Showing posts with label முண்டக உபநிஷத்-2. Show all posts
Showing posts with label முண்டக உபநிஷத்-2. Show all posts

Thursday, February 15, 2018

முண்டக உபநிஷத் - அத்தியாயம் – 2

முண்டக உபநிஷத்

ஸ்வாமி குருபரானந்தா உபதேச விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது 15/04/2022
www.poornalayam.org
அத்தியாயம்–02
பகுதி-1
 
ஸ்லோகம்-01
ததே3தத்ஸத்யம் யதா2 ஸுதீப்தாத்பாவகாத்3
    விஸ்புலிங்கா: ஸஹஸ்ரஶ: ப்ரபவந்தே ஸரூபா: |
ததா3க்ஷராத்3விவிதா4: ஸோம்ய பா4வா:
    ப்ரஜாயந்தே தத்ர சைவாபி யந்தி || 1 ||
 
ஸோம்ய  - நல்ல மனதையுடைய சீடனே
தத் ஏதத் ஸத்யம் – முன்பு சொன்ன பிரம்மனும் சத்யம், எந்த அக்ஷரத்தைப்பற்றி சொல்லப் போகிறேனோ அதுவும் சத்யம் ( என்றும் இருப்பது )
யதா2 – எப்படி
ஸுதீ3ப்தாத்பாவகாத் – கொழுந்துவிட்டு நன்கு எரிகின்ற நெருப்பிலிருந்து
ப்ரப4வந்தே – தோன்றுகின்ற
சஹஸ்ரஶஹ – ஆயிரக்கணக்கான,
விஸ்புலிங்காஹா – தீப்பொறிகள்
ஸ்வரூபா: - அக்னியின் தன்மையை உடையதாக இருக்கிறதோ
ததா3 – அவ்விதமே
அக்ஷராத் – அக்ஷரத்திலிருந்து
விவிதா4: பா4வாஹா – விதவிதமான ஜீவராசிகள்
ப்ரஜாயந்தே – தோன்றுகிறது
தத்ர ச ஏவ அபி யந்தி – இவைகள் அக்ஷரத்திலேயேதான் ஒடுங்குகிறது. அக்ஷரமே இவைகளுக்கு உபாதான காரணமாக சொல்லப்பட்டிருக்கிறது.
 
ஸ்லோகம்-02
தி3வ்யோ ஹ்யமூர்த: புருஷ: ஸபா3ஹ்யாப்4யந்தரோ ஹ்யஜ: |
அப்ரணோ ஹ்யமனா: ஶுப்4ரோ ஹ்யக்ஷராத்பரத: பர: || 2 ||
 
திவ்யஹ – சைதன்ய ஸ்வரூபமானது, சித் ஸ்வரூபமானது
அமூர்த: - உருவமற்றது, அவயவங்களற்றது
புருஷஹ – எல்லாவிடத்திலும் நிறைந்திருப்பது, பூரணமானது, உடலில் சாட்சியாக இருப்பதாலும் இவ்வாறு கூறப்படுகிறது
ஸ பா3ஹ்யம் – வெளியேயும் உள்ளது
ஸ அப்4யந்தரோ – உள்ளேயும் உள்ளது. எதனாலும் வரையறுக்கப்படாதது
ஹி அஜஹ – உண்மையில் பிறப்பற்றது, எந்தவித மாற்றமும் இல்லாதது
அப்பிராணஹ – பிராணனும் இல்லாதது
அமனாஹ – மனது கிடையாது. அதாவது சூட்சும சரீரமுமற்றது
ஶுப்4ரஹ – தூய்மையானது, காரண சரீரமற்றது. அறியாமையற்றது.
மாயை ஸ்தூல சூட்சுமமான ஜகத்தை காட்டிலும் மேலானது.  அக்ஷரம் இந்த மாயையை காட்டிலும் மேலானது
அக்ஷராத் ப்ரதஹ பர – ஜகத்தைக் காட்டிலும் மேலான மாயைவிட மேலானது இந்த பிரம்மன்.
 
விசாரம்:
பிரம்மன் அனாதி, அதாவது எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கிறது. மாயையின் தோற்றமும் அனாதி. இவையிரண்டுக்குமுள்ள சம்பந்தமானது விசாரம் செய்யப்படுகிறது இரண்டும் தனித்தனியான பொருளாக எடுத்துக் கொண்டால், அவ்வாறு இருக்க முடியாது ஏனென்றால் சாஸ்திரம் பிரம்மத்தை ஆனந்த ஸ்வரூபமாகவும், பூரணமானதாகவும், இரண்டற்றதாகவும் இருக்கின்றது என்று கூறியிருப்பதால் இது சாத்தியமில்லை. மாயை பிரம்மத்தின் அங்கமாக எடுத்துக் கொண்டால் ஒரு பொருளில் உள்ள அங்கத்திற்கு வரும் எந்த மாற்றமும் அந்தப் பொருளையும் பாதிக்கும், மாற்றத்திற்குள்ளாக்கும் ஆனால் சாஸ்திரம் பிரம்மன் நிர்விகாரம், அவயவங்களற்றது என்று கூறியிருப்பதால் இதுவும் சரியாக இருக்காது. மாயையானது பிரம்மத்தை சார்ந்திருக்கிறது. இதுதான் இவை இரண்டுக்குமுள்ள சம்பந்தம்.  உதாரணமாக பகலில் சூரியஓளியால் நம்முடைய நிழல் கீழே இருக்கிறது.  நிழல் என்னைச் சார்ந்திருக்கிறது, அது என்னுடைய அங்கமல்ல, தனித்தனியாகவும் இல்லை. இரண்டுக்குமுள்ள சம்பந்தம், சத்யம்-மித்யா சம்பந்தம்.  ஆதாரமாக இருக்கின்ற அனைத்தும் சுதந்திரமாக இருக்கிறது. எனவே சத்யத்தைச் சார்ந்துள்ள அனைத்தும் மித்யாவாக இருக்கிறது
 
ஸ்லோகம்-03
ஏதஸ்மாஜ்ஜாயதே ப்ராணோ மன: ஸர்வேந்த்3ரியாணி ச |
க்2ம் வாயுர்ஜோதிராப: ப்ருதி2வீ விஶ்வஸ்ய தா4ரிணீ || 3 ||
 
இந்த பிரபஞ்சம் நான்கு படிகளாக தோன்றியது. பிரம்மன் மாயையோடு கூடியது முதல் நிலை. சூட்சுமமான ஐந்து பூதங்கள் தோன்றியது. சூட்சுமமான பிரபஞ்ச, சரீரங்கள் தோன்றியது.  சூட்சும பூதங்களின் கலப்பினால் ஸ்தூல பஞ்சபூதங்கள் தோன்றியது.  ஸ்தூல பிரபஞ்சம், ஸ்தூல சரீரங்கள் தோன்றியது,  
கம்         – ஆகாசம் – மாயையுடன் கூடிய சப்தம்
வாயு     – காற்று – தொடுதல்
ஜோதி   – அக்னி – ரூபம்
ஆபஹ  – நீர் – சுவை
ப்ருதவி – நிலம் – வாசனை
இவைகளெல்லாம் சூட்சுமமான பூதங்கள்
ஏதஸ்மாத் – இதனிடமிருந்து, மாயையுடன் கூடிய அக்ஷரத்துடன்
பிராணஹ, மனஹ – பிராணன்களும், மனதும்
சர்வ இந்திரியானி ச – எல்லா இந்திரியங்களும்
ஜாயதே – தோன்றியது
 
ஸ்லோகம்-04
அக்னிர்மூர்த4ம் சக்ஷுஷீ சந்த்3ரஸூர்யை
    திஶ: ஶ்ரோத்ரே வாக்விவ்ருதாஶ்ச வேதா3: |
வாயு: ப்ராணோ ஹ்ருத3யம் விஶ்வமஸ்ய
    பத்த்4யாம் ப்ருதி2வீ ஹ்யேஷ ஸர்வபூ4தாந்தராத்மா || 4 ||
 
இந்த பிரபஞ்சமே ஈஸ்வரனின் ஸ்தூல சரீரம்.
அந்தர்யாமி – மாயையுடன் கூடிய ஈஸ்வரன்
ஹிரண்யகர்ப்பன் – சூட்சுமமான பிரபஞ்சமாக, சரீரங்களாக இருக்கும் உருவம்
விராட் – ஸ்தூலமான பிரபஞ்சமாகவும், ஸ்தூல சரீரங்களாகவும் இருக்கும் உருவம்
அக்னிர்மூர்தா4 – விராட்டின் தலை சொர்க்கம்
சக்ஷுஷீ சந்த்3ரஸூர்யை – சந்திரனும், சூரியனும் இரண்டு கண்கள்
தி3ஶ: ஶ்ரோத்ரே - திசைகளே காதுகளாக இருக்கிறது
வாக்3 வேதா3ஹா – வேதங்களே அவருடைய பேச்சு
விவ்ருதாஹ வேதாஹா – பிரசித்தமான வேதங்கள்
வாயுஹு பிராணஹ – காற்றே அவரது பிராணன்
விஶ்வம் ஹ்ருதயம் – பிரபஞ்சமே இதயமாக
யஸ்ய – அந்த விராட்
பத்3த்4யாம் ப்2ருதிவி – பாதங்கள் இந்த பூமி
ஏஷஹ – இவர்
ஸர்வபூ4த் அந்தராத்மா – எல்லா ஜீவராசிகளின் இதயத்திலும் இருக்கிறார்.

ஸ்லோகம்-05
தஸ்மாத3க்னி: ஸமிதோ4 யஸ்ய ஸூர்ய:
    ஸோமாத்பர்ஜன்ய ஔஷத4ய: ப்ருதி2வ்யாம் |
புமான் ரேத: ஸிஞ்சதி யோஷிதாயாம்
    ப3ஹ்வீ ப்ரஜா: புருஷாத்ஸம்ப்ரஸூதா: || 5 ||
 
தஸ்மாத் – மாயையுடன் கூடிய அந்த பிரம்மத்திடமிருந்து
அக்னி – சொர்க்கலோகம் தோன்றியது
ஸமித4ஹ யஸ்ய ஸூர்ய: - சூரியனால் அது பிரகாசிக்கிறது.
ஸோமஹ – சந்திரன் தோன்றியது
பர்ஜன்ய – அதிலிருந்து மேகங்கள் உருவாகியது, மழையாக பொழிகின்றது
ஔஷதஹ ப்ருதி2வ்யாம் – தாவரங்கள் பூமியில் வளர்கின்றது
புமான் – மனிதன்
ரேதஹ – அவனுடைய விந்து சக்தியை
யோஷிதாயாம் ஸிஞ்சதி – பெண்ணுக்குள் செலுத்துகிறான்
பஹுவிஹி – பலவிதமான
ப்ரஜாஹா – ஜீவராசிகள்
புருஷாதி ஸம்ப்ரஸுதாஹா – பிரம்மத்திடமிருந்து தோன்றியது
இவ்வாறு ஜீவனின் ஸ்தூல சரீரம்தான் உருவாகிறது. அது மனிதனாக இருக்கலாம் அல்லது வேறு ஜீவராசியாகவும் இருக்காலாம். அவனது சூட்சும சரீரம் அப்படியேதான் இருக்கும்
 
ஸ்லோகம்-06
தஸ்மாத்3ருச: ஸாம யஜூம்ஷி தீக்ஷா
    யக்3ஞாஶ்ச ஸர்வே க்ரதவோ தக்ஷிணாஶ்ச |
ஸம்வத்ஸரஶ்ச யஜமானஶ்ச லோகா:
    ஸோமோ யத்ர பவதே யத்ர ஸூர்ய: || 6 ||
 
தஸ்மாத்3 – அந்த பிரம்மத்திடமிருந்து
யஜூம்ஷி – வேத மந்திரங்கள்
ரிச: ஸாம, யஜூ – ரிக், சாம, யஜூர் வேதங்கள்
தீ3க்ஷா – யாகம் செய்வதற்காக எடுத்துக் கொள்ளும் விரதங்கள்
யக்ஞா – யாகங்கள் தோன்றியது
ஸர்வே க்ரதஹ – பல விலங்குகளை பலி கொடுக்கின்ற
த3க்ஷிணாஶ்ச – யாகத்தில் கொடுக்கப்படும் தானங்கள்
ஸம்வத்ஸரஶ்ச – காலங்கள் தோன்றியது
யஜமானஶ்ச – யாகத்தை செய்யும் எஜமானன்
லோகாஹ – விதவிதமான லோகங்கள்
யத்ர ஸோமஹ – சந்திரதேவன் வழிக்காட்டுகின்ற உலகங்கள்
யத்ர சூர்யஹ – சூரியன் வழிகாட்டும் லோகங்கள்
இவைகள் யாவும் பிரம்மத்திடமிருந்து தோன்றியது. ஜீவன் இறந்த பிறகு அடையும் கதிகள்
  1. முறையாக கர்மங்களை செய்த மனிதனின் முதல் கதி – கிருஷ்ண கதி – சொர்க்கம்
  2. அதிக உபாஸனைகளின் மூலம் சுக்லகதி வழியாக பிரம்ம லோகத்திற்கு செல்கின்றான்
  3. அவரவர்கள் விருப்பு-வெறுப்பு வாழ்பவர்களுக்கு எந்தக்கதியும் கிடையாது. இவர்கள் நரகத்திலோ அல்லது பூமியில் விலங்குகளாகவோ பிறப்பார்கள்
  4. அகதி – எந்தக் கதியும் கிடையாது.  மோட்சம் அடைந்தவர்களின் அடையும் கதியானது மீண்டும் பிறவியெடுக்க மாட்டார்கள்
சொர்க்கலோகம், பிரம்ம லோகம் இருக்கிறது என்று நம்புபவர்களுக்கு ஶ்ருதி ஆதாரமாக இருக்கிறது. இல்லையென்போர்களுக்கு அவர்களது நம்பிக்கைதான் ஆதாரம்.
 
ஸ்லோகம்-07
 
தஸ்மாச்ச தே3வா ப3ஹுதா4 ஸம்ப்ரஸூதா:
        ஸாத்4யா மனுஷ்யா பஶவோ வயாம்ஸி |
ப்ராணாபானௌ வ்ரீஹியவௌ தபஶ்ச
        ஶ்ரத்3தா4 ஸத்யம் ப்ரஹ்மசர்யம் விதி4ஶ்ச || 7 ||
 
தஸ்மாத்3 – அந்த பிரம்மத்திடமிருந்து
தேவாஹா – தேவர்கள்
பஹுதா4 ஸ்ம்ப்ரஸூதாஹா – பலவிதமான தேவதைகள்
ஸாத்4யா மனுஷ்யா – விசேஷமான தேவதைகள் மனிதர்கள்
பஶவஹ, வயாம்ஸி – மிருகங்கள், பறவைகள்
ப்ராணா அபானௌ – பிராணனங்கள் தோன்றின
வ்ரீஹி, யவௌ – நெல், பார்லி போன்ற தானியங்கள்
தபஹ, ஸ்ரத்3தா4 – தவங்களும், சிரத்தையும்
ஸத்யம் – உண்மை உரைத்தல்
ப்ரஹ்மசர்யம் – பிரம்மச்சர்ய வாழ்க்கை முறை
விதி4ஶ்ச – நம்முடைய கர்மங்கள், வாழ்க்கை நெறிமுறைகள் தோன்றின
 
ஸ்லோகம்-08
ஸப்த ப்ராணா: ப்ரப4வந்தி தஸ்மாத்
        ஸப்தார்சிஷ: ஸமித4: ஸப்த ஹோமா: |
ஸப்தே இமே லோகா யேஷு சரந்தி ப்ராணா
        கு3ஹாஶயா நிஹிதா: ஸப்த ஸப்த || 8 ||
 
யாகத்தில் உள்ள அங்கங்கள் ஹோமகுண்டம், அக்னி, அக்னிஜுவாலை, அக்னியில் சமர்ப்பிக்கும் பொருட்கள் (சமீத்) ஆகியவைகளாகும். அக்னியும், சமித்தும் ஒன்றாகி பஸ்பமாகிவிடுகிறது.
ஹோமகுண்டம் – இந்திரியங்கள் இருக்குமிடம்
அக்னி – இந்திரியங்கள்
அக்னி ஜுவாலை – இந்திரியங்களின் வெளிப்பாடு
சமித் – இந்திரியங்களின் விஷயங்கள்; உலகத்திலுள்ள விஷயங்கள்; அனுபவிக்கும் விஷயங்கள்
அக்னி-சமித் சம்பந்தம் – ஞானம்
 
தஸ்மாத் – அந்த பிரம்மத்திடமிருந்து
ஸப்த ப்ராணா: - ஏழு பிராணன்கள், இந்திரியங்கள் தோன்றியது
ஸப்த அர்சிஹ – இந்திரிய சக்திகளும்
ஸப்த இமே லோகா – இந்த ஐந்து இந்திரியங்கள்
ஸமித4ஹ, ஹோமா – பல விஷயங்களும், அறிவை அடைவதும் சமித்துக்கு ஒப்பிடப்படுகிறது.
ஏஷு ப்ராணன் சரந்தி – இந்த கோளகத்தில் இந்திரியங்கள், பிராணன்கள் செயல்படுகின்றது.
கு3ஹாஶயா – இந்திரியங்கள் மனதில் ஓய்வெடுக்கின்றது. மனம் இருதயத்தில் ஓய்வெடுக்கின்றது.
நிஹிதா: ஸப்த ஸப்த – இந்த ஏழு ஏழு இந்திரியங்கள் எல்லா ஜீவராசிகளுக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது
 
ஸ்லோகம்-09
அத: ஸமுத்3ரா கி3ரயஶ்ச ஸர்வேSஸ்மாத்ஸ்யந்த3ந்தே
    ஸிந்த4வ: ஸர்வரூபா: |
அதஶ்ச ஸர்வா ஓஷத4யோ ரஸஶ்ச யேனைஷ
    பூ4தைஸ்திஷ்ட2தே ஹ்யந்தராத்மா || 9 ||
 
அதஹ – பிரம்மத்திடமிருந்து
ஸர்வே ஸமுத்3ரா, கி3ரய - எல்லா கடல்கள், மலைகள் தோன்றின
அஸ்மாத் – அந்த பிரம்மத்திடமிருந்து
ஸர்வரூபா: ஸிந்த4வ: - நதிகள் பலவிதமாக தோன்றின
ஸர்வா ஓஷத4யஹ – விதவிதமான மரம், செடி, கொடிகள்
ரஸஶ்ச – தாவரங்களில் இருக்கும் சக்திகள்
யேன – இந்த சக்திகள்
ஏஷ அந்தராத்மா – சூட்சும சரீரத்திலிருக்கும் அந்தராத்மா
பூதை திஷ்டதே – ஸ்தூல சரீரத்தில் இருக்க உதவுகிறது.
 
ஸ்லோகம்-10
புருஷ: ஏவேத3ம் விஶ்வம் கர்ம தபோ ப்ரஹ்ம பராம்ருதம் |
   ஏதத்3யோ வேத3 நிஹிதம் கு3ஹாயாம்
ஸோSவித்3யாக்3ரந்தி2ம் விகிரதீஹ ஸோம்ய || 10 ||
 
இதில் மூன்று கருத்துக்கள் கூறப்பட்டுள்ளது. அவைகள்
1. பிரஹ்ம ஸ்வரூபம்,
2. ஜீவ-பிரஹ்ம ஐக்கியம்,
3. ஞானபலன்
 
ஸோம்ய – மிகவும் விருப்பத்திற்குரியவனே!
புருஷஹ ஏவ இத3ம் விஶ்வம் – நம்முடைய அனுபவத்திலிருக்கின்ற உலகத்தில் உள்ள அனைத்தும் பிரம்ம ஸ்வரூபமாகவே இருக்கிறது
கர்ம தபஹ – கர்ம பலனாலும், உபாஸனை பலனாலும் கிடைத்த உலகத்தை நாம் அனுபவிக்கிறோம்
ப்ரஹ்ம பராம்ருதம் – புருஷனான பிரம்மன் மேலானது, அழிவற்றது.
யஹ ஏதத் – எவனொருவன் இவ்வாறு வெளியே ஸத் ரூபமாக உள்ள பிரம்மத்தை
குஹாயாம் – மனதில் உள்ள சித் (ஆத்மாவாக) ஸ்வரூபமாக
வேத நிஹிதே – இருப்பதாக அறிகின்றானோ
இது ஜீவ-பிரஹ்ம ஐக்கியத்தை எடுத்துக் காட்டுகிறது. நான் இருக்கின்றேன் என்பதற்கு எந்த இந்திரியங்களின் துணையும் தேவையில்லை.
 
யஹ ஏத ஸஹ – இவ்வாறு யார் அறிகிறார்களோ
இஹ – அவர்கள் உயிரோடு இருக்கும்போதே, இங்கேயே, இப்போதே
அவித்யா க்ரந்தி விக்ரதி – அறியாமை என்ற முடிச்சிலிருந்து விடுபடுகிறார்கள்.
 
நம்முடைய மனதால் நாம் உலகத்தோடு கட்டிப்போடப்பட்டிருக்கின்றோம். இதுவே அறியாமை என்ற முடிச்சு இது மிக உறுதியாக நம்மை நாம ரூபத்தோடு கட்டி வைத்திருக்கிறது. இந்த உலகத்திலுள்ள பொருட்கள், விஷயங்கள் எல்லாம் நம் மனதில் வாசனைகளாக இருந்து கொண்டிருக்கிறது.  இதிலிருந்து நம் மனம் விடுபடுகிறது. அதாவது சம்சார பந்தத்திலிருந்து விடுபடுகிறோம்.
 
விசாரம்:
பாம்பும் கயிறும் ஒரே நேரத்தில் இருவருக்கு வெவ்வேறாக தெரிகிறது. கயிற்றைப் பார்ப்பவர், பாம்பை பார்ப்பவரிடம், நீ பார்ப்பது பாம்பல்ல,கயிறு என்று சொல்வது போல இந்த உலகத்தை பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு, அது உலகமல்ல பிரம்மம் என்று உபநிஷத் உபதேசிக்கிறது. எனவே நாம் உலகத்தை சத்யமாக நினைத்துக் கொண்டிருக்கும் நிலையை விலக்கி அதில் பிரம்மத்தைத்தான் பார்க்க வேண்டும். இந்த பிரபஞ்சத்திற்கு பிரம்மன் உபாதான காரணமாக உபதேசிக்கப்பட்டது. தோற்றம், இருத்தல், அழிதல் காரணமாக இருப்பது உபாதான காரணம்.
 
இந்த உலகத்தில் எந்த விதத்தில் பிரம்மன் உபாதான காரணமாக இருக்கிறது என்பதை ஆராய்வோம். மூன்று லட்சணங்கள் உபாதான காரணத்திற்கு உண்டு.
1.  காரிய முழுவதும் வியாபித்திருக்கும். பானை முழுவதும் களிமண் இருப்பது
2.  காரியத்தில் ஏற்படும் மாற்றம் காரணத்தை பாதிக்காது
3.  அவினாசி – அழிவற்றது
 
இந்த லட்சணங்களை வைத்துக் கொண்டு பிரம்மத்தை கண்டுபிடிக்க வேண்டும்.  பிரம்மன் ஸத் ஸ்வரூபமாக இருந்தால் கீழ்கண்ட மூன்றும் பொருந்தி வரும்.
1.  ஸத் என்பது எல்லாவிடத்திலும் வியாபித்திருக்கிறது. எதை கேட்டாலும், அது இருக்கின்றது, இது இருக்கின்றது என்று சொல்வதிலிருந்து இதை புரிந்து கொள்ளலாம்
2.  மாற்றமடையாதது – புத்தகம் இருக்கின்றது என்பதில் உள்ள இருத்தல், அது தூள்தூளாக கிழிந்தாலும், காகிதங்கள் இருக்கின்றது என்பதிலும் மாற்றமடையாமல் இருக்கின்றது. அது போலவே பிரம்மனும் எங்கும் வியாபித்து இருந்தாலும், மாற்றமடையாமல் இருந்து கொண்டிருக்கிறது
3.  அழிவற்றது – புத்தகத்திற்கு அழிவிருக்கிறது, ஆனால் இருத்தல் என்பது எல்லா நிலைகளிலும் அழிவேயில்லாமல் தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்கிறது
இதிலிருந்து பிரம்மனானது இருத்தல் என்ற ஸ்வரூபமாகவே இருக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது
 
இந்த இருத்தலை எப்படி தெரிந்து கொள்ள முடியும் என்றால் கண்ணால் புத்தகம் இருக்கிறது என்று தெரிந்து கொள்கிறோம். இதில் புத்தகத்தில் பெயர்-உருவம் இருக்கின்றது என்று அறிகிறோம்.  இந்த ஐம்புலன்களால் நாம் எது இருக்கின்றது என்பதை புரிந்து கொள்கிறோம்.  அதோடு நாம் உருவத்தையும் சேர்த்துதான் புரிந்து கொண்டுள்ளோம்.  நாம் இதில் அந்த இருத்தலை மட்டும்தான் புரிந்து கொள்ள வேண்டும். பெயர், உருவத்தில் கவனத்தை செலுத்தாமல், இருத்தலை மட்டும் பார்க்கவே முடியாது. இந்திரியங்களால் இரண்டும் சேர்ந்தால்தான் தெரிந்து கொள்ள முடியும்.  புலன்களின் துணையில்லாமல் எந்தப்பொருளையாவது நம்மால் அறிந்து கொள்ள முடியுமா என்று யோசித்தால் அறிவு ஸ்வரூபமான ஆத்மாவை அவ்வாறு அறிந்து கொள்ள முடியும் என்று தெரிய வரும்.  இது ஒன்றுதான் நாம-ரூபம் இல்லாமல் இருப்பது.
----ooo00oooo----
----------------------------------------------------------------------------------------------------------------
அத்தியாயம்–02
பகுதி-2
 
ஸ்லோகம்-01
ஆவி: ஸன்னிஹிதம் கு3ஹாசரன்னாம
    மஹத்பத3மத்ரைதத்ஸமர்பிதம் |
ஏஜத்ப்ராணன்னிமிஷச்ச யதே3தஜ்ஜானத2
    ஸத3ஸத்3வரேண்யம் பரம் விக்ஞானத்3யத்3வரிஷ்ட2ம் || 1 ||
 
ஆவிஹி         சைதன்ய ஸ்வரூபம், பிரகாச ஸ்வரூபம் பிரம்மன், பிரகாசம் ஞானத்திற்கு காரணமாவதால், இது பிரம்மனை குறிக்கிறது.
ஸன்னிஹிதம்   ஜீவ ஸ்வரூபமாக இருதயத்தில் இருக்கிறது. மிக மிக அருகில் இருக்கிறது. விழிப்புணர்வில் பார்ப்பவனாகவும், கேட்பவனாகவும் இருக்கிறது
கு3ஹாசரன்     புத்தியில் நகர்வது போல் இருக்கின்றது. நாம் பார்க்கும் பொருள் இந்திரியங்கள் வழியாக அதை வியாபித்து அதன் உருவமாகவே எண்ணங்களாக மாறுகிறது.  அதில் ஆத்மா சித் ஸ்வரூபமாக இருந்து அதுவும் மாறுவது போல் தோன்றுகிறது. இது புத்தியின் செயலுக்கேற்ப செயல்படுவது போல் இருக்கின்றது.
நாம             பெயரளவில்தான் அப்படி உணர்கிறோம்.
மஹத்பதம்      மேலான லட்சியம், மேலான குறிக்கோள், எல்லாவற்றையும் தாங்குவது, ஆதாரமாக இருக்கிறது.
அத்ர ஏதத் ஸமர்ப்பிதம் – இந்த உலகம் இதை சார்ந்திருக்கின்றது
ஏஜத்            நகர்கின்ற ஜீவராசிகள்
பிராணன்        சுவாசிக்கின்ற ஜீவராசிகள் (மனிதர்கள் போன்றவைகள்)
நிமிஷத ச       கண்ணை சிமிட்டுகின்ற ஜீவராசிகள் மேலும் மற்ற ஜீவராசிகளும் அந்த பிரம்மத்தை சார்ந்திருக்கின்றது
யத்3 ஸதஸத்3  எந்த பிரம்மன் வெளிதோற்றத்திற்கு வந்ததாகவும் (ஸத்தாகவும்),     வெளித்தோற்றத்திற்கு வராமலும் (அஸத்தாகவும்) இருக்கின்றதோ அதாவது மூர்த்த – அமூர்த்தமாக ஸ்வரூபமாகவும் இருக்கிறதோ
யத் வரிஷ்டம் வரேண்யம் –        எது மிகமிக மேலானதாகவும், தேர்ந்தெடுக்கப்பட வேண்டியதாகவும் இருக்கிறதோ
யத் ப்ரஜானாம் விக்ஞானாத் பரம் ஜீவராசிகளுடைய அறிவுக்கு அப்பாற்பட்டதாக இருக்கின்றதோ, இந்திரியங்களின் சக்திக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறதோ.
ஏதத்3 ஜானத4                    சிஷ்யர்களே, நீங்கள் அதை அறிய வேண்டும், அறிய இருக்கிறீர்கள்
 
ஸ்லோகம்-02
யத3ர்சிமத்3யத3ணுப்3யோSணு ச யஸ்மில்லோகா நிஹிதா லோகினஶ்ச |
    ததே3தத3க்ஷரம் ப்3ரஹ்ம ஸ ப்ராணஸ்தது3 வாங்மன:
ததேதத்ஸத்யம் தத3ம்ருதம் தத்3வேத்3த4வ்யம் ஸோம்ய வித்3தி4  || 2 ||
 
யத்3 அர்சிமத் – எந்த சூரியகதிர் சைதன்ய ஸ்வரூபமாக இருக்கின்றதோ
யத்3 அணுப்3யஹ அணு    எது மிகமிக சிறியதைக் காட்டிலும் சிறியதாக இருக்கின்றதோ, பெரியதைக் காட்டிலும் பெரியது. இப்படி சொல்வது காரணம். அது உருவமற்றது, முழுமையானது, நிறைவானது, பூரணமானது, பெரியது, சிறியது என்பது நாம-ரூபத்தைக் குறிக்கிறது.
யஸ்மின் லோகாஹா      எந்த பிரம்மத்தை இந்த உலகம்
நிஹிதா                   சார்ந்திருக்கின்றதோ
லோகினஹ ச             உலகத்தில் வசிக்கின்ற ஜீவராசிகளும் அதையே சார்ந்து இருக்கிறது
தத் ஏதத் அக்ஷரம் பிரம்ம  அதுவேதான் அக்ஷரம் என்றழைக்கப்படுகின்ற பிரம்மன்.
ஸஹ பிராணஹ          அதுவே பிராணனாக இருக்கின்றது
தத்3 வாங் மனஹ         அது வாக்காகவும், மனதாகவும் இருக்கின்றது
தத்3 ஏதத் ஸத்யம்         அது என்றும் சத்யமாகவும் இருக்கின்றது
தத்3 அம்ருதம்             அதுவே நிலையானதாகவும், மரணமற்றதாகவும் இருக்கிறது
தத்3 வேத்4யம்             அந்த பிரம்மத்தை மனதால் துளைக்க வேண்டும். மனதால் பிரம்மத்தையே ஆழ்ந்து சிந்தித்து கொண்டிருக்க வேண்டும்.
ஸோம்ய                   பிரியமானவனே
வித்3தி4:                   பிரம்மத்தை அடைய வேண்டும் என்று மனதில் குறி வைக்க வேண்டும்.
 
ஸ்லோகம்-03
தனுர்க்3ருஹீத்வௌபனிஷத3ம் மஹாஸ்த்ரம்
        ஶரம் ஹ்யுபாஸானிஶிதம் ஸந்த4யீத |
ஆயம்ய தத3பா4வக3தேன சேதஸா லக்ஷயம்
        ததே3வாக்ஷரம் ஸோம்ய வித்3தி4 || 3 ||
 
வில் என்ற வேதாந்த சாஸ்திரத்தில் ஜீவாத்மா என்கின்ற அம்பை பொருத்தி பிரம்மா  என்கின்ற இலக்கை நோக்கி செலுத்த வேண்டும். இதனால் பரமாத்மாவை அடையலாம். வில்லில் அம்பை தொடுத்து காட்டும் இலக்கில் சரியாக அடிக்க வேண்டும் என்றால், அம்பு நேராக இருக்க வேண்டும், வளைந்து நெளிந்து இருக்க கூடாது, அம்பு முனை கூராக இருக்க வேண்டும், அம்பை வில்லில் சரியாக பொருத்த வேண்டும், இலக்கை நோக்கி அம்பானது இருக்க வேண்டும், வில்லின் நாணை இலக்கின் தூரத்திற்கேற்ப இழுத்து அம்பை விட வேண்டும்.
 
அம்பு – ஜீவாத்மாவை குறிப்பதால், ஜீவாத்மா மனத்தூய்மை அடைந்தவராக இருக்க வேண்டும். தர்மப்படி வாழ்ந்து கொண்டு இருப்பவராக இருக்க வேண்டும்.
அம்பின் கூர்மை – மன ஒருமுகப்பாட்டை குறிக்கப்படுகிறது. உபாஸனையினால் மனதை நன்கு தீட்டி கூர்மையாக இருக்க வேண்டும், ஒருமுகப்பட்டிருக்க வேண்டும்.
ஜீவர்களாகிய நாம் உபநிஷத்தை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு உபநிஷத்தின் மீது சிரத்தை இருக்க வேண்டும்.  இது ஞானத்தை கொடுக்கும் கருவி என்று உறுதியாக நம்ப வேண்டும். குருமுகமாக இதை படிக்க வேண்டும்.
முமுக்ஷுத்வம் – நம்முடைய இலக்கு பிரம்மத்தை மட்டும் அறிவதுதான். பிரம்மத்தை அடைவதாக இருக்க வேண்டும்.
 
வெளிவிஷயங்களிலிருந்து நம்முடைய புலன்களை உள்ளுக்குள் இழுத்துக் கொள்ள வேண்டும். இது வைராக்கியம் என்ற சாதனத்தின் மூலம் அடையப்படுகிறது.
இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது, எப்படி வில்லானது இலக்கை அழித்து, துளைத்து அதனோடு ஐக்கியமாவது போல, ஜீவாத்மாவுடன் பரமாத்வோடு இணைந்து விடும்.
 
ஸ்லோக விளக்கம்
தனுர் மஹா அஸ்திரம் – வில் என்ற மிக மேலான ஆயுதம்
ஔபநிஷதம் – உபநிஷத்தில் உள்ள ஓங்கார விசாரம்
ஷரம் நிஷிதம் – கூர்மையாக்கப்பட்ட அம்பு
உபாஸானிஶிதம் – உபாஸனையால் ஒருமுகப்படுத்தப்பட்ட, கூர்மையாக்கப்பட்ட மனதினால்
ஸந்த4யீத – அம்பை வில்லில் பொருத்த வேண்டும்
அயம்ய – பிறகு உள்ளே இழுத்துல், எல்லா இந்திரியங்களையும் உள்ளே இழுத்து
சேதஸா – அறிவினால்
தத3பா4வக4தேன – பிரம்மத்தையே இலக்காக கொண்ட மனதினால்
லக்ஷயம் – இலக்கான
தத்3 ஏவ அக்ஷரம் – ஏற்கனவே விளக்கப்பட்ட இலக்கான பிரம்மத்தை
வித்3தி4 – நோக்கி அடிக்க வேண்டும்.
 
ஸ்லோகம்-04
ப்ரணவோ த3னு: ஶரோ ஹ்யாத்மா ப்ரஹ்ம தல்லக்ஷயமுச்யதே |
அப்ரமத்தேன வேத்3த4வ்யம் ஶரவத்தன்மயோ ப4வேத் || 4 ||
 
ப்ரணவஹ தனு: - ஓங்காரமென்கின்ற வில்
ஶரஹ ஹி ஆத்மா – ஜீவாத்மா
ப்ரஹ்ம தத்3 லக்ஷ்யம் உச்யதே – பிரம்மனே அடைய வேண்டிய லட்சியம் என்று சொல்லப்படுகிறது
அப்ரமத்தேன – முழு கவனத்துடன்
வேத்3த4யம் – இலக்கை நோக்கி செலுத்த வேண்டும்
ஷரவத் – அம்பு இலக்கோடு ஒன்றிப் போவதுபோல
தன்மயோ ப4வேத் – லட்சியத்தோடு ஒன்றுபட வேண்டும். பிரம்ம ஸ்வரூபமாக இணைந்து விட வேண்டும்
அம்பை வில்லில் ஏற்றி இலக்கை நோக்கி சரியாக அடிப்பவன் ஒருவன் இருக்க வேண்டும். அந்த ஒருவன் குருவாகத்தான் இருக்க முடியும்
 
ஸ்லோகம்-05
யஸ்மின்த்3யௌ: ப்ருதி2வீ சாந்தரிக்ஷமோதம்
    மன: ஸஹ ப்ராணைஶ்ச ஸர்வை: |
தமேவைகம் ஜாரத2 ஆத்மானமன்யா
    வாசோ விமுஞ்சதா2ம்ருதஸ்யைஷ ஸேது: || 5 ||
 
யஸ்மின் – எந்தப் பிரம்மத்திடமிருந்து
த்3யௌ: ப்2ருதிவி – சொர்க்கலோகம், பூலோகம்
அந்தரிக்ஷம் – இரண்டுக்குமிடையே உள்ள லோகங்கள்
ஓதம் எதனிடத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது, எதனைச் சார்ந்திருக்கிறது
ஸர்வை: ஹி ப்ராணை ச – எல்லா பிராணன்களும் இந்திரியங்களும்
மனஹ – மனதும் சார்ந்திருக்கிறது
தம் – அதை (அந்த பிரம்மத்தை) மட்டும்
ஏவ ஏகம் ஜாரத2 ஆத்மானம் – ஆத்மாவாக ஒன்றானதாக தெரிந்து கொள்ளுங்கள், நானே ஆத்மா என்று தெரிந்து கொள்ளுங்கள்
அன்யஹ – அபர வித்யா ஸ்வரூபமான அனாத்மாவை, ஆத்மாவை விட்டு வேறாக இருக்கின்ற
வாசஹ – பேச்சுக்களை
விமுஞ்சத – விட்டு விடுங்கள்
அம்ருதஸ்ய ஏஷ: ஸேது: - இந்த மாதிரி இருந்து ஆத்மாவை அறிவதானல் மோட்சத்திற்கு பாலமாக அமையும்.
 
இதற்கு மௌனம் என்று பொருட்கொள்ளலாம். ஞானத்திலிருந்து அதில் நிஷ்டை அடைய வேண்டுமென்றால் நிதித்யாஸனத்தின் போது அனாத்மா விஷயங்களை முற்றிலுமாக தவிர்த்துவிட வேண்டும் சாஸ்திரம் பலன் கொடுக்க வேண்டும் என்றால் பிரம்மத்தைத் தவிர வேறெதையும் பேசுவதில்லை என்று உறுதியாக இருக்க வேண்டும்.:
  1. அனாத்மா விஷயங்களை பேசப்பேச அதுவே திடமாகி விடுகிறது
  2. இப்படி பேசுவதால் விருப்பு-வெறுப்பு, காம-க்ரோதம்-துவேஷம் உள்ளத்தில் உருவாகும்
  3. அஸங்கத்தைப் பற்றி சாஸ்திரம் பேசுகிறது. நாம் வைக்கும் சம்சார சம்பந்தமே துன்பத்தைக் கொடுக்கும்
இவைகளை கருத்தில் கொண்டு அனாத்மா விஷயங்களை பேசுவதில் விட்டுவிட்டு மௌனமாக இருக்க வேண்டும். பேசினால் ஆத்மா சம்பந்தமானவற்றை பேச வேண்டும்.
 
ஸ்லோகம்-06
அரா இவ ரத2னாபௌ4 ஸம்ஹதா யத்ர நாட்3ய:
    ஸ ஏஷோSந்தஶ்சரதே ப3ஹுதா4 ஜாயமான: |
ஓமித்யேவம் த்4யாயத2 ஆத்மானம் ஸ்வஸ்தி
    வ: பாராய தமஸ: பரஸ்தாத் || 6 ||
 
இந்த மந்திரம் நிதித்யாஸனத்தைப் பற்றி பேசுகிறது
ஸஹ ஏஷஹ அந்தரஹ சரதே – அந்த பிரம்மனே ஆத்மாவாக மனதிற்குள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது
ப3ஹுதா4 ஜாயமானஹ இவ – விதவிதமாக தோன்றுவது போல இருக்கிறது.
 
ஜடமான மனதினால் விதவிதமான அறிவை அடைகின்றோம். பல எண்ணங்கள், உணர்ச்சிகள் உண்டாகின்றன. இதற்கு காரணம் ஆத்மாவின் பிரதிபிம்பத்தால் உண்டாகின்றது. இந்த ஆத்மாவே மனதில் பிரதிபலித்து விதவிதமாக தோன்றுவது போல காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது எண்ணங்களில் வருகின்ற மாற்றங்கள், அதனால் வருகின்ற உணர்ச்சிகள் இவைகளெல்லாம் வெறும் எண்ணங்கள். ஆனால் நான் இவைகளுக்கு அப்பாற்பட்டவன் என்று புரிந்து கொள்ள வேண்டும்.  மனதுக்கு கோளகம் இதயம், அதில் விதவிதமான எண்ணங்கள் தோன்றுகிறது. அறியாமையில் இருக்கும் போது அவைகள் நான் என்று எண்ணுகிறோம்.  அறியாமை நீங்கிய உடன் அவைகள் நானல்ல என்று உணர்வோம்.
 
யத்ரஹ – எந்த இதயத்திலிருந்து
நாட்3ய: - நாடிகள்
ஸம்ஹதா – சேர்க்கப்பட்டுள்ளது
 
ஒரு சக்கரத்தில் இருக்கும் ஆரக்கால்கள் அதன் மையப்பகுதியில் இணைக்கப்பட்டிருக்கும். அதேபோல ஸ்தூல சரீரத்தில் உள்ள நாடிகள் அனைத்தும் இதயமான மையப்பகுதியோடு இணைக்கப்பட்டிருக்கிறது.  மனதில் எழுகின்ற எண்ணங்கள் நானல்ல என்று நன்கு புரிந்து கொள்ள வேண்டும்
 
ஓம் இதம் ஏவம் – ஓங்காரத்தின் துணைக் கோண்டு
ஆத்மானாம் த்யாயத் – ஆத்மாவே நான்தான் என்று தியானம் செய்ய வேண்டும்.
வஹ ஸ்வஸ்தி – உங்களுக்கு மங்கலம் இருக்கட்டும். ஆசிர்வாதம் செய்கின்றேன்.
தமஸஹ ப்ரஸ்தாத் ப்ராய -  அறியாமைக்கு அப்பாலுள்ள கரையை கடக்க எங்களுடைய ஆசிகள் இருக்கட்டும்.  எல்லா தடைகளை எல்லாம் நம்மிடமிருந்து வருவதால் அவைகளை தாண்டி வெற்றிபெற வேண்டும்.
 
ஸ்லோகம்-07
ய: ஸர்வக்ஞ: ஸர்வவித்3யஸ்யைஷ மஹிமா பு4வி |
தி3வ்யே ப்ரஹ்மபுரே ஹ்யேஷ வ்யோம்ன்யாத்மா ப்ரதிஷ்டித: ||
 
யஹ – எந்த பரமாத்மா
ஸர்வக்ஞ – பொதுவாக எல்லாம் அறிந்தவர்
ஸர்வவித்3 -  விசேஷமாக எல்லாம் அறிந்தவர்
 
இரண்டு வார்த்தைகளும் ஒரே அர்த்தம் கொடுத்தாலும் அவற்றுக்குள் விசேஷமான வேறுபாடும் உண்டு. பானைகள் பொறுத்தமட்டில் காரணத்தை அறிவது பொது அறிவு. முதல் வகை ஸர்வக்ஞன், இரண்டாவது வகை ஸர்வவித் ஆகும்.  ஸர்வக்ஞன் என்பது காரண ஞானம், ஸர்வவித் என்பது காரியத்திலுள்ள அறிவு.  இங்கே ப்ரா-வித்யா, அபராவித்யா. அபராவித்யாவின் அடிப்படையில் ஸர்வவித்தாக இருக்கிறார். ஈஸ்வரனே எல்லா ஜீவர்களின் மனதாகவும் இருப்பதால் அவர் ஸர்வவித். ஸர்வக்ஞர் நிமித்தக்காரணம், ஸர்வவித் என்பது உபாதான காரணம்.
 
யஸ்ய பு4வி – யாருக்கு இந்த உலகத்தில்
ஏஷ மஹிமா – இந்த பெருமையை உடையவராக இருப்பது ஈஸ்வரனே
இப்படி புரிந்து கொள்வதால் நாம் நம்மிடம் இருக்கும் பெருமையை குறித்து அகங்காரம் கொள்ளமாட்டோம். ஏனென்றால் இவைகள் எல்லாம் ஈஸ்வரனுடையதே.
திவ்யே ப்ரஹ்மபுரே – நம்முடைய ஹ்ருதயத்தில் உள்ள
வ்யோம்ன்ய – மனதிற்குள்
தீ ஏஹ ஆத்மா ப்ரதிஷ்டதஹ – இந்த ஆத்மா அமர்ந்திருக்கிறார், வெளிப்படுகிறார்
இதிலிருந்து நாம் அறிவது கொள்வது மனதிற்குள் ஈஸ்வரனை, ஆத்மாவை நானாக புரிந்து கொள்ள வேண்டும்.
 
ஸ்லோகம்-08
மனோமய: ப்ராணஶரீரனேதா ப்ரதிஷ்டிதோSத்ரே ஹ்ருத3யம் ஸன்னிதா4ய |
தத்3விக்ஞானேன பரிபஶ்யந்தி தீ4ரா ஆனந்தரூபமம்ருதம் யத்3விபா4த || 8 ||
 
மனோமய: - மனதிலுள்ள எண்ணங்களினால் அறியப்படுகின்ற வஸ்து பிரம்மத்திற்கு இந்த பெயர்
ப்ராண ஶரீர நேதா – சூட்சும சரீரத்தை ஸ்தூல சரீரத்தை அழைத்துச் செல்வது இந்த ஆத்மா
பிராண சரீரம் – சூட்சும சரீரம், இது ஜடமானது. ஆனால் அதை செயல்படுத்துவது ஆத்மா
அன்னே ஹ்ருதயம் ஸன்னிதா4ய – இந்த ஸ்தூல சரீரத்திலுள்ள சூட்சும சரீரத்தில்
ப்ரதிஷ்டிதஹ – வெளிப்படுகிறார்
தீரர் பரிபஶ்யந்தி – அதிகாரித்துவத்தை உடையவர்கள், இந்த தத்துவத்தை முழுமையாக தெளிவாக அறிகிறார்கள்
தத் அக்ஞானேன – ஆத்ம தத்துவத்தை பூரணமாக அறிந்ததினால், அறிவினால், குருமுகமாக சாஸ்திரத்தை உபதேசத்தினால் அடைந்த அறிவினால், சம, தம ஆகியவைகளை முதலிய சாதனங்களுடன் கூடிய மனதினால்
ஆனந்த ரூபம் – பூரண ஸ்வரூபம்
அம்ருதம் – மரணமற்றது என்று
விபா4தி – ஸ்வயம் பிரகாசமாக இருக்கிறது. நாம, ரூபங்களுடன் விதவிதமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது
 
ஸ்லோகம்-09
பி4த்3யதே ஹ்ருதயக்3ரந்தி2ஶ்சி2த்3யந்தே ஸர்வஸம்ஶயா: |
க்ஷீயந்தே சாஸ்ய கர்மாணி தஸ்மின் த்3ருஷ்டே பராவரே || 9 ||
 
இதில் மூன்று விதத்தில் பலன்கள் கூறப்பட்டுள்ளது. அவைகள்
  1. பி4த்3யதே ஹ்ருதயக்3ரந்தி -  ஹிருதயத்திலுள்ள முடிச்சுக்கள் (அறியாமை, ஆசைகள்) வெட்டப்படுகின்றன.  ஆத்மாவையும், அனாத்மாவையும் ஒன்றாக காட்சியளிக்க வைப்பது அறியாமை என்ற முடிச்சு வெட்டப்படுகிறது.. மனதில் ஓடும் ஆசைகளெல்லாம் நீங்கிவிடும். ஆசையிருக்கும் வரை மனநிறைவு வராது. வரும் ஆசையை நீக்க வேண்டும்தான் என்று எல்லோரும் முயற்சிக்கிறோம்.  எனவே அதை அடைந்து ஆசையை தற்காலிமாக நீக்குகிறோம். எனவே ஆசைகளை அனுபவிக்காமலே நம்மிடமிருந்து சென்று விடும். பொருளையும் மனதையும் ஒன்றாகக் கட்டுவதுதான் ஆசை.
  2. புத்தியிலே சந்தேகங்கள் இருந்து கொண்டிருக்கும். இந்த ஞானத்தினால் சந்தேகங்கள் எல்லாம் நீங்கி புத்தி அமைதியடையும், நிறைவை அடையும்.
  3. ஞானம் அடைந்து அதில் நிலைபெற்ற ஜீவன் முக்தன், உயிரோடிருக்கும்போதே அவனுடைய சஞ்சித கர்மபலன்கள், ஆகாமி கர்மபலன்கள் எல்லாம் அழிந்துவிடும். இறந்த பிறகு கர்மபலன்கள் அழிந்துவிட்டதால் வேறு பிறவி இருப்பதில்லை, அதுவே விதேஹ முக்தி
தஸ்மின் பராவரே – அந்த பிரம்மத்தை
த்ருஷ்டே – அறிவதன் மூலமாக
பராவரே – பர – நிர்குண பிரம்மன், அவரா – சகுண பிரம்மன்
சகுண – மாயையுடன் இருக்கும் பிரம்மன்
நிர்குணம் – மாயையற்ற பிரம்மன்
பி4த்யதே ஹ்ருதய க்ரந்திஹி – இருதயத்திலுள்ள முடிச்சுகள் அவிழ்ந்து விடுகிறது
சித்3யந்தே ஸர்வஸம்ஹயஹ – புத்தியிலுள்ள சந்தேகங்களும் அழிக்கப்படுகிறது, நீக்கப்படுகிறது
க்ஷீயந்தே ச அஸ்ய கர்மாணி – அவன் சேர்த்து வைத்த கர்ம பலன்கள் அனைத்தும் அழிந்து விடும்.
 
ஸ்லோகம்-10
ஹிரண்மயே பரே கோஶே விரஜம் ப்3ரஹ்ம நிஷ்கலம் |
தச்சு2ப்4ரம் ஜ்யோதிஷாம் ஜ்யோதிஸ்தத்3யதா3த்மவிதோ3 விது3: ||
 
ஹிரண்மயே – தங்கத்தைப்போல பிரகாசிக்கின்ற விக்ஞானமயமான புத்தியை
பரே கோஶே – மேலான மறைப்பானது
விரஜம் – எதனாலும் கறைப்படுத்த முடியாதது, பாதிக்கப்படாதது, மனதில், புத்தியில் உள்ள அழுக்குகளாலும் பாதிக்கப்படாதது
நிஷ்கலம் – அவயவங்களற்றது
தத்3 சு2ப்4ரம் – அது தூய்மையானது
ஜ்யோதிஷாம் ஜ்யோதி – ஒளிகளுக்கெல்லாம் ஒளியாகவும், பிரமாணங்கள் உடையவர்களுக்கு பிரமாணமாக இருக்கிறது
யத் – எது எப்படியிருக்கிறதோ
தத்3 ஆத்மவித3ஹ – அதை ஆத்மாவாக அறிந்தவர்கள்
விது3:: - அறிகிறார்கள்
இதிலிருந்து ஜீவ-பிரஹ்ம ஐக்கியத்தை புரிந்து கொள்ளலாம்
 
ஸ்லோகம்-11
ந தத்ர ஸூர்யோ பா4தி ந சந்த்3ரதாரகம்
    நேமா வித்3யுதோ பாந்தி குதோSயமக்3னி: |
தமேவ பா4ந்தமனுபா4தி தஸ்ய
   பா4ஸா ஸர்வமித3ம் விபா4தி || 11 ||
 
தத்ர -  ஆத்ம ஸ்வரூபமான பிரம்மத்தை
சூர்யஹ ந பா4தி – சூரியனாலும் அதை பிரகாசிக்க முடியாது, விளக்க முடியாது. இங்கே சூரியன் என்பதை ஞானத்தைக் கொடுக்கின்ற இந்திரியங்களாக எடுத்துக் கொள்ள வேண்டும். 
ந சந்த்3ர தாரகம் – சந்திரனும், நட்சத்திரங்களும்
இமாஹ வித்யுதஹ – மின்னல்களும், வெளிச்சத்தை தருகின்ற விளக்குகளாலும்
குதஹ அயம் அக்னி பாந்தி – எப்படி இந்த அக்னியை விளக்க முடியாது
இப்படிபட்ட பிரமாணங்களால் ஆத்மாவை விளக்க முடியாது.
தஸ்ய பா4ஸா – இத்தகைய ஜோதி
ஸர்வம் பா4தி – எல்லாவற்றையும் விளக்குகிறது
தம் பாந்தம் அனு பா4தி – ஆத்ம ஸ்வரூபம், சுயபிரகாசமாக இருப்பது தொடர்ந்து அனைத்தும் விளக்கப்படுகிறது
இதம் ஸர்வம் விபா4தி – இவ்வாறு எல்லாமும் விளக்கப்படுகிறது
எந்தவொன்று பிரமாணங்களை விளக்குகிறதோ அதை எந்த பிரமாணத்தாலும் விளக்க முடியாது
 
ஸ்லோகம்-12
ப்ரஹ்மைவேத3மம்ருதம் புரஸ்தாத்3ப்ரஹ்ம
   பஶ்சாத்ப்ரஹ்ம தக்ஷிணதஶ்சோத்தரேண |
அத4ஶ்சோர்த்4வம் ச ப்ரஸ்ருதம் ப்ரஹ்மைவேத3ம்
   விஶ்வமித3ம் வரிஷ்டம் || 12 ||
 
இந்த உலகம் வெறும் தோற்றம் என்று விளக்கப்படுகிறது. மித்யா வெறும் நாம-ரூபம் என்று உரைக்கிறது.  மாயையின் இருத்தல் அடிப்படையில் இந்த உலகத்தை ஈஸ்வரனின் உருவாக்கியது என்றும் நாம-ரூபம் அடிப்படையில் மித்யா என்றும் புரிந்து கொள்ள வேண்டும்.
 
உபநிஷத் எப்படி இந்த உலகத்தை நீக்குகிறது. பிரஹ்ம இதம் விஶ்வம் என்பது பிரம்மன்தான் இந்த உலகம் என்று பொருள் கொள்ளும் போது ஐக்கியத்தை சொல்லவில்லை.  இங்கே நிராகிக்கிறது.  உதாரணமாக மங்கலமான வெளிச்சத்தில் வழிகாட்டி தூணை திருடன் என்று ஒருவன் நினைத்துக் கொள்கிறான். வேறொருவர் அந்த வழிக்காட்டி மரம் மனிதனல்ல என்று சொன்னவுடன் அவனுக்கு திருடன் நீங்கி தூண் தெரிகிறது. அதேப்போல அதை ஜகத் என்று பார்த்துக் கொண்டிருக்கிறோமோ. அது வெறும் நாம-ரூபம் என்றும் அதுவும் பிரம்மன் என்று  உபநிஷத் தெரிவிக்கிறது.
 
ப்3ரஹ்மை ஏவ அம்ருதம் – எப்பொழுதும் இருக்கின்ற பிரம்மனே
இதம் புரஸ்தாதி – நமக்கு முன்னாடி தோன்றுவது அதுவேதான்
பஶ்சாத் – பின்னாடி இருப்பதும் அதுவே
தக்ஷிண, உதஶ்சேத்தரண – வடக்கு, தெற்கு என்ற எல்லா இடங்களிலும் பிரம்மன்தான் இருக்கிறது. வேறெதும் காட்சியளிக்கவில்லை
அதஹ ஊர்த்4வம் ச ப்ரஸ்ருதம் – மேலும், கீழும் அதுவேதான் இருக்கிறது
வரிஷ்டம் பிரஹ்ம ஏவ இதம் விஶ்வம் – சத்ய ஸ்வரூபமான பிரம்மன்தான் இந்த உலகமாக காட்சியளிக்கின்றது
----oo000oo----

A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...