Showing posts with label உத்தவ கீதை-08. Show all posts
Showing posts with label உத்தவ கீதை-08. Show all posts

Friday, June 9, 2017

Uddhava Gita - Chapter-08

உத்தவகீதை
அத்தியாயம் - 08
பக்தி-தியானம்
ஸ்வாமி குருபரானந்தாவின் உபதேச விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது-21-02-2022

ஶ்ரீஉத்தவ உவாச
வதந்தி க்ருஷ்ண ஶ்ரேயாம்ஸி ப3ஹூனி ப்3ரஹ்மவாதி3ன: |
தேஷாம் விகல்ப்ப்ராதா4ன்யமுதாஹோ ஏகமுக்2யதா || 1 ||

உத்தவர் கேட்கிறார்
ஹே கிருஷ்ணா! வேதத்தை நன்கு கற்றுணர்ந்தவர்களே மோட்சத்தை அடைவதற்கு பலவிதமான வழிகளை கூறுகிறார்கள். அவைகள் யாவும் முக்கியமானவையா? அல்லது ஏதேனும் ஒரு வழி மட்டுமே முக்கியமானதா?

ப4வதோதா3ஹெத: ஸ்வாமின்ப4க்தியோகோ3Sனபேக்ஷித: |
நிரஸ்ய ஸர்வத: ஸங்க3ம் யேன த்வய்யாவிஶேன் மன: || 2 ||

பகவானே! உங்களால் பக்தியோகமும் உபதேசிக்கப்பட்டுள்ளது. இது வேறெதையும் சார்ந்திராது என்றும் எல்லாவிதமான பற்றுகளும் நீங்கப்பெற்று பகவானிடத்தில் மட்டும் அன்பை செலுத்தி கொண்டிருப்பது என்றும் இதனால் உங்களிடத்தில் மனதை முழுமையாக ஈடுபடுத்தி வைக்க கூடியது என்றும் கூறியிருக்கிறீர்கள்
அனபேக்ஷித  - வேறதையும் சார்ந்தில்லாதது
நிரஸ்ய ஸர்வத: ஸங்க3ம் – எல்லாவிதமான பற்றுக்களும் நீங்கப் பெற்றது
த்வயி மனஹ ஆவிஶே – உங்களிடத்தில் மனதை முழுமையாக ஈடுபடுத்தி வைக்கக்கூடியது

ஶ்ரீபகவானுவாச
காலேன நஷ்டா ப்ரலயே வாணீயம் வேத3ஸ~ம்ஞிதா |
மயாதௌ3 ப்3ரஹ்மணே ப்ரோக்தா த4ர்மா யஸ்யாம் மதா3த்மக: || 3 ||

ஶ்ரீபகவான் கூறுகிறார்:
வேத3ஸம்ஞிதா – வேதம் என்ற சாஸ்திரமானது
வாணீ இயம் – என்னுடைய வார்த்தைகள்
ப்ரளயே காலேன நஷ்டா – பிரளய காலத்தின் போது அவைகளும் அழிந்து விடுகின்றது
ஆதௌ3 – மீண்டும் ஸ்ருஷ்டியின் துவக்கத்தில்
மயா – ஈஸ்வரனான என்னால்
ப்ரஹ்மனே – பிரம்ம தேவருக்கு உபதேசிக்கப்படுகிறது
யஸ்யாம் – அந்த வேத சாஸ்திரத்தில்
மதா3த்மக: த4ர்மஹ – என்னை அடைவதையே இலக்காக கொண்ட தர்மமானது கூறப்பட்டுள்ளது

தேன ப்ரோக்தா ஸ்வபுத்ராய மனவே பூர்வஜாய ஸா |
ததோ ப்4ருக்3வாத3யோSக்3ரஹணன்ஸப்த ப்3ரஹ்ம மஹர்ஷய: || 4 ||

இந்த வேதமானது பிரம்மாவின் மூத்த புதல்வனான மனுவுக்கு பிரம்மாவினால் உபதேசிக்கப்பட்டது. பிறகு ப்ருகு முனிவரும் மற்ற ஏழு ரிஷிகளும் அதனை அறிந்து கொண்டார்கள்.

தேப்4ய: பித்ருப்4யஸ்தத்புத்ரா த்எவதா3னவகு3ஹ்யகா: |
மனுஷ்யா: ஸித்3த4க3ந்த4ர்வா: ஸவித்3யாத4ரசாரணா: || 5 |
கிந்தேவா: கின்னரா நாகா3 ரக்ஷ:கிம்புருஷாதய: |
ப3ஹ்வ்யஸ்தேஷாம் ப்ரக்ருதயோ ரஜ:ஸத்த்வத்மோபு4வ: || 6 ||

பித்ருக்களுடைய புதல்வர்கள், தேவர்கள், அசுரர்கள், குஹ்யகர்கள், மனிதர்கள், சித்தர்கள், கந்தர்வர்கள், வித்யாதர்ர்கள், சாரணர்கள், கிம்தேவர்கள் (பாதி தேவன், பாதி மனிதனாக இருப்பவர்கள்), கின்னரர்கள் (அதிகளவு மனிதத்தன்மை, குறைந்த அளவு தேவகுணம்), நாகர்கள், ரக்ஷர்கள், கிம்புருஷர்கள் விதவிதமான தன்மையுடையவர்கள், சத்துவ, ரஜோ, தமோ குணங்களால் உண்டானவர்கள். இவர்கள் யாவரும் வேதத்தை பிரம்ம ரிஷிகளிடமிருந்து கற்றுக் கொண்டார்கள்.

யாபி4ர்பூதானி பி4த்3யந்தே பூ4தானாம பதயஸ்ததா2 |
யத2ப்ரக்ருதி ஸர்வேஷாம் சித்ரா வாச: ஸ்ரவந்தி ஹி || 7 ||

எப்படிபட்ட வாசனைகளுடன் ஒருவர் இருக்கின்றாரோ அதற்கேற்றவாறு அவர்கள் செயல்படுவார்கள். எனவே மனிதர்கள் ஒருவருக்கொருவர் வேறுபட்டு இருக்கின்றார்கள். அந்த மனிதர்களுடைய மனமும் வேறுபடுகிறது, அறிவும் வேறுபடுகின்றன.  சாஸ்திரத்தை பொருட்படுத்தும் விதமும் வேறுபடுகிறது.  அவரவர்கள் இயல்புக்கு ஏற்றவாறு விதவிதமாக பொருட்படுத்துகிறார்கள்

ஏவம் ப்ரக்ருதிவைசித்ர்யாத்3பி4த்3யந்தே மதயோ ந்ருணாம் |
பாரம்பர்யேண கேஷாஞ்சித்பாஷண்டமதயோSபரே || 8 ||

இவ்வாறு பிறக்கும்போதே இருக்கின்ற இயல்புகளின் வேறுபாட்டினால், மனிதர்களுடைய கொள்கைகளும், அறிவும் வேறுபடுகின்றன.  சிலர் பரம்பரையாக அந்த வேறுபாடுகளை ஏற்றுக் கொள்கிறார்கள். மற்றும் சிலர் வேதத்திற்கு முற்றிலும் எதிரான கொள்கைகளையும் பின்பற்றுகிறார்கள்

மன்மாயாமோஹித்தி4ய: புருஷா: புருஷர்ஷப4 |
ஶ்ரேயோ வத3ந்த்யனேகாந்தம் யதா2கர்ம யதா2ருசி || 9 ||

உத்தவா! என்னுடைய மாயையினால் மதி மயங்கிய மனிதர்கள் விதவிதமான இறுதி லட்சியங்களை கூறுகிறார்கள்.  அவர்களுடைய வாசனைகளின் அடிப்படையில்தான் அவர்களுடைய இறுதி லட்சியம் முடிவெடுக்கப்படுகிறது. ஆழ்மனதில் பதிந்துள்ள பதிவுகளின் அடிப்படையிலும், மனதின் விருப்பத்தின் அடிப்படையிலும் இறுதி லட்சியமானது முடிவு செய்யப்படுகிறது.

த4ர்மமேகே யஶஶ்சான்யே காமம் ஸத்யம் த3மம் ஶமம் |
அன்யே வதந்தி ஸ்வார்த2ம் வா ஐஶ்வர்யம் த்யாக3போ4ஜனம் |
கேசித்3யக்ஞம் தபோ தா3னம் வ்ரதானி நியமான்யமான் || 10 ||

சிலர் தர்மப்படி வாழ்வதே லட்சியமாகவும், வேதத்தில் கூறியுள்ள நித்திய, நைமித்திக கர்மாக்களையே மோட்சத்தை அடைய உதவும் சாதனம் என்கின்றார்கள்.  வேறு சிலர் புகழை அடைவதையே லட்சியமாகவும், புலனின்பத்தை அனுபவிப்பதே லட்சியமாகவும், வாய்மையே லட்சியமாகவும், புலனடக்கமே லட்சியமாகவும், மனதை கட்டுபடுத்துவதை இறுதி லட்சியமாக கூறுகிறார்கள்.  வேறு சிலர் எல்லோரையும் ஆள்பவனாக இருப்பதே லட்சியமாகவும், தியாகம் செய்வதே லட்சியமாகவும், தான் மட்டுமே அனைத்தையும் அனுபவிக்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டிருப்பார்கள்.  மற்றும் சிலர் யாகங்கள் செய்வதையும், தானம் செய்வதையும், விதவிதமான தவங்கள் செய்வதையும், விதவிதமான விரதங்கள் இருப்பதும், நியம-யம எனப்படும் வழிமுறைகளை கடைப்பிடிப்பதே இறுதி லட்சியமாக கொண்டிருக்கிறார்கள்.

ஆத்3யந்தவந்த ஏவைஷாம் லோகா: கர்மவினிர்மிதா: |
து3:கோ2த3ர்காஸ்தமோனிஷ்டா2: க்ஷுத்3ரா மந்தா3: ஶுசர்பர்தா: || 11 ||

ஏவ ஏஷாம் – இவர்கள் எவ்வாறு
கர்மவினிர்மிதா – கர்மத்தினால் உருவாக்கப்பட்ட, செயல்களினால் தோற்றுவிக்கப்பட்ட
லோகா:  இறுதி லட்சியமானது கீழ்கண்ட குறைகளை உடையது
ஆத்3யந்தவந்த – முதலும், முடிவும் உடையது, நிலையற்றது
து3:க2 உத3ர்கா: - துயரத்திற்கு காரணமாக இருக்கும், சுகம் போல தெரிந்தாலும் துயரத்தையே கொடுக்கக்கூடியது
தமோ நிஷ்டா – மோக வசத்திலும், அக்ஞானத்திலும் வைத்திருக்கும்
க்ஷுத்3ராமந்தா3: - அற்ப சுகத்தைக் கொடுக்க கூடியது, குறைவான இன்பத்தைக் கொடுத்துவிட்டு துன்பத்தில் ஆழ்த்திவிடும்
ஶுசார்பிதா: - துயரங்கள்  கலந்தவைகளாக இருக்கும். லட்சியத்தில் இருக்கும்போதே துயரத்தைக் கொடுக்க கூடியது.

இன்பத்தை கொடுக்கும் பொருட்கள் அனுபவிக்கும்போது பயமும் இருந்து கொண்டிருக்கும்.  இந்தப் பொருள் என்னைவிட்டு சென்று விடுமோ, என்னிடத்திலேயே நிலையாக இருக்காதோ என்ற எண்ணங்கள் மனதை அலைக்கழித்துக் கொண்டு பயத்திலே வைத்திருக்கும்.

மய்யர்பிதாத்மன: ஸப்4ய நிரபேக்ஷஸ்ய ஸர்வத: |
மயாத்மனா ஸுக2ம் யத்தத்குத:  ஸ்யாத்3விஷயாத்மனாம் || 12 ||

உத்தவா! என்னிடத்தில் மனதை செலுத்தி வேறெதிலும் நாட்டம் கொள்ளாமல் ஆத்மாவான என்னிடமே சுகத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவர் அடையும் பேரானந்தத்தை புலனுகர் போகங்களில் ஈடுபட்டுள்ளவன் எப்படி அனுபவிக்க முடியும்? எனவே நானேதான் அடையப்பட வேண்டிய இறுதி லட்சியம்.

அகிஞ்சனஸ்ய தா3ந்தஸ்ய ஶாந்தஸ்ய ஸமசேதஸ: |
மயா ஸந்துஷ்டமனஸ: ஸர்வா: ஸுக2மயா திஶ: || 13 ||

அகிஞ்சனஸ்ய – தன்னிடத்திலே ஒன்றுமில்லாதவன் மானசீகமாக தன்னிடத்திலிருக்கும் பொருட்கள் மீதுள்ள மமகாரத்தை விட்டுவிட்டவன்.
தா3ந்தஸ்ய – புலனடக்கத்துடன் இருப்பவன்
ஶாந்தஹ – மனக்கட்டுப்பாட்டை அடைந்தவன் ( பக்தி வளர வளர புலனடக்கம் அதிகமாகும், மனவடக்கமும் அதிகரிக்கும் ).
ஸம சேதஸ – சமநோக்கு உடையவனாகின்றான். சமபுத்தியை உடையவனாகின்றான்
மயா ஸந்துஷ்ட மனஸ: - என்னிடத்திலே மனதை நிலைநிறுத்தி நிறைவோடு இருப்பவன் எவனோ
ஸர்வா: ஸுக2மயா திஶ: - அவனுக்கு எல்லாதிசைகளும் சுகமாக இருக்கும்

ந பாரமேஷ்ட்யம் ந மஹேந்த்ரதி3ஷ்ண்யம்
        ந ஸார்வபௌ4மம் ந ரஸாதி4பத்யம் |
ந யோக3ஸித்3தீ4ரபுனர்ப4வம் வா
        மய்யர்பிதாத்மேச்ச2தி மத்3வினான்யத் || 14 ||

என்னிடத்திலே மனதைச் செலுத்தியிருப்பவன் பிரம்ம பதவியையோ, இந்திரனுடைய சொர்க்க லோகத்தையோ, எல்லா பூமண்டலங்களுக்கும் பேரரசனாக இருப்பதையோ, ரஸாதலம் என்கின்ற பாதாள லோகத்திற்கு தலைவனாக இருப்பதையோ, யோக ஸித்திகளையோ, மறுப்பிறவி வேண்டாம் என்ற ஆசைகளோ விரும்ப மாட்டான்.  என் பக்தன் என்னிடத்தில் மனதை அர்ப்பணித்தவனுக்கு இவைகளை விரும்ப மாட்டான், என்னைத் தவிர வேறெதையும் விரும்ப மாட்டான்.

ந ததா2 மே ப்ரியதம ஆத்மயோனிர்ன ஶங்கர: |
ந ச ஸங்கர்ஷணோ ந ஶ்ரீர்னைவாத்மா ச யதா2 ப4வான் || 15 ||

உத்தவா! உன்னிடம்(பக்தர்களிடம்) நான் எவ்வளவு அன்பு வைத்திருக்கின்றேனோ, அவ்வளவு அன்பு பிரம்மா, பரமேஸ்வரன், சங்கர்ஷணன், லட்சுமிதேவி ஏன் என்னிடத்திலும் வைக்கவில்லை.  பக்தனை பெருமைபடுத்த இவ்வாறு பகவான் கூறுகின்றார்.

நிரபேக்ஷம் முனிம் ஶாந்தம் நிர்வைரம் ஸமதர்ஶனம் |
அனுவ்ரஜாம்யஹம் நித்யம் பூயேயேத்யங்க்4ரி ரேணுபி4: || 16 ||

நிரபேக்ஷம் – என் பக்தன் எதையும் சார்ந்திருக்க மாட்டான், தன்னிடத்திலே மனநிறைவோடு இருப்பான்
முனிம் – ஆத்ம ஞானத்தையுடையவன்
ஶாந்தம் – உலக பற்றையொழிந்து மன அமைதியுடன் இருப்பவன், சஞ்சலமற்ற மனதை உடையவன்
நிர்வைரம் – பகையுணர்வு அற்றவன்
ஸமத3ர்ஶனம் – அனைவரையும், எல்லா ஜீவராசிகளையும் சமமாக பார்ப்பவன்; அனைத்தும் ஈஸ்வர ஸ்வரூபமே என்று எண்ணுபவன்
அனுவ்ரஜாம் அயம் நித்யம் – நான் எப்பொழுதும் அவர்களை தொடர்ந்து செல்வேன்
அங்க்4ரிரேணுபி4: பூயேயே - பக்தனுடைய பாத தூளிகளால் நான் புனிதப்படுகிறேன்

நிஷ்கிஞ்சனா மய்யனுரக்தசேதஸ:
        ஶாந்தா மஹாந்தோSகி2லஜீவ வத்ஸலா: |
காமைரனாலப்3த4தி4யோ ஜுஷந்தி தே
        யன்னைரபேக்க்ஷ்யம் ந விது3: ஸுக2ம் மம || 17 ||

நிஷ்கிஞ்சனா – தன்னிடத்தில் ஒன்றுமில்லாதவன்; தனக்கென்று எதுவுமில்லாதவன்
மயி அனுரக்த சேதஸ: - மனதினால் என்னிடத்தில் மட்டும் முழுமையான அன்பை, பக்தியை செலுத்தி கொண்டிருப்பவன்
ஶாந்தா: - மன அமைதியுடன் இருப்பவன்
மஹாந்தஹ – விரிவான மனதையுடையவன், தாராள மனதுடையவன்; விசால மனதை உடையவன்
அகி2ல ஜீவ வத்ஸலா: - எல்லா ஜீவராசிகளிடத்திலும் கருணையுடன் இருப்பவன்
காமை: அரனாலப்3த4தி4யோ – எந்த ஆசைகளாலும், போகம்தரும் பொருட்களாலும் மன சஞ்சலமடையாமலிருப்பான்; தாக்கப்படாமலிருப்பவன்
நைரைபேக்ஷ்யம் – எதையும் சார்ந்திராத அந்த பக்தன் 
மம ஸுக2ம் ஜுஷந்தி – என்னிடத்திலிருக்கும் ஆனந்தத்தை அடைகின்றான்
தத3 ந விது3: - மற்ற அபக்தர்கள் இதை அறிய மாட்டார்கள்

பா3த்4யமானோSபி மத்3ப4க்தோ விஷயைரஜிதேந்த்ரிய: |
ப்ராய: ப்ரக3ல்ப4யா ப4க்த்யா விஷயைர்னாபி4பூ4யதே || 18 ||

விஷயை பா3ந்த்4யமான: அபி – விஷயங்களால் தாக்கப்பட்டாலும் கூட, காமம், பொறாமை, கோபம் போன்ற உணர்ச்சிகளால் தாக்கப்பட்டாலும் கூட
மத்3 ப4க்தஹ – என்னுடைய பக்தன்
அஜிதேந்த்3ரிய: - புலன்களை அடக்கும் சக்தியில்லாதவனாக இருந்தாலும் கூட
ப்ராய: - என்னவாகுமென்றால்
ப்ரக3ல்ப4யா பக்தயா – தீவிரமான, உறுதியான பக்தியினால்
விஷயை: ந அபி பூயதே – அந்த விஷயங்களால் அழிந்துவிட மாட்டான்.

யதா2க்னி: ஸுஸம்ருத்3தார்சி: கரோத்யேதா4ம்ஸி ப4ஸ்மஸார் |
ததா2 மத்3விஷயா ப4க்திருத்3த4வைனாம்ஸி க்ருத்ஸ்னஶ: || 19 ||

ஆன்மீக முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் பிராரப்தத்தை நீக்கும் சக்தி பக்திக்கு உண்டு.
யதா2க்3னி ஸுஸம்ருத்3த4 அர்சி: - நன்கு கொழுந்துவிட்டு ஜுவாலையுடன் எரியும் அக்னியானது. விறகு கட்டைகளை சாம்பலாக்கி விடுவது போல, என்னையே இலக்காக கொண்ட பக்தியானது பிராரப்தத்தில் இருக்கும் பாவங்களை பொசுக்கி விடுகின்றது.

ந ஸாத4யதி மாம் யோகோ3 ந ஸாங்க்2யம் த4ர்ம உத்3த4வ |
ந ஸ்வாத்4யாயஸ்தபஸ்த்யாகோ யதா2 ப4க்திர்ம்மோர்ஜிதா || 20 ||

உத்தவா! யோகங்கள் விதவிதமாக செய்தாலும் என்னை அடைய முடியாது.  தத்துவ விசாரம் பக்தியில்லாமல் அறிவைக் கொடுக்காது, தர்மப்படி வாழ்ந்து கொண்டு இருந்தாலும், சாஸ்திரத்தை நன்கு படித்தாலும், அத்யயனம் செய்தாலும், வெவ்வேறு தவங்களை செய்தாலும், தியாகங்களை செய்தாலும், உறுதியான என் மீதுள்ள பக்தியைப் போன்று என்னை இவைகள் அடைய உதவாது. நம்மிடத்திலுள்ள பலவீனத்தை ஏற்றுக்கொண்டால்தான் அதை நீக்குவதற்கு முயற்சி செய்வோம்.

ப4க்த்யாஹமேகயா க்3ராஹ்ய: ஶ்ரத்3த4யாத்மா ப்ரிய: ஸதாம் |
ப4க்தி: புனாதி மன்னிஶ்டா2 ஶ்வபாகானபி ஸம்ப4வாத் || 21 ||

பக்தியின் லட்சணத்தையும், பெருமையையும் இதில் கூறியிருக்கிறார்.
ப3க்த்யா அஹம் ஏகயா க்3ராஹய: - பக்தியினால் மட்டுமே என்னை அடைய முடியும். என் மீது மட்டும் முழுமையானதும், பிளவுபடாததும், நம்பிக்கையோடு கூடியதாகவும் இருக்கின்ற பக்தியை செலுத்த வேண்டும்.
ஆத்மா ப்ரிய: ஸதாம் – நான் எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் ஆத்மாவாக இருக்கிறேன்.  ஸத் புருஷர்களுக்கும், சான்றோர்களுக்கும் பிரியமானவனாக இருக்கிறேன்.
மன்னிஷ்டா2 பக்தி: புனாதி – என்னிடத்தில் செலுத்தப்பட்ட பக்தியானது அவனை தூய்மைப்படுத்துகின்றது.
ஶ்வபாகான அபி  - சண்டாளனாக இருந்தாலும் கூட
ஸம்ப4வாத் – சம்சாரத்திலிருந்து காப்பாற்றிவிடும், புனிதமானவனாக மாறிவிடுகின்றான்.

த4ர்ம: ஸத்யத3யோபேதோ வித்3யா வா தபஸான்விதா |
மத்3ப4க்த்யாபேதமாத்மானம் ந ஸம்யக்ப்ரபுனாதி ஹி || 23 ||

சாஸ்திரம் விதித்த தர்மத்தை பின்பற்றினாலும், உண்மை பேசுபவனாக இருந்தாலும், அனைவரிடத்திலும் கருணையோடு இருந்தாலும், விதவிதமான உபாஸனைகள், சாஸ்திர அறிவு, தியானங்கள், தவத்துடன் கூடிய அறிவு இருந்தாலும்,என்மீது பக்தி இல்லையென்றால் அவைகள் நன்கு முழுமையாக ஒருவனை தூய்மை படுத்தாது

கத2ம் வினா ரோமஹர்ஷ த்ரவதா சேதஸா வினா |
வினானந்தாஶுகலயா ஶுத்4யேத்3ப4க்த்யா வினாஶய: || 23 ||

உணர்ச்சி பெருக்கினால் உடல் சிலிர்த்தல், புல்லரித்தல், மனம் உருகுதல், ஆனந்தக்கண்ணீர் பெருக்கு இவைகள் ஏற்படாத வரையில், பக்தி உடையவனாக இருந்தாலும் அவனுடைய மனம் எப்படி தூய்மையை அடையும்! பக்தியினால் இப்படிபட்ட உணர்வுகள் ஆரம்ப நிலையில் இருக்க வேண்டும். இவையில்லாத வரையில் மனம் தூய்மை அடையாது

வாக்3க3த்3கதா3 த்ரவதே யஸ்ய சித்தம் ருத3த்யபீ4க்ஷ்ணம் ஹஸதி க்வசிச்ச |
விலஜ்ஜ உத்3கா3யதி ந்ருத்யதே ச மத்3ப4க்தியுக்தோ பு4வனம் புனாதி || 24 ||

நிறைவான பக்தி ஏற்பட்டு விட்டவனுடைய சொல்லில் தடுமாற்றம் ஏற்படுகிறது. நா தழுதழுப்பு ஏற்படுகிறது.  மனம் நீராக உருகுகிறது.  சில சமயங்களில் அழுகிறான். சில நேரத்தில் சிரிக்கிறான்.  வெட்கத்தைவிட்டு உரத்தக் குரலில் பாடுகிறான், ஆடுகிறான். என்னிடத்தில் பக்தி கொண்ட பக்தன் உலகத்தையே புனிதப்படுத்துகிறான்.  தன்னுடைய சுற்றுப்புற சூழ்நிலைகளையும், சமுதாயத்தையும் புனிதப்படுத்துகிறான்.

யதாக்4னினா ஹேம மலம் ஜஹாதி த்4மாதம் புன: ஸ்வம் ப4ஜதே ச ரூபம் |
ஆத்மா ச கர்மானுஶயம் விதூ4ய மத்4ப4க்தியோகே3ன ப4ஜத்யதோ மாம் || 25 ||

நெருப்பினால் உருக்கப்பட்ட தங்கம் அழுக்கு நீங்கப்பெற்று தன் இயல்பான தன்மையை அடைகிறது. அதுபோல பக்தன் என்னிடம் பக்தி செலுத்துதல் சம்சாரம் என்கின்ற அசுத்தம் நீங்கப்பெற்று தன் இயல்பு வடிவான என்னை (பரமாத்வை) அடைகிறான்.

யதா2 யதா2த்மா பரிம்ருஜ்யதேSஸௌ மத்புண்யகா3தா2ஶ்ரவணாபி4தா4னை: |
ததா2 ததா2 பஶ்யதி வஸ்து ஸூக்ஷ்மம் சக்ஷுர்யதை2வாஞ்ஜனஸம்ப்ரயுக்தம் || 26 ||

என்னைப் பற்றிய புனிதமான கதைகளை கேட்பதனாலும், சொல்வதனாலும் இந்த ஜீவாத்மா எந்த அளவுக்கு தூய்மை அடைகின்றானோ அந்த அளவு சூட்சுமமான உண்மைகளை புரிந்து கொள்கின்றான், பார்க்கின்றான், அறிகின்றான்.  எப்படி விசேஷமான சக்தி வாய்ந்த மையை கண்ணில் தீட்டிக் கொண்டால், மிக நுட்பமான பொருட்கள் கூடப் பார்வையில் தென்படுகின்றதோ அதுபோல பக்தியோகத்தினால் ஞானத்தை அடையும் சாதனங்களை அடைந்து அதன் மூலம் ஆத்மஞானத்தை அடையலாம். தகுதியில்லாமல் உபநிஷத் என்கின்ற பிரமாணத்தினால் ஒரு பயனும் அடைய முடியாது

விஷயாந்த்4யாயதஶ்சித்தம் விஷயேஷு விஷஜ்ஜதே |
மாமனுஸ்மரதஶ்சித்தம் மய்யேவ ப்ரவிலீயதே || 27 ||
விஷயான் – போகத்தை தரும் பொருட்களை

த்4யாயத: - மனமானது தொடர்ந்து நினைப்பதன் மூலமாக
விஷயேஷு விஷஜ்ஜதே – அந்தப் பொருட்களில் சிக்கிக் கொள்கிறது
பக்தியை வளர்த்துக் கொள்ள பகவானின் நாம சங்கீர்த்தனம், பகவத் சிந்தனையுடன் இருத்தல், பகவான் ஸ்தோத்திரத்தை சொல்லுதல் போன்ற சாதனங்களை பயன்படுத்திக் கொண்டு இருக்க வேண்டும்.  அதுபோல என்னையே சிந்தித்துக்கொண்டிருப்பவனுடைய மனம் என்னிடத்திலே லயமடைகிறது

தஸ்மாத3ஸத3பி4த்4யானம் யதா2 ஸ்வப்னமனோரத2ம் |
ஹித்வா மயி ஸமாத4த்ஸ்வ மனோ மத்3பா4வபா4விதம் || 28 ||

யதா2 ஸ்வப்ன மனோரதம் – கனவில் காணும் பொருட்கள், விழிப்பு நிலையில் கற்பனை செய்து கொண்டு அனுபவிக்கும் விஷயங்கள் எப்படி பொய்யாக இருக்கின்றதோ அதுபோல உலகப்பொருட்களை, விஷயங்களை பொய்யானது என்று புரிந்துணர்ந்து கொள்ள வேண்டும்.
ஹித்வா மயி ஸ்மாத4த்ஸ்வ – உன்னுடைய மனம் உலக விஷயங்களை சிந்திப்பதை விட்டுவிட்டு
மத்3பா4விதம் மனோ – என்னைப்பற்றியே சிந்தித்து கொண்டிருக்க வேண்டும். மனதை என்னிடத்திலே நிலைநிறுத்த வேண்டும்.
தஸ்மாத்3 - ஆகவே
அஸத்3 அபி4த்4யானம் – இருப்பது போல் தோன்றும் உலகத்தையே மீண்டும் மீண்டும் நாடி செல்லாதே!

ஸ்த்ரீணாம் ஸ்த்ரீஸங்கி3னாம் ஸங்கம் த்யக்த்வா தூரத ஆத்மவான் |
க்ஷேமே விவிக்த ஆஸீனஶ்சிந்தயேன்மாமதந்த்3ரித: || 29 ||

ஸ்த்ரீணாம் ஸ்த்ரீஸங்கி3னாம் – பெண்களையும், பெண்ணாசை கொண்டவர்களின்
ஸங்க3ம் த்யக்த்வா – உறவையும் முழுமையாக விட்டுவிட வேண்டும்
தூ4ரத ஆத்மவான் – தனித்திருக்க வேண்டும்.
க்ஷேமே விவிக்த ஆஸீன – தூய்மையான தனிமையான இடத்தில் அமர்ந்து
மாம் சிந்தயேத் – என்னையே தொடர்ந்து தியானித்துக் கொண்டிருக்க வேண்டும்
ஆதந்த்3ரித: - இந்த முயற்சியில் தோல்வியடைந்தாலும் இடைவிடாது முயற்சியை தொடர வேண்டும்

ந ததா2ஸ்ய ப4வேத்க்லேஶோ ப3ந்த4ஶ்சான்யப்ரஸங்க3த: |
யோஷித்ஸங்கா3த்3யதா2 பும்ஸோ யதா2 தத்ஸங்கி3ஸங்கத: || 30 ||

உறவுகளினால் வரும் அதிக அளவு மனத்துயரங்கள் வேறெதனிடமிருந்தும் வருவதில்லை  மனித உறவுகளால் அனுபவிக்கும் மனத்துயரங்களைப் போன்று மற்றவைகளிடத்தில் வைக்கும் பற்றினால் அனுபவிப்பதில்லை

ஶ்ரீஉத்3த4வ உவாச
யதா2 த்வாமரவிந்தாக்ஷ யாத்3ர்ஶம் வா யதா3த்மகம் |
த்4யாயேன்முமுக்ஷுரேதன்மே த்4யானம் த்வம் வக்துமர்ஹஸி || 31 ||

உத்தவர் கேட்கிறார்.
தியானம் செய்யும் முறையை எனக்கு கூறியருளுங்கள்.  எந்தெந்த வகையில் தியானம் செய்வதற்கு தயார் செய்து கொள்ள வேண்டும்.  தியானிக்கும் இறைவனை என்னென்ன வகையில் தியானிக்க வேண்டும்.  தியானத்திற்குரிய விஷயம் எதுவென்றும் கூற வேண்டும்.

ஶ்ரீப4கவானுவாச
ஸம ஸாஸன ஆஸீன: ஸமகாயோ யதா2ஸுக2ம் |
ஹஸ்தாவுத்ஸங்க3 ஆதா4ய ஸ்வனாஸாக்3ரக்ருதேக்ஷண: || 32 ||

ஶ்ரீபகவான் கூறுகிறார்.
சமமான ஆசனத்தில் அமர்ந்து, உடலை நேராக வைத்துக் கொண்டு, சௌக்கியமாக இருக்கும் நிலையில் அமர்ந்து கொண்டு, இரண்டு கைகளையும் கோர்த்துக் கொண்டு மடிமேல் வைத்துக் கொள்ள வேண்டும்.  கண்பார்வை மூக்குநுனியை பார்க்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும்.

ப்ராணஸ்ய ஶோத4யேன்மார்க3ம் பூரகும்ப4கரேசகை: |
விபர்யயேணாபி ஶனைரப்4யஸேன்னிர்ஜிதேந்த்3ரிய: || 33 ||

தியானத்தை செய்வதற்கு முன்பு எளிமையான பிராணாயாமம் செய்ய வேண்டும். இது ரஜோ குணத்தின் வேகத்தை குறைத்து, தமோ குணத்தினால் வரும் உறக்கத்தை தடுக்கும்.  பிராணன் சென்று வருகின்ற வழியை (நாடியை) சுத்தம் செய்ய வேண்டும்.  தடையின்றி சென்று வருவதற்கு இது உதவுகிறது. பூரகம், ரேசக, கும்பக என்கின்ற பிராணாயாமத்தை செய்ய வேண்டும்.  ரேசக, கும்பக, பூரகம் இவைகளை இந்த வரிசைப்படியே செய்ய வேண்டும்.  இதை மெதுவாகவும், தொடர்ந்தும் செய்து வர வேண்டும்.  தியானத்தை அதிக உணர்ச்சியுடன் இருக்கும் சமயத்தில் செய்யக் கூடாது. 
பூரகம் – மூச்சை உள்ளே இழுத்தல்,
கும்பகம் – இழுத்தக் காற்றை உள்ளேயே வைத்திருத்தல்
ரேசகம் – மூச்சுக் காற்றை வெளியே விடுதல்.
இவை மூன்றும் ஒரு குறிப்பிட்ட விகிதாசாரத்தில் இருக்க வேண்டும்.  தகுந்த ஆசிரியரின் உதவியுடன்தான் இதை செய்ய வேண்டும்.

ஹ்ருத்3யவிச்சி2னமோங்காரம் க4ண்டானாதம் பி3ஸோர்ணவத் |
ப்ராணேனோதீ3ர்ய தத்ராத புன: ஸம்வேஶயேத்ஸ்வரம் || 34 ||

தியானத்தின் போது மற்ற எண்ணங்களால் தாக்கப்படாமல் இருப்பதற்கு ஓங்கார சப்தத்தை எழுப்பிக் கொண்டு இருக்க வேண்டும்.  பிறகு தியானத்தை ஆரம்பிக்க வேண்டும்.  இது தீர்க ப்ரணவ உச்சாடனம் என்று கூறுவர்

இதயத்தில் இருக்கும் ஆகாசத்திலுள்ள பிளவுபடாத ஓங்காரத்தை, எங்கும் இருக்கின்ற ஓங்காரத்தை பெரிய கோயில் மணியில் ஒலியை போன்று மெதுவாக முடிய வேண்டும். தாமரைத்தண்டைப்போன்று நீளமாகவும், ஆழமாகவும் இருக்க வேண்டும். பிராண சக்தி மூலம் இந்த சப்தத்தை ஒலிக்க செய்ய வேண்டும். மகார ஒலியில் அந்த ஓங்காரத்தை சிறிது நேரம் நிலை நிறுத்த வேண்டும்.

ஏவம் ப்ரணவஸம்யுக்தம் ப்ராணமேவ ஸமப்4யஸேத் |
த3ஶக்ருத்வஸ்த்ரிஷவணம் மாஸாத3ர்வாக்3ஜிதானில: || 35 ||

ப்ரணவத்துடன் கூடிய பிராணாயாமத்தை அப்யாஸம் செய்ய வேண்டும்.  நாள்தோறும் மூன்று வேளை வீதம் பத்து தடவைகள் பயிற்சி செய்தால் ஒரு மாதத்திற்குள்ளகவே புலன்களை வென்று விடலாம்

ஹ்ருத்புண்டரீகமந்த:ஸ்த2மூர்த்4வனாலமதோ4முக2ம் |
த்4யாத்வோர்த்4வமுக2முன்னித்ரமஷ்டபத்ரம் ஸகர்ணிகம் || 36 ||

மாயையுடன் கூடிய ஈஸ்வரனுக்கு காரண ஈஸ்வரன் என்று பெயர். உலகத்தில் வெளிப்பட்டுள்ள அனைத்திலும் இருக்கும் ஈஸ்வரன் காரிய ஈஸ்வரன். ஆரம்பத்தில் இஷ்ட தேவதை வழிபாடாக இருக்கும்.  அந்த இஷ்ட தேவதை இவ்வாறு இருப்பார், இந்த அலங்காரத்துடன் இருப்பார் என்று தியானித்தல். நமக்குள் இருக்கின்ற தாமரைப் போன்ற இதயத்திற்குள் பகவான் வீற்றிருக்கின்றார். தாமரைத்தண்டு மேல் நோக்கியும், மலர் கீழ்நோக்கி இருப்பதாகவும், மலர்ந்திருப்பதாகவும், அதன் எட்டுவிதமான இலைகளுடன் கூடிய இதழ்கள் விரிந்து இருப்பது போன்றதாகவும், நடுவில் ஒரு காய் இருப்பதாகவும் பாவித்து தியானம் செய்ய வேண்டும்.

கர்ணிகாயாம் ந்யஸேத்ஸூர்ய ஸோமாக்3னீனுத்தரோத்தரம் |
வஹினமத்4யே ஸ்மரேத்ரூபம் மமைத த்3த்4யானமங்க3லம் || 37 ||

அந்தக் காயில் சூரிய, சந்திர, அக்னி தேவதைகள் ஒருவர் மீது ஒருவராக இருப்பதாக கருத வேண்டும்.  அக்னியின் நடுவில் தியான மங்களமான என்னுடைய விஷ்ணு ரூபத்தை தியானிக்க வேண்டும்.

ஸ்மம் ப்ரஶாந்தம் ஸுமுக2ம் தீ3ர்க3சாருத்துர்பு4ஜம் |
ஸுசாருஸுந்த்ரக்ரீவம் ஸுகபோலம் ஸுசிஸ்த்மிதம் || 38 ||

எல்லா அவயவங்களும் உரிய அளவுப்படி சரியாக அமைந்திருப்பதாகவும், அமைதியாக இருப்பதாகவும், அழகான முகம், நீண்ட அழகிய நான்கு கைகள், பேரழகு பொருந்திய கழுத்து, அழகான கன்னங்கள், மனங்கவர் புன்னகையுடன் இருப்பதாக தியானிக்க வேண்டும்.

ஸமானகர்ணவின்யஸ்த ஸ்குரன்மகரகுண்டலம் |
ஹேமாம்ப3ரம் க4னஶ்யாமம் ஶ்ரீவத்ஸ ஶ்ரீநிகேதனம் || 39 ||

அளவாக அமைந்தை இரு காதுகளிலும் மின்னலடிக்கும் மகர குண்டலங்கள், பட்டாடையும், தங்கநிற ஆடையும், கார்கால மேகத்தைப் போன்ற வர்ணத்துடன் உடையவராகவும், மார்பில் ஶ்ரீவத்ஸம் என்கின்ற அடையாளமும், ஶ்ரீதேவியுடன் இருப்பிடமாகவும், இருப்பதாக காட்சி அளித்துக் கொண்டிருப்பதாக தியானிக்க வேண்டும்.

ஶங்க2சக்ரக3தா3பத்3ம வனமாலாவிபூஷிதம் |
னூபுரைர்விலஸத்பாத3ம் கௌஸ்துப3ப்ரப4யா யுதம் || 40 ||

சங்கு, சக்ர, கதாயுதம், தாமரை மலர், வனமாலைகள் இவைகளால் அலங்கரிக்கப்பட்டு இருப்பவராகவும், பாதங்களில் அழகான சதங்கைகள், கௌஸ்துப மணி கழுத்திலே அலங்கரித்துக் கொண்டிருப்பவராகவும் தியானிக்க வேண்டும்,

த்3யுமாத்கிரிடகடக கடிஸூத்ராங்க3தா3யுதம் |
ஸர்வாங்க3ஸுந்தரம் ஹ்ருதயம் ப்ரஸாதஸுகே2க்ஷனம் || 41 ||

ஓளிவீசுகின்ற கிரீடம், கங்கணம், அரைஞான், தோள்வளைகள் இவைகளை அணிந்திருக்கும் காட்சியுடனும், எல்லா அங்கங்களும் அழகோ அழகு, மனதைக் கொள்ளைக் கொள்வதும் பேரருளைப் பெருக்குவதுமான திருப்பார்வை இவைகளுடன் கூடியவராக தியானிக்க வேண்டும்.

ஸுகுமாரமபி3த்4யாயேத்ஸர்வாங்கே3ஷு மனோ த3த4த் |
இந்த்3ரியாணீந்த்ரியார்தே3ப்4யோ மனஸாக்ருஷ்ய தன்மன: |
பு3த்3த்4யா ஸாரதி2னா தீ4ர: ப்ரணயேன்மயி ஸர்வத: || 42 ||

கண்களைக் கவரும் இளமைப் பருவம், இத்தகைய மனோகரமான வடிவத்துடன் ஒவ்வொரு அங்கத்திலும், மனதை செலுத்தி தியானிக்க வேண்டும்.  புலனுகர் பொருட்களிலிருந்து மனதின் துணைக் கொண்டு புலன்களை இழுத்து, பிறகு புத்தி என்ற சாரதியின் துணையுடன் மனதை என்மீது செலுத்த வேண்டும்.

த்த்ஸ்ர்வ்வ்யாபகம் சித்தமாக்ருஷ்யைகத்ர தா4ரயேத் |
நான்யானி சிந்தயேத்3ப4ய: ஸுஸ்மிதம் பா4வயேன்முக2ம் || 43 ||

இதுவரை கூறிய முழுவடிவ தியானம் கைக்கூடியபின் அந்த மனதை இழுத்து ஓரிடத்தில் நிலைநிறுத்தி வேறு அங்கங்களை சிந்திக்காமல், புன்னகையுடன் கூடிய என் முகத்தை மட்டும் தியானிக்க வேண்டும்.

தத்ர லப்3த3பத3ம் சித்தமாக்ருஷ்ய வ்யோம்னி தா4ரயேத் |
தச்ச த்யக்த்வா மதா3ரோஹோ ந கிஞ்சித3பி சிந்தயேத் || 44 ||

ஒரு அங்கத்தில் மனம் நிலைபெற்றதும், அந்த மனதை எடுத்து காரண ஈஸ்வரனிடத்தில் செலுத்த வேண்டும். காரண ஈஸ்வரன் என்பது நாம-ரூபங்களை நீக்கியதாக இருக்கும்.  ஈஸ்வரனின் லட்சணங்களை தியானிக்க வேண்டும்.  இதில் நிலைத்த பின்னர் அதனையும் விட்டு விட்டு என்னுடைய நிர்குண ஸ்வரூபத்தின் மேல் நிலைநிறுத்தி வேறு எதைப் பற்றியும் சிந்திக்காதிருக்க வேண்டும்.  பிரம்மத்தைப் பற்றிய ஞானத்தை தியானிக்க வேண்டும்.

ஏவம் ஸமாஹிதமதிர்மாமேவாத்மானமாத்மனி |
விசஷ்டே மயி ஸர்வாத்மன்ஜயோதிர்ஜ்யோதிஷி ஸம்யுதம் || 45 ||

இவ்விதம் மனம் ஒன்றிப் போனவுடன் நிர்குணமாக இருக்கின்ற என்னை தன்னிடத்தில் பார்க்கிறான். என்னிடத்திலே அவனைப் பார்க்கின்றான். எவ்வாறு ஒரு ஓளியை இன்னொரு ஓளியுடன் சேர்க்கும்போது இரண்டும் ஒன்றிப் போய்விடுகிறதோ அதுபோல இந்த ஐக்கியம் இருக்கிறது.  ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்றிப் போய்விடுகின்றன.

த்4யானேனேத்த2ம் ஸுதீவ்ரேண யுஞ்ஜதோ யோகினோ மன: |
ஸ்ம்யாஸ்யத்யாஶு நிர்வாணம் த்ரவ்ய ஞானாக்ரியாப்4ரம: || 46 ||

இவ்விதமான தீவிரமான தியானயோகத்தில் என்னிடம் மனதை பிணைத்துக் கொள்ளும் யோகிக்கு, உடனடியாக மனம் நிர்வாணம் அடைகிறது.  அனைத்தையும் தூக்கியெறிந்து விடுகிறான்.  உலகத்திலுள்ள பொருட்களை, செயல்களை, ஞானமாக இந்த த்வைதத்தின் மீதுள்ள மோகம் நீங்கி விடுகின்றது. அப்போதே அவனுக்கு மோட்சம் கிடைத்து விடுகிறது.

தொகுப்புரை
01-02   உத்தவரின் கேள்வியானது சாஸ்திரங்களில் கூறப்பட்ட எல்லா சாதனங்களையும் கடைபிடிக்க வேண்டுமா அல்லது ஏதாவது ஒன்றை மட்டும் கடைபிடித்தால் போதுமா என்பதுதான்.
03-06   சம்பிரதாயப்படி வேதங்களின் மூலமாக என்னை அடைய வேண்டும்
07-10   வேதத்தை அவரவர்கள் தங்கள் அறிவுக்கேற்ப பலவிதமாக அர்த்தம் கூறியிருக்கிறார்கள் என்று பகவான் கூறுகிறார்
11        இவ்வாறு சாஸ்திரம் உரைக்கு இலட்சியத்தை தவிர மற்றவைகள் அனைத்தும் நிலையற்றவை, துயரத்தைக் கொடுக்க கூடியவை என்று கூறுயிருக்கிறார்
12-20   பக்தியை பற்றி விரிவாக பகவான் விளக்கியிருக்கிறார்.
·       இறைவன் மீது சிரத்தையோடு கூடிய பக்தியில்லாமல் செய்யும் அனைத்து நற்காரியங்கள் புண்ணியத்தை தரலாம் ஆனால் மனத்தூய்மையை தராது
·       சம, தமாதிகளோடு கூடிய பக்தனாக இருக்க வேண்டும்
·       பக்தி என்ற உணர்வு வைராக்கியத்திலும், முமுக்ஷுத்துவத்திற்கும் காரணமாக இருக்கின்றது
·       பக்தனைப் பற்றி பெருமையுடன் பேசுகிறார்
·       பக்தனுக்கு எவ்வளவு பலவீனங்கள் இருந்தாலும், புலனடக்கமில்லாமல் இருந்தாலும் அவைகளினால் அழிந்து விட மாட்டான். பிராரப்த த்தினால் தடைகள் வந்தாலும் அவைகளையும் நீக்கிவிடும்.
·       பக்தியின் ஆரம்பநிலையில் வெட்கத்தைவிட்டு பகவானின் பெருமைகளை பாடுதல், தன்னை மறந்து ஆடுதல், அவர் கதைகளை கேட்கும்போது மனம் உருகுதல், கண்ணீர் பெருக்குதல், மயிர்கூச்செறிதல் இவைகளெல்லாம் வெளிப்படும்
·       பக்தியானது சூட்சுமமான அறிவை கொடுக்கும், குருவையும், சாஸ்திரத்தையும் காட்டிக் கொடுக்கும்
·       பக்தியை வளர்த்துக் கொள்ளும் உபாயத்தையும் இதில் கூறியிருக்கிறார்.  என்னைப்பற்றிய சிந்தனையோடு எப்பொழுதும் இருக்க வேண்டும். தியானத்தின் மூலமாக இந்த இறை சிந்தனையை வளர்த்துக் கொள்ளலாம்.
31        உத்தவர் தியானம் செய்யும் முறையையும், எப்படி ஒருவன் தன்னை தயார் செய்து கொள்ள வேண்டும், எதை தியானிப்பது? எப்படி தியானிப்பது போன்ற கேள்விகளுக்கு விடையளிக்குமாறு பகவானிடம் வேண்டினார்
31-44 பகவானின் விரிவான் பதில் இந்த ஸ்லோகங்களில் இருக்கின்றது.

ஓம் தத் ஸத் 

மூதுரை

மூதுரை கடவுள் வாழ்த்து வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள் நோக்கு உண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையா...