அத்தியாயம்-21
கிரியாயோகம்,
இறைவழிபாடு
ஸ்வாமி
குருபரானந்தாவின் உபதேச விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது-24-02-2022
க்ரியாயேக3ம்
ஸமாசக்ஷ்வ ப4வதா3ராத4னம் ப்ரபோ4 |
யஸ்மாத்த்வாம் யே
யதா2ர்சந்தி ஸாத்வதா: ஸாத்வதர்ஷப4 || 1 |
உத்தவர் கேட்டார்.
யாதவ குலத்தில்
உள்ளவர்களில் சிறந்து விளங்கும் பகவானே! தங்களை வழிபடும் முறையையும்,
கிரியாயோகத்தைப் பற்றியும் உபதேசியுங்கள்.. என்ன காரணத்தினால் இறைவனாக உங்களை
யாரெல்லாம் எவ்விதமாக வழிபடுகின்றார்கள். விஷ்ணு பக்தர்கள் தங்களை எவ்வாறெல்லாம்
வழிபடுகிறார்கள்.
தவம், சாஸ்திரம்
படித்தல், ஈஸ்வர வழிபாடு இவைகள் மூன்றும் சேர்ந்து செய்வதையே கிரியாயோகம் என்று பதஞ்சலி
முனிவர் கூறியிருக்கிறார்.
கிரியாயோகம்
1. முதல் வகை
தவம் – உடலை உருக்கி தவம் செய்தல், சரீர சம்பந்தமான சாதனங்கள்
ஸ்வாத்யாயம் – வாக்கினால் செய்யப்படுகின்ற சாதனங்கள்
ஈஸ்வர ப்ரணிதானம் – மனதினால் இறைவனை பூஜித்தல்
2. இரண்டாவது வகை
தவம்
– மானசீகமாக செய்யப்படுகின்ற தவங்கள், மனவடக்கம், புலனடக்கம்
ஸ்வாத்யாயம் – வாக்கினால் செய்யப்படுகின்ற சாதனங்கள்
ஈஸ்வர பிரணிதானம் – உடலினால் செய்கின்ற இறைவழிபாடு
3. மூன்றாவது வகை
ஈஸ்வர பிரணிதானம் – உடலாலும், உள்ளத்தினாலும், வாக்கினாலும் இறைவனை
வழிபடுதல்
ஏதத்3வதந்தி
முனயோ முஹுர்னி:ஶ்ரேயஸம் ந்ருணாம் |
நாரதோ3
ப4க3வான்வ்யாஸ ஆசார்யோऽங்கி3ரஸ: ஸுத: || 2 ||
மீண்டும், மீண்டும் மனிதர்களுடைய மனதை தூய்மைபடுத்த
உதவுகின்ற உத்தமமான சாதனம் (நி;ஶ்ரேயஸம்)
என்று நாரதராலும், வியாச முனிவராலும், அங்கிரஸ் என்பவரின் மகனான பிரகஸ்வதியாலும், முனிவர்களாலும்
கூறப்படுகிறது.
நி:ஸ்ருதம் தே
முகா2ம்போ4ஜாத்3யதா3ஹ ப4க3வானஜ: |
புத்ரேப்4யோ
ப்4ருகு3முக்2யேப்4யோ தே3வ்யை ச ப4கவான்ப4வ: || 3 ||
தாமரைப் போன்ற சிவந்த
தங்களுடைய வாயினால் வகுத்துக் கொடுக்கப்பட்ட பூஜா முறைகளை பிரம்மா தன்னுடைய
புத்திரர்களான ப்ருகு முதலியவர்களுக்கு உபதேசம் செய்தார். பகவான் சிவபெருமான்
பார்வதி தேவிக்கு உபதேசித்தார். இன்றுவரை
இது பரம்பரையாக சொல்லப்பட்டு வருகிறது.
ஏதத்3வை ஸர்வ
வர்ணானாமாஶ்ரமாணாம் ச ஸம்மதம் |
ஶ்ரெயஸாமுத்தமம் மன்யே
ஸ்த்ரீஶூத்3ராணாம் ச மானத3 || 4 ||
இந்த பூஜைமுறையே எல்லா
வர்ணத்தாரும், எல்லா ஆசிரமத்திலிருப்போரும் செய்யக்கூடிய வகையில் பொருத்தமானதாக
இருக்கின்றது. அதேசமயம் உத்தமமான நன்மையை தருவதாகவும் இருப்பதாக நான்
கருதுகிறேன். பெண்களும், சூத்திரர்களும் கூட
இதைச் செய்யலாம்.
ஏதத்3கமலபத்ராக்ஷ
கர்மப3ந்த4விமோசனம் |
ப4க்தாய சானுரக்தாய
ப்3ரூஹி விஶ்வேஶ்வரேஶ்வர || 5 ||
பக்தர்களை
பெருமைப்படுத்தும் பகவானே கிருஷ்ணா! விஶ்வேஶ்வரா! ஈஸ்வரனே! தாமரை இலைப்போன்ற
கண்களை உடையவரே! எல்லா தேவதைகளுக்கும் தலைவனாக இருக்கின்ற இறைவா!உங்களிடத்தில்
பக்தியும், சிரத்தையும் இருக்கின்ற எனக்கு உங்களை வழிபடும் முறையை
உபதேசியுங்கள்.
ஸ்ரீபகவானுவாச
ந ஹயந்தோऽனந்தபாரஸ்ய
கர்மகாண்ட3ஸ்ய சோத்3த4வ |
ஸங்க்ஷிப்தம்
வர்ணயிஷ்யாமி யதா2வத3னுபூர்வஶ: || 6 ||
பகவான் கூறுகிறார்.
உத்தவா! நீ கேட்ட
கேள்வி வேதத்தின் கர்மகாண்டத்தில் உள்ள விஷயத்தைப் பற்றியதாகும். அது எல்லையற்றது, முழுமையாக என்னால் விளக்க
முடியாது. ஆனால் அதை சுருக்கமாகவும், சரியான வழியைக்காட்டக் கூடியதாகவும்
இருக்கின்ற வகையில் கிரமப்படி சொல்லப் போகின்றேன்.
அனந்த பாரஸ்ய
கர்மகாண்டஸ்ய – கரை காண முடியாத கர்மகாண்டத்தை
நஹி அந்தஹ –
முடிவற்றதான கர்ம காண்டத்தை
யதா2 வதன அபூர்வஶ: -
தெளிவாகவும், முறையாகவும்
ஸங்க்ஷிப்தம்
வர்ணயிஷ்யாமி – சுருக்கமாக சொல்லப்போகிறேன்
விளக்கம்
· குறிப்பிட்ட நேரத்தில்
பகவானுக்காக ஒதுக்கி அவரை சிரத்தையுடனும், அன்புடனும் வழிப்படுவது நம்முடைய
அன்பின் வெளிப்பாட்டை காட்டுகின்றது
· பக்தி வளர்வதற்கும்
பூஜையை செய்ய வேண்டும்
· மனவொருமுகப்பாட்டை
அடைவதற்கு உதவிசெய்யும். இது ஒருவகை உபாஸனமாக இருக்கலாம்
· இது நம்மையறியாமல் ஒரு
ஒழுக்கமான வாழ்க்கை முறையை அமைத்துக் கொடுக்கும்
· பூஜை செய்வது ஒரு
கர்மாவாக இருப்பதால் அதன் பலனாக புண்ணியத்தை அடையலாம்.
· பூஜை செய்யும்
நேரத்தில் நிஷேத கர்மத்தை செய்யாமல் வைத்திருக்கும்
· பூஜை செய்வதனால்
நன்மையே விளையும்
வைதி3கஸ்தாந்த்ரிகோ
மிஶ்ர இதி மே த்ரிவிதோ4 மக2: |
த்ரயாணாமீப்ஸிதேனைவ
விதி4னா மாம் ஸமர்சரேத் || 7 ||
எனக்கு செய்யக்கூடிய
பூஜைமுறையானது மூன்று விதமாக இருக்கின்றது. அவைகள் வைதிக முறை, தாந்திரிக முறை,
இவையிரண்டும் கலந்த முறை ஆகும். வைதீக முறை என்பது வேத மந்திரங்களை உபயோகித்து
செய்யும் பூஜை. தாந்த்ரீக முறை என்பது ஆகம
அடிப்படையில் செய்யும் பூஜைமுறை. இவையிரண்டும் கலந்து இருக்க கூடிய பூஜை முறை.
சைவ, வைஷ்ணவ, சக்தி ஆகம வழிபாடு முறைகள். தமிழ் இறைவழி பாடல்கள் தாந்த்ரீக முறையாகும்.
பக்தர்கள் எந்த விதியையாவது தேர்ந்தெடுத்து முறைப்படி வழிபட வேண்டும்.
யதா3 ஸ்வனிக3மேனோக்தம்
த்3விஜத்வம் ப்ராப்ய பூருஷ: |
யதா2 யஜேத மாம்
ப4க்த்யா ஶ்ரத்3த4யா தன்னிபோ3த4 மே || 8 ||
எவ்விதம் அவரவர்களுடைய
சம்பிரதாயப்படி பூஜை செய்ய விரும்புபவன் அதை செய்யக்கூடிய தகுதியை அடைந்து எப்படி
என்னைவழிபட வேண்டுமோ அதை சொல்லப் போகின்றேன். பக்தியுடனும், சிரத்தையுடனும்
வழிபடும் முறையை என்னிடமிருந்து அறிந்து கொள்வாயாக. பகவான் மீதுள்ள அன்பே பக்தி, அவர்மீது
வைத்திருக்கும் முழு நம்பிக்கையே சிரத்தையாகும். இவையிரண்டும் மிக முக்கியமானது
அர்சாயாம்
ஸ்த2ண்டி3லோऽக்3னௌ வா ஸூர்யே வாப்ஸு
ஹ்ருதி3 த்3விஜ: |
த்3ரவ்யேண
பக்தியுக்தோऽர்சேத்ஸ்வகு3ரும் மாமமாயயா || 9 ||
வழிபடுபவன், வழிபடும்
இறைவன், ஆலம்பனம் என்ற மூன்றின் துணைக் கொண்டு பூஜையானது செய்யப்படுகின்றது.
ஆலம்பனம் என்பது எதன் துணைக் கொண்டு இறைவனை வழிபடுகின்றோமோ அதைக்
குறிக்கின்றது. வழிபட விரும்பும் இறைவனை
ஒரு பொருளில் கொண்டுவந்து நிறுத்தி வழிபட ஆலம்பனம் உதவுகின்றது.
அர்சாயாம் – உருவ
சிலைகள்
ஸ்த2ண்டிலோ – யாகம்
செய்கின்ற இடம்
அக்3னௌ – அக்னியிலும்,
சூரியனிலும், நீரிலும்
தன்னுடைய இதயத்திலும் இறைவனை நிலைநிறுத்தி வணங்கலாம். அந்த ஆலம்பனத்தில் ஏதாவது
ஒரு பொருளின் துணைக் கொண்டு அதாவது மலர், இலைகளைக் கொண்டும், விபூதி,
குங்குமத்தையும் பயன்படுத்தி பக்தியுடன் கூடியவனாக வழிபட வேண்டும். உனக்கு
உண்மையான குருவாக இருக்கின்ற என்னை சிரத்தையுடனும், கபடமில்லாமலும்(அமாயயா) வழிபட
வேண்டும்.
பூர்வம் ஸ்னானம்
ப்ரகுர்வீத் தௌ4தத3ந்தோऽங்க3ஶுத்3த4யே
|
உப4யைரபி ச ஸ்நானம்
மந்த்ரைர்ம்ருத்3க்3ரஹணாதி3னா || 10 ||
பூர்வம்
ஸ்னானம் ப்ரகுர்வீத் – முதலில் உடலை குளிப்பாட்டி தூய்மைப்படுத்திக் கொள்ளவேண்டும்
ஏதத3ந்ததஹ
– பல்லையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்
அங்க
ஸுத்தயே – உடலில் எல்லா உறுப்புக்களையும் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
உப
யோக மந்திரஹ – தாந்த்ரிக, வைதீக மந்திரங்களின் துணைக் கொண்டு நீரைத் தெளித்து
தூய்மைப்படுத்திப் பிறகு குளிக்க வேண்டும். பிறகு உடலை தூய்மைப்படுத்தும் பொருளைக்
கொண்டும் தூய்மைப் படுத்திக் கொள்ள வேண்டும்.
ஸந்த்4யோபாஸ்த்யாதி3கர்மாணி
வேதே3னாசோதி3தானி மே |
பூஜாம் தை:
கல்பயேத்ஸம்யக் ஸங்கல்ப: கர்மபாவனீம் || 11 ||
ஏற்கனவே செய்து
கொண்டிருக்கும் சந்தியாவந்தனம், சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட கர்மங்ளோடு சேர்த்து
இறைவழிபாட்டை செய்ய வேண்டும். சரியான சங்கல்பத்துடன் செய்கின்ற வழிபாட்டின் பலனாக
பாவங்கள் அழிந்துவிடும்.
ஶைலீ தா3ருமயீ லௌஹீ
லேப்யா லேக்2யா ச ஸைகதீ |
மனோமயீ மணிமயீ
ப்ரதிமாஷ்சவிதா4 ஸ்ம்ருதா || 12 ||
இதில் ஆலம்பனத்தைப்
பற்றி விவரிக்கின்றார். எட்டுவிதமான
ஆலம்பனங்களை கூறியிருக்கிறார். அவைகள்
1.
ஶைலி – கல்லால் செய்த
உருவச்சிலை
2.
தாருமயி – மரத்தால்
செய்யப்பட்ட உருவச்சிலை
3.
லௌஹீ – தங்கம், வெள்ளி
போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட உருவச்சிலை
4.
லேப்யா – சந்தனம்,
களிமண் போன்றவற்றினால் செய்யப்பட்ட உருவச்சிலை
5.
லேக்யா –
வரைப்படத்தில் உள்ள உருவங்கள்
6.
ஸைகதீ – மணலில்
செய்யப்பட்ட சிலைகள்
7.
மனோமயீ – மனதிற்குள்ளே
உருவாக்கி வைத்திருக்கும் உருவம்
8.
மணிமயீ – மணிகளால்
உருவாக்கப்பட்ட சிலை
ஆகியவற்றைக் கொண்டு
வழிபாடு செய்தல்
சலாசலேதி த்3விவிதா4
ப்ரதிஷ்டா2 ஜீவமந்தி3ரம் |
உத்3வாஸாவாஹனே ந ஸ்த:
ஸ்தி2ராயாமுத்3த4வார்சனே || 13 ||
ஆலம்பனங்கள் இரண்டு
விதமாக பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒரே இடத்தில் நிலையாக இருப்பது, வெவ்வேறு
இடத்திற்கு எடுத்துச் செல்வது, நகரக்கூடியதாக இருப்பது ஆகியவைகளாகும்
ஜீவ மந்திரம் –
உணர்வும், உயிரோட்டமும் உடைய கோவில்கள், ஜீவர்கள் சென்று தரிசனம் செய்வதற்காக
உருவாக்கப்பட்டிருக்கும் ஆலயங்கள் இறைவன் முழுமையாக இருக்குமிடம்
உத்தவா! நிலையாக
வைக்கப்பட்டிருக்கும் சிலையில் அங்கு ஒவ்வொரு நாளும்
ஆவாஹனம் - ஒரு பொருளில் இறைவனை
எழுந்தருள செய்யும் சடங்கு)
உத்3வாஸா – பூஜை
முடிந்ததும் இறைவனை அந்தப் பொருளிலிருந்து அனுப்பி வைத்தல். ஆகியவைகள் நடைபெறாது.
கும்பாபிஷேகம் செய்யும் போது மீண்டும் ஆவாஹனம் செய்வார்கள்
அஸ்தி2ராயாம் விகல்ப:
ஸ்யாத்ஸ்த2ண்டி3லே து ப4வேத்3த்3வயம் |
ஸனப்னம்
ஸ்வவிலேப்யாயாமன்யத்ர பரிமார்ஜனம் || 14 ||
நகர்கின்ற
சிலைகளில் அவரவர் விருப்பப்படி ஆவாஹனம், உத்வாஸம் செய்யலாம். ஆனால் புண்ணியமான
இடத்தில் இருக்கும் போது இவையிரண்டும் செய்தாக வேண்டும். அந்த நீரில் கரையாத
சிலையை நீரால் தூய்மைப்படுத்த வேண்டும். நீரில் கரையும் தன்மையுடைய சிலையை கைகளால்
சுத்தம் செய்ய வேண்டும்.
த்ரவ்யை:
ப்ரஸித்3தை4ர்மத்3யாக3: ப்ரதிமாதி3ஷ்வமாயின: |
பக்தஸ்ய ச
யதா2லப்3தை4ர்ஹ்ருதி3 பா4வேன சைவ ஹி || 15 ||
வழிபாட்டை
ஆத்மார்த்தமாக, சிரத்தையாக செய்ய வேண்டும்.
சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட, யோக்கியமான பொருட்களை வைத்து வழிபட வேண்டும். கடவுளுக்கு படைக்கும் பொருட்களில்
போலித்தனமும், கள்ளம் கபடமும் இருக்கக்கூடாது. பக்தியுடனும் படைக்க வேண்டும். உன்னால் கொடுக்க முடிந்த பொருட்களை வைத்து
என்னை வழிபடலாம். மனமே ஆலம்பனமாக இருந்தால் அதிலேயும் பகவானுக்கு ஏதாவது பொருட்களை
வைத்து வழிபட வேண்டும்.
ஸ்னானாலங்கரணம்
ப்ரேஷ்ட2மர்சாயாமேவ தூத்3த4வ |
ஸ்த2ண்டி3லே தத்த்வ்வின்யாஸோ
வஹனாவாஜ்யப்லுதம் ஹவி: || 16 ||
உத்தவா! நிலையான
உருவச்சிலைகளை நீரால் தூய்மைப்படுத்தி, அலங்காரம் செய்வது எனக்கு
பிடித்தமானது. இறைவனை வழிபட ஒரு இடத்தை
தேர்ந்தெடுத்து வழிபட விரும்பினால் அங்கே மந்திரங்களால் தேவதைகளை பிரதிஷ்டை செய்ய
வேண்டும். பிறகு வழிபட வேண்டும். ஒருவேளை
அக்னி மூலமாக வழிபட நினைத்தால், அதில் போடும் பொருட்களை நெய்யில் போட்டு எடுத்து
போட வேண்டும்.
ஸூர்யே சாப்4யர்ஹணம்
ப்ரேஷ்ட2ம் ஸலிலே ஸலிலாதி3பி4: |
ஶ்ரத்3த4யோபாஹ்ருதம்
ப்ரேஷ்ட2ம் பக்தேன மம வார்யபி || 17 ||
நீ எனக்கு படைக்கும்
பொருட்கள் எனக்கு முக்கியமல்ல. அவைகளை முழு பக்தியுடனும், சிரத்தையுடனும்
படைத்திருக்க வேண்டும். சூரியனை ஆலம்பனமாக
வைத்து வழிபட நினைத்தால் நீரால் மந்திரத்தை தூய்மைப்படுத்தி அர்ப்பணிக்க வேண்டும்.
பூ4ர்யப்யப4க்தோபாஹ்ருதம்
ந மே தோஷாய கல்பதே |
க3ந்தோ4
தூ4ப: ஸுமனஸோ தீ3போऽன்னாத்3யம் ச கிம் புன: || 18 ||
நீரை ஆலம்பனமாக
வைத்தால் அதையே எனக்கு அர்ப்பணித்து விடு. நீ எதைக் கொடுக்கிறாய் என்பது
முக்கியமல்ல எப்படிபட்ட பாவனையுடன் கொடுக்கிறாய் என்பதுதான் முக்கியம்.
பக்தியுடனும், சிரத்தையுடனும் வெறும் நீரைமட்டும் எனக்கு அளித்தாலே போதுமானது.
விலையுயர்ந்த பொருட்கள் பக்தியில்லாமல் எனக்கு படைக்கப்பட்டாலும் அவைகள் எனக்கு
திருப்தியை கொடுக்காது. வாசனைப் பொருட்கள், மலர்கள், தீபங்கள், அன்னம் போன்ற
பொருட்களை பக்தியுடன் கொடுத்தாலே முற்றிலும் மனநிறைவுடன் ஏற்றுக் கொள்வேன்.
பூர்யஹ – அதிகமாக
அபக்தய உபாஹ்ருதம் –
மனதில் பக்தியில்லாமல்
தோஷாய கல்பதே – எனக்கு
திருப்தியை கொடுக்காது
ஶுசி:
ஸம்ப்4ருதஸம்பா4ர: ப்ரக்3த3ர்பே4: ஸல்பிதாஸன: |
ஆஸின:
ப்ராகு3த3வார்சேத3ர்சாயாம் த்வத2 ஸம்முக2: || 19 ||
தன்னை
தூய்மைப்படுத்திக் கொண்டு பூஜைக்கு தேவையான பொருட்களை தன்னருகிலே வைத்துக் கொண்டு,
முதலில் தர்ப்பத்திலான தரைவிரிப்பை ஆசனமாக வைத்துக் கொண்டு தெய்வத்தை வழிபடுவதற்கு
முன் கிழக்கு நோக்கியோ, வடக்கு நோக்கியோ அல்லது வழிபடும் தெய்வத்தின் முன்போ
அமர்ந்து கொள்ள வேண்டும்.
க்ருதன்யாஸ:
க்ருதன்யாஸாம் மத3ர்சாம் பாணினாம்ருஜேத |
கலஶம் ப்ரோக்ஷணீயம் ச
யதா2வது3பஸாத4யேத் || 20 ||
உடலிலுள்ள எல்லா
அங்கங்களையும் மந்திரங்களால் தூய்மைப்படுத்த வேண்டும். அந்தந்த அங்கங்களுக்குரிய தேவதைகளை வேண்டி
அங்கங்களையும் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். வழிபடும் தெய்வத்தை தன்னுடலில்
அமர்த்திக் கொள்ள வேண்டும். கையினாலே அந்த தெய்வத்தை தூய்மைப்படுத்த
வேண்டும். நீரில் மந்திரத்தை சொல்லி அதை
நம் மீது தெளித்துக் கொண்டு துய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். கலசத்தில் நீர் நிரப்பி அதை மந்திரத்தாலொ,
வில்வம், துளசி போன்றவற்றினால் தூய்மைப்படுத்த வேண்டும்.
ப்ரோக்ஷணீயம் – புரோக்ஷனத்திற்கு
தயார் பண்ணிவைக்க வேண்டும்.
ப்ரோக்ஷணம் -
தெளித்தல்
தத3த்3பி4ர்தே3வயஜனம்
த்ரவ்யாண்யாத்மானமேவ ச |
ப்ரோக்ஷ்ய பாத்ராணி
த்ரீண்யாத்3பி4ஸ்தைஸ்தைர்த்ரவ்யைஶ்ச ஸாத4யேத் || 21 ||
பாத்3யார்த்4யாசமனீயார்த2ம்
த்ரீணி பாத்ராணி தே3ஶிக: |
ஹ்ருதா3 ஶீர்ஷ்ணாத2 ஶிக2யா
கா3யஞ்யா சாபி4மந்த்ரயேத் || 22 ||
ப்ரோக்ஷணம்
செய்வதற்காக தயாராக வைத்திருந்த நீரைக் கொண்டு எந்த இடத்தில் இறைவனுடைய
உருவச்சிலையை வைத்திருக்கிறோமோ அந்த இடத்தையும், பூஜைக்கு பயன்படுத்தும்
பொருட்களான மலர்கள், நைவேத்திய பொருட்கள் ஆகியவற்றை பூஜைசெய்யப்போகும் தன்னையும்
நீரை தெளித்து தூய்மைப்படுத்தி கொள்ள வேண்டும்.
பாத்யம் – பாதத்தையும்
அர்க்யம் –
அர்ப்பணிக்க வேண்டிய பொருட்களையும்
ஆசமனம் – வாயையும்
மந்திரத்தால்
தூய்மைப்படுத்தபட்டு தயாராக வைத்திருந்த நீரால் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஹ்ருதாய என்ற மந்திரத்தையும், தலைமுடியை அந்தந்த காயத்ரி மந்திரத்தால் வழிபட
வேண்டும்.
பிண்டே3
வாய்வக்3னிஸம்ஶுத்3தே4 ஹ்ருத்பத்3மஸ்தா2ம் பராம் மம |
அண்வீம் ஜீவகலாம்
த்4யாயேத் நாதா3ந்தே ஸித்3த4பா4விதாம் || 23 ||
நம் உடலை நீரால்
தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தூய்மையான ஆடைகளை அணிந்து கொண்டு, பிராணாயாமத்தினால் உடலை தூய்மைப்படுத்தி
கொள்ள வேண்டும். பிராணாயாமம் நோய்களை விரட்டி, மனதை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
ஸித்தபாவிதாம் –
சித்தர்களால் பாவிக்கப்பட்ட தத்துவம்
ஹ்ருத்பத்மஸ்தாம் –
பூஜை செய்பவனின் இதய தாமரையினுள்ளே அமர்ந்துள்ள
பராம் மம – என்னுடைய
மேலான தத்துவம்
அண்வீம் – புரிந்து
கொள்வதற்கு கடினமானது இது
ஜீவகலாம் த்யாயேத் –
ஜீவனுடைய உண்மையான ஸ்வரூபத்தை தியானித்து வழிபட
வேண்டும்
நாதந்தே – நாத பிந்து
சப்தத்தை வழிபட வேண்டும்.
தயாத்மபூ4தயா பிண்டே3
வ்யாப்தே ஸம்பூஜ்ய தன்மய: |
ஆவாஹயார்சாதி3ஷு
ஸ்தா2ப்ய ந்யஸ்தாங்க3ம் மாம் ப்ரபூஜ்யேத் || 24 ||
நமது உடலையே ஆலயமாகக்
கொண்டு இதயத்தில் வணங்கும் தெய்வத்தை நிலைநிறுத்தி வழிபட வேண்டும். பிறகு அந்த தெய்வத்தை வழிபடும் உருவத்தில்
வைக்க வேண்டும். இந்த விதத்தில் நாமே இறைவனாக உணர்வு பூர்வமாக பாவித்துக்
கொள்கிறோம். நம் உடலில் உள்ள ஒவ்வொரு அங்கங்களிலும் தேவதைகளை வரவழைத்து
நிலைநிறுத்த வேண்டும். இந்த உடலையே ஈஸ்வர தத்துவமாக்கி கொள்ள வேண்டும், இதனால்
உடலானது விஷ்ணுமயமாகிவிடுகிறது. அப்படி
இந்த உடலை பூஜிக்க வேண்டும். இவ்வாறு
ஆவாகனம் செய்த விஷ்ணுவை வெளியே உள்ள ஆலம்பனத்தில் வைத்து ஒவ்வொரு அங்கங்கத்திலும்
அவரை ஆவாகனம் செய்து விட்டு வணங்க வேண்டும்.
பாத்3யோபஸ்பர்ஶார்ஹணாதீ3னுபசாரான்ப்ரகல்பயேத்
|
த4ர்மாதி3பி4ஶ்ச
நவபி4: கல்பயித்வாஸனம் மம || 25 ||
உபா4ப்4யாம்
வேத3தந்த்ராப்4யாம் மஹயம் தூப4யஸித்3த4யே || 26 ||
பாத்யம் – பாதத்தை
தூய்மைபடுத்த பயன்படுத்தும் நீர்
அர்க்யம் – வாயை
தூய்மைப்படுத்த பயன்படுத்தும் நீர்
ஆசமனம் – இறைவனுக்கு
படைக்கும் பொருட்களை தூய்மைபடுத்தும் நீர்
இது போன்ற பலவிதமான
உபசாரங்களை பகவானுக்கு செய்ய வேண்டும்.
பகவான் அமர்வதற்கு கட்டிலை உருவாக்கி அதன் நான்கு கால்களை தர்மம், ஞானம்,
வைராக்கியம், ஐஸ்வர்யம் இவைகளாக கற்பணை செய்து ஒன்பது திசைகளிலும் ஒன்பது விதமான
சக்திகளுடனும் இருக்கிறார் என்று பாவிக்க வேண்டும். இந்த மாதிரி ஒரு ஆசனத்தை
உருவாக்கி, எட்டு இதழ்களை கொண்ட தாமரை பூவில் இருப்பதாகவும், சூரிய, சந்திர
கிரணங்கள் அந்த இதழ்களில் பிரதிபலிப்பதாகவும் கற்பனை செய்து கொண்டு, சாஸ்திரத்தில்
கூறப்பட்ட மந்திரங்களால் பூஜிக்க வேண்டும். இதனால் ஶ்ரேயஸ், ப்ரேயஸ் இரண்டையும்
அடையலாம்
ஸுத3ர்ஶனம்
பாஞ்சஜன்யம் க3தா3ஸீஷுத4னுர்ஹலான் |
முஷலம் கௌஸ்துப4ம்
மாலாம் ஶ்ரீவத்ஸம் சானுபூஜயேத் || 27 ||
பகவானுடைய
கைகளிலிருக்கும் ஆயுதங்களையும் வணங்க வேண்டும்.
முத்திரைகளையும் வழிபட வேண்டும்.
சுதர்ஶன சக்கரம், பாஞ்சஜன்யம் என்கின்ற சங்கு, கதாயுதம், கத்தி, வில்,
அம்பு, கலப்பை போன்ற ஆயுதங்களையும், ஆபரணங்களான கௌஸ்துபம், மலர்மாலைகள்
போன்றவைகளையும், மார்பில் உள்ள ஸ்ரீவத்ஸம் என்கின்ற் மருவையும் வணங்க வேண்டும்.
நந்த3ம் ஸுனந்த3ம்
க3ருட3ம் ப்ரசண்ட3ம் சண்ட3ம் ஏவ ச |
மஹாப3லம் ப3லம் சைவ
குமுதம் குமுதே3க்ஷணம் || 28 ||
து3ர்கா3ம் வினாயகம்
வ்யாஸம் விஷ்வக்ஷேனம் கு3ருன்ஸுரான் |
ஸ்வே ஸ்வே ஸ்தா2னே த்வபி4முகா2ன்பூஜ்யேத்ப்ரோக்ஷணாதி3பி4:
|| 29 ||
பகவானின்
பாதுகாவலர்களான தேவதைகள் நந்த, சுனந்தம், கருடன், ப்ரசண்டம், சண்டம், மஹாபலம்,
பலம், குமுதம் போன்றவைகளும், மேலும் குமுதேக்ஷணம், துர்கா, வினாயகர், வியாஸர்,
விஶ்வக்ஷேனம், குருமார்கள் மேலும் மற்ற தேவதைகளையும் வழிபட வேண்டும்.
சந்த3னோஶீரகர்பூர
குங்குமாகு3ருவாஸிதை: |
ஸலிலை:
ஸ்னாபயேன்மந்த்ரைர் நித்யதா3 விப4வே ஸதி || 30 ||
ஸ்வர்ணக4ர்மானுவாகேன
மஹாபுருஷவித்3யயா |
பௌருஷேணாபி ஸூக்தேன
ஸாமபி4 ராஜனாதி3பி4: || 31 ||.
பூஜை செய்யும் இடம்
நல்ல தெய்வீக வாசனையுடன் கூடியதாக இருக்க வேண்டும். வாசனை திரவியங்களுடன், சந்தனம், கற்பூரம்,
குங்குமம் ஆகியவற்றுடன் நீரால் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு நீராட்டி பூஜிக்க
வேண்டும். தோத்திரங்களாலும், வேத
மந்திரங்களாலும், விஷ்ணுபுராணத்திலுள்ள சில மந்திரங்களாலும், புருஷ ஸுக்தம், சாம
வேதத்திலுள்ள மந்திரங்களாலும் வழிபட வேண்டும்.
வஸ்த்ரோபவீதாப4ரண
பத்ரஸ்ரக்3க3ந்த4லேபனை: |
அலங்குர்வீத ஸப்ரேம
மத்பக்தோ மாம் யதோ2சிதம் || 32 ||
பாத்3யமாசமனீயம் ச
க3ந்த4ம் ஸுமனஸோऽக்ஷதான்
|
தூ4பதீபோபஹார்யாணி த3த3யான்மே
ஶ்ரத்3த4யார்சக: || 33 ||
கு3ட3பாயஸ ஸர்பீஷி
ஶஷ்குல்யாபூபமோத3கான் |
ஸம்யாவத3தி4ஸூபாம்ஶ்ச
நைவேத்3யம் ஸதி கல்பயேத் || 34 ||
அப்4யங்கோ3ன்மர்த3னாத3ர்ஶ
த3ந்த தா4வாபி4ஷேசனம் |
அன்னாத்3யகீ3தந்ருத்யானி
பர்வணி ஸ்யுருதான்வஹம் || 35 ||
பகவானுக்கு விதவிதமான ஆடைகளை
உடுத்தியும், ஆபரணங்களை அணிவித்தும், மலர் மாலைகள், நறுமணம் கமழும் சந்தனம், வாசனை
திரவியங்கள் போன்றவைகளை பூசி வழிபட வேண்டும்.
ஆலம்பனத்திற்கேற்றாற் போல அலங்காரம் செய்ய வேண்டும். பாத்யம், அர்க்யம்,
ஆசமனம் செய்வதற்கேற்ற நீரும், நறுமணம் வீசுகின்ற மலர்கள், விளக்குகள் ஆகியவற்றை
மிகுந்த சிரத்தையுடன் வைத்திருக்க வேண்டும்.
பாயாஸம், நெய், மோதகம், இனிப்பு பதார்த்தங்கள், விதவிதமான பலகாரங்களை
முடிந்த அளவுக்கு படைக்க வேண்டும். சில
சிறப்பான நாட்களில், விசேஷ நாட்களில் அவருக்கு கண்ணாடி காட்ட வேண்டும். அவரை தூய்மைப்படுத்தி இசையாலும்,
நாட்டியத்தாலும் மகிழ்விக்க வேண்டும்.
விதி4னா விஹிதே
குண்டே3 மேக2லாக3ர்தவேதி3பி4: |
அக்3னிமாதா4ய பரித:
ஸமுஹேத்பாணிதோதி3தம் || 36 ||
பரிஸ்தீர்யத2
பர்யுக்ஷேத3ன்வாதா4ய யதா2விதி4 |
ப்ரோக்ஷண்யாஸாத்3ய
த்ரவ்யாணி ப்ரோக்ஷ்யாக்3னௌ பா4வயேத மாம் || 37 ||
தப்தஜாம்பூ3னத3ப்ரக்2யம்
ஶங்க2சக்ரக3தா3ம்பு3ஜை: |
லஸச்சதுர்பு4ஜம்
ஶாந்தம் பத்மகிஞ்சல்கவாஸஸம் || 38 ||
ஸ்புரத்கிரீடகடக
தடிஸூத்ரவரங்க3த3ம் |
ஶ்ரீவத்ஸவக்ஷஸம்
ப்4ராஜத் கௌஸ்துப4ம் வனமாலினம் || 39 ||
த்4யாயன்னப்4யர்ச்ய
தா3ருணி ஹவிஷாபி4க்4ருதானி ச |
ப்ராஸ்யாஜ்யபா4கா3வாகா4ரௌ
த3த்த்வா சாஜ்யப்லுதம் ஹவி: || 40 ||
ஜுஹுயான்மூலமந்த்ரேண
ஷோடஶர்சாவதா3னத: |
த4ர்மாதி3ப்4யோ
யதா2ன்யாயம் மந்த்ரை: ஸ்விஷ்டி2க்ருதம் பு3த4: || 41 ||
அப்4யர்ச்யாத2
நமஸ்த்ருத்ய பார்ஷதே3ப்4யோ ப3லிம் ஹரேத் |
மூலமந்த்ரம்
ஜபேத்3ப்3ரஹ்ம ஸ்மரன்னாராயணாத்மகம் || 42 ||
த2த்த்வாசமனமுச்சே2ஷம்
விஷ்வக்ஷேனாய கல்பயேத் |
முக2வாஸம்
ஸுரபி4மத்தாம்பூ3லாத்3யமதா2ர்ஹயேத் || 43 ||
விதிப்படி ஹோம
குண்டத்த்தை அமைத்து அதில் அக்னியை வளர்க்க வேண்டும். பிறகு பூஜை செய்ய வேண்டும். எவைகளையெல்லாம்
அதில் போட விரும்பகின்றோமோ அவைகளை தூய்மைபடுத்திவிட்டு அதில் போட வேண்டும்.
மூலமந்திரத்தை சொல்லி என்னை வணங்கவேண்டும். என்னை சுற்றியுள்ள மற்ற தேவதைகளுக்கும்
செய்ய வேண்டியவைகளை செய்ய வேண்டும், கொடுக்க வேண்டியவைகளை கொடுக்க வேண்டும்.
உபகா3யன்க்3ருணன்
ந்ருத்யன்கர்மாண்யபி4னயன்மம |
மத்கதா2:
ஶ்ராவயன்ஶ்ருண்வன்முஹூர்த க்ஷணிகோ ப4வேத் || 44 ||
இறைவனை போற்றி
புகழ்ந்து பாடுதல், அவனுடைய லீலைகளை கேட்டல், அவதார கதைகளை மக்களுக்கு கூறுதல்,
கேட்க வைத்தல் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும்.
என்புகழ் பாடியும், ஆடியும், நடித்தும் சிறிது நேரம் உலகத்தை மறந்து
என்னிடத்தில் மூழ்கியிருக்க வேண்டும்.
உபகாயன் – பகவான்
கதைகளை
க்3ருணன் –
கேட்டுக்கொண்டும்
நிருத்யன் – நடனமாடிக்
கொண்டும்
இவைகளை நேரம் போவது
தெரியாமல் மனமொன்றி செய்ய வேண்டும்.
ஸ்தவைருச்சாவசை:
ஸ்தோத்ரை: பௌராணை: ப்ராக்ருதைரபி |
ஸ்துத்வா ப்ரஸீத3
ப4க3வன்னிதி வந்தே3த த3ண்ட3வத் || 45 ||
பண்டைக்கால
பக்தர்களால் செய்யப்பட்டதும், புராணங்களில் கூறப்பட்டதுமான சிறிய-பெரிய
தோத்திரப்பாக்களால் என்னை துதித்து, பகவானே எனக்கு அருள் புரியுங்கள் என்று கேட்க
வேண்டும்.
பகவான் ப்ரஸீத வந்தேத
தண்டவத் – பகவானை தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி வேண்ட வேண்டும். எனக்கு
அருள் புரியுங்கள் என்று யாசிக்க வேண்டும். இது நம் அகங்காரத்தை இறைவனிடத்தில்
பணிய வைக்கின்றது.
ஶிரோ மத்பாத3யோ:
க்ருத்வா பா3ஹுப்4யாம் ச பரஸ்பரம் |
ப்ரபன்னம் பாஹி மாமீஶ
பீ4தம் ம்ருத்யுக்3ரஹார்ணவாத் || 46 ||
என்னுடைய பாதங்களில்
உன்னுடைய தலையை வைத்து இரண்டு பாதங்களையும் இறுக்கி பிடித்துக் கொண்டு, இறைவா!
உன்னிடத்தில் சரணடைந்த என்னை காப்பாற்றுவாயாக. மரணம் என்கின்ற முதலை
பிடியிலிருந்து, சம்சாரத்தில் துயரப்பட்டு கொண்டிருக்கும் என்னை காப்பாற்றுவாயாக
என்று வேண்ட வேண்டும்.
இதி ஶேஷாம் மயா
த3த்தாம் ஶிரஸ்யாதா4ய ஸாத3ரம் |
உத்3வாஸயேச்சேது3த்3வாஸ்யம்
ஜ்யோதிர்ஜ்யோதிஷி தத்புன: || 47 ||
நமக்கு வரும் அனைத்து
அனுபவங்களும் இறைவனின் பிரசாதமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதி மயா த3த்தாம்
ஶேஷாம் – உனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம் என்னால் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று
நினைக்க வேண்டும். அதை தலையில் எடுத்து வைத்துக் கொள்.
ஒரு சிலையில்
தற்காலிகமாக ஆவாகனம் செய்யப்பட்டிருந்தால் பூஜை முடிந்த பிறகு அவரை முறைப்படி
அனுப்பி விட வேண்டும். ஏற்றி
வைத்திருக்கும் விளக்கில் இருந்து அவரை எழுந்தருள வைத்திருந்தால் அதிலேயே
அனுப்பிவிட வேண்டும்.
அர்சாதி3ஷு யதா3 யத்ர
ஶ்ரத்3தா4 மாம் தத்ர சார்சயேத் |
ஸர்வபூ4தேஷ்வாத்மனி ச
ஸர்வாத்மாஹமவஸ்தி2த: || 48 ||
வழிபடக்கூடிய என்னுடைய
உருவச்சிலை எந்த இடத்தில் இருந்தாலும் சிரத்தையோடு அந்த இடத்திலே என்னை வழிபடலாம,
எல்லா ஜீவராசிகளிடத்திலும், உன்னிடத்திலும் சர்வாத்மாவாக நான் குடிக்
கொண்டிருக்கின்றேன்.
ஏவம் க்ரியாயோக3பதை2:
புமான்வைதி3கதாந்த்ரிகை: |
அர்சன்னுப4யத:
ஸித்3தி4ம் மத்தோ விந்த3த்யபீ4ப்ஸிதாம் || 49 ||
இவ்விதம் இங்கு
சொல்லப்பட்ட கிரியாயோகத்தின் வைதீக முறைப்படியும், ரிஷிகள் கூறிய தோத்திரங்கள்
மூலமாகவும் வழிப்பட்டால் இவ்வுலகிலும், மேலுலகிலும் தான் விரும்பியதெல்லாம்
என்னிடமிருந்து பெறலாம்
மத3ர்சாம்
ஸம்ப்ரதிஷ்டா2ப்ய மந்தி3ரம் காரயேத்3த்3ருட4ம் |
புஷ்பொத்3யானானி
ரம்யாணி பூஜாயாத்ரோத்ஸவாஶ்ரிதான் || 50 ||
பூஜாதீ3னாம்
ப்ரவாஹார்த2ம் மஹாபர்வஸ்வதா2ன்வஹம் |
க்ஷேத்ராபணபுரக்3ராமாந்த3த்த்வா
மத்ஸார்ஷ்டிதாமியாத் || 51 ||
ப்ரதிஷ்ட2யா
ஸார்வபௌ4மம் ஸத்3மனா பு4வனத்ரயம் |
பூஜாதி3னா
ப்3ரஹ்மலோகம் த்ரிபி4ர்மத்ஸாம்யதாமியாத் || 52 ||
எனக்காக உறுதியான
கோயிலைக் கட்டி என்னை பிரதிஷ்டை செய்து அதனருகே நந்தவனங்களை அமைத்து, விதவிதமான
உற்சவங்கள், வருடாந்திர திருவிழாக்கள், தினசரி பூஜைகள் செய்தல், கோயிலுக்கு நிலம்
கொடுத்தல், கிராமத்தைக் கொடுத்தல், ஆகிய இத்தகைய செயல்களால் நான் அடையும் இன்பத்தை
நீயும் அடைவாய். எனக்கு நிகரான செல்வ
செழிப்பும் உண்டாகும். என் மூர்த்தியை
பிரதிஷ்டை செய்தால் மண்ணுலகில் பெரிய பதவியையும், கோவில் கட்டினால் மூவுலக
ஆட்சியையும், பூஜை முதலியவைகளுக்கு தகுந்த ஏற்பாடுகள் செய்தால் பிரம்மலோகமும்,
இந்த மூன்றையும் செய்தால் எனக்கு நிகரான நிலையையும் அடைவாய்
மாமேவ நைரபேக்ஷ்யேண
ப4க்தியோகே3ன விந்த3தி |
பக்தியோக3ம் ஸ லப4த
ஏவம் ய: பூஜயேத மாம் || 53 ||
பலனில் பற்றில்லாமல்
கிரியாயோக முறைப்படி பூஜை செய்தால் என்னையே அடைவாய், இங்கு என்னையே அடைவாய் என்பதை
பக்தியோகத்தை அடைவாய் அதில் நிலைபெறுவாய் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
ய: ஸ்வத3த்தாம்
பரைர்த3த்தாம் ஹரேத ஸுரவிப்ரயோ: |
வ்ருத்திம் ஸ ஜாயதே விட்பு4க்3வர்ஷாணாமயுதாயுதம்
|| 54 ||
கர்துஶ்ச
ஸாரதே2ர்ஹதோரனுமோதி3துரேவ ச |
கர்மணாம் பா4கி3ன:
ப்ரேத்ய பூ4யோ பூ4யஸி தத்ப2லம் || 55 ||
தன்னாலோ அல்லது பிறரைக்
கொண்டோ தெய்வத்திற்கு அல்லது பிராமணனுக்கு அளிக்கப்பட்ட சொத்துக்களை கவர்ந்து
கொண்டால் அவன் லட்சோபலட்ச ஆண்டுகள் மலம் புழுவாக பிறந்து துயரப்படுவான். இத்தகைய
தீய காரியங்களுக்கு உதவி செய்தாலும், தூண்டிவிட்டாலும், ஆதரித்தாலும் அவர்கள் கூட
மரணத்திற்கு பிறகு மீண்டும் மீண்டும் இதே நிலைக்கு ஆளாவார்கள்
ஓம் தத் ஸத்