அத்தியாயம்-14
ஞானயோகம், கர்மயோகம், பக்தியோகம்
ஸ்வாமி குருபரானந்தாவின்
உபதேச விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது-22-02-2022
ஶ்ரீஉத்தவ உவாச
விதி4ஶ்ச ப்ரதிஷேஶ்ச
நிக3மோ ஹீஶ்வரஸ்ய தே |
அதேக்ஷதேSரவிண்டாக்ஷ கு3ணம் தோ3ஷம் ச கர்மணாம் || 1 ||
உத்தவர் கேட்கிறார்.
தாமரைப் போன்ற கண்களை
உடையவரே! ஈஸ்வரனாக இருக்கின்ற தங்களுடைய கட்டளைகளே வேதங்கள். அவைகளில்
செய்யத்தக்கவை, செய்யdதகாதவை என்று கர்மாக்களானது பிரிக்கப்பட்டுள்ளன. எனவே
நம்மிடமிருந்து வெளிப்படும் செயல்கள் நல்லது, கெட்டது என்ற பாகுபாடுடன்தான்
பார்க்கப்படுகிறது.
வர்ணாஶ்ரமவிகல்பம் ச
ப்ரதிலோமானுலோமஜம் |
த்3ரவ்யதே3ஶவய:காலான்ஸ்வர்க3
நரகமேவ ச || 2 ||
வேதத்தில் வர்ணாசிரம
வேறுபாடுகள் உள்ளது. இவைகளில் நல்லது, கெட்டது என்று உள்ளது என்று
கூறப்பட்டுள்ளது. மேலும் வர்ண கலப்பு
காரணமாக பிறத்தல் என்ற பிரிவும் உள்ளது. பொருட்கள், இடம், வயது, காலம் இவைகளிலும்
நல்லது, கெட்டது என்ற பிரிவினை இருக்கின்றது.. மேலும் சொர்க்கம் நல்லது என்றும்,
நரகம் கெட்டது என்றும் பிரிக்கப்பட்டு உள்ளது.
கு3ணதோ3ஷபி4தா3த்3ருஷ்டிமந்தரேண
வசஸ்தவ |
நி:ஶ்ரேயஸம் கத2ம்
ந்ருணாம் நிஷேத4விதி4லக்ஶணம் || 3 ||
நல்லது, கெட்டது
என்று பிரித்துக் பார்க்கவில்லையென்றால், வேதத்தில் தங்களால் அவ்வாறு
கூறப்பட்டுள்ளவகளால் மனிதர்களுக்கு எவ்வாறு மேன்மையான சுகம் உண்டாகும்?
பித்ருதே3வமனுஷ்யானாம்
வேத3ஶ்சக்ஷுஸ்தவேஶ்வர |
ஶ்ரேயஸ்த்வனுபலப்3தே4Sர்தே2 ஸாத்4யஸாத4னயோரபி || 4 ||
பகவானே!
பித்ருக்களுக்கும், தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் மற்ற அறிவைக் கொடுக்கும்
கருவியால் அறிந்து கொள்ள முடியாத அறிவைக் கொடுக்கின்றதும், உங்களால்
உபதேசிக்கப்பட்டதும், மேலானதும், நன்மையைக் கொடுக்கின்ற வேதமானது கண்களைப்
போன்றது. இவ்வுலகில் அடையப்பட வேண்டியது எது என்றும், அதை அடைய உதவும் முறைகளையும்
வேதங்களில் விளக்கப்பட்டுள்ளனவே.
கு3ணதோஷபி4தா3த்3ருஷ்டிர்
நிக3மாத்தே ந ஹி ஸ்வத: |
நிக3மேனாபவாத3ஶ்ச
பி4தா3யா இதி ஹ ப்4ரம: || 5 ||
நல்லது, கெட்டது
என்று பிரித்துப் பார்க்கும் பார்வை வேதத்திற்கு இசைவானதே. நாமாக
அப்படிப்பார்ப்பதில்லை. நீங்கள் எது உபதேசிக்கிறீர்களே அதுதான் வேதம். நல்லது, கெட்டது
என்று பிரித்துப் பார்ப்பதை வேண்டாம் என்று இப்பொழுது கூறுகிறீர்கள். அதனால்
எனக்கு மனதில் குழப்பம் உண்டாகிறது.
ஶ்ரீபகவான் உவாச
யோகா3ஸ்த்ரயோ மயா
ப்ரோக்தா ந்ருணாம் ஶ்ரேயோவிதி4த்ஸ்யா |
ஞானம் கர்ம ச
ப4க்திஶ்ச நோபாயோSன்யோSஸ்தி குத்ரசித் || 6 ||
பகவான் கூறுகிறார்
சாஸ்திரங்கள் மூலமாக
மூன்று வகையான யோகங்களைப் பற்றி மனிதர்களுக்கு நான் கூறியிருக்கிறேன். மனிதர்களின் நன்மைக்காக, மேலான வாழ்க்கைக்காக
கூறினேன். அந்த யோகங்கள் ஞானயோகம், கர்மயோகம், பக்தியோகம். இவைகளைத்தவிர
மனிதர்களுக்கு நன்மையை கொடுக்க கூடிய வேறு வழிகள் இல்லை.
நிர்விண்ணானாம்
ஞானயோகோ3 ந்யாஸினாமிஹ கர்மஸு |
தேஷ்வநிர்விண்ண்சித்தானாம்
கர்மயோக3ஸ்து காமினாம் || 7 ||
நிர்விண்ணானம் –
முழுமையான வைராக்கியத்தை அடைந்தவர்களுக்கு
ஞானயோகஹ – ஞானயோக
சாதனம் கொடுக்கப்பட்டிருக்கிறது
இந்த
லோகத்திலிருக்கும்போதே இவர்கள் கர்மத்தையும் விட்டுவிட்டவர்கள். சாதன சதுஷ்டய சம்பத்தியை அடைந்தவர்களும்
ஞானயோகத்தை எடுத்துக் கொள்ளலாம். தர்மத்திற்குட்பட்ட
ஆசையை உடையவர்களும், முழுவைராக்கியத்தை அடையாதவர்களும் கர்மயோகத்தை பின்பற்றலாம்.
யத்3ருச்ச2யா
மத்கதா2தௌ3 ஜாதஶ்ரத்3த4ஸ்து ய: புமான் |
நிர்விண்ணோ நாதிஸக்தோ
ப4க்தியோகோ3Sஸ்ய ஸித்3தி4த: || 8 ||
முழுமையான
வைராக்கியத்தை அடையாதவர்கள்,
ந அதிஸக்தஹ -
கர்மபலனில் அதிகபற்றும் இல்லாதவர்கள்
இத்தகைய மனிதர்களுக்கு
பக்தியோகம் உகந்ததாகும். எந்த மனிதனுக்கு என்னிடத்தில் பக்தி இருப்பதால், என்னைப்
பற்றிய கதைகளில் பெரும் ஈடுபாடு கொண்டுள்ளானோ அவனுக்கு பக்தியோகம் விரைவில் பலனைக்
கொடுக்கும்.
தாவத்கர்மாணி குர்வீத
ந நிர்வித்3யேத யாவதா |
மத்கதா2ஶ்ரவணாதௌ வா
ஶ்ரத்3தா4 யாவன்ன ஜாயதே || 9 ||
யாவத் ந நிர்வித்யேத –
எதுவரை வைராக்கியம் வரவில்லையோ, விருப்பு-வெறுப்புக்கள் நீங்கவில்லையோ
தாவத் கர்மாணி
குர்வீத – அதுவரை கர்மயோகத்தை பின்பற்றிக் கொண்டிருக்க வேண்டும்.
எதுவரை என்மீது
நம்பிக்கை வரவில்லையோ அல்லது என்னைப்பற்றிய கதைகளை கேட்பதிலும், சொல்வதிலும்
நம்பிக்கை வரவில்லையோ அதுவரை கர்மயோகத்தை பின்பற்றீக் கொண்டிருக்க வேண்டும்.
ஸ்வத4ர்மஸ்தே2
யஜன்யஞைரனாஶீ:காம உத்3த4வ |
ந யாதி ஸ்வர்க3நரகௌ
யத்3யன்யன்ன ஸமாசரேத் || 10 ||
உத்தவா! தன்னுடைய
கடமைகளை செய்து கொண்டிருப்பவன், விதவிதமான யக்ஞங்களினால், வழிப்பட்டுக் கொண்டிருப்பவன்,
ஐந்துவிதமான யக்ஞத்தை கடைப்பிடித்துக் கொண்டிருப்பவன்,
அனாஶீ காம –
நிஷ்காம்யமாக கர்மங்களை செய்து கொண்டிருப்பவன்,
யத் அன்யத் ந
ஸமாசரேத் – நிஷித்த கர்மங்களையும், காம்ய கர்மங்களையும் செய்யாமலிருப்பவன்
இத்தகைய கர்மயோகி
சொர்க்க, நரகத்தை அடையமாட்டான்.
அஸ்மின்லோகே வர்தமான:
ஸ்வத4ர்மஸ்தோ2Sனக4: ஶுசி: |
ஞானம்
விஶுத்3த4மாப்னோதீ மத்3ப4க்திம் வா யத்3ருச்ச2யா || 11 ||
இந்த மனித உடலோடு
உலகில் வாழும்போதே, தன்னுடைய தர்மத்தை பின்பற்றிக் கொண்டு இருக்கும்போதே
அவனிடத்திலிருக்கும் பாவங்களனைத்தும் நீங்கப்பெற்றவனாக இருப்பான். பாவங்கள்
நீங்குவதால் எல்லா தடைகளும் நீங்கப்பெற்றவனாகிறான். மனத்தூய்மையை அடைந்து
விடுவான். இது புண்ணியத்தின் பலனாகும். என்னுடைய அருளால் தன்னை அறியாமலே மோட்சத்தை
கொடுக்க கூடிய ஞானயோகத்தை அடைகிறான். அல்லது என்மீது பக்திசெலுத்துகின்ற
பக்தியோகத்தை அடைகிறான்.
ஸ்வர்கி3னோSப்யேதமிச்ச2ந்தி லோகம் நிரயிணஸ்ததா2 |
ஸாத4கம் ஞானப4க்திப்4யாமுப4யம்
தத3ஸாத4கம் || 12 ||
சொர்க்க லோகத்திருப்பவர்களும் மனித
சரீரத்தோடு இந்த மனிதலோகத்தை அடைய விரும்புகிறார்கள். நரகத்திலிருப்பவர்களும்
இதையே விரும்புகிறார்கள். இந்த உலகமானது ஞானத்திற்கும், பக்திக்கும் சாதனமாக பயன்படுகிறது. சொர்க்கமும், நரகமும் இவைகளுக்கு சாதகமாக இருக்காது.
ந நர: ஸ்வர்க3திம் காங்க்ஷேன்னாரகீம் வா
விசக்ஷண: |
நேமம் லோகம் ச காங்க்ஷேத
தே3ஹாவேஶாத்ப்ரமாத்3யதிக் || 13 ||
கர்மயோகியாக இருக்கும் மனிதர்கள்
சொர்க்கத்தை அடைய ஆசைப்படக்கூடாது. அல்லது அறிவுள்ளவன் நரகத்திற்கு கொண்டு
செல்லும் செயல்களை செய்யக் கூடாது. இந்த பூலோகத்திலும் கூட பற்று
வைக்கக்கூடாது. மனித சரீரத்தின் மீதுள்ள
அதிக பற்றினால் பரமாத்வாவை அடையும் முயற்சியிலிருந்து விலகி விடுவான்
ஏதத்3வித்3வான்புரா ம்ருத்யோரப4வாய
க4டேத ஸ: |
அப்ரமத்த இத3ம் ஞாத்வா
மர்த்யமப்யர்த2ஸித்3தி4த3ம் || 14 ||
இதை அறிந்த சாதகன் மரணத்திற்கு முன்பு
மோட்சத்திற்கான முழு முயற்சி எடுக்க வேண்டும்.
சம்சார நிவிருத்திக்கான செயலில் ஈடுபடவேண்டும். இதில் கவனமாக இருக்க வேண்டும். நாம் விரும்பியதை கொடுக்கக்கூடாது. இந்த உலகமும், உடலும்
அழிவிற்குட்பட்டது. எனவே இதை உணர்ந்து
கவனமாக அறிவை அடைய முயற்சி செய்ய வேண்டும். நாம் அடைய வேண்டிய இலக்கை அடைவதற்கு
உதவியாக இருக்கும் இந்த சரீரமும் அழிவிற்குட்பட்டது என்பதை நினைவில் வைத்த்துக்
கொள்ள வேண்டும்.
சி2த்3யமானம்
யமைரேதை: க்ருதனீட3ம் வனஸ்பதிம் |
க2க3: ஸ்வகேதமுத்ஸ்ருத்ய க்ஷேமம் யதி ஹயலம்பட: || 15 ||
பறவையானது தான் கூடுகட்டிய மரத்தை
யமனைப் போன்றவர்களால் வெட்டப்பட்டுக் கொண்டு இருக்கும்போது அந்தக் கூட்டை துறந்து
விட்டு தனது நன்மைக்காக செல்கிறது. அதனால்
அந்தக்கூட்டின் மீது பற்றின்மையாக இருப்பதனால் இவ்வாறு அதனால் செய்ய முடிகிறது.
அஹோராத்ரைஶ்சி2த்3யமானம்
ப்3உத்3த்4வாயுர்ப4யவேபது2: |
முக்தஸங்க3: பரம்
பு3த்3த்4வா நிரீஹ உபஶாம்யதி ||
16 ||
இரவும்,
பகலுமாக ஒவ்வொரு நாளும் நமது ஆயுள்
குறைந்து கொண்டே போகின்றது. இதை அறிந்து
கொண்டு பயத்தை அடைந்து கவனத்துடன் இருக்க வேண்டும்.
முக்தஸங்கஹ - பற்றின்மை,
புலனுகர்
பொருட்களிலும், உறவுகளிலுமிருந்து பற்றின்மையை அடைந்து ஞானயோகத்திற்கு செல்ல
வேண்டும். எதையும் செய்யத் தேவையில்லாத
மனநிலையை அடைய வேண்டும். பிறகு முழுமையான மன அமைதியை அடைவோம்.
ந்ருதே3ஹமாத்3யம் ஸுலப4ம் ஸுது3ர்லப4ம்
ப்லவம் ஸுகல்பம் கு3ருகர்ணதா4ரம் |
மயனுகூலேன நப4ஸ்வதேரிதம்
புமான்ப4வாப்3தி4ம் ந தரேத்ஸ ஆத்மஹா ||
17 ||
மனித சரீரம், இனி வரப்போகின்ற
உடலுக்கு காரணமாக இருக்கின்றது, மிக எளிதில் கிடைக்கக் கூடியதல்ல. இது கிடைப்பதற்கு மிகவும்
அரிதானது. மோட்சம் என்ற சாத்தியத்தை
அடைவதற்கு பயன்படக்கூடிய உகந்த சாதனம். உடலைப் படகாகக் கருதி அதை ஒட்டுவதற்கான
படகோட்டியாக இருக்கின்ற வேதாந்த குருவை நாட வேண்டும். நான் படகு கரையை கடக்க உதவி புரியும் காற்றாக
இருப்பேன். இவ்வளவு நற்சாதனங்கள் இருந்தும் சம்சாரக் கடலை கடப்பதற்கு முயற்சி
செய்யாதவன் தன் ஆத்மாவை தானே கொன்றவனாகின்றான். இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது
குரு, பகவான் எப்பொழுதும் உதவி புரிய காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாம்தான் முயற்சி செய்து அவைகளை பயன்படுத்தி ஆத்மஞானத்தை அடைய வேண்டும்.
யதா3ரம்பே4ஷு நிர்விண்ணோ விரக்த:
ஸம்யதேந்த்3ரிய: |
அப்4யாஸேனாத்மனோ யோகீ3 தா4ரயேத3சலம் மன:
|| 18 ||
எப்போது கர்மாக்களில் பற்றின்மை
அடைகின்றானோ, புலனுகர் பொருட்கள் மீதும் வைராக்கியத்தை அடைகின்றானோ, புலன்
கட்டுப்பாட்டையும் கொண்டு வந்துவிட்டானோ அப்போது இந்த ஞானயோகியானவன் தன்னுடைய
மனதை அமைதிப்படுத்த வேண்டும். ஆத்மஞானம் அப்யாஸம் என்ற சாதனத்தைப்
பயன்படுத்த வேண்டும். ஆத்மாவைப் பற்றிய எண்ணங்களில் மனதை செலுத்தி பழக
வேண்டும். இதனால் மன சஞ்சலமற்ற நிலையை அடைய வேண்டும்.
தா4ர்யமாணம் மனோ யர்ஹி
ப்4ராம்யத3ஶ்வனவஸ்தி2தம் |
அதந்த்3ரிதோSனுரோதே4ன
மார்கே3ணாத்மவஶம் நயேத் || 19 ||
தா4ர்யமாணம் மனோ - மனதை கட்டுப்படுத்த
முயலும்போது
யர்ஹி - கண்டிப்பாக, அது அலைபாய்ந்து
கொண்டிருக்கும்
அதந்த்3ரிதஹ - சோர்வடையாமல்
விடாமுயற்சியுடன், நம்பிக்கை இழக்காமல்,
மனம் தளராமல்
அனுரோதே4ன மார்கே3ன - அவரவர்களுக்கு எது
சரியாக இருக்குமோ அதை பயன்படுத்தி
மனதை தன் வசத்திற்கு கொண்டு வரவேண்டும்.
மனோக3திம் ந விஸ்ருஜேஜ்ஜிதப்ராணோ
ஜிதேந்த்3ரிய: |
ஸத்த்வஸம்பன்னயா பு3த்3த்4யா மன
ஆத்மவஶம் நயேத் || 20||
மனோகதிம் - மனதினுடைய இயல்பான
சஞ்சலத்துடன் இருப்பதை
ந விஸ்ருஜேத் - அப்படியே விட்டுவிடாதே.
மனதை அமைதிப்படுத்த வேண்டுமென்றல்
ஜிதப் ப்ராணஹ - பிராணனை அமைதிப்படுத்த
வேண்டும். பிராணனையே கவனிக்க வேண்டும்.
ஜிதேந்திரிய - புலன்களை வசப்படுத்த
வேண்டும். புலன்களை கவனிக்க வேண்டும்.
ஸத்த்வஸம்பன்னயா பு3த்3த4யா - சாத்விகமான
புத்தியாக மாற்ற வேண்டும். பொருட்களை,
விஷயங்களை பிரித்தறியும், முடிவெடுக்கும்
திறனைக் கொண்ட புத்தியாக மாற்ற வேண்டும்.
மன ஆத்மவஶம் நயேத் - இவ்வாறு முயற்சி
செய்து மனதை வசப்படுத்த வேண்டும். நம் மனதோடு மகிழ்ச்சியாக இருக்கும்படி
அமைதிப்படுத்த வேண்டும்.
ஏஷ வை பரமோ யோகோ3 மனஸ: ஸங்க்3ரஹ:
ஸ்ம்ருத: |
ஹ்ருதயஞத்வமன்சிச்ச2ந்த3ம்யஸ்யேவார்வதோ
முஹு: || 21 ||
இது மாதிரி மனதை அமைதிப்படுத்துவதுதான்
மேலான யோகமாகும். மனதை கட்டுப்படுத்துவது
நெறிபடுத்துவது, மிகவும் மேலான லட்சியமாகும் என்று ரிஷிகளால் கூறப்படுகிறது.
குதிரையானது வண்டி ஓட்டுபவனின் உத்தரவை புரிந்து கொண்டு செயல்படுவது போல புத்தி
சொல்வதை மனது கேட்க வேண்டும்.
ஸாங்க்2யேன
ஸர்வபா4வானாம் ப்ரதிலோமானுலோமத: |
ப4வாப்ய்யாவனுத்4யாயேன்மனோ யாவத்ப்ரஸீத3தி || 22 ||
நாம் பார்க்கின்ற பொருட்கள், விஷயங்கள்
உண்மையென்று நம்பிக் கொண்டிருப்பதால்தான் அவைகளால் துயரமடைகிறோம். உலகத்தின்
மித்யாத்வத்தை சரியாக உணர்ந்து கொண்டால் மனதால் எந்த துன்பத்தையும் அடையமாட்டோம்.
சாங்கிய சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளபடி இந்த உலகத்திலுள்ள அனைத்தினுடைய
தோற்றத்தையும், அழிவையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.
அனுலோமம் - இவைகள் வரிசை கிரமப்படி தோன்றியவகள்,
பிரதிலோகம் -
ஸ்தூலத்திலிருந்து சூட்சுமத்திற்கு சென்று பின்பு லயமடைந்து விடுபவைகள் என்று
நினைத்துப் பார்க்க வேண்டும்.
யாவத் ப்ரஸீததி - எதுவரை மனமானது அமைதி
அடைகிறதோ அதுவரை இவ்வாறு சிந்திக்க வேண்டும்.
நிர்விண்ணஸ்ய விரக்தஸ்ய
புருஷஸ்யோக்தவேதி3ன: |
மனஸ்த்யஜதி தௌராத்ம்யம்
சிந்திதஸ்யானுசிந்தயா || 23 ||
மூன்று வகையான தவறுகளை நம்முடைய
மனதிலிருந்து நீக்க வேண்டும்.
ஆவரண நிவிருத்தி - மனதில் மறைக்கப்பட்டு
இருக்கின்ற உண்மைகள், அதாவது நான் யார் என்ற உண்மையானது மறைக்கப்பட்டிருக்கின்றது.
விக்ஷேப நிவிருத்தி - மன சஞ்சலத்தை
நீக்குதல், வைராக்கியத்தின் மூலம் இதை அடையலாம்
மல நிவிருத்தி – மனதிலுள்ள தீய குணங்களான
கோபம், பொறாமை போன்றவைகளை நீக்க வேண்டும்
புருஷஸ்ய உக்தவேதி3னஹ - மேற்சொன்ன
மூன்று குறைகளை உடைய மனிதன் குருவின் மூலம் அறியாமை நீக்கப்பட்ட அறிவை
அடைந்தவனுக்கு
விரக்தஸ்ய - விக்ஷேப நிவிருத்தியை
அடைந்தவனுக்கு, வைராக்கியத்தின் மூலம் இதை அடைந்தவன்
நிர்விண்ணஸ்ய - மனத்தூய்மையை
அடைந்தவனுக்கு, நற்பண்புகளை அடைந்தவனுக்கு
அனுசிந்தயா - குரு-சாஸ்திரம் மூலம்
தொடர்ந்து சிந்திப்பவனுக்கு
மனஸ்த்யஜதி தௌரத்ம்யம் - மனதிலுள்ள
அகங்காரம், மமகாரம், தேகாதி அபிமானம் இவைகள் எல்லாம் நீங்கிவிடுகின்றது.
யமாதி3பி4ர்யோக3பதை2ரான்வீக்ஷிக்யா
ச வித்3யயா |
ம்மர்சோபாஸனாபி4ர்வா
நான்யைர்யோக்யம் ஸ்மரேன்மன: ||
24 ||
யம-நியமம் முதலிய யோக மார்க்கத்தை
கைக்கொண்டு என்னை தியானிக்கலாம். என்னை
(சகுண பிரம்ம உபாஸனம்) அர்ச்சனை செய்வதிலும், பூஜை செய்வதிலும்
மனதை அமைதிப்
படுத்தலாம். வேதாந்த விசாரத்தின் மூலமாக
அடைந்த ஆத்ம ஞானத்தின் மூலமாகவும் மனதை அமைதிப்படுத்தலாம். வேறு விஷயத்தைப் பற்றி மனமானது
நினைக்கக்கூடாது.
யதி3
குர்யாத்ப்ரமாதே3ன யோகீ கர்ம விக3ர்ஹிதம் |
யோகே3னைவ
த3ஹேத3ம்ஹோ நான்யத்தத்ர கதா3சன || 25 ||
யோகியானவன் எப்போதாவது தவறுதல் காரணமாக
நிந்திக்கதக்க செயலை செய்து விட்டால்
அவன் செய்துக் கொண்டிருக்கின்ற
யோகத்தினைக் கொண்டே அந்த பாவத்தை அழித்து விட
வேண்டும். எப்பொழுதும் தான் இருக்கின்ற யோகத்திலிருந்து
விலகி வேறு பிராயசித்தத்தை
தேடிப்போகக்கூடாது.
ஸ்வே ஸ்வேSதி4காரே
யா நிஷ்டா ஸ கு4ண: பரிகீர்தித: |
கர்மணாம் ஜாத்யஶுத்3தா4னாமனேன
நியம: க்ருத: |
கு3ணதோ3ஷவிதா4னேன
ஸங்கா3னாம் த்யாஜனேச்ச2யா || 26 ||
குண பரிகீர்திதஹ - இது நல்லது என்று
கூறப்படுகிறது
யார் யார் எந்தெந்த வர்ணாசிரம
தர்மத்தில் இருக்கிறார்களோ அதுவே அவரவர்களுக்கு
பொருத்தமான நல்வழியாகும். இவ்விதம் நல்லது-கெட்டது என்பது தர்ம
சாஸ்திரத்தின்
அடிப்படையில்தான்
வரையறுக்கப்பட்டுள்ளது. உண்மையிலே எல்லா
செயல்களும்
குணங்களும் செயல்களும் இயற்கையிலே
குறையுடையதுதான். சாஸ்திரப்படி நல்லது,கெட்டது
என்று கர்மங்கள் விதித்திருந்தாலும்
மனிதர்களாகிய நமக்கு இயற்கையாக பொருட்களிலும்,
உறவுகளிலும் பற்று இருக்கின்றது. அதை துறந்து விடுவதற்குத்தான் சாஸ்திரம்
இவ்வாறு
நல்லது,
கெட்டது என்று பிரித்திருக்கிறது.
கர்மத்தில் இருக்கும் இயல்பான குறைகள்.
- கர்த்தா என்ற அறிவுடன் இருக்க வைக்கின்றது.
- வெளிவிஷயங்களிலே மனம் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
- பாவ-புண்ணியம் என்ற பலன்களை கொடுக்கக்கூடியது. பாவ-புண்ணியங்கள் உடலைக் கொடுத்து அதற்கு தகுந்த உலகத்தையும் கொடுக்கின்றது.
ஜாதஶ்ரத்3தோ4 மத்கதா2ஸு நிர்விண்ண:
ஸ்ர்வகர்மஸு |
வேத3 து3:கா2த்மகான்காமான்பரித்யாகே3Sப்யனீஶ்வர: || 27 ||
ததோ ப4ஜேத மாம் ப்ரீத:
ஶ்ரத்3தா4லுர்த்3ருட4நிஶ்சய: |
ஜுஷமாணஶ்ச தான்காமான்து3:கோ2த3ர்காஶ்ச
க3ர்ஹயன் || 28 ||
இறைவனாகிய என்னைப்பற்றிய லீலாவினோத
கதைகளில் சிரத்தை ஏற்பட்டு அதனால் என்னை விதவிதமாக வழிபடுதல், என்னைப் பற்றிய கதைகளை
கேட்பதிலும் சிரத்தை ஏற்பட்டு (இவைகள் கர்மயோக பலனாக வருவது) மற்றவர்களுக்காக
செய்கின்ற எல்லா செயல்களிலும் வைராக்கியத்தை அடைந்து புலனுகர் பொருட்களிலிருந்து
கிடைக்கும் இன்பங்கள் அனைத்தும் இறுதியில் துன்பத்தையே கொடுக்கக்கூடியவைகள் என்ற
அறிவை அடைந்தாலும், அந்த இன்பங்களை துறப்பதற்கான மனப்பக்குவம் இல்லையென்றால்
சக்தியற்றவனாக இருந்தாலும் என் மீது மகிழ்ச்சியுடன் பக்தி செலுத்த வேண்டும். இந்த பக்தி சிரத்தையுடனும், மனதில் பக்தியோகம்தான் சிறந்தது என்ற
நம்பிக்கையோடும் இருக்க வேண்டும்.
இவன் இந்த இன்பங்களை அனுபவித்துக்
கொண்டிருக்கும்போதே இன்பங்கள் முடிவில் துன்பத்தைத்தான் கொடுக்கப் போகிறது என்ற
வேதனையுடன் இருப்பான். போகத்தை தரும் புலனுகர்
பொருட்களுக்கு அடிமையாகி விடுகின்ற துயரம், அதிகமாக
அனுபவிப்பதனால் புலன்கள் சக்தியிழந்து போகும். அனுபவிக்கின்ற இன்பம் மறைந்துவிட்டாலோ
அல்லது யாராவது பறித்துவிட்டாலோ மனம் பெரிதளவு பாதிக்கப்படும்.
ப்ரோக்தேன ப4க்தியோகே3ன
ப4ஜதோ மாஸக்ருன்முனே: |
காமா ஹ்ருத3ய்யா
நஶ்யந்தி ஸர்வே மயி ஹ்ருதி3 ஸ்தி2தே || 29 ||
இதுவரை உபதேசித்த பக்தியோகத்தின் மூலமாக
என்னை தொடர்ந்து வழிபடுகின்ற
பக்தனுடைய மனதிலுள்ள எல்லா ஆசைகளும்
அழிந்துவிடுகின்றன. என்னிடத்தில்
உன்னுடைய மனமானது நிலையாக பற்றிக்
கொண்டால் மனதிலுள்ள பந்தத்தை கொடுக்கும்
ஆசைகள் அழிந்து போகும்.
பி4த்3யதே
ஹ்ர்ய்த3யக்3ரந்தி2ஶ்சி2த்3யந்தே ஸர்வஸம்ஶயா: |
க்ஷீயந்தே சாஸ்ய கர்மாணி மயி த்3ருஷ்டேSகி2லாத்மனி
|| 30 ||
எந்த பக்தன் என்னை எல்லா
ஜீவரசிகளுக்குள்ளும் இருக்கும் ஆத்மாவாக இருக்கிறேன் என்று
உணர்கின்றானோ அவனுடைய இதயத்திலுள்ள
முடிச்சுக்கள் அவிழ்க்கப்படுகின்றன. எல்லாவிதமான சந்தேகங்களும்
நீக்கப்படுகின்றன. ஆத்மாவுடன் அனாத்மாவை
கட்டி வைத்திருக்கும் முடிச்சுகள் அவிழ்ந்து விடுகின்றன. அனைத்து கர்ம வாஸனைகளும்
நசித்து போகின்றன.
தஸ்மான்மத்3ப4க்தி
யுக்தஸ்ய யோகி3னோ வை மதா3த்மன: |
ந ஞானம் ந ச வைராக்3யம்
ப்ராய: ஶ்ரேயோ ப4வேதி3ஹ || 31 ||
ஆகவே என்மீது பக்தி கொண்ட பக்தனுக்கு
ஞானயோகம் உகந்ததல்ல, வைராக்கியம் என்ற
சாத்தியத்தையும் அடைய தேவையில்லை.
அவைகள் அவனுக்கு நன்மையை கொடுக்காது.
யத்கர்மபி4ர்யத்தபஸா
ஞானவைராக்3யதஶ்ச யத் |
கே3ன
தா3னத4ர்மேண ஶ்ரேயோபி4ரிதரைரபி ||
32 ||
ஸர்வம் மத்3ப4க்தியோகே3ன மத்3ப4க்தோ
லப4தேSஞ்ஜஸா
|
ஸ்வர்கா3பவர்க3 மத்3தா4ம கத2ஞ்சித்3யதி3
வாஞ்ச2தி || 33 ||
தர்ம செயல்களினால் என்னென்ன பலன்கள்
அடைய முடியுமோ, தவத்தினாலும், ஞானத்தினாலும், உபாஸனைகளாலும், வைராக்கியத்தாலும்
விதவிதமான தியான அப்யாஸங்களினாலும், தான-தர்மங்கள்
செய்வதினாலும், நன்மையைத் தரும் அனைத்து சாதனங்களினாலும் என்னென்ன பலன்கள்
கிடைக்குமோ அவைகள் யாவும் என்மீது பக்தி கொள்வதன் மூலமாகவும், பக்தியோகத்தின்
மூலமாகவும் என்னுடைய பக்தன் தடையேதும் இல்லாமல் அடைகின்றான். அவன்
விரும்புகின்ற சொர்க்கம், மோட்சம், என்னுடைய
இருப்பிடத்தையோ போன்றவற்றில் எதை
வேண்டுமானாலும் அடைவான்.
ந கிஞ்சித்ஸாத4வோ தீ4ரா ப4க்தா
ஹயேகாந்தினோ மம |
வாஞ்ச2ந்த்யபி மயா த3த்தம்
கைவல்யமபுனர்ப3வம் || 34 ||
பக்தியோகத்தில் இருக்கும் என்னைப்பற்றிய
அறிவுடன் என்னிடத்திலேயே முழுமையான பக்தி
கொண்டிருக்கும் பக்தனுக்கு பிறவாமை என்ற
மோட்சத்தை கொடுத்தாலும் அதை ஏற்றுக்
கொள்ள மாட்டான். என்னைத் தவிர
வேறெதற்கும் ஆசைப்படாதவன்
நைரபேக்ஷ்யம் பரம்
ப்ராஹுர்நி:ஶ்ரேயஸமனல்பகம் |
தஸ்மான்னிராஶிஷோ ப4க்திர்நிரபேக்ஷஸ்ய மே
ப4வேத் || 35 ||
உத்தவா! மேலான மோட்சம் ( நைரபேக்ஷ்யம் )
எதையும், யாரையும் சார்ந்திருக்காமல் இருப்பதே என்று மகான்கள் கூறுகிறார்கள்.
நாம் உயிர்வாழ பிறரை சார்ந்துதான் இருக்க வேண்டும். ஆனால் தன்னுடைய மனநிறைவுக்காக
யாரையும் சார்ந்திருக்கக்கூடாது. எது
வரையறுக்கப்படாமல் இருக்கிறதோ அதுவே மோட்சம். புலனுகர் பொருட்களில், உறவுகளில் உள்ள ஆசையை
விட்டவனுக்குத்தான் என்மேல் பக்தி உண்டாகும்
ந மய்யேகாந்தப4க்தானாம்
கு3ணதோ3ஷோத்3ப4வா கு3ணா: |
ஸாதூ4னாம் ஸமசித்தானாம் பு3த்3தே4:
பரமுபேயுஷாம் || 36 ||
ஞானியிடமிருந்து வெளிப்படும் எந்த
செயலும் அவனைப் பந்தப்படுத்தாது, பாவ-புண்ணியத்தைக் கொடுக்காது.
ந குண தோஷ உத்பவா குணா - நல்லது, கெட்டது இவைகளிலிருந்து வரும் பலனானது வராது
மயி ஏகாந்த பக்தானாம் - என்மீது மட்டும் முழுமையான பக்தியையுடையவர்கள், சாத்திய பக்தியை
அடைந்தவர்களாவார்கள்
ஸாதுனாம் - அஹிம்சையை சுபாவமாக கொண்டிருப்பவன்
ஸமசித்தானாம் - எல்லோரிடத்திலும் சமநோக்குடன் பழகுவான், பார்ப்பான்.
புத்தே பரம் உபேயுஷாம் - உடல், மனம், புத்திக்கும் மேலான ஆத்மாவை அடைந்தவன்.
ஏவமேதான்மயா தி3ஷ்டானனுதிஷ்ட2ந்தி மே
பத2: |
க்ஷேமம் விந்த3ந்தி மத்ஸ்தா2னம்
யத்3ப்3ரஹ்ம பரமம் விது3: || 37 ||
இவ்வாறு என்னால் உபதேசிக்கப்பட்ட
பாதைகளை (ஞான, கர்ம, பக்தி) யார் பின்பற்றுகிறார்களோ அவர்கள் நன்மையைத்தான்
அடைகிறார்கள். என்னை அடைகின்ற மேலான நன்மையை , பர பிரஹ்மமான
என்னுடைய இருப்பிடத்தையே அடைகிறார்கள்.
ஓம் தத் ஸத்