Showing posts with label உத்தவ கீதை-09. Show all posts
Showing posts with label உத்தவ கீதை-09. Show all posts

Thursday, June 15, 2017

Uddhava Gita - Chapter-09

உத்தவகீதை
அத்தியாயம்-09
பலவகையான சித்திகளும் அதை அடையும் உபாயமும், தன்மைகளும்
ஸ்வாமி குருபரானந்தாவின் உபதேச விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது-21-02-2022

ஶ்ரீபகவான் உவாச
ஜிதேந்த்3ரியஸ்ய யுக்தஸ்ய ஜிதஶ்வாஸஸ்ய யோகி3ன: |
மயி தா4ரயதஶ்சேத உபதிஷ்ட2ந்தி ஸித்3த4ய: || 1 ||
ஶ்ரீபகவான் கூறுகிறார்
தன்னுடைய புலன்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன், மனதை நன்கு தியானத்தில் ஈடுபடுத்தியவன், ப்ராணனை கட்டுப்படுத்தியவன், இறைவனாகிய என்னிடத்தில் மனதை தொடர்ந்து வைத்திருப்பவன் இத்தகைய சாதகனிடம் பல சித்திகள் வந்து நிற்கின்றன.

ஶ்ரீஉத்தவ உவாச
கயா தா4ரணயா கா ஸ்வித்கத2ம் வா ஸித்3தி4ரச்யுத |
கதி வா ஸித்3தி4யோ ப்ரூஹி யோகி3னாம் ஸித்தி4தோ3 பவான் || 2 ||
உத்தவர் கேட்கிறார்.
அச்சுத பகவானே! எந்த தியானத்தினால் எந்தவிதமான சித்திகள் அடையப்பெறுகின்றன? சித்தி என்றால் என்ன? அவைகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை தாங்கள் கூறவேண்டும். தாங்கள்தான் யோகிகளுக்கு சித்திகளை வழங்குபவர்.


ஶ்ரீபகவான் உவாச
ஸித்தயோSஷ்டாதஶ ப்ரோக்தா தா4ரணா யோக3பாரகை3: |
தாஸாமஷ்டௌ மத்ப்ரதா4னா தஶைவ கு3ணஹேதவ: || 3 ||
ஶ்ரீபகவான் கூறுகிறார்
சித்திகள் பதினெட்டு வகையாக இருக்கின்றன என்று சாஸ்திரங்களிலும், தியானத்தில் முழுமையாக வெற்றி பெற்றவர்களாலும், ஸித்திகளை அடைந்தவர்களாலும் கூறப்படுகிறது.  அவைகளில் எட்டுவிதமான சித்திகள் என்னிடத்தில் இயற்கையாக இருக்கின்றது.  மீதமுள்ள பத்து சித்திகள் சத்துவகுண வளர்ச்சியினால் அடைவது.

அணிமா மஹிமா மூர்தேர்லகி4மா ப்ராப்திரிந்த்3ரியை: |
ப்ரகாம்யம் ஶ்ருத்த்3ருஷ்டேஷு ஶக்திப்ரேரணமீஶிதா || 4 ||
1.        அணிமா - உருவத்தை சிறியதாக்கி கொள்ளும் சக்தி
2.        மஹிமா - உருவத்தை பெரியதாக்கி கொள்ளும் சக்தி
3.        லகிமா    - உடல் எடையை லேசாக்கி கொள்ளும் சக்தி
இவைகள் மூன்றும் ஸ்தூல உடலோடு சம்பந்தப்பட்டது.
4.        ப்ராப்தி            - மற்றவர்களின் புலன்கள் மூலமாக உலகத்தை அனுபவிக்கும் சக்தி
5.        ப்ராகாம்யம் - மனதினாலே உலகத்தை அனுபவிக்கும் சக்தி. அதாவது கேள்விபட்ட பொருட்களில், பார்க்கின்ற, பார்த்த பொருட்களில் உள்ள இன்பங்களை மனதினாலே அடையும் சக்தி
6.        ஈஶிதா             - இயற்கையிலிருக்கும் சக்தியை தூண்டும் சக்தி

குணேஷ்வஸங்கோ3 வஶிதா யத்காமஸ்த்த3வஸ்யதி |
ஏதா மே ஸித்3த4ய: ஸௌம்ய அஷ்டாவௌத்ய்பத்திகா மதா: || 5 ||
7.       வஶிதா - மூன்று குணங்களை (சத்துவ, ரஜோ, தமோ) விருப்பப்படி தூண்டிவிட்டுக் கொள்வது, அவைகளை வசப்படுத்திக் கொள்வது
8.       காம அவஸ்யதி – போகப்பொருளில் இருக்கும் முழுமையான இன்பத்தை, இன்பத்தின் எல்லையை அடையும் சக்தி
உத்தவா! இந்த எட்டு சித்திகளும் இறைவனாகிய என்னிடத்தில் இயற்கையாக அமைந்துள்ளது.

அனூர்மிமத்த்வம் தே3ஹேSஸ்மிந்தூரஶ்ரவணதர்ஶனம் |
மனோஜவ: காமரூபம் பரகாயப்ரவேஶனம் || 6 ||
1.      அனூர்மிமத்த்வம் – இது உடல் சம்பந்தமான சித்தி. உடலுக்கு வருகின்ற பசி,தாகம், வலி, நோய்கள் இவைகளை உணராமல் இருத்தல்
2.       தூ3ர தர்ஶனம்    - வெகுதூரத்திலுள்ள பொருட்களை பார்க்கும் சக்தி
3.       தூ3ர ஶ்ரவணம் - வெகுதூரத்திலுள்ள சப்தங்களை கேட்கும் சக்தி
4.        மனோஜவ:          - மனம்போல் வேகமாக செல்லுதல்
5.        காமரூபம்            - விரும்பும் வடிவத்தை எடுத்துக் கொள்ளுதல்
6.        பரகாய ப்ரவேஶனம் - பிறர் உடலில் பிரவேசிப்பது

ஸ்வச்ச3ந்தம்ருத்யுர்தேவானாம் ஸஹக்ரீடா3னுதர்ஶனம் |
யதா2ஸங்கல்பஸம்ஸித்தி4ராக்ஞாப்ரதிஹதா க3தி: || 7 ||
7.        ஸ்வச்ச2ந்தம் ம்ருத்யு - தான் விரும்பும் போது மரணம் அடையும் சக்தி
8.        தே3வானாம் ஸஹக்ரீடானுதர்ஶனம் - தேவர்களுடன் சேர்ந்து அவர்கள் அனுபவிக்கும் சுகத்தை அனுபவித்தல், அவர்களின் இன்ப விளையாட்டை பார்க்கும் சக்தி
9.        யதா2 ஸங்கல்ப ஸம்ஸித்3தி4 - மனதில் நினைப்பதை நிறைவேற்றிக் கொள்ளும் சக்தி
10.     ஆக்ஞாப்ரதிஹத க3தி - நம்முடைய வாக்கு பலிக்கும்
.
த்ரிகாலஞத்வமத்3வந்த்வம் பராசித்தாத்3யபி4ஞதா |
அக்3ன்யர்காம்புவிஷாதீனாம் ப்ரதிஷ்டம்போ4Sபராஜய: || 8 ||
இதில் மேலும் ஐந்து வகையான சித்திகளை கூறுகிறார்.  இவைகள் கீழானவைகள் என்றும் இழித்துரைக்கிறார்.
1.      மூன்று காலங்களில் நடப்பதை தெரிந்து கொள்வது
2.      உடலுக்கு வருகின்ற இருமைகளிலிருந்து விடுபட்டு இருப்பது. (சுக-துக்கம், தட்ப-வெப்பம்)
3.      மற்றவர்கள் மனதில் ஓடும் எண்ணங்களை தெரிந்து கொள்ளும் சக்தி
4.      எந்தப் பொருளுக்கும் அவைகளிடத்தில் இயற்கையாக இருக்கும் சக்தியை தடைபடுத்தி வைத்தல். தன்னைப் பாதிக்காதபடி செய்தல். உதாரணமாக அக்னி, விஷம், நீர், சூரியன் இவைகளிடத்தில் இருக்கும் சக்தியை தன்னிடத்தில் செயல்படாதபடி தடுத்து வைத்தல்
5.       எடுக்கும் முயற்சிகளெல்லாவற்றிலும் வெற்றியை அடைதல்
இவைகள் யாவும் யோக தாரணையால் அடையக் கூடியவை.

ஏதாஶ்சோத்தே3ஶத: ப்ரோக்தா யோகதா4ரணஸித்த4ய: |
யயா தா4ரணயா யா ஸ்யாத்யதா2 வா ஸ்யான்னிபோ4த4 மே || 9 ||
யோக தாரணையால் அடையப்படும் சித்திகளின் பெயர்களையும், ஆற்றல்களையும் ஒருவாறு விளக்கிவிட்டேன்.  இனி எந்த தியானத்தினால், தாரணையினால் எந்த வகையான சித்திகளை எவ்வாறு அடையலாம் என்பதை கூறுகிறேன். கேட்பாயாக!

பூ4தஸூக்ஷ்மாத்மனி மயி தன்மாத்ரம் தாரயேன்மன: |
அணிமானமவாப்னோதி தன்மாத்ரோபாஸகோ மம  || 10 ||
சூட்சுமமான  பஞ்ச பூதங்களின் நுட்பமான வடிவமான தன்மாத்திரையே என் ஸ்வரூபம். இந்த ஸ்வரூபத்தை தன் மனதில் தாரணை செய்து (நிலை நிறுத்தி) தியானிப்பவனுக்கு, அணிமா என்ற சித்தி கிடைக்கின்றது.

மஹத்த்த்வாத்மனி மயி யதாஸம்ஸ்த2ம் மனோ த3த4த் |
மஹிமானமவாப்னோதி பூதானாம் ச ப்ருத2க்ப்ருத2க் || 11 ||
மஹத் ஸ்வரூபமாக இருக்கின்ற மேலான இறைவனிடத்தில் மனதை நிலைநிறுத்தி தியானம் செய்வதனால் மஹிமா என்ற சக்தி கிடைக்கிறது.

பரமாணுமயே சித்தம் பூதானாம் மயி ரஞ்ஜயன் |
காலஸூக்ஷ்மார்த2தாம் யோகீ லகி4மானமவாப்னுயாத் || 12 ||
தா4ரயன்மய்யஹந்தத்த்வே மனோ வைகாரிகேSகி2லம் |
ஸர்வேந்த்3ரியாணாமாத்மத்வம் ப்ராப்திம் ப்ராப்னோதி மன்மனா || 13 ||
நான்கு பூதங்களின் பரமாணு ஸ்வரூபமாக இருக்கின்ற என்னிடத்தில் மனதை நிலைநிறுத்தி தியானம் செய்வதனால்  காலத்தைப் போல சூட்சுமமான தன்மையுடைய லகிமா என்ற சித்தியை அடைகின்றான். சத்துவ பிரதானமான அஹம் தத்துவமாக இருக்கின்ற இறைவனான என்னிடத்தில் மனதை நிலைநிறுத்தி தியானம் செய்வதனால் மற்றவர்களுடைய புலன்களை பயன்படுத்திக் கொள்ளும் சக்தியான ப்ராப்தி என்ற சித்தியை அடைகின்றான்.

மஹத்யாத்மனி ய: ஸூத்ரே தா4ரயேன்மயி மானஸம் |
ப்ராகாம்யம் பாரமேஷ்த்யம் மே விந்ததேSவ்யக்தஜன்மன: || 14 ||
ஈஸ்வரனிடமிருந்து தோன்றிய ஹிரண்யகர்ப்பனான சூத்ராத்மா மிகப்பெரியதாக இருப்பது., எல்லா சக்திகளையும் தன்னிடத்தில் கொண்டிருப்பது. இந்த சூத்ராத்மாவான என்னிடத்தில் மனதை நிலைநிறுத்தி தியானம் செய்வதனால் ப்ராகாம்யம் என்ற சித்தியை அடைகிறான்.

விஷ்ணௌ த்ர்யதீ4ஶ்வரே சித்தம் தா4ரயேத்காலவிக்3ரஹே |
ஸ ஈஶித்வமவாப்னோதி க்ஷேத்ரஞக்ஷேத்ரசோதனாம் || 15 ||
முக்குணமயமான மாயைக்கு தலைவனான விஷ்ணு வடிவத்தில் மனதை லயிக்கச் செய்பவனுக்கு ஈஶித்வம் என்ற சித்தி கிடைக்கின்றது. விஷ்ணு கால வடிவமாக காணப்படுகிறார். உலகத்திலுள்ள இயற்கை சக்திகளையும், மனிதர்களிடத்தில் இருக்கும் சக்தியை தூண்டிவிடும் சக்தியே ஈஶித்வம் என்று கூறப்படுகிறது.

நாராயணே துரியாக்2யே ப4கவச்ச2ப்3த3ஶப்3தி3தே |
மனோ மய்யதத4த்யோகீ மத்3த4ர்மா வஶிதாமியாத் || 16 ||
நாராயணன் என்று அழைக்கப்படுகின்றவரும், துரீயம் என்ற உண்மை தத்துவத்தை உணர்ந்தவர்களால் அழைக்கப்படுகின்றவரும், பகவான் என்று அழைக்கப்படுகின்றவரும் இவ்வாறாகவெல்லாம் அழைக்கப்படுகின்ற என்னை மனதில் நிலைநிறுத்தி தியானம் செய்வதனால் என்னிடத்தில் இயற்கையாக இருக்கும் வஶிதா என்ற சித்தியை அடையலாம்

நிருகுணே ப்ரஹ்மணி மயி தா4ரயன்விஶதம் மன: |
பரமானந்தமாப்னோதி யத்ர காமோSவஸீயதே || 17 ||
மேன்மையான குணங்களை உடைய என்னை தூய மனதோடு யார் தியானம் செய்கின்றார்களோ அவர்கள் மேலான ஆனந்தத்தை அடைகின்றனர்.  அந்த ஆனந்தத்தின் எல்லை வரை முழுமையாக அனுபவிக்கின்றான்.

ஶ்வேத்த்3வீப பதௌ சித்தம் ஶுத்3தே4 த4ர்ம மயே மயி ||
தாரயஞ்ச2வேததாம் யதி ஷதூர்மிரஹிதோ நர: || 18 ||
சத்துவகுணத்திற்கு அதிபதியாக இருக்கின்ற, தர்ம ஸ்வரூபமாக இருக்கின்ற என்னிடத்தில் மனதை நிலைநிறுத்தி தியானம் செய்வதனால் சத்துவத்தில் மேலோங்கி இருப்பான். அந்த நிலையில் பசி, தாகம், சோகம், மோகம், முதுமை, மரணம் என்கின்ற ஆறுவிதமான துயரங்களிலிருந்தும் விடுபடுகின்றான்.  ஸ்தூல சரீரத்திற்கு வருகின்ற வலிகள் தெரியாமல் இருக்கும் சக்தியை பெறுகிறான்.

மய்யாகாஶாத்மனி ப்ராணே மனஸா கோ4ஶமுத்3வஹன் |
தத்ரோபலப்தா4 பூதானாம் ஹம்ஸோ வாச: ஶ்ருணோத்யஸௌ || 19 ||
ஆகாசத்தை சரீரமாக கொண்டு ப்ராண தத்துவமாக இருக்கின்ற என்னை மனதினால் சப்த ஸ்வரூபமாக இருக்கின்ற நிலைநிறுத்தி தியானம் செய்வதனால் எல்லா ஜீவராசிகளின் பேச்சுக்களையும் கேட்கும் சக்தியை பெறுகிறான்.

சக்ஷுஸ்த்வஷ்டரி ஸம்யோஜ்ய த்வஷ்டாரமபி சக்ஷுஷி |
மாம் தத்ர மனஸா த்4யாயன்விஶ்வம் பஶ்யதி தூரத: || 20 ||
நம்முடைய  கண்களை சூரிய தேவதையோடு இணைத்து என்னை மனதில் நிலைநிறுத்தி தியானம் செய்வதனால் நுட்பமான பார்வையைப் பெறுகிறான்.  உலகம் முழுவதையும் தன் கண்களால் பார்க்கும் சக்தியை அடைகிறான்.

மனோ மயி ஸுஸம்யோஜ்ய தேஹம் தத3னுவாயுனா |
மத்தா4ரணானுபா4வேன தத்ராத்மா யத்ர வை மன: || 21 ||
மனம், சரீரம் அதை அனுசரித்திருக்கும் வாயுவுடன் என்னைச் சேர்த்து தியானிப்பவனுக்கு மனோஜவம் என்ற சிறப்பாற்றல் கிடைக்கிறது. இந்த சக்தியின் மூலம் அவன் விரும்பும் இடத்திற்கு அவனது உடல் அந்த விநாடியே சென்றுவிடுகின்றது.

யதா3 மன உபாதாய யத்3யத்3ரூபம் பு3பூ4ஷதி |
தத்தத்3ப4வேன்மனோரூபம் மத்3யோக3ப3லமாஶ்ரய: || 22 ||
எந்தெந்த உருவத்தை அடைய விரும்புகின்றோமோ மனதை அவ்விதம் சங்கல்பம் செய்தால் அந்தந்த உருவத்தை அடைகின்றான். என்னுடைய மாயையை தியானம் செய்பவனுக்கு இந்த சக்தி கிடைக்கின்றது.

பரகாயம் விஶன்ஸித்த4 ஆத்மானம் தத்ர பா4வயேத் |
பிண்ட3ம்  ஹித்வா விஶேத்ப்ராணோ வாயுபூ4த: ஷட்3ஹ்க்4ரித் || 23 ||
மற்ற ஜீவராசிகளின் உடலில் பிரவேசிக்க விரும்பும் சாதகன் தான் அவ்வுடலில் இருப்பதாக சிந்திக்க வேண்டும்.  அவ்வாறு செய்யும்போது பிராணன் சூட்சும ரூபமாக, வெளியிலிருக்கும் வாயுவுடன் சேர்ந்து ஒரு மலரை விட்டு இன்னொரு மலருக்குத் தாவும் வண்டைப்போல தன் சரீரத்தை விட்டுவிட்டு பிறிதொரு தேகத்தினுள் பிரவேசிக்கும் சக்தியை அடைகின்றான்.

பாஷ்ண்ர்யாபீட்ய கு3தம் ப்ராணம் ஹ்ருதுர:கண்ட2மூர்த3ஸு |
ஆரோப்ய ப்3ரஹமரந்த்4ரேண ப்ரஹ்ம நீத்வோத்ஸ்ருஜேத்தனும் || 24 ||
குதிகாலால் மலதுவாரத்தை அடைத்து, பிராண சக்தியை இதயம், மார்பு, கழுத்து, தலை என்ற வரிசைப்படி எடுத்துச் செல்ல வேண்டும்.  பின் தலையுச்சியில் இருக்கும் துவாரத்தில் வழியாக வெளியேற்றி பிரம்மலோகம் செல்லும் வழியாக உடலை துறக்கும் சக்தியை அடைகின்றான்.  இதனால் அவன் விரும்பும் நேரம்வரை ப்ராணனை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் சக்தியை அடைகின்றான்.

விஹரிஷ்யன்ஸுரக்ரீடே3 மத்ஸ்த2ம் ஸத்த்வம் விபா4வயேத் |
விமானேனோபதிஷ்ட2ந்தி ஸத்த்வ வ்ருத்தீ: ஸுரஸ்த்ரிய: || 25 ||
ஒருவனுக்கு தேவலோகம் முதலிய மேலுலகங்களுக்கு சென்று அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், சத்துவகுணமுள்ள என் வடிவத்தை தியானிக்க வேண்டும்.  அப்படி செய்தால் சத்துவகுணமுள்ள தேவமகளிர் விமானத்தில் அவனிடம் வந்து சேருவார்கள். பிறகு அவனை தேவலோகத்திற்கு அழைத்துச் செல்வார்கள்.

யதா2 ஸங்கல்பயேத3பு3த்த்4யா யதா3 வா மத்பர: புமான் |
மயி ஸத்யே மனோ யுஞ்ஜம்ஸ்ததா2 தத்ஸ்முபாஶ்னுதே || 26 ||
சத்திய சங்கல்ப மூர்த்தியான என்னிடமே சித்தத்தை நிலைநிறுத்தி என்னையே தியானம் செய்பவனுடைய எண்ணங்கள் எல்லாம் உண்மையாக நிறைவேறுகின்றன.  அவருக்கு சங்கல்ப சித்தி ஏற்படுகிறது.

யோ வை மத்3பா4வமாபன்ன ஈஶிதுர்வஶிது: புமான் |
குதஶ்சின்ன விஹன்யேத தஸ்ய சாஞா யதா2 மம || 27 ||
யாரொருவன் இந்த ஈஶித்வம், வசித்வம் இரண்டு ஸ்வரூபங்களாக என்னை தியானம் செய்கின்றானோ அவனுக்கு தான் சொல்பவைகள் எல்லாம் அப்படியே நடந்து விடுகின்ற சக்தி கிடைக்கின்றது.  இவைகள் என்னிடத்தில் இயல்பாகவே இருக்கின்றவைகள்.

மத்3ப4க்த்யா ஶுத்3த4ஸத்த்வஸ்ய யோகி3னோ தா4ரணாவித: |
தஸ்ய த்ரைகாலிகீ பு3த்3தி4ர்ஜன்ம ம்ருத்யூபம்ப்4ருஹிதா || 28 ||
மேலும் என்னிடம் அத்யந்த பக்தி செலுத்தி, அதனால் மனத்தூய்மை அடைந்து பிறகு என்னை மனதால் தியானிப்பவனுக்கு முக்காலத்து விஷயங்கள் அனைத்தும் தெரிய வரும். பிறப்பு – இறப்பு போன்ற அறிவுக்கு புலப்படாத விஷயங்கள் கூடத் தெளிவாக தெரியத் தொடங்கும்.

அக்3ன்யாதி3பி4ர்ன ஹன்யேத முனேர்யோக3மயம் வபு: |
மத்3யோக3ஶாந்தசித்தஸ்ய யாத3ஸாமுத3கம் யதா2 || 29 ||
அக்னி முதலிய இயற்கை சக்திகளில் உள்ள என்னிடத்தில் மனதை நிலைநிறுத்தி தியானம் செய்பவனுடைய யோகமயமான உடல் இயற்கை சக்திகளினால் பாதிக்கப்படாது.  எவ்விதம் நீரில் வாழும் உயிரினங்களுக்கு நீரினால் அழிவு கிடையாதோ அதுபோல இந்த சக்தியானது இவனிடத்தில் செயல்படாது.

மத்3விபூ4தீரபி4த்4யாயன்ஶ்ரீவத்ஸாஸ்த்ரவிபூ4ஷிதா: |
த்4வஜாதபத்ரவ்யஜனை: ஸ ப4வேத3பராஜித: || 30 ||
என்னுடைய மகிமைகள், பெருமைகள், சக்திகள் இவைகளை தியானிப்பவனுக்கு ஶ்ரீவத்ஸம் என்கின்ற மருவை மார்பில் உடையவனும், விதவிதமான அஸ்திரங்களை உடையவனாகவும், கொடி, குடை, சாமரம் இவைகளை கூடியதுமான என் அவதாரங்களை தியானிப்பவனுக்கு அவனுடைய எல்லா முயற்சிகளும் வெற்றியைக் கொடுக்கும்.

உபாஸகஸ்ய மாமேவம் யோகதா4ரணயா முனே: |
ஸித்த4ய: பூர்வகதி2தா உபதிஷ்ட2ந்த்யஶேஷத: || 31 ||
இறைவனான என்னை விதவிதமான தியான முறைகளால் உபாஸகனுக்கு மேற்கூறிய சித்திகள் அனைத்தும் அவனிடம் வந்து நிற்கும்.

ஜிதேந்த்ரியஸ்ய தா3ந்தஸ்ய ஜிதஶ்வாஸாத்மனோ முனே: |
மத்3தா4ரணாம் தாரயத: கா ஸா ஸித்தி4: ஸுது3ர்லபா4 || 32 ||
தன்னுடைய பிராணன், மனம், புலன்கள் இவைகளை வென்று மிகவும் சாந்தமாக இருப்பவனும் என்னிடமே மனதை நிலைநிறுத்தி தியானம் செய்பவனுக்கு எந்த சித்திதான் கிடைக்காமல் போகாது!!?

அந்தராயான்வதந்த்யேதா யுஞ்ஜதோ யோகமுத்தமம் |
மயா ஸம்பத்3யமானஸ்ய காலக்ஶபணஹேதவ: || 33 ||
இதுவரை கூறிய சித்திகள் எல்லாம மோட்சத்தை அடைவதற்கு தடைகளாக இருக்கும். என்று சான்றோர்கள் கூறுகிறார்கள்.  உத்தமமான யோகத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இருப்பவனுக்கு சித்திகள் தடைகளே. என்னை அடைவதை லட்சியமாக கொண்டு இருப்பவனுக்கு சித்திகள் நிச்சயமாக தடைகளாக இருக்கும்.  இந்த சித்திகளை அடைவதற்கு செலவழித்த காலமும் வீணாகின்றது.

ஜன்மௌஷதி4தபோமந்த்ரைர்யாவதீரிஹ ஸித்த4ய: |
யோகேனாப்னோதி தா: ஸர்வா நான்யைர்யோக3கதிம் வ்ரஜேத் || 34 ||
சித்திகளை தியானம் செய்வதன் மூலம் அடையலாம் என்று அறியும் போது அதன் பெருமையை உணர்ந்து தியானத்தின் மீது சிரத்தை ஏற்படும். இந்த சிரத்தையானது நம்மை தியானத்தில் ஈடுபடுத்தும். பிறகு தொடர்ந்து செய்யவைக்கும்.  பிறப்பிலேயோ, சில மூலிகை தாவரங்களினாலோ, தவங்களை செய்வதினாலோ, சில மந்திரங்களினாலோ எவ்வளவு சித்திகள் சொல்லப்பட்டுள்ளதோ அவைகள் மேற்கூறிய தியானத்தின் மூலம் அடையலாம்.  ஆனால் இறுதி லட்சியமான மோட்சத்தை அடையவே முடியாது.  பலனின் எல்லையான மோட்சத்தை அடைய முடியாது, பகவானை அடைய முடியாது.

ஸர்வாஸாமபி ஸித்தி4னாம் ஹேது: பதிரஹம் ப்ரபு4: |
அஹம் யோக3ஸ்ய ஸாங்க்2யஸ்ய த4ர்மஸ்ய ப்3ரஹ்மவாதினாம் || 35 ||
எல்லாவிதமான சித்திகளுக்கு நானே காரணம், சித்திகளுக்கு தலைவனாக இருப்பதும் நானே, அவைகளை கொடுப்பவனும் நானே.  யோகத்திற்கும், சாங்க்யம் தர்மம், பிரம்ம ஞானத்தை உபதேசிக்கும் குருமார்களுக்கும் நானே தலைவனாக இருக்கிறேன். இங்கே சாங்க்யம் என்பது ஆத்மவிசாரம் செய்வதையும், தர்மம் என்பது அதை கடைபிடிப்பதனால் வரும் பலனகளயும் குறிக்கின்றது.

அஹமாத்மாந்தரோ பா3ஹயோSனாவ்ருத: ஸர்வதேஹினாம் |
யதா2 பூ4தானி பூ4தேஷு ப3ஹிரந்த: ஸ்வயம் ததா2 || 36 ||
எல்லா ஜீவராசிகளுக்குள்ளேயும், வெளியேயும் ஆத்மாவாக இருக்கிறேன்.  எதனாலும் மறைக்கப்படாதவன். எவ்விதம் பஞ்ச பூதங்கள் ஜீவராசிகளின் உள்ளும், புறமும் இருப்பது போல நானும் அவ்விதமே எங்கும் வியாபித்திருக்கின்றேன்.

தொகுப்புரை
·         ஈஸ்வரனுடைய இருப்பை மூன்று நிலைகளில் சாஸ்திரம் புரிய வைக்கிறது.  அவைகள்
o    நிமித்தக் காரணம் – இந்த உலகத்தை படைத்தவர், தலைவராக இருப்பவர் என்ற அறிவு மட்டும் உடையவர்கள். அவரைப்பற்றி மேலும் அறிய ஆசையில்லாதவர்கள்.  இறைவனே இவர்களுக்கு கஷ்டத்தை நீக்குவதற்கான, சுகத்தை வேண்டுவதற்கான சாதனமாக கருதுகின்றார்கள்.
o    நிமித்த, உபாதான காரணமாக இருப்பவர். அவரே இந்த உலகம் முழுவதும் வியாபித்திருக்கிறார்
o    விவர்த்த காரணம் – தோன்றி கொண்டிருக்கும் உலகமும் உண்மையல்ல.  வெறும் தோற்றம்தான் (மித்யா) என்ற அறிவை அடையும்போது ஈஸ்வரன் விவர்த்தக் காரணமாக இருக்கிறார்.  இந்த ஜகத்துக்கு ஆதாரமாக இருக்கின்றார்.  எந்தவொன்று தன் ஸ்வரூபத்தை இழக்காமல் வேறொன்று தோன்றுவதற்கு ஆதாரமாக இருக்கிறதோ அதுவே விவர்த்த காரணம் என்று அறிந்து கொள்ள வேண்டும்.
·        ஈஸ்வரனின் பெருமைகளை அறிந்து கொள்ளும் போது அவரே உபாதான காரணமாக இருக்கின்றார் என்று மனதளவில் அறிவை அடைவோம்
·        இது மனத்தூய்மையை கொடுக்கும். வாழ்க்கையில் எந்த வெற்றி அடைந்தாலும் செருக்கடையாமல் இருக்க உதவும்
·        நம்மைச் சார்ந்தவர்கள் அடையும் வெற்றி, புகழ், செல்வம் இவைகளை அடையும்போது பொறாமைக் கொள்ளாமல் இருக்க உதவும்.  இவைகள் எல்லாம் பகவானின் விபூதிகள் என்ற அறிவு நம்மை இந்த தீயகுணம் இல்லாமல் இருக்க உதவும்

ஓம் தத் ஸத்

மூதுரை

மூதுரை கடவுள் வாழ்த்து வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள் நோக்கு உண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையா...