரை வியாபித்துள்ளது
ஆத3ந்தி சைகம் ப2லமஸ்ய
க்3ருத்4ரா த்3ராமேசரா ஏகமரண்யவாஸா: |
ஹம்ஸா ய ஏகம் ப3ஹுருபமிஜ்யைர்மாயாமயம்
வேத3 ஸ வேத3 வேத3ம் || 23 ||
கிராமத்தில்
இருக்கும் கழுகுகள் இந்த சம்சார மரத்தில் உள்ள ஒருவிதமான பழத்தை
சாப்பிடுகின்றது. காடுகளில் வாழ்கின்ற
ஹம்ஸா என்கின்ற பறவைகள் சுகம் என்ற பழத்தை புசிக்கின்றது. ஞானி ஒன்றாக உள்ள
ஈஸ்வரனையும், பலவிதமாக மாயையினால் தோன்றி இருக்கும் இந்தப் பிரபஞ்சத்தை மாயாமயமாக
உள்ளது என்று குருமுகமாக அறிந்து இருக்கின்றான். அவன் வேதத்தையே
அறிந்தவனாகின்றான்.
ஏவம் கு3ருபாஸனயைகப4க்த்யா
வித்3யாகுடா2ரேண ஶிதேன தீ4ர: |
விவ்ருஶ்ச்ய ஜீவாஶயமப்ரமத்த:
ஸம்பத்3ய சாத்மானமத2 த்யஜாஸ்த்ரம் || 24 ||
இவ்விதம் சாதகன்
குருவை அடைந்து முறையாக உபதேசம் பெற்று, பிளவுப்படாத பக்தியுடன், சிரத்தையுடன்
கூடிய அன்புடன், ஞானம் என்ற கூர்மையாக்கப்பட்ட வாளால் (நிதித்யாஸனம்), நான் ஜீவன்
என்ற அக்ஞானத்தை, சரீர அபிமானத்தை ஆத்மாவில் இருந்து பிரித்து எடுத்து விட
வேண்டும். இதை மிகக்கவனமாக செய்ய வேண்டும். ஆத்ம ஸ்வரூபத்தை அடைய வேண்டும். பிறகு இறுதியில் ஞான வடிவமான ஆயுதத்தை
எறிந்துவிட வேண்டும். அதாவது சாஸ்திரம்,
குரு, ஈஸ்வரன் இவைகளையும் விட்டுவிட வேண்டும்.
ஓம் தத் ஸத்
----oooOOOooo
----