அத்தியாயம்-05
சந்நியாஸ யோகம்
ஸ்வாமி
குருபரானந்தாவின் உபதேச விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது-12-02-2022
முகவுரை:
சந்நியாசம் என்றால் நன்கு நிச்சயமாக
விட்டுவிடுதல், துறந்து விடுதல் (அஸ்யதி –
விட்டுவிடுதல், நி – நிச்சயமாக, சன்-நன்கு ) என்று பிரித்து
பொருள் புரிந்து கொள்ள முடியும். இதை நான்காவது
ஆசிரமமாக குறிப்பிடப்படுகின்றது. இந்த
ஆசிரமத்திற்கு ஆத்ம ஞானத்தை அடைவதற்காகவும், வைராக்கியத்தினாலும் செல்வார்கள். ஞானம் அடைந்தவன் எடுக்கும் சந்நியாசத்திற்கு
வித்3வத் சந்நியாசம் என்றும், வைராக்கியத்தினால் ஆத்ம ஞானமடைய எடுக்கும்
சந்நியாசத்திற்கு விவிதிஸா சந்நியாசம் என்று பெயர். வித்வித் சந்நியாசத்தை ஞானநிஷ்டை
அடைவதற்காக எடுத்துக் கொள்வார்கள். பொதுவாக மற்ற ஆசிரமத்தில் அதிக
விவகாரத்திற்குள் இருந்தால் நிஷ்டை அடைவது கடினம். பிராரப்த வசத்தாலும் ஞானியானவன் இந்த
சந்நியாசத்திற்கு வரலாம். அக்ஞானிக்கு
வைராக்கியம் வந்துவிட்டாலும் ஞானத்தை அடைவதற்காகவும், அடைந்த வைராக்கியத்தை
நிலைபடுத்தவும், முழுமையான மனத்தூய்மையை அடைவதற்காகவும் சந்நியாசத்தை
எடுக்கலாம். ஞானத்தின் பலன் வித்வத்
சந்நியாசத்திற்கு கொண்டு செல்லும்.
விவிதிஸா சந்நியாசம் சாதனமாக இருக்கின்றது. சாத்தியம் வித்வத் சந்நியாசம். வித்வத் சந்நியாசத்தில் எல்லா கர்மங்களையும்
விட்டுவிடலாம். சாஸ்திரமும் இதை
அனுமதிக்கின்றது. ஆனால் விவிதிஸா சந்நியாசத்தில் உள்ளவர்கள் சில கர்மங்களை செய்தாக
வேண்டும், சில நியமங்களை பின்பற்றிக் கொண்டிருக்க வேண்டும்.
अर्जुन उवाच ।
संन्यासं कर्मणां
कृष्ण पुनर्योगं च शंससि ।
यच्छ्रेय
एतयोरेकं तन्मे ब्रूहि सुनिश्चितम् ॥ 01 ॥
அர்ஜுனன் பகவானிடம் வினவுகிறார்!
ஸந்ந்யாஸம் கர்மணாம் க்ருஷ்ண – ஹே கிருஷ்ண பகவான்! சாஸ்திரம் மற்றும் அனைத்து கர்மங்களை விட்டுவிடுதல் பற்றி
ஶம்ஸஸி - புகழ்ந்து பேசியிருக்கின்றீர்கள், உயர்வாக
சொல்லியிருக்கிறீர்கள்
புனஹ யோகம் ச ஶம்ஸஸி – மீண்டும்
கர்மயோகத்தையும் புகழ்ந்து பேசுகிறீர்கள்
ஏதயோ யத் ஶ்ரேயஹ – இந்த இரண்டில்
எது மேன்மை தரக்கூடியதோ
தத் ஏகம் – அந்த ஒன்றை
ஸுநிஶ்சியம் –
நிச்சயப்படுத்திக் கொண்டு
மே ப்ரூஹி – எனக்கு
சொல்லுங்கள்.
श्रीभगवनुवाच ।
संन्यासः
कर्मयोगश्च निःश्रेयसकाअवुभौ ।
तयोस्तु
कर्मसंन्यासात्कर्मयोगो विशिष्यते ॥ 02 ॥
ஶ்ரீபகவான் சொல்கிறார்!
கர்ம சந்நியாசம், கர்மயோகம் இரண்டுமே
ஒருவனை மோட்சத்தை அடைய வைக்கும். ஆயினும் இந்த இரண்டில் கர்ம சந்நியாசத்தைக்
காட்டிலும் கர்மயோகமே உகந்தது.
கர்மயோகம் உகந்தது என்று சொல்வதற்கான காரணத்தை
விசாரம் செய்வோம். கர்ம சந்நியாசத்தைக் காட்டிலும் கர்மயோகம் ஏன் உகந்தது.?
· பொதுவாக வைராக்கியம்
என்பது ஆசிரமங்களை கடந்து செல்லும்போதுதான் வரும். கர்மயோகத்தினால் மட்டும்
வந்துவிடாது. வைராக்கியத்தை அடைவது என்பது
மிகவும் கடினமானது. உலகம் கொடுக்கும் போகத்தில் விருப்பமில்லாத மனவுறுதியே
வைராக்கியம். கர்மயோகத்தின் பலன்தான் வைராக்கியம். சந்நியாசிக்கு இருக்க வேண்டியது
வைராக்கியம்தான். அர்ஜுனனுக்கு வைராக்கியம் இல்லை என்பது பகவானுக்கு
தெரிந்திருப்பதால் அவனுக்கு உகந்தது கர்மயோகம்தான் என்று கூறியிருக்கின்றார்.
· ஒருவனிடத்தில் சிறிது
வைராக்கியம் இருப்பதால், சந்நியாசம் எடுத்துக் கொள்கிறான். இன்னொருவன் சிறிது
வைராக்கியம் இருந்தும் கர்மயோக வாழ்க்கை முறையை எடுத்துக் கொள்கின்றா்.
வைராக்கியம் தொடர்ந்து இருக்காமல் போகலாம். இந்த நிலையில்
கர்மயோகத்தில் இருப்பவனுக்கு வீழ்ச்சி இருக்காது.
ஆனால் சந்நியாச வாழ்க்கைக்கு சென்றவனுக்கு மனத்தூய்மை அடைவதற்கு வாய்ப்பு
இல்லாமல் போய்விடுகிறது. அதனால் போகத்தை
அனுபவிக்கும் பொருட்கள் இல்லாமலிருந்தாலும் மனதிலுள்ள ஆசைகள் நீங்காமல் இருப்பதால்
அவனால் வாழ்க்கையில் நிலையாக இருக்க முடியாது. இவனை மித்யாசாரன் என்று
பகவான் கூறியிருக்கின்றார். இந்த நிலையை அடையாமல் இருப்பதற்காக கர்மயோகத்தை
உகந்ததாக கூறினார்.
· எந்த கேள்விக்கும்
பதிலானது கேள்வி கேட்பவரின் தகுதியை வைத்து பதில் சொல்ல வேண்டும். அதனால் பொதுவாக
கர்மயோகத்தின் பலனாக வைராக்கியம் அடைந்து அதன்பின் சந்நியாசத்திற்கு செல்வதுதான்
நிச்சயமான வெற்றியை கொடுக்கும்
· பூர்ண வைராக்கியத்துடன்
எடுக்கும் விவித்ஸா சந்நியாசம், அரைகுறை வைராக்கியத்துடன் எடுக்கும் விவிதிஸா
சந்நியாசம் என்று இரண்டாக பிரிக்கப்பட்டிருக்கின்றது.
· கர்மயோகத்தை அர்ஜுனனுக்கு
பரிந்துரைப்பதினால், சந்நியாசத்தை தாழ்த்தி பேசுவதாக எடுத்துக் கொள்ளக்கூடாது
ज्ञेयः स
नित्यसंन्यासि यो न् द्वेष्टि न काङ्क्षति
।
निर्द्वन्द्वो हि
महबाहो सुखं बन्धात्प्रमुच्यते ॥ 03 ॥
சமமான மனநிலையோடு இருக்கும் தன்மையே கர்மயோகம்.
செயல்களினால் வரும் பலன்களை சமபுத்தியுடன் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மனநிலையில்லாமல் செயல்பட்டால் அவைகள்
நம்மை பந்தப்படுத்திவிடும், பாவ-புண்ணியங்களை கொடுக்கும்.
ஹே மஹாபா4ஹோ – ஹே அர்ஜுனா!
யஹ ந த்3வேஷ்டி ந காங்க்ஷதி – யாரொருவன்
எதிலும் வெறுப்பு, பற்று அடைவதில்லையோ, கடமைகளிலும், பலனிலும் விருப்பு-வெறுப்பற்ற
மனநிலையுடன் இருக்கின்றானோ
நிர்த்3வந்த்3வஹ – அவன்
இருமைகளிலிருந்து விடுபட்டவன்
ஸுக2ம் ப3ந்தா4த் ப்ரமுச்யதே – எளிதில் அவன்
சம்சார பந்தத்திலிருந்து விடுபடுகின்றான்
ஸஹ ஞேய – அவன் கர்மயோகி
என்று அறிந்து கொள்ள வேண்டும்.
நித்ய ஸந்ந்யாஸி – அவனேதான்
எப்பொழுதும் சந்நியாசியாக இருப்பவன்
கர்மயோகியை எப்பொழுதுமே சந்நியாசியாக அறிந்து
கொள்ள வேண்டும்.
நமது மனம் எப்பொழுதும் இருமைகளால்தான்
இன்ப-துன்பங்களை அடைகின்றது..
கர்மயோகத்தின் மூலமாக இந்த இருமைகளிலிருந்து விடுதலை அடைவதால் மனம்
அமைதியடைகிறது. மனம் அமைதியுடன்
இருக்கும்போது ஆத்மாவைப் பற்றிய விவேகத்துடன் இருப்போம். வைராக்கியம் ஏற்படும். பிறகு சாதன சதுஷ்டயத்தை அடையப்பெற்று தத்துவ
விசாரத்தின் மூலம் படிப்படியாக ஞானத்தை அடைவோம்.
साङ्ख्ययोगौ
पृथग्बालाः प्रवदन्ति न पण्डिताः ।
एकमप्यास्थितः
सम्यगुभयोर्विन्दते फलम् ॥ 04 ॥
விவிதிஸா சந்நியாசியும், கர்மயோகியும் ஞானத்தை
அடைகின்றார்கள். இருவரும் மனத்தூய்மை அடைந்து ஞானயோகத்தின் மூலம் பிரம்மத்தை
அடைகின்றார்கள். அந்தந்த வாழ்க்கை
முறையிலிருப்பவர்களுக்கு விதிக்கப்பட்ட நியமங்களையும், யமங்களையும் கடைப்பிடித்து
கடமைகள் செய்தால்தான் பலனை அடைய முடியும்.
ஸாங்க்2ய யோகஹ – சந்நியாச
வாழ்க்கையானது கடமைகளுக்குள் இருந்து கொண்டு வாழும் வாழ்க்கை முறை
ப்ருத2க்3பா3லா ப்ரவத3ந்தி – வெவ்வேறு
பலனைத் தரக்கூடியவை என்று சாஸ்திரத்தை அறியாதவர்கள் கூறுகிறார்கள்
ந பண்டி3தா – சாஸ்திரத்தை
அறிந்தவர்கள் இப்படி சொல்லமாட்டார்கள்
ஏகம் அபி ஆஸ்தி2த: ஸம்யக்3 – இந்த இரண்டில்
ஒன்றை சரியாக பின்பற்றினால்
உபயோ ப2லம் விந்தந்தே – இரண்டினுடைய
பலனையும் அடைகின்றான்.
यत्साङ्ख्यैः
प्राप्यते स्थानं तद्योगैरपि गम्यते ।
एकं साङ्ख्यं च
योगं च यः पश्यति स पश्यति ॥ 05 ॥
சந்நியாச ஆசிரமத்திலிருந்து அடையப்படுகின்ற முடிவான
பரமாத்மாவை, மோட்சத்தை கர்மயோகிகளும் அடைகிறார்கள் .
ஸாங்க்2யை: - ஞான
நிஷ்டர்கள் என்ன பலனை அடைகின்றார்களோ அதையே கர்மயோகிகளும் அடைகின்றனர் என்று
சங்கரர் கூறுகிறார்.
சந்நியாசத்தையும், கர்மயோகத்தையும் ஒன்றாக
பார்க்கிறார்களோ அவர்கள்தான் உண்மையாக பார்க்கிறார்கள். மனத்தூய்மையை விதவிதமான
சாதனங்கள் மூலம் அடையலாம. ஆனால் ஞானத்தை
அடைவதற்கு ஞானயோகம் ஒன்றுதான் சாதனம்
संन्यासस्तु
महाबाहो दुःखमाप्तुमयोगतः ।
योगयुक्तो
मुनिर्ब्रह्म नचिरेणाधिगच्छति ॥ 06 ॥
ஹே அர்ஜுனா! நம்மிடத்தில் காலம் அதிகமாக
இருக்கும்போது அதுவே மிக சுமையாக தெரியும். சந்நியாசத்தில் கடமைகள் எதுவும்
இல்லாததால் அந்த வாழ்க்கைமுறை மிகவும் கடினமானது ஆனால் உயர்ந்தது. நம் மனதில் அதிக அளவு விருப்பு-வெறுப்புக்களை
வெளிப்படுத்துவதற்கு இல்லறம் பயன்படுகிறது.
தனிமையில் இருந்தால் இவைகளை வெளிப்படுத்துவதற்கு வழியில்லாததால் மனம்
சஞ்சலப்பட்டுக் கொண்டிருக்கும். நேரம்
செல்வதற்கு கடினமாகத் தோன்றும். சந்நியாசம் மிகவும் உயர்ந்தது, மேலானது, ஆனால் இதை
கர்மயோகத்தின் மூலம்தான் அடையமுடியும்.
ஹே அர்ஜுனா! கர்மயோகத்தை
கடைப்பிடிக்காதவர்களுக்கு சந்நியாசத்தை அடைவது மிகவும் கடினம். ஆனால் கர்மயோகத்தை கடைப்பிடித்து வாழ்பவன்
முனிவனாக இருக்கின்றான். இவன் பிரம்மத்தை
விரைவிலேயே அடைகின்றான். இங்கு பிரம்மன்
என்பது பரமாத்மாவை குறிக்கின்றது. மனதிலுள்ள அனைத்து பொருட்களிலும் வைராக்கியத்தை அடைவான்,
பற்றற்று இருப்பான். ஞானநிஷ்டை அடைவான். இந்த ஞானத்தை ஞானயோகம் மூலம் அடைவான்
என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
योगयुक्तो
विशुद्धात्मा विजितात्मा जितेन्द्रियः ।
सर्वभूतात्मभूतात्मा
कुर्वन्नपि न लिप्यते ॥ 07 ॥
கர்மயோகியின் லட்சணங்களானது அவன் எப்பொழுதும்
சமத்துவ மனநிலையுடன்
இருப்பான், பலன்களை இறைவனின் பிரசாதமாக
ஏற்றுக்கொள்பவன், பலனில்
விருப்பம் இல்லாமல் வாழ்பவன், தர்மப்படி வாழ்பவன்
யோக3யுக்தஹ – கர்மயோகத்தை
கடைப்பிடித்துக் கொண்டிருப்பவன்
விஶுத்3தா4த்மா – மனத்தூய்மை
அடைந்தவன்
விஜிதாத்மா – ஸ்தூல உடலை
வென்றவன், அதைக் கருவியாக பயன்படுத்துபவன், அதற்கு அடிமையாகி விடாமல்
இருப்பவன். இந்த நிலையை உபாஸனை, ஜபம்,
தியானம் என்கின்ற சாதனங்களை பயன்படுத்தி அடையலாம்.
ஜிதேந்திரியஹ – புலன்களை
வென்றவன்
திரிதண்டி என்பவன் வாக்கு,
மனம், உடல் இவைகளை கட்டுபடுத்தியவன்.
ஸர்வபூ4தாத்ம பூ4தாத்மா – அனைத்து
ஜீவராசிகளினுடைய ஆத்மாவாக உணர்ந்தவன், எல்லா ஜீவராசிகளிடத்தும் தன்னையே
பார்க்கின்றான். ஞானநிஷ்டையுடன்
இருக்கின்றான்.
குர்வன் அபி ந லிப்யதே – இப்படிபட்டவன்
செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் அதனால் பந்தப்படுவதில்லை. உலக நன்மைக்காக செயலில்
ஈடுபடுவான் அதனால் இவனுக்கு ஒரு பயனும் இருக்காது.
नैव
किञ्चित्करोमीति युक्तो मन्येत तत्त्ववित् ।
पश्यञ्श्रुण्वन्स्पृशञ्चिघ्रन्नश्र्नन्गच्छन्स्वपञ्श्वसन्
॥ 08 ॥
प्रलपन्विसृजन्गृह्णन्नुन्मिषन्निमिषन्नपि
।
इन्द्रियाणीन्दियार्थेषु
वर्तन्त इति धारयन् ॥ 09 ॥
ஞானத்தினால் கர்ம சந்நியாசத்தை அடைந்தவனுக்கு
எந்தவிதமான கர்ம பந்தமும் கிடையாது செயல்களும் கிடையாது. தீவிர வைராக்கியம்
உடையவன். ஞானத்தை அடைந்தவன் சந்நியாச ஆசிரமத்திற்கு தகுதியானவன். ஞானி விவகாரம் செய்யும் போது அவன் என்ன
நினைப்பான் என்று சொல்ல முடியாது. ஞானத்தை
அடைந்தவன் எல்லா செயல்களையும் துறந்து விடலாம் என்று சாஸ்திரம் அனுமதி அளிக்கிறது.
யுக்த மன்யேத தத்த்வ்வித் – ஆத்மாவின்
ஸ்வரூபத்தை அறிந்தவன். இந்த அறிவில் நிலைபெற்றவன்.
நைவ கிஞ்சித்கரோமிதி – நான் எந்த ஒரு
செயலையும் செய்வதில்லை என்று நினைக்கின்றான்.
சில செயல்களை உதாரணமாக இதில்
கூறியிருக்கின்றார். பார்த்துக் கொண்டு இருக்கும் போதும், சாப்பிட்டுக் கொண்டிருக்கும்
போதும், நடந்து செல்லும் போதும், உறங்கும் போதும், மூச்சுவிட்டுக் கொண்டிருக்கும்
போதும், பேசினாலும், மலஜலம் போகும்போதும், பொருளை பற்றிக் கோண்டாலும், கண்களைத்
திறக்கும் போதும், மூடும் போதும் இவைகளெல்லாம் புலன்களைச் சார்ந்த விஷயங்களாக
செயல்படுகின்றன என்று உணர்ந்து கொண்டு நான் எதையும் செய்யவில்லை என்று
நினைக்கின்றான். நம்மிடமிருந்து உருவாகும் செயல்களால் பாதிக்கப்பட்டால் நாம்
இன்றும் புலன்களின் வசத்தில்தான் இருக்கின்றோம் என்று உணர்ந்து கொள்ளலாம்.
ब्रह्मण्याधाय
कर्माणि सङ्ग त्यत्तवा करोति यः ।
लिप्यते न स पपेन
पद्मपत्रमिवाम्भशा ॥ 10 ॥
இதில் கர்மயோக லட்சணத்தை கூறுகின்றார்.
கர்மாணி – செய்யும்
செயல்களையெல்லாம்
ப்ரஹ்மண்யாதா4ய – சகுண
பிரம்மனான ஈஸ்வரனிடம் அர்ப்பணம் செய்தும்
ஸங்க3 த்யக்த்வா – கர்ம பலனில்
உள்ள பற்றை துறந்தும்
யஹ கரோதி – யார் இவ்வாறு
செயல் செய்கின்றானோ
பத்3மபத்ரமிவா அம்ப4ஶா – தண்ணீரினால்
தாமரை இலை ஒட்டாமல் இருப்பது போல
லிப்யதே ந ஸ பாபேன – அவன்
பாவத்தினால் பாதிக்கப்படுவதில்லை
कायेन मनसा
बुद्धया केवलैरिन्द्रियैरपि ।
योगिनः कर्म
कुर्वन्ति सङ्ग त्यत्तवात्मशुद्धये ॥ 11 ॥
விருப்பு-வெறுப்புக்களினால் தூண்டப்படும்
எண்ணங்கள் மனதில் எழும்போது புத்தியானது நிச்சயம் செய்ய நம்மிடமிருந்து செயல்
வெளிப்படுகின்றது. இதில் மமகாரம் என்ற குணத்துடன் செயல்படுகின்றோம். என்னுடையது
என்ற மமகாரமின்றி செயல் செய்யப்பட வேண்டும்.
வெறும் உடலினால், வெறும் மனதினால், வெறும்
புத்தியினால், புலன்களினால் கர்மயோகிகள் செயல் செய்கிறார்கள். மமகாரமின்றி
ராக-துவேஷங்கள் இல்லாமல் செயல்படுகிறார்கள். பலனில் பற்றைத் துறந்து
செயல்படுகிறார்கள். மனத்தூய்மை அடையும் பொருட்டு இவ்விதம் செயல்படுகிறார்கள். மனதில் அசுர
குணங்களெல்லாம் நீங்கி இருப்பதே மனத்தூய்மையாகும். இதனால் மனதில் அமைதி இருக்கும்.
மோட்சத்தில் மீது தீவிர ஆசை வருதல், அதை பற்றிய அறிவை அடைதல், நற்பண்புகள்
நிறைந்தவனாக இருத்தல் இவைகள் மூன்றும் சேர்ந்தே மனத்தூய்மையைக் குறிக்கின்றது.
युक्तः कर्मफलं
त्यत्तवा शान्तिमाप्नॊति नैष्टिकीम् ।
औक्तः कामकारेण
फले सक्तो निबध्यते ॥ 12 ॥
கர்மயோகியானவன் செயலினால் வரும் பலனை
எப்படியிருந்தாலும் முழுமனதோடு ஏற்றுக் கொள்கிறான். கர்மயோகத்தினால் மன அமைதியை
அடைகின்றான். இதனால் அடையும் மன அமைதி
வேறு, மோட்சத்தினால் அடையும் மன அமைதி வேறு.
உதாரணமாக உணவைத்தேடி அடைந்தவனுக்கு உணவு கையில் கிடைத்தால் அடையும்
நிலைதான் முதல் மன அமைதி, அந்த உணவினால் பசி தீர்ந்ததால் அடையும் திருப்திதான்
மோட்ச மன அமைதி. இங்கு ஶாந்தம் என்பதை
மோட்சத்தினால் அடையும் மன அமைதியாக எடுத்துக் கொண்டால், மனத்தூய்மை அடைந்து,
ஞானயோகத்தின் மூலமாக ஞானத்தை அடைந்து நிலைபெற்று அடையும் மன அமைதியை எடுத்துக்
கொள்ள வேண்டும். கர்மத்தை யோகமாக செய்யாமல், மனதிலிருக்கும் ஆசையினுடைய
தூண்டுதலினால் செயல்களை செய்பவன், பலனின் ஆசையுள்ளவனாக இருப்பான். ஆனால் அவன் சம்சார பந்தத்தை அடைகின்றான். மன அமைதியை இழந்து விடுவான்.
நிப3த்4யதே- மன ஶாந்தியை இழந்து விடுவான்.
सर्वकर्माणि मनसा
संन्यस्यास्ते सुखं वशी ।
नवद्वारे पुरे
देही नैव कुर्वन्न कारयन् ॥ 13 ॥
ஸர்வகர்மாணி மனஸா ஸ்ந்யஸ்யாஸ்தே ஸுக2ம் வஶீ – அனைத்து
செயல்களையும் அறிவினால் துறந்துவிட்டு சுகமாக அமர்ந்திருக்கின்றான். அனைத்தையும் தன் வசப்படுத்தியவன்
ஸர்வம் – அனைத்து
விதமான கர்மங்கள் (நித்ய, நைமித்திக, காம்ய, பிராயசித்தம்)
மனஸா – விவேக
புத்தியினால்
ஸ்ந்ந்யஸ்ய –
துறந்திருக்கின்றான்.
ஆத்மாவாக தன்னை உணர்ந்தவன்தான் செயல்களை
விட்டவனாக இருக்க முடியும். ஏனென்றால்
ஆத்மா செயலெதுவும் செய்வதில்லை.
ஆத்மாவாகிய அவனுக்கும் செயலெதுவும் இல்லை என்பதை இயல்பாக உணர்ந்திருப்பதால்
அவன் செயல்களை துறந்தவனாக இருக்கின்றான்.
ஸுக2ம் ஆஸ்தே – சுகமாக
அமர்ந்திருக்கின்றான். தன்னிடத்திலேயே சுகமாக இருக்கின்றான்.
வஶீ – உடலையும், மனதையும்,
புலன்களையும் தன்வசப்படுத்தியவன், ஞானி
இப்படிபட்டவன்தான் தன்னிடத்திலேயே சுகமாக
இருக்க முடியும்.
நவத்வாரே புரே தே3ஹி – ஒன்பது
வாயில்களை உடைய நகரமாக ஸ்தூல சரீரம் இருக்கின்ற உடலில் சுகமாக
அமர்ந்திருக்கின்றான்
நைவ குர்வன் – அவன் ஒன்றும்
செய்வதில்லை.
ந காரயன் – அவன் எதையும்
செய்விப்பதுமில்லை, மற்றவர்கள் மூலம் எதையும் செய்வதில்லை
ஞானி தன்னை உடலுக்கும் வேறாக கருதுவதால் அவன்
இந்த உடலில் அமர்ந்து இருக்கின்றான்.
அக்ஞானி தன்னுடலை தானாக நினைப்பதால் நான் இங்கு அமர்ந்து இருக்கின்றேன்,
வீட்டில் அமர்ந்திருக்கின்றான் என்று கூறுவதை என்று புரிந்து கொள்ள வேண்டும். உடலை
பாதுகாக்கின்ற செயல்களை மட்டும் செய்து கொண்டிருப்பான். அவனது செயல்கள் சங்கல்ப
பூர்வமாக இருக்காது. பிராரப்தத்தினால்
செய்ய வேண்டிய செயல்களை செய்வான். ஆனால் இந்த செயல்களை நான் செய்யவில்லை என்ற
மனநிலையுடன் இருப்பான்.
न कर्तृत्वं न
कर्माणि लोकस्य सृजति प्रभुः ।
न कर्मफलसंयोगं
स्वभावस्तु प्रवर्तते ॥ 14 ॥
ஞானியினால் எப்படி செயலற்று இருக்க
முடிகின்றது? மற்றவர்கள் மூலமும் செயலெதுவும் செய்வதில்லை? என்ற கேள்விக்கு பதிலாக
இந்த ஸ்லோகம் அமைந்துள்ளது.
ஞானி தன்னை ஆத்மாவாக உணர்ந்து விட்டதால் அவன்
செயலற்றவன், செய்விப்பவனும் அல்ல. ஆனால்
அக்ஞானி தன்னை உடலாகவும், மனமாகவும் நினைத்துக் கொண்டிருப்பதால் அவன் செயல் செய்பவனாகவும்,
செய்விப்பவனாகவும் இருக்கின்றான்.
அக்ஞானியால் சம்சாரியாகத்தான் இருக்க முடியும்.
ப்ரபு: - ஆத்மா
தேகத்திற்கு எஜமானனாக இருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது
ந ஸ்ருஜதி – ஒன்றையும்
உருவாக்குவதில்லை, ஒன்றுக்கும் காரணமாகவும் இருப்பதில்லை
லோகஸ்ய – உடலாலும்,
மனதாலும்
ந கர்த்ருத்வம் – ஒருவனையும்
செயல் செய்ய தூண்டுவதில்லை
ந கர்மணி – கர்மங்களையும்
உண்டுபண்ணுவதில்லை. மனிதர்கள் அடைய விரும்பிய பொருட்களையும் உருவாக்குவதில்லை.
ந கர்மபல ஸம்யோகம் – கர்த்தாவோடு
பலனையும் சம்பந்தப்படுத்துவதில்லை
ஆத்மாவானது உடலை செயல் செய்ய தூண்டுவதில்லை.
உடல், மனம் விரும்பும் பொருட்களையும் உருவாக்குவதில்லை, செயல்களையும்
தோற்றுவிப்பதுமில்லை. செயலினால் வரும் பலனையும் சேர்க்கும் செயலையும் செய்யவில்லை.
ஸ்வபா4வஸ்து ப்ரவர்ததே – மாயைதான்
அனைத்தையும் செய்கின்றது. மாயையின் வசத்தினால் அக்ஞானிகள் செயல்களை செய்கின்றனர்.
மற்றவர்களையும் செயல் செய்ய தூண்டுபவர்களாகவும், பலனை அடைபவர்களாகவும்
இருக்கின்றார்கள். ஆத்மா செயலெதுவும்
செய்வதுமில்லை, செய்விப்பதுமில்லை, அனுபவிப்பதும் கிடையாது. மற்றவர்களை அனுபவிக்க
வைப்பதுமில்லை. எதையும் அடைவதில்லை, அனுபவிப்பதும் இல்லை.
नादत्ते कस्यचित्पापं
न चैव सुकृतं विभुः ।
अज्ञानेनावृतं
ज्ञानं तेन मुह्यन्ति जन्तवः ॥ 15 ॥
ஈஸ்வரனே ஸ்ருஷ்டிக்கும், ஸ்திதிக்கும்,
லயத்திற்கும் உபாதான, நிமித்த காரணமாக இருக்கிறார். அவரே கர்மபல தா3தா3வாக இருக்கின்றார். பிரம்மனும், மாயையும் சேர்ந்திருப்பது ஈஸ்வரன்.
பிரம்மன் அறிவு ஸ்வரூபம். உபாதியான மாயையை நீக்கி பார்த்தால் அவர் பிரம்ம
ஸ்வரூபமாக இருப்பதால் அவர் எந்த செயலும் செய்பவரல்ல, எதையும்
செய்விப்பதுமில்லை. இது பாரமார்த்திக
திருஷ்டி என்று கூறப்படுகிறது. வியாவஹாரிக திருஷ்டியில் பார்ப்பது என்பது மாயையோடு
சேர்த்து பார்க்கும் நிலை. இந்த திருஷ்டியில் அவர் காரணமாக இருக்கின்றார். கர்ம
பலன்களை கொடுத்து கொண்டிருப்பவர். இந்த
ஸ்லோகம் பாரமார்த்திக திருஷ்டி நோக்கில் பொருட்கொள்ள வேண்டும்.
விபு: - ஈஸ்வரன் எங்கும் வியாபித்திருப்பவர்
ந ஆத3த்தே – எதையும்
எடுத்துக் கொள்வதில்லை
கஸ்யசித் பாபம் – எவருடைய
பாவங்களையும் வாங்கிக் கொள்வதில்லை
ந ச ஏவ ஸுக்ருதம் – புண்ணியத்தையும்
கூட அவர் வாங்கிக் கொள்வதில்லை
பகவான் நம்முடைய பாவத்தையும் நீக்குவதில்லை,
புண்ணியத்தையும் வாங்கிக் கொள்வதில்லை
ஜந்தவ: முஹ்யந்தி – ஜீவராசிகள்
மோக வசப்பட்டிருக்கின்றனர்.
தேன – அதனால்
அக்ஞானேன ஆவ்ருதம் ஞானம் – அறியாமையினால்
அறிவானது மூடப்பட்டு இருக்கின்றது
நாம் என்றுமே பிரம்மனாகத்தான்
இருக்கின்றோம். இந்த அறிவானது, உண்மையானது
அறியாமையினால் மறைக்கப்பட்டிருக்கின்றது. இங்கு மோகம் என்பது நான் செய்கின்றேன்,
செய்விக்கிறேன் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பது. அறியாமையின் விளைவுதான்
மோகம்.
ज्ञानेन तु तद्ज्ञानं
येषां नाशितमात्मनः ।
तेषामादित्यवज्ज्ञानं
प्रकाशयति तत्परम् ॥ 16 ॥
விசாரம்: அறியாமை அநாதி
காலமாக இருந்து வருகின்றது. இது எப்பொழுது தோன்றியது என்று சொல்ல
முடியாது. ஆனால் ஞானம் வந்தால் அழியக்
கூடியது. பொதுவாக அறிவு என்பது எதையும் கொண்டு வராது, கொண்டு போகாது. ஆனால் இந்த
ஆத்ம ஞானம் அறியாமையை அழித்துவிடும். அடுத்து ஆவரணமான மறைக்கின்ற காரியத்தை
செய்யக்கூடியது. மோகத்திற்கு காரணமாக இருக்கும் அத்யாஸத்திற்கு காரணமாக இருக்கும்.
ஆத்மனஹ ஞானேன – தன்னைப்பற்றிய
ஞானத்தினால்
தத் அக்ஞானம் அந்த
அறியாமையானது ( ஆத்மாவை பற்றிய அறியாமை)
யேஷாம் நாஶிதம் – எவர்களுக்கு
நீக்கப்பட்டதாக இருக்கின்றதோ
தேஷாம் - அவர்களுக்கு
ஆத்யவத் ஞானம் – சூரியன் போல
அறிவானது
ப்ரகாஶயதி தத்பரம் – அந்த
பிரம்மத்தை விளக்கிக் காட்டுகின்றது.
நாம் அடையும் துயரங்களெல்லாம் இந்த அறியாமையினால்தான்
என்று புரிந்து கொள்ள வேண்டும்.
तद्बुद्धयस्तदात्मानस्तन्निष्टास्तत्परायणा ।
गच्छन्त्यपुनरावृत्तिं
ज्ञाननिर्धूतकल्मषाः ॥ 17 ॥
இதில் இரண்டு முக்கிய கருத்துக்கள்
இருக்கின்றது.
1. ஞானத்திற்கு பின் மனதில் ஏற்படும் மாற்றங்கள்
2. விதேஹ முக்தி
பலன் சொல்லப்படுகின்றது.
ஞானத்தை அடைவதற்கு இடையூறாக தடைகள் நீங்க அதன் பலனை
நாம் அனுபவிக்கும் அறிவும் அதிகமாக இருக்கும். பிறகு முழுமையாகி விடும்
1. தத்3புத்3த்4யஹ – பிரம்மத்திடம்
புத்தியை வைத்திருப்பவர்கள், புத்தியை பிரம்மத்தை புரிந்து கொள்வதில் ஈடுபட்டிருப்பவர்கள்
2. ததா3த்மானஹ – அந்த பிரஹ்ம
ஸ்வரூபமாக இருப்பவர்கள். நான் பிரம்மத்தை
புரிந்து கொள்பவன், பிரஹ்மம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்று நினைக்காமல்
அதன் ஸ்வரூபமாக உணர்ந்திருப்பவர்கள். அறிபவன்-அறியப்படும் பொருள் என்ற வேறுபாடு
நீங்கப்பெற்றவர்கள். மனதை
அனாத்மாவிலிருந்து ஆத்மாவிடம் வைத்தவர்கள்
3. தன்னிஷ்டா – பிரம்ம
ஞானத்தில் நிலை பெற்றவர்கள், ஞான நிஷ்டை அடைந்தவர்கள். பிராரப்தமானது விதவிதமான
தடைகளை கொடுத்து ஞானத்திலிருந்து விலகிவிட முயற்சிக்கும். அதற்கெல்லாம் அசைந்து கொடுக்காமல் ஞானத்தில்
நிலையாக இருத்தல்
4. தத்பராயணா – தன்னிடத்திலே சுகித்துக் கொண்டு இருப்பவர்கள். இன்னொரு பொருள் பரம புருஷார்த்தமான
பிரம்மத்தை லட்சியமாக வைத்திருப்பவர்கள். இந்த பொருள் கொண்டால் முதல்படியாக
இதைக்கொள்ள வேண்டும்.
ஞான நிர்தூ4த கல்மஷம் – ஞானத்தினால் அறியாமையை நீக்கியவர்கள்
அபுனராவ்ருத்திம் – திரும்பி வராத
நிலையை, மீண்டும் பிறவாத நிலையை
கச்சந்தி - அடைகிறார்கள்
ஞானத்தினால் அறியாமையை பாவம் முதலிய
சம்சாரத்திற்கு காரணமாக இருக்கின்ற அக்ஞானத்தை நீக்கியவர்கள் மீண்டும் பிறவாக
நிலையை அடைகிறார்கள்.
विद्याविनयसम्पन्ने
ब्राह्मणे गवि सस्तिनि ।
शुनि चैव श्वपाके
च पण्डिताः समदर्शिनः ॥ 18 ॥
ஆத்மஞானத்தை உடையவன் உலகத்தை எப்படிபட்ட
பார்வையுடன் பார்க்கின்றான் என்றால் சமநோக்குடன் பார்ப்பார்கள்
ப்3ராஹ்மணே -
பிராமணனிடத்திலும்
க3வி –
பசுவினிடத்திலும்
ஸஸ்தினி -
யானையிடத்திலும்
ஶுனி –
நாயினிடத்திலும்
ஶ்வபாகே – நாய்கறி சாப்பிடும் சண்டாளனிடமும்
வித்யா – வேதாந்த
ஞானம், வேதத்தினுடைய அறிவையுடைய
வினயம் ஸம்பன்னே – பணிவுடன்
கூடிய
பண்டிதா: - பண்டிதர்களான
ஞானிகள்
ஸமதர்ஶின: - சமமான
பார்வையுடையவர்களாக இருக்கின்றார்கள்
ஸமதர்ஶனஹ - கண்ணால் பார்ப்பவைகளை
எல்லாம் சமமாக பார்ப்பது கிடையாது. வியாவஹார நோக்கிலேயும் சமமாக
இருக்கக்கூடாது. பகவான் இங்கே அறிவுப்
பார்வையில் பார்ப்பதை கூறுகின்றார்.
1. ப்ரதிதி திருஷ்டி – நாம ரூபத்திற்கு
முக்கியத்துவம் கொடுத்து பார்ப்பது
2. ஸ்வரூப திருஷ்டி – பொருளின் அதிஷ்டானத்தை
பார்ப்பது
உதாரணமாக மரயாணையில் அதன் நாம-ரூபத்தை மட்டும்
பார்ப்பது ப்ரதிதி திருஷ்டி, அதன் அதிஷ்டானமான மரத்தை பார்ப்பது ஸ்வரூப திருஷ்டி.
இங்கே பகவான் ஸ்வரூப திருஷ்டியின் அடிப்படையில்
உபதேசிக்கின்றார். இந்த பிரபஞ்சம் மாயையுடைய காரணம். இது சத்துவ, ரஜோ, தமோ ஆகிய
குணங்களை உடையது. மாயையே மித்யா என்று அழைக்கப்படுகிறது. இந்த மூன்று குணங்களும் ஆத்மாவில்
ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. நாம் உலகத்தை
பார்க்கும் போது நாம ரூபங்களை மட்டும் பார்த்து விவகாரம் செய்கின்றோம். ஞானியானவன்
அனைத்து வேற்றுமைகளையும் அறிந்தும் அவைகளை அதிஷ்டானமான பிரம்மத்தையே
பார்க்கின்றான்.
इहैव तैर्जितः
सर्गो येषां साम्ये स्थितं मनः ।
निर्दोषं हि समं
ब्रह्म तस्माद् ब्रह्मणि ते स्थिताः ॥ 19 ॥
சமநோக்கு பார்வை உடையவன் சம்சாரத்திலிருந்து
விடுதலை அடைகிறான்
யேஷாம் மனஹ – எவர்களுடைய
மனமானது
ஸாம்யே ஸ்தி2தம் – சமமாக
இருக்கின்ற பிரம்மத்தில் நிலைத்துள்ளதோ
இஹ ஏவ – இங்கேயே,
இப்பொழுதே, இந்த தேகத்துடன் இருக்கும் போதே
தைஹி – அவர்களால் (
சமதர்ஶனத்தை உடையவர்களால் )
ஜிதஹ ஸர்க3ஹ – இந்த
பிறவியானது வெற்றிக் கொள்ளப்பட்டது. இந்த பிறப்பின் புருஷார்தத்தை அடையப்பட்டதாக
இருக்கும்.
நிர்தோஷம் ப்ரஹ்ம –
பிரம்மத்தினிடத்தில் எந்த குறையும் இல்லாததால் ஆனந்த ஸ்வரூபமாக இருப்பதனால்
ஸமம் ப்ரஹ்ம – பிரஹ்மன் சமமாக
இருப்பது, மாறாமல் அழியாமல் இருப்பது. அதனால்தான் ஸமதர்ஶனம் என்பது பிரஹ்ம
தர்ஶனத்திற்கு இணையாக கருதப்படுகிறது.
தஸ்மாத்3 - ஆகவே
தே ப்ரஹ்மணி ஸ்தி2தா: - அவர்கள்
பிரம்மனிடத்தில் நிலைத்துள்ளார்கள்.
न
प्रह्रष्येत्प्रियं प्राप्य नोद्विजेत्प्राप्य चाप्रियम् ।
स्थिरबुद्धिरसम्मूढो
ब्रह्मविद् ब्रह्मणि स्थितः ॥ 20 ॥
எப்பொழுது ஒருவனது மனமானது வெளிசூழ்நிலைகளால்
பாதிக்கப்படாமல் இருக்கின்றதோ அப்பொழுது ஞானநிஷ்டை அடைந்துவிட்டான் என்று பகவான்
கூறுகிறார்.
ப்ரியம் ப்ராப்ய – விருப்பமான,
சுகத்தைக் கொடுக்கும் விஷயமோ, பொருள், சூழ்நிலை
ந ப்ரஹ்ருஷ்யேத் – இவைகளினால் மகிழ்ச்சியை
அடையாமலும்
ந உத்விஜேத் ப்ராப்ய அப்ரியம் – நமக்கு
விருப்பமில்லாத பொருளோ, விஷயமோ, சூழ்நிலையோ வரும்போது அதனால் வருத்தம் கொள்ளாமலும்
ஸ்தி2ர புத்தி- நிலையான அறிவையுடையவன்
அஸம்மூட4ஹ – அவனுடைய
மனமானது மோகத்திலிருந்து விடுபட்டிருக்கும்.
ப்ரஹ்மவித் – அவனே பிரம்மத்தை
அறிந்தவன்
ப்ரஹ்மணி ஸ்தி2த: -அவனே பிரம்மத்தில்
நிலைபெற்றவன்
बाह्यस्पर्शेष्वसक्तात्मा
विन्दत्यात्मनि यत्सुखम् ।
स
ब्रह्मयोगयुक्तात्मा सुखमक्षयमश्नुते ॥ 21 ॥
அபிநிவேஷம் – அதிகமான
அபிமானத்தை உடலில் வைத்திருக்கும் நிலை
வைராக்கியம் – வெளிவிஷயங்களை
போகப்பொருட்களாக பார்க்காமல் விலக்கி வைத்தல்
பாஹ்யஸ்பர்ஶேஷ்வ – இந்திரியங்களால்
போகத்திற்காக பார்க்கப்படும் வெளி விஷயங்களில், வெளியிலுள்ள புலன்நுகர்
பொருட்களில்
அஸக்தா: ஆத்மா – பற்றில்லாத
மனதையுடையவன்
விந்த3தி யத் ஸுகம் ஆத்மனி - இப்படிப்பட்டவன் தன்னிடத்திலே
இருக்கின்ற சுகத்தை அடைகின்றான்.
நம்மிடத்திலே சுகத்தை அனுபவிப்பது கடினம், வெளிவிஷயத்தில்
அதை காண முடியாது
ஸஹ ப்ரஹ்மயோக3 யுக்தாத்மா – பிரம்மத்தில்
எல்லா நிலைகளிலும் மனதை நன்கு பிரம்மத்தில் பொருத்தியவன்
அக்ஷயம் – அழிவில்லாத,
பூரணமான
ஸுகம் அஶ்னுதே – சுகத்தை,
ஆத்மாவை அடைகின்றான்.
ये हि संस्पर्शजा
भोगा दुःखयोनय एव ते ।
आद्यन्तवन्तः कौन्तेय
न तेषु रमते बुधः ॥ 22 ॥
கௌந்தேய – ஹே அர்ஜுனா!
ஸம்ஸ்பர்ஶஜா போ4கா3 –
இந்திரியங்களுக்கும், விஷயங்களுக்கும் இடையே ஏற்படும் சம்பந்தத்தினால் அடையும்
சுகங்கள்.
யே ஹி தே து:க2யோனய ஏவ – அவைகள்
துக்கத்திற்கு காரணமாக இருக்கின்றது
ஆத்யந்தவந்தஹ – முதலும், முடிவை
உடையது இந்த சுகங்கள். ஒரு கணம்தான் இருக்கும்.
ந தேஷு ரமதே பு3த4: - அந்த
போகங்களில் ஞானிகள் சுகித்திருப்பதில்லை, விலக்கி விடுகின்றார்கள்.
நாம் வைராக்கியம் அடைவதற்கு வெளி விஷயத்தின்
தன்மையை இதில் பகவான் கூறுகின்றார். வைராக்கியம் வளர்வதற்கு இந்த ஸ்லோகத்தை
நினைவுபடுத்திக் கொண்டிருக்க வேண்டும்.
வெளிவிஷயங்களில் இருக்கும் தோஷங்கள் கீழே கூறப்படுகின்றது.
தோஷம்-1 – ஷனிக்த்வம் – எல்லா சுகங்களும் ஒரு
க்ஷணம்தான் அனுபவிக்க முடியும். அதற்கு
முன்னும் பின்னும் துக்கம்தான். (ஆத்யந்தவாத்)
தோஷம்-2 – துக்கயோனி – ஒவ்வொரு விஷய சுகமும்
துக்கத்திற்கு காரணமாக இருக்கும். எந்த
பொருளோடு அதிக நாள் சம்பந்தம் வைத்திருந்தாலும் அதற்கு அடிமையாகி விடுவோம்.
தோஷம்-3 – போ4கம் – ஒரு விஷய சுகத்தை
அனுபவித்துக் கொண்டிருக்கும் போது, அது இல்லாமல் போகின்ற நிலையை எண்ணி பயந்து
கொண்டிருப்போம்.
தோஷம்-4 – இந்திரிய பலவீனம் – எந்த
இந்திரியத்தின் மூலமாக சுகத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கின்றோமோ அந்த இந்திரியம்
விரைவாக அதன் சக்தியை இழந்துவிடும்.
தோஷம்-5 – எதை அனுபவித்தாலும் அத்தோடு திருப்தி
அடையமாட்டோம். அதற்கு மேலே உள்ளதை நினைத்து துயரப்படுவோம்.
மேற்கூறிய குறைகளை நன்கு சிந்தித்துப்
பார்ப்பதினால் வைராக்கியம் வளரும். விஷய போகத்தை துறக்க வேண்டும் என்ற வைராக்கியம்
வரும்.
शक्नॊतीहैव यः
सोढुं प्राक्शरीरविमोक्षणात् ।
कामक्रोधोद्भवं
वेगं स युक्तः स सुखी नरः ॥ 23 ॥
இதில் மனதில் எழும் ஆசை, கோபம் இவைகளின்
வேகத்தை தணிக்க வேண்டும் என்று உபதேசிக்கின்றார். அவைகளை நீக்கி விடவேண்டும் என்று
கூறவில்லை.
இஹ ஏவ – இந்த
உலகத்தில் உயிரோடிருக்கும் போதே
ப்ராக் ஶரீர விமோக்ஷணாத் – நமது உடல்
மரணத்தை அடைவதற்கு முன்பே
காம க்ரோதோ உத்3ப4வம் – ஆசையினாலும்,
கோபத்தினாலும், உண்டாகின்ற
வேக3ம் – எழுச்சியை,
வேகத்தை
யஹ ஸோதும் – யாரொருவனால் சகித்துக் கொள்கின்ற, பொறுத்துக் கொள்கின்ற
ஶக்னோதீ – திறமை பெற்று விட்டானோ
ஸஹ யுக்தஹ – அவனே அறிவில்
நிலை பெற்றவன்
ஸஹ நர: ஸுகீ2 – அந்த மனிதனே
சுகத்தை பெற்றவன்
மனதில் வரும் ஆசைகளையும், கோபத்தையும், க்ரோதத்தையும்
நீக்கிவிட வேண்டும். பார்க்கும் பொருளின்
மீது அடையும் ஆசையை விட்டொழிக்க வேண்டும். விருப்பம் இல்லாத விஷயமோ, மனிதனோ,
பொருட்களோ சந்திக்கும் போதோ, நினைக்கும் போதோ அடையும் துவேஷத்தை, க்ரோதத்தை,
வெறுப்பை நம் மனதிலிருந்து நீக்கிவிட வேண்டும். இந்த உணர்ச்சிகளின் வேகத்தை
கொஞ்சம் கொஞ்சமாக மரணத்திற்கு முன் தணிக்க வேண்டும்.
योऽन्तःसुखोऽन्तरारामस्तथान्तर्ज्योतिरेव
यः ।
स योगी
ब्रह्मनिर्वाणं ब्रह्मभूतोऽधिगच्छति ॥ 24 ॥
யஹ அந்த ஸுக – எவனொருவன்
தன்னிடத்திலே சுகமாக இருக்கின்றனோ, அவன்
அந்தராராம: - அந்த + ஆராமஹ –
தனக்குத்தானே விளையாட்டு களமாக இருக்கிறான்.
தன்னோடேயே விளையாடிக் கொண்டிருக்கின்றான். அவனுடைய சுகத்திற்கு காரணம்
தன்னைத் தவிர வேறெதுவும் இல்லை. இதுவே ஜீவன் முக்தி நிலை.
ததா2 அந்தர் ஜ்யோதி – அவனுடைய அறிவு
அவனுக்குள்ளே இருக்கின்றது
ஸஹ யோகீ – அவன்தான்
யோகி, ஞானி, ஞானத்தில் பொருந்தியவன்
ப்3ரஹ்ம பூ4தஹ – பிரம்ம
ஸ்வரூபமாக இருப்பவன், முழு மனநிறைவுடன் இருப்பவன்
ப்3ரஹ்ம நிர்வாண அதிகச்ச2தி – பிராரப்தம்
முடிந்தபிறகு பிரம்மத்தை அடைகின்றான். சரீரத்தைவிட்ட பிறகு அதனோடு ஒன்றாகி
விடுகின்றான்
मभन्ते
ब्रह्मनिर्वाणमृषयः क्षीणकल्मषाः ।
छिन्नद्वैधा
यतात्मानः सर्वभूतहिते रताः ॥ 25 ॥
பிரம்மத்தை அடைவதற்கு என்னென்ன படிகளை கடக்க
வேண்டும் என்று இதில் பகவான் கூறியிருக்கிறார்.
க்ஷீணகல்மஷா: - பாவங்களை
நீக்கியவர்களாக இருக்கின்றார்கள். பாவம் என்பது ராக-துவேஷங்களை குறிக்கின்றது.
ரிஷய: - ரிஷிகளாக
உயர்கிறார்கள், சூட்சுமமான தத்துவத்தை பார்க்கின்ற சக்தியை அடைகின்றார்கள். எது
ஸத்யம் என்கின்ற ஞானத்தை அடைகின்றார்கள். சிரவணத்தால் வந்த ஆத்ம தத்துவத்தில்
இருக்கின்ற அனைத்து
சி2ன்ன த்வைதா4 – சந்தேகத்தை
நீக்கியவர்களாக இருக்கின்றார்கள், இது மனனம் என்கின்ற சாதனத்தின் மூலமாக இந்த
நிலையை அடைகின்றார்கள்.
யதாத்மானஹ – உடல், மன,
புலன்கள் இவன் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது
ஸர்வ பூதஹிதே ரதா: - எல்லா
ஜீவராசிகளுடைய சுகத்தில் இவர்கள் மகிழ்ந்து இருப்பவர்கள். அஹிம்ஸையை சுபாவமாக
அடைந்து இருப்பவர்கள்.
ஸந்தே பிரஹ்ம நிர்வாணம் – இவர்கள்
பிரம்மத்தை அடைகிறார்கள். இந்தப் படிகளை கடந்து இறுதியில் பிரம்மத்தை அடைகிறார்கள்
कामक्रोधवियुक्तानां
यतीनां यतचेतसाम् ।
अभितो
ब्रह्मनिर्वाणं वर्तते विदितात्मनां ॥ 26 ॥
காம க்ரோத4ம் – ஆசை-கோபம்
போன்ற உணர்ச்சிகளிலிருந்து விடுபட்டவர்கள்
யதீனாம் – மிக
முயற்சியுடன் இதை அடைந்தவர்கள்
யத சேதஸாம் – மனதை தன்
வசப்படுத்தியவர்கள்
விதி3தாத்மனாம் – ஞானத்தை
அடைந்தவர்கள், ஞானிகள்
பிரஹ்ம நிர்வாணம் வர்ததே – பிரம்மமே
அவர்களிடம் இருக்கின்றது
அபிதஹ – இறப்பதற்கு
முன்னும், பின்னும், பிரம்மமாகவே இருக்கின்றார்கள்
स्पर्शान्कृत्वा
बहिर्बाह्यांश्चक्षुश्चैवान्तरे भ्रुवोः ।
प्रणापानौ समौ
कृत्वा नासाभ्यन्तरचारिणौ ॥ 27 ॥
தியானம் செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய சில
நிபந்தனைகளை பகவான் கூறியிருக்கிறார். அவைகள்
1. விஷய தியானம் (வெளிவிஷயங்களை
நினைத்தல்)
2.புலன்களுக்கு எந்த செயலும் கொடுக்கக்கூடாது,
3. பிராணனை சமபடுத்தி
வைத்தல் ஆகியவைகளாகும்
பாஹ்யான் ஸ்பர்ஶான் - வெளி விஷயங்களை
ப3ஹிர் க்ருத்வா – வெளியிலே
வைத்துக் கொள்ள வேண்டும்.
சக்ஷு: ப்4ருவோ ச அந்தரே – கண்களை இருபுருவங்களின்
நடுவில் வைத்து
நாஸ ப்4யந்தர சாரிண:: - இரு மூக்கு
துவாரங்கள் வழியாக போய் வந்து கொண்டிருக்கும்
ப்ராணாபானௌ – பிராணனை சமமாக
இருக்க வேண்டும்.
यतेन्द्रियमनोबुद्धिर्मुनिर्मोक्षपरायणः
।
विगतेच्छाभयक्रोधो
यः सदा मुक्त एव स: ॥ 28 ॥
புலன்கள், மனம் புத்தி இவைகளை நம் வசத்தில்
வைத்து தியானம் செய்பவன் மோட்சத்தை லட்சியமாக கொண்டவனாக இருப்பான். தியான காலத்தில் ஆசை, பயம், க்ரோதம்
இவற்றிலிருந்து விடுபட்டு இருக்க வேண்டும்,
யாரொருவனுக்கு இப்படி தியானம் செய்ய முடிகின்றதோ அவனுக்கு ஞானநிஷ்டை
கிடைக்கிறது
भोक्तारं
यज्ञतपसां सर्वलोकमहेश्चरं ।
सुह्र्दं
सर्वभूतानां ज्ञात्वा मां शान्तिमृच्छति ॥ 29 ॥
இதில் தியானத்தின் பலனை கூறுகின்றார். இந்த தியானத்தின் பலனாக என்னை அறிந்துகொண்டு
அதனால் முழு மனநிறைவை அடைகின்றான்.
யாகத்தினாலும், தவத்தினாலும் கிடைக்கின்ற பலனை அடைந்தவர்கள்
அனைத்து உலகத்திற்கும் ஈஸ்வரனாக இருக்கின்ற என்னை எல்லா ஜீவராசிகளுக்கும் நண்பனாக
இருக்கின்ற என்னை அறிந்து மேலான அமைதியை அடைகின்றார்கள்.
தொகுப்புரை
01-01 அர்ஜுனன் “சந்நியாசம், கர்மயோகம் இதில் எதை நான்
பின்பற்ற வேண்டும்”, என்பதை நிச்சயித்து சொல்லுங்கள் என்று பகவானிடம் கேட்டான்.
02-02 கர்மயோகம்தான் சிறந்தது உகந்தது என்று அதற்கு
பதிலளித்தார்.
03-07 தான் கூறிய பதிலுக்கு விளக்கம்
கொடுக்கிறார். கர்மயோகம்தான் உனக்கு
உகந்தது என்று கூறினார். கர்மயோகியானவன்
சந்நியாசிக்கு சமமாக இருக்கின்றான்.
கர்மயோக பலனும், சந்நியாசத்தினால் அடையும் பலனும் ஒன்றுதான். கர்மயோகத்தின் வழியாகத்தான் சந்நியாசத்துக்கு
போக முடியும். மோட்சத்தின் முதல்படியாக
கர்மயோகம் இருக்கின்றது. இந்த காரணங்களால்
கர்மயோகம்தான் உகந்தது என்று நிலைநாட்டினார்
08-09 ஞானி அகர்த்தா என்று கூறினார். இந்திரியங்கள் அதன் வேலையை செய்கின்றது,
ஆத்மாவான நான் எதுவும் செய்வதில்லை என்பதை உணர்ந்தவன்.
10-12 கர்மயோகத்தை பற்றி மேலும் சில லட்சணங்களை
கூறினார்
13-13 ஞானியின் நிலையை, வாழும் முறையை
விவரித்தார். ஒன்பது துவாரங்களை உடைய
உடலில் அவன் சுகமாக இருக்கின்றான். அவன் செயல் எதுவும் செய்வதில்லை. யாரையும் செயலில் ஈடுபடுத்தவுமில்லை
14-15 ஆத்ம ஸ்வரூபம் விளக்கபட்டது. ஆத்மா எதையும் செய்வதில்லை, எதையும்
செய்விப்பதில்லை
16-17 ஞானத்திற்கான சாதனத்தை கூறினார். அந்தரங்க சாதனங்களையும் சில கூறினார்.
18-18 ஆத்மஞான ஸ்வரூபம். இப்படிபட்ட ஞானத்தை அடைந்த
ஞானி உலகத்தை எப்படி பார்ப்பான் என்று விளக்கியுள்ளார். சமதர்ஷணம் ஆத்மஞான
ஸ்வரூபம்
19-20 ஞானத்தினால் அடையும் பலன்களை கூறியுள்ளார்.
ஞானியினுடைய லட்சணம் சொல்லப்பட்டது. ஞானி சுகம் வரும்போது மகிழ்ச்சியுடனும், துயரம்
வரும் போது வருந்துவதும் கிடையாது
21-23 வைராக்கியத்தினுடைய பெருமை கூறப்பட்டது. வெளிவிஷயங்களில் பற்றற்று இருக்க வேண்டும் என்பது கூறப்பட்டது. மனம் வெளிவிஷயங்களில் நோக்கும் போது
இவைகள் துயரத்தின் காரணமாக இருக்கும் என்று புரிந்து கொண்டு அவைகளிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும்.
காம-குரோத வேகத்தை தணித்து பழக வேண்டும்.
24-29 தியான யோகத்தைப் பற்றி கூறியுள்ளார். இது அடுத்த அத்தியாயத்தின் முகவுரையாக சில
கருத்துக்கள் கூறினார்.
ॐ तत्सदिति