உத்தவ கீதை
அத்தியாயம்-3
அத்தியாயம்-3
ஸ்வாமி குருபரானந்தாவின் உபதேச விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது-19-02-2022
ஶ்ரீப்3ராஹ்மண உவாச
பரிக்3ரஹோ ஹி
து3:கா2ய யத்3யத்ப்ரியதமம் ந்ருணாம் |
அனந்தம் ஸுக2மாப்னோதி
தத்3வித்3 வான்யஸ்த்வகிஞ்சன: || 1 ||
பரிக்3ரஹம் – தேவைக்கு மேல் வைத்துக் கொள்வது, இன்பத்தை தரும் பொருட்கள் அதிகமாக
வைத்திருத்தல்.
இந்தக் குணம் பயத்தைக் கொடுக்கும், அடிமைப்படுத்தி விடும், அவைகளை
பராமரிப்பதற்கு காலமும், சக்தியும் செலவிட வேண்டியதாக இருக்கும். யாருமே நம்மை நேசிப்பதில்லை. நம்மிடம்
இருக்கும் அதிக செல்வத்தைக் கண்டோ, பதவி, புகழ், திறமை இவைகள் காரணமாகத்தான் நட்பு
பாராட்டுவார்கள், புகழ்வார்கள். இவைகள்
சென்றுவிட்டால் அவர்களும் சென்றுவிடுவார்கள். பரிக்ரஹம் என்ற குணம் துன்பத்தைத்தான் கொடுக்கும் என்று கூறுகிறார்கள் இதை அறிந்தவர்கள்.
ந்ருணாம் யத்
யதிப்ரியதமம் –
மனிதர்கள் எதையெல்லாம் விரும்பி அதிகமாக சேர்த்துக் கொள்வகிறார்களோ, அவைகளிலிருந்து துன்பம்தான் உண்டாகிறது.
பொருளே இல்லாத,
அல்லது தேவைப்படும் அளவுக்கு குறைவாக வைத்துக் கொண்டிருக்கும் அறிவாளி
எல்லையில்லாத இன்பத்தைப் பெறுகிறான்.
ஸாமிஷம் குரரம்
ஜக்3னுர்ப3லினோSன்யே
நிராமிஷா: |
ததா3மிஷம் பரித்யஜ்ய
ஸ ஸுக2ம் ஸமவிந்த3த || 2 ||
குரரம் என்ற பறவை ஒரு
மாமிசத்துண்டை தன் வாயில் வைத்துக் கொண்டிருந்தது. அதைக் கண்ட மற்ற பறவைகள் அதைத்
துரத்திக் கொண்டிருந்தன. அந்தப்பறவை மாமிசத் துண்டை கீழே போட்டதும், துரத்திய
பறவைகள் கீழே போடப்பட்ட மாமிசத்துண்டை நோக்கி சென்று விட்டன. இந்தப் பறவை சுகத்தை, நிம்மதியை அடைந்தது. இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய கருத்து பொருட்களை அதிகமாக சேர்த்து வைத்துக் கொள்வது
துன்பங்களுக்கு வேர் என்பதுதான்.
ந மே மானாபமானௌ ஸ்தோ
ந சிந்தா கே3ஹபுத்ரிணாம் |
ஆத்மக்ரீத3
ஆத்மரதிர்விசராமீஹ பா3லவத் || 3 ||
கூர்ந்து கவனிக்கும்
திறமையானது அறிவைக் கொடுக்கும். முடிவு பண்ணும் திறமையானது அறிவை வளர்க்காது. ஞானியும், குழந்தைகளும் எப்பொழுதுமே
நிகழ்காலத்தில்தான் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
ந மே மானாபமானௌ ஸ்தஹ – ஞானிக்கு மான-அவமானம் என்ற பேத புத்தி கிடையாது
ந சிந்தா
கே3ஹபுத்ரிணாம் – வீடு,
மக்கள் இவர்களிடம் பற்றற்று இருப்பவர்களுக்கு கவலைகள் எதுவும் இருக்காது. இவர்கள்
பா3லவத் – குழந்தையைப் போல
விசாரம் இஹ – இங்கே வாழ்ந்து கொண்டிருப்பார்கள்
ஆத்மக்ரீட3 – ஞானி தன்னிடத்திலே விளையாடிக் கொண்டிருப்பான்;
ஆர்மரதி – தன்னிடத்திலே மகிழ்ச்சியுடன் இருப்பான், முழுமனநிறைவுடன்
இருப்பான்.
த்3வாவேவ சிந்தயா
முக்தௌ பரமானந்த3 ஆப்லுதௌ |
யோ விமுக்3தோ4 ஜடோ3
பா3லோ யோ கு3ணேப்4ய: பரம் க3த: || 4 ||
த்வௌ ஏவ சிந்தயா
முக்தௌ – இரண்டு பேர்தான்
மனதிற்குள் வரும் துயரங்களில் இருந்து விடுபட்டவர்கள்
பரமானந்த3 ஆப்லுதௌ – அதேபோல பரமானந்தத்தில் மூழ்கியிருப்பார்கள்
விமுக்3த4ஹ – சூதுவாது அறியாத
ஜடஹ – எதையும் திட்டமிட்டு செயல்படாமல், தன்னிச்சையாக செயல்படும்
பா4லஹ – குழந்தையைப் போல இருக்கும் ஞானி
யஹ கு3ணேப்4யஹ பரம்
க3த: - குணங்களையெல்லாம்
கடந்து விட்டு மேலான நிலையை அடைந்துள்ளார்.
க்வசித்குமாரீ
த்வாத்மானம் வ்ருணானான்கு3ஹமாக3தான் |
ஸ்வயம் தானர்ஹயாமாஸ
க்வாபி யோதேஷு ப3ந்து4ஷு || 5 ||
இதில் தனிமையி்ன் அவசியத்தைப் பற்றி விளக்கப்படுகிறது.
ஒரு கன்னிகையைப் பெண்
பார்ப்பதற்காக சிலர் அவள் விட்டுக்கு வந்தார்கள். அந்த சமயத்தில் வீட்டிலிருக்கும்
பெற்றொர் வெளியே சென்றிருப்பதால் தானே விருந்தாளிகளை வரவேற்று உபசரித்தாள்.
தேஷாமப்4யவஹாரார்த2ம்
ஶாலீப்3ரஹஸி பார்தி2வ |
அவக்3னந்த்யா:
ப்ரகோஷ்த2ஸ்தா2ஶ்சக்ரு: ஶங்கா2: ஸனம் மஹத் || 6 ||
அவர்களுக்கு
உணவளிப்பதற்காக வீட்டில் தனியே ஓரிடத்தில் நெல்லைக் குத்தும்போது, கைகளில்
அணிந்திருந்த சங்கு வளையல்கள் பெரிய ஒலியை எழுப்பின.
ஸா தஜ்ஜுகு3ப்ஸிதம்
மத்வா மஹதீ வ்ருர்ட3டிதா தத: |
ப3ப4ஞ்ஜைகைகஶ:
ஶங்கா2ந்தவௌ த்3வௌ பாண்யோரஶேஶயத் || 7 ||
அதனால் வெட்கமடைந்த
அவள் மிகவும் வருந்தினாள். எனவே கைகளில்
இரண்டு இரண்டு வளையல்களை மட்டுமே வைத்துக் கொண்டு மற்றவைகளை உடைத்துப் போட்டாள்
உப4யோரப்யபூ4த்3கோ4ஷோ
ஹயவக்3னந்த்யா: ஸ்வஶங்க2யோ: |
த்த்ராப்யேகம்
நிரபி4த3 தேகஸ்மான்னாப4வத்3த்4வனி: || 8 ||
பின் அவள் மறுபடியும்
நெல் குத்த தொடங்கியதும், இரண்டு வளையல்களின் உரசலினால் சத்தம் உண்டாயிற்று. ஒரு வளையலைக் கழற்றிப் போட்டாள்.
மீதமிருந்த ஒரு வளையலிருந்து சத்தம் எதுவும் வரவில்லை
அன்வஶிக்ஶமிமம் தஸ்யா
உபதே3ஶமரிந்தம் |
லோகான்னுசரன்னேதான்லோகத
த்த்வ்விவித்ஸயா || 9 ||
அந்தப்
பெண்ணிடமிருந்து இந்தப் பாடத்தைக் கற்றுக் கொண்டேன் அரசே! இந்த உலகத்தில்
சஞ்சரித்துக் கொண்டு, உலகம் நடைமுறைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தால்
மக்களிடையே சுற்றி வந்தபோது இது நடந்தது.
வாஸே ப3ஹூனாம் கலஹோ
ப4வேத்3வார்தா த்3வயோரபி |
ஏக ஏவ
வஸேத்தஸ்மாத்குமார்யா இவ கங்கண: || 10 ||
பல பேர்களுடன்
சேர்ந்து வசித்தால் சண்டை-சச்சரவு ஏற்படும். இரண்டு பேர் இருந்தால் வீண் பேச்சு வரலாம்.
ஆகவே பெண்ணின் கைக்கங்கணத்தைப் போல தனியாக இருக்க வேண்டும்.;
தனிமையைப் பற்றிய
விசாரம்
- மக்கள் கூட்டம் இல்லாத இடமாக இருக்க வேண்டும்
- தெரிந்த ஆட்கள் இல்லாத இடமாக இருக்க வேண்டும்
- தூய்மையான இடமாக இருக்க வேண்டும்
- பயமற்ற இடமாக இருக்க வேண்டும்
- தனிமையாக இருக்கும் போது சில நற்பண்புகளை அடையலாம். பற்றின்மை, சுதந்திரமாக இருத்தல், ஆகியவை
முக்கியமான பண்புகளாகும்
- நம்மையே நமக்கு அறிமுகப்படுத்தும் இந்தச் சூழ்நிலை. நம் மனதின்
உண்மை நிலையக் காட்டிக் கொடுக்கும். இதனால் நம்முடைய பலம், பலவீனத்தை அறிந்து
கொள்ளலாம்.
- விவேக, வைராக்கியம் வளர்த்துக் கொள்ளலாம்
- ஞான நிஷ்டைக்காக தனிமைய நாடலாம்
மன ஏகத்ர
ஸம்யுஞ்ஜ்யாஜ்ஜிதஶ்வாஸோ ஜிதாஸன: |
வைராக்3யாப்4யாஸயோகே3ன
த்4ரியமாணமதந்த்ரித: || 11 ||
ஏகத்ர – எடுத்துக் கொண்ட விஷயத்தில்
மன: ஸம்யுஜ்யாத் – மனதை பொருத்த வேண்டும்
ஜிதாஸன – ஆஸனத்தில் வெற்றியடைய வேண்டும். குறிப்பிட்ட நேரம் தியான காலத்தில்
ஒரே நிலையில் அசையாமல் அமர்ந்து பழக வேண்டும். உடலிலிருந்து மனதுக்கு எந்த
தொந்தரவும் வரக்கூடாது
ஜிதஶ்வாஸஹ – சுவாசத்தில் வெற்றியடைய வேண்டும். மூச்சுக்காற்றின் அமைதி மனதை
அமைதியாக இருக்க வைக்கும். பிராணன சீராக வைத்திருத்தல்
ஜிதேந்த்ரியஹ – புலன்களை வென்றிட வேண்டும் அவைகளை அமைதியாக இருக்குமாறு
பழக்கியிருக்க வேண்டும்
வைராக்கியம் - மனதை ஒரு இடத்தில் நிறுத்தி
பழக்க வேண்டுமென்றால், விஷயங்களில் வைராக்கியத்தை அடைய வேண்டும். சித்தத்திலிருந்து எண்ணங்களை எடுத்துக் கொண்டு
மனம் அலை பாய்ந்து கொண்டிருக்கும்.
அப்4யாஸம் – இடைவிடாமல் பயிற்சி செய்து மனதை ஒரு இடத்தில் நிறுத்த முயற்சிக்க
வேண்டும். மனதை ஒரு இடத்தில் இருக்குமாறு பயிற்சி செய்து பழக வேண்டும். ஜபம் என்பது ஒரு முக்கியமான சாதனமாக இதற்கு
கருதப்படுகிறது.
பக்தி – வைராக்கியம், அப்யாஸம் சித்3தி4க்க பகவான் மீது பக்தி செலுத்தி
கொண்டிருக்க வேண்டும்.
த்4ரியமாணம் – இவ்விதமாக பயிற்சி கொடுத்து மனதை ஒரிடத்தில் நிலைநிறுத்தி பழக
வேண்டும்.
அதந்த்ரிதஹ – சோம்பலற்றவனாகவும் இருக்க வேண்டும். தமோ குணத்திலிருந்து நீங்கியவனாக இருக்க
வேண்டும்.
யஸ்மின்மனோ லப்3த4பத3ம்
யதே3தச்ச2னை: ஶனைர்முஞ்சதி கர்மரேணூன் |
ஸத்த்வேன வ்ருத்3தே4ன
ரஜஸ்தமஶ்ச விதூ4ய நிர்வாணமுபைத்ய நிந்த4னம் || 12 ||
யஸ்மின் – நிர்குண பிரம்மனிடத்தில், பரமாத்மாவிடத்தில்
ஶனைஹி ஶனைஹி – கொஞ்ச கொஞ்சமாக
யதே3தத்
மனோலப்3த4பத3ம் – எந்த
மனமானது நிலைபெற்றுவிட்டதோ
கர்மரேணூன் விமுஞ்சதி – கர்மவாசனைத் துகள்கள் அவனைவிட்டு நீங்குகின்றன. நான் கர்த்தாவாக இருக்க வேண்டும் என்ற எண்ணம்
நீங்கும். நான் இதைத்தான் செய்ய வேண்டும்
என்ற நிர்பந்தம் கிடையாது
ஸத்த்வேன வ்ருத்3தே4ன – சத்துவ குணம் மேலோங்கியிருந்தால்தான் இவ்வாறு இருக்க முடியும்.
ரஜஸ் தமஹ ச விதூ4ய – ரஜோ, தமோ குணங்களுடைய ஆதிக்கத்தை நீக்கி விட வேண்டும்.
நிர்வாணம் உபைதி – முடிவில்லா முழுமையான மன அமைதியை அடைகிறான். ஜீவன் முக்தியை
அடைகிறான்.
அநிந்த4னம் – அக்னி எரிவதற்கு மரக்கட்டை இல்லாததால் அமைதி அடைவதுபோல இது
இருக்கின்றது.
மன
ஒருமுகப்பாட்டினாலும், சத்துவ குணத்தினாலும், ஞானம் அடையப்படுகின்றது. விறகு உள்ளவரைதான் அக்னியும் இருக்கும்,
கர்மவாஸனை உள்ளவரை மனம் கொந்தளிப்பாக இருக்கும், விறகு இல்லாத அக்னி தானாக அடங்கி
விடுவதைப் போல மனமும் தானாக அமைதி அடைந்து விடும்.
குறிப்பு:
மனதை ஒருமுகப்படுத்துவதில் வெற்றிக் கண்டால் சமாதி நிலையை அடையலாம். அதனால்
ஆனந்தத்தை அடையலாம். மேலும் சில சித்திகளை அடையலாம். ஆனால் இவைகள் நம்முடைய லட்சியமில்லை என்று
புரிந்து கொள்ள வேண்டும். மன ஆரோக்கியம்தான் நம்முடைய தேவையான லட்சியமாக இருக்க
வேண்டும்.
ததை3வமாத்மன்யவருத்3த4சித்தோ
ந வேத3 கிஞ்சித்3 ப3ஹிரந்தரம் வா |
யதே2ஶுகாரோ ந்ருபதிம்
வ்ரஜந்தமிஷௌ க3தாத்மா ந த3த3ர்ஶ பார்ஶ்வ || 13 ||
யதா2 இஷுகாரோ – எவ்வாறு அம்பை செய்து கொண்டிருப்பவன்
ந்ருபதிம் வ்ரஜந்தமிஶௌ – தன்னை மறந்து வேலையில் ஈடுபட்டிருக்கும் போது
க3தாத்மா ந த3த3ர்ஶ பார்ஶ்வே – அரசன் பரிவாரங்களுடன் தன்னருகே சென்றதைக் கூட அறியாமல் இருப்பானோ
அவ்வாறே ஆத்மாவிலேயே
நன்றாக மனதை ஒருமுகப்படுத்தியுள்ளவன், வெளியேயும், உள்ளேயும் உள்ள எதையும்
அறியமாட்டான். இவைகள் எல்லாம் அநித்யம்,
மித்யா என்பதை அறிந்திருப்பான், நிலையற்றது என்பதையும் புரிந்து
கொண்டிருப்பான். அவைகளால் பாதிக்கப்படமாட்டான்.
ஏகசார்யனிகேத:
ஸ்யாதப்ரமத்தோ கு3ஹாஶய: |
அலக்ஷ்யமாண ஆசாரைர்
முனிரேகோSல்ப்பா4ஷண: || 14 ||
பாம்பிடமிருந்து
சந்நியாசி, சாதகன் கற்றுக் கொள்ள வேண்டிய ஏழு பாடங்களைக் கூறுகிறார்.
பாம்பிடம் உள்ள
குணங்கள்
- ஏகசாரி – தனித்திருக்கும்
- அனிகேத: - சொந்தமான இருப்பிடம் கிடையாது
- அப்ரமத்தஹ – மிக கவனமாக
இருக்கும்
- கு3ஹாஶய: - மலைக்குகை,
மரப்பொந்தில் வசிக்கும், தான் இருக்கும் இடத்தை வசிக்கும் இருப்பிடமாக
வைத்துக் கொள்ளும்
- அலக்ஷ்யமாண ஆசாரை – தன்னை மறைத்துக் கொள்ளும்
- ஏகஹ – அனைத்தையும் தானே செய்து கொள்ளும், தன்னைத்தானே
பாதுகாத்துக் கொள்ளும்
- அல்ப பா4ஷண – எந்த சப்தத்தையும் உருவாக்காது. அல்ப – பயனற்ற, சிறிது
சாதகன்,
சந்நியாசியிடம் இருக்கும் பாம்பின் குணங்களை பொருத்தி பார்க்கலாம்
- தனித்தே சென்று வருபவன், தனித்தே வாழ்ந்து கொண்டிருப்பவன்
- குடியிருக்கும் வீட்டின் மீது பற்றில்லாமல் வசித்துக்
கொண்டிருப்பான்
- எச்சரிக்கையாக இருத்தல். தான் கொண்டிருக்கும் லட்சியத்திற்கு
வரும் தடைகளால் பாதிக்காமல் மிகவும் கவனமாக இருப்பான்
- கிடைப்பதில் மகிழ்ச்சியுடன் இருப்பான், திருப்தியுடன் இருப்பான்
- தன்னை மறைத்துக் கொள்வான். புகழுக்காக எதையும் செய்ய மாட்டான்.
தன்னை யாருமே கண்டு கொள்ளாமல் இருக்கும்படி நடந்து கொள்வான். விதவிதமான
தவங்களை செய்து கொண்டிருக்கின்றோம் என்பதை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டான்
- தேவையில்லாமல் மற்றவர்கள் உதவியை நாட மாட்டான்
- அளவுடன் பேசுவான்
க்3ருஹாரம்போ4 ஹி
து3:கா2ய விப2லஶ்சாத்4ருவாத்மன: |
ஸர்ப: பரக்ருதம்
வேஶ்ம ப்ரவிஶ்ய ஸுக2மேத4தே || 15 ||
அதிக காலம் வாழாத
இந்த உடலுக்காக இருக்க வீடு கட்டுவது என்பது வெகு சிரமமானது, துன்பத்தைக்
கொடுப்பது, பயனற்றது. எப்படி பாம்பானது வேறொன்றினால் கட்டப்பட்ட வீட்டில் புகுந்து
கொண்டு சுகமாக இருக்கின்றதோ அதுபோல கிடைத்த இடத்தை இருப்பிடமாக கொண்டு சுகித்துக்
கொண்டிருப்பான் ஞானி
ஏகோ நாராயணோ தே3வ:
பூர்வஸ்ருஷ்டம் ஸ்வமாயயா |
ஸம்ஹ்ருத்ய காலகலயா
கல்பாந்த இத3மீஶ்வர: || 16 ||
ஈஸ்வரனை மாயையுடன்
சேர்ந்து பார்க்கும்போது அது சகுண ஸ்வரூபம் என்றும், மாயையை நீக்கி பார்க்கும்
ஸ்வரூபம் பிரம்மம் என்றும் இருவகையாக ஈஸ்வரனை எடுத்துக் காட்டுகிறார். இந்த
ஸ்லோகத்தில் அவர் லயத்திற்கு காரணம் என்றும், லயஸ்தானமாகவும் இருக்கிறார் என்றும்
கூறுகிறார்.
ஏகோ நாராயணஹ - மனிதனுடைய இறுதி லட்சியமான ஈஸ்வரன் ஒருவராகத்தான் இருக்கிறார்.
தன்னுடைய ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயம் இவைகளுக்கு யாருடைய உதவியும் அவருக்கு
தேவையில்லை.
தே3வ: - சைதன்ய ஸ்வரூபமானவர், உணர்வு பூர்வமானவர்
கல்பாந்த – கல்பத்தின் முடிவில்
ஸ்வமாயயா - தன்னிடத்திலுள்ள, தன்னைச் சார்ந்துள்ள மாயா சக்தியினால்
பூர்வஸ்ருஷ்டம் இத3ம் – படைக்கப்பட்ட இந்த பிரபஞ்சத்தை
காலகலயா – கால சக்தியினல்
ஸம்ஹ்ருத்ய – தனக்குள் இழுத்துக் கொள்ளப் போகிறார்
ஏக ஏவாத்3விதீயோSபூ4தா3த்மாதா4ரோSகி2லாஶ்ரய: |
காலேனாத்மானுபா4வேன
ஸாம்யம் நீதாஸு ஶக்திஷு |
ஸத்த்வாதி3ஶ்வாதி3புருஷ:
ப்ரதா4னபுருஷேஶ்வர: || 17 ||
ஏக ஏவ அத்3விதீய
அபூ4த் – தான் மட்டும்
இரண்டற்றதாக இருக்கின்றார்.
ஆத்மாதா4ரஹ – தனக்குத்தானே ஆதாரமாக இருப்பவர்
அகி2லாஶ்ரயஹ – அனைத்துக்கும் ஆதாரமாக இருக்கின்றார்
ப்ரதா4ன புருஷ ஈஶ்வரஹ – மாயையாகவும், புருஷனாகவும் இருக்கின்ற ஈஸ்வரன்
ஆதி3புருஷ: - என்றும் இருப்பவர்
காலேன ஆத்மானுபா4வேன – தனக்கு வேறில்லாத காலத்தின் துணைக்கொண்டு
ஸத்த்வாதி4ஷு – சத்துவம், ரஜஸ், தமஸ் என்கின்ற சக்திகள்
ஸாம்யம் நீதாஸு – சமநிலையை அடையும் போது பிரளயகாலம் ஏற்படுவதால் அனைத்தையும்
இழுத்துக் கொள்கிறார். பிறகு இரண்டற்றவராக தான் மட்டும் ஒருவராகவும் இருக்கிறார்.
பிரளயம் மூன்று சக்திகளும் சமநிலை அடையும் போது ஏற்படுகின்றது. தன்னிடத்தினின்று
வேறில்லாத கால சக்தியின் துணைக் கொண்டு பிரளயம் ஏற்படுகின்றது. அப்போது அனைத்தும்
அவருக்குள் ஒடுங்கி விட்ட நிலையில் அவர் மட்டும் இருக்கிறார்.
பராவராணாம் பரம ஆஸ்தே
கைவலஸஞ்ஜித: |
கேவலானுப4வானந்த3
ஸந்தோ3ஹோ நிருபாதி4க: || 18 ||
இதில் ஈஸ்வர ஸ்வரூபத்தை
விளக்குகிறார்.
பரவராணாம் – மேலான ஜீவர்கள், கீழான ஜீவர்கள் என்பது சரீரத்தின் அடிப்படையில் கூறப்படுகிறது
பரமஹ ஆஸ்தே – இந்த ஜீவர்களை காட்டிலும் மேலானவராக இருக்கிறார் ஈஸ்வரன்
கைவல்ய ஸஞ்ஜிதஹ – மோட்சம் அல்லது முக்தி என்ற பெயரால் அழைக்கப்படுகின்றார்.
பிரம்மத்தை அடைதலும்,
மோட்சத்தை அடைதலும் ஒன்றுதான். ஈஸ்வரனே மோட்ச ஸ்வரூபமாக இருக்கின்றார்.
கேவல அனுப4வ ஆனந்த3 - தூய்மையான ஆனந்த ஸ்வரூபமாகவும்
ஸந்தோ3ஹ – சைதன்ய ஸ்வரூபமாகவும் சேர்ந்து இருப்பவர்
நிருபாதி4கஹ – உண்மையில் மாயை என்கின்ற உபாதிகளையும் அற்றவராக இருக்கிறார்
கேவலாத்மானுபா4வேன
ஸ்வமாயாம் த்ரிகு3ணாத்மிகாம் |
ஸங்க்ஷோப4யன்ஸ்ருஜத்யாதௌ
தயா ஸூத்ரமரிந்தம் || 19 ||
அரிந்த3ம் – ஓ அரசே!
கேவலாத்மானுபா4வேன – தன்னுடைய சக்தியினால் மட்டுமே
ஸ்வமாயாம்
த்ரிகு3ணாத்மிகாம் –
தன்னிடத்திலுள்ள மூன்று குணங்களையுடைய மாயையில் உள்ள
ஸங்க்ஷோப4யன் – குணங்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தி
ஆதௌ - முதலில்
ஸூத்ர – சூத்ராத்மாவான ஹிரண்யகர்ப்பனை
ஸ்ருஜத்ய - தோற்றுவித்தார்
தாமாஹுஸ்திகு3ணவ்யக்திம்
ஸ்ருஜந்தீம் விஶ்வதோமுக2ம் |
யஸ்மின்ப்ரொதமித3ம்
விஶ்வம் யேன ஸம்ஸரதே புமான் || 20 ||
தாம் ஆஹு
த்ரிகுணவ்யக்திம் – ஹிரண்யகர்ப்பன்
மூன்று குணத்தையுடைய மாயையிலிருந்து வந்தவர் என்றும்
விஶ்வதோமுக2ம்
ஸ்ருஜந்தீம் – இந்த
ஸ்தூல உலகத்தையும் படைத்தவர் என்றும் கூறுகிறார்கள்
யஸ்மின் – இந்த சூத்ராத்மாவான ஹிரண்யகர்ப்பனோடு
ப்ரோதமிதம் விஶ்வம் – இந்த ஸ்தூல உலகம் கோர்க்கப்பட்டுள்ளது
புமான் யேன ஸம்ஸ்ரதே – இந்த உலகத்தில் ஜீவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்
யதோ3ர்ணனாபி4ர்ஹ்ருத3யாதூர்ண
ஸந்தத்ய வக்த்ரத: |
தயா ஹிஹ்ருத்ய
பூ4யஸ்தாம் க்3ரஸத்யேவம் மஹேஶ்வர: || 21 ||
எவ்வாறு சிலந்தி
பூச்சியானது தன் உடலிலிருந்து வாய் வழியாக நூலைக் கொண்டு வந்து வலையை பின்னுகின்றது.
அதிலேயே வாழ்கிறது. பிறகு அதை தனக்குள் இழுத்துக் கொள்கிறது. அது போல மஹேஸ்வரன் தானே உபாதான காரணமாகவும்,
நிமித்த காரணமாகவும் இருந்து இந்த உலகத்தை ஸ்ருஷ்டித்து, லீலைகள் புரிந்து, கல்ப
முடிவில் தன்னுள் இழுத்துக் கொள்கிறார்.
யத்ர யத்ர மனோ தே3ஹீ
தா4ரயேத்ஸகலம் தி4யா |
ஸ்னெஹாத்3 த3வேஷாத்3
ப4யாத்3வாபி யாதி தத்தத்ஸ்வ ரூபதாம் || 22 ||
தே3ஹி – ஜீவாத்மாவான நாம்
யத்ர யத்ர மனோ
தா4ரயேத் –
எந்தெந்த இடத்தை மனதில் தொடர்ந்து
ஸகலம் தி4யா – முழுமையாக, அறிவுடன் நினைத்துக் கொண்டிருக்கின்றோமோ
தத்தத் ஸ்வரூபதாம் – அதையே அடைகின்றான். அந்த தன்மையை அடைகின்றான்
ஸ்னேஹாத், த3வேஷாத்,
ப4யாத் – அன்பினால்,
வெறுப்பினால், பயத்தினால் நமக்குள் இருக்கும் மூன்று சக்தியின் உணர்வுகளின்
தூண்டுதலினால் இவ்வாறு தொடர்ந்து ஒன்றையே நினைக்க வைக்கின்றது. அவைகள் பற்று போன்ற
ஏதோ ஒரு குணத்தினாலோ, வெறுப்பினாலோ, பயத்தினாலோ ஒன்றையே தொடர்ந்து நினைத்துக்
கொண்டிருக்க வைக்கும்.
கீட: பேஶஸ்க்ருதம்
த்4யாயன்குட்3யாம் தேன ப்ரவேஶித: |
யாதி த்த்ஸாத்மதாம்
ராஜன் பூர்வரூபமஸந்தயஜன் || 23 ||
அரசே! கூட்டினுள் அடைக்கப்பட்ட புழுவானது வண்டையே நினைத்துக் கொண்டிருந்தது. அதன்
விளைவாக தன் சரீரத்தை விடாமலே தானும் வண்டாகி மாறிவிடுகிறது. வண்டின் குணத்தை
அடைந்து விடுகிறது.
ஏவம் க்3ருப்4ய
ஏதேப்4ய ஏஷா மே ஶிக்ஷிதா மதி: |
ஸ்வாத்மோபஶிக்ஷிதாம்
பு3த்3தி4ம் ஶ்ருணு மே வத3த: ப்ரபோ4 || 24 ||
அரசே! இவ்விதம்
மேற்சொன்னபடி இந்த குருமார்களிடமிருந்து என் அறிவைக் கொண்டு அந்தந்த பாடங்களை
கற்றுக் கொண்டேன். நான் என்னுடைய
சரீரத்திலிருந்து கற்றுக் கொண்ட படிப்பினையைக் கேட்பாயாக.
தே3ஹோ கு3ருர்மம
விரக்திவிவேகஹேதுர்
பி3ப்4ரத்ஸ்ய ஸத்த்வநித4னம்
ஸத்தார்த்யுதர்கம் |
தத்த்வான்யனேன
விம்ருஶாமி யதா2 ததா2பி
பாரக்யமித்யவஸிதோ விசராம்யஸங்க3: || 25 ||
இந்த தேகமும் எனக்கு
குருவாகின்றது. இது வைராக்கியத்தை அடைவதற்கும், விவேகத்தை அடைவதற்கும் காரணமாக
இருக்கின்றது. இந்த உடல் அடிக்கடி
துன்பத்தை தரக்கூடியது. இதனால் வைராக்கியத்தை அடைய வேண்டுமேயொழிய, வெறுப்பையோ,
பயத்தையோ அடையக் கூடாது. பாவம் செய்ய
தூண்டுவதிலிருந்து நீங்கி இருக்க வேண்டும். இந்த உடல் பிறப்பு-இறப்பு தன்மையை
உடையது. இந்த காரணங்களினால் நான் வைராக்கியத்தை அடைந்தேன். இந்த உடலின் துணைக்
கொண்டுதான் தத்துவ விசாரம் செய்கின்றேன். இருந்தாலும் இந்த உடல் பிறர்க்கு உரியது
என்று முடிவு செய்து இந்த உடலின் மீது பற்று இல்லாதவனால் சஞ்சரித்துக்
கொண்டிருக்கின்றேன்.
ஜாயாத்மதார்த2பஶுப்4ருத்யக்3ருஹாப்தவர்கா3ன்
புஷ்னாதி யத்ப்ரியசிகீர்ஶயா விதன்வன் |
ஸ்வாந்தே
ஸக்ருச்ச்3ரமவருத்3த4 த4ன: ஸ தே3ஹ:
ஸ்ருஷ்த்வாஸ்ய பீ3ஜமவஸீத3தி வ்ருக்ஷ
த4ர்ம: || 26 ||
இந்த உடலைக் கொண்டு
மனிதன் மனைவி, மக்கள், செல்வம், வீடு, நிலம், பசு, பணியாள், நண்பர்கள், உறவினர்கள்
ஆகியோரிடமிருந்து சுகத்தை எதிர்பார்த்து இவைகளை கஷ்டப்பட்டு பெருக்கி பராமரித்துப்
போஷிக்கிறான். சந்தோஷத்தை அடைந்தானா என்று கேட்டால் இல்லைதான் என்பான். இவன்
அனுபவித்த கஷ்டங்கள் என்னவாகின்றன. கடைசியில் இந்த தேகமானது அடுத்த பிறவிக்கு
விதையை விதைத்துவிட்டு இறந்து போகின்றது. இந்த உடலுக்கு சுகத்தை கொடுக்க வேண்டும்
என்ற விவகாரத்தில் பாவங்கள்தான் சேர்த்து வைக்கப்படுகின்றது. எப்படி ஒரு மரம் விதையை உற்பத்தி செய்தபின்,
அழிந்து விடுகிறதோ அதுபோலதான் இந்த சரீரமும் இருக்கின்றது.
ஜிஹவைகதோSமுமபகர்ஷதி கர்ஹி தர்ஷா
ஶிஶ்னோSன்யதஸ்த்வகு3த4ரம் ஶ்ரவணம் குதஶ்சித் |
க்4ரானோSன்யதஶ்சபலத்3 த3க்க்வ ச கர்மஶக்திர்
ப3ஹவ்ய: ஸ்பத்ன்ய இவ க்ஹபதிம் லுனந்தி || 27 ||
இந்த புருஷன் கண்,
காது, நாக்கு, தோல், மூக்கு ஆகிய ஞானேந்திரியங்களும், ஐந்து கர்மேந்திரியங்களும்
நாலாபக்கமும் இழுத்து துன்புறுத்தப்படுகின்றான்.
எப்படி ஒருவனுக்கு பல மனைவிகள் இருந்தால் ஒவ்வொருவரும் அவனை தன்னிடத்து
இழுக்க முயற்சி செய்து அவனை அலைக்கழிக்கின்றார்களோ அதுபோல இந்தப் புலன்கள் மனிதனை
அலைகழிக்கும்.
ஸ்ருஷ்ட்வா புராணி
விவிதா3ன்ய ஜயாத்மஶக்த்யா
வ்ரிக்ஷான்ஸரீஸ்ருப்பஶூன்க2 க3த3ந்த3
ஶூகான் |
தைஸ்தைரதுஷ்டஹ்ருதய:
புருஷம் விதா4ய
ப்3ரஹ்மாவலோகதி4ஷணம் முத3மாப தேவ: || 28 ||
பகவான் தன்னுடைய
மாயாசக்தியின் துணைக் கொண்டு விதவிதமான உடல்களைப் படைத்தார். அவைகள் மரங்கள், ஊர்வன, விலங்குகள், பறவைகள்,
கொசுக்கள், நீரில் வாழ்பவைகள் ஆகியவைகளை தோற்றுவித்தார். இந்தப் படைப்புக்களால்
அவர் மனதில் திருப்தி ஏற்படவில்லை. எனவே பிரம்மத்தை புரிந்து கொள்கின்ற
புத்தியுடைய மனிதனை படைத்து மகிழ்ச்சி அடைந்தார்.
லப்3த்4வா
ஸுது3ர்லப4மிதம் ப3ஹுஸம்ப4வாந்தே
மானுஷ்யமர்த2 த3மநித்யமபீஹ தீ4ர: |
தூர்ணம் யதேத ந
பதேத3னும்ருத்யு யாவன்
நி:ஶ்ரேயஸாய விஷய: க2லு ஸர்வத: ஸ்யாத் || 29 ||
இந்த கிடைத்தற்கரிய இந்த
மனித உடல் பல பிறவிகளுக்கு பிறகுதான் கிடைக்கும். இது நிலையற்றதாக இருந்தாலும் இதைக் கொண்டுதான்
இப்பிறவியிலேயே புருஷார்த்தங்களைப் பெற முடியும் என்பதை அறிவாளி (தீர புருஷன்) உணர
வேண்டும். எனவே உடல் சக்தியை இழப்பதற்கு முன் விரைவில் பகவத் பிராப்தி என்கின்ற
மகத்தான பேரின்பத்தை அடைய முயல வேண்டும். ஏனென்றால் மற்ற இன்பங்கள் எந்த ஜந்துவாக
பிறந்தாலும் கிடைக்கும். பேரின்பத்தை மனித உடலால் மட்டுமே அடைய முடியும். விலை மதிக்க முடியாத மனிதப் பிறவியை வீணாக்க
கூடாது.
ஏவம் ஸஞ்தாதவைராக்3யோ
விக்3ஞானாலோக ஆத்மனி |
விசராமி மஹீமேதாம்
முக்தஸங்கோ3Sனஹங்க்ருத: || 30 ||
இவ்வாறு நான்
வைராக்கியம் அடைந்தவனாக இருக்கின்றேன்.
ஆத்ம ஞானத்தை ஓளியாக கொண்டு என்னிடத்திலே வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன்.
எதனிடத்திலும் பற்றில்லாதவனாகவும், அகங்காரமற்றவனாகவும், கர்வமற்றவனாகவும்
இருக்கின்றேன். இந்த உலகத்திலே
கவலையில்லாமல் பரம சாந்தமாய் சுற்றிக் கொண்டிருக்கின்றேன்.
ந ஹயேகஸ்மாத்3
கு3ரோர்ஞானம் ஸுஸ்தி2ரம் ஸ்யத்ஸுபுஷ்கலம் |
ப்3ரஹ்மைத3த்3விதீயம்
வை கீ3யதே ப3ஹுதா3ர்ஷிபி4: || 31 ||
ஒரே ஒரு
ஆசாரியரிடமிருந்து முழுமையாக நிலையானதைப் பெற முடியாது. இரண்டற்றதான, ஒன்றாகவே இருக்கின்ற பிரம்மத்தை
பல விதத்தில் ரிஷிகள் விளக்கி இருக்கிறார்கள்
ஶ்ரீப4கவான் உவாச
இத்யுக்த்வா ஸ யது3ம்
விப்ரஸ்தமாமந்த்ரய க3பீ4ரதீ4: |
வந்தி3த: ஸ்வர்சிதோ ராஜா
ய்யௌ ப்ரீதோ யதா2 க3தம் || 32 ||
ஶ்ரீபகவான்
கூறுகிறார்.
இவ்விதம் ஆழ்ந்த
அறிவுடைய ஆத்ம ஞானத்தையுடைய அவதூத அந்தணர் யது மன்னருக்கு உபதேசித்தார். மன்னரால் மிகவும் கௌரவிக்கப்பட்ட அவர் தான்
வந்தபடியே மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றார்.
அவதூ4தவச: ஶ்ருதா பூர்வேஷாம்
ந: ஸ பூர்வஜ: |
ஸர்வஸங்க3வினிர்முக்த:
ஸ்வசித்தோ ப3பூ4வ ஹ || 33 ||
இந்த அவதூதருடைய
உபதேசத்தை கேட்டு நம்முடைய முன்னோர்கள் எல்லா பற்றுக்களையும் நீக்கிவிட்டு மன
ஒருமைப்பட்டை, மன அமைதியை அடைந்தார்கள்
ஓம் தத் ஸத்