பஞ்சதசி
அத்தியாயம்-14
வித்யானந்தம்
இதில் ஜீவன்முக்தி பற்றி விளக்கப்படுகிறது. ஜீவன்முக்தி என்பது என்றும் மனநிறைவுடன்
இருக்கும் நிலை, துக்கத்திலிருந்து விடுபட்ட நிலை, மனத்திருப்தியுடன் இருக்கும் நிலை ஆகும். ஆத்மாவை பிரித்தறிவதனால்
அடையப்படும் அறிவினால், ஜகத் மித்யாவாக இருக்கின்ற தன்மையை சிந்திப்பதனால்
பிரமானந்தத்ததை பார்க்கின்றவனுடைய வித்யானந்தம் நிலை நாட்டப்படுகிறது.
விரும்பிய ஒன்றை அடையும் போது அடைகின்ற விஷயானந்தத்தைப்
போலவே, வித்யானந்தமும் மனதில் எழுகின்ற எண்ணமாகும். பிரம்மமே விஷயமாக இருப்பதால் அதை
அடையும் போது எழுகின்ற எண்ணமே வித்யானந்தம். துயரமின்மை,
விரும்பியதை அடைதல், நான் க்ருதக்ருதயன்
( செய்ய வேண்டியது எல்லாம் செய்தாகிவிட்டது, இனி
செய்ய வேண்டியது எதுவும் இல்லை) என்கின்ற எண்ணம், நான் பிராப்த பிராப்யன் ( அடைய வேண்டியது எல்லாம் அடைந்தாகிவிட்டது,
இனி அடைய வேண்டியது எதுவுமில்லை) என்ற எண்ணம்,
இவ்விதமாக நான்குவிதமாக சொல்லப்பட்டு இருக்கின்றது.
1.இனி துயரம் இல்லாத நிலை விளக்கப்படுகிறது
இந்த உலகத்தில் சரீரத்தின் மூலமாக அனுபவிக்கின்ற துன்பங்கள், பரலோகத்தில் அனுபவிக்கின்ற துயரங்கள்
என்று துயரங்கள் இரண்டுவிதமாக சொல்லப்பட்டு இருக்கிறது. ஞானம்
அடைந்ததும் இகலோக துயரங்களை நீக்கக்கூடிய விஷயத்தை பிருஹதாரண்ய உபநிஷத்திலுள்ள வாக்கியங்கள்
விளக்குகிறது. ஒருவன் இதுவாக இருக்கிறான் என்று ஆத்மாவை அறிவானேயானால்
அவன் எதை ஆசைப்பட்டு, யாருடைய ஆசைக்காக சரீரத்தையொட்டி துக்கமடைவான்.
அவன் தன்னைத்தானே துயரப்படுத்திக் கொள்ள மாட்டான்?
ஆத்மாவானது ஜீவாத்மா, பரமாத்மா என்று இரண்டுவிதமாக சொல்லப்படுகிறது.
சைதன்ய ஸ்வரூபமான ஆத்மாவானது மூன்று தேகங்களுடன் ஒன்றாகவிருக்கும் தன்மையினால்
ஜீவனாக கருதப்படுகிறான். அதனால் அனுபவிக்கிறவன் என்ற நிலையை அடைகிறான்.
சச்சிதானந்த ஸ்வரூபமாகவுள்ள பரமாத்மா நாம-ரூபங்களுடன்
ஒன்றாகவிருக்கும் தன்மையை அடைந்து அனுபவிக்கப்படும் தன்மையை அடைந்து விடுகிறது.
ஆனால் இதைப் பிரித்துப் பார்த்தால் ஜீவனிடமிருந்து மூன்று தேகங்களையும்,
பரமாத்மாவிடமிருந்து நாம, ரூபங்களை விலக்கிவிட்டால்
அனுபவிக்கிறவன், அனுபவிக்கப்படும் பொருள் என்ற இரண்டுமே கிடையாது
அனுபவிக்க வேண்டிய பொருள் மீது ஆசைப்பட்டு, அனுபவிப்பவன் திருப்திக்காக சரீரத்தையொட்டி
துக்கத்தை அனுபவிக்க வேண்டும். மூன்று தேகங்களிலும் துக்கங்கள்
இருக்கின்றது. ஆனால் ஆத்மாவுக்கு துக்கமே கிடையாது. மனம் வயிற்றைப் போன்றது எவ்வளவு நிறைத்தாலும் மீண்டும் வெற்றிடம் ஏற்பட்டுவிடும்.
ஸ்தூல உடலில் இருக்கின்ற மூன்று விதமான துயரங்களானது உடலிலுள்ள தாதுப்பொருட்கள்
சரியான விகிதத்தில் இல்லாததால் ஏற்படுகின்ற வியாதிகள், பேராசை,
வெறுப்பு, கோபம் போன்ற உணர்ச்சிகள், மனதிற்கு வருகின்ற
துயரங்கள். இந்த கடைசி இரண்டுவகை துயரங்களும் சூட்சுமமாக இருக்கின்ற
காரண சரீரத்தில் இதுவே அறியாமையாகும்.
அத்வைதானந்தத்தைப் பற்றிய விசாரம் செய்து அடைந்த அறிவின்; மூலமாக பரமாத்மா அத்வைத தத்துவம்
என்று உணர்ந்து விட்டால் தனக்கு சந்தோஷம் கொடுக்கின்ற பொருட்கள் அனைத்தும் மித்யாவாகி
விட்டதால் இவன் எதைக் கண்டு ஆசைப்படுவான்? ஆசைப்படுகின்ற பொருட்கள்
இல்லாததால் எதைக் கண்டு ஆசைப்படுவான்?
அனுபவிக்கின்றவனே இல்லையென்றால் சரீரத்தில் போக்தாவாக
எதுவும் இருக்காது. எனவே துயரங்கள் எங்கிருந்து
வரும்? ஜீவாத்மாவின் ஸ்வரூபம் நிச்சயிக்கப்பட்டுவிட்டால் எதுவுமே
போக்தாவாகாது. அப்பொழுது இந்த சரீரத்தில் துயரம் எப்படி வரும்?
பாவ, புண்ணியத்தைக் குறித்து மனதில் எழுகின்ற துயரங்களே
பரலோக துயரமாகும். யோகானந்தம் என்ற அத்தியாயத்தில் விளக்கியதிலிருந்து
ஆத்மஞானி இந்த துயரங்களால் பாதிக்கப்படமாட்டான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
எப்படி தாமரை இலையில் நீர் ஒட்டுவதில்லையோ அதுபோல ஞானம் ஏற்பட்ட பிறகு
வருகின்ற ஆகாமி கர்மாவிற்கு ஞானியிடத்தில் ஒட்டுதல் கிடையாது. ஞானிக்கு ஆகாமி கர்மங்களும் அழிந்து விடுகிறது. அவர்
செய்யும் கர்மங்களால் எந்த பலனும் ஏற்படாது.
நிபந்தனையற்ற மனநிறைவே ஜீவன் முக்தியின் நிலை. நம் மனதே நம்மை துயரத்தில் ஆழ்த்திவிடும்
சக்தியை உடையது. அதேசமயத்தில் மகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடியதாகவும்
இருக்கிறது. இரண்டு நிலையும் ஒரே நேரத்தில் இருக்க முடியாது.
இஷீகா என்ற புல்லிலுள்ள பஞ்சுப் போன்ற மென்மையான தண்டை நெருப்பானது நொடிபொழுதில்
எரித்து விடுதல் போன்று இதுவரை சேர்ந்திருக்கின்ற சஞ்சித கர்மபலன்களும் ஆத்ம ஞானத்தால்
எரிக்கப்பட்டுவிடுகிறது. கொழுந்துவிட்டு எரிகின்ற அக்னி எப்படி
விறகுகளை எரித்து சாம்பலாக்கிவிடுகிறதோ அப்படியே ஞானமாகிற அக்னி எல்லாக் கர்ம பலன்களையும்
சாம்பலாக்கிவிடுகிறது.
யாருக்கு நான் இந்த உடல் என்கின்ற எண்ணம் இல்லையோ
அந்த புத்தியானது சரீரத்திலிருந்து வெளிபட்ட செயல்களை நான் செய்யவில்லையென்று நினைக்கும், இன்ப, துன்பங்களால்
பாதிக்கப்படாமல் இருந்தால் அந்த ஞானி இந்த உலகத்திலுள்ள உயிர்களை கொன்றாலும் கொலை செய்பவராகமாட்டார்.
செய்த கர்மத்தினால் எந்த பலன்களையும் அடையமாட்டார். எந்தவிதமான குற்ற உணர்வும் ஞானியின் மனதில் தோன்றாது. திருடுதல், கருவிலுள்ள சிசுவைக் கொல்லுதல் போன்ற பெரிய
பாவ காரியங்களை செய்தாலும் அதனால் முக்தி அழிந்துவிடாது.
வயதானவர்களுக்கு எதைச் செய்தும் சந்தோஷப்படுத்த முடியாது. எனவே அவர்கள் திருப்தியாக,
ஆரோக்கியமாக வாழ்வதற்கேற்ற சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுத்தாலே போதும்
அவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். – கௌஷீதகி உபநிஷத்
ஞானி அனைத்து ஆசைகளும் நிறைவேற்றியவனாக இருக்கிறான். எல்லா ஆசைகளையும் பூர்த்தி செய்துவிட்டவன்
என்றும் சொல்லப்படுகிறது. மரணமற்ற பெருநிலையை அவன் அடைகிறான்.
ஆசைகள் பந்தப்படுத்துகின்ற ஆசைகள், பந்தப்படுத்தாத
ஆசைகள் என இருவகையாக இருக்கிறது. ஞானிக்கு ஆசை வருகின்ற காலமும்,
அது நிறைவேறுகின்ற காலமும் ஒன்றாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இதிலிருந்து ஞானியின் மனதில் ஆசைகளே எழாது என்று புரிந்து கொள்ளலாம்.
ஆசை நிறைவேறாத போது பயம், கோபம், வெறுப்பு
போன்ற தீய உணர்ச்சிகளால் ஆட்கொள்ளப்பட்டு பந்தப்படுத்தப்படுகிறோம். ஞானியிடத்தில் பந்தப்படுத்துகின்ற ஆசைகள் இருக்காது. அவன் தன்னிடத்திலே மகிழ்ச்சியுடன் இருப்பான். புலனுகர்
போகப் பொருட்களுடன் சம்பந்தம் ஏற்பட்டாலும் சரீர அபிமானத்தை கடந்தவனாக இருப்பதால் அவைகளை
அனுபவிப்பது கிடையாது. பிராரப்த கர்மபலனானது இவனை ஜீவித்திருக்கும்படி
வைத்திருக்கிறது. ஞானி எல்லா ஆசைகளையும் சேர்ந்தாற்போல சமகாலத்திலே
அடைகிறான். பொதுவாக எல்லா
ஆசைகளும் ஒரே பிறவியில் நிறைவேறிவிடாது, ஆனால் இவனுக்கோ அனைத்தும்
ஒரே காலத்தில் நிறைவேறிவிடுகிறது. புண்ணிய பலனால் இன்பம் அடைவது
போன்றவைகள் இவனுக்கு கிடையாது. ஞானிக்கு போகங்கள் சேர்ந்தாற்போல
ஒரே காலத்தில் ஏற்படுகிறது. மற்றவர்களிடம் இருப்பது போல ஜன்மாவினாலும், கர்மபலனாலும்
அந்தந்த தேசக்கால நிமித்தங்களை எதிர்பார்த்து ஏற்படுவதில்லை.
இளமையும் அழகும் நல்லறிவுடையவனாகவும், நல்ல வித்வானாகவும், நோயற்ற ஆரோக்கியமான உடலும், உறுதியான மனம் உடையவனாகவும்,
தன்னைப் பாதுகாக்க பெரிய பாதுகாப்பு படைகளை உடையவனாகவும், ஏராளமான செல்வங்கள் உடையவனாகவும், போக சாதனங்கள் நிரம்பிய
தேசம் முழுவதையும் ஆள்பவனாகவும், மனிதர்களுக்கு வேண்டிய எல்லாவித
போகங்களுடன் கூடியவனாகவும், மிகவும் திருப்தியடைந்திருக்கும்
அரசன் எந்த ஆனந்தத்தை அடைகின்றானோ அதைவிட 100 மடங்கு ஆனந்தத்தை ஞானி அடைகிறான்.
மனிதலோகத்தில் இருக்கின்ற போகப் பொருட்களில் ஞானிக்கும், அரசனுக்கும் பற்று கிடையாது.
எனவே இருவரும் சமமான திருப்தியுடன் இருக்கிறார்கள். அக்ஞானியான அரசனுக்கு அவைகள் போகத்திற்கு இருப்பதால் ஆசை தன்மையுடன் இருக்கிறான்.
ஞானிக்கு அந்தப் போகப் பொருட்களைப் பற்றிய உண்மை அறிவை அடைந்திருப்பதால்
ஆசையற்ற தன்மையுடன் இருக்கிறான்,
வேதாந்த சாஸ்திரத்தை நன்கு கற்றவராக இருப்பதனால் போகத்தில்
இருக்கின்ற குறைகளை அறிந்து கொள்ள முடிகிறது. மைத்ராயனி உபநிஷத்தில் பிருஹத்ரன் என்ற அரசனுக்கு அந்த தோஷங்களை பற்றி சில
வாக்கியங்கள் மூலமாக எடுத்துச் சொல்வதாக கூறப்பட்டிருக்கிறது
போக தோஷங்கள், சித்த தோஷங்கள் என இருவகையாக பிரிக்கப்பட்டிருக்கிறது. போக தோஷங்கள் சரீரத்தில் இருக்கின்ற இயற்கையான குறைகள். சித்த தோஷங்கள் மனதில் இயற்கையாக இருக்கின்ற குறைகள். எனவே மனதிற்கு நம்மை நிரந்தரமாக திருப்தி அடையச் செய்யும் சக்தி கிடையாது.
வைராக்கியத்தை அடைந்தவனான ஞானிக்கும், அக்ஞானிக்கும் ஆசையற்றத் தன்மை ஒன்றாக
இருந்தபோதிலும் அக்ஞானி அந்தப் போகப் பொருட்களை அடைவதற்காக பெரும் துயரத்தை அடைகிறான்.
பிறகு அடைந்தப் பொருட்கள் கொஞ்ச நாளிலே அழிந்துவிடும். அவனுக்குள் அதிகமான பயமும், வருத்தமும் இருந்துக் கொண்டிருக்கும்.
வைராக்கியத்தை உடையவனுக்கு ஆசைபட்ட பொருட்களை அடைவதில்
துயரமும், அடைந்த பொருட்கள் நாசமடைந்து
விடுமோ என்ற பயமும் கிடையாது. ஆகையால் ஆனந்தம் மற்றவனுடைய ஆனந்தத்தை
விட அதிகம். மேலும் அரசனுக்கு மனிதலோக ஆனந்தத்தை விட மேலான கந்தர்வனுடைய
ஆனந்தத்தில் ஆசையிருக்கும். விவேகிகளுக்கு கிடையாது. ஆதலால் விவேகி அடைகின்ற ஆனந்தம் அதிகம்.
பூமியை ஆள்கின்ற அரசன் முதல் சூத்ராத்மா வரையுள்ளவர்கள்
அவரவர்களுடைய நிலைக்கு மேலேயுள்ள சுகத்தை அடைய விரும்புகிறார்கள். வாக்காலும், மனதாலும் விளக்க முடியாத இந்த ஆனந்தத்தை விட மேலானது பிரம்மானந்தம்.
அவரவர்கள் அடைய விரும்புகின்ற ஆனந்தத்தை வைராக்கியத்தை
அடைந்தவன் அனுபவிக்கின்றான். இதுதான்
எல்லா ஆசைகளையும் அடைவது என்று சொல்லப்பட்டது. சாட்சி சைதன்யமாக
இருந்து கொண்டு தன் தேகத்தில் சாட்சியாக இருந்து கொண்டு ஆனந்தத்தை அனுபவிக்கின்றான்.
அதுபோல மற்ற தேகங்களிலும் கூட சாட்சியாக இருந்து கொண்டு ஆனந்தத்தை அனுபவிக்கிறான்.
இதையே ஸர்வகாமாதி என்று அழைக்கப்படுகிறது. ஆத்மஞானம்
இல்லாதவனுக்கும் இதே நிலைதானே இருக்கத்தான் இருக்கிறது. ஆனால்
அவனுக்கு திருப்தி ஏற்படுவதில்லை. ஏனென்றால் இவனுக்கு நான் சாட்சி
சைதன்யம் என்ற அறிவில்லாததனால் அதிருப்தியுடன் இருக்கிறான். யார்
சாட்சி சைதன்யம் “நான்” என்று அறிகிறானோ அவன் எல்லா ஆசைகளையும் அடைந்தவன் என்று தைத்திரிய
உபநிஷத்தில் கூறப்பட்டிருக்கிறது. மேலும் நானே அனைத்துமாக இருக்கிறேன்
என்று அறிந்துகொண்டு கானம் பாடிக் கொண்டிருப்பான். நானே உணவு,
நானே அதை சாப்பிடுபவன் என்று உணர்த்தும் சாம கானத்தையும் பாடிக் கொண்டு
இருப்பான்.
துயரமின்மை, விரும்பியதை எல்லாம் அடைதல் ஆகிய இரண்டும் இவ்விதம் உறுதி செய்யப்படுகிறது.
மீதமாயிருக்கும் செய்ய வேண்டியதை செய்துவிட்டான், அடைய வேண்டியதை அடைந்து விட்டான் என்பதை இனி விசாரம் செய்யப்படுகிறது.
2.எனக்கு செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை
என்ற வாக்கியத்தின் விசாரம்
விஷயங்களிலிருந்து அடையப்படும் திருப்தியானது தற்காலிகமானது, குறிப்பிட்ட காலம் வரை இருப்பது.
ஆனால் ஞானியிடத்தில் இருக்கின்ற திருப்தியானது எல்லையற்றது, நிலையானது. செய்ய வேண்டிதெல்லாம் செய்தாகிவிட்டது என்கின்ற
திருப்தியுடன் இருக்கிறான் ஞானி.
இகலோகத்தில் அடையப்பட வேண்டியவைகள், பரலோகத்தில் அடையப்பட வேண்டியவைகள்
அனைத்தும் அடைவதற்காக செய்யப்பட வேண்டிய செயல்கள் பலவாக இருக்கிறது. மோட்சத்தை அடைவதற்காகவும் செய்யப்பட வேண்டிய பல செயல்கள் ஞானத்திற்கு முன்னே
ஞானிக்கு இருந்தது. இப்பொழுது ஞானிக்கு செய்ய வேண்டியது எதுவும்
இல்லை.
மேலே விளக்கியபடி செய்ய வேண்டியதை செய்யப்பட்டு விட்டது
என்ற எண்ணத்தை மீண்டும் மீண்டும் சிந்தித்து எப்போதும் திருப்தி அடைகிறான். ஞானத்திற்கு முன்னிருந்த பந்தப்பட்ட
நிலை எண்ணிப்பார்த்து மகிழ்ந்திருப்பான்.
ஆத்மஞானமில்லாதவர்கள் புத்திரன் முதலியவைகளை விரும்பினால்
அவைகளை அடைந்து கொள்ளட்டும். சம்சாரத்தில்
உழன்று கொண்டிருக்கட்டும். முழுமையான பரமானந்த ஸ்வரூபமாக இருக்கின்ற
நான் எதை விரும்புவனாக இருப்பேன். அலைந்து கொண்டிருப்பேன்.
பரலோகத்தை அடைய விரும்புபவர்கள் அதற்கான செயல்களை செய்து கொண்டிருக்கட்டும்.
நானே எல்லா உலகங்களாக இருக்கிறேன். எதற்காக,
எப்படி செயல்களை செய்வேன். யார் தகுதியுடையவர்களாக
இருக்கிறார்களோ அவர்கள் வேத சாஸ்திரத்தை அத்யயனம் செய்யட்டும், படிக்கட்டும். பிறருக்கு சொல்லித் தருதல் போன்றவற்றை
செய்யட்டும். நான் அவைகளுக்கு தகுதியற்றவனாக இருப்பதால் எனக்கு
அவைகளை செய்ய வேண்டியதில்லை. செயல்களற்ற ஆத்ம ஸ்வரூபமாக இருக்கிறேன்.
உறக்கம், உண்ணுதல், நீராடுதல்,
தூய்மையாக சுற்றுபுறத்தை வைத்திருத்தல் இவைகளை எல்லாம் நான் விரும்புவதில்லை.
செய்வதுமில்லை. ஆனால் மற்றவர்கள் ஞானியிடம் இருப்பதாக
கூறினால் இவைகளை செய்து கொண்டிருப்பதாக கூறினால் அதைப் பற்றி எனக்கு ஒன்றும் தொpயாது. புதர்
அருகே இருக்கும் குந்துமணியை தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு நெருப்பு எரிவது
போல தெரிந்தாலும். அதனால் அந்த புதருக்கு எந்த பாதிப்பும் கிடையாது.
அதுபோல மற்றவர்கள் நான் செயல் செய்கின்றேன் என்று கூறினால் அதனால் நான்
பாதிக்கப்படமாட்டேன். ஆத்ம தத்துவத்தை அறியாத அக்ஞானிகள் வேதாந்த
சாஸ்திரத்தை கேட்டுக் கொண்டு இருக்கட்டும். சிரவணம் செய்து கொண்டிருக்கட்டும்.
நான் ஞானத்தை அடைந்து இருப்பதால் சிரவணம் செய்யத் தேவையில்லை.
மேலும் ஆத்ம தத்துவத்தில் இருக்கும் சந்தேகங்களை நீக்கிக் கொள்வதற்கு
மனனம் செய்யட்டும். எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லையாதலால்
நான் மனனம் செய்வதில்லை.
விபரீத எண்ணத்திலிருப்பவன் நிதித்யாஸனம் செய்ய வேண்டும். விபரீத எண்ணமே இல்லாததினால் எனக்கு
நிதித்யாஸனம் தேவையில்லை. தேகமே ஆத்மாவாக கருதுகின்ற விபரீத எண்ணத்தை
நான் ஒருபோதும் அடைவது கிடையாது. நான் மனிதன் இது போன்ற விவகாரமானது
விபரீத எண்ணம் இல்லாமலும் நடைபெறும். வெகு நாட்கள் பழக்கத்தால்
ஏற்பட்ட வாசனையினால் விபரீத எண்ணம் ஏற்பட்டு விவகாரம் நடைபெறலாம். பிராரப்த கர்மபலன் அழிந்துவிட்டால் விவகாரங்கள் அனைத்தும் சென்றுவிடும்.
ஆனால் பிராரப்த கர்மம் இருந்து கொண்டிருந்தால் ஆயிரம் தியானங்கள் செய்தாலும்
விவகாரங்களை நீக்கிவிட முடியாது. விவகாரங்கள் குறைக்க
வேண்டும் என்று உனக்கு விருப்பமாக இருந்தால் தியானத்தை செய்து கொள்ளலாம். ஆனால் விவகாரங்கள் மனநிறைவையோ, ஞான நிஷ்டையையோ பாதிக்காது
என்றிருக்கின்ற எனக்கு எதற்காக தியானம் செய்ய வேண்டும். எதனால்
விக்ஷேபம் என்றவொன்று இல்லையோ அந்தக் காரணத்தினால் சமாதியும், மனவமைதியம் கிடையாது. விக்ஷேபமோ, சமாதிநிலையே மாறுதல் அடையக்கூடிய தன்மையுள்ள மனதிற்குத்தான் உண்டு.
எப்பொழுதும் அனுபவ ஸ்வரூபமாகவே இருப்பதனால் புதியதாக வேறென்ன அனுபவம்
தேவை. செய்ய வேண்டியவையெல்லாம் செய்து விட்டேன். அடையப்பட வேண்டியது எல்லாம் அடைந்துவிட்டேன். இதுதான்
ஞானியின் உறுதி என்று அறிந்து கொள்ள வேண்டும்.
சாதாரணமாக உலக வழக்கப்படி செய்யப்படும் விவகாரங்களாகட்டும்
சாஸ்திரங்களில் கூறப்பட்ட விவகாரங்களாகட்டும் அல்லது வேறுவிதமான விவகாரங்கள் நடந்தாலும்
எப்பொழுதும் செயலற்றவனாகவும் எதனோடும் சம்பந்தம் கொள்ளாதவனாகவும் இருக்கின்ற எனக்கு
எந்த கர்மபலனிலும் பற்றில்லாத எனக்கு பிராரப்தத்தின் அடிப்படையில் விவகாரங்கள் இருக்கட்டும்.
நான் க்ருதக்ருத்யனாக இருந்த போதிலும் உலக நன்மைக்காக
செயல்களை செய்து கொண்டேயிருக்கிறேன். சாஸ்திரங்களை காட்டுகின்ற வழியில்தான் விவகாரங்களை செய்து கொண்டு இருப்பேன்.
இதனால் எனக்கெந்த கெடுதலும் வந்து விடாது. இழப்பும்
ஏற்படாது.
பூஜை செய்தல், மனதையும், உடலையும் தூய்மையாக வைத்திருத்தல் உலக வழக்கப்படியும்,
சாஸ்திர முறைப்படியும் தன்னையும், சுற்றுப்புறத்தையும்
தூய்மையாக வைத்திருத்தல், பிச்சை எடுத்தல் போன்ற செயல்கள் செய்து
கொண்டு என்னுடல் இருக்கட்டும். மனம் ஓங்காரத்தை ஜபம் செய்யட்டும்.
அதைபோல மனமானது வேதாந்த சாஸ்திரங்களை படித்துக் கொண்டிருக்கட்டும்.
மனமானது விஷ்ணுவை தியானித்துக் கொண்டிருக்கட்டும் அல்லது பிரம்மானந்தத்தில்
மூழ்கி இருக்கட்டும். எல்லா நிலையிலும் நான் சாட்சியாக இருப்பதால்
நான் எதையும் செய்யத் தூண்டுவதில்லை.
செய்யப்பட வேண்டியதெல்லாம் செய்தாகிவிட்டது என்ற திருப்தியுடனும்
அடைய வேண்டியதெல்லாம் அடையப்பட்டுவிட்டது என்ற திருப்தியுடன் இருப்பதுடன் தன் மனதுக்குள்
இடைவிடாமல் அவன் கீழ்கண்டவாறு எண்ணிக்கொண்டிருப்பான்.
நான் பாக்கியசாலி, நான் பேறு பெற்றவன் நித்யமான என்னை நான் நேரில் அறிகிறேன்
பிரம்மானந்தம் எனக்கு தெளிவாக பிரகாசிக்கிறது. நான் பேறு பெற்றவன்,
சம்சார துயரத்தை ஞான நிஷ்டையிலிருக்கும்
என்னால் பார்க்கப்படவில்லை, உணரவில்லை. என்னுடைய ஸ்வரூபத்தைப் பற்றிய அக்ஞானமானது எப்படியோ பயந்து சென்று விட்டது.
நான் பேறு பெற்றவன், நான் பேறு பெற்றவன் எனக்கு
செய்ய வேண்டியது சிறிதளவும் கிடையாது. அடைய வேண்டியது அனைத்தும்
அடையப்பட்டு விட்டது. நான் பேறு பெற்றவன். நான் அடைந்திருக்கின்ற இந்த திருப்திக்கு எதையுமே இணையாக கூறமுடியும்.
நான் பேறு பெற்றவன் என்று மீண்டும்
மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். இந்த புண்ணியம் மிகவும் ஆச்சரியம்.
இந்த புண்ணியம் அதனுடைய முக்கிய பலனான மோட்சத்தைக் கொடுத்துவிட்டது.
நாங்களே ஆச்சரியத்திற்கு உரியவர்கள். இந்த புண்ணியத்தினுடைய
பலனை அடைகின்ற செல்வத்தை வைத்திருக்கின்ற ஞானிகள் அரிதானவர்கள்.
சாஸ்திரம் வெகு ஆச்சரியம். அத்வைத சாஸ்திரம் வணங்கத்தக்கது.
அதை உபதேசித்த குருவும் ஆச்சரியம். குருவும் வணங்கத்தக்கவர்.
உபதேசத்தினால் அடைந்த ஞானமும் வெகு ஆச்சரியம். ஞானமும் மிகவும் அரிதானது. ஞானத்தினால் அடைந்த ஆனந்தமும்
வெகு ஆச்சரியம் பிரமானந்தமும் மிகவும் அரிதானது.
----ooo000ooo----