அத்தியாயம்-4
ஞான-கர்ம
ஸந்நியாஸ யோகம்
ஸ்வாமி
குருபரானந்தாவின் உபதேச விளக்கம்
श्रीभगवानुवाच ।
इमं विवस्वते
यॊगं प्रोक्तवानहमव्ययम्
विवस्वान्मनवे
प्राह मनुरिक्ष्वाकवेऽब्रवीत् ॥ 01 ॥
ஶ்ரீபகவான் கூறினார்!
இந்த அழியாத பலனைக் கொடுக்கும் யோகத்தை சூரிய
தேவனுக்கு நான் உபதேசம் செய்தேன். இந்த ஞான-கர்மயோகம் அழியாத மேலான வேதத்தை
மூலமாகக் கொண்டது. சூரியதேவன் தன் மகனான மனுவிற்கு இதை உபதேசம் செய்தார்.
மனுவானவர் தன் மகனான இக்ஷ்வாகு என்ற அரசனுக்கு சொன்னார்.
एवं परम्पराप्राप्तमिमं
राजर्षयॊ विदुः
स कालेनेह महता
यॊगॊ नष्टः परन्तप ॥ 02 ॥
அர்ஜுனா! இவ்விதம் வழிவழியாக வந்த இந்த யோகத்தை
ராஜரிஷிகள் அறிந்து இருக்கிறார்கள். இந்த யோகமானது வெகுகாலமாக இவ்வுலகில்
மறைந்தாற்போல காணப்பட்டது.
அரசர்களிடமிருந்து இந்த ஞானம் சென்றுவிட்டது. ஏனெனில் இந்திரியவொழுக்கம் இல்லாமல்
இருந்திருக்கின்றார்கள்.
स एवायं मया
तेऽद्य यॊगः प्रॊक्तः पुरातनः ।
भक्थॊऽसि मे सखा
चेति रहस्यं ह्येतदुत्तमम् ॥ 03 ॥
இந்த பழமையான தொன்றுதொட்டு வந்திருக்கின்ற
யோகத்தை என்னால் உனக்கு உபதேசிக்கப்பட்டது. நீ என்னிடத்தில் பக்தியுடன்
இருக்கின்றாய். மேலும் என்னுடைய உற்ற நண்பனாகவும் இருப்பதால் நான் உனக்கு இதை
உபதேசிக்கிறேன். இந்த யோகமானது ரகசியமானது, மிகச்சிறந்தது. அவ்வளவு சுலபமாக
மற்றவர்களுக்கு கிடைக்கப் பெறாதது.
अर्जुन् उवाच ।
अपरं भवतो नज्म
परं जन्म विवस्वतः ।
कथमेतद्विजानीयां
त्वमादौ प्रोक्तवानिति ॥ 04 ॥
அர்ஜுனர் வினவினான்!
உங்களுடைய பிறப்பு அண்மையில் நிகழ்ந்தது.
சூரியபகவானுடைய தோற்றமானது வெகு காலத்திற்கு முன்பு ஏற்பட்டது. எவ்வாறு உங்களுடைய வாக்கியத்தை புரிந்து கொள்வது. அதாவது கல்பத்தின் ஆதியில் சூரியனுக்கு
இந்த யோகத்தை உபதேசித்தீர்கள் என்று சொன்ன வாக்கியத்தை எப்படி புரிந்து கொள்வது.
அர்ஜுனன் பகவானை அவதார புருஷனாக நினைக்காமல் இந்த கேள்வி கேட்டான் என்று எடுத்துக்
கொள்ளலாம்
श्रीभगवानुवाच ।
बहूनि मे
व्यतीतानि जमानि तव चार्जुन ।
तान्यहं वेद
सर्वाणि न त्वं वेत्थ परन्तप ॥ 05 ॥
ஸ்ரீபகவான் கூறினார்!
அவதாரம் என்பதற்கு இறங்கி வருதல் என்று
பொருளாகும். இந்த அவதாரத்தை பற்றி இரண்டு கோணத்தில் விசாரம் செய்யப்படுகின்றது.
அவைகள் தர்மத்ருஷ்டி, கர்மதிருஷ்டி ஆகியவைகளாகும்.
தர்ம த்ருஷ்டி
நம்முடைய உடலை பாதுகாத்து கொள்வதற்கு
காப்பாற்றிக் கொள்வதற்காக இயற்கையிலே நம்மிடத்து சில சக்திகள் இருக்கின்றது.
ஆபத்து காலத்தில் இது வெளிபட்டு உடலைக் காப்பாற்றும். தும்மல், கண்ணீர், வாந்தி
போன்றவைகளாகும். அதேபோல விராட் ஸ்வரூபமாக இந்த உலகமே உடலாக கொண்டிருக்கும்
ஈஸ்வரன். உலகத்தில் தர்மத்திற்கு அழிவு ஏற்படும் என்ற நிலை ஏற்படும்போது அவதாரம்
நிகழ்கின்றது. அதர்மத்தை நீக்கி உலகம்
சீராக இருப்பதற்கு காரணமாக நிகழ்வது அவதாரம்.
கர்ம த்ருஷ்டி
ராமர், கிருஷ்ணர் அவதாரங்களின் சரீரத்தைப்
பற்றிய விசாரம். ஜீவர்களுடைய சரீரம் கர்ம-பலன்களால் தோன்றுகின்றது. சரீரங்களிடையே
உள்ள வேற்றுமைக்கு காரணம். பாவ-புண்ணியத்தினால் கிடைப்பது. பாவ-புண்ணியத்தை அனுபவித்து நீக்கிக் கொள்வதற்கு
இந்த சரீரம் உருவாகி இருக்கின்றது. இதை வியஷ்டி கர்மம் என்று அழைக்கப்படுகிறது.
சமஷ்டி கர்ம பங்கு இதில் இருக்கின்றது.
சூழ்நிலை பெற்றோர்கள் அமைவது, இப்படிப்பட்ட பிள்ளைதான் இவர்களுக்கு பிறக்க
வேண்டும் என்ற நியதி சமஷ்டி கர்மத்தின் பங்கு இருக்கின்றது.
இறைவனின் அவதார சரீரத்திற்கு வியஷ்டி கர்மம் (
பாவ-புண்ணியத்தினால் உருவாகின்ற சரீரம்) சமஷ்டி கர்மத்தின் அடிப்படையில்
உருவாகின்றது. உலகத்தின் நன்மைக்காக, தர்மத்தை நிலைநாட்டுவதற்காக அதற்கேற்ற
சரீரத்தை எடுக்கின்றார்கள்.
பல பிறவிகள் எனக்கு கழிந்துவிட்டன. உனக்கும்
பலப்பிறவிகள் கழிந்துவிட்டன. அவைகள் அனைத்தும் நான் அறிவேன் ஆனால். நீ அதை
அறியமாட்டாய்.
अजॊऽपि
सन्नव्ययात्मा भूतानामीश्वरॊऽपि सन् ।
प्रकृतिं
स्वामधिष्टाय सम्भवाम्यात्ममायया ॥ 06 ॥
நான் பிறப்பற்றவனாகவும், அழிவற்றவனாகவும் எல்லா
உயிரினங்களுக்கும் ஈஸ்வரனாகவும் இருந்தும் கூட என்னுடைய மாயையை என வசத்தில் கொண்டு
அதன் சக்தியினால் வெளிப்படுகிறேன்.
यदा यदा हि
धर्मस्य ग्लानिर्भवति भारत ।
अभ्युत्थानमधर्मस्य
तदात्मानं सृजाम्यहम् ॥ 07 ॥
எப்பொழுதெல்லாம் தர்மத்திற்கு குறைவு
ஏற்படுகின்றதோ, ஹே அர்ஜுனா! அதர்மம் எப்பொழுதெல்லாம் மேலோங்குகின்றதோ அப்பொழுது
நான் வெளிப்படுகிறேன். என்னையே தோற்றுவிக்கிறேன்,
சூட்சும சரீரம்(ஜீவன்) ஸ்தூல சரீரம் அடைவதே
பிறப்பு என்பதாகும். நான் ஜீவனல்ல. என்ற அறிவுடன் கூடிய ஒன்றுக்கும், ஜடமான
உடலுக்கும் ஏற்படும் சம்பந்தமே பிறப்பு.
பகவானே சைதன்ய ஸ்வரூபமாக இருப்பதால் அவருக்கு எந்த ஜடப்பொருளோடும்
சம்பந்தம் கிடையாது. மாயையிடம் ஆவரணம், விக்ஷேபம் என்ற இருபெரும் சக்திகள்
உண்டு. இவையிரண்டில் விக்ஷேபம் மட்டும்
வேலை செய்யும், ஆவரணம் அவரிடத்தில் வேலை செய்யாது.
परित्राणाय
साधूनां विनाशाय च दुष्कृताम् ।
धर्मसंस्थापनार्थाय
सम्भवामि युगे युते ॥ 08 ॥
பரித்ராணாய ஸாதூ4னாம் – தர்மப்படி
வாழ்பவர்களை காப்பாற்றுவதற்காகவும்,
வினாஶாய – பாவச்
செயல்களை செய்பவர்களை அழிப்பதற்காகவும்
தர்ம ஸம்ஸ்தா3பனார்தா2ய - தர்மங்களை
நிலைநாட்டுவதற்காகவும்
யுகே3 யுகே4 – அவ்வப்பொழுது
ஸம்ப4வாமி - நான் வெளிபட்டுக்
கொண்டிருக்கிறேன்.
जन्म कर्म च मे
दिव्यमेवं यो वेत्ति तत्त्वतः ।
त्यत्तवा देहं
पुनर्जन्म नैति मामेति सॊऽर्जुन ।। 09 ॥
ஹே அர்ஜுனா! என்னுடைய பிறப்பும், செயல்களும்
தெய்வீகமானது என்று யாரொருவன் உண்மையாக அறிந்துக் கொள்கின்றானோ, அதாவது பிறப்பு
என்பது பொய்யாக தோற்றமளித்துக் கொண்டிருப்பது என்றும், செயல்கள், ஜகத் பரிபாலம்,
ஜகத் ரக்ஷணம் இவைகளை செய்து கொண்டிருப்பவனாகவும் என்னை யார் அறிந்து கொள்கின்றானோ,
அவன் உடலை துறந்து மீண்டும் பிறவியை அடைவதில்லை. என்னையே அடைகிறார்கள்.
वीतरागभयक्रॊधा
मन्मया मामुपाश्रिताः ।
बहवॊ ज्ञानतपसा
पूता मद्भावमागताः ॥ 10 ॥
வீதராக3ப4யக்ரோதா4 - ஆசை, கோபம், பயம் இவைகளனைத்தும் நீங்கப்பெற்றவர்கள்
மன்மயா – என்னிடத்திலே
ஒன்றிப்போகுதல். இதற்கு பக்தி அல்லது உபாஸனமே சாதனமாக உள்ளது. இறைவனையே
எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டிருத்தல்
மாம் உபாஶ்ரிதா: – என்னிடத்திலே
சரணடைந்தவர்கள், புகலிடமாக கொண்டவர்கள், இது பக்தி என்கின்ற சாதனத்தின் பலனாக வருவது.
ப3ஹவ ஞான தபஸா பூதா – பலரும் ஞானம்
என்ற தவத்தினால் தூய்மை அடைகிறார்கள், அறியாமையிலிருந்து
நீங்கியவர்களாகின்றார்கள். ஞானத்தை அடைவதற்காக செய்யப்படும் சாதனங்கள் அனைத்தும்
தவமென்று எடுத்துக் கொள்ள வேண்டும். சிரவணம் மனனம், நிதித்யாஸனம் ஆகிய மூன்றும்
ஞான தவம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
மத்3பா4வமாக3தா – என்னுடைய
ஸ்வரூபத்தையே அடைகின்ரார்கள். மோட்சத்தையே அடைகின்றார்கள்.
கர்ம யோகத்தின் மூலம் மனத்தூய்மையடைந்து,
உபாஸனம், பக்தி மூலம் என்னையே சரணடைந்து ஞானயோகத்தின் மூலம் மோட்சத்தை
அடைகிறார்கள்.
மன்மயா என்பதற்கு
வேறொரு பொருள ஈஸ்வரனும் தானும் வேறல்ல என்ற உபாஸனை செய்தல். மாம் உபாஶ்ரிதா
என்பதற்கு வேறொரு பொருள் ஞானத்தில் நிஷ்டை அடைகிறார்கள்.
இனி மோட்சத்தை அடைவதற்கான சாதனங்களை
படிப்படியாக கூறுகின்றார். இதில் சாதனத்தின் பலன்கள்தான் கூறப்பட்டிருக்கின்றன.
இதிலிருந்து சாதனத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
ஆசை, கோபம், பயம் இவைகளனைத்தும்
நீங்கப்பெற்றவர்கள். ஆசை என்பது புலனுகர் போகப்பொருட்களிலும், விஷயங்களிலும்
நீங்காப் பற்று வைத்தலேயாகும். அவ்வாறு
பற்று வைத்த விஷயமோ, பொருளோ நம்மை விட்டு சென்று விடுமோ என்று நினைக்கும்போது
வரும் உணர்ச்சியே பயம். பற்று வைத்த பொருட்களை, விஷயத்தை அடைவதற்கு தடையாக
இருப்பவர்கள் மீது வரும் உணர்ச்சியே கோபமாகும்.
அவர்கள் பலமானவர்களாக இருந்தால் பயமும் சேர்ந்து வரும். இதுதான்
முதல்படி. ஆசை, கோபம், பயம் நீங்கப் பெற்ற
மனதை அடைவதற்கு சாதனம் கர்மயோகப்படி வாழ்வதுதான்.
இந்த மூன்று மட்டுமல்லாமல் மற்ற தீய குணங்களையும் நீங்கப்பெற்ற தூய்மையான
மனதை அடைய வேண்டும்.
ये यथा मां
प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहम् ।
मम
वर्त्मानुवर्तन्ते मनुष्याः पार्थ सर्वशः ॥ 11 ॥
மோட்ச வழியை அவரவர்கள் தேர்ந்தெடுப்பது,
இறைவனால் அவைகள் தேர்ந்து எடுக்கப்படுவதில்லை.
அர்ஜுனா! எவர்கள் எப்படி என்னை அணுகுகிறார்களோ
அதற்கேற்ப அவர்களுக்கு நான் அருள் புரிகின்றேன். அதாவது யார் எதைக்
கேட்கின்றார்களோ அதை நான் கொடுக்கின்றேன். மோட்சத்தையும், உலக
சுகத்தையும் சேர்ந்து அடைய வேண்டும் என்று கேட்க முடியாது. இந்த இரண்டில் ஏதாவது ஒன்றைதான் தேர்ந்தெடுத்து கேட்க முடியும். எல்லா
மனிதர்களும் என்னுடைய வழியை எல்லாவிதத்திலும் பின்பற்றுகிறார்கள். எல்லோருமே ஆனந்தத்தை நாடுகின்றார்கள். மோட்சம்
என்பது ஆனந்த ஸ்வரூபம் என்பதை தெரிந்தோ, தெரியாமலோ என் வழியை பின்பற்றுகிறார்கள்.
கர்மயோகம் – ப்ரவ்ருத்தி –
செயலில் ஈடுபடுதல் (அர்த்தம், காமம், தானம்)
ஞானயோகம் – நிவிருத்தி –
செயல்களிலிருந்து நீங்க முயற்சி செய்கின்ற சாதனம்
काङ्क्षन्तः
कर्मणां सिद्धिं यजन्त इह देवताः ।
क्षिप्रं हि
मानुषे लोके सिद्धिर्भवति कर्मजा ॥ 12 ॥
மனிதன் ஏன் மோட்சத்தை நாடுவதில்லை என்பதற்கு
பதிலாக இந்த ஸ்லோகம் அமைந்திருக்கிறது.
இந்த உலகில் கர்மத்தின் பலனை விரும்புவர்களாகிய
மனிதர்கள் விதவிதமான தேவதைகளை வழிபடுகிறார்கள்.
ஏனெனில் மனிதலோகத்தில் கர்மத்தினால் விளையும் பலன் விரைவில் கிடைத்து
விடுகிறது.
चातुर्वर्ण्यं
मया सृष्टं गुणकर्मविभागशः ।
तस्य कर्तारमपि
मां विद्धयकर्तारमव्ययम् ॥ 13 ॥
பிராமணர், க்ஷத்திரியன்,
வைசியன், சூத்திரன் என்ற நான்கு வர்ணங்களை நான் வகுத்தேன். இந்த பிரிவுகளை நான் உருவாக்கிய
போதிலும் நான் அழியாதவனாகவும், ஒன்றையும் செய்யாதவனாகவும் நீ அறிந்து கொள்வாயாக.
இந்த பிரிவு குணங்களின், கர்மத்தின்
அடிப்படையில் பிரிக்கப்பட்டு இருக்கிறது. வர்ணம் என்பது ஒருவனுடைய குணத்தை உணர்த்துவது
பிராமணர் என்ற வர்ணத்தில்
இருப்பவர் வேதத்தை படிப்பவர்கள், வேதத்தை அத்யயனம் செய்பவர்கள், பரபிரம்மத்தை
அறிந்தவர்கள். மற்றவர்களை கௌ3ன பிராமணன் என்று கூறுவர்.
சத்திரியன் –
ஆபத்திலிருந்து மற்றவர்களை காப்பாற்றுபவர்கள், கலாசாரத்தை காப்பாற்றுபவர்கள்,
மற்றவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பவர்கள்
வைசியன் – பல
இடங்களுக்கு சென்று பண்ட மாற்ற முறையில் வியாபாரம் செய்பவர்கள், வியாபாரம்
செய்பவர்கள், விவசாயம் செய்பவர்கள்
சூத்திரன் என்பவர் மற்ற
வர்ணத்தினருக்கு உடலளவில் சேவை செய்பவர்கள்.
இந்த வர்ணத்தை குணம், செயல், பிறப்பு இவற்றின்
அடிப்படையில் மூன்றாக பிரிக்கலாம்.
குணத்தின் அடிப்படையில்
பிராமணன் -
சத்துவ மேலோங்கியும், ரஜோ குணம் குறைவாகவும், தமோ குணம் மிக
குறைவாகவும் இருக்கும் நிலையில் உள்ளவர்கள்
சத்திரியன் -
ரஜோ குணம் மேலோங்கியும், சத்துவ குணம் குறைவாகவும், தமோ குணம் மிக குறைவாகவும்
இருக்கும் நிலையில் உள்ளவர்கள்
வைசியன் -
ரஜோ குணம் மேலோங்கியும் தமோ, சத்துவ குணங்கள் அடங்கியும் இருக்கும் நிலையில்
உள்ளவர்கள்
செயலின் அடிப்படையில்
பிராமணன் –
படித்தல், கற்றுக் கொடுத்தல், புரோகிதர்கள்
சத்திரியன் -
நாட்டை பாதுகாத்தல், நிர்வாகம் செய்தல், அரசியல்வாதிகள்
வைசியன் -
வியாபாரம், உழவுத் தொழில் செய்பவர்கள்
சூத்திரன் -
உடலுழைப்பை தொழிலாக கொண்டவர்கள்
பிறப்பின் அடிப்படையில் - தந்தையின் வர்ணத்தின்படி அழைக்கப்படுபவர்கள்
மேற்கூறிய மூன்று அடிப்படையில் குணத்தின்
அடிப்படையில் வருவதுதான் சரியாகவும், பொருத்தமாகவும் இருக்கும். கர்மமும், பிறப்பும் பிராரப்தத்தின் வசத்தில்
இருப்பதால் இவைகள் அடிப்படையில் பிரிப்பது சரியாக இருக்காது
விசாரம்
· ஒருபொருள் இருவேறு
தன்மையுடன் ஒரேகாலத்தில் ஒரே இடத்தில் இருக்காது. உதாரணமாக இருளும், ஒளியும்
சேர்ந்திருக்காது.
· கர்த்தாவாக இருப்பவன்
போக்தாவாகவும் இருப்பான்
· நான் என்று கூறும்போது
அறிவு ஸ்வரூபமான ஆத்மாவையும், ஸ்தூல உடலையும், சூட்சும உடலையும் இவைகள் சேர்ந்த
அனாத்மாவையும் சேர்த்துதான் குறிப்பிடுகின்றோம்.
· பிரம்மன் எதுவும்
செய்வதில்லை. – அதாவது அகர்த்தா
· மாயையுடன் சேர்ந்து
பார்க்கும்போது அவர் கர்த்தாவாக இருக்கின்றார்.
न मां कर्माणि
लिम्पन्ति न मे कर्मफले स्पृहा ।
इति मं
योऽभिजानति कर्माभिर्न स बध्यते ॥ 14 ॥
செயல்கள் என்னை பந்தப்படுத்துவதில்லை.
ஏனென்றால் கர்மத்தினுடைய பலனில் எனக்கு பற்றில்லை. இவ்விதம் என்னை எவனொருவன்
அறிந்து கொள்கின்றானோ அவனும் கர்மங்களினால் பந்தப்படுவதில்லை.
எந்த செயலை செய்தாலும் நான் செய்கின்றேன் என்ற
அகங்காரமில்லாமலும், அதில் உள்ள பலனில் பற்றில்லாமலும் செயல் புரிய வேண்டும்.
இதனால் அந்த செயலினால் பாவ-புண்ணியத்தை அடையமாட்டோம்.
एवं ज्ञात्वा
कृतं कर्म पूर्वैरपि मुमुक्षुभिः ।
कुरु कर्मैव
तस्मात्त्वं पूर्वैः पूर्वतरं कृतम् ॥ 15 ।।
முற்காலத்தில் வாழ்ந்த மோட்சத்தை அடைந்த
முமுக்ஷுக்களால் இவ்விதத்தில் அறிந்துதான் செயல்கள் செய்யப்பட்டது. உடலைக்
காட்டிலும் வேறாக இருக்கின்ற அதனுடைய கர்மங்கள் என்னுடையது அல்ல என்று புரிந்து
கொண்டு செயல்பட வேண்டும். ஆகவே நீயும்
கர்மத்தைத்தான் செய்ய வேண்டும். தொன்றுதொட்டு முன்னோர்கள் எப்படி செய்தார்களோ
அப்படியே செய்ய வேண்டும்.
किं कर्म
किमकर्मेति कवयोऽप्यत्र मोहिताः ।
तत्ते कर्म
प्रवक्ष्यामि यज्ज्ञात्वा मोक्ष्यसेशुभात् ॥ 16 ॥
செயல் என்றால் என்ன? செயலின்மை என்றால் என்ன?
அறிவாளிகள், வேதாந்த சாஸ்திரத்தை நன்கு படித்தவர்கள் கூட இந்த விஷயத்தில் குழப்பத்தை
அடைந்து உள்ளார்கள். சரியான பதிலை கூறமுடியாமல், ஒரேமாதிரியான விளக்கத்தை கூற
முடியாமல் இருக்கின்றார்கள். ஆகவே உனக்கு
கர்ம தத்துவத்தை சொல்லப் போகின்றேன். இதை
அறிந்து விட்டால் நீ மோட்சத்தை, முக்திநிலையை அடைந்து விடுவாய்.
சம்சாரத்திலிருந்து முழுமையாக விடுதலை அடைந்து விடுவாய்.
कर्मणॊ ह्यपि
बोद्धव्यं बोद्धव्यं च विकर्मणा ।
अकर्मणश्व गहना
गहना कर्मणॊ गतिः ॥ 17 ॥
கர்மத்தினுடைய தத்துவம் அறியப்பட
வேண்டும். நிஷித்த கர்மத்தினுடைய
(விகர்மண) ஸ்வரூபத்தையும் அறியப்பட வேண்டும்.
அகர்மத்தின் தத்துவமும் அறியப்பட வேண்டும்,. ஏனென்றால் கர்மத்தினுடைய
ஸ்வரூபம் அறிவதற்கு மிகவும் கடினம்.
कर्मण्यकर्म यः
पश्येदकर्मणि च कर्म यः ।
स
बुद्धिमान्मनुष्येषु स युक्तः कृत्स्नकर्मकृत् ॥ 18 ॥ ***
ஆத்மா செயலெதுவும் செய்வதில்லை. பலனையும்
அனுப்பவிப்பதுமில்லை.
எவனொருவன் செயலில் செயலின்மையை பார்க்கின்றானோ,
செயலின்மையில் செயலைப் பார்க்கின்றானோ அவன்தான் மனிதர்களில் அறிவை உடையவன்,
புத்தியை உடையவன். இவன் பிரஹ்மநிஷ்டன், செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து
முடித்தவன். செய்ய வேண்டியது எதுவுமில்லை.
விசாரம்
· வாகனத்தில் செல்லும்போது
சாலையோர மரங்கள் பின்னோக்கி ஓடுவது போல தோன்றும். உண்மையில் அவைகள் அசைவற்றுத்தான்
இருக்கின்றன. இதை ஒருவனுக்கு சொல்லும்போது நகர்வது போல இருக்கும் மரங்கள்
உண்மையில் நகர்வதில்லை என்று கூறுவோம்
· தூரத்தில் செல்லும்
கப்பலைப் பார்க்கும்போது நகராமல் இருப்பது போல தெரிவது போல செயலின்மையில் செயலை
பார்ப்பதற்கு ஒப்பிட்டு பார்த்து புரிந்து கொள்ள வேண்டும்.
· ஸ்தூல, சூட்சும சரீரங்கள்
செயல்கள் புரிகின்றது. ஜீவனுக்கு உடல்களின் செயல்களை ஆத்மா செய்வதாக
தோன்றுகிறது. எனவே நான் போகின்றேன்,
சிந்திக்கின்றேன் என்று கூறுகின்றான். உண்மையில் நான் என்ற சொல்லால்
குறிக்கப்படுகின்ற ஆத்மா எதுவும் செய்வதில்லை.
ஆனால் அனாத்மாவின் செயல்களை ஆத்மா செய்வதாக புரிந்துக்
கொண்டிருக்கின்றான். எனவே அவனுக்கு
செயல்களெல்லாம் அனாத்மாவை சேர்ந்தது என்றும், ஆத்மா செயல் எதுவும் செய்வதில்லை
என்பதை உபதேசிப்பதற்குதான் இவ்வாறு சொல்லப்பட்டு இருக்கிறது. ஆத்மா செயல்படுவதுபோல் பார்க்கின்றாயோ அந்த
இடத்தில் செயலின்மையை புரிந்து கொள்ள வேண்டும். நான் எந்த செயலையும் செய்வதில்லை.
செயல்கள் யாவும் என்னால் பிரகாசப்படுத்திக் கொண்டிருக்கும் மனதையும் உடலையும்
சார்ந்தது என்று அறிந்து கொள்ள வேண்டும்.
· மனமும் உடலும் அமைதியாக
இருக்கும்போது நான் ஒன்றும் செய்யாமல் இருக்கின்றேன் என்று சொல்வோம். ஆனால் செயல்படாமல் இருப்பதும் ஒருவிதமான செயல்
என்று அறிய வேண்டும். ஓய்வெடுத்தலும்
ஒருவிதமான செயல்தான் என்ற அடிப்படையில் சரீரமும், உடலும் செயல் செய்வதாக
இருக்கின்றது. நமது உடல், மனம் இவைகளின் செயலற்ற நிலையிலும் செயல் புரிவதாக
பார்க்க வேண்டும்.
பலன்-1 சாதாரணமாக மனிதர்கள்
அமைதியை வெளிசூழ்நிலைகளையும், மற்ற மனிதர்களிடத்திலிருந்து நீங்கியிருந்தாலும்,
அனைத்தையும் துறந்து விட்டாலே அடைந்து விடலாம் என்று நினைக்கிறார்கள். பகவானின் உபதேசப்படி இந்த அமைதியும் ஒருவித
செயல்தான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே நான் ஆத்மா என்ற அறிவை அடைந்தால்தான் உண்மையிலே செயலற்றவனாக இருக்க
முடியும். மனமும் சூழ்நிலைகளும்தான் செயல்
புரியும் தன்மையுடையதாக இருக்கின்றது.
அனாத்மாக்கள் அனைத்தும் கர்ம ஸ்வரூபமாக இருக்கின்றன. வெளிசூழ்நிலைகளைப் பொறுத்து நம்முடைய அமைதியானது
இருக்க கூடாது.
பலன்-2 ஆத்மா செயல்படுவதாக எண்ணிக் கொண்டிருப்பவன்
அதில் செயலின்மையை பார்க்க வேண்டும். அதாவது நான் செய்கின்ற எல்லா செயல்களிலும்
செயலின்மையை பார்க்க வேண்டும். சம்சாரம் என்பது குற்ற உணர்வினால் துயரப்படுவது
என்பது ஒருவிதமான லட்சணம். நான் ஏன் இதை செய்தேன் ஏன் இதை செய்யவில்லை என்ற குற்ற
உணர்வு எண்ணங்களினால் வாட்டப்படுகின்றோம்.
ஆத்மாவாகிய நான் எதுவுமே செய்வதில்லை. இந்த உடல்தான், மனம்தான் செயல்படுகின்றன
என்ற அறிவு இருந்தால் இந்த குற்ற உணர்விலிருந்து விடுபடுவோம். மனமும், உடலும் செய்கின்ற செயல்களின் பலன்களை
அவைகள்தான் அனுபவிக்கும் நான் அனுபவிக்கப் போவதில்லை என்ற அறிவை அடைவதுதான்
மோட்சம். என்னுடைய அமைதிக்கு எந்த
நிபந்தனையும் கிடையாது
பலன்-3 இந்த அறிவையுடையவன்தான் மனிதர்களிலே அறிவை
உடையவன், பண்டிதன், புத்திமான். இந்த ஞானத்திலே நிலைப்பேற்றவன் பிரஹ்ம-நிஷ்டன்,
ஞானத்திலே நிலை பொருந்தியவன். செய்யப்பட வேண்டிய எல்ல செயல்களும் செய்து
முடித்தவனாகின்றான். (க்ருத்ஸனகர்ம க்ருத்)
यस्य सर्वे
समरम्भाः कामसङ्कल्पवर्जिताः ।
ज्ञानाग्निदग्धकर्माणं
तमाहुः पण्डितं बुधा: ॥ 19 ॥
ஞானியின் செயலில் செயலின்மையை பார்க்க
வேண்டும். அக்ஞானி செயலற்று இருந்தாலும் செயல் செய்து கொண்டிருக்கின்றான் என்று
பார்க்க வேண்டும். ஆத்மா எதையாவது
விடவேண்டுமா அல்லது அனாத்மா எதையாவது விடவேண்டுமா என்ற விசாரத்தினால் ஒன்றுமே
செய்யாதிருக்கும் ஒரு வஸ்து கர்மத்தை துறக்க வேண்டியதில்லை. எனவே ஆத்மா கர்ம சந்நியாசம் செய்ய வேண்டிய
அவசியம் இல்லை. ஆனால் அனாத்மாவான (உடல், மனம்) செயலை துறக்கவே முடியாது. எனவே கர்ம
சந்நியாசம் செய்ய முடியாது. கர்ம சந்நியாசம் செயலளவில் நடைபெற முடியாது. ஆத்ம
ஞானத்தினால்தான் கர்மத்தை சந்நியாசம் செய்ய முடியும்.
யஸ்ய ஸர்வே ஸமாரம்பா - யாருடைய (மேற்கூறிய
அறிவுடையவனுடைய ) அனைத்து செயல்களும்
காம ஸங்கல்ப வர்ஜிதா: - ஆசைகளும்,
சங்கல்பமும் இல்லாமல் இருக்கின்ற
ஞானாக்னி தக்த4 கர்மாணம் – ஞானம் என்ற
நெருப்பினால் எரிக்கப்பட்டுவிட்டதோ
தமாஹு: பண்டிதம் பு3தா4: - இப்படிபட்டவர்களை ஆத்ம அறிவு
உடையவர்கள், ஞானி, பண்டிதன் என்று மற்ற ஞானிகளும் அழைக்கிறார்கள்.
ஞானம் என்ற நெருப்பினால் எரிக்கப்பட்ட செயல்கள். பாவ-புண்ணியத்தை தரக்கூடிய சக்தியை இழந்து விட்ட செயல்கள்.
ஞானியினுடைய சஞ்சித, ஆகாமி கர்ம பலன்களை அனைத்தும் எரிக்கப்பட்டுவிட்டது. பிராரப்த கர்மத்தினால் மீதமிருக்கும் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இந்த நிலையில் அவன் செய்யும் செயல்கள் பாவ-புண்ணியத்தை கொடுக்கும் சக்தி இழந்து விடும்.
காமம் என்பது நம்மிடத்தில் எழும் ஆசையாகும். சங்கல்பமே ஆசை தோன்றுவதற்கு காரணமாக இருப்பது. ஆசை என்ற நிலையில் விரும்பிய பொருளை
அடைய வேண்டும் என்று உறுதியாக இருப்பது. சங்கல்பமானது பார்த்தப் பொருளையே
நினைத்துக் கொண்டிருப்பதால் ஆசையே ஏற்படுகின்றது.
காமத்திற்கு இன்னொரு பொருள் நாம் செய்கின்ற
செயலினால் வரும் பலனின் மீது வைத்திருக்கும் ஆசை.
சங்கல்பத்திற்கு இன்னொரு பொருள் செயலின் பலனை அடைய விரும்பும் நிலை.
त्यक्त्वा
कर्मफलासङ्गं नित्यतृप्तो निराश्रयः ।
कर्मण्यभिप्रवृत्तोऽपि
नैव किञ्चिर्तरॊति सः ॥ 20 ॥
நிவிருத்தி மார்க்கத்தில் இருக்கும் ஞானி,
பிரவிருத்தி மார்க்கத்தில் இருக்கின்ற ஞானி என்று இருவகையாக ஞானிகள் இருப்பர். இது
அவர்களின் பிராரப்தத்தின் அடிப்படையில் அமைந்திருக்கும். ஒருவகையினர் இல்லறத்தில் இருந்து
கொண்டு செயல்களை செய்து கொண்டே வேத சாஸ்திரங்களை படித்துக் கொண்டிருப்பார்கள். மற்றொரு வகையினர் சந்நியாசம் எடுத்துக் கொண்டு வேத சாஸ்திரங்களை படித்துக் கொண்டிருப்பார்கள்.
த்யக்த்வா கர்ம பல ஆஸங்கம் – கர்மத்தில்
அகங்காரத்தையும், பலனில் உள்ள பற்றையும் துறந்து
நித்ய த்ருப்தஹ – எப்பொழுதும்
மனநிறைவுடன் இருப்பவர்கள்
நிராஶ்ரயா – எதையும்
சார்ந்தில்லாதவர்கள்,
கர்மணி – விதவிதமான
பொறுப்புக்களில், செயல்களில் முழுமையாக
அபி4 ப்ரவ்ருத்தி –
ஈடுபடுகின்றான், இருப்பினும்
ந ஏவ கிஞ்சித் கரோதி ஸஹ – அவன் ஒன்றும்
செய்பவனல்ல.
உலகத்திலுள்ள எதையும் சார்ந்து இல்லாதிருப்பவர்கள். புலனுகர் பொருட்களோ, மனிதர்களோ நமக்கு பயனை தருவதால் அதைச் சார்ந்து இருக்க வேண்டியதாகிறது. உதாரணமாக செல்வம், மகன், மனைவி இவர்களை சார்ந்திருக்கும் நிலை.
निराशीर्यतचित्तात्मा
त्यक्तसर्वपरिग्रहः ।
शरीरं केवलं कर्म
कृर्वत्ताप्नोति किल्बिषम् ॥ 21 ॥
சந்நியாச ஆசிரமத்திலுள்ள ஞானியைப் பற்றி இதில்
கூறுகின்றார்.
நிராஶீ – எதிர்பார்ப்பு
எதுவும் இல்லாதவன்,
யதி சித்தம் ஆத்மா –
கட்டுபடுத்தப்பட்ட மனதையும், உடலையும் உடையவன். ஶமத்துடனும், தமத்துடனும்
இருப்பவன்
தியக்த ஸர்வம் பரிக்3ரஹ – எல்லா
உடமைகளையும் துறந்தவன். பரிக்ரஹ என்பது வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை பொருட்களை
உடையவன்
ஶரீரம் கேவலம் கர்ம குர்வன் – சரீரத்தை
பாதுகாப்பிற்காக மட்டும் செய்கின்ற செயல்களை பற்றில்லாமல் செய்து கொண்டிருப்பான்.
ஆப்னோதி கில்பி3ஷம் - இந்த
செயல்களினால் பாவ புண்ணியத்தை அடைவதில்லை.
சந்நியாச ஆசிரமத்திலுள்ள ஞானி யாரிடமும், எதனிடமும் எதையும் எதிர்ப்பார்க்கமாட்டான். யாரையும் நேசிக்க மாட்டார்கள். தன்னைத்தானே நேசித்துக் கொண்டிருப்பார்கள். எனவே யாரிடமும் அன்பையும், மரியாதையையும் எதிர்பார்க்க மாட்டார்கள்.
சரீர கர்மம் என்பது உடலினால் செய்யப்படும்
செயல் என்பது தவறான பொருள். இப்படி பொருட்கொண்டால் வாக்கு, மனம் இவைகளினால்
செய்யும் செயல்கள் பாவ-புண்ணியத்தை கொடுக்குமா என்ற சந்தேகம் வரும். இது போன்ற பல
குறைகள் இருப்பதால் இவ்வாறு பொருட்கொள்ளக் கூடாது.
यदृच्छालाभसन्तुष्टो
द्वन्द्वातीतो विमत्सरः ।
समः
सिद्धावसिद्धौ च कृत्वापि न निबध्यते ॥ 22 ॥
யத்3ருச்சா2 லாப4 ஸந்துஷ்டஹ – எதிர்பாராமல்
தானாகவே கிடைத்ததில் மகிழ்ச்சி உடையவனாகவும், கிடைக்காமல் போனாலும் மனநிறைவோடு
இருப்பவன்.
த்வந்த்வம் அதீதஹ – இருமையை
கடந்தவன். இன்ப-துன்பம், குளிர்-வெப்பம் போன்ற இருமைகளை கடந்தவன். இருமைகளால்
பாதிக்கப்படாதவனாக இருப்பான். இருமைகளில்
ஒரே மனநிலையுடன் இருப்பான்.
விமத்ஸரஹ –
பொறாமையற்றவன், போட்டியாக யாரையும் நினைக்காதவன்
ஸம: ஸித்3த4 அவஸித்3தௌ4 – வெற்றியிலும்,
தோல்வியிலும் சமநிலையுடன் இருப்பவன்
ச க்ருத்வாபி ந நிப3த்4யதே – இத்தகையவன்
தான் செய்யும் செயல்களால் பந்தப்பட மாட்டான்.
சந்நியாச ஆசிரமத்திலுள்ள ஞானி பிராரப்த வசத்தினால் எது கிடைத்தாலும், கிடைக்கா விட்டாலும்
திருப்தியுடனும், மனநிறைவுடனும் இருக்கின்றான்.
இருமைகளையற்றவன், பொறாமை, பகையுணர்ச்சி இல்லாதவன். வெற்றி தோல்விகளில்
சமமாக இருப்பான். எந்த செயல் செய்தாலும்
அதனால் பந்தப்படுவதில்லை.
गतसङ्गस्य
मुक्तस्य ज्ञानावस्थितचेतसः ।
यज्ञायाचरतः कर्म
समग्रं प्रविलीयते ॥ 23 ॥
இல்லறத்தில் இருக்கும் ஞானியின் லட்சணத்தை
இதில் கூறுகின்றார். எதிலும் பற்றற்று இருப்பான். முக்தனாக இருப்பான், ஞானத்தில்
நிலைபெற்றிருப்பான்.
ஞான அவஸ்தித சேதனஹ – நான் ஆத்மா
என்கின்ற ஞானமானது புத்தியில் நிலை பெற்றிருப்பவன்
முக்தஸ்ய –
சம்சாரத்திலிருந்து விடுபட்டு இருப்பவன், தர்ம-அதர்ம பந்தங்களிலிருந்து விடுபட்டு
இருப்பவன்
க3தஸங்க3ஸ்ய – இதனால்
எதையும் சார்ந்தில்லாமல் இருப்பான், எதிலும் பற்று இல்லாதவனாக இருப்பான்
யக்ஞாய ஆசரத: கர்ம – யாகத்திற்காக
செயல் செய்து கொண்டிருப்பான். ப்ராரப்த காலம் முடியும் வரை செயல் செய்து
கொண்டிருப்பான். வாழும் வாழ்க்கையையே யாகமாக நடத்திக் கொண்டிருப்பான், உலக
நன்மைக்காகவும் ஏதாவது செயல் செய்து கொண்டிருப்பான்
ஸமத்3ரம் ப்ரவிலீயதே – கர்மமானது
பலனுடன் சேர்ந்து அழிந்துவிடுகின்றது.
ब्रह्मार्पणं
ब्रह्म हविर्ब्रह्माग्नौ ब्रह्मणा हुतम् ।
ब्रह्मैव तेन
गन्तव्यं ब्रह्मकर्मसमाधिना ॥ 24 ॥ ***
சாப்பிடுவதற்கு முன் இந்த ஸ்லோகம்
சொல்லப்படுகின்றது. எதனால் ஞானி செய்யும் செயல் பலனை கொடுப்பதில்லை என்பதையும்
இதில் கூறப்பட்டு இருக்கிறது. நாம் செய்யும் செயலின் பலனை நாம் அனுபவித்தால்தான்
தீரும். ஞானத்தில் மட்டும் கர்ம பலன்கள் அனுபவிக்காமல் அழிவடைகின்றது.
க்ரியா காரக பலாத்மகம் ஜகத் – இந்த உலகமானது
காரகம், க்ரியாபலம் என்ற ரூபத்தில் இருக்கின்றது. க்ரியா நடைபெறுவதற்கு
காரணமாக இருப்பதை காரகம் என்று அழைக்கப்படுகின்றது. காரகத்திலிருந்து தோன்றுவது க்ரியா,
க்ரியாவிலிருந்து உற்பத்தியாவது பலன். ஆறுவிதமான காரகங்கள் இருக்கின்றன. அவைகள் 1.
செய்பவன் (கர்த்தா), 2. செயல், 3. கரணம், 4. சம்ப்ரதானம், 5. அபாதானம் 6.
அதிகரணம் ஆகியவைகளாகும்.
காரகம் என்பது ஒருவிதமான த்வைத புத்தியை
குறிக்கும். உலகில் எதைப் பார்த்தாலும்
காரக ரூபமாக பார்க்கப்படுகிறது. ஆனால்
ஞானியானவன் காரக புத்தியில்லாமல் இந்த உலகத்தை பார்க்கின்றான். அந்தக் காலத்தில் யாகம் செய்வது சாதாரணமாக
இருந்திருப்பதால் அதை உதாரணமாக எடுத்துக் கொண்டு அதில் காரக புத்தியில்லாமல்
எப்படி செயல் செய்யப்படுகின்றது என்பதை இதில் விளக்கியுள்ளார். அது எப்படி
பந்தப்படாமல் இருக்கின்றது என்பதையும் கூறியிருக்கிறார்.
கர்த்தா – எஜமானன் –
யாகத்தை நடத்த ஏற்பாடு செய்தவன்
கர்ம – ஹவிஸ் – யாகத்தில்
ஹோமகுண்டத்தில் போடப்படும் பொருட்கள்
கரணம் – ஹவிஸை ஹோம
குண்டத்தில் போட பயன்படுத்தும் கரண்டி
அதிகரணம் - ஹோம குண்டம்,
அக்னி, பலன் – சொர்க்கத்தை அடைதல்
இந்த நான்கும் யாகத்தில் உபயோகப்படுத்தப்படும்
சிலவகையான பொருட்கள் இவைகளனைத்தையும் பிரம்மமாகவே ஞானி நினைக்கின்றான். எனவே அந்த
செயலினால் பந்தப்படுவதில்லை
அடுத்த உதாரணம் சாப்பிடுதல்:
கர்த்தா –
சாப்பிடுபவன்
கர்ம -
சாப்பாடு, உணவு
கரணம் -
கை, வாய்
அதிகரணம் -
வயிற்றுக்குள் இருக்கும் பிராண அக்னி, உட்காரும் ஆசனம்
பலன் -
பசி நீங்குதல்
இவைகளனைத்தையும் பிரம்மனாகவே நினைக்கிறேன் என்ற
புத்தியுடன் சாப்பிடுவது எனவே இந்த ஸ்லோகத்தை சொல்லிவிட்டு காரணம். பிரம்மார்ப்பன
புத்தியுடன் சாப்பிடுகிறேன் என்ற புத்தியுடன் சாப்பிடுவது
பிரஹ்ம அர்ப்பணம் – இந்த உலகத்தில்
உள்ள அனைத்து பொருட்களும் காரகம் என்ற புத்தியை நீக்கி பிரம்மமே இருக்கின்றது என்று
நமக்கு உபதேசிக்கின்றார். யாகத்தில் பயன்படுத்தப்படும்
ஹோம கரண்டியை அர்ப்பணம் என்று கூறியிருக்கிறார். இதில் பிரம்மத்தையும்
ஹோமகரண்டியையும் சமப்படுத்தியிருக்கிறார். கரணமாக இருக்கும் இதுவே பிரம்மனாகவே
ஞானிக்கு தோன்றும்
சாமானதிகரணம் ஜீவன் பிரம்மனாக
இருக்கிறான். இதில் ஜீவனும் பிரம்மனும் ஐக்கியம் என்று புரிந்து கொள்ள வேண்டும்,
ஜகத் பிரம்மனாக இருக்கின்றது என்ற வாக்கியத்தில் ஜகத் உண்மையில் இல்லை பிரம்மன்
மட்டும்தான் இருக்கின்றது . அதுவே ஜகத்தாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. பாதாயாம்
சாமானாதி கரணம் என்று இதைக் கூறுகின்றார்கள். இது ஒன்றை நீக்கி வேறொன்றை
நிரூபிப்பதற்கு பயன்படுகின்றது. இங்கு
ப்ரஹமார்ப்பணம் என்பதில் எது ஹோமகரண்டியாக அக்ஞானிகளுக்கு தெரிகின்றதோ அதுவே
ஞானிகளுக்கு பிரம்மனாகவே தெரிகின்றது.
பிரஹ்ம ஹவிஸ் –
ஹோமகுண்டத்தில் போடும் பொருட்களும் பிரம்மனாகவே தெரிகின்றது.
பிரஹ்ம அக்3னௌ –
ஹோமகுண்டத்தில் இருக்கும் அக்னியும் பிரம்மனாகவே தெரிகிறது
ப்ரஹ்மனா ஹுதம் - எஜமானனான கர்த்தாவும் பிரம்மனாக
தெரிகின்றான். செயல்களில் அதிகமாக ஈடுபடுவதினால் அகங்காரம் வளர்ந்து
கொண்டேயிருக்கும்.
ப்ரஹ்ம ஏவ தேன க3ந்த3வ்யஜ் – யாகத்தின்
பலனாக பிரமத்தை அடைவதையே ஞானியால் கருதப்படுகிறது.
ப்ரஹ்மகர்ம ஸமாதினா – இது ஞானிக்கு
கொடுக்கும் அடைமொழி. எல்லா செயல்களிலும் பிரம்மத்தையே பார்க்கும் அறிவை உடையவன்.
எல்லாவற்றிலும், எல்லாவிடத்திலும் பிரம்மத்தையே பார்ப்பது இவனுடைய இயல்பான செயலாக
இருக்கும். அதிலேயே புத்தியை உடையவனாக
இருப்பன், மனதை அடைந்த அறிவில் உறுதியாக வைத்திருப்பவன்.
இந்த ஸ்லோகத்தில் த்வைத புத்தியை நீக்கி
அனைத்தும் பிரம்மம் என்ற அறிவை புகட்டுகிறார். இத்தோடு ஞான-கர்ம ஸமுச்சயம் பற்றிய
விளக்கம் முடிவடைகிறது.
தவறான விளக்கம் – மனதை
பிரம்மனாக தியானம் செய் என்பது தவறான விளக்கம் . லிங்கத்தை சிவனாக
தியானம் செய். சாலிகிராமத்தை விஷ்ணுவாக தியானம் செய். இதேப்போன்று இந்த
ஸ்லோகத்திற்கு பொருள் சொல்வதுண்டு. இந்த ஸ்லோகத்தில் சொல்லப்பட்டிருக்கும் இடம்
ஆத்மஞானத்தை பற்றியதாக இருப்பதால் இதை தியானத்திற்கான பொருளாக எடுத்துக் கொள்ளக்
கூடாது.
दैवमेवपरे यज्ञं
योगिनः पर्युपासते ।
ब्रह्माग्नावपरे
यज्ञं यज्ञेनैपजुह्वति ॥ 25 ॥
மோட்சத்தை அடைய உதவுகின்ற சாதனங்களை இனிவரும்
ஸ்லோகங்களில் கூறுகின்றார். இவைகளை இரண்டு
பிரிவாக பிரித்திருக்கின்றார். அவைகள்
1.நேரிடையான ஸாதனம். இதைக் கொண்டு அறிவை
உடைதல், பிரம்ம ஞானத்தை அடைதல்,
2.மற்றவைகளை ஒரு பிரிவாக பிரித்திருக்கின்றார். இவைகள் ஞானத்தை அடைவதற்கு தகுதிபடுத்தும் சாதனங்கள். எல்லா சாதனங்களையும் யாகமாக
உருவகப்படுத்தி உபதேசம் செய்கிருக்கிறார்.
இந்த ஸ்லோகத்தில் இரண்டு சாதனங்கள் கூறப்பட்டிருக்கின்றது.
முதல் சாதனமாக தெய்வ யக்ஞம் என்பதைக் கூறுகின்றார். எந்த யாகத்தில்
தேவதைகளை, தேவர்களை பூஜிக்கப்படுகிறார்களோ அதற்கு தெய்வ யக்ஞம் என்று
கூறுவர். இதில் யாகத்தையே சாதனமாக கூறுகின்றார்.
தைவம் அபயே யக்ஞம் யோகி3ன: (சாதனம்-1) - சில
கர்மயோகிகள் தெய்வ யக்ஞத்தை செய்கிறார்கள். தேவதைகளை குறித்து யாகம்
செய்கின்றார்கள்
பிரஹ்ம ஞான யக்ஞம் (சாதனம்-2)–
இது மோட்சத்திற்கான நேரிடையான ஸாதனம். ஞானத்தையே சாதனமாக கூறுகின்றார். இதில்
அக்னியாக பரமாத்வாவில் ஜீவனிடத்து உள்ள அகங்காரமென்ற ஹவிஸை தியாகம் செய்வது
ப்ரஹ்ம அக்னௌ – பரபிரம்மன்
என்கின்ற அக்னியில்
யக்ஞம் – ஜீவாத்மாவை
அபரே - ஞான
மார்க்கத்திற்கு வந்தவர்கள்
யக்ஞேவ ஏவ உபஜுஹவதி – ஜீவாத்மாவினால்
அகங்காரத்தை அர்ப்பணம் செய்கிறார்கள்
ஜீவாத்மாவை தன்னை ஜீவனாக இருந்து நினைத்துக்
கொண்டு இருந்தவன். ஆத்ம ஞானம் வந்தவுடன்
சம்சாரம் நாசம் அடைந்துவிட்டது. ஜீவாத்மா பிரம்மத்தோடு
ஐக்கியமாவதற்கு அகங்காரத்தை அக்னியில் ஹவிஸாக போட்டு அதை நாசமாக்கிவிட வேண்டும்.
श्रोत्रादीनीन्द्रियाण्यन्ये
संयमाग्निषु जुह्वति ।
शब्दादीन्विषयानन्य
इन्द्रियाग्निषु जुह्वति ॥ 26 ॥
இந்திரிய ஸம்யக் யக்ஞம் (சாதனம்-3) – தம யக்ஞம் -
புலனடக்கம்
இதில் இரண்டு சாதனங்கள் கூறப்படுகின்றது. இந்திரிய ஸம்யம் யக்ஞம் அல்லது தம
யக்ஞம், புலன்களை கட்டுபடுத்தல் இங்கு சாதனமாக கூறுகின்றார். மனதிற்கு ஐம்புலன்கள்
வழியாக விஷயத்தை உணவாக கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இவைகள்தான் மன ஆரோக்கியத்தை
நிர்ணயிக்கிறது.
ஹவிஸ் –
ஞானேந்திரியங்கள்
அக்னி –
கட்டுப்படுத்துதல் என்ற முயற்சி.
கட்டுப்பாடு என்ற அக்னிக்குள் கட்டுக்கு அடங்காத புலன்களை போடுகிறார்கள்.
சிலர் காது முதலிய புலன்களை கட்டுப்பாடு என்ற அக்னியில் அர்ப்பணம் செய்கின்றார்கள்
விஷய கிரகண யக்ஞம் (சாதனம்-4) –
புலன்களுக்குரிய நல்ல விஷயங்களை அனுபவிப்பதும் கிரகிப்பதும் சாதனங்களாக
கூறுகின்றார். சப்தம் முதலிய விஷயங்களை புலன்கள் என்று அக்னியில் அர்ப்பணம் செய்ய
வேண்டும். மனதுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் விஷயங்களை அந்தந்த புலன்களால்
கிரகித்தல், அனுபவித்தல்
सर्वणीन्द्रियकर्माणि
प्राणकर्माणि चापरे ।
आत्मसंयमयॊगाग्नौ जुह्वति ज्ञानदीपिते ॥ 27 ॥
आत्मसंयमयॊगाग्नौ जुह्वति ज्ञानदीपिते ॥ 27 ॥
ஆத்ம ஸம்யம் யக்ஞம் (சாதனம்-5) – மனவடக்கம்,
மனக்கட்டுப்பாடு
நம்மையும் மீறி புலன்களின் வழியே மனதிற்கு
செல்லும் தேவையில்லாத விஷயங்களை விசாரித்து நீக்க வேண்டும். எனவே தேவையற்ற
விஷயங்கள் சென்றாலும் அதை அத்தோடு நிறுத்திவிட வேண்டும். திரும்ப திரும்ப
நினைக்கக் கூடாது. ஆவிருத்தி – மீண்டும் மீண்டும் நினைத்தல். தேவையற்ற
சங்கல்பங்களை நீக்கிவிடுதல். புத்தியின் துணைக்கொண்டுதான் மனதை கட்டுப்படுத்த
வேண்டும். புத்தியிடம் தேவையற்ற விஷயங்களை திரும்ப திரும்ப சிந்திக்காதே என்று
திடமாக பதிய வைத்துவிட வேண்டும்.
நம்மிடத்து
வாஸனைமயமாக இருக்கும் அசுர குணங்கள், ஏற்கனவே நாம் பதிய வைத்திருக்கும்
ஸம்ஸ்காரங்கள். இவைகளால் மனமானது அலைக்கழிக்கப்படும். விவேக சக்தியின்
துணைக்கொண்டு மனதை கட்டுக்குள் கொண்டு வரமுயற்சி செய்ய வேண்டும்.
மனமானது
சுகம் எந்தவிடத்தில் கிடைக்குமோ அதையேச் சுற்றிக் கொண்டிருக்கும். அந்த இடம் சுகம்
கொடுக்ககூடியது என்று முடிவு செய்வது புத்தியாகும். நிலையற்ற பொருளிடத்தில் சுகத்தைப்
பார்க்காமல் அதன் மீது பற்று வைக்காமல் வைராக்கியத்துடன் இருக்க வைப்பது விவேகம். இதை
புத்தியிடத்தில் நன்கு பதிய வைத்துவிட வேண்டும். இதனால் மனம் அந்த இடம் சுகத்தைக் கொடுக்கும் என்று நினைத்தாலும் புத்தியின் முடிவுப்படி அந்த
இடத்திற்கு செல்லாது. இவ்வாறு விடாமுயற்சியுடன் இதை திடப்படுத்த வேண்டும். ஜபம், தியானம்
இதற்கு உகந்த சாதனங்களாகும்
ஸ்லோக விளக்கம்
ஸர்வானி
இந்த்3ரியானி கர்மாணி - எல்லா ஞான இந்திரியங்களின் செயல்கள்,
ப்ராணகர்மாணி - கர்ம இந்திரியங்களின் செயல்கள்
ச பரே - சிலர்
ஆத்ம
ஸம்யம் யோகா3க்3னௌ மனக்கட்டுப்பாடு என்ற அக்னியில்
ஜுஹ்வதி
- அர்ப்பணம்
செய்கிறார்கள்.
ஞானதீபிதே
- இந்த
அக்னியை விவேக சக்தியினால் அணையாமல் தூண்டி விட்டு கொண்டிருக்க வேண்டும்.
ஶமமும், த3மமும் ஒன்றையொன்று
சார்ந்திருப்பதால் பகவான் கூறியிருக்கின்றார்.
द्रव्ययज्ञास्तपॊयज्ञा
यॊगयज्ञास्तथापरे ।
स्वाध्यायज्ञानयज्ञाश्च
यतयः संशितव्रताः ॥ 28 ॥
இந்த ஸ்லோகத்தில் மேலும் ஐந்து சாதனங்களை
கூறியிருக்கிறார்.
த்ரவ்ய யக்ஞம் (சாதனம்-6) – பொருட்களை
தானம் செய்தல். எதைக் கொடுக்கின்றோமோ அதை ஹவிஸாகவும், பெறுபவரே அக்னியாகவும்
பொருத்தி பார்த்து புரிந்து கொள்ள வேண்டும்.
தபோ யக்ஞம் (சாதனம்-7) – தவயோகம் –
தவத்தை யாகமாக செய்தல். தவம் என்பது பல
சாதனங்களை குறிக்கின்றது. விரதம், ஜபம்,
சாஸ்திரம் கேட்டல், ஸம, த3ம போன்றவைகளை இந்த சொல்லால் குறிப்பிடலாம். புலன்களின் விஷயங்களுக்கு அடிமையாகி விடாமல் எதை செய்தாலும் அதை தவம் என்று
அழைக்கலாம். தவத்தின் மூலமாக லத்தை அடைய
வேண்டுமேயொழிய பலவீனம் அடையக் கூடாது.
இதில் தவம் செய்ய வேண்டும் என்ற உறுதியான மனநிலை அக்னி, ஒழுக்கமின்மையே
அதில் போடும் ஹவிஸாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
யோக யக்ஞம் (சாதனம்-8) – அஷ்டாங்கயோக
யாகம். பதஞ்சலி மாமுனிவர்
உபதேசித்திருக்கும் எட்டு வகையான யோகத்தை இது குறிக்கின்றது. அவைகள் யமம் (தவிர்க்க வேண்டியவைகள்), நியமம்
(செய்ய வேண்டியவைகள்), ஆஸனம், பிராணாயாமம், ப்ரதியஹாரம்-புலனடக்கம்,
தா4ரணா-மனவொருமுகப்பாடு, தியானம், ஶமாதி-மனதை அமைதியாக வைத்திருத்தல்
ஆகியவைகளாகும்.
ஸ்வாத்யாயம் யக்ஞம் (சாதனம்-9) – நாம் எதை படிக்க விரும்புகின்றோமோ அதை மனப்பாடம் செய்தல், பிறகு அதனுடைய
பொருளை புரிந்து கொள்ளுதல். வேதத்தை மனப்பாடம் செய்தல்
ஞான யக்ஞம் (சாதனம்-10) – அர்த்த கிரகணம் –
வேதத்தின் அர்த்தத்தை புரிந்து கொள்ள முயற்சிக்கும் சாதனம். வேதாந்தத்தை விசாரம்
செய்யும் செயலுக்கு ஞான யக்ஞம் என்று பெயர். சாஸ்திரத்தை கேட்டல், சிந்தித்தல்,
அடைந்த அறிவிலே நிலைபெற தியானம் செய்தல் ஆகியவைகள் ஞான சாதனங்கள். திடமான மன உறுதி உடைய சாதகர்கள் இப்படிபட்ட
சாதனங்களை கடைப்பிடிக்கின்றனர்.
अपाने जुह्वति
प्राणं प्राणेऽपानं तथापरे ।
प्राणापानगती
रुद्ध्वा प्राणायामपरायणाः ॥ 29 ॥
பிராணாயாமம் (சாதனம்-11) – பிராணனை ஒழுங்குபடுத்துதல் – பிராணனை
முறைப்படுத்துவதனால் மனமும், உடலும் ஒழுங்குபடுத்தப்படும். இது மனதை
அமைதிபடுத்துவதற்கு உதவி புரிகின்றது. மெதுவாக காற்றை உள்ளே இழுத்தல், வைத்து
இருத்தல், வெளியே விடுதல் இதுவே பிராணாயாமமாகும். இது மூன்றாக பிரிக்கப்படுகிறது. அவைகள்
1. பூரக
பிராணாயாமம் – காற்றை உள்ளே இழுத்தல்,
2.ரேசகம்- காற்றை வெளியே விடுதல்,
3.கும்பகம் –
காற்றை உள்ளே வைத்திருத்தல்.
பூரகம் – காற்றை உள்ளே இழுப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்கு மற்ற இரண்டிற்கும் கொடுக்க தேவையில்லை
ரேசகம் – காற்றை வெளியே விடுதல்
கும்பகம் – காற்றை உள்ளே வைத்திருத்தல்
ப்ராண ஈக்ஷணம் – நம் மூச்சுக்காற்றையே கவனித்தல்
அபானே ப்ராணம் – காற்றை உள்ளே இழுத்தல் அபானன் – அக்னி, பிராணனை வெளியே விடுகின்றது –
ஹவிஸ்,
ஜுஹ்வதி – இவைகளை ஒடுக்கப்படுகின்றது. இதுவே பூரக பிராணாயமம்
ப்ராணே அபானம் ததா2பரே: - (ரேசக பிராணாயமம்). வெளியே விடுகின்ற காற்று,
உள்ளே இழுக்கின்ற காற்று ஒடுக்கப்படுகின்றது.
ப்ராண அபான க3தி ருத்த்4வா – கும்பக பிராணாயமம் – காற்றை உள்ளே
வைத்திருத்தல், காற்றை உள்ளே இழுத்தல், விடுதல் இவைகள் ஒடுக்கப்படுகின்றது
ப்ராணாயாம் அபராயணா – இவ்விதமாக பிராணாயாமத்தை செய்து
வருகின்றார்கள்
अपरे नियताहाराः
प्राणान्प्राणेषु जुह्वति ।
सर्वेऽप्येते
यज्ञविदो यज्ञक्षपितकल्मषाः ॥ 30 ॥
நாவடங்க மற்ற நான்கு இந்திரியங்களும் அடங்கி
விடும்.
சிலர் முறையான உணவு பழக்கத்தை உடையவர்களாக
இருக்கின்றார்கள். அளவாக சாப்பிடுதல், உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பதும்,
தூய்மையானதும், அப்போதுதான் தயாரிக்க உணவையும் ஆகியவைகளை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். அக்னி என்பது கட்டுபடுத்தப்பட்ட பிராணன்,
ஹவிஸ் என்பது கட்டுப்படாத பிராணன்.
கட்டுப்படாத பிராணனை கட்டுபடுத்தப்பட்ட பிராணனில் ஒடுக்குகிறார்கள்.
இவ்விதம் யாகத்தை செய்த அறிந்தவர்கள் மன, உடல், அழுக்கை போக்கிக் கொள்கிறார்கள்.
ஸர்வே அபி யேதே – இதுவரை
கூறிவந்த சாதனங்களை செய்பவர்களை
யக்ஞவிதஹ – யாகத்தை
அறிந்தவர்கள், சாதனங்கள் செய்து வருபவர்கள்
யக்ஞக்ஷபிதம் கல்மஷா – அவரவர்களுடைய
பாவங்களை அழிக்கிறார்கள்
இவ்வாறு சாதனங்களை கடைப்பிடிப்பவர்கள்
மனத்தூய்மை அடைகிறார்கள்.
यज्ञशिष्टामृतभुजो
यान्ति ब्रह्म सनातनम् ।
नायं
लोकोऽस्त्ययज्ञस्य कुतोऽन्यः कुरुसत्तम ॥ 31 ॥
இதில் இதுவரை கூறப்பட்ட யாகங்களை செய்வதனால்
அடையும் பலனையும், செய்யாமலிருந்தால் அடையும் பலனைக் கூறியிருக்கிறார்.
யக்ஞம் ஶிஷ்ட அம்ருத பு4ஜ: - இதுவரை
கூறப்பட்ட யாகத்தில் எஞ்சியதை, அம்ருதமான இதை சாப்பிடுபவன். இது காலமாகவும்
எடுத்துக் கொள்ளலாம். யாகத்தை சாதனங்களை செய்து முடித்தபின் மீதமிருக்கும் காலத்தை
அம்ருதமாக அனுபவிப்பான்.
யாந்தி ப்ரஹ்ம ஸனாதனம் – என்றும்
இருக்கின்ற நிர்குண பிரம்மத்தை அடைகின்றான்.
ந அயம் லோக அஸ்தி அயக்ஞஸ்ய – எந்த
சாதனத்தையும் செய்யாதவனுக்கு இந்த லோகமே கிடையாது. இந்த லோகத்திலும் சுகத்தை
அனுபவிக்கமாட்டான். மனநிறைவுடன் இருக்கமாட்டான்.
குத அன்யஹ – மற்ற
உயர்லோகம் எப்படி அவனுக்கு கிடைக்கும்? கிடைக்காது
குருஸத்தம - ஹே அர்ஜுனா!
அவன் இறந்தபின் சுகலோகத்திற்கு, உயர்லோகத்திற்கு
போகமாட்டான்.
एवं बहुविधा
यज्ञा वितता ब्रह्मणॊ मुखे ।
कर्मजान्विद्धि
तान्सर्वनेवं ज्ञात्वा विमोक्ष्यसे ॥ 32 ॥
இங்கு சொல்லப்பட்ட கருத்துக்கள் யாவும் வேதத்தில்
சொல்லப்பட்டுள்ளது. இவ்விதம் கூறப்பட்ட பலவிதமான யாகங்கள், சாதனங்கள் வேதத்தில்
விரிவாக கூறப்பட்டுள்ளன. இந்த அனைத்து சாதனங்களும் செயலிலிருந்து வந்ததாக (உடல்,
மனம், வாக்கு ) தெரிந்து கொள். இவ்விதம் அறிந்து மோட்சத்தை அடைவாயாக.
நமக்கு துயரத்தைக் கொடுக்கும் கேள்விகள் நான்
ஏன் இதைச் செய்தேன்? நான் ஏன் இதைச் செய்யவில்லை? ஆகியவைகளாகும். நானே பிரம்மன் என்ற அறிவை அடைந்துவிட்டால் இந்த துயரங்கள் மறைந்துவிடும். நான் ஆத்மாவாக செயலற்று இருக்கின்றேன்.
அனாத்மாக்களான உடல், மனம், வாக்கு இவைகள்தான் செயல்புரிகின்றன. செயல்படாமலும்
இருக்கின்றது. இப்படி அறிந்து கொண்டு இந்த சாதனங்களை கடைப்பிடித்து அறிவை
அடைவாயாக.
श्रेयान्द्रव्यमयाद्यज्ञज्ज्ञान्यज्ञः
परन्तप ।
सर्वं कर्माखिलं
पार्थ ज्ञाने परिसमप्यते ॥ 33 ॥
நாம் செய்கின்ற எல்லாவிதமான சாதனங்களை ஆத்ம
சாதனம், மற்ற சாதனங்கள் என்று இருவகையாக பிரிக்கலாம். இவற்றில் ஆத்மஞான சாதனம்தான்
உயர்ந்தது என்று அறிந்து கொள்ள வேண்டும். ஆத்ம ஞானம் அடைவதுதான் உத்க்ருஷ்ட (மிக
உயர்ந்த) சாதனம். மற்ற சாதனங்களால் அடையப்படும் பலன்கள் யாவுமே நிரந்தமற்றது.
ஞானபலனான மோட்சம்தான் நித்யமானது.
ஞானத்தினால் அனைத்துமே அடையப்பட்டதாகின்றது. மற்ற சாதனங்கள் ஒருவனை கர்த்தாவாகவும்,
போக்தாவாகவும் வைத்திருக்கும், அகங்காரத்தை வளர்த்து விடும்.
ஆத்மஞான
சாதனத்தை கடைப்பிடிக்கும்போது மற்ற சாதனங்களை விட்டுவிட வேண்டும். ஒவ்வொரு சாதனமும் வேறு நிலைக்கு கொண்டு
செல்லும். இறுதியில் ஞான யக்ஞ சாதனத்தில் கொண்டு சேர்க்கும்.
பரந்தப – ஹே அர்ஜுனா!
த்3ரவ்யமயாத் யக்ஞ – இங்கு கூறப்பட்ட திரவிய யக்ஞம் போன்ற சாதனங்களைக் காட்டிலும்
ஶ்ரேயான் ஞானயக்ஞ – ஆத்ம ஞான
யாகமே, வேதாந்த சாஸ்திர சிரவணமே மிக
உயர்ந்தது
பார்த2 - ஹே பார்தா2!
ஸர்வ கர்ம அகிலம் – அனைத்து
சாதனங்களும், கர்ம பலன்களும்
ஞானே பரிஸமப்யதே – ஞானத்தை
அடைவதில் முடிவடைகின்றது. எல்லா கர்மங்களும் அழிக்கப்படுகின்றது.
तद्विद्धि
प्रणिपातेन परिप्रश्नेन सेवया ।
उपदेक्ष्यन्ति ते
ज्ञानं ज्ञानिनस्तत्त्वदर्शिनः ॥ 34 ॥
எப்படிபட்ட பா4வனையை மனதில் கொண்டு ஞானயோகத்தை
செய்ய வேண்டும் என்பதையும், சிஷ்யனின் லட்சணமும் இதில் கூறப்படுகிறது.
தத்3 வித்3தி4 – அந்த ஆத்ம
ஞானத்தை அறிந்து கொள்வாயாக. ஞானத்திற்கான
வழியை தெரிந்து கொள்.
ப்ரணிபாதேன – சாஷ்டாங்கமாகத்
தரையில் வீழ்ந்து வணங்குதல், இது நம்முடைய அகங்காரத்தை சமர்ப்பிதை குறிக்கின்றது.
பணிவையும் காட்டுகிறது. அகங்காரத்துடன் இருந்தால் இந்த ஞானத்தை பெறமுடியாது.
ஸேவயா – பணிவிடை
செய்தல், இது அவனிடமிருக்கும் ராக-துவேஷங்களை நீக்கும். காம-குரோதங்களும்
நீக்கும். மேலும் சேவை செய்யும்போதுதான் குருவிடம் இருந்து ஞானத்தினுடைய பலனை
பார்க்கும் வாய்ப்பு ஏற்படுகின்றது. அவருடைய வாழ்க்கை முறையே அவனுக்கு சிரத்தையை
வளர்க்கிறது
பரிப்ரஶ்னேன – முறையாக
கேள்விகளைக் கேட்க வேண்டும். காலமறிந்து,
சூழ்நிலையறிந்து தன்னுடைய வேண்டுகோளை கேட்க வேண்டும்.
இவ்விதம் ஸ்ரோத்ரியனாகவும், பிரஹ்ம
நிஷ்டனாகவும் இருக்கின்ற குருவை அணுகி பணிவுடனும், பணிவிடை செய்தும், முறையோடு
கேள்விகளை கேட்டும் ஆத்ம ஞானத்தை அடைய வேண்டும் என்று தெரிந்து கொள்
உபதேக்ஷ்யந்தி தே ஞானம் – நீ இவ்விதம்
கேட்கும்போது உனக்கு ஆத்ம ஞானத்தை உபதேசிப்பார்.
ஞானி: - பிரம்மத்தை
அடைந்தவர்கள், (ஸ்ரோத்திரியன்)
தத்துவ தர்ஶின் – ப்3ரஹ்ம
நிஷ்டர்கள், ஆத்ம தத்துவத்தை பார்த்து கொண்டு இருப்பவர்கள்
ஞானி: ஸ்ரோத்ரியன் –
சம்பிரதாயப்படி, முறைப்படி வேதாந்த சாஸ்திரத்தை படித்தவர்கள்
ப்3ரஹ்ம நிஷ்டன் – அடைந்த
ஞானத்தில் நிலை பெற்றவன், நிதித்யாஸனம் என்ற சாதனத்தின் மூலம் பெற்ற ஞானத்தில்
நிலையாகின்றான்.
உத்தம குரு –
ஸ்ரோத்திரியன், பிரஹ்மநிஷ்டன்
கேவல குரு – ஸ்ரோத்திரியன்
மட்டும்
கேவல பிரஹ்ம நிஷ்டன் – வெறும் பிரஹ்ம
நிஷ்டன்
यज्ज्ञात्वा न
पुनर्मोहमेवं यास्यसि पाण्डव ।
येन
भूतान्यशेषाणि द्रक्ष्यस्यात्मन्यथो मयि ॥ 35 ॥
மோக நாசத்தைத்தான் ஞானப்பலனாக இதில்
கூறுகின்றார். மோகம் என்பது
தர்ம-அதர்மத்தில் ஏற்படும் குழப்பம், தவறு, ஆத்ம-அனாத்மாவை பிரித்து பார்த்து சரியாக புரிந்து
கொள்ளாத மனமயக்கம். இரண்டற்ற பிரம்மத்தில்
பலவற்றை பார்ப்பது. ஆத்மாவே பலவாக தெரிகின்றது. அழியக்கூடியது என்ற தவறை செய்யக்
கூடிய மனநிலை. ஒரு பொருளுக்கு கொடுக்க
வேண்டிய இருத்தலை விட அதிகமான இருத்தலை கொடுத்தலே மோகம். கயிற்றில் தெரியும்
பாம்பை உண்மை என்று இருத்தலை கொடுத்தல் மோகம். உதாரணமாக 25ரூபாய் சினிமா
டிக்கேட்டிற்கு 100 ரூபாய் கொடுத்து வாங்கி சினிமா பார்ப்பது அந்த சினிமா மீது
உள்ள மோகம். உண்மையாக இருக்கும் பொருளில் தோன்றும் பொருளுக்கு சத்தியத்தை கொடுத்தல்
மோகம்.
அர்ஜுனனிடத்தில் தர்ம-அதர்ம, ஆத்மா-அனாத்மா விஷயத்தில் குழப்பத்தை அடைந்திருக்கிறாய். ஞானத்தை அடைந்து விட்டால் இந்த குழப்பம் மீண்டும் வராது. இரண்டாவது வரியில் ஞானத்தின் லட்சணத்தையும் கூறுகின்றார். இந்த உலகத்தை நாம் பார்க்கின்ற விதம்தான் நமக்கு துயரத்தை கொடுக்கின்றது. எனவே உலகம் நமக்கு சுக-துக்கங்களை கொடுக்கவில்லை என்று புரிய வைக்கின்றார்.
யஜ் ஞாத்வா ஏவம் – இந்த ஞானத்தை
அடைந்தவர்கள்
ந புனஹ மோகம் யாஸ்யஸி – மீண்டும் மோகத்தை அடையமாட்டார்கள்
பாண்ட3வ – ஹே அர்ஜுனா!
யேன பூ4தான்யஶேஷாணி த்3ரக்ஷ்யஸ்யாத்மனி – ஆத்ம ஞானத்தை
மீதியில்லாமல் அனைத்து ஜீவராசிகளையும் உன்னிடத்திலேயே நீ பார்ப்பாய்
அதோ2 மயி –
என்னிடத்திலும் பார்ப்பாய்.
இந்த திருஷ்டியில்தான் நாம் நிலைபெற
வேண்டும். இந்த நிலையில் அவனால் யாரைக்
குறித்தும் பயமில்லை, துயரமில்லை, மோகமுமில்லை. இதிலிருந்து ஜீவ-ஜீவ
ஐக்கியத்தையும், ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தையும் நம்மால் புரிந்து கொள்ளமுடியும். கனவில்
பார்த்தவைகள் அனைத்தையும் விழித்தும் தன்னிடத்திலே பார்ப்பான். கனவில் கண்ட
ஜீவராசிகளால் விழிப்புநிலையில் எந்த துயரமும், பயமும் கொள்வதில்லை. அதேபோல
விழிப்புநிலையிலே தோன்றும் ஜீவராசிகளும் ஆத்மாவுக்கு வேறாக இல்லை. எனக்கு வேறாக
இல்லை என்ற ஞானத்தை அடைய வேண்டும். அறியாமையிலிருந்து விழித்துக் கொள்ள வேண்டும்.
உண்மையில் விழிப்பு நிலையில் அறியாமையினால் மூடப்பட்டிருக்கின்றோம்.
अपि चेदसि
पापेभ्यः सर्वेभ्यः पापकत्तमः ।
सर्वं ज्ञानप्लवेनैव
वृजिनं सन्तरिष्यसि ॥ 36 ॥
ஸர்வேப்4ய பாபேப்4ய: - எல்லா
பாவிகளைவிட
அபிசேத் - ஒருவேளை
பாபக்ருத்தம் அஸி – பாவத்தையும்
செய்தவனாக இருந்தாலும்
ஸர்வம் வ்ருஜினம் – அனைத்து
பாவங்களையும்
ஞான ப்லவேன ஏவ – ஞானம் என்ற
சிறிய படகினால்
ஸந்தரிஷ்யஸி – கடந்து
செல்லலாம்.
ஞானமானது நீ கர்த்தாவல்ல, போக்தாவும் அல்ல
என்று உணரச் செய்யும். அகங்காரம் நான்
அல்ல என்று புரிய வைத்துவிடும். அகங்காரம் கர்த்தாவாக இருப்பதால் அதுவே போக்தாவாக
இருக்க முடியும். அதனால் பாவ-புண்ணியங்கள் என்னைச் சேர்ந்ததல்ல, அகங்காரத்தைச் சார்ந்தது.
ஞானியானவன் ஆத்மா-அனாத்மாவை நன்கு பிரித்துவிட்டு விவகாரம் செய்து கொண்டிருக்கின்றான்.
நான் கர்த்தாவாக இல்லாததால் கர்ம வினைகள் என்னைச் சேராது.
यथैधांसि
समिद्धॊऽग्निर्भस्मसात्कुरुतेऽर्जुन ।
ज्ञानाग्निः
सर्वकर्माणि भस्मसात्कुरुते तथा ॥ 37 ॥
இதில் ஆத்ம ஞானத்தினால் நம்முடைய கர்மபலன்களெல்லாம்
அழிந்து விடுகின்றது என்பத கூறப்பட்டுள்ளது.
அர்ஜுன – ஹே அர்ஜுனா!
யதா2 - எவ்விதம்
ஏதா4ம்ஸி ஸமித்3தா4க்3னி – விறகு கட்டைகளை
கொழுந்துவிட்டு எரிகின்ற அக்னியானது
ப4ஸ்மாஸாத் குருதே – சாம்பலாக்கி
விடுகின்றதோ
ததா2 ஞானாக்3னி – அதுபோல
ஆத்மஞானம் என்கின்ற அக்னியானது
ஸர்வ கர்மாணி - எல்லா கர்மபலன்களையும்
பஸ்மஸாத்க்ருதே – சாம்பலாக்கி
விடுகின்றது.
சஞ்சித கர்ம பலன்கள் – ஒரு ஜீவனின்
எண்ணற்ற பிறவிகளில் செய்த கர்மங்களினால் அடைந்த வினைப்பலன்களின் தொகுதி
பிராரப்த கர்ம பலன்கள் – வெளிப்பட்ட
ஒரு பகுதி சஞ்சித கர்ம பலன் உடலைக் கொடுத்து தீர்க்கப்படுகின்றது.
ஆகாமி கர்ம பலன்கள் – இந்த
பிறவியில் சேர்த்த கர்மபலன்களின் தொகுப்பு
பிராரப்தம் முடிந்தவுடன் ஆகாமி கர்ம பலன்கள்
சஞ்சித கர்மபல தொகுப்போடு சேர்ந்து விடும்.
ஞானம் அடைந்தவுடன் சஞ்சித கர்மபல தொகுப்பும்,
ஆகாமி கர்மபல தொகுப்பும் அழிக்கப்படுகின்றது.
பிராரப்தத்தை மட்டும் விட்டு விடுகின்றது.
பிராரப்தம் சூழ்நிலைகளை மட்டும்தான் கொடுக்கின்றது, அதை எப்படி எடுத்துக்
கொள்கின்றோம் என்பதை பொறுத்துதான் சம்சாரம் இருக்கின்றது.
न हि ज्ञानेन
सदृशं पवित्रमिह विद्यते ।
तत्स्वयं
योगसंसिद्धः कालेनात्मनि विन्दति । 38 ॥
ஞானத்தின் பெருமை இதில் பேசப்படுகின்றது.
ஆத்மஞானத்தை தவிர மற்ற அனைத்து வகையான சாதனங்களும் பாவத்தை மட்டுமே நீக்க
பயன்படும். ஆனால் புண்ணியத்தை நீக்காது. ஞானம் ஒன்றுதான் பாவ-புண்ணியங்கள் இரண்டையும்
நீக்கி விடும். மற்ற சாதனங்களின் மூலம்
அடையும் புண்ணியத்தைக் கொண்டு ஞானத்தை அடையலாம். பொதுவாக ஞானம் என்பது இருப்பதை
தெரிய வைக்கும். செயலில் ஈடுபட வைக்காது. இந்த லட்சணப்படி ஆத்ம ஞானம், எப்படி கர்ம
நாசத்தை செய்ய முடியும் என்ற சந்தேகம் எழலாம்.
ஆத்ம ஞானத்தினால் அறியாமை நீக்கப்படுகின்றது. அறியாமையினால்
அனுபவிக்கப்படுபவைகள் அனைத்தும் நீங்கப்பெறுகின்றது. நம்மிடத்து இருக்கும்
பாவ-புண்ணியங்களை அறியாமையினால் கர்த்தாவாக இருந்து சேர்த்து
வைத்திருக்கின்றோம். ஞானம் அறியாமையை
நீக்கி விடுவதால் இந்த பாவ-புண்ணியங்களை அழிந்து விடுகின்றது.
ஞானேன ஸத்3ருஶம் – ஞானத்திற்கு
சமமான
பவித்ரம் இஹ - தூய்மைபடுத்துகின்ற சாதனம் இந்த உலகத்தில்
ந ஹி வித்யதே – எதுவும்
கிடையாது
தத் – இந்த ஞானம்
யோக ஸம்ஸித்த – கர்மயோகத்தில்
மூலம் உள்ளத்தூய்மை அடைந்தவன்
ஸ்வயம் காலேன – தானாகவே
அடையவேண்டிய காலத்தில், காலம் வரும் போது
ஆத்மனி விந்த3தி –
ஆத்மாவிடத்தில் அடைந்து விடுவான்.
श्रद्धावांल्लभते
ज्ञानं तज्परः संयतेन्द्रियः ।
ज्ञानं लब्ध्वा
परां शान्तिमचिरेणाधिगच्छति ॥ 39 ॥
மூன்று அந்தரங்க சாதனங்கள் இதில்
கூறியிருக்கிறார். அவைகள் சிரத்தை, ஈடுபாடு, புலனடக்கம் ஆகியவைகளாகும். இந்த மூன்றும் யோக சாதனங்களான சிரவணம், மனனம், நிதித்யாஸனம் இவைளுடன் கண்டிப்பாக கூடவே சேர்ந்து இருக்க வேண்டும்.
ஶ்ரத்தாவான் லபதே ஞானம் – சிரத்தையுடன்
ஞானத்தை அடைகின்றான். சிரவணம் என்ற சாதனம் ஞானமான சாத்தியத்தை கொடுக்க
வேண்டுமானால் சிரத்தை என்ற குணம் கட்டாயம் இருக்க வேண்டும். இந்த ஞானத்தை அடைவதற்கு வேதாந்தமும் பிரமாணமாக
இருப்பதாலும், குருவின் உபதேசம் உதவியாக இருப்பதாலும் இவர்களிடம் சிரத்தை
இருந்தால்தான் அவைகள் ஞானமாக மாறும்.
1. குசிரத்தை – குரு-சாஸ்திரம் அப்படியே
எடுத்துக் கொள்வது – மூட நம்பிக்கை
2. அசிரத்தை – குரு-சாஸ்திரம் இவர்களின்
உபதேசத்தில் நம்பிக்கையின்மை
3. சிரத்தை – குருமுகமாக கேட்கும்
சாஸ்திரத்தின் உபதேசத்தை அனுபவத்திற்கு முரண்பாடாக வரும்போது அந்த உபதேசத்தை
சந்தேகமில்லாமல் அந்த முரண்பாடு தீரும்வரை முயற்சிக்க வேண்டும்.
தத்பரஹ – முழுமையான
ஈடுபாடு – இந்த மோட்சத்தை அடைவதே இறுதி இலட்சியமாக கொண்டு நமது கவனம் முழுவதும்
அதிலேயே இருக்க வேண்டும். அதை அடைய முழுமுயற்சி செய்ய வேண்டும்.
ஸம்யேந்திரியஹ – புலன்களை
கண்டிப்பாக அடக்கியிருக்க வேண்டும்
ஞானம் லப்த்4வா – இந்த ஞானத்தை
அடைந்துவிட்டால்
அசிரேண பராம் ஶாந்திம் அதிகச்ச2தி – பரம அமைதியை
உடனடியாக அடைகின்றான்.
अज्ञश्चश्रदृधानश्च
संशयात्मा विनस्यति ।
नायं लोकोऽस्ति न
परो न सुखं संशयात्मनः ॥ 40 ॥
இதில் இருக்கக்கூடாத மூன்று குணங்களை
கூறியிருக்கிறார். அவைகள் அறியாமை, அசிரத்தை, சந்தேக புத்தி ஆகியவைகளாகும்.
அக்ஞானம்àசந்தேகம்àசம்பாவனா(இருக்கலாம்)àநித்யம்àஞானம்àஞானநிஷ்டை
அறியாமையிலிருப்பவன், சிரத்தையில்லாதவன்,
எப்பொழுதும் சந்தேகமுடையவன் இந்த நிலையிலிருப்பவர்கள் புருஷார்த்தத்தை அடையாமல்
அழிந்து போவார்கள் எல்லா விஷயத்திலும்
சந்தேகப்படுபவனுக்கு எந்த லோகமும் கிடைக்காது. வாழும் போதும் மகிழ்ச்சியுடன் இருக்க மாட்டார்கள்.
योगसंन्यस्तकर्माणं
ज्ञानसञ्छिन्नसंशयम् ।
आत्मवन्तं न कर्माणि
निबध्नन्ति धनञ्जय ॥ 41 ॥
தனஞ்ஜய – ஹே அர்ஜுனா!
யோக3 சஞ்யஸ்த கர்மாணம் – ஆத்மஞானத்தை
அடைந்து விட்டதால், எல்லா கர்மங்களையும் துறந்தவனாகின்றான்.
ஞான ஸம்ச்சின்ன ஸம்ஶயம் – இதே அறிவினால்
எல்லா சந்தேகங்களையும் நீக்கியவனாகின்றான்
ஆத்மவந்தம் –
தன்னிடத்திலேயே இருப்பவன், நாம ரூபங்களிலிருந்து விடுபட்டவன்
கர்மாணி ந நிப3த்4னந்தி – கர்மங்கள்
எதுவும் அவனை பந்தப்படுவதில்லை.
तस्मादज्ञानसम्भूतं
ह्रत्स्थं ज्ञानसिनात्मनः ।
छित्त्वैनं संशयं
योगमतिष्टोत्तिष्ट भारत ॥ 42 ॥
தஸ்மாத்3 ஸம்ஶயம் – ஆகவே சந்தேகம்
அக்ஞான ஸம்பூதம் –
அறியாமையிலிருந்து தோன்றியது
ஸ்ருதஸ்த2ம் – புத்தியில்
இருப்பது
ஆத்மன ஸம்ஶயம் – தன் உண்மை
ஸ்வரூபத்தைப் பற்றிய சந்தேகத்தை
ஞானாஸினா – ஞானம் என்ற
வாளினால்
ஏனம் சி2த்வா – இதை அழிக்க
வேண்டும்
யோகமதிஷ்தோ உத்திஷ்ட பாரத – கர்மயோகத்தை
செய்ய வா! எழுந்திரு அர்ஜுனா
தொகுப்புரை
01-03 யோக மகிமை – கர்மயோகத்தின் பெருமையையும்,
ஞானயோகத்தின் பெருமையையும் பற்றிக் கூறப்பட்டது. இந்த சம்பிரதாயப்படி முறையாக
வந்துள்ளது என்பதுயும் பகவான் கூறியிருக்கிறார்.
04-04 அர்ஜுனனின் கேள்வியானது நீங்கள் எப்படி இந்த
சூரிய பகவானுக்கு உபதேசித்தீர்கள் இப்பொழுதுதானே தோன்றினீர்கள் என்பதாகும்
05-08 அவதார தத்துவம் – பூமியில் அதர்மம் மேலோங்கி
தர்மத்திற்கு சோதனை வரும்போது இந்த அவதாரம் உருவாகின்றது. சாதுக்களை
காப்பாற்றும்போது தர்மம் காப்பாற்றப்படுகின்றது.
அதர்மம் செய்வோரை அழிப்பதனால் அதர்மம் நீக்கப்படுகின்றது.
09-15 சில சாதனங்கள், மோட்சம், தன்னுடைய திவ்யமான
பிறப்பு ஆகியவைகள் கூறப்பட்டது. இவைகளை யார் அறிகின்றார்களோ அவர்கள் மீண்டும் பிறப்பதில்லை. என்னைக் குறித்து செயல்படுபவர்கள் என்னையே
அடைகிறார்கள். யார் எவ்விதம் என்னை
எதற்காக வழிபடுகின்றார்களோ அதை நான் அவர்களுக்கு கொடுக்கிறேன்.
16-24 ஞான-கர்ம சந்நியாசம் என்ன என்பதை விவரித்துக்
கூறியுள்ளார். செயல்படுவது, செயலின்மை
என்ற விஷயத்தைப்பற்றி அறிந்துக் கொள்வது சுலபமல்ல என்று கூறி அதை உபதேசித்துள்ளார். இந்த ஞானமே அசுத்தத்தில் இருந்து நம்மை
நீக்கிவிடும். கர்மத்தில் அகர்மத்தையும், அகர்மத்தில் கர்மத்தையும் பார்க்கக்கூடிய உபாயத்தையும்
கூறியுள்ளார்.
25-33 விதவிதமான 12 சாதனங்கள் கூறப்பட்டது. யாகம் என்பதை உருவகமாக எடுத்துக் கொண்டு இவைகள் விவரிக்கப்பட்டது. இவைகளில் பிரஹ்ம
யக்ஞம்தான் உயர்ந்தது, முக்கியமானது என்று கூறியுள்ளார். இறுதியில் ஞானத்தின் பெருமையை
கூறியிருக்கிறார்.
34-34 இந்த ஞானத்தை குருவிடமிருந்து
அடையவேண்டும். குருவை அணுகும் போது இருக்க
வேண்டிய தகுதிகளையும் கூறினார்.
35-37 ஆத்மஞானத்தின் பலன் சொல்லப்பட்டது. மோக நாசம்,
பாவ நாசம், கர்மபல நாசம் இவைகள் ஞானத்தின் பலனாக கூறப்பட்டது.
38-42 சில நற்பண்புகளை கூறியிருக்கிறார். எந்தெந்த தீயபண்புகள் விலக வேண்டும் என்பதையும்
கூறியுள்ளார். சந்தேகத்தை அறவே நீக்க வேண்டும் என்று வற்புறுத்தி கூறியுள்ளார்.
ॐ तत्सदिति