பகவத் கீதை-அத்யாயம்-4
கர்மயோகம்
செயலில் செயலின்மையையும் செயலின்மையில் செயலையும் காண்பதற்கான வழிகள்.
இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கான வழியை ஸ்லோகம் 3.30ல் கண்டோம். மற்றவர்களுக்கு
4.19 லிருந்து 4.23 வரை உள்ள ஸ்லோகங்களில் பகவான்
கூறியிருக்கிறார். இது வெளியிலிருந்து வரும் எந்த உதவியையும் நாடாதவர்களுக்கு
சொல்லப்பட்டிருக்கிறது, தங்களுக்குரிய வழிமுறையை தாங்களே தேடிக்கொள்ளும் பொறுப்பு
அவர்களுடையதே. தங்கள் சொந்த
சங்கல்பங்கள், மன ஆற்றல்கள், விவேகம்
இவற்றைத் துணையாகக் கொண்டு ’நான் பற்றில்லாமல்
இருப்பேன்” என்று உறுதியுடன்
இவர்கள் செயலில் ஈடுபட வேண்டும்.
ஸ்லோகம்-4.19
யாருடைய செயல்கள் ஆசையும், சங்கல்பமும் அற்றதாகவும் (கrrrrrrrர்ம ஸங்கல்ப
வர்ஜிதா), ஞானத்தீயினால் எரிக்கப்பட்டதாகவும் இருக்குமோ அவனை விவேகி என்று
அறிஞர்கள் கூறுவார்கள்
ஆசையின்மை - கர்மயோகி ஆசைவசப்படக்கூடாது,
அதாவது தனக்கென்று எந்த பலனையும் எதிர்ப்பார்த்து வேலை செய்யக்கூடாது
சங்கல்பமின்மை - இயற்கையுடனும் அதன்
குணங்களுடனும் தன்னை ஒன்றுபடுத்திக்கொள்கின்ற நிலையே சங்கல்பம். அதாவது ஒருவன் தன்னை
உடம்புடனும், மனதுடனும் அதன் ஆசாபாசங்களுடனும் ஒன்றுபடுத்திக் கொண்டு வேலை செய்வது
கர்மம். அத்தகைய நிலையில் கர்மத்தை செய்யக் கூடாது. தான் ஆத்மா என்ற நிலையில் ஆத்மாவுடன் ஒன்றி
வேலை செய்வதே சங்கல்பமின்றி வேலை செய்வதாகும்.
செயல்கள் ஞானத் தீயால் எரிக்கப்பட்டிருக்க வேண்டும். அதாவது ஆழ்ந்த அறிவின்
துணையுடனேயே கர்மயோகம் செய்யப்பட வேண்டும். அது என்ன அறிவு? இதனைச் சற்று
விரிவாகக் காண்பது அவசியம். கர்மயோகிக்கு முக்கியமாக மூன்று விதமான அறிவு
வேண்டும்.
a.
சுய அறிவு- சுய அறிவு என்பது தன்னைப்பற்றிய அறிவு. இங்கே பெரிய ஆன்மீக நிலைகளைப்பற்றி
குறிப்பிடவில்லை. நம்மைப் பற்றிய சாதாரண
உண்மைகள் நமக்குக் தெரிந்திருக்க வேண்டும், அவ்வளவுதான். நாம் யார், எதற்காக கர்மயோகம் செய்கிறோம் போன்ற
கேள்விகளுக்கு விடை தெரிந்திருக்க வேண்டும். இதற்கு தினமும் சுய ஆராய்ச்சியை ஒரு
பயிற்சியாகச் செய்ய வேண்டும்.
b.
உலகைப்பற்றிய அறிவு: நாம் கர்மயோகம் செய்கின்ற
களம் உலகமாகும். எனவே அதனைச் சரியாக
புரிந்து கொள்ள வேண்டும். இந்த உலகம் நல்லதும் இல்லை, கெட்டதும் இல்லை. அது நமக்கு
இன்பம் தந்தால் மகிழ்கிறோம், துன்பம் கொடுத்தால் வெறுக்கிறோம். அதை நாம் எப்படி பயன்படுத்துகிறோமோ
அதற்கேற்றவாறு பலனைத் தருகிறது. எப்படி
நெருப்பானது குளிருக்கு இதமாகவும் இருக்கிறது, அதே சமயம் தொட்டால் சுட்டுவிடும்
துன்பத்தையும் கொடுக்கிறதோ அதுபோலதான் உலகத்தின் நிலையும். எனவே நடப்பவற்றிற்கு
நாம் பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும், உலகத்தின் மீது பழி போடக்கூடாது.
c.
கர்மயோகத்தைப்பற்றிய அறிவு:
i.
கர்மயோகியானவன் தனது செயல்களின் மூலம் தன்னை மாற்றி அமைத்து
முன்னேற முயற்சிக்க வேண்டுமே தவிர, உலகத்தை மாற்றி அமைக்க நினைக்கக்கூடாது. ஏனெனில், “இந்த உலகம் நாயின் சுருண்ட வால் போல்
இருக்கிறது, அதை நிமிர்த்த செய்யும் அனைத்து முயற்சியும் வீண்தான்”.
ii.
இந்த உலகத்திற்கு நம் உதவி சிறிதுக்கூட தேவையில்லை,
பிறருக்கு உதவுவது என்பது நமக்கு நாமே உதவிக்கொள்வது போலதான் என்று
உணர்ந்துக்கொள்ள வேண்டும்.
iii.
பிறருக்கு உதவுவது என்பது ஒரு பேறு என்ற எண்ணம் நமக்கு
எப்போதும் இருக்குமேயானால், நன்மை செய்வதற்கான ஆசை மிகவும் ஆற்றல் வாய்ந்த தூண்டு சக்தியாதிவிடும்.
கொடுப்பவனே பெரும் பேறு பெற்றவனாவான். நாம் செய்யும் தானம், நம்மிடம் உள்ள இரக்கம்
குணம் நம்மை தூய்மைப்படுத்தி நிறைநிலையை அடைவதற்கு உதவி புரியும். எல்லா
நற்செயல்களுமே நம்மைத் தூய்மையை நோக்கி, நிறைநிலையை நோக்கியே அழைத்து செல்கின்றன.
இந்த மூவகை அறிவுகளுடன் செய்யப்படுகின்ற செயலே ’ஞானத் தீயால் எரிக்கப்பட்ட செயல்” என்று கூறப்பட்டது.
ஸ்லோகம்-4.20
செய்யப்படுகின்ற செயலின் பலனில் பற்றை விட்டு, நிலைத்த திருப்தி உடையவனாய்,
எதையும் சாராதவனாய் இருக்கின்ற ஒருவன் செயலில் ஈடுபட்டாலும், அவன் எதையும்
செய்தவன் ஆக மாட்டான்.
ஸ்லோகம்-4.21
மனதில் ஆசையும், உடலின் மீதுள்ள அபிமானத்தையும், கட்டுப்படுத்திய உடைமைகள்
அனைத்தையும் விட்ட ஒருவன் உடலால் மட்டும் செயல்கள் செய்வதால் பாவத்தை அடைவதில்லை.
உடைமைகள்
அனைத்தையும் விடுதல்: அனைத்தையும் துறந்து விட்டு தெருவில் போய் நிற்க வேண்டும்
என்ற பொருளில் இதை எடுத்துக் கொள்ளக்கூடாது. உலகம் நமக்கு எப்படி தோற்றம்
அளிக்கிறதோ அதை பொய்யென்று விலக்கி, உண்மையில் அது எதுவோ அதை அறிய வேண்டும்
என்பதுதான் அதன் பொருள். இந்த உலகத்திலுள்ள எல்லா உயிர்களிடத்திலும் இறைவனையே
காணுதல் உலகத்தை துறப்பதற்கு சமமாகும். இத்தகைய நிலையை அடைந்த ஒருவன் செய்கின்ற
வேலைகள் அனைத்தும் உடலால் மட்டுமே செய்யப்படுபவை. மனம் எதிலும் சம்பந்தப்படாமல்
தனித்து நிற்கிறது. செய்கின்ற செயலின் பலனில் அவனுக்கும் பற்றில்லை. பற்றின்றிச் செய்யப்படும் செயல்
செய்யப்படாததற்குச் சமமே.
ஸ்லோகம்-4.22
எதேச்சையாகக் கிடைத்ததில் மகிழ்பவன், இருமைகளைக் கடந்தவன், பொறாமை இல்லாதவன்,
வெற்றி தோல்விகளில் சமமாக இருப்பவன், இத்தகையவன் செயலில் ஈடுபட்டாலும் அதனால்
கட்டப்படுவதில்லை.
- எதேச்சையாகக் கிடைத்ததில் மகிழ்ச்சி: எதையும் நாடாத
மனம் இங்கே குறிப்பிடப்படுகின்றது.
கிடைத்ததை வைத்து வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
- இருமைகளைக் கடந்தவன்: சூடு-குளிர், சுகம்-துக்கம்,
வெற்றி-தோல்வி போன்றவை இருமைகள், இரண்டையும் கடப்பது என்றால் இருவகை
அனுபவங்களின்போது மனம் சமநிலையில் இருப்பது என்பது பொருள்.
- பொறாமையின்மை: பிறருடன் ஒப்பிட்டுப்
பார்க்கும்போதுதான் பொறாமை போன்ற குணங்கள் தலைதூக்குகின்றன. ஒவ்வொருவரும்
தங்களின் முன்வினைப் பயனுக்கு ஏற்ப, விளைவுக்ளை அனுபவிக்கிறார்கள். எனவே
பொறாமை வசப்படுவதன் மூலம் காலத்தை விரயம் செய்வதுடன், நமது முன்னேற்றத்தை
நாமே தடுத்தவர்களாவோம்.
ஸ்லோகம்-4.23
பற்றில்லாத, சுதந்திரமான, ஆன்மவுணர்வில் நிலைபெற்ற மனதை உடைய செயல்களை
வேள்வியாகச் செய்கின்ற ஒருவனின் எல்லா செயல்களும் கரைந்து விடுகின்றன.
பற்றின்றி வேலை செய்ய வேண்டும், சுதந்திரமாக வேலை செய்ய வேண்டும்,
ஆன்மவுணர்வில் நிலைபெற்று வேலை செய்ய வேண்டும், இந்த மூன்றையும் ஒரு தொடராகக்
நோக்கலாம், பற்றின்றி வேலை செய்தால்தான் சுதந்திரம் உள்ளவனாக முடியும், சுதந்திரமாக
வேலை செய்தால்தான் ஆன்மவுணர்வில் நிலைபெற முடியும். பற்றின்மைதான் வாழ்க்கையின்
ரகசியம். “நம்முடைய இன்பங்கள் அனைத்திற்கும் மூலகாரணம் பற்றே. நினைத்த போது
பற்றற்று நிற்கும் திறமை நம்மிடம் இருக்குமானால் எந்தத்துயரமும் இருக்காது. ஒரு
பொருளின்மீது முழு ஆற்றலோடு பற்று வைக்கும் திறமையுடன், வேண்டும் போது அதிலிருந்து
தன்னை முழுவதுமாக விலக்கிக் கொள்வதற்கான திறன் உடையவனே இயற்கையிலிருந்து
மிகச்சிறந்ததை பெற முடியும். ஒன்றின் மீது வைக்கும் பற்றின் அளவு, அதிலிருந்து
விட்டுவிலகும் திறமையின் அளவுக்கு இருக்க வேண்டும். இவ்வாறு வேலை செய்பவனின்
செயல்கள் கரைந்து விடுகின்றன என்றால், அவன் வேலை செய்தாலும் செய்யாத நிலையை
அடைந்து விட்டான், செயலில் செயலின்மை காண்கின்ற நிலையை அடைந்து விட்டான் என்று
பொருள்.
ஸ்லோகம்-4.39
ஞானத்தை அடைவதற்கு மூன்று அடிப்படை தேவைகளை பகவான் இந்த ஸ்லோகத்தில்
கூறுகிறார் சிரத்தை உடையவனாகவும், ஞானத்திலேயே கண்ணும் கருத்து்மாக இருப்பவனும்,
புலன்களை வசப்படுத்தியவனும்தான் ஞானத்தைப் பெறுகிறான். அதன் காரணமாக வெகுவிரைவில் மேலான அமைதியைப்
பெறுகிறான்.
1.
சிரத்தை: ஆழ்ந்த நம்பிக்கையுடன்
கூடிய செயல் திறனே சிரத்தை. வெறும்
நம்பிக்கை மட்டும் பலன் அளிப்பதில்லை. அந்த நம்பிக்கை, செயல்திறன் மிக்க
முயற்சியாக வெளிப்பட வேண்டும்.
2.
அந்த ஞானத்தை அடைவதை இலட்சியமாகக் கொண்ட பின், அந்த இலட்சியமானது
ஒருபோதும் மனத்தைவிட்டு அகல இடம் கொடுக்கக் கூடாது. உடலும் மனமும் எந்த வேலையில்
ஈடுபட்டிருந்தாலும் இந்த இலட்சியம் எப்போதும் நினைவில் இருக்க வேண்டும்.
3.
புலன்கள் தங்கள் போக்கில் போகாமல், நாம் எடுத்துக் கொண்ட இலட்சியத்திற்கு
அனுகூலமான பாதையில் செல்லும்படி பயிற்சி அளிக்க வேண்டும்.
ஞானம் அடைவதற்கு மட்டுமல்ல, வாழ்க்கையில் எதை
அடைய வேண்டுமானாலும் இந்த மூன்று நிலைகளிலும் நாம் பாடுபட வேண்டும்.
1.
சிந்தனை நிலை (thinking): அந்த லட்சியத்தை நாம் அடைய முடியும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை வேண்டும்.
2.
உணர்ச்சி நிலை (feeling): அந்த லட்சியம் மனதிலிருந்து அகலாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதாவது, அந்த லட்சியத்திற்குத் தேவையானவற்றை
ஏற்றுக்கொண்டு மற்றவற்றை விலக்க வேண்டும்
3.
செயல்
நிலை (willing): அந்த லட்சியத்தை நாம்
அடைய உரிய பாதையில் முன்னேற வேண்டும், உழைக்க வேண்டும், பாடுபட வேண்டும்
ஓம் தத் ஸத்