அத்தியாயம்-1
அர்ஜுன விஷாத யோகம்
ஸ்வாமி
குருபரானந்தாவின் உபதேச விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது-16-02-2022
முகவுரை:
ஜீவராசிகளிலே மனிதன் மட்டும்தான் சிலவகையான
பயங்களை அடைகின்றான். அதாவது மரணத்தைக்
கண்டும், வயோதிகத்தைக் கண்டும், நோயைக் கண்டும் பயந்து கொண்டிருக்கின்றான். அதன் விளைவாக மனதுயரத்தையும் அடைகின்றான்.
இவ்வாறு மனிதன் அனுபவிக்கும் துயரத்தையே சம்சாரம் என்று அழைக்கப்படுகிறது. மனிதனாக
இருப்பதே சம்சாரம்தான். இதிலிருந்து நீங்குவதற்கு தெய்வத்தன்மையை அடைந்திட
வேண்டும். அதை எவ்வாறு அடைய முடியும்
என்பதைத்தான் பகவத்கீதை உபதேசிக்கின்றது.
இது வேதத்தின் சாரமாகவும் கருதப்படுகின்றது.
வேதத்தில் சொல்லப்பட்ட விஷயங்கள் இரண்டு வகையாக
பிரிக்கப்படுகின்றது. அவைகள் 1.பிரவிருத்தி லட்சணம், 2. நிவிருத்தி லட்சணம்
ஆகியவைகளாகும். பிரவிருத்தி என்பது செயல்பட வைக்கும் விஷயங்களை கூறுவது.
நிவிருத்தி என்பது செயல்படுவதிலிருந்து நீங்கியிருத்தல்.
பிரவிருத்தி லட்சணம்
சாஸ்திரம் சொல்லுகின்ற தர்ம-அதர்மப்படி
வாழ்க்கையை வாழுதல். வேதம் பொதுவான
தர்மங்களை மனிதனுக்கு விதித்திருக்கின்றது. விசேஷ தர்மங்கள் காலம், இடம்,
வர்ணாசிரமம் போன்றவற்றிற்கேற்ப விதிக்கப்பட்டிருக்கின்றது.
அர்த்த காம லாபஹ - தர்மப்படி
வாழ்வதால் அடையும் கண்ணுக்கு தெரியாத பலன் புண்ணியம். புண்ணியத்தினால் மேலான
வாழ்க்கையை வாழலாம். மேலும் நல்ல பெற்றோர்கள், நற்குலம், நல்ல சூழ்நிலைகள் கூடிய
வசதிகளுடன் வாழலாம்.
புருஷார்த்த விவேகம் – நாம் எதை நாட
விரும்புகின்றோமோ அதற்கு புருஷார்த்தம் என்று பெயர். எது வாழ்க்கையின் சரியான இறுதி லட்சியம் என்பதை
அறிந்து கொள்வதற்கு பயன்படுகின்றது. நிலையானதாக, முழுமையானதாக உள்ளதோ அந்த பரம்பொருளை தெரிந்து கொண்டு, அவரை அடைதலே
இறுதியான லட்சியம் என்ற அறிவை கொடுக்கின்றது.
புருஷார்த்த யோக்யதா – புருஷார்த்தத்தை
அடைவதற்கு தேவையான தகுதிகளை அடையச் செய்கிறது.
நிவிருத்தி லட்சணம்
நிலையான பரம்பொருளை அடைவதற்கு செய்யப்படுகின்ற
விசாரம் இதையே ஞானயோகம் என்றும் அழைக்கப்படுகிறது. வேதத்தின் இறுதிப்பகுதியைத்தான் வேதாந்தம்
அல்லது உபநிஷத் என்று அழைக்கப்படுகின்றது.
இதில் நிவிருத்தி லட்சணத்தைப் பற்றி விரிவாக உபதேசிக்கப்பட்டிருக்கிறது
இறைவன் மனிதனையும் படைத்து, அவன் எப்படி
வாழ்ந்தால் தன்னை அடையலாம் என்ற உபதேசிக்கும் வழிகாட்டியாக வேதங்களையும்
படைத்திருக்கின்றார். இதிலிருந்து
வேதங்கள் ஈஸ்வரனால் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்று அறிந்து கொள்ள முடிகிறது.
இதுவும் அனாதி என்று அறிந்து கொள்ள முடிகிறது.
பகவத் கீதா
த்யானஶ்லோகா:
ஓம் பார்தா2ய ப்ரதிபோ3தி4தாம் பகவதா நாராயணேன
ஸ்வயம்
வ்யாஸேன
க்3ரதி2தாம் புராண முனினா மத்4யே மஹாபா4ரதம் |
அத்3வைதாம்ருதவர்ஷிணீம் ப4க3வதீம்
அஷ்டாத3ஶாத்3யாயினீம்
அம்ப3
த்வாமனுஸந்த3தா4மி ப4க3வத்3 கீ3தே ப4வத்3வேஷிணீம் || 1 ||
பகவத் கீதே அம்பத்வாம் – பகவத் கீதையாக
இருக்கிற தாயே உன்னை
அனுஸந்ததாமி – எப்பொழுதும்
தியானிக்கிறேன்.
பவத்வேஷிணீம்- மனதுயரத்தை
நீக்கியவனாக இருக்க வேண்டும்.
பகவதி – தாயே
பார்தா2ய பிரதிபோதிதாம் – பார்த்தனுக்கு உபதேசிக்கபட்டவள்
பகவதா நாராயணேன – பகவான் நாராயணன் என்கின்ற
ஸ்வயம் – தன்னாலே
புராண முனி – புராணங்களையும், இதிகாசத்தையும் எழுதிய முனிவரான
வ்யாஸேன க்ரதிதாம் – வியாசரால் எழுதப்பட்டவர்
மத்யே மகாபாரதம் – மகாபாரத்தின் இடையில் இருக்கின்றாய்
அத்வைத அம்ருத வர்ஷினிம் -
இரண்டற்ற மரணமில்லா மழையை பொழிந்து இருக்கின்றாய்
அஷ்டாதஶாத்யாயினி – 18 அத்தியாயங்களை உடையதாக இருக்கிறது
நமோSஸ்துதே வ்யாஸ
விஶாலபு3த்3தே4 பு2ல்லாரவிந்தா3யதபத்ரனேத்ர |
யேன த்வயா பா4ரத்தைலபூர்ண: ப்ரஜ்வாலிதோ ஞானமய:
ப்ரதீ3ப: || 2 ||
இதில் வியாஸ பகவானுக்கு நமஸ்காரம்
செய்யப்படுகின்றது
நமோஸ்துதே வியாஸ – வியாஸ பகவானே
தங்களுக்கு எங்களுடைய நமஸ்காரங்கள்
விலாஸபுத்தே – பரந்த,
ஆழ்ந்து, விரிந்த அறிவுடையவரே
புல்லார விந்தாயத பத்ர நேத்ர – மிகவும்
விரிந்த தாமரை இலையை போன்ற பெரியதான அழகான கண்களை உடையவரே
மகாபாரதம் என்கின்ற எண்ணெயை கொண்டு பகவத்கீதை
என்ற ஞான தீபத்தை ஏற்றி வைத்துள்ளீர்கள்.
யேன ஏவ – உங்களால்
பாரத தைல பூர்ண – மகாபாரதம்
என்ற
ஞானமய ப்ரதீபஹ – ஞான ஸ்வரூபமான
தீபமானது
ப்ரஜ்வலித: - ஏற்றி
வைக்கப்பட்டது
ப்ரபன்னபாரிஜாதாய தோத்ரவேத்ரைகபாணயே |
ஞானமுத்3ராய க்ருஷ்ணாய கீ3தாம்ருத்து3ஹே
நம: || 3 ||
ப்ரபன்னா பாரிஜாதாய – பாரிஜாதம்
என்கின்ற மரம் போன்று இருக்கின்றீர்கள். தங்களை சரணடைந்தவர்களுக்கு அவர்கள்
விரும்பியதை அளிக்கும் பகவானே!
தோத்ர வேத்ர ஏக பாணி – ஒரு கையின்
பிரம்பு குச்சியை வைத்திருக்கிறீர்கள்
ஞானமுத்ராய – ஞானத்தை
புகட்டுகின்ற முத்திரையோடு இன்னொரு கையில் வைத்திருக்கிறீர்கள்
க்ருஷ்ணாய – பாவத்தை
நீக்குபவரான கிருஷ்ண பகவானே!
கீதாம் அம்ருத்துஹே – மரணமற்ற
நிலையை கொடுக்கின்ற பாலை கறந்து கொடுத்தவரான தங்களுக்கு
நம: - எங்களுடைய
நமஸ்காரங்கள்
ஸர்வோபநிஷதோ3 கா3வோ தோ3க்3தா4 கோ3பாலனந்த3ன: |
பார்தோ2 வத்ஸ: ஸுதீ4ர்போ4க்தா து3க்3த4ம்
கீ3தாம்ருதம் மஹத் || 4 ||
ஸர்வோ உபநிஷதோ காவ: - எல்லா உபநிஷத்துக்களும் பசுக்கள்
தோக்தா கோபால நந்தன: - பசுக்களை
காக்குகின்றவர்களுக்கு கிருஷ்ண பகவான்.
துக்தம் கீதாம்ருதம் மஹத் – கீதை என்கின்ற அம்ருதமான மேலானது பால்
பார்தோ2 வத்ஸ: - கன்று போல் இருக்கின்ற அர்ஜுனனுக்கு இந்த பாலை
கொடுக்கின்றார்.
ஸுதீர் – தூய்மையான
புத்தியை உடையவனே அர்ஜுனன்
போக்தா - அனுபவிப்பேன்
வஸுதே3வஸுதம் தே3வம் கம்ஸசாணூரமர்த3னம் |
தே3வகீபரமானந்த3ம் க்ருஷ்ணம் வந்தே3
ஜக3த்3கு3ரும் || 5 ||
வஸுதேவ ஸுதம் – வசுதேவனுடைய
மகனான பகவானை
தேவம் – தேவ
ஸ்வரூபமானவரை
கம்ஸ சாணூரன் மர்த்தனம் – கம்சன்,
சாணூரன் என்ற அரக்கர்களை அழித்தவரை, அதர்மத்தை அழித்தவரை
தேவகி பரமானந்தம் – தேவகியான
தாய்க்கு ஆனந்தத்தை கொடுத்த
க்ருஷ்ணம் வந்தே – கிருஷ்ண
பகவானை நான் வணங்குகின்றேன்.
ஜகத்குரும் – உலகத்துக்கு
குருவாக இருப்பவரை வணங்குகின்றேன்.
பீ4ஷ்மத்3ரோணதடா ஜயத்3ரத2ஜலா
கா3ந்தா4ரநீலோத்பலா
ஶல்யக்3ராஹவதீ
க்ருபேண வஹனீ கர்ணேன வேலாகுலா |
அஶ்வத்தா2மவிகர்ணகோ4ரமகரா து3ர்யோத4னாவர்தினீ
ஸோத்தீர்ணா
க2லு பாண்ட3வை ரணநதீ3 கைவர்தக: கேசவ || 6 ||
ரண நதி – யுத்தமாகிய
நதியை கடப்பதற்கு
கைவர்தகஹ கேசவ: - படகோட்டியாக
கேசவனான பகவான் இருந்தார்
பாண்டவை தா உத்தீர்ணா – பாண்டவர்களால்
இந்த நதி கடக்கப்பட்டது
பீஷ்ம த்ரோண ததா – பீஷ்மரும்,
துரோணரும் நதியின் இருகரைகளாக இருக்கிறார்கள்.
ஜயத்ரத ஜலா – ஜயத்ரதன்
என்பவன் நதியிலுள்ள நீராக இருக்கின்றான்
காந்தார, நீலோத்பலா – காந்தார
நாட்டின் அரசனான சகுனி, தாமரை தண்டுகளாக இருக்கின்றான்
ஶல்ய க்ராஹவதீ – சல்லியன்
என்பவன் சுறாமீனாக இருக்கின்றான்
க்ருபேன வஹனீ – நீரின்
பிரவாகமாக கிருபாச்சாரியார் இருக்கின்றார்.
க்ருபேண வேலாகுலா – கர்ணன்
பேரலைகளாக இருக்கின்றான்
அஸ்வத்தாம் விகர்ணகோரமகரா – மிக கொடூரமான
முதலைகளாக அஸ்வத்தாமன், விகர்ணன் என்பவர்கள் இருக்கின்றார்கள்.
துரியோதனா ஆவிருத்தினி – நீர்ச்சுழலாக
இருப்பவன் துரியோதனன்
இவ்வளவு ஆபத்தை உடைய நதி கடக்கப்பட்டுவிட்டது
பாராஶர்யவச:ஸரோஜமமலம் கீ3தார்த2க3ந்தோ4த்கடம்
நானாக்2யானக்கேஸரம்
ஹரிகதா2 ஸம்போ3த4னாபோ3தி4தம் |
லோகேஸஜ்ஜனஷட்3பதை3ரஹரஹ: பேபீயமானம் முதா3
பூ4யாத்3
பா4ரதபங்கஜம் கலிமலப்ரத்4வம்ஸி ந:ஶ்ரேயஸே || 7 ||
மகாபாரதமே தாமரையாக கற்பணை
செய்யப்பட்டிருக்கின்றது.
பாராஶர்ய வச ஸரோஜ – வியாசருடைய
எழுத்தில் உருவானது இந்த தாமரையான மகாபாரதம்
அமலம் – குறையற்றது,
தூய்மையானது
கீதார்த்த கந்த உத்கடம் – மிக அதிகமான
வாஸனையுடன் இருப்பது கீதையின் அர்த்தம் நிறைந்த உபதேசங்கள்
நானா ஆக்யான: கேசரம் – பூவிலுள்ள
மகரந்தம் போன்று விதவிதமான கதைகள் இருக்கின்றது.
ஹர்கதா ஸம்போதன போதிதம் – இறைவனுடைய
கதையை சொல்லுவதன் மூலமாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கின்றது.
லோகோ – இந்த உலகத்தில்
ஷட்பத –
ஆறுகால்களையுடைய தேனிக்களாக
ஸத் ஜனஹ – சாதுக்களால்,
சான்றோர்களால்
பேபீயமானம் முதா3 – மகிழ்ச்சியுடன்
அருந்தப்படுகின்றது
ஷட்பதை அஹஹ அஹஹ – ஒவ்வொரு
நாளும் மகிழ்ச்சியுடன்
நஹ ஶ்ரேயஸே பூயாத் – எங்களுக்கு
நல்லதை கொடுப்பதாக இருக்கட்டும்
பாரத பங்கஜம் – மகாபாரதம்
என்ற தாமரையானது நன்மையை தருவதாக இருக்கட்டும்
கலிமலம் ப்ரத்வம்ஸி – கலிகாலத்தில்
இருக்கின்ற கெட்டவைகள் அனைத்தும் அழிந்து போகட்டும்
மூகம் கரோதி வாசாலம் பங்கு3ம் லங்க4யதே கி3ரிம்
|
யத்க்ருபா தமஹம் வந்தே3 பரமானந்த3மாத4வம் || 8
||
யத் க்ருபா – யாருடைய
கிருபையானது
மூகம் வாசாலம் – ஊமையை நன்கு
பேசுமாறு மாற்றுகின்றதோ
பங்கும் க்ரீம் லங்கயதே – நொண்டியையும்
மலையை தாண்ட வைக்கின்றதோ
தம் அஹம் வந்தே – அப்படிப்பட்ட
கிருபையுடையவரை வணங்குகின்றேன்
பரமானந்த மாதவ – ஆனந்த
ஸ்வரூபமாக இருக்கின்ற மாதவனை வணங்குகிறேன்
யம் ப்3ரஹ்மா வருணேந்த்3ரருத்3ரமருத:
ஸ்துன்வந்தி தி3வ்ய: ஸ்தவை:
வேதை3:
ஸாங்க3பத3க்ரமோபநிஷதை3ர் கா3யந்தி யம் ஸாமகா3: |
த்4யானாவஸ்தி2தத்த்3க3தேதன மனஸா பஶ்யந்தி யம்
யோகி3ன:
யஸ்யாந்தம்
ந விது3: ஸுராஸுரகு3ணா: தே3வாய தஸ்மை நம: || 9 ||
எந்த சாக்ஷாத் விஷ்ணுவாக இருக்கின்ற
கிருஷ்ணபகவானை பிரம்மா, வருணர், ருத்ரர், மரு என்ற தேவதைகள் புகழ்கின்றார்களோ,
திவ்யமான தோத்திரங்களால், சாம வேதத்தை ஓதுபவர்கள் கூட அவரை வணங்குகின்றார்களோ,
வேதங்களினால் புகழ்கின்றார்களோ, வேதத்தின் அங்கங்கள் மூலமாக பகவானை
பாடுகின்றார்கள். வேத மந்திரங்கள் புத்தியுடனும், கிரமத்துடனும் பாடுகின்றார்களோ,
யோகிகள் யாரை மனதில் தியானித்து பார்க்கின்றார்களோ, தியானத்தில் இறைவனிடம்
செலுத்தப்பட்ட மனதினால் பார்க்கின்றார்களோ, யாருடைய முடிவை தேவர்களும் அசுரர்களும்
அறியமாட்டார்களோ அந்த தேவனான விஷ்ணுவான கிருஷ்ணனை வணங்குகிறேன்
தியான ஸ்லோகம் முடிவுற்றது
அத்தியாயம்-1
அர்ஜுன விஷாத யோகம்
धृतराष्ट्र उवाच
।
धर्मक्षॆत्रे
कुरुक्षॆत्रॆ समवेता युयुज्सवः ।
मामकाः
पाण्डवाक्श्चैव किमकुर्वत सञ्जय ॥ 01 ॥
திருதாஷ்ட்ரன் கேட்கிறார்.
சஞ்ஜயா! தர்மக்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில்
யுத்தம் செய்ய விரும்பியவர்களாக வந்திருப்பவர்கள், என்னைச் சார்ந்தவர்களும்,
பாண்டவர்களும் என்ன செய்கிறார்கள்?
सञजय उवाच ।
दृष्टवा तु
पण्डवानीकं व्यूढं दुर्यॊधनस्तदा ।
आचर्यमुपसंगम्य
राजा वचनमब्रवीत् ॥ 02 ॥
சஞ்ஜயன் கூறுகிறார்.
பாண்டவர்களூடைய அணிவகுப்புடன் இருக்கின்ற
படையைப் பார்த்து அரசனான துரியோதனன் துரோணாச்சாரியாக அணுகி, கீழ்கண்டவற்றை
சொன்னான்.
पश्यैतां
पाण्डुपुत्राणामाचार्य महतीम् चमूम् ।
व्य़ूढां
द्रुपदपुत्रॆण तव शिष्यॆण धीमता ॥ 03 ॥
ஆச்சாரியரே! உங்களுடைய புத்தியுள்ள சிஷ்யனான த்ருபத புத்ரேண புத்திரரான திஷ்டத்யும்னனின் தலைமையில் அணிவகுத்திருக்கும் பாண்டவர்களுடைய இந்த பெரிய படையை நீங்கள் பாருங்கள்!
अत्र शूरा
महेष्वासा भीमर्जुनसमा युधि ।
युयुधानॊ
विराटश्च द्रुपदश्च महारथाः ॥ 04 ॥
ध्रूष्टकेतुश्चॆकितानः
काशिरजश्च वीर्यवान् ।
पुरुजित्कुन्तिभोजश्च
शैब्यश्च नरपुंगवः ॥ 05 ॥
பாண்டவர்களுடைய படையில் இருப்பவர்கள் சக்தி வாய்ந்தவர்கள், வில்வித்தையில் நன்கு பயிற்சி பெற்றவர்கள். பீமன், அர்ஜுனன் அவர்களுக்கு சமமானவர்களாக
இருக்கின்ற யுயுதானன், விராடன், த்ருபதன் இவர்கள் மஹாரதர்கள். மஹாதரன் என்பவன்
10000 பேரிகளிடம் போர் புரியும் வீரம் உடையவர்கள். திஷ்டகேது, சேகிதானன்
சக்தியுள்ள காசிராஜன், புருஜித், குந்திபோஜன், ஶைப்யஹ போன்றவர்கள் இருக்கிறார்கள்
युधामन्युश्च
विक्रान्त उत्तमौजाश्च वीर्यवान् ।
सौभद्रॊ
द्रौपदेयाश्च सर्व एव महारथाः ॥ 06 ॥
சக்தியுடைய யுதாமனு, வீரமான அரசன், ஸௌப4த்ரௌ,
திரௌபதியின் ஐந்து புத்திரர்கள் இவர்கள் மஹாரதர்கள்.
सस्माकं तु
विशिष्टा ये तान्निबॊध द्विजॊत्तम ।
नायका मम
सैन्यस्य संज्ञार्था तान्ब्रवीमि ते ॥ 07 ॥
நம்முடைய படையில் யார் முக்கியமானவர்களை
சொல்கிறேன். பிராமணர்களில் உத்தமானவரே! நீங்கள் கேளுங்கள். என்னுடைய இந்த படையின்
உள்ள முக்கியமானவர்கள் சொல்கிறேன். உங்களுக்கு நினைவுபடுத்துவதற்கு சொல்கிறேன்.
भवान्भीष्मश्च
कर्णश्च क्रृपश्च समितिञ्जयः ।
अश्वत्थामा
विकर्णश्च सौमदत्तिस्तथैव च ॥ 08 ॥
நீங்கள், பீஷ்மர், கர்ணன், கிருபாச்சாரியர்
இவர்களை யாரும் யுத்தத்தில் வெற்றி கொள்ள முடியாதவர்கள். அஸ்வத்தாமன், விகர்ணன்,
சௌமத3த்தி இவ்விதம் பலர் இருக்கிறார்கள்
अन्ये च बहवः
शूरा मदर्थे त्यत्क्तजीविताः ।
ननशस्रप्रहरणाः
सर्वे युद्धविशारदाः ॥ 09॥
இவர்களைப் போல அதிகமான திறமையுடையவர்கள்
இருக்கிறார்கள். இவர்கள் என்னுடைய வெற்றிக்கு உயிரையே தியாகம் செய்பவர்கள்..
பலவிதமான ஆயுதங்களை ஏந்தியவர்களாக, உடையவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள்
அனைவரும் போரில் வல்லமையுடையவர்கள்
अपर्याप्तं
तदस्माकं बलं बीष्माभिरक्षितम् ।
पर्याप्तं
त्विदमेतेषां बलं भीमाभिरक्षितम् ॥ 10 ॥
நம்முடைய பீஷ்மரால் தலைமையேற்ற நமது படைகளின்
பலம் போதாதென்று தோன்றுகின்றது.
அவர்களுடைய படைகளின் பலம் போதுமானதாக இருக்கின்றது. பீமனால்
காப்பாற்றப்படுகின்ற படைகள்.
अयनषु च सवषु
यथाभागमवास्थताः ।
भीष्म,एवाभिरक्षन्तु
भवन्तः सर्व एव हि ॥ 11 ॥
நீங்கள் அனைவரும் பீஷ்மரை எல்லா
பக்கங்களிலிருந்தும் காப்பாற்றுங்கள். எல்லா வியூக இடத்தில் அவரவர்களுக்கு
கொடுக்கப்பட்ட இடத்திலிருந்து இதை செய்ய வேண்டும்.
तस्य
सञ्जनयन्हर्ष कुरुवृद्धः पिहमहः ।
सिंहनादं
विनद्यॊच्चैः श!ङ्खं दध्मौ प्रतापवान् ॥ 12 ॥
துரியோதனுக்கு மகிழ்ச்சியை கொடுப்பதற்காக
குருவம்சத்தில் வயதானவரான பிதாமகனும், பலம் பொருந்தியவரானவரும் பீஷ்மர் சங்கை
ஊதினார். சிங்கத்தைப் போல கர்ஜனை செய்து விட்டு ஊதினார்.
ततः शङ्खश्च
भेर्यश्च पणवानकगॊमुखाः ।
सहसैवाभ्यहन्यन्त
स शब्दस्तुमुलॊऽभवत् ॥ 13 ॥
அதற்குப் பிறகு மற்றவர்களின் சங்கும்,
பேரிகைகளும், விதவிதமான சப்தத்தை எழுப்பக்கூடிய இசைக்கருவிகள் எல்லோராலும்
உடனடியாக முழங்கப்பட்டது. அந்த சப்தமானது பேரொலியாக இருந்தது
ततः
श्वेतैहयैर्युक्ते महति स्यन्दने स्थितौ ।
माधवः पाण्डवश्चै
दिव्यौ शङ्खौ प्रदध्मतुः ॥ 14 ॥
இதற்குப் பிறகு வெண்மையான குதிரைகளால்
பூட்டப்பட்ட மேலான ரதத்தில் அமர்ந்திருக்கின்ற மாதவனும், அர்ச்சுனனும்
அவரவர்களுடைய மேலான, திவ்யமான சங்கை ஊதினார்கள்
पाञ्चजन्यं
हृषीकेशॊ देवदत्तं धनञ्जयः ।
पौण्ड्रिं दध्मौ
महशङ्ख भीमकर्मा वृकॊदरः ॥ 15 ॥
பாஞ்சஜன்யம் என்ற சங்கை ஐம்புலன்களை தன்
கட்டுக்குள் வைத்திருப்பவரான பகவான் கிருஷ்ணன் ஊதினார். தனஞ்செயனான அர்ச்சுனன்
தேவதத்தன் என்ற சங்கை ஊதினான். மிக பெரிய பௌண்ட்3ரம் சங்கை பீமன் ஊதினான். பீமன்
ஓநாய் போன்ற வயிறு உடையவன், வயிறு சிறியதாக இருந்தாலும் அதிக உணவை உண்பவன்.
अनन्तविजयं राजा
कुन्तिपुत्रॊ युधिष्टिरः ।
नकुलः सहदेवश्च
सुघोषमणिपुष्पकौ ॥ 16 ॥
குந்தி மைந்தனான ராஜா யுதிஷ்டிரன் அனந்தவிஜயம்
என்கின்ற சங்கை ஊதினார். நகுலன், சகதேவன்
ஸுதோ4ஶ, மணிபுஷ்ப என்கின்ற சங்கை ஊதினார்கள்.
कश्यश्च
परमेष्वासः शिखण्डि च महरथः ।
धृष्टद्युम्नॊ
विराटश्च सात्यकिश्चापराजितः ॥ 17 ॥
द्रुपदॊ
द्रौपदेयश्च सर्वशः पृथिवीपते ।
सौभद्रश्च महबहुः
शङ्खान्दध्मु: पृथक्यृथक् ॥ 18 ॥
காசிராஜன் வில்லேந்தி சண்டை செய்வதில் வல்லவர்.
சிகண்டி என்ற மஹாரதன், திஷ்டத்யும்னன், மற்றவர்களால் வெற்றி கொள்ள முடியாத
சாத்யகி. துருபதன், திரௌபதி புத்திரர்கள், மிக நீண்ட கைகளை உடைய சுபத்திரையின்
மகன் அபிமன்யு ஆகியோர்கள் தத்தம் சங்கை ஊதினார்கள்.
स घॊषॊ
धार्तराष्ट्राणां हृदयानि व्यदारयत् ।
नभश्च पृथिवी चैव
तुमुलॊऽभ्यनुनादयन् ॥ 19 ॥
இவர்கள் ஊதிய சங்கின் பேரொலி பூமியிலும்,
ஆகாயத்திலும் எதிரொலியை எழுப்பின. திருதாஷ்திரனுடன் சம்பந்தப்பட்ட கௌரவப் படையில்
உள்ளவர்களிடம் பயத்தை உண்டு பண்ணியது
अथ
व्यवस्थितान्दृष्टवा धार्तराष्ट्रान् कपिध्वजः ।
प्रवृत्तॆ
शस्रसम्पाते धनुरुद्यम्य पाण्डवः ॥ 20 ॥
இந்த நிலையில் அணிவகுப்புடன் இருக்கின்ற
திருதாஷ்டிரன் சம்பந்தப்பட்ட கௌரவப்படைகளை, ஆஞ்சநேயரை கொடியிலுடைய தேரில்
இருக்கும் அர்ச்சுனன், போரை துவங்கும் நேரத்தில் பகவானிடம் தன் காண்டீபத்தை
உயர்த்திக் கொண்டு
हृषीकेशं तदा
वाक्यमिदमाह महीपते ।
अर्जुन उवाच ।
सेनयॊरुभयॊर्मध्ये
रथं स्थापय मेऽच्युत ॥ 21 ॥
திருதாஷ்டிரா! கீழ்கண்ட வார்த்தையை பகவானிடம்
பேசினான். அர்ஜுனன் பகவான் கிருஷ்ணரிடம் இவ்விதம் சொன்னான். இரண்டு
படைகளுக்குமிடையில் என்னுடைய ரதத்தை கொண்டு போய் நிறுத்து அச்சுதா!
यावदेतान्निरिक्षेऽहं
योध्दुकामानवस्थितान् ।
कैर्मया सह
योध्दव्यमस्मिन् रणसमुद्यमे ॥ 22 ॥
நான் கௌரவர் படைகளை தெளிவாக பார்க்க விரும்புகிறேன். எந்த இடத்தில் நிறுத்தினால் என்னால் தெளிவாக பார்க்க முடியுமோ அங்கு நிறுத்துங்கள். போர் புரிய விரும்புவர்களை, கௌரவர்களை, அணிவகுத்து நின்று இருப்பவர்கள். இந்த போர் புரியும் சமயத்தில் எவர்களுடன் நான் போர் புரிய வேண்டும் என்று பார்க்க விரும்புகின்றேன்.
நான் கௌரவர் படைகளை தெளிவாக பார்க்க விரும்புகிறேன். எந்த இடத்தில் நிறுத்தினால் என்னால் தெளிவாக பார்க்க முடியுமோ அங்கு நிறுத்துங்கள். போர் புரிய விரும்புவர்களை, கௌரவர்களை, அணிவகுத்து நின்று இருப்பவர்கள். இந்த போர் புரியும் சமயத்தில் எவர்களுடன் நான் போர் புரிய வேண்டும் என்று பார்க்க விரும்புகின்றேன்.
योत्स्यमानानवेक्षेऽहं
य एतेत्र समागताः ।
धार्तरष्ट्रस्य
दुर्बुध्देर्युध्दे प्रियचिकीर्षवः ॥ 23 ॥
திருதாஷ்டிரனைச் சேர்ந்தவர்களின் தீய எண்ணங்களை
உடையவகள். யார், யார் இங்கே கூடியிருக்கின்றார்கள். இந்த போரில் துரியோதனுடைய
விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக போரிட வந்திருக்கிறார்கள். அவர்களை நான் பார்க்க
விரும்புகின்றேன். என்னுடைய ரதத்தை கொண்டு சென்று நிறுத்துங்கள்.
सञ्जय उवाच ।
एवमुक्ते
हृषीकेशो गुडाकेशेन भारत ।
सेनयोरुभयोर्मध्ये
स्थापयित्वा रथोत्तमम् ॥ 24 ॥
சஞ்ஜயன் கூறினான்
இவ்விதம் அர்ச்சுனால் கட்டளையிடப்பட்டதும்
பகவான் (ஹ்ருஷீகேஶ), உறக்கத்தை வென்றவன் (கு3டா3கேஶன்) அர்ஜுனனை,
இரண்டு படைகளுக்குமிடையில் மேலான ரதத்தை கொண்டு நிறுத்தினார்.
भीष्मद्रोणप्रमुखतः
सर्वेषां च महीक्षिताम् ।
उवाच पार्थ
पश्यैतान्समवेतान्कुरूनिति ॥ 25 ॥
பீஷ்மர், துரோணர் இவர்கள் முன்னிலையில் ரதம்
நிறுத்தப்பட்டது. எல்லா அரசர்களின்
முன்னிலையிலும் ரதம் நிறுத்தப்பட்டது. பிறகு பகவான் சொன்னார், பார்த்தா! நீ பார், இவர்களை, இங்கு
கூடியிருக்கும் குரு வம்சத்து கௌரவர்களை பார்.
तत्रापस्यस्त्थितान्पार्थाः
पित्दृनथ पितामहान् ।
आचार्यन्मातुलान्भ्रातृन्पुत्रान्पौत्रान्सखींस्तथा ॥ 26 ॥
சங்கத்தினாலும், சங்கல்பத்தினாலும் ராகமானது
உருவாகி பெரியதாக வளர்ந்து இருக்கும்.
நாம் அடைய விரும்பும் பொருளை அடைவதற்கு தடையாக இருப்பவர் பலவீனமாகவராக
இருந்தால் க்ரோதம் வரும், பலசாலியாக இருந்தால் பயம் வரும். அடைந்த பொருள் நாசமடையும்போது துயரம், சோகம்
வரும்
அர்ஜுனன், கௌரவர்களின் சேனையில் நின்று
கொண்டிருப்பவர்களை பார்த்தான்.
தந்தைமார்களை பார்த்தான். மேலும் பாட்டானார்களான பீஷ்மரைப் பார்த்தான்.
துரோணர், கிருபாச்சாரியர் போன்ற ஆச்சார்யர்களைப் பார்த்தான். மாமன்மார்களை, சகோதரர்களையும், மகன்களையும்,
பேரன்களையும் மேலும் நண்பர்களையும் பார்த்தான்
श्वशुरान्सुहृदश्चैव सेनयॊरुभयोरपि ।
तान्समीक्ष्य स कौन्तेयः सर्वान्बन्धूनवस्थितान् ॥ 27 ॥
மேலும் மாமனார்களைப் பார்த்தான். தனக்கு நன்மை செய்தவர்களைப் பார்த்தான். இரண்டு
சேனைகளிலும் இவர்களைப் பார்த்தான்.
அவர்களுடன் கழித்த நாட்களை எண்ணிப் பார்க்கின்றான். எல்லா உறவினர்களையும்
ஆலோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
कृपया परयाविष्टो विषीदन्निदमब्रवीत् ।
अर्जुन उवाच ।
दृष्ट्वेमं स्वजनं कृष्ण युयुर्सुं समुपस्थितम् ॥ 28 ॥
அவன் மனமானது பற்றினால் பாதிக்கப்பட்டுவிட்டது. பந்தப் பாசத்தால் ஆட்கொள்ளப்பட்டான். துயரத்தோடு பின்வருமாறு பேசினான்.
அர்ஜுனன் கூறத்தொடங்கினான்.
க்ருஷ்ணா, இங்கே இருக்கின்ற என்னைச்
சார்ந்தவர்களைப் பார்த்தவுடன் போர் புரிய விரும்பி வந்திருப்பவர்களைக் கண்டு
सीदन्ति मम गात्राणि मुखं च परिशुष्यति ।
वेपशुश्च शरीरे मे रोमहर्षश्च हयते ॥ 29९ ॥
என்னுடைய உடலுறுப்புக்கள் சோர்வடைந்து விட்டது,
வாய் வறண்டு போய் விட்டது. என்னுடைய
உடலில் நடுக்கம் ஏற்படுகின்றது.
மயிர்க்கூச்செரிகின்றது, உடல் சிலிர்த்து போகின்றது.
गाण्डिवं स्रंसते हस्तात्त्वक्चैव परिदस्यते ।
न च शक्नोम्यवस्थातुं भ्रमतीव च मे मनः ॥ 30 ॥
காண்டீபம் என்கின்ற வில்லானது கையிலிருந்து
நழுவி விடுகின்றது. உடல் எரிகின்றது. நிற்பதற்கு கூட என்னால் முடியவில்லை. உட்காரவும் முடியவில்லை. என்னுடைய மனமானது
சுற்றுகின்றது. மயக்கம் ஏற்படுகின்றது
निमित्तानि च पश्यामि विपरीतानि केशव ।
न च श्रॆयोऽनुपस्यामि हत्वा स्वजनमाहवे ॥ 31 ॥
ஹே கிருஷ்ணா!, கேசவா! பார்ப்பதெல்லாம் கெட்ட சகுணங்களாக
இருக்கின்றது. நம்முடைய மக்களையே போரில் கொல்வதால் நன்மையெதுவும் நான்
பார்க்கவில்லை என்று கூறினான்.
மோகம் என்பது என்ன?
ராகத்தின் இன்னொரு விளைவுதான் மோகம். மனதை அந்தக்கரணம் என்றும்
அழைக்கப்படுகின்றது. அதாவது கண்ணுக்கு
தெரியாத கருவியாக இருந்து கொண்டு செயல்படுகிறது.
இது இரண்டாக பிரிக்கப்படுகின்றது.
அவைகள் மனம், புத்தி என்பதாகும். இவைகள் எண்ணங்களின் ரூபமானது. உணர்வுகள் மயமானதாகவும், முடிவெடுக்க இயலாமல் இருக்கின்ற எண்ணங்கள் இருக்கும் பகுதியே மனம், முடிவு எடுக்கப்படுகின்ற, நிர்ணயம்
செய்கின்ற எண்ணங்கள் இருக்கின்ற இடம் புத்தி எனவும் கூறப்படுகின்றது. அர்ஜுனனுக்கு சோகத்தால் மனம் பாதிக்கப்பட்டு
விட்டது. மோகத்தினால் புத்தியும் பாதிக்கப்பட்டு விட்டது. எனவே அந்தக்கரணமே பாதிக்கப்பட்டுவிட்டதாகிறது.
ஒரு விஷயத்தில் முடிவு எடுக்கின்ற திறமையுடையது
புத்தி, எது சரி, எது தவறு என்று நிச்சயம் செய்வது புத்தியின் வேலை. இயற்கையாகவே
புத்திக்கு இந்த சக்தி எல்லா மனிதர்களிடத்திலும் இருக்கின்றது. இந்த சரி-தவறு என்பதை
மாற்றி நினைக்க வைக்கும் நிலைக்கு மோகம் என்று கூறப்படுகின்றது.
न काङ्क्षे विजयं कृष्णनच राज्यं सुकानि च ।
किं नो रज्येन गोविन्द किं भोगैर्जीवितेन वा ॥ 32 ॥
ஹே க்ருஷ்ணா! இந்தப்போரில் வெற்றியை
விரும்பவில்லை. அதனால் அடையும் அரசையும் விரும்பவில்லை. இவைகளினால் அடையப்படும்
இன்பத்தையும் நான் விரும்பவில்லை. இந்த அரசை அடைவதனால் என்ன பலன் போகத்தினால் என்ன
பயன் உயிர் வாழ்வதினாலும் என்ன பலன்
येषामर्थे कङिक्षतं नो रज्यं भोगाः सुकानि च ।
त इमेऽवस्थिता युद्धे प्रणांस्त्यत्तवा धनानि च ॥ 33 ॥
எவர்களுடைய நன்மைக்காக நம்மால்
விரும்பப்பட்டதோ, இந்த அரசு, போகப்பொருட்கள், இன்பங்கள், அவர்கள் இந்த
போர்களத்தில் போர் புரிய தயாராக இருக்கின்றார்கள். தன்னுடைய உயிரை விடத்தயாராக
இருக்கின்றார்கள். அவர்களுடைய செல்வங்களையும் விட்டு தியாகம் செய்து
இருக்கின்றார்கள்.
आचार्याः पितरः पुत्रास्तथैव च पितामहाः ।
मातुलाः श्वशुराः पौत्राः स्यालाः सम्बन्धिनस्तथा ॥ 34 ॥
ஆச்சார்யர்கள், தந்தைமார்கள், மகன்கள்,
அவ்விதமே பாட்டானர்கள், மாமன்மார்கள், மாமனார்கள், பேரர்கள், மைத்துனர்கள் இவை
போன்ற மற்ற உறவினர்கள் இங்கே கூடியிருக்கிறார்கள்.
एतान्न हन्तुमिच्छामि घ्रतोऽपि मधुसूदन ।
ऐ त्रैलोक्यराज्यस्य हेतोः किं नु महीकृते ॥ 35 ॥
இவர்களை கொல்வதற்கு நான் ஆசைப்படவில்லை, நான்
கொல்லப்பட்ட போதிலும், ஹே மதுசூதனா! மூன்று உலகத்தில் உள்ள நாடு கிடைத்தாலும்
கொல்ல மாட்டேன். இந்த பூமிக்காக எப்படி கொல்வேன்.
निहत्य धार्तराष्ट्रान्नः का प्रीतिः स्याज्जनार्दन ।
पापमेवश्रयेदस्मान्हत्वैतानातताहिन: ॥ 36 ॥
திருதராஷ்டிரனை சார்ந்தவர்களை கொன்று விடுவதால்
என்ன சுகம் கிடைக்கப் போகிறது ஜனார்தனா!. இவர்களைக் கொல்வதால் நமக்கு பாவம்தான்
வந்து சேரும். அவர்கள் அதர்மவாதிகளாக இருந்தாலும் (ஆததாயி – மகாபாவிகள்)
அவர்களை கொல்ல விரும்பவில்லை
ஆததாயி – ஆறு வகையான
பாவங்களில் ஒன்றாவது செய்திருப்பவன். இதன் விசாரம் செய்யப்படாமல் கொன்று விடலாம்
என்பது தர்மசாஸ்திரம். அவைகள்
1.
வீட்டைக் கொளுத்துபவன்,
2.
உணவில் விஷம் வைத்தவன்,
3.
நிராயுதபாணியை ஆயுதத்துடன்
சென்று கொல்பவன்,
4. பொருட்களை அபகரித்தல்,
5.
நிலத்தை அபகரித்தல்,
6.
பிறர் மனைவியை
அபகரிப்பவன்
तस्माननार्हा वयं हन्तुं घार्तरष्ट्रान्स्वबान्धावान् ।
स्वजनं हि कथं हत्वा सुखिनः स्याम माधव ॥ 37 ॥
ஆகவே நாம் இதை செய்வதற்கு நமக்கு அருகதை
கிடையாது. திருதராஷ்டிரனை சார்ந்தவர்கள் நம்முடைய உறவினர்கள். எனவே. நம்மை சார்ந்தவர்களை
கொன்று எப்படி நாம் சுகத்தை அடைபவராக முடியும்.
य्द्यप्येते न प्श्यन्ति लोभोपहतवेतसः ।
कुलक्षयकृतं दोषं मित्रद्रॊहे च पतकम् ॥ 38 ॥
ஒருவேளை இவர்கள் புத்தியில் உள்ள
லோபத்தினால், தான் மட்டும் அனுபவிக்க வேண்டும் என்ற தீய குணத்தால் போரின் விளைவை
அவர்கள் பார்க்கவில்லை. ஒரு குலத்தை நாசம்
செய்வதினால் வருகின்ற விளைவை எண்ணிப் பார்க்கவில்லை. நமக்கு வேண்டியவர்களை
கொல்வதினால் வரும் பாதகத்தையும், வீழ்ச்சியையும், குறைகளையும் எண்ணிப்
பார்க்கவில்லை.
कथं न ज्ञेयमस्माभिः पपदस्मान्निवर्तितुम् ।
कुलक्षयकृतं दोषं प्रपस्यद्भिर्जनार्दन ॥ 39 ॥
நம்மால் ஏன் புரிந்துக் கொள்ளக்கூடாது.
மற்றவர்கள் தவறு செய்தாலும் நாம் ஏன் தவறு செய்ய வேண்டும். ஒரு குலத்தை அழிக்கின்ற செயலில் உள்ள குறையை
பார்க்கின்ற நம்மால் அந்த பாவத்திலிருந்து விடுதலை அடையை முடியாது.
कुलक्षये प्रणस्यन्ति कुलधर्माः सनातनाः ।
धर्मे नष्टे कुलं कृत्स्नमधर्मोऽभिभवत्युत ॥ 40 ॥
ஒரு குலம் அழிந்துவிட்டால் குலதர்மங்கள்
நாசமடைந்து விடும். தொன்று தொட்டு பரம்பரையாக பின்பற்றுகின்ற குல தர்மங்கள். இந்த
தர்மங்கள் மறைந்து விட்டால் அந்த குலம் முழுவதும் அதர்மத்தை பின்பற்றுபவர்களாக
மாறிவிடும் அல்லவா!
अधर्माभिवत्कृष्ण प्रदुष्यान्ति कुलस्त्रियः ।
स्त्रीषु दुष्टासु वर्ष्णेय जायते वर्णसङ्कर: ॥ 41 ॥
ஹே கிருஷ்ணா! அதர்மமானது அந்தக் குலம்
பின்பற்றும்போது அந்த குலத்தில் இருக்கின்றவர்கள் நடத்தை கெட்டவர்களாகி
விடுவார்கள். பெண்கள் இந்த நிலைக்கு சென்றுவிடுவதால் வர்ண கலப்பு ஏற்பட்டு விடும்
सङ्करो नरकायैव कुलघ्नानां कुलस्य च ।
पतन्ति पितरो ह्येषां कुप्तपिण्डोदकक्रिया: ॥ 42 ॥
வர்ண கலப்பானது, குலதர்மத்தை கைவிட்டவர்கள்
நரகத்திற்குத்தான் கொண்டு போகும். அந்த குலத்திற்கு நாசம் வந்துவிட்டால் இந்த நிலை
ஏற்படும். அவர்களுடைய இறந்த பெற்றோர்கள் பித்ரு லோகத்திலிருந்து வீழ்ந்து விடுவார்கள்.
அவர்களுக்கு செய்ய வேண்டிய நீர், உணவு,கர்மங்கள் செய்யாமலிருப்பதால் கிடைக்காது.
சிரார்த்தம் மூலம் வருகின்ற புண்ணியம் அவர்களுக்கு கிடைக்காது.
गोषैतैः कुलघ्नानां वर्णसङ्करकारकैः ।
इत्साद्यन्ते हातिधर्माः कुलधार्माश्च शाश्वताः । 43 ॥
குலம் நாசமடைகின்ற விளைவினால், ஜாதிகளில்
கலப்பு ஏற்பட்டு விடுகின்றது. இதனால் நெடுங்காலமாக பின்பற்றி வந்த ஜாதி
தர்மங்களும், குல தர்மங்களும் அழிந்து விடும்.
उत्सन्नकुलधर्माणां मनुष्याणां जनर्दन ।
नरके नियतं वासो भ्यवतीत्यनुशुश्रुम ॥ 44 ॥
குலதர்மம், நாசமடைந்த மனிதர்களுக்கு ஜனார்தனா,
நரகத்தில்தான் அதிக நாட்கள் இருக்கும் நிலை ஏற்படும். இந்த கருத்து சாஸ்திரத்தின்
மூலமாக நாம் கேட்டிருக்கின்றோம்.
अहो बत महत्पापं कर्तु व्यवसिता वयम् ।
यद्राज्यसुखलोभेन हन्तुं स्वजनमुद्यता: ॥ 45 ॥
ஐயோ! பெரிய பாவத்தை செய்வதற்கு நாம் உறுதி
செய்து விட்டோம். தான் மட்டும் ராஜ்ஜியத்திலும், சுகத்தையும் அனுபவிக்க வேண்டும்
என்ற லோபத்தினால் நம்மைச் சார்ந்தவர்களை கொல்வதற்கு தயாராக இருக்கின்றோம்.
यदि मामप्रगीकारमशस्त्रं शस्त्रपाणय: ।
धार्तराष्ट्रा रणे हन्युस्तन्मे क्षेमतरं भवत् ॥ 46 ॥
ஒருவேளை பழிவாங்கும் எண்ணமில்லாத என்னை,
ஆயுதமில்லாத என்னை, ஆயுதத்தை கையில் ஏந்தியிருக்கும் திருத்ராஷ்டிரனைச்
சேர்ந்தவர்கள் இந்தப் போரில் என்னைக் கொன்றாலும், அதுவே எனக்கு நன்மையாக இருக்கும்
सञ्जय उवाच ।
एवमुत्तवार्जुनः सङ्ख्ये रथोपस्थ उपाविशत् ।
विसृज्य सशरं चापं शॊक्संविग्नमानसः ॥ 47 ॥
சஞ்சயன் கூறுகின்றார்!
இவ்விதம் போர்க்களத்தில் அர்ச்சுனன் பேசிவிட்டு
ரதத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்து விட்டான். காண்டீபத்தையும், அம்புகளையும்
தூக்கி எறிந்து விட்டான். அவனது மனமானது சோகத்தினால் தாக்கப்பட்டு விட்டதாக
இருக்கின்றது
ॐ तत्सदिति