அத்தியாயம்-14
குணத்ரயவிபாக
யோகம்
ஸ்வாமி
குருபரானந்தாவின் உபதேச விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது-29-01-2022
முகவுரை:
ப்ரகிருதி என்ற மாயை என்கின்ற தத்துவத்தை சென்ற அத்தியாயத்தில்
விளக்கியுள்ளார். மாயையிலிருந்து
தோற்றுவிக்கப்பட்ட இந்த உலகம், உடல், க்ஷேத்திரம் முக்குணங்களை உடையதாக
இருக்கின்றது. இந்த குணங்களை நன்கு
அறிந்து கொண்டு, அவைகளை ஒவ்வொன்றாக நீக்கிவிடும்போது மாயையே நீக்கி
விடுவதற்கு சமமாகி விடுகிறது. இது பூரணமான
பிரம்மத்தை அடைவதற்கான முயற்சியை சுலபமாக்கி விடும்.
இவ்வாறு குணத்தை நீக்குவதற்கு அதை விசாரம் செய்து அதன் தன்மையை உணர
வேண்டும். மாயை புருஷனை சார்ந்து
செயல்பட்டுக் கொண்டிருப்பதால், அதன் ஆதாரத்தை நாடி சரணடைந்து விட்டால், இதை
சுலபமாக தாண்டி விடலாம். இந்த இரண்டு
விசாரமும் இந்த அத்தியாயத்தில் செய்யப்படுகின்றது. ஜீவனுக்கு பல பிறவிகள் எடுப்பதற்கு காரணம்
குணத்தின் மீதுள்ள பற்றுதான் என்று சென்ற அத்தியாயத்தில் கூறியுள்ளார். எனவே குணங்களைப்பற்றியும், அது எவ்வாறு நம்மை
பந்தப்படுத்துகின்றது என்பதை பற்றியும் கூறப்படுகிறது.
இதன் பிடியிலிருந்து எப்படி விடுபடுவது என்பதை நன்கு தெரிந்து கொள்ள
வேண்டும். முதலில் நாம் எந்த
குணத்திலிருக்கின்றோம் என்று அறிந்து கொள்ள வேண்டும். பிறகு அதை நீக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். குணங்களின்
பிடியிலிருந்து விடுபட்டவன் எப்படி இருப்பான் என்பதையும் இதில் விவரித்துள்ளார். எனவே இவைகள் ஞானத்திற்கு நேரிடையாக உதவி
செய்வதால் இது ஞானயோக சாதனமாக எடுத்துக்கொள்ள வேண்டும்,
श्रीभगवानुवाच ।
परं भूयः प्रवक्ष्यामि ज्ञानानां ज्ञानमुत्तमम् ।
यज्ज्ञात्वा मुनयः सर्वे परां सिद्धिमितो गता ॥ 1 ॥
இதில் தான் என்ன சொல்லப்போகிறேன் என்பதை கூறுகிறார், ஆத்மஞானத்தின் மேன்மை பற்றியும்,
அதனால் கிடைக்கும் பலனை பற்றியும் முதலிரண்டு ஸ்லோகங்களில் கூறியுள்ளார்.
பரம் ஞானானாம் ஞானம் உத்தமம் – மற்ற அறிவைக் காட்டிலும்
சிறந்ததும், உத்தமமானதும், மேலானதாகவும் உள்ள ஆத்ம ஞானத்தை
பூய: ப்ரவக்ஷ்யாமி – மீண்டும்
சொல்லப்போகிறேன்.
பரம் ஞானம் - நான் கொடுக்கக்கூடிய அறிவினால் அறியப்படும்
பொருள் மேலானது, நிலையானது, பூரணமானது அதுவே பரமாத்மா என்று அழைக்கப்படுகிறது. இதை மேலான அறிவு என்றும் அழைக்கின்றார்.
ஞானானாம் உத்தமம் – உத்தமமான பயனைக்
கொடுக்கக்கூடிய அறிவு என்றும் அழைக்கின்றார்.
இதை சாத்திய ஞானம் என்றும் கூறுவர். ஏனென்றால் இந்த அறிவை அடைந்த உடனே பலன்
கொடுக்க ஆரம்பித்துவிடும். மற்ற
அறிவெல்லாம் செயல்படுத்தும் போதுதான் பலனை அனுபவிப்போம்.
யத்3 ஞாத்வா - இந்தவொன்றை ( பிரம்மத்தை, பிரம்ம ஞானத்தை )
அறிந்து, அடைந்த
ஸர்வே முயை: - எல்லா முனிவர்களும்
இத: - இந்த உடலை விட்ட பிறகு
பராம் ஸித்திம் கதா – மேலான ஸித்தியை
அடைகிறார்கள், பிரம்மத்திடம் ஐக்கியமாகி விடுகிறார்கள்.
முனிவன் – மௌனமாக இருப்பவர்கள், அளவுடனும், தேவையான
சமயத்திலும் பேசுபவர்கள். எப்பொழுதும்
சிந்தித்து கொண்டிருப்பவர்கள். உலகத்தின்
மீதுள்ள பற்றை துறந்தவர்கள்
इदं ज्ञानमुपाश्रित्य मम साधर्म्यमागताः ।
सर्गेपि नोपजायन्ते प्रलये न व्यथन्ति च ॥ 2 ॥
இதம் ஞானம் உபாஶ்ரித்ய- இந்த பிரம்மஞானத்தை
(ஜீவ-ஈஸ்வர ஐக்கிய ஞானம்) அடைந்தவர்கள், இந்த ஞானத்திற்கான சாதனங்களை பின்பற்றி
ஞானத்தை அடைந்தவர்கள்.
மம ஸாத4ர்ம்யம் ஆகதா: - நிர்குண
ஸ்வரூபமான என்னுடைய தன்மையை (ஸ்வரூபத்தை) அடைந்தார்கள்.
ப்ரளயம் – நீண்ட உறக்கம்
ப்ரளயத்தின் போது ஒடுங்கும் நிலைக்கு மோட்சம் என்று நினைக்க கூடாது. ஸ்ருஷ்டி துவங்கும்போது எல்லா ஜீவராசிகளும் அதே
ஸம்ஸ்காரத்தோடு தோன்றுவார்கள். ஞானியின்
இந்தக்காலத்தை பராந்த காலம் என்று கூறுவார்கள்.
ஸர்கே ந உபஜாயந்தே – ஸ்ருஷ்டியின்
துவக்கத்தில் அவர்கள் பிறப்பதில்லை.
ப்ரளயே ந வியதந்தி ச – ப்ரளயத்தின் போதும்
துயரமடைய மாட்டார்கள்.
ஸாதர்மயம் – ஸமான குணத்தையுடையது. (உ-ம்) சிங்கம் போல
இந்த மாணவன்.
ममयोनिर्महद् ब्रह्म तस्मिन्गर्भं दाधाम्यहम् ।
सम्भवः सर्वभूतानां ततो भवति भारत ॥ 3 ॥
பாரத - ஹே அர்ஜுனா!
மம .யோனி மஹத் ப்ரஹ்ம – என்னுடைய
கர்ப்பப்பையாக மாயை இருக்கிறது.
தஸ்மின் கர்ப4ம் ததா4ம் அஹம் – அதில் நான் அறிவு
ஸ்வ்ரூபத்தை பிரதிபலிக்கின்றேன்
ஸம்பவ ஸர்வபூதானாம் ததோ பவதி – அனைத்து ஜீவராசிகளின்
தோற்றம் ஏற்படுகின்றது.
सर्वयोनिषु कौन्तेय मूर्तयः सम्भवन्ति याः ।
तासां ब्रह्म महधोनिरहं बीजप्रदः पिता ॥ 4 ॥
இந்த உலகத்திற்கு ஈஸ்வரனின் உபாதான காரணமாக இருக்கின்றார். இந்த உலகத்தைப் பார்க்கும்போது உண்மையிலே
ஈஸ்வரனையே பார்த்து கொண்டிருக்கின்றோம்.
ஹே அர்ஜுனா!! எல்லா கருப்பைகளிலிருந்தும் எந்த உருவங்கள் தோன்றுகின்றனவோ அவைகளனைத்துக்கும்
ப்ரகிருதியே உபாதான காரணமாக இருக்கின்றது.
நான் அவைகளுக்கு உணர்வு மயமாக இருக்கும் தன்மையை கொடுக்கும் தந்தையாக
இருக்கின்றேன்.
सत्त्वं रजस्तम इति गुणाः प्रकृतिसम्भवाः ।
निबध्नन्ति महाबाहो देहे
देहिनमव्ययम् ॥ 5 ॥
5-18 ஸ்லோகங்களில் ஆறு வகையான கருத்துக்கள்
சொல்லப்படுகின்றது. அவைகள்
1.
குண லக்ஷணம்
2.
பந்தன ப்ரகாரம் – குணங்கள் நம்மை பந்தப்படுத்தும் முறை
3.
குண ஆதிக்யம் – எப்படி ஒரு குணம் மற்ற குணத்தை அடக்கி
மேலோங்குகின்றது. குண ஏற்றத்தாழ்வுகள்
4.
லிங்கம் – குணத்தின் அறிகுறி – நாம் எந்த குணத்தின் வசம்
இருக்கின்றோம் என்பதை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் அடையாளங்கள்
5.
கதி – எந்த குணத்தின் வசத்திலிருந்து கொண்டு இருக்கின்றானோ
அதன் அடிப்படையில் அடுத்த பிறவியை அறிதல்
6.
இகலோக பலம் - .வாழும்போது அடையும் பலன்கள் கூறப்படுகின்றது.
இந்த ஸ்லோகத்தில் மூன்று குணங்களுக்குமிடையே இருக்கின்ற பொதுவான குணங்களை
கூறுகின்றார் பகவான்.
ஸத்வம் ரஜஸதம இதி குணாஹா – சத்துவ, ரஜோ, தமோ
என்கின்ற குணங்கள் இருக்கின்றன.
இங்கே
இந்த குணங்களையுடைய பொருட்களைக் குறிக்கின்றது.
அதன் தன்மையை குறிக்கவில்லை.
ப்ரக்ருதி ஸம்பாவாஹா – இந்த மூன்று
குணங்களும், ப்ரக்ருதியை உபாதானமாகக் கொண்டுள்ளது. மூன்று குணங்களையுடைய பொருட்களைக் கொண்டுள்ளது
ப்ரக்ருதி என்கின்ற மாயை.
நிபத்னந்தி மஹாபாவோ – ஹே அர்ஜுனா! இந்த
முக்குணங்கள் நம்மை பந்தப்படுத்துகின்றது.
தேஹே தேஹினமவ்யயம் – நம்முடைய சரீரத்தில்
உள்ள அறிவு ஸ்வரூபமான ஜீவனை கட்டி வைத்திருக்கின்றது. இந்த ஜீவாத்மா உண்மையில் கட்டப்பட முடியாதவன்,
அழியாத தத்துவமாக இருக்கின்றவன். மாயை அதை கட்டி வைத்திருக்கின்றது.
இந்த தேகமே நான் என்ற ஆத்ம பாவத்தை இந்த மாயை கொடுத்து விட்டு சரீரத்திற்கு
வருகின்ற கஷ்ட, நஷ்டங்கள், சுகங்கள், என்னைச் சார்ந்தது என்று நினைக்க வைத்து
அனுபவிக்க வைத்திருக்கின்ரது
तत्र सत्त्वं निर्मलत्वात्प्रकाशकमनामयम् ।
सुखसङ्गेन बध्नाति ज्ञानसङ्गेन चानघ ॥ 6 ॥
தத்ர ஸத்வம் – இந்த மூன்று குணங்களுக்குள்ளே சத்துவ
குணமானது
ப்ரகாஶகம் – அறிவைக்
கொடுக்கக்கூடியது
நிர்மலத்வாத் – இது தூய்மையாக இருக்கின்றது; அசுத்தமற்றதாக
இருக்கின்றது.
ப்ரகாசம் என்பது வெளிச்சம். அது இருப்பதை தெளிவாக காட்டக்கூடியது. ஒன்றை பற்றிய சரியான அறிவை அடைய
உதவுகின்றது. இந்த சத்துவத்திற்கு தடை
வந்தால் முழுமையான அறிவை அடைய முடியாது. ரஜஸ், தமஸ் என்கின்ற குணங்கள் வரும்போது
அவைகளை தடையாக கருதப்படுகின்றது. மனம்
தூய்மையாக இருக்கும்போது, அதாவது சத்துவ நிலையில் இருக்கும்போது ஆத்மாவின்
பிரதிபலிப்பு தெளிவாக இருக்கும் எனவே அடையும் அறிவும் சரியாக இருக்கும்.
சத்துவம் - அறியும் சக்தி
ரஜஸ் - செயல்படுகின்ற சக்தி
தமஸ் - அறிவும், செயலும் இல்லாமல் ஜடமாக இருப்பது
அனாமயம் - நோயற்றது.
மனதின் நோய்களாக காம,க்ரோதம் போன்றவைகள் கூறப்படுகின்றது. இவைகள் ரஜஸ்,
தமஸ் குணத்தில் இருக்கும்போதுதான் நம்மை பாதிக்கும். சத்துவத்தில் மனம் இருந்தால்
எந்த நோயும் அண்டாது. தூய்மையாக மனம்
இருக்கும். சத்துவம் நற்குணங்களையெல்லாம்
அடைய வைத்து மோட்சத்தை அடைவதற்கு உதவி செய்வதாக இருக்கும். இது ஞானத்திலும்,
சுகத்திலும் நம்மை சேர்த்து வைக்கும்.
ஸுகஸ்ங்கேன ப3த்4னாதி – சுகத்தில் பற்றைக்
கொடுத்து பந்தப்படுத்தும் ஞான சங்கத்திலும் பற்றை கொடுத்து பந்தப்படுத்துகின்றது.
அனக4 – பாவங்களற்ற அர்ஜுனா!!!
சத்துவ குணத்தில் இருக்கும்போது அது கொடுக்கும் சுகத்தில் நம்மை கட்டி வைத்து
விடும். அறிவை அடைந்து கொண்டேயிருக்க
வேண்டும் என்ற உந்துதலில் கட்டி வைத்திருக்கும்.
இதனால் இதையும் கடந்து குணாதீதனாக உயர்வதற்கும் தடைகளை உண்டாக்கும். இது மோக்ஷத்திற்கும் தடையாக இருக்கும். இது
ஆனந்த மய கோசத்தில் இருக்கும் அபிமானத்தை காட்டுகின்றது. இந்த சுகம் நற்குணங்களை பின்பற்றுவதால் வருவது,
இது மனதைச் சார்ந்தது. மனம் அமைதியடையும்போது ஆத்மாவின் ஆனந்தத்தை
பிரதிபிம்பிப்பதால் ஆனந்தத்தை அடைகின்றோம் அதை அனுபவிக்கின்றோம்.
ஞான ஸங்கே3ன ப3த்4னாதி – இல்லாத அறிவை அடையும்
பற்றை கொடுத்து பந்தப்படுத்திக் கொண்டிருக்கும்.
எவ்வளவு அறிவை அடைந்தாலும் திருப்தி இல்லாத மனதுடன் இருப்பார்கள். புத்தியை அமைதியுடன் வைத்திருக்கின்றது.
இந்த குணத்தில் இருப்பவர்களால் சந்தேகத்தையும், அறியாமையையும் வைத்திருக்க
முடியாது. இது விக்ஞானமய கோசத்தில் நம்மை
வைத்திருக்கும். மனதினுடைய இன்னொரு தர்மமான
அறிவை அடைய வேண்டும் என்பதை ஆத்மாவில் ஏற்றி வைத்து நான் அறிபவன் என்று எண்ண
வைத்து விடுகின்றது.
रजो रागात्मकं विद्धि पृष्णासङ्गसमुद्भवम् ।
तन्निबध्नाति कौन्तेय कर्मसङ्गन देहिनम् ॥ 7 ॥
ரஜ: ராகா3த்மகம் வித்3தி4 - ரஜோ குணம் ஆசை
ஸ்வரூபமானது, கர்ம ஸ்வரூபமாகவும் இருக்கின்றது என்று அறிந்து கொள்.
த்ருஷ்ணா - நம்மிடத்து இல்லாத பொருட்கள்,
மனிதர்கள் மீது முழுமையான பற்றை, ஆசையை ஏற்படுத்தும்.
ஆஸங்க3 –
நம்மிடத்திருக்கின்ற பொருட்கள், மனிதர்கள் மீது ஆசை வைத்திருத்தல், என்னை விட்டு
நீங்காது இருக்க வேண்டும் என்று பிடித்து வைத்து கொண்டிருத்தல்.
இந்த குணம் நம்மை
சுதந்திரமாக இருக்க விடாது. பொருட்களோடோ,
மனிதரிடமோ சார்ந்திருக்க வைத்திருக்கும்.
நம்மை செயலில் ஈடுபட வைத்திருக்கும்.
தே3ஹினம் – ஜீவர்களை, தேகத்தை உடையவர்களான ஜீவாத்மாவை
கர்ம ஸங்கேன – கர்மத்தில், செயலில் ஈடுபடும்படி
தத்3 நிப3த்4னாதி கௌந்தேய – ஹே அர்ஜூனா! அது கட்டி வைக்கின்றது.
ஆசைதான் ஒருவனை
செயலில் ஈடுபட வைக்கும். அந்த ஆசையானது
வலுப்பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான்
நாம் செயலில் ஈடுபடுவோம். லௌகீக, வைதீக
கர்மங்களில் தீவிர ஆசை செயலில் ஈடுப்ட வைக்கின்றது. செயலினால் வரும் பலன்களை இரண்டு வகையாக இருக்கின்றது. அவைகள் 1. த்ருஷ்ட பலன் – கண்ணுக்கு தெரியும் பலன்கள், 2. அதிர்ஷ்ட பலன் – பாவமோ அல்லது புண்ணியமோ கிடைக்கும். பாவம் துக்கத்தை கொடுக்கும், புண்ணியமானது
சுகத்தைக் கொடுக்கும். எனவே ரஜோகுணம்
பாவத்தைக் கொடுத்து நம்மை பந்தப்படுத்துகின்றது. விக்ஷேபம் – எதையாவது மாறி மாறி
நினைத்துக் கொண்டிருப்பது ரஜோ குணத்தின் விளைவு, பொறுமையின்மையுடன் இருக்கச்
செய்யும். மூன்று விதமான செயல்கள், மனம்,
வாக்கு, சரீரம் இவைகளால் செய்யப்படும் செயல்கள். கர்மேந்திரியங்களில் அபிமானம் வைத்திட
செய்கின்றது. இது நம்மை மனோமயத்திலும், பிராணமய கோசத்திலும் வைத்திருக்கும்.
तमस्त्वज्ञानजं विद्धि मोहनं सर्वदेहिनाम् ।
प्रमादालस्यनिद्राभिस्तन्निबध्नाति भारत् ॥ 8 ॥
தமோ குணத்தின்
ஸ்வரூபம் ஆவரணம்-மறைத்தல், இருளில் உள்ள பொருட்கள் மறைக்கப்படுவது போல உண்மையாக
இருக்கிறதை மறைக்கும் சக்தி. மாயைக்கு
ஆவரணம் (மறைதல்) விக்ஷேபம்(ஒன்றை மற்றொன்றாக மாற்றி தோற்றுவித்தல்) என்கின்ற இரண்டு வகையான சக்திகள்
இருக்கின்றது. கயிற்றில் தோன்றும் பாம்பு உதாரணத்தில் கயிற்றை மறைப்பது ஆவரணம், பாம்பாக
தோன்றுவது விக்ஷேபம்.
தமஸ்த்வ அக்ஞானஜம் – தமோ குணமானது மாயையின் ஆவரண அம்சத்திலிருந்து தோன்றியது.
ஸர்வ தேஹினாம் – எல்லா ஜீவர்களுக்கும்
மோஹனம் – மன மயக்கத்தைக்
கொடுப்பது; பிராந்தி – தவறான ஞானம்
நம்முடைய கடமையை
விட்டுவிட்டு தேவையில்லாத விஷயங்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது, தகுதியில்லாத
செயல்களில் ஈடுபடுதல், நல்லது கெட்டது தெரியாமல் செயல்களை செய்து கொண்டிருத்தல்,
சாதன-சாத்தியம் குழப்பத்தில் இருக்க வைக்கும். எது சத்யம், எது மித்யா என்ற
குழப்பத்தையும் கொடுக்கும். யாராவது நம்மை
தவறாக புரிந்து கொண்டால் அவரிடத்தில் உள்ள தமோ குணத்தினால்தான். இவ்வாறு அவர்கள்
செய்கிறார்கள் என்று அறிந்து கொண்டால் அவர் மீது கோபப்பட மாட்டோம்.
பரிதாபம்தான் கொள்வோம். நாம் கோபப்பட்டால் நாமும்
தமோகுணத்தில் இருக்கின்றதை காட்டுகின்றது. ஒரு பொருளுக்கு அதற்கு தகுந்த மதிப்பைக்
கொடுக்காமல் அதிக மதிப்பைக் கொடுக்க வைப்பது.
தமஸின் வெளிப்பாடு:
ப்ரமாதஹ – கவனமின்மை
ஆலஸ்யம் – சோம்பல்
நித்ரா – உறக்கம்
தத்3 நிப3த்4னாதி பாரத – அர்ஜுனா! இவைகளால் தமஸ் ஜீவர்களை பந்தப் படுத்துகின்றது,
பந்தத்தில் கட்டி வைக்கின்றது.
ப்ரமாதஹ: முயற்சியுடன் செய்ய வேண்டிய செயலை, விஷயத்தை மறந்து விடுதல், செய்ய வேண்டிய
செயலை செய்யாதிருந்தால் வரும் விளைவை அறியாது இருத்தல், பொறுப்புணர்வு இல்லாத
தன்மை.
சில செயல்களை கவனமாக
செய்ய வேண்டும். சில பொருட்களை கையாளும்
போது கவனமாக இருக்க வேண்டும், பேசும் போதும் கவனமாக இருக்க வேண்டும். ஆனால் தமோ குணம் இவ்வாறு இருக்க விடாது. சத்துவ குணம் மட்டும்தான் ஒருவனை விழிப்புடன்
வைத்திருக்கும்.
ஆலஸ்யம்: சோம்பலாக இருத்தல்- ரஜஸுக்கு எதிராக இருப்பது. செய்ய வேண்டிய செயலில்
சிரத்தையும், உற்சாகமும் இல்லாதிருத்தல் செயல்படுவதில் திறமையில்லாமல் இருத்தல்.
நித்ரா – உறக்கம் –தேவைக்கு மேல் உறங்குவதையும், செய்ய வேண்டியதை செய்யாமல் உறங்கிக்
கொண்டிருத்தலயும் இது குறிக்கின்றது.
सत्त्वं सुखे सञ्जयति रजः कर्मणि भारत ।
ज्ञानमावृत्य तु तमः प्रमादे सञ्जयत्युत ॥ 9 ॥
ஸத்வம் ஸுகே ஸஞ்ஜயதி – சத்துவ குணம் சுகத்தில் கட்டுகின்றது
ரஜஹ கர்மணி பாரத – அர்ஜுனா! ரஜோ குணம் செயலில் கட்டுகின்றது
தமஹ - தமோ குணங்கள்
ஞானம் ஆவ்ருத்ய – அறிவை மறைத்து
ப்ரமாதே ஸஞ்ஜயத்யுத - கவனமின்மையில் கட்டுகின்றது
ரஜோ குணம் செயலில்
ஈடுபடுத்தி கொண்டிருக்கும், தமோ குணம் கவனமின்மை சோம்பல், உறக்கம் ஆகியவற்றில் வைத்திருக்கும் .
रजस्तमश्चाभिभूय सत्त्वं भवति भारत ।
रजः सत्त्वं तमश्चैव तमः सत्त्वं रजस्तथा ॥ 10 ॥
எப்பொழுது எந்த குணம்
மேலோங்கி இருக்கும் என்பது விளக்கப்படுகிறது.
இந்த மூன்று
குணங்களும் எல்லா ஜீவராசிகளிடத்தும் இருக்கும்.
உடலும், மனமும் இந்த மூன்று குணங்களால் உருவானதுதான். ஒரு குணம் மற்ற
இரண்டு குணங்களை அடக்கி மேலோங்கியிருக்கும் போதுதான் அதனுடைய வேலையை செய்ய
முடியும்.
குணங்களின் தேவை
மோட்சத்தை அடைய
உதவும் ஞானத்தை அடைவதற்கு சத்துவ குணம் தேவையாக இருக்கின்றது. இந்த ஞானத்தை அடைவதற்கு உபநிஷத், அதை
உபதேசிக்கும் குரு, அதை அடைய வேண்டும் என்ற ஆசை, சிரத்தை, மனத்தூய்மை
தேவைப்படுகின்றது. இதை அடைவதற்கு ரஜோ
குணம் அவசியமாகின்றது. கர்மயோகமாக
செயல்களை செய்ய வேண்டும் அதற்கு ரஜோ குணம் உதவுகின்றது. தமோகுணம் நாம் ஓய்வெடுப்பதற்கு உறங்க
வேண்டியதாக இருக்கிறது. இதை அடைய
தேவையில்லை. இது இயற்கையாகவே,
பிறக்கும்போதே தமோ குணத்தை அடைந்து இருக்கின்றோம்.
எப்பொழுது இந்த
குணங்கள் மேலோங்கி இருக்கும்?
உணவு, இடம்,
சூழ்நிலைகள் இவைகளை பொறுத்துதான் அதற்கேற்ற குணம் மேலோங்கும். அதிகமாக சாப்பிட்டுவிட்டால் தமோகுணமான
உறக்கமும், சோம்பலும் நம்மை வந்தடையும். எனவே குணத்தை மேலோங்கச் செய்யும் நிலைக்கு
நாம்தான் காரணம். நாம் செய்யும் செயலே குண ஆதிக்கத்தை நிர்ணயிக்கிறது. நாம் எந்தக் குணத்தில் இருக்கின்றோமோ அதற்கு
தகுந்த செயலை செய்கின்றோம். பொதுவாக
செயல்களின் விளைவாக அடையும் பாவ-புண்ணியத்தில் சுக-துக்கங்களை
அனுபவிக்கின்றோம். இவைகளை அனுபவிக்க உடல்,
உலகம், சம்பந்தம் என்பது தேவைப்படுகின்றது.
எந்த கர்மவினை வேலை செய்கின்றதோ அதற்கேற்ற குணம் மேலோங்கி நின்று அதன் வேலை
செய்யும். எனவே எந்த நேரத்தில்
எந்தக்குணம் மேலோங்கும் என்பதை நம்முடைய செயல்களும், கர்ம வினையும் நிர்ணயம்
செய்கின்றது. இவையிரண்டில் எதனால் இந்த
குணம் மேலோங்கியிருக்கும் என்பதை சொல்ல முடியாது.
பாரத – ஹே அர்ஜுனா !
ரஜஸ்தம ச அபி4பூ4 -
ரஜஸையும், தமஸையும் அடக்கி வைக்கும் போது
ஸத்துவம் பவதி –
சத்துவமானது தன்னுடைய வேலையை செய்கின்றது.
ரஜஹ – ரஜோ குணம் தன்
வேலையை செய்யும் போது
ஸத்வம் தம ச ஏவ –
சத்துவத்தையும் தமஸையும் அடக்கி வைக்கும்
தமஹ – தமோ குணம்
மேலோங்க வேண்டுமென்றால்
ஸத்வம் ரஜஸ் ததா –
அவ்விதமே சத்துவத்தையும், ரஜஸையும் அடக்கி வைத்திருக்க வேண்டும்.
सर्वद्वारेषु देहेऽस्मिन्प्रकाश उपजायते ।
ज्ञानं यदा तदा विद्याद्विव्रुद्धं सत्त्वमित्युत ॥ 11 ॥
நாம் எந்த
குணத்திலிருக்கின்றோம் என்பதை காட்டும் அடையாளத்தை பற்றி இனி அடுத்த மூன்று
ஸ்லோகங்களில் பகவான் கூறுகின்றார்.
குணங்களை நேரிடையாக அறிந்து கொள்ள முடியாது. ஆனால் அதன் காரியத்தை, அறிகுறிகளை வைத்து எந்த குணம் மேலோங்கி
இருக்கின்றது என்பதை அறிந்து கொள்ளலாம்.
யதா3 -
எப்பொழுது
அஸ்மின் தே3ஹே – இந்த
உடலில்
ஸர்வே த்3வாரேஷு –
எல்லா ஞானேந்திரியங்களால்
ப்ரகாஶ ஞானம் –
ஒளிமயமான ஞானம் தோன்றுகின்றதோ
ததா3 – வித்யா – அப்பொழுது அறிந்து கொள்
விவ்ருத்தம் ஸத்வம்
இத உத – சத்துவ குணம்தான் மேலோங்கி இருக்கும் போது
- சூழ்நிலையை சரியாக புரிந்து கொள்ளும் சக்தி, சரியாக பொருட்படுத்தும் சக்தி, பிறருடைய சொற்களை சரியாக புரிந்து கொள்ளும் நிலை ஆகியவைகளை அடைந்திருப்போம்.
- நற்பண்புகள் இருக்கும்
நேரத்தில் சத்துவத்தில் இருப்போம்.
- நற்பண்புகளை அடைய வேண்டும் என்கின்ற முயற்சியில் இருக்கும் போது சத்துவத்தில் இருக்கின்றோம்.
लोभः प्रवृत्तिरारम्भः कर्मणामशमः स्पृहा ।
रजस्येतानि जायन्ते विवृद्धे भरतर्षभ ॥ 12 ॥
रजस्येतानि जायन्ते विवृद्धे भरतर्षभ ॥ 12 ॥
லோப4: - போதுமென்ற மனம் இல்லாத நிலை; நிறைவில்லா மனநிலை;
திருப்தியற்ற மனநிலை; மற்றவர்களிடத்திலுள்ள பொருளை அபகரிக்க வேண்டும் என்ற மனநிலை, நம்மிடத்து இருக்கும்
பொருளை பிறருக்கு கொடுக்காத மனநிலை; மென்மேலும் வளரவேண்டும் என்ற மனநிலை; இலவசமாக
பொருட்களை பெற விரும்புதல்
ப்ரவ்ருத்தி – செயல் – அன்றாட செய்யும் செயல்கள், ஏதாவது பயனற்ற செயல்கள் செய்து
கொண்டிருப்பார்கள்.
ஆரம்ப4 கர்மனாம் - செயல்களினுடைய
ஆரம்பம். குறிப்பிட்ட செயலை திட்டமிட்டு செய்வதை எடுத்துக்கொள்ளுதல்
அஶம – (சங்கல்பத்தினுடைய பிரவாகம்) மனதில் இருக்கின்ற விக்ஷேபம்; மனதில் விதவிதமான சமபந்தமற்ற
எண்ணங்களால் தாக்கப்பட்டு கொண்டிருத்தல், ஒரு வேலையை செய்யும்போது மற்றொரு வேலையை
பற்றி நினைத்துக் கொண்டு இருத்தல், இதை செய்துவிட்டு அதை செய்வேன் என்று சங்கல்பம்
செய்தல்.
ஸ்ப்ருஷா – பேராசை, மற்றவர்களுடைய பொருள் மீது ஆசைப்படுதல்,
ரஜஸ்யேதானி ஜாயந்தே விவ்ருத்தே ப்4ரதர்ஷப4 - மேற்கூறிய அறிகுறிகள்
வைத்து ரஜோ குணம் மேலோங்கி இருக்கிறது என்று அறிந்து கொள் அர்ஜுனா!!
கர்மேந்திரியங்கள் அதிகமாக செயல்படுவது, எப்பொழுதும்
பேசிக்கொண்டு இருப்பது, மற்றவர்களை ஹிம்சைபடுத்துதல்,கர்வத்துடன் இருத்தல், உயர்வு
மனப்பான்மையுடன் இருத்தல், தன்னைத்தானே புகழ்ந்து கொண்டு இருத்தல், இவைகளெல்லாம்
ரஜோகுணம் மேலோங்கும் போது வெளிப்படுகின்றது.
अप्रकाशोऽप्रवृत्तिश्च प्रमादो मोह एव च ।
तमस्येतानिजायन्ते विवृद्धे कुरुनन्दन ॥ 13 ॥
அப்ரகாஶ: - புரிந்துகொள்ளும் திறனில்லாத நிலை,
குழப்பமான மனநிலை, சூழ்நிலையை புரிந்து கொண்டு நடந்து கொள்ளாத மனநிலை, குறிப்பால்
உணர்ந்து செயல்படாத நிலை.
அப்ரவ்ருத்தி – நம்மால் செய்யப்பட வேண்டிய கடமைகள் இருந்தாலும் செய்யாமல் இருப்பது
ப்ரமாதஹ – கவனக்குறைவாக இருத்தல்
மோஹ ஏவ ச – மேலும் ஒரு பொருளுக்கு கொடுக்க வேண்டிய மதிப்பை விட அதிகமாக கொடுக்கும்
மனநிலை, அதிகமான உறக்கம், சோம்பலுடன் இருத்தல், மந்த புத்தியுடன் இருத்தல்,
தமஸ்யேதானி ஜாயந்தே விவ்ருத்3தே4 – இவைகளையெல்லாம் தமோ குணம் மேலோங்கும்போது
வெளிப்படுகின்றது என்று அறிந்து கொள் அர்ஜுனா!!
यदा सत्त्वे प्रव्रुद्धे तु प्रलयं याति देहभृत् ।
तदोत्तमविदां लोकानमलान्प्रतिपद्यते ॥ 14 ॥
விசாரம்:
ஒரு குணத்திலிருந்து
வேறொரு குணத்திற்கு எப்படி செல்வது?
பொதுவாக எல்லா
மனிதர்களிடத்தும் மூன்று குணங்களும் இருக்கின்றது. ஆனால் ஏதாவது ஒரு குணத்தில் அதிக காலம்
இருப்பார்கள். மற்ற குணங்கள் அவ்வப்பொழுது வந்து செல்லும்.
அதிக காலம் தமோ
குணத்திலிருந்து போது எப்படி மற்ற குணத்திற்கு உயர்வது?
இந்த நிலையிலிருந்து
சத்துவ குணத்திற்கு உடனே உயரமுடியாது. முதலில் ரஜோ குணத்திற்கு வந்துதான் பிறகு சத்துவத்திற்கு
முயற்சி செய்ய வேண்டும். ரஜோ குணத்திலும்
கஷ்டம் இருக்கின்றது. ஆனால் தமஸில்
அனுபவிக்கும் கஷ்டங்களை விட குறைவானதே.
ரஜோகுணம் இரண்டாக பிரிக்கப்படுகிறது. அவைகளாவது தமஸுடன் கூடிய ரஜஸ், சத்துவத்துடன் கூடிய ரஜஸ் என்பதாகும். சரியான அறிவுடனும், அணுகுமுறையுடனும்,
பாவனையுடனும் ஒரு செயலை செய்யும்போது அது சத்துவகுணத்துடன் கூடிய ரஜஸாக
கருதப்படுகிறது. இந்த வகையான ரஜோ
குணத்திற்குத்தான் நாம் செல்ல வேண்டும்.
அதுவே கர்மயோகம், இதுவே தமோ குணத்தில் இருந்து வெளிக்கொண்டு வருகின்றது.
ரஜோ குணத்திற்கு செல்வதற்கு உதவி செய்கின்றது.
ரஜோ குணத்தின் செயலிலிருந்து எப்படி விடுபடுவது என்பதை விசாரம்
செய்யப்படுகின்றது.
உறக்கத்தையும்,
சோம்பலையும் தேவையில்லாத நேரத்தில் வரும்போது எப்படி நீக்குவது?
உறக்கமானது அதிக
அழைப்பினால் வருவது, உடலுக்கு தேவையான உறக்கத்தை கொடுக்காமல் இருந்தால் வருவது,
பழக்கத்தினால் வருவது.
· மூச்சுக்காற்றை வெளியே முழுவதுமான விட்டு சிறிது நேரம் நிறுத்தி வைத்து பிறகு
உள்ளிழுக்க வேண்டும். இதை ஐந்து அல்லது
ஆறு முறை செய்ய வேண்டும்.
· எழுந்து நடக்க வேண்டும்
· குறைவாக சாப்பிட வேண்டும்
· தாமஸமான ஆகாரத்தை தவிர்க்க வேண்டும்,
· நமக்கு பிடித்தமான செயலை உறக்கம் வரும் நேரத்தில் செய்தல்
· நாம் இருக்குமிடத்தை சுத்தப்படுத்தும் வேலையை செய்வது
சோம்பல் நீங்குவதற்கு
அளவாக சாப்பிட வேண்டும், பிடித்தமான வேலையை செய்ய வேண்டும், தனிமையை தவிர்க்க
வேண்டும்.
ரஜோ குணத்திலிருந்து எப்படி விடுபடுவது என்பதை பற்றிய விசாரம்:
ரஜோ
குணத்தினால் வரும். குறைகளை நீக்கும்
நற்பண்புகளை முயற்சி செய்து அடைய வேண்டும். லோப குணத்தை நீக்க தானம் என்ற பண்பை
வளர்த்துக் கொள்ள வேண்டும்.
· ஏதாவது ஒரு பொறுப்பிலிருந்து கொண்டு செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள் அந்த பொறுப்பிலிருந்து கொஞ்ச கொஞ்சமாக தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும்.
இதனால் செயல்பாடுகள் குறைந்துவிடும், அதனால் மனது அமைதியுடன் இருக்கும். இது தியானத்திற்கு மிகவும் உதவிகரமாக
இருக்கும். ப்ரவிருத்தியிலிருந்து நிவிருத்தி செல்ல வேண்டும்
· மனதில் சங்கல்பங்கள் மாறி மாறி தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். ஒன்றை செய்து கொண்டிருக்கும்போது அடுத்து என்ன
செய்ய வேண்டும் என்பதை மனதுக்குள் எண்ணிக் கொண்டிருத்தல். இதை ஜபம், தியானம்
சாதனங்களின் மூலமாக மனதை அமைதிபடுத்த வேண்டும்.
சத்துவ குணத்திலிருந்து
விடுபடுவது எப்படி என்பதை ஸ்லோகம்-19ல் பகவான் கூறியிருக்கிறார். ஞானயோகத்தின் மூலமாக இதிலிருந்து விடுபட
முடியும். மனதுக்கு இரண்டுவிதமான பயிற்சியை
கொடுக்க வேண்டும் அவைகள் தூய்மைபடுத்துதல் (கர்மயோகம்), உறுதிபடுத்துதல்
(உபாஸனம்). அந்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
ஸ்லோக விளக்கம்:
இறந்த பிறகு ஜீவன்
அடையும் கதியை பகவான் இனி விளக்குகின்றார். பொதுவாக நாம் அடைந்த
பாவ-புண்ணியங்களின் அடிப்படையில் இறந்த பிறகு அடையப் போகும் கதி இருக்கும் என்று
கூறுவர். இந்த பலன்கள் நாம் செய்த
கர்மங்களினால் வருகின்றது. நாம் செய்யும்
கர்மங்கள் குணத்தின் அடிப்படையில் என்று கூறியிருக்கின்றார்.
யதா2 ஸத்வே ப்ரவ்ருத்தே – எப்பொழுது சத்துவ குணம் மேலோங்கி இருக்கும்
நிலையில்
ப்ரளயம்யாதி தேஹப்ருத – ஜீவனுக்கு மரணம் ஏற்படும்போது.
ததா3 உத்தம் விதான் லோகான் – அப்பொழுது உத்தமமான உலகத்தை
அமலான் ப்ரதிபத்யதே – மேலானவர் இருக்கின்ற உலகத்தை அடைகின்றான்.
அல்லது இந்த மனித உலகத்திலே
உத்தமமான பெற்றோர்களுக்கு பிறக்கின்றான்.
நல்ல புத்தி, சூழ்நிலை ஆகியவற்றை அடைந்து , தர்மப்படி வாழ்பவர்களுக்கு பிறக்கின்றான்.
இதனால் சத்துவ குணத்திலிருந்து விடுபட்டு
மேலும் முன்னேறுவதற்கு தகுந்த சூழ்நிலையின் துணைக் கொண்டு முயற்சி செய்து
கொண்டிருப்பார்கள்.
रजसि प्रलयं गत्वा कर्मसङ्गिषु जायते ।
तथा प्रलीनस्तमसि मूढयोनिषु जायते ॥ 15 ॥
ரஜஸி ப்ரளயம் கத்வா – ரஜோ குணத்திலிருக்கும் போது இறந்துவிட்டால்
கர்மஸங்கிஷு ஜாயதே – அதிகமாக செயல்கள் பல ஏற்க வேண்டியதாக இருக்கின்ற சூழ்நிலையில் பிறப்பார்கள். அதிக பொறுப்புக்கள் ஏற்க
வேண்டிய சூழ்நிலையில் பிறப்பார்கள்.
தாய்-தந்தையரை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் பிறப்பார்கள்.
ததா2 ப்ரளீன தமஸி – தமோ குணத்திலிருக்கும்போது
இறப்பவர்கள்
மூடயோனிஷு ஜாயதே –
விலங்கினத்தில் பிறப்பார்கள்.
தமோ குணத்தின்
நிலைக்கேற்ப, அதற்கேற்ற விலங்காக பிறப்பார்கள் உயிரோடு இருக்கும் குணத்தின்
அடிப்படையில் அடையும் பலனை இனி கூறுகிறார்.
कर्मणः सुकृतस्याहुः सात्त्विकं निर्मलं फलम् ।
रजसस्तु फलं दुःखमज्ञानं तमसः फलम् ॥ 16 ॥
நாம் செய்யும்
செயல்கள் சத்துவ, ரஜோ, தமோ குணங்களிலிருந்து வெளிப்படும் செயல்களாக
பிரிக்கலாம். சத்துவ குணத்தினால்
புண்ணியத்தையும், ரஜோ குணத்தினால் பாவத்தையும் அடைவார்கள். தமோ
குணத்திலிருப்பவர்கள் பாவ-புண்ணியத்தை அடையமாட்டார்கள் ஆனால் அறியாமையிலேயிருந்து
மனித பிறவியை வீணடித்து விடுவார்கள். சத்துவ குணம் சுகத்தையும், மற்ற இரண்டு குணங்களும்
துயரத்தையும் கொடுக்கும்.
சாத்விகம் நிர்மலம் பலம் – துயரத்தை கொடுக்காத சத்துவ குணத்தையுடைய பலன்
கர்மன: ஸுக்ருதஸ்யாஹு: - புண்ணியமாகும் என்று கூறப்படுகிறது
இந்த புண்ணியத்தினுடைய
பலன் நமக்கு சுகத்தைக் கொடுத்து தீர்ந்து விடும். சுகத்தை அனுபவிக்கவில்லையென்றால் மனதூய்மையை அடைவோம்.
ரஜஸஸ்து பலன் து3:க2ம் – ரஜோ குணத்தினால் அடையும் பலன் துயரமாகும்
அக்ஞானம் தமஸ: பலம் – தமோ குணத்தினால் அடைவது அறியாமையில் இருந்து கொண்டிருப்பதாகும்.
सत्वात्सङ्जायते ज्ञानं रजसो लोभ एव च |
प्रमादमोहौ तमसो भवतोऽज्ञानमेव च ॥ 17 ॥
ஸத்வாத்ஸங்ஜாயதே ஞானம் - சத்துவ
குணத்தினால் நமக்கு கிடைப்பது அறிவு (தர்ம-அதர்ம அறிவு, காரிய-காரண அறிவு), சுகமாக
இருத்தல், மன அமைதியோடு இருத்தல், நற்பண்புகளை அடைந்திருத்தல் போன்ற பலன்களாகும்.
ரஜஸஹ லோப4 ஏவ ச - ரஜோ குணத்திலிருந்து லோபம் என்கின்ற குணத்தை
அடைந்திருப்போம். பேராசைப்பட வைக்கும், எதையாவது செய்ய வேண்டும்
என்ற நினைப்பதும் இதனுடைய செயலாகும்
தமஸஹ ப்ரமாத மோஹோ அக்ஞானம் ஏவ ச - தமோ குணமானது கவனக்குறைவாக இருக்க வைத்திருக்கும். எதையும் தவறாக புரிந்து கொள்வது, அறியாமையில் இருத்தல், அதிக உறக்கம், சோம்பல் போன்றவைகளும் இதனுடைய செயல்களாகும்.
ऊर्ध्वं गच्छन्ति सत्त्वस्था मध्ये तिष्टन्ति राजसाः ।
जघन्यगुणवृत्तिस्था अधो गच्छन्ति तामसाः ॥ 18 ॥
ஊர்த்4வம் க3ச்ச2ந்தி ஸத்த்வஸ்தா2 - சத்துவ குணத்தில்
இருப்பவர்கள் உயர்ந்த நிலைக்கு செல்கின்றார்கள்.
மத்4யே திஷ்டந்தி ராஜஸா: - ரஜோ குணத்தில்
இருப்பவர்கள் இடைநிலையில் இருக்கின்றார்கள்.
தமோ குணத்தில்
இருப்பவர்கள்
தாமஸா: - தமோ குணத்தில் இருப்பவர்கள்
ஜக4ன்யகுண வ்ருத்திஸ்தா – மிக கீழான குணத்தில் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்.
அதோ4 க3ச்ச2ந்தி - கீழான நிலைக்கு செல்கிறார்கள்
இங்கே ஆன்மீக மனோ வளர்ச்சியை பகவான் குறிக்கின்றார். சத்துவ குணத்திலுள்ளவர்கள் நற்பண்புகளையும், மனத்தூய்மையையும்,
மனப்பக்குவத்தையும் உடையவர்களாக இருப்பார்கள். ரஜோ குணத்திலிருப்பவர்கள் இடைநிலை மனோ
வளர்ச்சியில் இருப்பார்கள். தமோ
குணத்திலிருப்பவர்கள் கீழான மனநிலையில் இருப்பார்கள், மன வளர்ச்சியற்ற
நிலையிலிருப்பார்கள்.
नान्यं गुणेभ्यः कर्तारं यदा द्रष्टानुपश्यति ।
गुणेभ्यश्च परं वेत्ति मद्भावं सोऽधिगच्छति ॥ 19 ॥ ***
சத்துவ
குணத்திலிருப்பவர்களுக்கும் துயரங்கள் வரும், பந்தத்தில் வைத்திருக்கும்.
இவைகளை ஞான யோகத்தின் மூலம் அடையும் பிரம்ம ஞானத்தினால் தவிர்த்து விடலாம் என்று பகவான் இங்கு கூறியிருக்கின்றார்.
பிரம்மன், மாயை என்ற
இரண்டு தத்துவங்களை எடுத்துக் கொள்வோம். மாயையே மூன்று குணங்களாக இருக்கின்றது.
இது பிரம்மத்தை சார்ந்து இருக்கின்றது. மாயை வெளித்தோற்றத்திற்கு வருவதே
ஸ்ருஷ்டியாகும். அதாவது மாயையின் மாற்றமே ஸ்ருஷ்டி, ஆனால் பிரம்மன் மாறாமல்
இருக்கிறது. நாம் பார்த்து அனுபவிக்கின்ற
உலகமாக மாயையானது மாறி இருக்கின்றது.
உலகத்தில் ஜடத்தையும், செயல்களையும், அறிவையும் அனுபவிக்கின்றோம். காரியமான இவைகளில் முக்குணங்கள் இருப்பதால்
மாயைக்கும் இந்த குணங்கள் இருக்கின்றது என்று அனுமானம் செய்ய முடிகின்றது.
மாயையின் மாற்றமே உலகத்திலுள்ள பொருட்களாகவும், உடலாகவும், மனமாகவும் இருக்கிறது. மனதில் பிரம்மத்தின் அறிவு பிரதிபலிப்பதால் இது
உணர்வுடையதாக இருக்கின்றது. இதனால்
அனுபவிப்பவன் அனுபவிக்கப்படும் பொருள் என்ற வேறுபாடு தோன்றி இருக்கின்றது. இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டியது குணம் (உடல், மனம்) குணத்துடன்(விஷயங்கள்) விவகாரம்
செய்கின்றது. அதாவது மாயையே மாயையுடன் விவகாரம் செய்கின்றது.
உதாரணமாக, கனவில் தோன்றுகின்ற
அனைத்தும் நம் எண்ணங்கள்தான் நம்மையும் எண்ணங்களால்தான் உருவாக்குகின்றோம். எண்ணங்கள்தான் ஒன்றோடோடு விவகாரம் செய்து கொண்டிருக்கின்றது. இதில் நான் வேறு மற்றவைகள் வேறு என்ற நிலையில்
அனுபவிக்கின்றோம். அதேபோல பகவானின்
கனவுகளில் நாம் இருக்கின்றோம் இந்த உலகமும் இருக்கின்றது.
ஒன்றையொன்று விவகாரம் செய்து கொண்டிருக்கின்றது. உடலாக, மனதாக உருவாகியிருக்கும் குணம்தான் கர்த்தாவாக இருக்கின்றது. இந்த நிலையில் நான் எங்கே இருக்கின்றேன்? நான் யார் என்று வினவும்போது “நான்”
மாயைக்கு வேறாக இருக்கும் தத்துவம். என்று புரிந்து கொள்ள வேண்டும்.
யதா த்ரஷ்டா அனுபஶ்யதி - உண்மையை அறிந்தவன் (ஞானி) உலகத்தை இப்படி பார்க்கின்றான்.
அனுபஶ்யதி -அனு என்ற சொல் வேதாந்த சாஸ்திரத்தை கேட்டல்,
சிந்தித்தல், நிதித்யாஸனம் என்கின்ற இந்த சாதனங்களை குறிக்கிறது. இதன் மூலமாக ஞானத்தை அடைந்தவன்
பார்க்கின்றான்.
நான்யம் குணேப்4ய கர்தாரம் – குணத்திற்கு வேறாக செயல் செய்பவன் யாரையும்
பார்ப்பதில்லை.
குணேப்யஶ்ச பரம் வேத்தி – தன்னை குணத்திற்கு வேறாக அறிகின்றான்.
முக்குணங்களை உடைய
மாயை இரண்டாக பிரிக்கப்படுகின்றது. அனுபவிப்பவன், அனுபவிக்கப்படும் பொருள் என்று
உடலையும், உலகத்தையும் பிரித்து விட்டோம்.
ஆனால் உண்மையில் இரண்டும் ஒன்றுதான். உடலும் உலகமும் குணங்களாகத்தான்
இருக்கின்றன. நான் குணங்களிலிருந்து வேறாக
இருக்கின்றேன் என்று மூன்று சரீரங்களிலிருந்து தன்னைப்பிரித்து புரிந்து
கொண்டவனைத்தான் த்ரஷ்டா என்று இங்கு குறிப்பிடுகின்றார்.
மத்பாவம் ஸஹ அதிகச்சதி – அத்தகைய ஞானி தன்னுடைய உஸ்வரூபத்தை பிரஹ்ம ஸ்வரூபத்தை
அடைகின்றான். அதுவாகவே தன்னை உணர்கிறான்.
गुणानेतानतीत्य त्रीन्देही देहसमुद्भवान् ।
जन्ममृत्युजरादुःखैर्विमुक्तोऽमृतमश्नुते ॥ 20 ॥
தேஹி – ஜீவர்களின்
தேஹ ஸமுத்பவான் – உடலை தோற்றுவிப்பதற்கு காரணமாக இருக்கின்ற
குணான் ஏதான் அதீத்ய த்ரீ - இந்த
மூன்று குணஙகளை கடந்து
ஜன்ம ம்ருத்யு ஜரா துக்கஹ – பிறப்பு, இறப்பு, வயோதிகம், இவைகள் கொடுக்கும் துயரங்களிலிருந்து விடுபடுகின்றான்.
அம்ருதம் அஶ்னுதே – மரணமற்ற நிலையை அடைகின்றான்.
குணங்கள் (உடலும்,
மனமும்) ஆசையை தூண்டிவிடும், ஆசையை செயலில் ஈடுபட வைக்கும். செய்த செயல்கள் பாவ-புண்ணியம் என்ற பலனை
கொடுக்கும். இவைகள் சுக-துக்கத்தை கொடுத்து விட்டு நீங்கும். இதை அனுபவிப்பதற்கு உடல் தேவைப்படுவதால்,
இவைகள் சரீரத்தை தோற்றுவிக்கின்றன.
இதிலிருந்து குணங்கள்தான் சரீரங்கள் தோன்றுவதற்கு காரணமாகின்றன என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. மூன்று குணங்கள் கொடுக்கும் துயரங்களிலிருந்து விடுபடுபவன் பிறப்பு, இறப்பு இவைகளிலிருந்து
விடுபடுகின்றான்.
अर्जुन उवाच ।
कैर्लिङ्गस्त्रिन्गुणानेतानतीतो भवति प्रभो ।
किमाचारः कथं चैतांस्त्रीन्गुणानतिवर्तते ॥ 21 ॥
அர்ஜுனன். மூன்று கேள்விகளை
கேட்கிறான்:
1. மூன்று குணங்களை கடந்தவனின் அடையாளம் எது?
2. குணங்களை கடந்தவன் எப்படி நடந்து கொள்வான்?
3. எவ்வாறு குணங்களை கடந்து விட்டான்?
ப்ரபோ - பகவானே
கைஹி லிங்கைஹி - எந்த
அடையாளங்களின் துணைக் கொண்டு
ஸ்த்ரீன் குணானேதான் அதீதே பவதி – இந்த மூன்று குணங்களை கடந்தவனாக இருக்கின்றான் என்று
எப்படி புரிந்து கொள்வது.
கிம் ஆசார – அவனுடைய நடவடிக்கை, நடத்தை எப்படி இருக்கும்?
கதம் ச ஏதான் த்ரீன் குணான் அதிர்வததே - எப்படி
இந்த மூன்று குணங்களை கடந்தான்.
श्रीभगवानुवाच ।
प्रकाशं च प्रवृत्तिं च मोहमेव च पाण्डव ।
अ द्वेष्टि सम्प्रवृत्तानि न निवृत्तनि काङ्क्षति ॥ 22 ॥ *****
ஶ்ரீபகவான்
சொல்லலானார்:
ü
பகவான் இங்கு கூறியிருக்கும் அடையாளங்களை மற்றவர்களிடம் கண்டு பிடிக்க
முடியாது. நம்மிடம் மட்டும்தான் கண்டு
கொள்ள முடியும்.
ü
சத்துவகுணத்திலிருப்பவனும், ஞானியும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகத்தான் காட்சி
அளிப்பார்கள்
ü
சத்துவத்திலிருப்பவர்கள் அனுபவிக்கும் துயரத்தை மன நிறைவின்மையை மற்றவர்களால்
கண்டு கொள்ள முடியாது.
மூன்று குணத்தையும்
கடந்து செல்வது என்றால் என்ன?
இரண்டு விதமான அழிவை
சாஸ்திரம் சொல்கின்றது. அவைகள் ஒன்று .
ஸ்வரூப நாசம், இரண்டாவது. காரிய நாசம். ஸ்வரூப நாசம் என்பது
வேர்கடலையை அரைத்து சட்னி செய்வது போல, இதில் அதன் ஸ்வரூபம் அழிக்கப்படுகிறது. காரிய
நாசம் என்பது ஒரு பொருளினுடைய முக்கியமான தன்மையை அழித்து விடுதல், வறுத்த கடலையை
விதைக்க முடியாது. அதனுடைய நாம-ரூபம்
அப்படியே இருக்கின்றது ஆனால் அதிலிருந்து செடியாக வளரும் தன்மை
அழிக்கப்பட்டுவிட்டது. அதேபோல குணங்களை
கடந்துவிடுவது என்பது காரிய நாசத்தை குறிக்கின்றது. அதாவது குணங்கள் கொடுக்கும் பந்தத்தை அழித்துவிடுதலையே
கடந்து செல்வது என்று அறிந்து கொள்ள வேண்டும்.
ü
குணாதீதன் என்பவன் குணங்களினால் பந்தப்படாமல் இருப்பவன். இவன் சத்துவகுண
பிரதானமாக உள்ளவனாக இருப்பான். இதனால்
ஆத்ம ஞானத்தை அடையும் சாதனங்களை பயன்படுத்தி அதை அடைந்து விடுவான்.
ü
மூன்று குணத்தினாலும் முழுமையாக பாதிக்கப்படாமல் இருப்பான். ஆனால் மூன்று
குணங்களையும் உடையவனாக இருப்பான். இது எப்படி சாத்தியமாகின்றது என்று
விளக்கப்படுகின்றது.
Ø
நாம் சில விதமான அனுபவங்களினால் பாதிக்கப்படுகின்றோம். மற்ற சில அனுபவங்களினால்
பாதிக்கப்படுவதில்லை. எந்த அனுபவத்தினால்
துன்பத்தை அனுபவிக்கின்றோமோ அதுதான் நம்மை பாதிக்கின்றது என்று நினைப்பது
தவறு. சில சமயங்களில் கஷ்டத்திலும்
பாதிக்கப்படாமல் இருக்கின்றோம், சுகத்தினாலும் பாதிக்கப்படாமல்
இருக்கின்றோம். (உ-ம்) விரதம்
இருக்கும்போது கஷ்டத்தை அனுபவித்தாலும் மனநிறைவுடன்தான் இருக்கிறோம். அதேபோல
வேண்டாத விருந்தாளியாக இருக்கும்போது அருந்தும் சுவையான உணவு சுகத்தை கொடுத்தாலும்
மனதில் வருத்ததுடன்தான் இருப்போம்.
இதிலிருந்து வெளி சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும் மனம் ஒரேமாதிரி
இருப்பதில்லை என்று புரிந்து கொள்ளலாம்.
Ø
எதனால் மனம் பாதிக்கப்படுகின்றது அல்லது பாதிக்கப்படாமல் இருக்கின்றது? நமது மனதுக்குள் வரும் எண்ணங்கள் சத்துவ, ரஜோ,
தமோ என்று மூன்று வகையாக இருக்கின்றது. மனதுக்குள் வரும் முதல் எண்ணமானது
எப்படிபட்டதாக இருந்தாலும் அதனால் பாதிக்க
மாட்டோம். இரண்டாவது எண்ணத்திற்கு
முதல் எண்ணம் விஷயமாக இருப்பதால் அதைப் பொருட்படுத்துதல் துயரத்தையோ, சுகத்தையோ
கொடுக்கும். மனமே நானாக இருக்கும்
நிலையில்தான் இரண்டாவது எண்ணம் நம்மைப் பாதிக்கின்றது. ஏனென்றால் மனம் நான் என்று எண்ணும்போது
நம்மிடத்து வரும் எண்ணங்கள் என்னைச் சார்ந்தது என்று எண்ணத் தூண்டுகிறது. அதனால் பாதிக்கப்படுகின்றோம். இந்த விதமான
மூன்று எண்ணங்களும் தோன்றினால் துக்கமோ, சுகமோ மனது அனுபவிக்கின்றது. அதனால்
மூன்றாவதாக வரும் எண்ணமாக ராகமோ அல்லது துவேஷமாகவோ இருக்கின்றது
Ø
மனமே நான் என்ற நிலையிலிருந்து நீங்கி மனதைப் பார்க்கும்போது மூன்று வகையான
விருத்திகள் வந்தாலும் அவைகளை வேடிக்கை
பார்த்து கொண்டிருப்போம். அதனால் ஆழ்மனதில் எந்தவித பாதிப்பும் அடையாமல்
இருப்போம். ஞானியானவன் குணாதீதனாக
இருப்பதால் மூன்று வகையான எண்ணங்களைய்ம் சாட்சியாகத்தான் பார்த்து கொண்டிருப்பான்,
அதனால் எந்தவிதமான பாதிப்பும் அடையமாட்டான்.
குணாதீதன் மூன்று குணங்களையும் அனுபவிக்கின்றான் ஆனால் பாதிக்கப்-படுவதில்லை.
ஸ்லோக விளக்கம்:
ப்ரகாஶம் – சத்துவ குணமுள்ள எண்ணங்களும் வருகின்றது
ப்ரவ்ருத்திம் – ரஜோ குணமுள்ள எண்ணங்களும் வருகின்றது
மோஹம் ஏவ ச – தமோ குணமுள்ள எண்ணங்களும் வருகின்றது
பாண்டவ – ஹே அர்ஜுனா!!! குணாதீதன்
ந துவேஷ்டி ஸம்ப்ரவ்ருத்தனி – இவைகள் வந்தாலும் அவைகளை வெறுப்பது இல்லை.
ந நிவிருத்தானி காங்க்ஷதி – விரும்புவதும் இல்லை.
ஞானிக்கு தன்
மனதுக்குள் வரும் எண்ணங்கள் மீது விருப்பு-வெறுப்பு கிடையாது. ஏனென்றால் அவன் குணங்களை கடந்தவன், மனதோடு சம்பந்தப்படாதவனாக இருக்கின்றான்.
उदासीनवदासीनो गुणैर्यो न विचाल्यते ।
गुणा वर्तन्त इत्येवं योऽवतिष्टति नेङ्गते ॥ 23 ॥
உதா3ஸீனவத் அஸீனோ - உதாசீனனைப்போல வாழ்ந்து
கொண்டிருப்பான்
உதாஸீனன் – யாருடைய பக்கத்திலும் சேர்ந்து கொள்ளாமல்
நடுநிலையோடு இருப்பான். எதையும் கண்டு
கொள்ளாமல் இருப்பான், குணங்களினால் வரும் பலன்கள் மீது பற்றில்லாமல் இருப்பான்.
குணைஹி யஹ ந விசால்யதே – குணங்களுடைய பலன்களால், செயல்களால் அசைக்கப்படாதவன்; குணங்களின் செயல்களால் இவன் அடைந்த அறிவை அசைக்க
முடியாது.
கு3ணா வர்தந்த – குணங்கள் குணங்களுடன் விவகாரம் செய்து கொண்டு இருக்கின்ற
இத்யேவ அவதிஷ்டதி – இப்படிபட்ட அறிவுடன் இருக்கின்றான்
ந இங்கதே - அவன் அறிவிலிருந்து வீழ்ச்சி அடைவதில்லை.
அறிவில் நிலை பெற்றிருக்கின்றான்.
समदुःखसुखः स्वस्थाः समलोष्टाश्मकाञ्चनः ।
तुल्यप्रियाप्रियो धीरस्तुल्यनिन्तात्मसंस्तुतिः ॥ 24 ॥
ஸ்வஸ்தா – தன்னிடத்தில் மகிழ்ந்து கொண்டு இருப்பவன்.
நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு
எதையும் சார்ந்திருக்க தேவையில்லை என்று புரிந்து கொள்ள வேண்டும்.
ஸம து:க ஸுக – சுகத்திலும், துக்கத்திலும் ஒரே மனநிலையில் இருத்தல், சமமான மனநிலையோடு இருத்தல்
ஸம லோஷ்ட அஶ்ம காஞ்சன – களிமண், பாறை, தங்கம், ஆபரணங்கள் இவைகளை சமமாக பாவிப்பவன்
துல்ய ப்ரியாப்ரியா – பிரியமான சூழ்நிலையிலும், விரும்பத்தகாத சூழ்நிலையிலும்
துல்ய நிந்தா ஆத்ம ஸம்ஸ்துதி தீ4ரா– புகழும் போதும், இகழும் போதும்
சமமான மனநிலையோடு
இருப்பான் ஞானியானவன்.
मानापमानयोस्तुल्यस्तुल्यो मित्रारिपक्षयोः ।
सर्वरम्भपरित्यागी गुणातीतः स उच्यते ॥ 25 ॥
மானாப்மான யோஹோ துல்ய - மானம், அவமானம்
இரண்டையும் சமமாக எடுத்துக் கொள்பவன்
துல்ய மித்ர அர்பக்ஷயஹ - நண்பன், பகைவன்
இருவர்களிடத்திலும் சம புத்தியுடனும் இருப்பவன்.
ஸர்வாரம்ப பரித்யாகீ – எல்லா செயல்களையும் துறந்தவன், செயல்களில் வரும்
பலன்களின் பற்றற்றவன்.
குணாதீத ஸஹ உச்யதே – இத்தகையவனே குணாதீதன் என்று சொல்லப்படுகிறது.
मां च योऽव्यभिचारेण भक्तियोगेन सेवते ।
स गुणान्समतीत्यैतान्ब्रह्मभूयाय कल्पते ॥ 26 ॥
இதில் பக்தியின்
முக்கியத்துவத்தை பகவான் குறிப்பாக உணர்த்துகின்றார்.
மாம் ச யஹ அவ்யபிசாரேண - எவனொருவன்
பிளவுபடாத பக்தியுடன்
பக்தியோகேன ஸேவதே - நிஷ்காம பக்தியுடன் வழிபடுகின்றானோ
ஸஹ - அவன்
ஏதான் குணான் அதீத - இந்த குணங்களை கடந்து
ப்ரஹ்ம பூயாய கல்பதே – பிரம்ம ஸ்வரூபத்தை அடைவதற்கு தகுதி அடைகின்றான்.
ब्रह्मणो हि प्रतिष्टाहममृतस्याव्ययस्य च ।
शाश्वतस्य च धर्मस्य सुखस्यैकान्तिकस्य च ॥ 27 ॥
ப்ரஹ்மணஹ ஹி ப்ரதிஷ்டா அஹம் - நானே பிரம்ம
ஸ்வரூபமாக இருக்கின்றேன்.
அம்ருதஸ்ய - மரணமற்றதுமான
அவ்யயஸ்ய – அழியாததுமான, மாற்றமடையாததுமான, தேய்வடையாததுமான பிரம்மமே
ஶாஶ்வதஸ்ய ச தர்மஸ்ய - என்றுமுள்ள
ஞானயோகத்தின் மூலம் அடைய வேண்டிய இறுதி லட்சியமாக இருக்கின்றது.
ஐகான்திகஸ்ய ஸுகம் ச – துன்பம் இல்லாத இன்பத்தை கொடுக்க கூடிய
பிரம்மமாகவே இருக்கின்றான் குணாதீதன்
தொகுப்புரை.
01-02 பகவான் தான் என்ன சொல்லப்போகிறேன் என்று
கூறுகின்றார். உத்தமமான ஆத்ம ஞானத்தையும், அதன் பலனையும் உனக்கு சொல்லப்போகிறேன்
என்று கூறுகின்றார்.
03-04 ஸ்ருஷ்டியைப் பற்றி விவரித்தார். படைப்புக்கு உபாதானம், நிமித்தம் என்று இரண்டு
காரணங்கள் உண்டு இந்த உலகம் தோன்றுவதற்கு நானே இந்த இரண்டு காரணங்களாக
இருக்கின்றேன் என்று கூறுகிறார்.
05 குணத்தைப்பற்றி விளக்கினார். மூன்று குணங்களை அறிமுகப்படுத்தி அதன் முக்கிய
செயலான ஜீவனை உடலோடு பந்தப்படுத்துதல் என்பதை கூறினார்
06-09 குணங்களின் லட்சணங்களை கூறி பிறகு அவைகள் எப்படி
பந்தப்படுத்துகின்றது என்பதை விவரித்தார்.
சத்துவத்தின்
லட்சணம் - ப்ரகாஶம் – அறிவு ஸ்வரூபம்
ரஜஸின் லட்சணம் - ப்ரவ்ருத்தி – செயலில் ஈடுபடுதல்
தமஸின் லட்சணம் - அக்ஞானம் – அறியாமை, மோஹம்
சத்துவம் –
ஞானத்தினால் அடையும் சுகமானது நம்மை பந்தப்படுத்துகிறது. எதையாவது அறிந்து
கொண்டேயிருக்க வேண்டும் என்று மனம் அலை பாய்ந்து கொண்டேயிருக்கும். அடைந்த நற்பண்புகளினால் கிடைக்கும் சுகத்திலே
பந்தப்பட்டிருக்கும். விக்ஞானமய, ஆனந்தமய கோசத்திலே வைத்திருக்கும்
ரஜஸ் – செயலில்
ஈடுப்படுத்துகின்றது. ஆசை, லோபம், க்ரோதம்
போன்ற தீயகுணங்களை கொடுத்து பந்தப்படுத்துகின்றது
தமோ – அறியாமை,
மோகம், கவனமின்மை, அதிக உறக்கம், சோம்பல் போன்றவற்றில் பந்தப்படுத்துகின்றது.
இந்த மூன்று
குணங்களும் இவ்வாறு பந்தப்படுத்தி துயரத்தைக் கொடுத்து கொண்டிருக்கும்.
10 குண ஆதிக்கத்தைப் பற்றி கூறியுள்ளார். எல்லோரிடமும் மூன்று குணங்கள் இருந்தாலும்,
எ‘ந்த குணம் மேலோங்கி இருக்கின்றதோ அந்த குணம்தான் நம்மை பந்தப்படுத்தும்.
11-13 குணத்தின் அடையாளங்களை கூறியுள்ளார். நாம் எந்தக் குணத்தின் வசத்தில் இருக்கின்றோம்
என்பதை சில அடையாளங்களை வைத்து நாம் அறிந்து கொள்ளலாம். குணங்களின் லட்சணங்கள் வெளிப்படும் போது அவைகளை
வைத்தே நாம் அறிந்து கொள்ளலாம்.
14-15 குணத்தின் பலன்கள் கூறப்பட்டது. ஒருவன் இறக்கும்போது எந்தக் குணத்தின்
இருக்கின்றானோ அதற்கேற்ற லோகத்தை அடைகிறான்
தமோ குணம் –
விலங்குகளாக பிறக்க வைக்கும்
ரஜோ குணம் –
அதிகமாக செயலில் ஈடுபடக்கூடிய சூழ்நிலையில் பிறப்பான்.
சத்துவ குணம் –
மேலான உலகத்தை அடைய வைக்கும் அல்லது இந்த உலகத்தில் நல்ல குலத்தில், சூழ்நிலையில்
பிறக்கலாம்.
16-17 இந்த குணங்கள் வாழும்போது என்ன பலன்கள்
கொடுக்கும் என்று கூறியுள்ளார்.
சத்துவம் - அறிவை அடையலாம்
ரஜோ - செயலில் ஈடுபடுத்தி பாவத்தை கொடுத்து
துயரப்படுத்தும்
தமோ - அறியாமையிலே வைத்திருக்கும்
18 இந்த குணங்களை பற்றிய முடிவுரை கூறினார்
19-20 ஆத்ம தத்துவத்தை விளக்கினார். மூன்று குணங்கள் பந்தப்படுத்திக்
கொண்டிருந்தாலும் இவைகளிலிருந்து விடுபட ஆத்ம ஞானத்தை அடைய வேண்டும், அவனே
குணாதீதனாக மாறுகின்றான். குணங்கள்தான் செயல்படுகின்றது. நான் வெறும் சாட்சி என்ற
அறிவுடன் இருப்பவன் குணங்களைக் கடந்துவிடுவான். அதனால் வரும் பாதிப்புக்களை அடைய மாட்டான்.
21 அர்ஜுனன் மூன்று கேள்விகளை
கேட்டான். அவைகள்
1.
குணாதீதனிடம் இருக்கும் அடையாளங்கள்
2.
அவனுடைய அன்றாட நடவடிக்கை எப்படி இருக்கும்
3.
குணங்களை கடந்து செல்வதற்கு என்ன வழி
22 குணாதீதனுடைய அடையாளங்களை கூறினார். இந்த
லட்சணங்களை நம்மிடத்தில் மட்டும்தான் கண்டு கொள்ள முடியும். இவன் மூன்று
குணங்களும் உடையவனாக் இருந்தாலும், இவைகளாலும் பாதிக்கும் மனதை கொண்டவனாக
இருந்தாலும் அவைகளை விரும்புவதில்லை, வெறுப்பதுமில்லை. நமக்குள் வரும் எண்ணங்கள்ளை வெறுக்கலாம்,
விரும்பலாம் ஆனால் குணாதீதன் இவைகளால் மனமாற்றம் அடைவதில்லை.
23-25 குணங்களை கடந்தவனுடைய நடவடிக்கைகளை (ஆசாரம்)
கூறினார். இவன் எல்லோரிடமும் சமமாக நடந்து கொள்வான். விருப்பு-வெறுப்பு தரக்கூடிய
சூழ்நிலைகளிலும் சமமாக இருப்பான். ஜடமான
பொருட்கள் இடத்திலும் இதே நிலையுடன்தான் இருப்பான். உதாரணமாக கல், மண், தங்கம்,
வைரம் இவைகளை ஒரேமாதிரிதான் பார்ப்பான்.
26-27 குணங்களை கடக்கும் வழியை கூறியுள்ளார். தமோ குணத்திலிருந்து மீள ரஜோ குணத்திர்கு
சென்றுவிட வேண்டும். இதைத்தான் கர்மயோகம்
என்று அழைக்கிறார்கள். பிறகு ரஜோ
குணத்தின் பிடியில் இருந்தால் சத்துவ குணத்திற்கு சென்றுவிட வேண்டும். தியானம்,
ஜபம் போன்ற சாதனங்களைப் பயன்படுத்தும் போது செயலெதுவும் செய்யாமல் இருக்கின்றோம்.
இதனால் சத்துவ குணம் மேலோங்கி விடும். இந்த நிலையிலும் நமக்கு துயரங்கள்
வரலாம். எனவே இதையும் கடந்து செல்ல வேண்டும். இதற்கு ஞானயோகத்தை கடைப்பிடித்து குணாதீதனாக
மாற வேண்டும். ஆத்ம ஞானத்தை அடைந்திட
வேண்டும். ஆனால் எல்லா நிலைகளிலும் பக்தி
என்ற சாதனத்தை விடாமல் கடைப்பிடிக்க வேண்டும். பிரம்ம ஸ்வரூபமாக நான் இருக்கிறேன்,
அழிவற்றவன், மாறாதவன், துன்பம் இல்லாத இன்பத்தை கொடுக்க கூடிய பிரம்ம ஸ்வரூபமாகவே
குணாதீதன் இருக்கிறான். என்று கூறினார்.
ஓம் தத் ஸத்
ooo000ooo