பஞ்சதசி
அத்தியாயம்-15
விஷயானந்தம்
விஷயங்கள் மூலமாக அடையப்படும் ஆனந்தமும் பிரம்மானந்தத்தின்
பிரதிபிம்பம்தான். அந்த விஷயானந்தம் இந்த அத்தியாயத்தில்
விளக்கப்படுகிறது. இது பிரம்மானந்தத்தின் அம்சமாக இருக்கும் தன்மை
உடையதாக இருக்கிறது. பிரம்மானந்தத்தை புரிந்து கொள்வதற்கு இந்த
விஷயானந்த விசாரம் உதவி செய்கிறது.
இந்த பரமானந்தம் பிளவுபடாத தன்மை உடையது. ஒன்றான ஸ்வரூபத்தை உடையது.
பூரணமான ஆனந்தம் எல்லா ஜீவராசிகளும் அந்த பிரம்மானந்தத்தின் ஒரு சிறு
அம்சத்தைதான் அனுபவிக்கின்றன. மனதிலுள்ள எண்ண ஓட்டங்கள் குணத்தின்
அடிப்படையில் மூன்றாக பிரிக்கப்படுகின்றது. சத்துவ குணத்திலிருந்து
தோன்றுகின்ற எண்ணங்களான சாந்தம் போன்ற எண்ணங்கள். ரஜோ குணத்திலிருந்து
தோன்றுபவைகள், மூடத்தனமான எண்ணங்கள் என்று
மூன்று வகையாக இருக்கின்றன.
வைராக்கியம், பொறுமை, மன்னித்தல் போன்ற நற்குணங்கள், எல்லா நிலைகளிலும் சமநிலையோடு இருத்தல், எதற்கும் அதிக
முக்கியத்வம் கொடுக்காமல் இருத்தல் போன்ற அனைத்தும் சத்துவ குணத்திலிருந்து தோன்றியவைகள்.
கோரமான எண்ணங்கள் என்பது ஜடப்பொருட்களின் மீது ஆசை எழுதல்,
உயிரினங்களின் மீது எழும் பற்று, உயிரினங்களின்
மீது உறுதியான பற்று, யாருக்கும் பகிர்ந்து கொள்ளாத குணம் ஆகியவைகளாகும்.
மூடமான எண்ணங்களாவது எதையும் சரியாக புரிந்து கொள்ள முடியாத மனநிலை,
பொருளுக்கு அதிகமதிப்பு கொடுத்தல், பயப்படுகின்ற
மனநிலை ஆகும்.
பிரம்மத்தின் ஸத்-சித் ஆனந்தத்தை நேரிடையாக அனுபவிக்க முடியாது. ஏனென்றால் நாமே பிரம்மனாக இருக்கின்றோம். ஆனால் இவைகளின்
பிரதிபிம்பத்தைத்தான் பார்க்க முடியும். மனம் உணர்வுடையதாக இருப்பதனால்,
பிரம்மத்தின் அறிவு பிரதிபிம்பமாக மனதில் உணர்கின்றோம். மேற்சொன்ன மூன்று பிரமாண எண்ணங்களிலும் பிரம்மத்தினுடைய அறிவு ஸ்வரூபமானது
பிரதிபிம்பிக்கின்றது. சாந்த விருத்தியில் பிரம்மத்தினுடைய ஆனந்த
ஸ்வரூபமும் பிரதிபிம்பிக்கப்படுகிறது.
மேற்கூறிய கருத்துக்களுக்கு உபநிஷத் பிரமாணம் இதில்
கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு எண்ணங்களிலும் பிரம்ம
தத்துவம், அறிவு ஸ்வரூபமானது பிரதிபிம்பிக்கிறது என்று உபநிஷத் கூறுகிறது. பிரம்ம சூத்திரத்தில் சூரிய பிரதிபிம்ப உதாரணத்தின் மூலமாக இந்த தத்துவம் விளக்கப்பட்டிருக்கிறது.
எல்லா சரீரங்களுக்கும் இருக்கின்ற ஒரே ஆத்மா ஒன்றாகவும், பலவாகவும் தோன்றுகிறது. பல நீர்நிலைகளின் தோன்றுகின்ற
வானிலுள்ள ஒரே நிலாவின் பிரதிபிம்பம் போல இதை எண்ணிப் பார்த்து புரிந்து கொள்ள வேண்டும்.
சந்திரனின் பிம்பம் தோன்றும் நீர்நிலையில் உள்ள நீரானது
கலங்கியிருக்கும்போது அந்த பிம்பமானது சரியாக தெரியாது. அதேசமயம் நீர் தெளிவாக இருக்கும்
போது சந்திரனின் பிம்பமும் தெளிவாக தெரிந்து கொண்டிருக்கும். அதேபோல பிரம்மனும் எண்ணங்களில் பிரதிபிம்பிக்கும்போது இரண்டுவிதமாக இருக்கும்.
சத்துவ குண எண்ணங்களில்தான் அறிவு ஸ்வரூபமும், சுக ஸ்வரூபமும் சேர்ந்து பிரதிபலிக்கும். மற்ற இரண்டு
குண எண்ணங்களில் உணர்வுமயம் மட்டும்தான் பிரதிபிம்பிக்கும். கோரமான,
மூடத்தனமான ரஜோகுண எண்ணங்களில் அழுக்குகள் படிந்திருப்பதால் பிரம்மத்தின்
ஆனந்த அம்சம் மறைக்கப்பட்டு விடும், வெளிப்படுவதற்கு முடியாது.
அழுக்கு குறைவான எண்ணங்களில் சைதன்யத்தின் ஆனந்த அம்சம் பிரதிபிம்பிக்கிறது,
பிரகாசிக்கிறது.
தூய்மையான நீரில் அக்னியினுடைய உஷ்ணம் என்ற தன்மை
கலந்து விட்டிருக்கிறது. ஆனால் பிரகாசிக்கும் தன்மை
வெளிப்படுவதில்லை. அதுபோல எல்லா எண்ணங்களிலும் சைதன்யத்தினுடைய
அறிவுத்தன்மை மட்டும்தான் வெளிப்படுகிறது. மரக்கட்டையில் அக்னியினுடைய
இரண்டு அம்சங்களான உஷ்ணம், பிரகாசம் வெளிப்படுகிறது. அதுபோல சாத்விகமான எண்ணங்களில் சுகமும், அறிவும் வெளிப்படுகின்றது.
வஸ்துக்களின் தன்மையை பொறுத்து இந்த நியமங்கள் உதாரணத்திற்கு ஏற்றதாக
அமைகின்றது. இது நம்முடைய அனுபவத்தின் அடிப்படையில்தான்;
உருவாகின்றது.
கோரமான எண்ணங்களிலும், மூடத்தானமாக எண்ணங்களிலும் சுக அனுபவங்கள்
அனுபவிப்பதில்லை. சாத்விகமான
எண்ணங்களிலும் கூட சில இடங்களில் அதிக சுகம் வெளிப்படுகிறது. சுகம் வெளிப்படுவதில் ஏற்றத்தாழ்வு இருக்கின்றது. வீடு,
நிலம் முதலிய விஷயங்களில் எப்பொழுது ஆசையானது தோன்றி விடுகின்றதோ அப்பொழுது
ரஜோ குணத்திலிருந்து தோன்றிய அந்த எண்ணங்கள் கோரத்தன்மைளை அடைந்ததனால் பிரம்மத்தின்
சுக அம்சம் வெளிப்படுவதில்லை.
ஆசையை பூர்த்தி செய்ய முடியுமா, முடியாதா என்ற எண்ணம் ஏற்பட்டு துக்கத்தை
அடைவோம். ஒருவேளை நிறைவேறாவிட்டால் துக்கம் மிக அதிகமாகின்றது.
அது நிறைவேறுவதற்கு தடைவந்தால் கோபமும், வெறுப்பும்
வருகிறது. தடையை தாண்ட முடியாதபோது வெறுப்பாக மாறிவிடுகிறது.
இந்த நிலையில் தமோ குணத்திலிருப்பவன் நிறைவேற்றக்கூடிய செயல் எதுவும்
செய்யாமல் வருத்தப்பட்டுக் கொண்டு இருப்பான். தன்மீதே பரிதாபப்பட்டுக்
கொண்டிருப்பான். கோபம், வெறுப்பு போன்ற
உணர்ச்சிகள் வரும்போது அதிக துக்கப்பட்டுக் கொண்டிருப்பான். அந்த
இடத்தில் ஆனந்தமானது வெகுதூரத்தில் இருக்கின்றது.
ஆசைப்பட்ட பொருள் கிடைக்கும் போல் இருந்தாலே கொஞ்ச
சுகம் கிடைக்கிறது. ஆசைப்பட்டது கிடைத்துவிட்டதால்
வருகின்ற சாத்விகமான எண்ணம்தான் சாந்த விருத்தி அதில் மகத்தான சுகம் கிடைக்கிறது.
அதையே அனுபவிக்கும்போது மேலும் அதிகமான சுகம் கிடைக்கிறது. ஆசையே இல்லாதிருக்கும்போதும், ஆசைப்பட்ட பொருள் மீது
வைராக்கியம் ஏற்பட்டாலும் அதில் மிகப்பெரிய சுகம் கிடைக்கிறது. இவ்விதம் மனம் சஞ்சலமெதுவும் அடையாமல் பற்றற்று இருக்கும் போது ஆனந்தநிலையை
அனுபவிக்கின்றோம். கோபம், லோபம் போன்ற தீய
எண்ணங்கள் இல்லாதிருக்கும்போது மேலும் மனம் சுகத்தை அடைகிறது.
எந்தெந்த விதத்தில் சுகத்தை அனுபவிக்கின்றோமோ அவைகளனைத்தும்
பிரம்மத்தை சார்ந்தது. அதன் பிரதிபிம்பங்கள்தான் இவைகளாகும்.
எண்ணங்கள் உள்நோக்கி செல்ல இந்த பிரம்மத்தினுடைய ஆனந்தமான பிரதிபிம்பத்திற்கு
தடையேதும் இருப்பதில்லை.
இருத்தல், அறிவு, ஆனந்தம் என்று பிரம்மத்திற்கு மூன்று தன்மைகள்
இருக்கின்றது. மண், பாறை முதலியவைகளில்
இருத்தல் மட்டும் வெளிப்படுகிறது. மற்ற இரண்டும் வெளிப்படுவது
இல்லை. உள்நோக்கி செல்லுதல் என்பது ஸ்தூலத்திலிருந்து சூட்சும
உடலுக்கு செல்லும் நிலையாகும். இருத்தல், அறிவு இரண்டும் தீய எண்ணங்களில் வெளிப்படுகிறது. சாத்விகமான
எண்ணங்களில் மூன்றும் வெளிப்படுகிறது. இவ்விதம் மூன்று ஸ்வரூபங்களோடு
ஜகத்தையும் கலந்துள்ள பிரம்மம் விளக்கப்பட்டது. உடல்,
மனம் எண்ணங்களுடன் இவைகளை கலந்துள்ளதை ஆத்மா என்று சொல்லப்பட்டது.
உபாதிகளை கலக்காத நிர்குண பிரம்மமானது சிரவண, மனன, நிதித்யாசன
போன்ற ஞானயோக சாதனங்களினால் அறியப்படுகிறது.
என்றும் இல்லாமை, ஜடத்தன்மை, துக்கம் ஆகிய இவை மூன்றும்
மாயையின் ஸ்வரூபமாகும். மனிதக்கொம்பு, ஆகாயத்தாமரை
முதலியதில் இல்லாமையும், மரக்கட்டை, பாறை
முதலியவைகளில் ஜடத்தன்மையும், தீய, மூடத்தனமான
எண்ணங்களும், துக்கமும் மாயையின் வெளிப்பாடுகளேயாகும்.
இவ்விதம் இருப்பதால் இங்கே பிரம்மத்தை தியானம் செய்ய
வேண்டுமென்று யாரொருவன் விரும்புகிறானோ அவன் மனிதக்கொம்பு முதலானதை விட்டுவிட வேண்டும். மாயா தத்துவத்தை முழுவதுமாக விட்டுவிட
வேண்டும். பிரம்ம ஸ்வரூபத்தை சாஸ்திரத்தில் காட்டியபடி, உபதேசத்தின்படி
தியானிக்க வேண்டும்.
பாறை முதலிய ஜடப்பொருட்களிலுள்ள நாம, ரூபத்தை விட்டுவிட்டு அவைகளின் இருத்தலை
மட்டும், ஸத்தை மட்டும் தியானிக்க வேண்டும். தீய, மூடத்தனமான எண்ணங்களிலுள்ள துயரங்களை விட்டுவிட்டு அவைகளின் இருப்பையும்,
அறிவு என்ற அம்சத்தை மட்டும் தியானிக்க வேண்டும். இந்த எண்ணங்களில் உள்ள இன்ப, துன்பங்களை விளக்குபவனே
நான், பிரம்மன்.
மகிழ்ச்சியைக் கொடுக்கின்ற சாத்விகமான எண்ணங்களிலுள்ள
இருத்தல், அறிவு, ஆனந்தம் ஆகிய மூன்று அம்சங்களையும் சேர்த்து தியானிக்க வேண்டும். ஆத்ம ஞானத்தை அடையாதவர்கள், நிர்குண பிரம்மத்தை தியானம்
செய்ய சக்தி இல்லாவர்கள் அவர்களுடைய உலக விவகாரத்தில் மாயையுடன் கூடிய பிரம்மத்தை,
ஈஸ்வரனை, சகுண பிரம்மத்தை தியானிக்க வேண்டும்.
விஷயத்திற்கும் மேலான பிரம்மத்தை விளக்குவதற்காகத்தான் விஷயானந்தம் விளக்கப்படுகிறது.
மனம் உதாசீன நிலையில் இருக்கும்போதும், மனதில் எழுகின்ற
எண்ணங்கள் அமைதியடைந்து இருக்கும்போதும், அந்த வாசனையில் மனம் இருக்கும்போதும் அதை
தியானிக்க வேண்டும். இது மேலான தியானமாகும்.
மேற்கூறிய தியானங்களும் சாதாரணமாக செய்யப்படுகின்ற
தியானமல்ல. இது ஞானமும், நிதித்யாஸனமும் சேர்ந்து இருப்பதால்
இது ஒருவகையான மேலான தியானமாகும். இது பிரம்ம ஞானத்தை நிலைபெறுவதற்காக
செய்யப்படுவதாகும். இதனால் மனதில் ஞானமானது ஒருமுகப்பட்டு உறுதியாக
நிலைபெற்றுவிடும்.
பிரம்ம ஞானத்தில் நிலைபெற்றுவிட்டால் ஸத், சித், ஆனந்தம்
ஆகிய மூன்று தன்மைகளும் தனித்தனியாக இருக்காமல் ஒரே தன்மையாக மட்டும் விளங்கிக் கொண்டிருக்கும்.
அவைகளை பிரித்துக் காட்டுகின்ற உபாதியில்லாததால் இவை மூன்றும் தனித்தனியாக
பிரகாசிப்பது கிடையாது.
சாத்விக எண்ணங்களும், ரஜோ, தமோ குணங்களிலிருந்து
எழுகின்ற துயரமான எண்ணங்களும்
பாறைப் போன்ற ஜடப்பொருட்களும் ஸத், சித், ஆனந்த ஸ்வரூபங்களை பிரித்துக் காட்டுகின்ற உபாதிகளாக கருதப்படுகின்றன.
நிதித்யாசனத்தின் மூலமாகவும், விசாரத்தின் மூலமாகவும்
இவைகளை மித்யாவாக புரிந்து கொண்டு நீக்கப்படுகின்றன.
தானே பிரகாசித்துக் கொண்டிருப்பதால் எந்தவித உபாதைகளும் (உடல், பிரபஞ்சம்)
இல்லாததும், இரண்டற்றதாகவும் இருக்கின்ற பிரம்ம
தத்துவமானது அறிவில் தானாகவே விளங்கும்போது அங்கு அறிபவன், அறியப்படும்
பொருள், அறிய உதவும் கருவி ஆகிய மூன்றுவிதமான வேற்றுமைகளும் இல்லாதது
தெரிய வருகின்றது. ஆகையால் அந்த நிலையில் வெறும் பேரானந்தம் மட்டுமே
அனுபவிக்கப்படுகிறது என்று சொல்லப்படுகிறது.
பிரம்மானந்தம் என்ற பெயருடைய இந்த நூலில் விஷயானந்தம்
என்பது விளக்கப்பட்டது. இந்த விளக்கத்தின் மூலமாக நன்கு
விசாரம் செய்வதன் மூலமாக, ஆழ்ந்து படிப்பதன் மூலமாக பிரம்மானந்தத்திற்குள்
நுழைந்துவிட வேண்டும்.
இந்த நூலை பகவானுக்கு சமர்ப்பித்து விடுவதால் விஷ்ணுவும், சிவனும் மகிழ்ச்சி அடைவார்கள்.
அதனால் பிரம்மானந்தத்தை அடைவதற்காகவும், பிரம்மஞானத்தை அடையவும்,
அதில் நிலைபெறவும் அருள் புரிய வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறார்.
எல்லா உயிரினங்களையும் இறைவன் காப்பாற்றட்டும். இறைவனிடம் தஞ்சம் அடைந்த ஜீவர்கள் அவரால் காப்பாற்றபடுவார்கள்.
----ooo000ooo----