Showing posts with label பஞ்சதசி-12. Show all posts
Showing posts with label பஞ்சதசி-12. Show all posts

Saturday, August 24, 2019

Pancadasi Chapter-12 - Rev-01

பஞ்சதசி
அத்தியாயம்-12
ஆத்மானந்தம்
 
ஞானியானவன் வாசனையினால் வருகின்ற ஆனந்தத்தையும், ஆழ்ந்த உறக்கத்தில் அனுபவிக்கின்ற ஆனந்தத்திற்கும், விஷயானந்தத்திற்கும் வேறாக உள்ள தன்னுடைய ஆனந்த ஸ்வரூபத்தை அறிந்து இருக்கிறான். இந்த விஷயத்தில் அக்ஞானிகளின் கதி என்ன? அக்ஞானிகளின் நிலை என்ன?
 
இந்த அக்ஞானி தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் உட்பட்டு மீண்டும் மீண்டும் பிறக்கட்டும், இறக்கட்டும் லட்சக்கணக்கான உடல்களை எடுத்து மகிழ்ச்சியாக இருக்கட்டும். நாம் அவனிடம் கருணைக் காட்டுவதால் பலனொன்றும் இல்லை. வேதாந்த உபதேசத்தை கேட்க விருப்பமில்லாதவர்களுக்கு, ஆன்மீக விஷயத்தில் ஆர்வமில்லாதவர்களுக்கு, வெளிவிஷயங்களை அனுபவிப்பதில் ஆசையுள்ளவர்களுக்கு விதவிதமான உபாசனைகளையோ அல்லது விதவிதமான கர்மத்தை தர்மப்படி செய்வதற்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அதற்கேற்றவாறு அறிவுரை சொல்ல வேண்டும். ஆத்மஞானத்தை அடைய விரும்புவன் மந்த புத்தியுள்ளவனாக இருந்தாலும் ஆத்மானந்தத்தின் மூலமாக அறிவை அடைவதற்கு உதவி புரிய வேண்டும். ஆத்மஞானத்தை புரிந்து கொள்ளும் புத்தியில்லாதவனுக்கு உதவிபுரிய வேண்டும்.
 
யாக்ஞவல்கியர் என்ற மகரிஷியானவர் தனக்கு பிரியமான மனைவியான மைத்ரேயிக்கு இந்த உபதேசத்தை செய்தார். நான் என்னை முழுமையாக நிபந்தனையின்றி நேசிக்கிறேன். அதேபோல ஆனந்தத்தையும் நிபந்தனையின்றி நேசிக்கிறேன். எனவே நான் ஆனந்த ஸ்வரூபமானவன் என்று அறியப்படுகிறது. ஆனால் இந்த அறிவு நம்முடைய அனுபவத்திற்கு முரண்பாடாக இருக்கிறது.  நான் என்னை அவ்வப்போது வெறுக்கிறேன் என்றுதான் நினைக்கிறோம். இவருடைய உபதேசம் இந்த முரண்பாட்டை நீக்குகிறது. மனைவி கணவனின் பிரியத்திற்காக அவனை நேசிப்பதில்லை என்றும் தன்னுடைய பிரயோஜனத்திற்காகத்தான் அவனை நேசிக்கிறாள் என்றும் உபதேசித்தார். மனைவி, கணவன், புத்திரன், சொத்து, பசுக்கள் போன்ற அனைத்தும் தன்னுடைய பிரயோஜனத்தின் அடிப்படையில்தான் விரும்பப்படுகிறது.
 
மனைவிக்கு தன் கணவன் மீது எப்போது ஆசை வருகிறதோ அப்போதுதான் அவன் மீது ஆசை கொள்கிறாள். கணவன் பசியினால் வருந்தினாலும், கர்மானுஷ்டானம் செய்து கொண்டிருந்தாலும், நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அந்த சமயத்தில் அவன் மீது ஆசை கொள்வது கிடையாது. தனக்கு கஷ்டங்கள் வந்திருந்தாலும் அந்த சமயத்தில் கணவனிடம் அன்பு செலுத்துவது கிடையாது. கணவனும் தன்னுடைய நன்மைக்காகவே மனைவியிடம் அன்பு செலுத்துகிறான்.
 
ஒருவருக்கொருவர் ஒரே சமயம் நேசிப்பது தத்தம் ஆசையை நிறைவேற்றுவதில் இருக்கும் நோக்கத்தில்தான் ஏற்படுகிறது. தந்தை தன் குழந்தை மீது செலுத்தும் அன்பும் அதில் இன்பம் காண்பதால்தான். குழந்தை அழுதாலும் அதற்கு முத்தமிட்டுக் கொண்டிருப்பான். இதிலிருந்து தன் இன்பத்திற்குத்தான் தன் குழந்தை மீதே அன்பு செலுத்துகிறான்.
 
வைரம், ரத்தினம் போன்ற விலையுயர்ந்த கற்களின் மீது ஆசை கொள்வதற்குக் காரணம் அதனால் அடைகின்ற பலனுக்காகத்தானே தவிர அந்த கற்களுக்காக அல்ல. எனவே அதை மிகவும் கஷ்டப்பட்டு அதிக முயற்சி மேற்கொணடு அடைவதில் கவனம்  செலுத்துகிறான், நேரத்தை செலவழிக்கிறான்.
 
காளை விரும்பாத போதும் அதன் மீது அதிக சுமைகளை ஏற்றி சுமக்கும்படி செய்கிறான் மனிதன் அந்த காளையின் மீது காட்டும் அன்பும், அக்கறையும் அதனால் அடைகின்ற பலனுக்காகத்தானே தவிர அந்தக் காளையின் மீதுள்ள அன்பினால் அல்ல.
 
பிராமண வர்ணத்திற்கு உள்ள தர்மங்கள் என்னிடத்தில் இருக்கிறது. அதனால்தான் நான் போற்றுதலுக்குரியவனாகின்றேன் என்று சந்தோஷம்படும் பிரமாணனுக்குத்தான் அந்த சந்தோஷம் அந்த ஜாதிக்கு கிடையாது. அதேபோல சத்திரியனும் சந்தோஷப்படுகிறான். நான் அரசாங்கம் நடத்துவதற்கு தகுதியானவன், ராஜபோகத்தை அனுபவிப்பதற்கு தகுதியானவன் என்று சந்தோஷம் அடைவது மனிதன்தான் அந்த வர்ணமல்ல.
 
சொர்க்கம், பிரம்மலோகம் இவைகளை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் செய்யப்படும் செயல்கள் அனைத்தும் அந்த லோகங்களின் உபகாரத்திற்கல்ல தன்னுடைய போகத்திற்காகத்தான் என்று புரிந்து கொள்ள வேண்டும். சிவன், விஷ்ணு ஆகிய தேவதைகளை வழிபடுவதற்கு தம்முடைய பாவங்களைப் போக்கி கொள்ளவும், துயரங்களை போக்கி கொள்வதற்கும், விரும்பிய பலனை அடைவதற்காகவும் தவிர அந்த தேவதைகளுக்காக அல்ல. ரிக் முதலான வேதங்களை அத்யயனம் செய்வது அவைகளை காப்பாற்றுவதற்காக அல்ல. தன் குலதர்மத்தை காப்பாற்றுவதற்காகத்தான் அத்யயனம் செய்யப்படுகிறது. பஞ்ச பூதங்களை வழிபடுவதும் தன்னுடைய நலனுக்காகத்தானே தவிர அவைகள் நன்மைக்காக அல்ல. அதேபோல எஜமானன் வேலைக்காரனிடம் அன்பாக நடந்து கொள்வதும், அவனுக்காக பணம் கொடுப்பதும் தன்னுடைய நன்மைக்காகத்தானே தவிர அவனுடைய நன்மைக்காக அல்ல. வேலைக்காரனும் எஜமானனிடம் விசுவாசமாக நடந்து கொள்வதும், பணிவிடை செய்வதும் தன்னுடைய நன்மைக்காகத்தானே தவிர அவனுடைய நன்மைக்காக அல்ல. எல்லாவிதமான பற்றுகளும், உறவுகளும் கிடைக்கின்ற பலனை இவ்விதம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
 
ஆத்மா சுகத்தை மட்டுமே விஷயமாக கொண்டிருக்கின்ற சாத்விகமான அந்தக்கரண எண்ணமாக இருக்கின்றது. நாம் நம்மையே பார்க்கும்போது சாத்விகமான எண்ணமாக இருக்கும்போது ஆத்மாவின் ஆனந்த ஸ்வரூபத்தை தெரியாமலே தரிசிப்பதால் நம்மீதே அன்பு ஏற்படுகிறது. இதுதான் பற்று என்று புரிந்து கொள்ள வேண்டும். விரும்பிய பொருள் கிடைத்தாலும், நஷ்டமானாலும் கூட இந்தப் பற்று இருந்துவருவதால் ஆசையை விட வேறுபட்டதாக இருக்கிறது.
 
சுகத்தை அடைவதற்கு சாதனமாக இருப்பதால்தான் உண்ணும் உணவும், குடிக்கும் நீரும் நமக்கு பிரியமாக இருக்கிறது. அதுபோல ஆத்மாவும் உனக்கு பிரியமாக இருக்கிறது. ஆகையால் உணவு, நீர் போல ஆத்மாவும் சுகத்தை கொடுக்கும் சாதனம்தான் என்று கேள்வி எழுந்தால், ஒரே பொருள் சுகமாகவும், சுகத்தைக் கொடுக்கும் சாதனமாகவும் இருக்க முடியாது என்ற கருத்தை நினைத்துப் பார்த்து தெளிவடைய வேண்டும்.
 
விஷயங்களிலிருந்து அடையப்படும் சுகமானது அளவுடன் கூடியதாக இருக்கிறது. ஏற்றத்தாழ்வு உடையதாக இருக்கிறது. ஆனால் ஆத்மாவே மிகப்பிரியமாக உள்ளது. விஷய சுகத்தில் இந்த பற்று மாறுபாடுடனும், ஏற்றத்தாழ்வுடனும் இருக்கிறது. ஆனால் ஆத்மாவோ எல்லா காலத்திலும் நேசிக்கப்படுகிறது. விஷய சுகமானது சில சமயங்களில் அனுபவிக்கப்படுகிறது. சில சமயங்களில் அனுபவிக்கப்படாததாக இருக்கிறது. பிரியமானது எப்போதும் ஒரு விஷய சுகத்தை விட்டுவிட்டு இன்னொரு விஷய சுகத்தை எடுத்துக் கொள்கிறது. ஆத்மா அவ்விதம் விட்டுவிட தகுந்ததல்ல, எடுத்துக் கொள்ளத் தகுந்ததுமல்ல. அப்படி இருக்கும்போது இந்த நேசிப்பில் மாறுபாடு இருக்க முடியாது.
 
தீராத வியாதி, நிறைவேறாத ஆசை, அடங்காத கோபம் இவைகளினால் தாங்க முடியாத அளவுக்கு ஆட்கொள்ளப்பட்டவர்களுக்கு சிலசமயம் இறந்துவிட வேண்டும் என்ற எண்ணம் காணப்படுகிறது. ஆகையால் வெறுப்பினால் ஆத்மா நீக்கப்படக் கூடியது என்று நினைக்க முடியாது. அழித்துக் கொள்வதற்கு யோக்கியமான தேகத்திற்கு ஆத்மாவாக இருக்கும் தன்மை கிடையாது. அந்த தன்மையானது அழிக்க நினைப்பவனிடமே உள்ளது.
 
ஆத்ம சம்பந்தத்தினால்தான் எல்லாவிடத்திலும் அன்பு இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் என்னை நான் நேசிப்பது மட்டும் நிபந்தனையற்றதாக இருக்கிறது. எப்படி தன்னுடைய நண்பனை விட மகனிடம் அதிகமாக அன்பு காட்டுகின்றோமோ அதுபோல ஆத்மாவிடம் (தன்மீது) அதிகமான அன்பு வைத்திருக்கிறோம். நான் மறைந்துவிடக்கூடாது எப்பொழுதும் இருக்க வேண்டும் என்ற இந்த விருப்பம் எல்லோருக்கும் இருப்பதாகக் காணப்படுகிறது.
 
இதுவரை சொல்லப்பட்ட மூன்றவிதமான (யுக்தி, ஸ்ருதி, அனுமானம்) அடிப்படையில் தன்னிடத்தில் முழுமையான அன்பு இருக்கின்றது என்று நிலை நாட்டப்படுகிறது. இருந்தாலும் சிலரால் தன்னுடைய மனைவி, மக்கள் போன்றவர்களை தன்னைவிட அதிகமாக நேசிக்கிறேன் என்று சொல்லப்படுகிறது. புத்திரன்தான் ஆத்மா என்று சொல்லும் எண்ணத்துடன் புத்திரன் என்ற பெயருடைய ஆத்மா என்று புத்திரனிடத்தில் முக்கிய ஆத்மாவிருக்கும் தன்மை வேத சாஸ்திரத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. இதுவே உபநிஷத்திலும் தெளிவாக சொல்லப்பட்டு இருக்கிறது. தந்தையினுடைய புத்திரன் உருவத்திலுள்ள அந்த புத்திரரூபமான புண்ணிய கர்மங்களை செய்வதற்கு தனக்கு பிரதிநிதியாக பிதாவினால் நிறுத்தப்படுகிறான். மேலும் தந்தையின் ரூபமாக புத்திரனைக் காட்டிலும் வேறாக இருக்கின்ற தந்தையானவர் மனநிறைவுடன் மரணத்தைக் ஏற்றுக் கொள்கிறான்.
 
ஆகையால்தான் புத்திரன் முக்கியமான ஆத்மாவாக இருப்பதால் தான் இருந்த போதிலும் புத்திரன் இல்லாமலிருக்கும் இவனுக்கு நல்ல லோகம் கிடைக்கிறது. சில ரிஷிகள் தர்மத்தை உபதேசிக்கப்பட்ட புத்திரன் பரலோக சாதனமாக இருப்பதாக கூறுகிறார்கள். தந்தையின் நற்கதிக்கு புத்திரன் செய்யும் தர்ம காரியங்களால் கிடைக்கும். புத்திரனால்தான் இந்த மனிதலோகத்தை வெற்றிக் கொள்ள முடியும். வேறு யாராலும் இந்த உதவி செய்ய முடியாது. இறக்கும் தருணத்திலிருக்கும் தந்தை புத்திரனைப் பார்த்து நீ பிரம்மன் என்றுக் கூறி தான் செய்து கொண்டிருந்த தர்மகாரியங்களை செய்யுமாறும் உபதேசம் செய்ய வேண்டும்.
 
இதுபோன்ற வேத வாக்கியங்கள் மனைவி, மக்கள்தான் முக்கியமான ஆத்மாவாக இருக்கின்ற தன்மையுடன் இருப்பதாக சொல்கிறார்கள். தர்ம சாஸ்திரங்கள் பின்பற்றாதவர்கள் கூட மனைவி, மக்கள் பிரதானத் தன்மையை கொடுத்து கொண்டிருக்கிறார்கள். தான் இறந்துவிட்டாலும் புத்திரன் முதலானவர்கள் சொத்து,  செல்வம் இவைகளை அனுபவித்துக் கொண்டு இருப்பதற்காக தன்னையே வருத்திக் கொண்டு சேர்த்து வைக்கிறார்கள். அதற்கான முயற்சியை மேற்கொள்கிறார்கள். ஆகையால் புத்திரன் முதலானவர்களே தனக்கும் மேலாக முக்கியமானவர்களாக இருப்பதாக கருதுகிறார்கள்.
 
மேற்கூறியவைகளால் மட்டும் ஆத்மாவானது யாருக்கும் இரண்டாம் நிலையாக ஆகாது. ஆத்மாவானது கௌன, மித்யா, முக்கியம் என்று மூன்றுவிதமாக இருக்கிறது. நான் யாருக்கும் இரண்டாம் பட்சமாக இருப்பது கிடையாது. நான் எதனோடும் ஒட்டிக் கொள்வது கிடையாது.
 
கௌன ஆத்மா என்பது குணத்தில் ஒற்றுமையையும், மித்யாத்மா என்பது மூன்று சரீரங்கள், பஞ்ச கோசங்களையும் குறிக்கிறது. இந்த மாணவன் சிங்கம் என்று கூறுமிடத்தில் குறிப்பிடுகின்ற ஐக்கியம் கௌனமாகும். இந்த ஐக்கியம் இருவரிடத்திலும் உள்ள தைரியம் என்ற குணத்தைத்தான் குறிக்கிறது. அதேபோல புத்திரன் முதலியவர்களை குறிக்கும் இடத்தில் நான் என்கின்ற தன்மை கௌனமாகதான் குறிக்கிறது.
 
ஐந்து கோசத்தை காட்டிலும் சாட்சி சைதன்யம் வேறுபட்டு இருந்தாலும் அது வெளிப்படையாக தெரியவில்லை. ஆகையால் இவைகள் மித்யா ஆத்மாவாக கருதப்படுகிறது. எப்படி மங்கலான வெளிச்சத்தில் தெரிகின்ற மரத்தூண் திருடனாக பார்க்கப்படுகிறதோ அப்படியே மித்யாத்மாவை புரிந்து கொள்ள வேண்டும்.
 
முக்கிய ஆத்மாவான சாட்சி சைதன்யமானது எதனோடும் வேறுபடுவதில்லை என்று அறியப்படுகிறது. எல்லாவற்றிற்கும் ஆதாரமாகவும், உள்ளேயும் இருப்பதால் சாட்சி சைதன்யம் முக்கிய ஆத்மாவாக இருக்கிறது.
 
இவ்விதம் நான் என்பது மூன்றுவிதமாக இருப்பதால் எந்த விவகாரத்தில், செயல்பாட்டில் எந்த நான் சரியானதாக, பொருத்தமானதாக இருக்குமோ அந்த விவகாரத்தில் பயன்படுத்தப்படும். நான் என்ற ஆத்மாவைத்தான் பிரதானமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
 
மரணப்படுக்கையிலிருப்பவனுக்கு குடும்பத்தை நிர்வகிப்பதற்கான பொறுப்பை மகனிடம் விட்டுவிடும் விஷயத்தில் கௌன ஆத்மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கிய ஆத்மாவானது இந்த நிலையில் உபயோகப்படுவதில்லை. சரீரம் ஜடமாகிப் போவதால் மித்யாத்வம் தேவையில்லை, உபயோகிக்கப்படுவதுமில்லை. எனவே கௌன ஆத்மாவான புத்திரன்தான் இந்த நிலையில் முக்கிய ஆத்மாவாக பயன்படுத்தப்படுகிறது.
 
வேதம் அத்யயனம் செய்கின்ற இந்த மாணவன் அக்னி என்று சொல்லுமிடத்தில் நெருப்பை குறிப்பிட்டிருந்தாலும் அது மாணவனை குறிக்காமல் அவனிடத்தில் உள்ள சட்டென்று புரிந்து கொள்ளும் கூர்மையான புத்தியை குறிக்கிறது. நான் இளைத்திருக்கிறேன், சக்தியுடன் இருக்கிறேன் என்று கூறும்போது தேகத்தைத்தான் ஆத்மாவாக கருதிக் கொண்டு பயன்படுத்துவதுதான் சரியானதாக இருக்கும். இங்கே மித்யாத்மாவான உடலைத்தான் ஆத்மாவாக பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கும். இந்த இடத்தில் புத்திரனை பயன்படுத்துவதில்லை. சத்தான உணவை சாப்பிடுவதுதான் ஆரோக்கியத்திற்கு காரணமாக இருக்கிறது. தவம் செய்து சொர்க்கத்திற்கு போவேன் என்று சொல்கின்ற இடத்தில் தவத்தை செய்கின்ற கர்த்தாவே ஆத்மாவாக சொல்வது பொருந்தி வரும். அதனால்தான் ஸ்தூல சரீரத்திற்கு வருகின்ற கஷ்டங்களை கவனிக்காமல் நியமங்களை அனுஷ்டிக்கிறான். நான் சம்சாரத்திலிருந்து விடுதலை அடைவேன் என்று கூறுகின்ற இடத்தில் சாட்சி சைதன்யத்திற்கு ஆத்மாவை குறிப்பிடுவதுதான் பொருத்தமாக இருக்கும். இந்த முக்கிய ஆத்மாவை குரு, சாஸ்திரம் துணைக் கொண்டு அறிந்து கொள்கிறான். வேறெதுவும் செய்வதற்கு விரும்புவதில்லை.
 
புத்திரனை பிரதானமாகக் கொண்டு செயல்படும்போது கௌன ஆத்மாவையும், தேகம் முதலானவைகளைக் பிரதானமாகக் கொண்டு செயல்படும்போது மித்யாத்மாவையும், சைதன்யமே லட்சியமாகக் கொண்டு செயல்படும்போது முக்கிய ஆத்மாவையும் அறிந்து கொள்ள வேண்டும். ஆகவே ஆத்மாவை அந்தந்த இடத்திற்கு பொருந்துகின்றதைத்தான் பயன்படுத்த வேண்டும். எந்த ஆத்மா பொருத்தமாக தோன்றுகிறதோ அதில்தான் முழுமையான பிரியம் உண்டாகும். அவ்வாறாக கருதுவதற்கு உதவியாக உள்ளத்திலும் நமக்கு வெறும் பிரியமிருக்கும். இதைத் தவிர மற்ற விஷயங்களில் இந்த இரண்டு விதமான முழு அன்பும், பாசமும் இருக்காது.

அதிப்ரீதி - நிபந்தனையற்ற அன்பு
ப்ரீதி - நிபந்தனையுடன் கூடிய அன்பு.
 
உலகத்தில் உள்ள பொருட்கள் ஆத்மா, என்னோடு சம்பந்தப்பட்டது, கண்டுக் கொள்ளாதது, வெறுக்கத்தக்கது ஆகிய நான்குவிதமாக பிரிக்கப்படுகிறது. கல், புல் போன்றவற்றை கண்டுக் கொள்ளாத வகையாகவும், துன்பத்தை தரக் கூடிய புலி, பாம்பு போன்றவைகள் வெறுக்கத்தக்க வகையாகவும் புரிந்து கொள்ளலாம்.
 
சேஷம்  -   இந்த ஆத்மாவாக நினைக்கின்ற என்னோடு சம்பந்தப்பட்டு சுகத்தை கொடுக்கின்றவைகள்,
உபேக்ஷயம் - எனக்கு சம்பந்தப்படாத பொருட்கள்
துவேஷ்யம் -  வெறுக்கத்தக்கவைகள், துயரத்ததைக் கொடுப்பவைகள், விட்டு விலகிக் கொண்டிருப்பவைகள்.
 
இவைகளில் (அதிகபிரியம், சாதாரண பிரியம், உபேக்ஷயம், த்வேஷ்யம்) வியக்தி என்கின்ற நியமம் கிடையாது. எதுவும் அது கருதப்படும் நிலையை வைத்து அப்படியென்று சொல்ல வேண்டும். புலி நம்மை தாக்க வரும்போது அது வெறுக்கத்தக்கதாக இருக்கிறது. அது நம் பார்வைக்கே வராதபோது கண்டு கொள்ளாத நிலைக்கு சென்றுவிடுகிறது. மேலும் அதுவே நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் போது ஆத்மசேஷமாகிறது.
 
உலகிலுள்ள வஸ்துவில் வியக்தி நியமமில்லை. ஆனாலும் அதனுடைய லட்சணத்தை வைத்து வரையறுத்துவிடலாம். சேஷமாயிருப்பதற்கு அனுகூலமாக இருக்கும் தன்மையும், வெறுக்கதக்கதாக இருப்பதற்கு பிரதிகூலமாக இருக்கும் தன்மையும், கண்டு கொள்ளாததாக இருப்பதற்கு மேற்சொன்ன இரண்டு தன்மைகள் இல்லாதிருக்கும்போது அவ்வாறாக கருதப்படும்
 
நான் என்று நினைக்கின்ற வஸ்துவில் அதிகமான பிரியம், இதற்கு உதவியாக இருக்கின்ற வஸ்துவில் சாதாரண பிரியமும் உண்டு. மற்ற வஸ்துக்களில் உபேக்ஷயம், த்வேஷம் ஆகிய இரண்டில் ஏதொவொன்றுதான் இருக்கும். இதுவே யாக்ஞவல்கியரின் கருத்தாகும்.
 
புத்திரனை விட, செல்வத்தை விட வேறு எல்லாவற்றையும் விட உள்ளேயிருக்கும் அந்த தத்துவம் பிரியமானது என்று அறியப்படட்டும் என்று ஸ்ருதி சொல்கிறது. உபநிஷத்தின் உபதேச பார்வையில் விசாரம் செய்து பார்க்கும்போது இந்த சாட்சி சைதன்யம்தான் ஆத்மா, கௌன ஆத்மாவோ, மித்யாவாத்மாவோ அல்ல. ஐந்து கோசங்களையும் விசாரம் செய்து நீக்கி அவற்றுக்குள் இருக்கின்ற உண்மைப் பொருளை ஆத்மாவை கண்டறிய வேண்டும்.
 
விழிப்பு, கனவு, ஆழ்நிலை உறக்கம் ஆகிய நிலைகளில் எந்தவொன்று இந்த நிலைகளில் வருவதும், போவதையும் தான் மாறாமல் இருந்து கொண்டு விளக்கிக் கொண்டிருக்கிறதோ அதுவே தானே பிரகாசித்துக் கொண்டிருக்கின்ற சைதன்ய ஸ்வரூபமான ஆத்மாவாகும்.
 
சேஷங்கள், ஆத்மாவைத் தவிர எனக்கு திருப்தியை கொடுக்கின்ற வேறு சில விஷயங்களான பிராணன் முதல் சொத்து வரை உள்ள விஷயங்களில் ஏற்றத்தாழ்வுடன் இருக்கிறது. அதேப்போன்று அதிலிருந்து அடைகின்ற பிரியமானது ஏற்றத்தாழ்வுடன் இருக்கின்றது. சொத்தைவிட புத்திரன் மீது அதிக பிரியம்; புத்திரனை விட நம்முடைய சரீரம் அதிக பிரியமானது. சரீரத்தை விட புலன்கள் மீது அதிக பிரியம். புலன்களைவிட பிராணனிடம் அதிக பிரியம். பிராணனை விட உத்தமமான பிரியமானது ஆத்மாவாக இருக்கிறது.
 
இவ்விதமிருக்கையில் இந்த விஷயத்தில் அறிவு ஏற்படுவதற்கு அறிவு உடையவனுக்கும், அறிவற்றவனுக்கும் இடையே நடத்தின் விவாதம் மூலமாக உபநிஷத் ஆத்மாதான் மிகவும் பிரியமானது என்று தீர்மானம் செய்கிறது.
 
சாட்சி சைதன்யம்தான் நம்மால் மிகவும் நிபந்தனையற்று நேசிக்கப்படுகிறது. இது நம்மால் பார்க்கப்படுகின்ற, அறியப்படுகின்ற பொருளைக் காட்டிலும் வேறாக இருக்கிறது. இது உண்மையை உணர்ந்தவன் கூறுகின்றான். ஆனால் மோக வசப்பட்டு இந்த அறிவை அடையாதவன் புத்திரன், உடல் முதலியவைகள்தான் மிகவும் பிரியமானது என்று கூறுகின்றான். இவைகளை அனுபவிப்பதற்கு இந்த சாட்சி சைதன்யம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
 
சீடனின் லட்சணம் அறிவை கொடுக்கும் உபதேசத்தை ஏற்கின்ற மனநிலை உடையவன். பிரதிவாதி இந்த உபதேசத்தை சாபமாக எடுத்துக் கொள்பவன். ஆத்மாவைத் தவிர மற்றவைகள்தான் பிரியமானது என்று சிஷ்யனாக இருப்பவனும், பிரதிவாதியும் நினைக்கிறார்கள்.  இந்த தவறான கருத்தை போக்க செய்யப்படுகின்ற உபதேசம் சீடனுக்கு அறிவைக் கொடுப்பதாகவும், பிரதிவாதிக்கு சாபமாகவும் இருக்கிறது. பிரியம் உனக்கு துன்பத்தைக் கொடுக்கும் என்று தத்துவத்தை அறிந்தவன் பதில் சொல்கிறான். தான் பிரியம் என்று சொன்ன பதார்த்தத்தில் குறையுண்டு என்று சீடன் நன்கு ஆராய்ந்து பார்த்து அறிந்து கொள்கிறான்.
 
புத்திரன் வேண்டும் என்று ஏங்குபவர்களுக்கு குழந்தையின்மை துன்பத்தைக் கொடுக்கும். புத்திரபாக்கியம் பெற்றவர்களுக்கு பலவகையான துன்பத்தை அனுபவிப்பார்கள். கர்ப்பத்திலேயே இறந்து விடுதல், பிறக்கும் போது கொடுத்தும் கஷ்டங்கள், குழந்தை வியாதியோடு இருத்தல், அறிவில்லாமல் இருத்தல், பள்ளிக்கு செல்லும் போதும், படிப்பு சரியாக வராமலிருத்தல், படித்துவிட்டு அறிவுடன் இருந்தாலும் சரியான வேலை கிடைக்காமலிருத்தல், கல்யாணமாகாமல் இருத்தல் போன்ற பலவிதமான துன்பத்தை அடைவார்கள்.
 
இளமை காலத்தில் காம சுகத்தை நாடிக் கொண்டிருக்கும் குறை உடையவனாக இருந்தாலும், வறுமையால் வாடிக் கொண்டிருந்தாலும், பணம், பதவி போன்றவற்றை அடைந்திருக்கும் போது இறந்து விட்டால் அதனால் துன்பம் அடைதல் போன்ற துன்பங்களை பெற்றோர் அனுபவிக்கிறார்கள். ஆகவே துன்பம் என்றென்றும் தொடர்ந்து கொண்டிருக்கும்.
 
இப்படியிருக்கின்ற நிலையை விசாரம் செய்து நிச்சயம் செய்துவிட்டு புத்திரன், மனைவி, செல்வம் போன்ற அனாத்மா விஷயங்களால் துன்பத்தையே அடைவோம் என்று உறுதி செய்து அதன் மீதுள்ள ஆசையை விட்டுவிட்டு தன்னுடைய ஆத்மாதான் உத்தமமான பிரியம் என்று தீர்மானம் செய்து கொண்டும், எல்லா காலங்களிலும் அந்த ஆத்மாவையே தீர்மானம் செய்து கொண்டிருக்க வேண்டும்.
 
ஆக்3ரஹ - தவறான கருத்தை சரியென்று உறுதியாக நினைத்துக் கொண்டிருத்தல்.
இந்த நிலையில் இருப்பவனுக்கு சாஸ்திரத்தை உபதேசிக்கும் குருவை, ஞானிகள், மகான்கள், அறிவாளிகளை நம்பாமல் இருக்கின்றவர்களுக்கு அவர்கள் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளாமல் தன்னுடைய அறிவை விட்டுவிடாமல் இருப்பவர்களுக்கு மரணத்திற்கு  பிறகு நரகமும், பிறப்பு. இறப்பு என்கின்ற சம்சாரத்திலே இருந்து கொண்டு துயரப்பட்டு கொண்டு இருப்பார்கள்.
 
பிரம்மத்தை உணர்ந்தவன் அதுவாகவே இருப்பதனால், ஈஸ்வரனாக இருக்கின்றான். அவரால் சொல்லப்பட்டது எதுவோ அதுவெல்லாம் அப்படியே சீடனுக்கும், பிரதிவாதிக்கும் ஏற்பட்டுவிடுகிறது.
 
எந்தவொரு சாதகன் சாட்சி ஸ்வரூபமான சைதன்யத்தை தானாக, ஆத்மாவாக, உத்தமமான, பிரியமான வஸ்துவாக தியானித்துக் கொண்டிருக்கின்றானோ, அவனுக்கு அந்த ஆத்மா மிகவும் பிரியமானதாக இருக்கின்றது. அவனிடமிருந்து மறைந்துவிடுவது கிடையாது. ஆத்மா முழுமையான அன்புக்கு விஷயமாக, ஆத்யந்தமாக இருக்கின்ற காரணத்தால் அதுவே மேலான ஆனந்த ஸ்வரூபமாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அன்பு அதிகரிக்க சுகமும் அதிகரிக்கும். மனது இங்கு அனுபவிக்கும் சுகத்தை விட பிரம்ம லோகத்தில் கிடைக்கும் சுகம் அதிகமானது என்று உபநிஷத்தில் கூறப்பட்டிருக்கிறது.
 
சைதன்ய ஸ்வரூபமாகவுள்ள ஆத்மாவிற்கு சைதன்யம் போலவே சுகமும் ஸ்வரூபமாக இருக்குமானால் எல்லா புத்தி விருத்திகளிலும் கூட எண்ணங்களிலும் கூட சைதன்யம் எப்படியோ அப்படியே சுகமும் கூடவே இருக்க வேண்டும். அப்படியல்ல நெருப்பினிடத்தில் வெளிச்சம், உஷ்ணம் என்ற இரண்டு தன்மைகளை உடையது. வீட்டில் ஏற்றப்பட்டு இருக்கின்ற விளக்கில் எரியும் நெருப்பிலிருந்து வெறும் வெளிச்சம் மட்டும் வெளிப்பட்டு கொண்டிருக்கும். உஷ்ணத்தன்மை வெளிப்படுவது இல்லை. அதுபோலவே எண்ணங்களில் சைதன்யம் மாத்திரம் வெளிப்பட்டு இருக்கிறது.
 
மணம், உருவம், சுவை, தொட்டுணர்தல் ஆகியவைகள் அனைத்தும் ஒரே வஸ்துவில் தனித்தனியாக இருந்த போதிலும் நம்முடைய புலன்களினால் ஒரு விஷயம்தான்  கிரகிக்கப்படுகிறது. மற்றவைகள் கிரகிக்கப்படுவதில்லை. அது ஸத், சித், ஆனந்தம் ஆகிய ஸ்வரூபமுடைய ஆத்மாவானது எண்ணங்களின் சில தன்மைகளையும் காட்டிக் கொடுக்கும் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
 
சைதன்யமும், ஆனந்தமும் வேறுபட்டவையல்ல. ஆனால் மணம், சுவை முதலியவைகளோ தனித்தனியாக இருக்கின்றவைகள் என்றால் அந்த வேறுபடாத தன்மையும் சாட்சியிலிருக்கிறதா அல்லது வேறு எங்கேயாவது இருக்கிறதா? என்ற சந்தேகம் வரலாம்.
 
சாட்சி சைதன்யத்தில் வேறுபட்ட தன்மையில்லை என்ற விஷயத்தில் மணம், சுவை முதலியவைகளும் மலரில் ஒன்றாக இருக்கிறது. மலரில் வெவ்வேறான தன்மை இருக்கிறது என்றால் புலன்களின் கிரகிக்கும் விஷயத்தில் வேறுபடுவது என்று பார்க்கும்போது எண்ணங்களின் அடிப்படையில் சைதன்யத்தில் வேறுபாடு தெரிகிறது.
 
சத்துவ எண்ணங்களில், சாத்விகமான எண்ணங்களில் சைதன்யமும், ஆனந்தமும், இரண்டும் ஒன்றாக சேர்ந்து தெரிகிறது. அந்த எண்ணங்களானது தூய்மையாக இருப்பதனால் இரண்டும் ஒன்றாக சேர்ந்து அனுபவிக்கப்படுகிறது. ரஜோ குண எண்ணங்களிலோ அழுக்கடைந்த தன்மையுடன் இருப்பதால் அங்கு ஆனந்தத்தின் அம்சம் மறைபடுகிறது.
 
உத்தமமான பிரிய வஸ்துவாக இருக்கும் காரணத்தினால் ஆத்மாவிடத்தில் மேலான ஆனந்தத்தன்மை இருக்கிறது. இவ்விதம் விசாரணை செய்து அறிந்து கொள்ளலாம். ஆனால் யோகம் என்கின்ற சாதனத்தை பயன்படுத்தவில்லை என்றால் என்ன ஏற்படக்கூடும்?
 
எது நிதித்யாஸன பிரதானமாக இருக்கின்ற யோகத்தினால் அடையப்படுகின்றதோ அதே பலன் விசாரம் செய்வதனால் அடையப்படுகின்றது. ஞானநிஷ்டை அடைவதற்காக நிதித்யாஸனம் என்கின்ற யோகம் சொல்லப்பட்டிருக்கிறது.  ஆனால் விசாரம் செய்வதனால் அதே ஞானநிஷ்டையை அடையலாம்.
பாமதி ப்ரக்ருயா - நிதித்யாஸன பிரதானம்
விவரன் ப்ரக்ருயா - சிரவண பிரதானம்
 
எந்த நிலையை சாங்கியர்களால், சாஸ்திர விசாரம் செய்பவர்களால் அடையப்படுகிறதோ அதே நிலையை யோகிகளாலும் அடையப்படுகிறது. யோகிகளுக்குள் விசாரம் செய்பவர்களுக்கு கிடைக்கக்கூடிய பலன் ஒன்றாகத்தான் இருக்கின்றது என்று கீதையில் பகவானால் கூறப்பட்டிருக்கிறது. பகவான் கிருஷ்ணன் இரண்டு பாதைகளைக் கூறியிருக்கிறார். சிலருக்கு யோகம் முடியாமல் இருக்கலாம். வேறு சிலருக்கு விசாரம் செய்ய முடியாமலிருக்கலாம். எனவே இரண்டு வழிகள் கூறப்பட்டிருக்கிறது. தியானம், தவம் இவைகளை செய்வதற்கேற்ற மனநிலை சிலருக்கு இருக்காது. சிலருக்கு விசாரம் செய்யும் மனநிலை இருக்காது. இந்த இரண்டு பேருக்குமே தனித்தனியான பாதைகளை பகவான் கூறியிருக்கிறார்.
 
யோகிகளும், ஆத்ம விசாரம் செய்கின்ற விவேகிகளும் ஒரேமாதிரியான பலனையே அடைகிறார்கள். விருப்பு-வெறுப்பு நீங்குதல் என்ற பலன் இருவருக்கும் கிடைக்கிறது. உலக விஷயங்களில் எதுவும் எனக்கு விரும்பத்தக்கதாக இல்லை என்ற அறிவு இருக்கும் போது ஆத்மாதான் என்னால் முழுமையாக நேசிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது என்ற அறிவுடையவனுக்கு எங்கிருந்து பற்று வரும், எங்கிருந்து வெறுப்பு வரும்? எதுவுமே எனக்கு பகையாக இல்லாததால் துவேஷம் எப்படி வரும்?
 
தேகம் முதலியவைகளுக்கு கஷ்டம் கொடுக்கின்ற கூழ்நிலையில் இருவருக்கும் அதை வெறுக்கக்கூடிய உணர்வு ஒன்றாகத்தானே இருக்கும். உடல் உபாதைகளை இருவரும் ஏற்றுக் கொண்டும், சகித்துக் கொண்டும் இருக்கிறார்கள். அவைகள் மனதை பாதிக்காதவாறு இருக்கிறார்கள். உலக விவகாரத்தின் போது இருவரும் இருமைகளைப் பார்க்கிறார்கள். அதேப்போன்று நிதித்யாஸன பிரதானமாக இருப்பவருக்கும், சிரவண பிரதானமாக இருப்பவருக்கும் தியான காலத்தின்போது அத்வைத ஞானத்துடன் இருக்கிறார்கள். விசாரம் செய்து கொண்டிருப்பவர்களுக்கு த்வைத தோற்றம் கிடையாது.
 
தன்னுடைய ஆத்மானந்தத்தையே எப்போதும் பார்த்துக் கொண்டு உலகம் முழுவதையும் உண்மையென்று பார்க்காமலே இருப்பவன் உண்மையில் யோகிதான்.
 
----ooo000ooo----


A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...