அத்தியாயம்-12
பக்தி யோகம்
ஸ்வாமி
குருபரானந்தாவின் உபதேச விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது-05-02-2022
முகவுரை:
பக்தியைப் பற்றியும், பரா பக்தனான ஞானியை
பற்றியும் கூறியுள்ளார்.
பக்தியின் லட்சணம்
பக்தியானது பல நிலைகளைக் கொண்டதாக இருப்பதால்
அந்தந்த நிலைக்கேற்ற லட்சணம்தான் கொடுக்க முடியும். தவம் என்ற பொதுவான சொல்லானது தியானம், விரதம்,
ஜபம் என்று பலவிதமாக குறிப்பது போல பக்தி என்பது பல படிகளுக்கேற்ப
விளக்கப்படுகிறது. தவத்திற்கு பொதுவாக
சொல்லப்படும் சாமான்ய லட்சணம் விரும்பி கஷ்டத்தை எடுத்துக் கொள்ளுதல் என்பதாகும். துயரத்தை விரும்பி ஏற்றுக்
கொள்ளுதல் என்பது மனவளர்ச்சிக்கு காரணமாக அமைகிறது. இது எல்லா விசேஷ லட்சணத்திற்கு
அடிப்படையாக இருக்கின்றது. இதேபோல
பக்திக்கு சாமான்ய லட்சணம், விசேஷ லட்சணம் என்று இருவகையான லட்சணங்கள்
இருக்கின்றன. இந்த சாமான்ய லட்சணம் எல்லா
விசேஷ லட்சணங்களுக்குள்ளும் ஊடுருவி இருக்கிறது.
சாமான்ய லட்சணம்
- ஈஸ்வரே
ப்ரீதி – இறைவனிடம் வைத்திருக்கின்ற அன்பு
- ஆஸ்திக்ய
புத்தி – ஈஸ்வரன் இருக்கிறார் என்ற முழு நம்பிக்கை
- அனன்ய
சரணத்வம் – வேறிடத்தில் சரணடையாமல் இருத்தல், பகவான் ஒருவர்தான் நமக்கு
நிச்சயமாக உதவுவார் என்ற நம்பிக்கை
- சிரத்3தா4,
விஶ்வாஸம் – இறைவனிடத்தில் இருக்கின்ற முழுநம்பிக்கை
அன்பு என்ற உணர்ச்சி எல்லா ஜீவராசிகளிடமும்
இருக்கின்றது. இந்த அன்பை மனிதர்கள்
இறைவனிடத்தில் வைக்கும்போது பக்தி என்று கூறப்படுகின்றது. இந்த பக்தி வருவதற்கு
அவர் இருக்கின்றார் என்ற நம்பிக்கையே காரணம்.
விசேஷ லட்சணங்கள்
இதை ஐந்து வகையாக பகவான் பிரித்து இந்த
அத்தியாயத்தில் விளக்கியுள்ளார். இந்த எல்லா வகையான நிலைகளிலுள்ள அனைவரையும்
பக்தன் என்று ஏற்றுக் கொள்கிறார். நாம்
செலுத்தும் அன்பில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை வைத்து இந்த பிரிவு
அமைந்திருக்கின்றது.
அன்பை அளக்கும் அளவுகோலாக இருப்பது நாம்
செய்யும் தியாகத்தின் அளவைப் பொறுத்து இருக்கின்றது. அதேப்போன்று எந்த அளவுக்கு நாம் பகவானுக்காக
தியாகம் செய்கின்றோமோ அதைப் பொறுத்துத்தான் பக்தியின் நிலை குறிப்பிடப்படுகிறது.
ஞானமே பக்தி வருவதற்கு மூல காரணம். நாம் ஒருவரை எவ்வளவு தூரம் நன்கு புரிந்து
கொண்டிருக்கின்றோமோ அந்த அளவுக்கு அவர் மீது அன்பு செலுத்துவோம். எனவே அறிவே பக்திக்கு காரணமாக அமைகின்றது. சுகமும், துக்கமும் சேர்ந்த அறிவு அன்பு உருவாகுவதற்கு
காரணமாக அமையாது. எந்த அளவுக்கு ஈஸ்வரனைப் பற்றிய அறிவு இருக்கின்றதோ அந்த
அளவுக்கு பக்தியும் ஏற்படுகிறது. அறிவு
பக்தியை வளர்க்கின்றது, பக்தியே அறிவையும் வளர்க்கின்றது. பகவானை அடையும் வரை
பக்தியும், ஸத்சங்கமும் தொடர வேண்டும்.
எனவே பக்தியின் மூலகாரணம் பக்தியாகத்தான் இருக்கின்றது
பக்தி மனதில் இருக்கும்
உணர்வாக கருதப்படுகிறது. ஒருவர் செய்யும்
செயல்களை வைத்து அவர் பக்தியுடன் இருக்கின்றார் என்று சொல்லுவோம். பக்தி என்பது செயலா அல்லது மன உணர்வா என்று
வினவினால் மனதில் இருக்கும் உணர்வு எப்பொழுதும் செயலாக வடிவெடுக்கும். ஒருவர் மீது இருக்கும் மரியாதையை அவர் கைகூப்பி
வணங்குவதை வைத்து சொல்லி விடலாம். அதுபோல
பக்தன் பகவான் மீது பக்தியை விதவிதமான செயல்களாக வெளிப்படுவான். ஒருவனுடைய செயல்பாவனை மாறினால் அவனிடமிருந்து
வெளிப்படும் செயல்களும் மாறிவிடும். மனப்பாவனைதான் முக்கியம் அதனால் வெளிப்படும்
செயல்களை வைத்து கண்டுபிடிக்கவும் முடியாது. பகவான் இந்த அத்தியாயத்தில் பக்தனிடம்
இருக்கும் பக்தி சூழ்நிலைகளுக்கேற்ப அவன் செயல்களும் எப்படி இருக்கும் என்று
விளக்குகின்றார்.
பக்தர்கள்:
இறைவனை
ஏற்றுக்கொண்டு வழிபடுபவர்கள் பக்தன். மற்றவர்கள் பக்தர்களில்லை. இந்த பக்தர்களெல்லாம் நான்காக பகவான்
பிரித்திருக்கிறார். அவைகள்,
- ஆர்த்தி பக்தன் – துயரம் வரும்போது இறைவனை நாடுபவன்,
- அர்த்தார்த்தி பக்தன் – பொருட்கள், அறிவு, புகழ், பதவி கிடைப்பதற்காக பக்தி செலுத்துபவர்கள்.
- ஜிக்ஞாஸு – இறைவனையே அடைய விரும்புபவன்,
- ஞானி – இறைஸ்வரூபமாக உணர்ந்து இருப்பவன்.
- சகாம பக்தன்,
- நிஷ்காம பக்தன்.
இந்த
உலகத்தில் உள்ள ஏதாவது போ4கத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையுடன் பகவானை
துதிப்பவர்கள். பகவானைத் தவிர எதை நாடினாலும் அவர்கள் சகாம பக்தர்கள். ஈஸ்வரனையே அடைய வேண்டும் என்று பக்தி
செலுத்துபவன் நிஷ்காம பக்தன். ஈஸ்வரனை
அடைவதற்காக துயரங்களை நீக்குவதற்கும், பொருள் வேண்டும் என்று வேண்டுபவனும் நிஷ்காம
பக்தனாவான். ஈஸ்வரனை அடையும் முயற்சிக்கு
வரும் தடைகள் நீங்குவதற்கு பிரார்த்தனை செய்யலாம். இது நிஷ்காம பக்தியாகிறது. சகுண பக்தன், நிர்குண பக்தன் என்றும்
இருவகைகளாக பிரிக்கப்படுகின்றது.
மாயையுடன் கூடிய ஈஸ்வரனை வணங்குபவன் சகுண பக்தன், மாயை நீங்கிய ஈஸ்வரனை
வணங்குபவன் நிர்குண பக்தன்.
பக்தியின் அடையும் பலன்
ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு செல்லலாம்.
இது பொதுவான பலன். மனதிலிருக்கும் தீய குணங்களை நீக்குவதற்கும், நற்குணங்களை வளர்த்துக் கொள்ளவும்
முயற்சி செய்யும் போது தேவையான சக்தியை அடையலாம்.
சுபாவ தோஷங்கள் நீங்க வேண்டும்.
அதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
பகவானை அடைவதற்கு மனத்தூய்மை கண்டிப்பாக வேண்டும். இதை அடைய முயற்சிக்கும் போது தோல்விகளை அடைய
நேரிடும். பொதுவாக நமக்கு வரும் துயரங்களுக்கு மற்றவர்களை காரணமாக
சொல்லுவோம். மற்றவர்களின் செயல்களோ,
சொற்களோ என்னை துயரப்படுத்தவில்லை.
நான்தான் அதை துயரமாக மாற்றிக் கொண்டேன் என்ற மனபாவத்துடன் இருக்க
வேண்டும். இந்த முயற்சியில் தோல்வியும்,
மனச் சோர்வும் வரலாம். இந்த நிலையில் ஒரு பக்தியினால் மட்டும்தான் இவைகளை நீக்க
முடியும். எனவே பக்திதான் மிக மிக அவசியம்
என்பது புரிந்து கொள்ளலாம்.
தாயின் அன்பையும், தந்தையின் அன்பையும்,
குருவின் அன்பையும் அனுபவித்தவனால்தான் வேதத்தின் அறிவை அடைய முடியும். ஒருவன்
மூன்று பேரின் அன்பையும் முழுமையாக பெற்றிருக்கவில்லையென்றால் எந்த அன்பை
இழந்திருக்கின்றோனோ அதை அனுபவிப்பதற்கு இறைவனின் மீது செலுத்தும் அன்பினால்
நிறைத்துக் கொள்ளலாம்.
நற்குணங்கள் வளர்வதற்கு காரணமாக பக்தி
இருக்கின்றது. வாழ்வில் ஏதாவது உயர்வை
அடைந்தாலும் நம்மிடம் கர்வம் வராது. தீய
குணங்கள் நீங்குவதற்கும் பக்தியே காரணமாக இருக்கும். பக்தியினால் செய்யப்படும் செயல்கள் பிரார்த்தனை
போன்றோ, பிராயசித்தமாகவோ அமைந்து பலனைக் கொடுக்கும். நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் பலனைக்
கொடுக்கும். இந்த நியதிப்படி பக்தியினால் உந்தப்பட்டு செய்யும் செயல்களுக்கு
புண்ணிய என்ற பலனை அடைகிறான். இந்த
புண்ணியத்தால் பிராரப்தத்தினால் அடையப் போகும் துர்பலன்கள், தடைகளை கொடுக்கின்ற,
துன்பம் தரும் கர்ம பலனகளை நீக்கி கொள்ளலாம். சக்தி வாய்ந்த பிராரப்த பலனை எதிர்கொள்வதற்கு, அனுபவிப்பதற்கு தேவையான தைரியத்தை,
மனவலிமையை கொடுக்கும்
अर्जुन उवाच ।
एवं सततयुक्ता ये भक्तास्त्वां पर्युपासते ।
ये चाप्यक्षरमव्यक्तं तेषां के योगवित्तमाः ॥ 1 ॥
அர்ஜுனன் கேட்கிறார்
ஏவம் ஸததயுக்தா - என்றும் உங்களிடத்தில் பொருந்திய மனதுடன்
இருக்கும்
யே ப4க்தா: த்வாம் – எந்த
பக்தர்கள் விஶ்வரூபமாக இருக்கின்ற உங்களை
பர்யுபாஸதே – உயர்ந்த
நிலையில் வழிபடுகிறார்களோ
யே ச அபி அக்ஷரம் அவ்யக்தம் – மேலும்
எவர்கள் அழிவற்ற, வெளிதோற்றத்திற்கு வராத, உருவமற்ற பிரம்மத்தையே வழிபடுகிறார்களோ
தேஷாம் கே யோகவித்தமா: - இவ்விரு வகையான பக்தர்களுள் எவர்கள் நன்கு
யோகத்தை அறிந்தவர்கள்.
சகுண பக்தி, நிர்குண பக்தி இந்த இரண்டில் எது
மோட்ச சாதனம், எது உயர்ந்த பக்தி என்று அர்ஜுனன் கேட்கிறான்.
श्रीभगवानुवाच ।
मय्यावेश्य मनो ये मां नित्ययुक्ता उपासते ।
श्रद्धया परयोपेताः ते मे युक्ततमा मताः ॥ 2 ॥
யே மயி ஆவேஶ்ய மனஹ – எவர்கள்
விஶ்வரூபமாக இருக்கின்ற என்னிடத்தில் மனதை ஒருமுகப்படுத்தியவனாகவும்
நித்ய யுக்தாஹா – மாறாத
பக்தியுடையவனாகவும், பகவானுக்காக அனைத்து செயல்களையும் செய்து கொண்டிருப்பவனாகவும்
ஶ்ரத்தயா பரயா உபேதா: - மேலான,
சாத்விகமான சிரத்தையை உடையவர்கள், அசைக்க முடியாத நம்பிக்கையுடையவனாக இருந்து
கொண்டும்
மாம் உபாஸதே – என்னை
வழிபடுகின்றானோ
மே யுக்த தமா மதா – அவர்கள்
மேலானவர்கள், என்பது என்னால் கருதப்படுகிறது
விசாரம்
அர்ஜுனனுடைய கேள்வியில் தவறு இருக்கின்றது. அது
என்ன என்பதை விசாரம் செய்ய வேண்டும்.
இரண்டு பொருட்களை ஒப்பிட்டு பார்ப்பது எப்பொழுது நடக்கும் என்றால் இரண்டும்
ஒரே பயன்பாட்டுக்காக இருக்கும் போதுதான். இரண்டுமே வெவ்வேறு உபயோகத்திற்கு
இருக்கும் போது ஒப்பிட்டு பார்க்கத் தேவையில்லை.
இங்கே சகுண பக்தி ஒரு படி, நிர்குண பக்தி என்பது அடுத்த படி. இவையிரண்டும்
மோட்சத்தை அடைவதற்கு தேவையானவைகள். எனவே
அர்ஜுன்னுடைய கேள்வி இரண்டில் எது உகந்தது என்று கேட்டிருக்க வேண்டும்.
பகவான் முதலில் சகுண பக்தன் உயர்ந்தவன்,
மேலானவன் என்று கூறியிருக்கிறார். நிர்குணபக்தன் என்னையே அடைகிறான் என்று
கூறியிருக்கிறார். சகுண பக்தனை உயர்ந்தவன்
என்று சொல்வதால் அந்தப் பக்தனாக இருக்க முயற்சி செய்வார்கள். ஆனால் சகுணபக்தியானது
மோட்சத்திற்கான முதல்படிதான். நிர்குண பக்தனாக அடுத்த படிக்கு உயர்ந்து செல்ல
வேண்டும். ஏனென்றால் அவனால்தான் பகவானை
அடைய முடியும் என்று பகவானே கூறியிருக்கிறார்.
சகுண பக்தியானது முதல்படி, அதை சரியாக செய்து முடித்தால் அடுத்த
படியான நிர்குண பக்திக்கு செல்ல முடியும் எனவே சகுண பக்தியை விட முடியாது,
தவிர்க்கக்கூடாது. சகுண பக்தியில் நான்கு நிலைகள் உள்ளது. அதில் கடைசி நிலையில்
உள்ளவனால்தான் விஶ்வரூப தரிசனத்தையே பெற முடியும். இவன்தான் உயர்ந்தவன் என்று
பகவான் கூறியிருக்கிறார்.
நிர்குண பக்தன்
சாதன-சதுஷ்டய சம்பத்தி என்கின்ற தகுதியை
அடைந்து வேதாந்த உபதேசத்தை குருமுகமாக கேட்டு சரியாக புரிந்து கொள்ள முயற்சி
செய்பவர்கள் முமுக்ஷுத்வம் உடையவர்கள். இவர்களே இந்த மோட்சத்தை அடைவதற்கான சாதனம்
எதுவென்று தேடுபவர்கள். ஆத்மஞானத்தை அடைய முயற்சிப்பவனை ஜிக்ஞாஸூ என்று கூறப்படுகின்றது. பகவானை
அடைவது என்பது பிரம்மத்தை அடைதலாகும், பிரம்ம ஞானத்தை அடைதலாகும். எந்த அறிவையும் அதைக் கொடுக்கும் கருவியின்
துணைக் கொண்டுதான் அடைய முடியும். நிர்குண
பிரம்மத்தை அறிவதற்கு உதவும் கருவி உபநிஷத் என்று அறிந்து கொண்டு அதை குருமுகமாக
கேட்க வேண்டும். இதையே சிரவணம் என்பர். மனனம்
என்ற சாதனத்தின் மூலமாக கசடறக் கற்றறிந்து விட வேண்டும். அடைந்த அறிவில் நிலை பெற
நிதித்யாஸனம் என்ற சாதனத்தை பயன்படுத்துவான்.
இந்த முயற்சியில் இருப்பவர்களையே நிர்குண பக்தர்கள் என்று
அழைக்கப்படுகின்றனர். நிதித்யாஸனம் செய்து கொண்டு இருக்கின்ற நிர்குண பக்தன் என்னை
அடைகின்றான் என்று இந்த ஸ்லோகத்தில் கூறுகின்றார்
சகுண பக்தன்
நான்கு விதமான சகுண பக்தர்கள் இருக்கிறார்கள்.
இதில் விஶ்வரூப பக்தன்தான் உயர்ந்தவன் என்று பகவான் குறிப்பிடுகின்றார். இந்த பக்தனுக்கு
ஈஸ்வரனை பற்றிய முழுஞானம் இருக்கின்றது.
ஆனால் அவர்தான் இந்த உலகத்திற்கு உபாதான காரணம் என்று அறிந்திருப்பான்.
எனவே இந்த நிலையில் உள்ள பக்தன்தான் உயர்ந்தவன் என்று ஸ்லோகத்தில்
குறிப்பிட்டிருக்கிறார்.
ये त्वक्षरमनिर्देश्यमव्यक्तं पर्युपासते ।
सर्वत्रगमचिन्त्यञ्च कूटस्थमचलन्ध्रुवम् ॥ 3 ॥
யே து ஆனால் எவர்கள்
அக்ஷரம் அழிவற்றது,
என்றும் அழியாததாகவும்
அனிர்தேஶ்யம் சப்தத்தினால்
சுட்டிக்காட்ட முடியாததாகவும், வாக்கால் விளக்க முடியாததாகவும், குணங்களற்றதாகவும்
அவ்யக்தம் இந்திரிய
அகோ3ச்சரம், அகரண கோ3ச்சரம், இந்திரியங்களால் அனுபவிக்க முடியாததாகவும்,
விளக்கமுடியாததாகவும், வெளித்தோற்றத்திற்கு வராததாகவும்
அசிந்த்யம் சிந்தனைக்கும்
எட்டாததாகவும், மனதாலும் புரிந்து கொள்ள முடியாததாகவும்
கூடஸ்தம் கூடஹ-பொய்,
இல்லாததை இருப்பதாக காட்டிக் கொள்வது, உதாரணமாக தோன்றிக் கொண்டிருக்கும் ஜகத்
உண்மையில் இல்லை. பொய்யான உலகத்திற்கு அதிஷ்டானமாக இருந்து கொண்டிருப்பதாகவும் இது
இருக்கிறது. இரும்பு பட்டறையில் பயன்படுத்தும் நிலையாக பொருத்தப்பட்டிருக்கும்
இரும்பு பலகையைப் போல தான் மாறாமல் அசையாமல் இருந்து கொண்டு அதன் மீது வைத்து அடிக்கப்படும்
பொருட்கள் மாறுவது போல, மாறிக்கொண்டிருக்கின்ற பொருட்களுக்கு ஆதாரமாக
இருக்கின்றது.
ஸர்வத்ரகம் அனைத்தையும்
வியாபித்து இருப்பது.
களிமண்ணிலிருந்து
உருவாக்கப்பட்ட பானைகளில் அனைத்தும் வியாபித்திருக்கும். களிமண் போல தோன்றிக் கொண்டு
இருக்கின்ற உலகத்திலுள்ள அனைத்திற்கும் ஆதாரமாக இருந்து கொண்டும் வியாபித்து கொண்டும்
இருக்கிறது
அசலம் அசையாததாகவும்,
உருவமற்றதாகவும் இருப்பது
ஜடமாக இருப்பதால்
இது அசையாததாகவும் இருக்கின்றது. மேலும்
அசைவதற்கு இடமே இல்லாததாலும் அசையாததாக இருக்கின்றது.
த்4ருவம் மாற்றமில்லாமல்
என்றும் இருக்கின்றது.
மேற்கூறிய நிர்குண ஸ்வரூபத்தை தியானம் செய்ய வேண்டும்.
सन्नियम्येन्द्रियग्रामं सर्वत्र समबुद्धयः ।
ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रताः ॥ 4 ॥
ஸந்நியம்ய இந்திரியகிராமம் – அனைத்து
புலன்களும் நன்கு அடக்கியவனாகவும், ஶம, த3மாதிகளை அடைந்தவனாகசும்
ஸர்வத்ர ஸமபுத்3த4யஹ –
எல்லாவற்றிலும் சமநோக்கு, சமபாவனை உடையவனாகவும், ஈஸ்வர புத்தியோடும் இருப்பவர்கள்
ஸர்வ பூ4த ஹிதே ரக்ஷா – எல்லா
ஜீவராசிகளினுடைய நன்மையில், மகிழ்ச்சியில் இன்பம் காண்பவர்கள். இது சந்நியாஸ ஆஸ்ரமத்தின் விசேஷமான குணம். இது
அகிம்சையை குறிக்கின்றது. பிறரை
மகிழ்வித்து தான் மகிழும் மனதை உடையவர்கள்
இப்படிபட்டவர்கள் எல்லா உயிர்களிடத்திலும், எல்லா சூழ்நிலைகளிலும், எல்லா அனுபவங்களிலும் ஒரே மனநிலையோடு இருப்பார்கள், சமமான பாவனையோடு இருப்பார்கள். இரண்டு காரணங்களினால் இவ்வாறு சமபுத்தி உடையவனாக இருக்க முடிகின்றது. அவைகள் ஒன்று அதிஷ்டானத்தைப் பற்றிய விவேகம், மற்றொன்று நாம-ரூபத்தில் உள்ள வைராக்கியம்
இந்த மூன்று குணங்களும் உடையவர்களே நிர்குண
பக்தர்கள் என்று பகவான் கூறி இருக்கிறார்.
இப்படிபட்ட குணங்களுடன் யார் மேலே
கூறப்பட்ட நிர்குண பிரம்மத்தின் ஸ்வரூபத்தை தியானம் செய்து உபாஸிக்கின்றார்களோ
தே ப்ராய்னுவந்தி மாமேவ – அவர்கள்
என்னையேதான் அடைகிறார்கள். அதாவது நிர்குண பிரம்மத்தையே அடைகிறார்கள்.
நிர்குண பக்தி செலுத்துவது மிகவும் கடினம்
என்று சொல்வதற்கு காரணம் இந்த நிலையை அடைவதற்கு அதிக முயற்சி செய்ய வேண்டும் என்று
தெரிந்து கொள்ள வேண்டும். கடினமான செயலை செய்வதற்கு அதற்கேற்ற தகுதியிருக்க
வேண்டும். கடும் முயற்சிக்கு தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இது மிகவும் சூட்சுமமாக இருப்பதாலும் மிகக்
கடினமாக இருக்கும் என்று கூறப்படுகிறது அதிக
தடைகள் உள்ளதாக இருந்தாலும் மிகக் கடினம் என்று கூறப்படுகிறது.
क्लेशोऽधिकतरस्तेषामव्यक्तासक्तचेतसाम्
अव्यक्ता हि गतिर्दुःखं देहवद्भिरवाप्यते ॥ 5 ॥
தேஷாம் – அந்த நிர்குண
பக்தர்களுக்கு
அவ்யக்த ஆஸக்த சேதஸாம் – உருவமற்ற,
வெளித்தோற்றத்திற்கு வராத தத்துவத்தில் மனதை பொருத்தியவர்களுக்கு
அவ்யக்தா க3தி – நிர்குண தியானத்தில்
தொடர்ந்து இருத்தல், அதாவது சிரவணம், மனனம், நிதித்யாஸனம் ஆகியவற்றை தொடர்ந்து செய்வது
அதி4கதரஹ க்லேஶஹ – மிக அதிக
கடினமானது
துஹ்க2ம் தேஹவத்3பி4 அவாப்யதே – சரீரத்தில்
அபிமானம் உடையவர்களுக்கு மிகுந்த சிரமத்துடன் அடையப்படுகிறது. சரீர
அபிமானமற்றவர்களுக்கு இதே முயற்சி சுகமாக இருக்கும்
விசாரம் – தேஹவத்3பி4 – சரீர அபிமானம்
ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு உலகத்தில் வாழ்ந்து
கொண்டிருப்பார்கள். ஒவ்வொருவரும் ஏதாவது ஸ்ருஷ்டி செய்துக் கொண்டு அதிலேயே
மகிழ்ந்து கொண்டு இருப்பார்கள். நிர்குண பிரம்மமானது அதி சூட்சுமமானது, தேகமற்றது.
எனவே தேக அபிமானிகளால் இதை கிரகிக்க முடியாது.
இதுவே நிர்குண பிரம்ம தியானத்திற்கு தடையாகவும், அதில் தொடர்ந்து
இருப்பதற்கு கடினமாகவும் இருக்கிறது. ஒவ்வொரு இந்திரியங்களிலிருந்து அபிமானத்தை
எடுத்துவிடுவதுதான் ஆன்மீக பாதை. பிறகு முழுவதுமாக சரீரத்திலிருந்து அபிமானத்தை நீக்கிவிட
வேண்டும்.
ये तु सर्वाणि कर्माणि मयि संन्यस्य मत्परः ।
अनन्येनैव योगेन मां ध्यायन्त उपासते ॥ 6 ॥
நான்கு சொற்களால் விஶ்வரூப பக்தனை பகவான்
வர்ணிக்கிறார்
யே து – ஆனால் எவர்கள்
ஸர்வாணி கர்மாணி மயி ஸன்யஸ்ய – அனைத்து
செயல்களையும் ஈஸ்வரனான என்னிடத்தில் அர்ப்பணம் செய்பவர்கள்
கர்ம சந்நியாஸம் என்பது செயலையே செய்யாமல்
இருத்தல் அல்லது செய்த செயலின் பலனை எடுத்துக் கொள்ளாதிருத்தல், மக்களுக்கு சேவை
செய்தல். இந்த ஸ்லோகத்தில் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டியது, எல்லா செயல்களையும்
பகவானுக்கு செய்கின்ற வழிபாடாக நினைத்து செய்வதாக குறிக்கின்றது. செயல்களை செய்தல், செய்த செயலின் பலனை
அனுபவித்தல் என்று இருவகை இருக்கின்றது. செய்கின்ற செயல்களனைத்தும் இறைவழிபாடாக
அமைய வேண்டும்.
மத்பரா: - என்னை (ஈஸ்வரனை) அடைவதையே லட்சியமாக கொண்டவர்கள், அதாவது சாத்தியமும், சாதனமும் பகவானாகவே
இருக்கின்ற நிலை.
அனன்யேனவை யோகே3ன மாம் த்4யாயந்த – வேறெங்கும்
மனதை சிதறவிடாமல் ஒருமுகத்துடன் என்னை தியானம் செய்து கொண்டிருப்பவர்கள்
அனன்யேன ஏவ யோகே3ன மாம் உபாஸதே – தனியே
ஆலம்பனமெதுவும் இல்லாமல் பார்க்கும் அனைத்தும் நானாகவே இருக்கிறேன் என்று
வழிபடுபவர்கள், பக்தி செலுத்துபவர்கள்
மேற்கூறிய வகையில் பக்தி செலுத்துபவர்களே
விஶ்வரூப பக்தர்கள் என்று அறிந்து கொள்ள வேண்டும்.
तेषामहं समुद्धर्ता मृत्युसंसारसागरात् ।
भवामि नचिरात्पार्थ मय्यवेशितचेतसाम् ॥ 7 ॥
பார்த2 – ஹே அர்ஜுனா!
தேஷாம் – அவர்கள்,
விஶ்வரூப பக்தர்கள்
மயி ஆவேஶித சேதஸாம் – விஶ்வரூபமான
என்னிடத்தில் ஈடுபாடுடைய மனதை உடையவர்கள்
ம்ருத்யு ஸம்ஸார ஸாகராத் – மரணத்துடன்
கூடிய சம்சாரம் என்கின்ற கடலில் மூழ்கியிருக்கும் இத்தகைய பக்தர்களை
நசிராத் – விரைவில்
அஹம் ஸமுத்3த4ர்தா பவாமி –
ஈஸ்வரனாக இருக்கின்ற நான் நன்கு உயர்த்தி விடுவேன். கரையேற்றி விடுவேன், பிறவிப்
பெருங்கடலை கடக்க உதவி செய்வேன்
இந்த நிலையிலிருந்து நிர்குண பக்தி செய்யும்
முயற்சிக்கு தகுதிபடுத்தி அதை தொடர வைப்பேன்.
मय्येव मन आधत्स्व मयि बुद्धिं निवेशय ।
निवसिष्यसि मय्येव अत ऊर्ध्वं न संशयः ॥ 8 ॥
உன்னுடைய மனதை என்னிடத்திலேயே வைப்பாயாக! நிலை
நிறுத்துவாயாக! என்னிடத்தில் உன்னுடைய புத்தியையும் வைப்பாயாக! மனதில் இருக்கும்
விருப்பு-வெறுப்பை நீக்கினால்தான் ஈஸ்வரனிடம் மனதை ஈடுபடுத்த முடியும். புத்தியில் இருக்கின்ற குறை மோகம் ( எதையுமே
தவறாக புரிந்து கொள்ளுதல் ) இது நீங்கினால்தான் பகவானை நினைக்க முடியும். இவையிரண்டும் விவேக, வைராக்கியத்தினால்தான்
நீக்கப்படும். ஈஸ்வரனை பற்றிய அறிவு இதற்குத் தேவை என்பது தெளிவாகின்றது.
மனது ஒன்றுக்கு மதிப்பு கொடுக்கும், புத்தி வேறொன்றிற்கு மதிப்புக் கொடுக்கும். இவையிரண்டும் ஒன்றாக இருந்தால்தான் பகவானை
மனம், புத்தியினால் நினைத்துக் கொண்டிருப்போம். அதற்குப் பிறகு என்னிடத்திலே
இருப்பாய், வசிப்பாய். இதில் சிறிதும் சந்தேகமில்லை.
अथ चित्तं समाधातुं न शक्नोषि मयि स्थिरम् ।
अभ्यासयोगेन ततो मामिच्चाप्तुं धनञ्जय ॥ 9 ॥
விஶ்வரூப பக்தனாகவும் இருக்க முடியாவிட்டால்
இஷ்ட தேவதையிடத்தில் பக்தியை செலுத்தி உன் முயற்சியை தொடங்கு என்று இந்த
ஸ்லோகத்தில் கூறுகிறார். விஶ்வரூப பக்தனாக
இருப்பதற்கு ஈஸ்வரன் பற்றிய அறிவு இருக்க வேண்டும். ஈஸ்வரன் இந்த உலகத்திற்கு உபாதான காரணமாக
இருக்கின்றார் என்பதே அந்த அறிவு. தானே
இந்த உலகமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறார் என்ற அறிவு. இவன் ராக-துவேஷம் நீங்கியவனாக இருக்க
வேண்டும். விருப்பு, வெறுப்பற்ற மனதை
உடையவனாக இருக்க வேண்டும்.
மேற்சொன்ன இரண்டு தகுதிகள் இல்லாதவன்தான் இந்த
இஷ்டதேவதா வழிபாடு செய்ய வேண்டும். இந்த
பக்தன் தனக்கு விருப்பமான ஒரு தெய்வத்தின் நாம-ரூபத்தை வழிபட வேண்டும். அந்த நாமத்தை ஜபம் செய்து கொண்டிருப்பார்கள்,
பிரார்த்தனை செய்வார்கள். அவர் உறையும் கோவிலுக்கு சென்று வருதல், அந்த நேரத்தில்
பக்தியுடன் இருப்பார்கள். ஆழ்வார்கள்,
நாயன்மார்கள் இதற்கு உதாரணம். இதையே பகவான் அப்யாஸயோகம் என்று இந்த ஸ்லோகத்தில்
குறிப்பிடுகின்றார்.
தனஞ்ஜய – அர்ஜுனா!
அத2 சித்தம் மயி ஸ்திரம் ஸமாதா4தும் – ஒருவேளை மனதை
விஶ்வரூபமாக இருக்கின்ற என்னிடத்தில் நிலையாக, உறுதியாக நிறுத்தி வைப்பதற்கு
ந ஶக்னோஷி –
முடியாவிட்டால்
உன்னால் விஶ்வரூப பக்தனாக இருக்க
முடியாவிட்டால், அனைத்தையும் ஈஸ்வரனாக பார்க்கும் மனமில்லாவிட்டால்
தத - அப்போது
அப்யாஸயோகம் – இஷ்ட தேவதா
வழிபாட்டை மேற்கொண்டு, ஏதாவது ஒரு தெய்வ நாம-ரூபத்தை மீண்டும் மீண்டும் மனதில்
கொண்டு வந்து நிலைநிறுத்த பழக வேண்டும்.
ம்ம் இச்சா ஆப்தும் – விஶ்வரூபமான
என்னை அடைவதற்கு விரும்புவாயாக,
अभ्यासेऽप्यसमर्थोऽसि मत्कर्मपरमो भव ।
मदर्थमपि कर्माणि कुर्वन्सिद्धिमवाप्स्यसि ॥ 10 ॥
இந்த ஸ்லோகத்தில் சொல்லப்பட்டிருக்கும்
இரண்டாவது நிலை பக்தியானது மேலான கர்மயோகியாக இருக்க வேண்டும். எதனால் ஒருவனால்
மூன்றாவது நிலை பக்தனாகவும் (தியான யோகி) இருக்க முடியவில்லை என்று சிந்தித்து
பார்க்கும் போது, ஒருவனுக்கு சத்துவ குணம் மேலோங்கி இருக்க வேண்டும் ஆனால் ரஜோ குணம் மேலோங்கி இருக்கக் கூடாது இப்படிபட்டவர்கள் செயலை செய்து
கொண்டிருந்தாலும் அதன் பலனை எதிர்ப்பார்க்க மாட்டார்கள். இந்த நிலை பக்தன் நிஷித்த கர்மத்தையும், காம்ய
கர்மத்தையும் செய்ய மாட்டார்கள்.
அப்4யாஸே அபி அஸமர்த2 அஸி – அப்யாஸயோகம்
செய்வதில் கூட திறமை அற்றவனாக இருந்தால்
மத்கர்ம பரமஹ ப4வ –உடலளவில்
செய்யும் எல்லா செயல்களையும் எனக்காகவே செய்பவனாக இரு. செயலினால் விளையும் பலனை எனக்கு அர்ப்பணம்
செய்து விடு.
மத3ர்த2ம் அபி கர்மாணி குர்வன் – எனக்காகவே
எல்லா செயல்களையும் செய்து கொண்டே இருந்தாலும்
ஸித்3த4ம் அவர்பஸ்யஸி – அதற்கேற்ற
பலனை அடைவாய்.
अथैतदप्यशक्तोऽइस् अर्तुं मद्योगमाश्रितः ।
सर्वकर्मफलत्यागं ततः कुरु यतात्मवान् ॥ 11 ॥
இதில் சொல்லப்பட்ட முதல் நிலை பக்தனுக்கு
ஆசைகள் அதிகமாக இருந்தாலும் வைராக்கியத்திலும் ஆசை இருக்கின்றது. இவனுக்கு காம்ய கர்மங்களை செய்யலாம் என்ற
பகவான் அனுமதி அளிக்கின்றனர். நாம்
ஆசைப்பட்டு செய்யும் செயல்களினால் இன்பம் கிடைக்கும். மனத்தூய்மையும் கிடைக்கும். மனத்தூய்மை அடைவதற்கு பகவான் ஒரு நியமத்தை
கூறுகிறார். இந்த நியமும் தர்மத்திற்கு உட்பட்டதாக
இருக்க வேண்டும். அதர்மத்தின் மூலம்
அனுபவிக்கும் இன்பங்கள் பாவத்தைக் கொடுக்கும்.
மனத்தூய்மையை கொடுக்காது. இந்த
ஸ்லோகத்தில் நாம் அடையும் பலனை எனக்கு அர்ப்பணம் செய்து விட்டு அனுபவித்துக் கொள்
என்று பகவான் சொல்கிறார். என்னுடைய பிரசாதமாக நினைத்து அனுபவித்துக் கொள்.
श्रेयो हि ज्ञानमभ्यासाज्ज्ञानाद्धयानं विशिष्यते ।
ध्यानत्कर्मफलत्यागस्त्यागाच्छन्तिरनन्तरम् ॥ 12 ॥
இந்த ஐந்து பக்தர்களில் ஏதோ ஒரு நிலை பக்தனாக
இருப்பது நல்லது. தகுதியில்லாமல் மேலான
பக்தி நிலையை பயிற்சி செய்வதை விட நமக்கு எந்த நிலை பக்தி செலுத்துவதற்கு தகுதியாக
இருக்கின்றோம் என்று பார்த்து புரிந்து கொண்டு அந்த நிலை பக்தனாக இருப்பது
உத்தமம்.
ஶ்ரேயோ ஹி ஞானம் அப்4யாஸாத் – அறிவுபூர்வமாக
இல்லாத தியானத்தைக் காட்டிலும் ஞானம் உயர்ந்தது.
விவேகத்துடன் கூடிய தியானம் உயர்ந்தது. விவேகமில்லாத தியானத்தைக்
காட்டிலும், அறிவை அடைவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
ஞானாதி தியானம் விஶிஷ்யதே – வெறும்
அறிவைக் காட்டிலும், விவேகத்துடன் கூடிய தியானம் சிறந்தது.
தியானத் கர்ம பல தியாகஹ – தியானத்தைக்
காட்டிலும் கர்மத்தின் பலனை பகவானுக்கு அர்ப்பணம் செய்து அனுபவிப்பதே சிறந்தது.
த்யாகா3த் அனந்தரம் ஶாந்தி – கர்மபல
அர்ப்பணம் செய்வதன் மூலமாக உடனேயே மேலான அமைதிக் கிடக்கிறது.
இத்துடன் பக்தி என்கின்ற சாதனத்தைப் பற்றிய
விளக்கம் முடிவடைகின்றது. அர்ஜுனன் கேட்ட
கேள்விக்கு பதில் முடிவடைகின்றது.
अद्वेष्टा सर्वभूतानां मैत्रः करूण एव च ।
निर्ममो निरहङ्कारः समदुःखसुखः क्षमी ॥ 13 ॥
13-20 வரை உள்ள
ஸ்லோகங்களில் பரா பக்தனின் லட்சணங்களை கூறியிருக்கிறார். இவர்கள் சாதகர்கள் அல்ல சித்தர்கள். கடைசி நிலை பக்தியான நிர்குண
பக்தி நிலையை கடந்து ஜீவன் முக்தனாக இருப்பவர்களை பற்றி பகவான் கூறியிருக்கிறார். பகவத்
கீதை 2வது அத்தியாயத்தில் ஸ்திதப்ரக்ஞன் என்றும், இங்கு பரா-பக்தன் என்றும் 14வது
அத்தியாயத்தில் குணாதீதன் என்ற சொல்லால் மூன்று குணங்களை கடந்தவனின் லட்சணங்களை
வர்ணிப்பார். சில பண்புகளை 13,16 அத்தியாயங்களில் கூறியிருக்கிறார். இவைகளை சாதகன் பின்பற்ற வேண்டியவைகள்.
ஞானியின் உள்மனதை மனநிலைகளை பகவான் இங்கு விவரித்திருக்கின்றார். இதை
விளக்குவதற்கு அவசியமாக காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றது.
- சரியான அறிவை
கொடுப்பதற்காக
- நமக்கு
உற்சாகத்தை கொடுப்பதற்காக, முமுக்ஷுத்வத்தை வளர்ப்பதற்காக
- ஜீவன்
முக்தர்களின் சுபாவமே சாதகர்களுக்கு சாதனமாக அமைகின்றது. இவைகளை முயற்சி செய்து அடைய வேண்டும்.
- நாம் எந்த
நிலையில் இருக்கின்றோம் என்பதையும், மன வளர்ச்சியின் அளவையும் கண்டுபிடிக்க
உதவும்
- இந்த லட்சணங்களை
மற்றவர்களை பரிசோதிக்க பயன்படுத்தக் கூடாது.
இதனால் நம்மிடத்தில் உள்ள குறைகளை கண்டுபிடிக்கக் கூடாது. இந்த முயற்சியில் ஈடுபடுவது வீணானது,
காலத்தைத்தான் வீணாக்குவோம்.
- நமக்கு குற்ற
உணர்வு வரக்கூடாது. இந்த லட்சணங்களை அடைவதற்கு பெருமுயற்சி செய்திருப்பார்கள்
என்று எண்ணிப்பார்த்து நாமும் முயற்சி செய்வோம் என்று உறுதி கொள்ள வேண்டும்.
அத்வேஷ்டா ஸர்வ பூ4தானாம் – அனைத்து ஜீவராசிகளையும் வெறுக்காதவன்.
வெறுப்புணர்வு என்பதே அவனிடத்தில் அறவே கிடையாது. இதுவே சுபாவமாகவே இருக்கும். பொதுவாக வெறுப்புணர்ச்சியானது யாராவது நமக்கு உடலளவில் அல்லது மனதளவில்
துன்பத்தைக் கொடுக்கும்போது வருவது. எங்கு
ராகம் இருக்கிறதோ அங்குதான் துவேஷமும் இருக்கும்.
எந்த இடத்தில் வேற்றுமை இருக்கின்றதோ அல்லது எனக்கு வேறானது என்று
நினைக்கும் போது துவேஷம் வருகின்றது.
ஞானிக்கு பற்றுக் கிடையாது, மற்றவர்கள் கொடுக்கும் துன்பம் தன்னுடைய
அகங்காரத்திற்குத்தான் என்று எடுத்துக் கொள்வான். எல்லாமும் அவனாகவே நினைப்பதால்
அவனால் யாரையும் வெறுக்க முடியாது. வேற்றுமை புத்தி அறவே கிடையாது.
மைத்ரஹ - எல்லா உயிரினங்களிடத்திலும்
நட்புடனும், அன்புடனும் இருப்பான்.
யாரிடமும் எதையும் எதிர்பார்க்காமல் நட்புணர்வோடு இருப்பான்.
பொதுவாக நட்பானது பொருள், பதவி, புகழ், அறிவு இவைகள் இருந்தாலும் சமமாக இருக்கும்
இருவர்களிடையேதான் நட்பு இருக்கும், ஆனால் ஞானி இதில் விதிவிலக்காக இருக்கின்றான்.
கருணஹ ஏவ ச – மேலும் கருணையுடனும் இருப்பான்
பொதுவாக ஆசைதான் நம்மை செயலில் ஈடுபடுத்தும், ஞானியிடத்து ஆசைகள் அறவே இல்லையென்றாலும்
செயலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பான்.
உபதேசம் செய்வது, வேதாந்த விளக்க நூல் எழுதுவது போன்ற செயல்களில்
ஈடுபட்டுக் கொண்டு இருக்கலாம். இதற்கு
அவர்களிடத்து உள்ள கருணைதான் காரணம்.
துன்பப்படும் உயிர்கள் மீது கருணையினால், அந்த துன்பத்தை நீக்குவதற்கான
வழியை உபதேசிப்பார்.
நிர்மமஹ - மமகாரமற்றவன், என்னுடையது என்று
எதுவும் இல்லாதவன், என்னுடையது என்ற புத்தியில்லாதவன்
நிரஹங்காரஹ – அகங்காரமற்றவன்
பொதுவாக எல்லோருக்கும் என்னுடையது என்று தனக்கு உரிமையானவற்றை கூறுவார்கள்.
இதையே மமகாரம் என்று அழைக்கப்படுகின்றது.
உடலான அனாத்மாவில் நான் என்ற புத்தி, அபிமானம் உடையவன், உடலோடு
சம்பந்தப்பட்ட அனைத்திலும் என்னுடையது என்ற மமகாரத்தை கொண்டிருப்பான், எது என்னுடையது என்பதில் ஏதாவது நஷ்டமோ, பிரிவோ
வரும்போதுதான் துயரத்தை அனுபவிக்கின்றோம். மமகாரம் பெருக துன்பமும் பெருகும் ஞானியின் மமகாரம் மனதுக்குள் இருக்கும் ஆனால்
வெளிப்பார்வைக்கு தெரியாது. ஞானி
என்னுடையது என்று மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் எந்தவொன்று அழிந்தாலும், அல்லது
தொலைந்தாலும் அதனால் துயரமடையமாட்டான். மனதுக்குள் நடைபெறும்
மாற்றம் அகங்காரம் இல்லாத நிலையாகும். வெளியில் விவகாரம் செய்யும்போது நான் என்ற அகங்காரத்தை கையாண்டு கொண்டு
இருப்பான். ஆனால் நான் என்ற சொல்லால் அவன்
ஆத்மாவைத்தான் குறிக்கின்றான்.
ஸமது3:க2ஹ – சுக-துக்கங்களை சமமாக பாவிக்கும் மனநிலையோடு இருப்பான்
சுகத்தை எதிர்ப்பார்ப்பதாலும், துயரத்தை தவிர்ப்பதாலும் அவைகள் இன்னும்
அதிகமாகும்
க்ஷமீ – மற்றவர்கள் செய்யும் தவறை மன்னிக்கும் குணத்தையுடையவன் பொறுமையுடன்
இருப்பவன்
நமக்கு துன்பம் கொடுப்பவர்களின் செயலை
பார்க்காமல் அந்த செயலுக்கு பின்னேயுள்ள காரணத்தை பார்க்க வேண்டும்.
सन्तुष्टः सततं योगी यतात्मा दृढनिश्चयः ।
मय्यर्पितमनोबुद्धिर्यो मद्भक्तः स मे प्रियः ॥ 14 ॥
ஸந்துஷ்டஹ ஸததம் – எப்பொழுதும்
எல்லா விஷயங்களிலும் மனநிறைவுடன் இருப்பான், திருப்தியுடன் இருப்பான். இருப்பதில்,
கிடைத்ததில் போதுமென்ற மனமுடையவன், திருப்தியுடன் இருப்பவன்.
போதாது என்ற குணம் பொருளில், அன்பில், அறிவில்
இருந்து கொண்டிருக்கும். மனநிறைவின்மைதான். இதுதான் ஒருவனை செயலில்
ஈடுபடுத்தும். ஞானி போதும் என்ற மனதுடன்
செயல்களில் ஈடுபடுவான்.
யோகீ – எப்பொழுதும்
யோகியாக இருப்பான்.
இங்கு யோகி என்ற சொல்லுக்கு எண்ணங்களை ஆளுபவன்,
மனதை கருவியாக மாற்றியவன். சுதந்திரமாக செயல்படுபவன், மனதை கருவியாக மாறுவதற்கு விடாமல் யோக அப்யாஸம் செய்திருப்பான். பலர் யோகியை சித்தனாக கருதுவார்கள். அவனிடம் பல
சித்திகள் மட்டும்தான் இருக்கும்.
சித்திகளை விலக்கி மோட்சத்தை அடைந்தவன்தான் ஞானி. மன சமாதானம் அடைந்தவன்
யோகி என்று பகவான் சங்கரர் பொருள் கூறுகின்றார்.
யதாத்மா – ப்ரக்ருதியை
வென்றவன் தன்னிடத்திலுள்ள தவறான பழக்க வழக்கங்களை வென்றவன்.
ஒருவனுடைய இயல்பான
குணத்தை, சுபாவத்தை மாற்றுவது மிக கடினம். சில குணங்கள் பிறவியிலிருந்து
இருக்கும், சில குணங்கள் சூழ்நிலைகளை பொறுத்தும், நம்மை
சுற்றியிருப்பவர்களிடமிருந்தும் வந்திருக்கலாம்.
சுபாவம் நல்லதாகவும் இருக்கலாம், கெட்டதாகவும் இருக்கலாம். மனிதர்களின்
புலன்களிலும், அந்தகரணத்திலும் கெட்ட சுபாவங்கள் இருக்கலாம், இவைகளை முயற்சி
செய்து நீக்கியிருப்பான் ஞானியானவன். நம்மிடத்துள்ள கெட்ட சுபாவங்களை முதலில்
கண்டுபிடிக்க வேண்டும். பிறகு அவைகளை நீக்கி விட வேண்டும்.
த்ருட நிஶ்சய – திடமான
முடிவெடுத்திருப்பான்.
நான் என்ற சொல்லுக்கு உண்மையான பொருளை திடமாக
புரிந்து கொண்டு இருப்பான். இந்த ஜகத்தின்
மித்யாத்வத்தை திடமாக புரிந்து கொண்டிருப்பான்.
மய்யர்பிதா மனோ புத்தி: - சத்தியமான
பரமாத்வான என்னிடத்தில் மனதையும், புத்தியையும் பொருத்தியவன். சத்திய வஸ்துவான
பிரம்மத்தில் மனதை நிலை நிறுத்தியவன்.
யஹ மத் பக்தஹ – இப்படிபட்ட
என்னுடைய பக்தனே
மே ப்ரியஹ – எனக்கு
பிரியமானவன்
இப்படிபட்ட லட்சணங்களை உடைய ஞானியாக இருக்கின்ற
பக்தனே எனக்கு மிகவும் பிரியமானவன்.
य्स्मन्नोद्विजते लोको लोकान्नोद्विजते च यः
हर्षामर्षभयोद्वेगैर्मुक्तो यः स च मे प्रियः ॥ 15 ॥
யஸ்மாத் லோகஹ – இந்த
ஞானியிடமிருந்து உலகம்
ந உத்விஜதே –
துயரமடைவதில்லை, பாதிக்கப்படுவதில்லை, பயப்படுவதில்லை
யஹ லோகான் – எந்த பக்தன்,
ஞானி உலகத்திடமிருந்து
ந உத்விஜதே - துயரமடைவதில்லை,
பாதிக்கப்படுவதில்லை, பயப்படுவதில்லை.
ஹர்ஷஹ – அதிக மகிழ்ச்சியுடன் இருத்தல், எல்லையில்லா
ஆனந்தத்துடனும் இருத்தல்
அமர்ஷஹ – 1. மற்றவர்களின் உயர்வை
சகித்துக் கொள்ளாத குணம், 2. மற்றவர்களிடம் இருக்கும் குறைகளையும்
சகித்துக் கொள்ளாத குணம்
பய – பய உணர்ச்சி
உத்3வேக3 – மனசோர்வு,
யஹ முக்த: – எவனொருவன் மேற்கூறிய
நான்கு குணங்களிலிருந்து விடுதலையாகி இருக்கின்றானோ
ஸஹ ச மே ப்ரியஹ – அவனே எனக்கு
பிரியமானவன்
ஞானியினால் உலகம் துன்பத்தை அடையாது, உலகத்திடமிருந்து ஞானியும் துன்பத்தை அடைய மாட்டான். ஞானியினுடைய மனம் மிகவும் மென்மையாகவும் அதே சமயத்தில் மிகவும் உறுதியாகவும் இருக்கும் என்று பகவான்
குறிப்பிடுகிறார். வஜ்ரத்தை போன்ற
கடினமானதாகவும், மலரைப் போன்று மென்மையாகவும் பராபக்தனின் மனம் இருக்கும் என்று
பகவான் கூறுகின்றார். அதாவது
மற்றவர்களிடம் விவகாரம் செய்யும்போதும், பழகும் போதும், மிகவும் மென்மையாக
இருப்பான். மற்றவர்களின் சொற்களாலும்,
செயல்களாலும் மனதால் பாதிக்கப்படாத அளவுக்கு பாறை போன்ற கடினமாக இருக்கும்.தானும் இந்த உலகத்தைக் கண்டும் பயப்படமாட்டான், யாருக்கும் பயத்தை உண்டு பண்ண மாட்டான், ஹிம்சை செய்ய மாட்டான். நம்மையே துன்புறுத்திக் கொள்ளவும் கூடாது. இந்த நிலையானது நாம் செய்கின்ற செயலின்
விளைவாகத்தான் வரும். நாம் எதை மற்றவர்களுக்கு கொடுக்கின்றோமோ அதுதான்
உலகத்திடமிருந்து நமக்கு கிடைக்கும். உலகத்திலுள்ள எதுவும் ஞானிக்கு அதிக
மகிழ்ச்சியை கொடுக்காது. மனம் அளவுக்கு மீறிய சந்தோஷத்தில் இருக்கும்போது
புத்தியானது வேலை செய்யாது. ஞானிக்கு
பகைவனே இருக்க மாட்டான். ஞானி இரண்டுவித பயங்களான மரண பயம், துன்பம் வந்துவிடுமோ என்ற பயம் ஆகியவற்றிலிருந்தும் விடுபட்டிருக்கின்றான். மேலும் மற்றவர்களின் உயர்வு, மற்றவர்களிடத்திலுள்ள குறைகள் ஆகியவைகளினால் பாதிக்கப்படமாட்டான். எந்த சூழ்நிலையிலும் மனசோர்வடையமாட்டான்.
अनपेक्षः शुचिर्दक्ष उदासीनो गतव्यथः ।
सर्वारम्भपरित्यागी यो मद्भक्तः स मे प्रियः ॥ 16 ॥
அனபேக்ஷஹ – எதையும்,
யாரையும் சார்ந்தில்லாதவன்.
தன்னுடைய
மனநிறைவுக்காக எதையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லாதவன். தான் செய்கின்ற செயல்களுக்கு மற்றவர்களின்
பாராட்டையும், அங்கீகாரத்தையும் எதிர்ப்பார்ப்பதில்லை.
நாம் பயன்படுத்தும் பொருட்களை அத்தியாவசியமானது,
ஆடம்பரமானது என்று இரண்டாக பிரிக்கலாம். அத்தியாவசியமான பொருட்களை சார்ந்திருக்க
வேண்டியிருக்கிறது. ஆடம்பர பொருட்களை
சார்ந்திருக்க வேண்டியதில்லை. ஞானிக்கு
இந்த ஸ்தூல, சூட்சும உடல்களையே ஆடம்பரமாக கருதுகின்றான். எனவே இவைகள் இல்லாமை
அவனுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.
ஶுசி – தூய்மையாக
இருப்பவன்,
ஞானி தன்னுடைய உடல், உடைமைகள், வசிக்குமிடம், சுற்றுப்புறம் ஆகியவற்றை
தூய்மையாக வைத்திருப்பான். இது அவர்களின் சுபாவமாகவே இருக்கும். மனமும்,
புத்தியும் தூய்மையாகவே இருக்கும். அவனிடத்தில் உள்ள ஆத்மஞானமே அவனை இவ்வாறு
இருக்க வைக்கும்.
தக்ஷஹ – திறமையுடன்
இருப்பவன், சுயநலமின்றி நேர்மையாக எடுத்துக் கொண்ட செயலை முடித்துவிடுவான். கூர்மையான அறிவை உடையவன்.
உதாஸீனஹ –
எல்லோரிடத்திலும் சமமாக இருப்பவன், எல்லோரையும் சமமாக பாவிப்பவன், நடுநிலையில்
இருப்பவன். ராக-துவேஷம் இல்லாததால்
இவ்வாறு இருக்க முடிகின்றது. எப்பொழுதும்
தர்மத்தின் பக்கமே இருப்பான்.
க3தவ்யத2ஹ – மன
அழுத்தமில்லாதவன், மனத்துயரத்திலிருந்தும், மனச்சோர்வில் இருந்தும் விடுபட்டவன்,.
குற்றவுணர்வு அற்றவன். அதாவது இதை ஏன்
செய்தேன் அல்லது ஏன் செய்யவில்லை என்று துயரப்படமாட்டான்.
ஸர்வ ஆரம்ப4 பரித்யாகீ3 – அனைத்து
செயல்களையும் விட்டுவிட்டவன். திட்டமிட்டு எதையாவது செய்ய வேண்டும் என்று எண்ண
மாட்டான்.
பொதுவாக மனிதர்கள் எவ்வளவு பொருள்
சேர்த்திருந்தாலும், புகழை அடைந்தாலும் அத்தோடு நின்றுவிடாமல் மென்மேலும் அதை
பெருக்கி கொள்வதிலே செயல்பட்டு கொண்டிருப்பார்கள். இருப்பதைக் கொண்டு மனநிறைவை அடையவே
மாட்டார்கள். எனவே மேற்சொன்ன குணங்களையுடைய பராபக்தனே எனக்கு
பிரியமானவன் என்று பகவான் கூறுகிறார்.
यो न ह्रष्यति न द्वेष्टि न शोचति न काङक्षति ।
शुभाशुभपरित्यागी बक्तिमान्यः स मे प्रियः ॥ 17 ॥
ஞானியானவன் இருமைகளால் தாக்கப்படுவதில்லை.
உடலுக்கு வெளியே உள்ள இருமைகள், உள்ளே இருக்கும் இருமைகளையும் சமமாக
பாவிப்பான். அவைகளால் பாதிக்கப்படாமல் இருப்பான்.
யஹ ந ஹ்ருஷ்யதி – இந்த
பராபக்தன் சுகத்திலும், இன்பத்திலும் மூழ்கி இருப்பதில்லை.
ந ஶோசதி – துயரத்திலும்
மூழ்குவதில்லை
ந த்வேஷ்டி, ந காங்க்ஷதி – எதையும்
வெறுப்பதில்லை, எதையும் விரும்புவதில்லை, வருவதையெல்லாம் ஒரே மனநிலையோடு
அனுபவிப்பான்.
ஶுப4 அஶுவ பரித்யாகீ3 –
பாவ-புண்ணியங்களை துறந்தவன். இவைகளை கொடுக்கும் செயல்களை துறந்தவன். நான் இந்த
செயலை செய்கின்றேன் என்ற மனப்பான்மையின்றி செய்கின்றான்.
செயலினால் வரும்
பாவ-புண்ணியங்கள் சங்கல்பத்தின் அடிப்படையில் இருக்கும். இவையிரண்டும் ஒருவனை சம்சாரத்திலேதான்
வைத்திருக்கும். புண்ணியத்தால் வரும்
சுகத்தை தியாகம் செய்தால் அதுவே மனத்தூய்மையை கொடுக்கும். இப்படிபட்ட பக்தனே
எனக்கு பிரியமானவன்.
समः शत्रौ च मित्रे च तथा मानापमानयोः ।
शीतोष्णसुखद्खेषु समः सङ्गविवर्जितः ॥ 18 ॥
ஸமஹ ஶத்ரௌ ச மித்ரே – ஞானி பகைவர்களிடத்திலும்,
நண்பர்களிடத்திலும் சமமாக இருப்பான்.
இவனுக்கு யாரிடமும் நட்பும் இல்லை, பகையுணர்வும் இல்லை. மற்றவர்கள் இவனை நண்பனாக நினைத்து
பழகினாலோ அல்லது பகையுணர்ச்சியோடு இருந்தாலோ அதனால் பாதிக்கப்படமாட்டான்.
ததா2 மானாபமானயஹ – அதேபோல
மான-அவமான விஷயத்திலும் சமமாக இருப்பான். தன்னை மதிப்பவர்கள், ஞானத்தை
மதிக்கின்றார்கள், அவமதித்தால் ஞானத்தை அவமதிக்கின்றார்கள் என்று நினைத்துக்
கொள்வான்.
ஶீதோஷ்ண ஸுக2து3:கே2ஷு ஸமஹ – தட்ப-வெப்பம்,
சுக-துக்கம் இவைகளில் சமநிலையோடு இருப்பான். குளிரானது சில சமயங்களில்
இன்பத்தையும், சில சமயங்களில் துன்பத்தையும் கொடுக்கும். உஷ்ணமானது அதேப்போன்று
சில சமயங்களில் இன்பத்தையும், சில சமயங்களில் துன்பத்தையும் கொடுக்கும். எனவே இவைகள் நிலையற்றது என்று ஞானியானவன்
உணர்ந்திருக்கின்றான்.
ஸங்க3விவர்ஜிதஹ – பற்றற்றவனாக
இருக்கின்றான். பார்க்கும் பொருட்களின்
மீது அதனுடைய உண்மை தன்மைக்கு மாறாக நினைக்கமாட்டான்.
तुल्यनिन्दास्तुतिर्मौनी सन्तुष्टो येन केनचित् ।
अनिकेतः स्थिरमतिर्भक्तिमान्मे प्रियो नरः ॥ 19 ॥
துல்ய நிந்தா ஸ்துதி – இகழ்ச்சியையும்,
புகழ்ச்சியையும் சமமாக பாவிப்பான்.
புகழ் என்ற மாயவலையில் சிக்கிவிட்டால் ஞானத்தை
அடைய முடியாது. ஞானி தன்னைப் புகழ்ந்தால் ஈஸ்வரனைதான் புகழ்கிறார்கள் என்று
நினைப்பான். புகழை நாடி போகக் கூடாது. கண்டும் ஓடக்கூடாது.
மௌனீ – அளவாக
பேசுபவன்
ஸந்துஷ்டஹ யேன கேனசித் – கிடைத்ததில்
திருப்தியுடன் இருப்பவன்.
அநிகேதஹ – தனக்கென்று
எந்த இருப்பிடமும் இல்லாதவன். சந்நியாசிக்கு மட்டும்தான் இது பொருந்தும். தன் பெயரில்
எந்த வீடும் இல்லாதவன்.
ஸ்தி2ரமதி – அடைந்த
அறிவில் நிலையாக உறுதியாக இருப்பவன்
ப4க்திமான்யே ப்ரிய நரஹ – இப்படிப்பட்ட
பக்தியுடன் கூடிய மனிதன் எனக்கு பிரியமானவன்.
பராபக்தனுடைய லட்சணங்களை பகவான் இந்த அளவுக்கு
கூறி முடித்துவிட்டார்.
ये तु धर्म्यामृतमिदं यथोक्तं पर्युपासते ।
श्रद्दधाना मत्परमा भक्तास्तेऽतीव मे प्रियाः । 20 ॥
மேலே கூறப்பட்ட இந்த தர்மமே உருவான அமுதத்தை,
உபதேசத்தை யார் பயனைக் கருதாது அனுஷ்டிக்கிறார்களோ. அவர்கள் மிகவும் சிரத்தையோடு
என்னையே மேலான கதியாகக் கொண்டு வழிபடும் பக்தர்கள். இந்த பக்தர்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்களாக
இருக்கின்றார்கள்
தொகுப்பரை
01-01 சகுண பக்தர்கள் உயர்ந்தவர்களா அல்லது நிர்குண
பக்தர்கள் உயர்ந்தவர்களா? என்ற அர்ஜுனனின் கேள்வியுடன் தொடங்கியது.
02-05 பகவானின் பதில் இந்த ஸ்லோகங்களில் கூறப்பட்டது. சகுண பக்தன் உயர்ந்தவன், நிர்குண பக்தன் என்னையே
அடைகின்றான். இந்த இரண்டு சாதனங்களும்
இரண்டு படிகள் என்று குறிப்பால் உணர்த்துகிறார். ஐந்து வகையான பக்தி நிலைகளில்
கடைசி படியானது நிர்குண பிரம்மத்தை அடைவதற்கான முயற்சியே என்று கூறியிருக்கிறார்
06-08 நான்காவது படியான விஶ்வரூப பக்தனாக இருக்க
முயற்சி செய் என்று அறிவுறுத்தினார். ஐந்தாவது படியான நிர்குண பிரம்மத்தை அடையும்
முயற்சியில் இருக்க முடியாவிட்டால் விஶ்வரூப பக்தனாக இருக்க முயற்சி செய்வாயாக
என்று அறிவுறுத்தினார்
09 மூன்றாவது படியான இஷ்ட தேவதா உபாஸனையை
பரிந்துரைக்கிறார். நான்காவது படியில்
நிற்க முடியாவிட்டால் இந்தவிதமான பக்திக்கு இறங்கி வா என்று அழைக்கின்றார்
10 இரண்டாவது நிலையாக கர்மயோகத்தை
பரிந்துரைக்கிறார். செயலில் ஈடுபடலாம்
ஆனால் அதன் பலனை ஈஸ்வரனுக்கு அர்ப்பணம் செய்துவிடு என்று கூறியுள்ளார்.
11-12 இந்த படியில் நிற்க முடியாவிட்டால், போகத்தை
அனுபவித்தலை விட முடியாவிட்டால் அவர்களுக்கு முதல்நிலை பக்தியை இவ்வாறு செய்யுமாறு
கூறியுள்ளார். இந்த நிலையில் செயலினால்
வரும் பலனை அனுபவித்துக் கொள். ஆனால் அந்த
போகத்தை இறைவனின் பிரசாதமாக நினைத்துக் கொண்டு அனுபவிக்க வேண்டும். கர்மத்தை
தர்மத்துடன் செய்ய வேண்டும்.
13-19 பரா பக்தனை வர்ணித்தார். அவனது குணங்களையும், செயல்பாடுகளையும்
விவரித்தார். இந்த பக்தன் பகவானாகவே
கருதுகின்றார். இவைகளை தெரிந்து கொள்வதால்
இந்த முயற்சியில் நம்மை உற்சாகமாக இறங்குவதற்கு தயார் படுத்தும்
20 இந்த பராபக்தனுடைய ஞானத்தின் பெருமையைக் கூறி
இந்த அத்தியாயத்தை முடிக்கப்பட்டது.
ஞானியின் சுபாவமான குணங்கள், உணர்வுகள்
இந்த குணங்களை நாம் முயற்சி செய்து அடைய வேண்டும்.
1. மைத்ரஹ - நட்புணர்வு –
எல்லோரிடமும் நட்புணர்வுடன் இருப்பான்.
2. கருணஹ – எல்லா
ஜீவராசிகளிடமும் கருணையுடன் இருப்பான்
3. ஶமஹ – சம்மாக அனைவரையும்
பார்ப்பான். எல்லா அனுபவங்களையும் சமமாக
பாவிப்பான்
4.
க்ஷமி – மன்னிக்கின்ற
குணத்தை உடையவனாக இருப்பான். பொறுத்துக் கொள்ளும் மனப்பான்மையுடன் இருப்பான்
5.
ஸந்துஷ்டி –
எல்லாவற்றிலும் போதுமென்ற மனதையுடையவனாகவும், மன திருப்தியுடனும் இருப்பான்
6.
யதா3த்மா – தன்னடக்கம்,
தீய குணங்களை மாற்றி அமைத்தவன்
7.
த்3ருட நிஶ்சயம் –
உறுதியான அறிவை உடையவன்
8.
த்3ருட ம்ருதுமனா –
திடமானதும், மென்மையான மனதையுடையவன்
9.
உலகத்திலிருந்து
துயரமடையமாட்டான், உலகத்திலும் துயரம் கொடுக்க மாட்டான்
10.
தக்ஷஹ – திறமையுடையவன்
11.
உதாஸீனன் – நடுநிலையோடு
இருப்பவன்
12.
தூய்மை – அனைத்திலும்
தூய்மையாக இருப்பான்
13.
மௌனீ – அளவுடன் பேசுபவன்
14.
பக்தன் – பக்தனாகவும்
இருக்கின்றான். தன்னையே நேசிப்பவன். நானே ஈஸ்வரன் என்ற நிலையை அடையும் போதுதான்
தன்னை முழுமையாக நேசிக்க முடியும்
ஞானியை விட்டு நீங்கும் குணங்கள், உணர்வுகள்
1. துவேஷம் – வெறுப்புணர்வு
நீங்கியவனாக இருப்பான்
2. மமகாரம் – என்னுடையது
என்கின்ற மனப்பான்மையுடன் இருக்க மாட்டான்
3. அகங்காரம் – உடலை நான்
என்று நினைக்கும் மனப்பான்மை
4. ஹர்ஷ – அதிக சுகத்தில்
மூழ்கியிருக்கமாட்டான்/
5. அமர்ஷ – மற்றவர்கள்
உயர்வில், குறைகளை சகித்துக் கொள்ள மனதை இல்லாமலிருப்பான்
6. பயம் – பயத்திலிருந்து
விடுதலையடைந்திருப்பான். (மரண பயம், துக்க பயம்)
7. உத்4வேக – மன அழுத்தம்,
மனச்சோர்வு இவைகள் இல்லாதவன்
8. அபேக்ஷா – யாரையும்
சார்ந்திருக்க மாட்டான். (மனநிறைவுக்கு)
9. ஆரம்பஹ – சுயநலமான
செயல்கள், ஏதாவது புதிய செயலில் ஈடுபட்டுக் கொண்டிருத்தல் ஆகியவற்றை
செய்யமாட்டான்.
10. த்3வந்த்வஹ –
இருமைகளிலிருந்து விடுபட்டவன்/
ஓம் தத் ஸத்