அத்யாஸ பாஷ்யம் – சங்கரர்
ஸ்வாமி குருபரானந்தா உபதேசம் விளக்கம்
முகவுரை1. அத்யாஸம்(Illusion) என்ற சொல்லுக்கு காட்சிபிழை என்று பொருட் கொள்ளலாம்.
கயிற்றில் பாம்பைப் பார்ப்பதுதான் அத்யாஸமாகும்.
2. அத்யாஸம் எப்போது ஏற்படும்?
அதேபோல நான் என்ற சொல்லில் சாமான்யமாக நமக்கு தெரிவது பிரம்மன்தான். நான் இருக்கின்றேன், நான் உணர்வுடன் இருக்கின்றேன் என்று சொல்லம்போது நாம் நம்மை அறியாமல் எப்போதும் இருந்துக் கொண்டிருக்கின்ற பிரம்மத்தை நம்மையறியாமல் குறிக்கின்றோம். ஆனால் நம்முடைய விசேஷ ஞானத்தில்தான் தவறு நடந்திருக்கிறது, அத்யாஸம் ஏற்பட்டுள்ளது. நான் அறிவற்றவன், நான் நோயுற்றிருக்கிறேன் என்ற விசேஷ ஞானம் இருக்கின்றது. இது கயிற்றில் பாம்பைப் பார்ப்பது போல உள்ள தவறான விசேஷ ஞானம். நம்மை பற்றி என்னவெல்லாம் சொல்கின்றோமோ அவைகளெல்லாம் அத்யாஸம். நம் உண்மை ஸ்வரூபத்தின் மீது ஏற்றி வைக்கப்பட்டதாகும். இவைகளெல்லாம் ஸ்தூல, சூட்சும, காரண சரீரத்தின் தர்மங்கள், அம்சங்கள் ஆகும். பாம்பை எப்படி தவறென்று நீக்குகின்றோமோ அதேபோல மூன்று சரீரங்களையும் நீக்கி உண்மையான விசேஷ ஞானமான பிரம்மன் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
நான் சம்சாரி என்ற வாக்கியத்தில் நான் என்பது சாpயான சாமான்ய அம்சம், சம்சாரி என்பது தவறான விசேஷ ஞானம். சாpயான விசேஷ அம்சமான பிரம்மமாக தன்னை உணர்ந்து கொள்ள வேண்டும். கயிறு என்ற சரியான விசேஷஞானம் வருவதும், தவறான விசேஷஞானம் செல்வதும் ஒரே நேரத்தில் நடக்கும். அதேபோல பிரம்மன் என்ற சரியான விசேஷஞானம் வந்தவுடன் சம்சாரி என்ற தவறான விசேஷஞானம் அதே நேரத்தில் சென்றுவிடும். மூன்று சரீரங்களில் உள்ள அபிமானம் சென்றுவிடும்.
விசாரம்:
பகவான் சங்கரர் அத்யாஸத்தை ஏன் முகவுரையாக கொடுத்துள்ளார் என்பது விசாரம் செய்யப்படுகிறது.
கேள்வி பிரம்ம சூத்திரம்
அவசியமில்லை. அதனால் எழுத வேண்டிய அவசியமில்லை.
பதில் முதல் சூத்திரத்தின் விளக்கம்தான் இதற்கு
பதிலாகும்.
கேள்வி விசாரம் செய்வதினால் எந்தப் பலனும் அடையப்
போவதில்லை. மேலும் நிர்குண பிரம்மத்தைப் பற்றிய
அறிவைக் கொடுத்து சம்சாரத்தை நீக்குகிறேன் என்று சொன்னால் அந்த நிர்குண பிரம்மமே
கிடையாது என்று நான் சொல்கிறேன். எனவே அதை விளக்க வேண்டிய அவசியமே இல்லை. இந்த
விசாரம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.
பதில் இந்த நிர்குண பிரம்ம அறிவை அடைந்து மோட்சத்தை
அடைய விரும்புகின்ற தகுதியுடைய அதிகாரிகள் இருக்கின்றார்கள். இதை முதல்
சூத்திரத்திலேயே வியாச பகவான் நிலைநாட்டியிருக்கிறார்.
அத்யாஸ பாஷ்யமானது அத்யாஸத்தை நிலைநாட்டுவதால் பலனையும், அறிவையும் அடைவோம். அத்யாஸத்திற்கும் மோட்ச பலன் அடைவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்பதும் விளக்கப்படுகிறது. அத்யாஸம் என்பது காரணத்தை நிலை நாட்டுகிறது. இது சாத்தியமான மோட்சத்தைக் கொடுக்கிறது.
பொதுவாக ஞானத்தினுடைய தன்மையானது இருப்பதைப் காட்டிக் கொடுப்பதாகும். ஞானம் எதையம் உற்பத்தி செய்யாது, எதையுமே அழித்தும் விடாது. உதாரணமாக அறையில் உள்ள பாம்பை பார்க்கும் போது பாம்பு இருக்கிறது என்ற ஞானம் வந்துவிட்டது. அந்த ஞானமே பாம்பை விரட்டாது. ஏதாவது செய்துதான் அதை விரட்ட முடியும். மங்கலான வெளிச்சத்தில் கயிற்றில் தோன்றும் பாம்பானது கயிறு என்ற ஞானம் வந்தவுடன் மறைந்து விடுகிறது. இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது பொய்யாக காட்சியளிக்கும் மித்யா வஸ்து ஞானம் வந்தவுடன் சென்றுவிடும் என்பதாகும். இங்கே ஞானம் கயிற்றில் விசேஷ அறியாமையினால் தோன்றிய பாம்பை நீக்குகிறது. அதேபோல பந்தம் என்பதை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். இந்த பந்தம் உண்மையாக இருந்துவிட்டால் அதை ஞானத்தால் நீக்க முடியாது. ஆனால் மித்யாவாக, பொய்யாக இருந்தால் ஞானத்தினாலே நீக்கிவிடலாம். இது தெரியாமல் இருப்பதால் நாம் சம்சாரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். எனவே பந்தம் என்பது மித்யா என்று நிலைநாட்ட வேண்டிய அவசியமாகிறது. பந்தம் என்பது அத்யாஸம் என்று நிலைநாட்டினால் அதை ஞானத்தினால் நீக்கமுடியும்.
சம்சாரம் என்பது என்ன என்பதைப் பார்ப்போம். உடலுக்கு வரும் கஷ்டங்கள் உடலுக்குத்தான் துன்பத்தைத் தருகிறது. இது சம்சாரமல்ல. மனதில் அனுபவிக்கின்ற நிறைவின்மை, மனம் அனுபவிக்கின்ற வேதனைகள், பயம், க்ரோதம், பொறாமை போன்றவைகள்தான் சம்சாரம். இந்த சம்சாரம் யாவும் மித்யாவாகும். இது மித்யாவாக இருப்பதால் அதை ஞானத்தினாலேயே நீக்கமுடியும்.
கேள்வி பந்தம் இல்லையென்று சொல்கிறீர்கள். இல்லாததை
நீக்குவதற்கு ஞானம் தேவையில்லை. அதனால் பொய்யான பந்தத்தினால் எந்தவித கஷ்டமும்
ஏற்படாது. எனவே எதற்கு பொய்யான பந்தத்தை போக்குவதற்கு முயற்சி எடுக்கிறீர்கள்.
பொய்யான கோபம் நம்மை பாதிக்காது. அதேபோல பொய்யான பந்தமும் நம்மை பாதிக்காத போது
அதை நீக்குவதற்கு ஏன் முயற்சி செய்ய வேண்டும்.
பதில் உண்மையான பாம்பைப் பார்த்தால் எந்தளவு பயம்
ஏற்படுகிறதோ, அதேயளவு பயம்
பொய்யான பாம்பைக் கயிற்றில் பார்க்கும் போது ஏற்படுகிறது. கயிற்றின் இருப்பு
பாம்புக்குப் போயிருக்கிறது. எனவே கயிறுதான் உண்மையில் பயத்தைக் கொடுக்கிறது.
கயிற்றின் உண்மைத்தன்மையை புரிந்துக்கொண்டால் பாம்பின் இருப்புக் கயிற்றுக்கு
சென்றுவிடுவதால் பயம் சென்றுவிடுகிறது. அதேமாதிரி மித்யாவாக இருக்கின்ற ஜகத் நிமித்தமாக நமக்கு பயம்
ஏற்படுகிறது. சம்சார தாபம் ஏற்படுகிறது. இந்த உலகத்தின் மித்யத்தன்மையை உணர்ந்துக்
கொள்ளாததனால் நாம் சம்சாரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இந்த உலகம் பொய்
என்ற அறிவை அடைந்வுடன் மனதில் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற சம்சாரம்
சென்றுவிடுகிறது. எனவே இந்த உலகம் மித்யா என்பதை நிலைநாட்டு வேண்டுமென்றால்
அத்யாஸத்தை நிலைநாட்ட வேண்டும். ஞானத்தினால் ஒன்று செல்கின்றதென்றால் அது
பொய்யாகத்தான் இருக்க வேண்டும்.
கேள்வி நிர்குண பிரம்மன் என்பதே கிடையாது. ஈஸ்வரன்
ஜகத்துக்கு காரணம். காரண-காரிய தத்துவத்தில் காரணத்தின் குணம் காரியத்தில்
இருக்கிறது. எனவே ஈஸ்வரன் ஜகத்துக்கு காரணமாக இருப்பதால் சகுண பிரம்மன்தான்
இருக்கமுடியும்.
பதில் இந்த உலகம் அத்யாஸத்தினால் தோன்றிக்
கொண்டிருக்கின்றது. பிரம்மன் நிர்குணமாக இருந்துக் கொண்டிருக்கிறது. உலகத்தின்
தன்மைகளை பிரம்மத்தின் மீது ஏற்றி வைத்திருக்கின்றோம். பிரம்மன் நிர்குணமாக
இருந்துக் கொண்டு உலகம் சகுணமாக இருப்பதற்குக் காரணமாக இருக்கின்றது. இந்த
பிரம்மத்தின் மீது உலகம் ஏற்றி வைத்திருப்பதனால் பிரம்மன் சகுணத்திற்கு
அதிஷ்டானமாக இருக்கிறது. எனவே நிர்குணத்தை நிலைநாட்ட வேண்டுமென்றாலும் அத்யாஸத்தை
நிலைநாட்ட வேண்டியிருக்கிறது. எந்தவொரு அத்யாஸத்திலும் விசேஷ அக்ஞானம் இருக்க
வேண்டும், சாமான்ய ஞானமும் இருக்க
வேண்டும்.
கேள்வி தெரிகின்ற பிரம்மத்தைப் பற்றி எதற்கு விசாரம்
செய்ய வேண்டும்?
பதில் பிரம்மத்தைப் பற்றிய விசேஷ அக்ஞானம்
இருப்பதனால்தான் விசாரம் செய்யப்படுகிறது. பிரம்மத்தை நிலைநாட்ட வேண்டுமென்றாலும்
அத்யாஸத்தை நிலைநாட்ட வேண்டும். அதாவது விசேஷ அக்ஞானத்தை நிலைநாட்ட வேண்டும். எனவே
விசாரத்தை ஆரம்பிக்கலாம் என்று கூறப்படுகிறது.
அத்யாஸ
பாஷ்யத்தில் ஆறு கருத்துக்கள் கூறப்பட்டுள்ளது. அவைகள்,
1.
அத்யாஸத்தைப் பற்றிய சந்தேகம்
2.
சந்தேகத்திற்கான பதில்
3.
அத்யாஸ லட்சணம்
4.
அத்யாஸ நடப்பதற்கான வாய்ப்பு
5.
அத்யாஸம் நடந்திருக்கின்றது என்று அறிய உதவும் பிரமாணம்
6.
முடிவுரை
ஆகியவைகளாகும்.
1. அத்யாஸத்தைப்
பற்றிய சந்தேகம்
ஆத்மாவிற்கும்
அனாத்மாவிற்கும் இடையே உள்ள அத்யாஸத்தைப் பற்றிய விளக்கம் கூறப்படுகிறது. ஆத்மாவென்ற
கயிற்றில் அனாத்மா என்ற பாம்பை ஏற்றி வைத்திருப்பதைப் பற்றி விளக்கப்படுகிறது.
ஆத்மாவுக்கும் அனாத்மாவுக்குமிடையே அத்யாஸம் நடந்திருக்கிறது. நான் என்ற ஆத்மாவின் மீது அனாத்மாவான மூன்று சரீரங்கள் ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. நான் என்ற சொல் உடலான அனாத்மாவை குறிக்கிறது. என்னுடையது என்பது உலக அனாத்மாவைக் குறிக்கிறது. உடலையும் சில சமயங்களில் என்னுடையது என்றும் குறிக்கிறோம். உதாரணமாக என்னுடைய உடல் சுகவீனமாக இருக்கிறது என்று சொல்லும் போது என்னுடையது என்பது உடலைக் குறிக்கிறது. ஆத்மாவின் மீது ஜடமான உடலானது ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. ஞானத்தினால் உடல் நானல்ல என்று உணர்ந்தவுடன் சம்சாரம் நீங்கிவிடுகிறது. உடல் தர்மங்கள் ஆத்மாவின் தர்மங்கள் அல்ல என்ற உறுதியான அறிவு அடையப்படுகிறது.
ஆத்ம-அனாத்மா அத்யாஸம் சம்பவிக்கவே முடியாது. ஆத்மா எந்த அளவுக்கு சத்யமோ அந்த அளவுக்கு இந்த உடலும் சத்யமானது. உடல் ஆத்மாவோடு ஒட்டியிருப்பதால் ஏதாவது கர்மம் செய்துதான் அதனை நீக்கிவிட வேண்டும். இவையிரண்டும் சம ஸத்தாவுடன் இருக்கிறது. அறிவை அடைந்து நீக்கிவிட முடியாது. அத்யாஸம் இரண்டு அனாத்மாக்களிடையேதான் நடக்கும். பார்ப்பவனுக்கும், பார்க்கப்படுகின்ற பொருளுக்கும் இடையே அத்யாஸம் நடக்கவே நடக்காது. இதை கீழ்கண்ட 5 காரணங்களால் நிரூபிக்கப்படுகிறது.
ஆத்மாவுக்கும் அனாத்மாவுக்குமிடையே அத்யாஸம் நடந்திருக்கிறது. நான் என்ற ஆத்மாவின் மீது அனாத்மாவான மூன்று சரீரங்கள் ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. நான் என்ற சொல் உடலான அனாத்மாவை குறிக்கிறது. என்னுடையது என்பது உலக அனாத்மாவைக் குறிக்கிறது. உடலையும் சில சமயங்களில் என்னுடையது என்றும் குறிக்கிறோம். உதாரணமாக என்னுடைய உடல் சுகவீனமாக இருக்கிறது என்று சொல்லும் போது என்னுடையது என்பது உடலைக் குறிக்கிறது. ஆத்மாவின் மீது ஜடமான உடலானது ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. ஞானத்தினால் உடல் நானல்ல என்று உணர்ந்தவுடன் சம்சாரம் நீங்கிவிடுகிறது. உடல் தர்மங்கள் ஆத்மாவின் தர்மங்கள் அல்ல என்ற உறுதியான அறிவு அடையப்படுகிறது.
ஆத்ம-அனாத்மா அத்யாஸம் சம்பவிக்கவே முடியாது. ஆத்மா எந்த அளவுக்கு சத்யமோ அந்த அளவுக்கு இந்த உடலும் சத்யமானது. உடல் ஆத்மாவோடு ஒட்டியிருப்பதால் ஏதாவது கர்மம் செய்துதான் அதனை நீக்கிவிட வேண்டும். இவையிரண்டும் சம ஸத்தாவுடன் இருக்கிறது. அறிவை அடைந்து நீக்கிவிட முடியாது. அத்யாஸம் இரண்டு அனாத்மாக்களிடையேதான் நடக்கும். பார்ப்பவனுக்கும், பார்க்கப்படுகின்ற பொருளுக்கும் இடையே அத்யாஸம் நடக்கவே நடக்காது. இதை கீழ்கண்ட 5 காரணங்களால் நிரூபிக்கப்படுகிறது.
1.
விரோதாத் - ஆத்மா-அனாத்மாவிடையே இயல்பாகவே விரோதம் இருக்கிறது.
இவையிரண்டும் சேர்ந்திருக்கவே முடியாது. இருள்,
ஒளி
இவையிரண்டுக்கும் இடையே அத்யாஸம் நடைபெற முடியாது. இருள் மீது ஒளியோ அல்லது ஒளி
மீது இருளோ அத்யாஸம் நடக்காது. அதுபோல ஆத்மாவிடத்தில் அனாத்மா அத்யாஸம் செய்ய
முடியாது. இரண்டும் சத்யமாக இருப்பதால் சேர்ந்தேயிருக்கிறது. இந்த விரோதம் மூன்று
வகையாக இருக்கிறது.
1.1.
இயல்பாக விரோதமாக இருத்தல். (உ-ம்) எலி-பூனை, நான்,நீ.அது என்று சுட்டிக்
காட்டுகின்ற பொருட்கள் சுபாவமாகவே விரோதமாக இருக்கிறது.
1.2.
ஆத்மா சாட்சி; அறிபவன், அனாத்மா அறியப்படுவது என்ற வேற்றுமை இருத்தல். ஆத்மாவால்
பிரகாசப்படுத்துகின்ற அனாத்மா எப்படி என்னுள்ளே செல்லும். நான் என்ற சொல்லுக்குள்
போக முடியும்?
1.3.
விவகாரத்தின் அடிப்படையிலும் விரோதம் இருக்கிறது. நான்
கர்த்தா, நான் போக்தா என்ற
விவகாரம் இருக்கிறது. நான் என்கின்ற பிரம்மன்
வேறுபட்டிருக்கிறது. எனவே கர்த்தாவும், பிரம்மமும்
வெவ்வேறாகத்தான் இருக்கிறது. கர்த்தாவான நான் ஏதாவது கர்மத்தை செய்துதான்
பிரம்மனாக உயர முடியும்.
இந்த காரணங்களால் அத்யாஸம் என்பது நடக்கவே முடியாது.
2.
பிரத்யக்ஷ விஷயத்தில்தான் அத்யாஸம் நடைபெறும்.
பார்க்கப்படும் பொருட்களுக்குள்தான் அத்யாஸம் நடைபெறும். ஆத்மா அபிரத்யக்ஷமாக
இருப்பதனால் அத்யாஸம் நடைபெறவே முடியாது.
3.
ஆத்மா ஸ்வயம் பிரகாசமாக இருப்பதனால் அத்யாஸம் நடைபெறாது.
ஆத்மாவை எதுவும் மறைக்க முடியாது.
4.
ஸாத்3ருஷ்யம் அபா4வாத்
சாதிருஷ்யம் இல்லாததால்
அத்யாஸம் நடைபெறாது. சாதிருஷ்யம் என்பது ஒன்றைப் போல் வேறொன்று இருப்பதாகும்.
கயிற்றில் பாம்பைப் பார்க்கக் காரணம் இரண்டும் ஒரேமாதிரியாக இருக்கின்றது. எனவே
அங்கே அத்யாஸம் நடந்திருக்கிறது. ஆத்மாவும்,
அனாத்மாவும்
ஒரேமாதிரியாக இல்லாததால் அத்யாஸம் நடக்காது.
அவயவ சாத்ருஷ்யம் - உடலுறுப்புக்கள் ஒரேமாதிரியாக
இருத்தல். நாட்டெருமை, காட்டெருமை உடலமைப்பில்
ஒரேமாதிரியாக இருப்பதால் இரண்டும் ஒரேமாதிரியாக இருக்கிறது என்று சொல்லலாம்.
குண சாத்ருஷ்யம் - குணத்தின்
அடிப்படையில் ஒற்றுமை இருந்தாலும் ஒரேமாதிரியாக இருக்கிறது என்று சொல்லலாம்.
சிங்கத்தைப் போலிருக்கிறான் அவன் என்ற வாக்கியத்தில் குணத்தின் ஒற்றுமையைக்
குறிக்கிறது. ஆனால்
ஆத்மா-அனாத்மாவிடத்தில் சாத்ருஷ்யமும் இல்லாததால் அத்யாஸமே நடைபெறாது. அனாத்மா
அவயவங்களை உடையது, ஆத்மா அவயவங்களற்றது
என்பதாலும், குணங்களுடன் கூடிய
அனாத்மாவுக்கும், ஆத்மா நிர்குணமாக
இருப்பதாலும் இவைகளிடத்தில் அத்யாஸம் நடைபெறாது.
5.
பூர்வ ப்4ரமா ஜன்ய ஸம்ஸ்காரஹ:
அத்யாஸம் நடைபெறுவதற்கு
ஏற்கனவே அடைந்த ஞானத்தினால் மனதில் பதிந்திருக்கும். இந்த மனப்பதிவுகள்
அத்யாஸத்திற்கு அவசியம். இந்த வகையான மனப்பதிவு ஆத்மா-அனாத்மா விஷயத்தில்
கிடையாது. கயிற்றில் தோன்றிய பாம்பானது நம்மால் ஏற்கனவே பார்க்கப்பட்ட
மனப்பதிவினால் காட்சியளிக்கிறது. பாம்பைப் பார்க்காதவனால் கயிற்றைப் பாம்பாக
பார்க்க முடியாது. அதேமாதிரி உண்மையான அனாத்மாவை பார்த்திருந்தால்தான் ஆத்மா மீது
அத்யாஸம் செய்ய முடியும். அனாத்மா மித்யாவென்று சொல்கின்ற உங்களால் எப்படி
அத்யாஸம் நடந்திருக்கிறது என்று சொல்ல முடியும்?
மேற்கூறிய 5 காரணங்களால் அனாத்மாவான 3 சரீரங்களை ஆத்மா மீது
ஏற்றி வைக்க முடியாது. இவையிரண்டுக்குமிடைய அத்யாஸம் நடைபெறவே முடியாது. உடலும், ஆத்மாவும் சத்யமாக இருப்பதால் ஏதாவது கர்மத்தை செய்துதான்
உடலைவிட்டு வேறொரு உயர்ந்த நிலைக்கு சென்று மோட்சத்தை அடைய முடியும். அதாவது
பிரம்மலோகத்தையோ, வைகுண்டத்தையோ, சிவலோகத்தையோ அடைந்து அங்கிருந்துதான் மோட்சத்தை அடைய
முடியும். இவையிரண்டும் கர்ம சம்பந்தத்தினால் ஒன்று சேர்ந்திருக்கிறது. எனவே
கர்மகாண்டம் மூலமாகவே மோட்சத்தை அடையலாம். ஞானகாண்டமே தேவையில்லை, அதை விசாரம் செய்யவும் தேவையில்லை.
2. சந்தேகத்திற்கான பதில்
இந்த அத்யாஸம் யுக்திக்கு பொருந்தி வரவில்லையே என்றால், நீ சொல்வது சரிதான். உதாரணமாக இந்த உலகத்தை எந்த தர்க்க தோஷம் இல்லாமல் விளக்க முடியாது. ஏனென்றால் அது அனிர்வசனீயம். இதை விளக்க முடிந்தால் அது சத்யமாகிவிடும். இதுவே அத்வைதத்திற்கு உதவிகரமாக இருக்கிறது. இந்த அத்யாஸம் தர்க்கத்திற்கப்பாற்பட்டு இருப்பதனால் அது அப்படி இருப்பதுதான் அதன் இயல்பான தன்மையாகும்.
இந்த அத்யாஸம் அனுபவத்திற்கு வரவில்லையென்று கூறமுடியாது. இது அனுபவத்தில் இருக்கிறது. அக்ஞானியின் அனுபவத்தில் கர்த்தா, போக்தாவாகவும், ஞானி அகர்த்தா, அபோக்தாவாகவும் இருக்கிறார்கள். ஞானம் அடைந்தவனுக்குத்தான் இது அனுபவத்திற்கு வரும். ஆழ்ந்த உறக்கத்தில் நாம் அனுபவத்தை அடைகிறோம். இந்த நிலையில் சரீர அபிமானம் இல்லாததால் துயரமில்லாமல் சுகத்துடன் இருக்கிறோம். எனவே அபாவாத் என்று சொல்லவே முடியாது. உதாரணமாக ஒரு பொருளை அது என்றும், இது என்றும் சொல்கிறோம். ஆனால் நாம் நான் என்ற சொல்லால் ஸ்தூல உடலையும், சூட்சும உடலையும் மாற்றி, மாற்றி சொல்கிறோம். உண்மையில் நான் என்ற சொல் ஒன்றை மட்டும்தான் குறிக்க வேண்டும். இந்த உடல் விஷயத்தில் நமக்கு குழப்பம் இருக்கிறது. எனவே அத்யாஸம் அனுபவத்திற்கு வரவில்லையென்று சொல்வது தவறு. இதிலிருந்து அத்யாஸம் விளங்கிக் கொண்டிருக்கிறது என்பது புரிகிறது.
அத்யாஸம் நடைபெற
காரணமில்லையே என்ற காரணத்தினால் இதை மறுக்கிறாய். அதற்கு நீ கூறிய 5 காரணங்களுக்கு
பதிலளிக்கப்படுகிறது.
1.
விரோதத்துடன் இருக்கின்ற இரண்டு பொருட்களுக்கிடையே அத்யாஸம்
நடைபெறுவதுதான் இயல்பாகும். கயிறும், பாம்பும் ஒன்றுக்கொன்று
விரோதமாக இருப்பதனால்தான் அத்யாஸம் நடக்கிறது.
2.
அத்யாஸம் நடைபெறுவதற்கு பிரத்யக்ஷம் தேவையில்லை. நமக்கு
ஏற்கனவே தெரிந்திருக்க வேண்டிய அவசியமுமில்லை. அது விளங்கிக் கொண்டிருந்தால்
போதும் என்று பதிலளிக்கப்படுகிறது.
3.
தெரியாத விஷயத்தில் தவறு நடைபெற முடியாது ஆனால் ஆத்மா
எபிபொழுதும் விளங்கிக் கொண்டிருக்கிறது. எனவே ஆத்ம விஷயத்தில் அத்யாஸம் நடைபெற
முடியாது என்று சொல்ல முடியாது. ஆத்மா தெரிந்தும், தெரியாமலும் இருக்கிறது. ஆத்ம விஷயத்தில் சாமான்ய
அறிவு இருக்கிறது. ஆனால் எப்படி இருக்கிறேன்;
எந்த தன்மையுடன்
இருக்கிறது என்கின்ற விசேஷ ஞானம் இல்லாத காரணத்தால் ஆத்மாவின் மீது சரீரங்கள்
ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது.
4.
ஸாதிருஷ்யம் அபாவாத் என்ற காரணத்தால் அத்யாஸம் நடைபெற
முடியாது என்று சொல்கிறாய். கயிற்றை பாம்பாக நினைப்பதற்கு இரண்டும் பார்ப்பதற்கு
ஒரேமாதிரியான தன்மையுடையதாக இருக்க வேண்டும். ஆனால் ஆத்மாவும், அனாத்மாவும் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் போது எப்படி
தவறாக புரிந்து கொள்ள முடியும். பொதுவாக பார்க்கும் போது இது சரிதான். ஆனால் இந்த
விஷயத்தில் சில விதிவிலக்குகள் உண்டு. உதாரணமாக ஆகாசத்தில் நீல வர்ணத்தை ஏற்றி
வைத்துப் பார்க்கிறோம். உருவமில்லா பொருளில் எப்படி வர்ணத்தை ஏற்றி வைக்க
முடியும்! இங்கு ஸாத்ருஷயம் இல்லை. அதேபோல ஆத்ம-அனாத்மா விஷயத்தில் இருக்கிறது.
வறண்ட நிலத்தில் கானல் நீரை பார்ப்பது இன்னொரு உதாரணம். சாதிருஷ்யம் இல்லாத
போதிலும் இங்கே அத்யாஸம் நடந்திருக்கிறது.
5.
பூர்வ ப்4ரமா ஜன்ய ஸம்ஸ்காரஹ: பொய்யான அனாத்மாவை
உண்மையாக முன்பே பார்த்திருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லை. அதனால் ஆத்ம
விஷயத்தில் அத்யாஸம் நடைபெற வாய்ப்பே இல்லை. ஏற்கனவே உண்மையான பாம்பைப்
பார்த்ததினால் கயிற்றில் பாம்பை பார்க்க முடிந்தது. ஏற்கனவே பார்த்த பொய்யான ஒன்றின் ஸம்ஸ்காரம்
நம் மனதில் இருக்கிறது. உதாரணமாக இருட்டில் பார்த்த வழிகாட்டி தூணை பேய் என்று
பயந்த சூழ்நிலையில் கற்பனையில் உருவாக்கி வைத்திருக்கும் பேய் வழிகாட்டிதூணில்
ஏற்றி வைக்க முடிகிறது. இந்த அத்யாஸம் அனாதியானது. அக்ஞானம் அனாதியாக இருப்பதனால்
இதிலிருந்து தோன்றிய அத்யாஸமும் அனாதியாக இருக்கிறது.
பூ.ப இந்த உடலினுடைய தன்மையாவது ஏற்றி வைக்கப்பட்டிருக்கலாமல்லவா?
3.அத்யாஸ லட்சணம்
நான்கு லட்சணங்கள் கொடுக்கப்படுகிறது. அவைகள்,
1.
ஸ்மிருதி ரூபஹ - ஞாபகத்தைப் போல. கயிற்றில் தோன்றும் பாம்பு
ஞாபகத்தில் உள்ளதை போன்றது.
2.
பரத்ர -
வேறிடத்தில் (கயிற்றில்)
3.
பூர்வ த்3ருஷ்டா - ஏற்கனவே
பார்த்தது. (பாம்பு)
4.
அவபா4ஸக - தோற்றம்; காட்சி
லட்சணம்-1 (ஸ்மிருதி ரூபஹ)
* சம்ஸ்கார ஜன்யம் : ஏற்கனவே பார்த்தவொன்று மனதில் பதிவாகியிருந்தால் தான் நினைவுக்கு கொண்டு வரமுடியும்.* பிரமாண அஜன்யம் : நாம் ஒன்றை நினைவுக்கு கொண்டுவர எந்த பிரமாணத்தையும் பயன்படுத்தியிருக்க மாட்டோம். கயிற்றில் தோன்றிய பாம்பு நம் நினைவகத்திலிருந்துதான் வந்திருக்க வேண்டும்.
* தோஷ ஜன்யவாத் : பாம்பைப் பார்க்கும்போது பிரமாணத்தை தவறாக பயன்படுத்தி இருப்போம். இது நம் சம்ஸகாரத்திலிருந்து வந்திருப்பது, அதிஷ்டானத்தைப் பற்றிய சாமான்ய ஞானத்தினால் வருவது, அது வெளியே இருப்பது போல தோன்றுவது.
லட்சணம்-2 (பரத்ர)
அதஸ்மின் தத் புத்தி:
அதஸ்மின் - அதில்லாத இடத்தில்
தத் புத்தி - அது இருப்பதாக பார்ப்பது, நினைப்பது
நான் ஒன்றைப் பார்த்தேன் என்று சொல்லும் போது எதைப் பார்த்தேன், எங்குப் பார்த்தேன் என்ற கேள்வி எழுகின்றது. எதைப் பார்த்தாய் என்ற கேள்விக்கு பாம்பின் உருவத்தைப் பார்த்தேன் என்றும், எங்குப் பார்த்தாய் என்று கேட்டால் கயிற்றில் பார்த்தேன் என்று பதில் சொல்வோம். எனவே அதஸ்மின் - கயிற்றில், தத் புத்தி - பாம்பைப் பார்த்தல்.
லட்சணம்-3 (பூர்வ த்3ருஷ்டா)
ஸத்யாநிருத மிதுனீ கரணம்
ஸத்ய அநிருத - உண்மை, பொய்
மிதனீ கரணம் - ஒன்றோடொன்று கலத்தல்
உண்மையும், பொய்யும் கலந்து விட்டோமேயானால் அதுவே அத்யாஸம். உண்மையான கயிற்றையும், பொய்யான பாம்பையும் கலந்து பார்க்கின்றோம்.
லட்சணம்-4 (அவபா4ஸக)
மித்யா ப்ரத்யய ரூபஹ - பொய்யான அறிவு வடிவம்
ப்ரத்யயம் - மனதில் தோன்கின்ற எண்ணம், அறிவு
பாம்பு என்ற அறிவிருக்கிறது, ஆனால் உண்மையில் பாம்பில்லை. இல்லாதவொன்று இருப்பது போன்ற எண்ணம் மனதில் தோன்றுவது.
விதவிதமான
அத்யாஸங்கள் (பகவான் சங்கரர் பாஷ்யத்தில் இது குறிப்பிடவில்லை)
1.
அனாதி அத்யாஸம் (அ) காரண அத்யாஸம்
பிரம்மம் எப்போது
தோன்றியது என்ற கேள்விக்கு தெரியாது என்று சொல்லிவிட்டு
அது அனாதி என்று பதில் சொல்லி விடுவோம். அதேபோல மாயையும் அனாதி என்று சொல்லி
விடலாம். இந்த மாயையை பிரம்மத்தில் ஏற்றிவைத்து அதன் தன்மையை பிரம்மத்திற்கு
கொடுத்துவிட்டோம். இந்த அத்யாஸமும் அனாதி என்றாகி விடுகிறது. இதையே அனாதி அத்யாஸம்
என்று அழைக்கப்படுகிறது.
2.
ஸாதி அத்யாஸம் (அ) காரிய அத்யாஸம்
இந்த அத்யாஸத்திற்கு
தோற்றமுண்டு. இந்த நேரத்தில்தான் அத்யாஸம் ஏற்பட்டது என்றும், இந்தக் காலத்தில்தான் அத்யாஸம் நடைபெற்றது என்றும்
கூறிவிடலாம். இந்த ஸ்தூல சரீரமும் இந்த வகையான அத்யாஸத்தில் சேர்த்துவிடலாம்.
3.
தாதா3த்மிய அத்யாஸம் (அ) த3ர்மி அத்யாஸம்
சத்யமாக இருக்கின்ற
ஒன்றின் மீது வேறொன்றை பார்ப்பது. கயிறு என்றவொன்றில் பாம்பு என்ற வேறொன்றை
பார்ப்பது இதற்கு உதாரணமாகும்.
4.
ஸம்ஸர்க3 அத்யாஸம் (அ) த3ர்ம அத்யாஸம்
ஸபடிகத்தின்
பக்கத்திலுள்ள சிவப்பு மலர், தனது சிவப்பு நிறத்தை
பொய்யாக ஸ்படிகத்திற்கு கொடுத்துவிடுவதால் அதுவும் சிவப்பாக தோன்றுகிறது. இங்கே மலரின்
ஒரு தன்மையை மட்டும் ஸ்படிகத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது.
5.
அர்த்த அத்யாஸம்
கயிறு-பாம்பு அத்யாஸத்தில், வெளியே தெரிகின்ற பாம்பு
அர்த்த அத்யாஸமாகும்.
6.
ஞான அத்யாஸம்
பாம்பைப் பற்றிய எண்ணத்திற்கு ஞானாத்யாஸம் என்று பெயர்.
7.
ஸோபாதீக அத்யாஸம்
இந்த அத்யாஸம்
நடைபெறுவதற்கு பார்க்கின்ற பொருளுக்கு பக்கத்தில் வேறொரு பொருள் இருக்க வேண்டும்.
(உ-ம்) ஸ்படிகத்திற்கு பக்கத்தில் மலர் இருந்தால்தான் இந்த அத்யாஸம் ஏற்படும்
8.
நிரூபாதி3க3 அத்யாஸம்
கயிற்றை பாம்பாக
பார்ப்பதற்கு வேறொரு பொருளோ, வேறெந்த நிபந்தனைகள்
இல்லாமல் ஏற்படுவதை இவ்வாறு அழைக்கப்படுகிறது.
சில அத்யாஸத்தில்
ஞானம் வந்தவுடன் அனுபவம் சென்றுவிடும். உதாரணம்: கயிறு-பாம்பு. சில அத்யாஸத்தில்
ஞானம் வந்தவுடன் அனுபவம் இருக்கும். ஆனால் உண்மையென்ற புத்தி சென்றுவிடும்.
உதாரணம் கானல் நீர். அதேபோல பிரம்மஞானம் வந்தாலும் உலகம் மறைந்து விடாது. ஆனால்
அது பொய்யானது என்ற புத்தியுடன் இருப்போம்.
க்2யாதி வாதம்
நாம் செய்கின்ற
தவறு எப்படிபட்டது என்பதை விளக்குகின்ற முறையே க்யாதிவாதமாகும். கயிற்றை பாம்பாக
பார்ப்பதுதான் க்யாதி என்ற கூறலாம். இந்த தவறின் தன்மை என்ன என்பதில் பல
கருத்துக்கள் வந்துவிட்டது. ஐந்துவிதமான க்யாதி வாதங்கள் உண்டு. இவைகளில்
முதல் நான்கு தவறான கருத்துக்களை உடையது.
இறுதியான ஒன்றுதான் சரியானது. சரியான முறையில் தவறை
விளக்கினால்தான் சரியான நீக்கும் முறையை கண்டுபிடிக்க முடியும்.
1.
க்ஷணிக விக்ஞானவாதியின் வாதம்:
இதை ஆத்மக்யாதி என்றும்
அழைக்கப்படுகிறது. வெளியே காட்சியளிக்கின்ற பொருட்கள் யாவும் நம்முடைய
எண்ணங்கள்தான். மனதில் உள்ள எண்ணங்கள்தான் சத்யமானது. க்ஷணத்திற்கு க்ஷணம் தோன்றி
மறைகின்ற எண்ணங்கள்தான் சத்யமானது. கயிறு-பாம்பு தவற்றில் இரண்டுமே தவறு என்று
கூறுகிறான். வெளியே பார்ப்பதாக சொல்வது தப்பு. எல்லாமே மனதில் எண்ணங்களாக
இருக்கிறது.
2.
சூன்யவாதம்.
அஸத்க்யாதி என்பது
மற்றொரு பெயர். இல்லாத கயிற்றில் இல்லாத பாம்பைப் பார்க்கிறாய். எல்லாம் சூன்யமாக
இருப்பதால் இந்த தவறு நடக்கவில்லை. இல்லாததற்கு எப்படி கயிறு, பாம்பு என்ற அடைமொழி கூறமுடியும்.
3.
அக்யாதி
ஏற்கனவே பார்த்த
பாம்பைத்தான் இப்பொழுது கயிற்றில் பார்க்கிறாய். எங்கே பார்த்தாயோ அந்த தேச, காலம் இப்போது மாறியிருப்பதால் தவறு நடந்திருக்கிறது.
பாம்பு சத்யம் என்பதும் தவறானது.
4.
அன்யதா வாதம்
உண்மையான பாம்புதான்
பார்க்கப்படுகிறது. ஸமிருதி அல்லது பிரத்யக்ஷம் எது என்பதில்தான் தவறு
நடந்திருக்கிறது. ஏதோ விளக்க முடியாத பிரத்யக்ஷத்தினால் பாம்பு தோன்றியிருக்கிறது.
5.
அனிர்வசனீய வாதம் – சரியான க்யாதிவாதம்
அந்த இடத்தில்
ஸத்திற்கும், அஸத்திற்கும் வேறானவொன்று
காட்சியளிக்கிறது. இருக்கிறது என்றோ இல்லையென்றோ சொல்லா முடியாததாக இருப்பதனால்
இதை அனிர்வசனீயம் என்று கூறப்படுகிறது. மித்யா ஸ்ருஷ்டிதான் கயிற்றில் தோன்றும்
பாம்பு. இது நம்மால் உருவாக்கப்பட்டதாகும். நாம் உருவாக்கிய பாம்பை நம்மால்தான்
நீக்கமுடியும். வேறு யாராலும் விரட்டியடிக்க முடியாது. மனதில் உருவாகி இருப்பதை
நாம்தான் அழிக்க வேண்டும், வேறுயாரும் அதை செய்ய
முடியாது.
4.ஸம்பாவனா: அத்யாஸ
வாய்ப்பு
1.
அக்ஞானம் -
முழுமையாக ஒன்றும் தெரியாத நிலை
2.
விபரீத ஞானம் - அறியாமை
நீக்கி தவறான அறிவை அடைந்திருத்தல்
3.
சம்யக் ஞானம் -
அறியாமை நீக்கி சரியான அறிவை அடைந்திருத்தல்
4.
ஸம்பாவனா -
இருப்பதற்கு வாய்ப்பு
5.
சரியான அறிவை அடைதல்
இதுவே ஒன்றைப்
பற்றிய சரியான அறிவை அடையும் வழிமுறை. இதை ஆத்மஞானத்தை அடையும் விஷயத்தில் பொருத்திப்
பார்ப்போம்.
1.
ஆத்மாவைப் பற்றிய அறியாமை
2.
உடல்தான் ஆத்மா என்ற தவறான எண்ணத்தை அடைதல்
3.
ஆத்ம விசாரம் செய்யும்போது உடலுக்கப்பால் நான் என்கின்ற
ஆத்மா இருக்கலாம் என்ற சந்தேகம் வருவது
4.
ஆத்மாவாக இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.
5.
இறுதியில் நானே ஆத்மா என்ற சரியான அறிவை அடைதல்.
மேற்கூறிய விசாரத்தைப் பார்க்கும்போது ஆத்ம-அனாத்மாவுக்கிடையே அத்யாஸம் நடைபெறுவதற்கு வாய்ப்பிருக்கிறது என்ற நம்பிக்கையை பகவான் சங்கரர் கொடுக்கிறார்.
5.அத்யாஸ பிரமாணம்
5.1.
ஆத்ம-அனாத்மா விஷயத்தில் ஏற்பட்ட அத்யாஸத்திற்கு ஸ்ருதிதான்
பிரமாணம். ஆத்மாவின் ஸ்வரூபம் அஸங்கமாகும. அனாத்மா விஷயங்கள் நீக்கப்படுவதாக
இருப்பதால், அது மித்யாவாகும். இந்த
ஜகத்தும், சரீரங்களும்
நீக்கப்படுவதாக இருப்பதால், இவைகளும் மித்யாவாகும்.
சாட்சி பிரத்யக்ஷம் நம்முடைய மனதிலுள்ள உணர்வுகளை சாட்சியே விளக்குகிறது. அத்யாஸம்
அனுபவத்திலே ஏற்படுகிறது. வெளி விஷயத்தை என்னுடையது என்று நினைக்கும்போது அதற்கு
வருகின்ற நலம், கேடு அனைத்தும் தனக்கு
வந்ததாகவும், உடலை அபிமானிக்கும்போது
அதற்கு வருகின்ற கஷ்டங்கள் தனக்கு வந்ததாகவும் நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.
இவைகள் நம் அனுபவத்திலேயே புரிந்து கொள்கிறோம். ஆழ்ந்த உறக்கத்தில் எதன் மீதும் அபிமானம்
இல்லாததால் விவகாரம் எதுவும் நடக்கவில்லை. எனவே அத்யாஸத்திற்கு அபிமானம்தான்
காரணமாகும்.
5.2.
அத்யாஸ பிரகாரம்
அத்யாஸம் படிப்படியாக
எப்படி நடக்கிறது. நம்முடைய தேக விவகாரம் நடக்க வேண்டும் என்றால் உடல் மீது
அபிமானம் இருக்க வேண்டும். நான் அறிய விரும்புவன் என்ற அத்யாஸம் இல்லாமல் எந்த
விவகாரமும் நடக்காது என்று பகவான் சங்கரர் கூறுகிறார். இது மிருகங்களுக்கும்
பொருந்தும். நம் சொந்த-பந்தங்களிடத்தில் அபிமானம் இருப்பதால் அவர்களுக்கு வருகின்ற
இன்ப-துன்பங்கள் நம்மையும் பாதிக்கின்றது.
6.அத்யாஸ உபஸம்ஹாரம் (முடிவுரை)
இந்த அத்யாஸம்
நம்முடைய சம்சாரத்திற்கு காரணமாக இருக்கின்றது. அதனால்தான் அத்யாஸத்தை முகவுரையாக
கொடுத்து விளக்கப்பட்டிருக்கிறது. அத்யாஸத்தை நீக்கி ஆத்மா
ஒன்றுதான் என்ற அறிவின் மூலமாக சம்சாரத்திலிருந்து விடுதலை பெற வேண்டும். ஞானம்
அக்ஞானத்தை நீக்கிவிடுகிறது. இந்த அக்ஞானத்தினால் எவைகளெல்லாம் இருக்கிறதோ
அவைகளெல்லாம் நீங்கிவிடுகிறது. கயிறு என்ற அறிவு வந்தவுடன் பாம்பு என்ற அபிமானம்
சென்றுவிடுவதால் பாம்பின் உருவமும் மறைந்துவிடுகிறது. அத்யாஸமும் சென்றுவிடுகிறது.
---ooo00ooo---