உத்தவகீதை
அத்தியாயம்-10
பகவானின் விபூதிகள்
ஸ்வாமி குருபரானந்தாவின் உபதேச விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது-21-02-2022
ஶ்ரீஉத்தவ உவாச
த்வம் ப்3ரஹ்ம பரமம்
ஸாக்ஷாத3னாத்3யந்தமபாவ்ருதம் |
ஸர்வேஷாமபி பா4வானாம்
த்ராணஸ்தி2த்யப்ய்யோத்3ப4வ: || 1 ||
உத்தவர் கேட்கிறார்
பகவானே தாங்கள்தான்
மேலான பிரம்மமாக இருக்கிறீர்கள்.
தொடக்கமும், முடிவும் இல்லாதவர். எதனாலும் மறைக்கப்படாதவர், எதையும்
சாராதிருப்பவர். உலகத்தில் தோன்றியுள்ள
அனைத்து ஜீவராசிகளையும் பாதுகாப்பவர்.
உற்பத்தி, இருப்பு, லயம் இவைகளுக்கும் காரணமாக இருப்பவரும் தாங்கள்தான்.
கர்ம பலனைக் கொடுத்து பாதுகாப்பவரும் நீங்கள்தான்.
உச்சாவ்வசேஷு பூ4தேஷு
து3ர்ஞேயமக்ருதாத்மபி4: |
உபாஸதே த்வாம்
ப4க3வன்யாதா2த த்2யேன ப்ராஹ்மணா: || 2 ||
தாங்கள் உபாதிகளின்
அடிப்படையில் பிறந்த மேலான, கீழான பிராணிகளிடத்துக்குள்ளும்
இருக்கின்றீர்கள். உங்களை அவ்வளவு சுலபமாக
அறியமுடியாது. பண்பாடற்ற மனதுடைய
மனிதர்களால் சுலபமாக உங்களை அறிந்து கொள்ள முடியாது. இப்படிப்பட்ட உங்களை பிராமணர்கள், மனத்தூய்மை
அடைந்தவர்கள் இவர்களால்தான் உண்மையான தன்மையை அறிந்து வழிபடுகிறார்கள்
யேஷு யேஷு ச பூ4தேஷு
ப4க்த்யா த்வாம் பரமர்ஷய: |
உபாஸீனா:
ப்ரபத்3யந்தே ஸம்ஸித்தி4ம் தத்3வதஸ்வ மே || 3 ||
அனைத்து உலகத்திலும்
வெளிப்பட்ட பொருட்களிடத்தில் உங்களை பக்தி என்ற உணர்வுடன் மேலான ரிஷிகள் தியானம்
செய்து மோட்சத்தை அடைந்தார்களோ, மனத்தூய்மையை அடைந்தார்களோ, தங்களையே அடைந்தார்களோ
அதை எனக்கு கூறுங்கள்.
கூ3ட4ஶ்சரஸி
பூ4தாத்மா பூ4தானாம் பூ4தபா4வன |
ந த்வாம் பஶ்யந்தி
பூ4தானி பஶ்யந்தம் மோஹிதானி தே || 4 ||
நீங்கள் மறைந்து
கொண்டு உலகத்தில் சஞ்சரிக்கிறீர்கள்.(கூ3ட4ஸ்சரஸி). எல்லா ஜீவராசிகளுடைய ஆத்மாவாக
இருந்த போதிலும் யாருக்கும் உங்களை அறிய முடியவில்லை.
பூதபாவன – எல்லா ஜீவராசிகளை பாதுகாத்துக்
கொண்டிருக்கும் பகவானே! மாயையால் மதிமயங்கிய மக்கள் தங்களை பார்க்க முடிவதில்லை,
பார்ப்பதில்லை. ஆனால் தாங்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
யா: காஶ்ச பூ4மௌ திவி
வை ரஸாயாம் விபூதயோ திக்ஷு மஹாவிபூதே |
தா
மஹ்யமாக்2யாஹயனுபா4விதாஸ்தே நமாமி தே தீர்த2பதா3ங்க்4ரி பத்3மம் || 5 ||
மேலான ஆற்றல்களை உடைய பகவானே! இந்த மண்ணுலகம்,
விண்ணுலகம், பாதாளம் போன்ற உலகங்களிலும், எல்லா திசைகளிலும் உங்களுடைய ஆற்றல்,
பெருமை வெளிப்பட்டு உள்ளதோ; இவைகளனைத்தையும்
உபதேசித்தருளுங்கள்.
தீர்த2ம் – புனிதமானது.
புனிதமானதை மேலும் புனிதம் அடையச்
செய்யும் தங்கள் தாமரைத் திருவடிகளில் பணிந்து வணங்குகிறேன்.
ஶ்ரீபகவான் உவாச
ஏவமேதத3ஹம் ப்ருஷ்ட:
ப்ரஶ்னம் ப்ரஶ்னவிதா3ம் வர |
யுயுத்ஸுனா வினஶனே
ஸபத்னைர்ர்ஜுனேன வை || 6 ||
ஶ்ரீபகவான்
உபதேசிக்கிறார்
இதே கேள்வியானது
என்னிடம் முன்பு கேட்கப்பட்டது. கேள்வி
கேட்பவர்களில் சிறந்தவரான உத்தவா! எதிரிகளுடன் போர் செய்கின்ற தருணத்தில்
குருக்ஷேத்திரத்தில் அர்ஜுனனால் இதே கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது.
ஞாத்வா ஞாதிவத4ம்
கஹர்யமதர்மம் ராஜ்யஹேதுகம் |
ததோ நிவ்ருத்தோ
ஹன்தாஹம் ஹதோSயமிதி
லௌகிக: || 7 ||
அரசுரிமைக்காக
உறவினர்களை கொள்வது என்பது இழிவான செயல் என்றும் அதர்மமானதும் கூட என்றும் ஒரு
பாமர மனிதனைப் போல, “நான் இவர்களைக் கொல்லப்போகிறேன். இவர்கள் எல்லாம் கொல்லப்படப்
போகிறார்கள் என்று எண்ணி போரிலிருந்து விலக விரும்பினான்.
ஸ ததா3
புருஷவ்யாக்4ரோ யுக்த்யா மே ப்ரதிபோ3தி4த: |
அப்4யபா4ஷத மாமேவம்
யதா2 த்வம் ரணமூர்த4னி || 8 ||
அப்போது பல
யுக்திகளைக் கூறி, நான் அவனுக்கு தெள்ளறிவு புகட்டினேன். போர்க்களத்தில் அவன் என்னைப்பார்த்து நீ
இப்போது கேட்ட கேள்வியைதான் என்னிடம் கேட்டான்.
அஹமாத்மோத்3த4வாமீஷாம்
பூ4தானாம் ஸுஹ்ருதீ3ஶ்வர: |
அஹம் ஸர்வாணி பூ4தானி
தேஷாம் ஸ்தி2த்யுத்3ப4வாப்யய: || 9 ||
உத்தவா! நான்
ஆத்மாவாக (சேதனமாகவும், உணர்வு ஸ்வரூபமாகவும்) இருக்கிறேன். இந்த அனைத்து
ஜீவராசிகளின் ஆத்மாவாக இருக்கிறேன். நான்
அனைத்து ஸ்தூல உடலாகவும் நான் இருக்கிறேன். அதே சமயம் அனைத்து ஜீவராசிகளை
ஆள்பவனாகவும் இருக்கிறேன். நான் வகுத்த நியதிப்படிதான் உலகத்திலுள்ள எல்லாம்
இயங்குகின்றன. எல்லா ஜீவராசிகளுடைய
நண்பனாகவும் இருக்கிறேன். நானே அனைத்துனுடைய தோற்றம், இருத்தல், அழிவுக்கு காரணமாக
இருக்கின்றேன்.
அஹம் க3திர்கதிமதாம்
கால: கலயதாமஹம் |
கு3ணானாம் சாப்யஹம்
ஸாம்யம் கு3ணின்யௌத்பத்திகோ கு3ண: || 10 ||
ஸ்தாவரம்- ஒரே இடத்தில் இருப்பவை; ஜங்கமம்-நகர்ந்து கொண்டிருப்பவை
நகர்கின்றவைகளினுடைய
நகரும் சக்தியாகவும், ஒன்றை உருவாக்குவதில், மாற்றி அமைப்பதில் காலமாகவும்
இருக்கிறேன். நான் சமநிலை (ஸாம்யம்) என்ற பண்பாக இருக்கிறேன். குணங்கள் உள்ள பொருட்களில் இயற்கையான
(ஔத்பத்திக) குணமாக நானே இருக்கின்றேன்.
கு3ணினாமப்யஹம்
ஸூத்ரம் மஹதாம் ச மஹானஹம் |
ஸுக்ஷ்மாணாமப்யஹம்
ஜீவோ து3ர்ஜயானாமஹம் மன: || 11 ||
படைக்கப்பட்டவைகளில்
ஹிரண்யகர்ப்பனாகவும் (சூத்ராத்மா), பெரியவைகளுக்குள் பெரியதான விராட்
ஸ்வரூபமாகவும் இருக்கிறேன். மிக மிக
நுட்பமான விஷயத்தில் ஜீவதத்துவமாக இருக்கிறேன்.
மிகவும் கஷ்டப்பட்டு வெற்றியடையக்கூடிய பொருட்களில் மனமாக இருக்கிறேன். நம்
மனதை வெற்றிக் கொள்வதற்கு கடினமாக இருப்பதன் காரணம் அது ஒரு பொருளாக இல்லாமல்
இருப்பதுதான். மற்ற வெற்றிகள் அடைவதற்கு
மனம்தாம் காரணமாக இருக்கிறது. அந்த
மனதிலுள்ள குறைகளை நம்மால் கண்டு கொள்ள முடியாது.
மற்றவர்களுக்கு நம் மனம் ஒரு பொருளாக இருப்பதனால் அவர்களால் அதனிடத்து உள்ள
குறைகளை கண்டு கொள்ள முடிகிறது. எனவே
மற்றவர்கள் குறை கூறினாலோ அல்லது சரியாக நம் திறமைகளை சொல்லும்போது நம்மைப் பற்றி
சரியாக அறிந்து கொள்ள முடிகிறது.
ஹிரண்யக3ர்போ4
வேதானாம் மந்த்ராணாம் ப்ரணவஸ்த்ரிவ்ருத் |
அக்ஷராணாமகாரோSஸ்மி பதானிச்ச2ந்து3ஸாமஹம் || 12 ||
இந்த உலகத்தில்
எப்படி வாழ வேண்டும். முக்கிய லட்சியத்தையும் அதை அடையும் வழியையும் வேதங்கள்தான்
உரைக்கிறது. வேதங்களின் கர்த்தாவான
ஹிரண்யகர்ப்பனாக இருக்கிறேன்.
மந்திரங்களுக்குள் மூன்று எழுத்துக்கள் கொண்ட ஓங்காரமாக இருக்கிறேன்.
எழுத்துக்களில் அகாரமாகவும், சந்தங்களில் (செய்யுள் அமைப்புக்களில்) மூன்று
பாதங்களைக் கொண்ட காயத்ரீயாக இருக்கிறேன்.
இந்த்ரோSஹம் ஸர்வதேவானாம் வஸூனாமிஸ்மி ஹவ்யவாட் |
ஆதி3த்யானாமஹம்
விஷ்ணூ ருத்3ராணாம் நீல்லோஹித: || 13 ||
தேவர்களுக்குள்
இந்திரனாகவும், எட்டு வஸுக்களில் அக்னியாகவும், அதிதியின் பிள்ளைகளில்
விஷ்ணுவாகவும், பதினோரு ருத்திரர்களில்
சிவனாக இருக்கிறேன்
ப்ரஹ்மர்ஷீணாம்
ப்4ருகுரஹ்ம் ராஜர்ஷீணாமஹம் மனு: |
தேவர்ஷீணாம் நாரதோSஹம் ஹவிர்தா4ன்யஸ்மி தே4னுஷு || 14 ||
பிரம்ம ரிஷிகளுக்குள்
பிருகு முனிவராகவும், ராஜரிஷிகளில் மனுவாகவும், தேவரிஷிகளில் நாரதராகவும்,
பசுக்களுள் காமதேனாகவும் நான் இருக்கிறேன்.
ஸித்3தே4ஶ்வராணாம்
கபில: ஸுபர்ணோSஹம்
பதத்ரிணாம் |
ப்ரஜாபதீனாம் த3க்ஷோSஹம் பித்ருணாமஹமர்யமா || 15 ||
சித்திகளை
அடைந்தவர்களில் அவைகளுக்கு தலைவனாக இருக்கும் கபிலனாகவும், பறவைகளில் கருடனாகவும்,
ப்ரஜாபதிகளில் தக்ஷப்பிரஜாபதியாகவும், பித்ருக்களில் அர்யமாவாகவும் இருக்கிறேன்.
மாம் வித்3த்4யுத்த4வ
தைத்யானாம் ப்ரஹலாதமஸுரேஶ்வரம் |
ஸோமம்
நக்ஷத்ரௌஷதீ4னாம் த4னேஶம் யக்ஷரக்ஷஸாம் || 16 ||
உத்தவா! அசுரர்களில்
அசுரமன்னன் பிரஹலாதனாகவும், நட்சத்திரங்களில் தாவரங்களுக்கு சக்தி தருகின்ற
சந்திரனாகவும், யக்ஷர்களுக்கும், ரக்ஷகர்களுக்குள்ளும் நான் த4னேஶ்வரனாகவும்,
குபேரனாகவும் இருக்கிறேன்.
ஐராவதம்
க3ஜேந்த்ராணாம் யாதஸாம் வருணம் ப்ரபு4ம் |
தபதாம் தயுமதாம்
ஸூர்யம் மனுஷ்யாணாம் ச பூபதிம் || 17 ||
யானைகளுக்குள்
ஐராவதமாகவும், நீரில் வாழும் பிராணிகளுக்கு தேவதைகளாக இருப்பவர்களுக்குள்
வருணனாகவும், வெப்பத்தைக் கொடுக்கும் பொருட்களிலும், வெளிச்சத்தைக் கொடுப்பவைகளில்
சூரியனாகவும், மனிதர்களில் அரசனாகவும் இருக்கிறேன்.
உச்சை:ஶ்ரவாஸ்துரங்கா3ணாம்
தா4தூனாமஸ்மி காஞ்சனம் |
யம: ஸம்யமதாம்
சாஹம்ஸர்பாணாமஸ்மி வாஸுகி: || 18 ||
குதிரைகளுக்குள்
உச்சைஶ்ரவஸாகவும், உலோகங்களுக்குள் தங்கமாகவும், தண்டனை கொடுப்பவர்களுக்குள்
யமனாகவும், சர்ப்பங்களில் (விஷமுடைய பாம்புகளில்) வாசுகியாகவும் இருக்கிறேன்.
நாகேந்த்ராணாமனந்தோSஹம் ம்ருகேந்த்ர: ஶ்ருங்கி3தம்ஷ்ட்ரிணாம் |
ஆஶ்ரமாணாமஹம் துர்யோ
வர்ணானாம் ப்ரதமோSனக4ம் ||
19 ||
குறைகளெதுவுமில்லாத
உத்தவா! விஷமற்ற பாம்புகளில், ஆதிசேஷனாகவும், அனந்தனாகவும், கோரமாக பற்கள் உடைய
விலங்குகளில் சிங்கமாகவும், நால்வகை ஆசிரமங்களில் சந்நியாச ஆசிரமமாகவும், வர்ண
பிரிவுகளில் பிராமணனாகவும் இருக்கிறேன்
தீர்தா2னாம்
ஸ்ரோதஸாம் கங்கா3 ஸமுத்ர: ஸரஸாமஹம் |
ஆயுதா4னாம் த4னுரஹம்
த்ரிபுரக்4னோ த4னுஷ்மதாம் || 20 ||
ஓடிக்கொண்டிருக்கும்
நதிகளல் கங்கையாகவும், தேங்கியிருக்கின்ற நீர்நிலைகளுக்குள் கடலாகவும்,
ஆயுதங்களில் வில்லாகவும், ஆயுதம் தாங்கியவர்களில், வில்லேந்தியவர்களில் முப்புரம்
எரித்த பரமசிவனாகவும் இருக்கிறேன்.
தி4ஷ்ன்யானாமஸ்ம்யஹம்
மேருர்கஹனானாம் ஹிமாலய: |
வனஸ்பதீனாமஶ்வத்த2
ஓஷதீ4னாமஹம் யவ: || 21 ||
மேலான, உயர்ந்த
இடங்களில் மேருமலையாகவும், கடினப்பட்டு அடையக்கூடிய இடங்களுக்குள் இமயமலையாகவும்,
மரங்களில் அரச மரமாகவும், தானியங்களில் யவமாகவும் (பார்லியாகவும்) இருக்கிறேன்.
புரீத4ஸாம் வஸிஷ்டோ2Sஹம் ப்ரஹிமஷ்டானாம் ப்3ருஹஸ்பதி: |
ஸ்கந்தோ3Sஹம் ஸர்வஸேனான்யாமக்3ரண்யாம் ப4க3வானஜ: || 22 ||
புரோகிதர்களில்
வசிஷ்டராகவும், வேதமறிந்தவர்களில் பிருஹஸ்பதியாகவும், படைத் தலைவர்களுக்குள்
ஸ்கந்தனாகவும், ஒன்றை தொடங்கிவைப்பவர்களில் பிரம்மாவாகவும் இருக்கிறேன்
யஞானாம் ப்ரஹ்மயஞோSஹம் வ்ரதானாமவிஹிம்ஸனம் |
வாய்வக்ன்யர்காம்பு3வாகா3த்மா
ஶுசீனாமப்யஹம் ஶுசி: || 23 ||
மோட்சத்தை அடைய
உதவும் சாதனங்களில் பிரம்மயக்ஞமான சாஸ்திரம் கேட்டல், படித்தல் என்ற சாதனமாகவும்,
விரதங்களில் அஹிம்சையாகவும், தூய்மைப்படுத்தும் சாதனங்களுக்குள் வாயு, அக்னி,
நீர், வாய்பேச்சு (பகவான் நாம உச்சாரனை), மனமாகவும் ஆத்மஞானமாகவும்
இருக்கிறேன். நம்மை தூய்மைப்படுத்தும்
சாதனங்களுள் ஆத்மஞானம்தான் மேலானது முக்கியமானது.
யோகா3னாமாத்மஸம்ரோதோ4
மந்த்ரோSஸ்மி விஜிகீ3ஷதாம் |
ஆன்விக்ஷிகீ
கௌஶலானாம் விகல்ப: க்2யாதிவாதி3னாம் || 24 ||
அஷ்டாங்க யோகங்களில்
சமாதி என்ற யோகமாகவும், வெற்றி அடைபவர்களில் சரியான திட்டமிடுதலாகவும்,
கொள்கையாகவும், ஆத்ம-அனாத்மா பிரித்தறியும் அறிவை அடைகின்ற திறமையாகவும், க்2யாதி
வாதங்களில் (அடைந்த தவறான அறிவைப்பற்றிய விசாரம், சரியான அறிவைப்பற்றிய விசாரம்) விகல்பமாக
(சந்தேகம்) இருக்கிறேன்.
ஸ்த்ரீணாம் து
ஶதரூபாஹம் பும்ஸாம் ஸ்வாயம்பு4வோ மனு: |
நாரயணோ முனீனாம் ச
குமாரோ ப்ரஹமசாரிணாம் || 25 ||
பெண்களில் ஶதரூபா
என்கின்ற பெண்ணாகவும், ஆண்களில் ஸ்வாயம்பு மனுவாகவும், முனிவர்களில் நாராயணன் என்ற
பெயருடைய முனிவராகவும், பிரம்மசாரிகளில் சனத் குமாரராகவும் இருக்கிறேன்.
த4ர்மாணாமஸ்மி
ஸந்நியாஸ: க்ஷேமாணாமபஹிர்மதி: |
கு3ஹ்யானாம்
ஸுந்ருதம் மௌனம் மிது2னானாமஜஸ்த்வஹம் || 26 ||
தர்மங்களில் சந்நியாச தர்மமாகவும், நலத்தை, அபயத்தை விரும்பும் மனிதர்களில் உட்புறமாக பார்க்கக்கூடிய
மனமாகவும், (ஒருவன் தன்னிடத்தில் பயமின்றி மனநிறைவுடன் இருந்திட வேண்டும்)
ரகசியத்தை பாதுகாப்பதில் மௌனமாகவும், ஸுந்ருதம்- இனிமையான சொற்களைக் கொண்டு
மறைக்கும் திறமையாகவும், முதலில் படைக்கப்பட்ட ஆண்-பெண் ஜோடிகளில் பிரம்மாவாகவும்
இருக்கிறேன்.
ஸம்வத்ஸரோSஸ்ம்ய நிமிஶாம்ருதூனாம் மது4மாத4வௌ |
மாஸானாம்
மார்க3ஷீர்ஷோSஹம்
நக்ஷத்ராணாம் ததா2பி3ஜித் || 27 ||
நிற்காமல்
ஓடிக்கொண்டிருப்பவைகளில் வருடமாகவும், பருவ காலங்களில் வசந்த காலமாகவும்,
மாதங்களில் மார்கழியாகவும், நட்சத்திரங்களில் அபிஜித் என்ற நட்சத்திரமாகவும் நான்
இருக்கிறேன். உத்திராடம் 4வது பாதம்,
திருவோணம் முதல் பாதம் இவையிரண்டும் சேர்ந்து இருப்பதை அபிஜித் என்று
அழைக்கப்படுகிறது.
அஹம் யுகா3னாம் ச
க்ருதம் தீ4ராணாம் தேவலோSஸ்தி: |
த்வைபாயனோSஸ்மி வ்யாஸானாம் கவீனாம் காவ்ய ஆத்மவான் || 28 ||
நான்கு யுகங்களில்
க்ருதயுகமாகவும், தீரர்களுக்குள் தேவலர், அஸிதர் போன்றவர்களாகவும்,
வியாஸர்களுக்குள் த்3வைபாயனவராகவும், சாஸ்திரம் அறிவாற்றல் உள்ளவர்களில்
சுக்கிராச்சாரியாரகவும் இருக்கிறேன்.
வாஸுதேவோ ப4கவதாம்
த்வம் து ப4க3வதேஷ்வஹம் |
கிம்புருஷானாம்
ஹனுமான்வித்3யாத்4ராணாம் ஸுத3ர்ஶன: || 29 ||
என்னுடைய
அவதாரங்களில் வாசுதேவனாகவும், பக்தர்களில் உத்தவராகவும், வானரங்களில்
அனுமானாகவும், தேவலோகத்தில் வசிக்கின்ற கலைஞானத்துடன் இருப்பவர்களில்
சுதர்சனனாகவும் நான் இருக்கிறேன்
ரத்னானாம் பத்3மராகோ3Sஸ்மி பத்3மகோஶ: ஸுபேஶஸாம் |
குஶோSஸ்மி த3ர்ப4ஜாதீனாம் க3வ்யமாஜ்யம் ஹவி:ஷ்வஹம் || 30 ||
ரத்தினங்களில்
பத்3மராகம் என்ற பெயருடைய ரத்தினமாகவும், மென்மையான பொருட்களில் தாமரை
மொட்டாகவும், புல் வகைகளில் குஶம் என்ற புல்லாகவும், யாகங்களில் போடும்
பொருட்களில் பசுநெய்யாகவும் இருக்கிறேன்.
வ்யவஸாயினாமஹம்
லக்ஷ்மீ: கிதவானாம் ச2லக்3ரஹ: |
திதிக்ஷாஸ்மி
திதிக்ஷூணாம் ஸத்த்வம் ஸத்த்வவதாமஹம் || 31 ||
முயற்சி செய்பவர்கள்
அடையும் செல்வமாக விளங்குவதும், மற்றவர்களை ஏமாற்றுவர்களிடத்தில் இருக்கும்
திறமையாகவும், சகிப்புத்தன்மை இருப்பவர்களின் சகிப்பு குணமாகவும், சாத்வீக
மக்களிடத்திலிருக்கின்ற சத்துவகுணமாகவும் நான் இருக்கிறேன்.
ஓஜ: ஸஹோ ப3லவதாம்
கர்மாஹம் வித்3தி4 ஸாத்வதாம் |
ஸாத்வதாம்
நவமூர்தீனாமாதி3மூர்திரஹம் பரா || 32 ||
பலம்
வாய்ந்தவர்களிடத்தில் இருக்கின்ற இந்திரிய சக்தியாகவும், மனோ பலமாகவும்
இருக்கின்றேன். பலனில் பற்றில்லாமல்
கடமையை செய்பவர்களில் கர்மயோகமாகவும், விஷ்ணு பக்தர்களால் பூஜிக்கப்படுகின்ற
சத்துவகுண பிரதானமாக இருக்கின்ற ஒன்பது மூர்த்திகளில் பரவாசுதேவ மூர்த்தியாக
இருக்கிறேன். வாசுதேவர், சங்கர்ஷணர்,
பிரத்யும்னர், அநிருத்தர், நாராயணர், வராஹர், ஹயக்ரீவர், நரசிம்மர், வாமனர் ஆகிய
ஒன்பது மூர்த்திகள்.
விஷ்வாவஸு:
பூர்வசித்திர்க3ந்த4ர்வாப்ஸரஸாமஹம் |
பூ4த4ராணாமஹம்
ஸ்தை2ர்யம் க3ந்த4மாத்ரமஹம் பு4வ: || 33 ||
கந்தர்வர்களில்
விஷ்வாவஸூவாகவும், அப்ரஸ்களில் பூர்வசித்தி என்ற பெண்ணாகவும், அசையாக மலைகளில்
அசையா தன்மையாகவும், பூமியின் குணமான வாசனையாகவும் நான் இருக்கின்றேன்.
ஆபாம் ரஸ்ஶ்ச
பரமஸ்தேசிஷ்டானாம் விபா4வஸு: |
ப்ரபா4
ஸூர்யேந்துதாராணாம் ஶப்3தோ3Sஹம் நப4ஸ: பர: || 34 ||
நீரினுடைய குணமான
சுவையாகவும், பேரொளி வீசுபவைகளுள் அக்னியாகவும், சூரியன், சந்திரன்,
நட்சத்திரங்களின் கிரகணங்களாகவும், ஆகாயத்தின் குணமான சப்தமாகவும்
இருக்கிறேன்.
ப்3ரஹ்மண்யானாம்
ப3லிரஹம் வீராணாமஹமர்ஜுன: |
பூ4தானாம்
ஸ்தி2திருத்பத்திரஹம் வை ப்ரதிஸங்க்ரம: || 35 ||
மேலானவர்களை ,
சான்றோர்களை மதிப்பவர்களில் பலி என்ற அரசனாகவும், வீர்ர்களில் அர்ஜுனனாகவும்,
அனைத்து ஜீவராசிகளில் தோற்றதிற்கும், இருப்புக்கும், அழிவுக்கும் காரணமாக
இருக்கிறேன்.
க3த்யுக்த்யுத்ஸர்கோ3பாதானமானந்தஸ்பர்ஶலக்ஷனம்
|
ஆஸ்வாதஶ்ருத்யவக்4ராணமஹம்
ஸர்வேந்த்3ரியம் || 36 ||
புலன்களுக்கெல்லாம்
புலனாகவும், ஜீவனுடைய இந்திரிய சக்திகளுக்கெல்லாம் சக்தியாகவும் இருக்கிறேன். நம்மிடத்து இருக்கும் இந்திரிய சக்தி அனைத்தும்
இறைவனுடையது என்று உணர்ந்து கொள்ள வேண்டும்.
நடக்கும் சக்தியாகவும், பேசும் சக்தியாகவும், கழிவுகளை வெளியேற்றும் சக்தி,
கைகளால் எடுக்கும் சக்தி, இன்பத்தை கொடுக்கும் சக்தியாகவும், தொட்டுணரும்
சக்தியாகவும், பார்க்கும் சக்தி, சுவைக்கும் சக்தி, கேட்கும் சக்தி, நுகரும் சக்தி
ஆகிய சக்திகளாகவும் நானே இருக்கிறேன்.
ப்ருதி2வி வாயுராகாஶ
ஆபோ ஜ்யோதிரஹம் மஹான் |
விகார: புருஷோSயக்தம் ரஜ: ஸத்த்வம் தம: பரம் |
அஹமேத
த்ப்ரஸங்க்2யானம் ஞானம் த்த்த்வ்வினிஶ்சய: || 37 ||
அவ்யக்தம், மஹத்,
அஹங்காரம், ஐந்து சூட்சும பூதங்களான பூமி, வாயு, ஆகாசம், நீர், நெருப்பு
இவைகளாகவும், இவைகளிலிருந்து தோன்றிய ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து
கர்மேந்திரியங்கள், ஸ்தூல பூதங்கள், மனம் இவைகளாகவும் நான் இருக்கிறேன். புருஷ தத்துவமாகவும், ரஜோ, தமோ, சத்துவ
குணங்களாகவும் இருக்கிறேன். இந்த தத்துவங்களில்
எண்ணிக்கையாகவும், மற்ற லட்சணங்களை அறிந்து கொள்வது, அதன் பயனான தத்துவ ஞானமும்
நானாக இருக்கிறேன்.
மயேஶ்வரேண ஜீவேன
கு3ணேன கு3ணினா வினா |
ஸர்வாத்மனாபி ஸர்வேண
ந பா4வோ வித்யதே க்வசித் |\ 38 ||
நானே ஈஸ்வரன், நானே
ஜீவன், நானே குணங்கள், நானே குணங்களுடையவனாகவும் இருக்கிறேன். எல்லா
ஜீவராசிகளிடத்திலுள்ளும் இருக்கும் ஆத்மாவாக இருக்கிறேன். அனைத்து உடலாகவும்
இருக்கிறேன். என்னைத் தவிர வேறெந்தப் பொருளும் எங்கும் இல்லை.
ஸங்க்2யானம்
பரமாணுனாம் காலேன க்ரியதே மயா |
ந ததா2 மே
விபூ4தீனாம் ஸ்ருஜதோSண்டானி
கோடிஶ: || 39 ||
என்னுடைய பெருமைகளை
அளவிட முடியாது. பரமாணுக்களின்
எண்ணிக்கையை ஒரு காலத்திற்குள் எண்ணி முடிவடையலாம். ஆனால் என் கோடிக்கணக்கான
அண்டங்களைப் படைக்கும் விபூதிகளை கணக்கிடவே முடியாது
தேஜ: ஶ்ரீ:
கீர்திரைஶ்வர்யம் ஹ்ரீஸ்த்யாக3: ஸௌப4க3ம் ப4க3: |
வீர்யம் திதிக்ஷா
விஞானம் யத்ர யத்ர ஸ மேSஶக: || 40 ||
யாரிடத்திலெல்லாம்,
எங்கெங்கெல்லாம் அதிக சக்தி (தேஜஸ்), செல்வம், புகழ், ஐஸ்வர்யம் (ஆளும் திறமை),
பணிவு, தியாகம், சௌந்தர்யம், சௌபாக்கியம், பராக்கிரமம், பொறுத்துக் கொள்ளும்
தன்மை, செயல்திறமை் ஆகியவைகளனைத்தும் என்னுடையதாக அறிந்துகொள்.
ஏதாஸ்தே கீர்திதா:
ஸர்வா: ஸங்க்ஷேபேண விபூ4தய: |
மனோவிகாரா ஏவைதே யதா2
வாசாபி4தீ4யதே || 41 ||
உத்தவா! நீ கேட்டுக்
கொண்டபடி என்னுடைய பெருமைகள் சுருக்கமாகச் சொல்லப்பட்டது. இவைகளெல்லாம் மனதினுடைய விகாரங்களேயாகும்.
இவைகள் என் வாக்கினால் சொல்லப்பட்டதே தவிர உண்மையில் அவைகள் இல்லை. இவைகள் வெறும் வாக்கியங்கள்தான், அனைத்தும்
மித்யா என்ற கருத்தை உபதேசிக்கின்றார்.
வாசம் யச்ச2 மனோ
யச்ச2 ப்ராணான்யச்சே2ந்த்3ரியாணி ச |
ஆத்மானமாத்மனா யச்ச2
ந பூ4ய: கல்பஸேSத்4வனே
|| 42 ||
உத்தவா! உன்னுடைய
வாக்கை கட்டுப்படுத்து பிராணனை கட்டுப்படுத்து, மனதைக் கட்டுப்படுத்து, உணவு
கட்டுப்பாட்டை செயல்படுத்து, புலன்களையும் கட்டுப்படுத்து, புத்தியின் துணைக்
கொண்டு புத்தியை கட்டுப்படுத்து, புத்திக்கு நல்லறிவை கொடு. உன்னை நீயே எல்லாவகையிலும் கட்டுப்படுத்திக்
கொள், உயர்த்தி கொள்வாயாக. இவ்வாறு
செய்வதால் மீண்டும் சம்சாரப் பாதைக்கு செல்ல நேரிடாது
யோ வை வாங்மனஸீ ஸம்யக3ஸம்யச்ச2ந்தி4யா
யதி: |
தஸ்ய வ்ரதம் தபோ
தா3னம் ஸ்ரவத்யாமக4டாம்பு3வத் || 43 ||
ஒருவன் வாக்கையும்,
மனதையும் நன்கு முழுமையாக கட்டுப்படுத்தவில்லையென்றால், மேற்சொன்ன உபதேசத்தின்படி
கட்டுப்படுத்தவில்லையென்றால், மற்ற சாதனங்களை பயன்படுத்திக் கொண்டிருந்தாலும்,
எவ்வளவு விரதம், தவம், தானம் போன்ற நற்செயல்கள் அனைத்துமே பச்சை மண் குடத்து நீர்
போல வீணாகிப் போகும்
தஸ்மாத்3வாசோ மன:
ப்ராணான்னியச்சே2ன்மத்பராயண: |
மத்3ப4க்தியுக்தயா
பு3த்3த்4யா தத: பரிஸமாப்யதே || 44 ||
ஆகவே, மனம், வாக்கு,
பிராணன், புலன்கள் இவைகளையெல்லாம் நன்கு கட்டுப்படுத்த வேண்டும். நெறிப்படுத்த வேண்டும். என்னை அடைய வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு
இவைகளையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டும். என் மீது பக்தி செலுத்தப்பட்ட மனதுடன் கூடிய
புத்தியுடன் இவைகளை முயற்சி செய்து அடைய வேண்டும். இவைகளை செய்தபின் எல்லாம் முற்றுப்
பெறுகின்றன.
ஓம் தத் ஸத்