அத்தியாயம்-12
வானபிரஸ்த, சந்நியாச ஆசிரம தர்மங்கள்
ஸ்வாமி குருபரானந்தாவின் உபதேச விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது-21-02-2022
ஶ்ரீபகவான் உவாச
வனம் விவிக்ஷு:
புத்ரேஶு பா4ர்யா ன்யஸ்ய ஸஹைவ வா |
வன ஏவ
வஸெச்சா2ந்தஸ்த்ருதீயம் பா4க்3மாயுஷ: || 1 ||
ஶ்ரீபகவான்
கூறுகிறார்.
உத்தவா! வானபிரஸ்த
ஆசிரமத்திற்கு செல்ல விரும்பினால் உன் மனைவியை மகனிடமோ, மகளிடமோ ஒப்படைத்துவிட்டு
அல்லது உன்னுடன் மனைவி வர விரும்பினால் அவளையும் அழைத்துக் கொண்டு போகலாம். மன அமைதியுடன் வானபிரஸ்த ஆசிரம தர்மங்களை
பின்பற்றிக் கொண்டு வாழ்நாட்களை கழிக்கலாம்.
ஒருவனுடைய ஆயுளின் மூன்றாம் பாகத்தில் இந்த ஆசிரமத்தில் கழிக்க வேண்டும்.
கந்தமூலப2லைர்வன்யைர்மேத்4யைர்வ்ருத்திம்
ப்ரகல்பயேத் |
வஸீத வல்கலம்
வாஸஸ்த்ருணபர்ணாஜினானி வா || 2 ||
சாஸ்திரத்தில் சொல்லியபடி
எளிமையான, தூய்மையான உணவுவகைகள், காட்டில் கிடைக்கின்ற அல்லது நாம் இருக்கின்ற
இடத்தில் கிடைக்கின்றதுமான கிழங்கு வகைகள், வேர் வகைகள், பழங்கள் போன்ற உணவுப்
பொருட்கள் உட்கொண்டு வாழ வேண்டும்.
எளிமையான ஆடைகளை அணிய வேண்டும்.
புல்லினால் செய்யப்பட்டதும், இலைகளினால் செய்யப்பட்டதுமான ஆடைகளையோ,
மான்தோலையோ உடுத்திக் கொள்ளலாம். இந்தக்
காலத்திற்கேற்ப எளிமையான ஆடைகளை உடுத்திக் கொள்ள வேண்டும்.
கேஶரோமனக2ஶ்மஶ்ரு
மலானி பி3ப்4ருயாத்3த3த: |
தா4வேதப்ஸு மஜ்ஜேத
த்ரி காலம் ஸ்த2ண்டி3லேஶய: || 3 ||
தலைமுடி, மீசை, தாடி,
நகங்கள் இவற்றை வெட்டக் கூடாது. நறுமணப்பொருட்களை பயன்படுத்தக் கூடாது. மூன்று வேளை நீரில் குளிக்க வேண்டும். தரையிலேதான் படுக்க வேண்டும்.
க்3ரீஷ்மே தப்யேத
பஞ்சாக்3னீன்வர்ஷாஸ்வாஸாரஷாட்3ஜலே |
ஆகண்த2மக்3ன: ஶிஶிர
ஏவம் வ்ருத்தஸ்தபஶ்சரேத் || 4 ||
தவம் செய்து கொண்டிருக்க
வேண்டும். இதில் சில தவங்களை
உதாரணத்திற்கு கூறியிருக்கிறார்.
1. பஞ்சாக்னி தவம் –
கோடைகாலத்தில் தன்னைச் சுற்றிலும் நெருப்பை மூட்டிக் கொண்டு, சூரியனின் வெப்பம்
மேலேயிருந்து வந்து கொண்டிருக்கும் இதற்கு நடுவில் அமர்ந்து கொண்டு தவம் செய்ய
வேண்டும்.
2. மழைக்காலத்தில்
நல்ல மழையில் நின்று கொண்டு தவம் செய்ய வேண்டும்.
3. குளிர்காலத்தில்
நீருக்குள் கழுத்துவரை இருக்குமாறு நின்று கொண்டு தவம் செய்ய வேண்டும்.
இவ்விதமாக தவங்களை
மேற்கொள்ளலாம்.
அக்3னிபக்வம்
ஸமஶ்னீயாத்மாலபக்வமதா2பி வா |
உலூக2லாஶ்மகுட்டோ வா
தந்தோலூக2ல ஏவ வா || 5 ||
நெருப்பின்
பக்குவப்படுத்தப்பட்ட உணவையும், காலத்தினால் கனிந்த பழம் போன்ற உணவையும், உரலால்
அரைத்ததையும், அம்மியில் பொடி செய்யப்பட்டதையும், பற்களால் நன்கு மென்று உணவை
உட்கொள்ள வேண்டும்.
ஸ்வயம்
ஸஞ்சினுயாத்ஸர்வமாத்மனோ வ்ருத்திகாரணம் |
தேஶகாலப3லாபி4க்3ஞோ
நாததீதான்யதாஹ்ருதம் || 6 ||
தன்னுடைய
வாழ்க்கைக்கு தேவையானவற்றை எல்லாம் தானே முயற்சி செய்து அடைய வேண்டும்,
சேகரித்துக் கொள்ள வேண்டும். இடம், காலம்,
இவைகளின் தன்மைக்கேற்ப வாழ வேண்டிய அறிவை அடைய வேண்டும். தன்னுடைய பலத்தையும் அறிந்துக் கொள்ள வேண்டும்.
இதன்மூலம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
ரொம்ப காலத்திற்கு முன்னரே சேர்த்துவைத்த உணவை உட்கொள்ள கூடாது. இது தேவைக்கு மேல் எதையும் வைத்துக் கொள்ளாதே
என்ற எச்சரிக்கையை குறிக்கிறது.
வன்யைஶ்சருபரோடா3ஶைர்
நிர்வபேத்காலசோதி3தான் |
ந து ஶ்ரௌதேன பஶுனா
மாம் யஜேத வனாஶ்ரமீ || 7 ||
வனத்தில் கிடைக்கின்ற
கஞ்சி, திடப்பொருட்கள் முதலியவைகளைக் கொண்டு பூஜைகளை, யாகங்களை மேற்கொள்ள
வேண்டும். சரியான காலத்தில் இவைகளை செய்ய
வேண்டும். அந்தந்த காலத்தில் செய்ய வேண்டிய பூஜைகளை செய்து கொள்ளலாம். வேதத்தில் கூறியிருக்கின்றது என்று பசு முதலிய
விலங்குகளை பலி கொடுப்பது போன்ற மற்ற ஜீவராசிகளை ஹிம்சை செய்து என்னை
பூஜிக்காதே. வானபிரஸ்த ஆசிரமத்தில்
இருப்பவர்கள் மேற்கூறியபடி வாழ வேண்டும்.
அக்3னிஹோத்ரம் ச
தர்ஶஶ்ச பௌர்ணமாஸ்ஶ்ச பூர்வவத் |
சாதுர்மாஸ்யானி ச
முனேராம்னாதானி ச நைக3மை: || 8 ||
வானபிரஸ்த
ஆசிரமத்திற்கு வருவதற்கு முன்னே செய்து கொண்டிருந்த பூஜை, யாகம் போன்ற கர்மங்கள்,
அக்னிஹோத்திரம், அமாவாசை, பௌர்ணமியன்று செய்யும் வைதீக கர்மங்கள், சாதுர்மாஸ்யம்
என்ற தவத்தையும் இந்த ஆசிரமத்திலும் அனுஷ்டிக்கலாம் என்று வேத சாஸ்திரங்கள் நன்கு
அறிந்த பண்டிதர்கள் கூறுகிறார்கள்.
ஏவம் சீர்ணேன தபஸா
முனிர்த3மனிஸந்தத: |
மாம் தபோமயமாராத்4ய
ருஷிலோகாத்3ருபைதி மாம் || 9 ||
இவ்விதம் தவம்
செய்தால் வானபிரஸ்தன் உடல் நரம்புகள் வெளியே தெரிகின்ற நிலைக்கு சென்று
விடுவான். தவஸ்வரூபமாக இருக்கின்ற என்னை
வழிபட்டதன் பயனாக அவர்கள் பிரம்மலோகத்திற்கு சென்று பின்னர் முறையாக என்னை
வந்தடைவார்கள்.
யஸ்த்வேத்த்க்ருச்ச்2ரதஶ்சீர்ணம்
தபோ நி:ஶ்ரேயஸம் மஹத் |
காமாயால்பீயஸே
யுஞ்ஜ்யாத்3பா3லிஶ: கோSபரஸ்தத:
|| 10 ||
யாரொருவனால் மிகவும்
புனிதமான பலனைக் கொடுக்க கூடிய தவங்களை செய்யாமல், பிராரப்தத்தினால் தானாக வரக்கூடிய அற்பமான
சுகங்களை தவத்தின் மூலமாக அடைந்து அனுபவிப்பவனைப் போன்ற அறிவிலி வேறு யார்
இருப்பான்?
யதாஸௌ நியமேSகல்போ ஜரயா ஜாதவேபது2: |
ஆத்மன்யக்னீன்ஸமாரோப்ய
மச்சித்தோSக்3னிம் ஸமாவிஶேத || 11 ||
ஒருவேளை வானபிரஸ்தன்
அன்றாட கடமைகளை செய்வதற்கான உடற்சக்தியை இழந்து விட்டால் அல்லது வயோகத்தினாலோ,
தீராத வியாதியினால் பாதிக்கப்பட்டால் ம்ருத்யு தேவதையை தன்னிடத்தில் வருவது போன்று
தியானிக்க வேண்டும். ஈஸ்வரனான என்னை
தியானிக்க வேண்டும். மரணத்தை தழுவிக்
கொள்ள வேண்டும், ஏற்றுக் கொள்ள வேண்டும்.
யதா3 கர்மவிபாகேஷு
லோகேஷு நிரயாத்மஸு |
விராகோ3 ஜாயதே
ஸம்யட்3ன்யஸ்தாக்3னி: ப்ரவ்ரஜேத்தத: || 12 ||
எப்பொழுது நிறைவான
வைராக்கியம் வருகின்றதோ அல்லது இந்த உலகத்திலுள்ள எந்தப் பொருளும் மனநிறைவை
தரக்கூடியதல்ல என்றும், துக்க ஸ்வரூபமானது எனவே செய்த கர்மத்தின் பலனாக
அடைந்திருக்கும் இந்த உலகத்தினிடத்தில் வைராக்கியம் வருகின்றதோ அப்பொழுதே எந்த
ஆசிரமத்திலிருந்தாலும் அந்த ஆசிரமத்திற்குரிய கடமைகளையெல்லாம் விட்டுவிட்டு
சந்நியாச ஆசிரமத்திற்கு சென்றுவிடலாம். அல்லது இன்பத்திலும், இன்பத்தை கொடுக்கின்ற
பொருட்களிடத்திலும் போதிய அளவு வைராக்கியத்தை இந்த வானபிரஸ்த ஆசிரமத்தில்
அடைந்துவிட்டாலும் சந்நியாச ஆசிரமத்திற்கு செல்லலாம்.
இஷ்ட்வா யதோ2பதேஶம்
மாம் த3த்த்வா ஸர்வஸ்வம்ருத்விஜே |
அக்3னீன்ஸ்வப்ராண
ஆவேஶ்ய நிரபேக்ஷ: பரிவ்ரஜேத் || 13 ||
சாஸ்திரத்தில்
சொன்னபடி என்னை வழிபட்டு கொண்டு, இறைவனை வணங்கி கொண்டு உன்னிடத்திலுள்ள
எல்லாவற்றையும், உன்னிடத்திலுள்ள உடமைகளையும், செல்வத்தையும் தகுதியானவர்களுக்கு
கொடுத்துவிட்டு, அக்னியை தன்னுடைய பிராணனிடத்தில் சமர்ப்பித்து விட்டு, அதாவது
சந்நியாசம் எடுத்தவன் இறந்தவனுக்கு சமமானவன். ம்ருதியுவை தன்னிடத்தில் ஆவாஹரணம்
செய்து கொண்டு எதையும் எதிர்ப்பார்க்காமல் சந்நியாசியாக வாழ வேண்டும்.
விப்ரஸ்ய வை
ஸன்ன்யஸதோ தே3வா தா3ராதி3ரூபிண: |
வித்4னான்குர்வன்த்யயம்
ஹயஸ்மானாக்ரம்ய ஸமியாத்பரம் || 14 ||
சந்நியாசத்தை ஏற்றுக்
கொண்ட மேலானவனுக்கு, சாதகனுக்கு இந்திரியங்கள் தடைகளை ஏற்படுத்தி கொடுக்கும். மனைவி, மக்கள், உற்றார், உறவினர்கள்
போன்றவர்கள் மூலமாக தடைகள் வரலாம். இவன்
நம்மை கடந்து உயர்ந்த நிலைக்கு சென்று விடுவான் என்ற கோபத்தால் தேவர்கள் தடைகளை
கொடுப்பார்கள்.
பி3ப்4ருயாச்சேன்முனிர்வாஸ:
கௌபீனாச்சா2த3னம் பரம் |
த்யக்தம் ந
தண்டபாத்ராப்4யாமன்யக்திஞ்சித3னாபதி3 || 15 ||
சந்நியாசியானவன்
எளிமையான ஆடையை அணிந்து கொள்ள வேண்டும்.
உடலை மறைக்கும் அளவுக்கு ஆடை இருந்தாலே போதும். சாதாரண நேரங்களில் இவ்வாறு இருக்க
வேண்டும். ஆபத்து இல்லாத காலத்தில்
இவ்வாறு இருக்க வேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலைகளின்போது தண்டத்தையும்,
பிக்க்ஷை பாத்திரத்தையும் வைத்துக் கொள்ளலாம்.
த்3ருஷ்டிபூதம்
ன்யஸேத்பாத3ம் வஸ்த்ரபூதம் பிபே3ஜ்ஜலம் |
ஸத்யபூதாம்
வதே3த்3வாசம் மன:பூதம் ஸமாசரேத் || 16 ||
நான்குவிதமான
பண்புகள் இதில் கூறப்பட்டுள்ளது.
- காலெடுத்து வைப்பதற்கு முன் நன்கு பார்த்துவிட்டு வைக்க
வேண்டும். எதைச் செய்தாலும்
முழுகவனத்துடன் செய்ய வேண்டும்.
- உணவை சாப்பிடுவதற்கு முன் சுத்தப்படுத்த வேண்டும். நீரையும்
குடிப்பதற்கு முன் சுத்தப்படுத்த வேண்டும்.
உடல், மனம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். தூய்மைபடுத்தப்பட்ட உணவையும், நீரையும்
மட்டுமே பயன்படுத்த வேண்டும்
- உண்மையினால் சுத்தம் செய்யப்பட்ட சொற்களை பேச வேண்டும். வாக்கு தூய்மையை இது குறிக்கின்றது
- மனசாட்சிக்கு விரோதமில்லாமல் மற்றவர்களிடம் நடந்து கொள்ள
வேண்டும். யாருக்கும் துரோகம் பண்ணக்கூடாது
மௌனானீஹானிலாயாமா
த3ண்டா3 வாக்3தே3ஹசேதஸாம் |
ந ஹயேதே யஸ்ய ஸந்த்யங்க3
வேணுபி4ர்ன ப4வேத்3யதி: || 17 ||
மௌனம் – பேசாமலிருக்கும் வாக்கு தவம். இதை வாக்கின் தண்டம் என்று
குறிப்பிடுவர். அதாவது வாக்குக்கு கொடுக்கப்படும் தண்டனை
அனீஹா – இந்த உடலை ஏதாவது செயலில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் நிலையை
விட்டுவிட்டு உடலை அமைதியாக வைத்திருக்க வேண்டும். இது சரீரத்திற்கு
கொடுக்கப்படுகின்ற தண்டனை
அனிலாயாமா – மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டும். பிராணாயாமத்தின் துணைக் கொண்டு மனதை அமைதிப்
படுத்த வேண்டும். பிராணாயாமம் என்பது
பிராணனை அமைதிப் படுத்துதல். இது மனதிற்கு கொடுக்கப்படும் தண்டனை
த3ண்டம் – தண்டனை, மூங்கில் குச்சி
அங்க – உத்தவா!
ஏதே ய்ஸ்ய ந ஹி ஸந்தி – எந்த சந்நியாசிக்கு இந்த மூன்று பண்புகள் இல்லையோ அவர்கள்
வேணுபி: ந ப4வேத்
யதி: - மூங்கில்
குச்சியான தண்டத்தை வைத்திருந்தால் மட்டும் சந்நியாசியாகிவிட மாட்டான்.
பி4க்ஷாம் சதுர்ஷு
வர்ணேஷு விக3ஹர்யான்வர்ஜயம்ஶ்சரேத் |
ஸப்தாகா3ரானஸங்க்ல்ருப்தாம்ஸ்துஷ்யேல்லப்3தே4ன
தாவதா || 18 ||
அதர்மமாக வாழ்ந்து
கொண்டிருப்பவர்களிடமிருந்து பிக்ஷை ஏற்கக்கூடாது.
முன்னரே தீர்மானிக்காத ஏழு வீடுகளில் மட்டுமே பிக்ஷை எடுக்க வேண்டும். கிடைத்ததில் திருப்தி அடைய வேண்டும்.
ப3ஹிர்ஜலாஶயம் க3த்வா
த்த்ரோபஸ்ப்ருஶ்ய வாக்3யத: |
விப4ஜ்ய பாவிதம்
ஶேஷம் பு4ஞ்ஜீதாஶேஷமாஹ்ருதம் || 19 ||
கிராமத்திற்கு வெளியே
சென்று அங்கேயுள்ள நீர்நிலையில் கை-கால்களை சுத்தம் செய்து விட்டு, வாக்கையும்,
நாக்கையும் கட்டுப்படுத்தியவனாக கொண்டு வந்த உணவை முதலில் தூய்மைப்படுத்த
வேண்டும், மந்திரத்தின் மூலமாகவும், பாவனை மூலமாகவும், நீரைக் கொண்டும், அக்னியை
பயன்படுத்தியும் தூய்மைப்படுத்தி சாப்பிட வேண்டும், மீதியுள்ளதை பகிர்ந்து கொள்ள
வேண்டும்.
ஏகஶ்சரேன்மஹீமேதாம்
நி:ஸங்க3: ஸம்யதேந்த்3ரிய: |
ஆத்மக்ரீட3 ஆத்மரத
ஆத்மவான் ஸமதர்ஶன: || 20 ||
இந்த உலகத்தில்
எதனிடத்திலும் பற்றுக் கொள்ளாமல், புலன்களை நன்கு அடக்கியவனாகவும், தனக்குள்ளே
விளையாடிக் கொண்டும், தனக்குள்ளே மகிழ்ந்து கொண்டும் தனியாக சஞ்சரித்துக் கொண்டிருப்பான். பிரம்மத்தைப் பற்றிய ஞானத்தை அடைந்து, அதில்
நிலைபெற்றிருப்பான். எல்லோரையும் சமநோக்குடன் பார்ப்பவன் பிரம்மஞானி
விவிக்தக்ஷேமஶரணோ
மத்3பா4வ்விமலாஶய: |
ஆத்மானம்
சிந்தயேதே3கமபே4தே3ன மயா முனி: || 21 ||
அமலம் - தூய்மையான இடத்தில் அன்பை வைத்தல்
சந்நியாஸி மக்கள்
நடமாட்டமில்லாத தனிமையான, பாதுகாப்பான, தூய்மையான, அச்சமற்ற இடத்தில் வசிக்க வேண்டும். தூய்மையான மனதுடன்
என்னிடத்தில் பக்தியுடையவனாக இருக்க வேண்டும்.
ஆத்மாவான தன்னைப்பற்றிய சிந்தனையுடன் ஞானயோகத்தில் இருக்க வேண்டூம். ஆத்மாவை ஒன்றே என்றும், என்னிடமிருந்து
வேறுபடாதவனாகவும் சிந்தித்து கொண்டிருக்க வேண்டும்.
அன்வீக்ஷேதாத்மனோ
ப3ந்த4ம் மோக்ஷம் ச ஞான நிஷ்ட்2யா |
ப3ந்த4
இந்த்ரியாவிக்ஷேபோ மோக்ஷ ஏஷாம் ச ஸம்யம: || 22 ||
ஆத்மன: பந்தம்
மோக்ஷம் ச –
தனக்கு பந்தமாக இருப்பது எது, மோட்சம் என்பது என்ன என்பதை விசாரம் செய்ய வேண்டும்.
பந்தம் என்பது
துயரம், அதை எதனால் நாம் அனுபவிக்கின்றோம், யார் காரணம், எப்படி அதிலிருந்து
விடுபடுவது என்ற ஆராய்ச்சி செய்ய வேண்டும். மனத்தூய்மை அடைந்து ஞானத்தை அடைவதனால்
இதற்கான பதிலை அடையலாம். மோட்சம் என்பது
என்ன அதை எப்படி அடைவது? என்று விசாரித்து உண்மையை அறிய வேண்டும்.
பந்தம் இந்த்ரிய
விக்ஷேபம் –
பந்தம் என்பது புலன்களின் அமைதியின்மை.
எப்பொழுதும் ஏதாவது ஒரு இந்திரியம் ஏதாவது ஒரு விஷயத்தை நோக்கியே, விஷய
சுகத்தை நாடியே சென்று கொண்டிருக்கும்.
மோக்ஷ ஏஷாம் ச ஸம்யம் – புலன்கள் அமைதியோடு இருப்பதே மோட்சம்
தஸ்மான் நியம்ய
ஷட்3வர்க3ம் மத்3பா4வேன சரேன்முனி: |
விரக்த:
க்ஷுத்3ரகாமேப்4யோ லப்3த்4வாத்மனி ஸுக2ம் மஹத் || 23 ||
ஆகவே மனம், ஐந்து
புலன்கள் ஆகிய ஆறுவிதமான கரணங்களையும் ஒழுங்குபடுத்த வேண்டும், நெறிப்படுத்த
வேண்டும். என்னிடத்தில் பக்தியை
செலுத்திக் கொண்டு வாழ வேண்டும். அற்பமான
விஷயத்தில் வைராக்கியத்தை அடைந்து தன்னிடத்திலே மேலான சுகத்தை, பேரானந்தத்தை
அனுபவித்துக் கொண்டு வாழ வேண்டும்.
உன்னிடத்திலேயே நேர்மையாக இருந்து கொண்டு, உன்னையே மதித்து பாராட்டும்
வகையில் வாழ வேண்டும்.
புரக்3ராமவ்ரஜான்ஸார்தா2ன்பி4க்ஷார்த2ம்
ப்ரவிஶம்ஶ்சரேத் |
புண்யதே3ஶஸரீச்சை2ல
வனாஶ்ரமவதீம் மஹீம் || 24 ||
நகரம், கிராமம்,
ஏழைகள் வாழும் இடங்கள், பக்தர்கள் வாழும் இடங்களில் பிக்ஷைக்காக சென்று வரலாம்.
புனிதமான இடங்கள், ஆறு, மலை போன்ற இடங்கள், காடு, மகான்கள், ரிஷிகள் ஆசிரமம், தவம்
செய்து கொண்டிருக்கின்ற மகான்கள் வசிக்கின்ற ஆசிரமங்கள் போன்ற இடங்களில் சஞ்சரிக்க
வேண்டும்.
வானப்ரஸ்தா2ஶ்ரமபதேஷ்பீ4க்ஷ்ணம்
பை4க்ஷ்யமாசரேத் |
ஸம்ஸித்4யத்யாஶ்வஸம்மோஹ:
ஶுத்3த4ஸத்த்வ: ஶிலாந்த4ஸா || 25 ||
வானபிரஸ்த
ஆசிரமத்தில் உள்ளவர்கள் அடிக்கடி பிக்ஷையெடுத்து சாப்பிடுவதே உயர்வானது. இறைந்து கிடக்கும் தானியங்களைப் பொறுக்கி
எடுத்துக் கொண்டு அதை சமைத்து சாப்பிடலாம். கொஞ்ச கொஞ்சமாக உணவை சில வீடுகளில்
பிக்ஷை எடுத்து சாப்பிடலாம். இதனால் விரைவில் சாத்வீக்மான மனதை அடைகிறான்.
தர்ம-அதர்ம விஷயங்களிலும், சாதன-சாத்தியம், உண்மை-பொய் இவைகளில் ஏற்படும் மோகம்
நீங்கப்பெறுகிறான். இறுதியில் மோட்சத்தை
அடைகிறான்.
நைதத்3வஸ்துதயா பஶ்யேத்
த்3ருஶ்யமானம் வினஶ்யதி |
ஆஸக்தசித்தோ
விரமோதி3ஹாமுத்ரசிகீர்ஷிதாத் || 26 ||
நம்மால் அனுபவிக்கக்கூடிய இன்பத்தை தரும் பொருட்களை எனக்கு தேவையானது என்ற பார்வையோடு பார்க்காதே.
ஏனென்றால் அவைகளெல்லாம் அழியக்கூடியது எனவே பற்றில்லாத மனதையுடையவனாக
அவைகளிடமிருந்து விலகிக் கொள்ள வேண்டும். இகலோகத்தில், பரலோகத்தில் சுகத்தை தரும்
பொருட்களை அடைய முயற்சிக்கும் செயல்களை முயற்சி செய்து விட வேண்டும்.
யதே3த்தா3த்மனி
ஜகன்மனோவாக்ப்ராணஸம்ஹதம் |
ஸர்வம் மாயேதி தர்கேண
ஸ்வஸ்த2ஸ்த்யக்த்வா ந தத்ஸ்மரேத் || 27 ||
நிலையற்ற பொருட்களில்
அடைய வேண்டியது வைராக்கியம். மித்யா என்ற
ஞானத்தை அடைய வேண்டும். அகங்காரத்திற்கு
பொருளாக இருப்பது மூன்று சரீரங்கள். உலகத்தில் சம்பந்தம் வைக்கும் பொருட்களில்
மமகாரம் ஏற்படுகிறது. நான், என்னுடையது என்கின்ற அகங்காரத்திற்கும்,
மமகாரத்திற்கும் விஷயமாக இருக்கின்ற இந்த உலகமும் சரீரமும், ஆத்மாவான என்னுடைய
உண்மையான ஸ்வரூபத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. நாம் ஞானத்தை அடைந்த பிறகும்,
இந்த உலகத்தில் வாழ்ந்தாக வேண்டும். எனவே
அனைத்தும் மித்யா என்ற யுக்தியின் துணைக் கொண்டு உணர்ந்து இவைகளை மனதளவில்
துறந்துவிட வேண்டும். மீண்டும் உண்மையானது
என்ற நிலைக்கு திரும்பி செல்லாதே. உன்னிடத்தில் இருப்பவனாக இருப்பாயாக
ஞானநிஷ்டோ2 விரக்தோ
வா மத்3ப4க்தோ வானபேக்ஷக: |
ஸலிங்கா3னாஶ்ரமாம்ஸ்த்யக்த்வா
சரேத3விதி4கோ3சர: || 28 ||
பிரம்ம ஞானத்தில்
நிலைப்பெற்றிருப்பவன் அல்லது தீவிர வைராக்கியத்தை அடைந்து இருப்பவன் அல்லது
முழுமையாக மனதை இறைவனிடத்தில் ஈடுபடுத்தியிருப்பவன் இப்படிபட்ட நிலையை உடையவர்கள்,
உதாசீனனாக இருப்பவர்கள், சாஸ்திர விதிகள், கடமைகள் எதுவும் இல்லாத சந்நியாசியாக
வாழ்ந்துகொண்டு இருப்பார்கள். அந்தந்த
ஆசிரமத்திற்குரிய அடையாளங்களை, கடமைகளை துறந்திருப்பார்கள்.
பு3தோ4
பா3லகவத்க்ரீடே3த்குஶலோ ஜட3வச்சரேத் |
வதே3த்3ருன்மத்தவத்3வித்3வாங்கோசர்யோம்
நைக3மஶ்சரேத் || 29 ||
ஞானநிஷ்டையுடன்
இருந்தாலும் குழைந்தையைப் போல விளையாடிக் கொண்டிருப்பான். குழந்தைகளுக்கு
ராக-துவேஷம் கிடையாது. ஆனால் ஆத்ம-அனாத்மா விஷயத்தில் அறியாமையோடு இருக்கும்.
மோட்ச ஆனந்தத்தை அனுபவிக்கும், பாவ-புண்ணியங்கள் கிடையாது. மனதும், உடலும்
ஆரோக்கியமாக இருந்தால்தான் சந்தோஷமாக இருக்க முடியும். காலத்தையும் பயனுள்ளதாக
செலவழிக்கவும் உதவுகின்றது. ஆற்றல் உள்ளவனாகவும் ஜடம் போல் ஒன்றுமறியாதவன் போல்
வாழ்ந்து கொண்டிருப்பான். பண்டிதனாக இருந்தாலும் பைத்தியக்காரன் போல் பேசிக்
கொண்டிருப்பான். பைத்தியக்காரன் எப்பொழுதும் நிகழ்காலத்தில்தான் வாழ்ந்து
கொண்டிருப்பான். பசுக்கள் போல நியமங்களை அனுசரிக்காதவனாக இருப்பான்.
வேத3வாதரதோ ந ஸ்யான்ன
பாஷண்டீ3 ந ஹைதுக: |
ஶுஷ்கவாத3விவாதே3 ந
கஞ்சித்பக்ஷம் ஸமாஶ்ரயேத் || 30 ||
வேதத்திலுள்ள கர்ம
காண்டத்தில் உள்ள கர்மங்களில் ஈடுபடமாட்டான். தர்மத்திற்கும், வேதத்திற்கும்
விரோதமாக வாழமாட்டான். வறண்ட, பயனற்ற வாத-விவாதங்களில் யார் பக்கமும் சேர்ந்துக்
கொண்டு வாதம் செய்து கொண்டிருக்க மாட்டான்.
நோத3விஜேத
ஜனாத்3தீ4ரோ ஜனம் சோத்3வேஜயேன்ன து |
அதிவாதாம்ஸ்திதிக்ஷேத
நாவமன்யேத கஞ்சன |
தே3ஹமுத்3தி3ஶ்ய
பஶுவத்3வைரம் குர்யான்ன கேனசித் || 31 ||
தீரனானவன்
மக்களிடமிருந்து எந்த பாதிப்பயும் அடையக் கூடாது.
பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
துன்பத்தை அடையாதே. அதே சமயத்தில் மக்களை துன்பறுத்தாதே. பிறர்
தூற்றினாலும், நிந்தித்தாலும் பொறுத்துக் கொள்வான். யாரையும் அவமதித்து பேசமாட்டான், விலங்குகளைப்
போல உடலுக்கு ஏற்படும் கஷ்டத்தினால் எந்த உயிர்களிடத்திலு பகை உணர்வை வளர்த்துக்
கொள்ளாதே.
ஏக ஏவ பரோ ஹயாத்மா
பூ4தேஷ்வாத்மன்யவஸ்தி2த: |
யதே2ந்துருத3பாத்ரேஷு
பூ4தான்யேகாத்மகானி ச || 32 ||
மேலான ஆத்மா
ஒன்றேதான். அதுவேதான் எல்லா உயிர்களிடத்திலும் இருக்கின்றது. என்னுடைய உடலிலும் இருக்கின்றது. எவ்விதம்
சந்திரன் நீருள்ள எல்லா பாத்திரங்களிலும் பலவாக தோன்றுகின்றது அதுபோல ஆத்மா எல்லா
ஜீவராசிகளிடத்திலும் பலவாக இருப்பது போல் தோன்றுகிறது. எல்லா ஜீவராசிகளில் உடல்களும் ஒரே
தன்மையுடன்தான் இருக்கின்றது.
பஞ்சபூதங்களால் உருவானதுதான் அவைகள்.
ஆலப்3த்4வ ந விஷீதே3த
காலே காலேSஶனம் க்வசித் |
ல்ப்த்4வா ந
ஹ்ருஷ்யேத்3த்4ருதிமானுப4யம் தைவதந்த்ரிதம் || 33 ||
பிராரப்த வசத்தினால்
சாப்பிடுவதற்கு எது கிடைக்கிறதோ அதை திருப்தியுடன் உண்டு அனுபவிக்க வேண்டும். உரிய
காலத்தில் உணவு கிடைக்காவிட்டால் அதற்காக வருந்த கூடாது. உணவு சரியானகாலத்தில்
கிடைத்தாலும் அதனால் மகிழ்ச்சியடையவும் கூடாது.
ஏனென்றால் உணவு கிடைப்பதும், கிடைக்காததும் தெய்வத்தின் அனுக்கிரஹத்தால்
நடக்கின்றது. பிராரப்தத்தின்படிதான் நடக்கின்றது.
ஆஹாரார்த2ம் ஸமீஹேத
யுக்தம் தத்ப்ராணதா4ரணம் |
தத்த்வம் விம்ருஶ்யதே
தேன தத்3விக்ஞாய விமுச்யதே || 34 ||
தான் உயிர்
வாழ்வதற்கு சரியான உணவை அடைவதற்கு தேவையான அளவு அதிக முயற்சி செய்யவேண்டும்.
பிராரப்தத்தின்படி கிடைக்க வேண்டியது கிடைக்கும் என்று எந்த முயற்சி செய்யாமல்
இருந்துவிடக் கூடாது. முயற்சி செய்ய
வேண்டும் ஆனால் அதனால் அடையும் பலன் பிராரப்தத்தைப் பொறுத்து அமைந்திருக்கும்.
இவ்வாறு பிராணனை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் மூலம் ஆத்ம தத்துவ விசாரம் நன்கு
செய்ய முடியும். ஞானயோகத்தில் முழுமனதோடு ஈடுபடமுடியும். இதனால் அந்த பிரம்மத்தை
அறிந்து அடைந்து மோட்சத்தை அடைகிறான்.
யத்3ருச்ச2யோபபன்னான்னமத்3யாச்ச்2ரேஷ்டமுதாபரம்
|
ததா2 வாஸஸ்ததா2
ஶய்யாம் ப்ராப்தம் ப்ராப்தம் ப4ஜேன்முனி: || 35 ||
சந்நியாசியானவன் தன்
முயற்சியால் அடைந்ததை அப்படியே திருப்தியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
எதிர்பார்க்காமல் பிராரப்தத்தினல் கிடைக்கக்கூடிய அன்னத்தை உட்கொள்ள வேண்டும்.
உயர்வாக இருந்தாலும், தாழ்வாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதேபோல கிடைக்கக்கூடிய துணி, படுக்கை, இடம்
இவைகளிலும் திருப்தியடைய வேண்டும்.
ஶௌசமாசமனம் ஸ்னானம் ந
தும் சோத2னயா சரேத் |
அன்யாம்ஶ்ச
நியமாஞ்ஞானீ யதா2ஹம் லீலயேஶ்வர: || 36 ||
தூய்மையாக இருத்தல்,
வைதீக கர்மங்களை செய்தல் (ஆசமனம்), குளித்தல் போன்ற சாஸ்திரம் விதிக்கப்பட்ட
கர்மங்களை செய்யக்கூடாது, மற்றவர்களுடைய நிர்பந்தத்திற்காக ஞானியானவன், சந்நியாசியானவன் செய்யக்
கூடாது. எவ்வாறு ஈஸ்வரனான நான் கர்மாக்களை
விளையாட்டாக செய்கின்றேனோ அதுபோல சந்நியாசியும் செய்ய வேண்டும
ந ஹி தஸ்ய
விகல்பாக்2யா யா ச மத்3வீக்ஶயா ஹதா |
ஆதே3ஹா~தாத்க்வசித்க்2யாதிஸ்தத: ஸம்பத்3யதே மயா || 37 ||
வேற்றுமைகள் யாவும்
என்னைக் கண்டவுடனேயே அழிந்துவிடுகிறது. உயிரோடு இருக்கும்வரையில் அவனிடம்
இருப்பதில்லை. தோன்றிக் கொண்டிருக்கும்
வேற்றுமைகள் அவனைப் பாதிப்பதில்லை. சரீரம் அழிந்தபின் என்னுடன் ஐக்கியமாகி
விடுகின்றான்.
து3:கே2தர்கேஷு
காமேஷு ஜாதநிர்வேத3 ஆத்மவான் |
அக்ஞாஸிதமத்3த4மோ
முனிம் கு3ருமுபவ்ரதேத் || 38 ||
இன்பத்தைக்
கொடுக்கும் என்று நினைக்கும் பொருட்களில் முடிவில் துன்பத்தையே கொடுக்கும் என்பதை
உறுதியாக உணர்ந்த சுயக்கட்டுடைய சந்நியாசி அடைந்த வைராக்கியத்தை பாதுகாப்பான். இறைவனுடைய உண்மைத்தன்மையை விசாரித்தும் உணராமல் இருப்பவர்கள் பிரஹ்மநிஷ்டனாக இருக்கும்
குருவை அடைக்கலம் புகவேண்டும்.
தாவத்பரிசரேத்3ப4க்த:
ஶ்ரத்3தா4வான்னஸூயக: |
யாவத்3ப்3ரஹ்ம
விஜானீயான்மாமேவ கு3ருமாத்3ருத: || 39 ||
எவ்வளவு காலம் பிரம்ம
ஞானத்தை அடைவதற்கு தேவைப்படுகிறதோ அதுவரை குருவுக்கு பணிவிட செய்துகொண்டு
வரவேண்டும். சிரத்தையுடனும், குறைக்கூறி
கொண்டிருக்காமலும், இறைவனே குருவாக இருக்கிறார் என்ற பக்தியுடனும் அவருக்கு சேவை
செய்துவர வேண்டும்.
யஸ்த்வஸம்யதஷட்3வர்க3:
ப்ரசண்டே3ந்த்3ரியஸாரதி2: |
ஞானவைராக்யரஹிதஸ்த்ரித3ண்ட3முபஜீவதி
|| 40 ||
ஸுரானாத்மானமாத்மஸ்த2ம்
நிஹனுதே மாம் ச த4ர்மஹா |
அவிபக்வகஷாயோSஸ்மாத3முஷ்மாச்ச விஹீயதே || 41 ||
யாரொருவன் ஐந்து
ஞானேந்திரியங்களையும், மனதையும் கட்டுப்படுத்தாமலும், நெறிபடுத்தாத புத்தியை
உடையவனாகவும், ஞானமும், வைராக்கியமும் இல்லாமல் சந்நியாசத்தை எடுத்துக்
கொள்கின்றனோ அவன் என்னையும், தேவதைகளையும், தன்னையும் கஷ்டப்படுத்துகிறான்.
தர்மத்தையே கொன்றவனாகிறான், தர்மத்தை அழிப்பவனாகிறான். மனதிலுள்ள அழுக்குகளை நீக்காதவனாக
இருக்கிறான். இவன் இந்த உலகத்திலும்
சௌக்கியமாக இருக்கமாட்டான், பரலோகத்தையும் அடைய மாட்டான்.
பி4க்ஷோர்த4ம: ஶமோSஹிம்ஸா தப ஈக்ஷா வனௌகஸ: |
க்3ருஹிணோ
பூ4தரக்ஷேஜ்யா த்3விஜஸ்யாசார்யஸேவனம் || 42 ||
சந்நியாசியினுடைய
தர்மங்களாவது மனவடக்கத்துடன் இருத்தல், அகிம்சையை கடைப்பிடித்தல், நிவிருத்தி
பிரதானமான சாதனங்களை கடைப்பிடித்தல் ஆகியவைகளாகும், வானபிரஸ்தாசிரமத்திற்கு சென்றவர்கள் பின்பற்ற
வேண்டிய தர்மங்கள் மௌனத்துடனும், எளிமையுடனும் வாழ்தல், உபாஸனம், ஜபம், தியானம்
போன்றவற்றை பின்பற்றுதல் ஆகியவகளாகும்.
கிருஹாஸ்சிரமத்தில் இருப்பவர்கள் மற்ற ஆசிரமத்தில் உள்ளவர்களையும், மற்ற ஜீவராசிகளையும்
காப்பாற்ற வேண்டும். இறைவழிபாடு, தானம்
போன்றவைகளை செய்ய வேண்டும். பிரம்மசாரிகள்
ஆசாரியருக்கு சேவை செய்து அறிவை அடைய வேண்டும்.
ப்3ரஹ்மசர்யம் தப:
ஶௌசம் ஸந்தோஷோ பூ4தஸௌஹ்ருத3ம் |
க்3ருஹஸ்த2ஸ்யாப்ய்ருதௌ
க3ந்து: ஸர்வேஷாம் மத்3ருபாஸனம் || 43 ||
இல்லறத்தில்
இருப்பவர்கள் ஒழுக்கத்துடனும், பிறன்மனை நோக்காமலும், என்னை வழிபட்டுக் கொண்டும்,
தவம் செய்தல், தூய்மையாக இருத்தல், மனதிருப்தியுடன் இருத்தல், போதுமென்ற மனதுடன்
இருத்தல், எல்லா ஜீவராசிகளிடத்திலும் நட்புணர்வுடன் இருத்தல் ஆகிய தர்மங்களையும்
பின்பற்றி வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்.
இவைகள் யாவும் முக்கியமாக பொதுவான் தர்மங்கள் என்று பகவான் கூறுகிறார்.
ஆனால் இல்லறத்தில் இருப்பவனுக்கு முக்கியமான தர்மங்களாகும்..
இதி மாம் ய:
ஸ்வத4ர்மேண ப4ஜேன்னித்யமனன்யபா4க் |
ஸர்வபூ4தேஷு
மத்3பா4வோ ம3ப4க்திம் விந்த3தே த்3ருடா4ம் || 44 ||
இதவரை என்னால்
உபதேசித்த வர்ணாசிரம தர்மங்கள், கடமைகள் முழுமையாக கடைப்பிடித்துக் கொண்டு
என்னைத்தவிர வேறிடம் செல்லாத மனதுடன் வழிபட வேண்டும். எல்லா ஜீவராசிகளிடத்திலும் என்னை காண்பவனுக்கு
என்னிடம் நிலையான பக்தி உண்டாகிறது
ப4க்த்யோத்3த4வானபாயின்யா
ஸர்வலோகமஹேஶ்வரம் |
ஸர்வோத்பத்த்யப்யயம்
ப்ரஹ்ம காரணம் மோபயாதி ஸ: || 45 ||
உத்தவா!, என்னை உணர
வேண்டும், அடைய வேண்டும், என்ற நிஷ்காம, தூய்மையான பக்தியினால் அனைத்து
உலகங்களுக்கும் தலைவனாகவும், அவைகளை காப்பாற்றிக் கொண்டு இருப்பவனாகவும், அனைத்து
படைப்புக்கும் காரணமாகவும், லயத்திற்கும் காரணமாகவும் இருக்கின்ற பிரம்மத்தை, என்னை
அந்த பக்தன் அடைகிறான்.
இதி
ஸ்வத4ர்மநிர்ணிக்த ஸத்த்வோ நிர்ஞாதமத்3க3தி: |
ஞானவிக்3ஞானஸம்பன்னோ
ந சிராத்ஸமுபைதி மாம் || 46 ||
இவ்வாறாக தூய்மையான
மனதை அடைந்தவன், தன்னுடைய ஸ்வதர்மங்களை, கடமைகளை அனுஷ்டிப்பதன் மூலம் மனதிலுள்ள
அழுக்குகளான ராக-துவேஷங்கள் நீங்கி தூய்மையான மனதை அடைகின்றான். இது கர்மயோகத்தின் மூலம் அடையப்படுகிறது. என்னைப் பற்றி உரைக்கின்ற வேதாந்த சாஸ்திரத்தை
நன்கு அறிந்தவன், என்னால் கொடுக்கப்பட்ட வேதாந்தத்தை நன்கு உணர்ந்தவன், தன்னை முழுமையாக
ஞானயோகத்தில் ஈடுபடுத்திக் கொண்டவன் என்பதைக் குறிக்கிறது.. ஞானம், விக்ஞானம் என்கின்ற செல்வங்களை
அடைகின்றான். ஞானம் என்பது உலகத்தின் நிலையாமையை உணர்ந்தவன், விக்ஞானம் என்பது
உலகத்திற்கு ஆதாரமாக இருக்கின்ற பிரம்மத்தை உணர்ந்தவன் என்பதாகும்.. ஆத்ம ஞானத்தை
அடைந்து அதன் பலன்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.
வர்ணாஶ்ரமவதாம் த4ர்ம
ஏஷ ஆசாரலக்ஷண: |
ஸ ஏவ மத்3ப4க்தியுதோ
நி:ஶ்ரேயஸகர: பர: || 47 ||
இந்த வர்ணாசிரம தர்மங்கள்
என்னால் வகுக்கப்பட்டது. இவைகளை
கடைப்பிடிக்க வேண்டும். இவைகளை
என்னிடத்தில் பக்தியுடன் கூடியவனாக இருந்து கொண்டு பின்பற்ற வேண்டும். இவ்வாறு செய்வதால் நம்மை இது மோட்சத்திற்கு
அழைத்து செல்லும்.
ஏத த்தேSபி4ஹிதம் ஸாதோ4 ப4வான்ப்ருச்ச2தி மாம் |
யதா2
ஸ்வத4ர்மஸம்யுக்தோ ப4க்தோ மாம் ஸமியாத்பரம் || 48 ||
உத்தமமான உத்தவா! நீ
என்னிடம் என்னென்னல்லாம் கேட்டாயோ அவைகளையெல்லாம் நன்கு உபதேசித்து விட்டேன். எவ்விதம் தன்னுடைய கடமைகளை செய்து
கொண்டிருக்கும் என்னுடைய பக்தன் மேலான என்னை எப்படி அடைய முடியும் என்பதையும்
விளக்கி விட்டேன்.
ஓம் தத் ஸத்