அத்தியாயம்-13
க்ஷேத்ர-க்ஷேதரக்ஞ
விபாக யோகம்
ஸ்வாமி
குருபரானந்தாவின் உபதேச விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது-02-02-2022
முகவுரை:
கர்மயோகம்:
அத்தியாயம்-2, அத்தியாயம்-3 இவற்றில் கர்மயோகம் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இரண்டு முக்கியமான லட்சணங்களான யோகம், கௌஶலம்(திறமை)
இதற்கு கூறப்பட்டு உள்ளது. கர்மத்தை நன்கு
கையாளுவதுதான் கர்மயோகம், கர்மத்தின் சுபாவம் நம்மை பந்தப்படுத்துவது,
விருப்பு-வெறுப்புக்களையும், பாவ-புண்ணியங்களையும் கொடுப்பது. நம்மை பந்தப்படுத்தாதவாறு செயல்களை செய்தலே
கர்மயோகம். இது மனத்தூய்மையை கொடுக்கிறது.
யோகம் என்பது எல்லாவற்றிலும் சமமாக இருத்தல். மகிழ்ச்சியுடனோ, வெறுப்பாகவோ செயல்களை செய்யக்
கூடாது. நாம் கடமைகள் இறைவனுக்காக செய்கிறோம் என்ற புத்தியுடன் செய்ய
வேண்டும். மனப்பக்குவமில்லாமல் செயல்களை
துறக்கக் கூடாது. வெளிப்பார்வைக்கு அதை
செய்யாமல் இருப்பது போல் தெரிந்தாலும் மனதில் அதை செய்து கொண்டிருப்பான். இவனை
மித்யாசரன் என்று பகவான் அழைக்கின்றார்.
நம்மை நாமே உயர்த்திக் கொள்ளும்படி பகவான்
அறிவுறுத்துகின்றார். நம் உயர்வுக்கும்,
தாழ்வுக்கும் நாமே காரணம். எனவே நம்முடைய
சுயமுயற்சி நிச்சயம் தேவை. ஆரம்பத்தில் நம் முயற்சியை தொடர மற்றவர்கள் ஆதரவு
தேவை. ஆனால் நிதித்யாசனம் செய்கின்ற
நிலையில் நாம்தான் நமக்கு உதவி செய்துக் கொள்ள வேண்டும்.
நான் என்ற சொல்லின் பொருளை
கூறியிருக்கிறார். ஜீவனின் உண்மை
ஸ்வரூபத்தை விளக்கியுள்ளார். ஜீவ விசாரம் செய்யப்படுகிறது. ஜீவன் முக்கியமாக அனுஷ்டானம் செய்ய வேண்டியதையும்
கூறியுள்ளார்.
பக்தியோகம் (அ) உபாஸனம்
கர்மயோகம் உடலால் செய்யப்படுவது, பக்தி,
உபாஸனம், தியானம் இவைகள் மனதினால் செய்யப்படுபவைகள். இதற்கு முக்கியத்துவத்தை கொடுத்து
விவரித்துள்ளார். பகவானின் நாமத்தை
எப்பொழுதும் உச்சரித்தல், தியானத்தில் பகவானின் நாமத்தை மனதுக்குள் உச்சரித்துக்
கொண்டிருத்தல் இவைகளும் ஒருவகையான தியானமாகும். யார் பகவானை சரணடைகிறார்களோ
அவர்களால்தான் கடப்பதற்கு மிகவும் கடினமான மாயையை கடப்பது சாத்தியமாகும்.
இந்த இரண்டு யோகமும் சேர்ந்து செய்யப்பட வேண்டியது. யார் முழுமையாக
என்னிடத்தில் சரணடைகிறார்களோ அவர்களுடைய யோகக்ஷேமத்தை நான் பார்த்து கொள்வேன்
என்று பகவான் உறுதி கூறுகிறார்.
ஈஸ்வரனுடைய ஸ்வரூபத்தை விளக்கியுள்ளார்.
ஞானயோகம்
ஞானயோகம் என்பது பரம்பொருளை, பிரம்மத்தை
புரிந்து கொள்ள நாம் கடைப்பிடிக்க
வேண்டிய நேரிடையான சாதனம். இதுவே சிரவணம், மனனம், நிதித்யாசனம் என்று
மூன்று படிகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றது.
மற்ற இரண்டு யோகங்கள் இந்த யோகத்தை கடைப்பிடிப்பதற்கு நம்மை
தகுதிப்படுத்துகிறது.
சிரவணம்: கேட்டல் என்பது பொதுவான அர்த்தம். விசேஷமான பொருள் பிரம்மத்தை குருமுகமாக உபநிஷத்தை சரியாக கேட்டல் என்பதாகும்..
அது புரியும் வரை கேட்டுக்கொண்டிருக்க வேண்டும்.
மனனம் சிந்தித்து தெளிதல்
என்பது இதன் பொருள். சிரவணத்தை தொடர்ந்து
கடைப்பிடிக்க வேண்டிய சாதனம் இது. இது அறிவுக்கும், நமது அனுபவத்திற்கும் இடையே
இருக்கும் வேறுபாட்டை நீக்கி சரியாக புரிந்து கொள்ள உதவுகின்ற சாதனமாக இருக்கின்றது. இதனால் நானே பிரம்மன், பூரணமானவன் என்பதை சந்தேகமில்லாமல் அறிந்து கொள்வோம்.
நிதித்யாசனம் அடைந்த அறிவில் நிலைத்திருத்தல், உறுதியாக இருத்தல்
இதன் பயனாகும். நம்முடைய ஸம்ஸ்காரங்கள்
நம்மை இந்த அறிவில் நிற்க முடியாகல் செய்து விடும். இந்த ஞானத்தில் நிலைபெற கடைப்பிடிக்கப்படுகின்ற சாதனமே
இதுவாகும்.
நாம் அடைய வேண்டிய நல்ல பண்புகளை
கூறியிருக்கிறார். நீக்கப்பட வேண்டிய தீய பண்புகளையும் கூறியுள்ளார். என்னென்ன மாற்றங்கள் நம்மிடத்தே நடக்க
வேண்டும், அதற்கு என்னென்ன பயிற்சிகள் செய்ய வேண்டும் என்பதையும் விளக்கியுள்ளார்.. ஜீவ-ஈஸ்வர சம்பந்தத்தையும்
விளக்கியுள்ளார். இரண்டு விதமான
சம்பந்தங்களான 1. ஈஸ்வரன் படைப்பவர் 2.ஜீவன் படைக்கப்பட்டவன் இவைகளை நன்றாக விளக்கி, இவையிரண்டும் ஒன்றுதான் என்று புரிய வைத்துள்ளார்.
முழு பகவத்கீதையின் சாராம்சம்தான் இதுவரை
கூறப்பட்டது. 12வது அத்தியாயத்தில்
பராபக்தனின் லட்சணம் கூறப்பட்டது. இப்படிபட்ட மனம் எந்த அறிவினால் அடைந்தார்களோ
அந்த அறிவை இந்த அத்தியாயத்தில் பகவான் விவரித்துள்ளார்.
अर्जुन उवाच ।
प्रकृतिं पुरुषं चैव क्षेत्रं क्षेत्रज्ञमेव च ।
एतद्वेदितुमिच्चामि ज्ञानं ज्ञेयं च केशव ||
அர்ஜுனன் கேட்கிறான்,
பகவானே! ப்ரக்ருதி, புருஷன், க்ஷேத்ரம்,
க்ஷேத்ரக்ஞன், ஞானம், ஞேயம் ஆகிய இந்த ஆறு தத்துவங்களை நான் தெரிந்து கொள்ள
விரும்புகிறேன்.
ப்ரக்ருதியும், க்ஷேத்ரம் இவையிரண்டும்
ஜடத்துவத்தை, அனாத்மாவை, உலகத்தை குறிக்கும் சொற்கள். புருஷன், க்ஷேத்ரக்ஞன்,
ஞேயம் இவைகள் அறிவு ஸ்வரூபத்தை குறிக்கின்றது. ஞானம் என்ற சொல்லுக்கு நற்பண்புகள்
என்று பகவான் கூறுகிறார்
श्रीभगवानुवाच ।
इदं शरीरं कौन्तेय क्षेत्रमित्यभिधीयते ।
एतद्यो वेत्ति तं प्रहुः क्षेत्रज्ञ इति तद्विदः ॥ 1 ॥
ஹே அர்ஜுனா!
இந்த உடல்தான் க்ஷேத்ரம் என்றும். யார் இந்த உடலை அறிகிறாரோ அவரையே க்ஷேத்ரக்ஞன்
என்றும் உண்மையை அறிந்தவர்கள் அழைக்கிறார்கள்.
ஜீவ விசாரம்
வேதாந்தம் நான் என்ற சொல்லுக்கு நாம் புரிந்து
கொண்டிருக்கும் பொருளில் உள்ள தவறான கருத்தை நீக்கி சரியான அர்த்தத்தை
உபதேசிக்கிறது. சரியான பொருள்
ஆத்மா என்றும், தவறான பொருள் அனாத்மா என்றும் விளக்குகிறது. இதில் ஆத்மா என்ற சொல்லுக்கு க்ஷேத்ரக்ஞன்
என்றும் அனாத்மா என்ற சொல்லுக்கு க்ஷேத்ரம் என்றும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. ஜீவர்களின்
உடலை பகவான் க்ஷேத்ரம் என்று அழைக்கிறார்.
இந்த உடல் க்ஷேத்ரம் என்று
அழைக்கப்படுகின்றது (அபிதீ4யதே). இங்கு
உடல் என்பது மூன்று உடல்களையும், மனதையும் சேர்த்து புரிந்து கொள்ள வேண்டும். நாம் இந்த உடலை நான் என்ற சொல்லுக்கு பொருளாக
குறிப்பிடுகின்றோம். சரீரத்தின் மீது நான் என்ற அபிமானம் வைப்பது அகங்காரம் என்று
கூறுவர். க்ஷேத்ரம் என்ற சொல்லுக்கு நான்கு அர்த்தங்கள் உள்ளன. அவைகள்
- தேய்வது – எவைகள் தேய்வடைந்து போகுமோ,
- அழிந்து விடுதல்,
- அழிவிலிருந்து நம்மை காப்பாற்றுதல் சரீரத்தின் துணைக் கொண்டுதான் மோட்சத்தை அடைவதினால் இவ்வாறு கூறப்படுகிறது,
- விளையும் நிலம் – இந்த நிலத்தில் விதைக்கும் விதைகள் பாவ புண்ணியங்கள், நிலமானது சரீரம், அதனால் வளரும் பயிரானது சுக-துக்கங்கள்.
க்ஷேத்ரக்ஞன்
என்பது அறிபவனை குறிக்கின்றது. சரீரத்தை
அறிபவன், அறிவு ஸ்வரூபம்.
எண்
|
அனாத்மா – க்ஷேத்ரம்
|
ஆத்மா-க்ஷேத்ரக்ஞன்
|
1
|
உடலும், மனமும் சேர்ந்தது
|
அறிவு
ஸ்வரூபமாக உடலுக்குள் இருப்பது
|
2
|
த்ருஷ்யம்
–
அறியப்படுவது
|
த்3ருக்
- அறிபவன்
|
3
|
ஜடம்
–
அறியப்படுவதெல்லாம்
ஜடம்
|
சேதனம்
- சுயபிரகாசம்
|
4
|
பலவாக
இருக்கின்றது
|
ஒன்றுமட்டும்தான்
இருக்கிறது
|
5
|
சவிகாரம், மாற்றத்திற்குட்பட்டது
|
நிர்விகாரம்
–
என்றும்
மாறாமல் இருப்பது
|
6
|
அநித்யம்-
நிலையற்றது
|
நித்யம்
–
நிலையானது, அழிவற்றது
|
7
|
சகுணம்
–
மூன்று
குணங்களுடன்
(சத்துவ, ரஜஸ், தமஸ்) கூடியது
|
நிர்குணம்
–
குணங்களற்றது
|
8
|
மித்யா
–
அனுபவத்திற்கு
இருப்பது உண்மையில் இருக்காது.
(உ-ம்) கானல் நீர், கயிற்றில் தோன்றும் பாம்பு
|
சத்யம்
|
தோன்றிக் கொண்டிருக்கின்ற எதையெல்லாம்
நீக்குகின்றோமோ அவையெல்லாம் மித்யா. இப்படிபட்ட ஆத்மாவையும், அனாத்மாவையும்
கலந்து புரிந்திருக்கின்றோம். இந்த நிலையில் அனாத்மாவின் தர்மங்கள்தான் தெரிந்து
கொண்டிருக்கின்றது. ஆத்மாவின் தர்மங்கள் மாயையினால் மறைக்கப்பட்டிருக்கின்றது
ஆத்மா நம் உடலையும், மனதையும்,
புத்தியையும் அறிகின்றது. நாம் அடைந்திருக்கும் எல்லா அறிவையும் அறிகின்றது
அறியப்படுவதெல்லாம்
கட்டாயமாக ஜடமாகத்தான் இருக்க வேண்டும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. ஜீவனின் உடலானது பஞ்சபூதங்களாலானது. ஜடமான பஞ்ச பூதங்களால் உருவானது ஜடமாகத்தான்
இருக்க வேண்டும். மனமும், புத்தியும்
சூட்சுமமான பஞ்சபூதங்களால் உருவானதாக இருப்பதால் அவைகளும் ஜடங்கள்தான், ஆனால் அவைகள் சூட்சுமமான ஜடங்களாக இருக்கிறது. ஆத்மாவானது தன்னைத்தானே விளக்கிக்
கொண்டிருப்பது. நீங்கள் இருக்கிறீர்களா
என்று யாராவது கேட்டால் யாருடைய உதவியில்லாமலும், எந்தவிதமான பிரமாணமும் இல்லாமல்
“நான் இருக்கிறேன்” என்று உறுதியாக சொல்கின்றோம்.
क्षेत्रज्ञं चापि मां विद्धि सर्वक्षेत्रेषु भारत ।
क्षेत्रेक्षेत्रज्ञयोर्ज्ञानं यत्तज्ज्ञानं मतं मम ॥ 2 ॥
இதில் ஜீவ-ஈஸ்வர ஐக்கியம் கூறப்படுகிறது. இது ஒரு மகாவாக்கியம். இந்த ஞானத்தின்
பெருமையையும் கூறப்படுகிறது.
அர்ஜுனா! எல்லா ஜீவராசிகளுடைய உடலுக்குள்
இருந்து கொண்டு அவைகளை அறிந்து கொண்டிருக்கின்ற ஆத்மாவை நானே என்று அறிவாயாக. என்னை மட்டும் க்ஷேத்ரக்ஞனாக, பிரம்மனாக
அறிவாயாக. அதாவது ஜட பிரபஞ்சமும் நானே, க்ஷேத்ரக்ஞனும் நானே என்று அறிந்து
கொள். சரீரத்தை அறிபவனான க்ஷேத்ரக்ஞனாக
என்னை புரிந்து கொள்வாயாக. எந்தவொரு அறிவானது உனக்கு உபதேசிக்கப்பட்டதோ அது
க்ஷேத்ர, க்ஷேத்ரக்ஞனை பற்றியதாகும். அதுதான் உண்மையான ஞானம். இது என்னுடைய
கருத்து.
இவ்வாறு பகவான் கூறுவது பிரம்ம ஞானத்தின்
பெருமையைக் காட்டுகின்றது. இந்த ஒரு அறிவுதான் ஒருவனுக்கு முழுமையான மனநிறைவை
கொடுக்கும்.
ஈஸ்வர தத்துவ விசாரம்
ஈஸ்வரனையும் இரண்டாக பிரித்து பார்க்க
வேண்டும். சாஸ்திரம் ஈஸ்வரனுக்கு
கொடுக்கின்ற லட்சணம் ஜகத் காரணம், நாம்
பார்த்து அனுபவிக்கின்ற அனைத்துக்கும், படைக்கப்பட்டுள்ள அனைத்துக்கும் காரணமாக
இருப்பவர். பகவான் 7வது அத்தியாயத்தில்
தன்னையே அபரா ப்ரக்ருதி, பரா ப்ரக்ருதி என்று இரண்டாக பிரித்து அழைத்துள்ளார்.
எண்
|
அபரா
ப்ரக்ருதி
|
பரா ப்ரக்ருதி
|
1
|
மாயை
|
பிரம்மன்
|
2
|
ஜகத் காரணம்
|
ஸத்யம், ஞானம், அனந்தம்
|
3
|
பிரபஞ்ச திரயம் ஸ்வரூபம்- மூவுலகமாக இருந்து
கொண்டிருப்பது. (காரண, சூட்சும, ஸ்தூலம்), மூன்று சரீரங்களாகவும் இருக்கின்றது
|
ப்ரபஞ்சோபஷமம் – மூவுலகங்களற்றவன்.
|
4
|
கர்மபல தா4தா – கர்மபலன்களை கொடுப்பவர்
|
அகர்தா – செயல்களெதுவுமற்றவர்
|
5
|
ஸர்வக்ஞன் – அனைத்தையும் அறிபவர்
|
ஞான ஸ்வரூபமாகவே இருப்பவர். அறியும் தன்மையுடன் இருப்பவர்
|
6
|
சகுண ஸ்வரூபம். முக்குணங்களுடன் கூடியவர்.
சத்துவ, ரஜஸ், தமஸ் இவைகளை தன் வசத்துக்குள் வைத்திருக்கிறார்
|
நிர்குண ஸ்வரூபம்
|
7
|
மித்யா
|
ஸத்யம்
|
ஜீவ-ஈஸ்வர சம்பந்தம் விசாரம்
இரண்டு விதமான சம்பந்தம் சொல்லப்படுகின்றது.
அவைகள்
1. காரண-காரிய சம்பந்தம்,
2. ஐக்கியம் (இரண்டும் ஒன்றுதான்)
காரண-காரிய சம்பந்தம் அபரா ப்ரக்ருதியை
குறிக்கின்றது. அனாத்மா பிரிவுகளை மட்டும்
ஒப்பிட்டு பார்ப்பதினால் இந்த சம்பந்தத்தை புரிந்து கொள்ளலாம். ஐக்கியம் என்று சொல்லும் போது ஆத்மாவையும், பரா
ப்ரக்ருதியையும் ஒப்பிடப்படுகின்றது.
பிரம்மனே ஆத்மாவாக இருக்கிறது.
இவையிரண்டில் எந்த சம்பந்தத்தை
எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கேள்வி எழும்போது முதல் சம்பந்தமானது
பொய்யான அம்சத்தின் அடிப்படையில் இருக்கின்றது. இரண்டாவது சம்பந்தம் உண்மையான
அம்சத்தின் பார்வையில் இருப்பதால் இதைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
(உ-ம்) கடலுக்கும் அலைகளுக்கும் உள்ள சம்பந்தம்
காரண-காரிய சம்பந்தம். இதில்
காரியம் அலைகள் இது நாம ரூபத்துடன் கூடிய
தண்ணீர், காரணமான கடல் தண்ணீர் மட்டும் இருக்கின்றது. இதையிரண்டு
ஐக்கியப்படுத்தும்போது தண்ணீர் என்ற ஒன்றை மட்டும் பார்க்க வேண்டும்.
பூ.பக்ஷி-1 ஜீவனும்
ஈஸ்வரனும் ஒன்று என்று சொன்னால் ஈஸ்வரனும் சம்சாரியாகி விடுவார். இதனால் அவரை ஏன்
அடைய வேண்டும் என்ற கேள்வி எழுகின்றது.
பூ.பக்ஷி-2 ஜீவர்கள்
சம்சாரமற்றவர்களாக இருக்க வேண்டும். ஆனால் இது நம் அனுபவத்தில் சம்சாரியாக
இருக்கும் தன்மைக்கு முரணாக இருக்கின்றது. ஒரு பொருள் ஒரு தன்மையுடன்தான் இருக்க
முடியும். ஆனால் இரண்டு விருத்த சுபாவம்,
ஒன்றுக்கொன்று முரணான தன்மையுடன் ஒரே காலத்தில் இருக்க முடியாது. அதேபோல ஜீவன் சம்சாரியாகவும், ஈஸ்வரனாகவும்
இருக்க முடியாது
பதில் அறியாமையினால்
ஒரு பொருள் ஒரே காலத்தில் இரண்டு தன்மைகளாக இருப்பது போல தோன்றலாம். ஆத்ம அறிவினால் தன் சுயத்தன்மையான பிரம்மனாக
இருப்பான். உதாரணமாக கடலும், அலைகளும் தண்ணீரின் அடிப்படையில் ஒன்றேதான். இந்த அறிவில்லாமல் பார்க்கும்போது கடல்
காரணமாகவும், அலைகள் காரியமாகவும் தோன்றுகிறது.
அதேபோல
ஆத்மா என்ற அறிவினால் ஜீவன்-ஈஸ்வரன் ஒன்று என்றும், அனாத்மா என்ற அறிவினால்
ஈஸ்வரன் படைப்பவர் என்ற காரணமாகவும், ஜீவன் படைக்கபட்டவன் என்ற காரியமாகவும்
தோன்றுகிறது. எனவே இரண்டு முரண்பட்ட கருத்துக்களை, இரண்டு கோணத்தில் அவைகளை
புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக ஒளியானது துகள்களாகவும்(Particles), அலையாகவும் (Waves) இருப்பது போல ஜீவ-ஈஸ்வர சம்பந்தத்தை புரிந்து கொள்ள வேண்டும் . மேலும் 5 + 4 = 10 – 1 என்ற சமன்பாட்டில் (Equation) வலது பக்கத்தில் உள்ள மதிப்பும், இடது
பக்கத்தில் உள்ள மதிப்பும் ஒன்றாக இருக்கும். ஆனால் மேலோட்டமாக பார்த்தோமானால்
வெவ்வேறாக தோன்றும். .
तत्क्षेत्रं यच्च यादृक्च यद्विकारि यतश्च यत् ।
स च यो यत्प्रभावश्च तत्समासेन मे शृणु ॥ 3 ॥
இனி க்ஷேத்ரம் என்ற சொல்லுக்கு படைக்கப்பட்ட
அனைத்தையும் பொருளாக கூறப்போகின்றார்.
தத் க்ஷேத்ரம் யத்ர – க்ஷேத்ரம்
என்று முன்பு கூறியது எது என்பதையும்
யாத்3ருச்ச – எந்த
தன்மையுடன் கூடியது என்பதையும்
யத்3 விகாரி – எந்த
வேற்றுமைகளோடு கூடியதாக இருக்கிறது என்பதையும்
ய்த3ஹ ச யத் – எதனிடமிருந்து
எது தோன்றியது என்பதையும்
தத் ஸமாஸேன – இவைகளை
சுருக்கமாக
மே ஶ்ருணு –
என்னிடமிருந்து கேட்பாயாக
ஸஹ ச யஹ – க்ஷேத்ரக்ஞன்
யார் என்பதையும்
யதி ப்ரபா4வஶ்ச – எத்தகைய
பெருமையை கொண்டவன் என்பதையும் சுருக்கமாக என்னிடமிருந்து கேள்.
ऋषिभिर्बहुधा गीतं छन्दोभिविर्विधैः पृथक् ।
ब्रह्मसूत्रपदैश्चैव हेतुमद्भिर्विनिश्चितैः ॥ 4 ॥
இதில் ஞானத்தின் பெருமையை கூறியிருக்கிறார்.
இந்த ஞானமானது (க்ஷேத்ரம், க்ஷேத்ரக்ஞன்) ரிஷிகளால் விதவிதமாக
உபதேசிக்கப்பட்டுள்ளது. விதவிதமான வேத
மந்திரங்களினால் மிகத்தெளிவாக (ப்ருத2க்) உபதேசிக்கப்பட்டுள்ளது. யுக்தியுடன் பொருந்திய, முரண்பாடில்லாத எந்தவித
சந்தேகத்திற்கிடமில்லாமல் நிச்சயம் செய்யப்பட்ட பிரம்மத்தை விளக்குகின்ற வாக்கியங்களினால்,
மந்திரங்களினால் கூறப்பட்டிருக்கின்றது.
महाभूतान्यहंकारो बुद्धिरव्यक्तमेव च ।
इन्द्रियाणि दशैकं च पञ्च चेन्द्रियगोचराः ॥ 5 ॥
க்ஷேத்ரம் என்ற தத்துவமானது
விளக்கப்படுகின்றது.
அவ்யக்தம் என்கின்ற ப்ரக்ருதி, புத்தி(மஹத்),
அஹங்காரம்
மஹா பூ4தானி – 5 சூட்சும பூதங்கள்
இந்த்3ரியாணி தஶ - 10 இந்திரியங்கள்
ஏகம் – மனம்
பஞ்ச இந்த்3ரியகோ3சர: - 5 ஸ்தூல பூதங்கள் –
இந்திரியங்களால் அனுபவிக்கப்படுகின்ற பூதங்கள்
க்ஷேத்ரம் ஜட தத்துவம், க்ஷேத்ரக்ஞன் என்பது
அறிவு தத்துவம். ஜட தத்துவத்திற்கு இரண்டு
நிலைகள் உண்டு. அவைகள்,
1. வெளித்தோற்றத்திற்கு வராத நிலை (அவ்யக்தம்) காரண அவஸ்தை, மாயா,
2. வெளித்தோற்றத்திற்கு வந்த நிலை (வியக்தம்) காரிய அவஸ்தை.
மாயையானது அறிவு ஸ்வரூபமான ஒன்றைச்
சார்ந்திருக்கின்றது. இதனால் பிரம்மத்தின் அறிவு இதில் பிரதிபலிக்கின்றது. அதன் விளைவாக வெளித்தோற்றத்திற்கு வந்து
செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது
வேதாந்த ஸ்ருஷ்டி விசாரம்
மாயையினுடைய இரண்டு லட்சணங்கள்.
1. பிரம்மத்தை சார்ந்திருப்பது,
2. ஜட
பிரபஞ்சம் தோன்றுவதற்கு காரணமாக இருப்பது.
சமஷ்டி மாயை – அனைத்துக்கும் காரணமாக இருப்பது,
வியஷ்டி மாயை – ஜீவனின் காரண சரீரம்
மாயையிலிருந்து சூட்சுமமான பஞ்சபூதங்கள்
தோன்றின. இது மூன்று குணங்களின்
சேர்க்கை. எனவே இக்குணங்கள் பஞ்ச
பூதங்களிலும் இருக்கும். சூட்சும பஞ்ச பூதங்களிலிருந்து சத்துவ அம்சத்தைக் கொண்டு
நம்முடைய சூட்சும சரீரம் தோன்றின. ரஜோ
குணத்திலிருந்து பிராணன்கள் தோன்றின. தமோ
குணத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் எல்லா குணங்களும் கலந்து ஸ்தூல பஞ்ச
பூதங்கள் தோன்றின. இதிலிருந்து ஸ்தூல சரீரங்கள் தோன்றின.
சாங்கிய ஸ்ருஷ்டி விசாரம்
இதில் 24 த்துவங்கள் கூறப்பட்டிருக்கின்றது.
அவைகள் முறையே
1. ப்ரக்ருதி (அ)
பிரதானம். இது அவ்யக்தம்
2. மஹத் – புத்தி
3. அஹங்காரம்
4. அஹங்காரத்திலிருந்து
16 தத்துவங்கள் தோன்றின
4.1 மனம்
4.2 ஐந்து
ஞானேந்திரியங்கள்
4.3 ஐந்து
கர்மேந்திரியங்கள்
4.4 ஐந்து சூட்சுமமான
பூதங்கள்
5. ஐந்து ஸ்தூல பூதங்கள் சூட்சும
பூதத்திலிருந்து தோன்றின.
इच्छा द्वेषः सुखं दुःखं संघातश्चेतना धृतिः ।
एतत्क्षेत्रं समसेन सविकारमुदह्र्तम् ॥ 6 ॥
மனதையும் அதில் எழும் உணர்வுகளையும் க்ஷேத்ரம்
என்று குறிப்பிடுகின்றார். அறிவு சக்தியையும் க்ஷேத்ரம் என்றே கூறுகின்றார்.
சேதன தத்துவ விசாரம்
இந்த பஞ்ச ஸ்தூல பூதங்களுக்கு உணரும் தன்மை
கிடையாது. அதிலிருந்து தோன்றிய ஸ்தூல
உடல்களுக்கும் உணரும் தன்மை கிடையாது.
ஜடமான சூட்சுமமான பஞ்ச பூதங்களிலிருந்து தோன்றிய மனமும் ஜடமாகத்தான்
இருக்க வேண்டும். ஆனால் நம் அனுபவத்தில்
மனதையும், உடலையும் ஜடமாக உணர்வதில்லை.
மனம் அறிவு பூர்வமாக இருந்து கொண்டு உடலுக்கும் உணர்வை கொடுக்கின்றது. மனம் எதனிடத்தில் அபிமானம் வைக்கின்றதோ
அதற்கும் அறிவு தன்மை வருகின்றது.
மனதிற்கு உணர்வு எங்கிருந்து வருகிறது?
பிரம்மத்தின் ஸ்வரூபம் அறிவு ஸ்வரூபம், ஸத்
ஸ்வரூபம். ஜடமான மாயை பிரம்மத்தோடு
சேரும்போது அறிவு வருகின்றது. மாயையிலிருந்து வெளிவந்தவைகள் 5 சூட்சும பூதங்கள்
இதிலிருந்து நம்முடைய சூட்சும சரீரங்கள் தோன்றியிருக்கின்றது. பிரம்மத்தை
பிரதிபலிக்கும் சக்தி இந்த சூட்சும சரீரத்திற்கு இருக்கின்றது. மனதில் பிரம்மத்தின் அறிவு பிரதிபிம்பமாக
இருக்கின்றது. இது சிதாபாஸம் என்று அழைக்கப்படுகிறது. இந்த சிதாபாஸத்தைத்தான் க்ஷேத்ரம் என்று பகவான்
இங்கே குறிப்பிட்டிருக்கின்றார். இந்த
சிதாபாஸமும், சூட்சும சரீரமும், காரண சரீரமும் சேர்ந்த ஒன்றே உயிர் என்று அழைக்கிறோம். சேதனா என்பதை சிதாபாஸம் என்று பகவான்
குறிப்பிடுகின்றார்.
ஸங்கா4த2 – சூட்சும,ஸ்தூல
சரீரம்
இச்சா – ஆசை
துவேஷ – வெறுப்பு
ஸுகம் – இன்பம்
த்ருதி – உறுதி
துத2ம் – துன்பம்
சவிகாரம் -
மாறுபாடுகளுடன்
ஸமாஸேன உதாஹ்ருதம் – சுருக்கமான
விளக்கப்பட்டது
அப்படியே விருப்பு, வெறுப்பு, இன்பம், துன்பம்,
சிதாபாஸம், சூட்சும, ஸ்தூல சரீரம் மேலும் உறுதி ஆகிய மாறுபாடுகளுடைய இந்த க்ஷேத்ரம்
சுருக்கமாக சொல்லப்பட்டது.
अमानित्वमदम्भित्वमहिंसा क्षान्तिरार्जवम् ।
आचार्योपासनं शौचं स्थैर्यमात्मविनिग्रहः ॥ 7 ॥
பிரம்ம ஞானத்தை அடைய உதவும் சாதனங்களான
நற்பண்புகளை கூறுகின்றார். எவைகள் மனதுக்கு
நன்மையை, ஆரோக்கியத்தைக் கொடுக்குமோ அவைகள் நற்பண்புகள். தீமையோ, பலவீனத்தையோ
கொடுக்கக்கூடியவைகள் தீய பண்புகள், பழக்க வழக்கங்கள் என்று அறிந்து கொள்ள
வேண்டும். மனதுக்கு ஹிதத்தை கொடுப்பது
நற்பண்புகள், அஹிதத்தை கொடுப்பது தீயபண்புகள் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
இரண்டு காரணத்தினால் அனைத்து நற்பண்புகளையும்
அடைய வேண்டும் என்று வலியுறுத்துகிறார். அவைகள் 1. ஆத்ம ஞானத்தை அடைதல், 2.
மனநிறைவை அடைதல்
1. மூன்று விஷயங்கள் ஒன்று
சேர்ந்தால்தான் அறிவை அடைய முடியும். அவைகள் 1. அறிபவன் (பிரமாதா), 2. அறிய உதவும்
கருவி (பிரமாணம்), 3. அறியப்படும் பொருள் (பிரமேயம்). இவை மூன்றும் சேர்ந்து கொடுப்பதை அறிவு (பிரமா)
என்று கூறப்படுகிறது. நம்முடைய மனம்
பிரமாதாவாக இருக்கின்றது. இந்திரியங்கள்
பிரமாணமாக இருக்கின்றது. இவையிரண்டும்
சேர்ந்து அறிவை அடைய உதவுகின்றது.
சப்த பிரமாணம் அறிவை அடைய
உதவுகின்றது. இதற்கு மனதுடன் கூடிய நான்
என்பவன் அறிபவன். சில சமயங்களில் இவைகள்
மூன்றும் இருந்தும் அறிவை அடைய முடிவதில்லை.
பிரமாதாவிடம் இருக்கும் மனம் தகுதியில்லாமல் இருந்தால் இது நேரிடும். தகுதிபடுத்திவிட்டால் அறிவை அடைந்து
விடலாம். எனவே நற்பண்புகளை சேர்த்து தீயபண்புகளை
நீக்கி மனதை தகுதியாக்கி விட்டால் ஞானம் அடைந்து விடலாம், நாம் பிரமாதாவாக தகுதியடைந்துவிட்டால் பகவான்
பிரமாணத்தை கொடுப்பார். பிறகு ஞானத்தை
சுலபமாக அடைந்து விடலாம்.
2. சாதாரண வாழ்க்கையில்
நிறைவுடனும், திருப்தியுடனும் வாழ்வதற்கும் இது பயன்படும். மன சஞ்சலமில்லாமல், சோர்வில்லாமல் வாழும்
வாழ்க்கையே திருப்தியுடன் இருக்கும். மனித சுகத்தை அடைவதற்கும் இந்த பண்புகள்
அவசியம்.
இருபது பண்புகளை கூறி அதை ஞானம் என்று
அழைக்கின்றார். இவைகள் உண்மையில் ஞானத்தை அடைவதற்கு சாதனமாக இருக்கின்றது. பகவான்
கூறப்போகின்ற பண்புகளை இரண்டாக பிரிக்கலாம். அவைகள் 1. குணதானம், 2. தோஷ அவனயனம்.
குண ஆதானம் - நாம் வளர்த்துக் கொள்ள வேண்டியவைகள்
தோஷ அவனயனம் - நம்மிடமிருந்து நீக்க வேண்டியவைகள்
இந்த பண்புகளை எப்படி
அடைய வேண்டும்?. எப்படி நீக்க வேண்டும்?
இதற்கு இரண்டு வழிகள்
உள்ளது. அவைகள் 1. ஞானம், 2. ப்ரயத்தனம்(சரியான முயற்சி)
- ஞானம் – எவைகளெல்லாம் நற்பண்புகள் என்பதை தர்ம சாஸ்திரங்கள் உபதேசிக்கிறது. நாம் அடைந்த அறிவானது இருப்பதை காட்டிக்கொடுக்கும். எந்த மாற்றத்தையும் நேரிடையாக ஏற்படுத்தாது. தீபம் இருட்டில் உள்ள பொருட்களைக் காட்டிக் கொடுப்பதைப் போன்று அறிவு செயல்படும். அறிவுக்கு எதையும் மாற்றும் சக்தி கிடையாது.
- ப்ரயத்தனம் – அடைந்த அறிவானது பயனளிக்க வேண்டுமென்றால் அதை அடைய முயற்சிக்க வேண்டும். செயலால் மட்டும்தான் ஒன்றை மாற்றியமைக்க முடியும். இந்த பிரயத்தனம் ஆரம்பத்தில் என்னென்ன விதமான பாவனைகளைக் கொடுக்கும் என்று பார்க்க வேண்டும். முதலில் அதன் மீது ஆசையை வளர்க்க வேண்டும். இதுதான் நம்மை செயலில் ஈடுபடுத்தும். இரண்டாவது பண்பின் மீது அதிக மதிப்பு வைத்திருக்க வேண்டும். எனவே மதிப்பை வளர்க்க வேண்டும்.
எப்படி முயற்சிக்க
வேண்டும் எந்தெந்த விதத்தில் முயற்சிக்க வேண்டும்?
1. திறந்த மனதுடன் இருக்க
வேண்டும். நம்மிடத்திலிருக்கும் குறைகளை
புத்தியே மறைத்து வைத்திருக்கும்.
நம்முடைய மனதை நாமே திறந்து பார்த்து குறைகளை தெரிந்து கொள்ள வேண்டும்.
அதனால் அடையும் பலனையும் அறிந்து கொள்ள வேண்டும்.
நம்மை சுற்றியிருப்பவர்களை கேட்டால் சரியாக குறை, நிறைகளை சொல்லி
விடுவார்கள். நம்முடைய குறை,நிறைகளை
இவ்வாறு தெரிந்து கொள்ளலாம்
2. நம்மிடத்திலிருக்கும்
பலவீனத்தை, குறைகளை மற்றவர்கள் சொல்லும்போது அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை
வளர்த்துக் கொள்ள வேண்டும். எப்பொழுதும்
மனமானது புதிதான உண்மையை சந்திக்கும்போது அதை ஏற்றுக்கொள்ளாது. அதை நீக்க
வேண்டும். அப்போதுதான் நம் குணத்தை
மாற்றியமைக்க முடியும். மற்றவர்களுக்கு நன்மை செய்வது நமக்கு செய்து கொள்வதற்கு
சமமாகும்.
இனி எவ்விதம்
நற்பண்புகளை அடையலாம் என்று விசாரம் செய்யப்படுகின்றது.
1. அர்த்த தர்ஶனம் – நல்ல
பண்புகளினால் அடையும் பலனை மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்க்க வேண்டும். உதாரணமாக
உண்மை பேசினால் அடையும் பலனை சிந்திப்போம்.
உண்மை தெரிந்திருந்தாலும் நாம் பொய் பேசித்தான் பலனை அனுபவிப்போம் என்று
நினைத்துக்கொண்டிருக்கின்றோம். நம்மிடத்தே
உண்மை தெரிந்தவன், பொய் பேசுபவன் என்று இரண்டு பேரும் இருக்கிறார்கள். பொய் பேசுவதனால் மனதானது பாதிக்கப்படும். மனம்
பாதிக்கப்பட்டால் நிம்மதியும், அமைதியும் பாதிக்கப்படும். செல்வமும், புகழும் இருந்தாலும் மன நிம்மதி
இல்லாமல் வாழ்வதால் என்ன பயன்? இவ்வாறு ஒவ்வொரு பண்பையும் சிந்தித்துப் பார்த்து
அதன் பலனை நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.
2. அனர்த்த தர்ஶனம் – நற்பண்புகள்
இல்லையென்றால் என்னென்ன இழப்பு ஏற்படும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
சரியான அறிவு என்பது எது சரி, எது தவறு என்று அறிந்திருக்க வேண்டும். மேலும் அதனால் அடையும் நன்மை,தீமைகளை ஆராய்ந்து
அடைவதே சரியான அறிவாகும்.
3. ஸத் சங்கம் – ஒரு பண்பை
அடைய வேண்டுமென்றால் அந்த பண்புள்ளவர்களிடம் நட்பு வைத்திருக்க வேண்டும். மகான்களின் புத்தகங்களும் நமக்கு உதவி செய்யும்
4. பிராயசித்தம் (தண்டனை) – ஒரு பண்பை
வளர்த்துக் கொள்ளும் முயற்சியில் தோல்வி அடையும்போது நமக்கு நாமே தண்டனை
கொடுத்துக் கொள்ள வேண்டும்.
5. பரிசு கொடுத்தல் – அதேமாதிரி
வெற்றி அடையும்போதும் பரிசு கொடுத்துக் கொள்ள வேண்டும்.
6. சங்கல்பம் – ஒவ்வொரு
பண்பாக எடுத்துக் கொண்டு இதை அடைந்தே தீருவேன் என்ற உறுதி எடுத்துக் கொள்ள
வேண்டும்.
7. அவதானம் –
முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்
8. சஹாய அன்வேஷம் – ஒரு பண்பை
வளர்த்துக் கொள்ல உதவியாக இருக்கும் விஷயத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
9. பிரதிபக்ஷ பாவனா – நம்மிடத்து
இருக்கும் தீயபண்பை நீக்க அதற்கு எதிரான நற்பண்பை வளர்த்து கொள்வதினால்
நீக்கிவிடலாம். ஒரு பொருளின் மீது இருக்கும் சங்கல்பத்தை நீக்கி விட்டால் அதன்
மீதுள்ள ஆசை நீங்கிவிடும். பயம், க்ரோதம் நீங்க வேண்டுமென்றால் ஆசையை நீக்க
வேண்டும்.
10. தியானம் – பண்புகளை
குறித்த தியானம். ஒவ்வொரு பண்புகளாக எடுத்துக்கொண்து அதன் பெருமைகளையும், பலனையும்
சிந்திக்க வேண்டும். பிறகு அவைகள்
நம்மிடம் இருப்பதுபோல பாவனை செய்ய வேண்டும்.
அப்போது வருகின்ற அமைதியை அனுபவிக்க வேண்டும்.
11. பிரார்த்தனை – இறைவனிடம்
வேண்டுதல். நற்பண்புகள் என் சுபாவமாக மாற வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்க
வேண்டும்.
ஸ்லோக விளக்கம்:
1. அமானித்வம் – மானித்வம்
என்பது உயர்வு மனப்பான்மை, தன்னை உயர்வாக
நினைத்துக்கொள்வது. அமானித்வம்
என்பது தன்னை உயர்வாக கருதாமல் இருத்தல், கர்வமின்மை, செல்வம், புகழ், அறிவு,
திறமை, குலம், தவம், பதவி, இவைகளில் அதிக அளவு இருக்கும்போது இந்த குணம்
வரலாம். எது வந்தாலும் அதனால்
கர்வமடையாமல் இருக்க வேண்டும்.
விளைவு: உண்மையான
மதிப்பு, மரியாதை இவைகளை இழந்து விடுவோம். பணிவு நம்மிடமிருந்து சென்று
விடலாம். மற்றவர்கள் நம்மை மதிக்க
வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பினால், அது கிடைக்காமல் போகும்போது மன சஞ்சலம்,
மனகஷ்டம் வரலாம்.
உபாயம்: நம்மிடம்
இருக்கும் அதிக திறமை, சக்தியெல்லாம் இறைவன் கொடுத்த பெருமைகளாக நினைத்துக் கொள்ள
வேண்டும். இவ்வாறு உள்ளவனின் நிலையற்ற தன்மையை உணர்ந்து பார்க்க வேண்டும்.
மற்றவர்களுடன் தன்னை ஒப்பிட்டு பார்ப்பதை விட்டுவிட வேண்டும்.
2. அதம்பித்வம் – தம்பித்வம்
என்பது தற்பெருமை, தன்னிடத்திருக்கும் பெருமைகளை
வெளிக்காட்டிக் கொள்ளுதல். அதம்பித்வம்
என்பது தற்பெருமைகளை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருத்தல். நடை, உடை பாவனைகளின்
மூலமாக வெளிக்காட்டுதல். உதாரணமாக தான் செல்வந்தன் என்பதை பலரும் அறியும்வண்ணம்
வெளிக்காட்டிக் கொள்ளுதல்.
விளைவு: இப்படி
வெளிப்படுத்தினாலே மற்றவர்கள் உண்மையான மரியாதை கொடுக்க மாட்டார்கள். கர்ம பலனும் இத்தோடு தீர்ந்துவிடும். தானம் அளிக்கின்றேன் என்று வெளிக்காட்டும்போது
தானத்தின் பலன் அத்தோடு முடிவடைந்து விடுகிறது. புண்ணியமோ, மனத்தூய்மையோ
கிடைக்காது
உபாயம்: எளிமையான வாழ்க்கையை வாழ வேண்டும். சொல், செயலில் மற்றும் பல விஷயங்களில் எளிமையாக
இருத்தல். தன்னைப்பற்றி மற்றவர்களிடம்
பேசிக் கொண்டிருக்கக் கூடாது. நம்மிடம் இருக்கும் தவம், ஆன்மீக முயற்சி,
நற்பண்புகளை மறைத்து வைக்க வேண்டும்.
3. அஹிம்ஸா –
துன்புறுத்தாமை – மனோ வாக் கா3ய கர்மபி4ஹி – மனம், சொல், உடல்
இவைகளால் மற்ற உயிரினங்களை துன்புறுத்தாமல் இருத்தல். மனதாலும் யாருக்கும் துன்பத்தைக் கொடுக்க
கூடாது. சொல்லாலும் செயலாலும் எந்த ஜீவனுக்கும் துன்பத்தைக் கொடுக்க கூடாது. இது
எல்லா ஆசிரமத்திலும் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விசேஷ தர்மம் .
ஹிம்ஸை
செய்வதற்கு காரணங்கள்:
3.1. த்வேஷம் - வெறுப்பு – இந்த குணத்தினால் ஹிம்சை செய்ய
தூண்டப்பட்டு விடுவோம். எனவே மனதிலிருந்து
இந்த குணத்தை நீக்க வேண்டும்.
3.2. க்ரோதம் – கோபம் –
பிறருடைய செயலினால், சூழ்நிலைகளால் வெளிப்படும் இந்த குணத்தினால் ஹிம்சை செய்து
விடுவோம்.
3.3. மற்றவர்களால்
துன்பத்தை அனுபவிக்கும்போது அது மனதில் நன்கு பதிந்து இருக்கும். சமயம் வரும்போது
அவர்களுக்கு துன்பத்தை நாம் கொடுப்போம். இதற்கு ப்ரதிக்ரியா என்று
கூறப்படுகிறது. அதாவது நாம் அனுபவித்த துன்பத்தை அதை கொடுத்தவருக்கு கொடுத்தல்
3.4. கவனக்குறைவினால்
மற்றவர்களுக்கு ஹிம்சை செய்து விடுவோம்
3.5. ஒரு செயலை
நிறைவேற்றிக் கொள்ள ஹிம்சை செய்துவிடுவோம்.
மாட்டு வண்டியை ஓட்டுபவன் தான் வேகமாக செல்ல வேண்டும் என்பதற்காக மாட்டை
அடிஅடியென்று அடித்து ஓட்டுவது இதை குறிக்கிறது..
3.6. மற்றவர்கள் மனம்
புண்படும் என்று தெரியாமல் பேசுதல்
3.7. பொறுமையின்மையும்,
மன்னிக்காத குணம் இவையிரண்டும் நம்மை ஹிம்சை செய்ய வைக்கும்
விளைவு: - பரோபகார
புண்யாய பரபீதனம் பாபாய: புண்ணியம் வேண்டுமென்றால் மற்றவர்களுக்கு நன்மை செய்ய
வேண்டும். மற்றவர்களுக்கு ஹிம்சை கொடுப்பதால் பாவத்தை பலனாக அடைவோம். அதனால் துயரத்தை அனுபவிப்போம். உடலுக்கு வரும்
கஷ்டங்கள் மற்றவர்களை உடலால் ஹிம்சைபடுத்தியிருப்போம். சொற்களால் அடையும் துன்பம் நாம் மற்றவர்களை
சொல்லால் ஹிம்சை செய்திருப்போம். மனதால்
படும் கஷ்டங்கள் மற்றவர்களுக்கு மனதினால் கேடு நினைத்து இருக்கலாம். யாருக்கு ஹிம்சை கொடுக்கிறோமோ அவர்கள்
பகைவர்களாகி விடுவார்கள்.
உபாயம்: ஒவ்வொரு நாளும்
நாம் எத்தனை பேரை ஹிம்சை செய்திருக்கிறோம் என்று நினைத்துப்பார்க்க வேண்டும்.
பிறகு அதற்கான காரணத்தையும் எண்ணிப் பார்க்க வேண்டும். இதிலிருந்து நம்முடைய
பலவீனங்களை காட்டிக் கொடுக்கும். இந்த பலவீனங்களை நீக்க முயற்சிக்க வேண்டும். வேதாந்த ஞானம் அஹிம்சையை முழுவதுமாக
கடைப்பிடிக்க உதவி புரியும். பார்க்கும்
அனைத்தும் ஈஸ்வரனாக இருப்பதை பார்க்கும்போது ஹிம்சை செய்யமாட்டோம்.
ஒரு சூழ்நிலையில் சிறிய
ஹிம்சைக்கொடுக்கவில்லையென்றால் பெரிய ஹிம்சையை அனுபவிக்க நேரிடும் என்று
வரும்போது சிறிய ஹிம்சையை கொடுப்பது அஹிம்ஸாவாக கருதப்படுகிறது.
4. க்ஷாந்தி: -
சகித்துக்கொள்ளுதல், மன்னித்தல்
4.1. சகிப்புத்தன்மை –
இருமை நிமித்தமாக வருகின்ற சுக-துக்கம், குளிர்-வெப்பம், மான-அவமானம் போன்ற
இரட்டைகளை சகித்துக் கொள்ளுதல். குறிப்பாக அதனால் அடைகின்ற விளைவுகளில் சமமாக
இருக்க வேண்டும்.
விளைவு – இது
இல்லையென்றால் எந்த நன்மையையும் பெற முடியாது.
எந்த செயலையும் முழுமையாக செய்துமுடிக்க முடியாது. தியானம் என்ற சாதனத்தை பயன்படுத்த வேண்டும்
என்று ஆரம்பிக்கும்போது வரும் தடைகளை அதனால் வரும் கஷ்டத்தை தாங்கிக் கொள்ளமுடியாமல்
வெற்றியடைய முடியாது.
உபாயம் – சரியான அறிவு
இருக்க வேண்டும். எந்த இடத்தில் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருக்கின்றதோ அங்குதான்
மனக்குழப்பம் வரும். துயரம் வரும்போது இதை அனுபவிப்பதை தவிர வேறுவழி கிடையாது என்ற
மனப்பக்குவம் வந்து விட்டால் சகிப்புத்தன்மை தானாக வரும், மனக்குழப்பம்
வராது. அப்4யாஸம் செய்ய வேண்டும்
அதாவது துயரத்தை அனுபவித்து பயிற்சி செய்ய வேண்டும், சகித்து பழக வேண்டும்.
4.2. மன்னித்தல் – நமக்கு
துன்பத்தைக் கொடுத்தாலும் அவர்களை மன்னிக்க வேண்டும்.
விளைவு: - துவேஷம்,
வெறுப்பு, பகைமை மனதில் உருவாகிவிடும். மன்னிப்பதால் அடையும் பலன் மன அமைதியாகும். மன்னிப்பதற்கு அதிக சக்தி தேவை. மன்னிப்பது செய்த தவறை சரியென்று எடுத்துக்
கொள்வதாகாது, தெரிந்தே மன்னித்தல். மற்றவர்கள் நம்மை புண்படுத்த தயாராகும்போது
நாம் அவரை மன்னிப்பேன் என்று தயாராக வேண்டும்.
உபாயம் - நமக்கு கஷ்டம் கொடுப்பவர்களிடத்திருக்கும்
அறியாமையை பார்க்க வேண்டும். அறியாமையை
பார்க்க முடியவில்லையென்றால், அவருடைய இயலாமையை பார்க்க வேண்டும். நிபந்தனையில்லாத கருணை என்ற குணத்தை வளர்த்துக்
கொள்ள வேண்டும். எந்தவிதமான சூழ்நிலையையோ, செயலையோ ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம்
வேண்டும்.
5. ஆர்ஜவம் – எண்ணம், சொல்,
செயல் இவைகள் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும். மூன்றும் ஒரேமாதிரி செயல்பட வேண்டும்.
விளைவு – இந்த குணம்
இல்லையென்றால், நாம் நமக்குள்ளே மூன்றுவிதமாக செயல்பட்டுக் கொண்டிருப்போம். நம்
மீதே நம்பிக்கை ஏற்படாது. எனவே நினைப்பதை வெற்றிகரமாக செயல்படுத்த முடியாது
உபாயம்: - பொதுவாக சொல்வதை
செயல்படுத்த வேண்டும். செய்ய முடிவதை மட்டும் சொல்லப்பழகவேண்டும். இந்த உள்ளுணர்வு
நமக்கு சமயத்தில் நினைவூட்டும்.
எண்ணத்தையும், சொல்லையும், ஒன்றாக வைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும்.
6. ஆசார்ய
உபாஸனம் – ஆசிரியருக்கும், குருவுக்கும் சேவை செய்தல். நாம் யாரிடமிருந்து அறிவை பெறுகின்றோமோ
அவருக்கு பணிவிடை செய்தல், முயற்சியில்லாமல், உழைப்பில்லாமல் எதையும் இலவசமாக
பெறக்கூடாது. குருவுக்கு சேவை செய்து பெறும் அறிவுதான் நிலைத்திருக்கும், பயனை
தரும். செல்வத்தை கொடுத்தும் அறிவை அடையலாம், அறிவைக் கொடுத்தும் அறிவை அடையலாம்.
முக்கியத்வம்: பிரஹ்ம வித்யா
என்ற அறிவை அடைவதை உதாரணமாக இங்கு சொல்லப்பட்டிருக்கிறது.
- கர்மயோகமாக
குருவுக்கு செய்யும் சேவை இருக்கும். அதனால் மனத்தூய்மை அடைவோம்
- பணிவு என்ற
பா4வனை வரும். அகங்காரத்தை நீக்கிக்
கொள்ளவும் உதவும்
- சாஸ்திரத்தில்
நமக்கு சிரத்தை இருக்க வேண்டும். சிரத்தையுடன் கேட்கும் விஷயங்கள் மட்டும்தான் அறிவாக
மாறும். நமக்கு சிரத்தை
வரவேண்டுமென்றால் அதன் பலனை அடைந்தவனை பார்க்க வேண்டும். இதை நமக்கு உபதேசம் செய்கின்ற
குருவிடத்தில் அந்த பலனை பார்க்கலாம்.
அவருக்கு சேவை செய்வதன் மூலமாகத்தான் அவரிடமிருக்கும் பலனை உணர
முடியும்.
- குருவுக்கு
சிஷ்யனை புரிந்து கொள்ள உதவி செய்கின்றது.
ஏதாவது குறை தெரிந்தால் அவனுக்கு விசேஷமாக உபதேசம் செய்ய முடியும்.
- யத உபாஸ்ததே
ததா ப4வதி – சேவை செய்யும் குருவிடத்தில் இருக்கும் நற்குணங்களை அடையலாம்
7. ஶௌசம் –
தூய்மை – அகத்தூய்மை, புறத்தூய்மை. உடல், உடை, சுற்றுப்புறம், நாம்
பயன்படுத்துகின்ற பொருட்கள் ஆகியவற்றை தூய்மையாக வைத்திருப்பதே புறத்தூய்மை
என்பதாகும். இதற்கு காலம், உழைப்பு, பணம்
தேவைப்படும். இந்த தேவையின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.
அகத்தூய்மை என்பது சித்தம், மனம், புத்தி இவைகளை தூய்மையாக வைத்திருத்தல்,
நற்குணங்கள் இருந்தால் மனம் தூய்மையாக இருக்கும்.
நல்லெண்ணங்கள் இருந்தால் புத்தி தூய்மையாக இருக்கும். சித்தத்தில் நல்ல எண்ணங்கள் இருப்பது
சித்தத்தின் தூய்மை என்று கூறப்படுகிறது
உபாயம்: பிரதிபக்ஷ பா4வனா –
நம்மிடத்திலிருக்கும் தீய குணத்திற்கு எதிரான நற்குணத்தை கொண்டு வரவேண்டும்.
உதாரணமாக ஆசையை நீக்க வைராக்கியத்தையும், கோபம், வெறுப்பு இவைகள் நீங்க மன
அமைதிபடுத்தி வைத்திருத்தல், இவைகள் சென்றுவிடும். லோபத்திற்கு தானமும்,
மோகத்திற்கு ஞானமும், கர்வத்திற்கு பணிவையும், தமஸிற்கு ரஜஸும் பயன்படுத்தி
இக்குணங்களை நீக்கிவிடலாம்.
8. ஸ்தைர்யம் – மனம் உறுதியாக இருத்தல்-
த்3ருதிஹி – மனோதிடம். எடுத்துக் கொண்ட
லட்சியத்தில் உறுதியாக இருக்க வேண்டும்.
அதை அடையும் சரியான சாதனத்தை
பயன்படுத்துவதிலும் உறுதியாக இருக்க வேண்டும்.
உபாயம் – திதிக்ஷா –
பொறுத்துக்கொள்ளுதல் – இந்தக்குணமுடையவர்களால்தான் இந்த மனோதி3டத்துடன் இருக்க
முடியும். குறிப்பாக கஷ்டத்தில் மனதை
சகித்து பழகுதல். வைராக்கியம் என்ற குணத்தின் மூலமாகவும் இந்த திறமையை
அடையலாம். சுகம் தடையாக இருந்தால் அதை
விலக்கி விட வேண்டும். முமுக்ஷுத்வம் –
லட்சியத்தில் இருக்கும் ஆசையை தி3டப்படுத்திக் கொள்ள வேண்டும்.
09. ஆத்ம விநிக்ரஹ – இதில் ஆத்மா என்ற சொல்
உடல், மனம், புலன்கள் ஆகியவற்றைக் குறிக்கின்றது. இவைகளை கட்டுக்குள்
வைத்திருத்தல், நம் வசத்தில் இவைகளை வைத்திருத்தல். புலன்கள் கரணமாக இருக்கின்றது,
அவைகளை பயன்படுத்தும் நாம் கர்த்தாவாக இருக்கிறோம். நம்முடைய மனம், உடல் சுகமான சூழ்நிலையை
நாடிக்கொண்டிருக்கும், இவைகளுக்கு அடிமையாகாமல் நல்ல சூழ்நிலைகளில்லாமல்
இருந்தாலும் அமைதியாக இருக்கும் வகையில் பக்குவபடுத்தி வைத்திருக்க வேண்டும். மன
ஆரோக்கியம் ஐந்து இந்திரியங்கள் வழியாக கொடுக்கப்படும் உணவான விஷயங்களை
பொறுத்திருக்கிறது. இது ஶம, த3மாதிகளை
பொதுவாக குறிக்கின்றது.
உபாயம்:
· எதை நீண்ட நாள்
பயன்படுத்திக் கொண்டு வந்திருக்கிறோமோ, அது இல்லாமலும் இருக்க பழக வேண்டும்
· மனம் எந்த இந்திரியத்தின்
வழியாக அதிக நேரம் செலவழிக்கின்றதோ அதிலிருந்து நீங்கி இருக்க பழக வேண்டும்
· மனம் எதில்
சஞ்சலமடைகின்றதோ அந்த விஷயத்தில் நமக்கு வைராக்கியம் இல்லை என்று அறிந்து அதில்
இந்த திறமையை பயன்படுத்த வேண்டும்.
· ஶமம், த3மம் என்ற
சாதனங்களை விடாமுயற்சியுடன் பயிற்சி செய்ய வேண்டும்.
इन्द्रियार्थेषु वैराग्यमनहंकार एव च ।
जन्ममृत्युजरव्यधिदुःखदोशानुदर्शनम् ॥ 8 ॥
10. இந்த்3ரியார்தே2ஶு வைராக்3யம் – இந்திரியங்களினால்
அனுபவிக்கப்படுகின்ற போகப் பொருட்களில் பற்றின்மை
த்3ருஷ்ட ஸ்ருத அனுபூ4த விஷயே (இது வைராக்கியத்தின் லட்சணம்)
அனுபவிக்கப்பட்ட விஷயத்தில் விருப்பு அல்லது வெறுப்பு
உண்டாவதை பார்த்திருக்கிறோம். எனவே அந்த விஷயங்களில் பற்றில்லாமல் இருக்க வேண்டும். மேலும் பார்த்த, கேள்விபட்ட விஷயங்களிலும் பற்றில்லாமல் இருக்க வேண்டும். போகப் பொருட்கள் கொடுக்கும் சுகத்திற்கு அடிமையாகாமல் இருக்கும் மனநிலை
உபாயம்
· விவேகம் – இது முற்றிய
நிலையில் உதிப்பது வைராக்கியம். இந்த உலகத்தினுடைய ஸ்வரூபத்தை புரிந்து கொள்ள
வேண்டும். இந்த அறிவுதான் வைராக்கியத்தை அடைவதற்கு மூலமாக அமையும்
· அனைத்து போகங்களும்
நம்மை பலவீனப்படுத்தும்
· செல்வத்தினால் மனம்
திருப்தியடையாது. அதிக செல்வம் மனநிறைவை கொடுக்காது. பயத்தை கொடுக்கும்
· அநித்யமாக இருக்கும்
பொருட்கள் கொடுக்கும் சுகமும் நிலையற்றதாகத்தான் இருக்கும்
· நம்மை பந்தப்படுத்தும்
இயல்புடையது
· உயர்நிலை மோட்சத்திற்கு
செல்லும்போது கீழ்நிலை கோசங்களில் இருக்கும் போகங்களில் வைராக்கியம்
ஏற்பட்டுவிடும். மேலான விஷயத்தில் அபிமானம் வைக்கும் போது கீழான விஷயத்தில்
வைராக்கியத்தை அடைந்து விடுவோம். மோட்சஷ மார்க்கத்தில் பிரவிருத்தி செய்வோம்.
குறிப்பு:
போகப்பொருட்களில்
வைராக்கியம் அடைய முடியாவிட்டால், அவைகளை தர்மப்படி அனுபவிக்க வேண்டும். அளவுடனும் அனுபவிக்க வேண்டும்.
11. அனஹங்காரஹ
– அகங்காரமில்லாமல் இருத்தல்
· கர்வம் – வெளிப்பட்ட கர்வம். எந்த நிமித்தமாகவும் கர்வப்படக்கூடாது. நம்மிடத்திருக்கும்
பெருமைகள் இறைவன் கொடுத்தது என்று நினைக்க வேண்டும்.
· நம்மிடத்திருக்கும்
பெருமைகளில் வைராக்கியத்துடன் இருத்தல்
· இந்த உடல், மனம் இவைகளில்
நான் என்ற அபிமானம், திடமான புத்தி இல்லாமல் இருத்தல்
எந்த பொருட்களில்
அதிக சுகம் காண்கின்றோமோ, அனுபவிக்கின்றோமோ அதில் நாம் அதிக அபிமானம், அதிக பற்றுடன்
இருக்கின்றோம் என்று புரிந்து கொள்ள வேண்டும் . இந்தப்பற்றை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டு வரவேண்டும். இதை நீக்குவதற்கு தவம்தான் முக்கியமான சாதனமாக
கருதப்படுகின்றது. உண்ணாவிரதம்,
மௌனவிரதம், தனிமையில் இருந்து பழகுதல் போன்ற சாதனங்கள் தவம் என்று பொதுவாக
கூறப்படுகின்றது.
12. ஜன்ம ம்ருத்யு
ஜரா வியாதி4 துக்க2 தோஷ அனுத3ர்ஶனம்
வைராக்கியம் என்ற
தகுதியை அடைவதற்கு இந்த பண்பு அவசியமாகின்றது. பிறப்பு, இறப்பு, மூப்பு, வியாதி
இவைகளால் அடையும் துயரங்கள் போன்ற குறைகளை மீண்டும் மீண்டும் சிந்தித்துப்பார்க்க
வேண்டும். இதனால் வைராக்கியத்தை கொஞ்ச கொஞ்சமாக அடைவோம்.
நம்முடைய உடலின் தோற்றம், அழிவு, நோய்கள்,
வயோதிகம் இவைகளினால் அடையும் துன்பங்களை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்க
வேண்டும். இன்பம் தரும் பொருட்களே
துயரத்தையும் கொடுக்கும் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். மரணம் ஏற்படும்போது
கஷ்டப்பட்டு சேர்த்த அனைத்தையும் விட்டுவிட்டுவோம். இது தெரிந்தும் நாம்
போகப் பொருட்களை நாடிச் செல்கின்றோம். மரணத்தை தியானம் செய்தால் இந்த உண்மை நன்கு
விளங்கும் அதனால் வைராக்கியமும் வளரும்
வயோதிகம் - இந்த காலத்தில்
நம் உடலிலுள்ள உறுப்புக்கள், இந்திரியங்கள் ஆகியவைகளினுடைய சக்தி குறைந்து
போயிருக்கும். பலவிதமான நோய்களால் பாதிக்கப்படலாம். அந்த நேரத்தில் நாம் சேர்த்து
வைத்திருக்கும் போகப்பொருட்களோ, செல்வமோ, நமக்கு சுகத்தைக் கொடுக்காது, அவைகளை
அனுபவிக்க முடியவில்லையே என்ற துயரத்தைத்தான் அனுபவிக்க நேரிடும். இந்த நிலையை
மனதில் சிந்தித்து பார்க்க வேண்டும்.
தோஷ தர்ஶனம் பண்டித லக்ஷணம்: - குறைகளைப்
பார்ப்பது சான்றோரின் குணம். இது மற்றவர்களுடைய குறைகளைப் பார்ப்பது என்பதை
குறிக்கவில்லை. போகப் பொருட்களில் இருக்கின்ற குறைகளை நாம் பார்க்க வேண்டும்
என்பதை குறிக்கிறது. ஒரு பொருளின் மீது அதிகப்பற்று
வந்தால், அதைப்பற்றி விசாரம் செய்ய வேண்டும். அந்த பொருளினால் அடையப்போகும்
சுகத்தை நினைக்கும்போது அதனால் அடையப் போகும் துன்பத்தையும் நினைத்துப்பார்க்க
வேண்டும். இதனால் அதன் மீதுள்ள பற்று நீங்கி வைராக்கியத்தை அடையலாம். ஒரு பொருளை அனுபவிப்பதால் உடனடியாக சுகம்
கிடைக்கும். பிறகு அதற்கு
அடிமையாகிவிட்டால் அதனால் துன்பத்தைத்தான் அனுபவிப்போம் என்று அடிக்கடி நினைத்துப்
பார்க்க வேண்டும்.
असक्तिरनभिष्वङ्गः पुत्रदारगृहादिषु ।
नित्यं च समचित्तत्वमिष्टानिष्टोपपत्तिषु ॥ 09॥
13. அஸக்தி: சில மனிதர்களிடத்தில் பற்றின்மை, தன்னைச்சுற்றியுள்ளவர்களில் சிலர் என்னைச்
சார்ந்தவர்கள் என்ற பற்றின்மை. தன்னை
சுற்றியுள்ள சில மனிதர்கள் மீது வைத்திருக்கும் பற்றை சிறிது சிறிதாக
நம்மிடமிருந்து நீக்கி விட வேண்டும்.
பிறகு என்னுடையதல்ல என்ற முழுமையான தியாகம் வர வேண்டும்.
விளைவுகள்:
· நாம் யார் மீது அதிக
அன்பு வைத்திருக்கின்றோமோ உண்மையிலே அவர்களுக்குத்தான் அடிக்கடி துன்பத்தைக்
கொடுப்போம். அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவோம். அதனால் அவர்களுடைய சுதந்திரம்
பறிபோவதால் அவர்கள் துன்பம் அடைவார்கள்
· நம்முடைய சுதந்திரமும்
பறி போய்விடும். நாம் அவர்களையே
சார்ந்திருப்போம். நம் மனம் அவர்களையே சுற்றிக்கொண்டு இருக்கும்
· தர்மத்தை அவர்களுக்காக
விட்டுக் கொடுப்போம்
· யாரையும் நாம் நீண்ட
நாட்கள் நம் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது. சரியான நேரம் வரும்போது அவர்களே
பகைவர்களாக விடுவார்கள், துன்பம் கொடுப்பவர்களாக மாறி விடுவார்கள்
உபாயம்
· எல்லா உறவுகளும்
நிரந்தரமல்ல. எனவே எந்த உறவுமுறையையும் நிரந்தரமாக வைத்துக் கொள்ளலாம் என்று
நினைப்பது தவறு
· இது இயற்கையின் நியதி
என்று புரிந்து கொள்ள வேண்டும்
· நாம் பயன்படுத்தும்
அனைத்துக்கும் நான் உரிமையாளன் அல்ல, இவைகளை இறைவன் எனக்கு தற்காலிகமாக
அனுபவிப்பதற்கு கொடுத்திருக்கிறார் என்ற புத்தி வரவேண்டும்
· நம் மனதில்
பாதுகாப்பின்மையை உணரக்கூடாது. பகவான் நம்மை பாதுகாத்துக் கொண்டிருக்கிறார் என்ற
சிரத்தையுடன் இருக்க வேண்டும்
14. அனபி4ஷ்வங்க4ஹ – பற்றின்மை, மனைவி,
மக்கள், இல்லம் போன்றவற்றில் இருக்க வேண்டிய பற்றின்மை. இவைகளில் நான், என்னுடையது
என்ற புத்தியை உடையவன். இவர்களின் மீது
எல்லையற்ற பாசம் வைத்திருத்தல். அவர்களுக்கு வருகின்ற இன்ப-துன்பங்கள் தனக்கு வந்தது
போல அனுபவிக்கின்ற நிலை.
விளைவுகள்
· அதிக பற்றானது அவர்களது
பிரிவைத் தாங்கும் சக்தியை பறித்துவிடும்
· நாம் ஒருவரிடம் வைக்கும்
அதிக பற்றுபோல அவர்களும் நம்மை நேசிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பதால், அவ்வாறு
அவர்கள் இல்லையென்று அறிய வரும்போது அளவில்லாத துயரத்தை அடைவோம்
· அவர்களுக்கு நம் அன்பால் நல்லது
செய்வதாக நினைத்துக் கொண்டு கஷ்டத்தைத்தான் கொடுத்துக் கொண்டிருப்போம்.
· அளவாக அன்பு செலுத்துவது
மிகக்கடினம். எனவே அதிக முயற்சி செய்து
இதை கடைப்பிடிக்க வேண்டும்.
உபாயம்
· இருவருக்குமிடையே வரும் உறவானது
கர்மபலனால் ஏற்படுகின்றது என்ற அறிவு எப்பொழுதும் நம்மிடத்து இருக்க வேண்டும்.
கர்மபலன் தீர்ந்ததும் உறவும் சென்று விடும்
· ஒவ்வொருவரும் அவரவர்
கர்மபலத்தினால்தான் பிறக்கிறார்கள். இடம், குலம், பெற்றோர், மற்ற உறவுகள் பிராரப்த
கர்மத்தினால் அடையப்படுகிறது. எனவே எந்த உறவையும் நிலையாக இருக்குமென்று
எண்ணிக்கொண்டிருக்கக்கூடாது.
15. நித்யம் ச
ஸமசித்தத்வம் – எப்பொழுதும் சமமான மனநிலையோடு இருத்தல்
இஷ்டம் அனிஷ்ட உபபத்திஷு –
விரும்பியவைகளும், விரும்பாதவைகளும் வரும் போது இரண்டையும் சமமாக எடுத்துக் கொள்ளும்
மனநிலை.
உடலுக்கு வரும் குளிர்-வெப்பம்
போன்றவைகளும், மனதுக்கு வருபவைகளான சுக-துக்கம் போன்றவைகளும், புத்திக்கு
வருபவைகளான மான-அவமானம் போன்றவைகளும் அனுபவிக்க நேரிடும்போது அவைகளை சமமாக பாவிக்க
வேண்டும். மனிதப்பிறவிக்கு காரணம் நமது
பாவ-புண்ணியங்கள் சம அளவில் இருப்பதால்தான் என்று சாஸ்திரம் உரைக்கிறது. இதிலிருந்து நாம் அறிய வேண்டியது இன்பமும்,
துன்பமும் சம அளவில்தான் அனுபவித்து தீர்க்க வேண்டும். விரும்பத்தகுந்த, விரும்பத்தகாத சூழ்நிலைகள்,
உறவுகள் அமைகின்றது. வெளிசூழ்நிலைகளை
மாற்றும் சக்தி நமக்கு கிடையாது. ஆனால்
அதை எப்படி பாவிக்க வேண்டும் என்பது நம் கையில்தான் இருக்கின்றது.
விளைவுகள்: இந்த சமசித்தம்
இல்லையென்றால் சூழ்நிலைகள்தான் நம் இன்ப-துன்பத்தை முடிவெடுக்கும். எனவே சமசித்தம் மிக அவசியம்.
உபாயம்: -
ü வெளி சூழ்நிலைகளை
மாற்றும் சக்தி நமக்கு கிடையாது. ஆனால்
அதை எப்படி பொருட்படுத்த வேண்டும் என்ற சக்தி நம்மிடம் இருக்கிறது. உதாரணமாக
ஒருவர் நம்மை திட்டும்போது அவரை கட்டுப்படுத்த நமக்கு உரிமை கிடையாது. ஆனால் அவரது இந்த நடத்தையை எப்படி எடுத்துக்
கொள்ள வேண்டும் என்ற உரிமை நம்மிடம் இருக்கிறது.
ü நமக்கு வரும்
அனைத்தையும் இறைவனுடைய பிரசாதமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ü சுக-துக்கங்கள் நிலையானதல்ல.
எதுவும் கடந்து போகும் என்ற அறிவோடு அனுபவித்தல்
ü வந்ததை அப்படியே
ஏற்றுக்கொள்ளுதல் என்ற மனப்பான்மை. எதுவுமே ஈஸ்வரனின் நியதிப்படித்தான்
நடக்கின்றது என்ற அறிவு இருக்க வேண்டும்.
मयि चानन्ययोगेन भक्तिरव्यभिचारिणी ।
विविक्तदेशसेवित्वमरतिर्जनसंसदि ॥ 10 ॥
16. பக்தி - இறைவனிடத்தில் வைக்கும் அன்பு
அனன்யயோகேன - வேறெந்த
சிந்தனையுமில்லாமல்
அவ்யபி4சாரிணீ - பிளவுபடாத, மாறாத
நம்பிக்கையுடன், சிரத்தையுடன்
மயி ச - என்னிடத்தில்
பக்தி -
அன்பை செலுத்துதல்
பக்தி செலுத்திக் கொண்டிருக்கும்போது மனம்
ஒருமுகப்பாட்டுடனும், சிரத்தையுடனும் இருக்க வேண்டும். பகவானை முழுநம்பிக்கையோடும், மனம் மாறாமலும்
பக்தியுடன் வணங்கிக் கொண்டிருக்க வேண்டும்.
பக்தியின் தேவை
ü நம்மிடத்திலுள்ள
தீய பண்புகளை நீக்கிவதற்கும், நற்பண்புகளை வளர்த்துக் கொள்ளவும் பக்தி தேவை. நாம் தோல்விகளை சந்திக்கும்போது மனச்சோர்வு
அடைந்து விடலாம், மனவுறுதி இழந்து விடலாம். இந்த நிலையில்தான் பக்தியானது நமக்கு
தேவையான சக்தியையும், நம்பிக்கையையும் கொடுக்கும். சர்வசக்தியுள்ள இறைவனின் உதவியை நாடும்போது நம்
முயற்சியிலிருந்து நழுவி விடாமல் தொடர்ந்து செய்து வெற்றியை அடைய உதவும்.
ü மனதிலுள்ள
குறைகளையும், வேதனைகளையும், அன்புக்காக தவிக்கின்ற வேளையிலும் பக்திமூலம் இவைகளை
போக்கிக் கொள்ளலாம். இவ்வாறு பக்தி மன
வளர்ச்சிக்கும், மனவுறுதிக்கும் உறுதுணையாக இருக்கிறது
ü சாஸ்திரங்கள்
உரைக்கும் தர்மங்களையும் இறைவன் வகுத்த நியதிகளையும் கடைப்பிடிப்பது பகவான்
மீதுள்ள நம்பிக்கையை வெளிக்காட்டுகிறது
பக்தியை வளர்க்க உதவும் சாதனங்கள்
ü பக்தர்களிடம்
சத்சங்கம் வைத்திருக்க வேண்டும். பக்தர்களுடைய வரலாறுகளையும், அவர்களை எழுதிய
பாடல்களை ஓதுதல், படித்தல்
ü பக்தியுணர்வு
செயலாக வெளிப்படும். உதாரணமாக தியானம் செய்தல், ஜபம் செய்தல், பூஜை செய்தல்
போன்றைவைகள். இந்த செயல்கள் மூலம் பக்தியை வளர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்
17. விவிக்த தேஶ
ஸேவித்வம்: தனிமையில்
இருத்தல். (தூய்மையான, பயமற்ற, மக்கள் கூட்டம் இல்லாத இடம்)
விவிக்த தேஶ - மக்கள் இல்லாத
இடம், அசுத்தமான இடத்திலிருந்து விலகி இருத்தல், பயமற்ற இடம்
தனித்திருத்தல்
ü அவ்வப்பொழுது
தனிமையிலிருந்து பழகுதல்
ü விழித்திருக்க
வேண்டும். எடுத்துக் கொண்ட லட்சியத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும்
ü பசித்திருக்க
வேண்டும். உணவு உட்கொண்ட பிறகும்
பசியிருக்க வேண்டும்
ü வயதான காலத்தில்
தனியாக இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு நம்மை தயார் படுத்திக் கொள்வதற்கு உதவும்
தனிமையின் தேவை
ü நாம் தெரிந்து
கொண்ட நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள உதவுகிறது
ü சிந்திக்கும்
சக்தி வளர்த்துக் கொள்ள வாய்ப்பாக அமைகிறது
ü சுதந்திரமாக
செயல்பட சக்தி கிடைக்கும்
ü நம் உள்மனதில்
இருக்கும் வாஸனைகள், உண்மையான உணர்வுகள் தனிமையில் இருக்கும்போதுதான் வெளிவரும். நம் மனதையே நாம் பார்க்கக்கூடிய கண்ணாடிப்
போன்று பயனளிக்கும். நம்முடைய உண்மையான
சுபாவங்கள் வெளிப்படும்
ü மனதிலிருக்கும்
அசுத்தங்கள் வெளிப்பட்டு காட்டிக் கொடுக்கும். அதைக் கண்டு பயமும் ஏற்படலாம்.
சோகம், வெறுப்பு போன்ற உணர்ச்சிகளும் வெளிப்படலாம்
18. அரதி ஜனஸம்ஸதி – நற்பண்புகளில்லாத
மனிதர்களிடமிருந்து விலகி இருத்தல்
நான்கு வகையான வாழ்க்கையை மேற்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள்
- எப்படி
வேண்டுமானாலும் வாழலாம் என்று வாழ்பவர்கள்
- தர்மத்தின்படி
இன்பத்தை மட்டும் அனுபவித்து வாழ்பவர்கள்
- மோட்சத்தை
விரும்பி, அதை அடைய விரும்புபவர்கள்
- மோசத்தை
அடைந்தவர்கள்
மேற்கூறிய முதல் இரண்டு வகையான மனிதர்களிடமிருந்தும், விவேக-வைராக்கியம்
இல்லாத மனிதக் கூட்டத்தினரிடமிருந்து விலகி வாழ வேண்டும்.
अध्यात्मज्ञाननित्यत्वं तत्त्वज्ञानार्थदर्शनम् ।
एतज्ज्ञानमिति प्रोक्तमज्ञानं यदतोऽन्यथा ॥ 11 ॥
19. தத்துவ ஞானார்த2 தர்ஶனம் – பிரம்மத்தைப் பற்றிய அறிவை அடைந்தால்
அடையும் பலனை மனதுக்குள் எண்ணிப்பார்க்க வேண்டும். இந்த பலன்தான் ஜீவன்முக்தி நிலை, அதாவது
எப்பொழுதும் மனநிறைவுடன் இருத்தல்.
சம்சாரத்திலிருந்து முழுவதுமாக நீங்கி இருத்தல், விதேஹ முக்தி நிலை,
தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற பயம் எதுவும் இல்லாத நிலை. இந்த பண்பானது நம்மை உற்சாகப்படுத்தி
கொண்டிருக்கும். நம்முடைய முயற்சியில் சலிப்போ, தோய்வோ வந்து விடாமல்
பாதுகாக்கும்.
20. அத்3யாத்ம ஞான
நித்யத்வம் – ஆத்மா சம்பந்தமான விஷயத்தை கேட்பதில் ஈடுபடுதல், ஆத்ம ஞானத்தையடை உதவும்
விசாரம் செய்வதில் ஈடுபடுதல், ஆத்ம ஞானத்தை அடைய உதவும் சாதனங்களான சிரவணம்,
மனனம், நிதித்யாஸனம் ஆகியவற்றை பின்பற்றி கொண்டிருத்தல்
முதல் 19 பண்புகளை ஓரளவுக்கு கடைப்பிடித்தோமானால் 20வது பண்பின் பலனை நாம்
அனுபவிப்போம் இந்த பண்புகளை
சுபாவமாக்காமல் ஆத்ம விசாரம் செய்வதனால் எந்த பலனும் கிடைக்காது. வெறும் அறிவு மட்டும்தான் இருக்கும்.
அனுபவத்திற்கு வராது. வெறும் சப்தம் மட்டும்தான் இருக்கும், அர்த்தம் இருக்காது.;
ஏதத்3 - இந்த இருபது
பண்புகளும்
ஞானம் இதி ப்ரோக்தம் – ஞானம் என்று சொல்லப்படுகிறது.
அக்ஞானம் யத்3 அதஹ அன்யதா – இவைகளுக்கு மாறாக இருப்பதெல்லாம் அக்ஞானம்
என்று கூறப்படுகிறது. இது நம்மை அறியாமையிலே வைத்திருக்கும்.
ஞானத்தை அடைவதற்கு நம்மை தயார் செய்து கொள்ளுதல், தகுதிகளை அடைவதற்கு முயற்சி
செய்தல் ஒரு நிலையாகும். ஆத்ம உபதேசம்
கேட்டல் என்பது இரண்டாவது நிலையாகும்.
தகுதியில்லாமல் இருந்தாலும் ஆத்ம ஞான உபதேசம் கேட்டுக் கொண்டு
இருக்கலாம். இதுவே நம்மை தகுதி அடைவதற்கு
உதவு செய்யும். இந்த பண்புகளை எல்லாம்
அடைய முடியுமா என்ற சந்தேகத்தால் துவண்டு விடக்கூடாது, விடாமுயற்சி செய்து
அடைந்திட வேண்டும். இவைகளை அடைய வேண்டும்
ஆசை இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
அவைகளின் மீது மதிப்பு வைத்திருக்க வேண்டும். இதுவே நம்மை அவைகளை அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுத்தும். இவைகளை அடையும்
முயற்சியில் பல தடவைகள் தோல்வியடைந்தாலும், அதனால் துவண்டு விடாமல், பக்தியின்
மூலமாக சக்தியை பெற்று வெற்றியடையும் வரை முயற்சியை தொடர வேண்டும்.
ज्ञेयं यत्तत्प्रवक्ष्यामि यज्ज्ञात्वामृतमश्नुते ।
अनादि मत्परं ब्रह्म न सत्तन्नासदुच्यते ॥ 12 ॥
ஞேயம், புருஷன், க்ஷேத்ரக்ஞன் இவைகள் மூன்றும்
ஆத்மாவைத்தான் குறிக்கின்றது. ஞேயம் என்ற
சொல்லுக்கு அறியப்படுவது என்று பொருளும், அறியத்தக்கது என்ற பொருளும் உண்டு. ஞேயம் என்ற
சொல்லுக்கு இங்கு பிரம்மன் என்றுதான் பொருள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஞேயம் யத் தத்3 ப்ரவக்ஷயாமி
– எது பிரம்மமாக இருக்கின்றதோ அதை தெளிவாக விளக்கப்போகிறேன்.
யத் ஞாத்வா அம்ருதம் அஶ்னுதே – எதை அறிந்தால்
மரணமற்ற நிலையை அடைவோமோ அதை தெளிவாக விளக்கப்போகிறேன்.
இந்த ஆத்ம ஞானம் மட்டும்தான் மனநிறைவைக்
கொடுக்கும். மற்றவைகள் நமக்கு அறிந்ததை அடைய வேண்டும் ஆசையைத்தான் கொடுக்கும்.
பிரம்மத்தினுடைய மூன்று அடைமொழிகள்
அனாதி3மத் – பிறப்பற்றது, காலத்திற்குட்படாதது,
காரணமற்றது
பரம் – மேலானது
நிரதிஶயம் – எல்லையற்றது, வரையறுக்கப்படாதது
(தேச, கால, வஸ்து)
ந ஸத் உச்யதே – இருக்கின்றது
என்றும் கூறமுடியாது
ந அஸத் – இல்லையென்றும்
கூறமுடியாது
- ஸத் என்பது வெளித்தோற்றத்திற்கு
வராத நிலையை குறிக்கின்றது
- அஸத் என்பது
வெளித்தோற்றத்திற்கு வந்த நிலையை குறிக்கின்றது
- பிரம்மன்
காரணமும் அல்ல காரியமும் அல்ல
- இருத்தல்,
இல்லை என்ற சொல்லை ஏதோ ஒன்றுடன் சேர்த்துதான் சொல்கின்றோம். உதாரணமாக பானை
இருக்கின்றது, உடைந்த பின் பானை இல்லை என்று கூறுவோம்.
- நாம் புரிந்து கொண்ட ஸத்-இருத்தல் என்ற சொல் ஒரு காலத்தில் இல்லாத நிலைக்கு சென்று விடலாம். அதேப்போன்று இல்லாமையும் ஒரு காலத்தில் இருத்தல் நிலைக்கு வந்து விடலாம். இதை வ்யாவஹாரிக ஸத், அஸத் என்று கூறப்படுகிறது. இங்கு சொல்லப்படுகின்ற பிரம்மன், வ்யாவஹாரிக ஸத்யம் அல்ல, வியாவஹாரிக அஸத்தும் அல்ல. இது பாரமார்த்திக ஸத்யமாக இருக்கின்றது. அறையில் உள்ள வெளிச்சமானது இருப்பதையும் காட்டுகின்றது, இல்லாததையும் காட்டுகின்றது. எதையும் சார்ந்தும் இல்லை. நம்முடைய அறிவுதான் இருத்தலையும், இல்லாததையும் காட்டிக் கொடுக்கின்றது. இந்த அறிவு பாரமார்த்திக ஸத்யம் என்று உபநிஷத் கூறுகிறது. அதற்கு அழிவு கிடையாது. நாம் இந்த பாரமார்த்திக ஸத்யத்தை, வியாவஹாரிக ஸத்யமாக புரிந்து கொண்டிருக்கின்ற தவறை செய்து கொண்டிருக்கின்றோம். அழியாத பிரம்மன் நான் என்று தெரிந்து கொண்டால் நான் அழியாதவன், பூரணமானவன் என்று அறிந்து கொள்வோம். அதனால் அபயத்தை அடைவோம்.
सर्वतः पाणिपादं तत्सर्वतोऽक्षिशिरोमुखम् ।
सर्वतः श्रुतिमल्लोके सर्वमाव्रुत्य तिष्टति ॥ 13 ॥
இது அத்யாரோப ஸ்லோகம்.
ஸர்வத: பாணி பாத3ம் தத3 – அந்த
பரபிரம்மன் எல்லாவிடத்திலும் கை, கால்களுடன் இருக்கின்றது.
ஸர்வத: சக்ஷு, ஶிர: முக2ம் ஸர்வத: ஶ்ருதிமத் லோகே – இதுவே எல்லாவிடத்திலும், தலைகள், கண்கள், வாய்கள், காதுகள் ஆகியவைகளுடன் இருக்கின்றன.
நாம் உலகத்தில் பார்க்கின்ற எல்லோருடைய கைகளும், கால்களும் பிரம்மத்தினுடயது. இவைகள் பிரம்மன் மீது ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்றது. உலகத்திலுள்ள எல்லா தலைகளும், கண்களும்,
காதுகளும், வாய்களும் பிரம்மத்தைச் சார்ந்தது.
இதிலிருந்து எல்லா புலன்களும், மனமும், புத்தியும் உடல்களும் பிரம்மத்தைச்
சார்ந்துள்ளது என்று அறிய முடிகின்றது.
ஸர்வம் ஆவிருத்ய ஆதிஷ்ட3தி – எல்லா
பொருட்களையும் இது வியாபித்திருக்கிறது.
பிரம்மத்தை உபதேசிக்கும் முறையைப் பற்றிய
விசாரம்
பிரம்மன் ஒன்றுதான் இருக்கிறது என்றும் , வேறெதுவும்
இல்லையென்றும் உபதேசிக்க வேண்டும். மேலும் தோன்றிக் கொண்டிருக்கும் இந்த உலகத்தைப்
பற்றி சொல்லியாக வேண்டும். அதாவது ஜகத்
மித்யா என்று புரிய வைக்க வேண்டும்.
நம்முடைய அனுபவத்திற்கு இல்லாத பிரம்மன் ஸத்யம் என்று புரிய வைக்க
வேண்டும். இதை புரிய வைப்பதற்கு
அத்யாரோப-அபவாதம் என்ற முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அத்யாரோபம் என்றால் ஏற்றி வைத்தல், அபவாதம்
என்றால் ஏற்றி வைத்ததை நீக்கி விடுதல்.
எவைகளெல்லாம் நமக்கு தெரிந்து
கொண்டிருக்கின்றதோ, அனுபவத்தில் இருக்கின்றதோ அவைகளெல்லாம் பிரம்மத்தில் ஏற்றி
வைக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே பிரம்ம
காரணம், ஜகத் காரியம் என்ற நிலையை உணர்த்தும்.
பிறகு இந்த ஜகத் வெறும் தோற்றமே உண்மையில் அது இல்லை என்று அபவாதத்தின்
மூலம் புரிய வைக்கிறது. உதாரணமாக
கயிற்றில் தெரியும் பாம்பை முதலில் ஏற்றுக் கொள்ளுதல் அத்யாரோபம், பிறகு அது
கயிறுதான் என்று பாம்பானது அபவாதம் செய்யப்படும்.
அறியாமையில் பார்க்கும் பாம்பு அத்யாஸம் என்று கூறப்படும். அதிஷ்டானத்தின்
உதவியால்தான் அபவாதம் செய்ய முடியும்.
இந்த உலகத்தை மூன்றாக பிரிக்கலாம். அவைகள் பார்த்து அனுபவித்துக் கொண்டிருக்கும்
பொருட்கள், நமது உடல், மனம். இவைகளெல்லாம்
உண்மையில் இருக்கின்றது என்று திடமாக நம்புகிறோம். சாஸ்திரம் இவைகள் இருப்பது போல்
தோன்றுகின்றன ஆனால் உண்மையில் அவைகள் இல்லை என்று கூறுகிறது. எப்பொழுது இந்த உலகத்திலிருந்து
துயரத்தை அடையவில்லையோ, திருப்தியை அடையவில்லையோ அப்போதுதான் இது உண்மையில் இல்லை என்று
நாம் புரிந்து கொண்டிருக்கின்றோம் என்று அறிந்து கொள்ள வேண்டும்.
सर्वेन्द्रियगुणाभासं सर्वेन्द्रियविवर्जितम् ।
असक्तं सर्वभृच्चैव निर्गुणं गुणभोक्तृ च ॥ 14 ॥
ஸர்வ இந்த்ரிய குணாபா4ஸம் – பிரம்மமானது
அனைத்து இந்திரியங்களுடனும், அந்தக்கரணங்களுடனும் அவைகளுடைய செயல்களுடனும் விளங்கிக்
கொண்டிருக்கின்றது
ஸர்வ இந்த்ரிய விவர்ஜிதம் – அனைத்து
இந்திரியங்களுமற்றது
அஸக்தம் ஸர்வப்4ருத் ச ஏவ – உலகத்திலுள்ள
அனைத்தையும் தாங்கிக் கொண்டு இருக்கின்றது.
அதேசமயம் எதனோடும் சம்பந்தப்படாததாகவும் இருக்கிறது. இதிலிருந்து பிரம்மன் தாங்கிக் கொண்டிருக்கும்
இந்த ஜகத்தானது கற்பணையானதாக இருக்க வேண்டும்.
அல்லது ஜகத் பிரம்மத்தின் மீது ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்றது என்று
அறிந்து கொள்ளலாம். உதாரணமாக பாம்பு
கயிற்றின் மீது ஏற்றி வைக்கப்பட்டு இருக்கிறது, அதேசமயம் கயிறு பாம்புடன்
சம்பந்தப்படாததாகவும் இருக்கிறது. பாம்பு
கயிற்றின் மீது பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் கயிறு மட்டும்தான் இருக்கிறது
குணபோ4க்த்ரு ச – குணங்களை
அனுபவித்துக் கொண்டிருக்கிறது. உலகத்திலுள்ள அனைத்தும் மூன்று குணங்களின்
அடிப்படையில்தான் இருக்கிறது. சத்துவ குணத்தின் வெளிப்பாடான ஆத்மஞானம், சுகம், ரஜோ
குணத்தின் வெளிப்பாடான செயல்களை செய்து கொண்டிருப்பது போன்றவைகள், தமோ குணத்தின்
வெளிப்பாடான சோம்பல், உறக்கம், கவனமின்மை ஆகியவைகளை ஜீவர்கள் அனுபவித்துக் கொண்டு
இருக்கிறார்கள். இங்கே ஜீவனானது
பிரம்மத்தின் மீது ஏற்றி வைக்கப்படுகின்றது
நிர்குணம் – பிரம்மன்
குணங்களற்றது.
விசாரம்”
நம் உடல் பஞ்ச பூதங்களால்
உருவாக்கப்பட்டது. எனவே இது ஜடமானதுதான். ஆனால் உணர்வு பூர்வமாக இருக்கும்வரை நம்மால்
ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால்
உயிரற்றதாகிவிட்ட பிறகு அதை ஜடமாகவே கருதுகிறோம்.
இந்த உடல் ஜடமல்ல என்று கூறுவது அதிலிருக்கும் உணர்வுதான் என்று புரிந்து
கொள்ள முடிகிறது. இந்த உடல் அழியக்கூடியது
என்றும் தெரிகின்றது. இந்த உடல் ஒரு காலத்தில் இல்லை, எதிர் காலத்தில் இல்லை ஆனால் இடைபட்ட காலத்தில் மட்டும்
இருக்கிறது. இந்த லட்சணங்களை உடையதை மித்யா என்று கூறுவர். இதிலிருந்து நம் உடலும் மித்யாதான் என்று
புரிந்து கொள்ள வேண்டும். அதனுள்
இருக்கும் உணர்வு சத்யமாக இருக்கின்றது. அனுபவ
காலத்தில் மட்டும் இருப்பது மித்யா என்று கூறப்படுகின்றது.
இந்திரியங்கள் அந்தக்கரணங்கள் செயல்பட
பிரம்மன்தான் காரணமாக இருக்கின்றது.
அதேசமயம் பிரம்மனிடத்தில் அவைகள் கிடையாது. நான் என் உடலிலுள்ள இந்திரியங்களாக இருக்கிறேன்
ஆனால் இந்திரியமற்றவன். எனவே நான் சத்யம் மற்றவைகள் அனைத்தும் மித்யாவாகின்றன. இந்திரியங்களுக்கு
வரும் கஷ்ட-நஷ்டங்கள் என்னைச் சார்ந்ததில்லை
बहिरन्तश्च भूतानामचरं चरमेव च ।
सूक्ष्मत्वात्तदविज्ञेयं दूरस्थं चान्तिके च तत् । 15 ॥
பஹிரன்தஶ்ச பூதானம் - நமது உடலுக்கு
வெளியேயும், உள்ளேயும் இருக்கின்றது பிரம்ம தத்துவம்
அசரம் சரம் ஏவம் ச – அசைந்து
கொண்டும், அசையாததாகவும் இருக்கிறது இந்த பிரம்ம தத்துவம்
துரஸ்தம் ச அந்திகே ச தத் – இது மிக
தொலைவிலும் இருக்கிறது, அருகிலும் இருக்கிறது.
ஈஸ்வரன் என்ற நோக்கில் மிக தொலைவில் இருப்பது போலவும், ஆத்மா என்ற நோக்கில்
மிக அருகில் இருப்பது போலவும் இருக்கிறது.
அறியாமையில் இருப்பவர்களுக்கு மிகதூரத்திலும், ஞானிகளுக்கு மிக அருகிலும்
இருக்கிறது. இதிலிருந்து எது எங்கும்
வியாபித்து கொண்டிருக்கின்றது என்று அறிந்து கொள்ள முடிகின்றது.
ஸூக்ஷ்மத்வாத் தத்3 அவிக்ஞேயம் – இது மிக
நுண்ணியதாக இருப்பதால் அவ்வளவு சுலபமாக கிரகித்துக் கொள்ள முடியாது. அதை அறிந்து கொள்வது மிகவும் கடினம்.
अविभक्तं च भूतेषु विभक्तमिव च स्थितम् ।
भूतभर्तृ च जज्ज्ञेयम् ग्रसिष्णु प्रभविष्णु च ॥ 16 ॥
அவிப4க்தம் ச பூதேஷு அவிப4க்தம் இவ ச ஸ்தி2தம் –
எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் பிளவுப்படாமல் இருந்து கொண்டும்
அதேசமயத்தில் பிளவுபட்டதுபோல் தெரிந்து கொண்டும் இருக்கிறது. ஒரே ஒரு பிரம்மன்தான்
எல்லா ஜீவர்களிடத்திலும் இருக்கிறது.
ஆனால் அனுபவத்தில் ஜீவர்களிடத்திலே வேற்றுமைகள உடையதாகவும் இருக்கிறது.
பூ4தப4ர்த்ரு ச தத்3 ஞேயம் க்ரஸிஷ்ணு
ப்ரப4விஷ்ணு ச – இந்த பிரம்மமானது உலகத்திலுள்ள அனைத்து
தோற்றத்திற்கும், இருத்தலுக்கும், லயத்திற்கும் காரணமாக இருக்கின்றது
விசாரம்
இந்த உலகம் மாயையின் துணைக் கொண்டு
தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றது. உடல்,
மனம், உலகம் என்று நாம் பிரித்து வைத்திருக்கின்றோம். இதில் மனமானது மிகமிக
சூட்சுமமாக இருக்கிறது. பிரம்மன் ஸத்தாகவும்,
சித்தாகவும் இருக்கிறது. மனதிற்கு பிரம்மத்தை பிரதிபலிக்கும் தன்மை இருக்கின்றது. எனவே மனமானது பிரம்மத்தினிடம் இருக்கும் அறிவு
ஸ்வரூபத்தை பிரதிபலித்துக் கொண்டு அறிவு பூர்வமாக இயங்குகிறது. சூட்சும சரீரம் ஸ்தூல சரீரத்தை விட்டு
செல்வதுதான் மரணம். எனவே மரணமடைந்ததும் ஸ்தூல சரீரம் ஜடமாகி விடுகின்றது. பிரம்மமானது
பிளவுபடாமல் இருந்து கொண்டு எல்லா ஜீவர்களுக்கும் ஒன்றான ஆதாரமாக இருக்கிறது. ஆனால் அது
வேற்றுமைகளையுடையதாக இருப்பது போல் தோன்றுகிறது.
ஜீவர்களின் அசைவு, அசையாத தன்மையானது பிரம்மத்தின் மீது ஏற்றி
வைக்கப்பட்டிருக்கின்றது.
ज्योतिशामपि तज्ज्योतिस्तमसः परमुच्यते ।
ज्ञानं ज्ञेयं ज्ञानगम्यं ह्रदि सर्वस्य विष्टितम् ॥ 17 ॥
இது ஒளியை கொடுப்பவைகளுக்குள் ஒளியாக
இருக்கின்றது. இங்கு ஜோதி என்பதற்கு அறிவை கொடுக்கும் கருவி (பிரமாணம்) என்று
பகவான் குறிப்பிடுகின்றார். அறிவைக் கொடுக்கும் கருவிக்கு தடையேதும் இல்லையென்றால்
அறிவைக் கொடுக்கும். வெளிச்சம்
இருட்டிலுள்ள பொருட்களைக் காட்டிக்கொடுக்கும், ஆனால் இருள் சூழ்ந்து விட்டால் இது
பிரமாணமாக செயல்படாது. மற்றப்பொருட்கள்
பிரகாசிக்க சூரியனை சார்ந்திருக்கின்றது.
சூரியனை பிரகாசிக்க கண்கள் ஜோதியாக இருக்கின்றது. கண்களை பிரகாசிக்க மனம்
ஜோதியாக இருக்கின்றது. மனதிற்கும், கண்களுக்கும் பார்க்கும் சக்தி இருக்கிறதா, இல்லையா என்பது தெரிகின்றது. எனவே மனதை
பிரகாசிக்க கூடிய சாட்சி என்று ஒன்று இருக்கிறது. இதுவே ஆத்மா என்று
அழைக்கப்படுகிறது ஆத்மாவே மனதுக்கு ஜோதியாக இருக்கின்றது. இதை பிரகாசிக்க எதனாலும் முடியாது. இது தானாக
பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது.
ஜ்யோதிஶாம் அபி – அனைத்து
ஜோதிகளுக்குள்ளும், அறிவை கொடுக்கும் கருவிகளுக்குள்ளும்
தத்3 ஜ்யோதி – அது ஜோதியாக,
அறிவை கொடுக்கும் கருவியாக இருக்கிறது
நான் இருக்கிறேன் என்பதற்கு எந்த பிரமாணமும்
தேவையில்லை. ஆத்மாதான் ஸ்வயம் ஜோதியாக இருக்கிறது. நான் ஆத்மாவாக இருப்பதால் நான்தான் அனைத்தையும்
பிரகாசிக்கிறேன் என்று உணர்ந்து கொள்ள வேண்டும்.
தமஸ: ப்ரம் உச்யதே – இருளையும்
கடந்து மேலானதாக இருப்பதாக சொல்லப்படுகின்றது
இது இருளையும் பிரகாசிக்கின்றது. இருளான அறியாமையையும் விளக்குகின்றது. ஜோதியான அறிவையும் விளக்குகின்றது. இது
அறிவுக்கும், அறியாமைக்கும் அப்பாற்பட்டதாக இருக்கிறது. மேகங்கள் சூரியனை மறைப்பது போல, அறியாமை
ஆத்மாவை மறைத்துக் கொண்டிருக்கிறது.
ஞானம் ஞேயம் – ஞான சாதனமாக
இருக்கின்ற நற்பண்புகள், பிரம்மன்
ஞானக3ம்யம் – ஆத்ம
ஞானத்தினால் அடையும் பலனான மோட்சம்
ஸர்வஸ்ய ஹ்ருதி3 விஷ்டிதம் – இவை மூன்றும்
எல்லோருடைய மனதில் குடிக் கொண்டிருக்கிறது
இவைகளை அடைவதற்கான சாதனங்களை விடாமுயற்சியுடன்
கடைப்பிடிக்க வேண்டும். இவைகளை அடைவதற்கு
தேவையான சாதனங்களை பயன்படுத்தினால் அடைந்து விடலாம்
इति क्षेत्रं तथा ज्ञानं ज्ञेयं चोक्तं समासतः ।
मद्भक्त एतद्विज्ञाय मद्भावायोपपद्यते ॥ 18 ॥
இதி க்ஷேத்ரம் – இவ்விதம்
க்ஷேத்ரம் என்பதையும்
ததா2 ஞானம், ஞேயம் – இவ்விதம்
ஞானசாதனமான நற்பண்புகளாலும், பிரம்மன் என்று அழைக்கப்படுகின்ற க்ஷேத்ரக்ஞனை
பற்றியும்
ச உக்தம் ஸமாஸத: - என்னால் சுருக்கமாக சொல்லப்பட்டது
மத்3ப4க்த – என்னுடைய
பக்தனாக இருந்து கொண்டு
எதத்3 விக்ஞாய – அதனுடைய பலனாக ஞானத்தை அடைந்து
மத்3 பா4வாய உபபத்3யதே – என்னுடைய
ஸ்வரூபமாக மாறுகிறான், என்னை அடைகிறான், என்னுடைய பா4வத்தை அடைகிறான்
प्रकृतिं पुरुषं चैव विद्ध्यनादि उभावपि ।
विकारांश्च गुणांश्चैव विद्धि प्रकृतिसम्भवान् ॥ 19 ॥
ப்ரக்ருதியையும், புருஷனையும் அனாதியென்று
அறிந்து கொள்ள வேண்டும். ஆதியும் அந்தமும் இல்லாதவைகளாக தெரிந்து கொள். புருஷனை
அனாதியென்று சொல்வதற்கு காரணம் அது எல்லாகாலத்திலும் இருப்பதால்தான்.
ப்ரக்ருதியும் அனாதியென்று சொல்வதற்கு காரணம் அது இல்லாததாக, மித்யாவாக இருப்பதால்தான். உதாரணமாக களிமண், பானை என்ற சொற்களில் களிமண்
பானை இருக்கும்போதும், இல்லாத போதும் இருந்து கொண்டிருக்கும். பானை வெறும் நாம-ரூபம் அதுவும் களிமண்ணைச்
சார்ந்துதான் இருக்கும். எனவே அது மித்யா என்று அழைக்கிறோம். இதுபோல ப்ரக்ருதி என்பது நாம-ரூபமான பானை
போன்றது, புருஷன் என்பது களிமண் போல என்றும் இருக்கிறது.
விகாரம் ச – ஸ்தூல பஞ்ச பூதங்கள்
குணாம் ச ஏவ – குணங்களும் கூட சேர்ந்து
ப்ரக்ருதி ஸம்ப4வான் - ப்ரக்ருதியிலிருந்து தோன்றியுள்ளது
வித்3தி4 – அறிந்து கொள்
ப்ரக்ருதி நாம் பார்த்து அனுபவிக்கின்ற பஞ்ச
பூதங்களாக மாற்றத்தையடைகின்றது என்று அறிந்து கொள். அதிலிருக்கும் குணங்களும் கூட
ப்ரக்ருதியிலிருந்துதான் வந்திருக்கின்றது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
நீர், நிலம், நெருப்பு, ஆகாசம், வாயு à சுவை, மணம்,
உருவம், சத்தம், ஸ்பர்ஶம்
சத்துவ, ரஜஸ், தமஸ் என்கின்ற மூன்று
குணங்களும், ப்ரக்ருதியிலிருந்துதான் வந்துள்லது.
எல்லா பண்புகளும் இயற்கையிலே ப்ரக்ருதியிலிருந்துதான் தோன்றி உள்ளது.
ப்ரக்ருதி – தன்மை,
சுபாவம் என்பவைகள் பொதுவான அர்த்தங்களாகும்.
சாங்கிய சாஸ்திரத்தில் ப்ரக்ருதி, புருஷன் என்ற இந்த இரண்டு சொற்களுக்கும்
வேறு அர்த்தம் உண்டு. இந்த ஸ்லோகத்தில் உள்ள ப்ரக்ருதி என்ற சொல் மாயை என்று
அர்த்தமாகிறது. இந்த ப்ரக்ருதியானது உபாதான காரணமாக இருக்கிறது. இதிலிருந்து வெளிப்பட்ட காரியங்களுக்கு
விக்ருதி என்று கூறப்படுகிறது. க்ஷேத்ரம்
என்பதை விக்ருதியாக கூறலாம்.
புருஷன் – ஆண், கணவன்
என்பது பொதுவான அர்த்தங்கள். வேதாந்தத்தில் இது பரபிரம்மத்தை குறிக்கிறது. க்ஷேத்ரக்ஞனை குறிக்கிறது. இது இரண்டு விதத்தில் தோன்றியுள்ளது. முதலாவது உடலில் இருக்கும் தத்துவம், சாக்ஷியாக இருக்கின்ற அறிவு தத்துவம்.
இரண்டாவது அனைத்தையும் வியாபித்து இருப்பது.
வேற்றுமைகள்
|
புருஷன்
|
பிரக்ருதி
|
1 |
ஸத்யம் |
மித்யா |
2 |
அறிவு
ஸ்வரூபம்-சேதனம் |
ஜடம் |
3 |
நிர்விகாரம்-
மாற்றத்தை
அடையாதது |
சவிகாரம்
- மாற்றத்திற்குள்ளாவது |
4 |
நிர்குணம்-
குணங்களற்றது |
த்ரிகுணாத்மிகா
–சத்துவ, ரஜஸ், தமஸ் ஆகிய மூன்று குணங்களை
உடையது. |
कार्यकारणकर्तृत्वे हेतुः प्रकृतिरुच्यते ।
पुरुशः सुखदुःखानां भोक्तृत्वे हेतुरुच्यते ॥ 20 ॥
கார்ய – ஸ்தூல உடல்,
கரணம் – மனம், புலன்கள், சூட்சும சரீரம்
கர்த்ருத்வம் – இவைகளின்
தோற்றத்திற்கு
ஹேது – உபாதான காரணம்
ப்ரக்ருதி உச்யதே – ப்ரக்ருதி
என்று சொல்லப்படுகின்றது.
ப்ரக்ருதியிலிருந்து தோன்றிய உலகமும்,
உலகப்பொருட்களும், ஸ்தூல, சூட்சும சரீரமும் அதனுடைய தன்மைகளுடன் கூடியிருக்கும்.
அதாவது இவைகள் மித்யா என்ற தன்மையுடன் இருக்கின்றது.
இந்த புருஷன் உடலில் சாட்சியாக இருந்து
கொண்டிருப்பதும், அனைத்தையும் வியாபித்து கொண்டிருப்பதுமான பிரம்மன்தான். சுக-துக்கங்கள் போன்ற அனைத்து அனுபவத்திற்கும்
(போ4க்த்ருத்வம்) காரணமாக இருக்கின்றது.
இயற்கையில் ப்ரக்ருதியிலிருந்து தோன்றியவைகள் ஜடமாக இருக்கும், ஆனால்
நம்முடைய மனம் உணர்வுடன் இருப்பதற்கு புருஷன் காரணமாக இருப்பதால் அவைகளை
அனுபவிப்பதற்கு உதவுகின்றது. புருஷன்
தன்னுடைய அறிவு ஸ்வரூபத்தை மனதில் பிரதிபிம்பிக்கும்படி செய்துவிட்டதால் மனம்
உலகத்தை அனுபவிக்கும் தன்மையை அடைகின்றது.
மனம் ஸ்தூல சரீரத்துடன் இருக்கும்போது உடலும் அறிவுடையதாக
இயங்குகின்றது. மனம் விதவிதமான
உணர்ச்சிகளையும் அனுபவிக்கின்றது. புருஷன்
நிமித்த-காரணமாக இருக்கின்றார். நிமித்த
காரணம் என்பது தான் மாறாமல் மற்றவைகளை செயல் மூலம் ஒன்று உருவாக காரணமாக இருப்பது.
இதனால் நாம் அடையும் பலனை பகவான் கூறுகின்றார். பொதுவாக நாம் “நான் என்று
கூறும்போது மனதையும் அதைச் சார்ந்த உடலையும் சேர்த்துத் தான் புரிந்து
கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் இந்த நான் என்ற
சொல்லால் குறிப்பிடுவது உணர்வுமயமாக இருக்கின்றது.
पुरुषः प्रकृतिस्थो हि भुङ्क्ते प्रकृतिजान्गुणान् ।
कारणं गुणसङ्गोऽस्य सदसद्योनिजन्मसु ॥ 21 ॥
புருஷஹ – பரபிரம்மன்
ப்ரக்ருதிஸ்தோ2 –
ப்ரகிருதியில்(மனதில்) இருந்து கொண்டு
பு4ங்க்தே ப்ரக்ருதிஜான் குணான் –
மாயையிலிருந்து தோன்றிய குணங்களை அனுபவிக்கின்றார். இன்ப-துன்பங்களை அனுபவித்துக்
கொண்டிருக்கின்றார், சம்சாரத்தை அனுபவிக்கின்றார்.
காரணம் குணஸங்கஹ அஸ்ய – இந்த
புருஷனுடைய சம்சாரத்திற்கு காரணம் குணத்தின் மீதுள்ள பற்று, சரீரத்தின் மீதும்,
உலகத்தின் மீதும் கொண்டுள்ள பற்று
ஸத்-அஸத் யோனி ஜன்மஸு – உயர்ந்த, தாழ்ந்த
சரீரம் என்ற பிறப்பெடுப்பதே சம்சாரம்
उपद्रष्टानुमन्ता च भर्ता भोक्ता महेश्वरः ।
परमात्मेति चाप्युक्तो देहेऽस्मिन्पुरुषः परः ॥ 22 ॥
சம்சாரம் நீங்க வேண்டுமென்றால் ஆத்ம ஞானத்தை
அடைந்திட வேண்டும். புருஷனை மூன்று விதமாக
புரிந்து கொள்ள வேண்டும். அவைகள்
1. அதன் உண்மை ஸ்வரூபத்தை மட்டும் பார்த்தல்,
2.
இந்த உலகத்திற்கு காரணமாக, ஆதாரமாக இருப்பதாக பார்த்தல்,
3. நமது சரீரத்தோடு
சேர்ந்து பார்த்தல்.
உபத்3ரஷ்டா - எந்த செயலும் செய்யாமல் வெறும் சாட்சியாக பார்த்துக்
கொண்டிருத்தல்,
உப-அருகில், த்ரஷ்டா – பார்ப்பவன்;
உபத்3ரஷ்டா - அருகிலிருந்து கொண்டு
பார்ப்பவைகளை (மனம், புத்தி, உடல்) பார்த்து கொண்டிருப்பவன்
அனுமந்தா – பரமாத்மாவின் ஸ்வரூப
லட்சணத்தை குறிக்கும் சொல் – எல்லாவற்றையும் செயல் செய்வதை அனுமதிக்கிறது, அதேசமயம் எதையும் செயலில் ஈடுபடுத்தாது, குறிப்பாக உடலை, மனதை, புத்தியை செயலில்
ஈடுபடுத்தாது.
ப4ர்தா – ஈஸ்வரனைக்
குறிக்கின்ற சொல்.
பரமாத்மா. அனைத்தையும்
பாதுகாத்துக் கொண்டு இருக்கின்றார். மாயை பிரம்மத்துடன் சேரும்போது படைத்தல், காத்தல், அழித்தல் போன்ற செயல்கள்
நடைபெறுகிறது.
போ4க்தா – இவரே
போக்தாவாக, அனுபவிப்பவராக இருக்கின்றார். ஜீவனாக இருந்து கொண்டு அனுபவிப்பவராக
இருக்கின்றார்.
மஹேஸ்வரன் – அனைத்தையும்
ஆள்பவர், தன் கட்டுக்குள் வைத்திருப்பவர்
பரமாத்ம – அழியாத அறிவு
ஸ்வரூபமாக இருக்கும் பரமாத்மா
இதி ச யுக்தஹ – இவ்வாறு
சொல்லப்படுகிறது
அஸ்மின் தே3ஹே புருஷ பர – இந்த
தேகத்தில் மேலான புருஷனாக இருந்து கொண்டிருக்கின்றார்.
य एवं वेत्ति पुरुषं प्रकृतिं च गुणैः सह ।
सर्वथा वर्तमानोऽपि न स भूयोऽभिजायते ॥ 23 ॥
புருஷம் ப்ரக்ருதிம் ச குணை – புருஷன்,
ப்ரகிருதி அதன் குணங்களோடு சேர்ந்து
ய ஏவம் வேத்தி – யாரொருவன் இவ்விதம் அறிகின்றானோ
- புருஷனை ஸத்
ஸ்வரூபமாகவும், அறிவு ஸ்வரூபமாகவும், அனைத்திற்கும் ஆதாரமாகவும் ’”நான்”
ஆகவும் அறிய வேண்டும்
- ப்ரக்ருதியை
பிரம்மத்தை சார்ந்துள்ளதாகவும், மூன்று குணத்துடன் கூடியதாகவும், ஜகத் இதன்
மீது ஏற்றி வைத்திருப்பதாகவும், பிறப்பு, இறப்பு என்பதையும் அறிந்து கொள்ள
வேண்டும்
ஸர்வதா - எந்தவிதத்திலும், எப்படி
வர்தமானோ அபி - வாழ்ந்து
இருந்தாலும்
ஸஹ பூ4ய ந அபி ஜாயதே – இறந்தபின்
மீண்டும் பிறப்பதில்லை.
எந்த வர்ணத்தையோ, ஆசிரமத்தையோ
சார்ந்திருந்தாலும், சூழ்நிலையில் இருந்தாலும் அவன் மோட்சத்தை அடைவான், முழு
மனநிறைவை அடைந்து விடுவான்.
द्यानेनात्मनि पश्यन्ति केचिदात्मानमात्मना ।
अन्ये साङ्ख्येन योगेन कर्मयोगेन चापरे ॥ 24 ॥
த்யானேன ஆத்மனி – தியானம் என்ற
சாதனத்தின் மூலமாக புத்தியில்
ஆத்மானாம் – பர
பிரம்மத்தை, பரமாத்மாவை
ஆத்மனா – தூய்மையோடும்,
அமைதியோடும் இருக்கும் மனதின் துணைக் கொண்டு
கேசித் பஶ்யந்தி – சில சாதகர்கள்
பார்க்கிறார்கள்
அன்யே ஸாங்க்யேன – வேறு சிலர்
சாங்கிய யோகம் (சிரவணம், சாஸ்திரத்தை கேட்டல்) என்ற சாதனத்தில் ஈடுபட்டுக்
கொண்டிருக்கிறார்கள்.
அபரே கர்மயோகேன – மேலும் வேறு
சிலர் கர்மயோகத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
விசாரம்
ஆத்ம ஞானத்தை அடைவதற்கு முன் செய்யப்படும்
தியானம் அதை அடைய தகுதிபடுத்தும். ஞானம்
அடைந்த பின் செய்யப்படும் தியானம் அதில் நிலையாக இருப்பதற்கு பயன்படும், இதையே
நிதித்யாசனம் என்று அழைக்கப்படுகிறது.
மோட்சத்தை அடைவதற்கு 5 படிகள் இருக்கிறது.
அவைகள்
1. கர்மயோகம்,
2. உபாஸனம்,
3. சிரவணம்,
4. மனனம்,
5. நிதித்யாஸனம்
ஆகியவைகளாகும்.
1. கர்மயோகம்
தர்மப்படி வாழ வேண்டும். நாம் செயல்களை
செய்கின்றோம், செய்த செயல்களினால் வரும் பலனை அனுபவிக்கிறோம். இவ்வாறாக
கர்த்தாவாகவும், போக்தாவாகவும் இருக்கிறோம்.
இந்த இரண்டு நிலையிலும் எந்த மனப்பான்மையுடன் இருக்க வேண்டும் என்பதை
தெரிந்திருக்க வேண்டும். கர்த்தாவாக
இருக்கும்போது நமது கடமைகளை கட்டாயம் செய்ய வேண்டும். விருப்பு-வெறுப்பின்றி
அனைத்தையும் நிறைவாக செய்ய வேண்டும். நாம்
விரும்பி செய்கின்ற செயல்களை குறைத்துக் கொள்ள வேண்டும். எதையும் தர்மப்படி அளவுடன் அனுபவித்துக் கொண்டிருக்க
வேண்டும். நிஷித்த கர்மங்களை செய்யவே கூடாது.
போக்தாவாக இருக்கும் போது
கடைப்பிடிக்க வேண்டிய பா4வனைகள்:
- செய்த செயல்களினால் வரும் பலன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு இல்லாமலும்,
- பலன் வரவில்லையென்றாலும் கவலைப்படாமல் இறைவன் எனக்கு அதைக் கொடுப்பார் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். அதனால் வருந்தக் கூடாது.
- செய்த செயலினால் அடையும் பலன்களை இறைவன் பிரசாதமாக ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையுடன் இருக்க வேண்டும்.
இப்படி கர்மயோகப்படி வாழ்வதால் எது உண்மை, எது பொய் என்று பிரித்து அறியும் சக்தியை நாம் அடைந்திடுவோம். அதனால் பொய்யிலிருந்து விலகி
வைராக்கியத்தை அடைந்து, உண்மையை நோக்கி (முமுக்ஷுத்வம்) செல்வோம். பிறகு இது நம்மை அடுத்த படிக்கு எடுத்துச்
செல்லும். மேலும்
விருப்பு-வெறுப்புக்களிலிருந்து விடுபடுவோம். ஓரளவு மன அமைதியுடன் இருப்போம்
2. உபாஸனம்
இதில் மனமும், வாக்கும் பிரதானமாக
இருக்கின்றது. உடலால் எதுவும் செய்யத்
தேவையில்லை. மனதை அமைதிபடுத்துதல்,
ஒருமுகப்படுத்துதல் இதை அடைவதுதான் இதனால் அடையும் பலன்கள். பக்தியோடு இந்த
சாதனத்தை பயன்படுத்தினால் சரியான பலன் கிடைக்கும். இவையிரண்டும் சரியாக செய்து முடித்து விட்டால்
உடல், மனம், புத்தி இவைகளில் பெரிய மாற்றத்தை அடைவோம். பிரம்மத்தை அடைய வேண்டும் என்ற ஞான வேட்கை
ஏற்படும்.
3. சிரவணம்
வேதாந்தத்தின்
மையக் கருத்து ஒன்றானதும், நிலையானதுமான பிரம்மன் சத்யம், ஜகத் மித்யா
என்பதேயாகும். ஆத்மஞானமான என்னைப்பற்றிய
அறிவை கொடுக்கிறது. என்னைப்பற்றி சொல்வதை புரிந்து கொள்ளும் வரை படிக்க வேண்டும்.
இதை கேட்கும் போது மனம் நம்மிடத்து இருக்க வேண்டும். உபாஸனையின் மூலம் இந்த
மனநிலையை அடைந்திருப்போம். என்னைப்பற்றிய அறிவை சாஸ்திரம் மூலம் அடையப்படும்
4. மனனம்
சிரவணத்தின் போது நாம் கேட்ட உபதேசத்தின் மூலம்
பெற்ற அறிவானது அனுபவத்திற்கு முரணாக இருப்பதை உணர்வோம். இதனால் சில சந்தேகங்கள்
மனதில் எழலாம். இந்த சாதனத்தின் மூலமாக
அவைகளை தெளிவாக போக்கிக் கொள்ளலாம்.
உபநிஷத் வார்த்தையில் முழுமையான சிரத்தை இருக்க வேண்டும். சிரவணத்தின்
போது எழுகின்ற சந்தேகங்களை ஆழ்ந்து சிந்தித்து போக்கி கொள்ள வேண்டும். உபநிஷத்தின்
கருத்துக்களை நம்முடைய கருத்தாக்க வேண்டும்.
5. நிதித்யாஸனம்
இந்த சாதனத்தை செய்பவனுக்கு பிரம்ம ஞானம்
தெளிவாக இருக்கும். நான் சத்யம், ஜகத்
மித்யா என்ற இந்த ஞானம் பலனைக் கொடுப்பதற்கு இருக்கும் தடைகளை நீக்கவே இந்த சாதனம்
அவசியமாகின்றது. நம்முடைய ஸம்ஸ்காரங்கள்,
கர்ம வாசனைகள் நம்மால் அடைந்த அறிவில் நிலைத்து நிற்க முடியாமல் தடைகளை ஏற்படுத்தும். எனவே அடைந்த அறிவில்
நிலையாக இருப்பதற்கு பயிற்சி செய்ய வேண்டும்.
இது ஒருவகையான தியானம்தான், இதில் ஆத்ம ஞானத்தை தியானித்து கொண்டிருக்க
வேண்டும்.
अन्ये त्वेवमजानन्तः श्रुत्वान्येभ्य उपासते ।
तेऽपि चातितरन्त्येव मृत्युं श्रुतिपरयणाः ॥ 25 ॥
அன்யே து ஏவம் அஜானந்தஹ – வேறு சிலர்
வேதாந்தத்தை புரிந்து கொள்ள உதவுகின்ற முறையான சாதனங்களை அறியாதவர்கள்
ஶ்ருத்வா அன்யெ ப4ய உபாஸதே – மற்றவர்களிடம்
கற்றறிந்துக் கொண்டு ஆத்ம ஞானத்தில் நிலை பெற
முடியுமானால்
தே அபி ம்ருத்யும் – அவர்களும் கூட
மரணத்தை, சம்சாரத்தை
ச அத்தரந்தி ஏவ – கடந்து
செல்கிறார்கள்
ஶ்ருதிபரயணா – உபநிஷத்
உபதேசத்தை மனவொருமுகப்பாட்டோடும், கேட்கின்ற மனநிலையோடும் கேட்க வேண்டும்.
यावत्सञ्जायते किञ्चित्सत्त्वं स्थावरजङ्गमम् ।
क्षेत्रक्षेत्रज्ञसंयोगात्तद्विद्धि भरतर्षभ ॥ 26 ॥
யாவத் கிஞ்சித் தத்வம் – எந்தவொரு
பொருளாக இருந்தாலும்
ஸ்தாவர ஜங்கம ம் - தாவரங்கள், அசையாத உயிரினங்கள், அசையும்
உயிரினங்கள்
ஸஞ்ஜாயதே -
தோன்றியிருக்கின்றனவோ
க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ ஸம்யோக –அவைகள் க்ஷேத்ரம்
க்ஷேத்ரக்ஞனின் சேர்க்கை
தத்3 வித்3தி4 – என்று அறிந்து
கொள்.
உலகத்திலுள்ள அனைத்தும் க்ஷேத்ரம்
க்ஷேத்ரக்ஞனின் சேர்க்கையால்தான் தோன்றி இருக்கின்றன என்று அறிந்து
கொள்வாயாக. இங்கு சேர்க்கை என்பது
அன்யோன்ய அத்யாஸம் – ஒன்றின் மேல் ஒன்றை ஏற்றி வைத்தல் என்று புரிந்து கொள்ள
வேண்டும். பழுக்க காய்ச்சிய இரும்பு குண்டு சூடாக இருக்கும். இந்த உஷ்ணம் அதனுடைய
தன்மை அல்ல அக்னியின் தன்மை அதில் ஏற்றி வைத்திருப்பதைப் போல இந்த சேர்க்கை என்ற
சொல்லுக்கு பொருளாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதே க்ஷேத்ரத்தின் தன்மையை
க்ஷேத்ரக்ஞனிடத்தில் ஏற்றி வைத்திருக்கின்றோம்.
समं सर्वेषु भूतेशु तिष्टन्तं परमेश्वरम् ।
विनश्यत्स्वविनस्यन्तं यः प्श्यति स पश्यति ॥ 27 ॥
ஸர்வேஷு பூ4தேஶு – அனைத்து
சரீரங்களுக்குள்
ஸமம் திஷ்டந்தம் – சமமாக, ஒன்றாக
இருந்து கொண்டிருக்கின்ற
பரமேஶ்வரம் – ஈஸ்வரனை யார்
பார்க்கின்றார்களோ
வினஶ்யத்ஸ்வ அவினஸ்யந்தம் – அழியக்கூடிய
சரீரங்களுக்குள் அழியாமல் இருக்கின்றதாக
யஹ பஶ்யதி ஸஹ பஶ்யதி – யார்
பார்க்கின்றார்களொ அவர்கள்தான் உண்மையாக பார்க்கிறார்கள், புரிந்து
கொண்டிருக்கிறார்கள்.
ஞானியின்
பார்வையை பகவான் இங்கு கூறியிருக்கிறார். காரிய திருஷ்டி என்பது நம்
கண்ணுக்கு முன்னால் இருப்பதை பார்ப்பது, (உ-ம்)
கட்டிடம். காரண திருஷ்டி என்பது தெரிகின்ற பொருளுக்கு மூலக்காரணமாக
இருப்பதை பார்த்தல். (உ-ம்) அஸ்திவாரம். ஒருவர் நம்மை சொல்லால் துன்புறுத்தினால்,
நாம் அவரது சொல்லை மட்டும் எடுத்துக் கொண்டு துயரப்படுவோம். இது காரிய
திருஷ்டி. அவர் அப்படி சொல்வதற்கான மூலக்
காரணத்தைப் பார்த்தால் துயரப்படமாட்டோம். இது காரண திருஷ்டி. ஆத்ம அக்ஞானத்துடன்
இந்த உலகத்தை பார்ப்பது காரிய திருஷ்டி, இது பார்த்தும் பார்க்காதவனாகின்றான்
समं प्श्यन्हि सर्वत्र समवस्थितमीश्वरं ।
न हिनस्त्यात्मनात्मानं ततो याति पराम् गतिम् ॥ 28 ॥
ஹி ஸர்வத்ர - எல்லா உயிரினங்களிடத்திலும்,
சரீரங்களுக்குள்ளும்
ஸமவஸ்திதம் ஈஶ்வரம் – ஒன்றாக மாற்றமில்லாமல் அமர்ந்து கொண்டிருக்கும் ஈஸ்வரனை
ஸமம் பஶ்யந்தி – ஒன்றாக
பார்த்து கொண்டிருப்பதால்
ஆத்மனா ஆத்மானாம் ந ஹினஸ்தி – தன்னைத்தானேத் துயரப்படுத்திக் கொள்ள மாட்டோம்.
தன்னைத்தானே அழித்து கொள்ள மாட்டோம்
ததோ யாதி பராம் கதிம் – பிறகு மேலான
கதியான விதேஹ முக்தியை அடைவோம்.
அக்ஞானி பிறப்பு-இறப்பு என்ற சம்சார
சக்கரத்திலேயே சுழன்று கொண்டிருப்பான்.
ஆனந்த ஸ்வரூபமான ஆத்ம ஞானத்தை அறியாமல் இறப்பது தன்னைத்தானே அழித்துக்
கொள்வதற்கு சமமானது. நாம் அனுபவிக்கும்
துயரங்களுக்கு காரணம் மற்றவர்களும், சூழ்நிலைகளும்தான் என்று நினைத்துக்
கொண்டிருக்கின்றோம். ஆனால் பகவான் நாமேதான்
காரணம் என்று கூறுகிறார். சூழ்நிலையை பொருட்படுத்துவது நம் கையில்தான்
இருக்கிறது. நம் மனமும், புத்தியும்தான்
காரணமாக இருக்கின்றது என்று புரிந்து கொண்டால் துயரத்தை அடைய மாட்டோம். நாம் எந்த அளவுக்கு நம்மை துன்புறுத்தி
கொள்கின்றோமோ அந்த அளவுக்கு மற்றவர்களுக்கும் துன்பம் கொடுப்போம். ஆத்ம ஞானத்துடன் கூடிய மனமானது ஒருவனை துன்புறுத்தாது,
அதனால் மற்றவர்களையும் துன்புறுத்த மாட்டோம். இந்த உடலை விட்ட பின் மேலான கதியை
அடைகின்றான். பிரஹ்ம ஸ்வரூபமாகவே மாறிவிடுகிறான்.
प्रकृत्यैव च कर्माणि क्रियमानानि सर्वशः ।
यः पश्यति तथात्मानमकर्तारं स प्श्यति ॥ 29 ॥
ப்ரக்ருத்யா ஏவ ச கர்மாணி க்ரியமானானி ஸர்வஶ: - எல்லாவிதமான
செயல்களும், காரியங்களும் மாயையிலிருந்து தோன்றிய உடல், மனம் இவைகளால்
உருவாக்கப்பட்டு இருக்கின்றது.
யஹ பஶ்யதி – இப்படி யார்
பார்க்கிறார்களோ
ததா ஆத்மானம் அகர்தாரம் – அவ்வாறே இந்த
உடலும், மனமும் கர்மங்களை செய்கின்றது.
நான் செய்யவில்லை என்று யார் பார்க்கின்றார்களோ
ஸஹ பஶ்யதி – அவர்கள்தான்
உண்மையில் பார்க்கிறார்கள்
உடலின் மீது அபிமானம் வைக்கும்போது நான்
செய்கிறேன் என்று கூறுகிறோம். நான் உடலையும், மனதையும் பிரகாசிக்கும் அறிவு
ஸ்வரூபம் என்றும், நான் எதுவும் செய்வதில்லை என்று பார்ப்பவனே உண்மையின் பார்ப்பவனாகின்றான்.
यदा भूतपृथग्भावमेकस्थमनुपश्यति ।
ततएव च विस्तारं ब्रह्म सम्पद्यते तदा ॥ 30 ॥
பூ.பக்ஷி – உலகம், ஆத்மா என்று இருமை
இருக்கும்போது எப்படி பிரம்மம் ஒன்றுதான் இருக்கிறது என்று கூறுகிறாய். உதாரணமாக
தங்கத்தில் செய்யப்பட்ட மோதிரம் என்ற வாக்கியத்தில் இரண்டு பொருட்கள்
குறிப்பிடுவது போல் தோன்றுகிறது. தங்கம், மோதிரம் என்ற இரு பொருட்களில் மோதிரம்
வெறும் நாம-ரூபமே எனவே அது மித்யாவாகும்.
யதா3 - எப்பொழுது
பூ4தப்ருதக் பா4வம் – விதவிதமான
ஜீவனுடைய உடல்கள் இருந்தாலும்
ஏகஸ்தம் அனுபஶ்யதி – அவைகள் ஒன்றையே
ஆதாரமாக கொண்டிருப்பது போல் யார் குரு-சாஸ்திரம் துணைக்கொண்டு
பார்க்கிறார்களோ. விதவிதமான ஆபரணங்களில்
தங்கத்தை மட்டும் யார் பார்க்கின்றார்களோ
தத ஏவ ச விஸ்தாரம் – இவைகள்
பிரம்மத்திலிருந்து தோன்றிய வேற்றுமைகள். உலகமனைத்தும் ஒன்றிலிருந்து தோன்றி,
அதனாலேயே இருந்து கொண்டும், அதனிடத்திலே ஒடுங்குவதாக யார் பார்க்கின்றார்களோ,
ஒன்றே பலவிதமாக தோன்றி கொண்டிருக்கின்றது என்று பார்க்கிறார்களோ
ததா3 ப்3ரஹ்ம ஸம்பத்யதே – அவர்களே அந்த
பிரம்மத்தை அடைகிறார்கள், மனநிறைவுடன் இருப்பார்கள், பிரம்மமாகவே இருப்பார்கள்.
இந்த ஞானம் அடைந்தவுடன் பலனை அனுபவிக்க தொடங்கிவிடுவோம்.
अनादित्वान्निर्गुणत्वात्परमात्मायमव्ययः ।
शरीरस्थोऽपि कौन्तेय न करोति न लिप्यते ॥ 31 ॥
கௌந்தேய - ஹே அர்ஜூனா!
பரமாத்மா அயம் – இந்த
பரமாத்மாவானது
நிர்கு3ணத்வாத் – மூன்றுவித
குணங்களற்றது
அனாதி3த்வாம் – அனாதியாக
இருப்பதால், தோற்றமற்றது, காரணமற்றது
அவ்யயஹ –
தேய்வடையாதது, மாறாதது
ஶரீரஸ்தஹ அபி – இந்த
உடலுக்குள் வெளிப்பட்டுக் கொண்டிருந்தாலும்
ந கரோதி -
ஒன்றும் செய்வதில்லை
ந லிப்யதே - எதனோடும் சேர்வதில்லை, எதனோடும் ஒட்டாமல்
தனித்திருக்கின்றது
இவ்வாறு பிரம்மத்தை பற்றிய அறிவினால் அழியும் பொருட்களை கண்டு துயரம் அடைய மாட்டோம்.
यथा सर्वगतं सौक्ष्म्यादाकाशं नोपलिप्यते ।
सर्वत्रावस्थितो देहे तथात्मा नोपलिप्यते ॥ 32 ॥
யதா2 -
எவ்விதம்
ஸர்வக3தம் -
எங்கும் வியாபித்துக் கொண்டிருப்பதும்,
ஸௌக்ஷ்ம்யா ஆகாஶம் – சூட்சுமமாக
இருப்பதுமான ஆகாசமானது
ந உபலிப்யதே – எதனோடும்
ஒட்டாமல் இருக்கின்றதோ
ததா2 - அவ்விதம்
தேஹே ஸர்வத்ர அவஸ்திதா ஆத்மா – ஆத்மாவானது
எல்லாவிடத்திலும் வியாபித்து இருந்தாலும், தேகத்தில் இருந்தாலும்
ந உபலிப்யதே - எதனோடும் ஒட்டாமல் இருக்கின்றது
ஆத்மா அறிவு ஸ்வரூபம் என்றும், ஆத்மா ஒன்றாக இருந்து கொண்டு, அதுவே அனைத்தையும் வியாபித்திருக்கிறது.
यथा प्रकाशयतेकः कृत्स्नं लोकमिमं रविः ।
क्षेत्रं क्षेत्री तथा कृत्स्नं प्रकाशयति भारत ॥ 33 ॥
பா4ரத – ஹே அர்ஜுனா!
யதா2 - எவ்விதம்
ஏக ரவி = ஒன்றாக
இருக்கின்ற ஆத்மா
க்ருத்ஸ்னம் இமம் லோகம் – இந்த அனைத்து
உலகங்களையும்
யதா2 ப்ரகாஶயதே – எப்படி
பிரகாசப்படுத்தி கொண்டிருக்கின்றதோ
ததா2 - அவ்விதம்
க்ஷேத்ரம் க்ஷேத்ரீ - ஆத்மாவானது உடலையும், உலகத்தையும்
க்ருத்ஸ்னம் ப்ரகாஶயதி – முழுமையாக
ப்ரகாசப்படுத்திக் கொண்டிருக்கிறது
क्षेत्रक्षेत्रज्ञयोरेवमन्तरं ज्ञाजचक्षुषा ।
भूतप्रकृतिमोक्षं च ये विदुर्यान्ति ते परम् ॥ 34 ॥
உடலும், உடலுக்குள் இருக்கின்ற ஆத்மாவும்
இதுவரை சொல்லியபடி வெவ்வேறு என்று ஞான கண்களினால், அறிவைக் கொண்டு பார்த்து
பூதப்ரக்ருதி மோக்ஷம் – க்ஷேத்ரமான
உடலும், உலகமும் இவைகளுக்கு காரணமான மாயையும் மித்யா என்பதை
யே விது3 – யார்
அறிகின்றார்களோ
தே பரம் யாந்தி – அவர்கள் மேலான
பிரம்மத்தை அடைகின்றார்கள்
தொகுப்புரை
01-02 க்ஷேத்ரக்ஞன், க்ஷேத்ரம் என்ற தத்துவம்
விளக்கப்பட்டது. இந்த உடல் க்ஷேத்ரம்
என்றும் உடலுக்குள் இருக்கின்ற அறிவு ஸ்வரூபம் க்ஷேத்ரக்ஞன் என்றும் அறிந்து கொள்
03-06 க்ஷேத்ரம் என்பதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.
முதலில் ஞானத்தின் பெருமையை கூறுகிறார்.
க்ஷேத்ரம் என்பதற்கு உடல் மட்டுமல்ல இந்த பிரபஞ்சமும் அதில் தோன்றிய
அனைத்தையும் குறிக்கின்றது. மனதிலுள்ள
குணங்களும் க்ஷேத்ரம் என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.
07-11 ஞானம் என்பதற்கு அதை அடைவதற்கான சாதனங்களான
நற்பண்புகளே என்று விளக்கியுள்ளார். அமானித்வம் என்ற பண்பிலிருந்து அத்யாத்ம ஞான
நித்யத்வம் வரையான இருபது பண்புகளை விளக்கியுள்ளார். இந்த பண்புகளை வளர்த்துக்
கொள்ள முடியாவிட்டாலும், ஈஸ்வர ஞானமும் வேண்டாமென்றாலும், மனித சுகத்தை
அடைவதற்காக, அனுபவிப்பதற்காக இவைகள் அவசியமாகின்றது.
12-18 ஞேயம் என்பதற்கான விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. பரம்பொருளை உபநிஷத் விளக்கும் முறையில்
(அத்3யாரோவ4 அப4வாதம்) எடுத்துரைத்துள்ளார்.
19-23 ப்ரக்ருதி, புருஷன் என்ற இரண்டு சொற்களுக்கு
விளக்கத்தை கொடுத்துள்ளார். ப்ரக்ருதி என்பது மாயை என்று
குறிப்பிடப்படுகிறது. புருஷன் என்பது
பரமாத்மா. மாயை என்பது பிரம்மத்தை
சார்ந்திருக்கின்ற சக்தி அது வெளித்தோற்றத்திற்கு வரும்போது உலகமாகவும், அதிலுள்ள
பொருட்கள், உயிர்களாகவும் தோன்றுகிறது
24-25 சில சாதனங்களை மோட்சத்தை அடைவதற்கான ஐந்து
படிகளாக கூறுகிறார். கர்மயோகத்தில்
ஆரம்பித்து நிதித்யாஸனம் வரையில் இந்த படிகள் முடிவடைகிறது.
26-34 ஞானியிடம் இருக்கின்ற குணங்களையும், ஞானத்தின்
பலனையும் விவரித்து கூறியுள்ளார். பலனாக
ஞானியானவன் தன்னைத்தானே அழித்துக் கொள்ள மாட்டான். உலகத்திலுள்ள அனைத்து
ஜீவராசிகளையும் சமமாக பார்க்கும் குணத்தை உடையவன். ஆகாசத்தையும், ஒளியையும் உதாரணமாக காட்டி ஆத்மா
அஸங்கமாகவும், அனைத்திலும் வியாபித்தும் இருக்கிறது. ஆனாலும் எதனோடும் ஒட்டுவதில்லை,
பாதிக்கப்படுவதில்லை. ஆத்மா, அனாத்மாவை
பிரித்து பார்த்து அனாத்மாக்கள் மித்யா என்றும், ஆத்மா ஒன்றாக இருக்கிறது என்ற
அறிவை அடைய வேண்டும், ஆத்மா சத்யம் என்றும் யார் அறிகிறார்களோ அவர்களே பிரம்மத்தை
அடைந்தவர்கள் என்று கூறியுள்ளார்
ஓம் தத் ஸத்