Showing posts with label மாண்டூக்ய உபநிஷத்-04. Show all posts
Showing posts with label மாண்டூக்ய உபநிஷத்-04. Show all posts

Friday, November 10, 2017

மாண்டூக்ய உபநிஷத் - பகுதி-4

மாண்டூக்ய உபநிஷத் - பகுதி-4
ஸ்வாமி குருபரானந்தா உபதேச விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது08/04/2022
www.poornalayam.org
 
காரிகை2வது அத்தியாயம் (வைதத்ய பிரகரணம்)
பிரபஞ்சோபஶமம்பிரபஞ்சம்(ஜகத்) + உபஶம(இல்லாமை) - பிரபஞ்சம் இல்லாத இடம் அதுவே துரீயம் ,பிரம்மம், ஆத்மாஇரண்டு விதமான இல்லாமை அபாவம் இருக்கின்றதுஅவைகள்,
1. நீரில் உப்பைபோட்டு கலந்து விட்டால் உப்பின் இருப்பு தெரியாது, வெளித்தோற்றத்திற்கு வராத நிலைக்கு சென்று விட்டது.. 
2. கயிற்றில் தெரிந்த பாம்பு இல்லாமை அடைந்து விட்ட நிலை.
 
அத்வைதத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் பிரபஞ்சம் பிரம்மத்திலே மறைந்து இருக்கின்றது என்று பொருள் சொல்கிறார்கள்ஆனால் அத்வைதிகள் பிரபஞ்சம் உண்மையில் இல்லை ஆனால் இருப்பது போல தோன்றி  கொண்டிருக்கின்றது, இந்த நிலையே மித்யா என்று கூறுகிறார்கள். பிரபஞ்சம் மித்யா என்ற உபதேசம் நமது அனுபவத்திற்கு எதிராக இருப்பது போல சந்தேகம் வருகின்றதுஎதை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் சாஸ்திரம் சொல்வதை ஏற்றுக்கொள்ள வேண்டும்இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு
1.      பிரத்யக்ஷம் எப்போதும் உண்மையைதான் காட்டுகின்றது என்ற நியதி கிடையாது. உதாரணமாக கானல் நீர், பூமி தட்டையாக இருப்பது போல் தோன்றுவதுஇது போல இந்த உலகமும் பொய் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
2.      பிரத்யக்ஷ பிரமாணத்தால் எப்போதும் ஒரு பொருள் சத்யமா அல்லது மித்யாவா என்று சொல்ல முடியாதுகண் கானல் நீரை பார்க்கின்றது, அது உண்மையா, பொய்யா என்று சொல்வது கிடையாதுபுத்திதான் இதை நிர்ணயம் செய்கின்றதுஇதேபோல நம் அனுபவம் உலகம் சத்யமா, மித்யாவா என்று சொன்னது கிடையாது. நம் அறிவினால்தான் உண்மையை அறிந்து கொள்ள முடியும்.
 
நம் அனுபவம் உலகத்தின் இருப்பைத்தான் காட்டுகின்றதுஆனால் அது உண்மையா, பொய்யா என்று உறுதி செய்யாதுபுத்திதான் இதை நிர்ணயம் செய்கின்றதுஇந்த அத்தியாயத்தில் கௌடபாதர் அனுமானம் என்ற பிரமாணத்தை ஜகத் மித்யா வைத்து சாஸ்திரம் சொல்கின்ற உண்மையை என்று நிலை நாட்டுகின்றார்அனுமானத்தை இரண்டு விதமாக பயன்படுத்தலாம். அவைகள்,
1. தனிப்பட்ட முறையில் பயன்படுத்தலாம், சாஸ்திரத்தின் துணையில்லாமல் தர்க்கத்தை உபயோகித்தல்-ஸ்வதந்திர தர்க்கத்தை பயன்படுத்தலாம்.
2. சாஸ்திர பிரதானமாக கொண்டு பயன்படுத்துகின்ற அனுமானம்.
இந்த இரண்டாவது வகை அனுமானத்தை கௌடபாதர் கையாண்டு விளக்குகின்றார்.
 
அனுமான விசாரம் (யூகம் Inference )
அனுமானம் என்பது பிரத்யக்ஷ பிரமாணம் பயன்படாத போது அறிவை அடைய பயன்படுத்தும் ஒருவகையான முறை. இந்த பிரமாணம் பிரத்யக்ஷ பிரமாணத்தின் துணைக் கொண்டுதான் செயல்படும்பிரத்யக்ஷத்தினால் அறியாததை அனுமானத்தினாலும் அறிய முடியாதுமலையில் பகல்நேரத்தில் புகையை பார்த்தால் அந்த இடத்தில் நெருப்பு இருக்கின்றது என்ற கூறுவோம். இந்த அறிவையடைய நம் கண்ணை பயன்படுத்தவில்லைஇது பிரத்யக்ஷ த்தினால் வரவில்லைஇந்த அறிவை அடைவதற்கு உதவிய பிரமாணம்  அனுமானம். இதில் ஐந்து தத்துவங்கள் இருக்கின்றதுஅவைகள்,
1.   பக்ஷம்        - மலையை குறிக்கின்றது.
2.   ஸாத்யம்     - நெருப்பு (வன்னி, அக்னி)
3.   ஹேது        - புகை (தூமஹ)
4.   வ்யாப்தி      - எங்கெல்லாம் புகையுண்டோ அங்கெல்லாம் நெருப்பு இருக்கும்     என்கின்ற உண்மை
5.   த்ருஷ்டாந்தம்சமையலறை, யாகசாலை
 
1.   பக்ஷம் – இதன் லட்சணம் எங்கு சாத்தியம் சந்தேகிக்கப்படுகின்றதோ அந்த இடத்திற்கு  பக்ஷம் என்று பெயர். (-ம்) நெருப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் இடம் மலை
2.   சாத்தியம்எது என்று நிச்சயிக்கபட வேண்டிய விஷயம், ஸாதனீயம், நிரூபிக்கப்பட வேண்டியது
3.   ஹேதுஒன்றை (சாத்தியத்தை) அறிய உதவும் சாதனம் , கரணம், லிங்கம் (புகை)
4.   வியாப்திஹேதுவுக்கும், சாத்தியத்திற்கும் இடையே உள்ள பிரியாத, இணைந்திருக்கின்ற சம்பந்தம்ஹேது ஸாத்ய ஸாஹச்சர்ய நியமஹ.  (-ம்) புகையும், நெருப்பும் எப்போதும் சேர்ந்தே இருக்கும்எப்போதெல்லாம் ஒன்று இருக்கின்றதோ அப்போதெல்லாம் இணைந்திருக்கின்ற மற்றொன்றும் சேர்ந்திருக்கும்எங்கேயெல்லாம் புகையிருக்கின்றதோ அங்கேயெல்லாம் புகை இல்லாமையும் இருக்கலாம். எனவே ஹேதுவுடன் இணைந்திருக்கும் சத்யம்
5.   திருஷ்டாந்தம்உதாராணம்அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயம்.
 
அனுமானம் என்பதும் அறிவை கொடுக்கும் கருவியாக இருக்கின்றதுமேலே கூறப்பட்ட ஐந்தின் துணைக்கொண்டு அடையப்படும் அறிவானது அனுமானத்தினால் அடைந்த அறிவாகின்றதுஅனுமானம் என்பது வியாப்தியுடன் கூடிய ஹேதுவை பக்ஷத்தில் பார்ப்பது அனுமானத்தை சொல்லும் முறை: பக்ஷம், ஸாத்யம், ஹேது, த்ருஷ்டாந்தம், வியாப்தி
மலையில் நெருப்பு இருக்கின்றது புகை இருப்பதனால் யாகசாலையை போல, எங்கெல்லாம் புகை இருக்கின்றதோ அங்கேயெல்லாம் நெருப்பான ஸாத்யம் இருக்கும்.
 
அனுமான வாக்கியம்-1
உடல் அழிவுக்கு உட்பட்டது அது காரியமாக இருக்கின்ற காரணத்தினால் பானையை போல.
இந்த உதாரணத்தில்,
பக்ஷம்உடல்; ஸாத்யம்அழியக்கூடியது; ஹேதுகாரியம் (உருவாக்கப்பட்டதால்)
த்ருஷ்டாந்தம்பானையப்போல;
வியாப்திஎதுவெல்லாம் உருவாக்கப்படுகின்றதோ அதுவெல்லாம் அழியக்கூடியது
வியாப்தி ஞானத்துடன் ஹேதுவைப் பக்ஷத்தில் பார்த்தால்தான் ஸாத்யம் புரிய வரும்.
ஜகத் (பக்ஷம்) மித்யா (ஸாத்யம்) என்பதை அனுமானத்தின் துணைக்கொண்டு நிலைநாட்ட வேண்டும். ஹேது பார்க்கப்படுவதனால், அனுபவிக்கப்படுவதனால், த்ருஷ்டாந்தம்கனவு பிரபஞ்சத்தைப் போல
 
காரிகை-1-ஹேது-1
இதில் ஸ்வப்னம் மித்யா என்று நிரூபித்தல்த்ருஷ்டாந்தத்திலிருந்து வியாப்தி ஞானம் நமக்கு ஏற்படும்யாகசாலையில் நாம் புகையுடன் கூடிய நெருப்பை பார்க்கின்றோம்இதை வைத்துத்தான் எங்கேயெல்லாம் புகை இருக்கின்றதோ அங்கேயெல்லாம் நெருப்பு இருக்கும் என்ற வியாப்தி ஞானத்தை உறுதி செய்கின்றோம்எனவே திருஷ்டாந்தத்திற்கு இன்னொரு பெயர் வியாப்தி பூமி என்று உண்டுஅனுமானத்தின் மூலம் அடையும் அறிவிற்கு திருஷ்டாந்த ஸித்தி முக்கியம்,
 
வைதத்யம் ஸர்வபாவானாம் ஸ்வப்ன ஆஹு மனீஷிணஹகனவில் காணும் அனைத்துப் பொருட்களும் மித்யா என்று அறிவாளிகள், பிரமாணத்தை நன்கு உபயோகிப்பவர்கள்  சொல்கிறார்கள். இது பக்ஷம்.
பாவானாம் அந்த ஸ்தானாத் ஸம்வ்ருதத்வேன ஹேதுனாகனவில் காணும் அனைத்து பொருட்களும் நமக்குள்ளே இருப்பதனாலும், அந்த இடம் சிறிய இடமாக இருக்கின்ற காரணத்தினால், இது ஹேதுவாக இருக்கின்றது.
 
காரிகை-2 ஹேது-2
அதீ3ர்க4த்வாத் காலஸ்யகாலம் குறைவாக இருக்கின்ற காரணத்தால்
3த்வா தே3ஶான்ன வ பஶ்யதிவேறு இடத்திற்கு சென்று (கனவில் பார்க்கும் இடத்திற்கு)
கனவை பார்ப்பதில்லை
இதுவரை அனுமான முறையில் கனவு பிரபஞ்சம் மித்யா என்று நிலை நாட்டினார்இனி அனுபவத்திலே இது மித்யா என்று புரிய வைக்கின்றார்.
ஸர்வ பிரதிபு3த்34விழித்துக் கொண்ட அனைவரும்
தஸ்மின் தேஶே ந வித்யதேஅந்த நேரத்தில் அங்கு இருப்பதில்லை.
எந்த இடத்தில் இருப்பதாக கனவு காண்கின்றோமோ விழித்தவுடன் அந்த இடத்தில் நாம் இருப்பதில்லை. எனவே இதன் மூலம் கனவு பிரபஞ்சம் மித்யா என்று புரிந்து கொள்ளலாம்.
 
காரிகை-3
இதில் ஸ்ருதி பிரமாணத்தில் மூலம் கனவு பிரபஞ்சம் மித்யா என்று நிரூபிக்கின்றார்.
அபாவாத் ரதாதினாம் ஸ்ருயதெ ந்யாயபூர்வகம்கனவில் தோன்றும் ரதம் போன்றவைகள் இல்லாததை யுக்திமூலமாக, நியாயமாக ஸ்ருதியானது நிரூபிக்கின்றது.
வைதத்யம் தேன வை ப்ராப்தம்பொய்யாக இருக்கின்ற நிலையானது தர்க்கத்தின் மூலமாகவும், இதுவரை செய்த விசாரம் மூலமாகவும் அடையப்பட்ட்து.
ப்ரகாஶிதம்உபநிஷத்தின் மூலமும் இதை அறிய முடிந்தது.
 
கனவில் தோன்றும் பொருட்கள் அனைத்தும் அனுமானம், அனுபவம் இவைகள் மூலமாக பொய்யென்று அறிந்தோம்உபநிஷத் மூலமும் இந்த அறிவை அடைந்தோம். இவ்வாறு சாஸ்திரத்தை நன்கு கற்றறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
 
காரிகை-4
பக்ஷம்ஜாக்ரத் பிரபஞ்சம்; ஸாத்யம்மித்யா; த்ருஷ்டாந்தம்கனவு பிரபஞ்சம்
யதா தத்ர ததா4 ஸ்வப்னேகனவில் எப்படியோ அப்படியே ஜாக்ரத் அவஸ்தையிலும்
கனவில் பார்க்கப்படும் பொருட்கள் எப்படி பொய்யாக இருக்கின்றதோ, அப்படியே ஜாக்ரத் அவஸ்தையிலும் தோன்றும் பொருட்களும் பொய்யாக இருக்கின்றது.
தஸ்மாத் பேதானாம் ஜாகரிதே ஸ்ம்ருதம்ஆகவே பொருட்களுடைய பொய்யான நிலை ஜாக்ரத் அவஸ்தையிலும் நிலை நாட்டப்பட்டது.
அந்த ஸ்தானாத்பொருட்கள் உள்ளே இருக்கின்றது என்ற விஷயமும்
ஸம்வ்ருத த்வேனஆனால் குறைவான இடம் இருக்கின்றது என்ற விஷயமும்
பித்யதேவேறுபடுகின்றன.
ஜாக்ரத் அவஸ்தையில் உள்ள பொருட்களுக்கு போதுமான இடம் இருக்கின்றதுஆனால் கனவில் குறைவான இடம் இருக்கின்றது என்ற வேற்றுமையும் புரிந்து கொள்ள வேண்டும்.
 
காரிகை-5
ப்ரஸித்தே4னைவ ஹேதுனாபிரசித்தமான காரணத்தினால் பார்க்கப்படுவதானால்
வியாப்திஎங்கேயெல்லாம் பார்க்கப்படுவது இருக்கின்றதோ அங்கேயெல்லாம் மித்யாவாக இருக்கின்றது.
ஸ்வப்ன ஜாக்ரத் ஸ்தானே ஹி ஏகம்கனவு நிலையும், ஜாக்ரத் நிலையும் இரண்டும் ஒன்றுதான் என்று
ஆஹூ மனீஷனஹஅறிவாளிகள் சொல்கின்றார்கள்.
பே4தானாம் ஹி சமத்வேனஇரண்டு நிலைகளில் உள்ள பொருட்களின் தன்மை ஒரே மாதிரியாக இருப்பதனால்
இந்த இரண்டு நிலையில் உள்ள பொருட்கள் பார்க்கப்படுவதால் இரண்டும் ஒரே தன்மையை அடைகின்றது. அதனால் இரண்டும் ஒன்றுதான் என்று அறிந்து கொள்ள முடிகின்றதுஇதிலிருந்து கனவு பிரபஞ்சம் மித்யா என்று நிரூபிக்கப்பட்டிருப்பதால் விழிப்பு நிலை பிரபஞ்சமும் மித்யா என்று புரிந்து கொள்ளலாம்.
 
காரிகை-6
ஜாக்ரத் பிரபஞ்சம் மித்யா என்பதற்கு இரண்டாவது ஹேது சொல்லப்படுகின்றது.
பார்க்கப்படுவதெல்லாம் மித்யா என்று தெளிவாக சந்தேகமின்றி புரிந்து கொள்ள முடியாமல் இருக்கின்றதுஅழியாத ஒன்றை யாரும் பார்த்திருக்க முடியாதுஎவையெல்லாம் பார்க்கப்படுகின்றதோ அவைகள் மாற்றத்திற்கும், அழிவிற்கும் உட்பட்டதாக இருக்கின்றதுஇவைகள் முதலில் இல்லாமல் இருந்து பின்பு இருப்புக்கு வந்து பின்பு மீண்டும் இல்லாத நிலைக்கு சென்று விடுகின்றது.
ஹேதுஆதி-அந்த வடிவம்தோற்றமும் முடிவும் இருப்பதனால், தோன்றி மறையும் தன்மை உடையதனால், அநித்யமாக இருப்பதால், தற்காலிகமாக இருக்கின்றதோ அதுவே பார்க்கப்படுவதாகவும் இருக்கின்றதுஇதையே மித்யா என்றழைக்கப்படுகின்றது.
ஆதாவந்தே யத் ந அஸ்திதோன்றுவதற்கு முன்னும், அழிவிற்கு பின்னும் எந்த ஒரு பொருள் இல்லையோ
வர்த்தமானே அபி தத் ததா4 அந்தப் பொருள் தோன்றிக்கொண்டிருக்கும்போதும், தோன்றிய பின்னரும், அழிவிற்கு பின்பும் கூட இல்லாத நிலையில்தான் இருக்கின்றது.
விததை2ஹி ஸத்ருஷா ஸந்தஹ அவிததா2 இவ லக்ஷிதாநம்மால் அனுபவிக்கப்படும் பொருட்கள் மித்யாவாக இருந்த போதும் உண்மையாக தோன்றுவது போல அறியாமையில் உள்ளவர்களால் கருதப்படுகின்றது
 
காரிகை-7
பூ.1 - எது பலனைக் கொடுக்கின்றதோ அவைகள் ஸத்யம், பலனைக் கொடுக்காதவைகள் எல்லாம் மித்யாஉதாரணம் கானல் நீர் மித்யா, கனவில் காணும் பொருட்கள் அனைத்தும் மித்யாஆனால் விழிப்பு நிலை பொருட்களுக்கு ஆதியும், அந்தமும் இருக்கின்றது, பலனும் இருப்பதால் அவைகள் ஸத்யம்
பதில்  விழிப்பு நிலை பொருட்கள் கனவில் பயன் தராதுகனவில் காணும் பொருட்கள் விழிப்பு நிலையில் பயன்படுவதில்லைஜாக்ரத் அவஸ்தையில் நன்கு சாப்பிட்ட ஒருவன் கனவில் பசியோடு இருப்பதாக காண்கிறான்அதனால் பயனைக் கொடுப்பது மித்யாவல்ல என்று கருத்து ஏற்றுக் கொள்ள முடியாது. அது தவறான கருத்து என்று அறிந்து கொள்ள வேண்டும்கனவில் காணும் பொருட்களும், ஜாக்ரத் அவஸ்தையில் காணும் பொருட்களூம் அந்தந்த அவஸ்தையில் பயன்படுகின்றது ஆனால் மற்ற அவஸ்தையில் பயன்படவில்லை. அதனால் அவைகள் பயனை அளித்தாலும் மித்யாதான்.
பூ.2   ஜாக்ரத் பிரபஞ்சத்தில் உள்ள பொருட்கள் அந்த அவஸ்தையில் பயனுடையதாக இருக்கின்றதுஏன் இதை கனவு நிலைக்கு எடுத்து செல்கிறீர்கள்?
பதில்  ஸ்வப்ன பிரபஞ்சத்தில் காணும் பொருட்கள் பயன்படுவதில்லை என்று நீ கூறுவதற்கு ஜாக்ரத் அவஸ்தையை எடுத்துக் கொள்கின்றாய்ஆனால் அவைகள் அந்த பிரபஞ்சத்தில் பயன்படுகின்றதுஅதேபோல நாங்கள் கனவு பிரபஞ்சத்தை எடுத்துக் கொண்டு ஜாக்ரத் அவஸ்தை பொருட்கள் பயனளிக்காது என்று கூறுகிறோம்எனவே உனது கொள்கையின்படி ஜாக்ரத் பொருட்கள் பயன்படவில்லை அதனால் அவைகள் மித்யா என்று புரிந்து கொள்உன்னுடைய முதல் ஹேது கனவில் காணும் பொருட்கள் பயன்படுவதில்லை என்று சொன்னதும் தவறு. அவைகள் அந்தந்த அவஸ்தையில் பயன்படுகின்றது, வேறு அவஸ்தையில் பயனற்றதாகவும் இருக்கின்றது.
 
தேஷாம் ஸப்ரயோஜனதாஅவைகளுடைய (ஜாக்ரத்தில் அனுபவிக்கின்ற பொருட்கள்)
பயனளிக்கக்கூடியது என்ற தன்மை
ஸ்வப்னே விப்ரதிபத்யதேகனவில் வேறுபடுகின்றது, பயனற்றதாக இருக்கின்றது.
தஸ்மாத் ஆத்யந்தவத்த்வேன.- ஆகவே ஆதியும், அந்தமும் கூடியதான ஹேதுவினால்
மித்யா ஏவ கலு தே ஸ்ம்ருதாஅவைகள் மித்யாதான் என்று கருதப்படுகின்றது.
 
காரிகை-8
பூ.1   இந்த உதாரணம் சரியாக பொருந்தவில்லைஸ்வப்ன பிரபஞ்சம் மித்யாவல்லநம் மனதிலுள்ள ஸம்ஸ்காரங்கள்தான் கனவில் வருகின்றனஜாக்ரத் அவஸ்தையில் அனுபவங்கள் ஸம்ஸ்காரங்களாக நம் மனதில் பதிந்திருக்கின்றனஇவைகளின் உதவியால் ஒரு உலகத்தை படைத்து அனுபவிக்கின்றோம்எனவே இந்த ஸம்ஸ்காரத்தை ஆதாரமாக கனவு பிரபஞ்சம் இருப்பதால் அவைகள் மித்யா என்று சொல்கிறீர்கள்ஆனால் ஜாக்ரத் அவஸ்தையில் அனுபவிக்காத, பார்க்காத பொருட்களும், புதிய பொருட்களும் கனவில் தோன்றுகின்றன. இவைகள் ஸம்ஸ்காரத்திலிருந்து உருவானதில்லையே! எனவே அவைகள் ஸத்யமாகத்தானே இருக்க வேண்டும்எனவே கனவு பிரபஞ்சம் மித்யா என்ற உதாரணம் சரியல்ல.
பதில்  இந்த ஜென்மத்திலேயோ அல்லது முற்பிறவியில் ஜாக்ரத் அவஸ்தையில் பார்த்திருப்பாய், அல்லது இந்த ஜென்மத்தில் பார்த்ததையே மறந்திருப்பாய். எனவே கனவில் காண்பது அனைத்தும் அபூர்வ தரிசனமே கிடையாது. ஸம்ஸ்காரத்தில் இருந்துதான் அவைகள் உருவாக முடியும்.
பூ.    இப்படி சொல்வதனால் கனவு பிரபஞ்சம் மித்யா என்று சொல்வது சரியாக இருக்கும். ஆனால் இந்த ஹேது ஜாக்ரத் பிரபஞ்சத்தில் பார்ப்பவைகள் அனைத்தும் வாஸனையில் இருந்து வராததாலும், நாம் முன்பு பார்க்காததாலும் அவைகள் ஸத்யம் மித்யாவல்ல.
பதில்  கனவில் அபூர்வமான பொருட்களை பார்க்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம்அப்படியிருந்தும் அவைகளும் மித்யாதான்ஒரு மலரை பத்து ஜீவராசிகள் பார்க்கின்றன ஆனால் அந்த மலர் ஒவ்வொரு ஜீவராசிக்கும் விதவிதமாக காட்சி அளிக்கும்ஒரு பொருள் நமக்கு எப்படி தெரிகின்றதோ அப்படி தெரிவதற்கு காரணம் நாம் அப்படி பார்ப்பதாலா அல்லது மலர் அப்படி தெரிகின்றதாமலர் தோற்றம் பார்க்கும் கண்களைப் பொறுத்திருக்கின்றது. அதேமாதிரி இந்த உலகம் நம் பார்வைக்கு இது மாதிரி காட்சியளித்துக் கொண்டிருக்கின்றதுஉண்மையில் உலகம் எப்படி இருக்கும் என்று கேட்டால், அதற்கு பதில் சொல்ல முடியாது. நாம் நம் கண்ணுக்கு தோன்றுவதை வைத்துத்தான் சொல்கின்றோம். ஒரே பொருள் விதவிதமாக புதியதாக தெரிவதற்கு காரணம் அது ஸத்யமாக இருப்பதால் அல்லஅபூர்வ தர்ஷனத்திற்கு காரணம் ஸத்ய-மித்யாவல்ல, பார்ப்பவனுடைய இந்திரியங்களின் தர்மம்நம்மால் அனுபவிக்கப்படுகின்ற விஷயங்களின் நம்முடைய பிரமாணங்களான இந்திரியங்களை சார்ந்திருக்கின்றதுபிரமேயமானது பிரமாணத்தை சார்ந்துதான் இருக்கின்றதுஒரு பொருள் அப்படி தெரிவதற்கு காரணம் பார்க்கும் கண்ணை பொறுத்திருக்கின்றதுபிரமாணம் -பிரமாதவை சார்ந்திருக்கின்றது. பிரமாதா ஆத்மாவை சார்ந்திருக்கின்றான்எது சுதந்திரமாக இருக்கின்றதோ அது ஸத்யம், எது பரதந்திரமாக (ஒன்றை சார்ந்திருக்கின்றதோ) அது மித்யாஇதன் அடிப்படையில் நம்மால் பார்க்கப்படுகின்ற அனைத்தும் நம்முடைய கண்ணை சார்ந்திருப்பதால் அவைகள் மித்யா என்று புரிந்து கொள்ளலாம்.
 
அபூர்வம் ஸ்தானி தர்மஹபுதியதாக பார்க்கும் பொருள் அப்படி தெரிவதற்கு காரணம் பார்ப்பவனுடைய இந்திரியங்கள், உபாதிகள்தான் காரணம்
யதா4 ஸ்வர்க நிவாஸினாம்சொர்க்கத்தில் வசிப்பவர்களைப் போல
சொர்க்கத்தில் வசிப்பவர்கள் நாம் பார்க்காத பொருட்களைப் பார்க்கின்றார்கள். ஏனென்றால் அவர்களுடைய உபாதிகள் நம்முடைய உபாதிகளை விட வேறாக இருப்பதினால்
இந்திரியங்களைப் பொறுத்துதான் இந்த உலகம் நமக்கு காட்சியளிக்கின்றனநம் மனம் பக்குவமடைவதை பொறுத்து இந்த உலகம் நமக்கு காட்சியளிக்கின்றது. நாம் எப்படி இந்த உலகத்தை விளக்குகின்றோமோ, விமர்சிக்கின்றோமோ அதுதான் நம்முடைய குணம்இந்த உலகம் ஈஸ்வரனாகவே காட்சியளிக்க வேண்டும். நம் மனம் பக்குவமடைந்திருக்கின்றது என்று உணர்ந்து கொள்ளலாம்.
 
தானயம் ப்ரேக்ஷதே கத்வாஇந்த ஜீவன் கனவு பிரபஞ்சத்திற்குள் சென்று அங்குள்ள அபூர்வ காட்சிகளை பார்க்கின்றான்.
தான்கனவில் தோன்றுகின்ற புதிய பொருட்கள், காட்சிகள்
அயம்கனவை பார்ப்பவன், தைஜஸன்
ப்ரேக்ஷதேபார்க்கின்றான்
4த்வாகனவு நிலைக்கு சென்று
யதா4 ஏவ ஹிஎப்படி இந்த ஜாக்ரத் அவஸ்தையில் இருப்பவன்
ஸுஶிக்ஷித – மனிதன் ( நன்கு உபதேசம் செய்யப்பட்டவன்)
வேறு பொருட்களைப்பற்றி தெரிந்து கொள்வதற்கு எங்கு சென்று பார்க்க வேண்டும் என்ற அறிவை அடைந்தவன், அந்த இடத்திற்கு சென்று பார்ப்பதை போல விழிப்பு நிலையில் இருப்பவன் கனவு பொருட்களை பார்க்க வேண்டுமானால் அங்கு சென்றுதான் பார்க்க வேண்டும்.
 
காரிகை-9
பூ.3  எல்லோராலும் பொதுவாக அனுபவிக்கப்படுவது சத்யம்ஒருவன் மனதினுள்ளே அனுபவிப்பதெல்லாம் மித்யாஇதன் அடிப்படையில் கனவில் பார்ப்பதெல்லாம் மனதிலிருந்து தோற்றுவிக்கபட்டது எனவே அவைகள் மித்யாஆனால் வெளியே ஜாக்ரத் அவஸ்தையில் நமக்கு வெளியே அனுபவிப்பதெல்லாம் உண்மையானதே
பதில் கனவு பிரபஞ்சம் மித்யா என்று ஒத்துக்கொண்டால். கனவில் பிரபஞ்சத்திலும் உள்ளே வெளியே என்ற அனுபவம் இருக்கின்றது. அது மித்யா என்றும் கூறுகின்றாய். அதே நிலைதான் ஜாக்ரத் அவஸ்தையிலும் உள்ளே-வெளியே என்ற நியமம் இருப்பதனால் இவைகளும் மித்யாவாகத்தானே இருக்க வேண்டும்விஸ்வனாக இருந்து கொண்டு தைஜஸன் காண்பதெல்லாம் மித்யா நீ சாட்சியாக இருந்து கொண்டு விஸ்வனைப் பார்த்தால் அவன் காண்பதெல்லாம் மித்யா.

 

ஸ்வப்ன வ்ருத்தாவபிகனவு நிலையிலும் கூட
அந்தஹ சேதஸா கல்மிஷம்உள்ளே மனதில் கற்பனை செய்யப்பட்டதும்
த்வந்த து அஸத்பொய்யாக இருக்கின்றது
பஹிஹி சேதே க்3ருஹீதம் ஸத்கனவுக்கு வெளியே மனதினால் அனுபவிக்கப்பட்ட து உண்மையானது
புத்தியினால் கனவிற்கு வெளியே அனுபவிக்கப்படும் விஷயங்கள் உண்மையானதுஏனென்றால் வெளியே பார்க்கும் சிங்கம் பயமுறுத்துகின்றது. இவ்வாறு இருக்கும் கனவு பிரபஞ்சத்தை பொய்யென்று ஒத்துக் கொள்கின்றாய்
ஏதத் த்ருஷ்டம் வைதத்2யம்உள்ளே-வெளியே என்பது கனவிலும் அனுபவிப்பது விழிப்பு நிலையில் பொய்யென்று நன்கு தெரிகின்றது.
 
சாட்சியாக நான் அனுபவிப்பவனும் அல்ல, ஜகத் அனுபவிக்கப்படும் பொருளும் அல்ல என்று உணர்ந்தவன்தான் ஞானத்தை அடைந்தவன்.
 
காரிகை-10
விழிப்பு நிலையிலும் உள்ளே மனதினால் பார்க்கப்படுவது பொய்யாக இருக்கின்றதுவெளியே புத்தியினால் அனுபவிக்கப்படுவது உண்மையாக தெரிந்தாலும், யுக்தியினால் பொய்யென்று நினைப்பது சரிதான்.
 
காரிகை-11
பூ.4   மித்யா என்று ஒன்றை சொல்ல வேண்டுமென்றால், அதற்கு அதிஷ்டானமாக ஒன்று இருக்க வேண்டும், அதை பார்ப்பவன் ஒருவன் இருந்தாக வேண்டும்ஜாக்ரத் அவஸ்தையில் இருக்கும் பிரமாதா, பிரமாணம், பிரமேயம் மித்யா என்று சொல்வதால் ஜாக்ரத் பிரபஞ்சத்தை பார்ப்பவன் யார். இவைகள் உருவாகுவதற்கு ஆதாரமாக இருப்பது எது என்று கேள்வி கேட்கும்போது சூன்யத்தில்தான் வந்து முடியும்.

 

       கனவு நிலை, விழிப்பு நிலை என்ற இரு அவஸ்தைகளிலும் இருக்கின்ற பொருட்கள் அனைத்து பொய்யென்று எடுத்துக் கொண்டால், இந்த பொருட்களை யார்தான் பார்ப்பார்கள் அல்லது அறிவார்கள், யார்தான் இந்த பொருட்களை படைப்பார்கள்.

 

காரிகை-12
பதில் அறிவு ஸ்வரூபமான ஆத்மா அனைத்தையும் இருப்பது போல தோற்றுவித்து இருக்கின்றதுதன்னையே தன்னிடத்திலே கற்பனை செய்திருக்கின்றதுஇவைகளனைத்தும் தன்னுடைய மாயையினால் செய்திருக்கின்றது. அதுவே அனைத்தையும் அறிகின்றதுஇது வேதாந்தத்தால் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
 
காரிகை-13
ஆத்மாவில் எல்லா ஸ்ருஷ்டிகள் எந்த வரிசையில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்றது என்பதை இதில் விளக்கப்பட்டிருக்கின்றதுமுதலில் சூட்சுமமான ஸ்ருஷ்டிகள், பிறகு ஸ்தூலமான பிரபஞ்சம்.
 
ஆத்மாவானது சூட்சுமமான பிரபஞ்சத்தை முதலில் படைத்ததுஇது மாயையின் துணைக் கொண்டு படைக்கப்பட்டதுபிரபுவாக (ஈஸ்வரன்) மாறிய ஆத்மா, மாயையை மனமாக கொண்டு இருக்கின்றதுமனதிற்குள் இருக்கின்ற சூட்சுமமான வஸ்துக்களை ஈஸ்வரன் படைக்கின்றார். நம் சித்தத்தினுள்ளேயிருந்து படைக்கப்படுவது கனவு பிரபஞ்சம்ஸ்தூல பிரபஞ்சம் பிறகு படைக்கப்பட்டதுஆத்மா மாயையில் அபிமானம் வைக்கும்போது வெளிமுகமாக செயல்படுகின்றார்இந்த நிலையிலும் அசம்சாரியாக இருக்கின்றார்மாயையிடம் ஆவரணம், விக்ஷேபம் என்கின்ற இரண்டு சக்திகள் இருக்கின்றது. இந்த கிரமத்தில் ஸ்ருஷ்டியானது ஈஸ்வரனால் கற்பனையாக படைக்கப்பட்டது.
 
காரிகை-14
பூ.5   கனவு மித்யா என்பது சரி, ஆனால் ஜாக்ரத் மித்யாவல்லகனவில் காணும் பொருட்களின் இருப்பு கனவு கண்டுகொண்டிருக்கும் காலம் வரைதான்ஆகவே மித்யாஆனால் ஜாக்ரத் அவஸ்தையில் நாம் பார்க்கின்ற பொருட்கள் அப்படியே இருக்கின்றன, தொடர்ந்து இருந்து கொண்டிருக்கின்றனஎனவே இது சத்யம்சித்த காலம் என்பது ஒரு கனவு காணும் காலம்ஜாக்ரத் அவஸ்தையில் இரண்டு காலங்கள் உண்டுஅவைகள் அனுபவித்த காலம், அனுபவிக்கின்ற காலம். எந்த பொருளுக்கும் இரண்டு காலங்களில் இருக்கின்றதோ அவை தொடர்ந்து இருக்கின்றது என்று நிரூபிக்கின்றது.

 

       பிரத்யபிக்ஞாஏற்கனவே பார்த்த ஒன்றை மீண்டும் பார்த்தல்ஜாக்ரத் பிரபஞ்சம் பிரதிய பிக்ஞாவிற்கு விஷயமாக இருப்பதால் அது மித்யாவல்ல. இந்த உலகம் தொடர்ந்து இருக்கின்றது எனவே அது சத்யம்.
 
பதில்-1 கனவிலும் பிரத்யபிக்ஞா இருக்கின்றதுகனவில் நாம் ஒருவர் வீட்டிற்கு சென்று ஒருவரை பார்க்கின்றோம்அவரிடம் காபி வேண்டும் என்று கேட்டு அவர் கொண்டு வந்து கொடுக்கும்போது அந்த நேரத்தில் பிரத்யபிக்ஞா இருக்கின்றதுஅதை நீ மித்யா என்று ஒத்துக் கொள்வதால் ஜாக்ரத் அவஸ்தையில் பிரத்யபிக்ஞா இருந்தாலும், இல்லாவிட்டாலும் மித்யாதான்பிரத்யபிக்ஞாவிற்கு ஒரு விருத்தி இடைவெளி போதும் ஒருநாள் இடைவெளி வேண்டும் என்ற அவசியம் இல்லை.
பதில்-2 கனவுக்கு பிராதிபாஸிக சத்யம், விழிப்பு நிலைக்கு வ்யவஹாரிக சத்யம் என்று விழிப்பு நிலை பொருட்களுக்கு அதிக சத்யத்வம் கொடுத்திருக்கின்றோம். ஆனால் முழுமையான சத்யம் கிடையாது.
 
சித்த காலஹகனவில் தோன்றும் பொருட்கள் இருக்கும் காலம், மனதிலிருக்கின்ற எண்ணங்கள் தோன்றி மறையும் காலம்
யே அந்தஹமனதுக்குள் பார்க்கும் பொருட்கள்
த்வய கலஹ யே பஹிஹிஜாக்ரத் அவஸ்தையில் இருக்கும் பொருட்களுக்கு இரண்டு காலங்கள் ( அனுபவித்தது, அனுபவித்ததையே அனுபவிக்கின்ற காலம்)
கல்பிதா ஏவ தே ஸர்வேஇரண்டும் கற்பனைதான்
விஶேஷ ந அன்ய ஹேதுகஹபிரத்யபிக்ஞா என்ற விசேஷமானது ஜாக்ரத் அவஸ்தையில் இருக்கின்றது என்பது சத்யத்தை நிர்ணியிக்கின்ற காரணமாக இல்லை.
 
கனவு பிரபஞ்சம் அதைக் காண்பவனால் அவை தெரிகின்றது. ஜாக்ரத் நிலையில் நாம் பார்ப்பதால் அவை இருக்கின்றதா அல்லது அவை இருப்பதால் நாம் பார்க்கின்றோமா என்று கேட்டால் இருப்பதால்தான் நாம் பார்க்கின்றோம். அதற்கு இருத்தல் அதிகமாக இருக்கின்றதுவியாவஹாரிக சத்யம் என்று இதற்குப் பெயர், இதுவும் மித்யாதான்பார்க்கப்படுவது அனைத்திற்கும் ஆதியும் அந்தமும் இருப்பதால் அவைகள் மித்யாசாஸ்திரப்படி கனவு பிரபஞ்சம், ஜாக்ரத் பிரபஞ்சம் இரண்டுமே ஒன்றுதான்இது உத்தம அதிகாரிகளுக்கு ஏற்புடையதாக இருக்கும்.
 
காரிகை-15
பூ.6   எது தெளிவாக தெரிகின்றதோ அது சத்யம், தெளிவற்றதாக இருக்கின்றதோ அது மித்யா.
பதில்  கனவு காணும்போது அவைகள் தெளிவாக தெரிகின்றதுஆனால் அவைகள் ஜாக்ரத் அவஸ்தையில் பார்க்கும்போது தெளிவற்றதாக இருக்கின்றதுகனவில் காணும் பொருட்களை பார்ப்பதற்கு தேவையான இந்திரியங்கள் மனதால் உருவாக்கப்பட்டவை அதனால் கனவு பொருட்கள் தெளிவாக தெரியவில்லை. ஜாக்ரத் அவஸ்தையில் இந்திரியங்கள் இயற்கையாக இருக்கின்றதால் பொருட்கள் தெளிவாக தெரிகின்றதுஎனவே சத்ய-மித்யாவினால் இவ்வாறு தெளிவாகவும், தெளிவற்றதாகவும் தெரியவில்லை.

 

       தெளிவாக தெரியாத பொருட்கள் நமக்குள்ளே இருக்கின்றதுவெளியே இருக்கும் பொருட்கள் தெளிவாக தெரிகின்றதுஅவைகள் அனைத்தும் கற்பனையான காட்சிகள்தான்இந்த வேறுபாடு இந்திரியங்களின் வேற்றுமையினால் ஏற்படுகின்றது
 
காரிகை-16
இந்த பிரபஞ்சம், போக்தாவின் அடிப்படையில் போக்தா, போக்யம் என்று இரண்டு விதமாக படைக்கப்பட்டிருக்கிறது. அவைகள் அனுபவிப்பவன்(ஜீவன்), அனுபவிக்கப்படும் பொருள்(ஜகத்)
 
முதலில் ஜீவன் படைக்கப்படுகின்றான். பிறகு அனுபவிக்கப்படும் விதவிதமான பொருட்கள் படைக்கப்பட்டனஜீவன் என்ற ஆத்மதத்துவத்தின் மீது சூட்சும சரீரம் படைக்கப்படுகின்றது. வெளியே இருப்பது உலகம், உள்ளேயிருக்கும் உலகம் மனதில் இருக்கும் உணர்வுகள். இவ்வாறு இரண்டு விதமான உலகங்கள் படைக்கப்பட்டன. இந்த இரண்டு உலகங்களும் ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றது. மனம் நாம் இருக்கின்ற சூழ்நிலைகளை பொறுத்து இருக்கின்றதுஅதேப்போன்று நாம் இருக்கும் சூழ்நிலை நம் மனதை பொறுத்திருக்கின்றதுஎப்படிபட்ட அறிவு ஒருவனுக்கு இருக்கின்றதோ அதற்கேற்றவாறு சிந்திப்பான்எந்தவிதமான சிந்தனைகள் இருக்கின்றதோ, எந்தவிதமான ஸம்ஸ்காரங்கள் இருக்கின்றதோ அதற்கேற்ற வெளிசூழ்நிலையை நோக்கி செல்வோம்ஒருவனுக்கு எப்படிபட்ட அறிவு ஏற்படுகின்றதோ, அது வெளி விஷயங்களை அனுபவிப்பதனால் ஏற்படுகின்றதுஅதற்கேற்றபடியான ஸம்ஸ்காரங்கள் அவன் மனதில் பதிவாகின்றது. இதேமாதிரி ஸம்ஸ்காரத்திற்கேற்றவாறு வெளி சூழ்நிலைகள் அமைகின்றதுஇவ்வாறு இரண்டும் ஒன்றையொன்று சார்ந்து இருக்கின்றதுஇந்த உலகத்தை ஒருவன் எப்படி பார்க்கின்றானோ அதிலிருந்து அவனைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
 
காரிகை-17
மங்கலான வெளிச்சத்தில் கயிறானது பாம்பு, நீர்க்கோடு, பூமியின் வெடிப்பு என்று பலவிதமாக கற்பனை செய்யப்படுகின்றது, அதனால் இத் கயிறு என்று நிச்சயம் செய்யாமல் இருக்கின்றோமோ  அதுபோல ஆத்மாவை பலவிதமாக கற்பனை செய்து கொண்டு அதன் உண்மை தன்மையை அறியாமையினால் நிச்சயம் செய்யாமல் இருக்கின்றோம்.
 
காரிகை-18
எவ்வாறு இது கயிறு என்று நிச்சயம் செய்யும்போது அதில் காணப்பட்ட கற்பனை தோற்றங்கள் சென்று விடுகின்றன கயிறு மட்டும் அத்வைதமாக எஞ்சி இருக்கின்றது. அவ்வாறு ஆத்ம விஷயத்தில் அத்வைதத்தை அடைய வேண்டும்,
 
காரிகை-19
என்ன காரணத்தினால் ஆத்மா மீது இத்தனை வகையான கற்பனைகள் செய்யப்பட்டு இருக்கின்றன என்று பார்க்கும்போது அது மாயையினால்தான் என்று புரிந்து கொள்ள வேண்டும். மாயையின் சக்தியினால் ஆத்மாவை பலவிதமாக கற்பனை செய்யப்படுகின்றது. இந்த மாயைதான் அனைத்து விகல்பங்களுக்கும் காரணமாக இருக்கின்றது. ஆத்மாவினுடைய இந்த மாயையினால் ஆத்மாவே மோகத்திற்குட்பட்டு இருக்கின்றது, சம்சாரியாக காட்சியளிக்கின்றது.
 
காரிகை-20
ஈஸ்வரனை அறிபவர்கள் அவரை ஆத்மாவில் ஏற்றி வைக்கின்றார்கள். இவர்கள் ஹிரண்யகர்ப்ப உபாஸகர்கள்இங்கே நிமித்த காரணமாக மட்டும் இருக்கின்ற ஈஸ்வரனை அறிபவர்கள். நான்கு பூதங்களான நீர், நிலம், காற்று, நெருப்பு இவைகளை ஸத்யம் என்று நினைப்பவர்கள், குணங்களை அறிந்தவர்கள் குணங்களையும்ஆத்மா, அவித்யா, சிவன் என்ற மூன்று தத்துவங்களை அறிந்த சைவ சித்தாந்தகளும் ஆத்மாவை இவ்வாறாகவே கற்பனை செய்து கொண்டிருக்கின்றார்கள்.
 
காரிகை-21
நான்கு பாதங்களான விஸ்வன், தைஜஸன், பிராக்ஞன், துரீயன் இவைகளை அறியாதவர்கள், நாம் அனுபவிக்கின்ற பொருட்கள்தான், விஷயங்கள்தான் ஸத்யம் அவைகள்தான் அதிஷ்டானம் என்று நினைக்கிறார்கள், பூர், புவ, ஸ்வ என்ற மூன்று உலகங்கள்தான் ஸத்யம் என்று நினைக்கிறார்கள், மேலும் தேவர்கள்தான் ( இந்திரன், வாயு, அக்னி ) ஸத்யம் என்று நினைக்கிறார்கள்
 
காரிகை-22
வேதங்களை ஓதுபவர்கள் அதையே ஆத்மா என்று நினைக்கின்றனர்இவர்கள் ஓதும் மந்திரத்தின் பொருள் தெரியாமல் உச்சரிப்பவர்கள்யாகங்களை செய்பவர்கள் அவைகள்தான் ஆத்மா என்று கூறுகிறார்கள்போக்தாவான ஆத்மாதான் அனைத்தும் என்று கூறுகின்றனர்அனுபவிக்கப்படுகின்றவைகளே ஆத்மா என்றும் சிலர் சொல்லுகின்றார்கள்.

காரிகை-23
அணுவைப் போன்று சூட்சுமமாக இருப்பது ஆத்மா, ஸ்தூல உடல்தான் ஆத்மாவாக
இருக்கின்றது. சிவன், விஷ்ணு, பிரஹ்மா இவர்களில் ஒருவர்தான் ஆத்மா, சூன்யமே
ஆத்மாவாக இருக்கின்றது. இவ்வாறாக ஆத்மாவை சொல்கிறார்கள்.

காரிகை-24
காலம்தான் ஆத்மா என்ற கொள்கையுடைவர்கள், திசைகள் (ஆகாசம்) ஆத்மா என்றும், வாதங்கள்தான் ஆத்மாவென்றும், பதினான்கு லோகங்கள்தான் ஸத்யம் அதிஷ்டானம் என்றும் சிலர் ஆத்மாவை சொல்கிறார்கள்

காரிகை-25
மனம்தான் ஆத்மா என்றும், புத்திதான் ஆத்மா என்றும், வெளியே பொருட்கள் எதுவும் கிடையாது, மனதில்தான் எல்லாம் இருக்கின்றதுதர்ம-அதர்ம விதிகள்தான் ஸத்யம்.
 
காரிகை-26
25  தத்துவங்கள்தான் ஸத்யம் என்று ஸாங்க்யர்கள் கூறுகிறார்கள்.  26 தத்துவங்கள்தான் ஸத்யம் என்று யோகமதவாதிகள் கூறுகிறார்கள்.  31 தத்துவங்கள்தான் ஸத்யம் என்றும், கணக்கிலடங்கா தத்துவங்கள்தான் என்று வேறு சிலர் கூறுகிறார்கள்.
 
காரிகை-27
உலகத்தை நன்றாக அனுபவிப்பதுதான் ஸத்யம் என்றும், நான்கு ஆசிரமங்களின் நெறிகள் ஸத்யம் என்றும், மூன்று பால்களை உடைய சப்தங்களின் தத்துவம்தான் ஸத்யம் என்றும், சிலர் பர-அபர பிரம்மன் என்று இரண்டு தத்துவம்தான் ஸத்யம் என்று கூறுகிறார்கள்.
 
காரிகை-28
ஸ்ருஷ்டிதான் உண்மையான தத்துவம் என்றும், லயம்தான் உண்மையான தத்துவம் என்றூம், இருத்தல்தான் உண்மையான தத்துவம் என்றும் வெவ்வேறாக கற்பனையான கருத்துக்கள் ஆத்மாவை பற்றி எல்லா காலத்திலும் இருக்கின்றது.
 
காரிகை-29
எந்த சிஷ்யனுக்கு குருவானவர் எந்த ஒன்றை உண்மையென்று காட்டுகின்றாரோ, அதைதான் அவன் பார்ப்பான், பிறகு அதை பிடித்துக் கொள்வான்அது அவனை காப்பாற்றுகின்றது, வேறொரு தவறான கருத்துக்கு செல்ல மாட்டான். குரு சொன்ன கருத்தே சிஷ்யனாகவே மாறி விட்டதுசிஷ்யன் குரு சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டு மனதில் புரிந்து கொண்டான்அந்த தத்துவம் அவனிடம் உறுதியாக மனதில் பதிந்து விட்டதுஅவனிடம் இரண்டற கலந்து விடுகின்றதுஇதிலிருந்து குருவிடம் சிஷ்யன் வைக்க வேண்டிய சிரத்தையை அறிந்து கொள்ள வேண்டும்.
 
காரிகை-30
இந்த ஆத்மாவானது அதனிடமிருந்து வேறுபடாத பொருட்களாக இருந்தாலும், வேறுபடுவது போல கருதப்படுகின்றது, அறியாமையில் இருப்பவர்களுக்கு இவ்வாறு தோன்றுகிறது. உதாரணமாக பாம்பு, பூமியில் வெடிப்பாக தோன்றும் இவைகள் கயிற்றுக்கு வேறாக இல்லை, ஆனால் வேறுபட்ட மாதிரி தெரிகின்றதுஅதுபோல ஆத்மாவின் மீது ஏற்றி வைத்து அனுபவிப்பதெல்லாம் வேறுபட்டதாக இல்லை என்று புரிந்து கொள்ள வேண்டும். ஆத்மாவை புரிந்து கொள்ளாதவர்கள் அறியாமையில் இருப்பவர்களால் இவைகளனைத்தும் வேறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறதுஇந்த விதத்தில் எவனொருவன் சரியாக ஸ்ருதி, யுக்தி மூலமாக அறிகின்றானோ அவன் வேதத்தின் முழு உபதேசத்தை அறிந்தவனாக ஆகின்றான்அவன் வேதாந்தத்தின் பொருளை சந்தேகமில்லாமல் அறிகின்றான்வேதத்தின் ஞான காண்டம் உபதேசிக்கின்ற மோட்சத்தை, பிரம்மத்தை அடைகின்றான்.
 
ஞான காண்டம்வஸ்து பரம்ஞானத்தை போதிக்கின்றது
கர்ம காண்டம்இந்த ஞானத்தை அடைவதற்கு தகுதிபடுத்துகிறது.
இந்த ஞானத்தை அடைவதனால் ஒருவன் முழு மன நிறைவை அடைகின்றான்இனி அறிவதற்கு ஒன்றும் இல்லை என்ற நிறைவை அடைகின்றான்.
 
காரிகை-31
இதில் ஸ்ருதி நிச்சயித்த ஜகத் மித்யா என்பதைத்தான் நாம் அனுமானத்தின் மூலமாக நிச்சயித்தோம்இந்த உபநிஷத்தின் முடிவை மேலும் நம் புத்தியில் உறுதியாக்க செய்யும் யுக்திக்கு ஸ்ருதி ஸம்மத யுக்தி என்று கூறுவர்
உதாரணமாக:-
நேஹ நானா அஸ்தி கிஞ்சன - இங்கு ஆத்மாவை தவிர வேறொன்றுமில்லை,
நது தத் த்வீதியம் அஸ்து -இங்கு இருமைகள் கிடையாது
இந்திரஹ புருரூபஹ மாயாபிஹி ஈஸ்வரன் மாயையினால் இருமைகளை தோற்றுவித்திருக்கின்றார்.
 
கனவு பிரபஞ்சத்தை இந்திர ஜாலத்துடன் ஒப்பிட்டு அதை  மித்யா என்று உறுதி செய்தோம்கந்தர்வ நகரமும், பொய்யாக பார்க்கப்படுகின்றது என்று பேசப்பட்டது என்று உறுதி செய்தோம்அவ்விதம் இந்த உலகம் நம்மால் பார்க்கப்படுகின்றது. அது போல இந்த ஜகத்தும் மித்யா என்று உறுதி செய்தோம். வேதாந்தத்தின் மூலமாக ஞானம் அடைந்த ஞானிகளால் ஜகத்தானது இவ்விதம் பார்க்கப்படுகின்றதுஇவ்விதம் ஜகத் மித்யா என்று ஸ்ருதி மூலமாகவும், யுக்தி மூலமாகவும் உறுதி செய்யப்படுகின்றது.
 
காரிகை-32 (***)
இறப்பு, பிரளயம், லயம் என்பது இல்லைபிறப்பு என்பதும் இல்லை. சம்சாரி என்பவன் யாரும் இல்லை, பந்தப்பட்டவனாகவும் யாருமில்லைசாதகனும் இல்லை, முயற்சி செய்பவன் யாருமில்லை. முமுக்ஷு என்பவனும் கிடையாது, மோட்சத்தை அடைய விரும்புவனும் இல்லை, முக்தனும் உண்மையில் கிடையாது. இருமைகள் என்பது எதுவும் கிடையாது என்று குறிப்பிடுகின்றார்அனைத்து வைதீக, லௌகீக விவகாரங்கள் எதுவும் கிடையாதுஅப்படி ஏதாவது இருக்கிறது என்று நினைத்தால் அறியாமையில் இருக்கின்றோம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
 
பிறப்பும், இறப்பும் உண்மையில் நடக்கவில்லை. எனவே துயரம் என்பது வருவதற்கு வாய்ப்பே இல்லையென்றாகிறதுநம்மை பந்தப்படுத்துவதற்கு எந்தவித காரணமும் இல்லைதுயரம் இருந்தால்தானே அதை நீக்குவதற்கு ஏதாவது ஸாதனத்தை உபயோகிக்க வேண்டும்ஆனால் துயரமே இல்லையென்றாகி விட்டபிறகு ஸாதகனும் இருக்க மாட்டான்மேலும் இவைகள் இல்லை ஆதலால் முமுக்ஷுவும் இல்லை, முக்தனும் இல்லைஇதுதான் அடிப்படையான உண்மை. உத்பத்தி இல்லை என்று சொல்வதற்கு காரணம் இருமை இல்லாததினால் (த்வைத அபாவத் உத்பத்தி அபாவத்).
 
சங்கரரின் த்வைதம் மித்யா என்ற கூற்றின் விளக்கம்:
·        மன அதீனவாத்மனதை சார்ந்து அவைகள் இருப்பதனால் இருமை மித்யாபொதுவாக எந்தவொன்று மற்றொன்றை சார்ந்திருக்கின்றதோ அது மித்யாநிழல் நிஜத்தின் மித்யாஇதன் அடிப்படையில் பார்க்கும்போது பார்க்கின்றவைகள் மித்யா என்று தெளிவாகின்றதுமனம் விழித்திருக்கும்போதுதான் இந்த ஜகத் தோன்றி கொண்டிருக்கின்றதுஅது உறங்கிவிட்டால் ஜகத் மறைந்து விடுகின்றதுமனம் சாட்சி சைதன்யமான ஆத்மாவை சார்ந்திருக்கின்றதுஎனவே மனமும் மித்யா என்று தெரிகின்றது. ஆகவே இந்த ஜகத் உண்மையில் இல்லை.
·        இந்த பிரபஞ்சத்தை சாதன-சாத்தியம் என்று இருவகையாக பிரித்துவிடலாம்ஒருவன் சாதன, சாத்தியம் என்று எதுவும் இந்த பிரபஞ்சத்தில் இல்லையென்று உணர்ந்து விட்ட நிலையில் அவன் முக்தனாக இருப்பான்அவனுக்குத்தான் இந்த பிரபஞ்சம் மித்யாவாகி விட்டது. இந்த தத்துவத்தை புரிய வைப்பதற்காக கௌடபாதர் இவ்வாறு கூறியிருக்கின்றார். இவைகள் நமக்கு சத்தியமாக தெரியும் வரையில் அவைகள் மித்யா என்று கூறமுடியாது.
·        மூன்றுவிதமான உண்மைகள் உண்டுஅவைகள்
o பிரதிபாஸிகம்எது ஒன்றை மட்டும் சார்ந்திருக்கின்றதோ அவைகள் பிராதிபாஸிக உண்மையாகும், (-ம்) கனவு அதை அனுபவிக்கும் ஒருவனை சார்ந்திருக்கின்றது, கயிற்றில் தோன்றும் பாம்பானது கயிற்றை சார்ந்திருக்கின்றது
o வியாவஹாரிகஅனைவரையும் சார்ந்திருப்பதாக இருந்தால் அவைகள் வியாவஹாரிக சத்தியம் என்று அழைக்கப்படும். (-ம்) ஜாக்ரத் பிரபஞ்சம். இவையிரண்டும் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் உண்மைகள்,
o பாரமார்த்திகம்சுதந்திரமாக இருத்தல், எதையும் சாராமல் தனித்து இருந்து கொண்டு இருத்தல்நீ இருக்கின்றாயா என்று கேட்டால், நான் இருக்கின்றேன் என்று சொல்லும் போது எந்த பிரமாணத்தையும் நாம் உபயோக்கிக்கவில்லைஅந்த நான் என்கின்ற ஆத்மா ஒன்றுதான் பாரமார்த்திக சத்யம். ஒரு பொய் தெரிவதற்கு ஆதாரம் இருக்க வேண்டும், அந்த ஆதாரம்தான் பாரமார்த்திக சத்யம்இந்த பொய்யான ஜகத் மெய்யான ஆத்மாவை நிரூபிக்கின்றது.
 
காரிகை-33
அஸத் பிஹி பா4வைஹிஇல்லாத  பிரபஞ்சத்தினால்
அயம் கல்பிதஹஇந்த ஆத்மாவானது கற்பனை செய்யப்பட்டிருகின்றது.
அத்வையேனஇரண்டற்றதாகவும் கற்பனை செய்யப்பட்டிருக்கின்றது
இந்த ஆத்மாவானது இந்த உலகத்துக்கு ஆதாரமாகவும், இரண்டற்றதாகவும் கற்பனை செய்யப்பட்டிருக்கின்றது
பாவாஹ அபிபொய்யான இந்த பொருட்கள்
அத்வையேன ஏவஆத்மாவிடத்தில் அத்வைதமாக இருக்கின்றது
தஸ்மாத் அத்வயதா ஶிவாஅந்த பரம்பொருளே மங்கலம், முடிவானது, பயமற்ற நிலை
 
பூ.பக்ஷம்த்வைதம், அத்வைதம் இரண்டும் உண்மையென்று வைத்து கொள்ளலாம்ஆத்மா சாமான்யமாகவும், விசேஷமாகவும் இருக்கின்றதாக வைத்துக் கொள்ளலாம்.
பதில் அப்படி இருக்க முடியாதுவிசேஷமானவைகள் மித்யா, சாமான்யவைகளும் மித்யா
 
காரிகை-34
ந ஆத்ம பாவேன நான இதம்நமக்கு தெரிகின்ற இருமையானது ஆத்மாவுடன் சேர்ந்து இல்லை.
ச ஸ்வேன அபி ச கதஞ்சனஎந்த விதத்திலும் அது தனித்தும், சுதந்திரமாகவும் இல்லை.
ந ப்ருதக்ஆத்மாவுக்கு வேறாகவும்
ந அப்ருதக்ஆத்மாவுக்கு வேறில்லாதவாகவும் இருமைகளை சொல்ல முடியாது
எதை விளக்க முடியாதோ அது மித்யா என்று புரிந்து கொள்ள வேண்டும்.
இதி தத்விதஹ விதுஹு- உணமையை அறிந்தவர்கள்தான் இவ்வாறு புரிந்து கொள்வார்கள்.
 
காரிகை-35
வீத ராக பய க்ரோதம்ஆசை, பயம், க்ரோதம் இப்படிபட்ட குணங்கள் நீங்கியிருப்பவர்களால்தான் மேலே சொன்ன கருத்தை புரிந்து கொள்ள முடியும். இந்த குணங்களை நீங்கிய அந்தக்கரணத்தினால் தகுதி அடைந்தவர்கள்தான் இந்த கருத்தை புரிந்து கொள்ள முடியும்.
ராகம்நம்மால் விருப்பமானது என்று நினைக்கப்பட்ட பொருளை பார்க்கும்போது வருவது
பயம்விரும்பிய ஒன்று கிடைக்குமோ, கிடைக்காதோ என்று நினைக்கும்போதும், அடைந்த ஒன்று நம்மை விட்டு சென்று விடுமோ என்ற நிலையில் வரும் உணர்ச்சி
க்ரோதம்நாம் ஆசைப்பட்ட பொருளை அடைய தடையாக இருப்பவர்கள் மீது வரும் உணர்ச்சி.
முனிபிஹிமுனிவர்களால், உபநிஷத்தை மனனம் செய்பவர்களால்
வேதபாரகை4ஹிவேதத்தை கற்றுணர்ந்தவர்கள், உபநிஷத்தை சிரவணம் செய்பவர்களால்
நிவிகல்பஹ அயம் த்ருஷ்டபூரணமான இந்த ஆத்மாவை அவர்களால் பார்க்கப்படுகின்றது
ப்ரபஞ்ச உபஶமஹஇந்த ஜகத் மித்யா என்றும் பார்க்கப்படுகின்றது.
அத்வயஹஇரண்டற்ற ஆத்மா பார்க்கப்படுகின்றது.
 
காரிகை-36
தஸ்மாத் ஏவம் விதித்வா ஏனம்ஆகவே இங்கு கூறியபடி ஆத்மாவை சரியாக இவ்விதம் அறிந்து
அத்வைதே யோஜயேத் ஸ்ம்ருதிம்நம்முடைய மனதை அத்வைத தத்துவத்தில் நிறுத்த வேண்டும்
இந்த உலகத்திலுள்ள அனைத்தும் மித்யா என்பது மனதில் உறுதியாக இருக்க வேண்டும்புத்தியில் பதிந்த அத்வைத தத்துவத்தை மனதிற்குள் கொண்டுவர வேண்டும்.
அத்வைதம் ஸம் அனுப்ராப்யஅத்வைத தத்துவத்தை நன்கு உணர்ந்தவனாக, அடைந்தவனாக நிதித்யாஸனத்திற்கு பிறகு பலனை அடைந்தவனாக
ஜடவத் லோகம் அசரேத்ஒரு ஜடம் போன்று இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிரு.
ஜடம் போன்று என்பது அறியாமையில் இருக்கின்றதை போன்று என்று குறிப்பிடுகின்றார்.
 
காரிகை-37
நிதித்யாஸனம் செய்து முடித்த பிறகு இதுவரை பயன்படுத்திய சாதனங்களையெல்லாம் விட்டுவிட வேண்டும்பிராரப்தத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டவனாக இருக்க வேண்டும்பிரம்ம ஞான நிஷ்டை அடைந்தவன்
நிஸ்துதிஹிஅனைத்து பிரார்த்தனைகளையும் விட்டுவிட வேண்டும்
நிர்நமஸ்காரஹயாரையும் வணங்கத்தேவையில்லை, யாகங்கள், பூஜைகள் செய்ய தேவையில்லை
நிஹ்ஸ்வதாகார ஏவ சமேலும் கர்மங்களையும் செய்ய வேண்டாம்
யதிஹஇந்த முக்தன்
யாத்ருச்சிகோ பவேத்எது கிடைக்கின்றதோ அதில் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றான்
 
காரிகை-38
பிரமாதகவனக்குறைவு,
அப்பிரமாதகவனக்குறைவாக இருக்கக்கூடாது
தத்வம் ஆத்யாத்மிகம் த்ருஷ்ட்வாஜீவனுக்குள் இருக்கின்ற உண்மையான ஆத்மாவை உணர்ந்து
தத்வம் த்ருஷ்டா து பாஹ்யதஹவெளியே இருக்கின்ற பிரம்மத்தை அறிந்து உணர்ந்து
தத்வீபூதஹஅந்த தத்துவ ஸ்வரூபமாகவே மாறியவனாக
ததா3ராமஹஅதிலேயே மகிழ்ந்திருப்பவனாக
தத்வாதி அப்ரச்யுதஹ பவேத்அதிலிருந்து கவனக்குறைவால் வீழ்ந்துவிடாதவனாக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
 
அத்தியாயத்தின் சுருக்கம்
ஜகத் மித்யா என்று நிலைநாட்டுவதற்கு பிரதானமாக அனுமானம் பயன்படுத்தபட்டதுஇதை நிச்சயம் செய்வதற்கு கனவு பிரபஞ்சம் உதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டதுகனவு பிரபஞ்சம் மித்யா என்று நிரூபிக்கப்பட்டதுஜகத் மித்யா என்பதை நிரூபிக்க இரண்டு ஹேது கொடுக்கப்பட்டதுபார்க்கப்படுவதெல்லாம் மித்யா என்றும், ஆதியும்-அந்தமும் உடையவை எல்லாம் மித்யா என்பது அவைகள். ஆறு சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்பட்ட து.
·        எவையெல்லாம் பயனுடையதோ அவைகள்தான் சத்யம் என்று எடுத்துக் கொள்ளவும் என்ற கேள்விக்கு, கனவில் காணும் பொருட்கள் கனவிலும் பயனளிக்கின்றது, கனவு மித்யா என்று நீயே ஒத்துக் கொள்வதால், விழிப்பு நிலையிலுள்ள பொருட்களும் மித்யா என்று உறுதியாகின்றது.
·        கனவில் நாம் புதியதாக பொருட்களைப் பார்க்கின்றோம் எனவே அது ஸத்யம்எவை எல்லாம் புதியதாக தெரிகின்றதோ அவைகள் பார்ப்பவனின் தர்மத்தை பொறுத்திருப்பதால் எனவே இந்த கேள்வியும் சரியல்ல
·        எவைகள் வெளியே இருக்கின்றதோ அவைகள் ஸத்யம், உள்ளே தெரிந்தால் மித்யா என்று சொன்னால், உள்ளே, வெளியே என்ற நிலை கனவிலும் இருப்பதால் இந்த வாதமும் சரியல்ல
·        எல்லாமே மித்யா என்று கூறினால், சூன்யவாதம் வந்து விடுமே என்று கேட்டால், வேதாந்தம் எல்லாவற்றிற்கும் ஆதாரமாக ஆத்மா இருக்கின்றது என்று கூறியிருப்பதால், இந்த சூன்யவாதமும் சரியல்ல
·        கனவில் காணும் அனைத்துப் பொருட்களும் நாம் பார்க்கும் காலத்தில் மட்டும்தான் இருக்கின்றதுஜாக்ரத் நிலையில் முதலில் ஒன்றை பார்க்கின்றோம், கொஞ்ச நாள் கழித்து அதையே பார்ப்பதால் அதன் தொடர்ச்சி இருப்பதால் அவைகள் சத்யம் என்று சொன்னால் கனவிலும் இந்த நிலை இருக்கின்றது என்பதுதான் பதில்.
·        கனவில் பொருட்கள் தெளிவாக தெரியவில்லை எனவே மித்யா, ஜாக்ரத் அவஸ்தையில் தெளிவாக இருக்கின்றது எனவே ஸத்யம் என்று சொன்னால், தெளிவு-தெளிவற்றது என்ற பேதங்கள் பயன்படுத்தும் இந்திரியங்களின் சக்தியை பொறுத்திருக்கின்றது என்பதுதான் பதிலாக இருக்கின்றது.
 
16-18  ஸ்ருஷ்டியின் கிரமம் சொல்லப்பட்ட்துஅக்ஞானத்தை நீக்க ஆத்ம ஞானம்தான் சாதனம்.
19-28  ஆத்மா மீது ஏற்றி வைக்கப்பட்ட விதவிதமான கற்பனைகள் சொல்லப்பட்டது
29     மித்யா ஞானம்தவறான அறிவு. 1. இந்த தவறான அறிவு மற்ற தவறான அறிவிலிருந்து காப்பாற்றுகின்றது. 2. உண்மையான அறிவு, ஆத்ம ஞானத்தை அடைவதற்கு தடையாக இருப்பது மட்டுமில்லாமல், சம்சாரத்திலேயே வைத்திருக்கும்.
30     ஸம்யக் ஞானத்தின் பலன்சரியான அறிவுமோட்சத்தைக் கொடுக்கும், சந்தேகமின்றி வேதாந்தத்தை அறிகின்றான்மனநிறைவை அடைகின்றான்
31     ஸ்ருதியே ஜகத் மித்யா என்று அறிந்து கொள்வதற்கு மூலமாக இருக்கின்றது.
32-34   உபஶம்ஹார – எதுவும் இல்லை என்றுக்கூறி ஆத்மா ஒன்றுதான் ஸத்யம் என்று சொல்லப்பட்ட து.
35-38  இந்த ஞானத்தை அடைவதற்கு எந்த சாதனத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை விவரித்திருக்கின்றார். அதிகாரித்வம், சிரவணம், மனனம், நிதித்யாஸனம் என்ற சாதனங்களை கூறியிருக்கின்றார். ஞான நிஷ்டன் எப்படி வாழ்வான் என்பதை கூறியிருக்கின்றார்நான் ஞானி என்று யாரிடமும் காட்டிக் கொள்ளக்கூடாதுஞானம் அடைந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
----oo000oo----

 

A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...