Showing posts with label உத்தவ கீதை-23. Show all posts
Showing posts with label உத்தவ கீதை-23. Show all posts

Tuesday, October 24, 2017

Uddhava Gita - Chapter-23

அத்தியாயம்-23
கர்மயோக, ஞானயோக சாராம்சம்
ஸ்வாமி குருபரானந்தாவின் உபதேச விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது-25-02-2022

ஸுது3ஸ்தராமிமாம் மன்யே யோக3சர்யாமனாத்மன: |
யதா2ஞ்ஜஸா புமான்ஸித்3த்4யேத்தன்மே ப்3ரூஹயஞ்ஜஸாச்யுத || 1 ||
இமாம் யோகச்சர்யாம் – இதுவரையில் உங்களால் கூறப்பட்ட மனத்தூய்மை அடையும் வழிகள், பக்தி செய்யும் முறைகள், ஆன்மீக பாதையில் செல்லும் வழிகள், குணமாற்றமடைய கடைபிடிக்க வேண்டிய வழிகள் யாவும்
ஸுதுஸ்தராம் மன்யஹ – மிகக்கடினமானது என்று நினைக்கிறேன்.
அனாத்மனஹ – போதிய பக்குவம் அடையாதவர்களுக்கு இந்தப் பாதையை கடப்பது கடினமாக இருக்கும்
அச்யுத – ஹே அச்சுத பகவானே!
புமான் – ஒரு மனிதன்
யதா2 அஞ்ஜஸா – எவ்விதம் மிகச்சுலபமாக பரமபதத்தை அடைய முடியுமோ, இந்தப் பாதையை கடக்க முடியுமோ
தத் அஞ்ஜஸா ப்3ருஹி – அதை எனக்கு தெளிவாக கூறியருளுங்கள்

ப்ராயஶ: புண்த3ரீகாக்ஷ யுஞ்ஜ்யந்தோ யோகி3னோ மன: |
விஷீத3ந்த்யஸமாதா4னான்மனோ நிக்3ரஹகர்ஶிதா: || 2 ||
தாமரை போன்ற கண்களையுடைய பகவானே! பொதுவாக இந்த ஆன்மீக சாதனத்தில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் சாதகர்களுக்கு, மனவடக்கத்தை பயிற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு, மனமானது எளிதில் அமைதியை அடையாத காரணத்தால் அவர்கள் பெரும் துயரத்தை அடைகிறார்கள். மனதை நெறிப்படுத்த முயற்சிக்கும் நேரத்தில் மிகுந்த துக்கத்தை அடைகிறார்கள்.

அதா2த ஆனந்த3து3க4ம் பதா3ம்பு3ஜம் ஹம்ஸ:
ஶ்ரேயரன்னரவிந்த3லோசன |
ஸுக2ம் நு விஶ்வேஶ்வர யோக3கர்மபி4ஸ்த்வன்மாயயாமீ
விஹதா ந மானின: || 3 ||
அரவிந்தலோசன – தாமரைகண்ணா!
அதா2த – இருந்த போதிலும்
ஹம்ஸா: - சில அறிவுடையவர்கள், அறிவுடைய சாதகர்கள்
ஸுகம் ஶ்ரேயரன் – எளிதாக அடைகிறார்கள்
விஶ்வேஶ்வரா – அகில உலகத்துக்கும் தலைவனாக இருக்கும் பகவானே!
ஆனந்த3 து3க4ம் – ஆனந்தத்தை கொடுக்கின்ற உங்களுடைய திருவடிகளை வணங்கும் பக்தர்கள்
யோக3 கர்மபி: - பலவிதமான யோக அப்யாஸத்தில் ஈடுபடுகிறார்கள். கர்மயோக, பக்தியோகம் போன்ற சாதனங்களை கடைப்பிடிப்பதில் ஈடுபடுகிறார்கள்.  சாதாரண மனிதர்களால் செய்ய முடியாத கடினமான புனிதமான செயல்கள செய்து கொண்டிருக்கிறார்கள்
ந விஹிதா – இந்த செயல்களால் இவர்கள் கர்வத்தினால் பாதிக்கப்படுவதில்லை. புண்ணிய செயல்களினால் அடையும் சுகத்தினால் பாதிக்கப்படுவதில்லை
த்வம் மாயயா – உங்களுடைய மாயையினால் இவர்கள் மோகத்தில் விழ்வதுமில்லை, மாயையினால் ஆட்கொள்ளப்படுவதுமில்லை
நா மானின – அவர்கள் கர்வப்படுவதில்லை

கிம் சித்ரமச்யுத தவைத்த3ஶேஷப3ந்தோ4
       தா3ஸேஷ்வனன்யஶரணேஸு யதா3த்மஸாத்த்வம் |
யோ ரோசயத்ஸஹ ம்ருகை3: ஸ்வயமீஶ்வராணாம்
       ஶ்ரீமத்கிரிடதடபீடிதபாத3பீட2: || 4 ||
அச்யுத – அச்சுத பகவானே!
தவ ஏதத்3 -  உங்களுடைய இப்படிப்பட்ட செயல்களில், பக்தர்களை மாயையிலிருந்து விடுவித்த செயல்களில்
கிம் சித்ரம் – என்ன இருக்கிறது
அஶேஷ ப3ந்தோ – எல்லோருக்கும் நன்மை செய்பவரே
அனன்ய ஶரணேஶு – வேறெதையும் நாடாமல்
தா3ஸேஶு – உங்களிடம் தஞ்சமடைந்தவர்களிடம்
யத் அத்மஸாத்தவம் – இப்படிபட்ட பக்தர்களுக்கு அடிமையாகி இருப்பது ஒரு பெரிய விஷயமல்ல
ம்ருகை – மிருகங்களான வானரங்கள், கரடிகள்  போன்றவைகளிடத்திலும்
அரோசயத் – நட்போடு பழகுகிறீர்கள்
ஸ்ரீமத்கிரிட – விலைமதிப்புகிக்க கற்களை உடைய கிரிடத்தை உடையவர்களும், தேவர்களும், 
பாத3பீத2 – உங்கள் பாதபீடத்தில் தலை வைத்து வணங்கத்தக்கவராக இருக்கிறீர்கள்

தம் த்வாகி2லாத்மத3யிதேஷ்வரமாஶ்ரிதானாம்
       ஸர்வார்த2த3ம் ஸ்வக்ருதவித்3விஸ்ருஜேத கோ நு |
கோ வா ப4ஜேத்கிமபி விஸ்ம்ருதயேனு பூ4த்யை 
கிம் வா ப4வேன்ன தவ பாதரஜோஜுஷாம் ந: || 5 \|
தம் த்வா – இப்படிபட்ட நீங்கள்
அகி2லாத்ம த3யித – எல்லா ஜீவர்களுக்கும் பிரியமானவர், எல்லா ஜீவராசிகளாலும் விரும்பப்படுகின்றவர்
ஈஶ்வரம் – ஈஸ்வரனான தங்களை
ஆஶ்ரிதானாம் ஸர்வார்த2த3ம் – சார்ந்து வாழ்பவர்களுக்கு எல்லா புருஷார்த்தத்தையும் கொடுப்பவர்
ஸ்வக்ருதவித்3 – உங்களால் அடைந்த நன்மைகளை உணர்ந்தவர்கள், உங்கள் மீது கொண்டிருக்கும் பக்தியை விடமாட்டார்கள்
விஸ்ருஜேத கோ நு – யாரும் உங்களை விட்டுபோக மாட்டார்கள்
கஹ வா ப4ஜேத கிமபி – உங்களுடைய அனுக்கிரஹத்தை பெற்றதை உணர்ந்தவர்கள் 
விஸ்ம்ருதயே அனுபூ4த்யை – மோட்சத்திற்காகவோ, மற்ற புருஷார்த்தத்தை அடைவதற்காகவோ வேறு தேவதையை நோக்கி செல்லமாட்டார்கள்
ந பாதரஜோ விஷாம் – உங்கள் பாத தூளியை அடைந்த எங்களுக்கு
கிம் வா ப4வேன்ன தவ -  எதுதான் அடைய முடியாது.

நைவோபயந்த்யபசிதிம் கவயஸ்தவேஶ
       ப்3ரஹ்மாயுஷாபி க்ருதம்ருத்3த4முத3: ஸ்மரந்த: |
யோ ந்தர்ப3ஹிஸ்தனுப்4ருதாமஶுப4ம் விது4ன்வன்ன
       ஆசார்யதைத்த்யவபுஷா ஸ்வக3திம் வ்யனக்தி || 6 ||
கவயஹ – உங்களுடைய உபதேசத்தை பெற்ற ஞானிகள்,யோகிகள்
தம் ஈஶ - இறைவனாகிய உங்களுடைய
அபசித் – நன்றிக்கடனை
நைவ உபயந்த்ய – தீர்க்க முடியாது
ப்ரஹ்மாயுஷாபி – பிரம்மனுடைய ஆயுட்காலம் முழுவதும் இருந்தாலும் தீர்க்க முடியாது
க்ருதம் உதஹ முதஹ – பகவானுடைய உபதேசத்தினால் கிடைத்த அளவற்ற ஆனந்தத்தை
ஸ்மரந்தஹ – எண்ணிப்பார்க்கும் போது அதை தீர்க்க முடியாது
தனுப்ருதம் – ஜீவர்களுக்கு
அந்தர் பஹிஹி – உள்ளேயும், வெளியேயும் இருந்து கொண்டு
அஶுப4ம் விதுன்வன் – மன அழுக்குகளை அசுபங்களை, தவறான எண்ணங்களை நீக்கிக் கொண்டிருக்கின்றீர்கள்
ஆசிரியராக இறைவன் வெளியே இருந்து கொண்டும், மனசாட்சியாக மனதுக்குள் இருந்து கொண்டும் தன்னுடைய ஸ்வரூபத்தினால் விளக்கிக்கொண்டிருக்கிறார்.  அதாவது மனமாகவும்,, குருவாகவும், இருந்து கொண்டு நமக்கு அருள் புரிந்து கொண்டிருக்கிறார்.

ஸ்ரீஶுக உவாச
இத்யுத்3த4வேனாத்யனுரக்தசேதஸா ப்ருஷ்டொ ஜகத்க்ரீடனக: ஸ்வஶக்திபி4: |
க்3ருஹீதமூர்தித்ரய ஈஶ்வரேஶ்வரோ ஜகா3த்3 ஸப்ரேம மனோஹரஸ்மித: || 7 ||
ஸ்ரீசுகர் கூறுகிறார்
இவ்விதம் உத்தவரால் அளவிடமுடியாத பக்தியினால் கேட்கபட்ட கேள்விகளுக்கு உலகத்தை விளையாட்டாக பந்து போல வைத்திருக்கின்ற பகவான், தன்னிடமுள்ள மாயா சக்தியினால் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மூன்று உருவங்களை எடுத்துக் கொண்டவர். எல்லா தேவதைகளுக்கும் ஈஸ்வரனாக இருக்கின்ற பகவான் பதில் கூறத் தொடங்கினார். பகவான் மனமகிழ்ச்சியுடன் மனதைக் கவரும் புன்னகையும், அன்புடனும் இவ்விதம் கூறினார்.
மனோஹர – மனதைக் கவரும் புன்னகை உடையவர்

ஸ்ரீபகவான் உவாச
ஹந்த தே கதா2யிஷ்யாமி மம த4ர்மாம்ஸுமங்க3லான் |
யான்ஶ்ரத்3த4யாசரன்மர்த்யோ ம்ருத்யும் ஜயதி து3ர்ஜயம் || 8 ||
ஸ்ரீபகவான் கூறுகிறார்
என்னை அடையும் பாதையை உனக்குக் கூறப்போகிறேன். என்னை அடைவதற்கான சாதனத்தை கூறப்போகிறேன்.  மிகவும் புனிதமான இந்தப் பாதையை கூறுகிறேன். அந்த சாதனத்தை சிரத்தையுடன் பின்பற்றுகின்ற சாதகன் சுலபமாக வெல்ல முடியாத சம்சாரத்தை மரணத்தை வென்றுவிடுகிறான்

குர்யாத்ஸர்வாணி கர்மாணி மத3ர்த2ம் ஶனகை: ஸ்மரன் |
மய்யர்பித்மனஶ்சித்தோ மத்3த4ர்மாத்ம மனோரதி: || 9 ||
என்னையே இலக்காக கொண்டு எல்லா கடமைகளையும் செய்ய வேண்டும். படிப்படியாக, பரபரப்பின்றி, பலன்மீது அதிக பற்றில்லாமல் என்னையே நினைத்துக் கொண்டு உன்னுடைய மனதையும், சித்தத்தையும், என்னிடத்தில் அர்ப்பணித்து, என்னை அடையும் பாதையில் பயணம் செய்து மகிழ்ந்து கொண்டிருக்க வேண்டும். உன்னிடமிருந்து வெளிப்படும் செயல்கள் யாவும் இறைவனுக்காக செய்கிறோம் என்ற பாவனையுடன் செய்து கொண்டிருக்க வேண்டும்.

தே3ஶான்புண்யானாஶ்ரயேத மத்3ப4க்தை: ஸாது4பி4: ஶ்ரிதான் |
தே3வாஸுரமனுஷ்யேஷு மத்3ப4க்தாசரிதானி ச || 10 |
புண்ணியஸ்தலங்களுக்கு யாத்திரை சென்றுவர வேண்டும்.  என்னுடைய பக்தர்கள், சாதுக்கள் வந்து சென்ற இடமாக இவைகள் இருப்பதால் அவைகள் புண்ணிய ஸ்தலமாக கருதப்படுகிறது.  மகான்கள் வாழ்ந்து மறைந்த இடங்கள், வழிபட்ட இடங்கள், தவம்செய்த இடங்கள் இந்த புண்ணிய ஸ்தலங்கள்
மத்பக்த ஆசரிதானி – என்னுடைய பக்தர்கள் தேவர்களாகவும், அசுரர்களாகவும் மனிதர்களாகவும் இருக்கிறார்கள்

ப்ருத3க்ஸத்ரோண வா மஹயம் பர்வயாத்ராமஹோத்ஸவான் |
காரயேத்3கீ3தந்ருத்யாத்3யைர்மஹாராஜவிபூ4திபி4: || 11 ||
ப்ருதக் ஸத்ரேண வா மஹ்யம் – தனியாகவோ, குழுவாகவோ எனக்கு
பர்வ – திருவிழா நடத்துதல்
யாத்ரா – பாதயாத்திரை செல்லுதல், யாத்திரை செல்லுதல்
மஹோத்யவான் – உற்சவங்களை நடத்துதல்
கோயில்களில் பகவானின் கதையை கேட்டல், கேட்க வைத்தல், பாடுதல், நாட்டியமாக ஆடுதல் ஆகியவற்றை நடத்த வேண்டும், மகாராஜாவுக்கு செய்வது போல செய்ய வேண்டும்.

மாமேவ ஸர்வபூ4தேஷு ப3ஹிரந்தரபாவ்ருதம் |
ஈக்ஷேதாத்மனி சாத்மானம் யதா2 க2மமலாஶய: || 12 ||
ச ஆத்மானாம் – ஜீவாத்மாவாக இருக்கின்ற
மாமேவ – ஈஸ்வரனாகிய என்னை ஒருவனையே
ஸர்வபூதேஷு – எல்லா ஜீவராசிகளிடத்திலும்
ஈக்ஷேத – பார்க்க வேண்டும்
ஆத்மனி – உன்னிடத்திலும் என்னையே பார்க்க வேண்டும்
பஹிரந்த அபாவ்ருதம் – வெளியேயும், உள்ளேயும், மறைக்கப்படாமலிருக்கின்ற பூரணமான
யதா2 கம் – ஆகாசமானது எவ்விதம் பிளவுபடாமல் இருக்கின்றதோ
அமலாஶய – அதுபோல தூய்மையான மனதினால்தான் என்னை பார்க்க முடியும்

இதி ஸர்வாணி பூ4தானி மத்3பா4வேன மஹாத்3யுதே |
ஸபா4ஜயன்மன்யமானோ ஞானம் கேவலமாஶ்ரித: || 13 ||
உத்தவா! இவ்விதம் எல்லா ஜீவராசிகளிடத்திலும் என்னையே பார்க்கின்ற உணர்வுடன் இருக்கும்போது அவைகளை பயபக்தியுடன் பார்க்கும் மனநிலையை அடைவாய்.  தூய்மையான ஆத்மஞானத்தை மட்டும் முழுமையாக அடைந்திடுவாய்.  என் திருவடிகளை சரணமடைந்திருப்பாய்

ப்3ரஹ்மணே புக்கஸே ஸ்தேனே ப்3ரஹ்மண்யேர்கே ஸ்பு2லிங்க3கே |
அக்ரூரே க்ரூரே சைவ ஸமத்3ருக்பண்டி3தோ மத: || 14 ||
ஸமத்3ருக் பண்டிதஹ மத் – எல்லாவற்றையும் சமநோக்குடன் பார்ப்பவன் ஞானியாக கருதப்படுகிறான். வேற்றுமைகளிலும் ஒற்றுமையை பார்க்க வேண்டும்.  அவற்றிற்கு ஆதாரமாக இருக்கும் பரமாத்மாவை பார்க்கும் மனப்பான்மையை உடையவனாக இருப்பான் ஞானி
அர்கே ஸ்புலிங்க3கே – சூரியனையும், அதன் ஒளியையும் சமமாக பாவிப்பான்
ப்ரஹ்மணே புல்கஸே – பிராம்மணனையும், சண்டாளனையும் ஒன்றாக பாவிக்க வேண்டும்.  இவர்களிருவருக்கும் ஆதாரமாக இருக்கின்ற பிரம்மத்தை பார்த்து நாம-ரூபத்தை விலக்கிவிட வேண்டும்
ஸ்தேனே ப்ரஹ்மன்யே – திருடனையும், நல்லவனையும் தர்மப்படி வாழ்பவன் ஒன்றாக பார்க்க வேண்டும்
அக்ரூரே க்ருரே ச ஏவ – மேலும் கொடுரமான குணத்தையுடையவன், மென்மையான சுபாவத்தை உடையவனையும் சமமாக பாவிக்க வேண்டும்.

நரேஷ்வபீ4க்ஷ்ணம் மத்3பா4வம் பும்ஸோ பா4வயதோசிராத் |
ஸ்பர்தா4ஸூயாதிரஸ்காரா: ஸாஹங்காரா வியந்தி ஹி || 15 ||
இந்த சமநோக்கு பார்வையை உடையவனாக இருப்பதால் அடையும் பலன்களை இதில் கூறுகிறார்
நரேஷ்வபீ4க்ஷணம் மத்3பாவம் – எல்லா மனிதர்களிடத்திலும் என்னையே பார்க்கின்ற
பும்ஸா பா4வயதே – மனநிலையை உடைய மனிதனிடத்திலிருந்து
அசிரேத் – விரைவில்
ஸ்பர்தா4 – போட்டிபோடும் குணம், மற்றவர்களோடு தன்னை ஒப்பிட்டு பார்க்கும் மனப்பான்மை
அஶூயா – பொறாமை
திரஸ்கார – சுய பச்சாதம், பரிதாபக் குணம், தாழ்வு மனப்பான்மை
ஸாஹங்கார – அகங்காரத்தோடு இந்த குணங்களும்
வியந்தி - சென்றுவிடும்

விஸுருஜ்ய ஸ்மயமானான்ஸ்வாந்த்ருஶம் வ்ரீடா3ம் ச தை3ஹிகீம் |
ப்ரணமேத்3த3ண்ட3வத்3பூ4மாவாஶ்வசாண்டா3லகோ3க2ரம் || 16 ||
இதில் ஸர்வாத்ம பாவத்தை அடைய உதவும் உபாயத்தை கூறுகிறார்.
விஸ்ருஜ்ய – தியாகம் செய்து
ஸ்வயமானான் – நாம் செய்யும் ஆன்மீக சாதனங்களை பார்த்து மனதுக்குள் சிரித்துக் கொள்பவர்களையும், கேலி பேசுபவர்களையும் கண்டுக் கொள்ளக் கூடாது
ஸ்வான் – உன்னைச் சார்ந்தவர்களையும், சார்ந்திருப்பவர்களையும் கண்டுக் கொள்ளக் கூடாது
வ்ரீடா3ம் – பகவான் நாமத்தை சத்தமாக சொல்வதிலும், பாடுவதிலும் அடையும் வெட்கத்தையும் விட்டுவிட வேண்டும்.
தை3ஹிகீம் த்ருஶம் – மேலும் தேகத்துடன் சம்பந்தபட்டவற்றிலும், உடலின் மீதுள்ள அபிமானத்தையும் விட்டுவிட்டு
ஸ்வ, சண்டாளன், கோ3கரம் – நாய், சண்டாளன், பசு, கழுதை இவைகளைப் போன்ற ஜீவராசிகளையும்
ப்ரணமே த3ண்ட3வத் பூ4மௌ – கம்பு போல் பூமியில் நெடுங்சாண்கிடையாக விழுந்து வணங்க வேண்டும்.

யாவத்ஸர்வேஶு பூ4தேஷு மத்3பா4வோ நோபஜாயதே |
தாவதே3வமுபாஸீத வாங்மன: காயவ்ருத்திபி4: || 17 ||
யாவத் – எதுவரை
ஸர்வேஷு பூதேஷு மத்3பா4வ – எல்லா ஜீவராசிகளிடத்தில் நான் என்கின்ற உணர்வு
ந உபஜாயதே – தோன்றவில்லையோ
தாவத் ஏவம் உபாஸீதே – அதுவரை இதுமாதிரி உபாஸிக்க வேண்டும்.
வாங்மன: காயவ்ருத்தி – வாக்கு, மனம், உடல் மூலம் சாதனங்களை பயன்படுத்தி விதவிதமான முறையில் உபாஸனம் செய்ய வேண்டும்.  வாக்கினால் பகவான் நாமத்தை உச்சரித்தும், மனதினால் இறைவனை தியானம் செய்தும், உடலினால் செய்யக்கூடிய தவங்களை செய்தல் போன்ற சாதனங்களை செய்து கொண்டுவர வேண்டும்.

ஸர்வம் ப்3ரஹ்மாத்மகம் தஸ்ய வித்3யயாத்ம மனீஷயா |
பரிபஶ்யன்னுபரமேத்ஸர்வதோ முக்தஸம்ஶய: || 18 ||
யாருக்கு அனைத்தும் பிரம்மஸ்வரூபம் என்று ஆத்மஞானத்தின் மூலமாக அறிவு வருகின்றதோ அந்த அறிவினால் ஈஸ்வரனாக பார்க்கும் நிலையில் அனைத்து சாதனங்களிலிருந்தும் விடுபடுகின்றான். அவனுக்கு செய்ய வேண்டியது எதுவுமில்லை. எல்லா சந்தேகங்களிலிருந்தும் விடுபட்டுவிடுவான். ஸர்வாத்மபாவம் வந்துவிட்டால் எல்லா ஆன்மீக சாதனங்களையும் விட்டுவிடலாம்
உபரமேதி – விட்டுவிடலாம்
முக்தஸம்ஶயஹ – அடைந்த அறிவில் சந்தேகமற்றவன்

அயம் ஹி ஸர்வகல்பானாம் ஸத்4ரீசீனோ மதோ மம |
மத்3பா4வ: ஸர்வபூ4தேஷு மனோவாக்காயவ்ருத்திபி4: || 19 ||
எல்லாவிதமான சாத்தியங்களுக்குள் உத்தமமான சாத்தியம் எதுவென்றால், எல்லா ஜீவராசிகளிடத்திலும் ஈஸ்வரனையே பார்த்தல் என்பது என்னுடைய கருத்தாகும்.  நம் உடலிலிருந்தும், மனம், வாக்கு இவைகளிலிருந்தும் வெளிப்படும் செயல்கள் அனைத்தும் ஈஸ்வர பாவத்துடன் இருக்க வேண்டும்.

ந ஹயங்கோ3பக்ரமே த்4வம்ஸோ மத்3த4ர்மஸ்யோத்3த4வாண்வபி |
மயா வ்யவஸித: ஸம்யங்நிர்கு3ணத்வாத3னாஶிஷ: || 20 ||
ஆன்மீக முயற்சியில் தோல்வி என்பதே கிடையாது. கர்மத்தில் வெற்றி-தோல்வி உண்டு ஆனால் கர்மயோகத்தில் இவைகள் கிடையாது. ஆன்மீகத்தில் சிறிது செய்திருந்தாலும் அதற்கேற்ற பலன் கிடைக்கும்.  தோல்வி என்பதே கிடையாது.  என்னை அடைய நினைக்கும் பாதையில் பயணம் செய்பவனுக்கு அணு அளவும் தோல்வி என்பதே கிடையாது. இறைவனாகிய என்னால் தெளிவாக உருவாக்கப்பட்ட நியதி இது. நிஷ்காமமாக பயிற்சி செய்பவனுக்கு தோல்வி என்பதே கிடையாது

யோ யோ மயி பரே த4ர்ம: கல்ப்யதே நிஷ்ப2லாய சேத் |
ததா3யாஸோ நிரர்த2: ஸ்யாத்3ப4யாதே3ரிவ ஸத்தம || 21 ||
உத்தவா! நம்மிடமிருந்து வெளிப்படும் சில செயல்கள் பயனற்றதாக இருக்கும்.  உதாரணமாக பயம் ஏற்படும்போது வெளிப்படும் சில செயல்களினால் ஒரு பலனும் கிடையாது.  வெளியேயுள்ள பலனை எதிர்பார்க்காமல் அந்த செயல்களை ஈஸ்வரனான என்னிடத்தில் அர்ப்பணம் செய்துவிட்டால் அதுவே தர்மமாகி விடும்.  கர்மயோகமாக செயல்படும்போது பயனற்ற செயல்களும் தர்மமாகி விடுகின்றது.

ஏஷா பு3த்3தி4மதாம் பு3த்3தி4ர்மனீஷா ச மனீஷிணாம் |
யத்ஸத்யமந்ருதேனேஹ மர்த்யேனாப்னோதி மாம்ருதம் || 22 ||
ஆன்மீக வாழ்க்கைக்கு வந்ததே அறிவுடைய செயல்களிலே புத்திசாலித்தனமானதும்,  சிறந்ததுமாகும்.  செயல்படுபவைகளிலே திறமையாக செயல்பட்டுக் கொண்டிருப்பது இதில்தான்.  பொய்யான இந்த உடலை பயன்படுத்தி, அதன் துணைக் கொண்டு அழியாத பரம்பொருளான, மெய்யான என்னை அடைய வேண்டும் என்பதே உத்தமமாகவும், புத்திசாலித்தனத்துடனும் செயல்படுவதாகும்.

ஏஷ தேபி3ஹித: க்ருத்ஸ்னோ ப்3ரஹ்மவாத3ஸ்ய ஸங்க்3ரஹ: \
ஸமாஸவ்யாஸவிதி4னா தே3வானாமபி து3ர்க3ம: || 23 ||
உத்தவா! நீ கேட்டுக்கொண்டபடி உனக்கு இதுவரை வேதாந்த கருத்துக்கள் அனைத்தும் உபதேசிக்கப்பட்டுவிட்டது.  மிக தெளிவாகவும், முழுமையாகவும் வேதாந்தத்தின் சாராம்சமும் விளக்கப்பட்டது. இந்த உபதேசம் சுருக்கமாகவும், தெளிவாகவும் என்னால் உபதேசிக்கப்பட்டது. தேவர்களாலும் அவ்வளவு சுலபமாக புரிந்து கொள்ள முடியாதது இது.

அபி4க்ஷ்ணஶஸ்தே க3தி3தம் ஞானம் விஸ்பஷ்டயுக்திமத் |
ஏதத்3விக்3ஞாய முச்யேத புருஷோ நஷ்டஸம்ஶய: || 24 ||
பல கோணங்களில் சில கருத்துக்கள் மீண்டும், மீண்டும் உபதேசிக்கப்பட்டது. இந்த உபதேசம் தெளிவாகவும், அனுமானத்துடன் உனக்கு சொல்லப்பட்டது.  இதையறிந்து கொண்ட சாதகன் சந்தேகங்களையெல்லாம் நீங்கப்பெற்று முக்தியை அடைகின்றான்.

ஸுவிவிக்தம் தவ ப்ரஶ்னம் மயைதத3பி தா4ரயேத் |
ஸனாதனம் ப்ரஹ்மகு3ஹ்யம் பரம் ப்3ரஹ்மாதி4க3ச்ச2தி || 25 ||
உத்தவா! உன்னுடைய எல்லா கேள்விக்கும் தெளிவாகவும், விளக்கமாகவும் பதில் கூறப்பட்டுவிட்டது. 
ஏதத்3 அபி தா4ரயேத் – இந்த உபதேசத்தை யார் மனதுக்குள் வாங்கிக் கொள்கிறார்களோ
பரம் ப்3ரஹ்மாதி3க3ச்சதி - அவர்கள் பிரம்மத்தை அடைகிறார்கள். மேலான நிர்குண பிரம்மத்தை அடைகிறார்கள்
ப்3ரஹ்ம கு3ஹ்யம் – வேதத்திற்குள் மறைந்துள்ள ரகசியமான தத்துவம் இது.
ஸனாதனம் – அழியாதது, மாறாதது என்றும் உள்ளது இது.

ய ஏதன்மம ப4க்தேஷு ஸம்ப்ரத3த்3யாத்ஸுபுஷ்கலம் |
தஸ்யாஹம் ப்ரஹ்மதா3யஸ்ய த3தா3ம்யாத்மானமாத்மனா || 26 ||
யார் இந்த உரையாடலை என்னுடைய பக்தர்களுக்கு சொல்கிறார்களோ, பெருமை உடையதும், உத்தமமானதும், முழுமையான பலனைக் கொடுப்பதுமான இந்த என்னுடைய உபதேசத்தை மற்றவர்களுக்கு யார் சொல்கிறார்களோ அவர்களுக்கு என்னையே நான் கொடுக்கிறேன்.

ய ஏதத்ஸமதீ4யீத பவித்ரம் பரமம் ஶுசி |
ஸ பூயேதாஹரஹர்மாம் ஞானதீ3பேன த3ர்ஶயன் || 27 ||
யார் இந்த உபதேசத்தை மீண்டும், மீண்டும் கேட்கிறார்களோ, படித்துக் கொண்டு இருக்கிறார்களோ அவர்கள் என்னால் தூய்மைப்படுத்தப்படுகிறார்கள். இது புனிதமானது, மேலான தூய்மைப்படுத்துகின்ற சாதனமாக இருக்கும்.  ஒவ்வொரு நாளும் என்னை ஞானம் என்ற தீபத்தினால் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களே மற்றவர்களுக்கும் ஞான தீபத்தை காட்டுவார்கள்.

ய ஏதச்ச்2ரத்3த4யா நித்யமவ்யக்3ரஃ ஶ்ருணுயான்னர: |
மயீ ப4க்திம் பராம் குர்வன்கர்மாபி4ர்ன ஸ ப3த்4யதே || 28 ||
யார் இந்த உபதேசத்தை சிரத்தையுடனும், முழுமனதுடனும், கவனத்துடனும் கேட்கின்றார்களோ இதுவே என்னிடத்தில் செலுத்துகின்ற மேலான பக்தியாகும். , சஞ்சலமற்ற மனதுடன் அமைதியான மனதுடன் இதைக் கேட்டுக் கொண்டிருப்பதே என்னிடத்தில் செலுத்துகின்ற மேலான பக்தியாகும்.  எந்தக் கர்மத்தினாலும் அவர்கள் பந்தப்படுவதில்லை. கர்மவினைகளில் இருந்து விடுபடுகிறார்கள், சம்சாரியாக இருக்க மாட்டார்கள்

அப்யுத்3த4வ த்வயா ப்ரஹ்ம ஸகே2 ஸமவதா4ரிதம் |
அபி தே விக3தோ மோஹ: ஶோகஶ்சாஸௌ மனோப4வ: || 29 ||
உத்தவா! நண்பனே! பர பிரம்மமானது உன்னால் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டதா? மதிமயக்கமானது, மனதிலிருக்கும் மோகமானது உன்னை விட்டுவிலகிவிட்டதா?மனதைப்பற்றிக் கொண்டுள்ள சோகமும் சென்றுவிட்டதா? என்று பகவான் வினவினார்

நைதத்த்வயா தா3ம்பி4காய நாஸ்திகாய ஶடா2ய ச |
அஶுஶ்ரூஷோரப4க்தாய து3ர்வினீதாய தீ3யதாம் || 30 ||
உன்னிடத்தில் கேட்காதவர்களுக்கும், கேட்க விரும்பாதவர்களுக்கும் இந்த உபதேசத்தை கூறக்கூடாது.  பகட்டுக்காக அறிவை பெற விரும்புபவர்களுக்கும், கர்வத்துடனும், டம்பத்துடனும் இருப்பவர்களுக்கும், நாத்திகர்கள், வேதத்தை ஞானம் கொடுக்கும் கருவியாக ஏற்றுக்கொள்ளதவர்களுக்கும், வேத சாஸ்திரம், ஈஸ்வரன், தர்ம சாஸ்திரம் போன்றவைகளை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கும், பண்பாடு அற்றவர்கள், கேட்காதவர்கள், பக்தியில்லாதவர்கள், நடத்தை சரியில்லாதவர்கள், பணிவு இல்லாதவர்கள் ஆகியோருக்கு இந்த அறிவை கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

ஏதைர்தோ3ஷைஹீனாய ப்ரஹ்மண்யாய ப்ரியாய ச |
ஸாத4வே ஶுசயே ப்3ரூயாத்3ப4க்தி: ஸ்யாச்சூ2த்3ரயோஷிதாம் || 31 ||
மேற்கூறிய குறைகளற்றவர்களுக்கு உபதேசிக்கலாம்.  அதாவது நல்லொழுக்கத்துடன் வாழ்பவர்கள், உன்னிடத்தில் அன்புடன் இருப்பவர்கள், தவம் செய்து கொண்டு இருப்பவர்கள், மனத்தூய்மையையுடையவர்கள் ஆகியவைகளோடு பக்தியும் சேர்ந்து விட்டால் அத்தகையவர்களுக்கும் உபதேசிக்கலாம். மேலும் சூத்திரர்களுக்கும், பெண்களுக்கும் கூட உபதேசிக்கலாம்.

நைதத்3விக்ஞாய ஜிக்3ஞாஸோர்ஞாதவ்யமவஶிஷ்ய்தே |
பீத்வா பீயூஷம ம்ருதம் பாதவ்யம் நாவஶிஷ்யதே || 32 ||
இந்த ஞானத்தை அடைந்தவன் அடைய வேண்டியதையெல்லாம் அடைந்து விட்டவனாகின்றான்.  இனி அடைய வேண்டியது ஒன்றுமில்லை.  அம்ருதத்தை குடித்தவனுக்கு வேறெதையும் குடிக்க வேண்டிய அவசியமில்லை அதுபோல ஒரு சாதகனுக்கு இந்த பிரஹ்ம தத்துவத்தை உணர்ந்த பிறகு வேறு ஒன்றையும் அறிய வேண்டியது கிடையாது.
க்ருதக்ருதார்த்தம் – அடைய வேண்டியது அனைத்தும் அடைந்துவிட்டான்.  அறிய வேண்டியது அனைத்தும் அறிந்து விட்டான்.

ஞானே கர்மணி யோகே3 ச வார்தாயாம் த3ண்ட3தா4ரணே |
யாவானர்தோ2 ந்ருணாம் தாத தாவாம்ஸ்தேஹம் சதுர்வித4: || 33 ||
நானே அனைத்துமாக இருக்கிறேன் என்ற கருத்தை இதில் தெரிவிக்கிறார். 
சதுர்வித4ஹ – நான்குவிதமான புருஷார்த்தமும் நானே
அறிவின் பலனாக அடையும் அனைத்தும் நானாகவே இருக்கிறேன். உலகத்தைப் பற்றிய அறிவு அடைந்தால் அதுவும் நானே. அர்த்த, காம, தர்மம் அவைகளும் நானே.  செயலினால் அடையும் பலன்களும் நானே. மனதின் துணைக் கொண்டு செய்யும் தவங்களினால் அடையும் பலன்களும் நானே.  உடலுழைப்பால் அடையும் பலன்களும், உன்னிடத்தில் இருக்கும் சக்தியினால் எவையெல்லாம் அடைகிறாயோ அவைகளெல்லாமும் நானே. இந்தப் பலன்களனைத்தும் அறம், பொருள், இன்பம், வீடு என்ற பிரிவுகளில் ஒன்றில் அடக்கப்படுகிறது

மர்த்யா யதா3 த்யக்தஸமஸ்தகர்மா நிவேதி3தாத்மா விசிகீர்ஷிதோ மே |
ததா3ம்ருதத்வம் ப்ரதிபத்3யமானோ மயாத்மபூ4யாய ச கல்பதே வை || 34 ||
யதா3 மர்த்யா – எப்பொழுது ஒரு மனிதன்
இல்லறத்திலிருந்து கொண்டு கர்மயோகத்தின்படி வாழ்ந்து, ஞானயோகத்தையும் பூர்த்தி செய்துவிட்டு, 
நிவேதி3தாத்மா – நான் என்ற அகங்காரத்தை என்னிடம் அர்ப்பித்து விடுகின்றானோ
விசிகீற்ஷிதஹ – அவன் மோட்சத்திற்கு தகுதியுடையவனாக கருதுகிறேன். என்னால் அவன் அங்கீகரிக்கப்படுகிறான். அப்போது மரணமற்ற மோட்ச நிலையை அடைந்தவனாகவும், என் ஸ்வரூபமாக அடைவதற்கு தகுதியை அடைந்து விடுகிறான்.

இத்துடன் பகவானின் உபதேசன் முடிவடைந்து விடுகிறது

ஸ்ரீஶுக உவாச
ஸ ஏவமாத3ர்ஶிதயோக3மார்க3ஸ்த்தோ3த்தம:ஶ்லோகச்சோ நிஶம்ய |
ப3த்3தா4ஞ்சலி: ப்ரீத்யுபருத்3த4கண்டோ2 ந கிஞ்சிதூ3சேஶ்ருபரிப்லுதாக்ஷ: || 35 ||
ஸ்ரீசுகர் பகவான் கூறுகிறார்
உத்தவருக்கு பகவானால் உபதேசிக்கப்பட்ட ஆன்மீக பாதையை, மோட்சப்பாதையை காட்டப்பட்டது.  அப்போது மேலான புகழுடைய பகவானுடைய உபதேசத்தை உத்தவர் புரிந்து கொண்டு அதை மனதில் நிலைப்படுத்திக் கொண்டார். உத்தவர் பகவானை பலமுறை வணங்கி பக்தியுடன் நன்றியுணர்வினால் தொண்டையை அடைக்கப்பட்டவராக ஒன்றும் பேசவில்லை.  பேச இயலாமல் மௌனமாக இருந்தார். கண்களில் நீர் தளும்பி நின்றது.  ஆனந்த கண்ணீர் பெருக்கினார்.

விஷ்டப்4ய சித்தம் ப்ரணயாவகூ4ர்ணம்
தை4ர்யேண ராஜன்பஹுமன்யமான: |
க்ருதாஞ்ஜலி: ப்ராஹ யது3ப்ரவீரம் ஶீர்ஷ்ணா
ஸ்ப்ருஶம்ஸ்தச்சரணாரவிந்தம் || 36 ||
மனம் புத்தியை சமநிலைக்கு கொண்டு வந்து, உறுதியுடனும், தெளிவுடனும் மனதை அமைதிப்படுத்திக் கொண்டார்.  தன்னை ஒரு பாக்கியசாலி என்று கருதிக் கொண்டார்.  இரண்டு கைகளையும் கூப்பி வணங்கியபடி இவ்விதம் யதுகுலத்தில் மேலானவராக இருக்கும் கிருஷ்ணபகவானிடம் பேசலானார். தன்னுடைய தலையினால் பகவானுடைய தாமரைப்போன்ற பாதங்களை தொட்டு வணங்கினார்.

ஸ்ரீஉத்தவ உவாச
வித்3ராவிதோ மோஹமஹாந்த4காரோ ய ஆஶ்ரிதோ மே தவ ஸன்னிதா4னாத் |
விபா4வஸோ: கிம் நு ஸமீபக3ஸ்ய ஶீதம் தமோ பீ4: ப்ரப4வந்த்யஜாத்3ய || 37 ||
உத்தவர் கூறுகிறார்.
ஹே பிறப்பற்றவரே, அனைத்துக்கும் முதன்மையாக இருக்கும் பகவானே! அவ்வளவு சுலபமாக நீக்க முடியாத அடர்ந்த இருளான மோகமானது என்னிடமிருந்து சென்று விட்டது. எந்த மோகமானது என்னைப் பிடித்துக் கொண்டிருந்ததோ அது விலகி விட்டது.  இறைவனாகிய உங்களுடைய தரிசனத்தாலும், அருளினாலும் உபதேசத்தாலும் இது விலகி சென்றுவிட்டது.  சூரிய வெளிச்சம் இருக்கும்போது இருள், குளிர், பயம் இவைகள் இருக்காதோ அதுபோல உங்களுடைய உபதேசத்தினால் இது சாத்தியமாயிற்று.

ப்ரத்யர்பிதோ மே ப4வதானுகம்பினா
ப்4ருத்யாய விக்3ஞானமய: ப்ரதீ3ப: |
ஹித்வா க்ருதக்3ஞஸ்தவ பாத3மூலம் கோன்யம்
ஸமீயாச்ச2ரணம் த்வதீ3யம் || 38||
ப்ரதியர்பிதோ – திருப்பிக் கொடுத்தல்
ப்4ருத்யாய – சிஷ்யன்
நீங்கள் விக்ஞானமயமான ஆத்மஞானத்தை எனக்கு திருப்பி கொடுத்தீர்கள். உங்களுடைய அனுக்கிரகத்தினாலும், உபதேசத்தாலும் சிஷ்யனான என்னிடமிருந்த அறிவை எனக்கே திருப்பி கொடுத்து விட்டீர்கள். மாயையினல் பறிக்கப்பட்டிருந்த அறிவை திருப்பு கொடுத்துவிட்டீர்கள்
க்ருதக்3ஞ – தனக்கு செய்த உதவியை நன்றியுடன் நினைவில் வைத்துக் கொள்வது, நன்றி மறவாதவன்
நான் உங்களிடம் பெற்ற அறிவிற்காக என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  உங்கள் உபதேசத்தின் மூலமாக அடைந்த பலனுக்காக என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உஙகளுடைய பாதாரவிந்தங்களை விட்டுவிட்டு வேறு யாரிடம் அறிவுடையவன் செல்வான்? உங்களின் உபதேசத்தின் முழுபலனை அடைந்துவிட்டேன். இனி வேறு யாரிடமும் செல்ல வேண்டிய அவசியமில்லை.

வ்ருக்ணஶ்ச மே ஸத்3ருட4: ஸ்னேஹபாஶோ
தா3ஶார்ஹவ்ருஶ்ண்யந்தகஸாத்வதேஷு |
ப்ரஸாரித: ஸ்ருஷ்டிவிவ்ருத்3த4யே த்வயா
       ஸ்வமாயயா ஹயத்மஸுபோ3த4ஹேதினா || 39 ||
தாசார்ஹர், விருஷ்ணி, அந்தகர், சாத்வதர் ஆகிய குலத்தாருடன் மிகத் திடமான நட்பு பிணைத்திருந்தது. அதுவுக் கூட ஆத்மாவைப் பற்றிய தெளிவான அறிவு என்ற வாளால் வெட்டப்பட்டுவிட்டது. இந்த உறவுகள் படைப்பு வளர்ச்சிக்காக இறைவனான தங்களால் உருவாக்கப்பட்டதுதான்.
விவ்ருத்தயே - வளர்ச்சிக்காக
ப்ரஸாரித – ஏற்படுத்தப்பட்டது

நமோஸ்து தே மயாயோகி3ன்ப்ரபன்னமனுஶாதி4 மாம் |
யதா2 த்வச்சரணாம்போ4ஜே ரதி: ஸ்யாத3னபாயினீ || 40 ||
மகாயோகியே தங்களை வணங்குகிறேன். நமஸ்காரம் செய்கிறேன். உங்களிடம் சரணடைந்த எனக்கு அருள்புரிய வேண்டும்.
ஶாதி4 – அருள்புரியுங்கள்
எனக்கு தங்களுடைய சரணாரவிந்தத்தில் குறைவில்லாத உறுதியான பக்தி எப்போதும் இருந்து கொண்டிருக்க வேண்டும்.
அனபாயினீ – வேறெதனாலும் தாக்கப்படாமல்
ரதி: - மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்.

ஶ்ரீப4கவானுவாச
க3ச்சோ2த்3த4வ மயாதி3ஷ்டோ ப3த3ர்யாக்2யம் மமாஶ்ரமம் |
தத்ர மத்பாத3தீர்தோ2தே3 ஸ்னானோபஸ்பர்ஶனை: ஶுசி: || 41 ||
ஸ்ரீபகவான் கூறுகிறார்
உத்தவா! என்னால் உபதேசிக்கப்பட்டவனான நீ என்னுடைய ஆசிரமம் இருக்கின்ற பதரி என்ற இடத்துக்கு செல்லும்படி உத்தரவிடுகிறேன். அங்கு சென்று என்னுடைய பாதத்திலிருந்து வந்த நீரில் (கங்கை நீரில்) நீராடி, உடலை மனதையும் தூய்மையாக வைத்துக் கொண்டிருப்பாயாக

ஈக்ஷயாலகனந்தா3யா விதூ4தாஶேஷகல்மஷ: |
வஸானோ வல்கலான்யங்க3 வன்யபு4க்ஸுக2னி:ஸ்ப்ருஹ: || 42 ||
ஈக்ஷயாலகனந்தா3யா – அலகானந்தா நதியை பார்த்த மாத்திரத்திலேயே
விதூ4தாஶேஷகல்மஷ – மனமாசுக்கள் அனைத்தும் மறைந்து போய்விடும்
அங்க – உத்தவா!
மரவுரியை அணிந்துகொண்டு எளிமையான ஆடையை அணிந்து கொண்டு வனத்தில் கிடைக்கும் கிழங்கு,வேர்,பழங்கள் ஆகியவற்றை உணவாக உட்கொண்டிரு.  எந்தவிதமான சுகத்துக்கும், வசதிக்கும் ஆசைப்படாமல் வைராக்கியத்துடன் இருக்க வேண்டும்.

திதிக்ஷுர்த்3வந்த3வமாத்ராணாம் ஸுஶீல: ஸம்யதேந்த்3ரிய: |
ஶாந்த: ஸமாஹித்தி4யா ஞானவிக்3ஞானஸம்யுத: || 43 ||
குளிர்-வெப்பம், சுகம்-துக்கம், போன்ற இருமைகளை சகித்துக் கொண்டு, பொறுத்துக் கொண்டு
ஸுஶீலஹ – ஒழுக்கமான வாழ்க்கை முறையுடன் வாழ்ந்து கொண்டு, புலன்களை அடக்கிக் கொண்டு
ஶாந்தஹ – மனக்கட்டுபாடுடன் கூடியவனாக,மன அமைதியுடையவனாக இருந்து கொண்டு
ஸமாஹித தி4யா – உன்னுடைய புத்தியையும், கட்டுக்குள் வைத்துக் கொண்டு ஒரே இடத்தில் நிலைத்த புத்தியால்
ஞான-விக்ஞானஸம்யுதஹ – மெய்யறிவு, அனுபவ அறிவுடன் பொருந்தியவனாக வாழ்ந்து கொண்டிரு.

மத்தோ னுஶிக்ஷிதம் யத்தே விவிக்தமனுபா4வயன் |
மயாவிஶிதவாக்சித்தோ மத்3த4ர்மனிரதோ ப4வ |
அதிவ்ரஜ்ய க3தீஸ்திஸ்ரோ மாமேஷ்யஸி தத: பரம் || 44 ||
நான் இதுவரை உபதேசத்ததிலிருந்து எதை அறிந்து கொண்டாயோ அதை விசாரம் செய்து அனுபவத்துக்கு கொண்டு வரவேண்டும். என்னிடத்தில் உன் மனதையும், பேச்சையும் நிலைநிறுத்தி என்னை அடைவதே இறுதி குறிக்கோளாக கொண்டு அதை அடைவதை முயற்சி செய்ய வேண்டும். மூன்றுவிதமான கதிகளை, பிறப்பான, மனித லோகத்தில் பிறத்தல், தேவலோகத்தில் பிறத்தல், நரகத்திற்கு பிறத்தல் ஆகியவைகளை கடந்து என்னை அடைவாய்.

ஸ்ரீஶுக உவாச
ஸ ஏவஸுக்தோ ஹரிமேத4ஸோத்3த4வ:
ப்ரத3க்ஷிணம் தம் பரிஸ்ருத்ய யாத3யோ: |
ஶிரோ நிதா4யாஶ்ருகலாபி4ரார்த்3ரதீ4ர்ன்யஷிச்சத3-
த்3வந்த்3வபரோப்யபக்ரமே || 45 ||
பகவான் ஸ்ரீக்ருஷ்ணர் இவ்வாறு கூறியதும், உத்தவர் அவரை வலம் வந்து அவருடைய பாதங்களில் தன்னுடைய தலையை வைத்து வணங்கினார்.  அவருடைய கண்களிலிருந்து பிரிவைத் தாங்கமுடியாததால் பெருகிய கண்ணீரால் பகவானின் பாதங்களை நனைத்தார். இருமைகளை கடந்தவராக இருக்கும் உத்தவர் அவரை பிரிந்து புறப்படும் அந்தச் சமயத்தில் கண்களிலிருந்து நீர் பெருகியது.

ஸுது3ஸ்த்யஜஸ்னெஹவியோக3காதரோ
   ந ஶக்னுவம்ஸ்தம் பரிஹாதுமாதுர: |
க்ருச்ச்2ரம் ய்யௌ மூர்த4னி ப4ர்த்ருபாது3கே
பி3ப்4ரன்னமஸ்த்ருத்ய ய்யௌ புன: புன: || 46 ||
பகவானிடம் மிக்க அன்பு கொண்டவர், அவரை விட்டுப் பிரிவது என்பது மிகவும் கஷ்டம்தான். மனதில் துயரத்தை சுமந்துகொண்டு துயரப்பட்டவராக இருந்தார்.  பகவானுடைய பாதுகைகளைத் தலையில் வைத்துக் கொண்டார். மீண்டும், மீண்டும் பகவானை வணங்கிவிட்டு விடைப்பெற்று சென்றார்.

ததஸ்தமந்தர்ஹ்ருதி3 ஸன்னிவேஶ்ய
க3தோ மஹாபா4க3வதோ விஶாலாம் |
யதோ2பதி3ஷ்டாம் ஜக3தே3கப3ந்து4னா தப:
       ஸமாஸ்தா2ய ஹரேரகா3த்3க3திம் || 47 ||
உத்தவர் தன்னுடைய ஆழ்மனதில் பகவானை நிலைநிறுத்தி பத்ரிகாசிரமத்தை அடைந்தார்.  உலகநலனில் அக்கறை கொண்ட பகவானால் உபதேசிக்கப்பட்டபடி தவ வாழ்க்கையை மேற்கொண்டு இறுதியில் ஸ்ரீஹரியை அடைந்தார். அவர் விதேஹ முக்திய அடைந்தார்

ய ஏததா3னந்த3ஸமுத்3ரஸம்ப்4ருதம்
ஞானாம்ருதம் பா4க3வதாய பா4ஷிதம் |
க்ருஷ்ணேன யோ3கே3ஶ்வரஸோவிதாங்க்4ரிணா
ஸச்ச்2ரத்3த4ஸேவ்ய ஜக3த்3விமுச்யதே || 48 ||
கடலளவு ஆனந்தத்தை தன்னுள் கொண்டுள்ளது இந்த உத்தவ கீதை. ஞானம் என்கின்ற அம்ருதத்தை கொடுக்க கூடியது. சிறந்த பக்தரான உத்தவருக்கு இது உபதேசிக்கப்பட்டது. யோகேஶ்வரர்களால் வணங்கப்படும் ஸ்ரீக்ருஷ்ண பகவானால் உபதேசிக்கப்பட்டது. யார் இதை முழுமையான சிரத்தையுடன் கேட்கிறார்களோ அவர்கள் மட்டுமல்ல அவரைச் சார்ந்த மற்றவர்களும் முக்தியை அடைகிறார்கள்.

ப4வப4யமபஹந்தும் ஞானவிக்3ஞானஸாரம்
நிக3மக்ருது3பஜஹ்ரே ப்4ருங்க3வத்3வேத3ஸாரம் |
அம்ருதமுத3தி4தஶ்சாபாய யத்3ப்4ருத்யவர்கா3ன
       புருஷம்ருஷப4மாத்3யம் க்ருஷ்ணஸஞ்ஞம் நதோஸ்மி || 49 ||
ப4வப4யம் அஹந்தும் – இந்த உலகத்திலிருந்து அடையும் பயத்தை நீக்குவதற்காக
ஞான விக்ஞானஸாரம் – ஞானம் விக்ஞானம் இவைகளின் சாரமாக
நிக3மக்ருத் – வேதத்தை உருவாக்கிய ஈஸ்வரனான பகவான் கிருஷ்ணன்
வண்டு பலவகையான மலர்களிலிருந்து தேனை எடுப்பதைப் போன்று பகவான் வேதத்திலிருந்து அதன் சாரத்தை எடுத்துக் கொடுத்துள்ளார். பாற்கடலிலிருந்து வெளிபட்ட அம்ருதத்தை தேவர்களுக்கு கொடுத்தவர், மனிதர்களுக்கு அதைவிட மேலான ஞானாமிர்தத்தை கொடுத்துள்ளார்.  மனிதர்களுக்குள்ளே உயர்வான உடலை எடுத்தவரும், அனைத்துமாக இருப்பவருமாக இருக்கின்ற பரம்பொருளை நமஸ்கரிக்கின்றேன். அந்த ஈஸ்வரனுக்கு கிருஷ்ணன் என்ற நாமமும், ரூபமும் கொடுக்கப்பட்டது. அவரை நான் வணங்குகின்றேன்.

உத்தவ கீதை சுருக்கம்
01  கதை தொடக்கம்
02  தியாகம், சந்நியாஸம், அவதூதரின் கதை
03  அவதூதரின் கதை தொடர்ச்சி
04  அவதூதரின் கதை முடிவு
05  கர்மயோக, ஞானயோக சாரம்.
06  ஞானியினுடைய லட்சணம், பக்தி
07  பக்தியோகம்
08  வேதாந்தத்தின் சாரம், ஹம்ஸ கீதை
09  ஈஸ்வரனை காரிய-காரணமாக விளக்கி, அதை எப்படி தியானம் செய்ய வேண்டும் என்பதன் விளக்கம்
10  சித்திகளை விலக்கிவிடவேண்டும்
11  ஈஸ்வரனுடைய பெருமைகள்
12  வர்ணாசிரம தர்மங்கள்
13  வர்ணாசிரம தர்மங்கள்
14  ஞானம், பக்தி, நற்பண்புகள் அதன் பலன்கள்
15  குண-தோஷம்
16  குண-தோஷம்
17  ஸ்ருஷ்டியின் விதவிதமான எண்ணிக்கையை விளக்கப்படுகிறது
18  பிக்ஷு கீதை
19  ஸ்ருஷ்டி, லயம் விளக்கம்
20  குணத்ரய விபாகம், முக்குணங்களின் விளக்கம்
21  சத்சங்கத்தின் பெருமை, துஷ்சங்கத்தின் விளைவு
22  க்ரியாயோகம் என்ற தலைப்பின் பகவானை வழிப்படும் முறைகள்
23  ஞானயோகம் விரிவாக விளக்கப்பட்டது
24  கர்மயோக, ஞானயோக சாராம்சம்

ஓம் தத் ஸத்




A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...