ப்ருஹதாரண்யஹ உபநிஷத்-பகுதி-1
ஸ்வாமி குருபரானந்தா உபதேசம்
அத்தியாயம்-1 - உபதேச காண்டம்
www.poornalayam.org
திருத்தம் செய்யப்பட்டது – 02-03-2022
முகவுரை
ஸத்தா
திரய விசாரம்:
மூன்று
விதமான இருப்பு இருக்கிறது. பிராதிபாஸிக ஸத்யம், வியாவஹாரிக ஸத்யம்,
பாரமார்த்திக ஸத்யம் ஆகியவைகளாகும்..
கயிற்றில்
தெரியும் பாம்பு - பிராதிபாஸிக ஸத்யம்.
கயிறானது - வியாவஹாரிக ஸத்யம்,
பிரம்ம தத்துவம் - பாரமார்த்திக ஸத்யம்.
1.
பிராதிபாஸிக ஸத்யம்:
a. பிரமாதாஸ்தி யத் பாத்யதே தத்
பிராதிபாஸிக ஸத்யம். பிரமாதா-ஒரு பொருளை அறிபவன், பாத்யதே – நீக்குதல், அறிபவன் இருக்கும் போதே அறியப்படுவது நீக்கப்படுகிறது.
அறிபவனும், அறியப்படும் பொருளும் நீக்கப்படுவது
வியாவஹாரிகம்). அந்த அறியப்படும் பொருளுக்கு பிராதிபாஸிக ஸத்யம்
என்று பெயர். (உ-ம்) கயிற்றில் தெரியும் பாம்பு பிராதிபாஸிக ஸத்யம்.
b. அர்த்தகிரிய நாஸ்தி - பிரயோஜனம் கிடையாது, கானல் நீர்- நீர் போல தெரிந்தாலும் பயனற்றது.
c. துஷ்ட பிரமான ஜன்மம் - பிரமானத்தை தவறாக பயன்படுத்தும்போது
தோற்றமளிப்பது, பிராதிபாஸிகம்
d. தவறாக புரிந்து கொள்வது
2.
வியாவஹாரிக ஸத்யம்:
பிரமாத்ரா ஸ: யத் பத்யதே
a. அறிபடுபவனோடு சேர்ந்து நீக்கப்படுவது வியாவஹாரிக ஸத்யம். இந்த உலகத்தை
நீக்க வேண்டுமானால் நம்மை நீக்க வேண்டும். கனவுக்குள் போகும்போது
இரண்டும் நீக்கப்படுகிறது
b. விவகார காலே அபாத்யமானம் - விவகாரம் செய்யும்போது அதை
நீக்க முடியாது.
c. அர்த்தகிரியா அஸ்தி - இதனால் பயன் இருக்கிறது.
d. இது எதிலிருந்து தோன்றுகிறது? பிரத்யக்ஷ பிரமாணத்திலிருந்து
தோன்றுகிறது.
e. சரியாக புரிந்து கொள்வது
3.
பாரமார்த்திக ஸத்யம்:
இந்த ஞானம் வந்த உடனே வியாவகாரத்தில்
உள்ள ஸத்யம் போய் விடும்.
விஸ்வனாக இருக்கும்போதே ஆத்ம ஞான நிலைக்கு செல்லும்போது இந்த வியாவஹார ஸத்யம் இல்லாமல் போகும்.
ஞானம் வந்த பிறகு நாம் பார்ப்பதெல்லாம் காட்சிதான், விவகாரத்திற்கு பயன்படாது என்ற அறிவு ஏற்படும்.
வியாவஹாரிகம் இரண்டு வகையாக
பிரிக்கப்படுகிறது.
ஞ்யாத ஸத்தா, (தெரிந்த ஸத்தா), அக்ஞாத ஸத்தா (தெரியாத ஸத்தா).
ஞ்யாத ஸத்தா: இது பிரத்யக்ஷ
பிரமானம்; உ-ம் சென்னை எனக்கு தெரிகிறது.
இது நாம் விவகாரத்தில் அறியப்படும் பொருள் தெரிந்துக் கொண்டிருக்கும்.
அக்ஞாத ஸத்தா (உ-ம் காசி இருக்கிறது ஆனால் எனக்கு தெரியவில்லை, அனுமானம்
மூலமாக ஒன்றை தெரிந்து கொள்வது. நம்மால் அறியப்பட்டிருக்கிறது
ஆனால் இப்போது இல்லை.
முதலிலுள்ள இரண்டு ஸத்யங்களும்
இதை சார்ந்திருக்கிறது.
இது எதையும் சார்ந்திருக்கவில்லை. எது ஒன்றை சார்ந்திருக்கிறதோ
அது மித்யா, தனிப்பட்ட இருப்புடையது ஸத்யம்.
ஆத்மாவின்
லக்ஷணம்:
காலத்ரைய
அபாத்யத்வம்,
முக்கலத்திலும் நீக்கப்படாதது, பாதிக்கப்படாதது
அதுதான் பாரமார்த்திக ஸத்யம். அபாத்யமாக விளங்கிக்கொண்டிருப்பது
அஹம் என்கின்ற சுத்த சைதன்யம். இது ஸத்-சித் ஸ்வரூபம். இந்த பிரம்மம் தான் பாரமார்த்திக ஸத்யம்.
இது அறிவு ஸ்வரூபமாகவும் இருக்கிறது. துர்ரம்-அஸ்தி-இல்லாதது. (உ-ம்) முயற்கொம்பு, ஆகாயத்தாமரை.
ஒரு பொருள் காண்பதும் இல்லை; அனுபவிப்பதும் இல்லை.
நம்முடைய அனைத்து சம்சாரத்திற்கு மூலக்காரணம், எந்தப் பொருளுக்கு எந்த அளவு இருப்பு இருக்கிறது என்று தெரியாததுதான். எப்படிப்பட்ட ஸத்யம் இருக்கிறது என்று
தெரியாத காரணத்தினால் ஒன்று ஸத்யத்தில் இருக்கும் போது இது இப்படிப்பட்ட ஸத் என்ற ஞானம்
இல்லையென்றால் அந்த அறியாமை இயற்கையாக பாரமார்த்திக ஸத்யத்தைக் கொடுத்து விடும்.
ஒருவர் நம்மை திட்டினால், அதற்கு எந்த ஸத்யத்தைக்
கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு துயரப்படுவோம். அந்த வார்த்தையை ப்ராதிபாஸிகம்
என்று நினைத்தோமானால் அதற்கு துயரம் கொடுக்கும் சக்தியை இழந்து விடுகிறது. காலத்ரய விவேகம்தான் துயரத்தை கொடுக்கிறது.
ஒரு பொருளுக்கு
அதற்குரிய இருப்பைவிட அதிகமான அளவு இருப்பைக் கொடுத்தால் அதற்கு மோகம் என்று பெயர்
அதை தொடர்ந்து வருவது சோகம்.
அஸங்கம்-ஒட்டாமல்
இருப்பது. உதாரணமாக துணியொரு ஸத்தா, அழுக்கு
ஒரு ஸத்தா எனவே இரண்டிற்குமிடையே ஸங்கம் ஏற்படுகிறது. நம் நிழல்
சாக்கடை தண்ணீரில் விழுந்தால் அதனால் நிழலுக்கு ஒன்றும் ஏற்படுவதில்லை. ஏனெனில் இரண்டும் வெவ்வேறு ஸத்தாகும்.
பிராதிபாஸிகம் – பிரமையில்
தோன்றுவது – பிரத்யக்ஷம் பிரமாணம் தவறாக பயன்படுத்தும்போது ஏற்படுகிறது. பாரமார்த்திக
ஞானத்தை அடைவதற்கு உபநிஷத் பிரமாணமாக இருக்கிறது.
உபநிஷத்: (ஸப்த விசாரம்)-
பிரம்ம வித்யா, ஸப்தரூப வாக்கியம். உப+நி+ஷத்
உப : அறிவை அடைய நிபந்தனை
நி : பலனை அடைவதற்கான நிபந்தனையை
குறிக்கும்
ஷத் : பிரம்ம வித்யாவை அடைந்த பலன்,
அவஸாதனம், கதி, விசரணம்
அவஸாதனம் முழுமையாக அழித்தல், சம்சாரத்தை
முழுமையாக அழித்து விடுகிறது. துயரத்தை முழுமையாக நீக்குகிறது.
அக்ஞானத்தால் துயரமே ஏற்படுகிறது. எனவே அறியாமையை
அழித்தால் அதன் துயரம் இல்லாத நிலை ஏற்படுகிறது.
கதி அடைய வைத்தல், பிரம்மத்தை
அடைய வைக்கிறது. பிரம்மத்தை
அடைவதால் பரமானந்தம் ஏற்படுகிறது.
விசரணம் தளர்த்தப்படுத்துதல், தளரச்செய்தல்,
பிரம்ம வித்யா சஞ்சித கர்மத்தையும், ஆகாமி கர்மத்தையும்
அழித்து விடும். பிராரப்த கர்மத்தை மட்டும் விட்டு விடுகிறது.
ஆனால் அதன் விளைவை தளர செய்கிறது, பலவீனமாக்கி
விடுகிறது. அதனால் வரும் துயரத்தை அனுபவிப்பதில்லை.
நி பிரம்ம வித்யாவினால் அடையும்
பலனை அடைய விதிக்கும் நிபந்தனைகள் – நிச்சய ஞானம் – த்ருட
பிரக்ஞா, உறுதியான
அறிவு, ஸ்திர பிரக்ஞா
உப அறிவை ஞானத்தை அடைய நிபந்தனை. குருவிடமும்,
சாஸ்திரத்தையும் அடைதல், குருமுகமாக சாஸ்திரத்தை
கேட்டறிதல்
பிருஹத் பெரியது; அதிகமான
மந்திரங்களை உடையது. மந்திரங்களின் அர்த்தமும் பெரியதாக இருக்கிறது.
ஆரண்யகம் வனத்தில் இதை படிப்பதனால், மனத்தூய்மை
அடைந்தவர்களால் படிக்கப்படுவது.
இது ஆறு அத்தியாயங்களை உடையது. மூன்று காண்டமாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. முதல் இரண்டு அத்தியாயங்கள் மதுக்காண்டம் என்றும், அடுத்த இரண்டு அத்தியாயங்கள் முனிக்காண்டம் என்றும் கடைசி இரண்டு அத்தியாயங்கள் கிளக்காண்டம் என்றும் பிரிக்கப்பட்டிருக்கிறது.
மதுக்காண்டம் முதல் இரண்டு அத்தியாயங்கள் அடங்கியது.
இது உபதேசக் காண்டம். இதில்தான் மஹாவாக்கியத்தின்
உபதேசம் இடம் பெற்றிருக்கிறது. பிரம்மம் ஸத்யா, ஜகத் மித்யா. இதுதான் உபநிஷத்தின் சாரம்- அஹம் பிரம்ம அஸ்மி, ஜகத் மித்யா என்பது விளக்கமாக உபதேசிக்கப்பட்டிருக்கிறது.
மது என்றால் ஒன்றையொன்று சார்ந்திருத்தல், அனைத்து
தத்துவங்களும் ஒன்றையொன்று சார்ந்திருக்கிறது என்பதை எடுத்து உரைக்கிறது. சம்சார வர்ணனை மிக அழகாக விளக்கப்பட்டிருக்கிறது. எது ஒன்றை சார்ந்திருக்கிறதோ அது மித்யாவாக இருக்கிறது. முதல் இரண்டு அத்தியாயங்களும் சிரவண பிரதானமாக இருக்கிறது.
முனிக்காண்டம் இது 3வது 4வது அத்தியாயங்கள்
அடங்கியது.
உபபத்திக் காண்டம், யுக்திப்பிரதானம், மனனப்பிரதானம். பிரம்மம் ஸத்யா, ஜகத் மித்யா என்பது நன்றாக விளக்கப்பட்டு இருக்கிறது.
கிளக்காண்டம் கடைசி இரண்டு அத்தியாயங்கள் அடங்கியது.
உபாஸனைகளும், கர்ம காண்டங்களும் வருகிறது.
குறிப்புக்கள்:-
பாஷ்யம் - உபநிஷத்திலுள்ள மந்திரத்தின் விளக்க
உரை. மூலபத வியாக்யானம், ஸ்வ வியாக்யானம்
வார்த்திகம் - ஸ்லோகத்தின் மூலமாக சங்கரருடைய விளக்கத்தை
விளக்குதல்
உத்தம் - சங்கராச்சாரியர் சொல்லியிருப்பதை
விளக்குதல்
அநுத்த - சங்கராச்சாரியர் விட்டுவிட்டதை
எடுத்து விளக்குவது
துருக்தம் - சங்கராச்சாரியர் சுருக்கமாக சொல்லியிருப்பதை
விரிவாக விளக்குதல்
சாந்தி பாட விசாரம்
பூரணம் முழுமையானது, வரையறுக்கப்படாதது, (infinite)
அதஹ அது; ஈஸ்வரனை
குறிக்கிறது. உபாதியுடன் கூடிய பிரம்மம்
பூரணம் வரையறுக்கப்படாதது
இதம் இது – ஜீவாத்மா
பூர்ணாத் பூரணத்திலிருந்து,பூரணமான ஈஸ்வரனிடமிருந்து,
பூர்ணம் பூரணமான ஜீவன்
உதச்யதே தோன்றியுள்ளான்
பூர்ணஸ்ய பூரணத்தினுடைய - ஜீவனுடைய
பூர்ணம் பூரண ஸ்வரூபத்தை
ஆதாய எடுத்து விட்டால், நீக்கிவிட்டால்
பூர்ணம் வரையறுக்கப்படாதது
ஏவ மட்டும்
அவசிஸ்யதே எஞ்சியிருக்கிறது.
விரிவுரை:-
பூரணம்
என்பது ஸர்வதா ஏகம்,
வரையறுக்கப்படாதது, தேச, கால, வஸ்து என்கின்ற மூன்றினாலும் வரையறுக்கப்படாதது(அபரிச்சின்னம்)
ஒரு
பொருள் எப்படி இருக்கிறதோ அப்படி தெரியாமல் வேறு மாதிரியாக தோன்றுவது நம்முடைய அறியாமயால்தான்
நிகழும். அதுமாதிரி ஜீவனுடைய உண்மையான ஸ்வரூபம் பிரம்மம், ஆனால்
ஜீவன் அப்படி தெரியவில்லை, சகுணமாக தெரிகிறான். உபாதியாக உள்ள சிவப்பு நிற மலரானது அதற்கு முன்னே உள்ள ஸ்படிகத்தின் உண்மை
நிறத்தை மறைத்து தன் நிறத்தை காட்டுவது போல ஜீவனுடைய உபாதி ஆத்மாவின் உண்மை ஸ்வரூபத்தை மறைத்து தன்னுடைய தர்மத்தை ஆத்மாவில் ஏற்றி வைக்கிறது. ஈஸ்வரனுடைய
உபாதி மாயை, ஜீவனுடைய உபாதி மாயையின் காரிய சரீரம். ஈஸ்வரனிடத்தில் உள்ள மாயையையும், ஜீவனிடத்தில் உள்ள உபாதியான மூன்று சரீரங்களையும் நீக்கிவிட்டால் இரண்டு பேரிடத்திலும் எஞ்சியிருப்பது பிரம்மம் மட்டும்தான் என்று அறிந்து கொள்ள முடீகிறது.
ஒரு
பூரணம் இரண்டு உபாதிகளுடன் வெளிப்படுகிறது.
அதஹ
பூர்ணம்
; காரண உபாதியுடைய பூரணம் – ஈஸ்வரன்,
இதம்
பூர்ணம் காரிய உபாதியுடைய பூரணம்
– ஜீவன்
பூர்ணாத் ஈஸ்வரனிடமிருந்து;
பூர்ணமுதச்யதே; ஈஸ்வரனிடமிருந்து
ஜீவ பூர்ணம் வெளிப்படுதல் (அத்யாரோபம்)
பூர்ணஸ்ய பூரணத்தினுடைய - ஜீவனுடைய
பூர்ணமாதாய – பூர்ணமான
ஜீவனை எடுத்து விட்டால்
பூர்ணமேவ – பூர்ணம்
மட்டும்தான்
அவசிஸ்யதே – எஞ்சியிருக்கிறது.
அதாவது ஜீவர்கள் இல்லையென்று உணர்த்துகிறது.
சங்கரரின்
சம்பந்த பாஷ்யம்:
(உபநிஷத் அறிமுகம், பாஷ்ய விசாரம்)
ஈஸ்வரனுக்கும், மற்ற தேவதைகளுக்கும்
நமஸ்காரம்!!!
மரபு
வழியாக இந்த பிரம்ம வித்யாவை உபதேசித ஆச்சாரியர்களுக்கும் நமஸ்காரம்!!
குருவுக்கு
நமஸ்காரம்!!!
உடலால், பணிவான
சொல்லால் மனதால் வணக்கம் சொல்லுதல்.
பிரதிக்ஞா
பாஷ்யம்: எளிமையான விளக்கமானது ஆரம்பிக்கப்படுகிறது.
அதிகாரி
பாஷ்யம்: யார் அதிகாரி, யாருக்காக இந்த விளக்கம்.
இலட்சியம்
இருந்தாலும் கர்ம காண்டத்திலுள்ளவர்கள் அனாத்மாவைத்தான் அடைவார்கள்.,
ஞானயோகத்திலுள்ளவர்கள் லட்சியமான நித்தியமான வஸ்து அடைய முயற்சி
செய்பவர்கள். அதற்கு பெயர் முமுக்ஷுத்வம், அவர்கள்தான்
இந்த விளக்கத்துக்கு அதிகாரி, தகுதியானவர்கள். இதனால் வைராக்கியம் நிச்சயம் ஏற்படும்,
பலன்:
சம்சார ஹேது நிவிருத்தி ஸாதனம் – சம்சாரத்தை
நீக்குவதற்கு காரணமான சாதனமான, பிரம்ம-ஜீவன் ஐக்கியத்தை அடைவதற்காக, இந்த விளக்கவுரை.
பிரதிபத்யே – அடைவதற்கு
நாம பாஷ்யம்: இந்த உபநிஷத்திற்கு இந்த பெயர் வரக் காரணம்
சம்பந்த பாஷ்யம் – மூன்று விதமான கருத்துக்களையுடையது.
1.
கர்ம காண்டமும், ஞான காண்டமும் பிரமானம்
2.
இந்த இரண்டுக்கும் உள்ள சம்பந்தம்
3.
கர்ம காண்டத்தினாலேயே மோட்சத்தை அடைய முடியாது.
பிரமாணம்: பிரத்யக்ஷ பிரமாணம், அனுமானம்
இவற்றின் மூலமாக அடைய முடியாததை அடைவதற்கு வேதாந்தம் உதவியாக இருக்கிறது.
உபாயத்தை காட்டிக் கொடுக்கிறது. வேதாந்தத்தை மட்டும்தான்
ஆத்ம ஞானத்தை அடைவதற்கு கருவியாக உபயோகபடுத்த முடியும் என்பதால் அதைப் பிரமாணம் என்றழைக்கப்படுகிறது.
கர்ம காண்டம்தான் பிரமாணம், எந்த வாக்கியம் கர்மத்தை
போதிக்கிறதோ அதைத்தான் பிரமாணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் அதில்தான் பிரயோஜனம் இருக்கிறது.
வேதாந்தம் எந்த கர்மத்தை போதிக்காமல் அதை நீக்கச்சொல்வதால் அதைப்பிரமானமாக
எடுத்துக் கொள்ள முடியாது.
கர்ம
போதக வாக்கியம்: இது செயலை செய்ய தூண்டுவது
ஸித்த
போதக வாக்கியம்: இது இருப்பதை தெளிவாக உரைப்பது,
செயலில் ஈடுபடுத்தாது.
வேதாந்தத்தில் உள்ள வாக்கியங்கள் ஸித்த போதக வாக்கியமாக
இருக்கிறது.
கர்ம காண்டத்திலும் ஸித்த போதக வாக்கியங்கள் இருக்கிறது. அதை பிரமாணமாக ஏற்றுக்கொண்டிருப்பதால், வேதாந்தத்தில்
உள்ளதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த ஜீவன் இறந்த பிறகும் உயிரோடு இருக்கிறான் அவனது ஸ்தூல உடம்பு
அழிந்தாலும் சூட்சும உடலோடு மறுபிறப்பு அடைகிறான். இது ஸித்தபோக வாக்கியமாக
இருக்கிறது. அதை நீ ஏற்றுக்கொண்டிருக்கிறாய்.
பூர்வபக்ஷி நான் ப்ரத்யக்ஷ பிரமாணமாக அறிந்து கொண்டேன்.
சங்கரர் அப்படி ப்ரத்யக்ஷ பிரமாணமாக இருந்தால் அதில் மக்களிடையே குழப்பம் வராது, ஆனால் அதைப்பற்றி இன்னும் குழப்பம் இருப்பதால் அது சரியல்ல.
பூர்வபக்ஷி கம்பத்தைப்பார்த்தால் திருடன்
மாதிரி தோன்றுவது பிரதயக்ஷ விஷயத்தில் சந்தேகம் வருகிறதல்லவா.
சங்கரர் இந்த சந்தேகமானது அறிவு வந்தால்
தெளிவடைந்து விடுகிறது. ஆனால் இந்த புனர்ஜென்மம் விஷயத்தில் தெளிவு
வரவில்லை. எனவே இரண்டு காண்டமும் பிரமாணம்தான்.
கர்ம
காண்டத்தின் பலன்கள்:
1. சம்சரத்தைக் கொடுக்கிறது, இதில் தொடர
வைத்திருக்கிறது.
2. சம்சாரத்தை பலவீனப்படுத்தி
ஞானகாண்டத்திற்கு தகுதியாக்குகிறது.
கர்மகாண்டத்தில்
யாகங்கள்,
வேள்விகள் மூலமாக சொல்லியிருப்பதை நாம் செய்தால் இகலோக, பரலோக சுகத்தையடையலாம். பரலோக பலனையும் அடையலாம்.
ஸம்ஸ்காரத்தினால் ஆசைகளால் தூண்டப்பட்டு தீய காரியங்களை செய்து கொண்டே
இருப்பவர்கள் கீழான லோகத்தை அடைவார்கள். மற்றும் சிலர்
தார்மீக செயல்களில் ஈடுபட்டு சொர்க்க-லோகத்தை அடைவார்கள். மூன்றாவதாக உள்ளவர்கள் உபாஸனைகளை
கவனமாக செய்து பிரம்மலோகத்தை அடைவார்கள். இந்த பரலோக இன்பங்கள்
அனைத்தும் சம்சாரத்துக்குள்ளே அடங்குகிறது. இப்படி இகலோக பரலோக
சுக துக்கங்களைக் கொடுத்து பிறவிச் சூழலிலே வைத்திருக்கும்.
வேதம்
சொன்ன கருத்துக்களை சித்த ஸுத்திக்காக செய்பவர்கள் ஞான காண்டத்திற்கு நுழைவார்கள். இதற்குள்
நுழைந்தவுடன் கர்ம காண்டத்தை விட்டு விட வேண்டும்.
கர்ம
காண்டம் இரண்டு விதமான பலன்களை கொடுக்கும்.
1. நமக்குள்ளே இரண்டு
விதமான பலன்களை கொடுக்கிறது,
ஒன்று முமுக்-ஷுத்வம் மற்றொன்று வைராக்கியம் (தர்மப்படி வாழ்தல்)
2. வெளியிலிருந்து
வரும் பலன்கள்
a.
மோட்சத்தை அடைவதற்கான சாதனைகளை தொடர்ந்து செய்வதற்கு நல்ல சூழ்நிலையை கொடுக்கிறது.
b.
மனதையும் நன்றாக வைத்திருக்கும்.
ஞான
காண்டத்திற்குள் வந்தவுடன் கர்ம காண்டத்தை விட்டுவிட வேண்டும். ஏனெனில்
அதை பயன்படுத்தி கொண்டேயிருந்தால் அதுவே ஞானமடைய தடையாக இருக்கும். கர்ம காண்டம் நேரிடையாக மோட்சத்தை கொடுக்காது. இதற்கு
மூன்று காரணங்கள் உண்டு.
1. வேதத்தில் எங்கும்
கர்ம காண்டத்தின் பலனாக மோட்சத்தை அடையலாம் என்று சொல்லவில்லை. அந்தந்த
கர்மத்தின் பலனை மட்டும்தான் கூறுகிறது. பலன் எதுவும் சொல்லாத
போது, இதே மாதிரி
செய்யும் வேறொரு கர்மத்தின் பலனை எடுத்துக் கொள்ளலாமே தவிர மோட்சத்தை
எடுத்துக் கொள்ள முடியாது.
2. யுக்தி பிரமானத்தினால்
இதை தெரிந்து கொள்ளலாம்.
எது செய்யப்பட்டதோ அது நிலையற்றது. உருவாக்கப்படுவதெல்லாம்
அநித்யம். கர்ம காண்டத்தில் செய்யப்படும் கர்மங்களின் விளையெல்லாம்
அநித்யமானது. எனவே மோட்சத்தையடைய முடியாது. ஏனெனில் மோட்சமானது நித்யமானது.
3. ஒரு செயல் உருவாகுவதற்கு
பல பொருட்கள்,
கருவிகள் துணை புரிய வேண்டும். முதலில் கர்த்தா,
பிறகு பொருட்கள், கருவிகள் தேவை போன்ற பல காரகங்கள்
இருக்கின்றன. கர்த்தா, போக்தா இருவரும்
காரகத்துக்குள் இருப்பதால், இவர்கள் சம்சாரத்துக்குள் வந்து விடுகிறார்கள். எனவே கர்மம் சம்சாரியை சார்ந்திருப்பதால்,
அதனால் மோட்சத்தைக் கொடுக்க முடியாது. கர்மத்தின்
ஸ்வரூபமே சம்சாரம்தான்.
4. கர்மம் பந்தத்திற்கு
சாதனமாகத்தான் இருக்கிறது.
பந்தம் ஏற்படுவதற்கு காரணமாக இருப்பதால் இது பந்த சாதனம்
மேற்கூறிய
கருத்துக்கள் நமக்கு மூன்று விஷயங்களை தெளிவாக உரைக்கிறது. அவைகள்
1.
கர்மத்தை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.
2.
கர்மத்தை யோகமாக பயன்படுத்த வேண்டும்
3.
கர்மத்தை ஒரு நிலையில் விட்டுவிட வேண்டும்.
நம்மிடத்திலிருந்து
உருவாகும் செயல் ஞானத்தைத் தவிர வேறெதாவது இருந்தால், அது கர்மத்தில்
சேர்ந்து விடும். ஞானத்தை அடைய செய்யும் செயல்கள் யாவும் கர்மம் என்று சொல்லக் கூடாது.----0000----
அவ்யாக்ருத பிரபஞ்சம் (மாயா) – வெளித்தோற்றத்திற்கு
வராத உலகம்
வியாக்ருத பிரபஞ்சம் – நாம் அனுபவிக்கும் உலகம்.
இது இருவகையாக இருக்கிறது. 1. சாதனா பிரபஞ்சம்,
2. சாத்திய பிரபஞ்சம்
இவையிரண்டுமே அத்யாரோபம் என்று அழைக்கப்படுகிறது. சாதனைகள்
லௌகீக சாதனை, வைதீக சாதனை என்று இரண்டாக பிரிக்கப்படுகிறது.
லௌகீக சாதனை என்பது வேதத்தின் உதவியில்லாமல் பயன்படுத்துவது,
வைதீக சாதனை என்பது வேதத்தின் உதவியுடன் செய்யப்படுவது. இதில் காயிகமாக, வாக்காக செய்யும் அனைத்தும் கர்மம் என்றழைக்கப்படுகிறது,
மௌனமாக செய்யப்படுவது அனைத்தும் உபாஸனை என்றழைக்கப்படுகிறது
பகுதி-01 (அஸ்வ பிராமனம்)
இந்த
மந்திரம் அஸ்வ பிராமனம் என்று அழைக்கப்படுகிறது. இதில் அஸ்வமேத தியானத்தைப்
பற்றி கூறப்பட்டிருக்கிறது. இது சத்திரியர்களை தவிர்த்து மற்ற
வர்ணத்தார்கள் தகுதியுடையவர்களாக இருக்கிறார்கள். சத்திரியர்கள்
இதை யாகமாக செய்தால்தான் அதன் பயனை அடைய முடியும். இந்த தியானத்திற்குரிய
ஆலம்பனம் குதிரை; விராட் (ஸ்தூல பிரபஞ்சத்தை
உடலாக உடைய ஈஸ்வரன்) எனவே குதிரையை தியானம் கீழ்கண்டவாறு தியானம்
செய்ய வேண்டும். குதிரையின் ஒவ்வொரு அங்கங்களையும் இந்த உலகத்தின்
பகுதிகளாக நினைத்து தியானம் செய்ய வேண்டும். இதனால் மனம் விரிவடையும்,
உலகமே என்னுடையது என்று நினைக்க வேண்டும்.
குதிரையின்
முழு உடலை உலகமாகவும்,
தலையை அதிகாலையாகவும், கண்ணை சூரியனாகவும்,
பிராணனை வாயுவாகவும், நடு உடலை காலமாகவும்,
வயிற்றை ஆகாசமாகவும், கால்குளம்பை பிருத்வியாகவும்,
எலும்புகளை நட்சத்திரங்களாகவும், ரோமத்தை தாவரங்களாகவும்,
யோனியை சமுத்திரமாகவும் தியானிக்க வேண்டும்..
பகுதி-02 (அக்னி பிராமனம்)
இது ஏழு மந்திரங்களை கொண்டது. இதுவும் மனதை விரிவடைய செய்கிறது. இதில் ஆலம்பனம்
அக்னி; உபாஸ்யம் விராட். அக்னியை புகழ்ந்து
தியானித்தால், சுகமும் ஏற்படும், துர்மரணம்
ஏற்படாது.
சங்கரரின் விளக்கம்:
ந ஏவ இஹ கிஞ்சின அக்ரே ஆஸித் : சிருஷ்டியெல்லாம் தோன்றுவதற்கு
முன் ஒன்றுமேயில்லை.
ஸத்காரியவாதம்- காரணம்
என்ற ஒன்று இருக்கிறது. காரண ஸத்தானது
நிரூபிக்கப்படுகிறது. அனைத்து மித்யாவும் ஒன்றைதான்
ஆதாரமாக கொண்டிருக்கிறது.
இரண்டு
கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு சங்கராச்சாரியார் பதிலளிக்கிறார்.
1.
சிருஷ்டிக்கு முன் காரணம் இருந்ததா அல்லது இல்லையா?
2.
சிருஷ்டிக்கு முன் காரியம் இருந்ததா அல்லது இல்லையா?
இரண்டும்
இருந்தது என்பதுதான் அவருடைய பதில்.
பூர்வபக்ஷி:
ஷணிகவிக்ஞான விதி –
தோன்றியவையெல்லாம்
நமது எண்ணங்களே அது எதிலிருந்தும் உற்பத்தியாகவில்லை. எப்படி
கனவில் காணும் பொருட்கள் நாம் அனுபவிக்கிறோம், அவைகளெல்லாம் எண்ணங்களே.
அதே போன்று நதியின் நீரோட்ட்த்தில் ஒரே நீர் தோன்றுவது மாதிரி உண்மையில்
ஒவ்வொரு க்ஷணமும் அந்த நீர் சென்றுவிடுகிறது. அதேபோல பொருள் தோன்றி
பின் அழிந்து இவ்வாறு தொடர்ந்து நடப்பதால் தொடர்ச்சியாக ஒரு பொருளை பார்க்க முடிகிறது.
பதில்:
நம்
அனுபவம் மூன்று விதமாக இருக்கிறது. அவைகள்
1. பிரத்யக்ஷம் – ஐந்து இந்திரியங்களை
கொண்டு முதல்முறையாக அறிதல்.
2. ஸ்மிருதி – நினைத்துப்பார்த்தல்
3. பிரத்யபிக்ஞா – ஏற்கனவே அறிமுகமானவர் என்று பார்ப்போம்.
பிரத்யபிக்ஞா அனுபவத்தால் என்னுடைய தொடர்ச்சி இருக்க வேண்டும்,
நான் பார்க்கப்படும் பொருளும் தொடர்ச்சியாக இருக்க வேண்டும்.
இவ்வாறாக
இந்த மூன்று விதமான அனுபவங்களையும் வைத்து பார்த்தால் ஷணத்தில் தோன்றி மறையும் பொருளுக்கு
ஆதாரம் இல்லை.
பூர்வபக்ஷி: தோன்றி
மறையும் பொருள் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருப்பதால் உனக்குத் தொடர்ச்சியாக இருக்கிறது.
பதில்: ஒரு பொருள்
தொடர்ச்சியாக தெரிய வேண்டுமென்றால், பிரத்யபிக்ஞாதான் காரணம்
என்று இவ்வகையில் காரண ஸத்தாவானது நிருபிக்கப்படுகிறது.
காரிய ஸத்தா நிரூபனம்:
பூர்வபக்ஷி: காரியம்
காரணத்தில் இருந்து வந்ததா? இல்லையா?
களிமண்ணுக்குள் இல்லாத பானைதான் பின் உருவாகிறது. பானையானது
களிமண்ணுக்குள் அவ்யக்தமாக இருந்தது அதை வெளித்தோற்றத்திற்கு கொண்டு வருவதுதான் ஸ்ருஷ்டி
என்று கூறப்படுகிறது.
அபிவியக்திலிங்காத்: அபிவியக்தி
(வெளிப்படுதல்) காரணத்தினால்தான் இருக்கின்ற பொருள்தான்
வெளித்தோற்றதிற்கு வரமுடியும். இருட்டினால் மறைக்கப்பட்டிருக்கும்
பொருட்கள் மட்டும்தான் வெளிச்சத்தினால் தெரிய வரும். களிமண்ணின்
உருவமே பானை வெளிவருவதற்கு தடையாக இருக்கிறது. அதை நீக்கினால்
பானை வெளிவந்து விடும். அதாவது ஒரு தோற்றமே மற்றொரு தோற்றத்திற்கு
தடையாக இருக்கிறது.
அவர் நாளை வருகின்றார், அவர் என்பவர் இருக்கிறார?,
இல்லையா? என்று கேள்வியே கேட்க முடியாது.
இத்தொடர் இருப்பவரைத்தான் குறிக்கிறது. எனவே இருக்கின்ற
பொருளைத்தான் எதிர்காலத்தில் பேசமுடியும்.
சர்வக்ஞன் ஈஸ்வரன் எல்லாவற்றையும் அறிபவர். மூன்று
காலத்திலும் உள்ளதையும், அறிந்தவர். இது
உண்மையாக வேண்டுமென்றால், வெளிவரப்போகும் பானையைப்பற்றித் தெரியும்.
இருக்கிறதைத்தான் பகவானுக்கு தெரியும். இல்லாததை
பகவானுக்கு தெரியும் என்று சொல்ல முடியாது. எனவே ஈஸ்வரன் சர்வக்ஞன்
என்று உண்மையானால் இருப்பதுதான் வெளித்தோற்றத்துக்கு வரும் என்று ஒத்துக்கொள்ள வேண்டும்.
அபாவம் நான்கு வகையாக இருக்கிறது. அபாவம்
– இல்லை; பாவம்- இருத்தல்.
- பிராக் அபாவம் – முன்பு இல்லாதது; எந்தப்பொருளும் தோன்றுவதற்கு முன் அது இல்லாத நிலை.
- ப்ரத்வம்ஸ அபாவம் – எல்லா காலத்திலும் இல்லாத நிலை
- அத்யக்த அபாவம் – எல்லா காலத்திலும் இல்லாத
நிலை. (உ.ம்) முயல்
கொம்பு, ஆகாயத்தாமரை.
- அன்யோன்ய அபாவம்
– பேதம் – வேற்றுமை. இருபொருள்களுக்கும்
இடையே உள்ள வேற்றுமை பானையில் உள்ள குணம் துணியில் இருக்காது அதே போன்று துணியில் உள்ள
குணம் பானையில் இருக்காது.
பதில்: பிராக் அபாவமும் – தோன்றாத
பொருளின் இருப்பைப் பார்க்கிறோம் எப்படி அன்யோன்ய அபாவத்தில் இருப்பை பார்க்கிறாயோ
அப்படி காரியமும் தோன்றுவதற்கு முன் இருந்தது.
காரியத்தின் லட்சணம்- காரியம் காரணத்தோடு சம்மந்தம் வைத்து
இருப்பை அடைவது (உ.ம்) பானை உருவாகுவதற்கு களிமண்ணோடு சம்மந்தத்தை வைத்த பிறகுதான் தோன்றியது.
நிஷேத வாக்கியம் – இதை செய்யாதே என்று சொல்கின்ற
வாக்கியம்
விதி வாக்கியம் – இதை செய் என்று சொல்லும் வாக்கியம்.
பகுதி-03 (உத்கீத பிராமனம்)
இது
28 மந்திரங்களைக்
கொண்டது. இதில் வருவது பிராண உபாஸனை. ஹிர்ண்யகர்ப்பன் உபாஸனை.
பிராண தத்துவத்திற்கு 6 குணங்கள் கொடுக்கப்பட்டு
அதில் தியானம் செய்ய வேண்டும்.
பாஷ்ய விசாரம்:
பூர்வமீமாம்ஸிகள் என்பவர்கள் வேதத்தை பிரமாணமாக கொண்டவர்கள், ஆனால் அனைத்து
வேதத்தையும் கர்ம காண்டமாக எடுத்துக் கொள்பவர்கள். இவர்கள் அனுபந்தம்
சதுஷ்டயம் என்ற கருத்தை உடையவர்கள்.
1.
முழு வேதமும் கர்மபரம் – கர்மத்தையே லட்சியமாக கொண்டது.
கர்மத்தை போதிப்பதற்குத்தான் வேதம் உருவாக்கப்பட்டது.
2.
விதிவாக்கியமும், நிஷேத வாக்கியமும் பிரமாணம்,
மற்றதெல்லாம் பிரமாணமல்ல.
விதி வாக்கியம் இதை செய் என்று சொல்லும் வாக்கியம்; நிஷேத வாக்கியம் இதை செய்யாதே என்று சொல்லும் வாக்கியங்கள். மற்றதெல்லாம் அர்த்தவாதம் என்று எடுத்துக் கொள்கிறார்கள். அர்த்தவாதம் என்பது பிரமாணல்லாத வாக்கியங்கள், அந்த
வாக்கியங்களுக்கென்று எந்த பயனும் இல்லை. ஆனால் அதை விதி வாக்கியத்தில்
சேர்த்துக் கொள்ளலாம்.
3.
கர்மமே பலனைத்தரக்கூடியது,ஈஸ்வரன், தேவதைகள் இவர்களெல்லாம் கிடையாது.
4.
வேதம் பிரமாணமாக இருக்கிறது. ஞானம் அறிவை கொடுக்கும் கருவியாக
இருக்கிறது
5.
பதம் பிரமாணமல்ல; வாக்கியம்தான் பிரமாணம்
6.
வேத வாக்கியத்திலுள்ள வினைச்சொல்தான் அறிவைக் கொடுக்கிறது.
சங்கரரின்
பதில்
ஸித்த
போக்ய வாக்கியம்:
இருக்கிற உண்மையை சொல்லும் வாக்கியம் பிரமாணம். வினைச்சொல் செயலைத்தூண்டுவது மற்றும் இருக்கிறது என்று சொல்லும் சொல்லாகவும்
உபயோகப்படுத்தப்படுகிறது.
ஒரு
வாக்கியம் அறிவைக் கொடுக்கிறதா இல்லையா என்பதே பிரமாணம். அறிவோடு
பயனயும் கொடுக்கத்தேவையில்லை. கர்மத்தை உபதேசிக்கும் வாக்கியங்களும்,
பிரம்ம ஞானத்தை உபதேசிக்கும் வாக்கியங்களும் பிரமாணமாகும். மற்ற வாக்கியங்கள் எல்லாம் அர்த்தவாதம். இந்த அர்த்தவாதம்
மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது.
1.
அனுவாதம்: மற்ற பிரமாணங்களின் மூலமாக அறிந்ததைக் கூறினால்
அதற்கு அனுவாதம் என்று பெயர்
2.
குணவாதம்: நம்முடைய அனுபவத்திற்கு வேறாக கூறுவது.
3.
பூதார்த்தவாதம்: நமக்கு தெரியாத விஷயம் அதே சமயம்
அந்த விஷயமானது அனுபவத்திற்கு வேறாகவும் இல்லாதிருப்பது. (உ-ம்). வஜ்ர ஆயுதமுடைய இந்திரன். இதில் இந்திரன் கையில் வஜ்ராயுதம் இருக்கிறதா, இல்லையா
என்று நிரூபிக்க முடியாது. எனவே இந்த பூதார்த்தவாத வாக்கியங்களை
பிரமாணமாக எடுத்துக் கொள்ளலாம்.
முதல்
இரண்டு அர்த்தவாதங்களும் அப்பிரமாணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பிரமாணம்
என்பது வேறெந்த வகையிலும் அறிய முடியாத நிலையில் இது மட்டும்தான் பயன்படுத்த முடியும்
என்றால் அதைத்தான் பிரமாணம் என்று சொல்ல முடியும்.
அனாதிகதம் - வேறொன்றினால் அறிய முடியாதது.
அபாதிதம் - வேறொன்றினால் நீக்க முடியாதது
செயலைத் தூண்டும் வாக்கியங்கள்தான் பிரமாணம் என்றால், நிஷேத வாக்கியங்கள் செயலை தூண்டவில்லை
அதை மட்டும் ஏன் பிரமாணமாக ஏற்றுக்கொள்கிறீர்கள். அதுபோல ஞான
காண்ட வாக்கியங்களும் செயலை தூண்டாவிட்டாலும் அதை பிரமாணமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.. வேதத்தில் உள்ள வாக்கியங்கள் நான்காக
பிரிக்கப்படுகிறது, அவையாவன
1.
விதி வாக்கியங்கள் - செயலைத் தூண்டும்
2.
நிஷேத வாக்கியங்கள் - செயலொன்றும் கிடையாது
3.
பூதார்த்த வாக்கியங்கள் - செயலொன்றும் கிடையாது
4.
வேதாந்த வாக்கியங்கள் - செயலொன்றும் கிடையாது
இவை நான்கும் பிரமாணம்தான். இவைகளுக்குள்
வராத வாக்கியங்கள் அனுவாதம், குணவாதம் இவைகளில் சேர்க்கப்படும்.
இவைகள் பிரமாண வாக்கியங்களுக்கு உதவி செய்யும்.
உபநிஷத் விளக்கம்:
ஆறு விதமான குணங்களுடன் பிராணனை உபாஸிக்க வேண்டும்.
1.
சுத்தத்வம் – தூய்மையாக
இருத்தல்.
சாஸ்திரின ஞான கர்ம ஸம்ஸ்காரத்
யுக்தம்-
சாஸ்திரத்தில் கூறிய ஞான, கர்ம ஸம்ஸ்காரங்களுடன்
கூடிய இந்திரியங்களை தேவர்கள் என்றும் இயற்கையாக உள்ள குணங்களுடன்
கூடிய இந்திரியங்களை அசுரர்கள் என்று கூறப்படுகிறது.
உலக போகங்களை பார்க்கும்போது, அனுபவிக்க
வாய்ப்பு கிடைக்கும்போது அந்த நேரத்தில் உள்ள நல்ல ஸம்ஸ்காரங்களின் அடிப்படையில் நமது
இந்திரியங்களை நற்காரியங்களில் அல்லது தீய காரியங்களில் ஈடுபடுத்தும். அதே போன்று இயற்கையிலே அமைந்துள்ள குணங்களுடன் உள்ள ஸம்ஸ்காரங்கள் இந்திரியங்களை
செயல்படுத்தும். ஆனால் பிராணனை எந்த சக்தியும் அசுத்தப்படுத்த முடியாது அதனால் அது எப்பொழுதும் சுத்தமாகவே இருக்கும். எனவே இது தூய்மையாக இருக்கிறது என்று தியானிக்க வேண்டும்.
2.
தூர்நாமத்வம்
பிராணனானது தீய, சுயநலமான
எண்ணங்களை விலக்கி வைக்கும். இது தம்மை குறித்து தியானம் செய்யும்
இந்திரியங்களை அசுரர்கள் தாக்கும் போது அதிலிருந்து காப்பாற்ற
சமஷ்டியாக மாற்றிவிடுவதால் அசுரர்கள் செயலிழந்து தோல்வியடைகிறார்கள்.
கண்கள் சூரியனாகவும், மனதை சந்திரனாகவும் இதே போன்று
மற்ற இந்திரியங்களை தேவதைகளாக மாற்றி விடுகிறது.
3.
பர்த்ருத்வம்: தாங்குவது (Supporting)
பிராணனுக்கு பசியெடுக்கும்போது
கிடைக்கும் உணவை உடலிலுள்ள எல்லா பகுதிகளுக்கும் சமமாக பிரித்துக் கொடுக்கும்.
4.
ஆங்கிரஸ்த்வம் : உடலிலுள்ள
ஒவ்வொரு உறுப்பின் சாரமாக பிராணன் இருக்கிறது
5.
வேதாத்கமத்வம்: வேத ஸ்வரூபமாகவும்
இருக்கிறது. வேதம் சப்தரூபமாகவும் இருப்பதால், இது சப்த ரூபமாகவும் இருக்கிறது. எல்லா ஜீவர்களிடம் சமமாக
இருக்கிறது.
6.
உத்கீதத்வம்- ஓம்கார ஸ்வரூபம்.
இந்த
ஆறு குணங்களை தியானித்தால் ஹிரண்யகர்ப்பனை அடையலாம்.
சாம
வேதத்தை நன்றாக உச்சரிப்பதற்கு மூன்று விதமான குணங்கள் தேவை. அவைகள்
1.நல்ல குரல்வளம்
2. சரியாக உச்சரித்தல்
3. சரியான ஸ்தானத்திலிருந்து சொற்கள் வர வேண்டும் (பிரதிஷ்டா)
ஜபத்தில்
போது சொல்ல வேண்டிய மூன்று வரி மந்திரம்:
அத2: பிராண
உபாஸனை எப்படி செய்ய வேண்டும் என்று கூறிய பிறகு
அத: இந்த ஜபத்தினால்,
நாம் யாரை தியானிக்கிறோமோ அவர் ஸ்வரூபமாக மாறிவிடுவோம்.
பவமானம் – தூய்மைப்படுத்துதல்
அப்யாரோகஹ- ஹிரண்யகர்ப்பனுடன்
ஒன்றாகி விடுதல், நம்மை நாமே உயர்த்திக் கொள்ளுதல்
அதிகாரி- யாகத்தின்
எஜமானன் இந்த மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.
அஸதோ – இல்லாமையிலிருந்து; மா – என்னை
ஸத்- இருத்தலுக்கு,
கமய – அழைத்துச் செல்
தமஸோ – இருட்டிலிருந்து,
மா – என்னை
ஜ்யோதிர் – வெளிச்சத்திற்கு,
கமய – அழைத்துச் செல்
ம்ருத்யோ – மரணத்திலிருந்து,
மா – என்னை
அம்ருதம் – மரணமற்ற
நிலைக்கு, கமய – அழைத்துச் செல்
உபநிஷத்
விளக்கம்:
அஸத்தையும், இருட்டையும் மரணத்திற்கு ஒப்பிட்டு;
ஸத்தையும், வெளிச்சத்தையும் மரணமற்ற நிலைக்கு ஒப்பிடப்படுகிறது.
சங்கரரின்
விளக்கம்:-
1.
சாஸ்திரத்திற்கு முரண்பட்ட செயல், சிந்தனை
இவ்வாறு இருக்கின்ற என்னை, சாஸ்திரம் உரைக்கும் செயலையும் சிந்தனையை
உடையவனாக மாற்றுவாயாக. அஸத் – அதர்மம்;
ஸத்-தர்மம், அதர்மத்திலிருந்து
தர்ம வழிக்கு என்னை எடுத்துச் செல். இங்கே சக்தியை கேட்கிறோம்.
2.
தமஸோமா ஜ்யோதிர்கமய – தமஸ்-அறியாமை,
அக்ஞானம், இருள்; ஜ்யோதி-
ஞானம், உண்மை அறிவு, வெளிச்சம்.
சாஸ்திரம் உரைக்கும் சரியான செயல், சிந்தனை இவைகள்
இல்லாதிருக்கும் அறியாமை. இந்த அறியாமையிலிருந்து என்னை சாஸ்திரம்
உரைக்கும் செயலையும், சிந்தனையும் உடையவனாக மாற்றுவாயாக.
அறிவும் உடல்நலமும் மிகவும் அத்தியாவசியமானது.
3.
ம்ருத்யு- மரணம்; அம்ருதம்
– மரணமற்ற நிலை. ம்ருத்யு=அஸத் + தமஸ், அம்ருதம்-
ஹிரண்யகர்ப்பன். அறியாமையிலிருந்தும், அதர்ம செயல்களை செய்யாமல் ஹிரண்யகர்ப்பனை அடைய வேண்டும், ஐக்கியமாகி விட வேண்டும்.
வேதாந்த
விசாரம்:
·
அஸத்-மித்யா; ஸத்-ஸத்யம். மித்யாவிலிருந்து உண்மைக்கு அழைத்துச் செல். பொய் தோற்றத்தை
உண்மையென்று நம்பி அதைப் பற்றிக் கொண்டிருக்கும் என்னை உண்மையை பற்றிக் கொள்ள அழைத்துச்
செல்.
·
அறியாமையிலிருந்து விடுவித்து அறிவை அடைவதற்கு அழைத்துச் செல்.
·
துயரத்திலிருந்து மோட்சத்திற்கு அழைத்துச் செல்.
பகுதி-04 (புருஷவித பிராமனம்)
உலகத்திலுள்ள
பொருட்கள் யாவும் சாதனமாகவும், சாத்தியமாகவும் இருக்கிறது. (உ-ம்) பஞ்சு – நூல்; நூல்-துணி, துணி-ஆடைகள்
ஒரு
ஜீவன் கர்ம உபாஸனைகள் செய்து அடுத்த ஸ்ருஷ்டியில் ஹிரண்யகர்ப்பனாக பிறக்கிறான்.
1.
ஹிரண்யகர்ப்பன்
பெருமை: சாத்திய பிரபஞ்சத்தின் பெருமை. அஹம், புருஷ, ஸ்ருஷ்டி இந்த மூன்றும் ஹிரண்யகர்ப்பனுடைய மறு
பெயர்கள். இவர் சுற்றி முற்றும் பார்த்து விட்டு, தனக்கு வேறாக எதையுமே பார்க்கவில்லை என்று உணர்ந்தவுடன் அவர் வாயிலிருந்து வந்த முதல் சொல் ”நான்” மட்டும்
தான் இருக்கிறேன் என்பதாகும். ஆகவே விராட் ஸ்வருபத்துக்கு நான்
என்ற பெயர் வந்தது. அதனால் அவருக்கு பிறகு வந்த எல்லா ஜீவர்களும்
யார் அவர்களை அழைத்தாலும், நான் என்றுதான் முதலில் சொல்கிறார்கள்.
இந்த விராட் தான் செய்த பாவங்களையெல்லாம் எரித்து விட்டதால் அவனுக்கு
“புருஷன்” என்று பெயர் வந்துள்ளது.. ஔஷத் – எரித்துவிடுதல், ஹிரண்யகர்ப்பனாக
இருந்தாலும் அவரும் சம்சாரிதான்.
2.
இந்த
மந்திரம் சம்சார ஸ்வரூபம், சம்சார ஹேது, பந்தம், பந்த நிவிருத்தி உபாயம் ஆகியவைகளைப் பற்றி விளக்குகிறது.
பயம்தான்
சம்சாரம் என்று சொல்லப்படுகிறது. பயம் என்பது துக்க அனுபவம். அரதி-சுகமின்மை (சுக அபிராப்தி).
ஹிரண்யகர்ப்பனும் பயத்தால் ஆட்கொள்ளப்படுகிறான். சுகமில்லாமலும் இருக்கிறான். பயம் என்பது சம்சார ஸ்வரூபமாக
இருக்கிறது. பயத்திற்கு காரணமென்ன? அதை
நீக்குவதற்கு என்ன வழி என்பதை இந்த மந்திரத்தில் சொல்லப்படுகிறது. அபிபேத்-பயப்பட்டார்; ஏகாகி-தனிமை – நாம் மட்டும் இருந்தால் பயமும் வந்து விடும்.
ஹிரண்யகர்ப்பன்
தனியாக இருக்கும்போது பயப்பட்டார். எனவே அவரது அனைத்து ஜீவர்களும், அனைத்து படைப்புகளும் தனிமையில் பயத்தை அனுபவிக்கின்றார்கள். பயம் வந்தவுடன் அதைப் போக்குவதற்கான வழியை விசாரம் செய்கிறார். அதிலிருந்து ஒரு அறிவை அடைந்தார். ( ஈக்ஷா-சிந்தனை, சக்ரே-செய்தார்.) எனக்கு வேறாக இரண்டாவதாக ஒன்றும் இல்லை என்று
உணர்ந்தார். எதனிடமிருந்து நான் பயப்பட வேண்டும் என்று விசாரம்
செய்தார். இப்படி நினைத்ததும் அவரிடமிருந்து பயம் சென்று விட்டது.
எதைக் கண்டு ஒருவன் பயப்பட வேண்டும் என்று வினவினால் எதனிடத்திலும் நாம்
பயப்பட தேவையில்லை என்ற அறிவு வந்து விடும். ஆனால் இருமையிலிருந்தும்
பயம் ஏற்படுகிறது.
இருமையிலிருந்து
எப்படி பயம் வருகிறது?
இருமை
என்னை அழித்து விடும் என்ற நினைப்பதால்தான் பயம் வருகிறது. சரீரத்திற்கு
வருகின்ற அழிவைக் கண்டு பயப்படுகிறோம், அல்லது புகழுக்கு ஏற்படும்
அழிவைக் கண்டு பயப்படுகிறோம். இப்படி சூட்சும சரீர அழிவைக் கண்டும்
பயப்படுகிறோம். நான் சரீரம் என்று நினைப்பது தவறான எண்ணமாகும்,
நான் என்பதை ஆத்மாவாக நினைக்காததால்தான் சரீரத்தை நானாக நினைத்து அதன்
அழிவை எண்ணி பயம் கொள்கிறோம்.
சம்சார
நிவிருத்தி உபாய விசாரம்:
விசாரம்
ஆத்மாவைப்பற்றியதாக இருக்க வேண்டும் அல்லது நான் யார்? என்பதைப்
பற்றி இருக்க வேண்டும். இதன் பலனாக நாம் அடைவது ஆத்ம ஞானம்.
எனக்கு வேறாக ஒன்றும் இல்லை அன்ற ஞானத்தை அடைய வேண்டும். எந்த அறிவில் இருமை இல்லையோ அதில் சம்சாரம் என்பது கிடையாது. தன்னைத் தவிர வேறெதுவும் இல்லை என்று அறியும்போது பயம் நீங்கி விடும்.
ஹிரண்யகர்ப்பன்
தனியொரு ஆளாக எந்த உதவியும் இல்லாமல் எப்படி ஆத்ம ஞானத்தை அடைந்தார்?
முக்ய
ஹேது, சஹகார் ஹேது என்று இரண்டு வகையான ஹேதுக்கள் உள்ளன. இதில்
முக்ய ஹேது என்பது ஒரு பொருளின் வர்ணத்தை அறிய உதவுகின்ற கண்ணாகும்.. சஹகாரி ஹேது என்பது ஒரு பொருள் நன்றாக தெரிவதற்கு உதவும் மற்ற விஷயங்கள்,
போதிய வெளிச்சம், அருகில் இருப்பது, போன்றவையாகும்.
அதேபோல ஆத்ம ஞானம்
அடைவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முக்கிய காரணம் ஆத்ம விசாரம்
– குரு-சாஸ்திர உதவியுடன் செய்யப்படுவது.
சஹகாரி விசாரம்: ஞானமடைய அவர்கள் செய்ய வேண்டிய
மற்ற தவங்கள். இது ஆளுக்காள் வேறுபடும். எனவே நமக்கு எது உகந்ததாக இருக்கிறதோ அதைக் கொண்டு முயற்சி செய்ய வேண்டும்.
இங்கு ஹிரண்யகர்ப்பன் முற்பிறவியில் செய்த ஆத்ம விசாரத்தின் ஸம்ஸ்காரமும்,
சித்தஸுத்தி இருந்ததாலும் அவரால் எந்த உதவியில்லாமல் ஆத்ம ஞானத்தை அடைந்து
விட்டார்.
ஹிரண்யகர்ப்பன்
தனியாக இருந்ததால் மகிழ்ச்சியில்லாமல் இருந்தார். ஆகவே ஜீவர்களும் தனிமையில்
மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறார்கள். இந்த நிலையானது அவர் ஞானம்
அடைவதற்கு முன் இருந்த நிலையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
சஹ: ஹிரண்யகர்ப்பான்;
நைவ ரேமே- மகிழ்ச்சியற்று இருந்தார்.
ரதி- விரும்பியப்பொருளோடு
இணையும்போது ஏற்படும் மானஸ உல்லாசம்.
தனிமையில்
ஏன் துயரம் வருகிறது?
சம்சாரம் என்பது கர்த்தாவாகவும், போக்தாவாகவும்
இருப்பது. அனுபவிப்பவனுக்கு அனுபவிக்கும் பொருள் இல்லையென்றால்
துயரப்படுவான். இது தனிமையில் இருக்கும்போது ஏற்படும் நிலை.
ஆனால் போக்தா சாட்சியாக இருந்தால் அவனுக்கு தனிமை துயரத்தை தராது.
3.
மனுஷ்ய ஸ்ருஷ்டியைப் பற்றி விளக்குகிறது
4. விலங்குகள் ஸ்ருஷ்டியைப் பற்றி விளக்குகிறது
5. ஹிரண்யகர்ப்பனுக்கு ஸ்ருஷ்டி என்று பெயரிடப்பட்டது
6. தேவர்கள், உணவு ஸ்ருஷ்டியைப் பற்றி விளக்குகிறது
7.
இதில் 5 கருத்துக்கள் விளக்கப்பட்டிருக்கிறது. அவைகள் பிரம்மத்தில்
மாயை ஏற்றி வைக்கப்படுவது, பிரவேச ஸ்ருதி, ஜீவ-பிரம்ம ஐக்கியம், சம்சார வர்ணனை,
வித்யா சூத்திரம், பிரம்ம வித்யாவினால் கிடைக்கும்
பலன்.
1.
அவ்யாக்ருத பிரபஞ்ச அத்யாரோபம் (மாயை ஏற்றி வைக்கப்படுவது)
சாத்திய, சாதனா
பிரபஞ்சம் தோன்றுவதற்கு காரணமான காரண பிரபஞ்சம் ஏற்றி வைக்கப்படுகிறது.
நாம் அடையக்கூடிய சாத்தியங்கள் பல உள்ளதால் சாதனங்களும் பலவாக உள்ளன. ஆனால் மோட்சம் என்கின்ற சாத்தியத்திற்கு
ஒரு சாதனம்தான் இருக்க முடியும். மோட்சம்
அடைவதற்கு பல நிலைகளை கடந்து வர வேண்டும். எனவே ஒவ்வொரு நிலையும்
ஒரு சாதனையாக கருதப்படுகிறது.
ஸோபான
ரூபம் - படிப்படியாக எடுத்துச் செல்வது;
சுதந்திர
ரூபம் - தனிப்பட்ட ஒன்று.
சம்சாரத்தில்
வரும் துயரத்தை மறப்பதற்கு சுகமானது நாடப்படுகிறது. ஆனால்
துயரத்தின் மூலம் மாயைதான், அதை நீக்கினால்தான்
சம்சாரக் கடலை கடக்க முடியும். நம்மிடம் உள்ள அவித்யாவும் சம்சாரத்தின்
மூலக் காரணம். சில இடத்தில் பிரம்மமே மூலம் என்று கூறப்படுகிறது. நாம் அனுபவிக்கின்ற இந்த உலகம் தோன்றுவதற்கு
முன் அவ்யாக்ருதமாக (மாயையாக) இருந்தது
பின் அதிலிருந்துதான் உலகம் தோன்றியது.
தத்
இதம் அவ்யாக்ருதம் ஆஸீத் – இந்த உலகம் தோன்றுவதற்கு முன் வெளித் தோற்றத்திற்கு
வராததாக (மாயையாக) இருந்தது.
தத்
நாமரூபாத்யம் ஏவ வ்யாக்ரியத் – அது நாமரூபங்களாக வெளிப்படுத்தப்பட்டது.
அசௌனாம்
அயம் இதம் ரூபம் இதி –
இதுதான் ரூபம், இதுதான் நாமம்
தத்
இதம் அபி தார்த்
– அதுவே
இது என்பது போல
நாமரூபாத்யாமேவ
வ்யாக்ரியதே
– நாம ரூபங்களாக வெளிப்பட்டது
ஜகத்திற்கு
இரண்டு அவஸ்தைகள் இருக்கிறது. பரோக்ஷ அவஸ்தா
(கண்ணுக்கு தெரியாதது, அனுபவத்திற்கு வராத நிலை),
பிரதிபக்ஷம் அவஸ்தா – இந்த
நாம ரூபங்கள் ஸத் ஆதாரமாகக் கொண்டுதான் வெளிப்பட்டது.
7.2 பிரவேச ஸ்ருதி:
ஈஸ்வரனே
எல்லா சரீரத்துக்குள்ளேயும் நுழைந்திருக்கிறார்.
ஸஹ
ஏஷ இஹ ப்ரவிஷ்டஹ-
ஜீவாத்மா, பரமாத்மா (பிரம்மம்),
எல்லா சரீரங்களிலும், நுழைந்தார். பரமாத்மாவை ஒவ்வொரு
ஜீவனிலும் காணலாம்.
அந்த ஜீவ சரீரத்தில் விளங்கிக்கொண்டிருக்கிறார். உறைக்குள் இருக்கும் கத்திப்போலவும், நெருப்புப் உண்டாக்க
உபயோகிக்கும் இரு மரத்துண்டுகளில் இருக்கும் நெருப்பைப் போலவும் பரமாத்மா நுழைந்திருக்கிறார்.
கனவு, விழிப்பு
நிலையில் நாம் பார்ப்பவனாகவும், கேட்பவனாகவும், போக்தாவாகவும் இருப்பதால் இது விசேஷமாக இருக்கிறது, ஆனால்
ஆழ்ந்த உறக்கத்தில் முழுவதும் வியாபித்திருக்கிறது. சாமான்ய அறிவுடனும் இருக்கிறது,
எப்படி நெருப்பானது அரணிகட்டையில் இருக்கிறதோ. அதுபோல பிரம்மமானது ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது.
சங்கரரின்
விளக்கம்:
பூர்வ
பக்ஷி கேள்வி-1
ஸஹ
என்ற சொல் மாயையே குறிக்கிறது. இது பரமாத்வாவை குறிக்கவில்லை என்று பூர்வ பக்ஷி கேள்வி எழுப்பினான். அவன் இரண்டு காரணங்களை கூறி இவ்வாறு
கேட்டான்.
முதல்
காரணம்:
அது நாமரூபங்களாக வெளிப்பட்டது என்று முன்னால் உள்ள வாக்கியத்தில் நாமரூபங்களுக்கு
முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இரண்டாவது
காரணம்:
அது, அவர் என்ற சொல் முன்னால் பேசப்பட்ட விஷயத்தைத்தான்
குறிக்கும் அதுபோல மாயை பற்றித்தான் பேசப்பட்டது எனவே ஸஹ என்பது மாயைத்தான் குறிக்கும்.
முதல்
பதில்:
ஒரு செயல் செய்யப்படுகின்றதென்றால் அது அறிவுள்ள ஒருவனால்தான் செய்ய
முடியும், வெறும் ஜடமாக இருப்பதெல்லாம் செயலுக்கு காரணமாக இருக்காது.
எனவே இந்த இடத்தில் மாயை நாமரூபங்களாக வெளிப்பட பரமாத்மா தேவை.
இரண்டாவது
பதில்:
முதலில் மாயைத்தான் கருத வேண்டும், ஆனால் அது தொடரின்
பொருந்தி வருகிறதா என்றும் பார்க்க வேண்டும். ஒரு சொல்லுக்கு
பல அர்த்தங்கள் இருக்கலாம் எந்த அர்த்தம் அந்த
வாக்கியத்திற்கு பொருந்தி வருகிறதோ அதைத்தான் புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக, கிராமம் சுத்தமாக இருக்கிறது என்ற சொல்லில்
கிராமம் என்ற இடத்தை பொருட்படுத்துகிறது, விழாவிற்கு கிராமமே
வந்தது என்ற வாக்கியத்தில் கிராமம் என்ற சொல்லுக்கு அங்கு வசிக்கும் மனிதர்களை குறிக்கிறது,
அந்த கிராமத்திற்கு செல்லாதே என்ற வாக்கியம், இடத்தையும்,
மனிதர்களையும் குறிக்கிறது. அதுபோல அவ்யாக்ருதம்
என்ற சொல்லானது “மாயை மட்டும்”, அல்லது “பிரம்மன் மட்டும்”, அல்லது “மாயையும் பிரம்மத்தையும்
சேர்த்தும் குறிக்கின்றது. எனவே இந்த இடத்தில் அவ்யாக்ருதம் என்ற
சொல்லுக்கு இரண்டாவது அர்த்தமான பிரம்மத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.
பூர்வ
பக்ஷி கேள்வி-2
பரமாத்மா
வீட்டைக்கட்டி உள்ளே நுழைவது போல ஜீவாத்மாவினுள் நுழைந்தார் என்று எடுத்துக் கொள்ளலாமா?
பதில்-2: வரையறுக்கப்படாத பிரம்மன்
எப்படி வரையறுக்கப்பட்ட உடலுக்குள் நுழைய முடியும். பரமாத்மா எங்கும் நிறைந்திருப்பதால்
இப்படியெல்லாம் நுழைய முடியாது.
பூர்வ
பக்ஷி கேள்வி-3
வீட்டைக்கட்டி
முடித்த பிறகு அதற்குள்ளே நுழைவது அதன் எஜமானன்தான் அந்த வீட்டை கட்டியவர்கள் அல்ல
அதேபோல பரமாத்மா இந்த உடலை ஸ்ருஷ்டி செய்தார், ஜீவாத்மா எஜமானன் போல உள்ளே நுழைந்தார்.
பதில்-3: வேதம் பரமாத்மா உடலை ஸ்ருஷ்டி
செய்துவிட்டு தானே நுழைந்தார் என்று தெளிவாக சொல்கிறது. எனவே இந்த
கருத்தும் ஏற்க முடியாது.
பூர்வ
பக்ஷி கேள்வி-4
ஒரு
பொருள் தோன்றியவுடன் எந்த குணமும் இல்லாமல் இருக்கிறது. பிறகுதான்
குணங்களும் வந்து சேர்கின்றது. அதைப்போல சரீரத்திற்குள் பரமாத்மா
நுழைந்து விட்டார்.
பதில்-4: அது மாதிரி முடியாது. ஏனெனில்
திரவியத்தை சைதன்யம் சார்ந்திருக்கிறது அது மித்யாவாகி விடும். ஆனால் பரமாத்மா நித்யமாக ஏற்றுக்கொண்டால் இந்த மாதிரி நுழைவதை ஏற்றுக் கொள்ள
முடியாது
பூர்வ
பக்ஷி கேள்வி-5
பழத்திற்குள்
விதையிருக்கிறது அதுபோல இந்த சரீரத்திற்குள் பரமாத்மா நுழைந்துள்ளார்.
பதில்-5: சாஸ்திரம் பரமாத்மாவை நிர்விகாரம், மாற்றத்திற்குட்படாதது
என்று கூறியிருக்கிறது.
பூர்வ
பக்ஷி கேள்வி-6
சத்தியமான
உடலுக்குள் பரமாத்மா பிரதிபலிப்பாக இருக்கிறார்
பதில்-6: சத்தியமான மனதில் பரமாத்மா
பிரதிபலிக்க முடியாது.
வேதாந்த
விளக்கம்:
நுழைதல்
என்பது செயலாக எடுத்துக் கொண்டால் அர்த்தவாதமாகி விடுகிறது. இந்த உடலுக்குள்
பரமாத்மாவை அறியமுடியும். சரீரத்திற்குள் உள்ள மனம் அந்தகரணம்.
சங்கரரின்
விளக்கம்:
ஜீவாத்மா
பலவாக இருக்கிறது,
பிறகு எப்படி இவையெல்லாம் ஒரு பரமாத்மாவாக முடியும்?
பல
ஜீவாத்மா என்று நீ சொல்வது,
பல மனங்களைத்தான் குறிப்பிடுகிறாய், ஆனால் சைதன்யம்
ஒன்றுதான்.
ஜீவாத்மா
சம்சாரியாக இருக்கிறவன்,
சம்சாரியில்லாத பரமாத்மாவோடு ஐக்கியப்படுத்தினால் ஈஸ்வரனும் சம்சாரியாகி
விடுவான் அல்லவா?
நித்திய, சுத்தமான
பரமாத்மாவோடு அசுத்தமான ஜீவாத்மாவை சேர்த்தால் ஜீவாத்மா சுத்தமாகி விடும். எந்த கருத்து பலன் தருகிறதோ அதை எடுத்துக்கொள்ளலாம். இங்கு பரமாத்மாவோடு சேர்வதால் நான் சுத்தமாகி விடுவேன் என்ற பலன் உண்டு.
வேதாந்தம் எப்பொழுதும் நமக்கு தெரியாததை விளக்கி சொல்கிறது. நாம் சுத்தமானவன் என்பது தெரியாததால் அதை எடுத்துச் சொல்வதாக எடுத்துக் கொள்ள
வேண்டும்.
ஜீவாத்மா
சம்சாரி என்பது பிரத்யக்ஷ பிரமான சித்தம். இது இப்படி இருக்கும்போது அவன் அசம்சாரி
என்றால் பிரதியக்ஷ பிரமானத்துக்கு எதிராக அல்லவா இருக்கிறது?
அனுபவத்திற்கு விரோதமாக எப்படி சொல்கிறது?
ஆனந்தஸ்வரூபமாக்
இருக்கின்ற ஆத்மா எப்பொழுதுமே நம் அனுபவத்திற்கு விஷயமாக வந்ததில்லை, வரவும்
வராது. உன்னுடைய துக்க அனுபவத்திற்கு காரணம் என்ன? நீ மனதிலுள்ள அனுபவத்தைப் பற்றி பேசிக் கொண்டு இருக்கிறாய் அதிலுள்ள துக்கத்தை
உணர்கிறாய். மனதில் உள்ள சுக துக்கத்தை உன்னுடைய ஸ்வரூபமாக நினைத்து
விட்டாய். குழந்தைகள் துக்கப்பட்டால் பெற்றோர்களும் துக்கப்படுவதை
போல உன்னிடமிருந்து வேறான ஒன்றிலிருந்து துக்கத்தை உன்னுடையது என்று நினைத்து விட்டாய்.
உன்னுடைய பிரதிபக்ஷ பிரமாண அனுபவமானது மனதில்
ஏற்படுவது அதை நீ உன்னுடையது என்று ஏற்றுக் கொண்டிருக்கிறாய். நீ மட்டும் மனதிலிருந்து பிரிந்து நின்று சாட்சியாக இருந்தால், அறிவு ஸ்வரூபமாக இருந்தால் நீ ஆனந்த ஸ்வரூபமானவன் என்று உணர்ந்து
கொள்வாய்.. மனதினுடைய அனுபவம் ஆத்மா அனுபவிக்கும் விஷயம் அல்ல
என்று புரிந்து கொள்ள வேண்டும்.
ஆத்மாவை
ஒரு பொருளாக அனுபவிக்க வேண்டாம், ஆனால் ஆத்மா ஆத்மாவை அனுபவிக்கட்டுமே.
அனுபவிப்பனும், அனுபவிக்கப்படும்
பொருளும் ஒன்றாக இருக்க முடியாது. உதாரணமாக நானும், நான் சாப்பிடும் இட்லியும் ஒன்றாக முடியாது.
ஒரு
பகுதியான ஆத்மா அனுபவிப்பவன், இன்னொரு பகுதியான ஆத்மாவை அனுபவிக்கலாமே?
ஆத்மாவனது
நிர்விகல்பம்
(பிளவுபடுத்த முடியாதது) எனவே இது சாத்தியமல்ல.
எதற்கு அவயவங்கள் இருக்கிறதொ அவையெல்லாம் அழியக்கூடியவை ஆனல் ஆத்மா அழிவற்றது,
அவயவங்கள் இல்லாதது. ஆத்ம ஞானம், ஆத்மாவை அனுபவிக்க முடியாது, ஆத்மாவை அறிந்தால் மனதிற்குள்
வரும் மனநிறைவை அனுபவிக்கலாம்.
ஆத்மாவுக்கு
சுக-துக்கம், இச்சா, துவேஷம் போன்ற
குணங்களை உடையது. இதை அனுமான பிரமாணத்தால்தான் அறிய முடியும்.
ஆத்மா ஜடம், மனமும் ஜடம், இவையிரண்டும் சேர்ந்து சைதன்யம் தோன்றுகிறது.
நித்யமான
ஆத்மாவில் அநித்யமான குணங்கள் எப்படி வந்து போகும். குணத்தையும் அதை கூடியிருப்பவனையும்
பிரக்க முடியாது என்று தர்க்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது ஆத்மா நித்யம், குணங்கள் அநித்தியம் என்று ஏற்றுக்கொள்ள முடியாது. மோட்சத்தையே
அடைய முடியாத நிலை ஏற்பட்டு விடும். நித்யமான ஒரு பொருள் அநித்யமான
பொருளோடு தொடர்ந்து இணைந்து இருக்க முடியாது.
ஒரு
பொருளை கண்ணால் பார்க்க முடியாது, ஆனால் அதன் குணங்களை பார்க்க முடியும்.
குணங்களை பிரத்யக்ஷ பிரமானத்தால் பார்க்கலாம்.
ஆனால் ஆத்மாவை அனுமானத்தினால் அறிய முடியும்.
என்பது தவறு.
சம்யோகம்-சேர்க்கை-
இரண்டு பொருட்கள் ஒன்று சேர வேண்டுமானால் இரண்டும் உருவத்துடன் இருக்க
வேண்டும் என்ற தர்க்கத்தில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் ஆத்மாவும்,
மனதும் உருவமற்றவை எனவே இரண்டும் ஒன்று சேர முடியாது.
ஆத்மாவானது மிகச்சிறிய
அணு, மிகப்பெரியது விபு இவையிரண்டுக்கும்
இடைப்பட்டது என்றும்,
ஆத்மாவின் அளவு ஸ்தூல உடம்பின் அளவைப்பொறுத்திருக்கும் என்றும் ஜைனர்கள் கூறுகிறார்கள். எதற்கெல்லாம் உருவமிருக்கிறதோ
அவையெல்லாம் அநித்யம் எனவே ஆத்மாவிற்கு இது பொருந்தாது.
7.3 சம்சார வர்ணனை:
மனதில்
இருக்கும் நிறைவின்மை சம்சாரம். அதற்கு காரணம் அறியாமை.
மந்திர
விளக்கம்:
தே-பிரம்மத்தை;
ந பஷ்யந்தி- (மனிதர்கள்) அறிவதில்லை.
அறியாமையின்
விளைவாக இந்த ஜீவன் சம்சாரியாக இருக்கிறான். பிரம்மமாக
இருப்பவன் தான் பிரம்மன் என்று அறியாதவனாக இருக்கிறான்.
எப்படி இவன் நிறைவின்மையற்றவனாக இருக்கிறான்? எனக்கு தெரிந்து கொண்டிருக்கிற இந்த ஸ்தூல, சூட்சும சரீரங்களில்தான்
என்னால் அபிமானம் வைக்க முடிகிறது. அதுவும்
ஒரே சமயத்தில் முழுவதையும் உபயோகித்து விஷயங்களை அறிவதோ,
இன்ப துன்பங்களை அனுபவிப்பதோ கிடையாது. கண்ணால்
பார்க்கும் விஷயங்களில் கண் மட்டும் அபிமானமாக இருக்கிறது. பிராணனை
அபிமானிக்கும் போது பிராணனாக இருக்கிறான், பேசும்போது பேசுபவனாக இருக்கிறான், பார்க்கும் போது கண்ணாக
மட்டும் இருக்கிறான், கேட்கும்போது காதாக இருக்கிறான்.
நினைக்கும் போது மனதாக இருக்கிறான். இவைகளெல்லாம்
செயல்களினால் வந்த தனிமைகள், எந்த ஒருவன் தன்னை இவ்வாறு புரிந்து
கொண்டிருக்கிறானோ அவன் உண்மையை புரிந்தவனில்லை. அவன் முழுமையற்றவன்,
நிறைவற்றவன். அதனால் ஒவ்வொன்றாக பிளவுபட்டவனாக
இருக்கின்றான். உலகம் எப்பொழுதும் ஒருவனை நிறைவற்றவனாகவே வைத்திருக்கும்
இப்படி நிறைவற்றவனாக இருப்பவன் எப்படி நிறைவுள்ளவனாக இருக்க முடியும்?
உபாதி
என்பது எந்த ஒன்று தன்னுடைய தர்மத்தை தன்னருகில் உள்ள வேறொன்றின் மீது ஏற்றி
வைக்கின்றவொன்றை குறிக்கிறது. உதாரணமாக மலர் தன்னுடைய நிறத்தை ஸ்படிகத்தில் தோன்றி
அதன் நிறத்தை பிரதிபலிக்கிறது. இதனால் மலரானது ஸ்படிகத்தின் உபாதி என்று
கூறலாம்.
நாம்
மூன்று விதமான சரீரங்களை உபாதிகளாக உடையவர்களாக இருக்கிறோம். பரமாத்மா உபஹிதமாக இருக்கிறார். ஸ்தூல சரீரம் உபாதி என்பதாலே
அதனுடைய குணத்தை ஆத்மாவில் ஏற்றி வைக்கப்படுகிறது. ஆறு விகாரங்களான பிறத்தல்,
வளர்தல், இருத்தல், வயாதாகிறது,
முதுமை, மரணம் ஆகியவைகள் ஆத்மாவில் ஏற்றி வைக்கப்படுகிறது.
சூட்சும சரீர தர்மங்களான மூன்று அவஸ்தைகள் சத்வ, ராஜஸ, தாமஸ ஆத்மாவில் ஏற்றி வைக்கப்படுகிறது.
காரண சரீரத்தில் இரண்டு நிலை அக்ஞானம், அறிவில்
நிறைவின்மை (அனாத்மா விஷயத்தில் இந்த நிலை) இதுதான் அக்ஞான அவஸ்தை, இன்பத்தை தேடி அலைதல் இவைகள்
எல்லாம் ஆத்மாவில் ஏற்றி வைக்கப்படுகிறது.
7.4 வித்யா சூத்திரம்:
ஆத்மா
இத்யேவ உபாசீதஹ
(முண்டக உநி) என்கின்ற இந்த உபநிஷத் வாக்கியமே
வித்யா சூத்திரம். முழுமையில்லாதவனை முழுமையானவனாக மாற்றும் சூத்திரமே
வித்யா சூத்திரம் என்று அழைக்கப்படுகிறது. நிறைவு செய்ய
முடியாத மனதை நிறைவு செய்வது பிரம்மன். அதுவே ஆத்மா என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக பார்க்கும் விஷயத்தில் பார்க்கும்
கருவியான கண்ணை விட்டுவிட்டு அறிவை மட்டும் எடுத்துக்கொண்டு அதுதான் ஆத்மா என்று புரிந்து
கொள்ள வேண்டும். இந்த உலகத்தை பிரகாசித்துக் கொண்டிருக்கின்ற
பிரம்மமும், இந்த உலகில் பிரகாசிக்கின்ற ஆத்மாவும் ஒன்றுதான்.
இப்படி புரிந்து கொண்டால் தனக்குள் இருக்கின்ற அனைத்தும் ஒன்றாகி பூரணமாகி
விடுவான். தன்னகத்தே உள்ளவைகளை வேற்றுமைகளாக நினைப்பதெல்லாம்
ஒன்றாகி விடுகின்றது.
சங்கரரின்
விளக்கம்:
முழு
வேதமே விதி,
நமக்கு ஆணையிட்டு சிலவற்றை சொல்வதன் மூலம்
நம்மை கர்மத்தில் ஈடுபடுத்தும். உபாஸனம் என்பது தியானத்தைக் குறிப்பதால்
இதை வைத்துக்கொண்டு சொல்லப்படும் கருத்துக்கள் சில கீழே கூறப்படுகிறது.
பூர்வமிமாம்ஸகர்களின்
கருத்து: ஈஸ்வரன் என்ற தத்துவமே தேவையில்லை, வேதத்தில் உள்ள கருத்துக்களே
நம்மை ஆணையிட்டு செய்ய வைக்கிற சக்தி உடையவை. இதை பாவனா
– உற்பத்தியாகும் சக்தி என்று அழைப்பர். இந்த பாவனா
இருவகையாக பிரிக்கப்பட்டிருக்கிறது. அவைகள்,
1. சாப்தி பாவனா - சப்தத்திலே இருக்கிற சக்தி,
அந்த வினைச்சொல்லில் இருக்கிற சக்தி. இது நம்முடைய மனதுக்குள் சொல்லப்பட்ட
கர்மத்தை செய்ய வேண்டும் என்ற உந்துதலை, எண்ணத்தை (கர்தவ்ய புத்தி) உற்பத்தி செய்கிறது.
2. ஆர்த்தி பாவனா - மனதுக்குள் இதை செய்ய வேண்டும் என்ற சக்தி உருவாகும் பாவனையை இவ்வாறு அழைக்கின்றனர்.
இந்த
உபாஸனைகளும் மூன்று அம்சங்களாக பிரிக்கப்படுகிறது. ஒரு செயலை செய்யும் போது
1. எதைச் செய்வது, 2. எதனால் செய்வது,
3. எப்படி செய்வது என்ற மூன்று கேள்விகள் பிறக்கும். உதாரணமாக கொண்டு வா என்ற வினைச்சொல்லானது, எதைக் கொண்டு வருவது? எதில் வைத்துக் கொண்டு வர வேண்டும்?
எப்படி கொண்டு வரவேண்டும்? என்ற மூன்று கேள்விகளைக்
கேட்க வைக்கும். இதுவே 1. சாத்தியம்,
2. சாதனா, 3. செய்முறை என்று பிரயோகிக்கப்படுகிறது.
(உ-ம்) யஜேத : யாகம் செய்ய வேண்டும்.
- எதற்காக செய்ய வேண்டும்? – சுவர்க்கத்தில் ஆசையிருப்பதால்
- என்ன சாதனத்தை பயன்படுத்தி செய்ய
வேண்டும்? – ஜோதிஷ்டம் என்ற யாகத்தை செய்ய வேண்டும்.
- அதை எப்படி செய்ய வேண்டும்? – வேதம் இதையும் விளக்கமாக
சொல்லியிருக்கிறது
ஒரு
வாக்கியத்தைப் படித்ததும் இந்த மூன்று கேள்விகளுக்குப் பதில் தெரிந்திருக்க வேண்டும்.
சாப்தி
பாவனா:- கிம்,
கேன, கதம் (தூண்டுதல்,
கட்டளை, முக்கியத்துவம்)
ஆர்த்தி
பாவனா-
மனதுக்குள் இந்த செயலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுதல்.
சொல்லில்
உள்ள கட்டளை
– சாதனம்
கட்டளையை
முக்கியமாக எடுத்துக்கொள்ளுதல் – செய்முறை.
இதை
அர்த்தவாதம் என்றும் கூறப்படுகிறது. சாத்தியம், சாதனம் இவைகளின் பெருமைகளை உரைத்தல்.
கிம்
- சாத்தியம் – ஆத்மா ஹிரண்யகர்ப்பனாக மாறுதல்,
ஹிரண்யகர்ப்பனுடன் ஐக்கியமாதல்
கேன
– சாதனம் – மனதின்
மூலமாக
கதம் – சம,
தம, உபரதி, த்திக்ஷா,
ஆகவே
இது விதி வாக்கியம்
– செயலைத் தூண்டும் வாக்கியம்.
ஒரு
வாக்கியத்தைக் கேட்டவுடன் நம் உள்ளத்தில் எதிர்ப்பார்ப்பு இருந்தால்தான் இந்த பாவனைகள்
செயல்படும்,
இல்லையென்றால் செயல்படாது..
உதாரணமாக சும்மா இருப்பவனிடம் சென்று சமையலறையில் நீர் இருக்கிறது
என்று சொன்னால், அந்த வாக்கியம், “அதற்கு
என்ன செய்ய வேண்டும்?” என்ற எதிர்ப்பார்ப்பு வருகிறது. ஆனால் தாகத்தை தீர்ப்பதற்காக நீரைத்தேடி
கொண்டிருப்பவனுக்கு இந்த வாக்கியம் எந்த எதிர்ப்பார்ப்பும் ஏற்படுத்தாது, அதை தேடியது கிடைத்துவிட்ட திருப்தியில் இருப்பான். அதேபோல ஆத்மாவைத் தேடிக்கொண்டிருப்பவன்,
நான் யார் என்று கேள்வியுடன் இருப்பவனுக்கு ஆத்மா இத்யதே உபாஸீதஹ என்ற வாக்கியம் தான்
தேடியதை அடைந்ததில் திருப்தியடைவான்.
மனநிறைவுடன் இருப்பான். அதைத் தவிர்த்து வேறெந்த செயலையும்
செய்யத்தூண்டாது. சங்கரரின்
விளக்கம்:
ஆத்மாவைப்பற்றிய
விளக்கத்தை படிக்க வேண்டும் என்ற அறிவை வேதத்தில் இருந்து அடைவதில்லை, சம்பிரதாயத்திலிருந்து
சொல்லப்பட்டு, அதைக்கேட்டு நாம் வேதத்தின் உதவியை நாட வேண்டும்.
ஆத்மாவை
அறிந்துக்கொண்டு அதையே எல்லா நேரத்திலும் நினைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்று இந்த
வாக்கியம் உரைக்கிறது.
ஒரு
அறிவை அடைந்ததும் அது தேவைப்படும்போது வரவேண்டும்.
எல்லா நேரத்திலும்
இது
நினைவில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
- ஞானம் அடைந்து விட்டால், அது எப்பொழுதும் நினைவில் இருக்க
வேண்டும் என்ற அவசியமில்லை, நினைவானது தானாக வரவேண்டும்,
கட்டளையிட வேண்டிய அவசியமில்லை.
- தவறான அறிவை நீக்கி, சரியான அறிவை புதியதாக அடைந்தது
விட வேண்டும். அதற்குப் பிறகு இந்தப்புதிய அறிவு தேவைப்படும்
போது தானே வரும். அதுபோல
நான் ஆத்மாஸ்வருபன், பூரணமானவன் என்ற ஞான நிஷ்டையடைந்தவனுக்கு இது எந்த நேரத்திலும் தானாக தேவைப்படும் போது வெளியே வரும்.
எனவே
இதை எப்பொழுதும் நினைத்துக் கொண்டேயிருக்க வேண்டுமென்ற அவசியமில்லை.
யோக
சூத்திரத்தில் வருகின்ற ஒரு சூத்திரம் “சித்த விருத்தி நிரோதஹ”,
இதற்கு எல்லா எண்ணங்களையும் நீக்க வேண்டும் என்று
பொருள் கொள்ளலாமே?
யோகிகள்
நிரோதஹ என்று சொல்வதற்கு நாசம் செய்தல் என்று பொருள் சொல்வார்கள். சிலர் அடக்க வேண்டுமென்றும்,
வேறு சிலர் ஒடுக்க வேண்டுமென்றும் பொருள் சொல்லுவார்கள். ஆனால் வேதாந்தத்தில் இருப்பதை இல்லாததாக
சொல்ல முடியாது. எண்ணங்களை
நாசம் செய்தால் மனமும் நாசமடைந்து விடும், இது முடியாத நிலை. சித்தத்தில் இருக்கின்ற எண்ணங்களை
முறைப்படுத்துதல், சாத்வீக எண்ணங்களாக மாற்றுதல் என்று வேதாந்தம்
பொருள் சொல்லுகிறது. இப்படி செய்வதினால் ஞானம் அடைதல், பிறகு குணாதீதனாக மாறுதல்
போன்றவை நிகழும். யோக
சூத்திரத்தில் கூறிய கருத்துக்கள் மோட்சத்திற்கு நேரிடையான காரணம் அல்ல. ஆனால் அது நம்மை தகுதிப்படுத்த உதவும்.
செயலினால்தான்
பலன் வருமே தவிர,
வெறும் அறிவினால் எப்படி பலன் கிடைக்கும்?
தவறான
அறிவினால் துயரப்பட்டிருக்கும்போது சரியான அறிவை அடைந்தால் துயரம் நீங்கி விடுகின்றதே
அதுபோலத்தான். உதாரணமாக கயிற்றில் தோன்றும் பாம்பானது
தவறான அறிவினால் பயத்தைக் கொடுக்கும், சரியான அறிவு வந்ததும்
பயம் நீங்குகிறது. இங்கே பலன் அடைந்த அறிவினால் மட்டுமே கிடைக்கிறது. நான் ஆத்மா என்ற அறிவு வரும்போது,
என்னை அனாத்மா என்று நினைத்துக்கொண்டு பட்ட துயரங்களெல்லாம் நீங்கி விடும். சம்சாரத்தின் மூலக்காரணம் அவித்யா
(அறியாமை) இதை நீக்கினால் சம்சாரம் நீங்கிவிடும்.
இலக்கணப்படி
உபாஸீதே என்ற சொல் கட்டளையைக் குறிக்கும் சொல்லாக இருக்கிறது.
உப + ஆஸ்
= தியானத்திற்கு பயன்படுத்துகின்ற இலக்கணம்
ஆத்மா+இதி
– இங்கு இதி என்ற சொல் பொதுவாக மனம், பிரம்மன்
என்று வேதாந்தம் கூறுகிறது. இப்படி கட்டளையாக எடுத்துக்கொண்டால், மனம், பிரம்மன் இவைகள் இல்லாததாக இருக்கிறது.
- ஒரு வினைச்சொல் எந்த இடத்தில் வருகிறதோ அதற்கேற்றபடிதான் பொருள்
கொள்ள வேண்டும். இது ஞான பிரக்ரணம், இங்கு புரிந்துக்கொள்ள வேண்டிய அறிவானது உபதேசிக்கப்படுகிறது. எனவே இங்கே புரிந்து கொள்ள வேண்டும்
என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.
- எப்படி நீங்கள் நிகழ்காலத்தைக் குறிக்கும் சொல்லை கட்டளை சொல்லாக
எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மாற்றி சொல்கிறீர்களோ அதுபோல இங்கே கட்டளை சொல்லை உபதேச
சொல்லாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
- ஆத்மா+இதி – இங்கே “இதி” என்ற சொல் ஆத்மாவை அறிவுக்கு விஷயமாக, அறிவு ஸ்வரூபமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஞானப்பலன்:
பதநீயம்: எந்தவொன்று
எல்லோருக்குள் இருக்கிறதோ அதுவே ஆத்மா.
இந்தவொன்றை (ஆத்மாவை) அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகின்றது.
யதா
ஹவை பதேன அனுவிந்தேத் – பசுவை கண்டுபிடிப்பதற்கு அதனுடைய கால் தடத்தின்
மூலமாக அறிகின்றோமோ,
அதுபோல
கீதி
ஸ்லோகம் விந்ததே
– நாம் விரும்பிய உலகத்தின் (உலகத்தில் உள்ள பொருட்கள்)
சம்பந்தத்தை அடைகின்றோம்.
ஆனால் துயரப்படுவதில்லை.
கீர்தா – ஜீவ-பிரம்ம ஐக்கிய ஞானத்தையுடையவன்.
ஸ்லோகம் – மோக்ஷம்.
யார்
இவ்வாறு புரிந்து கொள்கிறார்களெ அவர்கள் ஜீவ-பிரம்ம ஐக்கியத்துடன் மோக்ஷத்தை அடைகிறான்
உலகில்
எவ்வளவோ விஷயங்கள் இருக்க ஏன் ஆத்மாவை அறிய வேண்டும்?
ஆத்மாவை
நாம் மிகவும் நேசிக்கின்றோம், அது நம்மையறியாமலே நாம் மிகவும் விரும்புகின்ற
விஷயம். நம்முடைய குழந்தைகளை
விட அதிகமாகவே நேசிக்கிறோம். நாம் எல்லோரும் சுகத்தைத்தான் மிகவும் விரும்புகின்றோம். எவையெல்லாம் சுகத்தைக் கொடுக்கிறதோ
அந்த சுகசாதனம் அடுத்ததாக நேசிக்கிறோம்.
அந்த சுகசாதனம் நமக்கு சுகத்தை
கொடுக்கும்போது அதை விரும்புகிறோம், எப்பொழுது அது துக்க சாதனமாக மாறுகிறதோ
அப்போதே அது நமக்கு விரும்பத்தகாததாக மாறி விடுகிறது. சுகத்தில் பிரியமிருக்கிறது;
சுக சாதனத்தின் மீதும் பிரியமிருக்கிறது. ஆனால் எதில் நிபந்தனையில்லாத பிரியமிருக்கிறது
என்றால் அனுபவிக்கும் சுகத்தின் மீதுதான், சுகத்தை கொடுக்கும்
சாதனையில் இல்லை. சுகத்தின்
மீது இருக்கும் அன்புதான் சுகசாதனத்தின் மீது ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. என்மீது கொண்டிருக்கும் அன்பு நிபந்தனையற்றதா
அல்லது நிபந்தனையுடன் கூடியதா என்று யோசித்தால், நாம் நம்மை நிபந்தனையின்றி
நேசிக்கிறோம். இதிலிருந்து
அறிவது என்னையும், சுகத்தையும் நிபந்தனையின்றி நேசிக்கிறோம்.
இங்கே நான் என்பது ஆத்மா என்று புரிந்து கொள்ள வேண்டும். அதற்காக அனைத்தையும் தியாகம் செய்வதற்கு
தயாராக இருக்க வேண்டும்.
மந்திர
விளக்கம்:-
ததே3தத்ப்ரேயஹ புத்ராத் – தனது மகனைக்
காட்டிலும் அதிகமாக ஆத்மாவைத்தான் (தன்னைத்தான்) அதிகமாக நேசிக்க வேண்டும்
ப்ரேயஹ
வித்தாத்
– பணத்தைக் காட்டிலும் மிகவும் பிரியமானது
ப்ரேயஹ
அன்யசஸ்மாத் ஸர்வஸ்மாத்
– மற்ற அனைத்தைக் காட்டிலும் அதிகமாக நேசிப்பது ஆத்மாதான்.
அந்தரதரம் – நமக்கு
மிகவும் அருகில் இருப்பது
யத்3 அயம் ஆத்மா
– அது நம்முடைய ஆதமா.
நான்
என்பது உடல் என்று நினைப்பவன் அந்த உடலுக்காக எதையும் தியாகம் செய்வான். நான் என்பது ஆத்மாதான் என்று தான்
கொண்ட லட்சியத்தின் மீது பற்று வைத்திருக்கும் போது உடல் மீது இருக்கின்ற அபிமானம்
சென்று விட்டதால், உடலழிந்தாலும் கவலைபடமாட்டார்கள். ராணுவ வீரர்கள், தேசத்தின் விடுதலைக்காக் போராடுபவர்கள் அவர்களது தேகத்தின் மீதுள்ள பற்றை தேசத்தின்
மீது வைத்து விடுவதால், அவர்கள் உடலின் அழிவை பற்றி கவலை கொள்ள
மாட்டார்கள். நான் என்பதில்
உள்ள பிரியத்தை யாராலும் நீக்க முடியாது, அந்த நான் எதில் இருக்கிறதோ
அதைத் தவிர மற்ற அனைத்தையும் தியாகம் செய்து விடுவோம்.
ஸஹ
யஹ அன்யம் ஆத்மனஹ ப்ரிய – எனக்கு வேறாக உள்ள பொருளிடத்தில் பிரியம் இருக்கிறது
என்று கூறிய அக்ஞானியிடம்,
ப்ரியம்
ரோத்ஸ்யதி ஷ்வி
– உன்னுடைய இந்த பிரியமும் அழிந்து விடும், பிரியமானப்
பொருட்களும் அழியக்கூடியவை.
ஈஷ்வரஹ
– ஞானி இப்படி சொல்வதற்கு தகுதியானவன்.
தஸைவ
ஸ்யாத்
– அவர் சொற்படித்தான் நடக்கும்.
ஆத்மானம்
ஏவ ப்ரியம் உபாஸீத
– ஒருவன் ஆத்மாவை (தன்னையே) ஆனந்த ஸ்வரூபமாகவே புரிந்து கொள்ள வேண்டும்.
ப்ரியம்
ந ப்ரமாயுகம் ப4வதி – ஆத்ம சுகம்
அவனை விட்டு விலகிச் செல்லாது.
----0000----