ஜடபரதரின் ஆத்ம தத்துவ உபதேசம்
- யாருக்கு கனவை
உதாரணமாக கொண்டு இல்லற இன்பமானது முடிவில் துன்பமாகவே இருக்கும் என்று
ஊகித்தறிய முடியவில்லையோ அவனுக்கு புனிதமான வேதவாக்கியங்கள் கூட உண்மைப்
பொருளை அறிந்து கொள்வதற்கான சாதனமாக இருக்க முடியாது
- எவ்வளவு காலம்
வரை மனிதனுடைய மனமானது முக்குணங்களினால் ஆட்கொள்ளப்படுகிறதோ அதுவரை தொடர்ந்து
புலன்களினால் நன்மை, தீமைகளை அனுபவிக்க நேரிடும்.
- சத்துவம் முதலிய
முக்குணமுடையதும்,, விஷயங்களில் ஈடுபட்டதும், காமம், சங்கல்பம் முதலிய
மாற்பாடு கொண்டதும், பதினாறு கலைகள் சம்பந்தப்பட்டதும், முற்பிறவிகளின்
வாசனைகளுடன் கூடியதுமான மனமானது மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்ற
வெவ்வேறு பெயர்களுடன் வெவ்வேறு வடிவங்களைப் பெற்று பலவகை சரீர சம்பந்தகளுடனும்
உள்ளும், புறமும் கருத்துக்களைக் கொள்கிறது
- மாயையுடன் கூடிய
மனமானது ஸ்தூல உடலின் துணைக் கொண்டு சம்சார சக்கரத்தை சுழற்றிக் கொண்டு
கடுமையான துன்பத்தையும், இன்பத்தையும் அந்தந்த காலத்திற்கேற்றவாறு
உண்டுபண்ணுகிறது.
- அதுபோல இந்த
ஸ்தூல,சூட்சும உலக விஷயங்களை ஜீவன் அனுபவிக்கின்றது. ஆகையால் குணங்களில் ஏற்படும்
பற்றுதலுக்கும், பற்றின்மைக்கும், மோட்சத்திற்கும் மனம்தான் காரணமாக
இருக்கிறது.
- குணங்களினுடைய
தொடர்பினால் சம்சாரத்தில் இருக்கிறோம்.
அவைகளின் சம்பந்தமே இல்லாத நிலைதான் மோட்சமாக இருக்கிறது.
- அவ்வாறே
குணங்களினாலும், கர்மாக்களாலும் கட்டப்பட்ட மனமானது பற்பல எண்ணங்களை
தோற்றுவிக்கின்றது. மற்ற நேரத்தில்
ஆத்ம விசாரத்தை செய்வதற்கு உகந்ததாக இருக்கிறது. ஐந்து ஞானேந்திரியங்களும், புத்தியில்
இருக்கும் அபிமானமும் மனதினுடைய மாறுதல்களே. அவை பதினோறு வகையாக இருக்கின்றன.
- வாசனை, ரூபம்,
தொடுதல், சுவைத்தல், கேட்டல், கழிதல், சம்போகம், உபத்ரவம், அதிகமான பேச்சு,
மனம் இவைகளே அந்த பதினோறு வகையான மனோவிருத்திகளுக்கு விஷயங்களாக இருக்கின்றன
- இந்த பதினோறு
மனோ விகாரங்களும் திரவியம், சுபாவம், ஸம்ஸ்காரம், காலம் இவைகளால் ஜீவனுக்கு
உபாதியாக இருப்பதன் மூலம் எண்ணற்ற பிரிவுகளாக அடைகின்றன
- உண்மையில்
ஜீவனைக்காட்டிலும் வேறுபடாதவனும், இதயக்குகையில் வசிப்பவனும், எங்கும்
வியாபித்திருப்பவனும், ஜோதிவடிவமானவனும், அனாதியானவனும், பிறப்பற்றவனும்,
பரமாத்மாவாகவும், ஶ்ரீக்ருஷ்ணனாகவும் உள்ள பகவான் நாராயணன் தனது மாயையால்
படைத்த எல்லா ஜீவராசிகளிலும் வசித்து கொண்டிருக்கிறார்.
- எதுவரை இந்த
ஜீவன் காமம், கோபம், லோபம், மோஹம், மதம், மாச்சர்யம் (பொறாமை) என்கின்ற ஆறு
பகைவர்களை வென்று பற்றற்றவனாக இருந்து கொண்டு மாயா சம்பந்தத்தை உதறித்
தள்ளிவிட்டு உண்மையான ஆத்ம தத்துவத்தை உணர்வதில்லையோ, அதுவரையில்
சம்சாரத்திலே உழன்று கொண்டிருப்பான்.
- சோகம், மோகம்,
ஆசை, துன்பம், பகைமை இவைகளை நான்தான் அனுபவிக்கிறேன் என்ற பந்தத்தை மனம்
ஏற்படுத்துகின்றது. இதுவே
சம்சாரத்திலே ஜீவனை வைத்திருக்கிறது என்று எதுவரை அறியவில்லையோ அதுவரை
துன்பத்தையே அனுபவிப்பான்.
- ஆகவே பொய்யான
இந்த மனதை அனைத்து உலகத்துக்கும் தலைவனான ஶ்ரீமஹாவிஷ்ணுவின் சரண சேவை என்ற
ஆயுதத்தால் வெற்றிக் கொள்வாயாக.
- அறிவு
ஸ்வரூபமாகவும், புனிதமாகவும், உண்மையாகவும், ஒன்றாகவும் இருக்கின்றதும்,
உள்ளும் புறமும் இல்லாததும், சாட்சி ஸ்வரூபமாக ஜீவனிடத்தில் உள்ளதும்,
முழுமையான மன அமைதியுடையதும், எங்கும் வியாபித்திருப்பதும், எக்காலத்திலும்
இல்லை என்று கூறமுடியாததாகவும், என்றும் இருப்பதும் ஆகிய எந்த ஒன்று
இருக்கின்றதோ அதுவே பகவான் என்று கூறப்படும் வாசுதேவன் என்று ஞானிகள்
கூறுகிறார்கள்.
- ஆகையால் மனிதன்
தீவிர வைராக்கியத்தினால் அடைந்த ஞானம் என்ற வாள் கொண்டு அறியாமையை வெட்டி
அந்த பகவானுடைய லீலைகளை, கதைகளை சொல்லுதல், கேட்டல் என்ற சாதனங்களினால்
பகவானை அடைய வேண்டும்.