Showing posts with label பஞ்சதசி-03. Show all posts
Showing posts with label பஞ்சதசி-03. Show all posts

Saturday, July 20, 2019

Pancadasi Chapter-3-Rev-01

பஞ்சதசி
அத்தியாயம்-3
பஞ்சகோச விவேகம்
முகவுரை
பிரம்மத்தின் ஆனந்த ஸ்வரூபத்தை புரிந்து கொள்வதற்காக இந்த அத்தியாயத்தில் பஞ்சகோச விவேகத்தின் மூலம் விரிவாக விளக்கப்படுகிறது. தைத்திரி உபநிஷத்தில் கூறப்பட்டு உள்ள ஒரு வாக்கியத்தை எடுத்துக் கொண்டு விசாரம் செய்து நிரூபித்துள்ளார். மேலும் இதில் சொல்லப் போகின்ற விஷயம் என்ன என்பதையும், அதன் பலனையும் கூறுகிறார்.
 
பிரம்மத்தை அறிந்தவன் அதை அடைகிறான்.
பிரம்மத்தின் லட்சணம் - சத்யம், அனந்தம், ஞானம்.
இந்த பிரம்மமானது ஜீவனுடைய இதயத்தின் குகைக்குள் இருப்பதாக அறிய வேண்டும். (யோ வேத3 நிஹிதம் கு3ஹாயாம்).
பிரம்ம ஞானத்தின் பலன்: துயரங்களிலிருந்து விடுபட்டு முழுமனநிறைவை அடைதல்
 
எந்தவொரு பிரம்மன் பஞ்சகோசங்களுக்குப் பின் மறைந்து இருக்கின்றதோ அந்த பிரம்மத்தை பஞ்சகோசத்தை விசாரம் செய்து நீக்குவதன் முலம் புரிந்து கொள்ள முடியும். இனி அந்த ஐந்து கோசங்களையும் விசாரம் செய்வோம். அன்னமய கோசத்தினுடைய ஸ்வரூபம் காரியம். பிராணமயம், மனோமயம் ஆகியவைகள் காரணம் என்று சொல்லப்படுகிறது. விக்ஞானமயம் என்பது கர்த்தா, செயல் செய்பவன் என்றும், ஆனந்தமயம் என்பது போக்தா, அனுபவிப்பவன் என்றும் கூறப்படுகிறது. தேகம், இந்திரியங்களை உடைய அன்னமய கோசத்திற்குள்ளே இருப்பது பிராணமய கோசம். பிராணமயத்திற்குள்ளே இருப்பது மனோமயம். இதற்குள்ளே விக்ஞானமயமும், அதற்குள்ளே ஆனந்தமய கோசமும் உள்ளது. இவைகளைத்தான் குகைகள் என்று கூறப்படுகிறது. இங்கு சொல்லப்பட்ட வரிசைக்கிரமப்படி இருக்கிறது.
 
தந்தை உட்கொண்ட உணவினால் ஏற்பட்ட வீர்யத்திலிருந்து பிறந்தது தேகம். அது அன்னத்தினாலேயேதான் வளர்கிறது. அதுதான் அன்னமயமாகும். இது ஆத்மாவல்ல. நான் என்ற சொல் குறிப்பது இந்த தேகமல்ல என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்த உடல் தோன்றுவதற்கு முன்பும், இறந்த பிறகும் அது இருப்பதில்லை. எனவே இதனுடைய நிலையற்ற தன்மையால் ஆத்மாவாகாது.
 
யாரொருவர் செயல் செய்கிறாரோ அதன் பலனை அவரேதான் அனுபவிப்பார் என்பது நியதி மாறாமல் இருக்கிறது. கர்த்தாவாக இருப்பவர் போக்தாவாக இல்லை என்றால் க்ருதநாசம் என்கின்ற தோஷம் வந்துவிடும். அதனால் செய்ததெல்லாம் வீணாகிவிடும் என்கின்ற நிலைவந்து விடும். கர்த்தாவாக இல்லாமல் போக்தாவாக மட்டும் இருந்தால் அக்ருத அப்யாஸம் என்ற தோஷம் வந்துவிடும். செய்யாத செயலின் பலனை அனுபவிக்கும் குறை வந்துவிடுகிறது.
 
இந்த ஸ்தூல சரீரம் ஆத்மா என்று வைத்துக்கொண்டால் முற்பிறவியில் இந்த உடல் இல்லை. எனவே இந்த பிறவி சரீரம் செய்யாத கர்மத்தின் பலனை அனுபவிப்பதாகிவிடும். இது இயற்கை நியதிக்கு விரோதமானது. இந்த பிறவியின் உடல் கர்மங்களை செய்து அழிந்த பின்னர் அடுத்த ஜன்மத்தின் உடலானது இதன் பலனை அனுபவிப்பதில்லை. இதுவும் இயற்கை நியதிக்கு விரோதமானதான் இருக்கிறது. முற்பிறவியில் இல்லாத ஸ்தூல உடல் இந்தப் பிறவியில் உள்ள உடலை எப்படி உருவாக்க முடியும். அப்படி உருவாக்கினால் முற்பிறவியில் இருந்த உடல் செய்த கர்மபலன்களை இந்தப் பிறவியில் உள்ள உடல் அனுபவிப்பது போலல்லவா இருக்கும். இருபிறவிகளிலும் உள்ள உடல்கள் வெவ்வேறு. அடுத்த ஜன்மத்தில் இல்லாமல் போகும். உடல் கர்மபலன்களை அனுபவிக்காமல் போய்விடும். இந்தப் பிறவியில் இருக்கும் உடலால் செய்யப்பட்ட கர்மங்களின் பலன்களை அனுபவிக்க இதே உடல் அடுத்த பிறவியில் இருக்காத நிறை ஏற்பட்டுவிடும். இதிலிருந்து ஸ்தூல உடல் நிலையற்றதாக இருப்பதால் அது ஆத்மாவாக கருத முடியாது.
 
இந்த வாயுவானது சரீரத்தில் முழுவதும் வியாபித்திருக்கிறது. உடலுக்கு சக்தியையம் கொடுத்துக் கொண்டு (உடலிலுள்ள உறுப்புக்களுக்கு தேவையான சக்தியை பிரித்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.). இந்திரியங்கள் செயல்பட காரணமாக இருக்கின்ற பிராணமயமானது ஆத்மாவாகிய நான் அல்ல. இது உணர்வுபூர்வமானதல்ல, ஜடமானதாகவும் இருக்கிறது.
 
மனமானது அலைபாயும் எண்ணங்கள், உணர்ச்சிமயமாகவும் ஆசைப்படுவது போன்ற எண்ணங்களின் தொகுதியாக இருக்கின்றது. இதுவே மனோமய கோசம் எனப்படுகிறது. விக்ஞானமய கோசம் அறிவுபூர்வமாக சிந்தித்து முடிவெடுக்கும் திறனுடையது. இதுதான் என்று தீர்மானம் செய்வது, புரிந்து கொள்ளும் திறனுடையது.
 
சூட்சும சரீரம் என்பது இந்திரியங்களின் சக்தி, மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகியவைகளின் சேர்க்கையாகும். அந்தக்கரணம் என்பது மனம், புத்தி, சித்தம், அகங்காரம், ஆகியவைகளின் சேர்க்கையாகும். இதிலிருந்துதான் எண்ணங்கள் வெளிப்பட்டு கொண்டிருக்கின்றன. இதையே விருத்தி என்கின்றோம். எண்ணங்கள் நான்காக பிரிக்கப்படுகின்றது..  எப்படி கடல் அலைகளுடன் கூடியதாக இருக்கிறதோ அதுபோல அந்தக்கரணம் எண்ணங்களுடன் கூடியதாக இருக்கிறது. சித்தரூபமான, உணர்வுரூபமான எண்ணங்கள் மனோமய கோசமாகவும், அகங்காரத்தையும், புத்தியையும் விக்ஞானமய கோசமாகவும் பொதுவாக அறியப்படுகிறது.
 
ஆனால் வித்யாரன்யர் இதில் நான்கு எண்ணங்களையும் மனோமய கோசமாகவும், அவைகளுக்கு ஆதாரமாக இருக்கும் அந்தக்கரணம் விக்ஞானமய கோசமாகவும் கூறியிருக்கிறார். தீபமானது வெளியே உள்ள பொருட்களை காட்டிக் கொடுக்கிறது அந்தக்கரணத்திலுள்ள விருத்திகள் வெளியே உள்ள பொருட்களை காட்டிக் கொடுக்கிறது. தீபத்தை வைத்திருப்பவன் தன்னை பிறர் பார்க்க வேண்டுமென்றால் அதை தன்னை நோக்கி திருப்பினாலே போதும். அதுபோல அந்தக்கரணத்திலிருந்து தோன்றிய அகங்காரமானது அதையையே காட்டிக் கொடுக்கிறது. இதையே விக்ஞானமய கோசம் என்று வித்யாரண்யர் கூறுகிறார்.
 
சரீரத்தில் நான் என்ற எண்ணமானது வீடு, நிலம் போன்றவற்றில் என்னுடையது என்ற எண்ணமானது ஆசை போன்ற எண்ணங்களினால் மயக்கம் அடைகிறது. இதிலிருந்து எல்லா எண்ணங்களும் மனோமய கோசம் எனப்படுகிறது. இந்த மனோமய கோசம் ஆத்மாவல்ல. மனோமய கோசம் மாற்றங்களை உடையதாக இருப்பதால் இது ஆத்மாவல்ல என்று உறுதி செய்து கொள்ள வேண்டும்.
 
சைதன்யத்தின் பிரதிபிம்பத்தோடு கூடியுள்ள அந்தக்கரணமானது விக்ஞானமய கோசம் என்ற பெயருடையது. இது ஆத்மாவல்ல ஏனென்றால்  இது இருக்கும் நிலையில் மாற்றமடைகிறது. ஆழ்ந்த உறக்கத்தில் அந்தக்கரணம் காரண சரீரத்தில் லயமடைகிறது. விழித்துக் கொண்ட போது விரல் நகத்தின் நுனிவரை உடலை மீண்டும் வியாபித்துக் கொள்கிறது.
 
மனோமயத்தில் எழுகின்ற எல்லா எண்ணங்களும் வருகின்ற மாற்றங்களுக்கு காரணமாக இருக்கிறது. இந்திரியங்களின வழியே வெளியிலுள்ள விஷயங்களை அறிய உதவுவதால் இது காரணமாக கூறப்படுகிறது. மனதில் தோன்றுகின்ற எல்லா எண்ணங்களுக்கும் ஆதாரமாக இருப்பது, கர்த்தாவாக இருப்பது விக்ஞானமய கோசமாகும்அந்தக்கரணம் இந்த இரண்டுமாகவே இருக்கிறது. விக்ஞானமயம் கர்த்தாவாகவும், மனோமயம் கரணமாகவும் இருக்கின்றன. கர்த்தாவாக இருப்பது உள்ளே, கரணமாக இருப்பது வெளியே மாற்றமடைகிறது.
 
பொதுவாக ஆழ்ந்த உறக்கத்தில்தான் ஆனந்தமய கோசத்தில இருக்கிறோம் என்று புரிந்து கொண்டிருக்கின்றோம்ஆனால் விழிப்பு நிலையிலும் எப்படி ஆனந்தமய கோசத்தில் இருக்கிறோம் என்பதையும் இதில் கூறியிருக்கிறார். நம்மிடத்தே எழுகின்ற எண்ணங்கள் பலவகையாக இருக்கின்றன. புண்ணிய பலன் நமக்கு சுகத்தை கொடுக்கும் சூழ்நிலைகளையும், விஷயங்களையும், பொருட்களையும் ஏற்படுத்திக் கொடுக்கும். அவைகளை பார்க்கும் போது அந்த நேரத்தில் எழுகின்ற எண்ணங்கள் போக விருத்தியென்று கூறப்படுகிறது. இது மிக நுட்பமானது, உள்ளேயும் இருக்கிறது. இந்த சூட்சும எண்ணங்களானது ஆத்மாவை பிரதிபிம்பிக்கும் போது ஜீவன் ஆனந்தத்தை அனுபவிக்கின்றான். இதையே ஆனந்தாபாஸம் என்று அழைக்கப்படுகிறது.
 
ஆத்மாவின் ஆனந்த ஸ்வரூபம் எப்பொழுதும் நம்முள்ளே இருக்கும் போது ஏன் ஆனந்தத்தை எல்லா காலத்திலும் அனுபவிக்க முடியவில்லை என்று கேட்டால் மிக சூட்சுமமான போக விருத்திக்குத்தான் ஆனந்த ஸ்வரூபத்தை பிரதிபிம்பிக்கும் சக்தி இருக்கிறது. போக விருத்தி எழும்போதுதான் மனம் தெளிந்து. அமைதியுடன்  சஞ்சலமற்று இருக்கிறது. எனவே ஆத்மா ஆனந்த ஸ்வரூபத்தை பிரதிபிம்பிக்கும் தன்மையுடன் இருப்பதால் ஆனந்தத்தை அனுபவிக்கின்றோம்.
 
புண்ணிய பலனை அனுபவிக்க வேண்டிய வேளையில் ஒருவிதமான உள்நோக்கி செல்கின்ற சூட்சுமமான எண்ணங்கள் ஆத்மாவின் ஆனந்தத்தை பிரதிபலிக்கும் தன்மை உடையதாக இருக்கிறது. எல்லா கர்மப்பலன்களும் அமைதியடையும்போது ஆழ்ந்த உறக்கத்தில் ஒடுங்குகின்றது. பிராரப்த பலன் ஓய்வாக இருக்கும்போதுதான் உறக்கம் வரும்.
 
நான் என்று குறிப்பிடுகின்ற ஆத்மா எல்லா காலத்திலும் இருப்பது. ஆனால் சுக போக்தாவாக இருக்கின்ற நான் நிலையற்றதாக இருக்கின்றது. அதாவது இந்த ஆனந்த நிலை எப்பொழுதாவதுதான் வருகின்றது. எப்பொழுதாவது வருகின்ற ஆனந்தமானது ஆத்மாவல்ல. இந்த ஆனந்தமய கோசமும் கூட அப்படித்தான. அந்தக்கரணத்தில் பிரதிபிம்பிக்கின்ற ஆனந்தம் எல்லா காலத்திலும் இருப்பதனால் அதுதான் ஆத்மாவாக இருக்கிறது.
 
கேள்வி: ஸ்தூல உடலில் ஆரம்பித்து ஆனந்தமய கோசம் வரையுள்ள ஐந்து கோசங்களில் ஆத்மத்வம் இருக்க வேண்டாம். இவைகளைத் தவிர,  நான் என்று சொல்வதற்கு வேறொன்று அனுபவிக்கப்படவில்லையே?
 
ஆனந்தமய கோசம் போன்ற அனைத்து கோசங்களும் அனுபவிக்கப்படுகிறது. இவைகளைத் தவிர அனுபவிக்கப்படுவதற்கு வேறெதுவும் கிடையாது. அப்படி இருந்த போதிலும் எதனால் இந்த கோசங்கள் அனுபவிக்கப்படுகிறதோ அதை யார் நீக்க முடியும்? அதுதான் நான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
 
ஆத்மா அனுபவிக்கக்கூடியது அல்ல என்றால் அதன் இல்லாமைதானே எடுத்துக் காட்டுகிறது. ஆத்மா அனுபவிக்க முடியாத வஸ்துவாக இருக்கிறது. உதாரணமாக நம் கண்ணானது மற்றவைகளை பார்க்கிறது. ஆனால் அதை நம்மால் பார்க்க முடியாது. அறிபவன் என்றைக்கும் அறியப்படும் பொருளாக இருக்க முடியாது. ஆத்மா தானாகவே ஒளிர்ந்து கொண்டு அறிவு ஸ்வரூபமாக இருப்பதால் அனுபவிக்கப்படுகின்ற தன்மை அதனிடம் கிடையாது. அறிபவனை அறிய வேறொரு அறிவு இல்லாததால் அவன் அறியப்படாதவனாக இருக்கிறான். அதேபோல ஆத்மாவும் அறியப்படாததாக இருக்கிறது. அஸத்தாக இருப்பதால் அனுபவிக்கப்படாததாக இருக்கிறது என்றும் சொல்லவில்லை.
 
இனிப்பை இயல்பாக கொண்டுள்ள சர்க்கரையானது மற்ற பொருட்களுக்கு தன்னுடைய குணமான இனிப்பு தன்மையை கொடுக்கின்றது. இயற்கையிலே இனிப்புள்ள பொருளுக்கு இனிப்பை சர்க்கரை போன்ற வேறு ஏதாவது ஒன்று கொடுக்க தேவையில்லை.
 
வேறொன்று இல்லாத போதும் அதன் இனிப்புத்தன்மை சுபாவமாகவே அப்படியேதான் இருக்கிறது. அதுபோல ஆத்மா அனுபவிக்கக்கூடிய தன்மையாக இருக்க வேண்டாம். அறிவு ஸ்வரூபமாக இருந்து கொண்டிருப்பதால் எந்த கெடுதலும், குறைவும் ஏற்படாது.
 
மற்றதால் அறியப்படாமல் தானாக விளங்கிக் கொண்டிருப்பது, அறிவு ஸ்வரூபமாக இருப்பது எல்லாவற்றிற்கும் முன்பே விளங்கிக் கொண்டிருக்கிறது. தானாக விளங்கிக் கொண்டிருக்கும் ஆத்மாவை சார்ந்து மற்றவைகள் எல்லாம் (ஜகத்) விளங்கிக் கொண்டிருக்கிறது.
 
எதனால் எல்லாவற்றையும் ஒருவன் அறிகின்றானோ அதை வேறொன்றினால் அறிய முடியாது. அறிபவனை யாராலும் அறிய முடியாது. அறிவைக் கொடுக்கும் கருவியால் (பிரமாணம்) அறியத்தகுந்த விஷயத்திற்குத்தான் பயன்படும். அறிபவனைக் காட்டிக் கொடுக்காது.
 
ஆத்மா அறியப்படும் பொருட்கள் எல்லாவற்றையும் அறிகின்றது. இதை அறியக் கூடியது வேறெதுவும் கிடையாது. அறியப்படாததாக இருக்கின்ற அனைத்திற்கும் வேறாக அறிவு ஸ்வரூபமாக ஆத்மா இருக்கின்றது.
 
யாருக்கு அறிபவனாக இருந்து கொண்டு அறிவை அடைந்து கொண்டிருக்கின்றேன். ஆனால் அறிவு ஸ்வரூபத்தை அறிபவனை உணர்ந்து கொள்ளவில்லையென்றால் அவர்களுக்கு சாஸ்திரம் எப்படி உதவ முடியும்? அறியும்படி செய்ய முடியும்? அவர்கள் மனித உருவில் இருக்கும் மண்கட்டியாக இருக்கிறார்கள்
 
எனக்கு நாக்கு இருக்கின்றதா? இல்லையா என்று கேட்பது வெட்கத்துக்கு ரியது. அதுபோல அறிவு என்னால் அறியப்படவில்லை. இனிமேல் என்னால் அறியப்பட வேண்டும் என்று சொல்வது இருக்கிறது.
 
நம்முடைய அனுபவத்தில் எந்தெந்த விஷயங்களில் அறிவை அடைகின்றோமோ அந்தந்த விஷயங்களை விட்டுவிட்டு எது அறிவாக மட்டும் இருக்கிறதோ அதுதான் பிரம்மம் ஆகும். இப்படிப்பட்ட அறிவுதான் பிரம்மத்தை தீர்மானமாக அறிவதாகும் என்ற புரிந்து கொள்ள வேண்டும்.
 
ஐந்து கோசங்களை விலக்கும் போது, இவைகளில் நான் என்கின்ற புத்தியை நீக்கும் போது சாட்சியாக இருக்கின்ற அறிவு மட்டும் மிஞ்சியிருக்கும். இதுவே ஒருவனுடைய உண்மையான ஸ்வரூபமாகின்றதுஅதனை சூன்யம் என்று சொல்வது சரியில்லை.
 
நான் என்ற ஒன்று இருக்கவேயிருக்கிறது. இது விவகாரத்திற்கு விஷயமாக இல்லாததனால், நான் என்ற விஷயத்தை மேற்கொண்டால் அங்கே பிரதிவாதியாக யார் இருப்பார்கள்?
 
பிராந்தி, புத்தி குழப்பம் இல்லாத வரைக்கும் தன்னுடைய இல்லாமையை யாரும் விரும்பமாட்டார்கள். அதனால்தான் வேதமானது இவ்வாறு கூறுகிறது.
 
பிரம்மம் இல்லாதது என்று அறிவானேயானால் தானும் கூட இல்லாதவனாகி விடுவான். நானே பிரம்மன் என்று இருக்கும் போது பிரம்மம் இல்லையென்று மறுத்தால் தன்னையே மறுத்தவனாகிறான். ஆகவே இந்த ஆத்மா அறியப்படும் தன்மை உடையதாக இருக்க வேண்டியதில்லை. அதே சமயத்தில் இருக்கின்றது என்றும் புரிந்து கொள்ள வேண்டும,. ஏற்றுக்கொள்ள வேண்டும்.
 
ஆத்மா எப்படிபட்டது என்று சீடன் கேட்டால் இதைப்போல, இப்படிபட்ட தன்மை உடையது என்று சொல்ல முடியாது. எது இப்படிபட்டதல்லாததாகவும் இருக்கின்றதோ அது அப்படிபட்டதல்லததாகவும் இருக்கின்றது. அதுதான் உன்னுடைய ஸ்வரூபமாக, ஆத்மாவின் ஸ்வரூபமாக புரிந்து கொள்வாயாக.
 
ஞானேந்திரியங்களுக்கு விஷயமாக இருப்பது எதுவோ அதுவே இப்படிபட்டது என்று கூறப்படுகிறது. பிரத்யக்ஷ பிரமாணத்தினால் அனுபவிக்கப்படும் விஷயங்கள் இந்திரியங்களுக்கு நேரிடையாக வராததெல்லாம் அப்படிபட்டது என்று சொல்லப்படுகிறது. ஆத்மாவானது ப்ரத்யக்ஷமாகவும், பரோக்ஷமாகவும் அறியக்கூடியதல்லவிஷயங்களை சாட்சியாக பார்த்துக்கொண்டிருக்கும் ஆத்மா இந்திரியங்களுக்கு விஷயமாக இருப்பதில்லை. ஆத்மா நான் என்பதன் ஸ்வரூபமாகவே இருப்பதால் பரோக்ஷமாக இல்லை என்று புரிந்து கொள்ளலாம். ஆத்மாவானது அறியப்படாததாகவும், பிரகாசித்துக் கொண்டும் இருக்கிறது. அது தானே பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. தைத்திரி உபநிஷத்தில் பிரம்மத்தின் லட்சணமாக சத்யம், ஞானம், அனந்தம் ஆகியவைகள் சொல்லப்பட்டு  இருக்கிறது.
 
எது நீக்க முடியாததாக இருக்கிறதோ அதுவே சத்யம். பா3தா4 என்றால் என்ன?
ஒன்று இல்லையென்று சொல்லும்போது அது இல்லாததாகவே இருக்கும். எனவே இல்லாததை நீக்கவே முடியாது, நீக்க வேண்டிய அவசியமும் இல்லை. இருப்பது போல் தெரிந்து கொண்டிருப்பதைத்தான் நீக்கலாம். எது தோன்றிக் கொண்ட இருக்கின்றதோ ஆனால் அனுபவிக்க முடியாத நிலையில் இருக்கிறதோ அதைத்தான் நீக்க முடியும். எவையெல்லாம் நீக்கப்படுகின்றதோ அவைகள் எல்லாம் மித்யா என்று புரிந்து கொள்ளலாம். நீக்கம் செய்கின்ற செயலுக்கு நீக்குபவன் தேவை. பா3தா4 என்ற ஒன்று நடக்க அறிபவன் ஒருவன் இருக்க வேண்டும். இவையிரண்டும் இருந்தால்தான் நீக்குதல் என்ற செயலை செய்ய முடியும்நீக்குபவன் எல்லாவற்றையும் நீக்கிக் கொண்டு வரும்போது அனைத்தும் நீங்கிய பிறகு எஞ்சியிருப்பவன் நீக்குபவன் மட்டும்தான், இவனை நீக்க வேண்டுமானால் இரண்டு நிபந்தனையை பயன்படுத்தி சோதிக்க வேண்டும். அறிபவன் மித்யாவாக இருக்க வேண்டும். இவனை நீக்குவதற்கு வேறொருவன் இருக்க வேண்டும். இவையிரண்டும் இல்லாததால் இவனை நீக்க முடியாது.  நீக்குதல் என்ற செயல் ஒருவன் இல்லாமல் அதுவாகவே நீங்கிக் கொள்ளட்டுமே என்றால் அதுவும் சாத்தியமில்லை. சத்யம் என்பது என்னவென்றால் நீக்கப்பட முடியாததாக இருப்பது. அனைத்தையும் நீக்குகின்றதும், ஒன்றாக இருப்பதும். சாட்சியாக இருக்கின்றதுமான ஒன்றை நீக்கப்படுகிறது என்றால், அவனை நீக்குபவன் யார் என்று கூறமுடியாது. சாட்சியானது இல்லாததை நீக்குவதை  ஏற்றுக்கொள்ள முடியாது. இல்லாமை கிடையாததினால் அவை சத்யம் என்று கூறுகிறார்கள்.
 
மூர்த்தங்களையெல்லாம் நீக்கிய பிறகு அமூர்த்தமான ஆகாசம் மட்டும் எஞ்சி இருக்கிறது. நம்மால் நீக்க முடிந்ததையெல்லாம் நீக்கிய பிறகு இறுதியில் எது எஞ்சியிருக்கிறதோ அதுவேதான் பிரம்மன்.
 
இவ்விஷயத்தில் வார்த்தைகள்தான் வேறுபடுகின்றன. அனைத்தையும் நீக்கிவிட்ட பிறகு ஒன்றுமில்லையே என்று கேட்டால் எது ஒன்றுமில்லை என்று சொன்னாயோ அதுதான் பிரம்மம். நீக்கப்படாததாக ஏதோ ஒன்று இருக்கின்றதல்லவா! அதனால்தான் இது அல்ல, இது அல்ல என்று நீக்கமுடிவதையெல்லாம் நீக்கிவிட்டு அது மிச்சப்படுகிறது. அதுதான் பிரம்மம். அதுவல்லாததையெல்லாம் விலக்குவது மூலமாக பிரம்மம் உறுதி செய்யப்படுகிறது. எவையெல்லாம் இருக்கின்றதோ அவைகள் பார்க்கக்கூடியது. பார்ப்பவன் அறியப்படுகின்றவைகள் எல்லாம் நீக்க முடியும். இதுவல்லாத ஸ்வரூபத்துடன் இருப்பதை விட்டுவிட முடியாது. நீக்கமுடியாததாக இருக்கின்ற அதுதான் ஆத்மா.
 
பிரம்மத்தினுடைய சத்யத்வம் நிரூபிக்கப்பட்டுவிட்டது. இதனுடைய ஞான ஸ்வரூபம் முன்னரே விளக்கப்பட்டுவிட்டது. “தானே அனுபவ ரூபமாக இருப்பதால்”; முதலான வாக்கியங்களின் மூலமாக ஞானத்தன்மை தெளிவாக சொல்லப்பட்டுவிட்டது.
 
முழுவதும் விபாபித்திருப்பதால் தேசத்தினால் வரையறுக்கப்படாதது. எது நித்யமாக இருக்கிறதோ அது காலத்தால் வரையறுக்கப்படாதது. எல்லா வஸ்துக்களுக்கும் ஆதாரமாக  காரணமாக இருப்பதால் குணத்தால் வரையறுக்கப்படாது. ஒரு பொருள் இப்படிபட்ட தன்மையுடையது என்று சொல்லும்போது அது அந்தக் குணத்தால் வரையறுக்கப்படுகிறது. அனைத்து காரியத்திலும் காரண புத்தி தொடர்ந்து இருந்துக் கொண்டிருக்கிறது. காரணமான தங்கம் எல்லா ஆபரணங்களிலும் இருக்கின்றது. ஆனால் வளையல் என்ற காரியத்ததை பார்க்கும் போது அந்த நாம ரூபத்தால் வரையறுக்கப்பட்டுவிட்டது. அனைத்து படைப்புக்களுக்கும் காரணமாக இருப்பதாலும் பிரம்மத்திற்கு வேறாக எதுவும் இல்லாதிருப்பதால், எதனாலும் வரையறுக்கப்படாதது. பிரமாண்டத்தில் மூன்று வகையாலும் வரையறுக்கப்படாததாக இருப்பதால் அது எல்லையற்றது (அனந்தம்) என்ற புரிந்து கொள்ளலாம்.
 
தேசம், காலம், வஸ்து போன்ற மற்றவைகளாலும் வெறும் பொய்யாக அறியாமையால் ஏற்றி வைக்கப்பட்டதால் பிரம்மத்தைக் காட்டிலும் குறைவான இருப்பை உடையதால், அத்யாஸத்தினால் தேசம் போன்றவைகளால் வரையறுக்கப்படுதல் பிரம்மத்திடம் ஏற்படாது. பிரம்மத்தின் அனந்தம் என்பது தெளிவாக தெரிகிறது.
 
எது சத்யமாகவும், ஞானமாகவும், அனந்தமாகவும் இருக்கின்றதோ அதுதான் பிரம்மம். அந்த பிரம்மத்திற்கு ஈஸ்வரனாக இருத்தல், ஜீவனாக இருத்தல் என்ற இரண்டு தன்மைகள் உபாதிகளாக ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. பிரம்மத்திடம் ஈஸ்வரத்வம் வருவதற்கு மாயை என்கின்ற உபாதிதான காரணம். ஈஸ்வரனுடன் சம்பந்தப்பட்ட ஏதோவொரு சக்தி (மாயை) இருக்கிறது. மாயையானது அனைத்துக்குள்ளும் இருந்து கொண்டு பிரம்மத்தையும் மறைக்கிறது. தன்னையும் மறைத்துக் கொள்கிறது. ஆனந்தமயத்திலிருந்து எல்லா பொருட்களிலும் இருந்து கொண்டு அனைத்தையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. மறைத்து கொண்டிருக்கிறது.
 
மாயையை நேரிடையாக பார்க்க முடியாது. அதனுடைய வெளிப்பாட்டை வைத்துத்தான் அறிந்து கொள்ள முடியும். இதையே அர்த்தாபத்தி பிரமாணம் என்று கூறப்படுகிறது. உலகத்திலுள்ள பொருட்களின் தன்மைகள் அனைத்தும் ஏதோவொரு சக்தி;தான் நியமத்துடன் இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது. அதனால்தான் உலகமானது முறையாக இயங்கிக் கொண்டிருக்கிறது. மாயைக்குள் சைதன்யத்தினுடைய பிரதிபிம்பம் உட்புகுந்து இருப்பதனால் அந்த சக்தி சைதன்யமாக உள்ளது போல விளங்குகிறது. இப்படிபட்ட சக்தியாகிற உபாதியின் சேர்க்கையால் பிரம்மனே ஈஸ்வரன் என்கின்ற தன்மையை அடைகின்றது. மாயை பிரம்மத்திற்கு உபாதியாக இருக்கும் போது பிரம்மத்தை ஈஸ்வரன் என்று அடைக்கிறோம்.
 
ஐந்து கோசங்களை உபாதியாக சேர்த்து பார்க்கும்போது பிரம்மமே ஜீவன் என்கிள்ற தன்மையை அடைகின்றது. காரணமாக இருக்கும்போது அது மாயை, அது ஜகத் வெளிப்படுகின்ற காரியமாக இருக்கும்போத அதுவே ஜகத். கார உபாதியுடன் கூடிய பிரம்மம் ஈஸ்வரன், காரி உபாதியுடன் (ஐந்து கோசங்கள்) கூடிய பிரம்மம் ஜீவன் என்றும் அழைக்கப்படுகின்றன.
 
ஒரே பிரம்மனுக்கு இரண்டு எதிர்விதமான தன்மைகள் எப்படி வரும் என்று வினவினால் ஒரே மனிதன் தந்தையாகவும், மகனாகவும் எப்படி இருக்க முடிகின்றதோ அதேமாதிரிதான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
 
ஒருவன் மகனையும், பேரனையும் உத்தேசிக்கின்ற விஷயத்தில் அவன் தந்தையுமல்ல, தாத்தாவுமல்ல என்பது எப்படியோ அப்படியே மாயா சக்தியும் ஐந்து கோசங்களை உத்தேசிக்காமல் இருந்தால் பிரம்மம் ஈஸ்வரனும் அல்ல, ஜீவனும் அல்ல.
 
யாரொருவன் மேற்சொன்னபடி பிரம்மத்தை அறிகின்றாரோ அவர் பிரம்மனாகவே ஆகின்றார். இதுவே ஜீவன் முக்தியாகும்.பிரம்மத்திற்கு பிறப்பே கிடையாது. ஆகவே இந்த அறிவையுடையவன் மீண்டும் பிறப்பதி;ல்லை.
 
தொகுப்புரை
01-01 ஸ்ருதி வாக்கியம் கூறப்படுகிறது. பஞ்சகோசத்தை நீக்குவதன் மூலம் பிரம்மத்தை புரிந்து கொள்ளலாம் என்பதால் அதை விசாரிக்க வேண்டும்.
02-10 பஞ்ச கோசங்களினுடைய லட்சணத்தைக் கூறி அவைகள் அனாத்மா என்று தெளிவாக விளக்கியுள்ளார்.
11-21 ஆத்மா சைதன்ய ஸ்வரூபம், ஞான ஸ்வரூபம் என்பதை விளக்கியுள்ளார். எந்தவொன்று மற்றவொன்றினால் விளக்க முடியாததாக இருந்து கொண்டு, ஆனால் மற்றவைகளையெல்லாம் விளக்குகின்றதோ அதைப் பற்றி கூறப்பட்டுள்ளது.
22-25 பஞ்சகோச விவேகத்தின் அவசியத்தையும், சூன்யமல்ல என்றும் நிலையும் நிலை நாட்டப்பட்டது
26-28 ஆத்மா ஸ்வயம் பிரகாசம் என்பதற்கான பிரமாணங்களை விளக்கியுள்ளார்
29-33 ஆத்மா சத்ய லட்சணத்தை விளக்கியுள்ளார், மற்றவைகளை நீக்கக்கூடியது ஆனால் தன்னை எதனாலும் நீக்க முடியாது.
34-36 அனந்தம் என்ற சொல்லினுடைய லட்சணத்தை விவரித்துள்ளார்.
37-42 ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தை விளக்கியுள்ளார். ஜீவன், ஈஸ்வர தன்மையை விளக்கியுள்ளார்.
43-43 இந்த அறிவை அடைவதனால் அடையும் பலன் ஜீவன் முக்தி, விதேக முக்தி என்று கூறினார். 
----ooo000ooo----

 

A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...