Showing posts with label உத்தவ கீதை-07. Show all posts
Showing posts with label உத்தவ கீதை-07. Show all posts

Friday, June 2, 2017

Uddhava Gita - Chapter-07 (Hamsa Gita)

உத்தவ கீதை
அத்தியாயம்-07
ஹம்ஸ கீதை
ஸ்வாமி குருபரானந்தாவின் உபதேச விளக்கம்

ஶ்ரீபகவான் உவாச
ஸத்த்வம் ரஜஸ்தம இதி கு3ண பு3த்3த்4ர்ன சாத்மன: |
ஸத்த்வேனான்யதமௌ ஹன்யாத்ஸத்த்வம் ஸத்த்வேன சைவ ஹி || 1 ||

இதில் சம்சார ஸ்வரூபம் வர்ணிக்கப்பட்டிருக்கின்ரது. மாயையிடம் உள்ள மூன்று குணங்களானது நம்மை சம்சாரத்தில் கட்டி வைத்திருக்கின்றது.  சம்சார ஸ்தானம் எங்கே இருக்கிறது? சம்சாரத்தில் இருப்பதற்கான காரணம் என்ன? ஆத்மாவின் ஸ்வரூபம் என்ன? மோட்சத்திற்கு செல்வதற்கான வழியும், பந்த நிவிருத்திக்கான உபாயமும் இதில் கூறப்படுகிறது.

சம்சார ஸ்வரூபம்
ஸத்த்வம் ரஜஸ்தம இதி கு3ணா – சத்துவ, ரஜோ, தமோ ஆகிய மூன்று குணங்கள் இருக்கின்றன.
சத்துவ குணம் – ஞான சக்தி; அறிவை அடைய உதவும் சக்தி; ஞான இச்சா
ரஜோ குணம் – க்ரியா சக்தி; செயல்பட வைக்கும் சக்தி; கர்ம இச்சா
தமோ குணம் – இவையிரண்டும் இல்லாத ஜடமாக இருக்கும் தன்மை உடையது. ஜட சக்தி; செயலற்ற சக்தி – அகர்மா இச்சா

ஞான இச்சா வந்தவுடன் ஞானேந்திரியங்கள் செயல்பட ஆரம்பிக்கும். கர்ம இச்சா வந்தவுடன் கர்மேந்திரியங்கள் செயல்பட ஆரம்பிக்கும். அகர்ம இச்சா வந்தவுடன் எல்லா இந்திரியங்களும் செயலற்ற நிலையில் இருக்கும். இந்த மூன்று குணங்களும் ஒருவனை கர்த்தாவாகவும், போக்தாவாகவும் வைத்துக் கொண்டிருக்கும். தமோ குணம் எதுவும் செய்ய வேண்டாம் என்ற மனநிலையில் வைத்து இருக்கும். 

சம்சார ஸ்தானம்
பு3த்3தே4ர் ந ச ஆத்மனஹ – முக்குணங்கள், மனதிலும் புத்தியிலும் இருக்கின்றது. சூட்சும சரீரத்திலும் இருக்கின்றது. மனம் விழித்திருக்கும்போது சம்சாரத்தை அனுபவிக்கின்றோம், லயமடைந்திருக்கும்போது அனுபவிப்பதில்லை.  இவைகள் ஆத்மாவிடம் இல்லை. எனவே நிர்குண ஸ்வரூபமுடையது என்று கூறலாம்.  இதிலிருந்து ஆத்மா அகர்த்தா, அபோக்தா, அசம்சாரி என்று புரிந்து கொள்ளலாம்.  அதுவே நான் என்ற சொல்லுக்கு உண்மையான பொருள். இந்த ஆத்மா, அனாத்மா அறியாமைதான் நாம் சம்சாரியாக இருப்பதற்கு காரணம்.

சத்துவ குணத்தின் துணைக் கொண்டு மற்ற இரண்டு குணங்களையும் ஒடுக்கிவிட வேண்டும்.  சத்துவ குணத்தை அதன் துணையாலே அதையும் கடந்தவனாகி விட வேண்டும்.

ஸத்த்வாத்3த4ர்மோ ப4வேத்3வ்ருத்3தா4ஸோ ஸத்3ப4க்தி லக்ஷண: |
ஸாத்த்விகோபாஸயா ஸத்த்வம் ததோ த4ர்ம: ப்ரவர்ததே || 2 ||

சத்துவ குணத்திலே இருக்கும் நிலையை அடைவதுதான் என்னிடத்தில் பக்தி செலுத்துதல் என்ற சிறப்பான நற்பண்பை வளர்க்கும்.  ஞானயோகத்தில் ஈடுபட வைக்கும்.  உபநிஷத்தின் உபதேசமும் நன்கு புரியும்.  ஞானயோகத்தில் ஈடுபட்டால் அதன் பலனை அடைந்து விடுவான், உபநிஷத்தின் உபதேசத்தை புரிய வைக்கும்
ஸாத்த்விகா உபாஸயா ஸத்த்வம் – சாத்விகமான சில சாதனங்களை, உபாஸனைகளை எடுத்துக் கொள்வதன் மூலமாக சத்துவ குணம் மேலோங்கும்
ததோ த4ர்ம ப்ரவர்த்தே – சத்துவ நிலை அடைந்த பிறகு தர்மநெறியில் முன்னேற்றமும் ஏற்படுகிறது. மேலே சொல்லப்பட்ட தர்மத்தை அடைந்து விடுவாய்.

த4ர்மோ ரஜஸ்தமோ ஹன்யாத்ஸத்த்வ வ்ருத்3தி4னுத்தம: |
ஆஶு னஶ்யதி தன்மூலோ ஹயத4ர்ம அப4யே ஹதே || 3 ||

மேற்சொன்ன தர்மம் ரஜோ, தமோ குணங்களை அழித்துவிடும். சத்துவகுணம் முதிர்ந்த நிலையில் அடைவதுதான் இந்த தர்மம்.  இதைத்தவிர அடையக்கூடிய வேறெதுவும் இல்லாத மேலான மனநிலையை அடைவோம் (அனுத்தமஹ)
ஹி அத4ர்ம உப4யே ஹதே – ஏனெனில் இந்த இரண்டு அதர்மங்களான ரஜோ, தமோ குணங்கள் அழிந்து போகும்போது
ஆஶு நஶ்யதி தன்மூலஹ – இவைகளுக்கு ஆணிவேராக இருக்கின்ற அதர்மமும் விரைவில் அழிந்து போகிறது

ஆக3மோSப: ப்ரஜா தேஶ: கால: கர்ம ச ஜன்ம ச |
த்4யானம் மன்த்ரோSத2 ஸம்ஸ்காரோ த3ர்ஶைதே கு3ணஹேதவ: || 4 ||

இந்த குணங்கள் அடைவதற்குக் காரணமாக இருப்பவைகள்  சாஸ்திரம், உணவு, சந்ததி, காடு, காலம், செயல், பிறப்பு, தியானம், மந்திரம், ஸம்ஸ்காரங்கள் ஆகியவைகளாகும்
1.      எதை திரும்ப திரும்ப படிக்கின்றோமோ, கேட்கின்றோமோ, பார்க்கின்றோமோ அவைகள்தான் அதற்கேற்ற குணத்தை கொடுக்கின்றது.  அதாவது ஞானேந்திரியங்களை எந்த விஷயத்தில் அதிகமாக பயன்படுத்துகின்றோமோ அதன் அடிப்படையில் தான் குணங்கள் அமைகின்றது
2.      அபஹ – உணவு  - எப்படிபட்ட உணவை உட்கொள்கின்றோமோ அதன் அடிப்படையில் குணங்கள் அமைகின்றது. அதர்ம வழியில் கிடைக்கும் உணவை உட்கொள்ளும்போது அதர்ம குணங்களை அடைகிறோம்
3.      ப்ரஜா: -ஸங்கம் –  நாம் யாரோடு நெருக்கமாக பழகுகின்றோமோ அவர்களுடைய குணங்கள், பழக்கவழக்கங்கள் நம்மையறியாமலே அடைந்து விடுவோம். நம் குணங்கள் அவர்களுக்கும் சென்றுவிடும்
4.      தேஶ - சூழ்நிலைகள் – நாம் அதிக நேரம் இருக்கின்ற சூழ்நிலைகள், புனித யாத்திரை செல்லுதல், வசிக்கும் வீட்டில் இருக்கும் சூழ்நிலைகள் அதற்கேற்ற குணங்களை அடையச் செய்யும்
5.      கால: - காலம் – சந்தியா காலம் சாத்வீகமானது, பகல் நேரமானது ராஜஸமானது, இரவு நேரம் தாமஸமானது.  சாத்விக காலத்தில் சாத்விகத்தை வளர்த்துக் கொள்ள வேண்டிய சாதனங்களில் ஈடுபட வேண்டும்.  எதற்காக அதிக காலம் பயன்படுத்துகின்றோமோ அதற்கேற்ற குணங்களை அடைந்துவிடுவோம்.
6.      கர்ம – செயல் – எப்படிபட்ட செயல்களில் ஈடுபடுகின்றோமோ அதைப் பொறுத்தும் குணங்கள் அமைகின்றது.  நிஷ்காம கர்மம் – சாத்வீகமானது; காம்ய கர்மம் ரஜோ குணமாகவும், நிஷித்த கர்ம தாமஸமானதாகவும் இருக்க வைக்கிறது
7.      ஜன்ம –வ்ரதம் – தீக்ஷிதா – பிறத்தலின் போது தமோ குண பிரதானத்தில்தான் இருப்பார்கள்.  பள்ளியில் சேர்க்கும்போது  வித்யா தீக்ஷை. நாம் எதை அடைய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் அதற்குத் தேவையான கல்வித்தகுதியை அடைவோம்.  மனதில் சங்கல்பம் எடுத்துக் கொள்வது அதை கட்டாயம் அடைய வேண்டும் என்ற ஆசையினால்தான்
8.      த்யானம் – எந்த தேவதையை தொடர்ந்தி தியானம் செய்து கொண்டிருக்கின்றோமோ அதேபோன்று எந்த விஷயத்தை தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்கின்றோமோ அதுவாகவே மாறிவிடுவோம்
9.      மந்த்ரஹ – மந்திரம் – எந்த வகையான மந்திரங்களை உச்சரிக்கின்றோமோ அதற்கேற்ற குணங்களை அடைகிறோம்
10.   ஸம்ஸ்காரஹ – பழக்க வழக்கம் – எவையெல்லாம் பழக்கமாகி வைத்திருக்கின்றோமோ அவைகளை சாத்வீகமாக மாற்றிக் கொள்ள முயற்சி செய்து வெற்றி அடைந்திட வேண்டும்.

மேலே கூறப்பட்ட பத்தும் நம்முடைய குணங்களை நிர்ணயிக்கின்றது, மாற்றி அமைக்கின்றது

தத்த த்ஸாத்த்விகமேவைஷாம் யத்3யத்3வ்ருத்3தா4: ப்ரசக்ஷதே |
நிந்த3ந்தி தாமஸம் தத்தத்3ராஜஸம் தது3பேக்ஷிதம் || 5 ||

மூன்று குணங்களின் வேறுபாட்டை எவ்வாறு அறிந்து கொள்வது என்பதற்கான பதில்தான் இந்த ஸ்லோகத்தில் பகவான் கூறியிருக்கிறார்.
நம்முடைய உள்ளுணர்வே நமக்கு தர்ம-அதர்ம செயலை காட்டிக் கொடுத்து விடும். எவைகளையெல்லாம் சான்றோர்கள் சாத்வீகம் என்று அங்கீகரித்துள்ளார்களோ அவைகளை சாத்வீகம் என்றும், எவைகளைப் புறக்கணிக்கின்றார்களோ அவைகளை ராஜஸம் என்றும், எவைகளை இழித்துரைக்கின்றார்களோ அவைகளை தாமஸம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

ஸாத்த்விகான்யேவ ஸேவேத புமான்ஸத்த்வவி வ்ருத்3த4யே |
ததோ த4ர்மஸ்ததோ ஞானம் யாவத்ஸ்ம்ருதிரபோஹனம் || 6 ||

ஒரு சாதகன் சத்துவ குண வளர்ச்சிக்காக, சாத்வீகமானவற்றிலே மனதை செலுத்தி அதையே கடைப்பிடிக்க வேண்டும்.  இவ்வாறு செய்வதால் தர்மப்படி வாழ்க்கையை நடத்துவதும், உபநிஷத்தின் உபதேசத்தை புரிந்து கொள்ளும் சக்தியையும், அதன் தொடர்ச்சியாக உள்ளத்திலிருந்த சந்தேகங்கள் யாவும் நீங்கி, ஆத்ம-ஸ்வரூப ஞானத்தையும் அடையலாம்.  பிறகு அதுவே நிலைபெற்றுவிடும். தேவையான நேரத்தில் இந்த ஞானம் செயல்படும்
ஸ்ம்ருதி – அடைந்த ஆத்மஞானம் உணர்வுபூர்வமாக மாறிவிடுதல்
அபோஹனம் – இதுவரை நான் என்பதன் தவறான அர்த்தத்தை, நாம் நான் என்ற சொல்லுக்கு தவறாக புரிந்து கொண்டதை நீக்கிவிடும். எந்தெந்த தவறான எதிர்பார்ப்புக்கள் நமக்கு துயரத்தைக் கொடுக்கின்றதோ அவைகளையெல்லாம் நீக்கப்பட்டுவிடும்.  ஜகத் மித்யா என்ற அறிவு செயல்பட்டுக் கொண்டேயிருக்கும்.

வேணுஸங்க4ர்ஷஜோ வஹினர்த3க்3த்4வா ஶாம்யதி தத்3வனம் |
ஏவம் கு3ணவ்யத்ய யஜோ தே3ஹ: ஶாம்யதி தத்க்ரிய: || 7 ||

வேணு ஸங்க4ர்ஷ ஜஹ வஹினி – மூங்கில்களின் உராய்விலிருந்து தோன்றிய நெருப்பு
த3க்3த்4வா ஶாம்யதி தத்3 வனம் – தன்னை தோற்றுவித்த மூங்கில் காட்டையே எரித்துவிட்டு அடங்கி விடுகின்றது
ஏவம் – அதுபோல
குண வ்யத்யய ஜஹ தே3ஹ – குணங்களின் மாற்றத்தினால் தோன்றியுள்ள இந்த உடல்
தத்க்ரிய:  - ஞானாக்னியால் முற்றிலுமாக எரித்துவிட்டு தானும் அழிந்துவிடுகிறது.

ஶ்ரீஉத்தவா உவாச
வித3ந்தி மர்த்யா: ப்ராயேண விஷயான்பத3மாபதாம் |
ததா2பி பு4ஞ்ஜதே க்ருஷ்ண தத்கத2ம் ஶ்வக2ராஜவத் || 8 ||

உத்தவர் கேட்கிறார்.
பொதுவாக மனிதர்களுக்கு விஷயபோகங்கள் எல்லாம் ஆபத்துக்கு இருப்பிடமாக இருக்கிறது என்றும், துயரத்தை கொடுக்கக்கூடியது என்பதை அறிகிறார்கள். இருந்தாலும் நாய், கழுதை, ஆடு இவைகள் போல அதை அடைவதிலேயே குறியாக இருக்கிறார்கள். இதற்குக் காரணம் என்ன

ஶ்ரீபகவான் உவாச
அஹமித்யன்யதா3பு3த்3தி4: ப்ரமத்தஸ்ய யதா2 ஹ்ருதி3 |
உத்ஸர்பதி ரஜோ கோ4ரம் ததோ வைகாரிகம் மன: || 9 ||

ஶ்ரீபகவானுடைய கூறுகிறார்.
தமோ குணத்தின் விளைவான சோம்பல், உறக்கம், கவனமின்மை, மதிமயக்கம் போன்ற இவைகளில் ஏதோ ஒன்றினால் ஆட்கொள்ளப்படும்போது நான் -என்னுடையது என்ற தவறான அறிவு உண்டாகிவிடுகிறது.  இயற்கையாக சாத்வீகமாக உள்ள மனதை கோரமான ரஜோ குணமானது முழுவதுமாக வியாபித்து விடுகின்றது.

ரஜோயுக்தஸ்ய மனஸ: ஸங்கல்ப: ஸவிகல்பக: |
தத: காமோ கு3ணத்4யானாத்3து3:ஸஹ: ஸ்யாத்3தி4 து3ர்மதே || 10 ||

ரஜோ குணம் மேலோங்கி இருக்கின்ற மனதில் வெவ்வேறான எண்ணங்கள் தோன்ற தொடங்குகின்றன.  அந்த எண்ணங்களையே மீண்டும் மீண்டும் தியானிப்பதனால் உறுதியான ஆசையானது, விடமுடியாத ஆசையானது உருவாகி விடுகின்றது.  அந்த நேரத்தில் அறிவிழந்து செயல்படுவான்.

கரோதி காமவஶக3: கர்மாண்யவிஜிதேந்த்3ரிய: |
து3:கோ2த3ர்காணி ஸம்பஶ்யன்ரஜோவேகவிமோஹிஹ: || 11 ||

ஆசையின் வசப்பட்ட மனிதன் செயல்களில் ஈடுபடுகின்றான். துயரத்தை கொடுக்கின்ற செயல்களை செய்கின்றான்.  புலன்களை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியாமல் இவ்வாறு செயல்படுகின்றான்.  ரஜோ குணத்தால் ஆட்கொள்ளப்பட்டு (ஸம்பஶ்யன் – தெரிந்தே) தன் விருப்பங்களை அடைவதற்காக பற்பல காரியங்களை செய்கின்றான்.  அவற்றின் விளைவு துன்பம் என்று அறிந்திருந்தாலும் அதை செய்கின்றான்.

ரஜஸ்தமோப்4யாம் யதபி வித்3வான்விக்ஷிப்ததீ4: புன: |
அதந்த்3ரிதோ மனோ யுஞ்ஜந்தோ3ஷத்3ருஷ்டிர்ன ஸஜ்ஜதே || 12 ||

ரஜோ, தமோ குணங்களால் மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டும், தடுமாறிக் கொண்டும் இருக்கும் அறிவாளியானவன் ஆசைப்படும் பொருட்களிலுள்ள குறைகளை பார்க்க வேண்டும். அவைகள் அழியக் கூடியது, துன்பத்தை கொடுக்க கூடியது என்று புரிந்து கொள்ள வேண்டும்.  இடைவிடாது முயற்சி செய்து இறைவனிடத்தில் மனதை திருப்ப வேண்டும் இதனால் அவன் பந்தப்படமாட்டான்.

அப்ரமத்தோSனுயுஞ்ஜீத மனோ மய்யர்பயஞ்ச2னை: |
அனிர்விண்ணோ யதா2காலம் ஜிதஶ்வாஸோ ஜிதாஸன: || 13 ||

ஆஸனத்தில் வெற்றியடைந்தவன் அன்னமய கோசத்தை தன் வசப்படுத்த வேண்டும், உடலை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க வேண்டும். பிராண சக்தியை அடைய வேண்டும். இது நாம் நன்றாக செயல்படுவதற்கு உதவும்.  செயல்படும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு ரஜோ குணத்திற்கு வர வேண்டும்.  பிராணயாமம், உணவுக் கட்டுப்பாடு இவைகள்தான் ரஜோ குணத்தை அடைவதற்கான வழிகள். இதை அடைவதற்கு. எடுத்துக் கொண்ட லட்சியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.  அடைய வேண்டிய குறிக்கோளை நன்றாக நினைவில் வைத்துக் கொண்டிருக்க வேண்டும். மெல்ல மெல்ல மனதை என்னிடத்திலே அர்ப்பணம் செய்ய வேண்டும். மேற்சொன்ன சாதனங்களை பலனை அடையும் வரை விடாமல் தொடர்ந்து செய்து வர வேண்டும். இந்த முயற்சியில் மனம் சோர்வடையாமல் உற்சாகத்துடன் இருக்க வேண்டும். எவ்வளவு காலமானாலும் இந்த முயற்சியில் மனம் தளரக் கூடாது.

ஏதாவான்யோக3 ஆதி3ஷ்டோ மச்சி2ஷ்யை: ஸனகாதி3பி4: |
ஸர்வதோ மன ஆக்ருஷ்ய மய்யத்3தா4வேஶ்யதே யதா2 || 14 ||

இதுவரை கூறிய கருத்துக்கள் அனைத்தும் மோட்சத்தை அடைவதற்கான வழிகள். இவைகள்  என்னால் உனக்கு உபதேசிக்கப்பட்டுவிட்டது. என்னுடைய சிஷ்யர்களான ஸனகாதி ரிஷிகளுக்கு இதை நான் உபதேசித்து இருந்தேன்.  எல்லாவிடத்திலிருந்தும் மனதை எடுத்து பிரம்மனாகிய என்னிடத்தில் நேரிடையாக எப்படி வைக்க முடியுமோ அதை பிரம்மனுக்கும், சனகாதி முனிவர்களுக்கும் உபதேசித்தேன்.

ஶ்ரீஉத்தவ உவாச
யதா3 த்வம் ஸனகாதி3ப்4யோ யேன ரூபேன கேஶவ |
யோக3மாதிஷ்டவானேத்த்ரூபமிச்சா2மி வேதி3தும் || 15 ||

உத்தவர் கேட்கிறார்.
பகவான் கேசவா! தாங்கள் இந்த உபதேசத்தை சனகாதி ரிஷிகளுக்கு எப்போது, எந்த உருவத்தில் உபதேசித்துள்ளீர்கள். அதன் முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

ஶ்ரீபகவான் உவாச
புத்ரா ஹிரண்யக3ர்ப4ஸ்ய மான்ஸா: ஸனகாதய: |
ப்ப்ரச்சு2: பிதரம் ஸூக்ஷ்மாம் யோக3ஸ்யைகாந்திகீம்க3திம் || 16 ||

ஶ்ரீபகவான் கூறுகிறார்.
பிரம்மவினுடைய மனதிலிருந்து தோன்றிய மைந்தர்களான சனகர் முதலியவர்கள் தங்களுடைய தந்தையாரிடம் யோகத்தின் முடிவான கதியை, இலக்கைப் பற்றி கேட்டார்கள்.

ஸனகாதய ஊசு:
கு3ணேஷ்வாவிஶதே சேதோ கு3ணாஶ்சேதஸி ச ப்ரபோ4 |
கத2மன்யோன்யஸந்த்யாகோ3 முமுக்ஷோரதிதிர்ஷோ: || 17 ||

சனகாதியர்கள் கேட்கிறார்கள்
உலக புலனுகர் பொருட்களில் மனம் வேகமாக சென்று அதனோடு சம்பந்தம் வைத்துக் கொண்டு துயரப்படுத்தி கொள்கிறது.  அதே மாதிரி அவைகள் மனிதர்களின் மனதிற்குள் புகுந்து கொண்டு துயரப்படுத்துகிறது. சம்சாரக் கடலை கடக்க விரும்புகின்ற சாதகர்கள் எவ்வாறு ஒன்றையொன்று தூண்டும்போது பாதுகாத்து கொள்வது?

ஶ்ரீபகவான் உவாச
ஏவம் ப்ருஷ்டோ மஹாதேவ: ஸ்வயம்பூ4ர்பூ4தபா4வன: |
த்4யாயமான: ப்ரஶ்னபீஜம் நாப்4யபத்3யத கர்மதீ4: || 18 ||

ஶ்ரீபகவான் கூறுகிறார்.
இவ்விதம் கேள்விகேட்கப்பட்ட பிரம்மதேவரானவர் தானாகவே தோன்றியவர். மற்ற ஸ்ருஷ்டிகளை தோற்றுவிப்பவர்.  இந்த கேள்வியில் இருக்கும் ஆழ்ந்த தத்துவத்தை நன்கு தியானித்து பார்த்தார். இவருக்கு அதை புரிந்து கொள்ள முடியவில்லை.  எப்பொழுதும் செயலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதால் அவரால் கேள்வியின் உட்கருத்தை புரிந்து கொள்ள முடியாமல் போனதால் அவரால் பதில் ஏதும் கூற முடியவில்லை

ஸ மாமசிந்தயத்3தேவ: ப்ரஶ்னபாரதிதீர்ஷயா |
தஸ்யாஹம் ஹன்ஸ்ரூபேண ஸகாஶமக3மம் ததா3 || 19 ||

ஆனால் அந்தக் கேள்விக்கு பதில் கூற விருப்பம் கொண்டு என்னைத் தியானித்தார்.  அப்போது அவருக்கு நான் ஹம்ஸ ரூபமாக தோன்றினேன். ஹம்ஸ என்ற சொல் சந்நியாசியையும் குறிக்கின்றது.

த்3ருஷ்ட்வா மாம்த உபவ்ரஜ்ய க்ருத்வ பாதா3பி4வந்த3னம் |
ப்ரஹமாணமக்3ரத: க்ருத்வா பப்ரச்சு3: கோ ப4வானிதி || 20 ||

என்னைப் பார்த்தவுடன் அவர்கள் என்னருகே வந்து என் காலைத் தொட்டு வணங்கினார்கள்.  பிரம்மதேவரின் முன்னிலையில் தாங்கள் யார் என்று கேட்டார்கள்.

இத்யஹம் முனிபி4: ப்ருஷ்டஸ்தத்த்வஜிக்ஞாஸுபி4ஸ்ததா3 |
யத3வோசமஹம் தேப்4யஸ்த்து3த்3த4வ நிபோ3த4 மே || 21 ||

உத்தவா! உண்மையை அறிந்து கொள்ள விரும்பிய சனகாதி முனிவர்களால் கேட்கப்பட்டதும் அப்போது அவர்களுக்கு அந்த நேரத்தில் நான் என்ன கூறினேனோ அதை இப்போது என்னிடம் இருந்து நீ கேட்பாயாக.

வஸ்துனோ யத்3யனானாத்வ ஆத்மன: ப்ரஶ்ன ஈத்3ருஶ: |
கத2ம் க4டேத வோ விப்ரா வக்துர்வா மே க ஆஶ்ரய: || 22 ||

ஹம்ஸ கீதை இந்த ஸ்லோகத்தில் இருந்துதான் ஆரம்பிக்கின்றது.

யத்3 - ஒருவேளை
ஆத்மனஹ வஸ்துனஹ – உண்மையாக இருக்கின்ற ஆத்மாவானது
அனானாத்வம் – இரண்டற்றதாக இருக்கின்ற காரணத்தால்
யத்3 ப்ரஶ்ன ஈத்3ருஶ: - இப்படிபட்ட ஆத்மாவின் அடிப்படையில் கேட்டிருந்தால்
கத2ம் க4டேத வோ – அது எப்படிப் பொருத்தமாக இருக்கும்
வக்துர்வா மே க ஆஶ்ரயஹ – ஆத்மாவைத் தவிர வேறொன்று இருந்தால்தானே, அதனுடைய ஆதாரத்தில் பதில் சொல்ல முடியும்.

பஞ்சாத்மகேஷு பூ4தேஷு ஸமானேஷு ச வஸ்துத: |
கோ ப4வானிதி வ: ப்ரஶ்னோ வாசாரம்போ4 ஹயனர்த2க: || 23 ||

எல்லா ஜீவராசிகளின் உடல்களிலும் பஞ்சபூதங்கள் இருக்கின்றன் என்பதால் அவை ஒன்றுகொன்று சமமானவையே. எனவே தாங்கள் யார் என்ற கேள்வி வெற்றுச் சொற்களே, பொருளற்றது.

மனஸா வசஸா த்3ருஷ்ட்யா க்3ருஹ்யதேSன்யைரபீந்த்ரியை: |
அஹமேவ ந மத்தோSன்யதி3தி பு3த்4யத்4வமஞ்ஜஸா || 24 ||

மனதினாலும், வாக்கினாலும், பார்வை மற்றும் பிற புலன்களால் கிரகிக்கப்படுவது எல்லாமே நான்தான். என்னைத் தவிர வேறெதுவுமில்லை என்பதை உறுதியாகத் தெரிந்து கொள்ளுங்கள். விசாரத்தின் மூலமாக அறிந்து கொள்ளுங்கள்.

கு3ணேஷ்வாவிஶதே சேதோ கு3ணாஶ்சேதஸி ச ப்ரஜா: |
வீவஸ்ய தே3ஹ உப4யம் கு3ணஶ்சேதோ மதா3த்மன: || 25 ||

ப்ரஜா: - முனிவர்களே!
குணேஷு ஆவிஶதே சேதஹ – மனமானது புலனுகர் பொருட்களை நாடிச் செல்கின்றது
குணாஹா சேதஸி – புலனுகர் போக பொருட்கள் மனதை நாடி வருகின்றது
ஜீவஸ்ய மதா3த்மனஹ – என் ஸ்வரூபமான ஜீவனுக்கு
குணா: சேத – புலனுகர் பொருட்களும், உடலும், மனமும், புலன்களும் உலகமும்
உபயம் தே3ஹ – இவையிரண்டும் உபாதிகள்
உபாதி – எந்தவொன்று உண்மையில் எனக்கு வேறாக இருந்து கொண்டு, ஆனால் அதன் குணங்களை, தன்மைகளை பொய்யாக என்னுடையதாக நினைக்க வைக்கின்றதோ அதுவே உபாதி என்ற் கூறப்படுகிறது.
நான் என்கின்ற ஆத்மாவுக்கு உடலும், மனமும், புலனுகர் பொருட்களெல்லாம் உபாதிகள். எனவே.  அவைகள் என்னுடைய தன்மை என்று நினைத்துக் கொண்டிருக்கும் எண்ணங்களை நீக்க வேண்டும்.

கு3ணேஷு சாவிஶச்சித்தமபீ4க்ஷ்ணம் கு3ணஸேவயா |
கு3ணாஶ்ச சித்தப்ரப4வா மத்3ருப உப4யம் த்யஜேத் || 26 ||

மனமானது புலனுகர் பொருட்களை நாடிச் செல்கின்றது. (அபீக்ஷணம் – தொடர்ந்து) மீண்டும் மீண்டும் அவைகளை நாடிச் செல்கின்ற பழக்கத்தினால் அவைகள் மீது அதிக பற்றுடன் இருக்கிறார்கள்.  த3மஹ என்ற தகுதியை அடைவதன் மூலம் இந்த நிலையை மாற்றிக் கொள்ளலாம். சூழ்நிலைகள், போகப் பொருட்கள், சுகத்தை தருகின்ற மனிதர்கள் இவைகள் வாஸனை ரூபமாக மனதில் இருக்கின்றன.  இவைகள்தான் நம்மை துயரப்படுத்துகின்றன. இதை ஶமம் என்ற தகுதியை அடைவதன் மூலம் நீக்கிக் கொள்ள வேண்டும்.  இறைவனைக் குறித்து ஜபம், தியானம் போன்றவற்றை செய்வதன் மூலம் மனதில் வாஸனை ரூபத்தில் இருக்கும் துயரத்தை கொடுக்கின்றவற்றை நீக்கி விடலாம்.  இவையிரண்டிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்றால் அனைத்துமே இறைவன் என்ற அறிவை அடைய வேண்டும்.

ஜாக்3ரத்ஸ்வப்ன: ஸுஷுப்தம் ச கு3ணதோ பு3த்3தி4வ்ருத்தய: |
தாஸாம் விலக்ஷணோ ஜீவ: ஸாக்ஷித்வேன வினிஶ்சித: || 27 ||

விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம் இவைகள் குணத்தின் அடிப்படையிலும், மனதில் ஓடும் எண்ணங்களாலும் அனுபவிக்கப்படுகின்றது.  உறக்கத்தில் ஆனந்தத்தை அனுபவிக்கும் எண்ணமும், அறியாமை என்கின்ற எண்ணமும்தான் இருக்கின்றது.  இந்த மூன்று நிலைகளுக்கும் வேறாக இருப்பவன் ஜீவன்.  இவைகளுக்கு சாட்சியாக மட்டுமே இருக்கின்றது என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

யர்ஹி ஸம்ஸ்ருதிப3ந்தோ4Sயமாத்மனோ கு3ணவ்ருத்தித3: |
மயி துர்யே ஸ்தி2தோ ஜஹயாத்த்யாக3ஸ்தத்3கு3ணசேதஸாம் || 28 ||

குணத்தில் ஏற்படுகின்ற மாற்றங்களினால்தான் ஆத்ம ஸ்வரூபமாகிய நாம் மனதுடன் தொடர்பு கொண்டு துயரத்தை அனுபவிக்கின்றோம். துரிய தத்துவமான என்னிடத்தில் உறுதியாக நின்று, பொருட்களின் மீது பற்றை வைக்கும் மனதை விலக்கிவிட வேண்டும். புலனுகர் பொருட்களையும், மனதையும் துறந்துவிட்டு நானே ஆத்மஸ்வரூபம் என்று நினைக்க வேண்டும்.

அஹங்காரக்ருதம் ப3ந்த4மாத்மனோSர்த2விபர்யயம் |
வித்3வான்னிர்வித்3ய ஸம்ஸார சிந்தாம் துர்யே ஸ்தி2தஸ்த்யஜேத் ||
29 ||

தேவையில்லாத, தவறான உணர்வுகளும், சிந்தனைகளும், தவறாக புரிந்து கொள்ளுதலே பந்தம் எனப்படுகிறது. இவைகள் நம்மை அனாத்மாவான உடல், மனம் இவைகளை நான் என்று அபிமானிக்க வைக்கின்றது.  நித்யம் – அநித்யம், ஆத்மா – அனாத்மா இந்த அறிவை அடைய வேண்டும்.  இந்த அறிவில் நிலைத்து நின்ற பின், என்னுடைய ஸ்வரூபத்தில் (துரியத்தில்) நிலைத்து நின்ற பின் சம்சார சிந்தனைகளை விட்டுவிட வேண்டும்.

யாவன் நானார்த2தீ4: பும்ஸோ ந நிவர்தேத யுக்திபி4: |
ஜாக3ர்த்யபி ஸ்வபன்னஞ: ஸ்வப்னே ஜாக3ரணம் யதா2 || 30 ||

ஜீவனுக்கு பொருட்கள் பலப்பல என்ற மனப்பிரமை எதுவரை ஆத்ம விசாரத்தினால் நீங்கவில்லையோ அதுவரை அவன் விழித்துக் கொண்டிருந்தாலும், உறக்கத்தில் இருப்பவனாக கருதப்படுவான்.  கனவில் விழித்து கொண்டிருப்பது போல இது இருக்கின்றது.

ஆஸத்த்வாதா3த்மனோSன்யேஷாம் பா4வனாம் தத்க்ருதா பி4தா3 |
க3தயோ ஹேதவஶ்சாஸ்ய ம்ருஷா ஸ்வப்னத்3ருஶோ யதா2 || 31 ||

ஆத்மாவை தவிர மற்ற அனைத்தும் பொய்யாக இருப்பதனால், அவைகளினால் உருவான வேற்றுமைகளும் பொய்யானவையாக இருக்கும்.  இந்த உலகத்தில் நாம் அடைய நினைக்கின்ற லட்சியங்களும் மித்யா.  அதை அடைய உதவும் சாதனங்களும் மித்யா.  இது எப்படி கனவில் காணப்படும் காட்சிகளும், கனவில் அடைபவைகளும் மித்யாவாக இருக்கின்றனவோ அதுபோல விழிப்புநிலையில் அனுபவிப்பதெல்லாம், பார்ப்பதெல்லாம் மித்யாவே என்று புரிந்து கொள்ள வேண்டும்.

யோ ஜாக3ரே ப3ஹிரனுக்ஷணத4ர்மிணோSர்தா2ன்
        பு4ங்க்தே ஸமஸ்தகரணைர்ஹ்ருதி3 த்த்ஸத்ருக்ஷான் |
ஸ்வப்னே ஸுஷுப்த உபஸம்ஹரதே ஸ ஏக:
        ஸ்ம்ருத்யன்வயாத் த்ரிகு3ணவ்ருத்தித்3ருகிந்த்ரியேஶ: || 32 ||

ஸ்தூல உடலில் அபிமானம் வைக்கும் போது வெளியே உள்ள பொருட்களை அனுபவித்து கொண்டிருக்கின்றோம். இவைகள் ஒவ்வொரு நொடியிலும் மாறிக் கொண்டேயிருக்கும் தன்மையை உடையது. இவைகளை புலன்களின் துணைக்கொண்டு அனுபவிக்கின்றோம்.  கனவு நிலையில் விழிப்பு நிலையில் இருப்பது போல நமக்குள்ளேயே அவைகளை அனுபவிக்கின்றோம். ஆழ்ந்த உறக்கத்தில் அனைத்திலிருந்தும் நீங்கி இருக்கின்றோம். அறிவு ஸ்வரூபமாக இருக்கின்ற ஆத்ம தத்துவமாகிய நான் ஒருவனே இந்த மூன்று நிலைகளிலும் தொடர்ச்சியாக இருப்பதால் இந்த அனுபவங்களை சொல்ல முடிகின்றது. நான் மூன்று குணங்களினால் தோன்றிய அவஸ்தைகளையும் பார்த்துக் கொண்டிருக்கும் சாட்சியாக இருக்கின்றேன்.
இந்த்3ரியேஶ: - புலன்களுக்கெல்லாம் தலைவனாக இருக்கின்றேன்

ஏவம் விம்ருஶ்ய கு3ணதோ மனஸ்ஸ்த்ர்யவஸ்தா2
        மன்மாயயா மயி க்ருதா இதி நிஶ்சிதார்தா2: |
ஸஞ்சி2த்3ய ஹார்தமனுமானஸதுக்திதீக்ஷ்ண
        ஞானாஸினா ப4ஜத மாகி2லஸம்ஶயாதி4ம் || 33 ||

இவ்வாறு விசாரம் செய்து மனதின் மூன்று அவஸ்தைகளும், குணங்கள் மூலமாக என்னுடைய மாயையால் ஜீவனிடத்தில் தோற்றுவிக்கப்படுகிறது என்பதை நிச்சயமாக உணர்ந்து கொள்ளுங்கள்.

எல்லா சந்தேகங்களுக்கும் ஆதாரமான அகங்காரத்தை ஞானம் என்கின்ற கூர்மையான வாளால் வெட்டி தள்ளிவிட்டு குருவினுடைய உபதேசத்தின் மூலமாகவும், சாஸ்திரமும், குருவும் உபதேசித்ததை மனனத்தின் மூலமாக ஆராய்ந்து அடைந்த அறிவால் உன்னுடைய இதயத்தில் வீற்றிருக்கும் என்னை அடைவாயாக

ஈக்ஷேத விப்4ரமாமித3ம் மனஸோ விலாஸம்
        த்3ருஷ்டம் வினஷ்டமதிலோலமலாதசக்ரம் |
விஞானமேகமுருதே4வ விபா4தி மாயா
        ஸ்வப்னஸ்த்ரிதா4 கு4ணவிஸர்க3க்ருதோ விகல்ப: || 34 ||

இந்த உலகத்தை பார்க்கும்போது இது தவறான பார்வையென்றும், பொய்யானவையென்றும், பிரம்மத்தின் மீது ஏற்றிவைக்கப்பட்டதாகவும் இருக்கிறது என்ற  பார்வையோடு பாருங்கள்.. இது  மனதினுடைய விளையாட்டு அதனால் தோற்றுவிக்கப்பட்டது. பார்த்து கொண்டிருக்கும்போதே அழிந்து கொண்டு இருக்கிறது.  நாம் அவைகள் நிலையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதால்தான் துயரத்தை அடைகிறோம். மனம் சஞ்சலமானது. சுழலும் நெருப்பு வளையத்தில் தோன்றும் உருவங்கள் போல இது சஞ்சலமானது, தீபந்தத்தை சுழற்றி கொண்டிருக்கும்போது அவை தோற்றுவித்த உருவங்கள் பார்க்கும் போதே அழிந்து கொண்டேயிருக்கின்றது. அதேபோல ஒரேயொரு சைதன்யம், பிரம்மன் பலவிதமாக இருப்பது போல தோன்றுகிறது. இந்த உலகம் குணங்களின் மாற்றத்தினால் உருவானது. மூன்று விதத்தில் வேற்றுமையடைந்த உலகம் ( அறிபவன், அறியப்படும் பொருள், அறிய உதவும் கருவு –பிரமாணம்) இவைகளை மூன்று விதமான அவஸ்தைகளாகவும் எடுத்துக் கொள்ளலாம். கனவுலகம் போல இந்த விழிப்பு உலகமும் மித்யாவானது.  இந்த உலகம் வெறும் தோற்றம் என்று அறிவோடு பார்க்க வேண்டும்.

த்34ருஷ்டிம்தத:  ப்ரதி நிவர்த்ய நிவ்ருத்தத்ருஷ்ணஸ்
        தூஷ்ணீம் ப4வேன்னிஜஸுகா2னுப4வோ நிரீஹ: |
ஸந்த்3ருஶ்யதே க்வ ச யதீ3த3மவஸ்துபு3த்3த்4யா
        த்யக்தம் ப்4ரமாய ந ப4வேத்ஸ்ம்ருதிரானிபாதாத் || 35 ||

இந்த உலகத்தினிடமிருந்தும், புலனுகர் போகப் பொருட்களிலிருந்தும் உன்னுடைய பார்வையை விலக்கி ஆசைகளிலிருந்து விடுபட்டு, வைராக்கியத்தை அடைந்து மனதை பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.  புலன்களை அடக்கி மௌனமாக இருக்க வேண்டும்.  கர்மேந்திரியங்களை அமைதிப்படுத்தி பழக வேண்டும்.  மனதை அமைதியுடன் வைத்திருக்க வேண்டும்.  உன்னிடத்திலே மகிழ்ச்சியுடன் இருக்க பழகு.  மனதளவில் பொறுப்புக்களை எல்லாம் விட்டுவிடு. நான்தான் அனைத்திற்கும் காரணம் என்ற அகங்காரம் நீங்கி இருக்க வேண்டும். இவைகளெல்லம் ஞானயோக சாதனங்கள், இவைகளை பின்பற்றி மோட்சத்தை அடைய முயற்சிக்க வேண்டும். இந்த உலகம் வஸ்துவல்ல, உண்மையல்ல என்ற புத்தியால் நீக்கப்பட வேண்டும். ஒதுக்கப்பட வேண்டும். இந்த நிலையில் அனுபவத்திற்கு வந்தாலும் பழையமாதிரி சம்சாரத்தை கொடுக்காது. மரணம் அடையும்வரை இந்த உலகம் அனுபவத்திற்கு இருக்கும் ஆனால் துயரத்தைக் கொடுக்கும் சக்தியை இழந்து விடும்.

தேஹம் ச நஶ்வரமவஸ்தி2தமுத்தி2ம் வா
        ஸித்3தோ4 ந பஶ்யதி யதோSத்4ய்க3மத்ஸவரூபம் |
தை3வாத3பேத்மத2 தை3வ வஶாதுபேதம்
        வாஸோ யதா2 பரிக்ருதம் மதி3ராமதாந்த4: || 36 ||

அதிக மது அருந்தியவன் தன்மீது ஆடையிருக்கிறதா, இல்லையா என்று எவ்வாறு அறிய மாட்டானோ அதுபோல அழியக் கூடிய இந்த உடல் உட்கார்ந்து கொண்டிருந்தாலோ, நின்று கொண்டிருந்தாலோ, படுத்துக் கொண்டிருந்தாலும், பிராரப்தத்தினால் எங்கேயாவது போகலாம், வரலாம் இந்த எல்லா நிலையிலும் ஞானியானவன் உதாஸீனனாக இருப்பான். அதைப்பற்றி கவனமில்லாமல் இருப்பான், மனதால் பாதிக்கபடாமல் இருப்பான். ஞானி தனியாக இருந்தாலும், பலருடன் சேர்ந்திருந்தாலும் மனநிறைவுடன் மகிழ்ச்சியுடன் இருப்பான். தன் உண்மையான ஸ்வரூபத்தை அடைந்திருப்பதால் அவனால் இவ்வாறு இருக்க முடிகிறது.

தே3ஹோSபி தை3வ வஶக3: க2லு கர்ம யாவத்
        ஸ்வாரம்ப4கம் ப்ரதிஸமீக்ஷத் ஏவ ஸாஸு: |
தம் ஸப்ரபஞ்சமதி4ரூட4 ஸமாதி4யோக:
        ஸ்வப்னம் புனர்ன ப4ஜதே ப்ரதிபு3த்3த4வஸ்து: || 37 ||

ஜீவனுடைய உடலானது தெய்வத்தின் வசத்தில் இருக்கிறது.  பிராரப்தத்தின் வசத்தில் இருக்கிறது.  இந்த உடல் தோன்றுவதற்கு காரணமாக இருக்கின்ற கர்மபலன் இருக்கும்வரை உயிருடன் இருந்து கொண்டிருக்கின்றது. பிராரப்தத்தை கழித்துக் கொண்டிருப்பான். தன்னுடலையும், உலகத்தையும் ஞானியானவன் கனவில் காணும் பொருட்களைப் போல உணர்ந்து அதை நாடி செல்ல மாட்டான்.

மயைதது3க்தம் வோ விப்ரா கு3ஹ்யம் யத்ஸாங்க்2ய யோக3யோ: |
ஜானீத மாக3தம் யக்ஞம் யுஷ்மத்3த4ர்மவிவக்ஷயா || 38 ||

சனகாதி முனிவர்களே! என்னால் உங்களுக்கு ரகசியமானதும், யாருக்கும் தெரியாததுமான சாங்க்யம், யோகம் ஆகியவைகள் உபதேசிக்கப்பட்டது.  சாங்க்யம் என்பது ஆத்ம ஞானம், ஆத்ம தத்துவம், யோகம் என்பது அதை அடைய உதவும் சாதனங்கள். உங்களுக்கு இந்த உபதேசதத்தை அருளிய என்னை விஷ்ணு என்று தெரிந்து கொள்ளுங்கள்.  உங்களுக்கு உபதேசிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விருப்பத்துடன் வந்திருக்கின்றேன் என்று அறிந்து கொள்ளுங்கள்

அஹம் யோக3ஸ்ய ஸாங்க்2யஸ்ய ஸத்யஸ்யர்தஸ்ய தேஜஸ: |
ப்ராயணம் த்3விஜஶ்ரேஷ்டா2: ஶ்ரிய: கீர்தேர்த3மஸ்ய ச || 39 ||

பிராமணோத்தமர்களே! யோகத்தினுடைய இறுதி இலக்கு நான்தான் என்று அறிந்து கொள்ளுங்கள்.  யோகம் என்பது அனைத்து ஞானயோக சாதனங்கள்  என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.  சாங்க்யமான ஆத்ம விசாரமும் என்னை அடைவதற்குதான். சிலவகை ஞானயோக சாதனங்களை கூறுகிறார்.
ஸத்யஸ்ய – சாஸ்திரம் உரைக்கும் தர்மத்தை, உபதேசத்தை பின்பற்றுதல்
ரிதஸ்ய – சாஸ்திர உபதேசத்தை சரியாக புரிந்து கொள்ளுதல்
தேஜஸ் – அடைய வேண்டிய சக்திகள்
த்3விஸ்ஶ்ரேஷ்டா – மேலான பிராமணர்களே!
ஶ்ரியஹ – அனைத்து செல்வங்களை அடைவதற்கும்
கீர்தே – அடையும் புகழ் அனைத்தும்
த3மஸ்ய – புலனடக்கம்
இறுதியில் என்னை அடைவதையே குறிக்கோளாக இருக்க வேண்டும்.

மாம் ப4ஜந்தி கு3ணா: ஸர்வே நிர்கு3ணம் நிரபேக்ஷகம் |
ஸுஹ்ருத3ம் ப்ரியமாத்மானம் ஸாம்யாஸங்காத3யோSகு3ணா: || 40 ||

இதில் நிர்குண பிரம்மத்தின் ஸ்வரூபத்தை கூறுகிறார்.
ஸர்வே குணா – எல்லா நற்பண்புகளும்
மாம பஜந்தி – என்னையே நாடித்தான் வருகின்றன்.
நற்பண்புகள் அனைத்தும் பகவானை அடைவதற்கான சாதனங்களே என்று புரிந்து கொள்ள வேண்டும்.
ஸாம்ஸம் அஸங்கம் – சமநோக்கு பார்வை, சமபுத்தியுடைய நிலை, பற்றின்மை, மனப்பூர்வமாக எல்லோரிடமும் பற்றற்று இருக்க வேண்டும்
அகு3ணா  - குணங்களற்ற நிர்குண பிரம்மனை இது குறிக்கின்றது.  அதை அடைய வைக்கும் குணங்கள்
நிர்குணம் – குணங்களற்றவனாகவும் அதாவது முக்குணங்களற்றவனாகவும், மாயையை கடந்து இருக்கின்ற என்னை
நிரபேக்ஷம் – யாரையும், எதையும் சார்ந்தில்லாத இருக்கின்ற என்னை
ஸுஹ்ருதம் – எல்லோருக்கும் நன்மை செய்பவன், அனுக்கிரகம் செய்பவன்
ப்ரியம் – எல்லோராலும் விரும்பப்படுபவனாகவும் இருக்கின்றேன்
ஆத்மானம் – ஜீவாத்மாவாக ஒவ்வொரு உடலுக்குள்ளும் அறிவுப் பிரகாசமாகவும் இருக்கிறேன். இதன் மூலம் ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தை மறைமுகமாக உபதேசித்திருக்கிறார்.

இதி மே சி2ன்னஸந்தேஹா முனய: ஸனகாத3ய: |
ஸபா4ஜயித்வா பரயா ப4க்த்யாக்3ருணத ஸம்ஸ்தவை: || 41 ||

உத்தவா! இவ்விதம் உபதேசித்து நான் அந்த சனகாதி முனிவர்களின் சந்தேகங்களை நீக்கினேன். அவர்கள் மனதில் என்மீது பக்தி பெருகியது
பரய பக்தியா – என்மீது மேலான, புனிதமான பக்தியை அடைந்தார்கள்
ஸ பா4ஜயித்வா – என்னை வணங்கினார்கள்
ஸம்ஸ்தவை: - வேதத்திலுள்ள மந்திரங்களால்
அக்3ருணத – என் பெருமைகளை கூறி மகிழ்ந்தார்கள்
இறைவன், குரு, அரசன் இவர்களை மட்டும்தான் புகழ வேண்டும்.

தைரஹம் பூஜித: ஸம்யக்ஸம்ஸ்துத: பரமர்ஷிபி4: |
ப்ரத்யேயாய ஸ்வகம் தா4ம பஶ்யத: பரமேஷ்டி2ன: || 42 ||

சனகாதி முனிவர்களால் நன்றாக வணங்கித் துதிக்கப்பட்ட நான் மேலான ரிஷிகளால் புகழ்ந்து கொண்டிருக்கும் போதே என்னுடைய இருப்பிடமான வைகுண்டத்திற்கு சென்று விட்டேன். அங்கு பிரம்மதேவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சென்று விட்டேன்.

இத்துடன் ஹம்ஸ கீதை முடிவுற்றது
ஓம் தத் ஸத் 


A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...