Showing posts with label பஞ்சதசி-13. Show all posts
Showing posts with label பஞ்சதசி-13. Show all posts

Sunday, August 25, 2019

Pancadasi - Chapter-13 - Rev-01

பஞ்சதசி
அத்தியாயம்-13
அத்வைத ஆனந்தம்;
 
பிரம்மானந்தமே ஆத்மானந்தமாக இருக்கிறது. ஆனால் இந்த ஆனந்தம் எப்படி இரண்டற்ற தன்மை என்று கூறப்படுகிறது. பலவாக தெரிந்து கொண்டிருக்கின்ற ஆத்மானந்தம் எப்படி அத்வைத தன்மையுடையது என்று கூறப்படுகிறது.
 
ஆகாசத்திலிருந்து தேகம் வரையுள்ள ஜகத்தானது ஆனந்த ஸ்வரூபமான இந்த பிரம்மத்திற்கு கிடையாது என்று தைத்திரிய உபநிஷத்தில் கூறப்பட்டிருக்கிறது. இது இரண்டாவதற்ற பிரம்ம ஸ்வரூபம் தன்மையை நிலை நாட்டுகிறது.
 
இந்த ஜகத் ஆனந்த ஸ்வரூபமான பிரம்மத்திடமிருந்து உண்டாயிற்று. அது ஆனந்தத்தில்தான் நிலைத்திருக்கிறது, ஆனந்தத்தில்தான் ஒடுங்குகிறது. அதனால் ஜகத் எப்படி வேறாக இருக்க முடியும். பிரம்ம காரணம் ஜகத் காரியம் என்று புரிய வைக்கப்படுகிறது.
 
குயவனிடமிருந்து பானை தோன்றியது. ஆனால் வேறாகவும் இருக்கிறது என்று நினைக்க வேண்டாம். இங்கு குடம் உருவாக களிமண் உபாதான காரணமாக இருக்கிறது. குயவன் போல நிமித்த காரணமாக மட்டும் இருக்கிறான் அதுபோல ஜகத் தோன்றுவதற்கு பிரம்மன் உபாதான காரணமாக இருக்கிறது.
 
எந்தவொன்று தோற்றுவித்தல். இருத்தல், ஒடுக்கிக்கொள்ளுதல் ஆகியவற்றிற்கு காரணமாக இருக்கிறதோ அது உபாதான காரணம். குடத்திலேயே இருப்பதும், ஒடுங்குவதும் குயவனிடத்தில் கிடையாது.  ஆனால் களிமண்ணில் இது பார்க்கப்படுகிறது. அதேபோல ஜகத்திற்கு உபாதானமாக ஆனந்த ஸ்வரூபமான பிரம்மத்தை கூறப்படுகிறது.
 
உபாதான காரணம் மூன்றுவிதமாக இருக்கிறது. முதலாவது விவர்த்த உபாதான காரணம், இரண்டாவது பரிணாம உபாதான காரணம், மூன்றாவது ஆரம்பக உபாதான காரணம். இந்த மூன்றில் கடைசி இரண்டு உபாதான காரணங்கள் போல பிரம்மம் இல்லை.
 
அத்வைத சித்தி என்ற நூலில் மித்யாவுக்கு கொடுக்கப்பட்ட லட்சணங்களை பார்க்கலாம். அனுபவத்திற்கு இருப்பது ஆனால் ஆராய்ந்து பார்க்கும் போது இல்லாமல் இருப்பதுதான் மித்யா தன்மையின் லட்சணம்.
 
லட்சணம்:1 ஸதஸத் அனாதிகரணத்வம்
கயிற்றில் தெரியும் பாம்பு உதாரணத்தில் இருக்கின்ற பாம்புவின் இருத்தலுக்கும், இல்லாமைக்கும் கயிறுதான் ஆதாரமாக இருக்கிறது. அதற்கென்று எந்த ஆதாரமும் இல்லை. இதையே அனீர்வாச்யம் என்றும் கூறப்படுகிறது. இந்த லட்சணம் ஜகத்திற்கு பொருந்துவதால் ஜகத் மித்யாவென்று உறுதிப்படுத்தப்படுகிறது. விவகாரத்தில் பிரம்மத்திற்கு கொடுக்கக்கூடிய லட்சணம் ஸத், சித், ஆனந்தம் என்பதாகும். பாரமார்த்திக பார்வையில் பிரம்மத்திற்கு அனீர்வாச்யம் என்று கூறப்படுகிறது. பிரம்மம், மித்யா இவைகளை வாக்கால் விளக்க முடியாது. பாரமார்த்திக பார்வையில் ஜகத் அஸத்தாக இருக்கிறது.
 
லட்சணம்:2 நாம் பார்த்து அனுபவிக்கின்ற பாம்பு போன்ற பொருட்கள்; முக்காலத்திலும் இல்லாமைக்கு தகுதியான ஒன்றாக இருக்கிறது. இல்லாதவொன்று இல்லாமல் இருக்கிறது. ஆனால் இப்போது தோன்றிக் கொண்டிருக்கும் பொருட்கள் முன்பொரு காலத்தில் இல்லாமல் இருந்திருக்கின்றது. முன்பு இல்லாத பொருட்கள் எதிர்காலத்தில் இல்லாமல் இருப்பது. முன்பு அறிந்த பொருள் காணப்படும் பொருளில் மூன்று காலத்திலும் இல்லாத தன்மையுடன் இருப்பது.
 
லட்சணம்:3 ஞான நிவர்த்யத்வம் (அறிவினால் நீக்கப்படும் தன்மை)
எந்தவொன்று அறிவினால் நீக்கப்படும் தன்மையுடன் இருக்கின்றதோ அதுவே மித்யாவாகும். அறிவு எதையும் உருவாக்காது, அழிக்காது, இருப்பதைத்தான் வெளிச்சம் இருட்டில் உள்ள பொருட்களை காட்டிக் கொடுப்பது போல காட்டிக் கொடுக்கும்.
 
வேறாகவுள்ள ஒன்றிலிருந்து அதற்கும் வேறாகவுள்ள ஒன்று உண்டாகின்றது என்று சிலரால் சொல்லப்படுகிறது. நூலிலிருந்து துணி உண்டாவதால் நூலும், துணியும் வேறுபட்டவையல்ல. பரிணாமவாதிகள் கூறுவது ஒரு பொருளுக்கு வேறுநிலை ஏற்படுவது பரிணாமத்தன்மையினால்தான். பால் தயிராக பரிணாமித்து வேறுபடுவது போலவும், களிமண் பானையாவது போலவும், தங்கம் குண்டலமாக மாறுவது போலவும் இது இருக்கிறது. ஒன்று வேறொரு நிலைபோல தோன்றுவது விவர்த்த உபாதான காரணமாகும். கயிற்றில் தோன்றுகின்ற பாம்பு இதற்கு உதாரணமாகும். எந்தவித அம்சம் இல்லாத போதும் ஆகாசத்தில் நீல வர்ணம் கற்பனை  செய்யப்படுகிறது. ஆகையால் அம்சங்கள் எதுவுமில்லாத, பிளவுபடாத, ஆனந்தஸ்வரூபமான பிரம்மனிடத்தில் ஜகத்தானது விவர்த்தமாக கருத வேண்டும். இந்திரஜாலக்காரன் செய்கின்ற வித்தைகளை போல பிரம்மத்திடம் இருக்கின்ற மாயாசக்தி ஜகத்தை தோற்றுவிப்பதற்கு காரணமாக இருக்கிறது.
 
சக்தி வெளிப்படும் பொருட்களிலிருந்து சக்தி வேறாக தனியாக கிடையாது. அதேசமயம் சக்தியுள்ளதுடன் வேறில்லை என்பதும் கிடையாது. பார்க்கப்படுவதால் சக்தி என்பது இல்லையானால் தடை எதற்கு? எனவே சக்தி என்றவொன்று இருக்கிறது என்று உணர்ந்து கொள்ளப்படுகிறது. சக்தியை அதன் வெளிப்பாட்டிலிருந்துதான் அனுமானிக்க வேண்டியிருப்பதால் காரியம் ஏற்படவில்லையானால் தடை இருக்க வேண்டும். எரிந்துக் கொண்டிருக்கும் அக்னியில் மந்திரங்களை பயன்படுத்தினால் எரிக்கும் சக்தி தடைபடுகிறது.
 
எந்தவொரு சக்தியையும் அதன் வெளிப்பாடான காரியத்தில் இருந்துதான் அனுமானிக்க முடியும். சக்தி வெளிப்படுவதற்கு தடையேற்பட்டுவிட்டால் காரியமும் வெளிப்படாதிருக்கும். எனவே சக்தியை மித்யா என்று புரிந்து கொள்ள முடிகிறது. எரிந்து கொண்டிருக்கும் நெருப்பின் உஷ்ணத்தை தடைப்படுத்துகின்ற மந்திரத்தை போல இதை புரிந்து கொள்ள வேண்டும்.
 
சைதன்ய ஸ்வரூபமான பிரம்மத்திடம் ஒரு சக்தி இருக்கிறது. அந்த சக்தியானது அதனிடத்திலிருக்கும் முக்குணங்களில் சேர்ந்திருக்கும் விகிதத்தில் ஏற்பட்ட மாற்றத்தினால் உலகம் தோன்றியிருக்கிறது. இந்த ரகசியத்தை முனிவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். இந்த உத்தமமான சக்தி பலவிதமாக இருக்கிறது. செயல்திறன் புரிந்து கொள்கின்ற திறன், அறிவை அடைகின்ற திறன், செயல்படுதல், அறிவு, பலம் என்று பலவிதமாக இருக்கிறது.
 
மேற்கூறிய கருத்து உபநிஷத்தில் வேத சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. யோக வாஸிஷ்டம் என்ற உபதேச நூலில் வசிஷ்டரும் இந்தக் கருத்தை கூறி இருக்கிறார். எல்லா சக்திகளையும் தன்னகத்தே உடையதும், மேலானதும், என்றும் இருக்கின்ற தன்மை உடையதும், பூரணமாகவும் இருக்கின்ற பிரம்மமானது இரண்டற்றதாக இருக்கிறது.
 
எந்த சக்தி தன்னை வெளிப்படுத்தும் நிலை வருகின்றதோ அப்போது அது வெளிப்படும். பிரம்மாண்டத்திலுள்ள சைதன்ய சக்தியை மாயையானது ஜீவர்களின் சரீரத்திலும் பார்க்க முடிகிறது. மாயையிடத்தில் உள்ள உணர்வு மயமயமான சக்தி சரீரங்களில் வெளிப்படுகிறது.
 
அசைக்கின்ற சக்தி, கற்களில் கெட்டியாக இருக்கும் சக்தி, திரவமாக இருப்பது, எரிக்கின்ற சக்தி, உஷ்ணப்படுத்துகின்ற சக்தியானது நெருப்பில் இருக்கிறது. அப்படியே ஆகாசத்தில் வெற்றிடமாக இருக்கும் சக்தி, அழிவு ஏற்படுத்தக்கூடிய சக்தியை உடைய பொருட்கள், சிறிய முட்டைக்குள் பெரிய பாம்பு இருத்தல். அதுபோல ஜகத்தானது ஆத்ம ஸ்வரூபத்திடம் மாயையிடமும் இருக்கிறது. பழம், கொடி, இலை, பூ, சிறிய கிளைகள், வேர் என்று உறுப்புக்களை உடைய மரமானது எப்படி விதைக்குள் இருக்கிறதோ அதுபோல ஜகத் பிரம்மத்திடம் இருக்கிறது.
 
ஏதொவொரு சக்தி ஏதோவொரு காலத்தில் எப்போதாவது மாயையிடமிருந்து வெளிப்படுகிறது. இந்த சக்தியானது தேசம், காலம் என்று பலவிதமாக இருந்தாலும் எது எந்த நேரத்தில் வெளிப்பட வேண்டுமோ அதுதான் அந்த நேரத்தில் வெளிப்படும். நெற்பயிரானது நிலத்திலிருந்து விதவிதமான நிலையில் விதவிதமான நேரத்தில் வெளிப்படுவது போல இது இருக்கிறது.
 
ஹே ராமா! எப்போதும் இருக்கின்றதும், பூரணமானதாகவும் இருக்கின்ற ஆத்ம தத்துவத்திலிருந்து முதலில் வெளிப்பட்ட சக்தியானது மனம் என்கின்ற சக்தியாகும். ஆத்மா எல்லாவிடத்திலும் வியாபித்துள்ளது. பிரகாசித்துக் கொண்டு இருக்கிறது. இந்த மாயாசக்தியை பயன்படுத்தி மனம் என்கின்ற சக்தி வெளிப்படுகிறது. மனம் என்பது தன்னையையும். மற்ற விஷயங்களையும் உணர்ந்து கொண்டிருக்கின்ற சக்தியாகும். மனம் என்ற ஜட உபாதிக்குள் ஆத்மா பிரவேசித்து உணர்வுமயமாக்குகிறது.
 
படைக்கப்பட்ட மனம் சம்சாரத்தை உருவாக்குகிறது, பந்தத்தில் இருக்கிறேன் என்று கற்பனை செய்விக்கிறது. சம்சாரம் மித்யா என்று இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். அதே மனம் சில அறிவுரை மூலம் அந்த பந்தத்தை போக்கவல்ல மோட்சத்தையும் கல்பிக்கிறது. இந்த உலகத்தோடு தன்னை சம்பந்தப்படுத்தி பார்க்கின்றது. இந்த மாதிரியான நிலையானது உறுதியாக ஏற்பட்டுவிடுகிறது.
 
குழந்தைகள் மகிழ்ச்சி அடைய செய்வதற்காக பணிப்பெண் நல்ல நல்ல கதைகளை சொல்கிறாள். ஒரு ஊரில் மூன்று அழகான இளவரசர்கள் இருந்தார்கள். அவர்களில் இருவர் பிறக்கவேயில்லை. ஒருவர் கர்ப்பத்திலேயே இல்லை. இவர்கள் மூவரும் தர்மத்துடன் கூடியவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இல்லாத நகரத்தில் வாழ்ந்து வருகிறார்கள். தங்களுடைய இல்லாத நகரத்திலிருந்து வெளிக் கிளம்பி தூய்மையுடைய புத்தியுள்ளவர்களாக போய்க்கொண்டு இருக்கும்போது ஆகாயத்தில் பழங்களுடன் கூடிய  மரங்களைப் பார்த்தார்கள். அங்கே இனி ஏற்படப் போகும் நகரத்தில் மூவரும் வேட்டையாடிக் கொண்டு சுகமாக இருந்தார்கள். இவ்விதம் பணிப்பெண்ணால் குழந்தைக்காக சொல்லப்பட்டது. அதைக் கேட்டு அந்த குழந்தை விசாரணையற்ற புத்தியினால் எல்லாம் உண்மையென்று நம்பிவிடுகிறது.
 
சம்சாரமானது ஒவ்வொருக்கும் ஒவ்வொருவிதமாக வெளிபட்டுக் கொண்டிருக்கிறது. இதை விசாரம் செய்யாத வரையில் இந்த சம்சாரம் இருந்து கொண்டேயிருக்கும். சம்சாரம் நம் மனதால் கற்பனை செய்யப்பட்டது என்று உணர்ந்து கொள்ள வேண்டும். குழந்தைக்காக சொல்லப்பட்ட கதையைப் போல பொய்யான சம்சாரத்தை அறிந்து கொள்ள வேண்டும்.
 
மேற்கூறிய யோகவாசிஷ்டத்தில் உள்ள கதைகள் மூலமாக மாயா சக்தியின் செயல்பாடு ராமருக்கு கூறப்பட்டது. இந்த மாயா சக்தியானது மேலும் விளக்கப்படுகிறது.
 
காரியத்திலிருந்தும், சார்ந்திருப்பதிலிருந்தும் சக்தியானது வேறாக இருக்கிறது. காரியமான தீப்பொறி, சார்ந்திருக்கின்ற நெருப்பு இவ்விரண்டும் பார்க்கப்படுபவை. அங்கு எரிக்கும் தன்மையென்ற சக்தி அனுமானத்தினால் அறியப்படுகிறது. பருத்து உருண்டையான வயிற்றை ரூபமாகவுள்ள குடம் காரியம். இதனுள் சப்தம் முதலான ஐந்து குணங்கள் கூடியதாக களிமண் இருக்கிறது. சக்தி இவ்விரண்டுவிதமும் இல்லாதது. குடம் உருவாகுவதற்கு களிமண்ணில் இருக்கும் சக்தியானது மேற்கூறிய இரண்டும் இல்லாதது.
 
சக்தியில் காரியத்திலுள்ள பருமன் முதலிய தன்மை கிடையாது. ஆதாரமான களிமண்ணின் குணங்களும் கிடையாது. ஆனால் எப்படியோ இருக்கிறது. அதனால்தான் அது நினைத்துப் பார்க்க முடியாதது, எடுத்துச் சொல்ல முடியாதது. சுக்தி காரியமாக(குடமாக) வெளிப்படுவதற்கு முன்பு களிமண்ணில் மறைந்து இருக்கிறது. குயவன் உதவியுடன் களிமண் மாற்றத்தை அடைந்து பானையாக உருவாகின்றது. பானையின் வடிவங்கள் போன்ற மாற்றங்கள் வரை உள்ள காரியமும், தொட்டுணரும் குணமுடைய களிமண்ணையும் காரணமும் ஒன்றாக சேர்தல் விசாரம் செய்யாத மக்கள் பானை என்ற காரியத்தை மட்டும் சொல்கிறார்கள். குயவன் வேலையை தொடங்குவதற்கு முன்னால் என்ன இருக்கின்றதோ அது மட்டும் பானையாகாது. பிறகு பானை வடிவத்தை உருவாக்கி முடித்ததும் அதற்கு பானை என்ற பெயர் பொருத்தமாக இருக்கிறது. இந்த பானை களிமண்ணிலிருந்து வேறாக இல்லை. ஏனென்றால் களிமண்ளை நீக்கிவிட்டால் பானை என்ற பொருள் இருக்காது. உருவாகுவதற்கு முன்னால் களிமண்ணாக இருக்கும் போது அது காணப்படாததால் இது களிமண்ணிற்கு வேறுபாடாததாகவும் இல்லை.
 
ஆகவே இதையும் காரியமான பானையும் சக்தியை போலவே எடுத்துரைக்க முடியாதது. இந்த காரணத்தினால் இது சக்தியிலிருந்து உண்டானது. வெளித்தோற்றத்திற்கு வராத போது சக்தி என்று சொல்லப்படுகிறது. வெளித்தோற்றத்திற்கு வந்தபிறகு அதை காரியம்(பானை) என்று சொல்லப்படுகிறது. இந்திரஜாலம் செய்கிறவனிடமிருந்து வெளிப்படுகின்ற மாயா சக்தியானது செய்வதற்கு முன்னால் வெளிப்படையாக தெரிவதில்லை. பிறகு கந்தர்வ சேனை உருவத்துடன் வெளிப்படையாக தெரிகிறது.
 
இவ்விதமாக மாயையின் காரியமாக இருப்பதனால் மாறுபடும் பொருளுக்கு பொய்யாக இருக்கும் தன்மையையும், மாறுபடும் பொருளுக்கு ஆதாரமாக உள்ள மண்ணாகிற பொருளின் சத்யத்தன்மையும் வேதத்தில் சொல்லப்படுகிறது. வாக்கினால் மட்டும் சொல்லக்கூடியதாகவும் பெயராக மட்டும் இருப்பதாகவுமுள்ள விசாரம்(காரியம்) இதற்கு சத்யத்தன்மை கிடையாது. தொடுதல் முதலிய குணங்கள் உடையதாக இருக்கும் வெறும் களிமண்ணே சத்யம்.
 
வெளித்தோற்றத்திற்கு வந்தது(ஜகத்), வராதது(மாயை) இவையிரண்டுக்கும் ஆதாரமாக இருப்பது(பிரம்மம்) என்ற மூன்று வகையான தத்துவங்கள் கூறப்பட்டது. முதல் இரண்டுக்குணங்களும் ஒன்றுதான் ஆனால் காலவேறுபாட்டால் மாறிமாறி வருதல் இருக்கிறது. ஆனால் ஆதாரமாக இருப்பது எல்லா காலங்களிலும் கூடவே வந்து கொண்டிருக்கும், தொடர்ந்து இருந்து கொண்டிருக்கும்.
 
காரியம் மித்யா என்பதை நிலைநாட்ட மூன்று காரணங்கள் கூறப்படுகின்றது. காரியத்தை வியக்தமாகவும்(வெளிபட்டதாகவும்), அறியப்படாததாகவும் இருப்பதை காட்டப்படுகிறது. இதற்கு சொந்தமான இருப்பு கிடையாது, உண்மையிலே இல்லை. ஆனால் இருப்பது போல தோன்றி அழியக்கூடியது. மனிதர்களால் அது வாக்கினால் உருவாக்கப்படுகிறது. தோன்றிய பானை உடைந்த போதிலும் அதனுடைய பெயர் மனிதர்களால் பேச்சு வழக்கில் தொடர்ந்து இருந்துக் கொண்டு இருக்கிறது. ஆகையால் அந்தப் பொருளினுடைய படைப்பு அதன் பெயரினால் நிரூபிக்கக்கூடிய தன்மையுடன் இருப்பதால். வியக்தம் என்ற நாம ரூபமாகி, பெயரை மட்டும் ஸ்வரூபமாகக் கொண்டதாக சொல்லப்படுகிறது.
 
காரிய தோற்றத்தின் சொந்த இருப்பு இல்லாததாகவும் அழியக்கூடிய தன்மையுடன் இருப்பதாலும் வாக்கு இந்திரியங்களால் தோற்றுவிக்கப்பட்ட சப்தமாக பெயராக மட்டும் இருப்பதனாலும் காரியத்திற்கு, தோன்றியவற்றிற்கு பானைக்கு களிமண் போல சத்யம் என்கின்ற தன்மை கிடையாது. தோன்றிய காலத்திலும், அதற்கு முன்னாலும், அதற்குப் பின்னாலும் எந்தவொரு தத்துவம் ஊடுருவி இருக்கின்றதோ தொடர்ந்து மாற்றமடையாமல் இருந்து கொண்டிருக்கின்றதோ அந்த வஸ்துவாக இருப்பதும், அழியாமலும் இருக்கின்றதோ அதுதான் சத்யம் என்று அறிந்து கொள்ள வேண்டும்.
 
எது ஞானத்தால் நீங்குகிறதோ அது மித்யா. பானை வெளித்தோற்றத்திற்கு வந்து காரியமானது என்ற இந்த மாதிரி சொற்களால் அழைக்கப்படுகின்ற வஸ்து மித்யா. பொய்யென்றால் களிமண்தான் சத்யம் என்ற அறிவு ஏற்பட்டவுடன் என்ன காரணத்தினால் அது மறையவில்லை?
 
அறிவு வந்தவுடன் பானை மறைந்து விட்டது. ஏனென்றால் உனக்கு அதிலுள்ள சத்யத்வமானது, சத்யம் என்கின்ற எண்ணம் நீங்கி விடுகின்றது. இப்படிபட்ட நீங்குதல்தான் நடைபெற்று பானையின் தோற்றம் தெரியாமல் போக வேண்டும் என்று இருக்க வேண்டியதில்லை.  குளத்தின் கரையில் நிற்கும்போது அதிலுள்ள நீரில் தெரிகின்ற நமது பிரதிபிம்பமானது தலைகீழாக தெரிந்து கொண்டிருந்தாலும் அது உண்மையில் நீரில் கிடையாது. அந்த பிரதிபிம்பம் உருவத்திற்கு  எப்போதும் யாரும் இருப்பைக் கொடுப்பதில்லை. இப்படிப்பட்ட அறிவு ஏற்பட்டாலே மோட்ச பலன் கிடைத்து விடுகிறது என்பது அத்வைதவாதிகளுடைய நிச்சயமான தீர்மானம். களிமண்ணின் ஸ்வரூபத்தை காரியத்தில் இருக்கின்ற சத்யத்வத்தை விடாமல் இருப்பதால் பானையில் விவர்த்த தன்மை இருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம்.
 
பரிணாம உபாதான காரணத்தில் காரணத்தினுடைய உருவத்தை விட்டுவிட வேண்டும். பால் என்ற உருவத்தை தயிரென்ற உருவத்தை அடைவதுபோல, மண் குடமாவது போல, தங்கம் வளையலாவது போல இருக்கும் போதும் முன்னுள்ள தன்மையை விடுவதில்லை. குடம் உடைந்து விட்டால் மண் தன்மையை அடைந்து விடுவதில்லையே. துண்டு துண்டான சில்லுகள் தான் தெரிகின்றனவே என்று கேட்டால் அதையே பொடிபொடியாக்கிவிட்டால் மண் ஸ்வரூபம் தெரிகிறதல்லவா. தங்கத்தின் ஸ்வரூபம் இன்னும் தெளிவாகவே தெரியும். பால் முதலிய உதாரணங்கள் பரிணாம உபாதான காரணத்திற்கு இருக்கட்டும். மறுபடியும் அந்தப் பால் என்கின்ற எண்ணம் இல்லாதபடியால். இதனால் மண் முதலியவைகளுக்கு உதாரணமாக இருக்கின்ற தன்மை கெட்டுவிடாது.
 
ஆரம்பவாதிகளின் வாதப்படி களிமண்ணுக்கு இருவித தன்மைகள் இருப்பதாக சொல்லப்படுவது அதாவது பானைக்கு தொடுதல், ரூபம் என்ற இரண்டு தன்மைகளும் காரியமான பானையில் இருக்கிறது. இதனால் மண்ணின் இரட்டிப்பு காரியத்தில் ஏற்படும். மண், தங்கம், இரும்பு என்ற இந்த மூன்று உதாரணங்களை ஆருணி என்ற ரிஷி தன் மகன் ஸ்வேதகேதுவிற்கு சொல்லியிருக்கிறார். ஆகையால் எல்லா பொருட்களிலுமே காரியத்தின் பொய்யான தன்மையை மனதில் பழக்கி பதிவுச் செய்ய வேண்டும். காரியங்கள் அனைத்துமே மித்யாவென்று சாந்தோக்ய உபநிஷத்தில் உள்ள உபதேசத்தை மனதில் நன்றாக நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். காரணத்ததைப் பற்றிய அறிவை அடைந்துவிட்டால் காரியங்களில் உள்ளதைப் பற்றிய அறிவை அடைந்துவிடலாம்.
 
காரணமாகிய சத்ய வஸ்துவின் அறிவினால் காரியமான பொய்யான தன்மையைப் பற்றிய அறிவு ஏற்படுமென்று எப்படி பொருத்தமாகும்?
 
உலகப்பார்வையில்தன் களிமண்ணில் சேர்ந்து இருக்கும் மாற்றம்தான் காரியமாக இருக்கும் தன்மை அதில் சத்யமாக இருப்பது மண் என்ற அம்சம்தான். அதன் அறிவு காரணத்தை அறிவதினால் ஏற்பட்டு விடுகிறது. காரியத்தின் விசேஷ தன்மையின் அறிவை அடையமாட்டோம். மித்யா தன்மையான விசேஷ தன்மையை அறிந்து கொள்ள வேண்டியதில்லை. அதை அறிவதனால் உபயோகமில்லாததனால் உண்மைப்பொருளை அறிவதுதான் புருஷார்த்தமாகும். மித்யா தன்மையுடைய அம்சத்தை அறிவது புருஷார்த்தமாகாது. பொய்யான அம்சத்தை அறிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. அந்த அறிவினால் உண்மையான பலனெதுவும் அடைய மாட்டோம். ஒரு பொருளினுடைய உண்மையான அம்சத்தை அறிவதுதான் பயனுள்ளதாகும்.
 
அப்படியென்றால் காரண அறிவினால் காரியத்தை பற்றிய அறிவை அடைவோம் என்று சொல்லும்போது களிமண்ணை அறிவதனால் அதைத்தான் காரியத்தில் அறியப்படுகிறது என்றுதானே சொன்னாதாக ஆகும். இதில் என்ன ஆச்சரியம்?
இது சரிதான். காரியங்களில் வாஸ்தவமாக இருக்கும் அம்சம் காரண ஸ்வரூபம் என்றறிந்து கொண்டவனுக்கு ஆச்சரியம் இருக்க வேண்டாம். அதை அறிந்தவனுக்கு ஏற்படும் ஆச்சரியத்தை யாரால் தடுக்க முடியும்? நீக்க முடியும்?
 
ஆரம்பவாதிகளுக்கும், பரிணாமிவாதிகளுக்கும், அறியாமையில் இருப்பவர்களுக்கும் இந்த வாக்கியம். ஒரு காரணத்தை அறிந்தால் எல்லாவற்றையும் அறிந்ததாகும் என்பதைக் கேட்டு ஆச்சரியத்தைத்தான் அடைவார்கள். அத்வைத தத்துவத்தை நோக்கி கவனத்தை இழுப்பதற்குத்தான் ஒன்றைப்பற்றிய அறிவினால் எல்லாவற்றின் அறிவு ஏற்படும் என்று வேதாந்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. பலவாக இருக்கின்ற தன்மையை சொல்ல உத்தேசித்து அல்ல.
 
ஒரு களிமண் கட்டியை அறிவதிலிருந்து அதிலிருந்து உருவாக்கப்பட்டிருக்கும் பானைகள் அனைத்திலும் அதுவேதான் இருக்கிறது என்ற அறிவு எப்படி ஏற்படுகிறதோ அதுபோல பிரம்மத்தை அறிவதனால் ஈஸ்வரனை அறிந்து கொண்ட பிறகு அவரிடமிருந்து தோன்றியிருக்கும் ஜகத்தின் அறிவு உண்டாகிறது. ஜகத்தில் பிரம்மம்தான் தோன்றிக் கொண்டிருக்கிறது என்று அறிந்து கொள்ள வேண்டும்.
 
இருத்தல், அறிவு, ஆனந்தம் இவைகளை இயல்பான தன்மைகளை உடையது பிரம்மம். பெயரும், உருவமும் ஜகத்தின் தன்மைகளாகும். பிரம்மத்தின் ஸத், சித், ஆனந்த ஆகிய ஸ்வரூபங்களை உடையது என்று தாபனீய உபநிஷத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஸத்தாயிருக்கும் தன்மையானது சாந்தோக் உபநிஷத்தில் ஆருணி என்பவர் சொல்லியிருக்கிறார். பிரம்மம் ஞான ஸ்வரூபம் என்பதை ஐதரேய உபநிஷத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இதே உபநிஷத்தில் சனத்குமாரர் என்பவர் ஆனந்த ஸ்வரூபத்தை சொல்லியிருக்கிறார். இப்படியே மற்ற உபநிஷத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
 
எல்லாவிதமான உருவங்களையும் நன்கு ஆலோசித்து தோற்றுவித்துவிட்டு ஈஸ்வரன் அப்படியே இருக்கிறார் என்று புருஷ ஸுக்தத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. அனைத்தையம் தோற்றுவித்த பிறகு அவைகளுக்கு நாம்-ரூபங்களையும் தோற்றுவிக்கின்றேன் என்று நினைத்தார் என்று சாந்தோக்ய உபநிஷத்தில் கூறப்பட்டு இருக்கிறது.  ஸ்ருஷ்டிக்கு முன்பு வெளித்தோற்றத்திற்கு வராதநிலை இதுவே மாயையாகும். தோற்றுவித்தப் பிறகு நாம, ரூபம் என்று இரண்டாக வெளிப்படுகிறது. பிரம்மத்திலுள்ள நினைக்க முடியாத சக்தியுடன் கூடிய இந்த மாயைதான் வெளித்தோற்றத்திற்கு வந்த நிலையில் இருக்கின்றது. மாறுதலை அடையாத பிரம்மத்தில் இருக்கின்ற இந்த மாயை பலவிதமான மாறுதலை அடைகிறது. பானையை உபாதான காரணமாகவும் ஈஸ்வரனை மாயையை தன்னிடத்தில் உடையவராகவும் அறிந்து கொள்ள வேண்டும்.
 
முதலில் படைக்கப்பட்ட ஆகாசம் அதில் (ஸத்) இருக்கிறது, பிரகாசிக்கிறது(சித்), பிரியமாகவும் (ஆனந்தம்) இருக்கிறது. இடம் கொடுப்பது என்ற தன்மையுடன் இருக்கிறது. இது மித்யாவாகும். முதலில் சொன்ன மூன்றும் மித்யாவாகும். உருவான பொருளுக்கும் முன்பு இல்லாமை என்ற நிலையுடையதாக இருந்தது. பின்னாலும் அழியக்கூடியதாக இருப்பதால் இல்லாமல் போகக்கூடியது. எது முதலிலும் கடைசியிலும் இல்லையோ அது இப்போதும் நிகழ்காலத்திலும் கூட அப்படித்தான் என்று புரிந்துகொள்.
 
தோன்றியவைகள் அனைத்தும் முதலில் வெளித்தோற்றத்துக்கு வராத நிலையில் இருந்தது. இப்போது தோற்றத்தை உடையதாக இருக்கிறது. பிற்காலத்தில் அவைகள் அழிந்து இல்லாத நிலைக்கு சென்றுவிடும் என்று பகவான் கிருஷ்ணர் அதுஜுனனுக்கு உபதேசித்துள்ளார். (பகவத் கீதை 2.28) களிமண்ணில் செய்யப்பட்ட பானையில் ஸத்,சித்,ஆனந்தம் இவைகள் எப்போதும் அதன் கூடவே வருகின்றதோ அதுபோல எப்போதும் இவைகள் கூடவே வருகின்றன. ஆத்ம ஸ்வரூபத்தில் ஸத் முதலானவைகளின் அறிவு அனுபவமாக இருக்கிறது.
 
ஆகாசத்தை மறந்துவிட்டால் பிறகு அங்கே உனக்கு, எனக்கு தெரிகிறது? சொல்லு. சூன்யம்தான் என்று கூறினால் அப்படியே இருக்கட்டும். அப்படியொன்றாவது தெரிகிறதல்லவா? அதைப் பார்த்து கொண்டிருப்பவன் ஒருவன் அறிவு ஸ்வரூபமானவன் இருக்கின்றான். அதுதான் உன்னுடைய உண்மையான ஸ்வரூபமாகும்.
 
அந்தத்தன்மை இருப்பதனால் சூன்யத்தையும் பார்க்கின்ற தன்மையை இருப்பதனால் அதை பார்த்தவன் அதற்கு இருத்தல் சித்தமாகிறது. எதையும் பொருட்படுத்தாத மனநிலையுடன் இருக்கும்போது அந்த நிலையே சுக ஸ்வரூபம் வெளிப்படுகின்ற நிலையாகும். அனுகூலத்தன்மை, பிரதிகூலத்தன்மை இரண்டுமில்லாத நிலையே அனுபவிப்பது சுகமான நிலையாகும். பிடித்தது, பிடிக்காதது, விரும்பாத சூழ்நிலை, மனநிலை விரும்புகின்ற சூழ்நிலை இவையிரண்டும் அனுபவிக்காத நிலையே சுகத்தை மனம் அனுபவிக்கிறது. இதுவே ஆத்மானந்தத்தின் வெளிப்பாடான ஆனந்தமாகும் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
 
எந்த நேரத்தில், எந்த சூழ்நிலையில் எந்தவொன்று மனதுக்கு பிடித்த மாதிரியோ, மனதுக்கு சக்தியை கொடுக்கின்ற மாதிரியோ இருக்கின்றதோ அந்த நிலையில் மனதில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. மனதுக்கு பிடிக்காத சூழ்நிலையில் துக்க எண்ணங்கள், உணர்வுகள் ஏற்படுகிறது. இரண்டு மனநிலையும் இல்லாத போது நம்முடைய ஆத்மானந்த ஸ்வரூபத்தில் சுகம் தெரியும். அப்போது துயரம் என்பதே கிடையாது. தன்னுடைய ஆத்மானந்தம் நிலையாக இருந்த போதிலும் துயரமும். மகிழ்ச்சியும் ஒரு கணத்தில் மாறி மாறி வருகின்றன. ஏனென்றால் மனதானது ஷணிக தன்மையுடன் இருப்பதால் இவ்வாறு மாறிமாறி வருகின்றது என்று புரிந்து கொள்ள வேண்டும். மனம் சாத்விக எண்ணங்களுடன் இருக்கும் போது ஆனந்தம் வெளிப்படும். ஷணிகம் என்பது மாறிக் கொண்டே இருக்கும் நிலையைக் குறிக்கும்.
 
ஆகாசத்திலும் இப்படியே ஆனந்தம் இருக்கிறது. இருத்தல், பிரகாசமும் இருப்பது ஒப்புக் கொண்டதே. இந்த உண்மையை வாயுவில் ஆரம்பித்து ஸ்தூல உடல்வரை இவ்விதம் ஆராய்ந்து ஆத்மா, அனாத்மாவை பிரித்து பார்த்து புரிந்து கொள்ள வேண்டும்.
 
வாயுவின் தனித்த ஸ்வரூபம் அசைவும், தொடுதலாகும். அக்னிக்கு உஷ்ணமும், எரிதலும், பிரகாசமும், நீருக்கு திரவமாக இருத்தல், பூமிக்கு திடமாக இருத்தல், கடினமாகவிருத்தல் என்று நிச்சயம் செய்து கொள்ளலாம். அனாத்மாக்களில் வேறுபாடு இருக்கும் ஆனால் இருத்தல் என்பது ஒன்றாகவே இருக்கும்.
 
இவ்வாறே தாவரங்களில் உணவு, உடல் இவைகளுக்கு என்றே தனித்த தன்மையுடையதாக இருக்கிறது. இந்த மாதிரி அறிவு பூர்வமாக புரிந்து கொள்ள வேண்டும். அந்தந்த பொருட்களுக்குள்ளே தனித்தன்மையுடன் இருக்கிறார் என்ற மனதினால் புரிந்து கொள்ள வேண்டும். நாம, ரூபங்கள் குணங்கள் பலவிதமாக வேறுபட்டிருக்கையிலும். ஸத்,சித்,ஆனந்தம் என்கின்றவைகள் வேறுபடாமல் ஒன்றாகவே இருக்கின்றன. இதில் எந்த சந்தேகமும், எதிர்கருத்தும் கிடையாது.
 
நாம-ரூபங்கள் இரண்டும் பிறப்பு, இறப்பு என்கின்ற தன்மையை உள்ளதாகவும், சத்யமானதாக இல்லாததாகவும் சொந்தத்தில் இருப்பு இல்லாததாகவும் அறிவின் துணைக் கொண்டு பிரம்மத்தில் பார்க்க வேண்டும். கடலில் எழுகின்ற அலைகள் தோன்றி மறைவது போல இதை பொருத்திப் பார்த்து புரிந்து கொள்ள வேண்டும்.
 
ஸத்,சித்,ஆனந்த ஸ்வரூபமாக உள்ள இந்த பூரணமான பிரம்மத்தை பார்க்கப்பட்டு விட்டால், தியானித்துக் கொண்டு வந்தால், தானாகவே மெல்ல மெல்ல இந்த நாம-ரூபங்கள் அனைத்தும் கவனிக்காமலிருந்து விடுவார்கள். நாம-ரூபங்கள் என்பது நம்மை துயரப்படுத்திக் கொண்டிருக்கும் எண்ணங்களேயாகும். நாம-ரூபங்களின் இருப்பானது கொஞ்சம் கொஞ்கமாக மறைந்து போகும். எவையெல்லாம் நம்மை சம்சாரத்தில் அழுத்திக் கொண்டு இருக்கின்றதோ அவைகளெல்லாம் நாம-ரூபங்களாக புரிந்து கொள்ளலாம்.
 
எவ்வளவுக்கெவ்வளவு நாம ரூபங்களில் மித்யா தன்மையானது பார்க்கப்படுகிறதோ, அறியப்படுகிறதோ, உணரப்படுகின்றதோ அவ்வளவுக்கவ்வளவு அது பிரம்மம் என்கின்ற தத்துவத்தை சத்யமாக உணர வைத்துவிடும். எவ்வளவக்கெவ்வளவு பிரம்மத்தை சத்யமாக பார்த்து புரிந்து கொள்கின்றாயோ அவ்வளவுக்கவ்வளவு நாம, ரூபங்கள் பொய்யாகிப் போய்விடும்.
 
இதுவரை கூறிய நிதித்யாஸன பயிற்சியினால் அறிவானது நன்கு நிலைத்துவிட்டால் அந்த மனிதன் உயிரோடு இருக்கும் போதே முக்தனாகின்றான். சரீரம் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். பிரம்மத்தையே எப்போதும் சிந்தித்தல், அதையே சொல்லுதல், அதைப்பற்றி மட்டும் பேசிக் கொண்டிருத்தல். மற்றவருடன் அதைப் பற்றியே உரையாடிக் கொண்டிருத்தல் இதையே நிதித்யாஸன குறிக்கோளாக வைத்துக் கொண்டு அதிலேயே மனதை செலுத்திக் கொண்டிருக்க வேண்டும்.
 
வெகுநாட்களாக இருக்கின்ற சம்சார வாசனைகள் முழுமையாக நீங்கிவிடும். இவ்வாறு நீங்குவதற்கு அதிக காலம், இடைவிடாது முழுநம்பிக்கையுடன், உற்சாகத்துடன் பயிற்சி செய்து கொண்டு வரவேண்டும். பிரம்மத்திடமிருந்து பலவிதமான காரியங்கள் தோன்றியிருக்கிறது. களிமண்ணில் இருக்கின்ற சக்தியினால் பானைப் போன்ற பொருட்கள் உருவாக்க முடிகின்றது. அதேபோல பிரம்மத்தினிடையே இருக்கின்ற மாயா சக்தியினால் பலவிதமான பொய்யானவைகள் எல்லாம் படைக்கப்படுகின்றது. ஜீவர்களிடத்தில் இருக்கும் தூக்கம் என்கின்ற சக்தியினால் கற்பனையான கனவுலகம் படைக்கப்படுகிறது என்பதையும் உதாரணமாக எடுத்துக் கொண்டு விசாரம் செய்யலாம்..
 
ஜீவனிடத்தில் இருக்கின்ற உறக்கம் என்கின்ற சக்தி விளக்க முடியாத பலவிதமான பொய்யான கனவுகளை தோற்றுவிக்கிறது. அதுபோல பிரம்மத்தில் உள்ள மாயா என்ற சக்தியானது உலகத்தை படைத்து பாதுகாத்து பிறகு மீண்டும் தன்னுள்ளே இழுத்துக் கொள்கிறது. கனவுலகில் ஆகாயத்தில் பறப்பது போலவும், தன்னுடைய தலையையே அறுத்துக் கொள்வது போலவும், சில வினாடிகளில் பல வருடங்கள் கழிந்து போவது போலவும் காணப்படுகிறது. இறந்து போனவர்களை பார்க்கிறோம். இது சரி, இது பொருத்தமானது, இது பொருந்தாது என்கின்ற விவஸ்தைகள் கனவில் சொல்ல முடியாது. அதுபோல எது எது எப்படியெப்படி இருக்கின்றதோ. பார்க்கப்படுகின்றதோ அதை அப்படியப்படியே பார்க்க வேண்டும். இந்தவிதமான மகிமை உறக்கத்திற்கு சக்தியாக இருக்கும் போது அப்போது மாயா சக்திக்கு நினைக்க முடியாத இந்த பெருமை இருப்பதில் ஆச்சரியமே இல்லை.
 
மனிதன் உறங்கிக் கொண்டிருக்கும் போது உறக்கம் என்கின்ற சக்தியினால் விதவிதமான கனவுகளை தோற்றுவிக்கப்படுகிறது. அதுபோல மாற்றமெதுவும் அடையாமல் பிரம்மனிடத்தில் இருக்கின்ற மாயா என்கின்ற சக்தி உலகத்தை தோற்றுவிக்கிறது. ஆகாசம், காற்று, நீர், நெருப்பு, நிலம், பிரபஞ்சம், உயிரினங்கள் வாழத்தகுந்த உலகங்கள், பிராணிகள், ஜீவராசிகள், கல், மண் முதலியவைகள் பிரம்மத்தின் காரியங்களாக தோன்றின. ஜீவராசிகளின் அந்தக்கரணத்திற்குள், மனதில்தான் சைதன்யத்தின் அறிவு ஸ்வரூபம் பிரதிபிம்பிக்கிறது. ஆகையால் இவைகள் சேதனமாகவும் மற்றவைகள் ஜடமாகவும் இருக்கிறது. அறிவு ஸ்வரூபமாக உள்ளவைகள் அனுபவிப்பனவாகவும், மற்றவைகள் அனுபவிக்கப்படும் பொருட்களாகவும் பிரிக்கப்படுகிறது.
 
இந்த சேதன, அசேதன என்பவைகளின் சச்சிதானந்த லட்சணமுள்ள பிரம்மன் சமானமாக இருக்கிறது. நாம் ரூபம் மட்டும் தனித்தனியாக முற்றிலும் வேறுபட்டு இருக்கிறது. ஜடமான வஸ்துவில் மனம் என்கின்ற ஒன்று இல்லாததால் ஆனந்தம், உணர்வும் இல்லாதிருப்பதை காண்கின்றோம். நாம ரூபங்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றை விட வேறுபட்டு இருக்கிறது.
 
ஒரு துணியில் வரையப்பட்ட உயிருள்ள, உயிரற்ற நாம ரூபங்கள் சித்திரங்களுக்கு ஆதாரமாக இருப்பது போல உலகத்திலுள்ள எல்லா உயிருள்ள, உயிரற்ற படைப்புக்களுக்கு பிரம்மன் பொதுவாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாம, ரூபங்களை நீக்கி விட்டு பிரம்மத்திலேயே புத்தியை வைத்தவனாக இருக்க வேண்டும். இப்படி பயிற்சி செய்யும்போது பிரம்மத்தினுடைய ஸ்வரூப அறிவு அடைவோம். குளக்கரையில் நின்று கொண்டிருக்கும்போது நம் உடல் தலைகீழாக தெரிந்து கொண்டிருந்த போதிலும், அதைக் கண்டு கொள்வதில்லை. பொய்யென்று நினைத்துக் கொள்கிறோம். கரையில் நிற்கும் தன்னுடைய சரீரத்திலேயே எப்படி உண்மை தன்மை இருக்கிறதோ அதுபோல பிரம்மத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
 
மனதில் ஆயிரக்கணக்கான கற்பனை இராச்சியங்கள் இருந்த போதிலும் அவைகளை எல்லாம் எப்பொழுதுமே எல்லோராலும் கண்டுக் கொள்ளப்படுவதில்லை. அதேபோல உலகத்திலுள்ள பொய்யற்றதாக தோன்றுகின்ற நாம் ரூபங்களையும் பொருட்படுத்தாத தன்மையுடன் இருக்க வேண்டும், மித்யாவென்று ஒதுக்கிட வேண்டும்.
 
ஒவ்வொரு நிமிடத்திலும் மனோ ராச்சியம் வெவ்வேறு விதமாக மாறிக் கொண்டே இருக்கிறது. ஒருமுறை மாறிவிட்டால் அதே கற்பனை மீண்டும் வருவதில்லை. உலக விவகாரமும் அப்படியேதான் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். பழைய நிலையை திரும்ப அடையவே முடியாது. குழந்தைப் பருவம் இளமை வந்ததும் சென்றுவிடுகிறது. வயோதிகம் வந்ததும் இளமை சென்று விடுகிறது. இறந்துபோன தகப்பனார் போன்ற உறவுகள் மறுபடியும் வருவதில்லை. சென்றுவிட்ட நாள் திரும்ப வரவே வராது.
 
நொடியில் நாசமடையக் கூடிய உலக விவகாரத்தில் மனக்கோட்டையை விட என்ன விசேஷம் இருக்கிறது? ஆகையால் இந்த உலகம் தோன்றிக் கொண்டிருந்த போதிலும் அதில் இருக்கும் உண்மை என்கின்ற எண்ணத்தை விட்டுவிட வேண்டும். ஒரு பொருளைப் பார்த்ததும் அதைப் பற்றிய எண்ணம் ஏற்பட்டுவிடும். அந்த எண்ணம் பொருளின் உண்மையைக் குறிக்கின்றது. அந்த எண்ணம் செயலுக்கு வரவேண்டுமென்றால் அதனால் எதாவது விவகாரம் நடக்கவேண்டுமென்றால் நினைவுக்கு வந்துவிடும். இது முயற்சியில்லாமல் நினைவுக்கு வருகின்றது. கானல் நீரின் எண்ணத்தில் உள்ள உண்மைத்தன்மையை நீக்கி விடுகிறது. இந்த எண்ணத்துடன் பார்க்கும் நிலையே சாட்சிபாவமாக பார்க்கும் நிலையாகும். எனவே உலகத்தில் பார்க்கப்படும் அனைத்திலும் உண்மைத்தன்மை என்ற எண்ணங்கள் இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையை அடைந்துவிட வேண்டும்.
 
பொதுவாக நாம் ஏதாவது ஒரு அறிவை அடைந்துவிட்டால் அதிலிருந்து நீங்கிக் இருக்க முடியாது. ஜகத்தினுடைய நாம ரூபத்தின் முக்கியத்துவத்தை விட்டுவிடும் போது பிரம்மத்தைப் பற்றிய ஸ்வரூபத்தை சிந்திக்கும்போது தடையின்றி சிந்திக்க முடியும். உலகமே ஒரு மித்யாவென்று அறிவுபூர்வமாக உணர்ந்துவிட்டால் உலக விவகாரங்களினால் துயரத்தை அடையமாட்டோம்.
 
நதியில் நீர் வேகமாக சென்று கொண்டிருந்த போதிலும் அதில் உள்ள உறுதியான பெரும்பாறை எப்படி அந்த நீரின் வேகத்தால் பாதிக்கப்படுவதில்லையோ, அப்படி உலகவிவகாரங்கள் நாம, ரூபங்கள் வெவ்வேறாக ஏற்பட்டுக் கொண்டிருந்த போதிலும் கூடஸ்தமாயுள்ள பிரம்மம் பாதிக்கப்படுவதில்லை. ஆகாசமில்லாத நிலைக் கண்ணாடிக்குள் வெளியே பெரியதாக இருக்கின்ற ஆகாசமும் அதற்குள் அடங்கிய பொருட்களுடன் தெரிகிறது. அப்படியே ஸத், சித் பிரம்ம ஸ்பரூபத்தில் பலவிதமான பொருட்களுடன் கூடிய ஜகத் விளங்கிக் கொண்டிருக்கிறது. நிலைக் கண்ணாடியைப் பார்க்காமல் அதனுள்ளே தோன்றிக் கொண்டிருப்பதையும் பார்ப்பது சாத்தியமில்லை. அவ்விதமே ஸத்-சித்-ஆனந்த ஸ்வரூபமாகவுள்ள பிரம்மத்தை அறியாமல் அதில் தோன்றிக் கொண்டிருக்கும் நாம் ரூபங்களுடைய அறிவு எப்படி ஏற்பட முடியும்?
 
முதலில் ஸத்,சித்,ஆனந்த ஸ்பரூபமாக உடைய பிரம்மமானது பிரதிபிம்பித்துக் கொண்டிருக்கும் போது, அந்த அளவில் புத்தியை நிறுத்திக் கொண்டு அதைத் தாண்டி அதில் ஏற்றி வைத்திருக்கும் நாம ரூபங்களில் புத்தியை வைக்கக்கூடாது. இவ்விதமாக பிரம்மமானது ஜகத் இல்லாமல் அறியப்பட்டுவிடும். இந்த அத்வைத ஆனந்தத்தில் நாம் எல்லோரும் வெகுகாலம் நிலைத்திருக்கலாம்.
 
பிரம்மானந்தம் என்ற பெயருடைய நூலில் அத்வைத ஆனந்தம் என்ற தலைப்புள்ள இந்த அத்தியாயத்தில் அத்வைதானந்தத்தைப் பற்றி விளக்கப்பட்டது. ஜகத்தின் மித்யாவாக இருக்கும் தன்னையை சிந்திப்பதால் அத்வைத ஆனந்தமே ஏற்பட்டுவிடும்.
 
----ooo000ooo----

A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...