அத்தியாயம்-11
வர்ணாசிரம தர்மம்
ஸ்வாமி குருபரானந்தாவின்
உபதேச விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது-21-02-2022
ஶ்ரீஉத்தவ உவாச
யஸ்த்வயாபி4ஹித:
பூர்வம் த4ர்மஸ்த்வத்3 ப4க்திலக்ஷண: |
வர்ணாஶமாசாரவதாம்
ஸர்வேஷாம் த்3விபதாமபி || 1 ||
யதா2னுஷ்டி2யமானேன
த்வயி ப4க்திர்ந்ருணாம் ப4வேத் |
ஸ்வத4ர்மணாரவிந்தாக்ஷ
தன்மமாக்2யாதுமர்ஹஸி || 2 ||
வர்ணமானது சத்துவ,
ரஜோ, தமோ குணங்களின் அடிப்படையில் .பிரிக்கப்பட்டிருக்கின்றது. ஆசிரம வாழ்க்கைநெறி வயதின் அடிப்படையில்
பிரிக்கப்பட்டிருக்கிறது என்று பகவான் தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றார்.
உங்களிடம் பக்தி
உண்டாக்கவல்ல தர்மமானது ஏற்கனவே விளக்கி சொல்லப்பட்டது. வர்ணாசிரம் நெறிப்படி
வாழ்கின்ற எல்லா மனிதர்களுக்கும் பக்தி ஏற்படும் என்று சொல்லியிருக்கிறீர்கள். எவ்விதம் தத்தம் கடமைகளை நெறிப்படி செய்து
வருவதாலே பக்தி வளர்கின்றது. தாமரையைப் போன்ற கண்களையுடைய பகவானே! வர்ணாசிரம தர்மத்தை
எனக்கு நன்கு விளக்கி சொல்ல வேண்டும்.
புரா கில மஹாபா4ஹோ
த4ர்ம பரமகம் ப்ரபோ4 |
யத்தேன ஹம்ஸரூபேண
ப்3ரஹ்மணேSப்4யாத்த2 மாத4வ || 3 ||
ஸ இதா3னீ ஸுமஹதா
காலேனாமித்ரகர்ஶன |
ந ப்ராயோ ப4விதா
மர்த்ய லோகே ப்ராக3னுஶாஸித: || 4 ||
பகவானே! முன்னொரு
காலத்தில் மேலான தர்மத்தை ஹம்ஸ ரூபத்தில் பிரம்மதேவனுக்கு உபதேசித்தீர்கள். இப்படி செய்த உபதேசமானது பல காலங்கள்
சென்றுவிட்டபடியால் மண்ணுலகில் மறைந்து போய்விட்டது என்றே தோன்றுகிறது.
வக்தா கர்தாவிதா
நான்யோ த4மஸ்யாச்யுத தே பு4வி |
ஸபா4யாமபி
வைரிஞ்ச்யாம் யத்ர மூர்தித4ரா: கலா: || 5 ||
கர்த்ராவித்ரா
ப்ரவக்த்ரா ச ப4வதா மது4ஸூதன |
த்யக்தே மஹீதலே தே3வ
வினஷ்டம் க: ப்ரவக்ஷ்யதி || 6 ||
தத்த்வம் ந:
ஸர்வத4ர்மக்ஞ த4ர்மஸ்த்வத்3 பக்திலக்ஷண: |
யதா2 யஸ்ய விதீ4யேத
ததா2 வர்ணய மே ப்ரபோ4 || 7 ||
அச்சுதா! தர்மத்தை
உபதேசிப்பவரும், அதன்படி வாழ்பவரும், அதை காப்பாற்றுபவரும் தங்களைத் தவிர இந்த
உலகில் வேறு யாரும் இல்லை.
பிரம்மலோகத்திலும் கூட தேடினாலும் யாரும் இருக்கமாட்டார்கள். விதவிதமான அறிவுக் கலைகள் அனைத்தும் உயர்ந்த
நிலையில் இருக்கும் பிரம்மலோகத்திலும் கூட யாரும் அப்படி கிடையாது. மதுசூதனா! தாங்கள் இந்த தர்மத்தை தொடங்கியவர்,
உபதேசிப்பவர். தேவர்களுக்கெல்லம் தேவனாக இருப்பவரே! தாங்கள் இந்த மண்ணுலகை விட்டு
சென்றபின் இந்த தர்மம் மெல்ல மெல்ல மறைந்து போகும். அப்போது யார்தான் அதை எடுத்து
சொல்வார்கள். ஆகவே எல்லா தர்மங்களையும்
அறிந்த பிரபோ! தங்களிடம் பக்தியை உண்டாக்கும் அறநெறியை விளக்கிக் கூறும்படி
கேட்டுக் கொள்கிறேன். மேலும் யாருக்கு
எவ்விதம் விதிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் கூறுங்கள்.
ஶ்ரீஶுக உவாச
இத்த2ம்
ஸ்வப்4ருத்யமுக்2யேன ப்ருஷட: ஸ ப4க3வான் ஹரி: |
ப்ரீத: க்ஷேமாய
மர்த்யானாம் த4ர்மானாஹ ஸனாதனான் || 8 ||
இவ்விதம் தன்னுடைய
மேலான பக்தரான உத்தவர் கேட்டவுடன், பகவான் ஶ்ரீகிருஷ்ணர் மிகவும் மகிழ்ச்சியை
அடைந்து மனித இனத்திற்கு நன்மை தரக்கூடியதும் என்றும் தொடர்ந்து இருக்கின்ற
அறநெறிகளை, தர்மங்களை அவருக்கு உபதேசம் செய்தருளினார்.
ஶ்ரீபகவான் உவாச
த4ர்ம்ய ஏஷ தவ
ப்ரஶ்னோ நை:ஶ்ரேயஸகரோ ந்ருணாம் |
வர்ணாஶ்ரமாசாரவதாம்
தமுத்3த4வ நிபோ3த4 மே || 9 ||
ஆதௌ3 க்ருதயுகே3
வர்ணோ ந்ருணாம் ஹம்ஸ இதி ஸ்ம்ருத: |
க்ருதக்ருத்யா: ப்ரஜா
ஜாத்யா தஸ்மாத்க்ருதயுக3ம் விது3: || 10 ||
ஶ்ரீபகவான் உபதேசிக்க
தொடங்கினார்.
உத்தவா! உன்னுடைய
இந்த கேள்வியானது உத்தமமானது, தர்மமயமானது.
இந்த கேள்வி மனிதனுக்கு மோட்சத்தை கொடுக்க கூடிய வழியை கொடுக்கும் பதிலை
உடையது. வர்ண, ஆசிரம நெறிப்படி நடக்கும்
மனிதர்களுக்கு மோட்சத்தை தரக்கூடிய அத்தகைய தர்மங்களை சொல்லப் போகிறேன். கவனமாக கேள்.
கிருதயுக ஆரம்பத்தில் மனிதர்கள் பின்பற்றுகின்ற வர்ணங்களி ஹம்ஸம் என்ற ஒரு
வர்ணம்தான் இருந்தது. பிறப்பிலே மனிதர்கள்
மனநிறைவுடனும், மனத்தூய்மையுடனும், தர்மவான்களாகவும் இருந்தார்கள். எனவே இதை கிருதயுகம் என்று அழைத்தார்கள்
வேத3: ப்ரணவ ஏவாக்4ரே
த4ர்மோSஹம் வ்ருஷரூபத்4ருக் |
உபாஸதே தபோநிஷ்டா2
ஹம்ஸம் மாம் முக்தாகில்பி3ஷா: || 11 ||
த்ரேதாமுகே2 மஹாபா4க3
ப்ராணான்மே ஹ்ருதயாத் த்ரயீ |
வித்3யா
ப்ராதுரபூ4த்தஸ்யா அஹமாஸம் த்ரிவ்ருன்மக2: || 12 ||
அப்போது வேதம், ப்ரணவ
ரூபம் மட்டும்தான் இருந்தது. பசு வடிவமாக
நானே தர்மமாக இருந்தேன். பசுவின் நான்கு
கால்களாக தவம், தூய்மை, தயை, சத்யம் இருந்தது.
தவ நிஷ்டர்களான சான்றோர் ஹம்ஸ வடிவில் பரமாத்மாவாகிய என்னை
வழிப்பட்டார்கள். அவர்கள் தர்மத்துடனும், மனத்தூய்மையுடனும் இருந்தார்கள். உத்தவா!
பின்னர் த்ரேதாயுகத்தில் என் இருதயத்திலிருந்தும், பிராணனிடமிருந்தும் மூன்று
வேதங்கள் தோன்றின. மூன்று வேதங்களை
உபதேசிக்கின்ற மூன்று ரித்விக்குகள் தோன்றினார்கள்
விப்ரக்ஷத்ரியவித்ஶூத்3ரா
முக2பா3ஹுருபாத3ஜா: |
வைராஜாத்புருஷாஜ்ஜாதா
ய ஆத்மாசாரலக்ஷணா: || 13 ||
க்3ருஹாஶ்ரமோ ஜக4னதோ
ப்3ரமச்ர்ய ஹ்ருதோ3 மம |
வக்ஷ:ஸ்த2லாத்3வனேவாஸ:
ஸந்ந்யாஸ: ஶிரஸி ஸ்தி2த: || 14 ||
பிராமணர்,
சத்திரியன், வைசியன், சூத்திரன் என்ற நான்குவிதமான மனிதர்கள் தோன்றினார்கள். விராட்
புருஷனாகிய என்னுடைய முகத்திலிருந்து பிராமணர்களும், கைகளிலிருந்து சத்திரியர்களும்,
தொடையிலிருந்து வைசியர்களும், பாதங்களிலிருந்து சூத்திரர்களும்
தோன்றினார்கள். இவர்களுடைய
வாழ்க்கைமுறையிலிருந்தும், செய்கின்ற செயல்களிலிருந்தும் இவ்வாறு பிரிக்கப்பட்டு
இருக்கிறார்கள். விராட் புருஷனாகிய என்னுடைய தலையிலிருந்து சந்நியாச ஆசிரமும்,
மார்பிலிருந்து வானப்பிரஸ்த ஆசிரமும், இருதயத்திலிருந்து பிரம்மச்சர்ய ஆசிரமும்,
இடுப்புக்கு கீழே முன்புற பகுதியிலிருந்து கிருஹஸ்தாசிரமும் தோன்றின
வர்ணானாமாஶ்ரமாணாம் ச
ஜன்மபூ4ம்யனுஸாரிணீ: |
ஆஸன்ப்ரக்ருதயோ ந்ருனாம்
நீசைர்னீசொத்தமோத்தமா: || 15 ||
ஒவ்வொரு மனிதனும்
சத்துவ, ரஜோ, தமோ குணங்களின் விதவிதமான சேர்க்கையோடுதான் இருக்கிறார்கள்.
அவர்களுடைய குணசேர்க்கைக்கு தகுந்தமாதிரி என்னுடைய அதற்கேற்ற சங்கல்பத்திலிருந்து
பிறப்பான். வர்ணங்களும், ஆசிரமங்களும்
மனிதர்களுக்கு இவ்வாறு இருக்கின்றது.
மேலான அங்கத்திலிருந்து மேலான வர்ணாசிரமும், கீழான அங்கத்திலிருந்து கீழான
வர்ணாசிரமும் தோன்றின.
ஶமோ தமஸ்தப: ஶௌசம் ஸந்தோஷ:
க்ஷாந்திரார்ஜவம் |
மத்3ப4க்திஶ்ச தயா
ஸத்யம் ப்3ரஹ்மப்ரக்ருதயஸ்த்விமா: || 16 ||
ஶமஹ – சிந்தித்தல்,
ஆலோசித்தல் போன்ற சத்துவகுண பிரதானமானவைகள்
தமஹ –
புலனடக்கத்துடன் இருத்தல்
ஶௌசம் – உள்ளம்,
உடல், வசிக்குமிடம், சுற்றுப்புற சூழ்நிலைகள் இவைகளை தூய்மையாக வைத்திருக்கும்
குணம்
தபஹ – எளிமையான
வாழ்க்கையை வாழ்தல்
ஸந்தோஷ: - இருப்பதில்
திருப்தியடைதல்
க்ஷாந்தி –
பொறுத்தல், மன்னித்தல்
ஆர்ஜவம் – மனம்,
சொல், செயல் இவை மூன்றிலும் நேர்மையாக இருத்தல். என்ன நினைக்கிறோமோ அதையே
சொல்லுதல், செயல்படுத்துதல்.
மேலும் என்னிடம்
பக்தியுடன் இருத்தல், இரக்கம், உண்மை பேசுதல் இவைகள் யாவும் பிராமணனின் இயற்கையான
குணங்கள்.
தேஜோ ப4லம் த்4ருதி:
ஶௌர்யம் திதிக்ஷௌதா3ர்யமுத்3யம: |
ஸ்தை2ர்யம்
ப்ரஹ்மன்யமைஶ்வர்யம் க்ஷத்ரப்ரக்ருதயஸ்த்விமா: || 17 ||
தேஜஹ – மனதைரியம்
ப4லம் – உடல் வலிமை,
ஶௌர்யம் - மன வலிமை
த்4ருதி – மனோதிடம் (
எடுத்தக் காரியத்தை முடிக்கும் திறமை)
திதிக்ஷா – துயரத்தை
தாங்கிக் கொள்ளும் சக்தி
ஔதா3ர்யம் –
பொதுநலத்தோடு செயல்படுதல், பொது சொத்தை பாதுகாத்தல்
உத்3யஹ – முயற்சி,
கண்காணிக்கும் திறமை
ஸ்தைர்யம் – மனவுறுதி
ப்3ரஹ்மன்யதா –
பிராமணர்களை மதித்தல், பாதுகாத்தல்
ஐஸ்வர்யம் –
ஆளும்திறமை இவைகளனைத்தும் சத்திரியனின் குணங்களாகும்
ஆஸ்திக்யம் தா3ன
நிஷ்டா2 ச ஆத3ம்போ4 ப்ரஹ்மஸேவனம் |
அதுஷ்டிரதோ2பசயைர்வைஶ்ய
ப்ரக்ருத்யஸ்த்விமா: || 18 ||
ஆஸ்திக்யம் – இறைவன்
இருக்கிறான் என்ற நம்பிக்கை, இறைவன் கர்மபலனைத் தருபவர் என்ற நம்பிக்கை
தா3ன நிஷ்டா – தானம்
செய்யும் குணம்
அத3ம்ப4ஹ – செய்த
தானத்தை வெளிக்காட்டாத குணம், மற்றவர்களை ஏமாற்றாத குணம்
பிரஹ்மஸேவனம் –
பிராமணர்களுக்கு தேவையான பொருட்களை கொடுத்து, பாதுகாத்தல்
அதுஷ்டி அர்த உபசயை –
கிடைத்தப் பொருளைக் கொண்டு மனநிறைவு அடையாமல் மென்மேலும் பொருள் சேர்த்தல்,
இவைகளனைத்தும்
வைசியனின் இயல்பான குணங்கள்
ஶுஶ்ருஷணம்
த்3விஜக3வாம் தேவானாம் சாப்யமாயா |
தத்ர லப்3தே4ன ஸந்தோஷ:
ஶூத்ரப்ரக்ருதயஸ்த்விமா: || 19 ||
மற்ற மூன்று
வர்ணத்தினருக்கும், உயிரினங்களுக்கும் உடலளவில் சேவை மற்றும் பணி செய்தல், இறைவன்
இருக்கின்ற ஆலயங்களுக்கும் ஏமாற்றாமல், வஞ்சனையில்லாமல் பணி செய்தல், கிடைத்ததில்
திருப்தி அடைதல் ஆகியவைகள் சூத்திரர்களுடைய இயல்பான குணங்கள்.
அஶௌசமந்ருதம் ஸ்தேயம்
நாஸ்திக்யம் ஶுஷ்கவிக்3ரஹ: |
காம: க்ரோத4ஶ்ச
தர்ஷஶ்ச ஸ பா4வோSந்த்யாவஸாயினாம்
|| 20 ||
உடல், உள்ளம்,
வசிக்குமிடம், சுற்றுப்புறம் இவைகளை தூய்மையில்லாமல் வைத்திருத்தல்,
அந்ருதம் -
பொய்கூறுவது,
ஸ்தேயம் – திருடுதல்
(பொருள், செல்வம், உழைப்பு, அறிவு )
நாஸ்திக்யம் –
இறைவனையும், சாஸ்திரத்தையும் நம்பாமல் இருத்தல்
ஶுஷ்கவிக்3ரஹ –
காரணமில்லாமல் சண்டை செய்தல்
காமஹ – போகத்தில்
பற்று
க்ரோதம் –
கோபப்படுதல்
தர்ஷஹ – பேராசைப்படுதல்
இந்த குணங்களெல்லாம்
இயல்பாக இருந்தால் அவன் எந்த வர்ணத்தையும் சார்ந்தவனும் அல்ல.
அஹிம்ஸா
ஸத்யமஸ்தேயமகாமக்ரோத4லோப4தா |
பூ4தப்ரியஹிதேஹா ச
த4ர்மோSயம் ஸார்வ வர்ணிக: || 21 ||
இனிமேல் சொல்கின்ற
குணங்களனைத்தும் எல்லா வர்ணத்தினரிடமும் பொதுவாக இருக்க வேண்டியவைகள்.
அஹிம்ஸா –
சொல்-செயல்-மனம் இவைகளால் மற்ற உயிர்களை துன்புறுத்தாமல் இருத்தல்
ஸத்யம் – உண்மை
பேசுதல்
அஸ்தேயம் – திருடாமை
அகாம, அக்ரோத4, அலோப4
– காமம், குரோதம் லோமப் இவைகள் இல்லாமல் இருத்தல்.
எல்லா
உயிர்களிடத்தும் அன்பாக இருத்தல், நன்மை செய்தல், மகிழ்ச்சி அளித்தல் போன்ற
குணங்கள் எல்லா மனிதர்களுக்கு பொதுவானவை
த்3விதீயம் ப்ராப்யானுபூர்வ்யாஜ்ஜன்மோபனயனம்
த்3விஜ: |
வஸன்கு3ருகுலே
தா3ந்தோ ப்ரஹ்மாதீ4ஹீத சாஹூத: || 22 ||
த்3விஜ: - பிரம்மச்சாரி
ஆசிரமத்துக்குள் செல்ல தயாராக இருப்பவர்கள், இரண்டாவது ஜன்மம் என்றும் பொருட் கொள்ளலாம்
த்3விதீயம் ஜன்ம
ப்ராப்யா உபநயனம் அனுபூர்வ்யாத் – உபநயனம் என்கின்ற இரண்டாவது பிறப்பை கிரமப்படி
அடைகிறான்
வஸன் குருகுலம் –
பிறகு குருகுலத்திற்கு சென்று வசித்து,
தாந்தஹ –
புலனடக்கத்துடன் இருக்க வேண்டும்
ப்ரஹ்ம அதீ4ஹீத –
சாஸ்திரத்தை படிக்க வேண்டும்
அஹூத: - ஆசாரியார்
சொல்வதை படிக்க வேண்டும்
மேக2லாஜினத3ண்டாக்ஷ
ப்ரஹ்மஸூத்ரகமண்டலூன் |
ஜடிலோSதௌ4த த3த்வாஸோSரக்தபீட2: குஶாந்த த4த் || 23 ||
ஸ்னானபோ4ஜன்ஹோமேஷு
ஜ்யோச்சாரே ச வாக்யத: |
ந
ச்சி2ந்த்3யான்னக2ரோமாணி கக்ஷோபஸ்த2க3தான்யபி || 24 ||
மேக2ல – புற்களாலான
கயிறு
அஜின – மான்தோல்,
அதன்மீது அமர்ந்து படிப்பதற்கு
த3ண்டம் – எழுதுப் பொருட்கள்
அக்ஷ – ஜபமாலை (மனதை
தளர்த்தி படிக்க தயாராக இருக்க உதவும் ஜபம் செய்வதற்காக)
ப்ரஹ்மஸூத்ரம் –
பூணூல்
கமண்டல் – குடிநீர்
உள்ள பாத்திரம்
இவைகளையெல்லாம்
எடுத்துக் கொண்டு சிவப்புநிறமில்லாத ஆசனத்தில் அமர வேண்டும். எளிமையான தோற்றத்தோடு
இருக்க வேண்டும். வாசனை திரவியங்களை
பயன்படுத்தக் கூடாது. தலையலங்காரம் பண்ணிக் கொள்ளக்கூடாது.
வாக்யத – வாக்கு
இந்திரியத்தை கட்டுப்படுத்தியவனாக இருக்க வேண்டும். தேவையில்லாமல் பேசிக்
கொண்டிருக்க கூடாது
நீராடும்போதும், உணவு
அருந்தும் போதும், ஹோமம், பூஜை செய்யும் போதும், ஜபம் செய்யும் போதும் மௌனமாக
இருக்க வேண்டும்.
கக்ஷம் –
பிறப்புறுக்களிலிருந்து முடியையும், நகங்களையும் வெட்டக் கூடாது.
ரேதோ நாவகிரேஜ்ஜாது
ப்ரஹ்மவ்ரத த4ர: ஸ்வயம் |
அவகீர்ணேSவகா3ஹயாப்ஸு யதாஸுஸ்த்ரிபதா3ம் ஜபேத் || 25 ||
பிரம்மச்சர்ய
விரதங்களை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
நீரால் உடலை தூய்மைப் படுத்திக் கொள்ள வேண்டும். பிராணாயாமம் செய்து உடலை ஆரோக்கியமாக
வைத்திருக்க வேண்டும். காயத்ரி மந்திரத்தை
ஜபிக்க வேண்டும். ஒருபோதும் வீர்யத்தை
இழக்கக் கூடாது. ஒருவேளை கனவில் இழக்க நேரிட்டால் குளித்து உடலை தூய்மை படுத்திக்
கொள்ள வேண்டும்.
அக்3ன்யர்காசார்யகோ3விப்ர
க3ருவ்ருத்3த4ஸுராஞ்ஶுசி: |
ஸமாஹித உபாஸீத
ஸந்த்4யே த்3வே யதவாக்3ஜபன் || 26 ||
அறிவை அடைய பணிவு,
ஒழுக்கம், போன்ற குணங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். தூய்மையாக இருக்க வேண்டும். வாக்கைக் கட்டுப்படுத்தி வைத்திருக்க வேண்டும். மேலும்
அக்னி, சூரியன், ஆசாரியன், பசு, மகான்கள், குரு, வயதில் மூத்தவர்கள், தேவர்கள்
இவர்களை வணங்க வேண்டும். சிரத்தையுடனும், மரியாதையுடனும், மன
ஒருமுகத்தோடும், பக்தியோடும் வழிபட வேண்டும்.
சந்தியா வேளைகளில் (காலை, மாலை, மதியம்) சந்தியா தேவிகள் (காயத்ரி,
சாவித்திரி, சரஸ்வதி) ஜபம் செய்து கொண்டிருக்க வேண்டும்.
ஆசார்ய மாம்
விஜானீயான்னாவன்மன்யேத கர்ஹிசித் |
ந
மர்த்யபு3த்3த்4யாஸூயேத ஸர்வதே3வமயோ கு3ரூ: || 27 ||
ஆசாரியனை என்
ஸ்வரூபமாக நினைக்க வேண்டும். ஒருபோதும் அவமதிக்கக் கூடாது. அவரை ஒரு சாதாரண மனிதராக
எண்ணிக் குற்றம் குறையெதுவும் அவரிடத்தில் பார்க்கக் கூடாது. ஏனென்றால் குரு என்பவர் அனைத்து தெய்வ
வடிவமானவர்.
ஸாயம் ப்ராதருபானீய
பை4க்ஷ்யம் தஸ்மை நிவேதயேத் |
யச்சான்யத3ப்யனு
ஞாதமுபயுஞ்ஜீத ஸ்ம்யத: || 28 ||
காலை, மாலை வேளைகளில்
பிக்ஷை எடுத்து வந்த அன்னம் முதலியவைகளை குருவிடம் சமர்ப்பிக்க வேண்டும். வேறு எது கிடைத்தாலும் அதை அவருக்கு நிவேதனம்
செய்ய வேண்டும். குரு அனுமதித்த பிறகே
அடக்கத்துடன் உணவை உட்கொள்ள வேண்டும்.
ஶுஶ்ரூஷமாண ஆசார்யம்
ஸதோ3பாஸீத நீசவத் |
யானஶய்யாஸன்ஸ்தா2னைர்னிதிதூரே
க்ருதாஞ்ஜலி: || 29 ||
ஆசாரியருக்கு சேவை செய்து
கொண்டு, எப்பொழுதும் குருவை வணங்க வேண்டும். எப்படி ஒரு சேவகன் தன் எஜமானனுக்கு
சேவை செய்வானோ அதுமாதிரி நடந்து கொள்ள வேண்டும். எல்லா நேரத்திலும் தேவைப்படும்
சமயத்தில் சேவை செய்ய வேண்டும். அவர்
பயணம் செய்யும் போதும், படுத்துக் கொண்டு இருக்கும்போதும், நடக்கும் போதும்
அவரருகிலே இருந்து கொண்டு பணிவுடன் கூப்பிய கரங்களுடன் அவர் உத்தரவை
எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.
ஏவம்வ்ருத்தோ
கு3ருகுலே வஸேத்3தோ4க3விவர்ஜித: |
வித்3யா ஸமாப்யதே
யாவத்3பி3ப்4ரத்3வ்ரதமக2ண்டி3தம் || 30 ||
இங்கு கூறப்பட்ட
நியமத்தை கடுமையாக பின்பற்றி குருகுலத்தில் வசித்துவர வேண்டும். புலனுகர் போகங்களை தவிர்த்து, எவ்வளவு காலம்
கல்வி கற்றுக் கொண்டு வருகிறோமோ அதுவரை சுகபோகங்களில் ஈடுபடாமல் இருக்க
வேண்டும். பிரம்மச்சர்ய விரதங்களை
பின்பற்ற வேண்டும்.
யத்3யஸௌ ச2ந்த3ஸாம்
லோகமாரோக்ஷ்யன்ப்3ரஹ்மவிஷ்டபம் |
கு3ரவே
வின்யஸேத்தே3ஹம் ஸ்வாத்4யாயார்த2ம் ப்3ருஹத்3 வ்ரத: || 31 ||
ஒருவேளை இந்த
பிரம்மச்சாரி வேதத்தின் துணைக்கொண்டு அடையக்கூடிய பிரம்ம லோகத்தை அடைய
விரும்பினால் அவன் தன்னுடைய வாழ்க்கையை குருவிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் அறிவை வளர்த்துக் கொள்ள விரும்பிய இவன்
மேலான விரதத்தை மேற்கொண்டவனாகக் கருதப்படுகின்றான்
அக்3னௌ கு3ராவாத்மனி
ச ஸர்வபூ4தேஷு மாம் பரம் |
அப்ருத2க்3தீ4ருபஸீத
ப்ரஹ்மவர்சஸ்வ்யக்ல்மஷ: || 32 ||
நைஷ்டிக பிரம்மச்சாரி
உலகத்தின் ஈர்ப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு மன ஒருமுகப்படுத்தி அக்னி,
குரு, தன்னிடத்திலும், எல்லா ஜீவராசிகளிடத்திலும் இருக்கின்ற பரம்பொருளான என்னையே
தியானிக்க வேண்டும். இவைகள் ஈஸ்வரனிடத்திலிருந்து வேறில்லை என்று தியானிக்க
வேண்டும்.
ஸ்த்ரீணாம்
நிரீக்ஷணஸ்பர்ஶம் ஸம்லாபக்ஷ்வேலனாதி3கம் |
ப்ராணினோ
மிது2னீபூ4தானக்3ருஹஸ்தோ2Sக்3ரதஸ்த்யஜேத்
|| 33 ||
நைஷ்டிக பிரம்மச்சாரி
புலனடக்கத்துடனும், ஒழுக்கத்துடனும் இருக்க வேண்டும் என்பதை இதில்
வலியுறுத்துகிறார். பெண்களை பார்ப்பதும், அவர்களிடம் உரையாடுவதும், தொட்டு
பேசுவதும், எப்பொழுதும் கூடாது. விலங்குகளின் சேர்க்கையை பார்ப்பதையும் முடிந்தவரை
தவிர்க்க வேண்டும்.
ஶௌசமாசமனம் ஸ்னானம்
ஸ்ந்த்3யோபஸ்திர்ம மார்சனம் |
தீர்த2ஸேவ ஜபோSஸ்ப்ருஶ்யா ப4க்ஷ்யாஸம்பா4ஷ்யவர்ஜனம் || 34 ||
தூய்மையாக இருத்தல்,
ஆசமனம் செய்தல், குளித்தல், சந்தியா வேளைகளில் தியானம் செய்தல், நேர்மையாக
இருத்தல், புனிதயாத்திரை மேற்கொள்ளுதல், புண்ணிய நதியில் நீராடுதல், ஜபம் செய்தல்,
தொடக்கூடாததை தொடாமல் இருப்பது, சாப்பிடக்கூடாததை சாப்பிடாமல் இருப்பது,
பேசக்கூடாதவர்களுடன் பேசாமல் இருப்பது போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும்.
ஸர்வாஶ்ரமப்ரயுக்தோSயம் நியம: குலநந்த3ன |
மத்3பா4வ:
ஸர்வ்பூ4தேஷு மனோவாக்காயஸம்யம: || 35 ||
ஏவம் ப்3ருஹத்3வ்ரத
த4ரோ ப்ராஹ்மணோSக்னிரிவ
ஜ்வலன் |
மத்3ப4க்தஸ்தீவ்ரதபஸா
தக்3த4கர்மாஶயோSமல: ||
36 ||
உத்தவா! எல்லா
ஆசிரமங்களைச் சேர்ந்தவர்களுக்கு விதிக்கப்பட்ட பொதுவான நியமங்கள், எல்லா
ஜீவராசிகளிடத்திலும் என்னையே காண்கின்ற ஈஸ்வர பக்தி, மனம், சொல், உடல் இவைகளை
கட்டுப்பாட்டுதன் வைத்திருத்தல் போன்ற மிகப்பெரிய நியமங்களை கடைப்பிடிக்கும்
நைஷ்டிக பிரம்மச்சாரியம் இவன் அக்னியைப் போல் ஓளி வீசிக் கொண்டு இருப்பான். என்னிடம் பக்தி கொண்டவனாக இருந்து கொண்டு,
கடுமையான தவங்களால், கர்ம-சம்ஸ்காரங்களை சுட்டெரித்துவிட்டு தூய்மையானவாகின்றான்,
மனத்தூய்மை அடைகிறான், பாவங்களையெள்ளம் அழித்து விடுகிறான்.
அதா2னந்தரமாவேக்ஷ்யன்யதா2ஜி
ஞாஸீதாகம: |
கு3ரவே தக்ஷிணாம்
த3த்த்வா ஸ்னாயாத்3கு3ர்வனுமோதி3த: || 37 ||
க்3ருஹம் வனம்
வோபவிஶேத்ப்ரவ்ரஜேத்3வா த்3விஜோத்தம: |
ஆஶ்ரமாதாஶ்ரமம் க3ச்சே2ன்னான்யதா2மத்பரஶ்சரேத்
|| 38 ||
உத்தவா! இந்த
சாஸ்திரத்தை முறைப்படி நிறைவு செய்து அடுத்த ஆசிரமமான கிருஹாசிரமத்திற்கு செல்ல
விரும்பினால், குருவுக்கு தட்சிணை கொடுத்து விட்டு அவருடைய அனுமதியை பெற்று பிறகு
குருகுலத்தை விட்டு வெளியேறும் சம்ஸ்காரத்தை செய்து கொள்ள வேண்டும். குருகுலத்தில் முறையாக படித்துவிட்டு வெளிவந்த
மேலான பிரம்மச்சாரி இல்லறத்துக்கு செல்லலாம். அல்லது வானப்ரஸ்தாசிரமத்திற்கோ.
சந்நியாஸ ஆசிரமத்திற்கோ செல்லலாம். அல்லது கிரமப்படி ஒரு ஆசிரமத்திலிருந்து அடுத்த
ஆசிரமத்திற்கு முறையாக செல்லலாம். எந்த
ஆசிரமத்தில் இருந்தாலும் உன்னுடைய வாழ்க்கை பயணம் என்னை அடைதலையே இறுதி
குறிக்கோளாக இருக்க வேண்டும்.
க்3ருஹார்தீ2
ஸத்ருஶீம் பா4ர்யாமுத்3வஹேத3ஜுகு3ப்ஸிதாம் |
யவீயஸீம் து வயஸா யம்
ஸ்வர்னாமனு க்ரமாத் || 39 ||
இல்லறத்திற்கு இருக்க
விரும்புகின்றவன் தனக்கு பொருத்தமான (மனம், குணம், செல்வம், வயது) தன்னைவிட
குறைந்த வயதுள்ளவளும், சாஸ்திர விதிப்படியான லட்சணங்கள் அமையப் பெற்றவளுமான பெண்ணை
திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
இஜ்யாத்4ய யனதானானி
ஸர்வேஷாம் ச த்3விஜன்மனாம் |
ப்ரதிக்3ரஹோSத்4யாபனம் ச ப்ராஹ்மணஸ்யைவ யாஜனம் || 40 ||
இல்லறத்திற்கு சென்ற
எல்லோரும், அவரவர்களுடைய ஸ்வதர்மத்தை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
சாஸ்திரங்கள், மகான்கள் எழுதிய தர்ம சாஸ்திர புத்தகத்தை படித்தல், தானம்
கொடுத்தல், தானம் வாங்குதல், கற்றுக் கொடுத்தல், யாகம் செய்து வைத்தல்,
இவைகளெல்லாம் பிராமணர்களுக்கு மட்டுமே உரியது.
ப்ரதிக்3ரஹம்
மன்யமானஸ்தபஸ்தேஜோயஶோனுத3ம் |
அன்யாப்4யாமேவ ஜீவேத
ஶிலைர்வா தோ3ஷத்ருக்த்யோ: || 41 ||
பிராமணர்கள் தானம்
வாங்கினால் தன்னுடைய தவத்திற்கோ, புகழுக்கோ தடையாக இருக்கும் என்று நினைத்தால் இதை
விட்டுவிட்டு மற்ற இரு கடமைகளை செய்து கொண்டு வாழ்ந்து கொள்ளலாம். மேலும் இந்த இரண்டிலும் குறை இருப்பதாக
நினைத்தால் ஶிலவிருத்தியால் ஜீவிதம் செய்யலாம்.
ஶிலைவா – வயலில் அறுவடையானவுடன் கீழே இறைந்து கிடக்கும் தானியங்களை
பொறுக்கி எடுத்து, அதை புசித்து வாழ்தல்
ப்ராஹ்மணஸ்ய ஹி தே3ஹோSயம் க்ஷுத்ரகாமாய நேஷ்யதே |
க்ருச்ச்3ராய தபஸே
சேஹ ப்ரேத்யானந்தஸுகா2ய ச || 42 ||
பிராமணனுடைய ஸ்தூல
உடல், மனம் இவைகள சத்துவத்தில் நிலைப்பெற்றுள்ளது. எனவே இவன் தன் உடலை கீழான சுக-போகங்களை
அனுபவிப்பதற்காக பயன்படுத்தக் கூடாது.
வாழ்க்கை முழுவதும் கடுந்தவம் செய்ய வேண்டும். இதனால் அவன் இறந்த பிறகு எல்லையற்ற பேரின்பத்தை
அடைவதற்காக பயன்படுத்த வேண்டும்.
ஶிலோஞ்ச2வ்ருத்த்யா
ப்ரிதுஷ்டசித்தோ த4ர்ம மஹாந்தம் விரஜம் ஜுஷாண: |
மய்யர்பிதாத்மா
க்3ருஹ ஏவ திஷ்ட2ன்னாதிப்ரஸக்த: ஸமுபைதி ஶாந்திம் || 43 ||
ஶிலோஞ்சவ்ருத்தி – மற்றவர்கள் வேண்டாம் என்று ஒதுக்கியவைகளை எடுத்துக் கொள்ளுதல்,
தியாக மனநிலையோடு வாழ்ந்து கொண்டிருப்பவன்.
பரிதுஷ்டசித்தஹ – கிடைத்ததில் போதும் என்ற மனதிருப்தியுடன் இருப்பவன்,
விரஜம் – மனதிலுள்ள அழுக்குகளை நீக்கியவனாக, நற்பண்புகளுடன் கூடியவனாக
மய்யர்பிதாத்மா – என்னிடத்தில் அர்ப்பணம் செய்துவிட்ட மனதையுடையவன்
க்2ருஹ ஏவ திஷ்ட2ன் – இல்லறத்திலே இருந்து கொண்டு
ந அதிப்ரஸக்தஹ – தன்னைச் சுற்றியிருப்பவர்களிடமுள்ள செல்வத்திலும், பொருட்களிலும்
பற்றுக் கொள்ளாதவன்
ஸஹ ஶாந்திம் உபைதி – மேலான பேரானந்தத்தை, அமைதியை அடைகிறான்
ஸமுத்3த4ரந்தி யே
விப்ரம் ஸீதந்தம் மத்பராயணம் |
தானுத்3த4ரிஷ்யே ந
சிராதா3பத்3ப்4யோ நௌரிவர்ணவாத் || 44 ||
இல்லறத்திலிருப்பவர்கள்
மற்ற ஆசிரம தர்மத்தில் இருப்பவர்களையும், இல்லறத்தில் இருந்து கொண்டு கஷ்டப்படும் மற்ற ஆசிரமத்திலிருப்பவர்கலயும், என்
பக்தர்களையும், தர்மத்துடன் வாழ்பவர்களையும் காப்பாற்ற வேண்டும். இவர்களுக்கு கஷ்டம் வரும் போது கடலில் மூழ்கிக்
கொண்டிருப்பவனை காப்பாற்றும் படகு போல நான் அவர்களை உடனடியாக காப்பாற்றுகிறேன்
என்று பகவான் உறுதி கொடுக்கிறார்.
விப்ரம் – கஷ்டத்தில் இருக்கும் இல்லறத்தில், மற்ற ஆசிரமத்தில் இருக்கின்ற
மத்பராயணம் – பக்தர்களையும், தர்மத்துடன் வாழ்பவர்களையும்
ஸமுத்ரஹ - யார் காப்பாற்றுகின்றார்களோ
ஸீதந்தம் - அப்படிபட்டவர்களை
நௌரிவர்ணவாத் – கடலில் மூழ்கிக் கொண்டிருப்பவனை காப்பாற்றும் படகைப் போல
ஆபத்3பயஹ – கஷ்டத்திலிருக்கும் போது
நசிராத் - உடனடியாக
தான் உத்3த4ரிஷ்யே – அவர்களை காப்பாற்றுகிறேன்
ஸர்வா:
ஸமுத்3தரேத்ராஜா பிதேவ வ்யஸனாத்ப்ரஜா: |
ஆத்மானமாத்மனா தீ4ரோ
யதா2 க3ஜபதிர்க3ஜான் || 45 ||
இல்லறத்தில்
இருக்கும் சத்திரியர்களின் கடமைகளை கூறுகிறார். அரசன் எப்படி மக்களைக் காப்பாற்ற
வேண்டும் என்பதைக் கூறுகிறார். அரசன் தம் மக்களை
ஒரு தந்தையைப் போல பாதுகாக்க வேண்டும். ஆனால் உன்னை நீயேதான் பாதுகாத்துக் கொள்ள
வேண்டும். துன்பப்படும் யானையை யானைத்
தலைவன் காப்பாற்றுவது போல மக்களைக்காக்க வேண்டும்.
ஏவம்விதோ4 நரபதிர்விமானேனார்வர்சஸா
|
விதூ4யேஹாஶுப4ம்
க்ருத்ஸ்னமிந்த்ரேண ஸஹ மோத3தே || 46 ||
சத்திரியன் தன்னுடைய
தர்மத்தை செவ்வனே கடைப்பிடித்து இறந்தபிறகு சொர்க்கத்தை அடைகிறான்.
சொர்க்கத்திற்கு விமானம் மூலமாக அழைத்துச் செல்லும் போது தேவர்கள் வாழ்த்தைப்
பெற்றுக் கொண்டு, அனைத்து பாவங்களிலிருந்தும் முழுமையாக விடுபட்டவனாக இந்திரனுடன்
சமமாக இருப்பான்.
ஸீத3ன்விப்ரோ
வணிக்3வ்ருத்த்யா பண்யைரேவாபத3ம் தரேத் |
க2ட்3கே3ன
வாபதா3க்ராந்தோ ந ஶ்வ வ்ருத்த்யா கத2ஞ்சன || 47 ||
ஒரு பிராமணனுக்கு
தன்னுடைய தர்மப்படி வாழமுடியவில்லையென்றால், அவன் வைசியனுடைய வாழ்க்கை முறையான
வியாபாரத்தை பின்பற்றலாம். தர்மத்துக்குட்பட்ட பொருட்களைத்தான் விற்று பிழைக்க
வேண்டும். தனக்கு வரும் கஷ்டத்தை இதன்
மூலம் நீக்கி கொள்ளலாம்.
ஆபதா3க்ரந்தஹ – ஆபத்தான காலத்தில்
க2ட்கே3ன – வாளேந்தி சத்திரிய தர்மத்தையும் பின்பற்றலாம்
கதஞ்சன - ஒருகாலத்திலும்
ந ஶ்வ வ்ருத்தயா – அதர்மமான வாழ்க்கை முறையை பின்பற்றக் கூடாது
வைஶ்யவ்ருத்த்யா து
ராஜன்யோ ஜீவேன்ம்ருக3யயாபதி3 |
சரேத்3வா விப்ர்ரூபேண
ந ஶ்வ வ்ருத்த்யா கத2ஞ்சன || 48 ||
இதுபோலவே சத்திரியன்
தன்னுடைய தர்மத்தின் மூலம் வாழ்க்கை நடத்த முடியவில்லை என்றால், வைசியனுடைய
வாழ்க்கை முறையை பின்பற்றலாம். மிகவும்
கஷ்டமான நிலையில் வேட்டையாடியும் பிழைக்கலாம் அல்லது பிராமணர் தொழிலையும்
செய்யலாம். ஆனால் எந்தக் காலத்திலும்
அதர்மமான வாழ்க்கை முறையை பின்பற்றக்கூடாது
ஶூத்ரவ்ருத்திம்
ப4ஜேத்3வைஶ்ய: பூ4த்ர: காருகடக்ரியாம் |
க்ருச்ச்2ரான்முக்தோ
ந க3ஹர்யேண வ்ருத்திம் லிப்ஸேத கர்மணா || 49 ||
வைசியனும்
கஷ்டகாலத்தில் சூத்திரனுடைய வாழ்க்கைமுறையை ஏற்றுக் கொள்ளலாம். அதேபோல சூத்திரனும் கஷ்டகாலத்தில் பாய்முடைதல்
போன்ற பணிகளைச் செய்து பிழைத்துக் கொள்ளலாம்.
கஷ்டங்களிலிருந்து விடுபட்டபின் மீண்டும் தத்தம் தொழிலுக்கு திரும்பிவிட
வேண்டும். தன்னுடைய வர்ணத்திற்கும் கீழான வாழ்க்கை
முறையிலே இருந்துவிடக்கூடாது.
வேதா3த்4யாயஸ்வதா4ஸ்வாஹா
ப3ல்யன்னாத்3உஐர்யதோ2த3யம் |
தேவர்ஷிபித்ருபூ4தானி
மத்3ரூபாண்யன்வஹம் யஜேத் || 50 ||
வேத ஆத்யாய – ரிஷி யக்ஞம்
பிரஹ்ம யக்ஞம் – சாஸ்திரங்களைப் படித்தல்
ஸ்வாஹா – ஸ்வாஹா என்று கூறி தேவர்களுக்கு ஹோமங்களால் வழிபடுதல்
ப3லி – மிருகங்களுக்கு கொடுக்கப்படுகின்ற உணவு
அன்னம் – மற்ற மனிதர்களுக்கு கொடுக்கப்படுகின்ற உணவு
ஆத்யை – இவைகள் மூலமாக
யதோ2த3யம் – அவரவர்களுடைய சக்திகேற்ப மேற்கூறிய யக்ஞங்களை செய்ய வேண்டும். தேவர்கள், ரிஷிகள், பித்ருக்கள், ஜீவராசிகள்
இவைகள் எல்லாவற்றிலும் நான்தான் இருக்கின்றேன். என்னுடைய ஸ்வரூபங்கள்தான்
எல்லாவற்றிலும் இருக்கின்றது. ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு யக்ஞத்தை செய்ய வேண்டும்.
யத்ருச்ச2யோப பன்னேன
ஶுக்லேனோபார்ஜிதேன வா |
த4னேனாபீடயன்ப்4ருத்யான்ன்யாயேனைவாஹரேத்க்ரதூன்
|| 51 ||
பிராரப்தத்தினால்
முயற்சியின்றி உழைக்காமல் கிடைத்தப் பொருளைக்கொண்டும், பரம்பரையாக கிடைத்த
செல்வம், தந்தை சம்பாதித்த செல்வத்தை கொண்டும் அல்லது தான் நேர்மையாக உழைத்து
சம்பாதித்த செல்வத்தில் அரசாஙகத்திற்கு கொடுக்க வேண்டியதை கொடுத்துவிட்டு
மீதியிருப்பதில் தன்னை அண்டியிருக்கும் மக்களுக்கு எவ்வித துன்பம் ஏற்படாத
வகையில் நியாயமான முறையில் சேர்த்த செல்வத்தைக் கொண்டு தன்னுடைய கடமைகளை செய்ய
வேண்டும். மற்றவர்களுக்கும் பகிர்ந்து
கொடுக்க வேண்டும்.
குடும்போ3ஷு ந ஸஜ்ஜேத
ந ப்ரமாத்3யேத்குடும்ப்3யபி |
விபஶ்சின்னஶ்வரம்
பஶ்யேத த்3ருஷ்டமபி த்3ருஷ்டவத் || 52 ||
குடும்பத்தில் இருந்த
போதிலும் உறவுகளிடத்தில் பற்று வைக்கக் கூடாது.
உறவுகளிடத்தில் கவனக்குறைவாகவும் இருந்துவிடாதே. யாரையும்
சார்ந்திருக்காதே. இந்த அறிவை உடையவனாக இருப்பாயாக. இவைகள் அழியக்கூடியது, மாறிக் கொண்டேயிருப்பது
என்று பார்க்க வேண்டும். கண்ணால்
காணப்படும் பொருட்களில் நிலையாமையை பார்க்க வேண்டும். இல்லறத்தில் இருக்கும்போது
பாதுகாப்பை உணர்ந்திருந்தாலும், உண்மையில் பாதுகாப்பற்றது. எதிர்காலத்தில்
இவைகளெல்லாம் எனக்கு பாதுகாப்பையும், சுகத்தையும் கொடுக்கும் என்று நினைப்பவைகளும்
நிலையற்றவை என்று அறிந்து கொள்ள வேண்டும்.
புண்ணியமும் அழியக் கூடியதுதான் என்று அறிந்து கொள்ள வேண்டும்.
புத்ரதாராப்தபந்தூ4னாம்
ஸட்3க3ம: பாந்த2ஸட்க3ம: |
அனுதேஹம் வியந்த்யேதே
ஸ்வப்னோ நித்3ரானுகோ3 யதா2 || 53 ||
உறங்கிக்
கொண்டிருக்கும் வரை கனவு இருக்கும்.
அதுபோல மனைவி, மக்கள், நெருங்கிய உறவினர்கள், மற்ற உறவினர்களின் சேர்க்கை
வழிப்போக்கர்களின் சேர்க்கையை போன்றதாகும். பயணத்தில் பழகும் மனிதர்களின் உறவைப்
போல இது இருக்கின்றது. மனிதர்களின் உடல்
அழிந்து விட்டால் உறவுகளும் மறைந்து விடும்
இந்தப்பிறவியிலே உறவின் பிடிப்பு குறைந்து போகும். ஒவ்வொரு உடலும் மாறும்போது உறவுகளும்
மாறிவிடும்.
இத்த2ம்
பரிம்ருஶன்முக்தோ க்3ருஹேஷ்வதிதி2வத்3வஸன் |
ந க்3ருஹைரனுப3த்4யேத
நிர்மமோ நிரஹட்3க்ருத: || 54 ||
இவ்விதம் உறவுகளின்
நிலையாமையை ஆராய்ந்து உணர்ந்து அவைகளிலிருக்கும் பற்றை நீக்கியவனாக தம் வீட்டிலேயே
விருந்தினரை போல வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்.
வீட்டிலிருப்போரிடமும், வீட்டிலுள்ள பொருட்கள் மீதும் அதிக பற்று வைக்காதே. இவைகள் என்னுடையது, இவர்கள் என்னைச்
சார்ந்தவர்கள் என்றும் இவர்களை காப்பாற்றுவதும், நன்றாக வைத்திருப்பதும் நானே
என்றும் அனைத்தும் நன்றாக இருப்பதற்கு நானே காரணம் என்றும் நினைக்க கூடாது.
கர்மபி4ர்க்3ருஹமேதீ4யைரிஷ்ட்வா
மாமேவ ப4க்திமான் |
திஷ்டே2த்3வனம்
வோபவிஶேத்ப்ரஜாவான்வா பரிவ்ரஜேத் || 55 ||
ஆன்மீக முன்னேற்றத்தை
விரும்பும் சாதகன் இல்லறத்தில் குழந்தை, மனைவியுடன் இருப்பவன், இறைவனான என்னையே இல்லறத்திலுள்ள
தனது கடமைகளை நன்கு செய்து கொண்டே பூஜை செய்து கொண்டு வாழ்நாள் முழுவதும் இல்லறத்திலே
இருக்கலாம் அல்லது வானபிரஸ்த ஆசிரமத்திற்கு செல்லலாம் அல்லது சந்நியாச ஆசிரமத்திற்கே
செல்லலாம்.
யஸ்த்வாஸக்தமதிர்கே3ஹே
புத்ரவித்தைஷணாதுர: |
ஸ்த்ரைண:
க்ருபணதீ4ர்மூடோ4 மமாஹமிதி ப3த்4யதே || 56 ||
ஒருவேளை ஒருவன் இல்லறத்தில்
அதிகப்பற்றுடனும், மக்கள், செல்வத்தின் மீது அதிக ஆசைக் கொண்டும், மனைவி மற்றும் மற்ற
உறவுகளிடத்தில் அதிக பற்றுடனும் இருந்தால் அவன் மிகவும் பரிதாபத்திற்குரியவனாகிறான்.
இவர்கள் எல்லோரும் இருந்தாலும், எதையோ இழந்தவன்
போல துயரைத்தையே அடைகின்றார்கள், நான்-என்னுடையது என்ற பந்தத்தில் வீழ்ந்து விடுகிறான்
இந்த அறிவற்றவன்.
அஹோ மே பிதரௌ
வ்ருத்3தௌ4 பாலாத்மஜாத்மஜா: |
அனாதா2 மாம்ருதே
தீ3னா: கத2ம் ஜீவந்தி து3:கி2தா: || 57 ||
ஏவம்
க்3ருஹாஶயாக்ஷிப்த ஹ்ருதயோ மூட4தீ4ரயம் |
அத்ருப்தஸ்தானனுத்4யாயன்ம்ருதோSந்த4ம் விஶதே தம: || 58 ||
அய்யோ! என்னுடைய வயதான
பெற்றோர்களும், இளங்குழந்தைக்கு தாயாக இருக்கின்ற என் மனைவியும், குழந்தைகளும் நான்
இல்லையென்றால் அனாதையாகிவிடுவார்கள், வறுமை நிலைக்கு சென்று விடுவார்கள், துன்பப்படுவார்கள்.
எவ்வாறு வாழ்க்கையை நடத்த முடியும் என்று இவ்வாறெல்லாம் எண்ணிக் கொண்டு இல்லறத்தில்
நன்கு செயல்படாமல், அதிகப் பற்றுடன் இருக்கும் இத்தகைய மூடர்கள் எதிலும் திருப்தி அடையாதவனாகவும்,
அவைகளை நினைத்துக் கொண்டிருந்து, இறந்த பிறகு இருள் சூழ்ந்த நரகத்தையே அடைகிறார்கள்.
ஓம் தத் ஸத்