அத்தியாயம்-11
விஶ்வரூப தர்ஶன
யோகம்
ஸ்வாமி
குருபரானந்தாவின் உபதேச விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது-06-02-2022
முகவுரை:
விஶ்வம் – பிரபஞ்சம், நாம் பார்த்து
அனுபவிக்கும் அனைத்தும்
ரூபம் –
அவரது ஸ்வரூபம்
தர்ஶனம் – காட்சி அளித்தல்
அர்ஜுனனுடைய வேண்டுகோளுக்கிணங்கி தனது விஶ்வரூப
தரிசனத்தை கொடுத்தார். இரண்டுவித
விஶ்வரூபத்தை பார்க்கலாம். இந்த உலகமே
பகவானாக இருப்பதால், நாம் எவையெல்லாம் பார்க்கின்றோமோ, அனுபவிக்கின்றோமோ
அவையெல்லாம் ஈஸ்வரன் என்பதால் அவரது விஶ்வரூபத்தை பார்த்துக் கொண்டேதான்
இருக்கிறோம். இந்த உலகத்தை கண்வழியே மனதுதான் பார்க்கின்றது. மனம்தான் வேற்றுமையை உருவாக்குகின்றது. மனதின் இந்த தன்மையை ( ராக-துவேஷம்) நீக்கி விட்டு இந்த உலகத்தை பார்ப்பதே
விஶ்வரூப தரிசனமாகும். ஞானக்கண் என்பது
ராக-துவேஷங்களை நீங்கிய மனதுடன் இந்த உலகத்தை பார்ப்பதுதான்.
ஒருவனை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் மற்றவர்களை
பற்றி அவனிடம் விசாரித்தாலே போதும்.
ஒருவனுடைய நடத்தைதான்(Attitude) அவனுடைய
குணாதிசயத்தை நிர்ணயிக்கின்றது.
தீயகுணத்தை நீக்க வேண்டுமென்றால் அந்த குணம் இல்லாதவனை பார்த்து அக்குணத்தை
நீக்கி கொள்ளலாம். இதுவும் ஒருவகை
விஶ்வரூப தரிசனமாக எடுத்துக் கொள்ளலாம்.
இது இரண்டாவது விஸ்வரூபம். இந்த
அத்தியாயத்தில் பகவான் ஒரு உருவத்தை காட்டப்போகின்றார். இதை நாம் சரியாக புரிந்து
கொள்ள வேண்டும்.
अर्जुन उवाच ।
मदनुग्रहाय परमं गुह्यमध्यात्मसंज्ञितम् ।
यत्त्वयोक्तं वचस्तेन कोहोऽयं विगतो मम ॥ 1 ॥
எனக்கு அனுக்ரஹம் செய்வதற்காக அதாவது
சோக-மோகத்திலிருந்து என்னை காப்பாற்றுவதற்காக, மேலான லட்சியமான மோட்சத்திற்கு
சாதனமாகவும், மிகவும் ரகசியமாகவும் இருக்கின்ற அத்யாத்மம் என்ற பெயருடைய
கருத்துக்களை கொண்டதுமான எந்த உபதேசம் உங்களால் கூறப்பட்டதோ, அதனால் என்னுடைய இந்த
மோகமானது சென்றுவிட்டது.
குஹ்யம் –
சிரத்தையில்லாதவர்களுக்கு மறைக்கப்படவேண்டியது
அத்யாத்மம் – ஆத்மா-அனாத்மா
விவேகம், ஜீவாத்மா சம்பந்தப்பட்டது.
இந்த உலகத்திலுள்ள பொருட்கள் எப்படி
காட்சியளித்துக் கொண்டிருக்கிறது, எப்படிப்பட்ட உணர்வை கொடுத்துக் கொண்டிருக்கிறது
என்பது பார்ப்பவனின் மனநிலை பொறுத்து இருக்கின்றது. அதாவது விருப்பு வெறுப்பற்ற
மனநிலையோடு இந்த உலகத்தைப் பார்க்க வேண்டும்.
இதுவே உண்மையான விஶ்வரூப தரிசனம், பார்க்கின்ற அனைத்தும் ஈஸ்வர ஸ்வரூபமாகவே
தோன்றும்.
भवप्ययौ हि भूतानां श्रुतौ विस्तरशो मया ।
त्वत्तः कमलपत्राक्ष माहात्मयमपि चाव्ययं ॥ 2 ॥
பகவானே! எல்லா உயிரினங்களுடைய தோற்றமும்,
லயமும் உங்களால் எனக்கு விரிவாக சொல்லப்பட்டது. அவ்வாறே ஈஸ்வரனுடைய விபூதியும்,
அளவிட முடியாத பெருமைகளும் என்னால் கேட்கப்பட்டது.
கமலபத்ரக்ஷ - தாமரை இதழைப்போன்ற கண்களை உடையவனே
அவ்யயம் – அளவிட
முடியாத, அழிவற்ற
மாஹாத்மயம் – உங்களுடைய பெருமைகளயும்
ப4வப்யயௌ – ஸ்ருஷ்டி லயம் இவைகளைப்
பற்றியும்
விஸ்தரஶோ - என்னால்
விளக்கமாக
ஶ்ருதௌ – கேட்கப்பட்டது
एवमेतद्यथात्थ त्वमात्मानं परमेश्वर ।
द्रष्टुमिच्छामि ते रूपमैश्वरं पुरुषोत्तम् ॥ 3 ॥
பரமேஶ்வரா! தாங்கள் தங்களைப்பற்றி எவ்வாறு
கூறினீர்களோ, அவற்றை அப்படியேதான் நான் என்று நம்புகிறேன். புருஷோத்தமா! உங்களுடைய
ஈஸ்வர மாயையினால் தோற்றுவிக்கப்பட்ட உருவத்தை, ஈஸ்வர ஸ்வரூபத்தை, எல்லா
பெருமைகளும் சேர்ந்து இருக்கின்ற விஶ்வரூபத்தை கண்கூடாக பார்க்க
விரும்புகிறேன்.
मन्यसे यदि तच्छक्यं मया द्रष्टुमिति प्रभो ।
योगेश्वर ततो मे त्वं दर्शयात्मानमव्ययम् ॥ 4 ॥
பிரபுவே! உங்களுடைய விஶ்வரூபத்தை பார்ப்பதற்கு
நான் தகுதியானவன் என்று கருதினால் அப்பொழுது யோகேஶ்வரரே! நீங்கள் எனக்கு அளவிட
முடியாத பெருமைகளுடன் கூடிய விஶ்வரூபத்தை காண்பித்து அருளுங்கள்.
श्रीभगवनुवाच ।
पश्य मे पार्थ रूपाणि शतशोऽथ सहस्रशः ।
नानाविधानि दिव्यानि नानावर्णाकृतीनि च ॥ 5 ॥
ஶ்ரீபகவான் கூறுகிறார்.
ஹே அர்ஜுனா!
என்னுடைய நூற்றுக்கணக்காகவும், ஆயிரக்கணக்காகவும் அதாவது எண்ணிலடங்காத
பற்பல விதங்களாகவும், மாயா சக்தியினல் தோற்றுவிக்கப்பட்டதும் பலவிதமான வர்ணங்கள்,
உருவங்களையும் உடைய உருவத்தைப் இப்பொழுது நீ பார்.
पश्यादित्यान्वसून्रुरानश्विनौ मरुतस्तथा ।
बहून्यदृष्टपूर्वाणि पश्याश्चर्याणि भारत ॥ 6 ॥
ஹே அர்ஜுனா! பன்னிரெண்டு ஆதித்யர்களையும்,
எட்டு வஸுக்களையும், பதினொரு ருத்ரர்களையும், அஸ்வினி குமாரர்கள் இருவரையும்,
நாற்பத்தியொன்பது மருத்துக்களையும் பார்ப்பாயாக.
அவ்வாறே இதற்கு முன் கண்டிராத பற்பல ஆச்சரியமான உருவங்களையும் பார்.
इहैकस्थं जगत्कृत्स्नं पश्याद्य सचरचरम् ।
मम देहे गुडाकेश यच्चान्यद् द्रष्टुमिच्छसि ॥ 7 ॥
ஹே அர்ஜுனா! இங்கு இப்பொழுது என்னுடைய உடலில்
ஒரே இடத்தில் அனைத்து அசைவதையும், அசையாததையும் கூடிய உலகம் முழுவதையும் நீ
பார். வேறு எதையாவது நீ பார்க்க
விரும்பினாலும் அவைகளையும் பார்த்துக் கொள்.
न तु मां शक्यसे द्रष्टुमनेनैव स्वचक्षुषा ।
दिव्यं ददामि ते चक्षुः पश्य मे योगमैश्वरम् ॥ 8 ॥
இப்பொழுது இருக்கின்ற உன்னுடைய சாதாரண கணகளால்
என்னைப் பார்க்க முடியாது. உனக்கு
என்னுடைய விஸ்வரூபத்தை பார்க்க தகுதியில்லை என்று குறிப்பால் பகவான்
உணர்த்துகிறார். உனக்கு தெய்வத்தன்மை
பொருந்திய பார்வையை கொடுக்கிறேன்.
என்னுடைய மேலான விஶ்வரூபத்தை பார்ப்பாயாக.
நடக்க முடியாததையும் நடத்தி காட்டுபவர் ஈஸ்வரன். அவர் நம்முடைய அறிவுக்கும்
தர்க்கத்திற்கும் அப்பாற்பட்டவர்..
सञ्जय उवाच।
एवमुत्तवा ततो रजन्महायोगेश्वरो हरिः
दर्शयामास पार्थाय परमं रूपमैश्वरम् ॥ 9 ॥
சஞ்ஜயன் கூறினார்.
அரசே! இவ்வாறு கூறிவிட்டு அதற்குப்பிறகு
(ஞானக்கண்ணை கொடுத்துவிட்டு) மகா மாயைக்கு தலைவனாக இருக்கின்ற பகவான்
ஶ்ரீக்ருஷ்ணர் அர்ஜுனனுக்கு மேலான ஈஸ்வர சக்தியுடைய தன்னுடைய விஶ்வரூபத்தை
காண்பித்தார்.
अनेकवक्त्रनयन्मनेकाद्भुतदर्शनम् ।
अनेकदिव्याभरणं दिव्यानेकोद्यतायुधम् ॥ 10 ॥
दिव्यमाल्याम्बरधरं दिव्यगन्धानुलेपनम् ।
सर्वाश्चर्यमयं देवमनन्तं विश्वतोमुखम् ॥ 11 ॥
பலமுகங்களோடும், வாய்களோடும், கண்களோடும்
கூடியவரும், பல அற்புதமான காட்சிகள் கொண்டவரும், அனேகவிதமான தெய்வீகமான
ஆபரணங்களோடு கூடியவரும், திவ்யமான பற்பல ஆயுதங்களைக் கைகளில் ஏந்தியவராகவும்,
தெய்வீக மாலைகளை, ஆடைகளை அணிந்து காட்சியளிப்பவரும், திவ்யமான வாசனை திரவியங்களை
தம் உடலில் பூசிக் கொண்டிருப்பவரும், எல்லாவிதங்களிலும் ஆச்சரியமானவரும்,
எல்லையற்றவரும், எல்லா திசைகளிலும் முகங்களோடு விளங்குகின்றவரும், விராட்
ஸ்வரூபமானவருமான தேவாதிதேவனான பரமேஶ்வரனை அர்ஜுனன் கண்டான்.
दिवि सूर्यसहस्रस्य भवेध्रुगपदुद्थिता ।
यदि भाः सदृशी सा स्याद्भासस्तस्य महन्मनः ॥ 12 ॥
ஒருவேளை ஆகாயத்தில் ஆயிரக்கணக்கான சூரியன்கள்
ஒரே நேரத்தில் உதயமானல் எவ்வளவு பிரகாசமாக இருக்குமோ அந்தப் பிரகாசம் விஶ்வரூப
பரமாத்மாவின் பிரகாசத்திற்கு நிகராக இருக்க முடியுமோ!
तत्रैकस्थं जगत्कृत्स्नं प्रविभक्तमनेकधा ।
अपश्यद्देवदेवस्य शरीरे पाण्डवस्तदा ॥ 13 ॥
பாண்டு புத்திரனான அர்ஜுனன் அப்பொழுது பலவிதமாக
பிரிந்துள்ள அதாவது தனித்தனியான உலகம் முழுவதும் தேவதேவனான ஶ்ரீகிருஷ்ண பகவானின்
அந்த விஶ்வரூப திருமேனியில் ஒரே இடத்தில் இருப்பதைப் பார்த்தான்.
ततः स विस्मयाविष्टो ह्र्ष्टरोमा धनञ्जयः ।
प्रणम्य शिरसा देवं कृताञ्जलिरभाषत् ॥ 14 ॥
அதன்பிறகு வியப்பினால் ஆட்கொள்ளப்பட்டு
மெய்சிலிர்த்து அர்ஜுனான் விஶ்ரூப ஈஸ்வரனை தலைவணங்கி, கூப்பிய கரங்களுடன் கூறத்
தொடங்கினான்
अर्जुन उवाच ।
पश्यामि देवंस्तव देव देहे सर्वांस्तथा भूताविशेषसङ्घान् ।
ब्रह्माणमीशं कमलासनस्थं ऋषींश्च सर्वानुरगांश्च दिव्यान् ॥
15 ॥
அர்ஜுனன் கூறினான்!
அர்ஜுனன் விஶ்வரூபத்தை பார்த்தவுடன் அவனிடத்தில்
ஆச்சரியம், பயம், பக்தி என்ற மூன்று பாவனைகள் மாறி மாறி வந்தது.
ஏதாவது ஒரு கண்டுபிடிப்பை நாம் முதலில்
பார்க்கும் போது வருவது ஆச்சரியம். அதை
புத்தியானது முழுவதும் கிரகிக்கும்வரை இந்த நிலையே தொடர்ந்து இருக்கும். பிறகு ஆச்சரியம் சென்றுவிடும். அறிவுக்கு வராமல் அனுபவம் மட்டும் இருக்கும்
வரையில் இந்த ஆச்சரியம் தொடரும். மிகவும் அரிதான ஒன்றை, உத்தமமான ஒன்றை
பார்த்தாலும் இந்த ஆச்சரிய உணர்ச்சி ஏற்படும்.
தேவனே! உங்களுடைய உடலில் நான் இவைகளை
பார்க்கிறேன். அனைத்து தேவர்களையும்,
அவ்வாறேவிதவிதமான உயிரின கூட்டங்களையும், தாமரை மலரில் வீற்றிருக்கும் சதுர்முக
பிரம்மாவையும் எல்லா ரிஷிகளையும் தெய்வீகமான பாம்புகளையும் பார்க்கின்றேன்.
अनेकबाहूदरवक्त्रनेत्रं पश्यामि त्वां सर्वतोऽनन्तरूपम् ।
नान्तं न् मध्यं न पुनस्तवादिं पश्यामि विश्वेश्वर विश्वरूप
॥ 16 ॥
எண்ணிலடங்கா கைகள், வயிறுகள், முகங்கள், கண்கள்
கொண்டவராகவும், எல்லாவிடத்திலும் எண்ணற்ற உருவங்களையும் பார்க்கின்றேன். உங்களுடைய விஶ்வரூபத்தில் ஆரம்பத்தையும்,
இடைப்பகுதியையும், முடிவையும் நான் பார்க்கவில்லை.
किरीटिनं गदिनं चक्रिणं च तेजोराशिं सर्वतो दीप्तिमन्तम् ।
पश्यामि त्वां दुर्निरीक्ष्यं समन्ताद्
दीप्तानलार्कद्युतिमप्रमेयम् ॥ 17 ॥
உங்களை கிரீடம் தரித்தவராகவும், கதை,
சக்கரத்தோடு கூடியவராகவும், எங்கும் பிரகாசிக்கின்ற ஒளிப்பிழம்பாகவும், கொழுந்து
விட்டெரிகின்ற அக்னி, சூரியனுடையது போன்ற ஒளியுடன் கூடியவராகவும், பார்க்க கண்
கூசுகின்றது. எங்கும் நிறைந்ததுமான அளவிட
முடியாத ஸ்வரூபத்தை உடையவராகப் பார்க்கிறேன்.
त्वमक्षरं परमं वेदितव्यं त्वमस्य विश्वस्य परं निधानं ।
त्वमव्ययः शाश्वतधर्मगोप्ता सनातनस्त्वं पुरुषो मतो मे ॥
18 ॥
நீங்கள் அறியதக்கவராகவும், மேலானவராகவும்,
அழிவற்றவற்றவராகவும், பரபிரம்மமாகவும்,
பரமாத்மாவாகவும், உலகத்திற்கு மூல காரணமாகவும் இருக்கின்றீர்கள். நீங்களே நிலையான தர்மத்தை காப்பாற்றுபவர்,
அழிவற்றவர், என்றுமுள்ளவர், பூரணமானவர், எல்லா சரீரத்திலும் இருப்பவர். இது
என்னுடைய கருத்து.
முக்குணமாக இருக்கின்ற மாயைதான் இந்த
பிரபஞ்சத்திற்கு முதல் காரணமாக இருக்கின்றது.
ஆனால் இது மித்யா, பிரம்மத்தை சார்ந்திருக்கின்றது. பிரம்மம் மாயைக்கு
இருத்தல் என்ற சக்தியையும், அறிவையையும், உணர்வையும் கொடுக்கின்றது
अनादिमध्यान्तमनन्तवीर्यम् अनन्तबाहुं शशिसूर्यनेत्रम् ।
पश्यामि त्वां दीप्तहुताशवक्त्रं स्वतेजसा विश्वमिदं
तपन्तम् ॥ 19 ॥
தாங்கள் தோற்றம், இடைப்பகுதி, முடிவு
இல்லாதவர், எல்லையற்ற சக்தியுடையவர் எண்ணற்ற கைகளும், சூரியனும், சந்திரன் இவைகளை
கண்களாக கொண்டவர். கொழுந்துவிட்டு எரியும் தீ போன்ற வாயை உடையவராகவும், தம்முடைய
வெப்பத்தினால் உலகத்தை வாட்டுபவரகவும் பார்க்கிறேன்.
द्यावापृथिव्योरिदमन्तरं हि व्यप्तं त्वयैकेन दिशश्च सर्वा
।
दृष्ट्वाद्भुतं रूपमुग्रं तवेदं लोकत्रयं प्रव्यथितं
महत्मन् ॥ 20 ॥
பரமாத்மாவே! விண்ணிலும், மண்ணிலும் இடையேயுள்ள
இந்த இடைவெளியும், எல்லா திசைகளிலும் உங்கள் ஒருவராலேயே (விஶ்வரூபத்தினாலேயே)
வியாபிக்கப் பட்டிருக்கின்றன. இந்த அற்புதமானதும், பயங்கரமானதுமான உருவத்தை
பார்த்து மூன்று உலகங்களும் பயத்தால் மிகவும் நடுங்கிக் கொண்டிருக்கின்றன.
अमी हि त्वां सुरसङ्घा विशन्ति केचिद्भीताः प्राञ्जलयो
गृणन्ति ।
स्वस्तीत्युत्तवा महर्षिसिद्धसङ्घाः स्तुवन्ति त्वां
स्तुतिभिः पुष्कलाभिः ॥ 21 ॥
இந்த தேவர்களில் கூட்டங்கள் உங்களிடம்
நுழைகின்றார்கள். சிலர் பயந்துள்ளார்கள்.
கைகூப்பிக்கொண்டு வழிபடுகிறார்கள். அமைதி கிடைக்கட்டும் என்று
கூறுகிறார்கள். மஹரிஷிகளும், சித்தர்களும்,
மங்களம் உண்டாகட்டும் என்று கூறி உங்களை வணங்குகின்றார்கள். மந்திரங்களால் உங்களை துதிக்கின்றார்கள். கருத்து நிறைந்ததும் உயர்ந்ததுமான துதிகளால்
உங்களை வணங்குகிறார்கள்.
रुद्रादित्या वसवो ये च साध्या विश्वेऽश्विनौ
मरुतश्चोष्मपाश्च ।
गन्धर्वयक्षासुरसिद्धसङ्घा विक्षन्ते त्वां विस्मितास्चैव
सर्वे ॥ 22 ॥
ருத்ரர்கள், பன்னிரண்டு ஆதித்யர்கள், எட்டு
வஸுக்கள், ஸாத்யர்கள், விஶ்வ தேவர்கள், இரண்டு அஸ்வினி குமாரர்கள், நாற்பத்தொன்பது
மருத்துக்கள், பித்ருக்கள் கூட்டங்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், அசுரர்கள், சித்தர்
கூட்டங்கள் இவர்கள் எல்லோரும் ஆச்சரியத்துடன் உங்களைப் பார்க்கிறார்கள்.
रूपं महत्ते बहुवक्त्रनेत्रं महाबाहो बहुबाहूरुपादम् ।
बहूदरं बहुदंष्ट्राकरालं दृष्ट्वा लोकाः प्रव्यथितास्तथाहम्
॥ 23 ॥
நமக்கு பயம் தோன்ற இரண்டு காரணங்கள்
உண்டு. அவைகள்
- வேற்றுமை, பிரித்துப் பார்த்தல், இருமைகளை உணரும்போது
- பயம் கொடுக்க கூடிய பொருட்களுக்கு அதிக இருப்பைக் கொடுத்தல், பேய், பிசாசு போன்றவைகள் இல்லை என்று நம்புபவர்களுக்கு அவைகளால் பயம் அடைவதில்லை.
எதைக் கண்டு நாம் அதிகமாக பயந்து
கொண்டிருக்கின்றோமோ அதற்கு நாம் அதிக சக்தியை கொடுத்து இருக்கின்றோம். எனக்கு துன்பம்
அல்லது வலி வந்துவிடுமோ என்றும், மரணத்தைக் கண்டும், தெரியாத ஒன்றிலிருந்தும்
பயத்தை அடைந்து கொண்டிருக்கின்றோம்.
பயத்தினால் மேலும் துன்பப்படுவோம், அனுபவித்துக் கொண்டிருக்கும் துன்பம்
மேலும் அதிகரிக்கும், நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு பகவான் கொடுத்திருக்கின்ற ஆயுதமே
பயம் என்ற உணர்ச்சி என்று புரிந்து கொள்ள வேண்டும். பயம் நம்மை தர்மவழியில் நடக்க காரணமாகின்றது.
அதர்ம வழியிலிருந்து நீங்கிவிடவும் காரணமாகின்றது. பக்தியுடையவனாக இருப்பதற்கும் இந்த பயமே
காரணமாகின்றது.
அர்ஜுனர் விஶ்வரூபத்தை தன்னிடமிருந்து
வேறுபடுத்தி பார்த்துக் கொண்டிருந்ததால், அவனுக்கு அந்தக் காட்சியை கண்டு பயந்து
நடுங்கினான்.
नभःस्पृशं दीप्तमनेकवर्णं व्याताननं दीप्तविशालनेत्रम् ।
दृष्ट्वा हि त्वां प्रव्यथितान्तरात्मा धृतिं न विन्दामि
शामं च विष्णो ॥ 24 ॥
விஷ்ணு பகவானே! வானளாவிய பிரகாசமான பல
வண்ணங்களையுடைய திறந்த வாயும், ஒளிமிகுந்த அகன்ற கண்களும் உடைய உங்களுடைய இந்த
தோற்றத்தை பார்த்து பயத்தினால் மிகவும் நடுங்கிய மனமுடைய நான் தைரியத்தையும்,
அமைதியையும் அடையவில்லை
दंष्ट्राकरालानि च ते मुखानिदृश्त्वैव कालानलसन्निभानि ।
दिशो न जाने न लभे च शर्म प्रसीद देवेश जगन्निवास ॥ 25 ॥
கோரைப்பற்களால் பயங்கரமாகவும், ப்ரளயகால தீ
போன்று காட்சியளிக்கும் உங்கள் திருமுகங்களை பார்த்து திசைகள் எனக்கு தெரியவில்லை,
புரியவில்லை. மேலும் சுகத்தையும், மன
அமைதியையும் அடையவில்லை. எனவே தேவதேவனே! ஜகந்நிவாஸனே அருள் புரிய வேண்டும்.
अमी च त्वां धृतराष्ट्रस्य पुत्राः सर्वे सहैवावनिपालसङ्घैः
।
भीष्मो द्रोणः सूतपुत्रस्तथासौ सहास्मदीयैरपि योधमुख्यैः ॥
26 ॥
திருதராஷ்டிரன் புத்திரர்கள் அனைவரும் மற்ற
அரசர்களுடைய கூட்டங்களோடு கூட உங்களிடம் நுழைகிறார்கள். பீஷ்மரும், துரோணரும், கர்ணனும் அவ்விதமே
நம்மைச் சார்ந்த முக்கியமான போர்வீர்ர்களுடன் கூட உங்களிடம் நுழைகிறார்கள்
वक्त्राणि ते त्वामाणा विशन्ति दंष्ट्राकरालानि भयानकानि ।
केचिद्विलग्ना चूणितैरुत्तमाङ्गैः ॥ 27 ॥
கோரைப்பற்களால் கொடுமையாகவும், பயங்கரமாகவும்
உள்ள உங்கள் வாய்களில் வேகமாக ஓடி வந்து புகுகிறார்கள். சிலர் தூள்தூளான தலைகளுடன் பல்லிடுக்களில்
சிக்கியவாறு காணப்படுகிறார்கள்
यथा नदीनां बहवोऽम्बुवेगाः समुद्रमेवाभिमुखा द्रवन्ति ।
तथा तवामी नरलोकवीरा विशन्ति वक्त्राण्यभिविज्वलन्ति ॥
28 ॥
எவ்விதம் நதிகளுடைய பற்பல வேகமான நீரோட்டங்கள்
இயற்கையாகவே கடலை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றனவோ அவ்விதம் இந்த தீக்கொழுந்து
வீசுகின்ற உங்கள் வாய்களுக்குள் மண்ணுலக வீர்ர்கள் நுழைகிறார்கள்.
यथा प्रदीप्तं ज्वलनं पतङ्गा विशन्ति नशाय समृद्धवेगा ।
तथैव नाशाय् विशन्ति लोकास्- तवपि वक्त्राणि समृद्धवेगाः ॥
११-२९29 ॥
விட்டிற்பூச்சிகள் வெகுவேகமாக பறந்து வந்து
கொழுந்துவிட்டு எரியும் நெருப்பில் அழிவதற்காக வேகமாக விழுகின்றனவோ அதேபோல
எல்லாமக்களும் தங்கள் அழிவிற்காக வெகுவேகமாக ஓடிவந்து உங்களுடைய வாய்களில்
நுழைகிறார்கள்.
लेलिह्यसे ग्रसमानः समन्ताल्- लोकन्समग्रान्वदनैर्ज्वलद्भि
।
तेहोभिरापूर्य जगत्समग्रं भासस्तवोग्राः पतपन्ति विष्णो ॥
30 ॥
உங்கள் வாய்க்குள் வந்து வீழ்ந்து
கொண்டிருக்கும் மக்களை நாக்கினால் எல்லா பக்கங்களிலும் அவர்களை சுவைத்து
விழுங்குகிறீர்கள். தீ உமிழ்ந்து
கொண்டிருக்கின்ற வாய்களினால் விழுங்கிக் கொண்டிருக்கிறீர்கள். அனைத்து உலகத்தையும் உங்களுடைய பயங்கரமான
வெப்பகதிர்களால் மிகவும் வாட்டி வதைக்கப்படுகிறது.
आख्याहि मे को भवानुग्ररूपो नमोऽस्तु ते देववर प्रसीद ।
विज्ञातुमिच्छामि भवन्तमाद्यं न हि प्रजानमि तव प्रवृत्तिम्
॥ 31 ॥
நீங்கள் யார் என்று எனக்கு கூறுங்கள். பயங்கரமான உருவமுடைய நீங்கள் யார்? உங்களை
வணங்குகிறேன். தேவர்களுக்கெல்லாம் மேலாக இருப்பவரே எனக்கு அருள் புரியுங்கள். ஆதிபுருஷனான உங்களை நன்கு தெரிந்து கொள்ள
விரும்புகிறேன். ஏனெனில் உங்களுடைய செயலை
என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
श्रीभगवानुवाच ।
कालोऽस्मि लोकक्षयकृत्प्रवृद्धो लोकान्समाहर्तुमिह
प्रवृत्तः ।
ऋतेऽपि त्वां न भविष्यन्ति सर्वे येऽवस्थिताः प्रत्यनीकेषु
योधाः ॥ 32 ॥
ஶ்ரீபகவான் கூறலானார்.
நான் காலமாக இருக்கின்றேன். உலகமனைத்தையும் அழிக்கின்ற முடிவில்லாத காலமாக
நான் இருக்கிறேன். இப்பொழுது
உலகத்திலுள்ளவர்களை அழிப்பதற்காக செயல்பட்டு கொண்டிருக்கின்றேன். எந்தப்போர் வீர்ர்கள் எதிரிப்படையில்
இருக்கிறார்களோ அவர்கள் எல்லோரும் நீ போர் புரியாமல் இருப்பினும் இருக்கப்
போவதில்லை. அதாவது இவர்கள் போரில் அழிந்தே
போவார்கள்
तस्मात्त्वमुत्तिष्ट यशो लभस्व वित्वा शत्रून् भुङ्क्ष्व
राज्यं समृद्धम् ।
मयैवैते निहताः पूर्वमेव निमित्तमात्रं भव सव्यसाचिन् ॥
33 ॥
ஆகவே நீ எழுந்திரு! புகழைப் பெற்றுக்கொள்.
பகைவர்களை வென்று செழிப்பான அரசை அனுபவிப்பாயாக.
இவர்கள் முன்பே என்னால் கொல்லப்பட்டுவிட்டார்கள். இடது கையாலும் அம்பு எய்தும் திறன்படைத்தவனே! நீ
எனக்கு நிமித்தக் காரணமாக மட்டும் இருப்பாயாக.
द्रोणं च भीष्मं च जयद्रथं च कर्णं तथान्यान्पि योधवीरान् ।
मया हनांस्त्वं जहि मव्यथिष्टा युध्यस्व जेतासि रणे
सपत्नान् ॥ 34 ॥
பீஷ்மர், துரோணர், ஜயந்திரன், கர்ணன்
ஆகியோரையும் அவ்வாறே என்னால் ஏற்கனவே கொல்லப்பட்ட மற்ற போர் வீர்ர்களையும் நீ
கொல்வாயாக. பயப்படாதே, போரில் எதிரிகளை ஐயமின்றி வென்றுவிடுவாய். ஆகவே போர்
புரிவாயாக.
நீ எனக்கு கீழ்ப்படிகின்ற கர்த்தாவாக மட்டும்
இரு. எனக்கு கரணமாக மட்டும் இந்தப் போரில் இருப்பாயாக. என்று பகவான் கூறுவதாக புரிந்து கொள்ள
வேண்டும். அதாவது கர்மயோகியாக இரு என்கின்றார்.
கர்த்தாவுக்கு செயலை தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு.
நாம் கர்த்தாவாக இருப்பதால்தான் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை
தேர்ந்தெடுக்கின்றோம். தேர்ந்தெடுக்கும்
நிலையில்தான் மோகம் (மனக்குழப்பம்) வரும்.
கரணமாக இருந்தோமேயானால் இவையிரண்டும் நேராது. சில நேரங்களில் கரணமாக
இருக்கலாம். கர்த்தாவுக்கு
பாவ-புண்ணியங்கல் என்கின்ற பலன்கள் வந்து சேரும்.
அதனால் சுகத்தையும், துக்கத்தையும் அடைகிறார்கள்
सञ्जय उवाच ।
एतच्छ्रुत्वा वचनं केशवस्य कृताञ्जनिर्वेपमानः किरीटी ।
नमस्कृत्वा भूय एवाह कृष्नां सगद्गदं भीतभीतः प्रणम्य ॥
35 ॥
சஞ்ஜயன் கூறினார்.
பகவான் ஶ்ரீகேசவனுடைய இந்த வசனத்தைக் கேட்டு
மகுடம் அணிந்திருக்கும் அர்ஜுனன் நடுங்கிக்கொண்டே கைகூப்பி வணங்கி மறுபடியும்
மிகவும் பயந்து நமஸ்காரம் செய்து பிறகு அவரை நோக்கி பேசலானான்
अर्जुन उवाच
स्थाने ह्रषीकेश तव प्रकीर्त्या जगत्प्रह्र्ष्यत्यनुरज्यते
च ।
रक्षंसि भीतानि दिशो द्रवन्ति सर्वे नमस्यन्ति च
सिद्धसङघाःय़् ॥ 36 ॥
பக்தி என்ற சொல் அனைவராலும்
பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் வெவ்வேறு
விதமாக புரிந்து கொண்டிருக்கின்றார்கள். இறைவனுக்கு கற்பூரம் காட்டி, அவர்
திருநாமத்தை உச்சரித்தும், அவர் பெருமைகளை பாடிக் கொண்டு இருப்பதுதான் பக்தி என்று
பொதுவாக எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். பக்தி பல்வேறு நிலைகளைக் கொண்டது அவைகளை 12ம்
அத்தியாயத்தில் விவரமாக கூறப்பட்டுள்ளது. பகவான் மீது வைக்கும் நம்பிக்கையே பக்தி
என்பதாகும். பகவான் மீது அன்பு
செலுத்துவதும் பக்தியாகும். இறைவனால்
பற்றிய அறிவே பக்தியை வளர்க்கும். அதேபோல
பக்திதான் ஞானத்தை வளர்க்கும்.
அர்ஜுனன் தழுதழுத்த குரலில் மீண்டும்
கூறலானான்.
அந்தர்யாமியான பகவானே உங்களுடைய
பெருமையினால்தான் உலகம் மிக்க மகிழ்ச்சி அடைகிறது, இன்புற்றும் இருக்கின்றது. பயந்துபோன அரக்கர்கள் எல்லா திசைகளிலும்
ஓடுகின்றனர். அதர்ம வழியில் செல்பவர்கள்
பயந்து ஓடுகிறார்கள். மேலும் சித்தர்
கூட்டங்களும் உங்களையே வணங்குகிறார்கள்.
இது எல்லாம் பொருத்தம்தான். சித்தர் என்பவர்கள் பிறப்பிலேயே அரியவகை
சக்திகளைப் பெற்றிருப்பார்கள், நற்பண்புகள் இயற்கையாக அமையப்பெற்றவர்கள்.
कस्माच्च ते न नमेरन्महात्मन् गरीयसे
ब्रह्मणोऽप्यादिकर्त्रे ।
अनन्त देवेश जगन्निवास त्वमक्षरं सदसत्तत्परं यत् ॥ 37 ॥
மஹாத்மாவே! பிரம்மாவுக்கும்,
ஹிரண்யகர்ப்பனுக்கும் மேலானவராகவும், அனைத்து தோற்றத்திற்கும் காரணமாகவும்,
கட்டுக்குள் வைத்திருப்பவராகவும் உள்ள உங்களுக்கு ஏன் நமஸ்காரம்
செய்யமாட்டார்கள். முடிவற்றவரே! தேவதேவ!
தேவர்களுக்கும் ஈஸ்வரனாக இருப்பவரே! இந்த உலகத்துக்கே ஆதாரமாக இருப்பவரே! நீங்கள்
வெளித்தோற்றத்திற்கு வந்தவைகளாகவும், வராதவைகளாகவும் இருக்கின்றீர்கள். நீங்கள் இந்த பிரபஞ்சத்திற்கு காரணமாகவும்,
காரியமாகவும் இருக்கின்றீர்கள், பரபிரம்மமாகவும் இருக்கின்றீர்கள். காரிய-காரணத்தை தாண்டியும்,
அழிவற்றவராகவும் இருப்பது நீங்களே!
त्वमादिदेवः पुरुषः पुराणस्-त्वमस्य विश्वस्य परं निधानम् ।
वेत्तासि वेद्यं च परं च धाम् त्वया ततं विश्वमनन्तरूप ॥
38 ॥
நீங்கள் முழுமுதல் கடவுளாகவும், ஜகத்துக்கு
காரணமாகவும், தானே பிரகாசித்துக் கொண்டிருக்கும் சைதன்ய ஸ்வரூபமாகவும், எல்லா
சரீரத்திலும் அமர்ந்து இருப்பவராகவும், என்றும் இருப்பவராகவும், இந்த அனைத்து
உலகிற்கும் லயமடைகின்ற மேலான இருப்பிடமாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் அறிபவராகவும், நிர்குண பிரம்மாகவும்,
புத்தியையும், மனதையும் எண்ணங்கள் மூலமாக சாட்சியாக அறிபவராகவும்,
அறியப்படுபவராகவும் இருக்கிறீர்கள். சகுண பிரம்மமாகவும் இருக்கிறீர்கள், கனவு
நிலையில் அனுபவிக்கப்படுவதும், அனுபவிப்பனும் ஒருவனே என்பதாக இதை புரிந்து கொள்ள
வேண்டும்.
வேத்4யம் – அறியத்தக்கது,
அறிவதற்கு யோக்கியமானவர்
நீங்களே மேலான அதிஷ்டானமாகவும்,
இருக்கின்றீர்கள் உங்களால் உலகம்
அனைத்தும் வியாபிக்கப்பட்டுள்ளது.
எண்ணிலடங்கா உருவமுடையவரே! பகவான்
ஸத் ரூபமாக இந்த உலகமனைத்தும் வியாபித்திருக்கின்றார். தங்க நகைகளில் உள்ள தங்கத்தை எடுத்துவிட்டால்
நாம-ரூபத்தை பார்க்க முடியாது. அதுபோல உலகத்திலுள்ள நாம-ரூபங்கள் பரமாத்மாவையே அதிஷ்டானமாக
கொண்டிருக்கிறது.
वायुर्यमोऽग्निर्वरूनाः शशाङ्कः प्रजापतिस्त्वं
प्रपितामहश्च ।
नमो नमस्तेऽस्तु समस्त्रकृत्वः पुनस्च भूयोऽपि नमो नमस्ते ॥
39 ॥
நீங்களே வாயுதேவனாகவும், எமனாகவும்,
அக்னிதேவனாகவும், வருணபகவானாகவும் சந்திரனாகவும், பிரஜாபதியாகவும், மனிதர்களுக்கு
தலைவனாகவும், பிரம்மாவுக்கு தலைவனாகவும் இருக்கின்றீர்கள். உங்களுக்கு நமஸ்காரம்,
ஆயிரக்கணக்கான நமஸ்காரங்கள். உங்களை நமஸ்கரிக்கின்றேன். மீண்டும் மீண்டும்
நமஸ்காரம் செய்கிறேன்.
नमः पुरस्तादथ पृष्टतस्ते नमोऽस्तु ते सर्वत एव सर्व ।
अनन्तवीर्यामितविक्रमस्त्वं सर्वं समाप्नॊषि ततोऽसि सर्वः ॥
40 ॥
உங்களுக்கு முன்புறமிருந்தும்,
பின்புறமிருந்தும் நமஸ்கரிக்கிறேன்.
உங்களுக்கு எல்லா பக்கங்களிலிருந்தும் நமஸ்காரம் செய்கிறேன். அனைத்துமாகவும் இருப்பவரே! நீங்கள் அளவற்ற சக்தியுடையவர், அளவற்ற
பராக்ரமம் உடையவர், எல்லையற்ற தைரியத்தையும் உடையவர். அனைத்தையும் வியாபித்து
இருக்கிறீர்கள். ஆகவே நீங்களே அனைத்துமாக இருக்கிறீர்கள். அதிஷ்டானமாகவும், அதில்
ஏற்றி வைக்கப்பட்ட நாம்-ரூபங்களாகவும் இருக்கிறீர்கள்.
सखेति मत्वा प्रसभं यदुक्तं हे कृष्ण हे यादव हे सखेति ।
अजानता महिमानं तवेदम् मया प्रमादात्प्रणयेन वापि ॥ 41 ॥
உங்களுடைய பெருமையை அறியாத என்னால் நண்பன்
என்று எண்ணி மரியாதை இல்லாமல் தாழ்த்தியும், சிறுபிள்ளைத்தனமாகவும், ஹே கிருஷ்ணா!
யாதவா! நண்பனே என்று எனக்கு சமமாக நினைத்து அழைத்திருக்கிறேன். என்னால் அறியாமையினால், உங்களுடைய இந்தப்
பெருமையை அறியாத காரணத்தால் இவ்வாறு செய்திருக்கிறேன். என்னுடைய
கவனக்குறைவினாலும், அன்பினாலும், நட்பினாலும் இவ்வாறு நடந்து கொண்டிருந்தேன்.
यच्चाअवहासर्थमसत्कृतोऽसि विहारशय्यासनभोजनेषु ।
एकोऽथवाप्यच्युत तत्समक्षं तत्क्षामये त्वामहमप्रमेयम् ॥
42 ॥
அஸத்க்ருதஹ –
கீழ்நிலையுள்ளவர்கள் மேலோர்களை கேலி செய்யக் கூடாது.
உங்களை விளையாட்டின் போதும், நடந்து
செல்லும்போதும், படுத்து ஓய்வெடுத்து கொண்டிருக்கும் போதும், அமர்ந்திருக்கும்போதும்,
உண்ணும்போதும், நீங்கள் தனியாக இருக்கும்போதும், மற்றவர்கள் முன்னிலையிலுக்
கூடக்கேலியாகவும், வேடிக்கையாகவும் எந்தவிதமாக அவமதிக்கப்பட்டிருக்கிறீர்களோ, இந்த
எல்லா குற்றங்களையும் அளவிட முடியாத பெருமைகளையுடைய நீங்கள் பொறுத்தருள வேண்டும்.
पितासि लोकस्य चराचरस्य त्वमस्य पूज्यश्च गुरूर्गरीयान् ।
न त्वत्समोऽस्त्यभ्यधिकः कुतोऽन्यो
कोकत्रयेऽप्यप्रतिमप्रभाव ॥ 43 ॥
நீங்கள் இந்த உலகில் இருக்கும் அசைவதும்,
அசையாததுமான எல்லாவற்றிற்கும் தந்தையாகவும், வணங்கத்தக்கவராகவும் (நற்குணங்களை
கொண்டவரை வழிபட்டால் அவர்களுடைய குணங்களை நாம் அடைவோம்) அனைத்திற்கும் மேலானவர்,
மேலான குருவாகவும் இருக்கின்றீர்கள். உங்களுக்கு இணையானவர்கள் யாரும் இல்லை.
உங்களுக்கும் மேலானவர் யார் இருக்க முடியும்.
ஈஸ்வரன் ஒருவராகத்தான் இருக்கிறார் என்று இதன் மூலம் குறிப்பால்
உணர்த்தப்படுகிறது. மூவுலகிலும்
உங்களுக்கு நிகராக யாருமில்லை, ஒப்பற்ற சக்தி உடையவரே!
तस्मात्प्रणम्य प्रणिधाय कायं प्रसादये त्वामहमीशमीड्यम् ।
पितेव पुत्रस्य सखेव सख्युः प्रियः प्रियायार्हसि देव
सोढुम् ॥ 44 ॥
ஆகவே வணங்கத்தக்க ஈஸ்வரனான உங்களுடைய
பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி என் உடலை சமர்ப்பித்து
நமஸ்கரிக்கின்றேன். நீங்கள் என்னிடம் மகிழ்ச்சி கொண்டவராக இருக்க
வேண்டுகிறேன். என்னிடம் கருணை காட்டுங்கள்
என்று வேண்டுகிறேன். தந்தை மகனின் தவறை
மன்னிப்பது போலவும், நண்பன் தன்னுடைய நண்பனுடைய குற்றங்களை பொறுத்துக் கொள்வது
போலவும், கணவன் மனைவினுடைய தவற்றை மன்னிப்பது போலவும் என்னுடைய குற்றங்கள்
அனைத்தையும் மன்னித்து விட வேண்டும்.
अदृष्टपूर्वं ह्रषितोऽस्मि दृष्ट्वा भयेन च प्रव्यथितं मनो
मे ।
तजीव मे दर्शय देव रूपं प्रसीद देवेश जगन्निवास ॥ 45 ॥
இதற்கு முன் பார்த்திராத இந்த ஆச்சரியமான
உருவத்தை பார்த்து மகிழ்ச்சி கொண்டவனாக இருக்கிறேன். இருந்தாலும் என் மனமானது
பயத்தினால் நடுங்கிக் கொண்டிருக்கிறது.
ஆகவே நீங்கள் உங்களுடைய பழைய ஸ்வரூபத்தையே எனக்கு காண்பியுங்கள். தேவதேவனே!
ஜகந்நிவாஸனே! திருவருள் புரியுங்கள்
किरीटिनं गदिनं चक्रहस्तं इच्छामि त्वां द्रष्टुमहं तथैव ।
तनैव रूपेण चतुर्भुजेन सहस्रबाहो भव विश्वमूर्ते ॥ 46 ॥
கிரீடத்தை தரித்தவராகவும், கதாயுதத்தையும்,
சக்கரத்தையும் கையில் ஏந்தியவராகவும் உள்ள அந்த ரூபத்திலே உங்களை தரிசிக்க நான்
விரும்புகிறேன். ஆகையால் அதே நான்கு கைகளைக் கொண்ட அந்த ரூபத்துடன் தரிசனம்
அளியுங்கள். ஆயிரக்கணக்கான
கரங்களையுடையவரே விஶ்வரூபமாக இருப்பவரே நீங்கள் நான்கு கைகளையுடைய விஷ்ணு ரூபத்தை
காட்டி அருள் புரியுங்கள்.
श्रीभगवानुवच ।
मया प्रसन्नेन तवार्जुनदं रूपं परं दर्शितमात्मयोगात् ।
तेजोमयं विश्वमनन्तमाद्यं यन्मे त्वदन्येन दृष्टपूर्वम् ॥
47 ॥
ஶ்ரீபகவான் கூறினார்.
அர்ஜுனா! அனுக்ரஹமாக என்னால் என்னுடைய
மாயையினால் மாயாசக்தியினால் இந்த விஶ்வரூபம் உனக்கு காட்டப்பட்டது. ஒளிமயமானதும்,
பிரபஞ்சமனைத்துமாகவும், முடிவற்றதாகவும், மேலானதும், முதன்மையானதுமான இப்படிபட்ட
இந்த விஶ்வரூபத்தை உன்னைத் தவிர வேறெவரும் இதுவரை பார்க்கவில்லை.
न वेदयज्ञाध्ययनैर्न दानैर्- न च क्रियाभिर्न तपोभिरूग्रैः
।
एवंरूपः शकय अहं नृलोके द्रष्टुं त्वदन्येन कुरुप्रवीर ॥ 48 ॥
அர்ஜுனா! வேதத்தினுதைய, யாகத்தினுடைய
செயல்முறைகளை கற்பதாலோ, யாகத்தை எப்படி செய்யவேண்டும், எந்த இடத்தில் செய்ய
வேண்டும் என்ற விதிமுறைகளை அறிந்திருப்பதாலோ, விதவிதமான தானங்களை செய்வதினாலோ,
வேதங்கள் உரைத்த செயல்களை செய்வதாலோ, உக்கிரமான தவங்களாலோ காணப்பட முடியாதவன்.
இப்படிபட்ட விஶ்வரூபத்தை காணப்பட முடியாது. அவர்களுக்கு நான் இந்த உருவத்தில் தெரியமாட்டேன்.
मा ते व्यथा मा च विमूढभावो दृष्ट्वा रूपं धोरमीदृङ्ममेदम्
।
व्यपेतभीः प्रीतमनाः पुनस्तव् तदेव मे रूपमिदं प्रपश्य ॥
49 ॥
இத்தகைய என்னுடைய கோரமான, அச்சுறுத்தலான
உருவத்தை பார்த்து உனக்கு பயமும், கலக்கமும் வேண்டாம், குழப்பமும், மயக்கமும்
வேண்டாம். நீ பயத்தை விட்டுவிட்டு மீண்டும் மன அமைதியுடன் இருக்க வேண்டும்.
என்னுடைய இந்த ரூபத்தை மறுபடியும் நன்கு பார்.
सञ्जय उवाच ।
इत्यर्जुनं वसुदेवस्तथोक्त्वा स्वकं रूपं दर्शयामास भूयः ।
आश्वासयामस च भीतमेनं भूत्वा पुनः सौम्यवपुर्महात्मा ॥ 50 ॥
சஞ்சயன் கூறினார், வாசுதேவனான பகவான்
அர்ஜுனனிடம் இவ்வாறு கூறிவிட்டு மறுபடியும் அதேவிதமான தன்னுடைய கிருஷ்ண உருவத்தை
காண்பித்தார். மறுபடியும் மஹாத்மாவான ஶ்ரீபகவான் இனிய வடிவமாக மனித உருவமெடுத்து
பயந்திருந்த அர்ஜுனனுக்கு தைரியமூட்டினார்.
अर्जुन उवाच ।
दृष्ट्वेदं मानुषं रूपं तव सौम्यं जनर्दन ।
इदानीमस्मि संवृत्तः सचेताः प्रकृतिं गतः ॥ 51 ॥
அர்ஜுனன்
கூறினார். ஜனார்தனா! உங்களூடைய
இந்த மிகவும் இனியதான மானுட வடிவைப்பார்த்து இப்பொழுது நிலைபெற்ற, தெளிவான மனதை
உடையவனாக மாறி விட்டேன். என் இயல்பான
நிலையை அடைந்து விட்டேன்.
श्रीभगवानुवाच ।
सुदुर्दर्शमिदं
रूपं दृष्टवानसि यन्मम ।
देवा अप्यस्य रूपस्य नित्यं दर्शनकाङिक्षणः ॥ 52 ॥
ஶ்ரீபகவான் கூறினார். என்னுடைய எந்த
விஶ்வரூபத்தை நீ பார்த்தாயோ அது காண்பதற்கு மிகவும் அரிது. தேவர்களும்கூட இந்த
உருவத்தை எப்பொழுதும் பார்க்க விருப்பம் உடையவர்களாக இருக்கிறார்கள்.
नाहं वेदैर्न तपसा न दानेन न चेज्यया ।
शक्य एवम्विधो द्रष्टुं दृष्टवानसि मां यथा ॥ 53 ॥
வேதத்தை அத்யயனம் செய்வதனாலோ, தவத்தினாலோ,
தானங்கள் செய்ததனாலோ யாகங்கள் செய்வதனாலோ எவ்வாறு என்னை நீ பார்த்தாயோ அவ்விதம்
பார்க்க முடியாது.
भक्त्या त्वनन्यया शक्य अहमेवंविधोऽर्जुन ।
ज्ञातुं द्रष्टुं च तत्त्वेन प्रवेष्टुं च परन्तप ॥ 54 ॥
ஆனால் அர்ஜுன! இந்த உருவத்தை என்னைத்தவிர
வேறொன்றைப் பயனாக கருதாத பக்தியினால் கண்கூடாக காணப்படக்கூடியவன். என்னுடைய யதார்த்த உருவத்தை அறியப்பட
முடியும். பார்ப்பனவையெல்லாம் ஈஸ்வர ரூபம்
என்று அறியக்கூடிய சக்தியும் பக்தியினால் மட்டும் முடியும். என்னிடத்திலே ஐக்கியமாகி விடவும், பிரம்மமாகவே
மாறிவிடவும் பக்தியினால் மட்டும் முடியும்.
அனன்யதா பக்தி –
வேற்றுமையில்லாத
*
பக்தன், பகவான், பலன்
இவைகள் கலந்த பக்தியென்று ஒன்றிருக்கிறது. இந்த மூன்றில் நம்மைத்தான் நாம் அதிகம்
நேசிக்கின்றோம்.
*
பக்தன்-பகவான் பகவானே
சாத்தியம், பகவானே சாதனம் என்பது ஒருவிதமான பக்தி. இங்கேயும் நமக்குத்தான் அதிக
முக்கியத்துவம்.
*
இந்த உலகமே பகவன்,
ஈஸ்வரன் நானே எனக்கு வேறாக இல்லை என்ற அறிவோடு வைக்கும் பக்திதான் பிளவுபடாத
பக்தி. அனன்யயா பக்தி.
मत्कर्मकृन्मत्परमो मद्भक्तः सङ्गवरजितः ।
निर्वैरः सर्वभूतेषु यः स मामेति पाण्डव ॥ 55 ॥
அர்ஜுனா! எவனொருவன் எல்லா செயல்களையும், செய்ய
வேண்டிய கடமைகளையும் என்பொருட்டே ஆற்றுவானோ, என்னையே மேலான லட்சியமாக கொள்வானோ,
என்னையே மனதில் நினைத்துக் கொண்டிருக்கின்றானோ, உலகத்திலுள்ள போக விஷயங்களில் பற்றற்றவனாகவும்,
எல்லா ஜீவராசிகளிடத்தும், பகைமையற்றும், இருக்கின்றானோ அவன் என்னை அடைகிறான்.
தொகுப்புரை
01-02 முதல் 10 அத்தியாயத்தின் சாரம் கூறப்பட்டது.
ஜீவதத்துவத்தை பற்றி சுருக்கமான விளக்கம் கூறப்பட்டது. அத்யாத்மம் எனக்கு
புரிந்துவிட்டது, ஈஸ்வரனுடைய தத்துவமும், பெருமையையும் கேட்டதாகவும் அர்ஜுனர்
கூறினார்.
03-04 பகவானின்
விஶ்வரூப தரிசனத்தை வேண்டினான். பகவானின்
உபதேசத்தை அப்படியே ஏற்றுக் கொண்டேன் என்று கூறி தன் சிரத்தையை வெளிபடுத்தினான்
05-08 விஶ்வரூப
தரிசனம் காட்டுகின்றேன் என்று கூறி அந்தக் காட்சியை பார்ப்பதற்கேற்ற தகுதியையும்
கொடுத்தார். திவ்யமான கண்களை அர்ஜுனனுக்கு
கொடுத்தார். இந்த உலகத்தை நம் மனம்தான்
பார்க்கின்றது. கண்கள் ஒரு கருவியாகத்தான்
செயல்படும். ராக-துவேஷத்துடன் பார்க்கும்
போது ஒருவிதமாகவும், இவையில்லாத மனதுடன் உலகத்தைப் பார்க்கும்போது வேறு விதமாகவும் காட்சியளிக்கும்.
ராக-துவேஷமில்லாத மனதுடன் உலகத்தை பார்ப்பதையே விஶ்வரூப தரிசனமாகும் என்று கூறப்பட்டது. பானைக்கு களிமண் காரணமாக இருப்பது போல ஈஸ்வரனே இந்த உலகமாக
தோன்றியிருக்கின்றார். இதுவே
விஶ்வரூபமாகும். இதற்கு ஒரு மாதிரியாக ஒரு விஶ்வரூபத்தை பகவான் எடுத்துக்
காட்டியிருக்கின்றார். அதைப்பார்ப்பதற்காக ஒரு விஶ்வரூபத்தை பகவான் எடுத்துக்
காட்டியுள்ளார். அதைப் பார்ப்பதற்காக தற்காலிகமாக
மனதிலுள்ள ராக-துவேஷத்தை நீக்கி தகுதியை கொடுத்தார்
09-14 சஞ்சயம்
விஶ்வரூபத்தை வர்ணித்தல்
15-22 அர்ஜுனன்
விஶ்வரூப தரிசனத்தை ஆச்சரியத்துடன் பார்த்து வர்ணிக்கின்றான்
23-30 விஶ்வரூபத்தைக்
கண்டு அடைந்த பயத்தை வெளிப்படுத்தினான்.
பகவான் அனைத்தையும் அழிப்பவராக பார்க்கின்றார். அதனால் அவன் பயந்து
நடுங்கினான். அந்த உருவத்தில் பலருடைய
அழிவுகளையும், போரில் ஏற்படும் இழப்பையும் பார்க்கின்றான்.
31-35 பகவானிடம்
தாங்கள் யார் என்று விளக்குங்கள் என்ற வேண்டுகோளை விடுத்தான். பகவான் நானே காலமாக இருக்கின்றேன். நீ என்னுடைய
கருவியாக மட்டும் இருப்பாயாக என்று அறிவுறுத்தினார்
36-45 அர்ஜுனனுக்கு
பயத்திலிருந்து பக்தி பிறந்ததை விளக்கப்படுகின்றது
46-54 பகவானுடைய
பழைய உருவத்திற்கு மாறுமாறு வேண்டினான்.
பகவானும் அவ்வாறே பழைய உருவத்திற்கு வந்துவிட்டு இந்த விஶ்வரூபத்தை அனன்யா
பக்தியினால் மட்டும்தான் பார்க்கமுடியும் என்று கூறினார்.
55 ஒருவன்
ஆரம்பத்திலிருந்து எப்படி படிப்படியாக என் மீதுள்ள பக்தியை வளர்த்துக் கொள்வான்
என்பதை சுருக்கமாக பகவான் கூறியிருக்கிறார்.
அனைத்திலிருந்தும் பற்றை விலக்கியவனாக இருந்து கொண்டிருப்பவன் கடைசி நிலையில்
இருக்கும் பக்தனாவான். இப்படி இருக்கும்போது யாரிடத்திலும் பகைமை கொள்ள மாட்டான்.
இந்த பக்தன் இறுதியில் என்னையே அடைகின்றான்
ஓம் தத் ஸத்
--- o0o ---