Showing posts with label பஞ்சதசி-11. Show all posts
Showing posts with label பஞ்சதசி-11. Show all posts

Friday, August 23, 2019

Pancadasi Chapter-11 - Rev-01

பஞ்சதசி
அத்தியாயம்-11
யோகானந்தம்
 
முகவுரை
மனிதன் இயற்கையாக நாடுவது ஆனந்தத்தைத்தான். இதைவிட மேலான ஆனந்தம் இல்லாதவரைக்கும் வெவ்வேறு ஆனந்தத்தை நாடுகின்றான். இறுதியான ஆனந்தம் பிரம்மானந்தம்தான். நம்முள்ளேயே அது விளங்கிக் கொண்டிருப்பதால் அதை விளக்கத் தேவையில்லை. நாம் அனுபவித்துக் கொண்டிருப்பது அந்த பிரம்மானந்தம்தான். இருந்தாலும் அது நமக்கு தெரியாமல் இருக்கிறது. அதை தெரியவிடாமல் இருக்கின்ற தடைகளை நீக்கி ஆனந்தத்தை அறிந்து கொள்ள உதவி செய்கிறது இந்த அத்தியாயம்.
 
நான் என்ற சொல்லில் ஆத்மாவும், அனாத்மாவும் கலந்து நாம் புரிந்து கொண்டு இருக்கிறோம். ஆத்மா மூன்று ஸ்வரூபங்களாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. அவைகள் ஸத் ஸ்வரூபம் என்கின்ற இருத்தல் தன்மை, சித் என்கின்ற அறிவு ஸ்வரூபம், ஆனந்தம் என்கின்ற ஆனந்த ஸ்வரூபம் ஆகும். ஆனந்த ஸ்வரூபமானது ஸவரூபானந்தம், பிரம்மானந்தம் என்று இரண்டாக பிரிக்கப்படுகிறது. உதாரணமாக சுடும் நீரில் உள்ள வெப்பம் அக்னியால் ஏற்பட்டது. எனவே இது பிரதிபிம்ப வெப்பம் என்று எடுத்துக் கொள்ளலாம். அதேபோல அமைதியான மனதில் ஆத்மாவின் ஆனந்தம் பிரதிபிம்பிக்கும். அந்த ஆனந்தம் பிரதிபிம்பானந்தம். நாம் அனுபவிக்கும் ஆனந்தங்கள் எல்லாம் பிரதிபிம்பானந்தம். நானே ஆனந்த ஸ்வரூபமாக இருக்கும் போது பிறகு ஏன் ஆனந்தத்தை நாடிச் செல்ல வேண்டும் என்ற கேள்விக்கு பதிலாக இந்த பிரகரணம் அமைந்திருக்கிறது..
 
அந்தக்கரணத்தில் வெளிப்படுகின்ற ஆனந்தம் பிரதிபிம்ப ஆனந்தமாகும். இது பலவிதமாக இருக்கின்றது. இது நிலையற்றதாகவும், ஏற்றத்தாழ்வுடன் கூடியதாகவும் இருக்கிறது. இது மனதைப் பொறுத்து அமைகின்றது. நம் முகத்தை நம்மாலே பார்க்க முடியாததைப் போல ஸ்வரூப ஆனந்தத்தை அனுபவிக்க முடியாது. கண்ணாடியில் பார்க்கும்போது தெரிகின்ற பிரதிபிம்ப முகத்தைத்தான் நம்மால் பார்கக்கூடியதாக இருக்கும். அதுபோல மனதில் பிரதிபலிக்கும் பிரதிபிம்பானந்தத்தைத்தான் நம்மால்  அனுபவிக்க முடியும். வெளியேயுள்ள விஷயங்களிலிருந்து அடைகின்ற ஆனந்தம் பிரதிபிம்பானந்தமேயாகும். ஆனால் அந்த பிரதிபிம்பானந்தத்தை அடையத்தான் நாம் முயற்சி செய்தகொண்டிருக்கிறோம்.
 
பிரதிபிம்பானந்தத்தை மூன்று பகுதிகளாக பிரித்து பார்த்து உணர்ந்து கொள்ளலாம். அவைகள் 1.விஷயானந்தம், 2.யோகானந்தம், 3.ஆத்மானந்தம் என்பதாகும்.
1.விஷயானந்தம்:-
நாம் புலன்கள் மூலமாக வெளியேயுள்ள பொருட்களோடு சம்பந்தம் வைத்து அடைகின்ற ஆனந்தமே இதுவாகும். இந்த ஆனந்தத்தை மூன்று படிகளில் அனுபவிக்கின்றோம். அவைகள் 1.பிரியம், 2.மோதம், 3.பிரமோதம் ஆகியவைகளாகும். இந்த மூன்று படிகளின் மூலமாக இந்த ஆனந்தத்தை அடைகிறோம். இதற்கு காரணமாக இருப்பதை விசாரம் செய்துதான் அறிந்து கொள்ள முடியும். பொருட்களிலிருந்து வருகின்ற ஆனந்தம் பொருட்களைச் சார்ந்ததல்ல. அப்படி இருந்தால் அந்தப் பொருள் எல்லோருக்கும் ஆனந்தத்தை கொடுக்க வேண்டும். ஆனால் உண்மையில் அப்படியில்லை. ஒரு பொருள் சிலருக்கு ஆனந்தம் கொடுக்கிறது. அதேபொருள் சிலருக்கு துக்கத்தைக் கொடுக்கிறது. உதாரணமாக இனிப்பான உணவுப்பண்டம், சர்க்கரை நோயாளிகளுக்கு துன்பத்தைக் கொடுக்கும், மற்றவர்களுக்கு ஆனந்தத்தை கொடுக்கும்.
 
2.யோகானந்தம்:-
ஒரு பொருளை அனுபவிப்பதால்தான் இன்பம் கிடைக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அனால் அந்தப் பொருளின் மீது வைராக்கியம் வந்துவிட்டால் நூறு மடங்கு ஆனந்தத்தை அடைவோம். உதாரணமாக தாய் தன் குழந்தைக்கு தான் விரும்பிய பொருட்களை கொடுக்கும் போது குழந்தை அனுபவிக்கும் ஆனந்தத்தைவிட நூறு மடங்கு ஆனந்தத்தை அடைகிறாள்.
 
ஆரம்பத்தில் துன்பத்தை கொடுக்கின்ற விஷயங்களை விட்டுவிடாமல் தொடர்ந்து செய்வதனால் பல மடங்கு இன்பத்தை அனுபவிக்கலாம். உதாரணமாக காலையில் சீக்கிரம் எழுந்து நடைபயிற்சி செய்வது என்பது முதலில் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் அதைத் தாங்கிக்கொண்டு நடைபயிற்சியை தொடர்ந்து செய்தோமானால் காலைத்தூக்கம் கொடுக்கும் இன்பத்தை விட பலமடங்கு இன்பத்தை அடைவோம். தியாகம், வைராக்கியம், யோகம் போன்றவைகளிலிருந்து அடையும் ஆனந்தத்தை யோகானந்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்த யோகானந்தம் எந்த அளவுக்கு தியாகம் செய்கின்றோமோ அந்தளவுக்கு ஆனந்தம் கிடைக்கும்.
 
3.ஆத்மானந்தம்:-
யோகாப்யஸத்தின் மூலமாக நம்மை நாம் பக்குவப்படுத்திக் கொண்டே வருகிறோம். இந்த ஆனந்தத்தின் மீது வைராக்கியம் வர வேண்டும். எந்த ஆனந்தத்தை அடைந்த பின் அதற்கு மேல் எந்த ஆனந்தமும் இல்லையோ அந்த நிலையை அடைந்திட வேண்டும். அந்த ஆனந்த ஸ்வரூபமே நான்தான் என்று முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். இதன் விளைவாக அடைகின்ற எல்லையற்ற ஆனந்தத்தை அடைவதுதான் மோட்சம் என்கின்ற ஜீவன்முக்தி. இதில் ஏற்றத்தாழ்வு இருக்காது. எந்த அறிவும் முழுமையாக அடைந்து விட்டால், அது நம்மைவிட்டுப் போகாது. அதேபோல ஆத்மஞானத்தை அடைந்துவிட்டால் அது நம்மை விட்டுப் போகாது. அதன் விளைவாக அடையும் ஆனந்தமும் நம்மை விட்டுப் போகாது. இந்த ஆனந்தம் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட அளவுதான் இருக்கும் என்பதில்லை. எல்லா நேரங்களிலும் அனுபவித்துக் கொண்டிருப்போம்.
 
பிரம்மத்தினுடைய ஆனந்த ஸ்வரூபத்தை அடைய வேண்டுமென்றால் வேதாந்த விசாரம் செய்ய வேண்டும். அறியப்படாத பிரம்மத்தை பற்றிய முழுமையான அறிவை அடைய வேண்டும். தெரிந்தும், தெரியாமலும் விளங்குகின்ற பிரம்மம் அதை பற்றிய முழுமையான அறிவை அடைய வேண்டும். பிரம்மத்தை அறிவதே பலனாகும். பிரம்மத்தை அறிவதும் ஆனந்தத்தை அடைவதும் ஒன்றுதான். நாம் சேர்த்து வைத்திருக்கும் பாவ, புண்ணிய பலன்களால் வாழ்ந்து கொண்டிருக்கின்ற உலகத்தில் துயரங்களும்;, இறந்த பிறகு அடைகின்ற பரலோக துயரங்களும் முழமையாக நீங்கப்பெற்று ஆனந்தமாக இருப்பான். ஆனந்த ஸ்வரூபமான நம்மை நாம் திரும்பப் பெறுவோம் என்பதை பலனாக கூறியிருக்கிறார்.
 
நாம் ஆனந்தமாக வாழ்வதற்கு வேறெதுவும் தேவைப்படாது. பிரம்மத்தின் ஆனந்த ஸ்வரூபத்தை அடைந்துவிட்டால் அதுவே நான் என்று முழுமையாக புரிந்துவிட்டால் ஆனந்தமாக இருப்போம். பிரம்மத்தை அறிந்தவன் மோட்சத்தை அடைகின்றான், பிரம்மத்தையே அடைகின்றான் என்ற தைத்திரிய உபநிஷத்தின் வாக்கியமும், ஆத்மாவை அறிந்தவன் சோகத்தை கடக்கிறான் என்ற சாந்தோக்ய உபநிஷத் வாக்கியமும், ஆனந்த ஸ்வரூபமான பிரம்மத்தை அடைந்தவன் ஆனந்த ஸ்வரூபத்தை அடைகிறான் என்ற தைத்திரிய உபநிஷத்தின் வாக்கியமும் கூறுகிறது. இதைத்தவிர வேறெதனாலும் இந்த நிலையை அடையமுடியாது.
 
எவனொருவன் தன்னிடத்திலுள்ள பிரம்ம ஸ்வரூபத்தை அறிந்து அதிலேயே நிற்கின்றானோ அவன் அபயத்தை அடைகின்றான். அந்த பிரம்மத்திடம் வேற்றுமையயை பார்த்தால் அதன் விளைவாக பயம் வந்துவிடும். வாயு தேவதை, சூரிய தேவதை, அக்னி தேவதை, இந்திர தேவதை, ம்ருத்யு தேவதை ஆகிய இவர்கள் முன் ஜென்மத்தில் பிரம்மத்தை வேறாக அறிந்திருந்தும், செய்த தர்மங்களினால் தேவதைகளாக மீண்டும் பிறந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களும் பிரம்மத்தை கண்டு பயந்து கொண்டுதான் இருக்கிறார்கள். பிரம்மத்தின் ஆனந்த ஸ்வரூபத்தை அடைந்தவன் ஆனந்தத்தையே அடைகிறான். இவனுக்கு பயம் என்பதே கிடையாது. தன்னுடைய சரீர, மனோ நாசத்தைக் கண்டு பயப்படமாட்டான். உடல், மனம், இவைகளை தாக்குகின்ற எதைக் கண்டும் பயப்படமாட்டான். இந்த ஞானத்தை அடைந்தவன் எந்தவிதமான துயரத்தையும் அடைய மாட்டான். எப்படிபட்ட சம்சாரத்தை அனுபவிக்கின்றோமோ அந்த சம்சாரத்திலிருந்து விடுபட்டுவிடுவான். இரண்டுவிதமான எண்ணங்களால் பொதுவாக மனிதர்கள் தாக்கப்படுவார்கள். நல்லதை நான் ஏன் செய்யவில்லை? கெட்டதை ஏன் செய்துவிட்டேன்? என்ற இந்த இரண்டு எண்ணங்களும் மனிதனை வாட்டி வதைக்கும். இப்படிபட்ட எண்ணங்களினாலும் பாதிக்கப்படாமல் இருப்பான் ஞானத்தை அடைந்தவன். பிரம்மத்தை அறிந்தவன் குற்ற உணர்விலிருந்து விடுவிக்கப்படுவான். பாவ, புண்ணிய பலனாக வருகின்ற மேற்கூறிய இரண்டு எண்ணங்கள் ஞானியை வாட்டி வதைக்காது. நம்மை வாட்டும் சில எண்ணங்கள் நம்முடைய கர்மபலனின் அடிப்படையில்தான மனதில் வருகின்றது. இதை அனுபவித்துத்தான் தீர்க்க வேண்டும்.
 
ஒன்றைக் கண்டு நாம் பயப்படுவதற்கு காரணம் அவைகள் நமக்கு சத்தியமாக இருப்பதால்தான். அது வெறும் தோற்றம் என்ற மித்யா புத்தி இருந்தால் நாம் எதைக் கண்டு பயப்படமாட்டோம். மேலும் அது வேறு. நான் வேறு என்ற த்வைத புத்தியும் நாம் பயப்படுவதற்கு காரணமாக இருக்கின்றது. ஞானத்தை அடைந்தவனுக்கு இந்த உலகம் மித்யாவாக இருப்பதால் அதிலிருந்து எந்தவித துரயரத்தையும் அடைவதில்லை. இவ்விதம் அறிந்த ஞானி பாவ-புண்ணியத்தை அதனால் அனுபவத்திற்கு வருகின்ற விஷயங்களை விட்டுவிட்டு, அவைகள் பொய்யென்று விட்டுவிட்டு எப்பொழுதும் பிரம்மமே தான் என்ற ஐக்கிய உணர்வுடன் இருந்து கொண்டிருப்பான். ஞானி தான் செய்த அனைத்து பாவ-புண்ணியங்களை தன்னிடமிருந்து வேறுபட்டு பார்ப்பதில்லை. அத்வைத அறிவுடன் இருப்பதால் இவனுக்கு துயரங்கள் எதுவுமில்லை.
 
காரிய-காரண ரூபமாகவுள்ள ஹிரண்யகர்ப்ப, விராட் ஸ்வரூபமாக உள்ள பர தத்துவத்தை அறிந்த போது இதயத்திலுள்ள முடிச்சுக்களானது அவிழ்க்கப்படுகின்றது. முடிச்சுக்கள் என்பது தேகாதிகளில் உள்ள நான் என்ற அபிமானமாகும். ராக, துவேஷங்கள், எல்லாவிதமான சந்தேகங்களும் நீக்கப்படுகின்றன. எல்லா கர்மங்களும் நாசத்தை அடைகின்றன.
 
ஞானத்தால் அடைகின்ற பலனை வேறெதனாலும் அடைய முடியாது. அந்த பிரம்ம ஞானத்தை அறிந்தவன் மரணத்தை கடந்துவிடுகிறான். இதற்கு வேறு வழி கிடையாது. பிரம்மத்தை அறிந்துவிட்டால் பாசக்கட்டுக்கள் விலகிவிடும். கிலேசங்கள் நாசமடைவதால் மறு ஜன்மம் அடையமாட்டான். அந்த பிரம்ம தத்துவத்தை அறிந்தவன் உலகம் கொடுக்கின்ற சுக-துக்கங்களை கடந்து செல்கின்றான் எந்த சூழ்நிலையிலும் செய்யப்பட்டதும், செய்யப்படாததுமான பாவ, புண்ணியங்களால் தாக்கப்படாமல் இருப்பான். இவை போன்ற எண்ணிலடங்கா வாக்கியங்கள் புராணங்களிலும், ஸ்மிருதிகளிலும் காணப்படுகிறது.; பிரம்ம ஞானம் அடைந்துவிட்டால் எல்லா கெடுதல்களும், துயரங்களும், நாசத்தை அடைந்து விடும், ஆனந்தத்தை கொடுக்கும்.
 
யோகத்தின் மூலமாக மனதை பண்படுத்தி, தூய்மைபடுத்தினால்தான் ஆத்ம ஞானத்தை அடைய முடியும். அதனால் பிரம்மானந்தத்தை அனுபவிக்கலாம். இந்த பிரம்மானந்தத்தின் பிரதிபிம்பமே வித்யானந்தம், விஷயானந்தம். ஆனந்தமானது மூன்று விதமாக பிரிக்கப்படுகிறது. அவைகள் பிரம்மானந்தம், வித்யானந்தம், விஷயானந்தம் ஆகும். முதலில் பிரம்மானந்தம் விளக்கப்படுகின்றது.
 
பிதாவாகிய வருணனிடமிருந்து புத்திரனாகிய ப்ருகு என்பவர் பிரம்மத்தின் லட்சணத்தை கேட்டறிந்து கொண்டு அவர் கொடுத்த லட்சணம் எதிலிருந்து எல்லாம் உண்டாகின்றதோ, எதனால் உயிர்வாழ்கின்றதோ. எதனிடத்தில் லயத்தை அடைகின்றதோ அதுவே பிரம்மம் என்று அறிந்து கொள். அவர் முதலில் ஸ்தூல சரீரத்தில் இந்த லட்சணத்தை பொருத்தி பார்த்தார். அன்னத்தினால் உடல் தோன்றியது. அதனால் உயிர் வாழ்கிறது. அதிலேயே லயமடைகின்றது என்று முடிவெடுத்து தந்தையிடம் சென்று கூறினார். அவர் இது தவறு மீண்டும் தவம் செய் என்று கூறி திருப்பியனுப்பிவிட்டார். உடல் ஜடம் அதை பாதுகாப்பது பிராணன் எனவே பிராணன் என்று முடிவெடுத்தார். அதுவும் தவறு என்று முடிவு செய்து மனம், புத்தி இவைகளில் பொருத்தி தவறென்று அறிந்து, ஆனந்தத்தை சரியென்று அறிந்து அமைதியடைந்தார்.
 
ஆனந்த ஸ்வரூபமான பிரம்மனிடமிருந்துதான் எல்லா உயிரினங்களும் உண்டாகின்றன. அதனால் உயிர் வாழ்கின்றன. அதிலேயேதான் லயமும் அடைகின்றன. ஆகையால் ஆனந்தமே பிரம்மம் இதில் சந்தேகமில்லை. நாம் அனுபவிக்கும் இந்த பிரபஞ்சம், பூதங்கள் தோன்றுவதற்கு முன்னேயே பூமா என்று அழைக்கப்படுகின்ற பிரம்மன்தான் இருந்தது. திரிபுடி என்கின்ற இருமை தோன்றாத காரணத்தால் அது மட்டும்தான் இருந்தது. திரிபுடி என்பது மூன்றுவிதமான இருமைகள். அவைகள் அறிபவன், அறிய உதவும் கருவி, அறியப்படும் பொருள் ஆகியவையாகும். பிரளய காலத்தில் இவைகள் கிடையாது. விக்ஞானமயன்தான் அறிபவன் என்றும், மனோமய (மனதும், பத்து இந்திரியங்களும் சேர்ந்தது) அறிய உதவும் கருவி, சப்தம், ஸ்பர்ஷம் முதலியவைகள் அறியப்படும் பொருட்கள். இவை மூன்றும் ஸ்ருஷ்டிக்கு முன்னால் கிடையாது.
 
இந்த மூன்றும் இல்லாதபோது அங்கு இருமை என்பது இல்லை. அங்கே பூரணமான வஸ்து மட்டும்தான் இருந்தது. சமாதி, நல்ல தூக்கம், மூர்ச்சை என்ற நிலைகளில் முன்சொன்ன மூன்று இருமைகள் கிடையாது. அத்வைதம் மட்டும்தான் அனுபவிக்கப்படுகிறது. அப்படியே ஸ்ருஷ்டிக்கு முன்னால் பிரம்மன் மட்டும்தான் இருந்தது.
 
சனத்குமாரர் என்பவர் மிகவும் துயரத்துடனிருந்த நாரதருக்கு இவ்விதம் உபதேசித்தார்.  எது பிரம்மனோ, எல்லையற்றதாக இருக்கின்றதோ அதுவே ஆனந்தம். மூன்றுவிதமாக பிளவுபட்டுள்ள இருமையில் சுகம் கிடையாது. நம்முடைய அனுபவத்தில் அல்பத்தில்தான் சுகத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். அது பொய்யானது, நிலையற்றது, துக்கத்துடன் கூடியது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
 
அனைத்து புராணங்களையும், மகாபாரதத்துடன் கூடிய ஐந்துவித வேதங்களையும், பலவிதமான சாஸ்திரங்களையும் அறிந்துள்ளேன். இவ்வளவ அறிவை அடைந்து இருந்தாலும் பிரம்மத்தை அறியாததினால் அவர் துயரத்துடன் இருக்கிறார். மனநிறைவற்று வருத்தப்பட்டுக கொண்டிருந்தார். வேதங்கள் கற்றறிவதற்கு முன்னால் மூன்றுவிதமான துயரங்கள் மட்டும் அனுபவிக்கப்பட்டது. வேதத்தை கற்றபிறகு, கற்றது மறந்துவிடக்கூடாது என்ற மனவருத்தமும் சேர்ந்து கொண்டது. அதனால் கற்றதை அப்யாஸம் செய்து கொண்டிருப்பதிலுள்ள சிரமம். தன்னைவிட உயர்ந்த அறிவாளியைப் பார்த்தால் வருகின்ற பயம். தன்னுடைய அறிவுக்கு சோதனை வந்துவிடுமோ என்ற பயமும், மற்றவர்களை விட நான் அதிகம் படித்தவன் என்ற கர்வத்தினாலும் துயரங்கள் அதிகமாகிக் கொண்டே போனது.
 
ஹே வித்துவானே! இவ்வாறாக பலவிதமான துயரங்களினால் ஆட்கொள்ளப்பட்டு இருக்கிறேன். இந்த துயரத்தை கடந்து அக்கரையில் சேர்த்து விடுங்கள். இவ்விதம் நாரதரால் வேண்டப்பட்டவுடன் சனத்குமாரர் உன்னிடமுள்ள துயரம் நீங்க வேண்டுமானால் ஆனந்த ஸ்வரூபமான ஆத்மாவை என்கின்ற கரையைத்தான் அடைய வேண்டும்.
 
போகப்பொருட்கள், விஷயங்களை அனுபவிக்கும்போது சுகத்தை அனுபவிக்கிறோம். அது சிறிதளவு அல்பமாக இருந்தாலும் அனுபவிக்கின்றோம். விஷய சம்பந்தத்தால் வருகின்ற சுகம் உண்மையான சுகம் கிடையாது.. அந்த சுகமானது ஆயிரக்கணக்கான சோகத்தினால் மூடப்பட்டிருக்கிறது. புலன்களால் அதிகமாக சுகத்தை அனுபவிக்கும் போது அவைகளின் சக்தி குறைந்து விடும். அதேசமயம் அந்த சுகத்தை அடைய முடியவில்லை என்ற துக்கத்தால் ஆட்கொள்ளப்படுவோம். விஷய சுகம் நம்மை அடிமையாக்கி அனுபவித்த சுகத்தைவிட பலமடங்கு துக்கத்தை கொடுக்கக்கூடியது. சுகத்தை அனுபவித்தவுடன் அதை கொடுக்க உதவிய புண்ணியமும் தீர்ந்து போகின்றது. ஆகவே சனத்குமாரர் சுகமாக தெரிந்தாலும் அது உண்மையான சுகமல்ல என்று கூறினார்.
 
நாமே ஆனந்த ஸ்வரூபமாக இருக்கிறேன் என்று புரிந்து கொண்டால் ஆனந்தத்தை தேட வேண்டியதே இல்லை. இருமையில் விஷய சுகங்கள் இல்லாதிருக்கட்டும் அதேபோல அத்வைதத்திலும் சுகம் கிடையாது. ஒருவேளை அப்படி சுகமிருந்தால் அது நம்மால் அனுபவிக்கப்பட வேண்டும். அப்படியானால் திரிபுடி வந்து விடுமே அதனால் அதுவும் த்வைதமாகிவிடும். அத்வைதத்திற்குள் சுகம் இல்லையென்பது சரியானதுதான். ஏனெனில் அத்வைதமே சுகமாக இருக்கிறது. அத்வைதத்திற்குள் பிரம்மத்தை எந்த பிரமாணத்தைக் கொண்டு நிரூபிக்க தேவையில்லை. அது தானாகவே விளங்கிக் கொண்டிருக்கிறது. எந்தப் பிரமாணமும் இல்லாமல் எதனுடைய துணையும் இல்லாமல் தனக்குத் தானே விளங்கிக் கொண்டிருப்பது அதைத்தான் சுயபிரகாசம் என்று சொல்லப்படுகிறது. ஆழ்ந்த உறக்கத்தில் அனுபவிக்கும் சுகம் எந்தப் பிரமாணமும் இல்லாமல் அறியப்படுகிறது. நம் மனதில் எழும் உணர்வுகளையும் தானாக அறிந்துக் கொள்கிறோம். ஆழ்நிலை உறக்கத்தில் துன்பம் கிடையாது எனவே அங்கு சுகம் மட்டும்தான் எஞ்சி இருக்கிறது. கண்பார்வையற்றவன் அந்த நிலையில் குருடனாக இல்லை. உடலில் படுகாயத்துடன் இருப்பவனும், நோய்வாய்பட்டவனும் அந்த நிலையில் அவ்வாறாக இல்லை. எல்லா துயரத்திற்கும் காரணம் உடலின் மீதுள்ள அபிமானம்தான். இதையே எல்லா மனிதர்களும் அனுபவத்தால் அறிந்து கொண்டுள்ளார்கள்.
 
மனம் வெளிவிஷயங்களிலிருந்து நீங்கி உட்முகமாக திரும்பும்போது நம் மீதே கவனிக்க ஆரம்பிக்கிறது. அந்த நிலையில் நம்முடைய பிரம்மானந்தம் அந்த நிலையில் மனதில் உள்ள எண்ணத்தில் பிரதிபலிக்கின்றது. அப்போது இந்த நிலையில் ஆனந்தமாக நான் இருக்கிறேன் என்ற எண்ணத்துடன் இருக்கிறேன். நாம் விரும்பிய பொருளை அடைந்தவுடன் ஆசை நீங்கிய மனது தன்னையே பார்க்கும் போது பிரம்மானந்தம் அதில் பிரதிபலிக்க அவன் ஆனந்தத்தை அனுபவிக்கிறான். நான் அனுபவிப்பவன், மனம் அனுபவிக்கிறது, ஆனந்தத்ததை அனுபவித்தல் என்ற திரிபுடி இருக்கின்றது. இந்த திரிபுடி நிலையிலும் மனம் களைப்பு அடைகிறது. எனவே விஷயானந்தம் நிலையற்றதாக இருக்கிறது. இதையும் தாண்டி மனம் நிலையான தடையற்ற ஆனந்தத்தை அடைய உறங்கி விடுகின்றது. உயிரினங்கள் அனைத்தும் உறக்கத்தில் ஆனந்த ஸ்வரூபத்தில் இருக்கிறதென்று உபநிஷத் கூறுகிறது.
 
கயிற்றில் கட்டப்பட்டுள்ள பறவையானது எல்லா திசைகளிலும் பறந்து சென்றுவிட்டு எங்கும் அமர இடம் இல்லாததால் திரும்பவும் எந்தக் கம்பத்தில் கட்டப்பட்டு இருந்ததோ அந்தக் கம்பத்திற்கே வந்துவிடுகிறது. இந்தப் பறவையைப் போன்ற மனதை உபாதியாகக் கொண்ட ஜீவன் பாவ-புண்ணியங்களின் பலனை அனுபவிப்பதற்காக கனவு, விழிப்புநிலைக்கு சென்றுவிடுகிறான். இந்த நிலையில் அலைந்து, திரிந்து அந்த நாளுக்குரிய சுக-துக்கங்களை கர்மபலன்களை அனுபவித்துவிட்டு ஜீவனுடைய உண்மையான பிரம்மத்தை நாடி ஆழ்ந்த உறக்கத்திற்கு வந்துவிடுகிறான். கழுகானது பொழுது சாய்ந்ததும் மிகவும் வேகமாக தனது கூட்டிற்கு இயல்பாகவே உறங்குவதற்கு செல்கிறது. அதுபோல ஜீவனும் ஆழ்ந்த உறக்க நிலைக்கு செல்கிறான். பிரம்மானந்தத்தை அனுபவிப்பதை இலக்காக கொண்டு அந்த நிலைக்கு செல்கிறான்.
 
கைக்குழந்தைக்கு விருப்பு-வெறுப்பு எதுவும் இல்லாததால் ஆனந்த மட்டுமே சுபாவமாக கொண்டுள்ளதாக இருக்கிறது. எல்லையற்ற சக்தியும். செல்வமும் உடைய மகாராஜா ஆனந்தத்தின் எல்லையில் சிறிது நேரம்தான் இருக்கிறான். ஞானி தான் ஆத்மஞானத்தை அடைந்துவிட்டதை தானாகவே தெரிந்து கொள்வான். மேலான பிரம்மத்தை அறிந்த ஞானிக்கு தான் செய்ய வேண்டியதெல்லாம் செய்து முடித்துவிட்டேன் என்ற மனநிறைவுடன் இருப்பான். ஆத்ம ஞானத்தினால் இந்த மனநிறைவுடன் இருப்பான் மேலான வித்யானந்தத்தின் எல்லையை அடைந்தவன்.
 
அனுபவம் எதுவுமில்லாமல் மகிழ்ச்சியுடன் இருக்கும் குழந்தை, அடைந்த அறிவினால் அதிக சக்தியுடனும், திறமையுடனும் மகிழ்ச்சியுடன் இருக்கும்; அரசன், அறிவிலேயே மேலான ஆத்மஞானத்தை அடைந்து மகிழ்ச்சியுடன் இருக்கும் ஞானி ஆகியோர்கள்தான் உண்மையிலே மகிழ்ச்சியுடையவர்கள் என்று உலகத்தார் சொல்கிறார்கள். ஆகவே இந்த மூன்றுபேர்களையும் உதாரணமாக் கூறப்பட்டது. மற்றவர்கள் சுகத்தைவிட துக்கத்தை அனுபவிக்கிறார்கள். ஆனால் இவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் பிரம்மானந்தத்தை அனுபவிக்கிறார்கள்.
 
ஸ்தூல, சூட்சும சரீரங்களில் அபிமானம்தான் சுக,துக்கங்களை கொடுத்துக் கொண்டு இருக்கிறது. மற்றவர்களின் கடுஞ்சொற்கள் மனம் எப்படி பொருட்படுத்துகின்றது என்பதைப் பொறுத்துத்தான் துயரம் வருகின்றது. தூக்கத்தில் தந்தையும் தந்தையாக இருப்பதில்லை என்பது போன்றவற்றில் ஜீவத்தன்மை மறைக்கப்படுவதால் அந்த சமயத்தில் பிரம்மனாகவே இருக்கிறான். அப்போது சம்சாரத் தன்மைக்குள்ள லட்சணம் காணப்படாததனால் ஜீவன் இல்லை. தான் தந்தை என்பது போன்ற அபிமானம் எதுவோ அதுதான் சுகத்தையும், துக்கத்தையும் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த அபிமானம் நீங்கி விட்டால் எல்லா சோகங்களையும் கடந்தவனாகின்றான்.
 
ஆழ்ந்த உறக்கத்தில் அனைத்தும் லயமடைந்திருக்கையில் அதேசமயம் அறியாமையிலும் இருக்கிறான். பிறகு சுகத்தை அடைகிறான் என்ற அதர்வண வேதத்திலுள்ள கைவல்ய உபநிஷத் சொல்கிறது. ஆழ்ந்த உறக்கத்தில் நான் சுகமாக உறங்கினேன், நான் எதையும் அறியவில்லை என்று சொல்வதன் மூலம் அந்த நிலையில் ஆனந்தமும், அறியாமையும் இருப்பதை உணர முடிகிறது. விழித்த பிறகு நினைவுப்படுத்திக் கொள்கிறான். பொதுவாக நாம் எதை அனுபவித்தோமோ அதைத்தான் நினைவுப்படுத்தி சொல்ல முடியும். எனவே அனுபவிக்கப்பட்ட சுகமானது உண்மையானது என்று அறிய முடிகிறது. நினைவுப் படுத்திக்கொள்வது என்பது அனுபவித்த விஷயத்தில்தான் சாத்தியமாக முடியும். அந்த நேரத்தில் ஆனந்த ஸ்வரூபம் இருந்தது. உறக்கத்தில் அனுபவிக்கின்ற சுகமானது சைதன்ய ஸ்வரூபம் பிரதிபலிப்பதால் வருகின்றது. இதிலிருந்து அறியாமையும் பிரகாசப்படுத்தப்படுகிறது. சுகத்தை அனுபவிக்கின்றோம் என்ற அறியாமையுடன் நம்மால் அனுபவிக்கப்படுகிறது.
 
பிரம்மத்தின் ஸ்வரூபம் ஆனந்தமயமானது. அறிவு ஸ்வரூபமானது என்று வேத சாஸ்திரம் கூறுகிறது. ஆகையால் சுயபிரகாசமாகவிருக்கும் சுகமானது பிரம்மமன்றி வேறில்லை. விக்ஞானமய கோசத்தில் கர்த்தாவாக, அறிவுமயமாக இருப்பவனும், மனோமய கோசத்தில் அனுபவிப்பவனாக, உணர்வுமயமாக இருப்பவனும் அக்ஞானத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் ஒடுங்கியிருக்கிறார்கள். இந்த இரண்டு கோசங்களின் லயமடைந்த நிலையே ஆழ்ந்த உறக்கம் அதைத்தான் அறியாமை என்று கூறுகின்றோம்.
 
இளகின நெய்யைப் போலிருந்து பின்னால் கெட்டியாக இருப்பது விக்ஞானமயம். இளகின நிலையிலிருப்பதுவே ஆனந்தமயம் என்ற வார்த்தையினால் சொல்லப்படுகிறது. இரண்டு நிலையிலும் இருப்பது ஒரே பதார்த்தம்தான். அதுபோல ஆனந்தமயமும், விக்ஞானமயமும் வேறுபட்ட நிலையில் இருந்தாலும் ஒன்றாகவே இருப்பதால் ஆனந்தநிலையில் அனுபவிக்கபட்ட இன்பமும், அக்ஞானமும் விக்ஞான மயனுக்கு நினைவுப்படுத்திக் கொள்ள முடியுமென்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
 
தூங்குவதற்கு முந்திய கணத்தில் எந்த புத்தி விருத்தி ஆத்மாவின் ஸ்வரூபமாக உள்ள சுகத்தின் பிரதிபிம்பத்தோடு இருந்ததோ அந்த பிரதிபிம்பத்தோடு கூடிய அந்த புத்தி விருத்தியே பிற்பாடு ஒடுங்கிவிடுவது ஆனந்தமயன் என்று சொல்லப்படுகிறது. இந்த ஆனந்தமயமாக இருக்கின்ற ஜீவன் உள்நோக்கிய மனதை உடையவனாக இருப்பதால் அப்போது பிரம்மானந்தத்தை அனுபவிக்கிறான். சைதன்ய பிரதிபிம்பத்துடன் கூடிய அக்ஞானத்திலிருந்து தோன்றிய எண்ணங்களைக் கொண்டு இந்த ஆனந்தத்தை அனுபவிக்கின்றான்.
 
ஆழ்ந்த உறக்கத்தின்போது அறியாமையின் போது வருகின்ற எண்ணங்கள் மிகவும் நுண்ணிமானவை. விழித்திருக்கும் போது மற்ற மயங்களி;ல் இருக்கும்போது வருகின்ற எண்ணங்கள் தெளிவாக தெரிகின்றது. இதை வேதாந்தத்தினுடைய சித்தாந்தத்தை அறிந்தவர்கள் கூறுகிறார்கள். ஆழ்ந்த உறக்கத்தில் ஆனந்தமயக் கோசத்தில் அபிமானம் வைத்து போக்தாவாக இருக்கின்றோம். பிரம்மத்தின் ஆனந்தத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம்.
 
ஆழ்நிலை உறக்கத்தில் இருக்கின்ற ஜீவன் ஒன்றாக இருப்பவன், ஒருமுகப்பட்ட அறிவுடையவன், ஆனந்தமய கோச அபிமானியாகவும் ஆனந்தத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறான். அக்ஞான எண்ணத்தில் பிரதிபிம்பிக்கின்ற சிதாபாஸன் உதவியால்தான் இந்த ஆனந்தத்தை அனுபவிக்கின்றோம். விக்ஞானமயத்தில் ஆரம்பித்து பலவிதமான உணர்வுகளை உடையவனாக இருந்தவன், ஆழ்ந்த உறக்கத்திற்கு முன்பாக இவ்வாறு இருக்கின்றான். ஆனால் ஆழ்ந்த உறக்கத்தில் ஒன்றாகி இருக்கின்றான். பலவிதமாக இருக்கின்ற தானியங்கள் ஒன்றுசேர்த்து மாவாக அரைத்துவிட்டால் ஒன்றாகிவிடுவது போல இந்த நிலையிருக்கிறது.
 
ஆழ்நிலை உறக்கத்திற்கு முன்பு பலவிதமான அறிவு தனித்தனியாக புத்தியில் எண்ணங்களாக இருந்தவைகள் எல்லாம் இப்போது அவைகள் எல்லாம் ஒன்றானது போல காட்சியளிக்கிறது. ஒரே எண்ணம்தான் அந்த நிலையில் இருக்கின்றது. உதாரணமாக இமயமலையில் பனித்துளிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு பனிக்கட்டியாக மாறி இருக்கின்றதோ அதுபோல பல எண்ணங்கள் ஒன்றாக இருக்கிறது.
 
இந்த எண்ணங்கள் ஒன்றாகவிருக்கும் தன்மையை ஆத்மாவினுடைய சாட்சி ஸ்வரூபம் விளக்குகின்றது. ஆனால் சிலர் துக்கத்துடன் இல்லாமையே என்று கூறினார்கள். சாஸ்திரம் தெரியாத சாதாரண மக்களும், தர்க்கவாதிகளும் இவ்வாறு கூறுகிறார்கள். இந்த நிலையில் துயரத்தை கொடுக்கின்ற எண்ணங்கள் இல்லாததனால் துயரங்கள் இல்லை. அறியாமை என்கின்ற எண்ணத்தில் பிரதிபிம்பிக்கின்ற சைதன்யம் ஆனந்தத்தை அனுபவிக்க காரணமாகின்றது. ஆழ்ந்த உறக்கநிலையில் அனுபவித்த பிரம்மானந்தத்தை விட்டுவிட்டு கர்ம வசத்தினால் தூக்கத்திலிருந்து வெளியே வந்துவிடுகின்றான்.
 
முற்பிறவியில் சேர்த்து வைத்த கர்மபலன் வெளிப்படும் போது ஜீவன் விழித்துக் கொள்கிறான். அனுபவங்களின் பதிவைதான் வாசனா எனப்படுகிறது. ஆனந்தமான அனுபவங்களின் சுகத்தை மீண்டும் நினைத்துப் பார்த்து ஆனந்தப்படும் நிலைக்கு வாசனானந்தம். எனப்படுகிறது. விழித்துக் கொண்டவனுக்கு சிறிது நேரம் பிரம்மானந்தத்தினுடைய வாசனை தொடர்கிறது. அந்த நேரத்தில் எந்த புலன்களையும் பயன்படுத்தாமல் அமர்ந்து கொண்டிருப்பான். உலக விஷயங்களுக்கு செல்லமாட்டான். வாசனா ஆனந்தநிலையில் இருப்பான், அமைதியுடன் அமர்ந்திருப்பான்.
 
இந்த நிலைக்குப்பிறகு பிராரப்த கர்மத்தினால் தூண்டப்பட்டு பலவிதமான துயரங்களைக் கொடுக்கின்ற செயல்களை, கடமைகளை நினைத்துக் கொண்டு இருப்பான். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அனுபவித்த பிரம்மானந்தத்தை மறந்து விடுகின்றான். எல்லா மனிதர்களும் இவ்வாறுதான் இருக்கிறார்கள். அனுபவித்த பிரம்மானந்தத்தை உணர்ந்தவன் நிலையற்ற விஷயானந்தத்தை நோக்கி ஓடமாட்டான். அதற்காக கஷ்டப்பட்டு செயல்பட மாட்டான்.
 
உறக்கத்திற்கு முன்னும், பின்னும் உறக்கத்தின் போதுள்ள ஆனந்தத்தை அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஓவ்வொரு நாளும் விசேஷ ஆனந்தத்தை விரும்புகின்றோம். உறக்கத்தில் கிடைக்கின்ற பிரம்மானந்தத்தை விசேஷமாக விரும்புவதனால் அறிவாளிகள் இதிலென்ன சந்தேகம் இருக்கிறது என்று நினைப்பான். இத்துடன் ஆழ்ந்த உறக்கத்தினுடைய விசாரம் முடிவடைகிறது. ஆழ்ந்த உறக்கத்தில் விஷயங்கள் இல்லாமல் இன்பத்தை அனுபவிக்கிறோம். எனவே இன்பத்தை கொடுப்பது உலகத்திலுள்ள போகப்பொருட்கள் அல்ல என்ற அறிவை அடைய வேண்டும்.
 
எந்த சாதனத்தையும் செய்யாமல் சும்மா இருந்து கொண்டிருப்பவர்களுக்கும் கூட ஆழ்ந்த உறக்க பிரம்மானந்தத்தை அனுபவிக்கிறார்கள். என்று நினைக்கும் போது சாஸ்திரத்தை அறியாத சாதாரண மக்கள், சோம்பலுடன் இருப்பவர்கள், முக்தி அடைந்தவர்களாக தோன்றுகிறார்கள். எனவே சாஸ்திரத்தின் உபதேசத்தினாலும், அதை உபதேசிக்கும் குருவினால் என்ன பயன்? என்ற கேள்வி மனதில் எழலாம்.
அனுபவமும், அறிவும் பொதுவாக ஒன்றன்பின் ஒன்றாகத்தான் அடைய முடியும். ஆனால் சில விஷயத்தில் அனுபவம் மட்டும் இருக்கும் அதுவே அறிவாக மாறாது. மற்றும் சில விஷயத்தில் அறிவு மட்டும் இருக்கும் அனுபவம் இருக்காது. பிரம்ம சத்யம், ஜகத் மித்யா என்ற அறிவு வந்தாலும் அவையே அனுபவமான மாறாமல் இருக்கலாம். பத்தாவது மனிதன் உதாரணத்தில் தன்னை பற்றிய அனுபவம் இருந்தாலும் தான் இருக்கிறேன் என்ற அறிவில்லாமல் இருக்கிறான். பிரம்மானுபவம் இருந்தாலும்; அதைப்பற்றிய அறிவில்லாமல் இருக்கின்றோம். திருக்குறள் தெரிந்து இருந்தாலும் அதன் அர்த்தமும் தெரிந்தாலும் அதைப்பற்றிய அனுபவம் இல்லாது இருப்பார்கள். அதேப் போன்று தர்ம-அதர்ம விஷயத்தில் அறிவு இருந்தாலும் அதை அனுபவமாக்குவதில்லை. பிரம்ம ஞானம் ஏற்பட்டாலும் அதை அனுபவமாக்காமல் இருந்தால் அதனுடைய பலனை அனுபவிக்கமாட்டோம்.
 
இது சரிதான். பிரம்மானந்தத்தைதான் ஆழ்ந்த உறக்கத்தில் நான் அனுபவிக்கிறேன் என்று அறிந்திருந்தால் அவர்கள் மோட்சத்தை அடைந்தவர்களாக இருக்கிறார்கள் என்பது நிச்சயம். சாஸ்திரம், குரு இவர்களின் உதவியில்லாமல் மிகவும் நுண்ணியதாகவும், புலன்களால் கிரகிக்க முடியாததாகவும் இருக்கின்ற பிரம்மத்தை யாரால் புரிந்து கொள்ள முடியும்?
 
இப்போது நான் பிரம்மத்தை நன்றாக புரிந்து கொண்டேன. ஆனாலும் சம்சாரத்தில் தானே இருக்கிறேன். பரமானந்தத்தை அடையவில்லையே!
 
நான்கு வேதங்களையும் அறிந்தவனுக்கு சன்மானம் கொடுக்கப்படும் என்ற அறிவிப்பை கேட்டவுடன் ஒருவன் நான் வேதங்கள் நான்கு இருக்கிறது என்பதை அறிந்திருக்கிறேன் அந்த சன்மானத்தை எனக்கு கொடுங்கள் என்று கேட்பதை போல இருக்கிறது மேற்கண்ட கேள்வியானது. வேதங்கள் நான்குதான் இருக்கிறது என்ற எண்ணிக்கையை மட்டும் அறி;ந்து கொண்டிருக்கின்றான். அவைகள் உரைக்கும் உபதேசத்தை முழுவதுமாக அறிந்தவன் இல்லை. அதுபோல பிரம்மம் என்ற சொல்லியிருப்பதை மட்டும் அறிந்திருக்கிறாய், ஆனால் அதன் ஸ்வரூபத்தை முழுவதுமாக அறியவில்லை.
 
பிளவுபடாததாகவும், அத்வைத ஸ்வரூபமாகவும், ஆனந்த ஸ்வரூபமாகவும் உள்ளதும், மாயையும் அதன் காரியங்களான ஜகத் முதலியவைகள் எதுவும் இல்லாமல் இருக்கின்ற பிரம்மனிடத்தில் சிறிதளவு புரிந்து கொள்வதோ, முழுவதுமாக புரிந்து கொள்வது என்பது போன்ற பேச்சுக்கே இடமே கிடையாது.
 
அகண்டம், அத்வைதம், ஆனந்தம் போன்ற சொற்களின் சப்தங்களை மட்டும் தெரிந்து வைத்திருந்தால் மட்டும் போதாது. அவைகளின் உண்மையான அர்த்தத்தையும் அறிந்து வைத்திருக்க வேண்டும். மேலும் அந்த அர்த்தங்களின் அனுபவத்ததை அடைந்திருக்க வேண்டும். அனுபவமாவதற்கு சாதன சதுஷ்டய சம்பத்தியை அடைந்திருக்க வேண்டும். தீவிர முமுக்ஷுத்வம் இருந்தால்தால்தான் அனுபவத்தை அடைய முடியும். சரீரங்களின் மீதுள்ள அபிமானம் முழுவதும் நீங்கிய பின்னர்தான் பிரம்ம தத்துவத்தை புரிந்து கொண்டு அனுபவமாக்கிக் கொள்ள முடியும். எதுவரை செய்ய வேண்டியதையெல்லாம் செய்துவிட்டேன் என்ற முழமையான மனநிறைவை அடையவில்லையோ அதுவரை குரு-சாஸ்திரத்தை சார்ந்திருப்பாயாக.
 
வாசனானந்தம் என்பது இனிமையான நினைவுகளை மனதில் கொண்டு வந்து மகிழ்ந்திருத்தலாகும். எப்பொழுதெல்லாம் நாம் ஆனந்தமாக இருக்கின்றோமோ அந்த நிலையில் அனுபவிக்கும் ஆனந்தமானது பிரம்மானந்தத்தின் பிரதிபலிப்பதுதான் என்று புரிந்து கொள்ள வேண்டும். எந்த விஷயங்களோடும் சம்பந்தப்படாமலும், உறக்கமற்ற நிலையிலும் ஆனந்தமாக இருக்கும் போது அந்த நேரத்தில் அனுபவிக்கின்ற ஆனந்தமானது பிரம்மானந்தத்தின் பிரதிபலிப்பதுதான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
 
விஷயானந்தங்களை அடைந்த போதிலும் அவைகளைப் பற்றியிருக்கும் ஆசை நீங்கும்போது மனமானது உள்முகமாக நோக்கி திரும்புகிறது. மனதில் எழும் எண்ணங்கள் உள்முகமாக செல்லும்போது அவைகள் சூட்சுமமாகி விடுவதால் அதில் பிரம்மானந்தம் பிரதிபலிக்க நாம் ஆனந்தத்தை அனுபவிக்கின்றோம். ஆனந்தமானது பிரதிபிம்பானந்தம், வாசனானந்தம், பிரம்மானந்தம் என்று மூன்றாக பிரிக்கப்படுகிறது. இவைகளைத் தவிர வேறெந்தவிதமான ஆனந்தமும் இந்த உலகத்தில் இல்லை. அப்படியிருக்கும்போது பிரமானந்தம் விஷயானந்தத்தையும், வாசனானந்தத்தையும் உண்டுபண்ணிக்கொண்டு சுயபிரகாசமாக இருக்கிறது.
 
ஸ்ருதி, யுக்தி, அனுபவம் ஆகிய பிரமாணங்களிலிருந்து நல்ல தூக்க சமயத்தில் சுயபிரகாசமாகவும், சைதன்ய ஸ்வரூபமாகவும் உள்ள பிரமானந்தம் இருக்கிறது என்று தீர்மானித்தவிட்டபடியால் வேறு சமயத்திலும் இருப்பதை விளக்கப்படுகிறது.
 
ஜீவன் ஆனந்தமய கோசத்தில் இருக்கும்போது ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பான். விக்ஞானமய கோசத்தில் இருக்கும்போது கனவிலோ, விழிப்பு நிலையிலோ இருப்பான். விழிப்பு நிலையில் கண்கள்தான் ஜீவனுக்கு இருப்பிடமாக இருக்கிறது. கனவுநிலையில் கழுத்தும், ஆழ்ந்த உறக்கத்தில் இதயமும் இருப்பிடமாக இருக்கிறது.
 
தேகத்துடன் ஒன்றாகவிருக்கும் தன்மையை அடைந்தவனாக எப்படி காய்ச்சிய இரும்பக்குண்டில் அக்னியானது வியாபித்துக் கொண்டிருக்கிறதோ அதுபோல தனக்கு வேறாக உள்ள தேகத்தினை நான் என்ற அபிமானம் கொண்ட பிறகு அதன் தர்மங்களை தன்னுடைய தர்மங்களாக பாவித்து நான் மனிதன் என்ற உறுதியான எண்ணத்துடன் இருந்து கொண்டிருக்கின்றான். சுக-துக்கமற்ற நிலையான உதாசீனன், சுகத்துடன் இருப்பவன், துயரத்துடன் இருப்பவன் என்ற மூன்று நிலைகளை விழிப்பு நிலையில் அனுபவித்துக் கொண்டிருக்கின்றான். அனுபவிக்கின்ற சுகமும், துக்கமும் நம்முடைய செயலின் விளைவுகளாகும். கர்மபலனால் வருகிறது. புண்ணிமானது மனதில் சாத்விகமான எண்ணங்களை உருவாக்குகிறது. அதனுள் பிரம்மத்தின் ஆனந்த ஸ்வரூபம் பிரதிபலிப்பதால் சுகத்தை அனுபவிக்கின்றோம். பொருட்களும், விஷயங்களும் சுகத்தை கொடுக்கவில்லை. அவைகளை எடுத்துக் கொள்ளும் விதத்தில்தான் இவைகள் அமைகின்றது. சுக-துக்கமற்ற நிலையானது நம்முடைய இயல்பான நிலையாக இருக்கிறது. இந்த நிலையில் கர்மபலன்கள் செயல்படுவதில்லை. வெளியே இருந்து வருகின்ற சுக-துக்க அனுபவங்களும் மனதிலேயே செய்கின்ற சுக-துக்க கற்பனைகள்தான் என்று சுக-துக்கங்கள் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. சுக, துக்கங்களுக்கு இடைபட்ட நிலையில் உள்ள உதாசீன மனநிலையில் இருப்பதையே சுக, துக்கமற்ற நிலையாக இருக்கிறது.
 
இப்போது எனக்கு சுக-துக்கத்தை கொடுக்கின்ற எண்ணங்கள் எதுவும் இல்லை சுகமான நிலையையும் அடைகிறோம் என்று கூறுகிறோம். மன அமைகியுடன் இருக்கிறேன் என்று கூறி உதாசீன நிலையிலும் தன்னுடைய பிரம்மத்தின் ஆனந்த ஸ்வரூபத்தை வெளிப்படையாகவே ஒருவன் கூறுகிறான். நான் சுகமாக இருக்கிறேன் என்பது அகங்காரமானது பொதுவாக குறிப்பிடப்படுகிறது. இந்த பொதுவான அகங்காரத்தில் ஜீவனுடைய ஆத்ம தத்துவ அறிவு மறைக்கப்பட்டிருக்கிறது. அதனால் பொதுவாக அகங்காரத்தில் அடையும் ஆனந்தமானது பிரம்மானந்தம் கிடையாது. ஆனால் ஜீவனுடைய வாசனையினால் தோன்றுகின்ற ஆனந்தமே. நீர் நிரம்பியுள்ள பானைக்கு வெளியே அதனுடைய குளிர்ச்சி இருக்கும். இது நீரின் குணமாகும். இந்த குணத்தை வைத்தே உள்ளேயிருப்பது நீர் என்று அறிந்து கொள்ளலாம்.
 
தியானத்தின் முதிர்ச்சியின் போது மனமானது சில நொடிகளில் அசைவற்று சஞ்சலமற்று இருக்கும் நிலைக்கும் சமாதி என்பதாகும். இந்த நிலையில் அனுபவிக்கும் ஆனந்தமும் பிரம்மானந்தத்தின் பிரதிபிம்பம்தான். எவ்வளவுக்கெவ்வளவு அகங்காரமானது தேகமே நான் என்று நினைக்கும் எண்ணம் மறக்கப்படுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு நுட்பமான பார்வையுடைய அறிவாக மனமாகிவிடுவதால், மனம் பிரம்மத்தின் ஆனந்தத்தை காட்டுகின்றது. இடைவிடாமல் மனதை அமைதிப்படுத்துகின்ற தியானப் பயிற்சி செய்வதனால் இந்த நிலை அடையப்படுகின்றது.
 
எல்லாவற்றையும் தற்காலிகமாக மறைக்கப்பட்டுவிட்டால் மனம் மிகவும் நுட்பமான நிலைக்கு சென்றுவிடுகிறது. இந்த நிலையில் பிரம்மானந்தம் நன்றாக பிரதிபிம்பிக்கின்றது. அதை நன்றாக உணர்ந்து கொள்வதற்கு எளிதாகின்றது. இந்த சமாதி நிலையானது தூக்கமல்ல இந்த நிலையில் மனம் காரண சரீரத்தில் ஒடுங்குவதில்லை. அதனால்தான் தேகம் கீழே விழுவதில்லை. இந்த சமாதியில் இருமைகளும் பிரகாசிக்கவில்லை, தூக்கமும் இல்லை. அப்போது எந்த சுகமானது அனுபவிக்கப்படுகிறதோ அது பிரம்மானந்தம் என்று பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் உபதேசித்திருக்கிறார். உறுதியுடன் கூடிய புத்தியினால் மனதை மெல்ல மெல்ல வெளியே போவதிலிருந்து தடுத்து நிறுத்த வேண்டும். ஆத்ம ஞானத்தில் மனதை நிறுத்த வேண்டும். வேறெந்த விஷயங்களையும் சிந்திக்கக் கூடாது. இந்த முயற்சியே தியானமாகும். இந்த மனமானது சஞ்சலத்துடனும், உறுதியில்லாமல் இருக்கின்ற தன்மை உடையதாக இருக்கிறது. இப்படிபட்ட மனமானது எதையெல்லாம் நோக்கி செல்கின்றதோ அந்தந்த விஷயங்களிலிருந்து திருப்பி கொண்டுவந்து ஆத்மவிஷயத்திலேயே நிறுத்த பழக வேண்டும்.
 
தீயக்குணங்கள் நீங்கப்பெற்ற தூய்மையான மனதை உடையவன் பிரம்மஞானத்தை அடைந்து அதிலேயே நிலைபெற்றவனாக இருப்பான். இந்த யோகியானவர் ரஜோ குணத்தை அடக்கியவனாக இருப்பவன். மேலான, புனிதமான ஆனந்தம் இவனை வந்து அடைகின்றது. யோக அப்யாஸத்தின் மூலம் பயிற்றுவித்த மனதானது சுபாவமாக எந்த நிலையில் ஓய்வடைகிறதோ, எந்த நிலையில் தன்னுடைய அறிவாலேயே மனதாலே, தன்னை உணர்ந்து கொண்டு தன்னிடத்திலே மகிழ்ந்திருப்பானோ அவனே ஜீவன் முக்தன்.
 
உலகத்திலிருந்து அடையப்படுகின்ற சுகத்தைக் காட்டிலும் மேலான வரையறுக்கப்பட முடியாத சுகமானது ஆத்மஞானத்துடன் கூடிய புத்தியினால் மட்டும் அறியக்கூடியது. புலன்களுக்கு புலப்படாததாகவும், புலனுகர் போகப் பொருட்களை விட மேலானது. இந்த நிலையிலிருந்து கொண்டு ஆத்மஞானத்தில் இருந்து நீங்கிவிடுவதில்லை.
 
எந்தவொன்றை அடைந்ததும் அதற்கு மேலாக வேறொன்றை மனம் பார்க்கவில்லையோ அந்த நிலைதான் மேலான முக்தி நிலையாகும். எந்தவொன்றில் அறிவில் இருந்து கொண்டு அதிகமான துயரத்தினாலும் அசைக்கப்படுவதில்லையோ அந்த நிலைதான் மேலான முக்தி நிலையாகும். துயரத்துடன் இருப்பதிலிருந்து விலகுவதுதான் யோகம், மோட்சம் என்று புரிந்து கொள்ள வேண்டும். இப்படிபட்ட மோட்சநிலையை உறுதியுடன் பின்பற்ற வேண்டும்.
 
இவ்விதமாக தன்னை எப்போதும் யோகத்தில் வைத்திருக்கின்ற சாகான்யர் என்ற முனிவர் பருஹத்ரதன் என்ற ராஜரிஷிக்கு மிகவும் எளிதாக, தெளிவாக, குழப்பமில்லாமல் புரிந்து கொள்ளும் வகையில் மைத்ராண்யம் என்ற உபநிஷத்தில் மனதின் அவசியத்தைப் பற்றிய கருத்துக்களை முக்கியப்படுத்தி உததேசம் செயதிருக்கிறார்.
 
நெருப்பானது எரிவதற்கான எரிபொருள் தீர்ந்துவிட்டது என்றால் அந்த இடத்தில் காரணநிலையில் ஒடுங்கி அமைதி அடைந்து விடுகிறது. அவ்விதம் ராஜஸ, தாமஸ எண்ணங்களை மனதிலிருந்து நீக்கிவிட்டால் அது தன்னுடைய காரண நிலையான சாத்விக நிலையில் ஒடுங்கிவிடுகிறது. மனம் சத்துவத்தால் உருவானதால் அதில் சைதன்யம் பிரதிபலிக்கிறது. சத்துவ நிலைக்கு உயர்த்தப்பட்ட மனதை உடையவனுக்கு உண்மைப் பொருளை உணரவேண்டும் என்ற ஆசையானது வருகின்றது. புலன்களுக்கு போகத்தைக் கொடுக்கக்கூடிய பொருட்களில் பற்றற்று கர்மவசத்தினால் ஏற்படுவதெல்லாம் வெறும் பொய்யே, வெறும் தோற்றமே என்று நினைக்க வைக்கிறது. இது எல்லா காலத்திலும் ரகசியமாகவே இருக்கிறது. மனம்தான் சம்சாரத்திற்கு காரணம். நாம் அனுபவிக்கும் இன்ப, துன்பங்களுக்கு மனமே காரணமாகும். அந்த மனதை முழுமுயற்சியுடன் தூய்மைப்படுத்த வேண்டும். சாத்வீகமாக மாற்றி, அறிவை கொடுக்க வேண்டும். ஜீவன் எப்படிபட்ட மனதுடன் இருக்கின்றானோ அதன் மயமாகவே இருப்பான்.
 
நம்முடைய மனதினுடைய சாத்விக நிலையினால் தெளிந்த நிலையினால், பாவ, புண்ணியங்களை, கர்மபலன்களை அழித்துவிடுகிறான். இப்படிபட்ட நல்ல மனதை உடையவன் ஆத்ம ஞானத்திலே தன்னிடத்தில் நின்று அழியாத சுகமான மோட்சத்தை அடைந்து விடுகிறான். பிரம்மனிடத்தில் மனம் ஒன்றிவிட்டால் பந்தத்திலிருந்து யாரால்தான் விடுதலை அடையாமல் இருக்கமுடியும்.
 
மனம் தூய்மையானது, தூய்மையற்றது என இருவிதமாக இருக்கிறது. ஆசையில் இருக்கும்போது தூய்மையற்றதாகவும், பற்றற்ற நிலையில் தூய்மை உடையதாகவும் இருக்கிறது.
 
மனம்தான் பந்தத்திற்கும், மோட்சத்திற்கும் காரணமாக இருக்கிறது. மனதைக் கொண்டுதான் இந்த இரண்டிலொன்றை அனுபவிக்கின்றோம். மனமேதான் இவைகளை அனுபவிக்கிறது. விஷயங்களில் பற்று வைக்கும்போது பந்தத்திற்கு காரணமாகின்றது. விஷயமற்ற உலகமாக மனம் பார்க்கும்போது மோட்சத்தை அனுபவிக்கின்றது. ஒரு பொருள் இருந்தாலும், இல்லையென்றாலும் அதனால் ஒருபயனும் இல்லை என்று இருக்கும் என்ற நிலையே அன்யதா-ஸித்தா என்பர். எப்பொழுது இந்த உலகம் அன்யதா ஸித்தாவாக மாறுகிறதோ அந்த நிலையே முக்தி நிலையை அடைந்து விட்டதாக புரிந்து கொள்ளலாம்.
 
தன்னிடத்திலே நிலைபெற்றிருப்பவனும் மனம் தூய்மைநிலையிலிருக்கும்போது எந்தவொரு மனநிறைவு என்கின்ற சுகத்தை அடைகின்றானோ, அனுபவிக்கின்றானோ அந்த சுகத்தை சொற்களால் விளக்க முடியாது. அந்த சுகமானது அவனுடைய அந்தக்கரணத்தினால் மட்டும் புரிந்து கொள்ள முடியும்.
 
மனிதர்களால் அதிக நேரம் சமாதி நிலையில் இருப்பது என்பது நடக்காது. அந்த சமாதி நிலையில் அனுபவிக்கின்ற ஆனந்தம் சிறிது நேரமாக இருந்தாலும் கூட அதுவும் பிரம்மானந்தத்தின் பிரதிபிம்பம்தான் என்று புரிந்து கொள்ள வேண்டும். எனவே சமாதி நிலையை அடைவது நம்முடைய லட்சியம் அல்ல. சிரத்தையை அடைந்தவன் இலக்கை அடைய வேண்டும் என்ற உறுதியான மனதுடையவன். இப்படிபட்டவன் இந்த ஆத்மாவானது ஆனந்த ஸ்வரூபம் என்பதை நிச்சயம் செய்து கொள்கிறான். திடீரென்று ஏற்பட்ட சிறு அனுபவத்தாலும் இந்த நிச்சயம் செய்து விடுவார்கள். இதையே வைத்துக்கொண்டு எல்லா காலத்திலும் அனுபவிக்கின்ற ஆனந்தத்திற்கு பிரம்மனே மூலம் என்று முடிவு செய்கின்றான்.
 
மோட்ச சாதனத்தில் வெறுப்பற்ற நிலையில் இருக்கும் போதும், அதனால் கிடைக்கின்ற வாசனானந்தத்திலேயே மூழ்கிவிடாமல் அதிலேயும் வைராக்கியத்தை அடைய வேண்டும். முக்கிய ஆனந்தமான பிரம்மானந்தத்தை நோக்கியே தினமும் முயற்சி செய்து கொண்டிருக்க வேண்டும். வேறு புருஷனிடம் உறவு கொண்டிருக்கும் ஒருவள் வீட்டு வேலையை செய்து கொண்டு இருந்தாலும் கூட அந்த புருஷனிடம் கொண்ட சங்கத்தினால் ஏற்பட்ட சுகத்தையே தனக்குள் நினைத்து ரசித்துக் கொண்டிருப்பாள். இவ்விதம் வெளிவிவகாரத்தில் ஞானி மேலான ஆத்ம தத்துவத்தை உணர்ந்த நிலையிலே இருப்பான்.
 
பத்து இந்திரியங்களுக்கும் நம்மை வெளியே இழுக்கும் சக்தியை உடையது. அவ்வாறாக இருந்தபோதிலும் பிரம்மானந்தத்தை அடைய வேண்டும், அனுபவிக்க வேண்டும் என்ற விருப்பத்தை உண்டுபண்ணி எல்லா இந்திரியங்களையும் தன்னுடைய கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்து ஆத்ம விஷயத்தில் மட்டும் சிந்தனை உடையவனாக இருப்பவனே தீரன் ஆவான். தலையில் சுமையை தாங்கி செல்பவன் அதனால் அடையும் கஷ்டத்திலிருந்து விடுபட அந்த சுமையை ஒரு சுமைதாங்கியில் வைத்திடுவான். அதுபோல சம்சாரத்தில் வைத்திருக்கின்ற எண்ணங்களையெல்லாம் மனதிலிருந்து நீக்கிவிட்டால் மனமானது அமைதியையும், நிறைவையும் அடையும்.
 
முழுமையான மனநிறைவை, மனவமைதியை அடைந்தவன் எவ்விதம், எதனாலும் பாதிக்கப்படாமலும், மனசஞ்சலமும் இல்லாமல் இருப்பானோ அவ்விதமே சுக-துக்க காலங்களில் கூட ஆனந்தத்தை அனுபவித்துக் கொண்டிருப்பான்.
 
விஸ்ராந்தி-மனதில் உள்ள அனைத்து அழுக்குகளையும் நிரந்தரமாக நீக்கி மனதை அமைதியுடன் இருக்கும் நிலை.
 
சிலவகையான சுகங்கள் ஆத்ம ஞானத்தை அடைவதற்கும் தடையாக இருக்கும். குற்ற உணர்வுடன அனுபவிக்கும் சுகங்கள், தீயவழியில் அடையப்படும் சுகங்கள், அதர்மத்தின் மூலமாக அனுபவிக்கும் சுகங்கள் விரோதி சுகம் என்று அழைக்கப்படும். இந்த சுகங்களை அனுபவிக்கும் போது மனமானது சஞ்சலத்துடன் இருப்பதால் ஞானயோகத்திற்கே செல்ல முடியான நிலையுண்டாகும். ரஜோ, தமோ குணத்தின் தூண்டுதலால் அனுபவிக்கப்படும் சுகங்களை ஞானியானவன் அனுபவிக்க மாட்டான்.
 
மற்றொரு வகையான சுகத்திற்கு அவிரோதி சுகம் என்று பெயர். தார்மீகமான முறையில் அடையப்படும் சுகங்களே அவிரோதி சுகமாகும். இது ஆத்மஞானத்தை அடைவதற்கு தடையாக இருக்காது. அக்னிபிரவேசம் செய்ய வேண்டிய நிலையில் அவனுடைய புத்திக்கு உடலை அழகுபடுத்திக் கொள்ள மனம் விரும்பாதோ அதுபோல ஆத்மஞான தியானத்திற்கு எதிராக இருக்கின்ற விஷய சுகங்களில் மனம் நாடாது.
 
எந்தவித சுகமானது மனதில் குற்ற உணர்வையோ, பயத்தையோ உருவாக்காதோ அதுவே பிரம்மானந்தமாகும். தர்மமான விஷயங்களில் கிடைக்கின்ற சுகத்தை அனுபவிக்கும்போதும் பிரம்மானந்தத்திலே இருக்கிறான். காக்கைக்கு இரண்டு கண்கள் இருந்தும் ஒரு சமயம் ஒரு கண்ணால் மட்டுமே பார்க்க முடியும். ஞானி அவிரோத சுகத்தை அனுபவிக்கும்போது பிரம்மானந்தத்தை அனுபவிப்பதில்லை. அது இல்லாத போது பிரம்மானந்தத்தில் இருப்பான். இந்த இரண்டு ஆனந்தத்தையும் ஞானி மாறி மாறி அனுபவித்துக் கொண்டிருப்பான்.
 
ஞானி புலனுகர் போகப் பொருட்களிலிருந்து கிடைக்கும் விஷயானந்தத்தை  அனுபவிக்கும் போதும் பிரம்மானந்தத்தைதான் அனுபவிக்கிறான் என்ற எண்ணத்துடன் இருப்பான். இரண்டு மொழிகளை தெரிந்தவன் ஒரே பொருளை குறிக்கும் இரண்டு மொழி சொற்களையும் கூறுவது போல உலக விஷயங்களிலிருந்து அடைகின்ற ஆனந்தம், வேதாந்தத்திலிருந்து அடைந்த ஆனந்தம் இரண்டையும் ஒன்றாகவே நினைக்கிறான்.
 
கங்கை நதியில் இடுப்பளவு நீரில் நிற்கும்போது உடலின் மேற்பகுதி வெப்பமாகவும், கீழ்பகுதி குளிர்ச்சியாகவும் ஒரே நேரத்தில் அனுபவிப்பது போல ஞானி துக்கத்தை அனுபவிக்கும் போதே சுகத்தையும் அனுபவித்துக் கொண்டிருப்பான். உடல் அனுபவிக்கும் துக்கத்தை சாட்சியாக ஆனந்த ஸ்வரூபத்துடன் பார்த்துக் கொண்டு இருப்பான். பிராரப்த கர்மபலனால் ஆழ்ந்த மனதில் வரும் துக்கங்களால் மனதளவு பாதிக்கமாட்டான்.
 
இவ்விதம் விழிப்பு நிலையில் ஞானி பிரம்மானந்தத்தைத்தான் அனுபவிக்கின்றேன் என்று புரிந்து வைத்திருக்கிறான். அவ்விதம் வாசனையில் இருந்து உருவாகின்ற கனவுநிலையிலும் பிரம்மானந்தமே வெளிப்பட்டு சுகத்தை அனுபவிக்க வைக்கின்றது. அவனிடத்தில் அவித்யா வாசனைகளும் இருக்கும்.  உறக்கத்தில் இந்த வாசனைகள் வெளிபட்டு கனவு காணும்போது அக்ஞானியைப் போல சுக-துக்கங்களை அனுபவித்துக் கொண்டிருப்பான்.
 
பிரம்மானந்தத்தை விளக்குகின்ற இந்த நூலில் அது ஆனந்த ஸ்வரூபம் என்று நன்றாக விளக்கப்பட்டது. ஆத்மஞானத்தை அடைந்த ஞானிக்கு நன்றாக விளங்குகின்ற அந்த தத்துவம் மிகவும் நன்றாக இந்த அத்தியாயத்தில் விளக்கப்பட்டது.
---- ooo000ooo ----

A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...